மணவிலக்கானவன் சமூகத்தை விமர்சிக்க அருகதையற்றவன்!

மணவிலக்கானவன் ஒருவன் சமூகம் சார்ந்து தனது கருத்துக்களை கூறுவதற்குரிய சுதந்திரத்தை இழந்துவிடுகிறான்; என்ற கருத்தை காத்திரமாய் முன்வைக்கும் சமூகத்தின் அங்கத்தவனாக இருந்து இதை எழுதுகிறேன்.

நான் மணவிலக்கானவன். நான் வாழும் சமூகம்பற்றி, அது பயணிக்கும் பாதை, அதன் செயற்பாடுகள், அவற்றின் தவறுகள், சிறப்புக்கள், நன்மை தீமைகள்பற்றி பல வருடங்களாகவே எழுதி வருகிறேன். இவ்வாறு சமூகத்தின் நன்மை தீமைகளை எழுதுபவர்கள் மிக மிகச் சிலரே நோர்வேயில் இருக்கிறார்கள்.

சமூகத்தைப் பற்றிய புரிதலோடு, எனது கருத்துக்களை துணிந்து எழுதுவதனால் எனக்கு கிடைத்த முதற்பெருமை துரோகி, இலங்கையின் உளவாளி, சிங்களவனின் கைக்கூலி போன்ற பட்டங்களே.

இவற்றிகெல்லாம் பயந்து நான் எனது கருத்துக்களைத் தெரிவிப்பதை நிறுத்தினால் என்னைப்போன்ற கோழையான மனிதன் இவ்வுலகில் இருக்கமாட்டான்.

என்மீதான தவறுகள் சுட்டிக்காட்டப்படும்போது அதனை ஏற்கும் மனப்பக்குவமும் என்னிடம் இருக்கிறது என்றே நான் நம்புகிறேன்.

எமது சமூக நிறுவனங்களிடம்; சுயவிமர்சனம், எதிர்வினையாற்றல், உரையாடல்போன்ற வளமான தன்மைகள் இல்லாதிருப்பதும், அவற்றை கற்றுக்கொள்ள மறுப்பதும் இச்சமூக நிறுவனங்கள் முழுமையாக ஜனநாயக ரீதியில் இயங்காமல், ஒரு சிலரின் இருப்புகளுக்காகவே இயங்குகின்றன என்பதை வெளிப்படையாகவே கூறுகின்றன.

அண்மையில் வன்முறையை சிறுவர்களிடத்தில் தூண்டக்கூடிய ஒரு நாடகக்காட்சிபற்றி சிறு விமர்சனத்தை முன்வைத்தேன். நான் சுட்டிக்காட்டிய விடயத்தில் உள்ள நியாயத்தையும், உண்மையையும் நண்பர்களும், முன்பின் தெரியாதவர்களும் தொலைபேசியிலும், நேரிலும் ஆதரித்து உரையாடியிருக்கிறார்கள்.

மறைமுகமாகவே ஆதரவை தெரிவிக்கும் இவர்களால் அந்த ஆக்கத்திற்கு நேரடியாகவே ஆதரவளிக்க முடியாதிருக்கிறது என்பது எத்தனை வருத்தத்திற்குரியது? இதையிட்டு எனக்கு கோபமோ, அயர்ச்சியோ இல்லை.

ஏன் எனில், எமது சமூகத்தின் செயற்பாடு பலகாலமாய் இப்படித்தான் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதை நன்றாகவே உணர்ந்துகொண்டிருக்கிறேன்.

அதிகாரத்தில் உள்ளவர்களது, துரோகிப் பட்டங்களுக்கும், தங்களின் சமூக அந்தஸ்து பாதிக்கப்பட்டுவிடும், நாம் ஒதுக்கப்பட்டுவிடுவோம், எமது பிள்ளைகள் மேடையேறும் சந்தர்ப்பம் அகன்றுவிடும் என்றும் பயந்து ஒதுங்கும் மனிதர்களே பெரும்பான்மையாக வாழும் சமூகம் எம்முடையது.

இதில் கல்வி அறிவுள்ளவர்களும், சமூகத்தில் முன்மாதிரியாக திகழும் பலரும் உள்ளடங்கியிருக்கிறார்கள் என்பதே வேதனையானது. இருப்பினும் அவர்களின் மனநிலைகளையும் நாம் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே உண்மை.

ஆனாலும் இரகசியமாகவேனும் இவர்களால் உங்கள் கருத்தில் உடன்படுகிறேன் என்று கூறமுடிகிறது என்பது எனக்கு பெரும் பலத்தையும், தைரியத்தையும், ஊக்கத்தையும் தருகிறது. காரணம் எமது சமூகம் மாற்றமடையவேண்டும் என்று இவர்கள் விரும்புகிறார்கள் என்பதே.

இப்படியான கருத்துகளை நான் நேரடியாக முன்வைப்பதில் அதிருப்திகொண்ட சிலர், எனது நண்பர்கள் பலருக்கும் அவதூறு பேச்சுக்களாலும்  மிரட்டல்களாலும் துன்பங்களையும் மனக்கஸ்டங்களையும் கொடுப்பது தம்மை காப்பாற்றிக் கொள்வதற்கேயன்றி வேறு நோக்கமில்லை.

எங்கள் சமுதாயத்தில், சமூகத்தின் மீது கேள்வி எழுப்புபவர்கள் பிறழ்வுடையவர்கள், துரோகிகள், ஒழுக்கக்கேடானவர்கள் என்ற கருத்தை ஒரு பகுதியினர் ஏற்படுத்துகின்றனர். இவர்கள் யார் என்று நோக்கின் இவர்களை நோக்கியே மேற்குறிப்பிட்ட விமர்சனங்களும், கேள்விகள் எழுப்பப்பட்டிருக்கும்.

தவிர, இவர்கள் பேசு பொருளினைத் தவிர்த்து அதனை எழுதியவர் மீதான வசைபாடல்களை ஆரம்பித்துவிடுகிறார்கள். தனிப்பட்ட முறையில் தாக்குதல்களை மேற்கொண்டு பேசுபொருளை திசைதிருப்பியம் மாற்றியும் விடுவார்கள்.


உண்மை மற்றும் பொய்யிற்கு அப்பால், பேசப்படும் கருப்பொருளைத் தவிர்த்து, விமர்சிப்பவனின் தனிப்பட்ட வாழ்க்கையைத்தான் அவர்கள் விமர்சிக்க அவர்கள் விரும்பினால், அவர்களும் தம்மைப் பற்றிய தனிப்பட்ட விமர்சிப்புகளுக்கு தயாராகவேண்டுமல்லவா? இப்படியா தொடரப் போகிறோம்?

தன் மீது முன்வைக்கப்படும் கருத்துக்களுக்கு எதிர்வினையாற்றத் தெரியாதவர்களும், தவறுகளை ஏற்று அவற்றை விவாதத்திற்கு எடுத்துகொண்டு தம்மை வளர்த்துக்கொள்ளும் மனப்பான்மையற்றவர்களும், பொறுத்தமின்றி தம் இருப்பை தக்கவைத்துக்கொள்ள இனஉணர்வுகளை பயன்படுத்தி பதவிகளில் குடியிருப்பவர்களுமே இப்படியான தற்பாதுகாப்பு முறைகளுக்குள் தம்மை மறைத்துக்கொள்கின்றனர்.

நான் மணவிலக்கானவன் என்றும் நான் மறைத்ததில்லை. எனது வாழ்வுமுறையை தெரிவுசெய்ய எனக்கு முழு உரிமையும் உண்டு. சமூகத்தில் நான் தனிமனிதனாகவும், கூட்டுச்செயற்பாட்டாளனாகவும் பங்குகொள்கிறேன். எனக்கு விமர்சிக்கவேண்டும் என்று தெரிபவற்றை நான் விமர்சிக்கிறேன்.

தனது குடும்பத்தையே பார்க்கத்தெரியாதவன் எவ்வாறு சமூகத்தை விமர்சிக்கலாம் என்று, தொடர்ந்து, ஒரு சமூகத்தினர் என்மீது விமர்சனத்தை வைத்துவருகின்றனர். அது மட்டுமல்ல அவர்களுக்கு மஞ்சல் பத்திரிகை எழுதக்கூடிய கற்பனை வளமும் உண்டு என்பதை அவர்களின் கதைகள் உறுதிசெய்கின்றன.

என்னை மட்டுமல்ல ஒரு சமூகத்திலிருந்து ஒருவனை தள்ளிவைக்க சிலர் முடிவெடுத்து செயலாற்றுவதற்கு, பெண்பித்தன், துரோகி என்ற பட்டங்கள் பிரபல்யமாகப் பாவிக்கப்பட்டு வருகின்றன.  இது சமூக அமைப்புக்குளின் உள்ளக மோதல்களின்போது இவை ஏற்கனவே பாவிக்கப்பட்டு,  பலருக்கு இப்பட்டங்களை சூட்டப்பட்டு சமூகத்தில் ஒதுக்கி வைக்கப்பட்டிருக்கின்றனர்.

என் எழுத்துக்களை இப்படியான தந்திரங்களினால் நிறுத்திவிடமுடியாது என்பதில் நான் மிகவும் உறுதியாகவே இருக்கிறேன்.

மற்றையவர்களின் காதுகளுக்குள் மட்டுமே குசு குசுக்கும் அவர்களிடம், என்மீதான விமர்சனங்களை பொதுவெளியில் முன்வைக்கும் அறம், விழுமியம், உண்மைத்தன்மை, தங்களின் மீதான விமர்சனத்திற்கு எதிர்வினையாற்றும் உளப்பாங்கு, உரையாடும் பழக்கம் போன்றவை இல்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

அவர்களது இந்த வளமற்ற கருத்தியலே பலருக்கும் என் எழுத்தின் மீது நம்பிக்கையையும், இரகசிய ஆதரவையும் வழங்கும் தைரியத்தையும் கொடுத்திருக்கிறது.

மணவிலக்கானவன் சமூகத்தை விமர்சிக்கக்கூடாது என்று என்ன விதி இருக்கிறதா? எனது சட்டியில் என்ன வேகுகிறது என்பதை அறியமுன், என்னை விமர்சிப்பவர்கள் தங்களது சட்டியில் என்ன கருகுகிறது என்பதை அறிந்துகொள்ள மறந்துவிடுகிறார்கள் என்பது பெரும் முரண்நகை.

நோர்வேயின் நிதி அமைச்சராக இருந்தவர் ஒருவர் ஓரினச்சேர்க்கையாளர். அரச நிர்வாகத்தில், சமூகத்தில்  முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களில் பலர் மணவிலக்கானவர்கள். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டவர். இப்படியான ஒரு சமூகத்தில் வாழ்ந்துகொண்டு மலினமாக செயற்படும் “மனிதர்களை” நினைத்தால் எமது சமூகத்தின் எதிர்காலம்பற்றிப் பயமே ஏற்படுகிறது.

விமர்சனம் என்பதனை நஞ்சு என்று பார்க்கும் சமுதாயமாக எமது சமுதாயம் இருக்கிறது. முகஸ்துதி எமது சமுதாயத்தின் இன்னொரு சாபம்.

உற்ற நண்பன் எனின் நண்பன் வழிதவறும்போது கண்டித்து  அணைத்து அழைத்து வர வேண்டும். அதே போலத்தான் சமூகம் தவறான பாதையில் பயணிக்கும்போது அது பற்றி எடுத்துக்கூற, விமர்சிக்கவேண்டியதொரு நிலையில் சமூகப்பொறுப்புள்ள அனைவரும் இருக்கிறோம்.

கண்முன்னே தவறுகளும், ஏமாற்றுக்களும், சமூக ஜனநாயக விரோதச் செயல்களும் நடைபெறும்போது அவற்றை கண்டிக்கவோ, எடுத்துக்கூறவோ, விமர்சிக்கவோ எங்களில் எத்தகைபேர் தயாராக இருகிறோம்?

எமது குழந்தைகள் எம்மைப் பார்த்தே வளர்கின்றனர். அவர்களுக்கு இப்படியானதொரு வளமற்ற சமூகப்பொறுப்பற்ற சிந்தனையையா நாம் கற்பிக்க விரும்புகிறோம்? அவர்களுக்கு எதிர்காலத்தில் ஒரு பிரச்சனை ஏற்படும்பொது அவர்கள் வாய்முடி மௌனிகளாக இருப்பதையல்லவா நாம் அவர்களுக்கு கற்றுக்கொடுக்கிறோம்.

இப்படியாக சிந்தனை காலப்போக்கில் எத்தகையதொரு சமுதாயத்தினை எமக்கு தரப்போகிறது? காலம் கடந்துவிட முன சிந்திக்கவேண்டிய நிலையில் நாம் இருக்கிறோம்.

நான் சந்தித்த, என்னுடன் உரையாடும் பல மனிதர்கள் மாற்றங்களை விரும்பினாலும், அதிகாரத்தில் உள்ளவர்கள் தம்மீது கட்டவிழ்த்துவிடக்கூடிய அவப்பெயர்கள், அந்நியப்படுத்தல், கேவலப்படுத்தல் ஆகியவற்றிற்குப் பயந்து வாய்மூடி இருப்பதே சிறந்தது என்றிருக்கிறார்கள்.   இம் மௌனத்தை ஒரு வாய்ப்பாக பலசந்தர்பங்களில் மாற்றிக்கொண்டிருக்கிறது எம் சமூகத்தின் ஒரு பகுதி.

எனது சமூகத்தை விமர்சிப்பதனால் நான் “விமர்சிப்பவர்களை” வெற்றிகொள்கிறேன் என்று எண்ணுவது எவ்வளவு முட்டாள்தனமானது என்பதை நான் நன்கு அறிவேன். அதேவேளை என்னை சிறுமைப்படுத்தும் அவதூறுகளும் என்னை பாதிக்க நான் அனுமதிப்பதில்லை.

இது எமது சமூகம். தனிப்பட்ட கருத்தியல் வெற்றிதோல்விகளைக்கடந்து எமது சமூகத்தின் வெற்றியே முக்கியமானது என்பதை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இனியாவது விமர்சிப்பவனை விமர்சிக்காது, விமர்சனத்தின் கருப்பொருளைப்பற்றி பேச, கற்றுக்கொள்வோம். 

இதைப்பற்றிப் பேசுவது பிழையாகுமா?

நேற்றைய உரையாடல் ஒன்று மனதை கீறத்தொடங்கியது. அதன்பின் முகப்புத்தகத்தில் நான் எழுதிய நிலைத்தகவலை அடிப்படபடையாகவைத்தே இக் கட்டுரை எழுதப்படுகிறது. நிலைத்தகவலை பார்வையிட: https://www.facebook.com/sanjayans/posts/10203396340295596


நாம் எந்தளவுக்கு எமது குழந்தைகளின் கல்வியில் பிரக்ஞைபூர்வமாக இருக்கிறோம், எம் குழந்தைகள்,  எதைக் கற்கிறார்கள், எவ்வித கருத்தியல்கள் அவர்களுக்கு நுண் அரசியலாகப் போதிக்கப்படுகின்றன என்பதில் நாம் கவனம் செலுத்துகிறோமா?

எனது நண்பருடனான உரையாடலின் பல கருத்துக்களுடன் நான் உடன்படுவதாலும், பல பெற்றோர்கள் குழந்தைகளின் கல்வியில் எதுவித  சிந்தனையும் இன்றி சிலரது அரசியலுக்கு அடிபட்டுப்போவதும் எமது சமூகத்தை வளமானபாதையில் கொண்டுசெல்லப்போவதில்லை என்னும் எனது கருத்துக்களை பகிரவுமே இக்கட்டுரை எழுதப்படுகிறது. இவற்றைப்பற்றிப் பேசுவதே எனது எண்ணம்.

நோர்வேயில் எமது குழந்தைகள் இரு காலச்சாரமுறையில் வளர்கிறார்கள். இரண்டு பாடசாலைகளின் (நோர்வே பாடசாலைகள், தமிழ்பாடசாலைகள்) கருத்தியல், கற்பிக்கும் முறை ஆகியவற்றினூடாகவே பயில்கிறார்கள். வளர்கிறார்கள். வளர்ந்து பெரியவராகிறார்கள். இச் சமூகத்தின் அங்கம் ஆகிறார்கள்.

மனிதனுக்கு விழுமியம் (Ethics) என்பது முக்கியம். கற்பித்தலும் இதனடிப்படையிலேயே நடைபெறவேண்டும். பாடசாலைகளில் விழுமியங்கள் மீறப்படுகிறது என்றால் அதனை சுட்டிக்காட்டவேண்டிய பொறுப்பு சமூகத்திடமே இருக்கிறது. பாடசாலையில் சமூகம் என்பது அது பெரும்பாலும் பெற்றோரையே குறிக்கிறது.

மேற்கூறிய கருத்துக்களுக்கு உதாரணமாக அண்மையில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களைக் குறிப்பிடலாம். முதலாவது ஒரு பாடசாலையின்  நடைபெற்ற ஒரு சம்பவம் பற்றியது.

ஒரு கிழமைக்கு முன்பு எனது இரண்டு நண்பர்கள் தங்கள் குழந்தைகளுக்கு தமிழ் பாடசாலையில் கொடுக்கப்பட்ட கேள்வியைக் கூறி இதற்கு நீ என்றால் என்ன பதில் என்றார்கள்.  கேள்வி இதுதான். தமிழீழத்தின் சின்னங்கள் எவை?

தங்களுக்கு கார்த்திகைச் பூவையும், செண்பகத்தையும், புலிக்கொடியையும் தவிர வேறு எதுவும் தெரியாது என்றனர்.

குழந்தைகளுக்கு எமது நாட்டினைப்பற்றி அவர்களது மொழியல் எடுத்துக் கூறி, அவர்கள் எதை சின்னமாக கருதுகிறார்களோ அதை எழுதச் சொன்னால் அது குழந்தைகளின் சிந்தனை வளர்ச்சியை அதிகமாக்கும். தவிர ஈழத்தமிழர்களின் சரித்திரம் இலங்கையில் பல ஆயிரம் ஆண்டுகள் சரித்திரத்தை உடையது. விடுதலைப் புலிகளின் காலம் ஏறத்தாள 40 ஆண்டுகள். தவிர நாம் அரசற்ற தரப்பு. அத்துடன் ஒரு நாட்டின் சின்னம் என்பதை பலத்துடன் இருக்கும் தரப்பே அதிகமாக முடிவுசெய்கிறது. சின்னம் என்பது எது? எதைவைத்து இது முடிவுசெய்யப்படுகிறது? யார் முடிவுசெய்வது? என்று குழந்தைகளுடன் பேசுங்கள். அவர்களை சிந்திகத் தூண்டுங்கள் என்றேன்.

அத்துடன் உங்கள் குழந்தைகள், நோர்வேயின் சின்னங்களாக  எதை எதை நினைக்கிறார்கள் என்று கேட்டறிந்தபின் தொடர்புகொள்ளுங்கள் என்றேன். மாலை மீண்டும் தொலைபேசி அழைப்பு வந்தது. குழந்தைகள் நோர்வே கொடி என்பதைத் தவிர பனி, மலைகள், பெரும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், சமாதானத்திற்கான நோபல் பரிசு, விளையாட்டு வீரர்களின் பெயர்கள், வடதுருவத்திற்கு சென்றவரின் பெயர், பிறவுன் நிற சீஸ் (brown cheese), பனிமான், பனிக்கரடி, ஒற்றுமை, சமாதானம், நோர்வே இலக்கியங்களில் உள்ள பாத்திரங்களின் பெயர்கள் என்று பலதையும் கூறியதாகச் சொன்னார்கள்.
ஒரு நாட்டைப்பற்றி குழந்தைகள் எவ்வளவு அறிவுடன் இருக்கிறார்கள். அதேபோன்று தமிழீழத்தினைப்பற்றி கற்பித்திருந்தால் இந்த பிரச்சனை வந்திருக்குமா என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறிய பதில். புலிக்கொடி, கார்த்திகைப்பூ, செண்பகம் ஆகியவை காணும். மற்றதுகளை எழுதினால் பிரச்சனை வரும். ஏன் வீணா பிரச்சனைப்படுவான்.

நோர்வே பற்றிய குழந்தையின் அறிவு எங்கே, எங்கள் தமிழீழம்பற்றிய அவர்களின் அறிவு எங்கே. ஒன்றுடன் ஒன்றை ஒப்பிடக்கூடிய இடத்திலா இருக்கிறது?  இந்த இடத்தில் பிரச்சனைவேண்டாம் என்று கூறிய நண்பரிடம் ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது.

இங்கே, யார் உங்களை பிரச்சனைப்படச் சொன்னார்கள். உரையாடலாமே. உரையாடல் அபாயமானதல்லவே. உரையாடவே பயப்படும் சமூகமாகிவிட்டோமா நாம்?


இரண்டாவது கடந்தவாரம் நடைபெற்ற ஒரு பாடசாலையின் ஆண்டுவிழாவில் மேடையேறிய ஒரு நாடகம் பற்றியது.

இக் கட்டுரை, குறிப்பிட்ட அந்த ஆண்டுவிழா - நாடகம் பற்றிய விமர்சனம் அல்ல. அந்த ஆண்டுவிழாவில் பல சிறப்பான விடயங்கள் நிட்சயமாக நடந்திருக்கும். நான் அங்கு சமூகளித்திருக்கவும் இல்லை. எனவே நான் அதை விமர்சிக்கவும் முடியாது.

ஆனால் நணபருடனான என் உரையாடலின்பின் சிந்திக்கத் தூண்டிய ஒரு விடயத்தையையே இங்கு குறிப்பிட்டு எழுதுகிறேன்.
எனவே இக் கட்டுரையானது அந்த நிகழ்வின் மீதான விமர்சனம்  அல்ல என்பதை மீண்டும் மிகவும் தெளிவாகக் கூறிக்கொள்கிறேன்.

அங்கு சிறுவர்கள் நடித்த நாடகத்தில், மன்னான தனது சகோதரனின் கருத்தினை இன்னொரு சகோதரன் ஏற்க மறுக்கிறான். மாற்றுக்கருத்துள்ள சொந்த சகோதரனை கொன்றுவிடுவதற்காக தனது மற்றைய சகோதரனிடம் இப்படிக் கூறுகிறான்.

 ”முடித்துவிடு இவன் கதையை, இல்லையேல் இவன் எங்களை முடித்துவிடுவான்"

10 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு இப்படியான விழுமியங்களை கற்றுக்கொடுப்பது எந்தவகையில் நியாயம்?  இதுவே எனது கேள்வி.

இவ்வாறு வசனம்பேசக் கற்றுக்கொடுக்கும் பெற்றோரே, கலைஞர்களே, பாடசாலைகளே!
நோர்வேஜிய பாடசாலையில் சிறுவன் "நான் உன்னைக் கொன்றுவிடுவேன் (Jeg vil drepe deg) " என்று கோபத்தில் கூறினாலே பாடசாலையானது உங்களை அழைத்துக் கண்டிக்கும் என்பதை நீங்கள் அறிவீர்கள்.  இப்படியான ஒரு வார்த்தை நோர்வேஜிய பாடசாலையின் நாடகங்களில் வந்திருக்குமா?  அப்படி வந்திருந்தால் பெற்றோர்களின் கருத்து எப்படி இருந்திருக்கும் என்பது உங்களுக்குத்தெரியும்.

அந்தப் பெற்றோரில் நீங்களும் ஒருவர்.

அப்படியான நீங்கள் ஏன் இப்படியான கருத்துக்களை உங்கள் குழந்தைகளுக்குள் புகுத்த அனுமதிக்கிறீர்கள்? உங்களை மீறி  நடந்தவிடயம் இது என்று நீங்கள் கூறமுடியாது. குழந்தைகளுக்கு என்ன கற்பிக்கப்படுகிறது என்பதை பெற்றோராகிய நீங்கள் அறிந்திருக்கவேண்டுமல்லவா?

எதிரியை அழித்தால்தான் நாம வாழலாமா? இந்த கருத்தியலில் சிந்தனையில் வளரும் குழந்தை எதைக் கற்றுக்கொள்ளும். எதிரியை கொன்றால் குழந்தையின் வாழ்வு மலராது... சிறையில்தான் கழியும் என்பது உங்களுக்குத் தெரியாதா?

உண்மையில் நாடகமானது ஒரு நுண் அரசியலை மக்களிடத்தில் பரப்புகிறது. தமிழர்களின் இறுதிப்போரின் அரசியலையே அது பேசியது. "எம்மிடம் மக்கள் பலம் இருக்கிறது" என்ற வசனமே அனைத்தையும் கூறுகிறது என்றார் நண்பர். அவரது கூற்று ஏற்றுக்கொள்ளப்படவேண்டியதே. இதைத்தான் நுண் அரசியல் என்பார்கள். 

பாடசாலைகளே!

சமூகத்தினை பிரக்ஞையுடன் வளர்ப்பது உங்கள் கடமை. இதுவா உங்கள் பிரக்ஞை? விடுதலை உணர்வை இப்படியா குழந்தைகளுக்கு ஊட்டுவது?
மற்றொருவிடயம் -

குழந்தைகள் கவிதை வாசித்தார்கள். அவர்கள் அப்போது குழந்தைகளாகவே இருக்கவில்லை. பெற்றோரின் உணர்வுகளை பிரதிபலிக்கும் இயந்திரங்களாகவே இருந்தார்கள் என்றார் நண்பர்.
இது ஒன்றும் இந்த நிகழ்வில் மட்டும் நடக்கும் புதிய விடயம் அல்ல.

தமிழர்கள் நாம் கவிதை வாசிப்பது என்றால் இப்படித்தான் வாசிக்கவேண்டும் என்று ஒரு எழுதாத சட்டத்தை உருவாக்கியிருக்கிறோம்.

வளர்ந்தவர்களின் உடலசைவுகளுடனும், மொழியாடலுடனும் குழந்தைகளை கவிதைபாடவைத்து புளங்காகிதம் அடையும் பெரியவர்களே அந்தக் குழந்தையை குழந்தையாய் இருந்து, தான் கற்றதை தனது மொழியில் கவிதைபாட அனுமதிக்க ஏன் மறுக்கிறீர்கள்?

விடுதலை, போர் என்று உங்கள் போர்ப்பரணிகளையும், குழந்தைக்கு புரியாத உள்ளடக்கங்களையும் புரிந்துகொள்ள முடியாத குழந்தை அதனைப் பேசுவதால் எதனைக் கற்றுக்கொண்டுவிடப்போகிறது? குழந்தையிடம் இது ஒரு மகிழ்ச்சியை கொடுக்குமா? இப்படியா நாம் தமிழினை, விடுதலையுணர்வினை வளர்க்கப்போகிறோம். எப்போது அவர்களை சிந்திக்க அனுமதிக்கப்போகிறோம்?


பெற்றோர்களே, கலைஞர்களே, எழுத்தாளர்களே, பாடசாலைகளே!
  • குழந்தைகளை சுயமாக சிந்தித்து வாழ விடுங்கள்.
  • அவர்களின் உலகம் இது. அவர்களே அதை செதுக்கவேண்டும். நாம் அல்ல.
  • எங்களின் வன்முறைக் கலாச்சாரம்  எம்முடன் அழிந்துபோகட்டும்.
  • நடிக்கவும், கவிதைபேசவும், நடனமாடவும் என்று அவர்களின் நெஞ்சினில் விஷத்தினை விதைக்காதீர்.
  • குழந்தைளையே நாடகங்கள், கவிதைகள், நடனங்களின் உள்ளடக்கத்தை  கற்பனை செய்யவும், எழுதவும் அனுமதித்து அவர்களின் சிந்தனைவளத்தை ஊக்குவியுங்கள்.
  • முக்கியமாய் பெற்றார்களே, உங்கள் குழந்தைகள் மேடையேறுகிறார்கள் என்று மட்டும் திருப்பதியுறாது அவர்கள் எதைக் பேசுகிறார்கள், நடிக்கிறார்கள், கற்றுக்கொள்கிறார்கள் என்று பார்ப்பது உங்கள் கடமை எப்போது உணரப்போகிறீர்கள்?
  • பெரும் கலைஞர்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆகியோரே எப்படியானதொரு பண்பாட்டை - கலாச்சாரத்தை வளர்க்க உங்களின் திறமை விரயமாக்கப்படுகிறது என்பதை சற்றாவது சிந்தித்தீர்களா?

பெற்றோரும், கலைஞர்களும், எழுத்தாளர்களும் தவறான பாதையில் செல்லும் சமூகத்தினை எதிர்ப்பதற்குப் பயந்து, எதையும் பேசாது,  இப்படியான வளமற்ற, தார்மீகமற்ற , சமூகவிரோதக் கருத்துக்களுக்கு துணைபோவதானது உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் செய்யும் மாபெரும் தவறு என்பதையும் அவர்களை வளமற்ற மனிதர்களாக மாற்றுகிறது என்பதை உணரவேண்டும்.

கற்பித்தல் என்பது ஒப்புவித்தலோ, திணித்தலோ அல்ல.... 
மாறாக  ஆர்வத்தையும், தேடுதலையும் சிந்தனையை தூண்டுவதே ஆகும்.

வாழும் மரணம்

மரணம் என்பது ஒரு தத்துவம். மரணத்தின் வாசனைகளை நுகர்ந்தும், வேதனைகளை உணர்ந்தும், பகிர்ந்தும், கற்றும் புரிந்துகொள்ளவேண்டும் என்று எண்ணத்தோன்றுகிறது. அப்போதுதான் மரணத்தின் வீரியத்தை நாம் கடந்துகொள்ளலாம்.

மரணமானது நாம் கருவில் உருவாகிய கணத்தில் இருந்தே எம்மை நோக்கி நடக்க ஆரம்பிக்கிறது. அது எம்மை எப்போ வந்தடைகிறது என்று என்பதை எவராலும் ஊகிக்கமுடிவதில்லை என்பதனால் மரணம்பற்றிய பிரக்ஞை இன்றி காற்றில் நடந்துகொண்டிருக்கிறோம். அவ்வப்போது மரணம் எனது கையைப்பிடித்து நிறுத்தி, எனது காதுக்குள் ”நான் இருக்கிறேன், மறந்துவிடாதே” என்று தன் இருப்பை குசுகுசுத்துவிட்டு நகர்ந்துகொள்கிறது.
இன்றைய நாளும் அப்படியே.

இன்று ஒரு சிறு குழந்தையின் இறுதிப்பயணத்தில் கலந்துகொண்டிருந்தேன். அந்தக் குழந்தையை நான் அறியேன். கண்டிருப்பதாயும் நினைவில் இல்லை. பெற்றோரை ஓரளவு அறிவேன். அவ்வளவுதான். ஆனால் மரணச்சடங்கில் கலந்துகொளவதற்காய் வாகனத்தில் உட்காந்துகொண்ட கணம் தொடக்கம் மனம் முழுவதும் மரணத்தின் அசௌகரீயமான வாசனையை உணரத்தொடங்கியிருந்தது.

இறுதி நிகழ்வு நடைபெற்ற இடத்தில் பலர் நின்றிருந்தனர். குழந்தை பேரமைதியான, தெய்வீகத் தூக்கத்தில் இருப்பதுபோன்றிருக்க, அருகே உட்கார்ந்திருந்தபடியே தாயார் குழந்தையின் கையைப்பற்றியபடியே அழுதுகொண்டிருந்தார். தந்தை அருகே நின்றபடியே அஞ்சலிசெய்தபடியே கடந்துசென்றுகொண்டிருந்தவர்களின் இரங்கலை ஏற்றுக்கொண்டிருந்தார்.

பின்னணியில் தேவாரம் இசைக்கப்பட்டுக்கொண்டிருந்தது. அந்த நான்கு சுவற்றுக்குள்ளும் புகைபோல மரணம் பரவிக்கிடந்தது. நிட்சயமாய் பலரின் மனங்களிலும் மரணம் தனது வீரியத்தை செலுத்தியிருக்கும். சிந்தனையைத் தூண்டியிருக்கும்.

நீண்ட வரிசையில் சென்று குந்தைக்கு அஞ்சலிசெலுத்திக்கொண்டிருந்தனர். நான் குழந்தையின் அருகே செல்லச் செல்ல மனம் பெரும்பாரத்தை உணர்ந்துகொண்டிருந்தது. தந்தையை தோளுடன் அணைத்து ஆறுதல்கூறியபோது அவரது வேதனையைப் புரிந்துகொண்டேன். உடல்; மெதுவாய் நடுங்கிக்கொண்டிருந்தது. அடக்கமுடியாது அழுகையை அடக்கிக்கொண்டிருந்தார். இழக்கக்கூடாததை இழந்து தவிக்கும் ஒரு தந்தைக்கு வார்த்தைகளால் என்ன ஆறுதலை என்னால் கூறமுடியும்? அவரது தோளினை இறுக அழுத்தி நகர்ந்துகொண்டேன்.

இறுதி நிகழ்வு நடைபெற்ற தேவாலத்தினுள் வருமுன்பு வெளியே பல ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகமான ஒரு நண்பரைச் சந்திக்கக் கிடைத்தது. அவர் ஏறத்தாள 15 ஆண்டுகளுக்கு முன் 10 வயதான தனது மகனை ஒரு விபத்தில் இழந்தவர். விளையாடச்சென்ற மகன் நீரில் மூழ்கி இறந்திருந்தான். அவருடன் உரையாடும்போது, புத்திர சோகம் கொடியது என்றும், ஒரு மனிதனுக்கு கிடைக்கக்கூடிய அதிகபட்ச தண்டணை அதுதான் என்றார். மகனின் இழப்பானது 15 வருடங்களின் பின்பும் அவரிடத்தில் வாழ்ந்துகொண்டிருந்தது. புத்திரசோகம் ஓடும் ஆற்றுநீர் மண்ணை அரிப்பதுபோன்றது காலம் செல்ல செல்ல அது மனிதர்களை அரித்துக்கொண்டே இருக்கிறது என்று உணர்ந்துகொண்டேன்.

எனக்கு என்னிலும் சற்று வயதான ஒரு மச்சாள் இருக்கிறார். மிகவும் ஆளுமையுள்ளவர். தீர்க்கமான சிந்தனை, பேச்சு, ஆற்றல், மனிதநேயம் கொண்டவர். அவருக்கு 1983ம் ஆண்டு ஜுலைமாதம் 23ம் திகதி கொழும்பில் இனக்கலவரம் உச்சத்தில் இருந்தபோது இரட்டைக்குழந்தைகள் பிறந்தனர். ஒரு ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை. சொத்துக்கள் அனைத்தையும் இழந்து ஏறாவூருக்கு வந்து எம்முடன் சில மாதங்கள் வசித்துவந்தார். பின்பு கனடா சென்று குடியேறினார். குழந்தைகளும் வளர்ந்து பெரியவரானார்கள்.

2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன், நான் இரு குழந்தைகளின் தந்தையாகியிருந்தேன். குழந்தைகளின் உலகமே எனது உலகமாய் இருந்தது. மச்சாளின் 21வயது மகன் திடீர் சுகயீனத்தால் இறந்துவிட்டதாக தகவல் கிடைக்க உடனடியாக கனடா சென்று மச்சாளைத்தேடிப்போனேன். மூன்று நாட்களுக்குள் அவரை அடையாளம் காணமுடியாதளவுக்கு புத்திரசோகம் உருக்குலைத்திருந்தது. அவரருகில் நின்றிருந்தேன். அவரது கண்கள் மகனையே பார்த்தபடியிருக்க எதோ மகனுக்கு கூறிக்கொண்டிருந்தார். அவர் என்ன கூறுகிறார் என்று உற்றுக்கேட்டபோது ”அம்மாவரும் வரையில் கவனமாக இருங்கள்” என்று கேட்டது. தாயல்லவா.

தேவாலயத்தினுள் இருந்து குழந்தை அடக்கம்செய்யும் இடத்திற்கு ஊர்வலம் நகர்ந்துகொண்டிருந்தது. முன்னால் இரு குழந்தைகள் காற்றடைத்த பலூன்களை கையில் வைத்திருந்தனர். அவர்கள் சகோதரர்களாக இருக்கக்கூடும். குழந்தைகளான அவர்களுக்கும் மரணம், தன்னை ஈவுஇரக்கம் இன்றி அறிமுகப்படுத்திக்கொண்டிருந்ததை அவர்களின் உடல்மொழிகளினூடாக அறிந்துகொள்ளக்கூடிதாய் இருந்தது. இருப்பினும் தம்பியை இனி சந்திக்கமாட்டோம், விளையாட, கோவிக்க, அணைத்தபடியே தூங்கிப்போக அவன் வரமாட்டான் என்பதை அவர்கள் முழுவதுமாக புரிந்துகொண்டிருப்பார்களா?

மரணம் எவ்வளவு குரூரமானது, ஈவுஇரக்கமற்றது என்பதற்கு இதைவிட வேறு என்ன உதாரணம் வேண்டிக்கிடக்கிறது?

முதன் முதலில் மரணம் எனக்கு அறிமுகமாகியது எனது தந்தையின் மூலமாகவே. தந்தையும் நானும் பூனையும் எலியுமாய் இருந்ததாலோ என்னவோ தந்தையின் மரணம் முதல் நாள் என்னைப் பாதிக்கவில்லை. ஆனால் அவருக்கு கடமை செய்தபோதும், சுடலையில் இருந்து வீடுதிரும்பிய பின்னும் அதற்குப் பின்னான பலநாட்களிலும் அவரது மரணம் என்னை பெரிதும் பாதித்திருந்தது.

ஊர்வலம் அடக்கம் செய்யும் இடத்தை அடைந்தது. அடக்கம்செய்யும் நிகழ்வின்பின் குழந்தைகளின் கையில் இருந்த பலூன்களை காற்றில் விட்டனர்.

அகன்று, பரந்து விரிந்துகிடந்த, மேகங்களற்ற, நீலநிற வானத்தை நோக்கி பலூன்கள் அசைந்தபடியே மேலேறி, சற்றுநேரத்தில் தனித்தனியே பிரிந்து, உருவத்தில் சிறுத்து, கண்ணில் இருந்து மறைந்துபோயின.

குடும்பம் ஒன்றின் வாழ்க்கையைப்போன்று இணைந்திருந்து, பின்பு தனித்தனியே பிரிந்து, காலப்போக்கில் தனித்தனியே மறைந்துவிடும் மனிதவாழ்க்கையைப்போலிருந்தது அந்த பலூன்களின் பயணம்.

துயரத்தைக் கடத்தல்பற்றி வாசித்த ஒரு கட்டுரையில், துயரத்தை கடந்துகொள்வதற்கு அல்லது மீண்டுகொள்வதற்கு ஆன்மீகம், சமூகசேவை, வாசிப்பு, எழுத்து, உரையாடல், இயற்கை, கலைகள் என்பன பலமாய் உதவும் என்று இருந்தது. 

துயரங்களைப் பேசுதல் என்பது எமது சமூகத்தில் பேசாப்பொருள். ஆனால் மேற்கத்தய நாடுகளில் துயரங்களை கடந்துகொள்வதற்கு உரையாடற்குழுக்கள், உளவள துணையாளருடனான உரையாடல், உளவள வைத்தியருடனான உரையாடல் என்று பலவகையான உரையாடல் முறைகள் இருக்கின்றன.

நானும் மணமுறிவின்பின் குழந்தைகளுடனான பிரிவுபற்றி உளவள துணையாளருடன் பலதடவைகள் உரையாடியிருக்கிறேன். அவ்வுரையாடல்களின்போது நான் கண்கலங்கியிருக்கிறேன், கண்ணில் இருந்து நீர் ஆறாய் வழிந்தோடியிருக்கிறது, மெதுவாய் அழுதிருக்கிறேன், தாங்கமுடியாது கேவிக் கேவியும் அழுதிருக்கிறேன். அழுதோய்ந்த நேரங்கள் சீழ்வடிந்தோடியபின் புண்ணுக்கு கிடைக்கும் ஆறுதலை உணர்ந்திருக்கிறேன். கடந்துபோன 6 வருடங்களில் அழுதும், எழுதியும், வாசித்தும், மனதை வேறு செயற்பாடுகளில், சிந்தனைகளில், ஈடுபடுத்தி துயரினை கடந்துகொண்டிருக்கிறேன். ஆனாலும் நான் முழுவதுமாய் மீண்டுகொள்ளவில்லை. காலப்போக்கில் வாழ்வின் சில பகுதிகள் என்னோடு நிழலைப்போன்று தொடர்ந்துவரும் என்பதனை உணர்ந்து ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.

எனது மச்சாளும் தனது துயரினை ஆன்மீகம், சமூகசேவை ஆகியவற்றில் ஈடுபட்டும், தனது மகளுடன் அதிக நேரங்களை செலவளிததும், மகனின் இழப்பு பற்றி உரையாடியும் தனது துயரைக்கடந்து சாதாரணமான ஒரு வாழ்வினை வாழ்ந்துகொண்டிருக்கிறார்.

மகனை இழந்த நண்பர் இன்றைய உரையாடலின்போது, புத்திர இழப்பு என்பது கடந்துகொள்ள முடியாத பேரிழப்பு, அது வாழ்நாள்முழுவதும் என்னை விட்டகலாது என்றார்.

அடக்கம்செய்யும் நிகழ்வு முடிவடைந்தது அனைவரும் அகன்றுகொண்டிருந்தனர். நானும் வெளியேறிக்கொண்டிருந்தேன். தொலைவில் அக்குடும்பத்தினர் நின்றிருந்தனர். அவர்களின் சில நெருங்கிய நண்பர்கள் அங்கிருந்தனர். இன்னும் சிறிது நேரத்தில் அந்த நண்பர்களும் அவர்களைவிட்டு அகன்றுவிடுவார்கள். பெரும் துயர வெளி ஒன்றினை அக்குடும்பம் தனியே கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது என்று நினைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.

மரணம் மீண்டுமொருமுறை ”நான் இருக்கிறேன்” என்று நிறுவிப்போயிருக்கிறது.

புத்தனுக்குப்போன்று மரணம் எனக்கும் போதிக்கட்டும்.