ஆற்றாமைக் கோபம்

மூன்று நாட்களாக ஒரு கசப்பான உண்மையின் மீது நடந்துகொண்டிருக்கிறேன். மனம் ஏமாற்றப்பட்டிருக்கிறேன் என்ற  ஆற்றாமையின் கோபத்தில் உழன்றுகொண்டிருக்கிறது. தூங்கினாலும், விழித்திருந்தாலும் இதுவே நினைவாய் இருக்கிறது. மனம் படபடக்கிறது, நிதானத்தை இழந்து பேயாட்டம் ஆடுகிறது. 

தோள் கொடுப்பவனைவிட, காலை வாரிவிடுபவனைக் கொண்டாடும் உலகம் இது என்று பல முறை அனுபவப்பட்டிருந்தாலும், மீண்டும் மீண்டும் அதே புதைகுழியில் விழுந்தெழுகிறேனே என்று என்மீதே எனக்கு வெறுப்பாய் இருக்கிறது. இது மனதினுள் ஒருவித ஆற்றாமைக்கோபத்தை கொந்தளிப்பு நிலையில் உருவாக்கியிருக்கிறது.

சீ .. உன் பெறுமதி இவ்வளவுதானா, என்று உள்ளுணர்வு அரற்ற, மனது உதாசீனத்தின் வலி எத்தகையது என்பதை உணர்ந்து, தூக்கி எறியப்பட்ட அச்சாணிபோன்றதொரு உணர்வில் அமைதியற்று கிடக்கிறது.

இது இந்தக் கதையின் flashback. இனித்தான் கதையே தொடங்குகிறது.

நண்பர் ஒருவர் கால்முறிந்து நடக்கமுடியாது இருக்கிறார். அவர் ஒரு கடைக்குச் செல்லவேண்டும் என்றார். அவரது வாகனத்தில் அழைத்துப்போனேன்.

வாகனத்தரிப்பிடத்தில் இருந்து கடை அதிக தூரமாய் இருந்தது. எனவே கடைக்கு அருகில் வாகனத்தை நிறுத்தி நண்பரை இறக்கிவிட்டு நான் வாகன தரிப்பிடத்தில் நின்றிருந்தேன். தனது வேலை முடிந்ததும் நண்பர் அழைத்தார். வாகனத்தை  கடைக்கருகில் செலுத்தினேன். பாதை குறுகலானது. கடைக் கடந்து 30 மீற்றர்கள் மட்டுமே செல்லலாம்.

நண்பர் தனது நாலுகால்களினாலும் வந்து ஏறிக்கொண்டார். சற்று இருட்டியிருந்ததனாலும், தெருவில் பலர் நடமாடியதாலும் வாகனத்தை றிவர்ஸ் ஆக செலுத்த விரும்பவில்லை. எனவே வானத்தை  முன்னால் இருந்த சிறிய இடத்தில் திருப்பிக்கொண்டிருந்தேன். சிறிய இடமாகையால் முன்னே வந்து பின்னே சென்று மீண்டும் முன்னே வந்து  என்று சற்று சிரமப்பட்டு வாகனத்தை திருப்பிக்கொண்டிருந்தேன்.

இந்த இடத்தில் இரு நோர்வேஜிய சீனியர் சிட்டிசன்கள் இங்கு வாகனத்தை செலுத்த முடியாது என்பதுபோல சைகை செய்தும், மற்றைய மனிதர்களுக்கு  வாகனத்தைக் காட்டி எதையோ  கூறியதைக் கண்ட  எனது நிதானம் நோர்வேயின் எல்லையை கடந்து பறந்துபோனது.

எனக்கு  இரத்தம் கொதிப்பதைக் கண்ட நண்பர் ”சும்மா இரும், சும்மா இரும்”என்று அடக்கினார்.

”வெள்ளையின்ட திமிர அடக்காவிட்டால் சரிவராது, நீர் சும்மா இரும் என்றேன், நண்பரிடம் கடுமையாக.
ஏதும் கதைத்தால் வாகனத்தால் இறக்கிவிடுவானோ என்ற பயத்தில் நண்பர் பேசாதிருந்தார்.

கதைவைத்திறந்து இறங்கி நண்பரின் ஊன்றுகோலை எடுத்து வெளியே காட்டி, வாகனத்தினுள் நடக்கமுடியாத ஒருவர் இருக்கிறார் என்றேன்.

நண்பர் ”வேண்டாம், வேண்டாம், பாவம், வயதுபோன மனிசி” என்று கெஞ்சினார்.  ”மவனே வீட்டுக்கு நடந்துபோவாய்” ... என்ற ஒரு பார்வையில் அவரை அடக்கினேன்.

கையில் இரண்டு ஊன்றுகோல்களுடன், சிவந்த கண்ணுடன், மொட்டை மினுங்க போர்க்கோலம் பூண்டு நின்றிருந்த கரிய இராவணணை அவர்கள் கண்டிருக்கவில்லை என்று அவகளின் முகம் கூறியது. கடைத்தெரு அதிர்ந்துகொண்டிருந்தது.

”கறுப்பன் என்ற இளக்காரமா உனக்கு? எங்களுக்கும் சட்டம்தொரியும், நடக்கமுடியாதவர் இருப்பதாலேயே இங்கு வந்தேன். தவிர இங்கு வாகனம் செலுத்தப்படாது என்று எதுவித அறிவித்தலும் இல்லை.” வாயில்தூசணம் சீழ்போல் வடிந்தது. வாகனத்தின் கதவினை அறைந்து சாத்திக்கொண்டேன்.

நண்பர் கதவு களன்றுவிட்டதா என்று நிட்சயம் பயந்திருப்பார். அவர் எதுவும் பேசவில்லை.

காரை அதிவேகத்துடன் செலுத்தினேன். எனது சொற்களைப்போன்று சில்லின் கீழ் அகப்பட்ட சிறுகற்கள் சிதறிப் பறந்தன.

நண்பர் முடிந்தளவுக்கு என் கவனத்தை ஒருமுகப்படுத்த முயன்றார். அவருக்கு தனது மற்றைய காலை காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்ற பயம் வந்திருக்கலாம்.

இது நடந்து முடிந்து 10 நிமிடங்களின் பின்... மனச்சாட்சி எழும்பி நின்றி முகத்தில் அறைந்துகொண்டிருக்கிறது. நானும் முடியுமானவரையில் அடி என்று விட்டிருக்கிறேன்.

எங்கோ  காட்டவேண்டிய கோபத்தினை, நியாயமின்றி இரண்டு முதியோர்கள்மேல் காட்டியிருக்கிறேன். நான் இன்னும் முதிர்ச்சியடையவில்லை என்பது பரிந்திருக்கிறது. மனம் கூனிக்குறுகியிருக்கிறது.

எப்போது இந்த சினம், கோபம், ஆத்திரத்தை அடக்கியாளப்போகிறேன்?

அப்பா உனக்கு பைத்தியம்

2002ம் ஆண்டு என்று நினைக்கிறேன்.எனது இளையமகளுக்கு ஒன்றரை இரண்டு வயதிருக்கும்.

அந்நாட்களில் அவள் எதை, எப்போ, எப்படி, எதற்காக செய்வாள் என்று எதிர்பார்க்க முடியாது. கண்ணிமைக்கும் நேரத்தில் வேலையை கச்சிதமாக முடித்துவிடுவாள்.

வேலையை முடித்துவிட்டு சிரித்துக்கொண்டிருப்பாள். அந்தச் சிரிப்பில் எனது கோபம் கரைந்துபோகும்.

ஒரு நாள் காலை ஆசை ஆசையாய் ஒரு புதிய மடிக்கணிணி வாங்கி வந்திருந்தேன். முத்தமகள் பெட்டியை திறந்து கணணியை எடுக்க உதவினாள். இளையவள் பெருவிரலைச் சூப்பியபடியே தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டிருந்தாள். 

நிலத்தில் உட்கார்ந்திருந்தபடியே கணிணியை வெளியே எடுத்து, அதைச்சுற்றி இருந்த பொலித்தீன் பையை அகற்றி கணிணியை இயக்கினேன். கணிணி கிர்ர்ர் என்று உயிர்த்தது.

அருகில் இருந்த தேனீர் கோப்பையை எடுத்து வாயில்வைத்து ஒரு செக்கன் கண்ணை மூடி உறுஞ்சுகிறேன்.

அப்பா... பூக்குட்டீடீ என்று முத்தவள் கத்தும் சத்தம் கேட்கவும், கணிணியின் மீது இளையவள் தனது இனிப்புப் பானத்தை கவிட்டு ஊற்றவும் சரியாக இருந்தது.

கண்ணிமைக்கும் நேரத்தில் கணிணியை எடுத்து தலைகீழாகப் பிடித்தேன். கணிணி ப்ஸ்ஸ் என்ற ஒலியுடன் தனது மூச்சை நிறுத்தியது. கணிணியில் இருந்து மஞ்சல் நிற இனிப்புப்பானம் வழிந்துகொண்டிருந்தது.

இளையவள் என்னைப் பார்த்து சிரித்துக்கொண்டிருந்தாள்.

இனிப்புப் பானமாகையால் பிசு பிசுப்பாய் இருக்கும், ஒட்டுப்படும் என்பதால் நன்றாக நீரில் பிடித்து 2 -3 நாட்கள் காயவை என்றார் எனது நேர்வேஜிய நண்பர் ஒருவர். அப்படியே செய்தேன். 3 வது நாள் யேசுநாதர் உயிர்த்துது போன்று என் கணிணியும் உயிர்க்கும் என்று நினைத்தபடியே கணிணியை இயக்கினேன்.

கணிணி தான் யேசுநாதர் அல்ல என்பதை நிரூபித்தது.

நான் கவலையில் படுத்திருந்தேன். ஆனால் பூக்குட்டி அதைப்பற்றி மட்டுமல்ல எதைப்பற்றியும் கவலை இன்றி என் மீது ஏறியிருந்து விளையாடிக்கொண்டிருந்தாள்.

இதே போன்று இன்னொரு கதையும் இருக்கிறது.

அந் நாட்களில் எனக்கு தூக்கம் வரும்நேரங்களில் அவளுக்கு விளையாடும் ஆசை வரும். எனக்கு விளையாட ஆசை வரும் நேரங்களில் அவளுக்கு தூக்கம் வரும்.

ஒரு விடுமுறை நாள், காலை 6 மணியிருக்கும். என்னை விளையாட அழைத்தாள். அப்பா சற்று தூங்கிவிட்டு வருகிறேன் என்றுவிட்டு சற்று அயர்ந்தபோது அவள் கட்டிலால் இறங்கி விளையாடிக்கொண்டிருந்தாள்.

சற்று நேரத்தில் அப்பா.. அப்பா.. என்று அவள் அழைக்கும் சத்தம்கேட்டது. கண்விளித்துப்பார்த்தேன்.

அவள் எனது கண்ணாடியை முறித்து இரண்டு கைகளிலும் கண்ணாடியின் அரை அரைப் பகுதிகளை வைத்திருந்தாள்.

அப்போதும் அவள் சிரித்துக்கொண்டிருந்தாள்.

13 வருடங்களின் பின்னான இன்று காலை தவறுதலாக எனது கண்ணாடியின் மீது உட்கார்ந்து கொண்டதால் எனது கண்ணாடி உடைந்துபோயிற்று.

இன்று பூக்குட்டி இருந்திருந்தால் ”அப்பா உனக்கு பைத்தியம்” என்று கூறி விழுந்து விழுந்து சிரித்திருப்பாள்.

வாழ்வின் அர்த்தங்கள்

ஒரு பின்மாலைப் பொழுது. சற்று அறிமுகமான ஒருவர் நோர்வே வந்திருந்தார்.

அவரது பால்யத்து நண்பர் நோர்வேயில் வாழ்கிறார். அவரிடம் அழைத்துப்போய்கொண்டிருந்தேன். அவர்களுக்கு அறுபது வயதிருக்கலாம்.

அவர்கள் ஒருவரை ஒருவரை கண்டதும் "வாடா வா வா .. எப்படி இருக்கிறாய்? என்று விசாரித்தபடியே அமர்ந்து பேசத்தொடங்கினார்கள். நான் கைத்தொலைபேசியை நோண்டத்தொடங்கினேன்.

நாம் அங்கு அதிகமாக 30 நிமிடங்களே நிற்பது என்று ஒப்பந்தம்.

சிறுநேர உரையாடலுக்கு நண்பர் வருகிறார் என்பதால் விஸ்கியும், பியரும் மேசையில் இருந்தது. மிக்சர், முட்டை என்று உணவுவகைகளும் இருந்தது.

”வா வா நேரமில்லை... கெதியா தொடங்குவம்” என்றார் வீட்டுக்காரர்.

என்னோடு வந்தவர் எதிர்ப்புத்தெரிவிக்கவில்லை.

வீடுக்கார அக்கா ”இவங்க ரெண்டுபேரும் சோர்த்தால் விடியும்” என்று கூறி எனது வயிற்றில் புளியைக் கரைத்தார்.

வாகனம் ஒடுவதால் நான் விஸ்கியையே பியரையோ தொடமுடியாது.

விஸ்கிப்போத்தல் என்னைப்பார்த்து நக்கலாக ” ஏலுமென்றால் தொடு பார்ப்போம்” என்று கூறிச் சிரிப்பதுபோல் உணர்ந்தேன்.

நேரம் ஒரு மணித்தியாலத்தை கடந்து, இரண்டு, மூன்று மணித்தியாலங்களைத் தொட்டது.
 
70ம் ஆண்டுகாலத்துக் கதைகள், அவர்களது பல்கலைக்கழகக் கதைகள், குடும்பக் கதைகள், காதற்கதைகள், பேராசியர்களுடனான மோதல்கள் என்று பல பல கதைகளை இருவரும் ஆள்மாறி ஆள் எனக்கு சொன்னார்கள்.

இடையிடையே நான் சொல்கிறேன். நீ வாயை மூடு.. ஒரே நீ தான் கதைக்கிறாய், நீ அதை மறந்துவிட்டாய் என்று சிறுபிள்ளைகள்போன்று சண்டைவேறு.

ஒருவாறு புறப்படும் நேரம் வந்தது.

இருவரை ஒருவர் பரஸ்பரமாக ”கனக்க குடிக்கப்படாது என்ன” என்று அறிவுத்தினார்கள். கையை பல தடவைகள் குலுக்கிக் கொண்டார்கள்.
நண்பரின் மனைவியிடம் அன்பாக விடைபெற்றுக்கொண்டார் நான் அழைத்துவந்தவர்.

குளிசைகளை போடு, சிகரட் கனக்க குடிக்காதே, திரும்பவும் கவிதை எழுது இப்படி பரஸ்ரம் அறிவுரைகள்.

”சரி வா... நீ வெளிக்கிட முதல் சேர்ந்து ஒரு சிகரட் குடிப்பம்”

நடு இரவு. முழு நிலா, வெளியே குளிர். பல்கணியில் நின்றபடியே பெரிதாய் சிரித்துக் கேட்கிறது. அக்கா ஓடிச் சென்று... ” அக்கம் பக்கத்தில ஆட்கள் படுக்கிறதில்லையோ” என்கிறார்.

மீண்டும் வாசலுக்கு வருகிறார்கள். ”மச்சான் பொயிட்டுவாறன்” என்கிறார் நண்பர்.

ஒருவரை ஒருவர் அணைத்துக்கொண்டு முதுகில் பெரிதாய் பல தடவைகள் தட்டிக்கொள்கிறார்கள்.

மெளனமாய் அணைத்தபடியே நிற்கிறார்கள். அப்படியே ஓரிரு நிமிடங்கள் கரைந்துபோகின்றன.

என்னால் பேசமுடியவில்லை. ஒருவித அன்பின் பிணைப்பில் நானும் கட்டுண்டு கிடக்கிறேன். என் கண்களும் கலங்கிப்போகின்றன. வீடு முழுவதும் மௌனம். பெரு மௌனம். அக்காவும் அவர்களைப் பார்த்தபடியே நிற்கிறார்.

ஒருவரை ஒருவர் மற்றையவரின் மொட்டையில் முத்தமிட்டு ”கவனமடா” என்று கூறி விடைபெற்றுக்கொண்டார்கள்.

எனது நண்பர் வாகனத்தினுள் ஏறிக்கொண்டார். வாகனம் நெடுஞ்சாலையில் பயணித்துக்கொண்டிருந்தது.

அவன் என்ட பெஸ்ட் ப்ரெண்ட் ... அவனைப்போன்று ஆசிரியன் இல்லை.. அவன் ஒரு ஜீனியஸ் என்றார்.

அவர் கண்கள் கலங்கியிருந்தது. அவர் மனம் பழைய நினைவுகளில் மூழ்கிக்கிடக்கிறது என்று புரிந்துகொண்டேன்.

பால்யத்துக் காதல்கள்

ஏறத்தாள 36 வருடங்களுக்கு முன் அம்மாவுக்கு மீண்டும் ஏறாவூர் வைத்தியசாலைக்கு மாற்றம் கிடைத்து. 8 வருடங்களின் பின் மீண்டும் ஏறாவூருக்கு குடிவந்திருதோம். நான் உனது பதின்மக்காலங்களின் ஆரம்பத்தில் இருந்தேன்.

ஊர் புதிது. நண்பர்கள் புதிது. புதிய புதிய தமிழ், சிங்கள, இஸ்லாமிய நண்பர்கள் மெது மெதுவாக அறிமுகமாகிய காலம். வயதுக்கு மீறிய சினேகம் பல விடயங்களைக் கற்றுத் தந்திருந்தது. 14 வயதுக்குரிய சேட்டைகள், திமிர் தேவைக்கு அதிகமாகவே இருந்தது.  ஊரே அழகாயிருக்க, எனது அப்பா மட்டுமே எனக்கு வில்லனாய் இருந்த காலம் அது.  கடைசிவரையில் நமக்குள் ஒத்துவரவே இல்லை.

எனது இரண்டாவது, மூன்றாவது எதிற்பாற்கவர்ச்சி  (பால்யக் காதலாயுமிருக்கலாம்) இந்த நாட்களிலே நடந்தது.

(முதலாவது எதிர்பாற்கவர்ச்சிக் கதையை வாசிக்க இங்கே செல்லவும் http://visaran.blogspot.no/2010/10/33.html)

பாடசாலை மட்டக்களப்பு நகரத்தில் இருந்தது.  ஏறாவூரில் பேரூந்ததுப் பயணம். நண்பர் கூட்டம், அதிலும் ஆர்ப்பாட்டமாய் குழப்படி, சேட்டைபண்ணும் நான், என்றிருந்த ஒரு காலத்தில் ஒரு நாள், பாடசாலை முடிந்து பேரூந்தில் திரும்பக்கொண்டிருக்கிறேன். முதுகின்பின்னால் யாரோ என்னை  ஊடுவிப்பார்ப்பது போன்ற பிரமை அறிந்து திரும்பிப் பார்க்கிறேன். இரண்டு கண்கள் என்னையே பார்த்துக்கொண்டிருந்தன. நான் பார்ப்தைக் கண்டதும் தலையைக் குனிந்து, உதட்டைக் கடித்துக்கொண்டாள்.

அது யாா் என்பது தெரியவில்லை. ஆனால் எங்கள்  பேரூந்துத் தரிப்பு நிலையத்தில் நின்று ஏறுபவள் என்பது புரிந்தது.அவளின் பாடசாலைச் சீருடையில் இருந்து அவள் எங்கு படிக்கிறாள் என்பதையும் அறிந்துகொண்டேன். அத்துடன் அவளை மறந்தும் போனேன். அதற்கும் ஒரு காரணம் இருந்தது.

பேரூந்தில் பாடசாலைக்கு சென்றுவரத்தொடங்கிய காலங்களில்  மட்டக்களப்பு சென். சிசிலாயா கொன்வன்ட் பாடசாலை சீருடையில் அதிகமாய் எங்களது பேரூந்தில் ஒருத்தி பயணிப்பாள். அவள் அப்போது 8ம் வகுப்பு படித்தாள். நான் 10ம் வகுப்பு  அவளைக் கண்டால் இரத்தம் அதிகமாய் உடலுக்குள் பாய்ந்தது. உடம்பின் பாரம் குறைந்து, காற்றில் நடப்பதுபோன்று உணர்வு  ஏற்படும். அவளைப் பார்த்துக்கொண்டே இருக்கவேண்டும் போலிருக்கும். அவளை பேரூந்தில் காணாவிட்டால் அடுத்த பேரூந்துக்காக காத்திருக்கத்தொடங்கினேன்.

அவள் பேருந்தால் இறங்கும் வரையில் அவளுடன் பயணித்து, அவளின் வீடு சித்தாண்டியில் இருக்கிறது என்று அறிந்துகொண்டேன். மறுநாள் அவளது தரிப்பிடத்திற்குச் சென்று அங்கிருந்து அவளுடன் ஒரே பேரூந்தில் பயணித்தேன்.

ஆனால் அவளுக்கோ நான் ஒருவன் இந்த உலகத்தில் இருக்கிறேன் என்ற  சிந்னையே இல்லை. ஏறத்தாள 5 - 6 மாதங்கள் பித்துப்பிடித்து அலைந்தேன். அவள் கண்டுகொள்ளவே இல்லை.

இந்த நேரத்திலதான் மற்றையவளின் பார்வைகள் என்னை ஏதோ செய்யத்தொடங்கின. முதல்  2 - 3 முறை நான் சிரத்தையே எடுக்கவில்லை.  அதன்பின் அவள் அடிக்கடி நினைவில் வந்தாள். கனவில் வந்தாள். பாடப்புத்தகத்தை திறந்தால் அதற்குள்ளும் நின்றாள். அவளைப் பார்க்கவேண்டும் என்று மனம் அடித்துக்கொள்ளும்.  அவள் பார்க்காத நேரங்களில் அவளைப் பார்த்தேன். அவள் பார்க்கமாட்டாளா என்று மனம் ஏங்கும். அவள் அந் நாட்களில் என்னை பார்ப்பதை நிறுத்தியிருந்தாள்.

மனம் தவியாய் தவித்தது.  அவளுக்கு ஒரு கடிதம் கொடுப்பது என்று முடிவெடுத்தேன்.  கடிதம் எழுதியாகிவிட்டது. அக்காலங்களில் வெளிநாடுகளுக்கு அனுப்பும் கடிதஉறைகளின்  கரைகளில் சிவப்பு நீலம் நிறமாயிருக்கும். அவை அழகாய் இருக்கும் என்பதால் அப்படியான ஒரு கடித உறையை வாங்கிக்கொண்டேன்.  மெல்லியதொரு தாளில் கடித்தை எழுதி உள்ளே வைத்தேன். வாசமாய் இருக்கட்டுமே என்று சற்று   ”வாசனைப் பௌடர்”ஜ கடத உறையினுள் இட்டேன்.  அப்போதும்  மனம் திருப்தியுறவில்லை.  புத்தகக் கடையில் ஸ்டிக்கர்கள் இருந்தன.அவற்றில் இருந்த அழகியவற்றை தெரிவுசெய்து வாங்கி கடித உறைக்குள் இட்டேன்.

இனி கடிதத்தைக் கொடுக்கவேண்டும். அவளோ நண்பிகளுடன் வருபவள். பல நாட்கள் அவளைப் பின்தொடர்ந்தேன். இறுதியில் ஒரு நாள் தனியே வந்தகொண்டிருந்தாள். சைக்கிலில்  ஏறி அவளைக் கடந்தவுடன்  அவளைநோக்கி சைக்கிலைத் திருப்பினேன். அவளையடைந்ததும் ”க்ம்ம்” என்று கனைத்தேன். அவள் திரும்பவே இல்லை. அவளைக் கடந்துசென்று தவறுதலாக கடிதத்தை தவறவிடுவதுபோன்று தவறவிட்டுவிட்டு வேகமாய் சென்று வேறு வீதியால் வந்தபோது கடிதம் அனாதையாய் வீதியில் கிடந்தது.

அதன் பின்ன்னா சில காலங்களில் அவளுக்கு கல்யாணமானது. அடுத்தடுத்து 2 - 3 குட்டிகள் போட்டாள். கையில் ஒன்று, இடுப்பில் ஒன்று, வயிற்றில்  ஒன்று என்று அவள் நடந்த காலங்களும் இருந்தது. அந்நாட்களில் அவள் மீண்டும் என்னைக் கண்டால் புன்னகைப்பதுபோல் எனக்குத்தோன்றியது.

அனாலும் நான் புன்னகைத்ததில்லை.

அதற்கு காரணம்.
பேரூந்தில்  இன்னொருத்தி என்னைப் பார்த்து கண்ணால் பேசியதும்,  அவளுக்கு நான் கண்ணால் பதில் சொல்லத் தொடங்கயிருந்ததும்தான்.

குறுகாக்கால போவார்

கடந்த  சனிக்கிழமை. அபகஸ் வகுப்பு இருக்கிறது. எனவே வகுப்பு நடைபெறும் இடத்திற்கு சற்று நேரத்துடனனேயே வந்து, அருகில் இருக்கும் தேனீக்கடையில் ஆப்பிள் கேக், லெமன் தேனீர் ஆகியவற்றுடன் ஒரு மூலையில் குந்தியிருந்து இன்று கற்பிக்கவேண்டிய விடயங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

அப்போது தேனீர்க் கடைக்குள் இரு ஆபிரிக்க நாட்டவர்கள் வந்தனர். கடையை ஒரு நோட்டம் விட்டனர். நான் அவர்கள் தேனீர் அருந்த வந்திருக்கிறார்களாக்கும் என்று நினைத்தபடியே எனது புத்தகத்தில் கவனத்தை செலுத்தினேன்.

சற்று நேரத்தில் என்னைப் பார்த்து யாரோ ” அஸ்ஸலாமு அலைக்கும் ” என்பது கேட்டது.

நானும் ” அலைக்கும் அஸ்ஸலாம்” என்றேன்.

”கயை கனயமா யசக பலத மாற பரக்” என்று ஏதோ ஒரு மொழியில் உரையாடத்தொடங்கினார் ஒருவர்.

நிமிர்ந்து பார்த்தேன். என்னைவிட உயரமான, என்னிலும் மேலான கரிய நிறத்துடன், தடித்த உதட்டுடன் ஒருவர் நின்றிருந்தார். அருகில் இன்னொருவர். ஏறத்தாள முன்னையவரைப்போலவே இருந்தார். அவர் வாய் எதையோ சப்பிக்கொண்டிருந்தது.

"எனக்கு நீ பேசுவது புரியவில்லை நண்பா" என்று நோர்வேஜிய மொழியில் கூறினேன்.
” you my friend.. You not somali?" என்ற கேட்டு அலுத்த கேள்வியைக் கேட்டான்.
”No my friend.. I am from Sri Lanka" என்றேன்.

அவர்கள் ஒரு விலாசத்தை தேடி வந்திருந்தார்கள். அதனைக் கண்டுபிடிக்க உதவி கேட்டார்கள்.

அந்த விலாசம் அருகில் இருந்தாலும் ஒரு மோட்டார் வீதியை கடந்தே அங்கு செல்லவேண்டும். எனவே சற்றுத் தூரம் அவர்கள் நடக்கவேண்டி இருந்தது.
Google maps இல் இடத்தைக் காட்டினேன். ஆனால் படுபாவிகளுக்கு சற்றுத் தூரம் நடப்பது சிக்கலாக இருந்தனால் ஏன் மோட்டாரவீதியை குறுக்கே கடந்தால் என்ன என்றார்கள்.

முடியுமான அளவு பொறுமையாக விளங்கப்படுத்தினேன். எனது ஆங்கலம் அவர்களுக்கு புரியவில்லை. நோர்ஜேிய மொழியும் புரியவில்லை. எனக்கு சோமாலி மொழி தெரியாது.

நேரம் 10 - 15 - 20 நிமிடங்கள் என்று கடந்தபோது எனக்கும் காதுக்குள்ளால் புகை புறப்படத்தொடங்கியது.

இறுதியாக
”My friend.. please ask him” என்று கடைக்கார பையனைக் காட்டினேன்.

கடைக்கார பையனும் அதையே கூறினான். அவர்களுக்கு 15 நிமிடங்கள் நடப்பதற்கு விருப்பமில்லை. மோட்டார் வீதியை நேரே கடப்பதே நோக்கமாய் இருந்தது. கடைக்கார பையன் தலையை அங்கும் இங்கும் ஆட்டி அது ஆபத்தானது தவிர போலீஸ் பிடிக்கும் என்றான்.

இருவரும் தேனீர்கடையில் இருந்து வெளியே சென்றார்கள். நான் மீண்டும் புத்தகத்தில் முழ்கிப்போனேன்.

சற்று நேரத்தில் வீதிப் பக்கம் இருந்து பல வாகனங்கள் ஹார்ன் ஒலி எழுப்புவது கேட்க நான் எட்டிப்பார்த்தேன்.

எனது இருக்கையில் இருந்து பார்த்தால் மோட்டார் பெருஞ்சாலை தெரிகிறது.
மோட்டார் வீதியின் நடுவில் ஒருவர் நிற்கிறார். வாகனங்கள் சீறிப் பறக்கின்றன. சில ஹார்ன் ஒலி எழுப்புகின்றன. இன்னும் சில சாரதிகள் ”நடுவிரலை” சந்தோசமாக காட்டிவிட்டு செல்கிறார்கள்.

ஒருவிதமாக ஒருவர் வீதியின் நடுவில் அமைந்திருக்கும் சீமெந்துக் கட்டில் ஏறிவிடுகிறார். மற்றையவர் இப்போதும் இக்கரையில் வாகனங்களை சற்று ”நிறுத்துங்கய்யா நான் வீதியை கடக்கவேண்டும்” என்ற தொனியில் கையை காட்டுகிறார். எவரும் நிறுத்துவதாயில்லை. மற்றையவர் இவரை வா வா என்று சைகையில் காட்டுகிறார்.

இப்படியே சில நிமிடங்கள் கடக்கின்றன.

இப்போது நடுவில் நின்றவர் மறுகரைக்கு சென்றுவிட்டார். இக்கரையில் நின்றவர் வீதியின் நடுவில் நிற்கிறார்.

அந்தநேரம் பார்த்து சைரன் சத்தம் கேட்கிறது. நடுவில் இருந்தவர் நாலுகால் பாய்ச்சலில் வீதியை கடக்கவும், அவரருகில் போலீஸ் கார் வந்து நிற்கவும் சரியாக இருந்தது.

Sothy's Secret Service

அம்மாவின் பெயர் சோதிராணி. ஆனால் சோதி என்றே அனைவரும் அழைப்பார்கள்.

எனது மருமகள், தங்கை ஆகியோர் இணைந்து Viber இல் Sothy's Secret Service என்று ஒரு groupஐ தயாரித்து மருமகனையும் என்னையும் இணைத்திருக்கிறார்கள்.

அங்கு, அம்மாவின் குளப்படிகள், சேட்டைகள், கோபங்கள், விளையாட்டுக்கள் எல்லாம் உடனடியாக பகிரப்படும்.

உதாரணமாக:
இன்று குளிசை போடவில்லை. கேட்டால் ” போடி அங்கால.. அது எனக்குத்தெரியும்” என்கிறார். மாமோய் உடனடியாக அம்மம்மாவுடன் கதைத்து ஒழுங்கு செய்யவும்.
ஒருவர் வந்து கஸ்டத்தை சொன்னதும் 5000 ருபா கொடுத்தார்.
அம்மம்மா இன்று இரத்தப்பரிசோதனை செய்தார். சக்கரைவியாதி கட்டுப்பாட்டில் இல்லை.
கட்டுப்பாடு இல்லாமல் சீனி சாப்பிடுகிறார். மாமா நீங்கள்தான் கதைக்கவேண்டும்
இந்த மாத தொலைபேசிக் கட்டணம் 15000 ஐ தாண்டுகிறது.
வாடகை கட்டியுள்ளேன்.
மாமா உங்களை தொலைபேசி எடுக்கட்டாம்
.
.
இப்படி பல செய்திகள் வரும். நேற்று அந்த Group இல் ஒரு படு பயங்கரமான டிஸ்கஷன் போகிறது.

மருமகள் இந்தியாவுக்கு புறப்படும்போது அம்மாவின் கையில் 9000 ருபா இருந்ததாம். அவள் இந்தியாவால் வந்போது 15000 இருக்கிறதாம். இது எப்படி சாத்தியம்? தனியே வங்கிக்குச் சென்றாரா? இல்லையா? யாருடன் சென்றார்? என்னுடன் வரவில்லை என்று சத்தியம் செய்கிறான் மருமகன்.

அம்மா தனியே வங்கிக்குச் செல்வதை, ஒரு முறை அவர் வங்கியில் இருந்த பணம் எடுத்துவரும்போது திருட்டுக்கொடுத்ததனால் எனது அதிகாரத்தை பாவித்து தடைசெய்திருந்தேன். எனவே அவர் வங்கிக்கு தனியே சென்றிருக்கமுடியாது.

எனவே அம்மாவிடம் எப்படி பணம் வந்தது என்று மருமகள், மருமகன், தங்கை முவரும் இருந்து மண்டையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள்.

அம்மாவிடம் இதைப்பற்றி கேட்டால்.... என்னிடம் அவள் இந்தியாவுக்கு போகும்போது 90.000 இருந்ததே என்றுபதில் வரலாம். அதைக் கேட்டு எனக்கு இரத்தக்கொதிப்பும், காதுகளுக்குள்ளால் புகையும் வரலாம்.

எதற்கு வீண் வம்பு?

அடியேய் ... விடுங்கடி பிரச்சனையை.. பணம் அதிகரித்திருக்கிறது என்று மகிழுங்கள் என்றிருக்கிறேன்.. மருமகளிடமும் தங்கையிடமும்.

என்ட ஒஸ்லோ முருகா! ஏனய்யா இந்த பக்தனை அளவுக்கு மீறி ”சோதி”க்கிறாய் ...

ஆத்தாவின் அன்னையர் தினம்

காலையில்  இருந்து அத்தாவுக்கு தொலைபேசி எடுக்கிறேன். பதிலே இல்லை.

மருகமனிடம்  ”டேய்! அமம்மம்மா  எங்கடா? அன்னையர் தின party என்று கிளம்பிவிட்டாவா? என்றேன்.

”இன்று ஞாயிற்றுக்கிழமை. பிரம்மகுமாரிகள் ஆச்சிரமத்தில நிற்பா” என்றான்.

சரி... இனி எங்கட குமாரி  வீடுவரும் வரையில் காத்திருக்கவேண்டியதுதான்.

பிரம்மகுமாரியின் இம்சை தாங்க முடியவில்லை.

சென்ற ஆண்டு அம்மாவுடன் தங்கியிருந்தபோது.. .”ராசா,  இது உனக்குத்தான் என்று ஒரு பயணப் பை  தந்தார். அதனை திறந்து பார்த்தேன்.

பாபாவின்  படத்துடன் 2 திறப்புக்கோர்வை.
பாபாவின்  படத்துடன் 2 கொப்பி
பாபாவின்  படத்துடன் 4 பேனைகள்
பாபாவின்   பெரிய படம் ஒன்று
பாபாவின்  படத்துடன்  பாபாவின்  அருள் மொழிகள் புத்தகம்
பாபாவின்  படத்துடன் கலன்டர்

எல்லாவற்றையும் பார்த்துவிட்டு செம கடுப்புடன் பயணப்பையை  மூடுகிறேன். பயணப்பையிலும் பாபா பல்லைக்காட்டிக்கொண்டு இருக்கிறார்.

நிமிர்ந்து, கிழவியை ஒரு பார்வை பார்த்தேன்.
அவருக்கு  புரிந்திருக்கவேண்டும் ”உனக்கு வேண்டாம் என்றால் நீ  எடுக்க வேணாம்” என்றார்.

நோர்வேக்கு வரும்போது பாபாவின்  படத்துடன் 2 திறப்புக்கோர்வையும், ஒரு பேனையும், அந்த பயணப்பையையும் எடுத்தேன்.

கிழவியின் முகம் பூப்போல  மலர்ந்தது.

இன்னொரு நாள், அம்மா ஆச்சிரமத்துக்கு புறப்பட்டுகொண்டிருந்தார்.

”அம்மா” என்று தேன் ஒழுக அழைத்தேன்.

” என்னடா” என்றார் அன்பாக

”நானும்,  உங்களுடன் ஆச்சிரமத்துக்கு வரவா?” என்றேன்.

” உன்னை கும்பிட்டுக் கேட்கிறேன். அங்க வந்து கனபேரின் நிம்மதிய கெடுக்காதே. நீ விசர்க் கேள்வி எல்லாம் கேட்பாய” என்று மண்டாடினார்.

” சரி சரி  ..பாபா பாபா என்று  ஊரை ஏமாற்றுகிறீர்கள்” என்றேன்.

அம்மாவுக்கு அருகில் இருந்த ஒரு அகப்பை காற்றில்  ஏவுகணைபோன்று வந்கொண்டிருந்து.


உண்டியல்

நோர்வேயில் ஒரு பிரபலமான குரங்கு இருந்தது. அதன் பெயர் ஜுலியஸ்.  வங்கியில், எனது மூத்த மகளுக்கு முதன் முதலில் வங்கிக்கணக்கு திறந்தபோது ஜுலியஸ் இன் உருவத்திலான ஒரு உண்டியலையும் கொடுத்தார்கள். அவள் சிறியவளாக இருக்கும்வரையில் அதனால் பிரச்சனை வரவில்லை.

அவளுக்கு 6 வயதாக இருக்கும்போது என்னிடம் ஒரு பார்பி பொம்மை வாங்கித்தருமாறு கேட்டாள். சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு ஒரு பார்பி  பொம்மை வாங்கிக்கொடுத்திருந்தமையினால் அவளிடம், நீ காசு சேமித்து உனது பணத்தில் வாங்கவேண்டும் என்றேன். அதன்பின்னால் வரப்போகும் ஆபத்தை உணராமலே.

”என்னுடைய ஜுலியஸ் உண்டியலைத் தா” என்றாள்”.
”அம்மா அது வீட்டில் இருக்கும் எல்லோருடைய உண்டியல். அதனுள் 20 குறோண் நாணயங்கள் மட்மே போடுவது எனவே அதைத் தர முடியாது” என்றேன்.

”சரி, வா வங்கிக்குப் போவோம்.  எனக்கு புதிது ஒன்று வாங்கித் தா” என்று அடம்பிடித்தாள்.

வங்கிக்கு அழைத்துப்போனேன்.  நாம் வாழ்திருந்ததோ ஒரு சிறு கிராமத்தில். அனைவரும் அனைவரையும் அறிவாகள். வங்கியல் நின்றிருந்த பெண் மகளை நன்கு அறிவார்.

”வா .. காவியா.. வா .. வா”  என்று ஆரம்பித்ததும் என்னை மறந்துபோனாள்,  மகள். அந்தப் பெண்ணுடன் உரையாடி, வங்கியில் இருந்த ஜுலியஸ்  உண்டியல் ஒன்றினையும், பலூன்கள், சித்திரம் வரைவதற்கான படங்கள், நிறம் தீட்டும் பென்சில்கள் என்று ஒரு தொகை பொருட்களுடன்  அந்தப் பெண்ணுக்கு ஒரு முத்தம்  லஞ்சமாகக் கொடுத்தபின் என்னுடன் புறப்பட்டாள்.

வாகனத்தினுள் ஏறி உட்கார்ந்தவுடன் வாகனத்தில் இருந்த சில்லறைகளை ஜுலியஸ்இன் வயிற்றினுள் போட்டாள். பின்பு ” அப்பா, உன் பணப்பையைத் தா, என்றாள். கொடுத்தேன். இப்போது ஜுலியஸ் முன்பைவிட சற்று கொழுத்தது.

வீட்டுக்கு வந்ததும் தங்கையை அழைத்து ஜுலியஸ்ஐ காட்டினாள். அவளுக்கு 2 வயது என்பதனால், அவள் ஜுலியஸ்ஐ குலுக்கி அதனில் இருந்து வந்த ஒலியில் மகிழ்ந்திருந்தாள்.

வீட்டுக்குள் இருந்த சில்லறைகளை ஓடி ஓடிச் சேர்த்தாள். உண்டியலினுள் இட்டாள். தங்கையையும் வேலைக்கு அமர்த்திக்கொண்டாள். சாமியறையில் இருந்த சில்லறைகளிலும் சிலது காணமல் போயின.

மறுநாள் நான் வேலையால் வருகிறேன் வீட்டில் ஒரு கடை திறந்திருந்தாள். அதில் எனது கணிணி, உடைகள், சவர்க்காரம், சவரம்செய்யும் பெருட்கள் இருந்தன. தங்கையின் சூப்பியையும் விற்பனைக்கு வைத்திருந்தாள். எனது பொருட்களுக்கு 10 குறோணர்கள் கொடுத்துப் பெற்றுக்கொண்டேன். தங்கையின் சூப்பியின் விலை ஒரு குறோணாக இருந்தது. ஆனால் அவள்  அதைக் கேட்டு அழத்தொடங்கியபோது  அப்பாவிடம் பணம்வாங்கிவா என்று அனுப்பினாள். அதற்கும் பணம் கொடுத்தேன்.

அன்றிரவு தூங்கும்போது அவள் தூங்குவதற்கும் நான் பணம்கொடுக்கவேண்டியிருந்தது. அன்றிரவு ஜுலியஸ்ஐ அணதை்தபடியே   தூங்கிப்போனாள்.

இதன்பின்,  என்னுடன் கடைக்கு வருவதற்கு அடம்பிடித்தாள். கடையில் சில்லறைகிடைத்தால் அதை பறித்துக்கொண்டாள். காலப்போக்கில் கடையில் வங்கி அட்டைபாவிக்கவும் தடைவந்தது. நீ வங்கி அட்டையை பாவித்தால் சில்லறை தருகிறார்கள் இல்லை என்று வாதிட்டாள்.

சில நாட்களில் இத்தனை முத்தங்களுக்கு இத்தனை குறோணர்கள் என்று வாங்கிய நாட்களும் உண்டு. வீட்டுக்கு அருகில் இருந்த காட்டுக்குள் இருந்து பூக்களை பறித்துவந்து பூங்கொத்து என்று  என்னிடம் விற்றாள். அதே பூங்கொத்தை மறுநாளும் நான் விலைகொடுத்து வாங்கிய காலமும் இருந்தது. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில்  ”உனக்கு தேனீர் கொண்டுவந்து தருவேன், சாப்பாடு தீத்துகிறேன் பத்து குறோன் தா ” என்றாள். இப்படியான சேவைக்கு பத்து குறோணர்கள் காணுமா? நான் அதிகமாய் கொடுத்தேன். முத்தம் ஒன்று மேலதிகமாய் கிடைத்தது.


சில நாட்களில் நான் நிலத்தில் படுத்திருந்தபடியே  எனக்கு முதுகு வலிக்கிறது எனது முதுகில் ”ஏறி நடவுங்கள்”  என்பேன்.  முதலில் மூத்தவள் நடப்பாள். அப்புறமாய் தங்கையின் கையைப்பிடித்து நடாத்துவாள். என்மீது துள்ளி துள்ளி, விழுந்து, சிரித்து விளையாடியபின் அதற்கும்சேர்த்து பணம் கேட்பாள். ”தங்கையும் நடந்தாளே அவளுக்கும் பணம் கொடு ” என்று கூறி... தங்கைக்கு கிடைக்கும் பணத்தையும் தனது உண்டியலுக்குள்  அவளைக்கொண்டே போட்டுக்கொள்வாள்.

வீட்டில் இருந்த புத்தகங்கள், பத்திரிகைகள் அனைத்திற்கும் வாடகை அறவிட்டாள். நான் சாய்ந்திருக்கும் சாய்மனைக் கதிரைக்கும் வாடகை கொடுக்கவேண்டியிருந்தது.

ஏறத்தாள ஒரு கிழமைக்குள் அவளது ஜுலியஸ்இன் கழுத்துவரை சில்லறை நிரம்பியிருந்தது. பெருமையில்  அவள் மனமும், முகமும் பூரித்திருப்பதை ரசித்துக்கொண்டிருந்தேன் நான்.

இந்த உண்டியல் பழக்கம் அவளுக்கு 10 வயதாகும்போது தங்கைக்கும் தொற்றிக்கொண்டது. நான் இருபக்கமும் அடிவாங்கும் மத்தளம்போலானேன்.

ஒரு நாள் அவளின் உண்டியலை திறந்து எண்ணியபோது 2000 குணோணர்கள் இருந்தது. அதில் 1500 குணோணர்களை வங்கியில் வைத்தாள். மிகுதி 500 அவளிடம் இருந்தது.

ஒரு நாள் எனக்கு சற்று பணத்தட்டுப்பாடு வந்தபோது ”அம்மா, அப்பாவுக்கு கொஞ்சம் காது கடனாகத் தாங்களேன்” என்றேன்.
”எவ்வளவு”
”500”
”பொறுங்கோ” என்றவள் …. உள்ளே சென்று பணத்துடன் வந்தாள்.
”இந்தாங்கோ”
எண்ணிப்பார்த்தேன். 400 குறோணர்கள் இருந்தது.
”என்னடி … 400 தான் இருக்கிறது  என்றேன்”
”ஒம்.. நீங்க தரும்போது 500 குறோணர் தரவேண்டும்” என்றாள்.

45 வருடங்களுக்கு முன் நான், அம்மாவின் பணப்பையில் இருந்து திருடிய பணத்திற்கான  தண்டப்பணம் இது  என்று நினைத்துக்கொண்டேன்.


9 வருடங்களின் பின்னான இன்று காலை,  சிறிது பணத்தட்டுப்பாடு வந்தபோது,  எனது உண்டியலில் கைவைத்தேன்.  அங்கு புதைத்திருந்தது இந்தக் கதை.

நினைவுகள் அற்புதமாய் தாலாட்டும்.


இது எனது காவியாவுக்கும், அட்சயாவுக்கும் சமர்ப்பணம்

ஒரு தந்தையின் நாட்குறிப்பு

இரவு நேரங்களில் எனது குழந்தைகளை தூங்கவைப்பது என்பது பல சம்பிரதாயங்களைக்கொண்டதாக இருந்தது.

8 மணிக்கு கட்டிலில் இருக்கவேண்டும். எனவே 7.30 அளவில் குளியலறைக்குள் அழைத்துப்போய் பல் மினுக்கும்போது ஆரம்பிக்கும் யார் முதலில் குளிப்பது என்ற பிரச்சனை. ஒரு நாளைக்கு ஒருவர் என்று பிரச்சனையை தீர்த்துக்கொள்வேன். சில வேளை இருவரும் ஒரேநேரத்தில் குளித்தால் ” அடியேய் குளித்தது காணும், வாங்கடீ வெளியில” என்று நான் கெஞ்சி, அவர்கள் மிஞ்சி அங்கு ஒரு திருவிழாவே நடக்கும்.

ஈரத்தினை துடைத்து, நனைந்த தலைமுடியினை காயவைத்து, கிறீம் பூசி, ஓடிக்கொலோன் இட்டு, படுக்கைஉடை அணிவித்து, நீண்ட அவர்களது தலைமுடியினை சிக்கு எடுத்து, அழகாக இரட்டைப்பின்னலிட்டு முடிக்கும்போது அத்தனை அழகாக மாறியிருப்பார்கள். 

எனக்கு தனிப்பின்னல், இரட்டைப்பின்னல், குதிரைவால் இப்படி பலவிதமாக அவர்களின் தலைமுடியினை பின்னவும், கட்டவும் தெரிந்த காலம் அது.
அதன்பின் அவர்களுடன், நாளைய உடை எது, காலுறை எது, தலைச் சோடனை எது என்று உரையாடி அவற்றை எடுத்துவைத்தபின் ஒருத்தி முதுகில் ஏறிக்கொள்ள, மற்றையவளை கைகளால் தூக்கிச் செல்வேன்.

தங்களை கட்டிலில் எறியச்சொல்லிக் கேட்பார்கள். மெதுவாய் எறிவேன். கல கல என்ற சிரிப்பினைக் கேட்டபடியே, மின்விளக்கினை நிறுத்தியபின், அவர்களை அணைத்தபடியிருக்க நாம் உரையாடத்தொடங்குவோம்.
இன்றைய நாள், நாளைய நாள், என்று உடையாடல் நகர்ந்துகொண்டிருக்கும்போது, கொட்டாவிவிட்டபடியே பெருவிரலைச் சூப்பியபடி ”அப்பா கதை” என்பாள் சின்னவள்.

இருவருக்கும் எனக்குத் தெரிந்த அனைத்துக் கதைகளையும் கூறிமுடித்திருந்த காலத்தில் புதிது புதிதாய் கதைகளை இயற்றினேன். பாட்டி வடை சுட்ட கதையுடன், சிங்கமும் முயலும் கதையை இணைத்து சற்று விறுவிறுப்புக் கலந்து கூறுவேன். சாகசக் கதைகளில் இருவருக்கும் அலாதியான பிரியம் இருந்தது. சொன்னதைச் செய்யும் சுப்பன் கதையை அவர்கள் விழுந்து விழுந்து சிரித்து ரசித்தார்கள்.

நான் எந்தக் கதையைக் கூறினாலும் அல்லது அவர்கள் தூங்குவதற்கு எதைப் பாடினாலும் முழுமனதுடன் இரசித்து அனுபவித்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே.

அதிகமாக என் நெஞ்சிலேயே தூங்கிப்போகும் இளையவளை மெதுவாய் இறக்கிவைத்ததும்... அக்காள் காலை நீட்டுவாள்: அவளது காலை நீவியபடியே நான் இயற்றிய பாடலைப் பாடிக்கொண்டிருப்பேன். அவளும் தூங்கிவிட்டாள் என்பதை சீரான அவர்களது மூச்சின் ஒலி அறிவிக்கும்.

தலைக்கு முன் விழுந்திருக்கும் முடியினை காதிற்கு பின்புறமாய் நகர்த்திவிட்டு, தலைமுடியினை கோதி ஆளுக்கொரு முத்தமிட்டு இருவரில் ஒருவரை அணைத்தபடி நானும் தூங்கிப்போவேன். பேரின்பமான நேரங்கள் அவை.

முத்தவள் தூங்கிப்போனால் மறுநாள் காலைவரை பிரச்சனையே இருக்காது.
இளையவள் அப்படி இல்லை. அப்பா என்று கடுமையாக நாலைந்து தடவை அழைப்பாள்... நான் நித்திரையில் இருந்து மீண்டு

”என்னய்யா” என்பேன்.

” உஷ்ஷ் .. குறட்டை விடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்” என்பாள்.

”சரி” நீங்க படுங்கோ என்பேன்

”அப்பா, காலைத் தடவு” என்று காலை என் நெஞ்சில் போடுவாள். காலை முகர்ந்து முத்தமிட்டபின் மெதுவாய் நீவி விடுவேன்.

சற்றுநேரத்தில் இருவரும் தூங்கிப்போவோம். மறுபடியும் அவள் என்னை எழுப்பும் வரையில்.