அபிவிருத்தி அரசியல் நோர்வே ”அறிவோர் அரங்கத்தையும்” அம்பலப்படுத்துகிறது.சில வாரங்களுக்கு முன் நோர்வேக்கு வடமாகாண சுகாதார அமைச்சர் வந்திருந்தார்.

அவர் வந்தது ஒன்றும் தற்செயல் அல்ல.

இலங்கை அரசுடன் இணைந்து மிக நெருக்கமாகச்செயற்படும் நோர்வே ஈழமக்கள் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா, நோர்வே தமிழர் சுகாதார அமைப்பின் தலைவர் பல்வைத்தியர் சிவகணேசன், Balasingham Yogarajah ஆகியோரின் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சியாகவே சுகாதார அமைச்சர் இங்கு வந்தார்.

இதற்கு நோர்வே அரசின் உதவியும் உண்டு. நோர்வே அரசும் அபிவிருத்தி அரசியலின் முக்கிய பங்காளி.

சுகாார அமைச்சருடன் நோர்வே அரசு, நோர்வே அரச நிறுவனங்கள் என்று பேச்சுவார்த்தைகள், சுற்றுலாக்கள் நடந்தன.

மிக முக்கியமாக சந்துரு விசாகப்பெருமாள், Balasingham Yogarajah அகியோரின் தலைமையில் இயங்கும் ”அறிவோர் அரங்கத்திற்கும்” பெரும் விளம்பரத்துடன் சுகாதார அமைச்சர் அழைக்கப்பட்டு சந்திப்பு நடைபெற்றது.

இந்த நிகழ்வானது சுகாதார அமைச்சர் மீதான குற்றச்சாட்டுகள் இருக்கும்போதே அவருடன் நெருங்கிய உறவினைப்பேணும் நோர்வே பிழைப்பு அரசியல்வாதிகளுடன் அறிவோர் அரங்கமும் கைகோர்த்துள்ளதா என்னும் கேள்வியும் எழுகிறது.

இந்த சுகாதார அமைச்சரே தற்போது வடமாகாண முதல்வருக்கெதிரான நம்பிக்கையில்லாப்பிரேரணையின் முக்கியஸ்தருள் ஒருவர்.

வடமாகாண முதல்வரை ஓரம்கட்டும் இந்த நடவடிக்கை மிகத் தந்திரமாகத் திட்டமிடப்பட்டு, இரகசிய ஆதரவுகளைப்பெறுவதற்காக புலத்துத் தமிழர்களிடம் அனுப்பப்பட்டவரே வடமாகாண சுகாதார அமைச்சர். தமிழர் கட்சிகள் அல்லாத வடமாகாண கட்சிகளிடமும் இலங்கை அரசின் ஊடாக ஆதரவு பெறப்பட்டு நடாத்தப்பட்ட அரசியல் நகர்வு.

இவற்றை எல்லாம் அறியாதவர்கள் அல்லர் நோர்வே சுகாதார அமைச்சரை அழைத்தவர்கள்.

நோர்வே தமிழ் மக்களிடம் ஊழற்குற்றச்சுாட்டப்பட்ட சுகாதார அமைச்சரை பிரபலப்படுத்தும் திட்டம் ரீரீசி, நேர்வே ஈழமக்கள்அவை, Balasingham Yogarajah, சந்துரு விசாகப்பெருமாள் ஆகியோரின் ஆசீர்வாதத்துடனேயே நடைபெற்றுள்ளது என்பது தெளிவாகவே புரிகிறது.

நோர்வேயில் உள்ள பெரும்பான்மையான தமிழர் அமைப்புக்களிடையே இலங்கை அரசு மிகத் தந்திரமாக ஊடுருவியுள்ளது என்பதனையே ”அறிவோர் அரங்கத்தின்” சுகாதார அமைச்சரைப் பிரபலப்படுத்தும் நடவடிக்கையும் எடுத்துக்காட்டுகிறது.

காற்றுப் புகாத இடத்திலும் அபிவிருத்திஅரசியல் புகும்
நோர்வே ஈழமக்கள்அவை இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகிறது என்று தமிழ்நெட் உறுதிப்படுத்துகிறது.

தமிழ்நெட் ஜெயச்சந்திரன்  தனது சக தோழர்கள் ஸ்ரீலங்கா அரசுடன் தேனிவுகொண்டாடுவதுபற்றி
ஏன் எழுதவில்லை என்று கேட்டு சனிக்கிழமைதான் எழுதியிருந்தேன்..

ஞாயிற்றுக்கிழமை மாலையே  ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.

அதில், ஈழமக்கள்அவையும், நோர்வே தமிழர்களில்   சுதாரத்துறையைச் சேர்ந்த முக்கியமானவர்கள் சிலரும் ஸ்ரீலங்காவுடன் இணைந்து செயற்படுகிறார்கள் என்று எழுதியிருக்கிறார்.

// Interestingly, all the three networks are involved in deceiving sections of Tamil diaspora, particularly those who were directly and indirectly involved in the TGTE, GTF and Norwegian Council of Eezham Tamils (NCET). The collaborators in the expanded Diaspora-programme, particularly those from Norway, hail from the health sector. //

[TamilNet, Sunday, 04 June 2017, 23:12 GMT]

இதனை எழுதுவதற்கு இத்தனை காலம் பொறுமைகாத்ததன் இரகசியம் என்னவென்பதை அவர் மட்டுமே அறிவார்?

ஸ்ரீலங்கா அரசின் பக்கம் சாய்ந்துவிட்ட தனது உற்ற நண்பர்களின் பெயரை, ரீரீசியையும் விசுவாசிக்கும் உண்மையான விசுவாசிகளுக்காகவாவது எழுதும் அகச்சுத்தியும், நேர்மைத்தன்மையையும் கூட அவரிடம் இப்போதும் காணமுடியவில்லை. (நண்பர்களையும் தன்னையும் பாதுகாத்துக்கொள்ளும் எண்ணமாகவும் இருக்கலாம்)

தமிழ்நெட், தனது கடடுரையில்  நோர்வே ஈழமக்கள்அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா என்பதை தெளிவாகவே ஒப்புக்கொள்கி்ன்றது.

தவிர, நோர்வே ஈழமக்கள்அவையையும் பகிரங்கமாகவே துரோகிகளின் பட்டியலில் சேர்த்துவிட்டிருக்கிறது.

எனது கேள்வி என்னவெனில்...

தமிழ்நெட் ஜெயச்சந்திரனின நெருங்கிய சகாவும், சர்வதேச ஈழமக்கள்அவையின் பேச்சாளரும் நோர்வே ஈழமக்கள்அவையின் முக்கிய உறுப்பினருமான ஸ்டீபன் புஸ்பராஜா இந்தக் குற்றச்சாட்டிற்கு என்ன சொல்லப்போகிறார் என்பதும்...

நோர்வே ஈழமக்கள்அவையினர்  தங்களை தமிழ்நெட் துரோகிகளாக்கியதற்கு என்ன சொல்லப்பொகிறார்கள் என்பதும்தான்.

நோர்வே புலிகள் பகிரங்கமாகவே தங்களுக்குள் மோதிக்கொள்ள ஆரம்பித்துவிட்டார்கள் என்பது தெளிவாகவே தெரிகிறது.

விசுவாசிகளின் பாடு திண்டாட்டம்தான். பாவம் அவர்கள்.
நம்பி ஏமாந்தவர்கள் அவர்கள்தான்.,

எந்தப் பக்கத்தின்  பொய்யை நம்புவது என்பது அவர்களுடைய  பிரச்சனை.

இன்னும் என்ன பொய்யைச் சொல்லி விசுவாசிகளை ஏமாற்றலாம் என்பது மற்றையவர்களுடைய பிரச்சனை.

சாதாரண மனிதர்களைக்கூட துரோகிகள், எட்டப்பன்கள் என்று நாக்கூசாது பேசி,  எள்ளி நகையாடி, தமது ஊடகங்களின் ஊடாக பொய்யான பிரச்சாரம்செய்து,  சமூகத்தில் இருந்து ஒதுக்கிய இவர்களை, அவர்களின் உற்ற சகாக்களைக்கொண்டே ”துரோகிகள், ஒத்தோடிகள்” என்று தூற்றவைத்திருக்கிறது காலம்.

காலம் பொல்லாதது நண்பர்களே. பொய்யையும் புரட்டையும் அது வாழ விட்டதாய் சரித்திரமில்லை.

ஸ்ரீலங்காவின் அபிவிருத்தி அரசியலுக்குள் சிக்கிவிட்ட தேசியம் பேசும் அமைப்புக்கள்


சற்று நீளமான கட்டுரை. நேரமும் ஆர்வமும் உள்ளவர்களுக்கு மட்டும்.
******


நோர்வேஈழமக்கள் அவையின் தலைவர் பஞ்சகுலசிங்கம் கந்தையா மற்றும் மக்களவை உருவாக்க காலத்தில் முக்கியப்படுத்தப்பட்டவரும், ரீரீசியின் உபஅமைப்பான நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் தலைவர், பல்வைத்தியர் சிவகணேசன் அவர்களும் ஸ்ரீலங்கா அரசின் சிறப்பு அழைப்பினை ஏற்று இரகசிய பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் இணையத்தளங்களில் வெளியாகி சில வாரங்களே ஆகும்போது பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களைத் தலைவராகக்கொண்ட நோர்வே ஈழத்தமிழர்அவை திடீரென நோர்வே ஈழமக்கள் அவைக்கான தேர்தலை நடாத்தப்போவதாக அறிவித்துள்ளது.

கடந்த 5 ஆண்டுகளாக நடைபெறாது, மறக்கப்பட்டிருந்த இருந்த இந்தத் தேர்தலுக்கான அவசியம் இப்போது உருவாகவேண்டியதன் காரணம் என்ன? இதனை மக்களுக்கு பகிரங்கமாக அறிவிப்பதல்லவா அறம்? அதைத்தவிர்த்து தனியே அவசர அவசரமாக தேர்தலை நடாத்துவது ஏன்?

இது தவிர, வேறு நாடுகளிலும் ஈழமக்கள் அவைகளுக்கான தேர்தல் நடைபெறுகின்றன என்ற தகவல் எதையும் இணையத்தளங்களில் காணமுடியவில்லை.

ஈழமக்கள் அவையினர் 2009ம் ஆண்டு தேர்தலை நடாத்தியதுபோன்றும், யாப்பில் கூறப்பட்டுள்ளது போன்றும் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுயாதீனமான தேர்தல்குழு பகிரங்கமாக அறிவிக்கப்பட்டு;, வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு, தேர்தல் மையங்கள் அமைக்கப்பட்டு ஜனநாயகமான முறையில் இம்முறை இவர்கள் தேர்தலை நடாத்தவில்லை என்பதும் முக்கியமாகக் கவனிக்கத்தக்கது.

இவ்வாறு அவசர அவசரமாக இத்தேர்தலை நடாத்துவதன் நோக்கமென்ன?
இத்தேர்தலின் முக்கிய நோக்கம் மீண்டும் நோர்வே தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகளாக தங்களை தாங்களே அறிவித்துக்கொள்வதும் அதனை அடிப்படையாகக்கொண்டு நோர்வே அரசுடனான தொடர்புகளின் மூலம் ஸ்ரீலங்கா அரசுடன் “அபிவிருத்தி” என்னும் பெயரில் ஈழத்தமிழ்த் தேசியத்தை விலைபேசும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதே இன்றி வேறு எதுவுமில்லை.அபிவிருத்தியின் பெயரிலான ஸ்ரீலங்கா அரசின் ராஜதந்திரம்

2009க்குப் பின்னர் வடகிழக்கில் போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அபிவிருத்தியில் ஸ்ரீலங்கா அரசு உண்மையான அக்கறையைக் காட்டியிருக்கிறதா?

காணாமல்போனோருக்காக பொறுப்புக்கூறலுக்கு என்னவாயிற்று?
முள்ளிவாய்க்கால் பேரழிவின் பொறுப்புக்கூறல் ஸ்ரீலங்காவாலும் ஸ்ரீலங்காவுக்கு சார்பான மேற்குலகத்தாலும் எவ்வாறு தட்டிக்கழிக்கப்பட்டு, காலம்தாழ்த்தப்படுகிறது என்பதை நாம் அறிவோம்.
தமிழர் தாயக நிலங்கள் விடுவிக்கப்படவில்லை, புதிய நிலங்கள் அரசுடமையாக்கப்படுகின்றன.

இப்படியாக ஸ்ரீலங்கா அரசு, ஈழத்தமிழர்களுக்கு எதிராக மிகவும் திட்டமிட்ட அடக்குமுறைகளை மேற்கொள்ளும்போது “அபிவிருத்தி” என்னும் பதாதையின் கீழ் எவ்வாறு மக்களவை ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தைகளை நடாத்துவதற்கு தனது தலைவரை அனுப்பலாம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?

விடுதலைப்புலிகளின் அமைப்புக்களில் கொள்கைமாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றனவா?

விடுதலைப்புலிகளின் அமைப்பான ரீரீசி சார்ந்த மக்களமைப்புக்கள் தங்களது தேசியம்பற்றிய நிலைப்பாடுகள், கொள்கைகள், செயற்பாடுகள் மாற்றமடைந்துள்ளன. நாம் ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்துசெயற்படுகிறோம் என்பதை பொதுமக்களுக்கு மறைத்து, ஸ்ரீலங்கா அரசுடன் மிக இணக்கமான நிலைப்பாடுகளைப் பேணுகிறார்கள் என்பதே உண்மை.

ஸ்ரீலங்கா அரசு, தமிழர்களிடம் எஞ்சி இருக்கும் ஒரு சில நிறுவனங்களினுள்ளும் மிகவும் தந்திரமாக ஊடுருவி இருப்பதையும், ஸ்ரீலங்காவின் ராஜதந்திர வலையில் ஈழமக்கள் அவையும், ரீரீசியும், நோர்வே தமிழர் சுகாதார அமைப்பு போன்ற நிறுவனங்களும் விழுந்திருப்பதும் இதனை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.

இந்நிறுவனங்களுக்கு எப்போதும் விசுவாசமாக இயங்கிய, இயங்கும், தேசியத்தின்பால் உண்மையான பற்றுக்கொண்ட மனிதர்களால் இவற்றை ஏற்றுக்கொள்ளமுடியாதிருக்கும் என்பது உண்மைதான். ஆனாலும் விசுவாசமான தொண்டர்களின் கருத்துக்களை, விமர்சனங்களை மேலிடம் ஏற்றுக்கொண்டு பதிலளிப்பதாகவும் தெரியவில்லை.நோர்வே ஈழமக்கள்அவையின் தலைவர் யார்?

ஈழமக்கள்அவையின் செயற்குழு உறுப்பினர் ஒருவர் பின்வருமாறு கூறினார்.

“பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் துரோகத்தனமான நடவடிக்கைகளில் ஈடுபடுவதால் நாம் அவரை எமது அமைப்பில் இருந்து வெளியேற்றிவிட்டோம், இது தவிர ரீரீசி யின் தற்போதைய தலைவரிடமும் ஏன் பஞ்சகுலசிங்கம் கந்தையா பற்றி வெளிப்படையாகப்பேசுவதைத் தவிர்க்கிறீர்கள்” என்று தான் கேட்டதாகவும்  அப்போதும் எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்றும், அத்துடன் சர்வதேச ஈழமக்கள் அவையின் பேச்சாளரும், நோர்வே பிரதிநிதியுமான ஸ்டீபன் புஸ்பராஜாவிடமும் “பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களை ஈழமக்கள் அவையில் இருந்து வெளியேற்றியுள்ளோம் என்று பொதுமக்களுக்கு அறிவிக்கும்படியும்” கூறியபோதும் அவரும் இன்றுவரை இவ்விடயத்தை பகிரங்கமாக அறிவிக்க தயங்கிவருகிறார் என்றார்.

ரீரீசி, நோர்வே ஈழமக்கள்அவை, சர்வதேச ஈழமக்கள்அவை அகியன இந்த விடயத்தை மறைக்கவும், பேசாதிருப்பதற்கும் காரணம் உண்டு. அதனை இக்கட்டுரையின் வேறுபகுதியில் பார்ப்போம்.

ஈழமக்கள்அவையின் செயற்குழுஉறுப்பினர், கூறிய “தமது தலைவரை வெளியேற்றிவிட்டோம்” என்ற கூற்று முற்றிலும் பொய்யானது. ஏன்னெனில்:

 • ஈழமக்கள்அவையின் இணையத்தளம் பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களே தங்களது தலைவர் என்று, இன்றும் அறிவிக்கின்றது.
 • அவரும் அதை மறுத்துரைத்து எவ்வித அறிக்கையையும் இத்தனை சலசலப்பின் பின்னரும் வெளியிடவில்லை என்பதையும் நாம் முக்கியமாக கவனத்தில்கொள்ளவேண்டும்.
 • இதுதவிர நோர்வே நோர்வே அரசின் நிறுவனப்பதிவகமும் பஞ்சகுலசிங்கம் கந்தையா ஈழமக்கள்அவையின் தலைவர் என்கிறது.
ஸ்ரீலங்கா அரசுடனான பேச்சுவார்த்தை முடிந்தபின்னராவது ஈழமக்கள்அவையினர் தங்களுக்கும் பஞ்சகுலசிங்கம் கந்தையாக்கும் எதுவித தொடர்புமில்லை என்று ஏன் இன்றுவரை பகிரங்கமாக தெரியப்படுத்வில்லை அறிவிக்கவில்லை என்ற கேள்வி எழுவதையும் இவ்விடத்தில் தவிர்க்கமுடியாது.

தங்களது இணையத்தளத்திலாவது அவர் எமது நிறுவனத்தின் தலைவரல்ல, அவர் சுயாதீனமானவே ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார் என்றாவது இவர்களினால் ஏன் இன்றுவரை மறுத்துரைக்க முடியவில்லை?

எனவே பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்களே ஈழமக்கள்அவையின் தலைவர் என்பது இவற்றின்மூலம் சந்தேகமற நிரூபணமாகிறது.அபிவிருத்தி அரசியலுக்கு பலியானவர்கள்

ஈழ மக்கள் அவைக்கும், நோர்வே ரீரீசிக்கும், நோர்வே விடுதலைப்புலிகளின் நிறுவனங்களுக்கும், தமிழ்நெற் ஜெயச்சந்திரனுக்கும் இடையில் உள்ள அதிநெருங்கிய தொடர்பினை அறிந்தவர்களுக்கு, இவற்றினை பின்புலத்தில் இருந்து இயக்குவது தமிழ்நெற்  ஜெயச்சந்திரன் என்பது ஒன்றும் இரகசியமல்ல.

தமிழ்நெற் குழுமத்துடன் நெருங்கிய தொடர்புகளையுடைய ஊடகங்கள் எத்தனை உள்ளன என்பதும், சர்வதேச விடுதலைப்புலிகளின் வலையமைப்பிற்கும் தமிழ்நெற்றுக்கும் ஜெயச்சந்திரனுக்கும் உள்ள நெருங்கிய தொடர்பும் அனைவரும் அறிந்ததே.

பஞ்சகுலசிங்கம் கந்தையா மற்றும் பல்வைத்தியர் சிவகணேசன் ஆகியோரின் மிக நெருங்கிய ஆலோசனையாளரும் வழிகாட்டியும் தமிழ்நெற் ஜெயச்சந்திரன்.

இதற்கு இன்னுமொரு உட்காரணமும் உண்டு.

ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியவர்கள் இருவரும் நோர்வே விடுதலைப்புலிகளின் நிறுவனங்களின் மற்றும் தமிழ்நெற் ஜெயச்சந்திரன் ஆகியோரின் மிக நெருங்கிய சகாக்கள். அதுமட்டுமல்ல 2009க்குப்பின் நோர்வேயில் உருவாகிய திடீர் தமிழ் முதலீட்டாளர்களில் மிக முக்கியமானவர்கள் இவர்கள். தீபம் Tv , வேறு பல வியாபாரநிறுவனங்கள், தென்னிந்திய திரைப்படத் தயாரிப்பு என்று பல முதலீடுகளில் ஈடுபட்டவர்கள், ஈடுபடுபவர்கள்.

சர்வதேச ஈழமக்கள்அவையின் பேச்சாளரும் நோர்வே ஈழமக்கள்அவையின் முக்கிய உறுப்பினருமான ஸ்டீபன் புஸ்பராஜா அவர்களும் மேற்கூறியவர்களது மிக நெருங்கிய சகமுதலீட்டாளர்.

ஸ்டீபன் புஸ்பராஜா அவர்களும் பஞ்சகுலசிங்கம் கந்தையா அவர்கள் ஈழமக்கள் அவையின் சார்பில் ஸ்ரீலங்கா அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தவில்லை என்று இன்றுவரையில் பொதுவெளியில் அறிவிக்கவில்லை எனபதையும் நாம் கவனத்தில்கொள்ளவேண்டும்.

எனவே ஸ்ரீலங்கா அரசுடனான பஞ்சகுலசிங்கம் கந்தையா மற்றும் பல்வைத்தியர் சிவகணேசன், பாலசிங்கம் யோகராஜா ஆகியோரின் அபிவிருத்தி என்ற பதாதையின் கீழ் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் மிக நுணுக்கமாகத் திட்டமிடப்பட்ட ஒரு நடவடிக்கையே.

இதில் தமிழ்நெற் ஜெயச்சந்திரன், ரீரீசி, நோர்வே ஈழமக்கள்அவை, சர்வதேச ஈழமக்கள்அவை, நோர்வே அரசின் பிரதிநிதிகள், நோர்வே அரசின் செயல்களை விமர்சனமின்றி ஏற்றுக்கொள்ளும் சில நோர்வே தமிழர்கள் என்று பலர் இணைந்து ஈடுபட்டுள்ளனர் என்பதும் தெளிவாகவே தெரிகிறது.

இதன்காரணமாகவே பஞ்சகுலசிங்கம் கந்தையா  மற்றும் பல்வைத்தியர் சிவகணேசன் ஆகியோரின் ஸ்ரீலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகளை தமிழ்நெற் இணையத்தளமும் மற்றும் அவர்களைச் சார்ந்த பல ஊடகங்களும்  மூடிமறைத்தன. அதுபற்றி பேச மறுத்தன. புலிகளின் வானொலியாகிய தமிழ்முரசமும் இதுபற்றி மௌனம் சாதித்தது என்பது கவனிக்கத்தக்கது.

ஈழத்தேசியத்தின் அடிப்படை கோரிக்கைகளை முன்வைக்காது, ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களை தீவிரமாக விமர்சிக்கும் தமிழ்நெற்கூட இதுசம்பந்தமாக எதையும் பேசவில்லை என்பது முக்கியமாகக் கவனத்தில்கொள்ளவேண்டியதொன்று. இதற்கு இரண்டு காரணங்கள் இருக்கமுடியும். முதலாவது தமிழ்நெற்க்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்குண்டு. அல்லது தனது நண்பர்களை விமர்சிக்க முடியாத “நேர்மையற்ற இயலாமை”. இதுவும் ஒருவிதத்தில் ஸ்ரீலங்கா அரசுடனான ஒத்தோடித் தன்மையே.

நான், ஸ்ரீலங்கா அரசுடனான பேச்சுவார்த்தைகள் தவறானவை என்று கூறவரவில்லை. அவை அவசியமானவையே. அவர்களுடனான பேச்சுவார்த்தைகள் இன்றி எதையும் எம்மால் நகர்த்த முடியாது என்பதை 2009க்கு பின்னான காலம் அறிவித்திருக்கிறது.

ஆனால்
 • தமிழீழ தனியரசே ஒரே தீர்வு.
 • தலைவரின் வழியிலேயே நாம் செல்கிறோம்.
 • ஸ்ரீலங்காவை யுத்தக்குற்ற நீதிமன்றத்தில் நிறுத்தவேண்டும்.
 • ஸ்ரீலங்கா அரசுடன் எதுவித பேச்சுவார்த்தைகளையும் மேற்கொள்ளக்கூடாது
என்று மக்களிடமும், மாவீரர் நாட்களிலும் கூறிக்கொள்ளும் இவர்கள், தங்களின் சிந்தனையோட்டத்தில், கொள்கையில், தேசியம்பற்றிய பார்வையில், செயற்பாடுகளில்,  சிந்தனையில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஸ்ரீலங்கா அரசுடன் மிக நெருங்கிய தொடர்புகள் எமக்குண்டு என்று மக்களுக்கு பகிரங்கமாக அறிவிக்கவேண்டும்.

அதுவே இத்தனை காலமாக இவர்களை விசுவாசித்து, இப்போதும் விசுவாசிப்பவர்களுக்கும் போராட்டத்திற்கும் அதன் பின்னான காலத்திலும் தமது ஆதரவை இவர்களுக்கு காட்டிய மக்களுக்கு இவர்கள் காண்பிக்கக்கூடிய ஆகக் குறைந்த உண்மைத்தன்மை.

ஆனால், ஆகக் குறைந்த உண்மைத்தன்மையையேனும் இவர்களிடம் இருந்து காணமுடியவில்லை. இரகசியப் பேச்சுவார்த்தையின் தொடர்ச்சி

எதிர்வரும் சில வாரங்களுக்குள் நோர்வே அரசாங்கமும் ஸ்ரீலங்கா அரசும் இணைந்து, நோர்வேயில் இரண்டு முக்கிய சந்திப்புக்களை நடாத்தவுள்ளன.
இதற்கு ஸ்ரீலங்கா அரசுக்கு நெருக்கமான மற்றும் ஸ்ரீலங்காவிலுள்ள நோர்வே தூதுவராலயத்துடன் மிக நெருக்கமாக இணைந்துசெயற்படும் உதவி நிறுவனம் ஒன்றின் இணைப்பாளரும் நோர்வே வருகிறார்.

இன்னொரு சந்திப்பிற்காக வடமாகாண சுகாதார அமைச்சரும் நோர்வே வருகிறார். வடமாகாண சுகாதார அமைச்சரின் வருகை தமிழர்களுக்குகூட அறிவிக்கப்படாது இரகசியமாகவே நடைபெறுகிறது.

இக்கூட்டங்களுக்கான அழைப்புக்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டவர்களின் நண்பர்களுக்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளது.

அண்மையில் ஸ்ரீலங்கா அரசுடன் இரகசியப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பஞ்சகுலசிங்கம் கந்தையா, நோர்வே தமிழர் சுகாதாரஅமைப்பின் தலைவர், பல்வைத்தியர் சிவகணேசன் மற்றும் பாலசிங்கம் யோகராஜா ஆகியோரின் பேச்சுவார்த்தைகளின் வெற்றியே நோர்வேயில் நடைபெற உள்ள இரண்டு நிகழ்வுகளும்.

அவை  தற்செயலானவை அல்ல என்பது அனைவராலும் புரிந்துகொள்ளக்கூடியதே. இது அவர்களின் இரகசியப்பேச்சுவார்த்தையின் தொடர்ச்சி. இது எதிர்காலத்திலும் தொடரும். நோர்வே அரசும் இதனை ஊக்குவிக்கவே விரும்பும் என்பதும் வெளிப்படை.

இது தவிர, விடுதலைப் புலிகளின் அமைப்பான நோர்வே தமிழ் சுகாதார அமைப்பிற்கு மீண்டும் உயிர்கொடுப்பதற்கும், அவர்களை ஸ்ரீலங்கா அரசுடன் அபிவிருத்தி என்னும் பதாதையின் கீழ் இணைப்பதற்கும் முயற்சிகள் நடைபெறுகின்றன. பல இளையோருடனும், அனுபவமான மருத்துவத்துறையினருடனும் மேற்கூறியவர்கள் தொடர்புகளை ஏற்படுத்திவருகின்றனர்.பாலசிங்கம் யோகராஜாவும் நோர்வே கற்கைமையமும்

ஸ்ரீலங்கா அரசுடன் இணைந்து இரகசியப்பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பாலசிங்கம் யோகராஜா அவர்கள் நோர்வே கற்கைமையம் என்னும் அமைப்பின் முக்கிய உறுப்பினர் மற்றும் அதன் ஸ்தாபகர்களில் ஒருவர்.

நோர்வே கற்றை மையமும் பாலசிங்கம் யோகராஜாவின் ஸ்ரீலங்கா அரசுடனான இரகசியப்பேச்சுவார்த்தைபற்றி இதுவரை பொதுவெளியில் எதையும் கூறவில்லை என்பதும்;, இப்படியான மௌனம்காக்கும் நிகழ்வுகள் இவர்களது நிறுவனத்திற்கும் ஸ்ரீலங்கா யுடனான பேச்சுவார்த்தைகளில் தொடர்பிருக்கிறதா என்ற கேள்விளை எழுப்புகிறது என்பதையும் இங்கு குறிப்பிடவேண்டும்.அபிவிருத்தி அரசியலின் உள்நோக்கம்


அபிவிருத்தி என்னும் பதாதையின் கீழ் பேச்சுவார்த்தைகளை நடாத்தும் நோர்வே அரசும், இக்கட்டுரையில் குறிப்பிட்ட நோர்வே தமிழர்களும் ஸ்ரீலங்காவை அபிவிருத்திசெய்வதற்கு புலம்பெயர் தமிழர்களை உள்வாங்கவேண்டும் என்பதானது பின்வரும் கருத்தையே வெளிப்படுத்துகிறது.

யுத்தக்குற்றம், அடக்குமுறை போன்றவற்றைப் புரிந்த, தொடர்ந்து புரியும் ஸ்ரீலங்கா அரசுக்கு தமிழர்கள் உதவவேண்டும்.

யுத்தக்குற்றம் புரிந்தவர்களை, எம்மை அடக்கியாள்பவர்களை புலம்பெயர் தமிழர்களைக்கொண்டே அபிவிருத்திசெய்வதற்கு நோர்வேயும் சர்வதேச அரசுகளும் முனைகிறதா என்ற கேள்வி எழுவதும் இயற்கையல்லவா? இது புரியாதவர்கள் அல்லர் இந்த அபிவிருத்தி பேச்சுவார்த்தையாளர்கள்.

இப்படியான சர்வதேச அரசியலில் சிக்கிவிட்டிருக்கிறது ரீரீசி, நோர்வே மக்கள் அவை, மற்றும் நோர்வே அரசின் விசுவாசிகள்.
 • நோர்வேக்காக எங்கள் சமூகம் 30 ஆண்டுகளுக்கு மேலாக உழைத்திருக்கிறது. 
 • கணசமாக வாக்குவங்கியும் எம்மிடம் உண்டு. 
 • வெளிநாட்டவர்களுக்குள் சிறந்தவர்கள் என்ற பெயரும் இருக்கிறது. 
ஆனால் எமது குரல் நோர்வேயின் ஸ்ரீலங்காபற்றிய கருத்துக்களில் பிரதிபலிப்பதில்லை என்பதே உண்மை
 • நோர்வே அரசு, தமிழர்களுக்கான நியாயத்தினை ஏன் பேசாது இருக்கிறது? 
 • தமிழர்பகுதிகளில் ஏன் நோர்வே அரசின் உதவித்திட்டங்கள் பரவலாக இல்லை? 
 • நோர்வே அரசு, ஏன், ஸ்ரீலங்காவிற்க்கு சார்பாக நோர்வே வாழ் தமிழர்களிடமே ஸ்ரீலங்காக்கு உதவுமாறு கேட்கிறது? 
இதற்கான பதிலை அபிவிருத்தி பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்கள் தருவார்களா?

ஸ்ரீலங்கா அரசும், சர்வதேச அரசியலும் நோர்வேயில் உள்ள பல தமிழர்களையும் தமிழர் அமைப்புக்களை தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்துள்ளது என்பதையே இந்நிகழ்வுகள் உணர்த்துகின்றன.

அபிவிருத்தி என்னும் பதாதையின் கீழ் ஸ்ரீலங்காவின் யுத்தக்குற்றங்கள், அடக்குமுறைகள் போன்றவற்றை மறைத்து ஸ்ரீலங்கா மக்கள் சுபீட்சமாக, ஒற்றுமையாக, கடந்தகாலங்களை மறந்து வாழ்கிறார்கள் என்று நிறுவுவதற்கான ஆரம்பப்படிகள் இவை.

ஸ்ரீலங்காவில் யுத்தக்குற்றம் நடைபெறவில்லை, அடக்குமுறைகள் எதுவுமில்லை என்று, தமிழர்களான எம்மைக்கொண்டே உலகத்திற்கு உரத்துக்கூறவைக்கும் எதிர்காலத்திற்கான ஆரம்பப்படி இது.

இவர்களைப்போன்றவர்களிடம் எமது சமூகம் மிக மிக அவதானமாக இருக்கவேண்டும்.சமூகப்பொறுப்பின்மையின் விளைவுகள்

தூய்மையற்ற, சுயலாபம்கொண்ட அரசியல்வாதிகளின் வளர்ச்சிக்கும், ஏமாற்றுவித்தைகளின் தொடர்ச்சிக்கும் நாமே காரணம்.

எமக்குள்ள சமூகப்பொறுப்பினையும், பொதுநிறுவனங்களின் செயற்பாட்டில் பங்குகொள்ளும் கடப்பாட்டினையும் நாம் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள தவறும் இடங்களில் ஏமாற்றுக்காரர்களும், வியாபாரிகளும் தங்களின் இருப்பை உறுதிப்படுத்திக்கொள்கின்றனர். இவர்கள் சர்வதேச அரசுகளுக்கு தம்மை தமிழர்களின் பிரதிநிதிகளாகக் காட்டிக்கொள்கின்றனர்.

எனவே எமக்குரிய சமூகநிறுவனங்களை ஜனநாயக ரீதியில் கட்டியெழுப்புவதுமட்டுமல்ல, அவற்றின் வளர்ச்சியில் பங்குகொள்வதும் ஒவ்வொருக்கும் இருக்கவேண்டிய சமூகப்பொறுப்பாகும்.

இன்றைய காலத்தில், தேசியம்பேசிக்கொண்டும், விடுதலைப்புலிகளின் பெயரைக் கூறிக்கொண்டும் இப்படியான வியாபாரிகளும், சுயபிரபல விரும்பிகளுமே உள்ளனர் என்பதையும் காலம் மெது மெதுவாக எமக்கு உணர்த்திவருகிறது. இதனை விடுதலைப் புலிகளின் விசுவாசிகளும் மெது மெதுவாக உணர்ந்துகொண்டுவருகின்றனர். அவர்களால் ஜீரணிக்கமுடியாத யதார்த்தம் இது என்பது வேதனையாது.

விசுவாசம் தவறல்ல. ஆனால் விமர்சனமற்ற விசுவாசம் தவறானது என்பது எனது கருத்து