உயிரை மீட்டுத் தந்த ஐபோன்

சில நாட்களுக்கு முன் நடந்த நம்பவம் இது.  அதைத் தொடங்க வேண்டுமானால்  அது நடப்பதற்கு முன்தின சம்பவத்தில் இருந்து தொடங்குவதே சரியானது என நினைக்கிறேன். காரணம் அதற்கும் இன்றைய பதிவுக்கும் இத்துணூண்டு தொடர்புண்டு.

நேற்று முன்தினம் லண்டனில் ”மன்மதன் அம்பு” பார்ப்பதாக பேசிக் கொண்டோம். ஆனால் நேரம் வசதியாக அமையாததால் மாலை டுட்டிங் என்னுமிடத்தில் உள்ள ”சாம்ராட்” என்னும்  உணவகத்தில் தண்டூரி சிக்கன் சாப்பிடுவதாக முடிவு செய்யப்பட்டது. தண்டுரி சிக்கன் ஆர்டர் கொடுக்கும் போது பரிமாறுபவர்
”நார்மல் ஹாட்” ,  ”ஹாட்” ,  ”எக்ஸ்ரா ஹாட்”
என கேட்ட போது நானும் எனது இமேஜ்ஐ மெயின்டெயின் பண்ணுவதற்காக ”எக்ஸ்ரா ஹாட்”  என்றதன் பலா பலனை நேற்று காலை ”அதற்கு” குந்திய போது அனுபவித்தேன்..

மக்கா... யாரோ அங்கனக்க நெருப்பு வைத்த மாதிரி இருந்திச்சி. கண்ணுலயும் புகை வந்துதுப்பா...  சத்தியமா.

நேற்று மாலை மன்மதன் அம்பு பார்க்க போனோம்... ஹவுஸ் புல் என்றார்கள். உடனேயே இன்றைக்கு டிக்கட் எடுத்துக் கொண்டு வீடு வந்தோம்.

இன்று மதியம் தான் சொப்பிங் போகவேண்டும் என்றாள் முத்தவள். சின்னவளுக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது. அவளுக்கு அப்பாவின் கைபிடித்து திரியவும், மடியில் இருந்து ஜஸ்கிறீம் தின்பதுவுமே உலகம். பெரியவளின் ஆசையை தீர்த்தபடியே  மன்மதனின் அம்பையும் பார்க்கப் போனோம். படம் முடிந்து பஸ்ஸில் ஏறும் வரை  உலகம் அழகாய் இருந்தது.

டபிள் டெக்கர் பஸ்ஸில் ஏறியதும் சின்னவள் ”வா மேலே போவாம் என்றாள். மேலே போய் முன்னிருக்கையில் குந்தியதும் பெரியவள் அப்பா எனது ”ஐபோனை” காணவி்லை என்று ஒரு போடு போட்டாள். தனது பை, ஜக்கட் எல்லாம் கிண்டினாள். ஐபோன் எங்கோ போயிருந்தது. சரி நான் வந்த இடத்திற்குப் போய் பார்க்கிறேன் என்று சொல்லி இறங்கிக் கொண்டேன். அவர்களை வீடு போகும் படி பணித்தேன்.

மகளின் இலக்கத்திற்கு தொலைபேசினேன். ரிங் போனது ஆனால் பதில் இல்லை. தியட்டருக்குள் போய் விசாரித்தேன். கையைவிரித்தார்கள். நாம் நடந்த பாதையெங்கும் நடந்து திரிந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. வீதிசுத்திகரிப்பவர் வந்தார். கேட்டேன். அவரும் கையை விரிக்க மீண்டும் மகளின் இலக்கத்தை தட்டினேன். யாரோ எடுத்தார்கள். ஹலோ என்றதும் கட் செய்தார்கள்.  சரி .. இனி கிடைக்காது என்று சாத்தான் மனம் சொன்னது.

மீண்டும் இலக்கத்தை தட்டினேன். மீண்டும் கட் செய்ய மனம் கெலித்துப் போனது.  10 நிமிடம் பொறுத்தேன். மீண்டும் இலக்கத்தை தட்டிய போது எடுத்தார்கள். ஹலோ, எனது மகளின் போன் இது என்ற போது.. ”ப்ளீஸ் ஸ்டாப்,  ஸ்டாப்.. நோ இங்கிலீஸ், வெயிட்” என்றது ஒரு ஆண்குரல். சற்று நேரத்தில் ஒரு பெண் வந்தார் கதைத்தார். எங்கள் போன் அது.. கிடைக்குமா என்றேன். அவரின் பதில் இப்படியிருந்தது ” நிட்சயமாக, அது உங்கள் போன் தானே” என்றார்.

எங்கு வரவேண்டும், எவ்வாறு வரவேண்டும் என கேட்டுக் கொண்டேன்.  மகளுக்கும் ஒரு ”சிட்டுவேஷன் ரிப்போர்ட்” கொடுத்தேன். துள்ளிக் குதித்தாள்.

பஸ் தரிப்பிடம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அந்தப் பெண் சொன்ன  இலக்கத்தை சுமந்து கொண்டு ஒரு பஸ் வந்தது.  பஸ் தரிபிடத்துக்கு 100 மீற்றர் இருந்தது. எதற்கும் கை காட்டுவோம் என கை காட்டினேன். என்ன ஆச்சர்யம்.. என்னருகே  பஸ்ஐ நிறுத்தி கெதியல் ஏறு என்னும் விதத்தில் கைகாட்டினார் சாரதி. ஏறி தலையை சாய்த்து நன்றி சொன்னேன். அழகாய்ச் சிரித்து கண் சிமிட்டினார். பஸ் போய்க் கொண்டிருந்தது. அப் பெண் சொன்ன தரிப்பிடம் வரவேயில்லை.  மீண்டும் சாத்தான் மனம் அவள் உன்னை ஏமாற்றுகிறாள் என்றது. எதற்கும் சாரதியிடம் கேட்போம் என அவரை அணுகிக் கேட்டேன்.

அவர் பார்த்த பார்வை.. அடப் பாவி மக்கா...........!  என்பது போல இருந்தது. இந்த இடத்திற்கு நீ மறுபக்கத்தில் இருந்து பஸ் எடுக்க வேண்டுமே என்றார். அடுத்து வந்த தரிப்பில் நிறுத்தி எப்படி போக வேண்டும் என்றும் விளக்கினார். நன்றி சொல்லிப் புறப்பட்டேன். மறு பக்கம் நின்று பஸ் வர அதற்குள் ஏறி சாரதியிடம் நான் இறங்க வேண்டிய இடத்தைத் சொல்லி எனக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்ட பின் சாரதிக்கருகில் இருந்த ஒரு இருக்கையில் இருந்து கொண்டேன்.

சின்ன மகள் தொலைபேசி எடுத்தாள். என்னய்யா என்ற போது.. அப்பா அவர்கள் டேஞ்சரஸ் பீப்பிள் ஆக இருக்கலாம் என்றும், நீங்க ஒரு கத்தி கொண்டு போங்கோ என்றும் அறிவுரை வந்தது. பெரியவள் தொலைபேசியை வாங்கி ”கவனம் அப்பா” என்றாள்.  சரி சரி என்று சொன்னேன். மனதுக்குள் இதுவரை இல்லாத பயம் ஒன்று குடிவந்திருந்தது. மனம் அது பற்றியே சிந்தித்தது. அது தான் எனது கடைசிப் பஸ்பயணமோ என்று கூட யோசித்தேன்.

ஐபோனை எடுத்து, அதனூடாக என்னை அழைத்து எனது போனையும், பணப்பையையும் கொள்ளையடிக்கும் கும்பலோ என யோசனையோடியது. அப்படி இருக்காது என்று மனம் சொன்னாலும் ஒரு வித பயம் குடிவந்திருந்தது.

மனிதர்களை நம்பாத என்னில் எனக்கு எரிச்சல் வந்தது. இதற்கான காரணம் என்ன என்று யோசித்தாலும் மனம் அதில் ஈடுபாட்டைக் காட்டவில்லை. அவர்கள் என்னை பிடித்து அடித்து பணத்தைப் பறித்தால் என்ன செய்வது என யோசித்தேன். நம்மால என்ன திருப்பி அடிக்கவா முடியும்? வடிவேலு அண்ணண்  மாதிரி தடார் என்று காலில் விழுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் எனது பாஸ்போட் எனது ஜக்கட் பொக்கட்டினுள் இருப்பது ஞாபகம் வர அதை எடுத்து காற்சட்டைக்கும் சேட்டுக்கும் இடையில் பெல்ட் கட்டும் இடத்தில் ஒளித்து வைத்தேன். கையில் தேவைக்கு அதிகமான அளவு பணம் இருந்தது. அதில் 15 பவுண்களை மட்டும் பணப்பையில் வைத்தேன். மிகுதியை சொக்ஸ்ஐ களட்டி அதற்குள் வைத்துக் கொண்டேன். லைசன்ஜ மற்ற சொக்ஸ்சுக்குள் வைத்துக் கொண்டேன்.

அவர்கள் சொன்ன  இடம் வரவில்லை ஆனால் பஸ் இறுதியாக நிற்கும் இடம் வந்தது. சாரதியிடம் போனேன். என்னைக் கண்டதும் தலையில் அடித்தபடியே.. மன்னித்துக்கொள் உன்னை மறந்து விட்டேன் என்றார். பின்பு, மீண்டும் அந்த இடத்தால் தான் போகவிருப்பதாகவும் என்னை காத்திருக்கும் படியும் சொன்னார். காத்திருந்தேன். இம்முறை மறக்காமல் இறக்கிவிட்டார். நன்றி சொல்லி இறங்கிக் கொண்டேன். சுற்றாடல் இருளின் இருட்டில் சற்று அசௌகரீயத்தை தந்தது. இருவர் கையில் பியர் கானுடன் கடந்து போயினர். பயம் கூடிக்கொண்டிருந்தது. தொலைபேசி எடுத்தேன். பதில் இல்லை மறு முனையில். வீதியில் போகும் வாகனங்களைத் தவிர சுற்றாடல் முழுவதும் பெரும் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. மீண்டும் தொலைபேசி எடுத்தேன் ”கட்” பண்ணுப்பட்டது தொடர்பு. எனது உள்மனத்தில் நம்பிக்கை இருந்தாலும் சுற்றாடல் அவநம்பிக்கையை தந்தது.

மீண்டும் தொலைபேசி எடுத்தேன். அதே பெண் கதைத்தார். எங்கே நிற்கிறாய்? என்றார். தனது விலாசம் சொல்லி அங்கு வரச் சொன்னார். சரி என்று இணைப்பை துண்டித்தேன். நடந்து கொண்டிருந்த போது ஒரு கடை திறந்திருப்பது கண்ணில் பட, மகளின் ”கவனம் அப்பா” ஞாபகத்தில் வர மீண்டும் தொலைபேசி எடுத்து குறிப்பிட்டு கடையில் நிற்பதாகச் சொன்னேன். 5 நிமிடத்தில் வருவதாகச் சொன்னார்கள். கடையில் ஒரு பூஞ்செண்டும், இனிப்பும், ஒரு ”நன்றி” சொல்லும் கார்ட் ஒன்றும் வாங்கி அதில் ”நீ நேர்மையானவன். எங்கள் ஜபோனை தந்ததற்கு நன்றி என்றும், நோர்வேக்கு வந்தால் நீ என்னுடன் தொடர்பு கொள் எனவும் எழுதி வைத்துக் கொண்டேன்.

கடைவாசலில் நின்றிருந்தேன். ஒருவர் வந்தார். ஐபோனைக் காட்டினார். தலையாட்டினேன். நீட்டினார். வாங்கிக் கொண்டு கையைக் குலுக்கி நன்றி, மிக்க நன்றி என்றேன். அவர் போலந்துநாட்டவர் என்றதும் நான் உங்கள் நாட்டில் ”கிடான்ஸ்க்” என்னும் ஊரில் தொழில் புரிந்திருக்கிறேன் என்றேன். அதற்கருகில் உள்ள ”சோபொட்” மிக அழகிய கடற்கரை என்றதும் மனிதர் உசாராகிவிட்டார். சற்று நேரம் சம்பாசித்தோம். எனது ஆங்கிலத்தை அவரும், அவரின் ஆங்கிலத்தை நானும் புரிந்து கொண்டோம். கையில் இருந்த பூஞ்செண்டையும், இனிப்பையும், கார்ட்ஜயும் கொடுத்தேன். தனக்கா என்றார் ஆச்சரியர்யமாய். ஆம் என்றேன். கையை குலுக்கி நான் என்ன சின்னப்பிள்ளையா இனிப்பு சாப்பிட என்று கேட்டார்.

சரி, பெரிய பிள்ளைக்கு என்ன வேணும் என்று கேட்டேன். ஒருபெரிய விஸ்கி போத்தலைக் காட்டினார். கடைக்காரரிடம் இவருக்கு தேவையானதைக் கொடுங்கள் என்றேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி அவர் கேட்டதைக் கொடுத்தார் கடைக்காரர். நண்பர் நன்றி என்றார். சிரித்தேன். வெளியில் வந்தோம். கைகுலுக்கி பிரிந்த போது ”சியர்ஸ் மை ப்ரெண்ட்” என்று போத்தலைக் தூக்கிக் காட்டினார். நான் ஜபோனைத் தூக்கிக் காட்டியபடியே சியர்ஸ் மை ப்ரென்ட் என்றேன். இருட்டில் கரைந்து போனார் மனச்சாட்சியுடைய அந்த மனிதர்.தொலை‌பேசியில் உனது ஐபோன் கிடைத்துவிட்டது என்றேன் மகளிடம். ”யெஸ்” என்று ஒரு சத்தம் கேட்டத, மறு பக்கத்தில்.

பஸ்ஸில் இருந்தபடியே யோசித்தக் கொண்டிருந்தேன். ஐபோனைத் துலைத்து மீளப் பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதுவும் இந்தப் பெரிய லண்டனில் ஜபோன் மீளக்கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் எனக்குக் கிடைத்திருக்கிறது. மனம் ஏனோ காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஜபோனைக் குடுத்து மகளின் முகத்தைப்பார்க்க ஆவலாயிருந்தது மனம்.

வீட்டுக்குப் போனேன். என்னைக் கண்டதும் ஜபோனைக் கேட்கவே இல்லை மூத்தவள். கேட்காமலே முத்தம் தந்தாள்.  அணைத்துக் கொண்டாள். மடியில் உட்கார்ந்து தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள். நான் உயிர்த்திருந்தேன். பதின்மவயதுக்குள் தொலைத்துவிட்டிருந்த அவளை மீண்டும் பெற்றுத் தந்திருந்தது அவளின் ஐபோன்.

பொருட்கள் தொலைவதும் நல்லவை நடப்பதற்காகவோ? இருக்கலாம்.

இன்றைய நாளும் நல்லதே...

6 comments:

 1. சரளமான எழுத்து நடை பல இடங்களில் ரசிக்க வைத்தது...

  ReplyDelete
 2. //ஐபோனைத் துலைத்து மீளப் பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதுவும் இந்தப் பெரிய லண்டனில் ஜபோன் மீளக்கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் எனக்குக் கிடைத்திருக்கிறது// பொன் எழுத்துக்களால் பொறிக்கப்பட வேண்டிய வார்த்தைகள் சஞ்சயன் . உங்களுக்கு எப்போதும் ஒரு அதிஸ்டம் உங்களை தொடர்ந்து வந்துகொண்டு தான் இருக்கு. எனது மகள் போனவருடம் ஒரு அம்மன் கோயில் தேர்த்திருவிழா பார்க்கப்போய் ஜபோனை தொலைத்தாள். அவள் எவ்வளவு முயச்சி செய்தும் அது அவளுக்கு கிடைக்கவில்லை. அவள் சமாதானமாக எவ்வளவு நாட்கள் ஆனது. அப்பப்பா!!! அழுது ஒரே ஆர்பாட்டம். கடைசியில் அவள் படும் வேதனை தாங்க முடியாமல் எனது தகப்பனார் இந்த வருட xmas பரிசாக ஒன்றை வேண்டி கொடுத்தார்.

  ReplyDelete
 3. பிரிந்தவர் கூடினால் பேசவும் வேண்டுமா? ஐ போனுடன் மகள் மனம்பேசுகிறது. சந்தோஷத்துக்கு விலை யில்லை

  ReplyDelete
 4. பின்னூட்டங்களுக்கு நன்றி நண்பர்களே!
  @Yarl, தாத்தாமாருக்கு பேரப்பிள்ளைகளில் பயங்கர பாசம் இருக்கு கண்டீங்களோ..

  ReplyDelete
 5. உண்மையில் அந்த மனிதர் மிக நல்லவராக இருக்க வேண்டும்

  ReplyDelete

பின்னூட்டங்கள்