இனம், மதம், நிறம், ஊர் கடந்த நட்பு

அண்மையில் எனது நோர்வேஜிய நண்பர் தனது 60வது வயதைக் கொண்டாடினார். அவ் விழா நடப்பதற்கு ஏறத்தாள இரண்டு மாதங்களுக்கு முன் என்னை தொலைபேசியில் அழைத்து, தனது 60வது பிறந்தநாள் விழாவிற்கு வரமுடியுமா என்ற போது நானும் சற்றுக் குசும்புக்காய் வரமுடியாது என்று செல்வதற்கு அனுமதி உண்டா என்றேன்? இல்லை என்றார். இருவரும் ஒரே நேரத்தில் வெடித்துச் சிரித்துக்கொண்டோம்.

அவருக்கும் எனக்கும் 15 வயது இடைவெளி இருக்கிறது.
அவர் ஒரு நோர்வேஜியர், நான் தமிழன்
அவர் பிறப்பால் கிறீஸ்தவர், நான் இந்து
அவர் மதப்பற்றுள்ளவர், நான் அதற்கு எதிர்மாறானவன்
அவர் தலைசிறந்த படிப்பாளி, நான் அதற்கு எதிர்மாறு
அவர் சமயற்கலை நிபுணர், நான் உண்பதில் நிபுணன்
அவர் வெள்ளை, நான் கறுப்பு

இப்படி எமக்கிடையிலான வேறுபாடுகளை அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் எமக்கிடையே இதையெல்லாம் கடந்த ஒரு பரிசுத்தமான நட்பு இருக்கிறது. அவரை முதன் முதலில் 1987ம் ஆண்டு மே மாதத்தில் சந்தித்தேன். அன்றில் இருந்து இன்று வரை தொடர்கிறது அவர் நட்பு. அவரின் மனைவியும், நான்கு குழந்தைகளும் என்னுடன் அவரைப் போலவே நட்பாய் இருக்கிறார்கள்.  உலகத்தில் இரு வீடுகளுக்கு என்னால் எனது வருகையை அறிவிக்காமல் போக முடிகிறது. அவற்றில் ஒன்று நண்பரின் வீடு, மற்றையது என் தாயாரின் வீடு.

எனது குழந்தைகளும் அவர்கள் வீட்டுடன் மிகவும் அன்னியோன்யமாய் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாய் இருக்கிறது. எனது சகோதரரையும், சகோதரியையும் கூட அவர்கள் நன்கறிவார்கள். அவரின் சகோதர சகோதரிகளை நானும் நன்கறிவேன். அவரின் தாய் தந்தையர் வாழ்ந்திருந்த காலங்களில் எம்முடன் அவர்கள் மிகுந்த நட்பாய் இருந்தனர். அவரின் தாயார், எனது மூத்த மகள் பிறந்திருந்த பொழுது முதன் முதலில் இந்நாட்டு வழமைப்படி ”பிள்ளைப்பேறு கஞ்சி”யுடன் வந்து, தனது பேத்தியார் தனக்குத் தந்த கம்பளி போர்வையை என மகளுக்கு பரிசளித்தார்கள். ஏறத்தாள நூறு வருடங்கள் பழமை வாய்ந்த அந்த கம்பளியை பெற்றுக் கொண்ட போது நாம் நெகிழ்ந்து போனோம். அதே கம்பளியை அவரின் பேரனுக்கு நாம் மீளக்கையளித்த போது என்னை விட மிக அதிமாய் நெகிழ்ந்து போனார்கள் அவர்கள்.

வெளிநாட்டு வாழ்க்கை என்னை ஒரு தமிழனாகவுமல்லாமல், ஒரு நோர்வேஜியனுமல்லாமல் என் உணர்வுகளையும், சிந்தனைகளையும் இருநாடுகளுக்கு இடையில் இருக்கும் சூன்ய பிரதேசம் போன்ற இடத்தில் கொணர்ந்து நிறுத்தியிருக்கிறதாகவே உணருகிறேன். இதனால் பல பிரச்சனைகளையும் சந்தித்திருக்கிறேன். சந்தித்துக்கொண்டிருக்கிறேன். இனிமேலும் சந்திக்கக்கூடும். இந்த சூன்ய பிரதேச மனநிலையால் பிரச்சனைகள் மட்டும் தான் இருக்கின்ற என்றில்லை. பல நன்மைகளையும் பெற்றிருக்கிறேன். இனிமேலும் பெறலாம். என்னைப் பொறுத்தவரை இந்த சூன்ய பிரதேச மனநிலை என்பதை ஒரு முன்னேற்றமாகவே நினைக்கிறேன். ஆனால் பலருக்கு ”இவருக்கு தான் ஒரு நொஸ்க்கன் என்ற நினைப்பு” என்னும் கருத்தை கொடுத்திருப்பதையும் மறுப்பதற்கில்லை. எது எப்படியோ? இது தான் நான் என்று வாழப் பழகிக்கொண்டிருக்கிறேன். நன்றும் தீதும் இங்குமுண்டு.

அந்த சூன்ய பிரதேச மனநிலையில் நான் அலைந்து திரிந்த காலங்களில் என்னை எமது சம்பாசனைகளுக்குள்ளால் கைபிடித்து அழைத்து வந்தவர் நான் மேலே குறிப்பிட்ட நோர்வேஜிய நண்பர். மணிக்கணக்காய் அவருடன் உட்கார்ந்திருந்து உரையாடியிருக்கிறேன். அவர் மற்றவரின் கருத்துக்களை மிகவும் அவதானமாகவும், ஆழமாகவும் புரிந்து கொள்வது மட்டுமல்லாமல் சிந்திக்கத்தக்க வகையில் பதிலளிப்பார். அவருடனான சம்பாசனைகள் இல்லாதிருந்தால் நான் கடந்து வந்த பாதைகள் மிகவும் சிரமமானவையாக இருந்திருக்கும்.

மனதை கொட்டித் தீர்க்க அருகில் ஒருவர் இருப்பதன் அருமையை நான் நன்கு அறிவேன். சக மனிதனுக்கு இன்னொரு மனிதனால் கொடுக்கப்படக்கூடிய அளப்பெரிய பரிசு என்னவெனில் மற்றவர்ரின் வலிகளை முழு மனதோடு கேட்டு அவரிர்களின் பாரத்தைக் குறைப்பதாகும். நான் தடுமாறிய போதெல்லாம் என்னை தட்டித் தந்து நான் தடுக்கி விழாமல் பார்த்துக்கொண்டவர், நான் விழுந்த போதெல்லாம் கைபிடித்து என்னைத் நிமிர்ந்தி நடக்கவைத்தவர். என்னுடன் சேர்ந்த சிரித்துமிருக்கிறார், நாம் சேர்ந்து அழுதுமிருக்கிறோம்.

அவ்வூரில் இருந்து நான் குடிபெயர்ந்த பின் மீண்டுமொருமுறை அங்கு சென்ற போது கடும் சுகயீனமுற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு வீடு திரும்பிய போது அவர் தனது வீட்டில் 10 நாட்கள் என்னை தங்கவைத்து கவனித்துக்கொண்டார். தினமும் 5 நட்சத்திர ஹோட்டல் மாதிரி கவனித்துக் கொண்டதால் நானும் விரைவான உடல், மன நலம் தேறினேன்.

வெளிநாடுகளில் ஆத்மார்த்தமான நட்புகள் கிடைப்பது அருமையாகவே இருக்கிறது.  தோழமையின் தோள்களில் வாழ்வின் பாரங்களை நாம் இறக்கிவைக்கும் போது நமக்கு ஆறுதல் கிடைப்பது உண்மையென்றாலும், அதை விட அந்நேரங்களில் அந் நட்பு மேலும் மேலும் புடம் போடப்படுகிறது என்பதே உண்மை‌. நண்பர்கள் கிடைப்பதே அருமை. அதிலும் இனம், மொழி, கலாச்சாரம் ஆகியவை கடந்து இப்படியான நண்பர்கள் கிடைப்பது அருமையிலும் அருமை. இந்த விடயத்தில் நான் பாக்கியசாலியே.

அவரின் பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய போது நான் மேற்குறிப்பிட்டவற்றைக் கூறினேன். விழா முடிந்ததும் உனது உரையை நான் மிகவும் ரசித்தேன் என்றார். மிக மகிழ்ச்சியாய் இருந்தது எனக்கு.

நான் நமது நட்பினை மிகவும் ரசிக்கிறேன் என்றேன். இருவருக்கம் ஏதோ புரிய, அர்த்தமாய் புன்னகைத்துக்கொண்டோம் நாம்.

அவர் கடந்த 24 ஆண்டுகளாக ஆண்டுக்கு ஒரு தமிழ்ச்சொல் கற்றுக் கொண்டிருக்கிறார். தமிழர்களைக் கண்டால்
”எப்படி சுகம்”
”எனது பெயர் லைடுல்வ்”
”பொயிட்டு வாங்கோ” என்பார். நீங்கள் அவருக்கு தமிழ் தெரியும் என்று தொடர்ந்து கதைத்தால்
”இல்லை”  ”இல்லை”என்பார்.

இப்படி யாரும் உங்களுடன் தமிழில் கதைத்தால் சந்தேகமேயில்லை அது என் நண்பர் தான். உங்கள் வாழ்வில் ஒரு உன்னதமான மனிதரை சந்தித்திருக்கிறீர்கள் என்று நீங்கள் பெருமைப்படலாம்.

இன்றைய நாளும் நல்லதே..

எமனின் அழைப்பிதழும் தொலைந்த தோழமையும்

எனது அப்பா ஒருபோலீஸ் அதிகாரி. மிகவும் கண்டிப்பானவர் என்றால் அது தவறு. அவர் மிக மிக கண்டிப்பானவர். அவரின் அப்பாவை விட மிக கண்டிப்பாக இருந்தார். நான் உருப்படுவதற்கு அது தான் ஒரே வழி என்று எங்கோயே கற்றுக்கொண்டார் என்றே நினைக்கத் தோன்றுகிறது. கற்றதை என்னில் பிரம்பின் மூலம் பரீட்சித்துப் பார்த்து  அடிக்கடி தன் அறிவு சரியானதா என்று தோன்றும் சந்தேகத்தை அவர் தீர்த்துக்கொள்வார். நானும் அவரின் அறிவுப்பசிக்காக அடிக்கடி அடிவாங்குவதும், அம்மாவும், எங்களை வளர்த்த எம்மியும் அப்பாவின் அறிவுப்பசி தீர்ந்ததும் ஆள் மாறி ஆள் எண்ணை பூசிவிடுவதும் அந்தக் காலத்தில் வழக்கமாயிருந்தது. அவரின் இந்த அறிவுப்பசி எனக்கு 14 - 15 வயதாகும் வரை தொடர்ந்தது.

தான் கற்று, பரிசோதித்தவை பிழைத்துப்போனதாலோ? அல்லது கட்டெறும்பு ஊர்ந்து கல்லுத் தேயுமா என்று நினாத்தாரோ என்னவோ அதன் பின் ஏனோ திடீர் என அடிப்பதை நிறுத்திவிட்டார். நானும் ஏன் என்று கேட்கவில்லை. இதனால் மூன்று விதமான நன்மைகள் இருந்தன.
முதலாவது, அவருக்கு இரத்த அழுத்தமும், கோபம் வருவதும் குறைந்து
இரண்டாவது, எனக்கு அவர் ” டேய் இங்க வாடா” என்று கத்தும் போது எனக்கு திசையறி கருவி தேவைப்படாமல் போனது
மூன்றாவது, அம்மாவுக்கும் எம்மிக்கும் ஒரு வேலை குறைந்தது மட்டுமல்ல, தேங்காய் எண்ணையும் மிச்சமாகியது.

அப்பா, சற்று கணகணப்பில் இருக்கும் போது ”பைலா” பாட்டு பாடுவார். தம்பி அவரின் செல்லப்பிள்ளை. வீட்டில் இருக்கும் ”லக்ஸ்பிறே”, சஸ்டஜின் டன்களை எடுத்து வர ஏவுவார். நானும் அவரது  கட்டளையை சிரமேற்கொண்டு நிறைவேற்றப் பழக்கப்பட்டிருந்தேன். அவரின் ”பைலா” உச்சஸ்தாயியை அடையும் போது அம்மா ”நல்ல கூத்து, போய் படுங்கோ” என்பார். ”சரிதான் போடி” என்பது போல் அம்மாவை கவனிக்காமல் பாடி, ஓய்ந்து பாயில் ஒரு மலை போல் சரிந்து, தாங்க முடியாத ஒலியில் குறட்டையுடன் தூங்கிப் போவார். எனது வாழ்வு மிக மகிழ்ச்சியாய் இருக்கும் அவர் ”தெளிந்து”, தலைஇடி இன்றி, வாயில் கனகலிங்கம் சுருட்டுடன் எழுந்து நடமாடும் வரை.

அப்பாவிற்கு இரு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் அப்பாவுடன் யாழ்ப்பாணத்தில் படித்தவர். அவரால் மட்டுமே அப்பாவை ”டேய்” என்று ஓருமையில் கூப்பிட முடிந்தது. மற்றவர் எறாவூரில் இருந்தார். இந்த மூவரில் இருவருக்கு ”தண்ணியில்” கண்டம் இருந்தது எனக்கு பிற்காலத்தில் தெரிவரும் என்பது எனக்கு அப்போ தெரியவில்லை. எனது அப்பாவும், அவரின் பால்ய நண்பரும் குடியும் குடித்தனமுமாய் இருந்ததனால் குறைந்த வயதிலேயே போய்ச் சேர்ந்தார்கள். குடியைப் பற்றி ஒன்றாய் படித்தார்களோ என்னவோ?

அப்பா யாழ்ப்பாணம் வருத்திற்கு ஒரு முறை போய் வருவார். நாமும் அவருடன் போவோம். அந் நாட்களில் இலங்கையில் ஒரு இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு நெல், அரிசி எடுத்துச் செல்வது எனின் போலீஸ் ”பாஸ்” எடுக்க வேண்டும். எனது அப்பாவுக்கு அனுமதி எடுப்பது பெரியவேலை இல்லை. ‌நாம் வெளிக்கிடும் நாள் காலை வரை ”பாஸ்” எடுக்கமாட்டார். பஸ் வர முதல் அவசராமாக போலீசுக்கு போவார். அனுமதியுடன் திரும்புவார். அவருக்கு அவ்வளவு மரியாதை என்று நீங்கள் நினைக்கக் கூடாது. அவர் போலீசில் தான் வேலை செய்தார். இந்த ”பாஸ்”களில் அவரின் கையெழுத்து தான் இருந்திருக்குமோ என நான் இப்போது சந்தேகிக்கிறேன்.

வரும் வழியெங்கும் அரிசி மமூட்டையை விட்டு விலகமாட்டார். அவரோ துக்கி இறக்குவார். சுண்ணாகம் ஸ்டேசனில் அப்பையாவின் ”சோமசெட்” கார் நிற்கும். அதில் முன்னால் அப்பா ஏற பின்னால் அம்மா, தம்பி, தங்கை,எம்மி, நான் ஏறிக் கொள்ள, அப்பையா வாகனத்தின் முன்னால் போய் ஒரு கம்பியை என்ஜினுக்குள் விட்டு மூன்று முறை கோயிலை சுற்றுவது போல சுற்ற, கார் புக் புக் என்று ஸ்டாட் பண்ணும். அது ஸ்டாட் பண்ணாமல் இருந்து அப்பையா அதை சுற்றிச் சுற்றி அவருக்கு தலைசுற்றி நாங்கள் வேறு காரில் போன நாட்களும் உண்டு. போகும் வழியில் அப்பா கையை கதவுக்கு வெளியே தொங்க விட்டபடியே வருவார். அப்பையாவின் கார் உடுவில் ”லவ்” லேன் புளியடியை அடைந்ததும் அப்பாவின் விடுமுறை ஆரம்பிக்கும். எங்களுக்கும் தான்.

அப்பா வந்திருப்பதை அவரின் பால்ய நண்பர் எப்படித்தான் மணந்து பிடிப்பாரோ தெரியாது மானிப்பாயில் இருந்து அன்று மதியம் 2 - 3 மூன்று மணிபோல் சைக்கிலில் ஒரு கலன் ஒன்றறை கட்டியபடி, கலனில் பெரியவர்கள் குடிக்கும் பாலுடன் வருவார். எப்பிடியடா இருக்கிறாய்? என்று ஆரம்பிப்பார்கள். குசினிக்குள் அப்பாவின் அக்கா ” அறுவான் வந்திட்டான், இவன கெடுக்கிறது உவன் தான்” என்பார். அவரின் தங்கைகள் ”ஓம் அக்கா” என்பார்கள். பாட்டி பேசாதிருப்பார். அம்மா கண்டும் காணாதிருப்பார். மாலை ஆறு மணிக்கு நான் விளையாடி அலுத்து வரும் போது பால்குடித்த அசதியில் அப்பாவின் நண்பர் சைக்கிலை உருட்ட முடியாமல் உருட்டிக்‌கொண்டு போவார். அப்பா விறாந்தையில் களைத்து குறட்டையுடன் உறங்கியிருப்பார். பால் குடித்திருந்தாலும் மாமா நிதானமாய் ”பெற்றோல்மக்ஸ்” க்கு காற்றடித்துக்கொண்டிருப்பார்.  அப்பாவும், நண்பரும், மாமாவும் பால்குடிப்பதன் ரகசியம் எனக்கு புரிந்த போது 11 - 12 வயதிருக்கும். அதன் பின் அப்பாவின் பால்ய நண்பர் வந்து போகும் போது அவரின் சைக்கிலுக்கு அடிக்கடி காற்றுப் போகத்தொடங்கியிருந்தது. தள்ளிக்கொண்டு போகும் சைக்கிலுக்கு காற்று தேவையா என்ன?

இதே மாதிரி ஏறாவூரிலும் பால் குடிக்க வந்த நண்பரின் சைக்கிலுக்கு வைத்தியம் பார்த்திருக்கிறேன். அவர் ஊரறிந்த பெருங்குடிமகன். நிதானம் தவறுவதை அவர் மிக நிதானமாகச் செய்வார். அவரின் அகராதியிலேயே நிதானம் என்னும் சொல் இருக்கவில்லை. இன்றும் அவரின் ”சொல் வங்கியில்” நிதானம் பதியப்படவில்லை. இனியும் அது பதியப்படும் என்ற நம்பிக்கை நிதானத்துக்கும் இல்லை, எனக்கும் இல்லை. அவர் இன்றும்  (2011) உயிருடன் இருப்பது உலக அதிசயங்களில் ஒன்று. சில வருடங்களுக்கு முன் அவரைச் சந்திக்கக் கிடைத்தது. ‌உன்ட அப்பா இல்லாதது ஒரு கையுடைந்தது போலிருக்கிறது என்றார். எனக்கு அது ”ஒரு கிளாஸ் இல்லாதது” என்று கேட்டமாதிரி இருந்தது. ”நண்பேண்டா” என்பது இதைத் தானோ?

அப்பா 14 - 15 வயதில் எனக்கு அடிப்பதை குறைத்துக் கொண்டாலும் எம்மால் பழையதை மறந்து சமாதானமடைய முடிவில்லை. அதற்கு எனது ஹோர்மோன்களும் ஒரு காரணம் என்று பிற்காலத்தில் அறிந்து கொண்டேன். அப்பா வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்தார். வாழை, மிளகாய், கத்தரி, தக்காளி என இருந்தது அது. அது ஒரு மிக மிகச் சிறிய தோட்டம். ஆனால் அப்பாவோ அது பெரிதொரு  ஏக்கர் கணக்கிலான தோட்டம் என்பது போல காலையில் கனகலிங்கம் சுடுட்டுடன் குறுக்கும் நெடுக்குமாய் நடந்து கொண்டேயிருப்பார். அவர் தோட்டத்துக்குள் நிற்பது கத்தரிவெருளிக்கு பதிலாக ஒரு போலீஸ்காரன் நிற்பது போலிருக்கும் எனக்கு. மெதுவாய் எனக்குள் சிரித்துக் கொள்வேன்.

அப்போ நாம் ஏறாவூரில் இருக்க, அப்பா பொலன்நறுவையில் வேலை செய்யவேண்டி வந்தது. காரணம் அப்பா புட்டி புட்டியாய் குடித்த பால் தான். பால் குடித்த சந்தோசத்தில் உள்ளூர் பாராளுமன்ற உறுப்பினரை இவர் ”மிக மிக அன்பாய்” அழைத்ததால், அவர் சற்று சூடாகி அப்பாவை தண்ணியில்லா காட்டுக்கு அனுப்புவதாக நினைத்து, ‌பொலன்நறுவைக்கு அனுப்பியிருந்தார். அப்போ எனக்கு 15 வயதிருக்கும். அப்பாவுக்கு  எமன் பரலோகத்துகு இன்விடேஷன் எழுதிக்கொண்டிருந்ததை அவரோ, நாமோ அறிந்திராத காலமது.

ஒரு நாள் காலை நல்ல தூக்கத்தில் இருக்கிறேன் அம்மா ”டேய், எழும்பி கம்பராமாயணத்தை படி, அடுத்த மாதம் ஓ.எல் டெஸ்ட் எல்லோ” என்றதும் கம்பனிலும், அம்மாவிலும் பயங்கர கோவம் வர, ”ம், ம்”   என்றுவிட்டு மீண்டும் சுறுண்டு கொண்டேன். ”தேத்தண்ணி வைச்சிருக்கு” எழும்பு என்ற போதும் நான் எழும்பவில்லை. முதுகில் ஒரு அடி விழ, நிதானமில்லாத அந்த வயதில் தலை வெடிக்கும் கோவத்துடன் குசினிக்குள் ஓடி, தேங்காய் உடைக்கும் பெரிய பிடி போட்ட கத்தியை எடுத்தேன். கதாயுதத்தை எடுத்த பீமன் போல் அதை தூக்கினேன். அம்மா விறைத்து விளி பிதுங்கி தள்ளியே நின்றார். அப்பாவின் தோட்டத்துக்குள் புகுந்து வாழை மரங்களை ”கம்பனின் தலை” என்று நினைத்துக் கொண்டு வெட்டினேன். அவையும் எதிர்ப்பின்றி சாய, எனக்கு வெறி இன்னும் ஏற, முழுத் தோட்டத்தையும் வெட்டிச் சரித்த போது தான் ” அட,  இது செல்வமாணிக்கத்தாரின் தோட்டமாச்சே, அவர் இன்று பின்னேரம் ரயிலில் வருவாரே” என்பது புரிந்தது.

இன்று எனக்கு ராகு உச்சத்தில் தான், தனது தோட்டத்தை கூட்டுக்கொலை செய்த என்னை  ”மனிசன்” தொலைத்து விடுவார் என்பது சர்வ நிட்சயமாய் புரிந்தது. வீட்டுக்குள் இடமில்லை என்பதால் வெளியில் வைத்துத் தான் தனது விளையாட்டைக் காட்டுவார். அருகில் இருந்த வீட்டில் என் வயதில் இரு பெண்பிள்ளைகள் இருந்தார்கள். அவர்களுக்கு தெரிந்தால் மானம் கப்பலேறிவிடுமே என்ற பயத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் முழுசிக்கொண்டிருந்தேன்.

மாலை ரயில் நிலையத்து போய் அழைத்து வந்து வீட்டில் இறக்கிவிட்டதும், எடுத்தேன் சைக்கிலை. இரவு 12 மணிபோல் வீடு திரும்புகிறேன். மனிதர் வீட்டில் இல்லை. அவசர அழைப்பு வந்து வேலைக்கு புறப்பட்டதாக அம்மா சொன்னார்.

பின்பு அம்மா, காலையில் தான் ஏன் அடித்தார் என்று விளக்கமும் தந்தார். அதில் நியாயம் இருப்பது புரிந்ததால் நான் தோட்டத்தை சூரசம்ஹாரம் செய்ததும் பிழை என்றேன். அப்பாவுக்கு தெரியுமா என்ற போது ஓம், ஆனால் அப்பா சிரித்தார் என்றார். அம்மா. தொடர்ந்து, அவரைப் போலவே உனக்கும் கோவம் வருகுதாம் என்றும்  சொன்னாராம், அத்துடன் அவன் வளர்ந்திட்டான் அவனை கதைத்துத் தான் திருத்தலாம் என்றும் அம்மாவுக்கு அறிவுரை சொன்னாராம் என்றார் அம்மா.

அப்பாவிடமும் அழகிய பக்கம் ஒன்று இருப்பது புரிந்து, தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்றவரின் தோழமையை அனுபவிக்க ஆரம்பிக்க முதலே, இரண்டு மாதங்களின் பின் அப்பா இறந்துபோனார். அவரின் போதனைகளும், கோவங:களும் இன்னும் எனக்குள் இருக்கிறது. அப்பா இறந்த போது அவருக்கு 51 வயது. எனக்கு அந்த வயது வரும் போது கோவம் வராதிருந்தால் அப்பா மகிழ்ச்சியடைவார் என்று நம்புகிறேன். இன்றும் 5 வருடங்களுக்குள் எனக்கு பெரும் பொறுப்பு சுமத்தப்பட்டிருக்கிறது.


.

பரதேசி - அழிவின் அழைப்பிதழ் - நாளை‏

பங்குனி மாத இலக்கியப் பூங்காவின் போது ஒஸ்லோவில் இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி அறியக்கிடைத்தது. முன் பின் அறிமுகமற்ற பெயர். சிறந்த எழுத்தாளர், புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார், நோர்வே வாழ்வை எழுதுகிறார் என்றெல்லாம் அறியக்கிடைத்தது.நண்பர் ஒருவர் மூலம் தொடர்பு கொண்டு அறிமகமானேன் அவருடன். அதிர்ந்து பேசாத மனிதராயிருந்தார். அவர் எப்படி 4 புத்தகங்கள் வெளியிட்டார் என்று போசனையோடியது. அவரிடமிருந்து அவரின்  பரதேசி, அழிவின் அழைப்பிதழ், நாளை ஆகிய நாவல்களை வாங்கிக் கொண்டேன். பரதேசி சற்று புதிய புத்தகமாயும், ஏனையவை விட அழகான அட்டைப்படத்துடனும் இருந்ததால் அதையே முதலில் வாசிக்கத் தொடங்கினேன்.

தொடர்ந்து செல்வதற்கு முன் ஒரு சிறு ”ப்ளாஸ் பக்” கதை

பல வருடங்களுக்கு
முன்போர் நாள்
புத்தக பசியெடுத்து
600 கீ.மீ பயணம் செய்து
ஒஸ்லோ தமிழ்க்‌கடையில்
”அண்ணை! தமிழ் புத்தம் இருக்கா” என்ற போது
புழுவைப் பார்ப்பது போல் பார்த்து
”அங்க” என்று ஒரு மூலையை காட்டினார்.
என்னைப் பார்க்காமலே
தமிழ் இலக்கிய உலகமே சி‌ரித்தது
என்னைப் பார்த்து
‌ஜோதிகா, சிம்ரன் (அப்ப அவ பேமஸ்)
விஜய், மாலை போட்ட சாமி படம்
போன்ற புத்தகங்களால்...

”அண்ண” என்றேன்
மெதுவாய்
”என்ன” என்றார்
வெறுப்புடன்

”புத்தகம்” என்றேன்

"அப்ப, அது என்ன துணியோ" என்றார் நக்கலாய்

பிறகு
ஏதோ நினைத்தவர்
”அதுக்கு பின்னால
விக்காத புத்தகங்கள் இருக்கு
பாக்கிறீங்களா” என்றார் (வியாபாரம் புரிந்தவர்)

பார்த்த போது
புழுதி தட்டிப் போய்
விலை பல தரம் குறைக்கப்பட்டு
தான் ”விற்கப்படவி‌ல்லையே” என்ற
கவலை வரிகள்
முகத்தில் தெரிய
கண்ணில் தட்டுப்பட்டது
அ.முத்துலிங்கம் கதைகள் - 2004

புழுதி தட்டிய போது
தும்மினேன்.

உத எடுங்கொ
பெம்தி  புறசன்ட் ரபத் தாறன் (50 வீத கழிவு தாறன்)
என்றார்
நொர்வேஜிய மொழியில்.

50 குறோனர் ( 8 US $)
கொடுத்து வாங்கிவந்தேன்

சத்தியமாய்
சொல்கிறேன்
அடுத்து வந்த
இலவச நேரங்கள்
பஞ்சாயிருந்தன

இப்படித் தான் இருந்தது முதன் முதலில் அ.முத்துலிங்கமய்யாவை வாசிக்கக் கிடைத்த போது. குப்பைக்குள் ஒரு குண்டுமணி கிடைத்தது எனக்கு, அன்று.

அதே போல் எதிர்பாராமல் அறிமுகமானவையே இ. தியாகலிங்கத்தின் புத்தகங்கள். யதார்த்தம் உணர்த்தி, சமுதாயச் சீர்கேடுகளை சாடும் ஈழத்து எழுத்தாளனை அவரின் ”பரதேசி” புத்தகம் படிக்கும் வரை இந்தப் பரதேசி அறிந்திராதது வெட்கப்படவேண்டியதொன்று தான். படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூகப் பிரஞ்ஞை இ.தியாகலிங்கத்துக்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதோ என்று நினைக்கத்தொன்றுகிறது, அவரின் மூன்று நாவல்களையும் படித்ததன் பின்.

”நாளை” என்றும் நாவலில் நிறபேதம், அகிம்சை பற்றி அதிகமாகவே அவர் பேசுகிறார். சில இடங்களில் தனது மனதுக்குள் இருக்கும் கருத்துக்கள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு விதத்தில் கதைக்குள் புகுத்தியிருக்கிறாறோ என்னும் சந்தேகம் வருவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. அனுபவங்களின் அனுபவங்கள் தான் அவரை அப்படி எழுதத் தூண்டினவோ என்னவோ?

”பரதேசி” நாவல் புலம்பெயர் வாழ்வின் யதார்த்தத்தை அப்படியே பேசுகிறது. எதிர்பார்ப்புகளுக்கும் யதார்த்தத்திற்குமிடையிலான போராட்டத்தையும், அதன் ரணங்களையும் அப்படியே கூறுவதல்லாமல் நாவலின் கரு பலரின் புலம்பெயர் வாழ்வின் நாற்றத்தினை மூக்கை பொத்திக்கொள்ளாமல் படம் பிடிக்கிறது,ஆண் பெண் பேதமின்றி. ”விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு” என்ற ஒரு பாட்டின் வரிகள் தான் ஞாபகத்தில் வந்தது எனக்கு பரதேசியை வாசித்த போது. பரதேசி, பலருக்கு உபதேசம் செய்கிறது என்பது தான் உண்மை. கதையின் பாத்திரங்களை மாற்றிப் பார்த்தாலும் அதுவும் பல உண்மைகளைச் சொல்லுவது என்பதுவும் பரதேசியின் சிறப்புகளில் ஒன்று.

”அழிவின் அழைப்பிதழும்” புலத்தின் சீழ் தான். தனிமனிதனின் மனப்போராட்டங்களையும், எம் கலாச்சராத்தின் சுமைகளையும், நோர்வேயின் கலாச்சராத்துடன் மோதவிட்டு கதை புனைந்திருக்கிறார் இ.தியாகலிங்கம். இளைஞர்களாய் வந்தவர்களின் பாலியல் தேவைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது. தடுமாறி விழுந்து, நிதானித்து எழும் போது எழமுடியாதவாறு வாழ்வின் யதார்த்தத்தினால் அடிபட்டுப்போகும் ஒருவனின் கதை இது. ஒருவனின் தலையெழுத்து எவ்வாறு, அவன் விரும்பாவிட்டாலும் மற்றவர்களை பாதிக்கிறது என்பதையும் பேசுகிறது இந் நாவல்.

இ. தியாகலிங்கத்தின் கதைகள் புலம்பெயர் படைப்பாளிகளினால் தொடப்படாத, அவர்கள் தொடப் பயப்ப்டும் விடயங்களைப் பேசுகின்றன. அழிவின் அழைப்பிதழின் பின்னாலிருக்கும் தனிமனித போராட்டங்களை இளமையில் இங்கு வந்த எல்லோரும் கடந்து வந்திருப்பார்கள் தவிர, தங்களை அந் நாவலில் ஒரு சில இடங்களில் ஆவது அவர்கள் அடையாளம் காண்பார்கள் என்பது என் கருத்து.

இ.தியாகலிங்கத்தின் ”வரம்” என்னும் சிறுகதைத் தொகுப்பை நான் இன்னும் வாசிக்கத் தொடங்கவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா. இவரின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் அச்சில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர்  முகப்புத்தகத்தில் ”காரை நகரான்” என்னும் பெயரிலும், பதிவுலகத்தில்
http://karainagaran.blogspot.com/ என்னும் தளத்திலும் எழுதிவருகிறார். புதியதோர் படைப்பாளியுடனும், அவரின் படைப்புக்களுடனும் ஒரு விசரனுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.


.

உயிருள்ள கடிதங்கள்

இறுதியாய் எப்போ கடிதம் எழுதினேன் என்பதை ஞாபத்தில் கொணர முயலுகிறேன். பெருத்த சிரமமாய் இருக்கிறது. ஏறத்தாள 10 வருடங்கள் இருக்குமா? அதற்கு மேலாயும் இருக்கலாம்.

காகிதக் கடிதத்தில் அடங்கியிருக்கும் உயிர்ப்பும், அருகாமையும், நெருக்கமும், தனிமையின் இனிமையும் இருப்பும் இன்றைய உலகின் மின்னஞ்சலில் இல்லை. கடிதம் என்பது மனிதர்களுக்கிடையேயான ஒரு ஊடகமாக இருக்கலாம். ஆனால் ஒரு கடிதத்தின் பிறப்பில் இருந்து இறப்பு வரை அது மனிதர்களுக்கு கொடுத்துப் போகும் உணர்வு வெறெந்த ஊடகத்துக்கும் இருக்குமா என்பது சந்தேகமே.  கடிதம் எழுதும் போது எழும் மன எழுச்சி, நெருக்கம், பதிலுக்காய் காத்திருக்கும் தவிப்பு, எழுத்தைக் கண்டதும் கரைந்தபோகும் மனம், அதைத் தொடந்து வரும் மன அமைதி. அப்பப்பா அப்படி எத்தனை எத்தனை உணர்வுகள் கையினால் எழுதப்பட்ட கடிதங்களுக்கு இருக்கிறது.

எனக்கு கடிதத்துடன்  ஆன பரீட்சயம் மிகவும் மிகச் சிறிய வயதிலேயே கிடைத்துவிட்டது. 1972ம் ஆண்டு அம்மாவும் அப்பாவும் தொழில் புரிந்த பிபிலையில் தமிழ்பாடசாலைகள் இல்லை என்பதால்  என்னை கொழும்பிற்கு  அம்மாவின் அண்ணிடம் அனுப்பி படிக்க வைத்தார்கள். அந்நாட்களில் தொடங்கிய கடிதத்துடனான உறவு கணணியுலகம் வரும் வரையும் தொடர்ந்து கொண்டேயிருந்தது.

அம்மாவின் முத்து முத்தான எழுத்துக்களுடன் வரும் கடிதங்கள் அம்மாவை அருகிலேயே அழைத்துவரும். அக் கடிதங்களை அம்மாவே அருகில் இருந்து வாசிப்பது போலிருக்கும். கடித்தை நான் வாசித்தாலும் அம்மமாவின் குரலே காதுக்குள் கேட்கும். அம்மாவின் அணைப்பில் கிடைக்கும் அதீத மகிழ்ச்சியும், மன அமைதியும் அந்தக் கடிதங்களை வாசிக்கும் போது உணர்ந்திருக்கிறேன்.

ஒரு காகிதத்துக்கு இத்தனை சக்தியா என்று நினைக்கத் தோன்றுகிறது இன்று.
அம்மாவின் நினைப்பு வந்தால் உடனே கடிதம் எழுதுவேன். எழுதி முடியும் போது தனிமையுணர்வும், ஏக்கமும், சுயபரிதாபமும் அகன்றிருக்கும். ஒரே நாளில் இரண்டு கடிதம் எழுதிய  நாட்களும் உண்டு. 1970 களின் இறுதி வரை அம்மா நான் எழுதிய கடிதங்களை பாதுகாத்து வைத்திருந்தார். ஒரு நாள் திருட்டுத்தனமாய்  எடுத்து ஒளிந்திருந்து படித்துப் பார்த்தேன். வெட்கமாய் இருந்தது. அம்மா வாங்கோ, அம்மா வாங்கோ என்று கடிதம் முழுவதும் எழுதியிருந்தேன். அப்போ அது எவ்வளவு வலியை அம்மாவுக்கு கொடுத்திருக்கும் என்று தோன்றவில்லை, ஆனால் இன்று இரண்டு இளவரசிகளின் தகப்பனான பின் அக்கடிதத்தின் வலி நெஞ்சைப் பிழிகிறது.

அம்மா இப்போதும் கடிதம் எழுதுகிறார்.  முன்பு போன்ற அதே முத்து முத்தான எழுத்துக்கள். அம்மாவின் எழுத்துக்களுக்கு, அவரைப் போல் வயது போவதில்லை போலிருக்கிறது. அம்மாவின் எழுத்தின் அழகு எங்கள் மூவருக்கும் இல்லை. அப்பாவுடன் எனக்கு ஆகாது. எனினும் கோழிக் கிறுக்கல் போன்ற அப்பாவின் எழுத்தே எனக்கு வாய்த்திருக்கிறது. ஆகாத அப்பாவின் நினைவு அடிக்கடி வரவேண்டும் என்பதற்காகவே இப்படியாகிருக்குமோ?

அப்பா கடிதம் எழுதி நான் கண்டதில்லை. அப்பம்மாவுக்கும் அம்மா தான் எழுதுவார். அப்பா இப்போது இல்லை. அவரின் எழுத்துரு எந்த வடிவத்திலும் என்னிடமில்லை. அவரின் கடிதமொன்றை மெதுவாய் தடவிப்பார்க்க ஆசையாய் இருக்கிறது. அம்மாவிடம் அல்லது அப்பாவின் வீட்டில் இருக்கலாம்.

அம்மாவின் எழுத்தில் பல கடிதங்கள் இருக்கின்றன. இருந்து இல்லாதவர்களாகிவிட்ட  சின்னம்மா, பெரியம்மா, மாமிமார் என எல்லோரும் எழுதிய கடிதங்களை சேமித்து வைக்கவில்லையே என்பது அவர்கள் இல்லாத போது கனக்கிறது. கடிதங்கள் இருந்திருப்பின் அவை அவர்களின் ஒரு வித இருப்பை சுமந்து கொண்டிருக்குமல்லவா?

நான் எழுதிய காதல் கடிதங்களுக்கு எண்ணிக்கையி்ல்லை. சில வருடங்களுக்கு முன் ஓரு பெட்டியை கிண்டியபோது ஒரு கட்டுக் கடிதங்கள் இருந்தன.  ஒளிந்திருந்து வாசித்தேன். வெட்கம் பிடுங்கித் தின்றது. எத்தனை அபத்தமான எழுத்துக்களை எழுதித் தீர்த்திருக்கிறேன். அந்த வயதின் சகல கோளாறுகளும், கடிதங்களில்  தங்கள் பாதிப்ப‌பை காட்டத் தவறவில்லை. கற்பனைக்கும், யதார்த்தத்துக்கும் இடையில் தான் எத்தனை எத்தனை தூரம்.
ஒரு சில காதல் கடிதங்களும்  எழுதிக் கொடுத்திருக்கிறேன்.   எனது தூரதிஸ்டமோ, அவர்களின் அதிஸ்டமோ அவையேதும் ”சக்சஸ்” ஆகவில்லை. ஆண்டவன் இன்னும் இருக்கிறார்.

நான் நோர்வே  வந்திருந்த காலங்களில்  ஒரு மிகச் சிறிய கிராமத்தில் வாழ்ந்திருந்தேன்.  வெளியுலகுடன்  தொடர்பே எனக்கிருக்கவில்லை. அந் நாட்களில் எனது பாடாசலை நண்பர் ஒருவர் தான் வெளிநாடு வர விரும்புவதாயும், அதற்குத் தேவையான தகவல்களை தருமாறும் கேட்டு கடிதம் போட்டிருந்தார். எனக்கு நோர்வேக்குள்ளேயே பயணப்பட தெரிந்திருக்காத காலம் அது. தவிர ஏஜன்ட் சம்பந்தமாக தெளிந்த அறிவிருந்த நண்பன் ஒருவர் இன்னொரு ஐரோப்பிய நாட்டில் வாழ்ந்திருந்தார். அவர் அவனுக்கும் நண்பர். எனவே ”மச்சான், நீ ...  இன்னாரிடம் கேள் எனக்கு இது பற்றி தெரியாது” என்று உண்மையை எழுதிய போது தொலைந்து போனது ஒரு நட்பு. 20 வருடங்களின் பின்பும் என் சமநிலையை குழப்புகிறது  நண்பனின் கடிதத்துக்கு நான் எழுதிய பதிலால் கிடைத்த பரிசு.

எனக்கு 1993ம் ஆண்டளவில் ஒரு மிக மிக நெருங்கிய நோர்வேஜிய  குடும்பத்தினரிடம் இருந்து நத்தார் வாழ்த்துடன், ஒரு கடிதம் வந்திருந்தது. அக் கடிதம் கணணியில் எழுதப்பட்டிருக்க, கடிதத்தின் கீழ் அவர்கள் அனைவரும் நீல நிற பேனையால் கையெழுத்திட்டிருந்தார்கள். இன்றும், அன்று நான் அடைந்த ஏமாற்றம் நினைவில் நிற்கிறது.  அந்த கணணியில் எழுதப்பட்ட பகுதியை எனக்குப் படிக்கப் பிடிக்கவில்லை, என்னை அவர்கள் ஏதோ ஒதுக்கிவிட்டது போலிருந்தது. மனமெல்லாம் ஒரு வித வலியின் பிசுபிசுப்பை உணர்ந்தேன். கையெழுத்துக்கள் மட்டுமே உயிருடன் இருந்தன, அந்தக் கடிதத்தில். ஏனைய எழுத்துக்கள்  உயிரற்ற சடலங்களாயே தெரிந்தன, எனக்கு. பின்பொருநாள் அக் கடித்தை கிழித்தெறிந்து விட்டேன். ஆனால் இன்று அப்படியான கடிதங்கள் வருமெனின் அவற்றை புரிந்து‌ கொள்ளும் மனப்பக்குவமும் வந்திருக்கிறது.  ஆனாலும் கணணிக் கடிதங்களில் கையெழுத்தக்கடிதங்களில் உள்ள அன்னியோன்யம் கிடைப்பதில்லை.

சில நண்பர்களுக்கு கடிதங்களை எழுதவும், வாசிக்கவும் உதவும் சந்தா்ப்பங்களும் வந்து போயிருக்கின்றன. கடிதங்களை வாசிப்பது இலகு. ஆனால் எழுதுவது என்பது மிகக் கடினமானது. அவரின் உணர்வுகளை வார்த்தைகளில் கொண்டுவர வேண்டும். அதே வேளை அது எனது மொழியில் அல்லாமல் அவர்களின் மொழியாகவும் இருக்க வேண்டும். பலரின் வாழ்வின் சிக்கல்களையும் எழுதும் போது மனதுக்கு மிகவும் கஸ்டமாகவும், சில வேளைகளில் எனோ மனதுக்கு ஆறுதலாகவும் இருந்திருக்கிறது.

அண்மையில் எனக்கு, எனது இளையமகள் ஒரு கடிதம் எழுதியிருந்தாள். அது தான் என் வாழ்வில் இறுதிக்காலங்களில் வந்த மிகவும் விலையான கடிதம். இப்படி இருந்தது அதில்:  (மொழிபெயர்த்திருக்கிறேன்)

அன்பு அப்பா!
எனது பிறந்தநாளுக்கு எனக்கு இவை அவசியம் தேவை!
  • மொபைல் டெலிபோன் (டச் போன்) அக்காடது மாதிரி
  • கரடிப்பொம்மைக்கு உடுப்புகள், கண்ணாடி, சப்பாத்து
  • உடுப்புக்கள்
  • Accessories கடையில் தோடு மற்றும் சோடனைப் பொருட்கள்
  • சொக்லேட்
  • நாய்க்குட்டி
  • மடிக்கணணி
  • டிஸ்னி லான்ட் பயணம் 
சிலதை மட்டும் நிறைவேற்றி சிலவற்றிற்கு கடன் சொல்லியிருக்கிறேன்.

இப்படி ஒரு கடிதத்தை எனது தந்தையாருக்கு நான் கொடுத்திருந்தால் என்ன நடந்திருக்கும்? அவருக்கு ஒன்றும் நடந்திருக்காது, ஆனால் எழுதியவர் சேதப்பட்டிருப்பார் அவ்வளவே.

கடிதங்கள் இப்படி பல வகைகளாகவும், பல விதமான அனுபவங்களை தருவனவாகவும் இருந்திருக்கிறது எனக்கு. இனி எப்போ  கடிதம் எழுதுவேன் என யோசிக்கிறேன். இனி மேல் கடிதம் எழுதும் அவசியம் ஏற்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. ஆனால் எழுதும் நாள் வருமாயின் மிக மகிழ்ச்சியே.


கையெழுத்துக் கடிதங்களுக்கு இது சமர்ப்பணம்..