நிகரற்ற அகத்தூண்டல்

 ”அகத்தூண்டல்” என்று ஒரு சொல் இன்று எனக்கு அறிமுகமாகியது. அதுவும் எனது பெருமரியாதைக்குரிய அண்ணண் எஸ்.ரா வின் இணையத்தளத்தினூடாக.

எனக்கு இரண்டு எழுத்தாளர்களை மிக மிக மிகப் பிடிக்கும். முதலாமவர் அ. முத்துலிங்கம் அய்யா, மற்றையவர் எஸ். ரா எனப்படும் எஸ். ராமகிருஷ்ணன் அண்ணண்.

1964ம் ஆண்டில் இருந்து எழுதிவரும் அ. முத்துலிங்கம் அய்யாவின் எழுத்துக்கள் எனக்கு 2006ம் ஆண்டிலேயே அறிமுகமானது என்பது நான் மிகவும் வெட்கப்படும் விடயம். கண்டதை எல்லாம் வாசித்த எனக்கு இவர் ஏன் கண்ணில்படாமல் போனார் என்று என்னிலேயே கோபம் உண்டு.

அதே காலகட்டத்திலேயே எஸ். ரா அண்ணணின் எழுத்துக்களும் ஆனந்த விகடனின் ”துணையெழுத்து” என்னும் தொடரின் மூலம் அறிமுகமாயின. அன்றிலிருந்து இன்று வரை மனிதரின் புத்தங்கள் என்றால் உலகமே மறந்து போகிறது எனக்கு.

இவர்கள் இருவரிலும் எனக்கு மிகப் பிடித்தது இவர்களின் ”இலகு தமிழ்”. தமிழை இதைவிட இலகுவாக எழுத முடியாது என்பது எனது கருத்து.

இருவரும் தங்களின் அனுபவங்களை எழுத்தால் பகிர்பவர்கள் என்றாலும், அவர்களின் மொழிநடை, மொழியாளுமை, கண்ணோட்டம் என்பன முற்றிலும் வேறுபட்டவை.

இவர்களின் எழுத்தே எனக்கும் எழுத்தார்வத்தை தூண்டியது. என்றென்றும் இவர்களின் ஏகலைவன் நான். வலையுலகத்தில் எனது முதல் பதிவு கூட அ. முத்துலிங்கம் அய்யாவைப் பற்றியது என்பதில் எனக்கு நிகரில்லாத பெருமையுண்டு.

2006ம் ஆண்டு அ. முத்துலிங்கம் அய்யாவின் ”அங்கே இப்ப என்ன நேரம்” என்னும் புத்தகத்தை ஒஸ்லோவில் ஒரு தமிழ்க் கடையில் வாங்கினேன். அப் புத்தகம் விற்பனையாகாததனால் பல முறை விலை குறைக்கப்பட்டிருந்தது. நான் அப் புத்தகத்தை தூக்கியதை கண்டதும் கடையுரிமையாளர் அதை எடுங்கோ 50 வீதம் கழிவு தாறேன் என்றார். 50குறோணர்கள் கொடுத்து அப்புத்தகத்தை எடுத்துப் போனேன்.

பதின்மக்காலங்களில் சாண்டில்யனின் கடல்புறாவில் இளையபல்லவனுடன் கடலோடி, அமீருடன் பல கடற்கலங்களை எரியூட்டி கைப்பற்றிய  பின் நான், என்னை மறந்து உலகம் மறந்து நேரம் காலம் மறந்து திட்டு வாங்கி படித்த புத்தகம் ”அங்கே இப்ப என்ன நேரம்”. வாசிக்க வாசிக்க மனம் பஞ்சாய் போனது. எழுத்தின் அழகும், மொழியாடலும், சொல் சிக்கனமும், நகைச்சுவையும் அ. முத்துலிங்கமய்யாவின் பரம ரசிகனாக்கியது என்னை. புதிய விதமானதோர் நகைச்சுவையை எனக்கு அறிவித்ததும் அவர் தான்.

”உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தில் 100 வது பக்கத்தில் "அதுல அதுல (A thu la, A thu la)" என்றொரு சூட்சுமமான நகைச்சுவை வருகிறது. அது புரிய வேண்டுமாயின் மிக முக்கியமாக சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் தவிர மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு சம்பவத்திலும் அனுபவமும் இருக்க வேண்டும். இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம் அவரின் நகைச்சவை பற்றி.

அவரின் புத்தகங்களை பொது இடங்களில் இருந்து வாசிப்பதையும், முக்கியமாக அவை பற்றி நினைப்பதையும் தவிர்க்கத் தொடங்கியுள்ளேன். காரணம்: பொது இடத்தில் என்னைக் கடந்து போகும் பலரும் ”என்னடா இவன் விசரன் போல் தானே சிரிப்பதும், சிரிப்பபை அடக்கமுடியாமல் வெடித்துச்சிரிப்பதுமாயிருக்கிறானே” என்று நினைக்கச் சந்தர்ப்பம் இருப்பதனால் தான்.

அவரின் நகைச்சுவை தனித்துவமானது, அவரைப் போலவே.

அவரின் புத்தகங்களை 2006ம் ஆண்டில் இருந்து வாசித்து வருகிறேன். நான் தினம் எட்டிப்பார்க்கும் இணையத்தளங்களுக்குள் அவருடையதும் ஒன்று.

2006ம் ஆண்டு நான் வாழ்ந்திருந்த இடத்தில் ”நல்ல தமிழ் கேட்போம்” என்னும் நிகழ்ச்சியில் அ. முத்துலிங்கம் அய்யாவின் ”அங்கே இப்ப என்ன நேரம் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்திருந்தேன். அன்று அய்யாவுக்கு ஒரு கடிதம் போடுவோம் என்று நினைத்தேன். மிக வேக வேகமாக ஒரு மின்னஞ்சல் எழுதி முடித்து அனுப்ப மூன்று வருடங்கள் எடுத்தது எனக்கு. நான் 18.10.2009ம் திகதி அனுப்பிய மின்னஞ்சலுக்கு 12 மணிநேரத்துக்குள் பதில் எழுதியிருந்தார் அய்யா. பதில் இப்படி இருந்தது.  (கடிதத்தை வாசிக்க முன் அ. முத்துலிங்கம் அய்யாவின் மகனின் பெயரும் ”சஞ்சயன்” என்பதை அறியத் தருகிறேன்)

அன்புள்ள சஞ்சயனுக்கு,
வணக்கம். அதிகாலையில் மகனிடமிருந்து கடிதமா என்று வியப்புடன் திறந்து பார்த்தேன். நீங்களும் எனக்கு மகன்தான் நோர்வேயில் இருந்து.
மிக்க மகிழ்ச்சி. என்னை நீங்கள் கண்டுபிடித்ததுபோல நானும் உங்களை கண்டுபிடித்ததில் சந்தோசம்தான். உங்களுடைய ஸ்டைல் நல்லது. அதையே தொடருங்கள். பிரின்ஸ். முள்ளுக்காவடி படித்து ரசித்தேன். யோசித்துக்கொண்டு போனால் எங்கள் எல்லோருடைய அனுபவங்களும் ஒன்றுதான். நேற்று என் வீட்டுக்கு ஒரு humming bird வந்தது. இதைப் பார்ப்பதற்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தேன். கனடாவிலேயே பிறந்து வளர்ந்த என் பக்கத்து வீட்டுக்காரர் இன்னமும் காணவில்லை. இது பறந்துகொண்டு ஒரே இடத்தில் நிற்கும், பின்னாலே நகரும். பின்னாலே பறக்கக்கூடிய ஒரே பறவை இதுதான். ஒரு தற்செயலாக நீங்கள் என்னைக் கண்டுபிடித்தீர்கள். உலகம் இயங்குவது தற்செயல் சங்கிலிகளால்தான். காவியாவுக்கு என் முத்தங்கள்.
அன்புடன்
அ.மு

இரு முக்கியமான விடயங்கள் இந்தக் கடிதத்தில் இருக்கிறது.
முதலாவது:
எனது மின்னஞ்சல் கிடைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன் அய்யாவின் வீட்டுக்கு ஒரு humming bird பறவை வந்து போயிருக்கிறது என்று எழுதியிருக்கிறார் அல்லவா? அந்த பறவையைப் பற்றி ” உண்மை கலந்த நாட்குறிப்புகள்” என்னும் புத்தகத்திலும் எழுதியிருக்கிறார். அவர் அந்தப் பறவையைப் பற்றி புத்தகத்தில் எழுதியது பெரிய விடயமல்ல. ஆனால் அதை அவரது உலகளாவிய ரசிகர்களுக்கு முன், நான் அதை அவர் முலமாக அறிந்து கொண்டது.

இரண்டாவது:
அய்யாவுக்கு எனது பதிவுகளில் இரண்டு பதிவுகளாவது பிடித்திருந்தது.

இவையிரண்டும், அய்யாவின் புத்தகங்களும் எனக்கு ஒரு ஏகாந்தமான அல்லது ”நிகரற்ற அகத்தூண்டல்”  தந்த சம்பவங்கள் என்றால் அது மிகையில்லை.

கனடா வந்தால் ”வீட்டுக்கு வாருங்கள், பேசுவோம்” என்னும் அய்யாவின் அழைப்பு என்னிடம் இருக்கிறது. இந்தப் பெரிய எழுத்தாளருடன் நான் எதை பேசப் போகிறேன் என்பது தான் எனக்குள்ள பெரிய பிரச்சனையாயிருக்கிறது. அய்யா வீட்டு அம்மா வைக்கும் பருப்புக்கறி பற்றி அய்யா கிலாகித்து தனது புத்தகத்தில் எழுதியிருப்பதால், அதற்காகவாவது அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

......................

பி.கு: அண்ணண் எஸ்.ரா வைப்பற்றியும்  இந்தப் பதிவில் எழுதினால் நான் எழுதிய பதிவுகளில் நீண்ட பதிவு என்றும் பெயரை இந்தப் பதிவு பெற்றுவிடும். அப்படியானதொரு அசூசையான உணர்வை எனது பெருமரியாதைக்குரியவருக்கு  நான் கொடுக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.


.

3 comments:

  1. வாசித்து பயனுற்றேன். பகிர்வுக்கு மிக்க நன்றி. முத்துலிங்கம் ஐயாவின் இணையதள முகவரியை தரமுடியுமா?

    ReplyDelete
  2. உங்களையே மாதிரியே அ.மு. ஐயாவையும், எஸ் ரா. அண்ணனையும் மிகப் பிடித்த இன்னொருவன் நான். ஈழத்து எழுத்தாளர்களில் "சாந்தன்" ஐயும் படியுங்கள். உங்களுக்குப் பிடிக்கும் என்பது எனது அனுமானம். (சாந்தனின் சில கதைகள் எனக்குப் பிடிக்கவில்லை, ஆனால் அநேகமானவை மிக நல்லவை)

    ReplyDelete

பின்னூட்டங்கள்