நான் ஏதும் பிழையாக சொல்லிவிட்டேனோ?

எனது நண்பருக்கு ஒரு பையன் இருக்கிறான். அவனுக்கு 9 வயது. அண்மையில் நான் அவர்கள் வீட்டில் நின்றிருந்தபோது, என்னை தனது அறைக்கு அழைத்துப்போனான். அறையின் நீள அகலத்தை அளந்து சொல் என்றான்.

அளந்து கூறினேன். பெரிய மனிதன்போல் தலையாட்டியபடியே சிந்தனையில் ஆழ்ந்துபோனார் சாக்ரடீஸ்.

என்னய்யா யோசிக்கிறாய்? என்று சிந்தனையில் ஆழ்ந்திருந்தவனை கேட்டேன்.

”சஞ்சயன் மாமா”என்று ஆரம்பித்தான்.
”இந்த அறை 4 x 4,9 மீற்றர். இந்த கட்டில் பெரும் இடத்தைப்
பிடிக்கிறது”
”ம்” இது நான்
”நான் இந்தக் கட்டிலை அகற்றிவிட்டு, ஏணி உள்ள ஒரு உயமான கட்டிலை வைத்தால், கட்டிலுக்கு கீழே பெரிய மேசை வைக்கலாம்.

”உனக்கேன் அய்யா பெரிய மேசை” என்றேன்.

ஒரு புழுவைப் பார்ப்பதைப்போல் என்னைப் பார்த்தான்.
”உனக்கு கணிணிகளைப்பற்றித் தெரியாது”

”ம்.. உண்மைதான். உன்னளவுக்கு எனக்குத் தெரியாதுதான்” என்றேன்.

” நான் இதில் Mac இனத்திலான பெரிய கணிணியுடன் இரண்டு கணிணித் திரைகளை வைக்கப்போகிறேன். அத்துடன் ஜன்னலருகில் கட்டிலில் xBoxவியையாடும் விதத்தில் ஒரு பெரிய தொலைக்காட்சி வைக்கப்போகிறேன்” என்றான்.

”நீதான் எனது அறைக்கு நீல நிற பெயின்ட் அடித்துத் தரவேண்டும்” என்றும் கட்டளையிட்டான்..

எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. இருந்தாலும் சமாளித்துக்கொண்டு.. ”ராசா.. உனது இந்த அபிவிருத்தித் திட்டத்தை உன் அப்பாவிடம் கூறிவிட்டாயா?” என்றேன் பேரன்பு கலந்த குரலில். (எனக்குத்தெரியும் அவனின் அப்பா என்ன பதில் சொல்வார் என்று)

இரண்டு கைகளையும் தலையில் வைத்தபடி கட்டிலில் குந்திவிட்டான்.“

என்ட ஒஸ்லோ முருகா! நான் ஏதும் பிழையாக சொல்லிவிட்டேனோ?

 29.05.2015

சேக்ஸ்பியரின் மொழியும் திருவள்ளுவரின் மொழியும்

இன்று ஒஸ்லோவில் மழை சிணுங்கியபடியே இருந்தது: வீதி திருத்தவேலை என்பதால் ஒஸ்லோவுக்குள் வாகனநெரிசல் அதிகம் என்று எச்சரித்திருந்தார்கள்.

ஒஸ்லோவில் எனக்கு நான்கு மணிக்கு கற்பித்தல் இருந்தது. ஒருவிதமக 3.55க்கு வாகனத்தை நிறுத்திவிட்டு மழை பெய்துகொண்டிந்ததால் உள்ளே ஓடுகிறேன்.

கட்டடத்தின் வாசலில் ஒரு சீக்கியர் அவருக்கேயுரிய தலைபாகையுடன் நிற்பது தெரிகிறது.


அவரைக் கடந்துகொண்டிருக்கும்போது குறுக்கே கையைப்போட்டார்.

எனது ஓட்டத்தை நிறுத்தி ”எனக்கு வகுப்பு இருக்கிறது” கதைக்க நேரமில்லை என்றேன் நோர்வேஜிய மொழியில்.

அந்த மனிதரோ என்னைப் பார்த்து ”வணக்கம்” என்று திருவள்ளுவரின் மொழியில் கூறினார்.

”வணக்கம்” என்றேன் நானும் திருவள்ளுவரின் மொழியில்.

இப்போது அவர் சேக்ஸ்பியரின் மொழியை கையில் எடுத்து இப்படிச் சொன்னார்.

"My friend! You have happy life and beautiful wife. You will get a new baby soon. My friend, This is what god says through me". என்றார்.

”மவனே .. beautiful wife மட்டும் என்றாலும் அவனை மன்னிக்கலாம். ஆனால் குழந்தைவேறு கிடைக்கு என்கிறானே என்று நினைத்தபோது எனக்கு உள்ளங்காலில் இருந்து உச்சிவரை கடுப்பு ஏறியது.

அவனைப் பார்த்து ”realy” ஆச்சர்யமாக குரலில் என்றேன்.

அவரின் கண்களில் ”மீன் மாட்டிவிட்டது” என்ற மகிழ்ச்சி மின்னி மறைந்தது.

”My friend, you live in norway meny years?"

"25"

"Good good My friend. you work where?"

பவ்வியமான ஒரு சிரிப்பை எடுத்துவிட்டபடி " I work as Police chief, see my ID card " என்று விட்டு எனது சாரதி பத்திரத்தைக் காட்டினேன்.

”Ok.. Chief! You go... I am going home" என்றுவிட்டு திரும்பிப்பார்க்காலே நடந்தார் அவர்.

வகுப்பு முடிந்த பின் தேனீர் அருந்த அருகில் இருந்த தேனீர்க் கடைக்குச் சென்றேன்:

எனது சீக்கிய நண்பர் ”கடைக்கார முதலாளியிடம் ”My friend! You have happy life and beautiful wife. You will get a new baby soon. My friend, This is what god says through me".என்றுகொண்டிருந்தார்.

”தம்பி! ஒரு இஞ்சி பிளேன் டீ” என்று கடை முதலாளியிடம் கூறியதைக் கேட்டுத் திரும்பினார் நமது நண்பர்.

திரும்பியவர் முகம் கறுத்துப்போனது. கடைக்காரிடம் ”My friend, I go" என்று நடையைக் கட்டினார்.

என்ட ஒஸ்லோ முருகா, ஒரு சாரதி பத்திரத்திற்கு இவ்வளவு மகிமையா?

பி.கு:

Veitvet senterக்குள் உலாவும் நண்பர்களே.. ஜாக்கிரதை!!
தேவை எனின் நீங்களும் நோர்வேயின் இராணுவத்தளபதி ஆகலாம்.
தப்பே இல்லை.

02.06.2015

நான் 10 வயதிலேயே முத்திப் பழுத்த ஆள்நண்பரின் வீட்டுக்குள் நுளைந்தவுடனேயே கண்ணில்படுவான் நண்பனின் மகன். இன்று மாப்பிள்ளையைக் காணவில்லை. எங்கே என்றேன். எங்கயாவது நிற்பான் என்று பதில் வந்தது.

அளைத்தேடிப் புறப்பட்டேன்.என்னைக் கண்டதும் விளையாடுவதற்காக ஒளிந்திருக்கிறான் என்றுதான் நினைத்தேன். ஆனால் வழமையாக ஒளிந்திருக்கும் இடங்களில் அவன் இல்லை.

மாப்பிள்ளையின் அறைக் கதவு பூட்டியிருந்தது. கதவில் காதைவைத்துக் கேட்டேன். தொலைக்காட்சிச் சத்தங்கள்.

வெளியில் ஹாலில் பெரிய தொலைக்காட்சி இருக்கிறதே... இவன் ஏன் அறையை பூட்டிவைத்து தொலைக்காட்சியைப் பார்க்கிறான் என்று எனது அப்பரின் போலீஸ் மூளை வேலைசெய்யத்தொடங்கியது.

கதவைத் தட்டினேன். தொலைக்காட்சிச் சத்தம் நின்றுபோனது. பூனைபோல் மெதுவாய் நடந்துவந்து மாப்பிளை்ளை கதவருகே நிற்பதும் கேட்டது. இதுவும் எனது சந்தேகத்தை அதிகரிக்க...

டேய்... கள்ளப்பயலே திறவடா கதவை என்றேன்.

”ஐயோ” என்று கதவுக்குப் பின்னால் இருந்து சத்தம் வந்தது.

”திறவடா கதவை” என்றேன்

கதவை சற்று திறந்து வாசலை அடைத்தபடியே ”உனக்கு என்ன வேணும” என்றான்.

மாப்பிள்ளை நான் அவரது அறைக்குள் வருவதை விரும்பவில்லை என்று புரிந்தது.

சரி.. ஏதோ திருகுதாளம் பண்ணுகிறான் என்று முடிவுசெய்துகொண்டேன், தலையை மட்டும் அறைக்குள் விட்டுப் பார்த்தேன்.

தொலைக்காட்சியில் 18 என்று எழுதி ஒரு பெரிய வட்டம்போட்டிருந்தது. அருகில் சில உருவங்கள்.

எல்லாம் புரிந்துபோயிற்று எனக்கு. மவனே.. 18 வயதுக்கு மேற்பட்ட கேம் விளையாடுகிறாய்.... பொறு கொப்பரிடம் சொல்கிறேன் என்றேன்.

”சஞசயன் மாமா” என்று தேனொழுக அழைத்தான். மாப்பிளை என்னை மயக்க முயற்சிக்கிறார் என்று நினைத்து ..

”என்ன?” என்றேன் கடுமையான குரலில்.

”உனக்கு ஒன்றும் தெரியாது” என்றான்.

”டேய் ... நான் 10 வயதிலேயே முத்திப் பழுத்த ஆள்” என்னிடம் கதைவிடாதே. இண்டைக்கு நீ கொப்பரிடம் வாங்கிக் கட்டப்போகிறாய். இனி உனக்கு ஒரு கிழமைக்கு தொலைக்காட்சி, கணிணி, ஐபாட், கேம் ஒன்றும் இல்லாமல் ஆக்குகிறேன் பார்” என்றேன்.

அவன் பயந்ததாய் இல்லை.

” நீ வளர்ந்த அளவுக்கு உனக்கு மூளை வரவில்லை. ஒனக்கு ஒன்றும் தெரியாது” என்றான் மீண்டும்.

எனக்கு கதை விடுகிறான் என்று நினைத்தேன். அதற்கு ஒரு காரணமும் உண்டு.

ஒரு நாள், நானும் இவனும் வெளியே கால்ப்பந்து விளையாடிக்கொண்டிருந்தோம். நாம் சற்று நேரம் ஓய்வெடுத்தபோது ஒரு கதை சொல்கிறேன். ஆனால் நீ ஒருவரிடமும் சொல்லக்கூபடாது என்று சத்தியமும் வாங்கிக்கொண்டான்.

இவனின் தாத்தாவுக்கு 20 வயதுகளில் ஒரு மகன் உண்டு. அவனும் கணிணி விளையாட்டுக்களில் பிரியுமுள்ளவன்.

ஒரு நாள் தாத்தாவும், பேரனும் தாத்தாவின் மகன் வீட்டில் இல்லாதபோது அவனது கணிணியில் திருட்டுத்தனமாக கணிணி விளையாட்டு விளையாடியிருக்கிறார்கள். அது 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் விளையாட்டு. அங்கு ஒரு காட்சியில் ஒரு பெண்ணின் மார்பகங்கள் தெரிந்ததாம். அவள் ஒருவனுக்கு முத்தமிட்டாளாம்.

தாத்தா உடனே அதை நிறுத்திவிட்டு, இதைப் பற்றி எவரிடமும் பேசப்படாது என்று ஒப்பந்தம் செய்தாராம். அதன் பின் அந்தக் கணிணியில் தாத்தா கைவைக்க விடுவதில்லை என்றான். கண்களில் 12 வயதுக்குரிய குறுகுறுப்பு தெரிந்தது.

அந்த விளையாட்டைத்தான் இவன் விளையாடுகிறான் என்று எனது திருட்டு மூளை நினைத்ததில் என்ன தவறிருக்கிறது?


வெளியே அமர்ந்திருந்த பெற்றோரிடம் ” பெடியன் கணிணியில் அடல்ஸ் ஒன்லி விளையாட்டு விளையாடுகிறான்” என்றேன்.

மைன்ட் வாய்ஸ் ”செத்தான்டா சேகரு” நினைத்துக்கொண்டது.

மாப்பிள்ளை அழைக்கப்பட்டார். நெஞ்சை நிமிர்த்தியபடியே வந்தான்.

”என்ன?” என்றான் பெற்றொரைப் பார்த்து. அந்த ”என்ன”வில் பெரும் அலட்சியம் இருந்தது.

விசாரணை தொடங்கியது.

கடைசிவரையில் நான் 18 வயது விளையாட்டு விளைாயாடவிலலை என்று சாதித்தான்.

நானும் குறுக்கு விசாரணைசெய்து பார்த்தேன்.
எதுவும் பலிக்கவில்லை.

பின்பு என்னைக் காட்டி

”சஞ்சயன்மாமாவுக்கு கணிணிவிளையாட்கள்பற்றி ஒன்றுமே தெரியாது” என்றபடியே நக்கலாய் ஒரு சிரிப்பு சிரிததான்.

பின்பு அவனே தொடர்ந்தான்.

”ஒரு புத்தகத்தில் எத்தனை அத்தியாயங்கள் இருக்கும்?”

பெற்றோர்கள் பதில் சொல்வதற்கு யோசித்தபோ ... நான் ” அது புத்தகத்தைப் பொறுத்தது 5, 10, 50 என்று இருக்கும் என்றேன்.

”இது மட்டும் உனக்கு தெரிகிறது.... இதைப்போலத்தான் எனது விளையாட்டிலும் 25 அத்தியாயங்கள் உண்டு. நீ வந்தபோது 18வது அத்தியாயத்தில் இருந்தேன்” என்றுவிட்டு விளையாட்டுபற்றிய CD யை கொண்டுவந்து என் மடியில்போட்டான். அதில் அது 7 வயதுக்குரிய விளையாட்டு என்றிருந்தது.

எனக்கு இப்ப 12 வயது .நான் இது விளையாடலாம் என்றபடியே எனக்கு இடுப்பால் ஒரு இடி இடித்துவிட்டு மறைந்துபோனான்.

அவனது பெற்றோர் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தனர்.

அதைத் தாங்கிக் கொள்வேன். ஆனால் படுபாவிப்பயல் சிரித்தானே ஒரு நக்கல் சிரிப்பு ...

என்ட ஒஸ்லோ முருகா... ஏனய்யா என்னை இப்படி சோதிக்கிறாய்?

08.07.2015


எனது அதிபரும் பேராசானுமாகிய Prince Sirக்கு இன்று 89 வயது.

அவரது கொல்லன்பட்டறையில் பழுக்கக்காச்சப்பட்டு, நெளிவெடுக்கப்பட்டு, புடம்போடப்பட்டவர்கள் என்ற பெருமைபெற்ற மாணாக்கர்களில் நானும் ஒருவன்.

இன்று அவருடன் உரையாடினேன். எங்கள் குடும்பத்தில் இருந்து இன்று அவருக்கு நான்கு தொலைபேசி அழைப்புக்கள் வரும் என்றார். அம்மாவும், தங்கையும் உட்பட.


அவர் யார் என்று அறியாத காலத்தில் தங்கை அவரை எங்கள் வீட்டினுள் அனுமதிக்காது வாசலில் நிறுத்தி கேள்விகளால் விசாரனை நடாத்தியதை இன்றும் நினைவுறுத்திச் சிரித்தார். இந்த உலகத்தில் என்னை வாசலில் நிறுத்திய சின்னப் பெட்டை உன் தங்கை மட்டும்தான் என்றார். நாம் சேர்ந்து சிரித்தோம்.

அவரது வசீகரமான மந்திரக்குரல் சற்று தளர்வுற்றிருந்தாலும்,அதன் மந்திரத்தன்மை மாறாதிருக்கிறது. அவரது நகைச்சுவையுணர்வு அவரை நன்கு அறிந்தவர்களுக்கு புரியும். அதிலும் மாற்றம் இல்லை.

கண் சத்திரசிகிச்சையினால் வாசிப்பு தடைபட்டிருக்கிறது என்பது அவரது மிகுந்த ஆதங்கமாய் இருக்கிறது.

”வாழ்வின் அந்திமக்காலத்தில் இறைவனின் அழைப்புக்காய் காத்திருக்கிறேன், மகன்”...... என்றார்.

என்னால் எதுவும் பேசமுடியவில்லை.

”மனம்விட்டுப்பேசக்கூடியவர்களில் நீயும் ஒருவன். எப்போ வருகிறாய்? உன்னைச் சந்திக்கவேண்டும்” என்றார்.

”கூடிய விரைவில்” என்றிருக்கிறேன்.

எம்மிடம் குரு சிஸ்யன் என்ற என்ற எல்லைகள் சற்றே மறைந்து ஒருவித ஆர்த்மார்த்மான உணர்வு குடிவந்திருக்கிறது.

அவரருகில் உட்கார்ந்து அவரது முதுமையுற்ற, சுருக்கங்களுள்ள, கருநீல நிறமாய் நீண்டோடும் நாளங்கள் தெரியும் அவரது கைகளைப்பற்றியிருந்து உரையாடும் நேரங்களில் காலம் பின்னோக்கி ஓடிக்கொண்டிருக்கும்.

மட்டக்களப்பின் ஒரு சகாப்தம் அவர். நான் ஆவணப்படுத்த விரும்பும் மனிதரும் அவர்தான். ஆனால் இது இன்னமும் சாத்தியப்படவில்லை.

இம்முறையும் இலங்கை செல்லும்போதும் அவரது சாய்மனைக் கதிரையருகே, மின்விசிறியின் காற்றல் அமர்ந்தபடி, பழங்கதைகள் பேசி, சிரித்து, விடைபெறும்போது May God Bless You என்று ஆசீர்வாதம் பெறும் நாளுக்காய் காத்திருக்கிறேன்.

அன்பான பிறந்த நாள் வாழ்த்துக்கள் THE ONE AND ONLY "Prince" of our Bt/ Methodist Central College.

21 July 2015

இரகசிய நீரோடை

எனது மூத்தமகள் குழந்தையாய் இருந்த 1998 - 1999ம் ஆண்டுக் காலங்களில், எங்கள் வீட்டுக்குப் பின்னால் இருந்த நீரோடைக்கு அழைத்துபோவேன். சப்பாத்தைக் களற்றி குளிர நீரில் காலைவைத்து சிலிர்த்துச் சிரிப்பாள். கூழாம்கற்களை எடுத்து நீரில் எறிவாள். நான் அவளைப் பார்த்தபடியே இருப்பேன்.

அந்த நீரோடை எமது இரகசிய இடம். இரகசியமாய் காதிற்குள் ”வா.. நீரோடைக்குப் போவோம்” என்பாள். எங்கே போகிறோம் என்று எவருக்கும் கூறாது புறப்பட்டுப்போய் வருவோம்.

மணவிலக்காகி இந்தக் கிராமத்தைவிட்டு 8 வருடங்களுக்கு முன் ஒஸ்லோவுக்கு இடம்பெயர்ந்தேன். அவளும் லண்டனுக்கு இடம் பெயர்ந்தாள்.

நேற்று முன்தினம் மகளும் நானும் மீண்டும் இக் கிராமத்துக்கு விடுமுறையைக் கழிக்க வந்திருக்கிறோம்.

நேற்றுமாலை, ”புறப்படு எங்கள் நீரோடைக்கச் சென்றுவருவோம்” என்றாள். நெஞ்சு விம்மி கண்கலங்கிப்போனேன் நான்.

நீரோடையைச் சுற்றி சுற்றி நடந்தாள். நீர் குறைவாக இருக்கிறது என்றாள். வழிந்தோடும் நீரை எடுத்துப் பருகினாள். தன்னை நீரோடையோடு சேர்த்துப் படம் எடு என்றாள். எடுத்துக்கொடுத்தேன்.

அங்கிருந்து வரும்போது அவள் அதிகம் பேசவில்லை. நானும் பேசும் நிலையில் இருக்கவில்லை.

மணவிலக்குகளின் தாங்கொணா வேதனை குழந்தைகளைப் பிரிவது. அதை அணு அணுவாக அனுபவித்தவன் நான்.

10 - 15 ஆண்டுகளின் பின் அதிலும் 8 ஆண்டுகள் அதிக தொடர்பில்லாத காலங்களின்பின், அவள் என்னை ”அந்த நீரோடைக்கு” அழைத்துப்போனதால் மீண்டும் உயிர்த்திருக்கிறேன்.

ஒத்திவைக்கப்பட்ட மகிழ்ச்சிகள் இரட்டை மடங்கு மகிழ்ச்சியைத் தருபவை.

26 July 2015

காலையில் சாதமா?

நண்பர் ஒருவர் ஒஸ்லோ வந்ததால் என்னுடன் தங்கியிருக்கிறார்.

அவரது தாயாரும், நண்பரது தற்போதைய உரிமையாளரும் சமையற்கலையில் விற்பன்னர்கள். இதனால் எனது நண்பர் ஒரு சாப்பாட்டுப்பிரியராகவே காலத்தைக் கடத்திக்கொண்டுவருகிறார்.

நேற்று மதியம் கடையில் சாப்பிட்டோம். இரவு பாண் இருக்கிறது என்றேன். சாதம் கிடையாதா? என்றார். பின்பு அவரே நாளை காலையில் சாதம் சாப்பிடுவோம் என்றார்.

”காலையில் சாதமா?”அவரின் இந்த ஒரு வசனமே எனது இரவுத் தூாக்கத்தை கெடுத்துவிட்டது.

இந்த வீட்டுக்கு இரண்டுவருடங்களுக்கு முன் வரும்போது 1 கிலோ பசுமதி அரிசி வாங்கிவந்தேன். அதில் அரைக்கிலோவுக்கு அதிகமாக இன்னும் மிகுதி இருந்தது. எனவே மனதை தைரியப்படுத்தியபடி தூங்கிப்போனேன். நண்பர் செம குறட்டையுடன் இரவைக் க(ழி)ளித்தார்.

காலையில் சாதம் கேட்பானே பாவி என்றதனால் தண்ணீரைக் கொதிக்கவைத்து, அரிசையக் கழுவினேன். அரிசி குறைவாக இருக்கும் போலிருப்பது போலிருந்தது. சற்று அரிசியைச் சேர்த்துக்கொண்டேன். மீண்டும் கழுவும்போதும் அரிசி குறைவாக இருப்பது போல் இருந்தது. இப்போது மேலும் சிறிது அரிசியைச் சேர்த்துக்கொண்டேன். அரிசி வெந்து சோறானதும் ஊருக்கே அன்னதானம் கொடுக்குமளவுக்கு சோறு இருந்தது.

நண்பர் குளித்துக்கொண்டிருந்தார்.

அப்போதுதான் என் மர மண்டைக்கு சோற்றுக்கு கறி வேண்டுமே என்ற நினைப்பு வந்தது. என்னிடம் இருந்தவை இவைதான் sweet sauce, chips, salt & pepper. cheese. இன்றைக்கென்று எனது உணவை ருசியாக்கும் ஊறுகாயும் தீர்ந்திருந்தது.

நண்பரிடம் என்னிடம் இருப்பவற்றில் எதனுடன் சாதம் சாப்பிடப்போகிறீர்கள் என்றேன்.

மனிதர் பயந்து நடுங்கி மயங்கிவிடுவார் என்று நினைத்தேன். ஆனால் அவர் மிகவும் கூலாக எனது குளிர்சாதனப்பெட்டியைத் திறந்து அதிலிருந்து இறைச்சிக் கறி, இறைச்சிப்பொரியல் என வெளியில் எடுத்துத் தந்தபடியே ...”உன்னிடம் வரும்போது முன்ஜாக்கிரதையாக இருக்கட்டும் என்று வீட்டுக்கார அம்மா தந்துவிட்டார்” என்றார்.

இதைத்தான் சொல்வது ”இடுக்கண் களைவதாம் நட்பு” என்று.

ஒஸ்லோ முருகா! உன் கிருபையால் இன்று காலையிலேயே இறைச்சிக்கறி, இறைச்சிப்பொரியுலுடன் சோறு.

யூ ஆர் ரியலி கிரேட் .. மை லார்ட்............ நண்பர்ளே! எனது இந்த நண்பரை முன்னுதாரணமாகக் கொள்ளுங்கள், என்னிடம் விருந்தினராக வரும்போது மட்டும்.

டேய் கிழவா...உனக்கு 50 வயதாகிறதுஅப்பாவின் அழகிய ராட்சசியிடம் இருந்து சில நாட்களாக சத்தமே இல்லை. இதை நான் உணர்ந்தபோது 2 - 3 நாட்களாகியிருந்தன.

நேற்று தொ(ல்)லை பேசியை இயக்கினேன். எனது அழைப்பு நோர்வேயைகடந்து செல்வதற்கு முன்னான வேகத்தில்ஹலோகிழவியிடம் இருந்து என்று பதில் வந்தது. வழமையாக 10 - 15 ரிங் அடித்தபின்னரே பதில் வரும்.

என்டா இது கிழவி இன்று இவ்வளவு உசாராக இருக்கிறாளே என்று சிந்தித்தேன்.

எங்கள் உரையாடல் தொடர்கிறது....

அம்மாவின் முதல் கேள்வி

ராசா.. சாப்பிட்டியா, என்ன சாப்பிப்பிட்டாய், சமைத்தாயா?”
அவருக்கான எனது பதில்:
ம்......... பாண் ........ நான் என்ன பேக்கறியா வைத்திருக்கிருக்கிறேன் .. பாண் செய்ய?”
டேய் கிழவா...உனக்கு 50 வயதாகிறது .. வயதுக்கேற்ற மாதிரி கதை. பெரியவர்களை மதிக்கப் பழகுடா
என்னடா இது ஆத்தா இன்று பயங்கர உசாராக இருக்கறாரே என்று யோசித்தேன்.
அவரே தொடர்ந்தார்...
மகளின் படங்கள் அனுப்புவதாகச் சொன்னாயே .. இதவரை அனுப்பவில்லை நீ
அம்மா, அவளின் (மருமகள்) facebook க்கு அனுப்பியிருக்கிறேன். அவளிடம் கேளுங்கள்

இப்போதும் என்னது... அம்மா இன்று இத்தனை உசாராகவும், மறதித்தன்மை இல்லாமலும் இருக்கிறாரே என்று மீண்டும் சிந்தனையோடியது.

பின்பு வந்த உரையாடலிலும் அம்மா மிகவும் தெளிவாகவும் .. ஒரு துள்ளலான மனநிலையிலும் இருந்தார். எனக்கு அது ஆச்சர்யமாக இருந்தது.

இன்று மீண்டும் தொலைபேசியைத் தட்டினேன்.

அதே உற்சாகத்துடன் இருந்தாள் கிழவி. எனக்கு ஆச்சர்மாக இருந்தது. நாம் உரையாடிக்கொண்டிருந்தோம்.

தங்கச்சி கதைத்தவளா?”

ஓம்

தம்பி ... எடுத்தவனா? எடுத்திருக்கமாட்டானே அந்தக் குரங்கு... அவனுக்கு விசர்... சாமிப்பைத்தியம் பிடித்து அலையுறான். பைத்தியம்என்றபோது ......

அவன் நல்லவன். உன்னைமாதிரி விசர்க் கதை கதைக்தை கதைக்கமாட்டான். அவன் ஏன் எடுக்கவேணும். அவன் குடும்பத்தோட இங்க வந்திருக்கிறான். அவன் வந்து 3 - 4 நாட்கிறது. மதுரா வளர்ந்திருக்கிறாள். சின்னவன் என்னை இப்பவும் சோதி.. சோதி என்றுதான் கூப்பிடுகிறான். எனக்கு மாம்பழம் வாங்கிக்கொண்டுவந்தாள் மதுரா. உயர்ந்திருக்கிறாள். (குரலில் பெரும் புழுகமும் துள்ளலும் தெரிகிறது)
அவரே தொடர்கிறார்....

சின்னன்களுக்கு நான் முறுக்கு சுடவேணும். நீ சும்மா அலட்டாம டெலிபோனை வை.
??????????
அடியேய் கிழவி ..... உனது உசாருக்கு இதுதானா காரணம்? அவர்கள் வந்திருக்கிறார்கள் என்பதை எனக்கு நேற்றே கூறியிருக்காலாமேயடி.

இருடீ ... அவர்கள் போகட்டும் வச்சுகிறன் கச்சேரியை...

என்ட ஒஸ்லோ முருகா... இப்போது உனக்கு மட்டுமல்ல திருவிழா, கிழவிக்கும் இப்போது திருவிழாதான்

ஒஸ்லோ முருகன் இரவு கனவில் வந்தார்எனது ஒஸ்லோ முருகன் இரவு கனவில் வந்தார்.  

நான் இந்த முறை திருவிழாவிற்கு ஒருநாளேனும் செல்லததைப்பற்றி கதைக்கவே வந்திருக்கிறான் என்று நான் பயந்துபோனேன். ஆனால் அதுவல்ல பிரச்சனை.

முருகனின் அந்தப்புறத்தில் கடும் பிரச்சனையாம். இரண்டு வீடும் முருகனை வெளியே கலைத்துவிட்டார்களாம்.திருவிழா தொடங்கிய நாளில் இருந்து பழனி மலையடிவாரத்தில் தனியே குந்தியிருந்தாராம் என்றார் கடும் சோகத்தில்.

ஏனய்யா .. என்ன பிரச்சனை. இத்தனை வருடமாக இரண்டையும் சமாளித்தாயே. திடீர் என்று என்ன பிரச்சனை? பக்குவமாக கையாண்டிருக்கலாமே.... என்றேன் ஒரு அந்தப்புறமும் இல்லாத நான்.

அதையேன் கேட்கிறாய்... திருவிழாவிற்கு வந்த பெண்கள் அணிந்திருந்த புடவை, நகைகளைக் கண்ட வள்ளியும் தெய்வானையும் தங்களுக்கும் இந்த வருடம் பிரபலமாக இருந்த டிசைன் புடவைகள் வேணும் என்கிறார்கள்

எனக்குவடிவேலுவின் ஆஹாமனதுக்குள் கேட்டது....

இப்போ என்ன செய்யப்போகிறாய்?” என்றேன்.

புடவைகளை தமிழ்நாட்டில் வாங்கிவிடலாம். ஆனால் பிளவுஸ் தான் பிரச்சனைஎன்று அங்கலாய்த்தார்.

அதையும் அங்கேயே வாங்கிவிடேலாமேஎன்றேன்.

அங்கு தான் பிரச்சனை இருக்கிறது. ”இரண்டு வீடும் தமக்கு ஒஸ்லோ முருகன்கோயிலுக்குச் சென்ற பெண்கள் அணிந்திருந்த டிசைன்களில் பிளவுஸ் தைக்கவேண்டுமாம். உனக்கு ஒஸ்லோவில் பிளவுஸ் தைக்கும் யாரையாவது தெரியுமா ?” என்றார் நண்பர் முருகன்.

ஒருவரின் தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்தேன்.

ஒரு நன்றிகூட சொல்லாமல் மின்னல்போன்று மறைந்துபோனார் முருகன்.
சில மணித்தியாலங்களின் பின்.........

தொலைபேசி டிங் என்று சத்தம்போட்டது.

திறந்து பார்த்தேன். இரண்டு புகைப்படங்கள் MMSல் வந்திருந்தது.
முதலாவது படத்தில் ...

முருகன் நடுவில் நிற்கிறார். வள்ளியும், தெய்வானையும் இரண்டுபக்கத்தில். வள்ளி கையில்லாத பிளவுஸ் அணிந்திருக .. தெய்வானையோ கையில் பல ஜன்னல்கள் வைத்த பிளவுஸ் அணிந்திருந்தார். முருகன் சிரித்தபடியே இருவரின் கைகளிலும் தனது கையை வைத்திருந்தார்.

இரண்டாவது படத்தில் ...

வள்ளியும் தெய்வானையும் முதுகுப்புறத்தில் மிக ஆழமாக வெட்டப்பட்ட பிளவுஸ் அணிந்திருக்க, முருகன் அவர்களது முதுகில் கைவைத்தபடி என்னை திரும்பிப்பார்த்தபடியே கண்ணடித்துக்கொண்டிருந்தார்.
நண்பேன்டா
----------------------------------------------------------------------------------------
ஒரு நண்பரின் ஒரு சிறு அங்கலாய்பைக் அடிப்படையாகக்கொண்ட புனைவு இது.

பீப்பா என்னும் பெரியப்பா
நான்கு நாள் பயணமாக இலங்கை வந்திருக்கிறேன். மருமகளின் கல்யாணம் நாளை.

அப்பாவின் அழகிய ராட்சசியின் 3 பிள்ளைகளும், இரண்டு பேரப்பிள்ளைகளும், ஒரு மருமகனும் கொழும்பில் ஒன்றாக தங்கியிருக்கிறோம். பக்கத்துவீட்டுக்காரர்கள் தலையில் தலைவைக்கும் அளவுக்கு சத்தம்.

"பீப்பா (பெரியப்பா) வா சீட்டுக்கட்டு விளையாடுவோம்" என்றான் தம்பியின் மகன்.

என்னிடமோ, அம்மாவிடமோ சீட்டுக்கட்டு இல்லை.

பீப்பா, ஓடிப்போய் வாங்கிவா என்றான் ஆங்கிலத்தில். அப்போது நேரம் மணி 21:00.

அப்பு ராசா... ஊர் உறங்கும் நேரமடா. கடை பூட்டியிருக்கும் என்றேன்.

இல்லை வாங்கி வா என்று தலைகீழாக நின்றான் விக்கிரமாதத்தனின் முதுகில் ஏறிய வேதாளமாய்.

Station rd. ஆல் நடந்து காலி வீதியை அடைந்து 45 நிமிடங்கள் காலிவீதியில் அலைந்து 2 சீட்டுக்கட்டுகளுடன் வீட்டில் ஆஜரானேன்.

சீட்டுக்கட்டைக் கண்டதும் "Not so bad பீப்பா" என்றான் பெரிய மனிதனைப்போல்.

"டேய் ... பீப்பா இல்லை... பெரியப்பா" என்றேன்.

சொல்லிப்பார்த்தான். அதுவும் பீப்பா என்றே வந்தது.

அம்மா விழுந்து விழுந்து சிரித்துக்கொண்டிருந்தார்.

"என்ன கண்டறியாத சிரிப்பு?" என்று கிழவியை ஒரு பார்வை பார்த்தேன்.

"என்ன வெருட்டிறியா" என்று எகிறினாள் கிழவி. உதவிக்கு இரண்டு பேரப்பிள்ளைகளும் சேர்ந்துகொண்டார்கள்.

காலம் எனக்குச் சாதகமாயில்லை என்பதால் அடங்கிப்போகவேண்டியதாயிற்று.

"பீப்பா வா "கழுதை" விளையாடுவோம்" என்றான் தம்பியின் மகன்.

"டேய்.... எனக்கு அது எப்படி விளையாடுறது தெரியாதடா.. ஆளை விடுடா.. அத்தையை கேளடா" என்று கெஞ்சினேன்.

"நீ ஒரு கழுதை" என்றான் ஆங்கிலத்தில். கிழவி கெக்கட்டமிட்டுச் சிரித்தாள். பேத்தியும் அவர்களுடன் சேர்ந்துகொண்டாள்.

தமிழிலும் ஆங்கிலத்திலும் எனக்கு "கழுதை எவ்வாறு விளையாடுவது" என்று விளங்கப்படுத்திக்கொண்டிருக்கிறான். நான் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

 கிழவி "உன்னை அடக்க இவன்தான் ;சரி " என்றபடியே  சிரித்துக்கொண்டிருக்கிறாள்.

முருகா.. இது நல்லாயில்லை ஆமா.