தெய்வத்தின் கையும் மந்தரித்துவிட்ட குரங்கும்

அம்ருதா, ஜூன் 2014 இதழில் வெளியான எனது பத்தி.------------------------------

19.04.14 அன்று மாலை பலநூறு மனிதர்களின் மத்தியிலும், இதமான இசையின் மத்தியிலும், பல நண்பர்களின் அருகாமையிலும் மனம் தனிமையுணர்வினை தொட்டுணர்ந்துகொண்டிருந்தது.

தனிமையின் கனம் மனதை அழுத்த, அழுத்த என்னால் அங்கு உட்கார்ந்திருக்குமுடியவில்லை. இசை நிகழ்வில் மனம் ஒன்றவில்லை. என்னைக் கட்டாயப்படுத்தி உட்கார்த்திவைத்திருந்தேன். அப்படியும் அதிக நேரம் உட்கார்ந்திருக்கமுடியவில்லை. தனிமையின் பாரம் தாங்கமுடியாததால் வீடுசெல்லப் புறப்பட்டேன்.

மண்டபத்தைவிட்டு வெளியேறிக்கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் ஒரு குழந்தையைத்தூக்கிவைத்திருந்தார். அந்தக் குழந்தை என்னப்பார்த்து கண்களால் புன்னகைத்தது. குழந்தையைப் பார்த்து புன்னகைத்து, கண்ணைச் சிமிட்டியபடியே அவர்களைக் கடந்துகொண்டேன். அவர்களைக் கடந்து சில அடிகள் நடந்திருப்பேன் ”ஹாய்” என்று மழலை மொழி என்னை நோக்கி வீசப்பட்டதை உணர்ந்து திருப்பிப்பார்த்தேன். அந்தக்குழந்தை தனது வலதுகையில் ஆட்காட்டிவிரலை என்னை நோக்கி நீட்டியபடியே தெய்வீகமாய் புன்னகைத்தது.

என்னை மறந்து அந்தக்குழந்தையை நோக்கி மந்திரித்துவிட்டவன்போன்று நடந்தேன். அப்போதும் அக்குழந்தை என்னைநோக்கி கைவிரலை நீட்டிக்கொண்டே இருந்தது. பஞ்சுபோன்ற அக் குழந்தையின் கைவிரலைப் பற்றிக்கொண்டேன். விரலின் குளிர்ச்சியை உணர்ந்தேன்.
1999ம் ஆண்டு The Green Mile என்னும் திரைப்படம் வெளிவந்தது. அதில் Tom Hanks சிறைச்சாலை அதிகாரியாக நடித்திருப்பார். அவருக்கு உடலில் நோயிருக்கும். இன்னொருவருக்கும் அதீத நோய்கண்டிருக்கும் (அச் சிறைச்சாலையின் மேலதிகாரியின் மனைவி என்றே நினைக்கிறேன்). Tom Hanks இன் சிறைச்சாலைக்கு ஒரு கறுப்பு மனிதன் கொலைக் குற்றம்சாட்டப்பட்டு அனுப்பப்படுவான். அவன் குற்றமற்ற ஒரு அப்பாவி, அதீத பெரிய உடலமைப்பை கொண்டிருப்பான். அவனை நாலைந்து பலசாலிகளாலும் சமாளிக்கமுடியத அளவுக்கு பெருத்த, பலமான உடல் அமைப்பு அவனுடையது.  ஆனாலும் அவன் அமைதியானவன். அவனிடம் ஒரு அதீதசக்தி இருக்கும். மனிதர்களின் கைகளை பற்றும்போது அவர்களைப்பற்றி அறிந்துகொள்ளும் அதீத சக்தியைக் கொண்டிருப்பான்.




காலம் Tom Hanksஐயும் அம் மனிதனையும் (Michael Clarke Duncan) நெருங்கிய நண்பர்ளாக்கிவிடும். அம்மனிதன் Tom Hanksக்கு நோய்கண்டிருப்பதை தனது சக்தியினால் உணர்ந்துகொண்டு, Tom Hanks இன் கைய‌ைப்பற்றியிருக்கும் ஒரு சமயத்தில் அந்நோயை குணப்படுத்திவிடுகிறான். இதை தனது மேலதிகாரியிடம் கூறும் Tom Hanks, அவரது மனைவியையும் அவனால் குணப்படுத்தமுடியும் என்று கூறி, அவனை சிறைச்சாலையைவிட்டு அவர்களின் வீட்டுக்கு அழைத்துச்சென்று மனைவியை அவனுக்கு அறிமுகம்செய்யுமாறு கூற, பலத்த பாதுகாப்புடன் அவனை அழைத்துச்செல்லும் Tom Hank ம், மேலதிகாரியும் அவனுக்கு  அப்பெண்ணை அறிமுகப்படுத்த அவனும் அப்பெண்ணிண் நோயினை குணப்படுத்துகிறான்.

எத்தனையோ படங்கள் பார்த்திருந்தாலும் இந்தப்படத்தில் கறுப்பனாக நடத்த John Coffey பாத்திரத்தில் நடித்த Michael Clarke Duncan இன் நடப்பும் அவரது காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தவிதமும் இன்றும் மனதில் படிந்திருக்கின்றன. என் மனதை, உணர்வுகளை அதிகமாக பாதித்தபடம் இது. படம் முடிந்ததும் பலர் கைதட்டினார்கள். என்னால் உடனடியாக திரையரங்கைவிட்டு எழும்பி வரமுடியவில்லை, சற்றுநேரம் ஆனது என்னை ஆசுவாசப்படுத்திக்கொள்ள. படத்தின் முடிவு மனதை அந்தளவுக்கு ஆட்டிப்போட்டிருந்து. அத்தனை அற்புதமான படம் அது.

மீண்டும் இப்போது அந்தக் குழந்தையின் கதைக்கு வருவோம்.
மந்திரித்துவிட்டவன்போன்று அக்குழந்தையின் கைகளை பற்றிக்கொண்டேன். குழந்தையின் கண்கள் என்னை ஊடுருவி உயிரைத் தொட்டதுபோலுணர்ந்தேன். குழந்தையின் தூய்மையான முகமும், தெய்வீகமான புன்னகையும், ஆட்காட்டிவிரலின் குளிர்ச்சியும் என்னைக் காற்றில் தூக்கிப்போவதுபோலுணர்ந்தேன். அதுவரை உணர்ந்துகொண்டிருந்த மனதின் பாரங்கள் காற்றில் படபடத்துப் பறக்கும் காகிதங்கள்போன்று என்னைவிட்டு பறந்துபோயின. சில நொடிகளேயான அந்த பரிசுத்தமான ஸ்பரிசம் என்னை உயிர்ப்பித்திருந்தது. மனதில் இருந்து தனிமை அகன்று, குதூகலம் மனமெங்கும் நிரம்பியிருந்தது.

சில மனிதர்களிடத்தில் அற்புதமானதொரு அதீத சக்தி இருக்கிறது. The Green Mile திரைப்படத்தில் John Coffey பாத்திரத திரமும், இந்தக் குழந்தையும் அப்படியானவர்களே.

அக்குழந்தையை தூக்கிவைத்திருந்தவர் ”இவன் இப்படித்தான், எல்லோருடனும் மிக இலகுவாகப் பழகுவான்” என்றார்.

நான் புன்னகைத்ததேன்.

அலெக்சாண்டர் மாமன்னனின் அற்புத சமையலும், Pacharan பானமும்

இந்த 850 கி. மீ நடைப்பயணத்தின்போது கடந்த மூன்று நாட்களாக ரஸ்ய நாட்டு நண்பன் அலெக்சான்டருடன் நடந்துகொண்டிருக்கிறேன்.

இன்று அவன்  இப்படிச் சொன்னான்.

”My norway friend, I make cook food you eat ( அவர் சமைக்கிறாராம், நான் உண்ண  வேண்டுமாம்).

”சரி” என்றேன்.

”We go buy super market and come” (சுப்பர் மார்க்ட்க்கு சென்று உணவு தயாரிப்பதற்கான பொருட்களை வாங்கி வருவோம்) என்றபடியே புறப்பட்டான்.

நானும் விதியை நொந்தபடியே புறப்பட்டேன்.

பேசிக்கொண்டே நடந்துகொண்டிருந்தோம். அவன் ரஸ்ய மொழியிலும் நான் தமிழிலும் உரையாடினோம். எனக்கு ருஸ்யநாட்டு மொழியும், அவனுக்கு தமிழும் புரிந்தது போல் உணர்ந்தேன்.

ஒரு நாய் எம்மை நோக்கி குலைத்தது. நான் சற்று எட்டி நடந்தேன். அலெக்சான்டர் அந்த நாயுடன் தனது ருஸ்ய நாட்டு மொழியில் பேசியபடியே அதனருகில் சென்றான்.  நாய் வாலை ஆட்டியபடியே  அவன் கையை நக்கியது.

பின்பு என்னையும் அருகே அழைத்து ” dog good friend, no run" (நாய் நண்பனாம், ஓடத் தேவையில்லையாம்)

எல்லாம் விதி என்றபடியே ”ம்” என்றேன். நாய் எனது கையையும் நக்கியது.

சுப்பர் மார்கட் கடைக்குள்  புகுந்தவுடன் ”வொட்கா” என்றான். நான் ”இல்லை” என்றேன். ( உன் ஊர்ப் புத்தி  உன்னை விடுமா என்று மனதுக்குள் நினைத்தபடியே)

Friend what drink? Wine? என்றான் என்னைப் பார்த்தபடியே. நான் இல்லை என்று தலையை ஆட்டினேன்.

திடீர் என்று அவன் கண்ணில் இந்நாட்டு மாநிலமான ”பஸ்கா” மாநிலத்தின் மிக முக்கிய பானமான ”Pacharán” பானம் கண்ணில் பட ” Friend, we drink Pacharán"  என்றான். எனக்கும் அது  பிடித்திருந்ததால் சரி என்றேன்.

தங்குமிடம் வந்தவுடன் சமையல் வேலையை மறந்து Pacharán போத்தலை திறந்து எனக்கும் பரிமாறினான்.

எனக்கு பசிக்கிறது என்றேன். பொறு, இன்னும் சற்று Pacharán  பருகு  என்றான். பருகினேன். புவியீர்ப்புவிசை சற்று கலங்குவது போலிருந்தது. நிறுத்திக்கொண்டேன். அவன் புவியீர்ப்புவிசைபற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை.

சற்று பதமான நிலை வந்தவுடன்;
 ”Friend, you wash என்று கூறி தக்காளியைக் காட்டினான். புரிந்துகொண்டேன். கழுவிக் கொடுத்தபின் " you eat hot?"  என்றான். யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்கிறாய் என்றபடியே ”ஆம்” என்று  தலையை ஆட்டினேன்.  தனது சமையல் பெட்டியினுள் இருந்து  காய்ந்த திப்பிலி மிளகாய், மிளகு போன்ற ஆயுதங்களை அவன் எடுத்தபோது எனக்கு சற்று பயமாக இருந்தது.

முட்டையை அவித்தபின் ஒரு முட்டையை உடைத்துக்காட்டி, மிகுதி இருந்த 5 முட்டையையும் உடைத்துத் தா என்றான். உடைத்துக்கொடுத்தேன்.

சற்று நேரத்தில் அற்புதமான சலாட், பாண், வாட்டிய இறைச்சி என பரிமாறினான். ஒலீவன் எண்ணையும் தந்தான்.

உண்மையில் அலெக்சான்டர் சமையற்கலையில் மிக மிக வல்லவன்.  உணவு அத்தனை ருசியாக இருந்தது.

இடையிடையே  I love Pacharán  என்றான்.  நானும், Me too my friend என்று கூறினேன். இருவரும் கிளாஸ்களை முட்டிக்கொண்டு "Buen Camino" (யாத்திரை சிறக்கட்டும்)  என்று பெரிதாக சொல்லிக்கொண்டோம்.

உண்டு முடிந்ததும். பாத்திரங்களை காட்டி, கழுவு என்றபின் மாயமாய் மறைந்துவிட்டான். நான்  Pacharán குடித்தபடியே கழுவிக்கொண்டிருக்கிறேன்.