பொய்யற்ற ஓர் அழைப்பு

சில வாரங்களுக்கு தொலைபேசியில் என்னை அழைத்தார், சில மாதங்களுக்கு முன் அறிமுகமான நண்பர். அவரைப் பற்றி ஒரு ஆக்கம் எழுதியிருந்தேன். (பார்க்க விழுதுகளைத் தொலைத்தவர்கள்). அன்று கணணி வாங்குவுதற்கு அறிவுரை கேட்டிருந்தார். இன்று கணணி வாங்கி விட்டதாயும் அதை பாவிக்கும் விதம் பற்றி கற்பிக்கவே என்னை அழைத்தார்.

அவர் மொராக்கோ நாட்டவர், ஆனால் சுவீடனில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக சுவீடனில் வாழ்ந்து தற்போது நோர்வேயில் வாழ்கிறார்.

வீட்டு வாசலில் நின்று வரவேற்றார். எனது ஜக்கட்டை பெரிய தலைவர்களின் ஜக்கட்ஐ சிப்பந்திகள் களட்டி எடுப்பது போல களட்டி எடுத்தார். நன்றி என்ற போது, நெஞ்சில் கை வைத்து தலைசாய்த்து எனது நன்றியை ஏற்றுக் கொண்டார்.

கணணியை காட்டிய படியே என்ன குடிக்கிறீர்கள் என்றார் மிகவும் மரியாதையாய். தேத்தண்ணி என்றேன். கணணியை எடுத்து இயக்கினேன். அறைக்குள் இருந்து புரியாத மொழியில் பேசிக்கொண்டு வந்தார் அவரின் மனைவி. அருகில் வந்து கையை பிடித்து குலுக்கினார்.  பின்பு தேத்தண்ணி போட்டுத் தந்தார். அதன் பின் அவர் நான் அங்கு நின்ற 3 மணிநேரமும் அவரின் அறையை விட்டு வெளியே வரவில்லை.

தனது மனைவி வந்திருக்கும் விருந்தினருடன் பேசாமல் தனது அறைக்குள்ளேயே இருந்தது அவருக்கு அசௌகரீயமாக இருந்திருக்க வேண்டும். என்னிடம் அதற்கு மன்னிப்புக் கேட்டார். நான் அது பறவாயில்லை, அது அவரின் கலாச்சாரமாக இருக்கும் என்றேன். ஆம் அது தான் எனது பிரச்சனை என்றார். மனைவி தனக்கு உணவு சமைக்கும், வேலைக்கு போகும் நேரத்தை விட மிகுதியாயிருக்கும் பல மணிநேரங்களை இறைவணக்கத்துக்கே செலவிடுவது இவருக்கு பிடிக்கவில்லை என்பதை அவரின் வார்த்தைகளினூடாக அறிய முடிந்தது.

இருப்பினும் தன் மனைவியை தான் அவளின் இஸ்டத்துக்கு விட்டிருப்பதாகவும், அவள் மிகவும் உண்மையாகவும், பண்பாகவும் இருப்பதாகவும், அவர் தெற்கு மொறாக்கோவை சேர்ந்த மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சொன்னார்.

தனக்கு இவரை மணமுடிக்க தீர்மானித்த போது பல மிக இளமையான பெண்களை தனக்கு மணமுடிக்க பலர் முன்வந்ததாயும், அவற்றில் பலர் தனது பணத்தில் குறியாயிருந்ததாகவும் ஆனால் தனது மனைவியின் குடும்பத்தினர் மட்டும் நேர்மையாய் இருந்தார்கள் என்றும் சொன்னார்.

மொறாக்கோவில் பணம் இருக்கும் கிழவர்கள் வயதில் குறைவான பெண்களை திருமணம் முடிக்கிறார்கள் என்றும், பெண்ணிண் தகப்பன் வறுமையினால் இதற்கு சம்மதிப்பதாயும், ஆனால் அந்தக் கிழவர்கள் இறக்கும் போது பெண்கள் இரண்டு, முன்று குழந்தைகளுடன் மீண்டும் தகப்பிடம் தஞ்சம் புகுவதை அந்த பெண்களின் தகப்பன்மார் புரிந்து கொள்கிறர்கள் இல்லை என்பதும் அவரின் ஆதங்கமாய் இருந்தது.

தன்னிடம் மொறாக்கோவில் இரண்டு வீடுகள் இருப்பதாயும், அவை வெறுமனே இருப்பதாயும் சொன்னார். அவற்றில் பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கியிருந்ததாயும் ஆனால் அந்த பிரான்ஸ் நாட்டவரின் வேலைக்காரர்கள் தனது தளபாடங்களை களவெடுப்பதால் தற்போது வாடகைக்கு விடுவதில்லை என்றும், தான் மட்டும் வருடததில் ஒரு தடவை  அங்கு போகிறார் என்றும் தனது சொத்துக்கள் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

கூகில் மப் (Google maps) இல் ஆவரின் வீட்டைக் காட்டினேன். சிறு குழந்தைபோல் குதூகலித்தார். இது எப்ப‌டி சாத்தியம் என்றார்? விளக்கினேன். புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது ஆனால் தலையாட்டினார்.

என்னை மெராக்கோவுக்கு வரச் சொன்னார். தனது வீட்டில் நான் விருந்தாளியாக  தங்கியிருக்கவேண்டும் என்றார். நான் சிரித்தேன். அவரின் வார்த்தைகளில் பொய்யில்லை என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. தனது நாட்டின் சிறப்புக்களை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.

நான் புறப்பட்ட போது எனது ஜக்கட்டை மாட்டிவிட்டார். எனக்கு இவ்வாறு ஜ்க்கட் மாட்டிவிடப்பட்டது முதல் அனுபவம் என்பதால் நானும் பல தடவைகள் நன்றி சொல்லி விடைபெற்றேன். உனக்குத் தந்த அழைப்பை நீ எற்றுக் கொள்வாய் என நம்புவதாகச் சொன்னார். நான் புன்னகைத்தேன். அப் புன்னகையின் அர்த்தம் நான் வருகிறேன் என்பதா அல்லது வரமாட்டடேன் என்பதா என்பது எனக்குப் புரியாதிருந்தது.


இன்றைய நாளும் நல்லதே

தேவதைகளின் பாதணிகள்

மனது சரியில்லாததால் இன்றைய நாள் மெதுவாக பல நினைவுகளுடன் கடந்துகொண்டிருந்தது. வாழ்க்கை ஏன் இப்படியானதாய் இருக்கிறது என்று சிந்திக்கவைத்தது மனது. இதே கேள்வி முன்பும் பலதடவைகள் மனதில் தோன்றியிருந்தாலும் இன்று வரை பதில் கிடைத்ததில்லை. இன்றும் அப்படியேதான்.

இளவேனிற்கால விடுமுறை கழிந்து பாடசாலைக்குச் செல்லும் குழந்தைகளின் ஒலிகள் ஜன்னலினூடாக கேட்டுக்கொண்டிருந்தன. ஆண் பெண் குழந்தைகளின் சிரிப்பலைகள், உரையாடல்கள் என அந்த ஒலிகள் என்னை பல ஆண்டுகளுக்கு முன்னான நாட்களுக்குள் அழைத்துப்போயின.

ஏற்கனவே இருந்த மனச்சோர்வுடன், பழைய நினைவுகளும், தனிமையும் சேர்ந்துகொண்டபோது, இனியும் வீட்டுக்குள் இருப்பது நன்றன்று என்பதால்  வெளியில் புறப்பட்டேன்.

எங்கேபோவது என்பதையறியாமல் அரைமணிநேரம் அலைந்து தி‌ரிந்தேன். பின்பு ஒரு பெரிய பல்பொருள் அங்காடித்தொகுதியினுள் வாகனத்தை நிறுத்தியபின் அங்கிருந்து கடைகளினுள் புகுந்துகொண்டேன்.

புத்தகக்கடை, கணிணிக்கடை, இலத்திரனியற்பொருட்களை விற்கும்கடை என்று நேரம் கடந்துகொண்டிருந்தது. மனம் எதிலும் லயிக்கும் நிலையில் இருக்கவில்லை. தனிமையுணர்வினை  மிக நெருக்கத்தில் உணர்ந்துகொண்டிருந்தேன். ஈரமான உடையுடன் நடப்பதுபோன்றதான உணர்வில் இருந்தது மனது. எதையெதையோ நினைத்தபடி நடந்துகொண்டிருந்தேன்.

எதிரே ஒரு பாதணிக்கடையொன்றில் 50 வீதக்கழிவில் விற்பனை என்றிருந்து. கால்கள் அக்கடையினுள் புகுந்துகொண்டன. ஆண்களின் பாதணிகள், பெண்களின் பாதணிகள்என்பவற்றைக் கடந்தபின் குழந்தைகளின் பாதணிகள் இருக்கும் பகுதியில் பெண்குழந்தைகளின் பகுதி இருந்தது

பாடசாலை ஆரம்பிக்கும் நாட்கள் என்பதால் குழந்தைகளுக்கு பல புதிய புதியவகையான பாதணிகள் விற்பனைக்கு வந்திருந்தன.

சில பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் இரண்டு தேவதைகளுடன் பாதணிகடைகளில் பல மணிநேரங்களை கழித்திருக்கிறேன். பாடசாலைக்கான பாதணி, வெளியே விளையாடுவதற்கான பாதணி, உள்ளே விளையாடுவதற்கான பாதணி, மழைக்காலத்திற்கான பாதணி, பனிக்காலத்திற்கான பாதணி, விழாக்களுக்கான பாதணி, இளவேனிற்காலத்திற்கான பாதணி இப்படி பல பல சந்தர்ப்பங்களுக்கான பாதணிகள் தேவைப்பட்ட காலமது. இரண்டு இளவரசிகளுடன் பேரசனாய் வாழ்ந்திருந்த நாட்களவை.

ஆண் குழந்தைகளுக்கான பாதணிகளின் உலகம் மிக மிகச் சிறியது. பெண்குழந்தைகளின் பாதணிகளின் உலகம் மிகவும் பெரியது, வித்தியாசமானது, அழகானது. ரோசா, ஊதாப்பூ நிறங்கள் முக்கியமானவை. ஆரம்பத்தில் ரோசா நிறமாயும் காலப்போக்கில் ஊதாப்பூவின் நிறத்திலும் என்னவள்களின் பாதணித்தேர்வுகள் இருந்தன.

மழைக்காலத்துப் பாதணி என்றால் அது எவ்வளவு உயரமாய் இருக்கவேண்டும் என்பதில் இருந்து, நிறம், என்னவிதமான படங்கள் அதில் பதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்பது வரையில் அவர்களே தீர்மனிப்பார்கள். கடை கடையாக ஏறி இறங்கி ஏதும் வாங்காது வீடு திரும்பிய நாட்களில் அவர்களின் சோகம் என்னையும் பற்றியிருக்கும்.

குழந்தைகளுக்கான பாதணிகள் இருந்த பகுதியில் இருந்த ஒரு பாதணியின் மேற்பகுதியில் பல ஓட்டைகள் இருந்தன. அந்த ஓட்டைகளை பூக்கள், மிருகங்கள், பறவைகள் போன்ற சிறு சிறு உருவங்களால் மறைக்கலாம். அவ் உருவங்கள் தனியே விற்பனைசெய்யப்படும். அந்த பாதணியைக்கண்டதும் என் இளையமகள் அப் பாதணிகளுடன் செய்த அழகான அழிச்சாட்டியங்கள் நினைவுக்கு வந்தது.

என் இளையமகளுக்கு அந்தப் பாதணியில் பெருத்த காதலிருந்தது. ரோசா நிறத்தில் அப்படியான பாதணி ஒன்றினை வாங்கிக் கொண்டாள். அதற்கு பல நிறங்களில் பூனை உருவங்கள், குதிரை உருவங்கள் என்று வாங்கிக் கொண்டாள். வீட்டுக்குள்ளும் அதே பாதணிகளுடனேயே திரிந்தாள். யாராவது வீட்டுக்கு வந்தாலும் அதை காட்டுவதற்காவே அப் பாதணிகளை பாவித்தாள். மற்றவர்கள் அவளின் பாதணிகளை ஆச்சர்யமாகப் பார்த்தால் பூரித்துப்போவாள்.

ஒரு முறை லண்டனுக்குச் சென்றிருந்தோம். அந்நாட்களில் அங்கு பாதணியின் கீழ் ஒரு சிறிய சில்லு பூட்டிய பாதணிகள் பெரும் பிரபல்யமாய் இருந்தன. அப்படியான பாதணிகளின் உதவியுடன் வழுக்கி வழுக்கி நடக்கும் குழந்தைகளை பார்த்தபடியே நின்றிருப்பாள் எனது மூத்த மகள்.  தனக்கும் அது வேண்டும் என்றாள். அவளின் விருப்பத்தை தட்டமுடியுமா? வாங்கிக்கொடுத்தேன். அதன் பின்பு என் கையைப் பிடித்தபடியே வழுக்கி வழுக்கி ஓடப்பழகிக்கொண்டாள். அக்காள் வழுக்கி வழுக்கி ஓடுவதைப்பார்த்த தங்கையும் அடம்பிடித்து அவளுக்கும் அதே மாதிரியான பாதணிகளை வாங்கிக்கொண்டாள். சில நோரங்களில் இருவரும் எனது இருகைகளையும் பிடித்துபடி வழுக்கிக்கொண்டார்கள். அவர்களின் மகிழ்ச்சியில் வழுக்கிக்கொண்டிருந்தேன், நான். நோர்வே வந்தபின் அவர்களின் பாதணிக்கு பலத்த மவுசு இருந்தது. காலப்போக்கில் அப்படியான பாதணிகள் நோர்வேக்கு வந்த போது எனது குழந்தைகளுக்கு அந்தச் சப்பாத்தின் மீதான காதல் தொலைந்திருந்தது.

ஒரு முறை பனிக்காலத்தில் உறைபனியில் சறுக்கும் பாதணி வாங்கித்தா என்றாள் மூத்தவள். வாங்கிய பின் ”வா,‌ எங்கள் வீட்டருகில் இருக்கும் குளம் உறைந்துபோயிருக்கிறது. அங்கு போய் சறுக்கிவிளையாடலாம் என்றாள். சரி போகலாம் என்றேன். சற்று நேரம் அவளைக்கு உதவியிருப்பேன். அதன் பின்பு நீரில் நீந்தும் மின்குஞ்சு போலாகிவிட்டாள். அந்தப் பாதணிகளைப் போடவும், அவற்றை கழட்டவுமே அவளுக்கு உதவி தேவைப்பட்டது. அடுத்தடுத்த வருடங்களில் அவள் உறைபனியில் எப்படி சறுக்குவது என்று தங்கைக்கும் கற்பித்தாள். நான் குளத்தின் கரையில் நின்றபடியே அவர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

ஒரு முறை நத்தார் நாட்களின் போது  கடைக்குச் சென்றிருந்தோம். நடக்கும் போது நிறம் நிறமான வெளிச்சமும் கீச் கீச் என்று சத்தமும் வரும் பாதணி ஒன்றினை அணிந்தபடியே ஒரு குழந்தை நடந்துபோனாள். அப்படியான பாதணி வேண்டும் என்று கேட்டு, அழுது வாங்கிக்கொண்டாள் இளையவள். அன்று வீட்டுக்குள்ளும் அதனுடனேயே நடந்து திரிந்தாள். நித்திரையானதும் மெதுவாய் பாதணிகளை கழற்றி வைத்தேன். காலை எழும்பியதும் மீண்டும் அதனைப் போட்டுக்கொண்டாள்.

இளையவளின் முதலாவது பிறந்தநாள் லண்டனில் நடைபெற்றது. அவளுக்குத் தேவையான எல்லாவற்றையும் வாங்கியாகிவிட்டது. ஆனால் விரும்பிய பாதணிகள் மட்டும் கிடைக்கவேயில்லை. மாலை ஆறு மணிக்கு விழா ஆரம்பிக்கவிருந்தது. மதியம் 12 மணிக்கும் பாதணிகள் கிடைக்கவில்லை. இறுதியில் பல மணிநேர காரோட்டத்தின் பின் ”பலே” நடன உடுப்புகள் விற்பனைசெய்யும் ஒரு கடையில் மாலை 4 மணிபோல் பாதணிகளை வாங்கிக்கொண்டேன்.

ஒரு முறை விடுமுறையின் போது கட்டார் நாட்டிற்கு சென்றிருந்தோம். அங்கு பல பல அழகிய பாதணிகள் இருந்தன. வீடுமுறை முடிந்து திரும்பியபோது ஒரு பெட்டி நிறைய பாதணிகள் நோர்வேக்குள் கடத்தப்பட்டன.

பாடசாலைக்குச் செல்ல முன்பு ” அப்பா சப்பாத்து ஊத்தையாக இருக்கிறது துடைத்துத் தாருங்கள்” என்று கட்டளையிடுவார்கள். சுத்தமான பாதணியைப் பார்த்ததும் அவர்களின் கண்களில் தெரியும் அழகுக்காகவே எத்தனை பாதணியையும் கழுவலாம்.

எனது பாதணிகள் அசுத்தமானவை, அழகில்லாதவை, பழயவை என்றெல்லாம் ஆயிரம் விமர்சனங்கள் வரும். சில வேளைகளில் புதிய பாதணிக‌ளைப் பரிசளித்துமிருக்கிறார்கள். இனி பாதணிகள் வாங்கும் போது என்னை அழைத்துப் போ. உனக்கு அழகியல் பற்றி ஒன்றும் தெரியாது என்று அவர்கள் பாராட்டிய நாட்களும் உண்டு.

இன்று அந்த பாதணிக் கடைக்குள் ஒரு பெண்குழந்தை ஒரு சோடி ரோசா நிறமான பாதணிகளை தனது காலுக்கு பொருத்தமானவையா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் கண்களில் பெருங்கனவு தெரிந்தது, எனக்கு.

என்னிடம் எனது இரு குழந்தைகளும் 3 - 4 வயதில் பாவித்த ஒரு சோடிப் பாதணிகள் இருக்கின்றன. அவை எனது பொக்கிஷங்கள். சில நேரங்களில் அவற்றை எடுத்து நுகர்ந்து பார்ப்பேன். அப்போது, தேவதைகளின் பாதணிகளுடன் நான் காற்றில் நடந்‌துகொண்டிருப்பேன்.