நட்பின் நீளமும் வாழ்வின் அகலமும்

1990களில் ஓஸ்லோவில் வாழ்ந்திருந்த காலங்களில் விளையாட்டின் மூலமாக அறிமுகமாகிவரே அந்த நண்பன். உயரமான மிடுக்கான தோற்றம். அழகான மீசை. எப்போதும் வாயிலே எஞ்சியிருக்கும் புன்னகை இவைகளே இன்றும் எனக்குள் இருக்கும் அவரின் ஞாபகங்களாக இருக்கின்றன. பழகியது மிக குறுகிய காலங்களே என்றாலும் இன்றும் அவரின் நினைவுகள் துளித்துளியாய் வாழ்க்கையை ஈரமாக்கிக்கொண்டேயிருக்கின்றன.

விளையாட்டில் படு கில்லாடி. கலபலப்பான பேச்சு. நிதானம் என என்னிடம் இல்லாத எல்லாம் அவரிடம் இருந்தன. கால்பந்து விளையாட்டில் மட்டுமே சந்தித்த நாம் பின்பு வீடு சென்று சந்திக்குமளவுக்கு நட்பு முன்னேறியது. நன்றாகச் சமைப்பார். உபசரிப்புக்கும் பஞ்சமில்லை.

தனியே இன்னொரு நண்பருடன் வாழ்ந்திருந்தார். திடீர் என் திருமணப் பேச்சுக்கள் நடந்தன. எனது நண்பரின் மனைவியின் சகோதரியாரை திருமணம் செய்ய நிட்சயிக்கப்பட்டது. திருமணமும் சிறப்பாய் நடந்தது. என்னை புகைப்படம் எடுக்க அழைத்திருந்தார். திருமணத்தின் பின் ஒரு பூங்காவில் சில படங்கள் எடுத்துக் கொண்டோம். அல்பம் மிகச் சிறப்பாய் உள்ளது என பாராட்டினார் பின் வந்த நாட்களில்.

அவரின் திருமணத்தின் பின்னான சில காலத்தில் எனது திருமணத்திலும் கலந்து கொண்டார், புது மாப்பிள்ளைத் தோற்றத்துடன். அதன் பின் விழாக்களில் சந்தித்துக் கொண்டோம். காலம் மெதுவாய் உருண்டு கொண்டிருந்தது.

ஒரு நாள் மாலை வெளியில் பனியின்  காரணமாக உள்ளரங்கில் கால் பந்து விளையாடினோம். அவரும் வந்திருந்தார். மகிழ்ச்சியாய் விளையாடி ஓய்ந்து நிலக்கீழ் சுரங்க ரயிலில் பேசியபடியே பயணித்தோம். எப்படி புது மாப்பிள்ளை வாழ்க்கை போகிறது என்று சொல்லிக் கண்ணடித்தார். உங்ளுக்குத்  தெரியாததா என்றேன். சேர்ந்து சிரித்தோம்.  அந் நாட்களில் நான் வேலை தேடிக் கொண்டிருந்தேன். அதற்கும் சில ஆலோசனைகளைத் தந்தபடியே பிரிந்து போனார்.

அடுத்த நாள் காலை நண்பர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந்து,  அங்கு போனதும் மாரடைப்பு காரணம் என அறியக் கிடைத்தது. தேறி வருகிறார் என்றார்கள். பார்க்க முடியவில்லை. வெளியில் பனி கொட்டிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை தட்டி எழுப்பப்பட்டேன். நண்பர் இறந்து விட்டார் என்னும் செய்தி கிடைத்தது. பல வருடங்களின் பின் மரணத்துடனான நெருக்கம் அடுத்து வந்த சில நாட்களாக என்னை ஆட்டிப்படைத்தது. எனக்கு இப்படி நடந்தால் என்று கற்பனை ஓடியது. தேவையற்ற பயங்கள் வந்து போயின.

இறுதியாய் அவரைப் பிரிந்த போது ஒலித்த அவரது மனைவியின் கதரல் தாங்க முடியாததாய் இருந்தது. அங்கிருந்த நண்பர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

நண்பர் மறைந்திருக்கலாம் நட்பும் அதன் ஈரமும் மறையவில்லை என்பதை 17 வருடங்களின் பின்பும் நண்பர்கள் கூடுமிடத்தில் அவரைப் பற்றிய பேச்சு வந்து போவது உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

அதன் பின்னான சில வருடங்களின் பின் இலங்கையில் நின்றிருந்த போது பல் வலி தாங்கமுடியாமல் ஒரு பல் வைத்தியரிடம் சென்றிருந்தேன். வாயை அகலப்பிரித்து அதற்குள் குடைந்து கொண்டே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்குமிங்கும் அலைந்த பேச்சு இறுதியில் நோர்வே வந்து, பின்பு ஓஸ்லோவாகிய போது தனது தம்பி அங்கு வாழ்ந்திருந்தார், தெரியுமா என்றார். மேலும் விசா‌ரித்த போது அவர் மறைந்த நண்பனின் அண்ணராயிருந்தார்.

உலக வாழ்வின் செயற்பாடுகளில் எது எப்போ எப்படி நடக்கும் என்பது எமக்குத் தெரிவதில்லை. ஆனால் நடந்து முடிந்த பின் திரும்பிப் பார்க்கும் போது ஏதோ ஒரு வித தொடர்பு எமக்கும் அச் செயலுக்கும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. நண்பனின் அண்ணணுடனான சந்திப்புப்பும் அப்படியானதே.

சிலர் மறைந்தாலும் மனதில் வாழ்வார்கள். இன்னும் சிலர் வாழ்ந்திருப்பார்கள் மனமோ அவர்களை மறந்து போகும். விசித்திரம் தான் இது.

எனக்கும் மரணம் வரும், அதன் பின்பும் 17 வருடங்கள் கடந்து போகும். அப்போது எங்காவது ஞாபகத்தில் இருப்பேனா? எங்காவது ஒரு மனதில்? ஏன் இருகக் கூடாது?

இன்றைய நாளும் நல்லதே

உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின்னூட்டம் இட்டால் மகிழ்ச்சியடைவேன்
நன்றி.


.
.

8 comments:

 1. Happy New Year to you & your Family.

  ReplyDelete
 2. "சிலர் மறைந்தாலும் மனதில் வாழ்வார்கள்.இன்னும் சிலர் வாழ்ந்தாலும் மனமோ அவர்களை மறந்து போகும்"
  அழகான கருத்தான வரிகள்!

  ReplyDelete
 3. பலர் மறைந்த பின்பு தான் அவர்களின் அருமை தெரியும். இம்சையாய் தெரியும் சிலரின் நட்பு கூட அவர்கள் நம்மை விட்டு விலகி இருக்கும் போது தான் தெரியும்.

  ReplyDelete
 4. உலகம் எவ்வளவு சிறியது பாருங்கள். நாம் எல்லோரும் எதோ ஒரு உறவுமுறையால் பின்னிப்பினணந்திருக்கிறோம் என்பதுதான் உண்மை. நெஞ்சத்தை தொட்ட ஒரு பதிவு. தங்களுக்கு எனது இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 5. சில் நாட்களில் நானும் ( விசரன் எனும்....)மறைந்து போகலாம் .

  .உங்கள் எழுத்துக்கள் மறையாது உங்கள் நாளாந்த வாழ்வை பகிரும் பாங்கும் வேடிக்கையும் அனுபவ பாடமாகவும் இருக்கிறது. எதோ ஒரு தமிழ் வாசிகக் தெரிந்த மனசு வாசித்துக் கொண்டிருக்கும். ..உங்கள் பதிவுகளை.

  ReplyDelete
 6. உங்களின் ”பெரிய பெரிய” வார்த்தைகளுக்கு மிக்க நன்றி நண்பர்களே.

  ReplyDelete
 7. நிலாமதி அப்பிடி சொல்லதயுங்கோ. சரியான கவலையாக இருக்கு. நீங்கள், சஞ்சயன் போன்ற திறமையான எழுத்தாளர்களை சில நாட்களில் நாங்கள் இழக்க தயாராக இல்லை. நீங்கள் இருவரும் நீண்ட ஆயுசுடன் வாழ்வீர்கள் வாழவேண்டும் கடவுள் துணை நிற்பார். சாவும் அவ்வளவு சீக்கிரம் எல்லோரையும் அணைப்பதில்லை அது தெரியுமோ உங்கள் இருவருக்கும். நடக்கிறதை பற்றி கதையுங்கோப்பா.

  ReplyDelete
 8. yes, we don't know what is going on tomarrow. that is life.
  you met his brother in Sri lanka,

  happy new year my friend.

  ReplyDelete

பின்னூட்டங்கள்