தழுவிப் போகும் தடயங்கள்
சில நாட்களுக்கு முன் தான் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ”யாமம்” வாசித்து முடித்திருந்தேன். அப் புத்தகத்தின் முன்னுரையில் எஸ். ரா ”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன” என்கிறார். அவ் வசனங்கள் இன்றும் என் காதுகளில் ஒலிப்பது போலிருக்கிறது எனக்கு. அப் புத்தகமும் ஒரு ஊரில் வாழும் சிலரின் கதையை சொல்லியபடியே நகர்கிறது. எவரும் தவறவிடக்கூடாத புத்தகம் அது.
எனது வாழ்க்கையும் பல ஊர்களினூடாக திசையின்றி அலையும் காற்றைப் போல் அலைந்து திரிந்திருக்கின்றது. இப்பவும் அப்படித்தான். நான் கடந்து வந்த சில ஊர்கள் பல இனிமையான கதைகளை தந்தும், சில வலி நிறைந்த கதைகளைத் சொல்லியும் என்னை அடுத்த ஊரை நோக்கித் உந்தித் தள்ளியபடியே இருக்கின்றன. நானும் நாடோடி போல் ஊரூராய் அலைந்து திரிகிறேன். முற்பிறப்பில் நாடோடியாக வாழ்திருந்தேனோ என்னவோ?
பிறந்தது கொழும்பில். பின்பு ஏறாவூர், அக்கரைப்பற்று, பிபிலை, கொழும்பு, பதுளை, மட்டக்களப்பு, மீண்டும் ஏறாவூர், இந்தியா என ஒன்பது இடங்கள், என்னைச் சற்று செதுக்கிய பின் முன்னோக்கித் தள்ளியிருந்தன எனது 21 வயதுக்குள். வெளிநாடே வாழ்க்கையென விதிக்கப்பட்ட பின்பும் நாடோடிவாழ்க்கை என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இனியும் தொடரும் என்றே நினைக்கிறேன்.
எனக்குள் இருக்கும் சில ஊர்களின் கதைகளையே பதிய நினைத்திருக்கிறேன் இன்று.
முதலில் அக்கரைப்பற்று: 1970 - 1972 களில் பெற்றோரின் தொழில் நிமித்தம் அங்கு வாழ நேர்ந்தது. இயற்கையுடனான அறிமுகம் முதன் முதலில் கிடைத்ததும் இங்கு தான். எனக்கிருந்த நட்பு, அங்கிருந்த ஒரு ஊமை நண்பன் என்று தான் நினைவில் இருக்கிறது. அவனின் தலைமயிரும் மிகவும் ஐதாக ஒரு வித செம்பட்டை நிறத்தில் இருந்தது. நாம் எப்படி பேசிக் கொண்டோம் என்று நினைவில் இல்லை. ஆனால் முக்கைச் சொறிந்தால் அவனுக்கு கெட்ட கோபம் வந்தது. நான் மூக்கை சொறிந்த பின்பும் நாம் நட்பாயிருந்தோம். அவனின் உருவம் அழிந்தும் அழியாததுமான ஒரு ஓவியமாயிருக்கிறது இன்றும், மனதில். நட்பின் நெருக்கத்தையும், சுவையையும் நான் அறிந்தது இங்கு தான்.
கடற்கரையும், சிப்பிகளும், ஆர்பாரிக்கும் இந்து சமுத்துரத்து அலைகளும், ராவணண் மீசையும், அப்பாவின் மீன்பிடியும் என பலவிதமான நினைவுகளைத் தந்து வழியனுப்பியது அக்கரைப்பற்று. இன்றுவரை மீண்டும் அம்மண்ணை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. எனக்கு கதை சொன்ன ஊர்களில் இந்த அக்கரைப்பற்றும் முக்கியமானது.
கொழும்பு: எனது 7வது வயதில் பெற்றோர் தொழில்புரிந்த பிபிலயில் தமிழ்ப் பாடசாலை இல்லாததால் அம்மாவின் அண்ணணிடம் தங்கியிருந்து படித்தேன். பெற்றோரை பிரிந்திருந்ததால் எப்போதும் சுயஇரக்கம் நிழலைப்போல் என்னுடனேயே இருந்து. தனிமையுடன் உரையாடப் பழகியதும், தனிமையை ரசிக்கப் பழகியதும் இந் நாட்களில் தான். கொழும்பின் சில இடங்கள் இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றன. மாமா முகத்துவாரத்தில் இருந்தார். அவரின் வீட்டின் இலக்கம் 604, மாடி வீடு, வாசலில் மல்லிகை மரம் இருந்தது. ஞாயிறு தோறும் மாமா குடும்பத்தினருடன் தேவாலயத்திற்குப் போவேன். போகும் வழியில் ஒரு மீன் மார்க்கட் இருந்தது, அதைக் கடக்கும் போதெல்லாம் மீனின் வாசனை என்னைக் கடந்து போனது. அந்த வழியில் ஒரு மாதா தேவாலயமும் இருந்தது.
அங்கு வாழ்ந்திருந்த நாட்களில் சுயஇரக்கம் பெருக்கெடுதது ஓடும் போது கண்ணை மூடி, அம்மா பிபிலையில் இருந்து என்னைப் பார்க்க வந்துகொண்டிருப்பதாக கற்பனை செய்வேன். காலை 08.00 மணிக்கு இப்ப பஸ் ஏறுவா, 12 மணிக்கு கண்டியில் நிற்கிறா, மாலை 5 மணிக்கு வீட்டு கேட்டில் ஏறி ஆதை முன் பின் ஆட்டியபடியே அம்மா வருகிறாவா என 155 நம்பர் பஸ் ஐ பார்த்திருப்பேன். சில நாட்களில் அம்மா நான் கற்பனை செய்தது போல வந்திறங்கியதும் உண்டு. என்னை புடம் போட்ட இடங்களில் கொழும்பும் முக்கியமானது.
அடுத்தது பதுளை: காலம் 1974 -75. குடும்பத்தைப் பிரிந்து குடும்ப நண்பர்து ஒருவரின வீட்டில் தங்கியிருந்தேன். மாமா என்று தான் அவரின் பெயர் ஞாபகமிருக்கிறது. அவரின் அன்டி ஒரு சிங்களவர். அன்பானவர். எள்ளையும் எட்டாய் பிரி என்று அறிவித்தவர் அந்த அன்டி தான். அன்டியின் நண்பியின் கணவர் கொலைசெய்யப்பட நண்பியையும் குழந்தையையும் தன்னுடன் வைத்திருந்தார் பல காலம். அது அப்போ நட்பு என்பது எனக்குப் புரியாத காலம். அடிக்கடி சண்டைபிடித்தார்கள். அழுதார்கள். மாமா விலக்குப் பிடித்தார். ஆனால் அடுத்த நாள் அவர்கள் சேர்ந்து சிரித்தார்கள். அன்று எனக்கு எரிச்சலாயிருந்தது அவர்கள் சண்டை. ஆனால் இன்று வாழ்க்கை புரியும் போது அவர்களைப் பரியக்கூடியகத்தான் இருக்கிறது.
இந்த பதுளையில் தான் முதலில் பீடி குடித்தேன். வயதுக்கு மீறிய நட்பு கிடைத்திருந்தது. பாடசாலைக்கு கட் அடித்தேன். வண்டில் ஓட்டப் பழகினேன். பதுளை சரஸ்வதி மாகாவித்தியால நண்பர்கள் சிலர் இன்றும் நண்பர்களாய் இருக்கிறார்கள். பசியின் கொடுமையை அறிந்தது இங்கு தான். அங்கு வாழ்ந்திருந்த இரண்டாம் ஆண்டு வேறு ஒரு வீட்டில் வாழ நேர்ந்தது. அந்தப் பெண் ஒரு மருத்துவத் தாதி. என்னுடன் சேர்த்து அந்த வீட்டில் 5 குழந்தைகள். கணவர் இறந்து விட்டார். இங்கு விளையாடுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஆனால் காலை, மதியம் இரவு மூன்று நேரங்களிலும் பசி கூடவே இருந்தது. அம்மா பணத்தை அவர்களிடம் கொடுத்தாலும் எனது சாப்பாட்டின் அளவு எப்பவும் குறைவாகவே இருந்தது. எதிர்காலத்தில் பாடசாலை விடுதியில் வாழ்ந்திருந்த காலங்களில் பசியுடன் வாழ இந்த பதுளைப் பசியே என்னைப் பழக்கியது.
புதுளைக்குப் பின்னா காலம் என் வாழ்க்கையின் முக்கிய காலம். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். விடுதி வாழ்க்கை. கற்றதும் பெற்றதும் அங்குதான். என் பாடசாலை என்மனதில் இவ்வளவு இடத்தைப் பிடிக்கும் என்பதை நான் கனவிலும் நினைத்துப்பார்த்தில்லை. எனது புனிதப்பூமி அது. என்றென்றும். இன்றும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது எமக்கிடையில்.
அடுத்தது ஏறாவூர், உலகிலேயே அழகான இடம். எங்கள் ராஜ்யம் அது. பதின்மவயதும், தோழமையும், வியர்வை கலந்த ஊரின் புழுதியும் உடலில் சுகமாய் படிந்திருந்த காலம் அது. மூன்றின மக்களும் தோழமையின் சுற்றுவட்டத்தில் இருந்தனர். மொழியோ, மதமோ, இனமோ நட்பில் கலப்படமாகாதிருந்தது வாழ்வு எனக்குத் தந்த மிகப்பெரிய பரிசு.
ஏறாவூருக்கு அருகாமையில் இருந்த செங்கலடி எனக்கு பதின்மவயதின் ரகசியங்கள் பல சொல்லித் தந்த இடம். பல பல புதிய நட்புகள் கிடைத்ததும் இங்கு தான். முதன் முதலில் நட்பொன்று தொலைந்ததும் இங்கு தான். தொலைந்த நட்பு இன்றும் மீளவில்லை. மீளமுடியாத இடத்திற்கு அனுப்பிவிட்டார்கள்.
காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகிற்கு சமமான மனதுடன் அந்தக் காலங்கள் மறைந்துபோயின. ஏறத்தாள 27 வருடங்களுக்கு முன்னான காலம் அது. எனினும் இன்றும் அந்நாட்களின் நினைவுகள் பிரியமுடன் நெஞ்சைத் தடவிப்போகின்றன. மனதினுள் பேராசை ஒன்றிருக்கிறது. தோழமைகள் எல்லோருடனும் செங்கலடிச்சந்தியில் ஒன்றாய் குந்தியிருந்து ஒரே ஒரு மாலைப்பொழுதையாவது கழிக்கவேண்டும் என்று. இது நடக்காது என்றும் கூறமுடியாது, நடக்கும் என்றும் கூறமுடியாது.
ஊரின் கதைகள் பின்பொருநாள் தொடரலாம்.
இன்றைய நாளும் நல்லதே.
.
Subscribe to:
Post Comments (Atom)
என்னை சில நிமிடங்கள் சிறைபிடித்த பதிவு இது . சிறப்பு
ReplyDeleteஎன்னையும் மறந்து படித்தேன்.
ReplyDeleteDIVIDED FROM PARENTS IS ALWAYS PAINFUL...YOU WROTE NICELY..!!!
ReplyDeleteஅக்கரைபற்று பற்றி அறிந்துள்ளேன் ஆனால் இதுவரை செல்வதற்கு வாய்ப்பு இருக்கவில்லை...உங்கள் இளமைகாலம் என் இன்றைய நிலைமைக்கு ஒப்பாக இருக்கிறது.....நல்ல பதிவு
ReplyDelete//அம்மா பிபிலையில் இருந்து என்னைப் பார்க்க வந்துகொண்டிருப்பதாக கற்பனை செய்வேன்// வாசித்தபோது சோகமாக உள்ளது. அருமையான பதிவு. தொடருங்கள்
ReplyDelete//அம்மா பிபிலையில் இருந்து என்னைப் பார்க்க வந்துகொண்டிருப்பதாக கற்பனை செய்வேன்// வாசித்தபோது சோகமாக உள்ளது. அருமையான பதிவு. தொடருங்கள்
ReplyDeleteஇடை இடையே வரிகள் இயல்பாக இருந்தாலும் நகைச்சுவையா இருக்கு
ReplyDelete