வாழ்க்கைத் தராசு


நீண்ட பதிவாகிவிட்டது. பொறுத்தருளுங்கள் நண்பர்களே.

நேற்று எனக்கு 50 வயது (30.09). சில மாதங்களாக 50 வயதுதன்று பதிவிடுவோம் என்று ஒரு பதிவினை எழுதிவந்திருந்தேன். எனினும் அதை விடுத்து இதையே இன்று பதியச்சொல்லியிருக்கிறது மனது.

வாழ்க்கை அழகிய மனமுள்ள மனிதர்களால் ஆனது.

எனது வாழ்க்கை இப்படியான மனிதர்களால் சூழப்பட்டிருக்கிறது என்பதை இன்று உணர்ந்துகொண்டிருக்கிறேன்.எனக்கு பிறந்தநாள் கொண்டாட்டங்களில் ஈடுபாடில்லை. எனவே நண்பர்கள் ஒழுங்கு செய்தாலும் தடுப்பதாகவே நினைத்திருந்தேன். அவ்வாறு ஒரு திட்டத்தை தடுத்துமிருந்தேன்.

ஆனால் நேற்று நண்பர்களின் திட்டம் படு கச்சிதம். நான் எதிர்பாராத இடத்தில் என்னை சிக்கவைத்திருந்தார்கள்.

”எந்தப் பலத்திலும் ஒரு பலவீனம் இருக்கும். அதைத் தேடு” என்று ஒரு பிரபல மனிதர் சொன்னதாக நினைவு.அதைத்தான் நண்பர்கள் செய்திருந்தார்கள்.

நேற்றைய நாளின்போது நண்பர்களின் உரை'யாடல்கள், குழந்தைகளின் அன்பு, இளையோரின் அன்பு, நம்பிக்கை ஆகியன என்னை மிகவும் நெகிழச் செய்திருக்கின்றன.

தனியே வாழ்கிறேன் என்பதற்காகவா இதை ஒழுங்கு செய்தார்கள், அல்லது அவர்களின் மனதில் இடம்பிடித்திருக்கிறேன் என்பதற்காகவா இதைச் செய்தார்கள்? சில கேள்விகளுக்கு பதில் தேடுவதில் அர்த்தமில்லை. இதுவும் அப்படியானதொரு கேள்வியே.

புகழும் நண்பனைவிட தேவையான திருத்தங்களை கூறும் நண்பர்கள் நம்பிக்கையானவர்கள். எனது நண்பர்கள் நம்பிக்கையானவர்கள். இந்த விடயத்திலும் நான் பாக்கியசாலி.

நான் என் மனதுக்கு சரி என்பதை சரி என்றும், பிழை என்பதை பிழை என்றும் எழுதிவந்திருக்கிறேன். இது என் உற்ற நண்பர்கள் தவறிழைத்தபோது அவர்களையும் பாதித்திருக்கிறது.

அதேபோன்று பொறுக்க முடியாத சில விடங்களைப்பற்றியும் அதிகம் எழுதியிருக்கிறேன். எனது சமூகத்தையும் விமர்சித்திருக்கிறேன். இதன் காரணமாக பல பெரிய மனிதர்களையும், நிறுவனங்களையும் விரோதித்துக்கொண்டிருக்கிறேன்.

இவையெல்லாம் கருத்தை கருத்தால் எதிர்கொள்ளமுடியாதவர்களுடனான உரசல்கள். நேருக்கு நேரே பேசும் மனிதர்களுடன் இப்படியான உரசல்கள் ஏற்படுவதில்லை என்பதனை கூறித்தான் ஆகவேண்டும்.

"விமர்சனமற்ற விசுவாசி " நான் அல்லன்.

உனது பலமும், பலவீனமும் உன் எழுத்துத்தான் என்பார் ஒரு நண்பர்.
ஆம்.எனக்கென்று சிறு வாசகர் கூட்டம் இருக்கிறது தான். இதனால் என் தலை வீங்கக்கூடாது என்பதில் நான் மிக மிக அவதானமாகவே இருக்கிறேன்.

அதேவேளை, என் எழுத்துக்களால் பல மனங்கள் காயப்பட்டிருக்கின்றன.
ஏற்றுக்கொள்கிறேன்.

அவற்றில் சில ”நாய், தனது காயங்களை ஆற்றிக்கொள்ள அவற்றை நக்கிக்கொள்வது” போன்ற நடவடிக்கைகளே.இருப்பினும் அப்படிக் கூறி அதன்பின்னால் ஒளிந்துகொள்ள மனம் மறுக்கிறது, இப்போதைய காலங்களில்.

ஆம், அவை என் தவறுகளே.

பழிக்குப்பழி பிரச்சனையை தீர்க்காது என்பதை மனம் உணரும்போது காலம் கடந்தோடி, சில மனிதர்களை இழந்திருப்பது புரிகிறது.

மனங்களை காயப்படுத்தாது, அவர்களை விரோதத்துடன் அணுகாது, அவர் மனங்களை எவ்வாறு வெற்றிகொண்டிருக்கலாம் என்று சிந்திக்கும் இந்தப் பக்குவம் அன்று என்னிடம் இருக்கவில்லை.

இன்று அது பற்றிய பிரக்ஞையாவது இருக்கிறது என்பது ஒரு முன்னேற்றமே.

மிக மிக அண்மையிலும் சிலருடன் பலமாய் விரோதித்துக்கொண்டிருக்கிறேன்.என்னை அதிகம் பாதித்தவிடயம் ”துரோகி” என்ற பழிச்சொல். இதற்காகவே ஒரு சில மனிதர்களுடன், நிறுவனங்களுடன் முடிக்கப்படாத கணக்கு ஒன்று இப்போதும் தொடர்ந்துகொண்டிருக்கிறது.
வேதனை என்னவென்றால் அவர்களும் ஈழத்தமிழர்களின் விடுதலையில் ஆர்வமுள்ளவர்கள். நானும் அதே எண்ணமுடியவன்.

அவர்கள் ஒரு பெரு நிறுவனத்தின் பின்னால் நிற்பவர்கள். நான் தனியே என் சிந்தனையின் அடிப்படையில் இயங்குபவன்.

அவர்களின் சிந்தனையோட்டத்தை நான் ஏற்றுக்கொள்ளவில்லை, அவர்களை விமர்சிக்கிறேன், கேள்வி கேட்கிறேன் என்பதற்காக ”துரோகி” என்பது எவ்வகையில் நியாயமாகிறது?

துரோகி என்பதற்கு இவர்கள் யார் என்று கூறி நான் நகர்ந்துகொள்ளலாம். அதுவல்ல என் எண்ணம். எத்தனை மனிதர்களை இப்படியான செயல்கள் புண்படுத்தியிருக்கின்றன என்பதையும் நாம் சிந்திப்பதில்லை.

சில காலங்களுக்கு மேற்கூறிய ஒருவர் ஆற்றிய உரை ஒன்றினை, நான் நகைப்புக்கிடமாக்கி விமர்சித்திருந்தேன். அவர் மனம் மிகவும் காயப்பட்டதாய் அறிந்தேன். உண்மையில் நான் அதை தவிர்த்திருக்கலாம். ஆனால் காலச்சக்கரம் பின்னோக்கிச் சுழல்வதில்லையே.

அதேபோலவே ஆதாரமற்ற அவதூறு பேசினார்கள் என்பதற்காவே இன்னும் இரண்டு கணக்குகள் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இப்படியான வேறு சில கருத்துமோதற் பிணக்குகளுடனும் வாழ்க்கை நகர்ந்துகொண்டிருக்கிறது.
மேற்கூறிய பிணக்குகளின் எண்ணிக்கையை ஒரு கையில் எண்ணமுடிந்தாலும், என் மனதை இப்போது நெருடும் விடயங்கள் இவைதான் என்பதையும், இதற்குள் எனது ஈகோவின் பங்கு அதிகம் என்பதையும் நான் மறைப்பதில் அர்த்தமில்லை.

கணியன் பூங்குன்றனார் கூறியது முற்றிலும் உண்மையே.

தீதும் நன்றும் பிறர்தர வாரா.

நேற்று ஒரு நண்பர் உரையாற்றும்போது பின்வரும்; கேள்வியினை எழுப்பினார்.

”எல்லோரையும் நாம் வெற்றிகொள்ளவேண்டுமா?”.

எத்தனை பெரிய தத்துவம் அந்த வார்த்தைகளினுள் ஒளிந்திருக்கிறது. இந்த வார்த்தைகளை மறக்கக் கூடாது என்று நினைத்திருக்கிறேன்.

மனிதனை மனிதன் வெற்றி கொள்வதால் மானுடம் தோற்கிறது என்பதை இவ்வளவு நாளும் நான் புரியாதிருந்தேனா?
இல்லை.

புரிந்தும் புரியாதது போன்று ஆணவத்தின் போர்வையை அணிந்து திரிந்திருக்கிறேன்.

எனக்கு ஏற்படுத்தப்பட்ட வலிகளுக்கு சமமான வலியை சிலருக்கு நான் கொடுத்திருக்கிறேன்.

இன்று, அது தவறு என்று புரிகிறது. வலியின் தார்ப்பர்யத்தை அனுபவித்து அறித்த பின்பும் சக மனிதனுக்கு வலியைக் கொடுத்த என் முட்டாள்தனத்தையிட்டு இன்று வெட்கிக்கத்தான் முடிகிறது.

இன்னொரு நண்பர் நான் ”இரு பக்கமும் கூரான கத்தி” போன்றவன் என்றார்
எதிரியையும் வெட்டும், கத்தியை பிடித்திருப்பவனையும் இந்த கத்திவெட்டும் என்பது அங்கு தொக்கி நிற்கிறது.

அத்தனை நுண்ணியமாக என்னை அவதானித்திருக்கிறார், அவர். அவரது கூற்று எனக்கு புதியதல்ல. அதுவே நான் என்பதை மிக நன்கு அறிவேன்.
மனதுக்கு தவறு என்று தோன்றுவதை நான் நேரடியாகவே பேசும் பழக்கத்தை கொண்டிருக்கிறேன். இது நான் நான் சார்ந்த நிறுவனமாய் இருப்பினும்கூட.
இந்தப் பழக்கத்தினையும் நான் சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும் என்றார், அவர்.

தொலைநோக்கில் பார்த்தால் அவர் கூற்றில் உண்மையிருக்கிறது. ஆனால் இங்குதான் நான் அதீதமாய் மனதுடன் போராடப்போகிறேன் என்பதும் புரிந்திருக்கிறது.

ஆனால் என் இலக்குகளை சென்றடையவேண்டும் என்றால் சாதூர்யம், புத்திசாலித்தனம், சகிப்புத்தன்மை என்பவற்றுடன் ”இருபக்கமும் கூரான கத்தி”யாக இருத்தலை தவிர்த்தலும் முக்கியம் என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.

ஆனாலும் சில இடங்களில் நாம் பேசித்தான் ஆகவேண்டியிருக்கிறது என்பதை நாம் மறுக்கமுடியாதல்லவா?

சிறுவயதுமுதல் முற்கோபம் என் முதல் எதிரியாய் இருந்திருக்கிறது. இப்போது சற்றாவது அதனை வெற்றிகொள்ளும் முதற்படியில் கால்வைத்திருக்கிறேன் என்று எண்ணத்தோன்றுகிறது.
இதைத்தான் ”வாழ்க்கையைக் கற்றல்” என்பதா?
.
இன்னொரு நண்பர் என் தனிமைவாழ்க்கையினையிட்டு கவலைப்பட்டார்.
விவாகரத்தான ஒரு வாழ்க்கையை உதறித்தள்ளிவிட்டு, புதிய வாழ்க்கை புதிய பக்கங்களுடன் தொடர்வதற்கு எனக்கு சங்கடமாயிருக்கிறது, பயமாயிருக்கிறது.

குழந்தைகள் மீதான குற்றவுணாச்சி என்னைத் தொடரும் ஒரு கரிய நிழல்.
தோல்வியுற்ற தந்தை, என்பதை நான் ஏற்றுக்கொண்டிருக்கிறேன்.
அதனுடன் சமரசமாகிக் கொள்வதுதான் மிகச் சிரமமாய் இருக்கிறது.
அதனாலோ என்னவோ கடந்துபோகும் அனைத்துக் குழந்தைகளிலும் எனது குழந்தைகளைக் காணமுடிகிறது.

நின்று நிதானிதது அவர்களை பார்த்து ரசிக்கிறேன்.அவர்களில் நான் கரைந்துபோகிறேன். மனம் நிறைந்துபோகிறது.

வளர்ந்த மனிதர்களிடம் நம்பிக்கையை பெறுவது மிக இலகு. அதற்கு பொய்யுரைத்தலும் தாராளமாக உதவும். அதே நம்பிக்கையை குழந்தைகளிடம் பெறுவது மிகக் கடினம். பொய் என்பதை அவர்கள் மிக எளிதாகவே கண்டுபிடித்து விலகிவிடுவார்கள்.

என்னிடம் குழந்தைகள் மிகுந்த நம்பிக்கையுடன் ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்கள் தரும் மன அமைதியும், உற்சாகமும் என் வாழ்வின் மீதான அயர்ச்சியினை நீர்த்துப்போகச்செய்கிறது.

இன்று, முதன் முதலில் வந்த வாழ்த்துச் செய்தி ஒரு நண்பரின் மகளுடையது. அவள் வெளிநாடு ஒன்றிற்கு பாடசாலைச் சுற்றுலா சென்றிருந்த போதிலும், நானும் அவளும் சேர்ந்தெடுத்த ஒரு படத்துடன் வாழ்த்து அனுப்பியிருந்தாள். பனித்துப்போனது மனது. அவளுக்கும் என் இளையமகளுக்கும் ஒரே வயது.

இன்னொருத்தி தன் தந்தையின் ஸ்தானத்தில் என்னை வைத்து உரையாற்றினாள், நேற்று. அவளுக்கு என் மூத்தவளின் வயது.
இப்படியான நேரங்களில் நான் பெரும் அதிஸ்டசாலியாய் உணர்வது உண்டு.

வாழ்க்கைத் தராசு, காலத்துக்குக் காலம் ஏறி இறங்கினாலும் அது இறுதியில் நியாயமாகவே நிறுக்கும் என்ற நம்பிக்கை எனக்குண்டு.

இன்றைய நாளை அழகாக்கிய அனைத்து நண்பர்களுக்கும் எனது மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

பரலோகத்தில் இருக்கும் ஒஸ்லோ முருகன் உங்களை ஆசீர்வதிப்பாராக

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்