அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி

மாசி மாதம் 2014 ல் மலைகள் இணையத்தளத்தில் வெளிவந்த எனது பதிவினை இங்கு இணைத்திருக்கிறேன்.
 -------------------------------------------------------------------------------------------
அன்பான எனது பூக்குட்டிக்கு!

நாளை உனக்கு பிறந்தநாள். வாழ்க்கையின் அற்புதமான பதின்மகாலங்களுக்குள் வாழப்போகிறாய் நீ. ஆனால் எனக்குள் இன்னும் நீ சிறு குழந்தையாகவே இருக்கிறாய். நீ வளர்ந்துகொண்டிருந்தாலும், எனக்குள் உன்  வயது இன்னும் மிக மிகக் குறைவாகவே இருக்கிறது. உண்மையைச் சொன்னால் நீ வளர்வதை நான் விரும்பவில்லையோ என்றே எண்ணத்தோன்றுகிறது.

நாம் ஒன்றாய் வாழ்ந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இருப்பினும் எனக்கு  நீ தந்துபோன 8 இனிமையான வருடங்களும் நிலத்தடி நீர்போன்று தினமும் என்னை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கின்
றன. வற்றாத நிலத்திடி நீர் நீர் அது. எனக்குள் நான் உன்னையும், உன் அக்காளையும் பிரிந்த காலம் உறைந்துவிட்டிருக்கிறது போன்றே உணர்கிறேன். எனக்குள் நீ இன்னமும்  8 வயதுக் குழந்தையாகவும், அக்காள் 12 வயதுக் குழந்தையாகவுமே இருக்கிறீர்கள்.

2000ம் ஆண்டு இந்நேரம் உன் வரவை எதிர்பார்த்தபடியே வடமேற்கு நோர்வேயின் ஒரு வைத்தியசாலையில் தூங்கிவழிந்துகொண்டிருந்தேன். நீ இவ்வுலகுக்கு இரத்தமும் சதையுமாய் வந்திறங்கியபோது உன்னை வரவேற்றவர்களில் நான் முதன்மையானவன் என்பதில் எனக்குப் பெருமையுண்டு. உன்னை முதன் முதலில்  தொட்டுணர்ந்தவன் என்னும் பெருமைக்குரியவன் நான். அன்றுவரை ஒரு இளவரசிக்கு தகப்பனாய் இருந்த நான், நீ வந்ததும் இரு இளவரசிகளுக்கு தகப்பனானேன். என்னை காலம் தனது தோளில் பேரரசன்பொன்று தூக்கிச்சென்ற நாட்கள் அவை.

அந்நாட்கள் அத்தனை இனிமையானவை. இன்றைய நாட்கள் வறண்டுபோகும் என்று, காலம் ஏற்கனவே கணித்திருந்ததால், அவை அத்தனை தித்திப்பாய் இருந்தனவா? உன்னை நெஞ்சிலும், அக்காளை கையினுள்ளும் அணைத்தபடியே தூங்கிப்போன நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். அற்புதங்கள நிறைந்த காலங்கள் அவை. இவ்வுலகில் எனது பாடல்களைக் கேட்டபடியே தூங்கிப்போனவர்கள் நீங்கள் இருவரும் மட்டுமே. நீங்கள் தூங்கிப்போனதும் உங்களின் அமைதியான தூக்கத்தையும், ஆழமான மூச்சையும் பார்த்தபடியே இருந்திருக்கிறேன். கண்முடித் தூங்கும் உங்களின் சீரான மூச்சொலியில் மயங்கிக்கிடந்திருக்கிறேன்.

நீயோ கைசூப்பாது தூங்கமாட்டாய். உனக்குத்தெரியாமல் தினமும் உனது வலதுகட்டைவிரலை உன்வாயில் இருந்து வெளியில் எடுத்துவிடுவேன். அக்காளும் அதையே செய்வாள். இருப்பினும் மீண்டும் நீ கைசுப்பியபடியே தூங்கிப்போவாய். உனக்கு  5 - 6 வயதான பின்பும் நீ எனக்கு ஒளித்து ஒளித்து கைசூப்பியதை நான் நடு இரவுகளில் உன்னை பார்க்கும் போது கண்டிருக்கிறேன். அதன் பின்பான காலங்களில் ”அப்பா, கைசூப்புவதை எப்படி நிறுத்துவது என்று என்னைக் கேட்டிருக்கிறாய். நான் நீ தூங்கும்போது உனது கையை தடிவியபடியே கதைகள் பல ‌கூறி உன்னை தூங்கவைக்கும் போது ஆரம்பத்தில் ஒத்துழைக்கும் நீ, தூக்கத்தின் மயக்கத்தில் என்னை திட்டியதுண்டு. நானும் கோபப்பட்டதுண்டு. இன்று மட்டும், இன்று மட்டும் என்று  கெஞ்சியபடியே நீ என்னை பல நாட்கள் ஏமாற்றியதுமுண்டு. ஏமாந்த சோணகிரியாய் நானும் நடித்ததுண்டு. உங்களிருவரினதும் முத்தமழையினால் சளிப்பிடித்து கிடந்த நாட்கள் அவை.

கடந்துபோன உனது பிறந்த நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். நீ பட்டியலிடும் பொருட்களில் முடியுமான அனைத்தையும் உனக்கு வாங்கித்தரவே விரும்புவேன். உனது பட்டியல் எப்போதும் உன் அழகிய பேச்சுப்போலவே நீண்டிருக்கும். சில நாட்களில் அக்காளின் கண்கள் பொறாமையால் சிவந்ததையும் கண்டிருக்கிறேன். அதேபோல் அக்காளின் பிறந்தநாட்களின்போது நீயும் பொறாமையால் சிவந்திருக்கிறாய்.  உங்களிருவரையும் சமாதானப்படுத்தும் கலை எனக்கு கைவந்திருந்ததால் உங்கள் கோபங்கள் பற்றி நான் கவலைப்பட்டதில்லை.

வாழ்க்கையின் வீரியம் இன்று என்னை ஒரு தந்தையாய் நான் தோல்வியுற்றிருக்கிறேன் என்றே எண்ணவைக்கிறது. உண்மையும் அதுவே. கடமை தவறிய குற்றவுணர்ச்சியொன்று எப்போதும் நிழல்போன்று என்னைத்தொடர்ந்துகொண்டே இருக்கிறது. தினமும் நான் அதன் முன் தலைகுனிந்தபடியே நிற்கிறேன். வாழ்க்கை முழுவதும் நான் தலைகுனிந்திருக்கும் நீதிமன்றம் அது. இத்‌தோல்வி என்னை நிழல்போல தொடர்ந்துகொண்டே இருக்கும் என்பதையும் புரிந்துகொண்டிருக்கிறேன்.

இதைக் கூறுவதில் வெட்கமில்லை எனக்கு. தோல்விகளை ஜீரணிக்கவும், ஏற்றுக்கொள்ளவும் பழகிக்கொள். அப்போதுதான் அவற்றில் இருந்து மீண்டுகொள்ள முயற்சிக்கலாம். அதேபோல் வெற்றிகள் எப்போதும் தொடர்ந்துகொண்டிருக்காது என்பதையும் நீ புரிந்துகொள்ளவேண்டும்.

உங்களைப் பிரியநேரிட்டது, எனது வாழ்வின் மிகப் பெரிய தோல்வி. அதற்கு  அகக்காரணிகள், புறக்காறணிகள் என்று எத்தனையோ காரணங்கள் இருக்கிறன என்று கூறி, அதிலுள்ள எனக்கான பங்கை நான் இலகுவாக எட்டிக்கடந்துவிடக் கூடாது. என்னிலும் பல தவறுகளும் இருக்கின்றன. அவற்றை நான் ஏற்றே ஆகவேண்டும். சுயவிமர்சனம் செய்துகொள்ளவேண்டும். தவறுகள் அற்ற மனிதன் அல்ல நான். நன்றும் தீதும் கலந்தவனே நான். எனது தவறுகளை, நான் கடந்துவந்த காலம் எனக்குக் கற்பித்திருக்கிறது.

நேருக்கு நோ் எதையும் பேசுவது, அதீத முன்கோபம், சற்றே அதிகமான ஈகோ, பிடிவாதம், பொறுமையின்னை, முட்டாள்த்தனமான இரக்கம், சுயத்தின் ஒடுக்குதலை மறுப்பது இப்படியானவற்றின் கலவையே நான். எனது பலவீனங்கள் உங்கள் இருவரின் வாழ்க்கையை பெரிதும் பாதித்திருக்கிறன. என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். உங்களது குழந்தைக்காலங்கள் மகிழ்ச்சியாய் இருந்த அளவு வேதனையாயும் இருந்திருக்கின்றன.

வாழ்க்கை என்பது எவ்வளவு வீரியமானது என்பதையும், இருமனிதர்களுக்கிடையிலான உறவு என்பது எவ்வளவு சிக்கலானது என்பதையும் நீங்கள் இருவரும் வாழ்ந்து கழிக்கும்போது உணர்ந்துகொள்வீர்கள். உங்கள் வாழ்வில் பிரச்சனைகள் வராதிருக்கவேண்டும் என்று நான் விரும்பலாம். ஆனால் யதார்த்தம் அதுவாயிருக்காது. எனவே உங்களை தயார்படுத்திக்கொள்ளுங்கள், வாழ்வின் சகல பகுதிகளையும் வரவேற்றுக்கொள்ள. எனது தவறுகளில் இருந்தும் கற்றுக்கொள்ளுங்கள்.

இந்த உலகில் வாழ்ந்த, வாழும் எல்லோரையும் வாழ்க்கை, தன்னிஸ்டத்துக்கு இழுத்து பந்தாடியபடியே சென்றுகொண்டிருக்கறது. நீங்களும் நிட்சயமாக ஒரு நாள் பந்தாவீர்கள். நான் பந்தாடப்பட்டு நிமிர்ந்து நிற்க முயற்சிக்கும்போது வயது 48ஐ கடந்துகொண்டிருக்கிறது. நான் எடுத்துக்கொண்ட சில முடிவுகள் உங்கள் இருவரின் வாழ்க்கையை மட்டுமல்ல, என்வாழ்க்கையையும் தலைகீழாய் புறட்டிப்போட்டிருக்கிறது. ஆனாலும் எனது முடிவில் இருந்து நீங்களும் நானும் நன்மை, தீமை இரண்டையும் சந்தித்திருக்கிறோம், கற்றிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன். பிரச்சனைகளுக்கான தீர்வுகளை தேடிக்கொள்ளப் பழகிக்கொள்ளுங்கள். பிரச்சனைகளுடனேயே வாழ்வதில் ஏற்பில்லை எனக்கு. உங்கள் வாழ்வினை நீங்கள்தான் தீர்மானிக்கவேண்டும், மற்றவர்கள் அல்ல.

எனது சின்ன மகளே! நேரம் நடுநிசியை நெருங்க இன்னும் இரண்டுநிமிடங்கள் இருக்கின்றன. முன்பெல்லாம் நீ இந்த நிமிடத்துக்காய் துங்கிவழிந்தபடியே காத்திருப்பாய். சில நாட்களில் தூங்கியிருப்பாய். உன்னை  தூக்கத்தில் இருந்து எழுப்பி, முத்தமிட்டு  அணைத்து பரிசில்களை  தரும்போது நீ அற்புதமானதொரு தேவதையாய் மாறியிருப்பாய். அதன் பின் என் நெஞ்சில் காலைப்போட்டபடியே உரையாடிக்கொண்டிருப்பாய். அன்றைய நாளுக்கான திட்டங்களை நீ இளவரசிபோன்று அறிவித்துக்கொண்டிருக்க இளவரசியின் சேவகன்போன்று நான் கேட்டுக்கொண்டிருப்பேன்.

நேரம் நடுநிசி. 

எனது பூக்குட்டிக்கு அப்பாவின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள். என் செல்வத்திற்கு அப்பாவின் முத்தங்கள். உன்னை அள்ளி எடுத்து முத்தமிடவேண்டும்போலிருக்கிறது. உனது வாசனையை மனது உணர்கிறது.

முன்பெல்லாம் உனக்கு என்ன விருப்பமாய் இருக்கும் என்று நான் அறிவேன். எதை வாங்கிவந்தாலும் விரிந்த கண்களுடன் மகிழ்ச்சியில் துள்ளுவாய் நீ. இப்போது நீ வளர்ந்துவிட்டாய். உனது விருப்பு வெறுப்பகள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. இன்று, உனக்கு எதையாவது வாங்கவேண்டும் என்று நினைத்திருந்தேன். பல கடைகள் ஏறி இறங்கினாலும் எதை வாங்குவது என்று என்னால் தீர்மானிக்க முடியவில்‌லை. நான் எதையாவது வாங்கி அது உனக்கு பிடிக்காதுபோய்விட்டால் என்று யோசிக்கிறேன். அல்லது இதைவிட வேறு எதை வாங்கினால் உனக்குப் பிடிக்கும் என்றும் யோசித்ததுண்டு.

உன் பதின்மக்காலங்கள் இன்று ஆரம்பிக்கின்றன. எதிர்வரும் 6 வருடங்கள் உனது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஆண்டுகளாக இருக்கும். அந்த ஆண்டுகளின்போது உன் தோழனாய், தந்தையாய், வழிகாட்டியாய், ஆசானாய், சேவகனாய், விகடகவியாய் இருக்கவேண்டும் என்று எ‌த்தனையோ கனவுகள் எனக்குள் இருந்தன. உன்னையும் அக்காளையும் பயமற்றவர்களாக, துணிந்தவர்களாக, என்னை நண்பனாக உணர்பவர்களாய், சமூகப்பொறுப்புள்ளவர்களாக, மனிதநேயமுள்ளவர்களாக, மற்றவர்களுக்கு முன்மாதிரியானவர்களாக வளர்க்கவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். அவை நான் எதிர்பாரதவகையில் திசைமாறியிருக்கின்றன. வாழ்க்கையில் தோல்விகளை ஏற்றுக்கொள்ளப்பழகிவிட்டால் அவற்றின் வீரியம் பலமடங்கு குறைந்துவிடும் என்பது சிறிது சிறிதாக புரியத்தொடங்கியிருக்கிறது, எனக்கு. வாழ்க்கையில் வெற்றிகளை விட தோல்விகளே அதிகமாய் வரும். அதற்கு உன்னை தயார்படுத்திக்கொள். தோல்விகளை எதிர்பார்க்காததால்தான் நான் இன்று இந்தளவு தடுமாறிப்போயிருக்கிறேன்.

எம்மிடையேயான பௌதீக இடைவெளி அதிகரித்திருப்பதை நான் மிக நன்றாகவே உணரக்கூடியதாக இருக்கிறது. மனரீதியாக அது வேதனையானது. மிகவும் வேதனையானது. எப்போதும் அது என்னை குற்றவாளிக்கூண்டில் நிறுத்திக்கொண்டே இருக்கிறது. அங்கு தினமும் நான் தலைகுனி்ந்தே இருக்கிறேன். எனது மிகப் பலவீனமான அரங்கும் அதுதான். அதை நன்கு அறிந்தவர்கள், என்னை தாக்கி குற்றுயிராக்கும் களமும் அதுதான். ஆனால் மனரீதியாக உங்களுடனான இடைவெளி அதிகரிக்கவில்லை என்பதை நான் நன்கு அறிவேன். அங்கு இடைவெளி என்பதற்கு இடமேயில்லை.

உன்னைக் கண்டும், உன்னுடன் பேசியும் 8 மாதங்கள் கடந்திருக்கின்றன. உன்னையும் அக்காளையும் தேடி இங்கிலாந்து வந்து சந்திக்கமுடியாது திரும்பிய நாட்களுமுண்டு. முன்பைப்போல் சிலருடன் வாதாடவோ, வாக்குவாதப்படவோ, எனது உரிமைகனை வாதாடிப்பெறவோ எனக்குள் இப்போது திராணியுமில்லை, மனதில் சக்தியுமில்லை. அவர்களுடன் எதுவித தொடர்பும் அற்றிருக்கவே விரும்புகிறேன். அதற்காக உங்களுக்கான, என்னால் முடிந்த கடமைகளை, பொறுப்புக்களில் இருந்து நான் விலகிக்கொள்ளப்போவதில்லை.

கடந்த 5 வருடங்களும் என்னை முழுவதுமாய் சிதைத்துப்போட்டிருக்கின்றன. தனிமையான வாழ்வு என்னை மிகவும் பலவீனமாக்கியிருக்கிறது. உண்மையைச் சொன்னால் என்ன, பயமாக இருக்கிறது, மிகவும் பயமாயிருக்கிறது. ஆனால் நான் என்னை மீட்டுக்கொண்டபடியே, என் வயோதிபக்காலங்களுக்கான வாழ்க்கையை திட்டமிட்டுக்கொள்ளவேண்டும். இப்போது போன்றே எனது வயோதிபக்காலங்களும் இன்றைய நாட்களை விட  கொடுமையான தனிமையில் கடந்துபோகும் என்றே நினைக்கிறேன். நினைக்கவே பயம்  மனதினைக் கவ்விக்கொள்கிறது.

தினமும் ஏதோ ஒருவகையில் உங்களிருவரின் நினைவுகள் வராதிருந்ததில்லை. அது பள்ளிசெல்லும் ஒரு குழந்தையின்வடிவில், தந்தையுடன் விளையாடும் சிறுமியின்வடிவில், கடையில் தனக்கு விரும்பியதை வாங்கும் ஒரு பெண்குழந்தை வடிவில், அல்லது தந்தையின்  கழுத்தை கட்டியிருக்கும் கைக்குழந்தைவடிலோ என்னால் உங்களை பார்க்கமுடிகிறது. சில நேரங்களில் அக் குழந்தைகள் என்னைப்பார்த்து புன்னகைக்கும்போது நீங்கள் புன்னகைப்பதாகவே எனக்குத்தோன்றும். எல்லாக் குழந்தைகளிலும் உங்களைக்காணும் கலை எனக்கு வாய்த்திருக்கிறது. அது தரும் ஆறுதல் எல்லையற்றது. எப்பொதும் போல குழந்தைகளும் என்னுடன் மிகவும் இலகுவாக ஒட்டிக்கொள்கிறார்கள். அவர்களுடன் பேசிப் பழகி, சிரித்து விளையாடி மகிழும்போது அது தரும் ஆறுதல் அலாதியானது. வெய்யிலில் நிழலின் சுகம் போன்றது அது.

எனது நண்பர் ஒருவரிடத்தல் உன் வயதிலும்,  உன் அக்காவின் வயதிலும் இரு பெண்குழந்தைகள் இருக்கிறார்கள். உங்களிருவரையும் அவர்கள் காண முடிகிறது. அவர்களின் செயல்கள், கதைகள், கோபங்கள், சினுங்கல்கள், தந்தையை வெருட்டும் பேரழகு, தந்தைக்கு அவள் வழங்கும் முத்தம் என்று அவளின் செய்கைகள் அனைத்திலும் உங்களைக்காண்கிறேன். உங்களை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்று நினைத்தேனோ அவ்வாறு அவர்கள் வளர்ந்துகொண்டிருக்கிறாள். அவர்கள் என்னில் காட்டும் அன்பில் கரைந்துபோகிறேன்.

சில வேளைகளில் சுயபரிதாபத்தில் நான் மூழ்கிப்போயிருப்பதுண்டு. அதிலும் ஒரு சுகமிருக்கிறது. முன்பெல்லாம் உங்களிருவரைச் சுற்றியே இருந்தது எனது முழு உலகமும். இப்போதெல்லாம் எக்கச்சக்கமான நேரம் வீணே தனிமையில் கழிந்துபோகிறது. என் அப்பா மதுபானம் பாவிப்பதில்லை என்று முன்னைய நாட்களைப்போன்று, இனி நீ, பெருமையாய் கூறிக்கொள்ள முடியாது. வெட்கமாய் இருக்கிறது இதை எழுத. ஆனாலும் உங்களிடத்தில் எதையும் மறைப்பதற்கில்லை. உன்னிடம் பொய்கூறி என்னை நானே ஏமாற்றிக்கொள்ள நான் விரும்பவில்லை. எதையும் ஒளிவு மறைவின்றி பேசியும், எழுதியும் பழகியவன் நான். எனது வாழ்வின் வெற்றியையும் தோல்வியையும் எழுதுவதில் எனக்கு தயக்கமில்லை என்னும் ஒரு பக்குவ நிலைக்கு நான் வந்துகொண்டிருக்கிறேன் என்றே எண்ணுகிறேன்.

உங்களிருவரையும் பிரிந்தபோது, இந்தப் பிரிவானது என்னை இந்தளவுக்கு பாதிக்கும் என நான் கனவிலும் நினைத்திருக்கவில்லை. தனிமை என்பது மிகவும் கொடுமையானது. நான் வாழ்ந்திருக்கும் அறையின் காற்றிலும், சுவர்களிலும் தனிமை அடர்ந்து படிந்துபோயிருக்கிறது. அதை தொட்டுணரலாம் என்னுமளவுக்கு அதன் தாக்கத்தை நான் உணர்வதுண்டு.

இப்போது பல ஆண்டுகளாய் மனச்சோர்வுடனும், மன அழுத்தத்துடனும் போராடிக்கொண்டிருக்கிறேன். ஆரம்ப நாட்களில் பல மாதங்கள் இரவு பகலாய் தூங்கியபடியே காலத்தை கடந்துகொண்டேன். மனிதர்களுடனான தொடர்பை நிறுத்திக்கொண்டேன். அதீத அவசியமின்றி வெளியே செல்லவில்லை. அழுது அழுது தீர்த்தேன். எனது சிறிய அறைக்குள்ளேயே அடைந்துகிடந்தேன். இவை ஒரு சக்கரத்தைப்போன்று என்னைச் சுற்றிக்கொண்டே இருந்தன. அதில் இருந்து வெளியேறமுடியாது தடுமாறிக்கொண்டும் இருந்தேன். 2012ம் ஆண்டு தனிமையை வெல்லவும், மனஅழுத்தத்தை வெல்லவும், சுயநம்பிக்கையை மீட்டுக்கொள்ளவும் ஸ்பெயின் நாட்டில் 760 கி.மீ பாதயாத்திரையை மேற்கொண்டிருந்தேன். ஆனால் நான் சுயநம்பிக்கையை மீட்டுக்கொண்டஅளவுக்கு என்னால் மனஅழுத்தத்தில் இருந்து மீண்டுகொள்ளமுடியவில்லை. இப்பொதெல்லாம் தனிமையில் இருந்து மீண்டுகொள்ள வாசிப்பும், எழுத்தும், நண்பர்களும், பொதுவேலைகளும் பெரிதாய் உதவுகின்றன. நானும் அவற்றில் கரைந்துபோகிறேன். காலம் பெருவேகத்தில் கடந்துபோய்க்கொண்டிருக்கின்றது.

திடீர் என உருவாகும் இடைவெளியும் அது கொடுக்கும் தனிமையும் மிகக் கொடியது. உங்களிருவருடன் கழிந்த காலைப்பொழுதுகள் அழகானவை. உங்களிருவரையும் துயிழெழுப்பி, அணைத்து அள்ளித் துக்கி, ஆயிரம் கதைபேசும் உங்களின் கதைகளுக்குள் என்னை மறந்து, உனது நீண்ட தலைமுடியினை உனக்கு விலிக்காதவாறு வாரிக்கட்டி, பாடசாலையில் இறக்கிவிடும்போது கிடைக்கும் முத்தத்தின் சுகமே தனி.

இப்போதெல்லாம் அக்காலைப்பொழுதுகள் வெறுமனே ஏக்கங்களுடன் கழிந்துபோகின்றன. என்னைக் கடந்துபோகும் சாலையோரத்துக் சிறுமிகளில் நீயும் அக்காளும் இருந்துகொண்டே இருக்கிறீர்கள். அவர்களின் கண்கணில் உங்களின் ஈரம் தெரிவதாய் உணர்கிறேன். அவர்களின் புன்னகையில் நீங்கள் புன்னகைக்கிறீர்கள்.

2008ம் ஆண்டு இலைதுளிர்காலத்து மாலை உங்களிருவருடனும் சற்று உரையாடவேண்டும் என்று கூறி உங்களை அழகான அமைதியான ஒரு கடற்கரைக்கு அழைத்துப்போனேன். அன்று காலை நான் சில முக்கிய முடிவுகளை எனக்குள் எடுத்திருந்தேன். அவற்றை உங்களுக்கு உங்கள் மொழியில் உங்களை கலவரப்படுத்தாது கூறுவதே எனது நோக்கமாய் இருந்தது.

நீயோ சிறியவள். அக்காளோ சற்று விபரம் தெரிந்தவள். நீயோ என்னுடன் வாகனத்தின் முற்பகுதியில் உட்கார்ந்திருப்பது நீதான் என்று அடம்பிடித்துக்கொண்டு, நீயே என்னுடன் உட்கார்ந்துகொண்டாய்.

கடற்கரையில் இறங்கி சற்று‌நேரம் நடந்தபின் மீண்டும் வானகத்தினுள் உட்கார்ந்திருந்து உங்களுடன் உரையாடினேன்

அப்பா தனியேசென்று வாழ முடிவெடுத்திருப்பதாய் கூறியபோது நீங்கள் இருவரும் அமைதியானீர்கள். அக்காள் இதை எதிர்பார்த்திருந்தவள் போன்று அடுத்து நான் என்ன சொல்லப்போகிறேன் என்று என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளிடம் அழுத்தமான ஒரு மௌனம் குடிவந்திருந்தது.  நான் உங்களுக்கு, அப்பாவின் மனநிலையை முடியுமானவகையில் விளக்கினேன்.

இரு பெரிய மனிதர்களின் மனதின் முறிவும், எதிரிகளாய் ஒருவரை ஒருவர் நோக்கும் மனப்பான்மையையும், குற்றுயிராக்கும் வார்த்தைகளும், ஈகோவும், வெறுப்பும், அமைதியே அற்றுப்போன வாழ்க்கையையும், சண்டைகள் நிரம்பிய நாட்களையும் நீங்கள் இருவரும் சில வருடங்களாக கண்டு, உணர்ந்து, அனுபவத்திருக்கிறீர்கள் என்பதால், நீங்கள் இருவரும் பெரிதாய் அலட்டிக்கொள்ளவில்லை. நான் உங்களை வந்து பார்ப்பேனா என்று நீ கேட்டாய். எங்கே வாழப்போகிறாய் என்றாள் அக்கா. உன்னை அடிக்கடி வந்துபார்ப்பேன் அம்மா, என்றேன் உன்னிடம். அக்காவிடம் ஒஸ்லோ என்றேன். வீடு திரும்பியபோது நாம் எவரும் அதிகமாகப் பேசிக்கொள்ளவில்லை.

அன்றைய நாள் முழுவதும் நீங்கள் இருவரும் என் அருகிலேயே இருந்தீர்கள். அதன்பின்பான ஒரு நாள் நான் உங்களைவிட்டு ஒஸ்லோவுக்கு புறப்பட்டேன். அதன்பின் சில மாதங்களில் நீங்களும் நாம் வாழ்ந்திருந்த ஊரைவிட்டு புறப்பட்டீர்கள். உங்களிருவருக்கும் அந்தக்கிராமத்தைவிட்டு புறப்படவே விருப்பம் இருக்கவில்லை. உங்கள் வாழ்வின் முதல் இடப்பெயர்வாக அது இருந்தது. எனது வாழ்வில் மிகவும் வேதனையை ஏற்படுத்திய இடப்பெயர்வாக இருந்தது அது.

உனது பிறந்தநாள். மதியப் பொழுது::

நீ எங்கே வாழ்கிறாய் என்பதை அறியாதததால், உன்னைப் பார்ப்பதற்காய் உனது பாடசாலையில் காத்திருக்கிறேன். உணர்ச்சிகளின் கொந்தளிப்பின் உச்சியில் நின்றுகொண்டிருக்கிறேன். அழாமலேயே கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருக்கிறது. அதை மறைத்துக்கொள்ள பெரும்பாடுபட்டுக்கொண்டிருக்கிறேன்.

உ‌ன்னை அழைத்துவருவதாய் கூறியிருக்கிறார்கள். நீ எப்படி இருப்பாய் என்று நினைத்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். கடந்த 8 மாதங்களிலும் நீ நிட்சயமாக வளர்ந்திருப்பாய். என்னைக் கடந்துபோகும் மாணவிகளில் உன்னைத் தேடுகின்றன எனது கண்கள். அப்பா என்று ஓடிவந்து கட்டிக்கொள்ளமாட்டாயா என்று மனம் எதிர்பார்க்கிறது. தவியாய் தவிக்கிறது மனது. எதிரிக்கும் வரக்கூடாத நிலை இது.

உன்னை சந்திக்கமுடியாது என்றும். உன்னை சந்திப்பதற்கு எனக்கு அனுமதியில்லை என்று தமக்கு கூறப்பட்டுள்ளதாக அதிபரிடம் இருந்து பதில்கிடைத்தது. என்னைச் சுதாரித்துக்கொள்ள சில நிமிடங்களாகின. கண்ணீரை அடக்கமுடியவில்லை. பாடசாலையைவிட்டு வெளியேறியபோது இருந்த மனநிலையை எப்படி எழுதுவது என்று புரியவில்லை. வாழ்வின் மிக மிக வேதனையான கணம் அது. வீதியில் கால்கள் நடந்துகொண்டிருக்க நான் என்னையறியாமலே அழுதுகொண்டிருந்தேன். சில மணிநேரங்களின் பின்பே மனம் ஒரு கட்டுக்குள் வந்தது.

பாடசாலை முடிந்ததன் பின்பாக பெரும் போராட்டத்தின்பின் உன்னை சந்திக்கக்கிடைத்தது. நீ மிகவும் வளர்ந்திருந்தாய், உயர்ந்திருந்தாய். நாம் தனித்திருந்தபோதும், பேரூந்திலும் நீ என்மீது சரிந்துகொண்டாய். என் கைகள் உன் கைகளை பற்றியிருந்தது, உன் கையும்தான். முன்னைய நாட்களைப்போன்று என்னுடன் விளையாடினாய், பெரிதாய் சிரித்தாய், செல்லமாய் கோபித்தாய், கட்டளையிட்டாய், சற்று தூங்கியும்போனாய் என் தோழில். அந்த இரண்டுமணிநேரங்களில் நான் மீண்டும் சற்று உயிர்த்திருந்தேன். உன்னிடம் இருந்து விடைபெற்ற கணங்கள் மிகவும் கொடியவை. இருதடவைகள் என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டாய். நான் வாய்விட்டு அழுதேன். உன் கண்ணில் கண்ணீர் வழிய ” அப்பா அழாதீங்கோ, I love you appa"  என்றாய். நான் சத்தமாய் அழுதபடியே விடைபெற்றேன்.

இப்படியான சந்தர்ப்பங்களில் வாழ்வின் மீதான பிடிப்பு அற்றுப்போய், ஏன் வாழவேண்டும் என்ற எண்ணம் தலைதூக்கும். சில மனிதர்களில் பெரும்வெறுப்பும், பழிதீர்க்கும் எண்ணமும் ஏற்படும். இப்படியான எண்ணங்களை மனதில் இருந்து அகற்ற நான் பெரும்பாடுபடுகிறேன். தோல்வியுமுறுகிறேன். விழுவதும், எழுவதும், மீண்டும் விழுவதுமே வாழ்க்கை கடந்துகொண்டிருக்கிறது.

என் எழுத்து எனது தோல்விகளை பேசவும், ஜீரணிக்கவும், பகிரவும் பெரிதும் உதவியிருக்கிறது. இந்தப்பதிவும் அடிப்படியே. இப்பதிவை எழுதி திருத்தி அனுப்பும் வரையில் பல தரம் இதை வாசிக்கநேர்ந்தது. அந்நேரங்களில் உன்னை பாடசாலையில் சந்திக்க வந்திருந்த காட்சி மீண்டும் மீண்டும் கண்முன் வரும். என்னையறியாமல் அழுவேன். அந்தக் கணத்தில், அன்று நான் உணர்ந்த அத்தனை உணர்ச்சிகளையும் உணரக்கூடியதாய் இருக்கும். பலதையும் எழுதிவிடலாம். அவை மனதை ஓரளவு அமைதிப்படுத்தலாம். ஆனால் உங்களிருவரின் அருகாமைபோலாகுமா அது?

பூக்குட்டி, உன்னைக் கட்டிக்கொண்டு ஓவென்று கதறி அழவேண்டும் போலிக்கிறது.

வாழ்க்கை ஏன் இவ்வளவு கொடியதாய் இருக்கிறது?

அன்புடன்
அப்பா

இரயிலில் நடக்கும் ரகசியங்கள்

ன்று மதியம் பனியும், மழையும் கலந்து கொட்டிக்கொண்டிருந்தன. நனைந்தப‌டியே நிலக்கீழ் தொடருந்து நிலையத்துக்கு வந்துசேர்ந்தேன். உடையெல்லாம் நனைந்திருந்து.

தொடரூந்து வந்ததும் ஏறியமர்ந்துகொண்டேன். தொலைபேசியில் இணையத்துடன் தொடர்பு எடுத்து செய்திகளை வாசித்தபோது ”நுவரெலியாவில் கடும் பனி, கடும் குளிர் என்றிருந்தது. மலையில் பனிகொட்டியிருக்கும் படத்தையும் போட்டிருந்தார்கள். குளிர் 5 - 6 பாகையாக இருப்பதால் கடுமையான குளிர் நிலவுகிறது என்றும் செய்தி கூறியது. குளிரின் தார்ப்பர்யத்தை கடந்த 27வருடங்களாக நான் அனுபவித்திருப்பதால் அங்கிருப்பவர்களின் நிலை எப்படியிருக்கும் என்ப‌தை புரியக்கூடியதாக இருந்தது.

அந் நினைவுகளில் இருந்து விடுபடுவதற்காய்  தமிழ்மகன் எழுதிய  ”வெட்டுப்புலி”  நாவலை எடுத்து வாசிக்கலானேன். அதில் வெள்ளைக்காரனின் குதிரையின் அழகில் மயங்கிய லட்சுமணன் அதை திருடுவதற்காக ஜமீன்தாரின் வீட்டு மரத்தில் ஏறி,  திருடும் சந்தர்ப்பத்துக்காய் காத்துக்கொண்டிருந்தான். எனது மனம் முழுவதும் கதையின் விறுவிறுப்பில் லயித்திருந்தது. லட்சுமணணும் குதிரையை ஜமீன்தாரின் வீட்டில் இருந்து திருடி எடுத்துக்கொண்டு அதில் ஏறுவதற்கு முயற்சிக்க, குதிரை தறிகெட்டு ஓடும். இவனும் அதில் விடாக்கண்டனாய் தொங்கிக்கொண்டிருப்பான்.

அந்நேரம் தொடரூந்து ஒரு தரிப்பிடத்தில் நின்றிருந்தது. ஒரு அழகியவள் எனக்கு முன்னிருந்த இருக்கையில் வந்தமர்ந்தாள். அவளுடன் இன்னுமொரு பெண்ணும் வந்தார். அவர்கள் இருவரும் தமிழர்கள்.

முதலாமவள் எனக்கு எதிரே உட்கார்ந்துகொண்டாள். என்னை நிமிர்ந்து பார்த்தபோது நான் சிநேகமாய் புன்னகைத்தேன். அவள் கண்கள் மருண்டன. என்னை ஒரு மாதியாகப்பார்த்து பின்பு அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தாள். அப் பெண் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருப்பதை அவதானித்த அவள் முகத்தில் சிநேகமான ஒரு புன்னனை அரும்பி மறைந்தது.  அருகில் இருந்து பெண்ணைப் பார்த்தேன். அவர் வேறு உலகில் சஞ்சரிந்திருந்தார்.

எனக்கு எதிரே இருந்த பெண் என்னை பார்ப்பதும், நான் அவளை நிமிர்ந்து பார்ப்பதை கண்டதும் தலையைக் குனிவதுமாக இருந்தாள். என்னால் புத்தகத்தில் கவனம் செலுத்தமுடியவில்லை. மனம் முழுவதும் ஒரு பரவசம் பரவியது. ஒருவித மகிழ்ச்சியை உணர்ந்தேன்.

இப்போ அவள் என்னைப் பார்க்கிறாளா என்பதை புத்தகம் வாசிப்பதுபோன்று பாசாங்கு செய்தபடியே கடைக்கண்ணால் பார்த்தேன். அவள் பார்த்துக்கொண்டே இருந்தாள். நான் திடீர் என்று அவளைப் பார்த்தேன். வெட்கத்துடன் தலையைக்குனிந்துகொண்டாள். பின்பு தனது பனிக்கால தொப்பியினால் கண்களை முடியபடியே தூங்குவதுபோல் பாசாங்குசெய்தாள். நான் வாசிப்பதுபோன்று பாசாங்குசெய்தேன்.

இப்போ அவள் தலையை பின்புறமாய் சரித்து தொப்பினூடாக என்னைப் பார்ப்பது தெரிந்தது. நான் மந்தகாசமான ஒரு புன்னகையை எனது அழகிய முகத்தில் படரவிட்டேன். அதைக் கண்ட அவளின் முகத்தில் புன்னகை தெரிந்தது. மீண்டும் அவள் அருகில் இருந்து பெண்ணை கடைக்கண்ணால் பார்த்தாள். அவர் அப்போது தூங்கி வழிந்துகொண்டிருந்தார்.

எனக்கு குஷி பிடிபடவில்லை. புத்தகத்தை வாசிப்பது போன்று இடையிடையே அவளைப் பார்த்து புன்னகைத்தேன். அவள் முகத்தில் வெட்கம் கலந்த மகிழ்ச்சி தெரிந்தது. என்னை அவளுக்கு பிடித்திருந்தது என்பதை உணர்ந்துகொண்டேன்.

இப்போது நான் புன்னகையில் இருந்து இரு அழகான சிரிப்புக்கு முன்னேறியிருந்தேன். அவளும் அப்படியே. எனக்கு என்னைச்சுற்றியிருந்த உலகம் மறந்துபோனது. மகிழ்ச்சியான மனநிலைவாய்த்திருந்தது.

என்னைப் பார்த்து சிரித்தவள் திடீர் என்று நாக்கைக் காட்டினாள். நான் சுதாரித்துக்கொள்வதற்கு சற்று நேரமாகியது. சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு எவரும் என்னைப்பார்க்கவில்லை என்ப‌தை நிட்சயப்படுத்தியதன் பின்பு அவளுக்கு நாக்கைக் காட்டினேன். பதிலுக்கு அவள் நாக்கைக் காட்டிவிட்டு அருகில் இருந்த பெண்ணைப் பார்த்தார் அவர் இப்போதும் வேறு எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார்.

அடுத்த தரிப்பிடத்தில் நான் இறங்கவேண்டும் என்பதால் புத்தகத்தை எனது முதுகுப்பையினுள் வைத்துக்கொண்டிருக்கும்போது எனது காலினை ஒரு கால் தட்டியது. நிமிர்ந்துபார்த்தேன் அவள் சிரித்தாள். நானும் புன்னகைத்தேன்.

தொடருந்தில் இருந்து இறங்க முற்பட்டபோது அவர்களும் அதே தரிப்பிடத்தில் இறங்குவது தெரிந்தது. அவர்களுக்குப் பின்னாலேயே  நடந்தபடியே அவளின் தலையில் ஒரு தட்டு தட்டியதை அவளுடன் வந்தவர் கண்டுவிட்டார். அவர் குனிந்து அந்த 3 - 4 வயதுக் குழந்தையையும் என்னையும் பார்த்தார். அவளை நோக்கி கையசைத்தேன். அவளும் மயக்கும் புன்னகையுடன் கையசைத்தாள்.  அந்த புன்னகையில் இன்றைய நாள் அற்புதமாகியது.

என்னை பிஞ்சிலே பழுக்கவைத்தவர்கள்

”எதுவரை”  இணைய இதழ் 14  (08.02.2014) இல் வெளியானது
-----------------------------------------------------------------

எனது பெற்றோர்கள் இருவரும் இலங்கை அரச ஊழியர்களாக இருந்தார்கள். அரச ஊழியர்களுக்கு அடிக்கடி இடமாற்றம் வரும். அதிலும் அம்மா வைத்தியராக இருந்ததால் மிகவும் பின்தங்கிய இடங்களுக்கு மாற்றப்பட்டார். அப்பா போலீஸ் அதிகாரி. அவரும் அம்மாவை பின்தொடர்ந்து இடமாற்றங்களை வாங்கிக்கொண்டார்.

இப்படித்தான் நான் இலங்கையின் மத்தியபிரதேசத்துக்கு அருகாமையில்ல் உள்ள பிபிலை என்னும் அழகிய இடத்திற்கு வந்துசேர்ந்தோம். அந் நாட்களில் பிபிலை மிக மிகப் பின்தங்கிய ஒரு காட்டுப்பகுதி. வாகைமரங்கள் நிறைந்ததோர் பகுதியில் நாம் குடியிருந்தோம். வாகைமரத்தில் ஒட்டுண்ணியாக இருந்த பிரபல்யமான ஓர்கிட் பூக்கள் எனக்கு அறிமுகமான நாட்களும் அவைதான்.

அந்நாட்களில் இலங்கையில், அனேகமாக தமிழர்களே முக்கிய பதவிகளில் இருந்தார்கள். வைத்திய அதிகாரி, வைத்தியர், மிருகவைத்தியர், பல்வைத்தியர், பொறியியலாளர், போலீஸ் என்று. பிபிலையும் அப்படியே.

அப்போது எனக்கு வயது 7, இரண்டாம் வகுப்பு தொடங்கவேண்டும். அக்காலத்தில் பிபிலையில் தமிழ்ப்பாடசாலை இல்லை. எனக்கு அந்நாட்களில் சிங்கள மொழி சரளமாக தெரிந்திருந்திருந்தாலும் அம்மாவுக்கு என்னை சிங்களமொழியில் கற்பிக்க விருப்பம் இருக்கவில்லை. எனவே கொழும்பில் வாழ்ந்திருந்த அம்மாவின் அண்ணண் ராஜசிங்கம்மாமாவின் வீட்டில் இருந்து கல்விகற்க அனுப்பிவைத்தார்கள்.

அங்கு தங்கியிருந்து எனது 2ம், 3ம் வகுப்பை முடித்துக்கொண்டேன். ஆனால் மனமோ அங்கு இருக்க சம்மதிக்கவில்லை. அழுது அழிச்சாட்டியம் பண்ணி ஒருவிதமாக பிபிலைக்கு அண்மையில் உள்ள பதுளையில் ஒரு பாடசாலையில் சேர்ந்துகொண்டேன். பதுளைக்கும் பிபிலைக்கும் இடையில் ஏறத்தாள 3 பஸ் மணிநேரப் பயணம். எனவே இம்முறையும் பதுளையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தே பாடசாலைக்கு சென்றுவரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. பதுளையில் தங்கியிருந்து சரஸ்வதி கனிஸ்ட மகாவித்தியாலத்தில் 4ம் 5ம் வகுப்புக்களை கடந்துகொண்டேன்.

அந்நாட்கள் எனது வாழ்வின் முக்கியநாட்கள். இன்றும் அந்நாட்களின் பல நினைவுகளும், காட்சிகளும், வாசனைகளும் நினைவில் பசுமையாய் பதிந்திருக்கின்றன, சந்தனத்தில் வாசனை போன்று.

நான் பிஞ்சில் பழுத்ததும் இந்த நாட்களில்தான். நான் பிஞ்சில் பழுப்பதற்கு அதிகமாய் புகைபோட்டவர்கள் பதுளையில் அறிமுகமாகிய ஒரு சில மனிதர்கள். அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பே இப்பதிவு.

அறியாப்பருவம் என்றும் கூறுமுடியாது, அறிந்த பருவம் என்றும் கூறமுடியாது. இவையிரண்டிற்கும் இடையிலான ஒரு பரவசமான பருவம் அது. அந்நாட்களின் எனது செய்கைகளில், நான் எதையும் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்து செய்யவில்லை என்றே நினைக்கத்தோன்றுகிறது, இன்று. ஒரு விறுவிறுப்பில், வேகத்தில், விபரம் புரியாத தேடல்களால் காலவோட்டத்தில் சந்தித்த பல மனிதர்களின் பாதிப்புக்களும், பழக்கவழக்கங்களும் என்னையும் தொற்றிக்கொண்டன. சிறிது காலத்தின்பின் அவை மறைந்தும்போயின.

பதுளையில் நான் எங்கு தங்கியிருந்து படிப்பது என்ற பெருங்கெள்வி எழுந்தபோது, பிபிலையில் எமது குடும்பத்துக்கு நன்கு அறிமுகமான இந்திரன் மாமா என்னும் ஒரு பொறியிலாளர் குடும்பம் பதுளைக்கு இடம்பெயர்ந்தது. அவர்களுடன் நான் தங்கிப்படிப்பது என்றும் முடிவாயிற்று. இந்த இந்திரன் மாமா காதலித்து திருமணம் செய்தவர். இந்திரன் மாமாவின் மனைவி சிங்களவர். அவர்களுக்கு 2 -3 வயதில் சாந்தினி என்று ஒரு மகள் இருந்ததாகவும் ஞாபகம்.

அவர்கள் பதுளைபிட்டிய என்னும் இடத்தில் வாழ்த்தொடங்க நானும் அவர்களுடன் அவங்கு வாழத்தொடங்கினேன். எனது பாடசாலையோ நகரத்துக்கு அருகில் இருந்தது. நடந்து சென்றால் ஏறத்தாள குறைந்தது அரைமணிநேரம் ஆகும். வௌவால்கள் நிறைந்த ஒரு பகுதியினூடாகவும் நடந்து செல்லவேண்டும். அது சற்று பயங்கரமான இடம். எனினும் ஏனையவர்களுடன் சேர்ந்து செல்வதால் சற்று பயம் குறைவாக இருக்கும்.

இந்நாட்களில் எனக்கு சிங்களவரான ஒரு வண்டில்காரர் அறிமுகமாகினார். அவர் பெயர் நினைவில் இல்லை. அவரின் ஒரு ஒற்றைமாட்டுவண்டில் இருந்தது. சந்தைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் அவருக்கு. தனது வண்டிலை ஓலையால் வேந்திருந்தார். எனவே பயணங்கள் குளிர்ச்சியாய் இருக்கும். அவரின் வாயும் பற்களும் கறுப்பாயும், சிவப்பாயும் இருந்தன. எப்போதும் வெற்றிலையும், பீடியுமாய் இருந்தார் அவர். உதட்டில் இருவிரல்களைவைத்து அவற்றின் இடுக்கினூடாக வெற்றிலைச் சாறினை துப்பும் பழக்கம் அவர் கற்றுத்தந்ததே.

ஆரம்ப நாட்களில் அவர் வண்டிலில் உட்கார்ந்திருக்க அவருடன் பேசியபடியே நடந்துசெல்வேன். காலப்போக்கில் பின்னால் தொங்கி ஏறி உட்காந்திருந்தபடியே பாடசாலைக்கும் செல்லவும், திரும்பிவரவும் அனுமதி கிடைத்தது. எனக்கு சிங்களம் ‌நன்கு தெரிந்திருந்ததால் மொழிப்பிரச்சனை இருக்கவில்லை.

வண்டில் தன்பாட்டுக்கு சென்றுகொண்டிருக்கும். நாம் பலதையும் பேசிக்கொண்டிருப்போம். அவர் மிக நன்றாகப் பாடுவார். சிங்களப்பட கதாநாயகர்களான காமினி பொன்சேகா, விஜயகுமாரதுங்க ஆகியோரின் பாடல்களாகவே அது இருக்கும். அவருக்கு எழுத்தறிவு இல்லை. அவருக்கு அவரின் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்ததாக நினைவிருக்கிறது. அப்போது என்னை நான் ஆசிரியனாக நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டேன். அவர் புகைபிடிப்பார். அவரிடம் உள்ள பணத்தைப்பொறுத்து அது பீடி, சுடுட்டு என்று வேறுபடும். புகையை உள்ளிளுக்கும் போது கண்களை மூடி ஏகாந்தநிலைக்கு செல்வதையும், புகைய‌ை வெளியே விட்டு விட்டு ஊதும் அழகையும் ரசிக்கலானேன். அதைக் கவனித்த அவர் ஒரு நாள் குடித்துக்கொண்டிருந்த பீடியைத் தந்தார். பக்குவமாய் அதை வாயில்வைத்து இழுத்தேன். இருமியது. அப்படி அல்ல இப்படி என்று புகைபிடிப்பதன் நுட்பங்களை கற்பித்தார். நானும் சிரத்தையுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். காலையும் மாலையும் பீடி என்றாகியது. வெற்றிலைப் பழக்கம் தொற்றிக்கொண்டது.

எனது தாயார் பிபிலை வைத்தியசாலையில் வைத்தியராக இருந்தார். அவர் பதுளை வைத்தியசாலைக்கு அவசரகால வண்டியில் நோயாளிகளை அனுப்பும்போது எனக்கு ஏதும் தின்பண்டங்கள், கைச்செலவுக்கு பணம் என்று அவசரகால வண்டியின் சாரதி சிரிசேன மாமாவிடம் கொடுத்துவிடுவார். சிரிசேனமாமா ஒரு சிங்களவர்.

சிரிசேன மாமா திருமணம் முடிக்காதவர், தனிக்கட்டை. அவரின் அந்த அவசரகால வண்டியையை அவர் மனைவிபோன்று பாராமரித்துவந்தார். அவர் அவரது வாகனத்தை கழுவியதை இப்போது நினைத்துப்‌பார்க்கும்போது அவர் அதை தனது மனைவியாக நினைத்து கழுவினாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. அந்தளவுக்கு அன்பாய் அதைக் கழுவுவார். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர் அவர். சிறுவயதில் தாய்தந்தையரைவிட்டு தொலைதூரம் வந்து படிக்கிறானே என்ற அனுதாபம் அவருக்கு. அடிக்கடி அவரும் பணம் தருவார். இது பற்றி நான் அம்மாவிடம் எதுவும் சொன்னதில்லை. வருமானம் முக்கியமல்லவா.

அந்நாட்களில் அம்மாவிடமிருந்தும் சிரிசேனமாமாவிடமிருந்தும் என் கைச்செலவுக்கு கிடைக்கும் பணம், அந்த வண்டில்காரின் நாளாந்த வரவுக்கு ஈடாக இருந்தது. இதைக் கண்ட அவர் தனக்கு பீடி, வெற்றிலை வாங்கித்தா என்பார். இல்லை என்றால் வண்டிலில் ஏறாதே என்பார். வண்டிலில் ஏறும் ஆசையினால் அவர்கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தேன்.

ஒரு முறை பாடசாலையை கட் பண்ணி படம்பார்க்க அழைத்துப்போனார், என் செலவில். திரைக்கு மிக அருகில் ஒரு பலகையில் குந்தியிருந்து கழுத்து வலிக்க வலிக்க படம்பார்த்தேன். அதுவே கலரி என்று அழைக்கப்பட்ட பகுதி என்று பிற்காலத்தில் அறிந்துகொண்டேன். அவ்வப்போது பாடசாலைக்குச் செல்லாது அவருடன் சந்தைப் பக்கம்போனேன். பகலெல்லாம் வண்டிலில் தூங்கினேன். சவாரிகளின்போது உதவினேன். மாட்டுக்கு தண்ணிகாட்டுவது, மரத்தில் கட்டுவது, மேவிடுவது என்று ஆரம்பித்து காலப்போக்கில் அவ்வப்போது என்னையும் வண்டிலையும் ஓட்ட விட்டார். அந்நேரங்களில் என்னை மிகப்பெரிய விமானியாய் நினைத்துக்கொள்வேன். அவர் என்னருகே தூங்கிப்போவர். மாடு தன்பாட்டுக்கு நடந்துகொண்டிருக்கும். நான் நினைத்துக்கொள்வேன் நான் கூறும் பாதையால்தான் மாடு செல்கிறது என. ஆனால் மாடு பழக்கதோஷத்தினாலேயே நடந்து என்பதை நான் வளர்ந்த பின்புதான் அறிந்துகொண்டேன்.

ஒரு நாள் இந்திரன் மாமா வீட்டுக்கு பின்புறம் பீடித்துண்டுகள் இருப்பதாக ஆன்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கேட்டதும் எனக்கு பயம்பிடித்துக்கொண்டது. மறுநாள் அவற்றையெல்லாம் பொறுக்கி அருகில் ஓடிய ஒரு ஓடையில் போட்டுவிட்டேன். அன்று மாலை இந்திரன் மாமா என்னை விசாரணைக்கு உட்படுத்தினார். ”பீடித்துண்டுகளை பொறுக்கி எறிந்தாயா” என்றார். ”இல்லை” என்றேன். அப்பாவிடம் சொல்லப்போவதாக வெருட்டியபோது அழுதுவிட்டேன். இனிமேல்செய்யாதே அது கூடாதபழக்கம் என்று கூறி, யாரிடம் பழகினாய் என்று விசாரித்து, வண்டில்காரரை சந்தித்து அவருக்கு பேசினார். பின்பு வண்டிற்காரருடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் தடைபோட்டார். அத்தோடு தொலைந்துபோனது பீடி குடிக்கும் பழக்கமும், படம்பார்க்கும் பழக்கமும், பாடசாலைக்கு கட் அடிக்கும் பழக்கமும்.

இந்திரன் மாமாவின் மனைவியின் நண்பியொருவர் அவர்களின் வீட்டுக்கு குடிவந்தார். அவருக்கும் ஒரு சிறு குழந்தையிருந்து. அவரின் கணவனை உள்ளூர் முதலாளி ஒருவர் கொலைசெய்திருந்த வழக்கு நடந்துகொண்டிருந்தது. இவரே அவருக்கெதிரான சாட்சியம். பயத்தில் தங்க இடமின்றி நண்பியின் வீட்டில் தஞ்சமடைந்தார்: அவர் தினமும் தனது சோகக் கதையை சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஒரு நாள் நித்திரையாய் இருந்தபோது பெரும் அழுகைச்சத்தமும் பேச்சு‌ச்சத்தமும் கேட்டது. கண்விழித்துப் பார்த்தபோது இந்திரன் மாமாவின் மனைவிக்கும் அவரின் நண்பிக்கும் கடும் வாய்ச்சண்டை நடந்துகொண்டிருந்தது. சண்டையின் சாரம் 15 ருபாய். உன்னிடம் 15ரூபாய் தந்துவைத்திருந்தேன் என்றார் நண்பி. இந்திரன் மாமாவின் மனைவியோ இல்லை என்றார். இருவரும் அழுதனர். ஆளையாள் பேசிக்கொண்டனர், திட்டிக்கொண்டனர். மறுநாள் இந்திரன் மாமாவின் நண்பி வீட்டைவிட்டுப் புறப்பட்டார். யாரை நம்புவது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். மாமா மனைவியின் நண்பியை பேரூந்தில் ஏற்றிவிட்டுவந்ததும் அன்டி மாமாவின் மடியில் விழுந்து அழுதார். மாமாவின குட்டி மகளும் அழுதாள். நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சற்றுக்காலத்தின் பின் இந்திரன் மாமாவுக்கு இடமாற்றம் கிடைத்து வேறு ஊருக்கு இடம்மாறிப்போனார்கள். அம்மா என்னை வேறு வீடு ஒன்றில் சேர்த்துவிட்டார். அந்த வீட்டில் 3 குழந்தைகள். ஒருவனுக்கு என் வயது. ஏனைய இருவரும் என்னைவிட 4 – 5 வயது அதிகமானவர்கள். அவர்களின் அம்மாவை நான் ஆன்டி என்றே அழைத்தேன். அவர் அழகானவரா இல்லையா என்பது நினைவில்இல்லை. அவர் தினமும் வெள்ளையான தாதிமாருக்குரிய உடையுடனேயே வெளியே செல்வார். பதுளையில் இருந்த மிகப்பிரபலமான தனியார் ஆஸ்பத்திரியில் தாதியாக தொழில்புரிந்தார். அவரின் தலையில் குத்தும் வெள்ளையான மடிப்புள்ள துண்டு, வெள்ளைச்சீருடை, மணிக்கூடு, நீண்ட காலுறை, கறுப்புச்சப்பாத்து என்பன இன்றும் நினைவில் நிற்கின்றன.

ஆன்டி தனியேயே குழந்தைகளை பராம‌ரித்துவந்தார். அவர் விவாகரத்தானவரா அல்லது கைம்பெண்ணா என்பது எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் வீட்டில் வறுமை வாழ்ந்துகொண்டிருந்தது. எனினும் பணம்கொடுத்து அங்கு வாழும் என்னை பட்டிணிபோட முடியாது அல்லவா? அதனால் எனக்கு உணவுகிடைக்கும். ஆனால் அதுவும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அது இருந்தது.

அந்நாட்களில் ஆன்டியின் வீட்டுக்கு ஒரு கறுப்புநிறமான காரில் ஒரு மாமா வருவார். மிடுக்கான மனிதர். வீட்டிற்கு முன் கார் நிற்கும். அன்டியுடன் சிரித்து சிரித்துப் பேசுவார். அன்டியும்தான். அவருக்கு வீட்டுக்குள் எங்கும் சென்றுவர அனுமதி இருந்தது. அதிகமாய் முன்மாலைப்பொழுதில் வருவார். அந் நேரங்களில் ஆன்டி எங்களை என்றுமில்லாதவாறு விளையாடிவிட்டு வாருங்கள் என்பார். அது ஏன் என்பது புரிந்திராத காலம் அது என்பதால் நானும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அந்த மாமா சில நாட்களில் இரவிலும் வருவார். மறுநாள் காலைவரை தங்கியிருப்பார். அந்த மாலைப்பொழுதுகளில் எம்மை விரைவாக உணவருந்தச்சொல்லி படுக்கைக்கு அனுப்படுவோம்.

ஒரு நாள் பின்மாலைப்பொழுதில் மாமாவும் ஆன்டியும் அறைக்குள் இருந்தார்கள். வீட்டுக்கு வெளியே சத்தம்கேட்டது. அன்டியும் மாமாவும் வெளியே வர, மாமாவின் மனைவி தனது உறவினர்களுடன் வெளியே நின்றிருந்தார், பத்திரகாளிவேடத்தில். மாமாவுடன் வாய்த்தர்க்கம் நடந்தது. ஆன்‌டி கதிரையில் இருந்தபடியே தலையை இரு கைகளாலும் பிடித்திருந்தார். வேலிகளுக்கு அப்பால் பல தலைகள் தெரிந்தன. மாமாவின் மனைவியின் உறவினர்களுக்கும் மாமாவுக்கும் சண்டை வந்தது. சிலர் பிரித்துவிட்டார்கள்.

அன்றில் இருந்து மாமா காரில் வருவதில்லை. பகலிலும் வருவதில்லை. இருட்டியபின் பின்மாலைப்பொழுதில் இரகசியமாக கொல்லைப்புறத்தால் வந்து பின்மாலை முடியமுன்பு வந்ததைவிட இரகசியமாகப் போய்விடுவார். இந்தக் கதை நடந்தது 1974 -75 காலத்தில். எனக்கு ஏறத்தாள 9 – 10 வயதிருக்கும்.

காலம் ஓடியது. எனது பதின்ம ஆண்டுகள் முடியும் காலத்தில் நான் நின்றிருந்தேன். பல விடயங்கள் பற்றிய அறிவு கிட்டியிருந்தது.

காலம் 1983. எனக்கு 18 வயது. இலங்கையின் சரித்திரத்தில் முக்கிய இடத்தினைப்பெற்ற இனக்கலவரம் நடந்து முடிந்திருந்த காலம்.

அந்நாட்களில் ஏறாவுருக்கு ஒருவர் புதிதாக இடம்பெயர்ந்துவந்தார். எனது உற்ற நண்பனுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அதனால் அவருடன் எனக்கும் சற்று பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் கார் இருந்தது. அதுவும் கறுப்புக்கார். மிகவும் மிடுக்காக உடுத்துவார். கறுப்புக்கண்ணாடி அணிவார். அவர் பதுளையைச்சேர்ந்தவர் என்று அறிந்ததும், நான் பதுளையில் படித்தவன் என்றேன். அவர் தான் ஒரு பிரபலவைத்தியசாலையின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்தவர் என்றார். அந்த வைத்தியசாலையிலேயே எனது ஆன்டி தொழில்பார்த்தார்.

அன்டிக்கும், அவரின் இரகசிய சினேகிதனுக்கும் இடையேயான உறவுபற்றிய அனைத்துவிடயங்களையும் 1975 க்கும் 1983க்கும் இடையேயான காலம் எனக்குக் கற்பித்திருந்தது. எனது விடலைப்பருவம் அது. எனவே சிரித்தபடியே ஆன்டியை தெரியுமா? அவருக்கு ஒரு இரகசிய நண்பன் இருந்தார் தெரியுமா என்றெல்லாம் கேட்டேன்.

எல்லாம் தெரியும், மிக நன்றாகத்தெரியும் என்று கூறி ஒரு மாதிரியாகச் சிரித்தார். அந்த மாமா யார்? அவரை உங்களுக்கு தெரியுமா? என்றேன். மனிதர் வாயைத் திறக்கவே இல்லை. அதன் பின் என்னுடன் பேசுவதையும் குறைத்துக்கொண்டார்.

இன்றுவரை வராத ஒரு சந்தேகம் இதை எழுதும் இக் கணம் வந்திருக்கிறது. எனது மரமண்டைக்கு இந்த சந்தேகம் 31 ஆண்டுகளுக்குமுன் ஏன் தோன்றவில்லை?

பால்யம் - சினேகம் - காமம்

பால்யத்து நாட்களில் இருந்து இன்றுவரை காலம் எனக்கு பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலரின் நினைவுகள் என்னுக்குள் பசுமையாய் படிந்துபோயிருக்கிறது. அவற்றில் சில நினைவுகளுக்குள் சில இரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. 48 வருடங்கள் வாழ்ந்து கழித்தபின், எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு காட்சியில் அவர்கள் பற்றிய நினைவுகள், நீரின் அடியில் இருந்து மேல்நோக்கி எழும் நீர்க்குமிழிகள் போன்று எனது நினைவுகளின் மேற்பகுதிக்கு  வருகின்றன. இன்றைய கதையும் அப்படித்தான்.

Trivandrum Lodge என்னும் மலையாளப் படத்தை இன்று பார்க்கக்கிடைத்தது. எனது தம்பியைப்போன்று, நான் மலையாளப்படங்களை தேடித் தேடி பார்ப்பவன் அல்லன். மோகன்லாலின் நண்பனும் அன்று. அவ்வப்போது காலம் என்க்கு மிகவும் சிறப்பான மலையாளப்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் Trivandrum Lodgeம்.

அதில் ஒரு சிறுவனுக்கு  சகவயதுடைய ஒரு சிறுமிமீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தக் காட்சிகள் எனக்குள் படந்துபோயிருந்த சில பரவசமான நினைவுகளைக்கிளவிட்டது.

படத்தில் வரும் சிறுவனைப்போன்று எனக்கும் ஒரு சிறுமியில்  ஈர்ப்பு 1977 - 78  காலப்பகுதியில் அந்நாட்களில் நாம் இலங்கையின் மத்திய பிரதேசத்துக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில்வாழ்திருந்தோம். நான் மட்டக்களப்பில் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்றேன். வருடத்திற்கு 3 தடவை விடுமுறை. விடுமுறை என்றால் நான் காற்றில் பறந்து திரிந்த நாட்கள் அவை.

அந்த கோடைவிடுமுறைக்கு வீடுசென்றிருந்தேன். அம்மாவின் மேலதிகாரின் உறவினர் பெண் அவள். அம்மாவும் மேலதிகாரி தமிழர். எனவே எனக்கு விளையாட்டுத்தோழியாய் அறிமுகப்படுத்தப்பட்டாள்.

அம்மாவின் மேலதிகாரி ஒரு சிங்களவரை மணமுடித்திருந்தார். அந்த ஆன்டியின் சகோதரியின் மகள் அவள். என்னிலும் ஒரு வயது அதிகமானவள். 

அரசல்புரசலாக சில விடயங்கள் புரியத்தொடங்கியிருந்த காலம் அது. தகாத சகவாசத்தால் சற்று பிஞ்சிலே பழுத்திருந்தேன். எனினும் என்னைத்தவிர எவருக்கும் இதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

அந் நாட்களில் எனது தந்தை ஒரு கரும்புத்தோட்டம் வைத்திருந்தார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் கரும்புத்தோட்டதின் காவலுக்கு என்னையும், தர்மலிங்கம் என்னும் ஒரு தொழிலாளியுடன் அனுப்புவார். தர்மலிங்கம் ஒரு இளைஞர். என்னை விளையாட அனுப்பிவிட்டு, மரத்தின் உச்சியில் இருக்கும் பரண்மீது ஏறி உட்காந்திருப்பார்.. அப்பா கேட்டால் தம்பி என்னுடன் இருந்தார் என்பார். அதனாலோ என்னவோ தர்மலிங்கம் இன்னும் நினைவில் இருக்கிறார்.

அந்நாட்களில்தான் அவளுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவள் கொழும்பில் வாழ்ந்திருப்பவள் என்பதால் விடுமுறைக்கு சித்தியின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்கு ஒரு தங்கையிருந்தாள். எனக்கு தம்பியிருந்தான். அவர்கள் இருவருக்கும் 9 வயதிருக்கும். அவர்கள் தூய்மையான குழந்தைகளில் உலகத்தில் இருந்தார்கள். நாம் அந்த தூய்மையான குழந்தைகளின் உலகத்தைவி்ட்டு வெளியேறிக்கொண்டிந்த காலம்அது. வாழ்க்கை பலவிடயங்களை  எமக்கு அறிமுகப்படுத்திய காலம் அது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர்களும், நாங்களும் சந்திப்பது வழக்கமானது. ஆரம்பத்தில் சாதாரணமாக சென்ற எமது நட்பு காலப்போக்கில் வில்லங்கமானது. ஒரு கோடைவிடுமுறையின் போது அவள் ருதுவெய்தினாள். அவளின் சித்தியின் வீடு திருவிழாபோலானது.

அவர்களுக்கு தெரிந்த ஒரே ஒரு குடும்பம் நாம் ஆகையால் நாம் அங்கு நின்றிருந்தோம். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பலரின் வருகையும், பாட்டுகளும், இனிப்புவகைகளும், கொண்டாட்டத்திலும் நான் என்னை மறந்திருந்தேன். வழமையாக விளையாட வரும் அவள் மட்டும் விளையாடவரவில்லை.

அந்த விடுமுநையின் பின் மீண்டும் பாடசாலை என்று காலம் ஓடியது. அடுத்த விடுமுறையின்போது எனக்கும் 13 வயதாகியிருந்தது. பாடசாலை மற்றும் விடுதி நண்பர்கள் அந்த வயதிற்குரிய பலதையும் கற்றுத்தந்திருந்தார்கள். பெண்கள் என்றால் மனதில் சற்று வேகம் புகுந்திருந்தது. மனதுக்குப்புரியாத ஒரு விறுவிறுப்பு, பயம், வெட்கம் என்று பல உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தேன். என் உயிர் நண்பன் ஒருவன்  எமது பாடசாலையிலே‌யே மிக மிக அழகிய ஆசிரியையில் பெருங்காதல் கொண்டிருந்த காலம் அது. அவனும் எனது உணர்வுகளுக்கு புகைபோட்டிருக்கலாமோ என்று இன்று யோசிக்கிறேன்.

‌அப்போது விடுமுறை. விடுதியில் இருந்து வீடு சென்றிருந்தேன். ஒரு மதியப்பொழுதில் அம்மா அவள் வந்திருப்பதாகவும் அங்குபோய் விளையாடலாம் என்றும் கூறியபோது, தம்பியை அழைத்துக்கொண்டு அவர்களின் வீடு சென்றேன்.

அவர்களின் வீட்டுக்கு முன்னால் தன் தங்கையுடன் பூப்புந்து விளையாடிக்கொண்டிருந்தாள் அவள்.  அவளைக் கண்டதும் எனக்கு ஏதோ ஆனது. பூக்களால் ஆன ஒரு சட்டையை அணிந்திருந்தபடியே தனது தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் துள்ளும்போதெல்லாம் நான் விழுந்துகொண்டிருந்தேன். எனது ஹோர்மோன்கள் நர்த்தனமாடத்தொடங்கின. அவள் கடந்துபோன அரைவருடத்தில் முற்றிலும் மாறியிருந்தாள். முன்னிலும் பலமடங்கு அ‌ழகாக இருந்தாள். உடலின் வளைவு நெளிவுகளும் அவளைப்போல் பேரழகாய் மாறியிருந்தன. பிஞ்சிலே பழுத்திருந்ததால் அவைபற்றிய சிற்றறிவு எனக்கு வாய்த்திருந்தது.

எனது தம்பியும் அவளின் தங்கையும் குழந்தையுலகத்தில் இருக்க நாம் இருவர் மட்டும் குழந்தையுலகத்தைவிட்டு வெளியேறியிருந்தோம். குழந்தைகளுக்கான தூய்மை எம்மைவிட்டு அகன்று களவு சற்றே எட்டிப்பார்த்தது.

நாம் வாழ்ந்திருந்து இடம் ஒரு கிராமப்பகுதி. காலம் 70களின் நடுப்பகுதிய‌ை கடந்துகொண்டிருந்தது. தொலைக்காட்சி வந்திராத காலம். வெளியில் விளையாடுவதே எமது காலத்தை கடத்திக்கொண்டிருந்து. நாம் தனித்து இருப்பதற்கு அவர்களின் வீட்டுக்குப்பின்னால் இருந்த நீரோடைப்பக்கம் துணைசெய்தது. அவள் எதைக்கேட்டாலும்  மந்தரித்துவிட்டவன்போன்று தலையாட்டினேன். அவள் பின்னாலேயே அலைந்தேன். அவளின் அருகாமை மனதை காற்றில் பறக்கடித்தது. அவள் அருகில் வந்தால் காற்றில் நடந்தேன். அவள் பேசினால் காதில் தேன்பாய்ந்தது. அவள் உடல் என்னுடலுடன் கணப்பொழுதேனும் உரசினால் முதலில் நாவரண்டு, இதயம் பெரிதாய் ஒலித்து, வியர்த்தது, பின்பு மோட்சமடைந்தேன்.

அவள் கொழும்பின் நாகரீகத்தில் வளர்ந்தவள். நானோ மட்டக்களப்பின் ஏக புத்திரன். எமக்கிடையில் நாகரீகத்தில் காததூரம் வித்தியாசம் இருந்தது. ஆனாலும் நான் பிஞ்சில் பழுத்திருந்‌தது மேற்கூறிய இடைவெளியை குறைத்தது என்றே கூறவேண்டும்.

அவள் காதல் என்னும் சொல்பற்றி அறிந்திருந்தாள். ஓரளவு நானும். எம் நால்வரையும் சில நாட்களில் சிங்களப் திரைப்படங்களை பார்ப்பதற்கு அனுமதிப்பார்கள்.  நாம் அருகருகே அமர்ந்திருப்போம். காமினிபொன்சேகா, விஜயகுமாரதுங்க ஆகியோர் மாலினி பொன்சேகாவை கட்டிப்பிடித்துப் பிரளும் காதற்காட்சிகளின்போது, அவள் அர்த்தமாய் பார்த்து மர்மமாய் புன்னகைப்பாள். காதருகில் குசுகுசுப்பாள். எனக்கு வேர்த்து நடுங்கி, வெட்கம் என்னை தின்றுதீர்க்கும்.

மறுநாள் படத்தின் காதற்காட்சிகளைபற்றி பேசுவாள். எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றாலும், ஆனாலும் அவள் மேலும் மேலும் பேசவேண்டும் என்று நினைப்பேன்.

அவளுக்கு என்னைவிட சிலவிடயங்கள் அதிகமாகவே தெரிந்திருந்திருக்கவேண்டும். அடிக்கடி ஒளிந்து பிடித்துவிளையாடும்போது என்னை இழுத்தோடினாள் வீட்டின் பின்புறம் இருந்து நீரேரிக்கு என் தம்பியும் அவளின் தங்கையும் எம்மை தேடிக்களைத்தனர். நாம் அங்கிருந்தபடியே பேசிக்கொண்டிருப்போம்

அவளின் கைகள் என்னை பற்றி இழுத்ததும் மந்தரித்துவிட்ட மந்திபோன்று அவள்பின்னே ஓடுவேன். என்ன என்னவோல்லாம் பேசினோம். எதுவும் நினைவில் இல்லை. நீரோடையை கடந்து சென்ற ஒரு நாள் முதன் முதலாக கபரகொயா என்னும் ஒரு மிருகத்தைக் கண்டோம். முதலைமாதிரியான மிருகம் அது. தாவரபட்சனி ஆகிய அம் மிருகம் தனது வாலால் மட்டுமே தாக்கும். அதைக் கண்டு பயந்த அவளை கைபிடித்து அழைத்துவந்தேன். அன்று பெரும் கதாநாயகனைப்போல் உணர்ந்தேன். அதன்பின் அவள் நீரோடைப்பக்கம் வர மறுத்துவிட்டாள்.

அவர்களின் வீட்டுக்குமுன் பல கொய்யாமரங்கள் இருந்தன.  ஒரு நாள் கொய்யாப்பழம் ஆய்ந்துதா என்றாள். மரம் ஏறத்தெரியாத மந்தி நான். அவளுக்காய் பெரும்பாடுபட்டு ஏறினேன். கொய்யாப்பழமும் ஆய்ந்து கெடுத்தேன். அப்போதுதான் அந்த பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

மரத்தில் சிரமப்பட்டு ஏறத்தெரிந்த எனக்கு இறங்கத்தெரியவில்லை. தட்டுத்தடுமாறி கால்வைத்தபோது வழுக்கி விழுந்த என்னை கீழே இருந்த ஒரு ஒரு கொப்பு தாங்கிக் காப்பாற்றியது. அதன் பின் அவள் ஒரு ஏணியைக் கொணர்ந்து என்னை இறக்கினாள். ”உனக்கு மரம் ஏறத்தெரியாதா” என்ற போது கால் வழுக்கிவிட்டது என்றேன். என்னிலும் ஓரிரு வயதான அவள் அதை நம்பவில்லை என்பதை அவள் புன்னகை காட்டியது. வெட்கமாய் இருந்தது. எதுவும்‌ பேசாது வீட்டுக்கு ஓடினேன்.

என்னிடம்  கொய்யா மரக்கிளையில் செய்ப்பட்ட கட்டப்பொல்  (catapul) இருந்தது. ஆனால் குறிபார்த்து அடிக்கத்தெரியாது. அவனை பிரமிக்கவைப்பதற்காக அதை எடுத்துச்செல்வேன். ஒரு நாள் அவளுக்கு குறிபார்த்து அடிக்க கற்றுதர நேர்ந்தது. அவளின் பின்னால் நின்று அவள் கையைப்பிடித்து இப்படித்தான் இதைப்பாவிக்கவேண்டும் என்று கற்றுக்ககொடுக்கவேண்டும். அவள் கையினை பிடித்திருந்த எனது கை உணர்ந்த குளிர்ச்சியும், அவளின் அருகாமையும் வந்த காரியத்தை மறக்கடித்தது. கற்பதில் அவளுக்கும், கற்பிப்பதில் எனக்கும் ஆர்வம் இருந்திருக்க நியாயமில்லை என்றே நினைக்கிறேன்.

ஒரு நாள் ஒளிந்து பிடித்துவிளையாடினோம். என் தம்பியும், அவளின் தங்கையும் போலீஸ், நாம் இருவரும் கள்வர்கள். அவர்களுக்கு தெரியாத ஒரு இருட்டறைக்குள் ஒளிந்துகொண்டோம். மிகவும் குறுகிய இடம். என்னருகில், மிக மிக அருகில் நின்றிருந்தாள். அவளின் முகமும் எனது முகமும் உராய்வதை தடுக்க பெரும்பாடுபட்டேன். அவளின் முச்சு என்னை திணரடித்தது. கொழும்பில் வளர்ந்த அவளோ அதுபற்றி பிரக்ஞை இன்றி இருந்தாள் போன்றே உணர்ந்தேன். அவள் மூச்சின் காற்றும், மார்பும், உடலும் என்னில் உரசியபோது நாவறண்டு, உடல் நடுங்கி வியர்த்தது. மறுபுறம் திரும்பிக்கொண்டேன். அப்போதும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அவளும் திரும்பிக்கொண்டாள்.

இதன்பின் எமக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. அவளே எனது நினைவில் இருந்தாள். எப்போதும் 16ம் வாய்பாட்டை பாடமாக்கு என்று பெரும் வில்லனாய் இருந்த எனது தந்தைகூட நினைவில் இருந்து மறந்துபோனார். அவளே யாதுமாய் இருந்தாள். அவளுக்கும் அப்படியாயே இருந்திருக்கவேண்டும். என்னைக் கண்டதும் மயக்கும் புன்னகையால் மயங்கடித்தாள். அதிகமாய் பேச மறுத்தாள். தனியே இழுத்தோடினாள் அதன் பின்பும் நாம் தனியே உரசிக்கொள்ளும் கள்ளன்போலீஸ் விளையாட்டுநடந்தது. அந்நேரங்களில் எனது தொண்டை காய்ந்து, நா வரண்டு, என் நடுக்கம் சற்றுக் குறைந்து, அவள் சிவந்தது பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை இந்த நிமிடம்வரை.

அந்த வருடம் அவளைப்பிரிவது மிகக்கடினமாய் இருந்தது.  அதே வருடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏறாவூருக்கு மாற்றமாகியது. காலப்போக்கில் அவள் நினைவில்இருந்து மறந்துபோனாள். வேறுசிலர் அவளின் இடத்தை கைப்பற்றிக்கொண்டார்கள்.

ஏறத்தாள 35 ஆண்டுகளின் பின்பு

2013ம் ஆண்டு கோடைவிடுமுறையின்போது இலங்கை சென்றிருந்தேன். ஒரு மாலைநேரம் வீடுவந்தபோது, வீட்டில் விருந்தினர் ஒருவர் இருந்தார். அவரை அடையாளம் தெரிந்தது. பிபிலையில் இருந்த அம்மாவின் மேலதிகாரின் மனைவி அவர். கடந்துபோயிருந்த 35 வருட காலம் அவரை முதுமையினுள் அழைத்துப்போயிருந்தாலும் அவர்  முதுமையின் அழகான கம்பீரத்துடன் இருந்தார்.

நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் எப்போதாவது அவரின் சகோதரியின் மகள் பற்றிக் ஏதேனும் கூறுவார் என்று  காத்திருந்தேன். மனம் தவியாய் தவித்தது. இதயம் வேகமாய் அடித்தது. அவளின் அருகாமையையும், வெம்மையையும் உணர்ந்தேன். வாய்விட்டுக்கேட்க வெட்கமாய் இருந்தது. எனவே அவளின் தங்கைபற்றிக் கேட்டேன்.

அப்போது அவர் அவளின் பெயரைக்கூறி, நேற்று அவளைச் சந்தித்தபோது, இன்று உன்னை சந்திப்பதாகக் கூறினேன், உன்னைப்பற்றி மிகவும் விசாரித்தாள் அத்துடன் அவள் உன்னை மிகவும் அன்பாக விசாரித்ததாகவும் கூறச்சொன்னாள் என்று அவர் கூறியபோது அவர்  முகத்தில் பெரும்குறும்பும் சிரிப்பும் கலந்திருந்தது.

எனது பேரன்பையும் தெரிவியுங்கள் என்றேன் சிங்களத்தில் தலையைக்குனிந்தவாறே. 

அன்று மாலை முழுவதும் அவளும் இன்றுவரை என்னை மறக்கவில்லை என்பது என்‌னை காற்றில் சுமந்துபோய்க்கொண்டிருந்தது.

பால்யத்து நினைவுகள் பேரனந்தமானவை!