அமோகமாக வருவாயடி

 இன்று ஒருசாப்பாட்டுக் கடையில் எகாந்தமான மனநிலையில் உட்கார்ந்திருந்தபடியே இஞ்சி பிளேன்டீயை வாயில் வைத்து உறுஞ்சுகிறேன்..”சஞ்சயன் மாமா” எனறு ஒரு பழக்கமான குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். பல வருடங்களாக சந்திக்காத ஒருத்தி நின்றிருந்தாள். கர்ப்பமாய் இருப்பது தெரிந்து.

”அடியேய் நீயா? என்னடி ஆளைக் கனகாலமாகக் காணவில்லை” என்றேன்.
”ம்.. உங்களையும்தான்” என்றாள்.

”என்னடி புதினம், கொப்பன் எப்படி?” என்றேன்.

”இருக்கிறார்.. அவருக்கென்ன..”

இப்படி சில நிமிடங்கள் உரையாடியபின் ”மாமா எனக்கு கலியாணம் முடிஞ்சுது” என்றாள் வயிற்றைத் தடவியபடி.

”யாரந்தப் பாவி?”

வெட்கப்பட்டு சிரித்தாள்.


”அடியேய்... கலியாணம்கட்டினால் யாரொன்றாலும் பாவிதான்”

”மாமா .. ” என்றாள் கடுமையாய். பின்பு தன்னுடன் படித்தவனாம் சுத்தத் தமிழனாம் என்றாள்.

ஏற்கனவே ஒரு குட்டி போட்டிருக்கிறார்களாம். கிடாய்க் குட்டி. இப்போது இரண்டாவது தயாரிப்பில்.

”எங்கே வேலை செய்கிறாய்? இது நான்.

ஒரு பெரிய கம்பனியில் சிவில் என்ஜினியராக வேலை செய்கிறாளாம். என்றாள்.

சற்று நேரம் பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு வாழ்க்கைபற்றித் திரும்பியது.

மாமா! இந்த சம்மர் லீவுக்கு மாமி எங்களிட்ட வாறா. அதுதான் யோசனையாய் இருக்கு என்றாள்”

”அதுக்கு என்னத்துக்கு பயப்படுறாய்?”

”உங்களுக்கு உங்கட மாமியில பயம் இருக்கவில்லையா?”

”அடியேய்! மாமியும் நானும் அவ்வளவு பயங்கர ஒற்றுமை.. நாயும் கல்லும்மாதிரி” என்றேன்.

பகிடி அவளுக்கு புரியவில்லை. புரியவைத்தேன். விழுந்த விழுந்து சிரித்தாள்.
உனக்கு, மாமியுடன் என்னடி பிரச்சனை என்று கேட்டேன்.

”எனக்கு மாமியை அவ்வளவு பிடிக்காது. அவ அவரில எல்லாத்துக்கும் பிழைபிடிப்பா”

” அட.. அப்ப உனக்கு உதவிக்கு ஒரு ஆள்வருது என்று சொல்லு என்றபடியே கண்ணடித்தேன்”

”கதையைக் கேளுங்க.. விசர்ப்பகிடி விடாம”

”ம்”

”அவருக்கு தன்ட அம்மாவோட ஒரே சண்டைவரும்”
”ம்”

”இவர் எடுத்த பொருட்களை எடுத்த இடங்களில் வைக்கமாட்டார். உடுப்புக்களை கண்ட இடத்தில் போடுவார். குசினியை தலைகீழாக்குவார். வீடு குப்பையாய் இருக்கும். ஆனால் மாமி படு சுத்தம்”

”அடியேய் அவன் ஆம்பிளைச் சிங்கமடி, அப்படித்தான் இருப்பான் என்றேன் எள்ளல் கலந்த குரலில். அவள் அதைக் கவனிக்கவில்லை.

”எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மாமிக்கு கொதி வரும்”

”ம்”

”பிறகு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் சண்டைதான்”

”அப்பிடி சண்டை நீங்க யாருடனும் பிடித்திருக்க மாட்டீங்க”

”ம்”

என்மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்து எனக்கு பரிதாபமாக இருந்தது.

”சரி அம்மா மகன் சண்டையால் உனக்கு என்னடி பிரச்சனை ?”

அய்யோ மாமா.. இங்கதான் பிரச்சனையே இருக்கு.

”அவங்க சண்டை பிடிப்பாங்க. நான் ”ஙே” என்று பார்த்துக்கொண்டிருப்பேன். ஏவுகணை மாதிரி வாா்த்தைகள் இரண்டு பக்கமும் பறக்கும். மாமி அழுவா.

பிறகு மருமகளே .... நான் செய்தது பிழையா என்று என்னைக் கேட்பா. அவரும் செல்லம் நான் செய்தது பிழையா என்பார்? அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுறது இவருக்கு பிடிக்காது..”

”ம்... இப்ப பிரச்சனை விளங்குது” என்றேன்.

”நான் அவருக்கு சப்போர்ட் பண்ணினால் மாமிக்கு கோவம் வரும். பிறகு ஒரு 2 நாளைக்கு முகத்தை தூக்கிவைத்துக்கொண்டிருப்பா. 2வது நாள் இன்னொரு சண்டை வரும். அப்பயும் நான் அவருக்கு சப்போட் பண்ணினால் அடுத்த சண்டை வரும்வரையில் மாமி முகத்தை தூக்கிவைத்துக்கொண்டிருப்பா. எனக்கு என்ன செய்யுறது என்று தெரியவில்லை மாமா”

”என்னடி செய்யப்போகிறாய்”

யோசித்தபடியே 4 -5 தோசைகளை ஒரு கை பார்த்தாள். பின்பு... தோசையை வாய்க்குள் மென்றபடியே.. ”மாமி சொல்லுறது, செய்யுறது எல்லாம் சரி" என்று சொல்லப்போறன்.

”அடியேய்... அரசனை நம்பி புருசனை கைவிடாத அவன் உன்னில கோபப்படப்போறான்”

”மாமா.. மாமியை சமாளிக்க எனக்குத் தெரியாது.. ஆனால் அவர் கிடந்தார்.... அவரும் அவர்ட கோபமும். நம்மட ஆள். எப்படியும் நம்மளிட்ட சரண்டர் ஆகத்தானே வேண்டும். அப்ப அவரை சமாளிக்கலாம்” என்றாள்.

”அமோகமாக வருவாயடி” என்று ஒஸ்லோ முருகனின் சார்பில் வாழ்த்துக்கூறிப் புறப்பட்டேன்.

எனதருமை ஆண் சமூகமே ஐ ஆம் வெரி வெரி சாரி.

4 comments:

 1. இப்படி விட்டு கொடுத்துவிட்டீர்களே! :(

  ReplyDelete
 2. சிறந்த பகிர்வு

  புதிய வலைப்பூவில் இணைய வாருங்கள்
  இவ்வலைப்பூவில் நான் இதுவரை பேணிவந்த ஆறு வலைப்பூக்களை ஒன்றாக்கிப் பேணுகின்றேன்.
  http://www.ypvnpubs.com/

  ReplyDelete
 3. என்ன சார் புதிய பதிவுகளைக் காணவில்லை.

  ReplyDelete
 4. உங்களது ஆக்கங்களை ரசித்துப் படிப்பவன் என்ற முறையில் ஒரு வேண்டுகோள் - உங்கள் ஆக்கங்களை யாழ்.கொம் இல் தரவேற்றலாமா? மூலம், ஆக்கம் நிச்சயமாக குறிப்பிடப்படும்.

  ReplyDelete

பின்னூட்டங்கள்