இரண்டு சுவாமிகளும் அவர்களின் திருவிளையால்களும்

சில நாட்களுக்கு முன் எனது முகப்புத்தகத்தில் ஒரு இனிமையான அதிர்ச்சி காத்திருந்தது. பால்யத்து நண்பர் ஒருவர் என்னைக் கண்டுபிடித்திருந்தார். ஏறத்தாள 25 வருடங்களின் பின் வேறொரு வாழ்க்கைப்பருவத்தில் மீண்டும் அறிமுகமாகிறோம். காலம் அவரை இந்தியாவிலும், என்னை நோர்வேயிலும் நிறுத்தியிருந்தது. அவருக்கு என்னுடன் தொடர்பு இல்லாதிருந்தாலும் BBC செய்திச்சே‌வை போன்று என்னைப்பற்றிய  சகலமும்  அறிந்திருந்தார். அது ஆச்சர்யமாய் இருந்தது எனக்கு. அவரைப்பற்றி ஒரு சிறு செய்தியேனும் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. இது ஆச்சர்யமில்லாத செய்தி.

ஒன்றரை மணிநேரமாக ”ஸ்கைப்” மூலமாக உரையாடினோம். பல பால்ய நண்பர்களுடன் அவருக்கு தொடர்புகள் இருந்தன. அவர் மூலமாக மூன்று பால்ய சினேகங்கள் அறிமுகமாகின.  இங்கிலாந்து, கனடா, இந்தியா, இலங்கை என பலரும் பல தேசங்களில் வேர்பதித்து கிளைவிட்டிருந்தார்கள். நான் பனிவிளை பூமியில் வேர்பதித்திருக்கிறேன்.

பரஸ்பர விசாரிப்புகளின் பின் இரகசியமான விடங்களுக்குள் எமது சம்பாசனை புகுந்த போது மீண்டும் பதின்மவயதுக்கள் புகுந்ததுகொண்டோம்.  ”அவள்”  என்று ஒரு பெயரைக் குறிப்பிட்டு அவள் எங்கே இருக்கிறாள் தெரியுமா? என்ற போது நான் 1980 - 83ம் ஆண்டுகளுக்குள் நுளநை்திருந்தேன். ”அவள்” என்பது நண்பனின் முதற் காதல். அது பற்றி நான் ” கொல்லாமல் கொல்லும் காதல்” என்று ஒரு பதிவு இட்டிருக்கிறேன். இது பற்றி நண்பரிடம் கூறியபோது ” அப்ப நீ என்னை மறக்கவில்லை” என்றார். குரலில் பெருமையும், குதூகலமும், நட்பின் நெருக்கமும் நிறைந்திருந்தது.

ஊரிலிருந்த அத்தனை அழகிய ராட்சசிகளும் அவர் நினைவில் இருந்தது ஆச்சர்யம்தான். அதை விட ஆச்சர்யம் அந்த ராட்சசிகளை அவர் வர்ணித்த அழகு.  ”டேய்! அவள்” .... என்று பால்யத்து மொ‌ழியிலேயே வர்ணித்தார். வாழ்வின் வலிகள், போராட்டங்கள் மறந்து மீண்டும் பதின்மவயதுக்குள் சென்று வந்த உணர்வைத் தந்தது அவருடனான உரையாடல். மீண்டும் சந்திப்போம் என்று விடைபெற்றுக்கொண்டோம். நண்பருடனான சம்பாசனை வாயில் ஒட்டிக்கொள்ளும் தேனீரின் சுவை போன்று ஒரு சுகத்தை தொடர்ந்து தந்து கொண்டேயிருந்தது அந்த மாலை முழுவதும்.

இன்று காலை முகப்புத்தகத்தில் இன்னுமொரு இன்ப அதிர்ச்சி காத்திருந்தது முகப்பத்தகத்தில். அவரும் பால்யத்து நண்பர் தான். எனது  முகப்பத்தக படம் ஒன்றில் அவர் தன்னை பதிவு (tag)  செய்திருந்தார். நட்பு அழைப்பு விடுத்திருக்கிறேன் அவருக்கும்.

இந்த நண்பரும் நானும் மிகவும் நெருங்கிய நண்பர்கள். அவர் திறமைக்கு அவரின் ”திருவாய்” மட்டுமே காரணமாய் இருந்தது. அவர் விளையாட்டில் அதி சூரன். கால்பந்து, கிறிக்கட், கரப்பந்து தொடக்கம் தென்னைமரம் ஏறுதல், நீந்துதல், போலி ஆங்கிலப்புலமை என்று அவரிடம் பல திறமைகள் ஒளிந்திருந்தன, 1980 களில். காதலிக்கிறேன் என்று ஒரு பில்ட்அப் வேறு.

எம்மிருவருக்கும்  இடையில் ஏராளமான இரகசியங்கள் உண்டு. யார் யார் உள்ளூர்க் காதல்கள் என்பது தொடக்கம், ஊருக்குள் நடந்த பலான சமாச்சாரங்கள்வரை  எமக்குத் தெரிந்திருந்தது. இதற்காகவே சில ஊர்ப்பெரிசுகள் எம்மிடம் வாலாட்டாதிருந்தார்கள். முக்கியமாய் மட்டக்களப்பு நகரத்து இளைஞர் கோஸ்டியிலிருந்த நபர் ஒருவர்.

குறிப்பிட்ட நபருக்கும் எமக்கும் ஏற்கனவே விளையாட்டுக்களின் மூலமாகவும், அவர்களின் டவுனில் நாம் அழகிய ராட்சசிகளை ரசித்ததாலும் ”ஆகாது” என்று ஆகியிருந்தது. ஏறத்தாள எம்.ஜி.ஆர், நம்பியார் நிலையிலிருந்தோம் நாம்.

அப்படியான நாட்களில் ஒரு நாள் குறிப்பிட்ட நபரின், முறுக்கேறிய வயதின் இம்சையால், அவர் மட்டக்களப்பு பஸ் ஸ்டான்ட் விலைமாதுகளின் ஒருத்தியுடன் மகிழ்ச்சியாய் இருக்க எம்மூர் காட்டுப்பகுதியை அவர் தெரிவு செய்ததனால் அதன் பின்னான பல காலங்களில் அவர் எம்மிடம் மிகுந்த மரியாதையாக நடக்க வேண்டியிருந்தது. இதற்கு எனது நண்பர் முக்கிய காரணமாய் இருந்தார்.

ஒரு முன் மாலை நேரம், அவர்கள் இருவரும் எம்மூர் காட்டுப்பகுதிக்கு செல்வதை கண்ட நண்பர், இருவரையும் அடையாளம் கண்டு கொண்டார். விரைந்து வந்து என்னையும், இன்னும் சிலருடனும் காட்டுப்பகுதியுனுள் காத்திருந்து ” சிவபூஜையில் கரடியாய்” புகுந்து ரகளை பண்ண, அவர்கள் ஓடித்தப்ப வேண்டியதாயிற்று. அதன் பின்னான காலங்களில் டவுன் அழகிகளை எவ்வித சட்டச்சிக்கல்களும் இன்றி நாம் ரசிக்க அனுமதி கிடைத்திருந்தது எமக்கு.

எனது நண்பரின் அங்கில மோகம் அலாதியானது. கிறிக்கட் மச்ட்களை ஆங்கிலத்திலேயே கேட்பார். அதே போலவே மீண்டும் ஒப்புவிப்பார். நண்பரை நன்கு அறியாதவர்கள் வந்தால் நண்பர் ஆங்கிலத்தில் மேதாவி என்றே நம்புவர். அந்தளவுக்கு வேகமாகவும், புதியவர்களுக்கு புரியாமலும் உண்மையிலேயே ஆங்கில மேதாவி போன்று பேசுவார்.

எமது ஊரில் ஒரு பாழடைந்த மில் இருந்தது. நெல் காயவைப்பதற்காக அங்கு பெரும் சீமெந்து நிலம் இருந்தது. அதற்கருகில் ஒரு தண்ணீர் டாங்க். நண்பரோ எம்மை அந்த சீமெந்துநிலத்தில் வட்டமாக சைக்கில் ஓடச் சொல்லுவர்ர். அவரோ தண்ணீர் டாங்க் இல் அமர்ந்த படியே ஆங்கிலத்தில் ”கார் ரேஸ்” வர்ணணை போன்று எமது சைக்கிலோட்டத்துக்கு வர்ணணை கொடுத்துக் கொண்டிருப்பார், ஆங்கிலத்தில்.  வர்ணணை செய்வதில் அவருக்கு அசாத்தியமானதோர் திறமையிருந்தது, ஆசையுமிருந்தது.

ஒரு முறை நாம் வேலி கட்டுவதற்காக பனையோலை தறிக்கச் சென்றிருந்தோம். அவற்றை ஏற்றிவர ஒரு வண்டிலையும் வாடகைக்கு அமாத்திக்கொண்டோம். பனைமரத்தில் ஏறி ஓலைகள‌ை தறித்துப்போட்டார் நண்பர். பின்பு கீழ் இறங்கி வண்டிலில் ஓலைகைளைக் வைத்து கட்டும் போது நண்பர் ஓலைகளுக்கு மேல் ஏறி நின்று கயிற்றை இழுக்க அது அறுந்து நண்பர் கீழே விழுந்தார். மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மிதிப்பது போல நண்பர் விழுந்தாலும் விழுந்தார் கள்ளிமுள் பற்றையினுள். ஒரு விதமாக அவரை மீட்டு வெளியில் எடுத்த போது அது நண்பரா அல்லது முள்ளம் பன்றியா என்னுமளவுக்கு அவர் உடலில் கள்ளிமுட்கள் இருந்தன. எம்மால் முடிந்ததை அகற்றி டாக்டரான எனது தாயாரிடம் அழைத்துப் போனேன். உடனேயே ஆஸ்பத்திரியில் அனுமதித்து பல மணிநேரங்களாக முட்களை அகற்றி நண்பனின் முள்ளம்பன்றி அவதாரத்தை முடித்து வைத்தார் அம்மா. அதன் பின் பல காலங்கள் அம் முட்கள் அவருக்கு இம்சை தந்து கொண்டேயிருந்தன.

ஒரு முறை நாம் கிறிக்கட் விளையாடுவதற்காக எமது மைதானத்தில் ”பிட்ச்”  போட்ட போது அந்த ”பிட்ச்”ஐ சமப்படுத்துவதற்று மெயின் வீதியில் இருந்த ரோடு போட உதவும் ”ரோளரை” நண்பருடன் சேர்ந்து, நாம் ஐவர் இழுத்து வந்தோம். அத் திட்டத்தின் ”ப்ராஜெக்ட் மனேஜராக” இருந்தவரும் எனது நண்பர் தான்.

ஒரு இரவு ஒரு வீட்டுத் தோட்டத்தில் இரகசியமாய் இளநீர் பறித்துக்கொண்டிருந்தோம். (பிற்காலத்தில் வேரொரு நெருங்கிய நண்பர் அந்த வீட்டு மாப்பிள்ளையாவார் என்பது அன்று எமக்குத் தெரியாதிருந்தது). எங்களின் கெட்டகாலம், அவ் வீட்டு நாய்கள் விழித்துக்கொள்ள, வீட்டின் உரிமையாளர் டார்ச்லைட் சகிதமாக ஓடிவந்தார். நண்பர் மரத்தில் இருந்து இறங்கி ஓடும் போது இடுப்பில் இருந்த சாரத்தை களட்டி தலையை மறைத்து முக்காடு போட்டுக்கொண்டார். என்னால் அப்படி செய்ய முடிவில்லை, வெட்கமாய் இருந்ததால். ஓடத் தொடங்கினேன். பின்னால் வயதான ஒரு குரல் ”அது  டொக்கரம்மான்ட மூத்த மகன்” என்று கத்தும் கத்தம் கேட்டது.  அச் சத்தத்தின் எதிரொலி சில மாதங்களுக்கு முன் லண்டன் போன போது அந்த வீட்டுக்கு மாப்பிள்ளையாகிய எனது நெருங்கிய நண்பர் வீட்டிலும் எதிரொலித்தது.

ஒரு காலத்தில் ஏறாவூர் புகையிரதநிலைய அதிபருடன் தனவுவதையே தொழிலாகக் கொண்டிருந்தோம். அதற்கு முக்கிய காரணம் அந்த புகையிரநிலைய அதிபரின் மாமனார். எம்மை எங்கு கண்டாலும் திட்டடி்த்தீர்த்தபடியே இருந்தார். அவர் ஒரு ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி என்ற திமிரும் இருந்தது அவரிடம். எனது நண்பரின் பொறுமை எல்லை தாண்டியது ஓர் நாள்.  அன்று தொடக்கம் மட்டக்களப்பில் இருந்து கொழும்பு  செல்லும் ”இரவு தபால் ரயில்” ஏறாவூர் இரயில் நிலயத்தை நெருங்கும் போது ஏறாவூர் ரயில் நிலையத்தில் மின்சாரம் தடைபட்டுப் போகத்தொடங்கியது. ரயில் புறப்பட்டதும் மின்சாரம் மீண்டும்வந்து.  புகையிரநிலைய அதிபரினால் இந்த மர்மத்தை பல மாதங்களாக கண்டுபிடிக்க முடியவில்லை. நாம் ரயில் நிலைய மின்சார இணைப்பை  ”பியூஸ்ஐ” களட்டி இல்லாது செய்ததை அவர் அறிந்திருக்க சந்தர்ப்பமில்லை. ரயில் நிலைய அதிபர் பெரும் பாடுபட்டார், அவரின் மனைவியின் தந்தை எம்மை காணும் போதெல்லாம் திட்டித்தொலைத்தனால்.  பிற்காலத்தில் ரயில் நிலைய அதிபரின் மாமனாரை இயக்கங்கள் கடத்திச் சென்று கொலை செய்தது வேறு கதை.

இப்படி இந்த நண்பரின் அட்டகாசங்களும், திறமைகளும் எல்லையில்லாதிருந்தன. சிங்கள, இஸ்லாமிய, தமிழ் நண்பர்களிடத்தில் எனது நண்பர் மிகவும் பிரபல்யமாக இருந்தார். அந்தக் காலத்தில் அவர் ஒரு ஹீரோ என்றால் அது மிகையில்லை.

எமக்கு முதன் முதலில் பலான புத்தகங்கள், படங்கள், மற்றும் பலான விடயங்களை அறிமுகப்படுத்தியதும், அவர் தான். எங்களுக்கு பல விதத்திலும் அவரே குருவாயிருந்தார். நாமும் அவருக்கு அடங்கிய சீடர்களாயிருந்தோம்.

சென்ற வருடம் ஊருக்கு சென்றிருந்த போது நண்பரைத் தேடும் பணியை பலர் மூலமாகவும் முடுக்கிவிட்டேன். சாதகமான பதில்கள் எதுவும் வரவில்லை. ஒருவர் மட்டும் அவரைத் தேடாதீர்கள் அவர் பற்றி ஊருக்குள் நல்ல அபிப்பிராயம் இல்லை என்றார். மனவருத்தத்துடன் திரும்பினேன்.

நோர்வே வந்ததும் மீண்டும் தேடுதல் வேட்டையை முடுக்கிவிட்டேன். நண்பரைப் பற்றிய தகவல் ஒன்று கிடைத்தது.

நான் கூறப்போவது சத்தியமான உண்மை. எனவே அதிர்ச்சியடையாதீர்கள்.

எனது நண்பர் ”சுவாமி” என்னும் அடைமொழியுடன் உலாவருகிறாராம், ஊரில்.

இதில் என்ன தப்பிருக்கிறது. ”சுவாமி” ஆகும் முழுத் தகுதியும் அவனுக்கிருக்கிறது.. மன்னிக்கவும் ... அவருக்கிருக்கிறது.

அவரின் சீடனாகும் தகுதி என்னிடம் இருக்கலாம்.

சஞ்சயானந்த சுவாமிகளுக்கும், அவரின் ”சுவாமி” நண்பருக்கும் ஒரு ”ஓ” போடுங்கள்.


இன்றைய நாள் மிகவும் நல்லது.
ஞானச்செருக்கும் கலைத்தாயின் குழந்தைகளும்

சில காலங்களுக்கு முன் இணையத்தில் ஒரு கவிஞரைப் பற்றி அறிக்கிடைத்தது. தற்போது சில நாட்களாக அவரைப்பற்றி எனக்குள் இருந்த நல்லபிப்பிராயங்கள் எல்லாம் சீட்டுக்கட்டு மாளிகைகள் சரிந்து விழுவது போல தற்போது சரிந்து விழுந்திருக்கிறது. காரணம் அவரின் ஞானச்செருக்கும், தற்புகழ்ச்சியும்.

ஞானச்செருக்கு இருக்கலாம், தப்பில்லை. எதற்கும் ஒரு அளவுண்டல்லவா? அதே போலத்தான் தற்புகழ்ச்சியும்.  அந்தக் கவிஞர் விருதுகள், பாராட்டுகள், தனது வெளியீடுகள், கலைப்பயணங்கள் என்று எல்லாவற்றையும் இணையமெங்கும் பேட்டிகளின் போதும், கட்டுரைகளிலும், முகப்புத்தகத்திலும் கூறிவருகிறார். அவரின் திறமை பற்றி நான் இங்கு பேசவில்லை. வேதனை என்னவென்றால் அவரின் திறமை அவர் காட்டும் தற்புகழ்சியினால் அடிபட்டப்போகிறது என்பதே.

பலரும் அவரை ஒரு தற்புகழ்ச்சிக் கோமாளி என்றே பார்க்கிறார்கள்.  இவர் பற்றி வீக்கிபீடியாவில் உள்ள கட்டுரை பலத்த தற்பெருமைகளைக் கொண்டுள்ளது போலிருக்கிறது என்று வீக்கிபீடியா கட்டுரையாளர் ஒருவர்  அவரின் கட்டுரையின் தொகுப்பு பகுதியில் குறிப்பிட்டுள்ளதை அவதானிக்கக்கிடைத்தது.

இவரின் கட்டுரையுடன் மு.மேத்தாவின் வீக்கிபீடியா கட்டுரையை ஒப்பிட்டால், மு.மேத்தாவின் கட்டுரை மிகவும் எளிமையாகவும் தன்னடக்கமானதாயும் இருக்கிறது.

”வியவற்க எஞ்ஞான்றும் தன்னை நயவற்க நன்றி பயவா வினை” என்கிறார் வள்ளுவர். அதாவது எக்காலத்திலும் தன்னை மிக உயர்வாக எண்ணி வியந்து மதிக்கக் கூடாது, நன்மை தராத செயலைத்தான் விரும்பவும் கூடாது என்னும் பொருள் கொணட குறள் இது:

பெயர், புகழ், விருதுகள், பரிசுகள், பயணங்கள் என்பவற்றின் மீதான அவரின் விருப்பத்திற்கு அக் கவிஞரின் மிகக் குறைந்த வயதும் காரணமாயிருக்கலாமோ என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு. ஆனால் அண்மைக்கால அனுபவங்கள் ஏனோ வயதுக்கும் ஞானச்செருக்குக்கும் தொடர்பில்லை என்றும் உணர்த்துவது போலிருக்கிறது. ஏன்னெனில் வயதில் முதிர்ந்த கலைஞர்களும், அனுபவசாலிகளுமான பல கலைஞர்கள் தமது ஞானச்செருக்கினால் தமது தரத்தை இழந்துகொண்டிருக்கிறார்கள். இது பற்றி அவர்கள் புரியாதிருப்பது வேதனையே

இல்ங்கையின் முக்கிய பேராசிரியர்கள், வழக்கறிஞர்கள், கவிஞர்கள், புத்திஜீவிகள் என்னும் வரிசையில் இடம்பெறக்கூடிய பலருடன் அண்மைக்காலங்களில் பழகக்கிடைத்திருக்கிறது. அவர்களின் தன்னடக்கம் என்னை கவர்ந்திருக்கிறது. நிறைகுடங்கள் அவர்கள். அதேவேளையில் பல வெறும் பானைகளின் கூக்குரல்களும், போலியான பெரியமனிதத்தன்மைகளும், சுய நன்மைக்காக நிகழ்வுகளை தயாரிக்கும் தன்மைகளும், பொறாமை - போட்டிகளும், மற்றவரின் முன்னேற்றத்தை விரும்பாத்தன்மைகளும் கொண்ட சிலரையும் அண்மைக்காலங்களில் அறியக்கிடைத்திருப்பது வாழ்வின் அனுபவங்கள் என்றால் அது மிகையில்லை.

கற்றதை அப்படியே எவ்வித மாற்றமின்றி ஒப்புவிப்பவர்களும், புதிய தலைமுறையிருக்கு தங்கள் கலையினை சிறந்த முறையில் கற்பிக்காதவர்களும் பெருங்கலைஞர்களாக இருக்க முடியுமா? என்னும் கேள்வி எனக்குள் இருக்கிறது. இப்படியான கலைஞர்கள் பலர் பெருத்த ஞானச்செருக்குடன் உலாவருவதை பார்க்கும் போது வள்ளுவரின் மேற் கூறிய குறள் எவ்வளவு ஆழமானது என்பது புரிகிறது.

என்னைப் பொறுத்தவரை ஒரு கலைஞரின் தரத்தை மாணாக்கரின் எண்ணிக்கை முடிவுசெய்வதில்லை. அக் கலைஞர் எவ்வகையில் மாணாக்கருக்கு தனது கலையை முழு அர்ப்பணிப்புடனும் பயிற்றுவித்து தனது கலையை எதிர்வரும் சந்ததியினரிடம் ஒப்படைக்கிறார் என்பதிலும், மாணாக்கரின் திறமை வெளிப்படுவதிலுமே இருக்கிறது என்பேன் நான்.

ஞானச்செருக்கு இருக்கலாம், ஆனால் அதுவே கலையை அல்லது திறமையை மழுங்கடிக்குமானால் அதனால் என்ன பயன்? எனவே சுயவிமர்சனத்துடன் கூடிய தன்னடக்கமான ஞானச்செருக்கே சிறந்தது என்பேன் நான்.
பால்வீதிப் பயணங்கள்

அண்மையில் ஓர் நாள் குளிர் படிந்து போன ஒரு பின்மாலைப்பொழுதில் ஒஸ்லோவின் மையத்தில் அமைந்திருக்கும் பிரதான நடை வீதியில் நடந்து கொண்டிருந்தேன். குழந்தைகள், இளையோர், பெரியோர், முதியோர், செல்வந்தர்கள், பிச்சைக்காரர்கள், தெருப்பாடகர்கள், போதைப்பொருள் பாவனையாளர்கள் - விற்பனையாளர்கள், போலீசார், உரிமையாளரின் பின்னே செல்லும் நாய்கள்,  வீதியோர விற்பனையாளர்கள், கையில் மதுக்கிண்ணத்துடன் பாதையோர கடையின் வெளியே குந்தியிருப்பவர்கள், பாலியல்தொழிலாளர்கள் என்று சமுதாயத்தின் சகல அங்கத்தினரும் அப் பாதையை ஏதோ ஒரு விதத்தில் கடந்து கொண்டிருந்தார்கள். என்னைப் போல்.

எனது கால்கள் மட்டும் தன்னிச்சையாய் இயங்கிக் கொண்டிருந்தன. சிந்தனையோ ”வாழ்க்கை” பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தது. இந்த நகரத்துக்கும் எனக்குமான உறவு 1987இல் தொடங்கியது. அன்றில் இருந்து இன்று வரை என் மனதுக்கு அமைதி வேண்டியிருப்பின் இப் பாதையின் ஆரம்பத்தில் இருந்து நோர்வே அரசனின் அரண்மனை வரையில் மேலும் கீழுமாய் இரு தரம் நடந்து போவேன். மனம் இலகுவானது போலிருக்கும். அன்றும் அப்படித்தான் மனது சரியில்லை என்பதால் நடக்க வந்திருந்தேன்.

ஒவ்வொரு காலத்திற்கு ஏற்பவும் இந்த வீதி தனது நடையுடை பாவனைகளை எவருக்கும் தெரியாமல் மாற்றிக்கொண்டே இருக்கிறது. எந்தவொரு பொருளுக்கும் ஒரு உயிர் இருப்பது போல இந்தத் தெருவுக்கும் உயிர் இருப்பதை என்னால் உணர முடிகிறது. காலத்துக்கு காலம் அது தனது மகிழ்ச்சியையும், துயரத்தையும் என்னுடன் பகிர்ந்து கொள்கிறது. நான் இந்த வீதியுடன் நட்பாயிருக்கிறேன். அதுவும் என்னுடன் நட்பாயே இருக்கிறது. நம்பினால் நம்புங்கள், எம்மால் பேசிக்கொள்ளவும், ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளவும் முடிகிறது. சத்தியமாய் எனக்கு பைத்தியமில்லை.

இந்த வீதியினூடே எனது இருகைகளிலும் இரண்டு குருவிகளுடன் என்னை மறந்து திரிந்த நாட்களில் இந்த வீதியும் என்னுடன் சேர்ந்து மகிழ்ந்திருந்தது. சில காலங்களுக்கு முன்பு கனத்த மனதுடன், நினைவுகளுடன் மட்டுமே நடந்த போது, நட்பாய் தோளில் கையுடனும், என் துயரத்தை தன்னுடன் சுமந்துமிருக்கிறது இவ் வீதி. தொழில் இன்றி, மன அழுத்தங்கள், மனப் பாரங்களுடன் வாழ்ந்த காலங்களிலும் இவ்வீதியில் பல தடவைகள் அலைந்து திரிந்திருக்கிறேன். அப்போதும் ‌கூட தன்னால் முடிந்ததை எனக்கு உபதேசித்திருக்கிறது இவ்வீதி.

பல மனிதர்களுக்கு இல்லாத நன்றும் தீதுமான பல பண்புகள் இவ் வீதிக்குண்டு என்பதை ஒவ்வொரு முறையும் இவ்வீதியை கடக்கும் போது கண்டு கொள்கிறேன். இந் நேரங்களில் எமது புரிதல்கள் மேலும் மேலும் எதையெதையோ உணர்த்துவதாய் இருக்கிறது. இவ்வீதியை நன்கு அவதானிப்பீர்களேயானால் அன்பு, கோபம், குரோதம், காதல், நட்பு, சிறு சினேகம், பசி, வெறி, மயக்கம், தாபம், காமம், வறுமை, தவிப்பு, பிணி, அறிவு, அதிகாரம், அலட்சியம், அநாதரவு, திமிர், நிறவெறித்தீண்டாமை இப்படி எத்தனையோ வகையான உணர்வுகளை கண்டுபோவீர்கள். ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு புது புது வடிவமான உணர்வுகளை உணர்த்துகிறது எனக்கு, இவ் வீதி.

தன்னைக்கடந்து போகும் மனிதர்களின் கதைகளை மௌனமாக விழுங்கிக்கொள்கிறது. தினமும் ஆயிரக்கணக்கில் புதிய புதிய கதைகளுடன் ஒரு முடிவில்லாத பெரும் புத்தகமாய் தினமும் வளர்ந்தபடியே இருக்கிறது, இவ் வீதியின் கதைகள்.

நூற்றுக்கணக்கான ஆண்டுகளின் கதைகள் இவ் வீதியின் கற்களிலும், சுவர்களிலும், காற்றிலும் படிந்து போயிருக்கின்றன. இருப்பினும் அன்று போல்... இன்றும், இனியும் இவ் வீதி தனது வாயைத் திறக்கப்போவதில்லை. ஆனால் தன்னோடு பேசுபவர்களுக்கு மட்டும் சில கதைகளை  பகிர்ந்து போகிறது.

இவ்வீதியில் ஒரு மூத்திர மூலை ஒன்று இருந்தது. தற்போது அதை புதுப்பித்திருக்கிறார்கள். அது தற்போது புதிப்பித்த மூத்திர மூலையாகவே இருக்கிறது. முன்போ அம் மூலையில், அதன் சுய வாசனையையும் மீறி அதற்குள், பனிக்காலத்தில் போதைப்பொருள் பாவனையாளர்கள் தூங்கிப்போயிருப்பதை கண்டிருக்கிறேன். இப்படியும் இவ் வீதி தனது ஒரு வித சமூகசேவைவையும் செய்து கொண்டு தான் இருக்கிறது.

இவ்வீதியின் அழகான காலம் இளவேனில் காலமே. தம்மை மறந்து ஓடியாடும் குழந்தைகள், இளைப்பாறும் முதியவர்கள், கையில் வரைபடத்துடன் அலையும் சுற்றுலாப்பயணிகள், முத்தமிடும் காதலர்கள், கண்களையும், பெண்களையும் கவரும் கடைக்கண்ணாடிகள், வெய்யிலின் சுகத்தை அனுவித்தபடியே பியர் குவளையுடன் அமர்ந்திருப்பவர்களும், இசைக்கலைஞர்களும், சர்கஸ் வித்தைக்காரர்களும், பிச்சை எடுப்பவர்களும், கண்ணால் வலைவீசி விலை பேசுபவர்களும் நிறைந்திருப்பார்கள். இவ் வீதியில் வீசும் காற்றுகூட அழகாயிருக்கும் அந் நாட்களில்.

இலையுதிர்க்கால மாலைகளும் இரவுகளும் மிகவும் சோகமானவையாகவே இருக்கும். கும் இருட்டும், சிணுங்கிக் கொண்டிருக்கும் மழையும், காலுக்குள் மிதிபடும் இலைகளும், காற்றையே நடுங்கவைக்கும் குளிரும் பாதையின் உயிர்ப்புத்தன்மையை, உணர்ந்து ரசிக்கும் மனநிலையை தர மறுத்துக்கொண்ருக்கும். சோகத்திலும் ஒரு அமைதியும் அழகும் இருப்பது போல் அந் நேரத்திலும் அமைதியான ஒரு அழகு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அதைப் புரிந்து கொள்ள இவ் வீதியுடன் பேசும்கலையை நீங்கள் அறிந்திருக்க வேண்டும்.

பனிக்கால இரவுகள் அழகானவை. வெள்ளையுடை அணிந்த பாதையின் அழகே தனி. பனிக்கால உடையணிந்து காலின் கீழ் உலர்ந்த பனி மிதிபட நடந்தபடியே அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே அந்த அலாதியான உணர்வை உணர்வுபூர்வமாக உணர்ந்து கொள்ள முடியும். ஒரு வித பரிபூரணமான அழகும் அமைதியையும் உணரலாம். சில நாட்களில் நடு இரவின் பின்பு தன்னந்தனியே இவ் வீதியினை கடந்திருக்கிறேன். அந்த நேரத்து பேரமைதியினூடே வீதியுடன் பேசியபடியே நடக்கும் சுகமே அலாதியானது. அற்புதமானது. இரு நண்பர்கள் தன்னந்தனியே நடப்பது போன்றது அது.

இலைதுளிர் காலத்து நாட்களும் மனதுக்குள் ஒரு மகிழ்ச்சியான குறுகுறுப்பையும், வரப்போகும் இளவேனில்காலத்தின் சுகத்தினையும் கொண்டிருப்பதால் அழகாய்த்தானிருக்கும். பனிக்கால நீண்ட இரவுகளை கரைத்து ஒதுக்கும் வெளிச்சத்தின் மென்சூடான கதிர்களை அனுபவித்தபடியே நடப்பதிலும் பெரும் சுகம் ஒளிந்திருக்கிறது.

இன்றும் குளிரை ரசித்தபடியே நடந்து கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு தாய் ஒரு குழந்தையை சுமந்து சென்றுகொண்டிருந்தாள். குழந்தைக்கு இரண்டு வயதிருக்கலாம்.  வாயிலே சூப்பியுடன், குளிரினால் சிவந்த கன்னங்களுடன் தாயின் தோளில் தூங்கி வழிந்துகொண்டிருந்தது. எனக்கு மிக அருகிலேயே அத் தாய் நடந்து கொண்டிருந்தாள். அக் குழந்தை எட்டித் தொடக் கூடிய தொலைவு தான். தெய்வீகமான அந்த அழகை என்ன மறந்து ரசித்தபடியே எனது நடையின் வேகத்தை குறைத்து அவர்கள் பின்னாலேயே நடந்து கொண்டிருந்தேன்.

என் மனது இக் குழந்தையை போலவே எப்போதும் சூப்பியுடன் என்னை வலம் வந்த எனது இளையமகள் அட்சயாவின் குழந்தைப்பருவத்தை நினைத்துக்கொண்டிருந்தது. அவளுக்கு சூப்பியின் மீது அப்படியொரு காதலிருந்தது. இக் குழந்தைக்கும் அப்படியாய் இருக்குமோ என்று நினைத்திருந்த போது, தூங்கியிருந்த அக் குழந்தை கண்விழித்துப் பார்த்தது. பார்த்தது மட்டுமல்ல என்னைப் பார்த்து தெய்வீகமாய் புன்னகைத்தது. மனது மயங்கி நானும் புன்னகைத்தேன். அவர்கள் ஒரு இடத்தில் திரும்பிய போது கையை அசைத்தேன், புன்னகைத்தபடியே கையசைத்தது அக் குழந்தையும். தனிமையுணர்வு அகன்று மனம் நிரம்பிப் போனது, எனக்கு. மனதுக்குள் ஒரு வித குதூகலம் குடிவந்திருந்தது.  வேகமாய் நடக்கத் தொடங்கினேன்

அவ் வீதியின் முடிவில் வீதியினை திரும்பிப் பார்த்தேன். நீண்ட வீதியின் இருபுறமும் தெருவிளக்குகளுடன் தூரத்தே அரசனின் மாளிகை தெரிந்தது. நான், எனது மாளிகை நோக்கி நடக்கத் தொடங்கினேன். ”வருகைக்கு நன்றி, மீண்டும் வா” பேச வேண்டும் உன்னுடன் என்றது வீதி, இரகசியமாய் என்னிடம்.

இன்றைய நாளும் நல்லதே.

புத்திஜீவிகளா புறம் கூறும் ஜீவிகளா?

ஒருவரைப் பற்றி மற்றவர்களிடம் பொய்யான கதைகளைக் காவித்திரியும் மனிதர்கள் பற்றிய பதிவு இது.

மனிதனுக்கு மற்றைய மனிதனைப் பற்றி தூற்றி பேசித்திரிவதில் இருக்கும் சுய இன்பம் எல்லையில்லாதது போலிருக்கிறது. வள்ளுவரும் இவர்களைப் போன்றவர்களை நன்கு அறிந்திருந்திருக்கிறார் என்பது அவரின் இநதக் குறளைப்பார்க்கும் போது புரிகிறது.

அறம் கூறான், அல்ல செயினும், ஒருவன்
புறம் கூறான் என்றல் இனிது.


இதன் பொருள்:  நல்லறத்தை ஒழுகாது இருப்பினும் கூட புறம் சொல்லாமை எனும் ஒரே ஓர் ஒழுக்கம் இனிமையைக் கொடுக்கும் என்பதாகும்.

எம்மில் பலர் மனச்சாட்சியின்றியும், தீர விசாரிக்காமலும், ஆதாரங்கள் இன்றியும் மற்றவரை நோக்கி பல விடங்களுக்கு கைவிரலை நீட்டுகிறோம். ஆனால் எப்போதாவது நாம் பேசுவதற்கு முன் சில வினாடிகளாவது நமது செயலை அல்லது பேசும் பொருளைப் பற்றி ஒரு சுயவிமர்சனம் செய்து கொள்கிறோமா? சுய விமர்சனம் என்பது பற்றி என்று மேடை போட்டு பேசும் புத்திஜீவிகளும் தமக்கு என்று வரும் போது சுயவிமர்சனத்தை மறந்து விடுகிறார்கள்  என்பதை எனது அனுபவங்கள் காட்டிப்போகின்றன.

பேசுவதற்கு தலைப்பு இல்லாது போகும் போது ஒரு மனிதனையே தலைப்பாக எடுத்து பேசித்திரிகிறோம். இன்னொருவரைப் பற்றி நாம் பேசும் பேசும் போது எவ்விதமான சுயவிமர்சனமும் இன்றி வளையும் நாக்கின் போக்கில் பேசித்திரிவதின் அபாயம் பற்றி பலரும் சிந்திப்பதில்லை. அல்லது பேச்சின் சுவராஸ்யம், பொறாமை, காழ்ப்புணர்ச்சி போன்றவை பலரை சுயவிமர்சனம் இன்றி மற்றவரைப் பற்றி பேசவைக்கிறது.

பலரும் அவர்களுக்கு ஒவ்வாதவர்களைப் பற்றி ஒரு கதையை கட்டவிழ்த்து விடுவதால் பலரும் ஒரு வித குரூரமான மகிழ்ச்சியை அடைகிறார்கள். ஆனால் அவற்றின் விளைவுகள் பற்றி எவரும் நினைத்துப் பார்ப்பதாய் இல்லை. அவர்களால் ஏற்படுத்தப்படும் வேதனைகள் பற்றி எவ்வித சிந்தனையும், மனக்கிலேசம், சுயவிமர்சனம் இன்றி பல மனிதர்கள் உலாவித்திரிகிறார்கள். எந்த வேதனையும் தனக்கு வரும்போது தான் புரியும் என்பது இங்கும் உண்மையாகத்தான் இருக்கிறது. அது வரை அவர்களால் அவ் வேதனைகளைப் புரிய முடியாதிருக்கிறது. எனக்கேதோ மற்றவரைப்பற்றி புறம் கூறுபவர்கள் ஒரு வித மனோவியாதிக்கு உட்பட்டிருப்பார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

இப்படியான அனுபவங்கள் சில எனக்கும் இருக்கின்றன. அவை நடைபெற்ற காலங்களை திரும்பிப் பார்க்கும் போது இன்று அவை சிரிப்பை வரவழைத்தாலும் அன்று அவை தந்து போன துயரங்களையும், மன அழுத்தங்களையும், அவமானங்களையும் மறக்க முடியாது, மறக்கவும் கூடாது.

சில மனிதர்களால் வேறொரு மனிதனின் மகிழ்ச்சியையும், வெற்றியையும், சாதனைகளையும் தாங்க முடியாத போது அவர்கள் தங்கள் காழ்ப்புணர்ச்சிகளையும் பொறாமையையும் மற்றவரைப் பற்றி அவதூறு பரப்புவதிலேயே காட்ட முயற்சிக்கிறார்கள், காட்டுகிறார்கள் என்பது வேதனைாயான உண்மை என்பதை மறைப்பதற்கில்லை.

இவ்வாறு அவதூறு பரப்புவர்களின் செயல்கள் எந்தளவுக்கு மற்றவரையும், அவரின் குடும்பத்தாரையும், சுற்றத்தையும் பாதிக்கும் என்பதனை இவர்கள் சிந்திக்கும் அளவுக்குக் கூட இவர்களிடம் மனச்சாட்சியோ அல்லது சிந்திக்கும் திறணோ இல்லாதிருக்கிறது என்பது வேதனையே.  சற்று ஆழமாக இது பற்றி சிந்திப்போமானால் அவதூறு பரப்புபவர்களினால் மற்றவரை வெற்றிகாண முடியாது என்பதனையே அவர்களின் செயல் காட்டுகிறது.

இவ்வாறான நாட்களிலேயே நான், வாழ்வில் உற்ற நண்பன் யார்? நட்பு என்னும் பெயரில் உலாவும் முதலைகள் யார், யார் என அடையாளம் கண்டுகொண்டேன். நெருங்கிய நட்பு என்று நினைத்திருந்தவர்களின் சுயரூபம் புரிந்த நாட்கள் அவை. தவறை தவறு என்று நேரே ஏற்றுக்கொண்டு மன்னித்துக்கொள் என்ற நண்பர்களும் உண்டு. இப்படியான நண்பர்களே நட்பின் இலக்கணமாகிறார்கள். தன் தவறை அவர் உணர்ந்திருந்தாலும் தனது செயல் சரியானது என்று  வாதிடும் நண்பர்கள், நண்பர்களே இல்லை என்பேன் நான்.

,சில வருடங்களுக்கு முன் இப்படித்தான், நண்பர் ஒருவரைப் பற்றி ஆதாரமற்ற ஒரு பொய்க்கதை ஊருக்குள் பரவிற்று. நண்பருக்கு அது தெரியவந்த போது மனமொடிந்து போனார். சற்றும் ஆதாரமற்ற, நியாயமற்ற கதை என்பதை அவருடன் பழகிய நாம் அனைவரும் அறிந்திருந்தோம்.

அதன் பின் நண்பரை பேசவைப்பதே பெருங்காரியமாய் இருந்தது. மிகுந்த மன அழுத்தத்திற்கு உள்ளானார். மழையில் நனைந்த கோழி போலானார் பல நாட்கள். அவரால் பல காலங்கள் மீண்டும் பழைய நிலைக்கு திரும்பமுடியவில்லை. பல உரையாடல்களின் பின் அவதூறு பரப்புபவர்களை அழைத்து நேரடியாகவே பேசுவோம் என்னும் முடிவுக்கும் வந்தார்.

அனைவருக்கும் அழைப்பு விடப்பட்டது. ஆனால் எவரும் நேரில் பேசுவதற்கு வரவில்லை. பேடிகள் போல் ஒளிந்து கொண்டார்கள். நண்பரிடம் நான், இதைவிட உன் நியாயத்தை கூற வேறு எதுவும் தேவையில்லை என்று கூறினேன். அவர்களின் வார்த்தைகளில் உண்மையிருந்தால் அவர்கள் இங்கு கூடிப் பேச முன்வந்திருப்பார்களே என்று வாதித்தேன். உண்மையும் அது தானே? அவரும் உண்மையான நண்பர்கள் யார் யார் என்பதை  இச்சம்பவம் உணர்த்தியிருக்கிறது என்றார்.

நண்பரின் மனது சமாதானமடையவில்லை என்பதனை நான் நன்கு அறிவேன். அவர் இவ் வேதனையான காலங்களில் இருந்து மீண்டு வர பல மாதங்களாகலாம். இருப்பினும் நாவினால் சுட்ட வடுக்கள் ஆறியதாய் அறிந்ததில்லை நான்.

சுகத்திலும் துக்கத்திலும் பங்கு கொள்வதே நட்பு. எல்லோருக்கும் இப்படியான நட்புகள் கிடைப்பதில்லை. கிடைத்தவர்கள் அதிஸ்டசாலிகள்.

அப்பாவின் அழகிய ராட்சசி

நேற்று, எனது அப்பாவின் அழகிய ராட்சசியும் எனது அம்மாவுமாகிய சோதிராணியுடன் பேசிக்கொண்டிருந்தேன் . எங்கள் சம்பானையின் சில பகுதிகளை பதிவிடுகிறேன்.


ரிங் போகிறது...
" ஹலோ சோதி  ஹியர்"
"நான் சோதின்ட லவ்வரின் மூத்தமகன் கதைக்கிறேன்"

சிரிக்கிறார்...

"சஞ்சயன் ... தம்பி சாப்பிட்டாச்சா?"
"ம்"
"என்ன சாப்பாடு"
"பாண்"
"கறி?"
"முட்டை"
"வேலைக்கு போறியடா இண்டைக்கு?"
"இல்லை"
"அப்ப என்ன செய்யப் போறாய்?"
" ஒரு தீபாவளி விழாவும், ஒரு partyம் இருக்கிறது அங்கு போய் தண்ணியடிக்க யோசிக்கிறேன்"
"டேய், நீ தண்ணியடிப்பியா"
"கொஞ்சம், ஏன் தண்ணியடிச்சா என்ன கூடாதோ?"
".."
"உங்கட புருசன் அடிக்கேக்க மட்டும் பேசாடமல் இருப்பியள் நாங்கள் அடிச்சா பிரச்சனையே?"
"டேய், நான் அவரோட எப்படியடா இதுகளைக் கதைக்கிறது"
"அது தான் அந்தாள் அப்பவே டிக்கட்  வாங்கீட்டார்"
"டிக்கட் என்டால் என்னடா?"
"அய்யோ.."

பிறகு கதை சற்று அங்குமிங்கும் அலைந்து இப்படித் தொடர்ந்தது

"நேற்று இங்கு ஒரு நல்ல சாத்திரியாரிட்ட உன்ட சாதகத்தை கொடுத்தனான்"
"ஏன் இன்னுமொருக்கா கலியாணம் பேசப் போறீங்களோ"
"உனக்கு 46 வயது, இன்னும் சின்னப் பெடியள் மாதிரித் தான் கதைக்கிறாய், வயதுக்கேற்ற மாதிரி கதையடா"
"சரி, சரி உங்கட சாத்திரியார் என்ன சொன்னவர்?"
"நல்ல காலமாம்"
"யாருக்கு அவனுக்காமே"
"டேய்" ( அதட்டுகிறாராம்)
"உனக்குத் தான்"
"அம்மா, அந்தாளுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க"
"... "
 "அம்மா, அந்தாளுக்கு எவ்வளவு காசு குடுத்தீங்க"
 "... " " உன்ட பிரச்சனைகள் ஒரு வருசத்துக்குள்ள, கெதியில தீருமாம்"
"ஏன் அவர் தீர்ப்பாராமோ"
"டேய், விசரக்கதை கதையாதயடா,  கதையக் கேளுடா"
"ம்... சரி சொல்லுங்க"
"புதிய வேலை, சம்பள உயர்வு எல்லாம் கிடைக்குமாம்"
"வேற"
"நீ பெரியாளாகப் போறியாம்"
"சரி.. அவர் இப்ப எங்க இருக்கிறார்?"
"கொழும்பில தான்"
"அம்மா" ( பாசமாக உருக்கமாக அழைத்தேன்)
"என்னடா" ( அவரும் உருகிவிட்டார்)
"அந்த சாத்திரியார என்ட செலவில் ஒரு வருடம் நான் வைத்திருக்கப்போறேன்"
"ஏன்டா"
"அவர் சொன்ன மாதிரி ஒரு வருடத்தில என்ட பிரச்சனைகள் தீரா விட்டால், அவரின்ட தலையில குட்டி குட்டி கேள்வி கேட்கலாம் தானே.. அது தான்"
"பெரியாக்களை மதியடா" ( சற்று சூடாகிவிட்டார்)
"சரி சரி வேற என்னத்தை சொன்னான் சாத்திரி" ( எனக்குள் எரிச்சல் பிக்கப் ஆகிக் கொண்டிருந்தது)
"அவர் என்று கதை, இல்லாட்டி சாத்திரியார் என்று கதை" (குரலில் கோபம் தெரிகிறது)
"சரி .. சாத்தான் என்ன சொன்னார்"  (நக்கல் கலந்த குரலில்)
"நீ திருந்த மாட்டாய்"
சரி சரி அவர் வேறு என்னு சொன்னார்?
"உனக்கு பதவியுயர்வு நிட்சயமாக கிடைக்குமாம்"
"அதெப்படி இவ்வளவு நிட்சயமாய் சொல்கிறார்?"
"உன்ட சாதகத்தை வடிவா பார்த்து தான் சொன்னவர்"
"அம்மோய்" (மிகவும் உருக்கமாய்)
"என்னடா" ( என்னை விட உருக்கமாய்)
"சாத்திரியார் எனக்கு பதவியுயர்வு என்றது சிவலோகப்பதவியாக இருக்கலாம் தானே?"

கடக் என்று தொலைபேசியை அடித்து வைக்கும் சத்தம் கேட்டது.

அப்பாவின் அழகிய ராட்சசி கோபத்திலிருக்கலாம். ஆனால் நான் இன்று மாலை தொலைபேசி எடுத்தால் எல்லாவற்றையும் மறந்து
" டேய் எப்படா இங்க வருவாய்?" என்பார் ஆசையாய்.
இது தான் எல்லா அப்பாக்களினதும் அழகிய ராட்சசிகளின் அழகு.


கதவைத் திற காற்று வரட்டும் - அம்பலப்படும் ரகசியங்கள்

முன்பொரு காலத்திலே சஞ்சயன் என்றொருவர் நேர்வேயில் வாழ்ந்திருந்தார். இப்போதும் வாழ்கிறார். அவரின் மனச்சாட்சியாகிய நான் எழுதும் ஒரு பதிவு இது.

அவருக்கும் எனக்குமான உறவு ஏறத்தாள 46 வருடங்களானது. எங்களைப் போல் சண்டைபோட்டு சாமாதானமாகியவர்கள் யாராவது இருப்பார்களோ என்பது சந்தேகமே. நாம் நண்பர்களாகவும், எதிரிகளாகவும் இருந்திருக்கிறோம். நான் வென்ற நாட்களும் இருக்கின்றன. என்னை மிதித்து துவைத்து தனது குரோதங்களை, விரோதங்களை அவர் தீர்த்துக் கொண்ட நாட்களும் உண்டு. நன்றும் தீதும் பிறர் தர வாரா!

இன்றைய பதிவு முன்பொரு காலத்தில் எமக்குள் நடந்த யுத்தத்தினைப் பற்றியது. அதில் அவரே அன்று வென்றார். பல ஆண்டுகளின் பின்னான ஒரு நாள், நான் அச் சம்பவத்தைப் பற்றி எழுதப்போகிறேன் என்றேன். எழுது என்றார, சில வாரங்கள் சிந்தித்த பின். ஆக இறுதியில் அந்த யுத்தத்திலும் வெற்றி பெற்றது நான் என்பதில் எனக்குப் பெருமையிருக்கிறது. நான் என்றெல்லாம் வெற்றிபெறுகறேனோ அன்றெல்லாம் அவரும் வெற்றிபெறுவதாகவே நான் நினைக்கிறேன். ஆனால் அவரால் அதை ஜீரணிக்க முடியாதிருக்கும் சில பல சந்தர்ப்பங்களில்.

அந் நாட்களில் அடிக்கடி தொழில் நிமித்தமாக வெளிநாடு பயணமாக வேண்டியிருக்கும் அவருக்கு. இன்று பலராலும் கஜனி அல்லது சஞ்சய் ராமசாமி என்று செல்லமாக அழைக்கப்படும் அவருக்கு, அந்தக் காலத்தலேயே ஞாபகமறதி என்னும் நோய் அவர் உடலினுள் மெல்லப் பரவியிருந்தது.

ஒரு முறை போலந்து நாடு சென்று திரும்பிக்கொண்டிருந்தார். விமானம் 6 - 7 மணிநேரம் தாமதமாகி வந்து சேர்ந்து. வீடு வந்து சேரும் போது மேலும் 2 மணிநேரங்கள் தாமதமாகியிருந்தன. நம்மவருக்கோ பலத்த அலுப்பு. வெய்யில் காலமாகையால் பயணக்களைப்பு, வெக்கை இரண்டும் சேர்ந்து உடனே குளிப்பதற்கு அவரை உந்திக் கொண்டிருந்தன.

நமது கதாநாயகன் தனது மறதியின் மீது கடும் பயம் கொண்டவர். எனவே பயணங்களின் போது எப்போதும் அவரது கடவுச் சீட்டு அவரது காட்சட்டை பையினுள்ளே இருக்கும். அது அவருக்கு ஒரு பாதுகாப்பு உணர்வைத் தருவதை மறுப்பதற்கில்லை. அன்றும் அப்படித்தான் கடவுச்சீட்டு காட்சட்டைப் பையில் இருந்தது. குளிக்க முதல் உடைகளை அகற்றி அவற்றை உடுப்புக்கழுவும் இயந்திரத்தில் இட முதல் மறக்காமல் கடவுச் சீட்டை எடுத்து உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே வைத்தார்.

அவரின் உடுப்புக்கழுவும் இயந்திரத்துக்கு மேலே உடுப்பு காயவைக்கும் இயந்திரம் இருந்தது. இவ் இரண்டு இயந்திரங்களுக்கும் இடையில் மிகச் சிறிய இடைவெளி இருந்தது. கடவுச்சீட்டை அங்கு தான் செருகி வைத்தார். வெளியில் அரைவாசியும் உள்ளே அரைவாசியுமாக கடவுச்சீட்டு இருந்தது. உடுப்பு கழுவும் சவர்க்கார தூளை இயந்திரத்தினுள் இட்டு இயந்திரத்தை இயக்கிவிட்டு குளித்து உடைமாற்றி, உண்டு களித்து, இளவரசிகளுடன் விடையாடி ஓய்ந்து தூங்கிப்போனார் நம்ம ஹீரோ.

உடுப்புக்கழுவும் இயந்திரம் இயங்க இயங்க கடவுச்சீட்டு மெல்ல மெல்ல நகர்ந்து இரண்டு இயந்திரங்களுக்கும் நடுவில் போய் ஔிந்து கொண்டது. நம்மவரும் கடவுச் சீட்டை  சுத்தமாக மறந்து போனார். நாட்கள் ஓடின. கடவுச்சீட்டு ஒளிந்த இடத்தில் இருந்த வெளியே வரவில்லை. இவரும் அதை தேடவில்லை. ஏறத்தாள ஓரு மாதத்தின் பின் திடீர் என்று ஒரு நாள் மீண்டும் வெளிநாடு போகவேண்டி ஏற்பட்டது.

கடவுச்சீட்டை தேடினார். தேடினார். வீட்டின் எல்லைவரை சென்று தேடினார். கத்தினார், குதித்தார், அவருக்கே உரித்தான பாணியில் குழந்தைகளை வெருட்டினார். குழந்தைகள் இது சோடா போத்தல் மாதிரி.. திறந்து சற்று நேரம் புஸ்ஸ் என்று காற்று வரும் பிறகு அடங்கிவிடும் என்பதை உணர்ந்தவர்கள். அவர்கள் இவரைக் கண்டுகொள்ளவே இல்லை.

அடுத்தது அதே வீட்டில் இன்னொருவர் இருந்தார். அவருக்கும் இவருக்கும் வீட்டுக்கு வீடு வாசல்படி போல அடிக்கடி வெடிக்கும, அடங்கும். கடந்த சில நாட்களாக வெடித்துக்கொண்டிருந்தது. அதையும் சோர்த்து
 ”நீ தான் எடுத்து அதை விற்றிருக்கிறாய் என்றார்” நம்மவர்
பதிலுக்கு பார்வையால் இவரை எரித்தார் அவர்
இவர் திட்டினார் அவரை
உனது தம்பியை வெளிநாட்டுக்கு எடுக்க அதை இலங்கைக்கு அனுப்பிவிட்டாய, உனது குடும்பமே கொள்ளைக்காரர்கள என்றதும் தொடங்கியது குத்தாட்டம்.
குழந்தைகள் போய் படுத்துவிட்டார்கள்.
நம்மவரின் வாயால் அன்று வந்த வார்த்தைகளை என்னாலேயே சகிக்க முடியவில்லை. எனவே அவற்றை தவிர்த்து விடுகிறேன் இங்கு.

மற்றவர் குற்றம் சாட்டப்பட்டு, வார்த்தைகளால் காயப்படுத்தப்பட்டு கண்ணை கசக்கியதும் நம்மவருக்கு வெற்றியின் வெறியும் மமதையும் அதிகமாகி அன்றைய நாளை தனது வாழ்வின் மறக்க முடியாத நாளாக மாற்றிக் கொண்டார். நானும் பேசிப் பார்த்தேன். பச்சைத் தூஷணத்தால் திட்டினார் என்னை. அடங்கிவிட்டேன் நான்.

போலிஸ் சென்று புது கடவுச் சீட்டு பெற்றுக் கொண்ட பின்பும்  இந்த கடவுச்சீட்டு விடயம் ஏறத்தாள பல மாதங்கள் ஏறக்குறைய தினமும் நடந்தது.   மற்றவரும் இப் பிரச்சனையை எடுத்ததும் தேவைக்கு அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். மற்றவரை எரிச்சல் மூட்ட இதையே  இதையே ஆயுதமாக எடுத்தார் நம்மவர்.

அதே வேளை நம்மவரின் வீட்டுக்கு ஒருவர் வந்து போவார். அவர் ஆட்கடத்தல் தொழிலில் இருந்ததாகவும் வதந்தயிருந்தது. நம்மவர் அவரையும் சந்தேகப்பட்டார். திட்டினார். அறுவான் என்றார். ஊருப்படமாட்டான் என்றார். பச்சைத் தூஷணத்தாலும் திட்டித் தொலைத்தார். நான் இரண்டு காதுகளையும் பொத்திக்கொண்டேன்.

நான் பேச முற்படும் போது என்னையும் அநியாயமாய் அடக்கினார். ஆனால் நம்பவரின் வீட்டை விட்டு வெளியில் குறிப்பிட்ட நபரின் பெயரை மறந்தும் உச்சரிக்கவும் இல்லை, புறம் பேசவும் இல்லை.  ஆதலால் நான் பெரு மகிழ்ச்சியடைந்தேன் என்பதும் உண்மைதான்.

பின் பொருநாள் நம்மவரின் உடுப்புகழுவும் இயந்திரத்தை பழுது பார்ப்பதற்காய் வேறு இடம் மாற்றிய போது ஒளிந்திருந்த கடவுச்சீட்டு வெளியில் வந்த போது நம்மவர் முகத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. மனிதா் தலையைக் குனிந்துகொண்டார். நான் அருகில் சென்று தோளில் கை போட்டுநாம் சற்று பேசலாமா என்றேன்.  தர்ம அடி வாங்கிய வடிவேலு போல் மிகப் பரிதாபமாய் பார்த்தார் என்னை.

அவரை அழைத்துக் கொண்டு வெளியில் சிறு நடை சென்று வந்த பின் வீட்டில் இருந்த மற்றவரிடம் வேண்டா வெறுப்பாய்  மன்னித்துக்கொள் என்றார். மாபெரும் கொளரவப் பிரச்சனையல்லவா எனவே  ஒரு சொல்லுடன் அடங்கினார் நம்மவர். நானும் பெரிதாய் எதையும் பேசவில்லை. அவர் தன் தவறை உணர்ந்ததே எனக்கு போதுமானதாய் இருந்தது.

அதன் பின்னான காலங்களில் நம்மவர் மற்றையவரிடம் ” மறதில அங்க இங்க வைக்கிறது பிறகு என்ட குடும்பத்தை இழுத்து திட்டுறது” என்று வாங்கிக் கட்டும் போதெல்லாம் நம்மவர் குனிந்த தலை நிமிராதிருப்பார்.

இது நடந்ததன் பின் எவரையும் ஆதாரமின்றி திட்டுவதை நிறுத்தியிருக்கிறார் நம்மவர். எனவே நானும் அவரிடம் இவ்விடயம் பற்றி பேசுவதை நிறுத்தியிருக்கிறேன். இது பற்றி உங்களுடன் பேச நான் பல காலமாய் முயற்சித்திருந்தாலும் அனுமதி கிடைத்து சில நாட்களே ஆகின்றன. ஆக நம்மவர் நாள் போக போக சிறுது சிறிதாய் பண்படுகிறார் என்றே யோசிக்கத்தோன்றுகிறது எனக்கு. உங்களுக்கு?

உங்களுக்குள்ளும் எனது உறவினன் ஒருவன் இருப்பதாக அறிகிறேன். விரும்பினால் பேச அனுமதியுங்கள்.

என்னைப் பேச அனுமதித்த அவருக்கும், கதையை கேட்ட உங்களுக்கும் நன்றி.


இன்றை நாள் மிகவும் நல்லது!

தலைப்பு பற்றி தயவு செய்து திட்டாதீர்கள். மன்னித்தருளுங்கள் .. கூல் மாமு கூல்

கொலையாகாமல் மீண்ட நட்பு

ஒவ்வொரு தனி மனிதனும் தனக்குள் சுயமாய் சிந்திக்க, இயங்க சுதந்திரமாய் மூச்சுவிடும் இடைவெளி வேண்டும் என்பதை நான் புரிந்துகொண்டிருக்கிறேன். அதற்கேற்ப மற்றையவர்களின் பிரச்சனைகளுக்குள் தேவைக்கு அதிகமாக தலைபோடுவதில்லை நான். எதற்கும் ஒரு எல்லை உண்டு அல்லவா?

பெற்றோர்கள் - பிள்ளைகள், கணவன் - மனைவி, காதலன் - காதலி, நண்பர்கள் இப்படியான உறவு நிலைகளில் கூட தனிமனிதனுக்கு வேண்டிய மூச்சுவிடும் இடைவெளி இருப்பது அவசியம் என்பது என் கருத்து.

மற்றயவர்களின் வாழ்வை நாம் வாழ முடியாது என்பது எவ்வளவு உண்மையோ அதே போல் எங்கள் எண்ணங்களையும் கருத்துக்களையும் மற்றவர்களிடம் திணிக்கக்கூடாது. நாம் ஒருவருக்கு அறிவுரை வழங்கலாம், நன்மை தீமை பற்றி விளக்கலாம், வழிகாட்டலாம் ஆனால் குறிப்பிட்ட விடயம் பற்றி முடிவெடுப்பது அவரின் தனி உரிமை. அதனுள் தலையிட நமக்கு உரிமையில்லை என்பதே எனது கருத்து. சிறு குழந்தைகளைப் பற்றி நான் இங்கு பேசவில்லை. வளர்ந்தவர்களைப் பற்றியே பேசுகிறேன்.

எனக்கு தெரிந்த ஒரிடத்தில், ஒருவர் மிகவும் நாகரீகமற்ற முறையில் ஒருவரைப் பற்றி பேசுகிறார்.  இது பெரும் பிரச்சனையாக  வெடித்த போது குறிப்பிட்ட நபர் தனது வாழ்க்கைத்துணை தனக்கு சார்பாக பேசவேண்டும் என்கிறார். அவரின் வாழ்க்கைத் துணையோ இல்லை, எனது கருத்தின் படி தவறு உன் மீது இருக்கிறது, எனவே நான் எனது கருத்தையே வலியறுத்துவேன் என்கிறார். இதுவே பெரும் பிரச்சனையாக வெடித்து ஓய்ந்தது.

வாழ்க்கைத் துணை ஏதும் தவறு செய்யுமிடமிடத்தில் அதை பிழை என்று சொல்வதனால் குறிப்பிட்ட நபர் வாழ்க்கைத் துணையை ஆதரித்து தனது கருத்தை சொல்லவில்லை என்று கூறலாமா? அப்படி கூறினால் தான் அது உண்மையான உறவின் வெளிப்பாடா? இல்லை என்பேன் நான்.

எனக்கேதோ அதில் எற்பில்லை. செய்யப்பட்ட பிழையை ஒருவரின் பகுத்தறிவு பிழை என்கிறது. அவர் அதை நிமிர்ந்த நெஞ்சுடன் தனது துணைக்கு சொல்வதிலேயே உண்மையான புரிந்துணர்வும், நியாயமும் இருக்கிறது என்பேன் நான். அதைத் தவிர்த்து பிழையை சரி என்று வாதிக்கும் போது நியாயமும், உண்மையான அன்பும் தோல்வியுறுகின்றன அங்கு.

தவறை தவறு என்று சொல்வதில் தானே உண்மையான நட்பு, ஏனைய உறவுகள் பலமடையும்? இல்லையா?

இதே போன்று தான் சில நண்பர்களும் தமது நண்பர்கள் தமது தமது எத்தகைய செய்கையையும் ஆதரவளிக்க வேண்டும் என்று எதிர் பார்க்கின்றனர். ஒரு வேளை அவர்களின் நண்பர் அவர்களின் கருத்துக்கு எதிர்கருத்தினை கொண்டிருந்தாலே நண்பர்கள் கண நேரத்துக்களுள் பகைவர்களாகிப்போகின்றனர்.

மிகவும் ஆறுதலாக சிந்தித்துப் பார்த்தால் இப்படியான நேரங்களில் நாம் மற்றவர்களை சிந்தித்து செயற்பட அனுமதிக்கிறோம் இல்லை என்பதும் எமது கருத்தை ஒரு வித வன்முறையு‌டன் அவர்கள் மீது திணிக்கிநோம் என்பதும் புரியும். அதாவது அவர்களின் ”மூச்சுவிடும் இடைவெளியை” நாம் தடைசெய்கிறோம். இதனால் பல பிளவுகள் உறவுகளுக்கிடையில் ஏற்பட்டுவிடுதை நாம் மறுப்பதற்கில்லை.

இன்று நெருங்கிய நண்பர் ஒருவர் எதிர்பாராத ஒரு பெருந்துன்பத்தில் மாட்டிக்கொண்டார் என்பது அறியக்கிடைத்தது. அப்போது நான் அவருடன் நின்றிருந்தேன். என் மனமோ அவர் அதைப் பற்றி என்னுடன் பேசுவார் என்று எதிர்பார்த்தது. அவரோ ஏதும் போசாமல் நான் விடைபெறுகிறேன், எனது மனது சரியில்லை என்று கூறிவிட்டு சென்றுவிட்டார்.

எனது மனம் காயப்பட்டுப்போனது. மிகவும் நெருங்கிய நண்பர். எம்மிடையே ஒளிவு மறைவு இல்லை. எனது  நாற்றங்கள் அனைத்தையும் அவர் அறிவார். அவரின் வாழ்க்கையின் சகல பாகங்களையும் நான் அறிவேன். இப்படி இருக்க இவர் என்னிடம் ஏன் இதைப் பற்றி கூறவில்லை என்று என் மனது என்னை கேள்வி கேட்டுக் கொண்டேயிருந்தது. அவர் மீது பலத்த எரிச்சலும் வந்தது. பின்பு அவர் என்னிடம் பேசிய போது எரிந்து விழுந்தேன் ‌அவர்‌ மீது.

இது பற்றியே நாள் முழுவதும் சிந்தித்துக்கொண்டிருந்தேன். நெஞ்சு முழுவதும் ஏதோ ஒரு வித சோகத்தில் மூழ்கிக் கிடந்தது. அவரின் செய்கையை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. பலத்த எரிச்சலில் உளன்றுகொண்டிருந்தேன். நண்பனிடம் பகிர முடியாத ரகசியம் என்ன இருக்கிறது. நம் நட்பு உண்மையான நட்பா என்று எனக்குள் புழுங்கிக் கொண்டிருந்தேன்.


சற்று நேரம் தூங்கி எழுந்ததும் மனம் சற்று இலகுவாய் இருந்தது. இருப்பினும் நண்பரின் செய்கை பற்றியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். திடீர் என ஞானம் பிறந்தது போலிருந்தது எனக்கு.

நண்பரின் தனி மனித சுதந்திரத்துக்குள் நான் தாம்.. தோம் என்று குதித்துக்கொண்டிருப்பதை உணர்ந்தேன். பிரச்சனை எனக்கில்லை. அவருக்குத் தான். அது பற்றி யாருக்கு சொல்வது என்பதை முடிவெடுப்பதும் அவர் தான் என்பது சிறிது சிறிதாய் முளைக்குள் புகுந்திருந்த போது மனம் இலகுவாகிப் போனது. எனது முட்டாள் தனத்தை எண்ணி நொந்து கொண்டேன்.

நண்பர் வேதனையில் வாடும் போது அதற்கு ஆறுதலாயிருப்பதே பண்பான செயல், அதைத் தவிர்த்து அவர் மீது அர்த்தமில்லா கோபத்தை காட்டுவது எனது நட்பை கேவலப்படுத்து போலானது என்பதை உணர்ந்துகொண்டேன். என் மனதும் இலகுவாகிப் போனது.

நண்பருக்கு ஒரு அழகிய பூங்கொத்து  பரிசளித்து உன் சிக்கல் தீர வாழ்த்துகிறேன் என்றேன். தொலைபேசியல் நேரம் வரும் போது நிட்சயமாய் இது பற்றி உன்னுடன் பேசுவேன் என்றார். அதை முடிவு செய்வது நீ என்றேன். அவரின் சிறிது நேர மௌனம் நம் நட்பும், உறவும் எத்தகையது என்று எனக்குணர்த்திப் போனது.

சில நேரங்களில் மெளனத்தின் மொழி பல வார்த்தைகளை விட அர்த்தமுள்ளதாகிறது.

மூச்சுவிடும் இடைவெளி என்பது எல்லோருக்கும் அவசியம். அதை மற்றவருக்கு வழங்குவதன் மூலம் நாம் உறவுகளை வளர்த்துக் கொள்ளலாம் என்பதற்கு இன்றைய சம்பவம் ஒரு சாட்சியாகிறது.

இன்றைய நாளும் நல்லதே!

மனதின் எச்சரிக்கைகளும் சில மனிதர்களும்

மனிதர்களை எடைபோடுவது ஒரு கலை. அது எனக்கு இன்னும் முழுமையாக கைவரவில்லை போலவே இருக்கிறது. எவரைப் பார்த்தாலும் நம்பலாம் போலிருக்கிறது. அதிகமாக நம்பியும் விடுகிறேன். ஆனால் அந் நம்பிக்கைகள் பொய்த்துப் போகும்போது என்னில் எனக்கு பலத்த எரிச்சல் வருகிறது. ஆனால் சிலரின் கண்களைப் பார்த்தவுடனேயே மனது பலமாய் எச்சரிக்கை மணியடிக்கிறது, அடித்திருக்கிறது. அப்படி எச்சரிக்கை மணியடித்த பின்பும் நான் ஏமாந்திருக்கிறேன். இதன் காரணமாக மனிதர்களை நான் தேவைக்கு அதிகமாகவே நம்புகிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது. எவ்வளவு ஜாக்கிரதையாக இருந்தாலும் ஏமாற்றம் என்னும் சுவரில் அடிக்கடி மோதி மூக்குடைபட்டுக் கொண்டிருக்கிறேன்.

பல வருடங்களுக்கு முன் நோர்வேயி்ல் ஒரு இடத்திற்கு குடிபெயர நேர்ந்தது. அங்கு ஒரு தமிழர் இருந்தார். வரை நான் நேரடியாக சந்திக்க முதலேயே அவர் பற்றி கேள்விப்பட்டிருந்தேன். ஏனோ அவரின் மேல் எனக்கு நல்ல அபிப்பிராயம் உருவாகவில்லை. அவரை சந்தித்த போதும் இருவரும் பெரிதாய் பேசிக் கொள்ளவும் இல்லை. நானும் முகத்தை இறுக்கமாய் வைத்துக்கொண்டேன். அவரும் என்னைக் கவனிக்கவில்லை.  இந் நிகழ்ச்சியும் அவர் பற்றிய எனது கணிப்பை உறுதி செய்வதாகவே இருந்தது. பல காலங்கள்அவர் மீதான எனது கணிப்பு மாறாமலே இருந்தது.

ஆனால் 15 வருடங்களின் பின் நான் அவ்விடத்தை விட்டு இடம்பெயர்ந்த பின்னால் அந்த 15 வருட வாழ்வினை நினைத்துப் பார்க்கும் போது அவரே எனது மனதுக்கு நெருங்கியவராக இருக்கிறார். நாம் நண்பர்களாவதற்கு சில காலங்கள் எடுத்தது. நெருங்கிய நண்பர்கள் என்று சொல்ல முடியாது. ஆனால் எமக்கிடையே புரிதல் இருந்தது. நான் தடுமாறி விழுந்தெழும்பிய போதெல்லாம் கைகொடுத்துதவியவர். பேச்சுத் துணையாய், அறிவுரை கூறுபவராய், நண்பனாய் வந்து பேருதவி புரிந்தவர். அவரிடம் இருந்து நான் கற்றுக்கொள்ள எவ்வளவோ இருக்கிறது. இப்படிப்பட்ட ஒருவரை நான் தவறாகக் கணித்திருந்தை நினைத்தால் எனக்கே என்மீது எரிச்சல் வருகிறது.

இன்னொருவர் இருந்தார், இருக்கிறார். நாம் நெருங்கிப்பழகுவதும் இல்லை. அடிக்கடி பேசிக்கொள்வதும் இல்லை. ஊருக்குள் மிகவும் பிரபல்யம் அடைந்தவர். வயதானவர், அனுபவமிக்கவர், நியாயமான மனிதராய் இருப்பார் என்று நினைத்திருந்தேன். அவரது தோரணையைப் பார்த்து. நடையுடை பாவனையும் அப்படியே இருந்தது.

எமக்குள் சில விடயங்களில் கருத்து வேறுபாடு இருந்தது. இருப்பினும் இருப்பினும் மனிதன் சக மனிதனுடன் பேசலாம் என்னும் மிக இலகுவான சித்தாந்தத்தை பின்பற்றுபவன் நான். எனவே எவ்வித உள்நோக்கமும் இன்றி மிகவும் நட்பாகவே பழக விரும்பினேன். பழகினேன். பலர் என்னை எச்சரித்திருந்தாலும் தீர ஆராயமல், அவர் பற்றி ஒரு வித கெட்ட அபிப்பிராயத்தை அவர் மீது கொள்ள அன்று என் மனம் ஒப்பவில்லை.

ஆனால் சில காலங்களின் பின் அவரது நடவடிக்கைகள் இவரும் ஒரு பெரிய மனிதரா? இவரயா சமூகம் தூக்கிப்பிடிக்கிறது என்னுமளவுக்கு அவரது செயல்கள் இருந்தன.

தமது கருத்துக்களுக்கு மாற்றான கருத்தக்களை கொண்டவர்களை சற்றேனும் மதிக்க வேண்டும் என்பதையாவது அவர் உணர்ந்திருந்தால் நான்  ஆறுதல்பட்டிருப்பேன்.

ஆனால் அவர் மீது, அவரின் கொள்கைகள் மீது, அவரின் பெரிய மனிதத்தன்மையின் மீது நான் பரிதாப்படும் அளவுக்கு அவர் நடவடிக்கைகள் இருந்தன. முக்கியமாக ”புறம் சொல்லல் ஆகாது” என்பதை அவர் அறியாதிருந்தார். சிலவற்றை கேட்கக்கிடைத்த போது அவர் மீதிருந்த மரியாதை குறைந்து போயிருந்தது.

மேற்கூறிய இரண்டு  சம்பவங்களும் நான் மனிதர்களை பிழையாக எடை போட்டதையே காட்டுகின்றன. பல ஆண்டுகளுக்கு முன் ஒரு சமயம் ஒருவரைக் கண்டதும் மனம் அருகில் செல்லாதே, தூர விலகிப் போ என்றது. ஆயினும் ‌ஒரு பெரிய மனிதரின் வேண்டுகோளுக்காக குறிப்பிட்ட நபருடன் பழக வேண்டியேற்பட்டது. அதுவும் ஒரு சில மணி நேரங்களே பழகினேன். என் மனது எச்சரித்தது சரி என்பதை உணர்த்திப் போனார் மனிதர் மிக குறுகிய நேரத்தில்.

அப்போது நான் இந்தியாவில் வாழ்ந்திருந்தேன். அம் மனிதரை ஒரு அலுவலகத்திற்கு அழைத்துப்  சென்று அவருக்கு தேவையான உதவியினைச் செய்யுமாறு என்னை ஒரு பெரியவர் கேட்டுக் கொண்டார். என்னால் மறுக்க முடியவில்லை. குறிப்பிட்ட நபருடன் புறப்பட்டேன். பஸ்ஸில் போவது என்று முடிவாகியது. அவரை பயணச்சீட்டு எடுங்கள் என்று கேட்டுக் கொண்டேன். ஆம் என்று தலையாட்டினார்.  பஸ் பயணத்தின் போது டிக்கட் பரிசோதகர்கள் என்னிடம் டிக்கட் கேட்ட போது அவரைக் காட்டினேன். அவரோ தன்னிடம் எனது டிக்கட் இல்லை தன்னிடம் இருப்பது தனது டிக்கட் என்றார். அவமானப்பட்டு வீடு வந்த போது என் மனதின் எச்சரிக்கையை நான் கவனிக்காதிருந்திருக்கிறேன் என்பது நன்கு புரிந்திருந்தது. ஆனால் அவரை நான் சரியாக எடை போட்டிருந்தேன் என்பது தற்போதும் ஆறுதலைத் தருகிறது.

இப்போதெல்லாம் ஓரளவு என் மனதின் எச்சரிக்கைகளை கேட்கத் தொடங்கினாலும் மனிதர்களை நம்பி ஏமாறும் தன்மை மட்டு்ம் மாறாதிருக்கிறது இன்னும்.

அப்படியே இருந்து விட்டு போகட்டும் என்று உள்ளாற விரும்புகிறேனோ என்னவோ. பல மனிதர்களுடன் நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என்பதே எனக்கு போதுமாய் இருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே!