என்னை பிஞ்சிலே பழுக்கவைத்தவர்கள்

”எதுவரை”  இணைய இதழ் 14  (08.02.2014) இல் வெளியானது
-----------------------------------------------------------------

எனது பெற்றோர்கள் இருவரும் இலங்கை அரச ஊழியர்களாக இருந்தார்கள். அரச ஊழியர்களுக்கு அடிக்கடி இடமாற்றம் வரும். அதிலும் அம்மா வைத்தியராக இருந்ததால் மிகவும் பின்தங்கிய இடங்களுக்கு மாற்றப்பட்டார். அப்பா போலீஸ் அதிகாரி. அவரும் அம்மாவை பின்தொடர்ந்து இடமாற்றங்களை வாங்கிக்கொண்டார்.

இப்படித்தான் நான் இலங்கையின் மத்தியபிரதேசத்துக்கு அருகாமையில்ல் உள்ள பிபிலை என்னும் அழகிய இடத்திற்கு வந்துசேர்ந்தோம். அந் நாட்களில் பிபிலை மிக மிகப் பின்தங்கிய ஒரு காட்டுப்பகுதி. வாகைமரங்கள் நிறைந்ததோர் பகுதியில் நாம் குடியிருந்தோம். வாகைமரத்தில் ஒட்டுண்ணியாக இருந்த பிரபல்யமான ஓர்கிட் பூக்கள் எனக்கு அறிமுகமான நாட்களும் அவைதான்.

அந்நாட்களில் இலங்கையில், அனேகமாக தமிழர்களே முக்கிய பதவிகளில் இருந்தார்கள். வைத்திய அதிகாரி, வைத்தியர், மிருகவைத்தியர், பல்வைத்தியர், பொறியியலாளர், போலீஸ் என்று. பிபிலையும் அப்படியே.

அப்போது எனக்கு வயது 7, இரண்டாம் வகுப்பு தொடங்கவேண்டும். அக்காலத்தில் பிபிலையில் தமிழ்ப்பாடசாலை இல்லை. எனக்கு அந்நாட்களில் சிங்கள மொழி சரளமாக தெரிந்திருந்திருந்தாலும் அம்மாவுக்கு என்னை சிங்களமொழியில் கற்பிக்க விருப்பம் இருக்கவில்லை. எனவே கொழும்பில் வாழ்ந்திருந்த அம்மாவின் அண்ணண் ராஜசிங்கம்மாமாவின் வீட்டில் இருந்து கல்விகற்க அனுப்பிவைத்தார்கள்.

அங்கு தங்கியிருந்து எனது 2ம், 3ம் வகுப்பை முடித்துக்கொண்டேன். ஆனால் மனமோ அங்கு இருக்க சம்மதிக்கவில்லை. அழுது அழிச்சாட்டியம் பண்ணி ஒருவிதமாக பிபிலைக்கு அண்மையில் உள்ள பதுளையில் ஒரு பாடசாலையில் சேர்ந்துகொண்டேன். பதுளைக்கும் பிபிலைக்கும் இடையில் ஏறத்தாள 3 பஸ் மணிநேரப் பயணம். எனவே இம்முறையும் பதுளையில் ஒரு வீட்டில் தங்கியிருந்தே பாடசாலைக்கு சென்றுவரவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. பதுளையில் தங்கியிருந்து சரஸ்வதி கனிஸ்ட மகாவித்தியாலத்தில் 4ம் 5ம் வகுப்புக்களை கடந்துகொண்டேன்.

அந்நாட்கள் எனது வாழ்வின் முக்கியநாட்கள். இன்றும் அந்நாட்களின் பல நினைவுகளும், காட்சிகளும், வாசனைகளும் நினைவில் பசுமையாய் பதிந்திருக்கின்றன, சந்தனத்தில் வாசனை போன்று.

நான் பிஞ்சில் பழுத்ததும் இந்த நாட்களில்தான். நான் பிஞ்சில் பழுப்பதற்கு அதிகமாய் புகைபோட்டவர்கள் பதுளையில் அறிமுகமாகிய ஒரு சில மனிதர்கள். அவர்கள் பற்றிய நினைவுக்குறிப்பே இப்பதிவு.

அறியாப்பருவம் என்றும் கூறுமுடியாது, அறிந்த பருவம் என்றும் கூறமுடியாது. இவையிரண்டிற்கும் இடையிலான ஒரு பரவசமான பருவம் அது. அந்நாட்களின் எனது செய்கைகளில், நான் எதையும் பிரக்ஞைபூர்வமாக உணர்ந்து செய்யவில்லை என்றே நினைக்கத்தோன்றுகிறது, இன்று. ஒரு விறுவிறுப்பில், வேகத்தில், விபரம் புரியாத தேடல்களால் காலவோட்டத்தில் சந்தித்த பல மனிதர்களின் பாதிப்புக்களும், பழக்கவழக்கங்களும் என்னையும் தொற்றிக்கொண்டன. சிறிது காலத்தின்பின் அவை மறைந்தும்போயின.

பதுளையில் நான் எங்கு தங்கியிருந்து படிப்பது என்ற பெருங்கெள்வி எழுந்தபோது, பிபிலையில் எமது குடும்பத்துக்கு நன்கு அறிமுகமான இந்திரன் மாமா என்னும் ஒரு பொறியிலாளர் குடும்பம் பதுளைக்கு இடம்பெயர்ந்தது. அவர்களுடன் நான் தங்கிப்படிப்பது என்றும் முடிவாயிற்று. இந்த இந்திரன் மாமா காதலித்து திருமணம் செய்தவர். இந்திரன் மாமாவின் மனைவி சிங்களவர். அவர்களுக்கு 2 -3 வயதில் சாந்தினி என்று ஒரு மகள் இருந்ததாகவும் ஞாபகம்.

அவர்கள் பதுளைபிட்டிய என்னும் இடத்தில் வாழ்த்தொடங்க நானும் அவர்களுடன் அவங்கு வாழத்தொடங்கினேன். எனது பாடசாலையோ நகரத்துக்கு அருகில் இருந்தது. நடந்து சென்றால் ஏறத்தாள குறைந்தது அரைமணிநேரம் ஆகும். வௌவால்கள் நிறைந்த ஒரு பகுதியினூடாகவும் நடந்து செல்லவேண்டும். அது சற்று பயங்கரமான இடம். எனினும் ஏனையவர்களுடன் சேர்ந்து செல்வதால் சற்று பயம் குறைவாக இருக்கும்.

இந்நாட்களில் எனக்கு சிங்களவரான ஒரு வண்டில்காரர் அறிமுகமாகினார். அவர் பெயர் நினைவில் இல்லை. அவரின் ஒரு ஒற்றைமாட்டுவண்டில் இருந்தது. சந்தைக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் தொழில் அவருக்கு. தனது வண்டிலை ஓலையால் வேந்திருந்தார். எனவே பயணங்கள் குளிர்ச்சியாய் இருக்கும். அவரின் வாயும் பற்களும் கறுப்பாயும், சிவப்பாயும் இருந்தன. எப்போதும் வெற்றிலையும், பீடியுமாய் இருந்தார் அவர். உதட்டில் இருவிரல்களைவைத்து அவற்றின் இடுக்கினூடாக வெற்றிலைச் சாறினை துப்பும் பழக்கம் அவர் கற்றுத்தந்ததே.

ஆரம்ப நாட்களில் அவர் வண்டிலில் உட்கார்ந்திருக்க அவருடன் பேசியபடியே நடந்துசெல்வேன். காலப்போக்கில் பின்னால் தொங்கி ஏறி உட்காந்திருந்தபடியே பாடசாலைக்கும் செல்லவும், திரும்பிவரவும் அனுமதி கிடைத்தது. எனக்கு சிங்களம் ‌நன்கு தெரிந்திருந்ததால் மொழிப்பிரச்சனை இருக்கவில்லை.

வண்டில் தன்பாட்டுக்கு சென்றுகொண்டிருக்கும். நாம் பலதையும் பேசிக்கொண்டிருப்போம். அவர் மிக நன்றாகப் பாடுவார். சிங்களப்பட கதாநாயகர்களான காமினி பொன்சேகா, விஜயகுமாரதுங்க ஆகியோரின் பாடல்களாகவே அது இருக்கும். அவருக்கு எழுத்தறிவு இல்லை. அவருக்கு அவரின் பெயரை ஆங்கிலத்தில் எழுதிக்கொடுத்ததாக நினைவிருக்கிறது. அப்போது என்னை நான் ஆசிரியனாக நினைத்து பெருமைப்பட்டுக்கொண்டேன். அவர் புகைபிடிப்பார். அவரிடம் உள்ள பணத்தைப்பொறுத்து அது பீடி, சுடுட்டு என்று வேறுபடும். புகையை உள்ளிளுக்கும் போது கண்களை மூடி ஏகாந்தநிலைக்கு செல்வதையும், புகைய‌ை வெளியே விட்டு விட்டு ஊதும் அழகையும் ரசிக்கலானேன். அதைக் கவனித்த அவர் ஒரு நாள் குடித்துக்கொண்டிருந்த பீடியைத் தந்தார். பக்குவமாய் அதை வாயில்வைத்து இழுத்தேன். இருமியது. அப்படி அல்ல இப்படி என்று புகைபிடிப்பதன் நுட்பங்களை கற்பித்தார். நானும் சிரத்தையுடன் கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். காலையும் மாலையும் பீடி என்றாகியது. வெற்றிலைப் பழக்கம் தொற்றிக்கொண்டது.

எனது தாயார் பிபிலை வைத்தியசாலையில் வைத்தியராக இருந்தார். அவர் பதுளை வைத்தியசாலைக்கு அவசரகால வண்டியில் நோயாளிகளை அனுப்பும்போது எனக்கு ஏதும் தின்பண்டங்கள், கைச்செலவுக்கு பணம் என்று அவசரகால வண்டியின் சாரதி சிரிசேன மாமாவிடம் கொடுத்துவிடுவார். சிரிசேனமாமா ஒரு சிங்களவர்.

சிரிசேன மாமா திருமணம் முடிக்காதவர், தனிக்கட்டை. அவரின் அந்த அவசரகால வண்டியையை அவர் மனைவிபோன்று பாராமரித்துவந்தார். அவர் அவரது வாகனத்தை கழுவியதை இப்போது நினைத்துப்‌பார்க்கும்போது அவர் அதை தனது மனைவியாக நினைத்து கழுவினாரோ என்று நினைக்கத்தோன்றுகிறது. அந்தளவுக்கு அன்பாய் அதைக் கழுவுவார். என்மீது மிகுந்த அன்பு கொண்டவர் அவர். சிறுவயதில் தாய்தந்தையரைவிட்டு தொலைதூரம் வந்து படிக்கிறானே என்ற அனுதாபம் அவருக்கு. அடிக்கடி அவரும் பணம் தருவார். இது பற்றி நான் அம்மாவிடம் எதுவும் சொன்னதில்லை. வருமானம் முக்கியமல்லவா.

அந்நாட்களில் அம்மாவிடமிருந்தும் சிரிசேனமாமாவிடமிருந்தும் என் கைச்செலவுக்கு கிடைக்கும் பணம், அந்த வண்டில்காரின் நாளாந்த வரவுக்கு ஈடாக இருந்தது. இதைக் கண்ட அவர் தனக்கு பீடி, வெற்றிலை வாங்கித்தா என்பார். இல்லை என்றால் வண்டிலில் ஏறாதே என்பார். வண்டிலில் ஏறும் ஆசையினால் அவர்கேட்டதை எல்லாம் வாங்கிக்கொடுக்க ஆரம்பித்தேன்.

ஒரு முறை பாடசாலையை கட் பண்ணி படம்பார்க்க அழைத்துப்போனார், என் செலவில். திரைக்கு மிக அருகில் ஒரு பலகையில் குந்தியிருந்து கழுத்து வலிக்க வலிக்க படம்பார்த்தேன். அதுவே கலரி என்று அழைக்கப்பட்ட பகுதி என்று பிற்காலத்தில் அறிந்துகொண்டேன். அவ்வப்போது பாடசாலைக்குச் செல்லாது அவருடன் சந்தைப் பக்கம்போனேன். பகலெல்லாம் வண்டிலில் தூங்கினேன். சவாரிகளின்போது உதவினேன். மாட்டுக்கு தண்ணிகாட்டுவது, மரத்தில் கட்டுவது, மேவிடுவது என்று ஆரம்பித்து காலப்போக்கில் அவ்வப்போது என்னையும் வண்டிலையும் ஓட்ட விட்டார். அந்நேரங்களில் என்னை மிகப்பெரிய விமானியாய் நினைத்துக்கொள்வேன். அவர் என்னருகே தூங்கிப்போவர். மாடு தன்பாட்டுக்கு நடந்துகொண்டிருக்கும். நான் நினைத்துக்கொள்வேன் நான் கூறும் பாதையால்தான் மாடு செல்கிறது என. ஆனால் மாடு பழக்கதோஷத்தினாலேயே நடந்து என்பதை நான் வளர்ந்த பின்புதான் அறிந்துகொண்டேன்.

ஒரு நாள் இந்திரன் மாமா வீட்டுக்கு பின்புறம் பீடித்துண்டுகள் இருப்பதாக ஆன்டியிடம் பேசிக்கொண்டிருப்பதை கேட்டதும் எனக்கு பயம்பிடித்துக்கொண்டது. மறுநாள் அவற்றையெல்லாம் பொறுக்கி அருகில் ஓடிய ஒரு ஓடையில் போட்டுவிட்டேன். அன்று மாலை இந்திரன் மாமா என்னை விசாரணைக்கு உட்படுத்தினார். ”பீடித்துண்டுகளை பொறுக்கி எறிந்தாயா” என்றார். ”இல்லை” என்றேன். அப்பாவிடம் சொல்லப்போவதாக வெருட்டியபோது அழுதுவிட்டேன். இனிமேல்செய்யாதே அது கூடாதபழக்கம் என்று கூறி, யாரிடம் பழகினாய் என்று விசாரித்து, வண்டில்காரரை சந்தித்து அவருக்கு பேசினார். பின்பு வண்டிற்காரருடன் பேசுவதற்கும் பழகுவதற்கும் தடைபோட்டார். அத்தோடு தொலைந்துபோனது பீடி குடிக்கும் பழக்கமும், படம்பார்க்கும் பழக்கமும், பாடசாலைக்கு கட் அடிக்கும் பழக்கமும்.

இந்திரன் மாமாவின் மனைவியின் நண்பியொருவர் அவர்களின் வீட்டுக்கு குடிவந்தார். அவருக்கும் ஒரு சிறு குழந்தையிருந்து. அவரின் கணவனை உள்ளூர் முதலாளி ஒருவர் கொலைசெய்திருந்த வழக்கு நடந்துகொண்டிருந்தது. இவரே அவருக்கெதிரான சாட்சியம். பயத்தில் தங்க இடமின்றி நண்பியின் வீட்டில் தஞ்சமடைந்தார்: அவர் தினமும் தனது சோகக் கதையை சொல்லிக்கொண்டே இருப்பார். நானும் கேட்டுக்கொண்டே இருப்பேன். ஒரு நாள் நித்திரையாய் இருந்தபோது பெரும் அழுகைச்சத்தமும் பேச்சு‌ச்சத்தமும் கேட்டது. கண்விழித்துப் பார்த்தபோது இந்திரன் மாமாவின் மனைவிக்கும் அவரின் நண்பிக்கும் கடும் வாய்ச்சண்டை நடந்துகொண்டிருந்தது. சண்டையின் சாரம் 15 ருபாய். உன்னிடம் 15ரூபாய் தந்துவைத்திருந்தேன் என்றார் நண்பி. இந்திரன் மாமாவின் மனைவியோ இல்லை என்றார். இருவரும் அழுதனர். ஆளையாள் பேசிக்கொண்டனர், திட்டிக்கொண்டனர். மறுநாள் இந்திரன் மாமாவின் நண்பி வீட்டைவிட்டுப் புறப்பட்டார். யாரை நம்புவது என்று நான் யோசித்துக்கொண்டிருந்தேன். மாமா மனைவியின் நண்பியை பேரூந்தில் ஏற்றிவிட்டுவந்ததும் அன்டி மாமாவின் மடியில் விழுந்து அழுதார். மாமாவின குட்டி மகளும் அழுதாள். நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன்.

சற்றுக்காலத்தின் பின் இந்திரன் மாமாவுக்கு இடமாற்றம் கிடைத்து வேறு ஊருக்கு இடம்மாறிப்போனார்கள். அம்மா என்னை வேறு வீடு ஒன்றில் சேர்த்துவிட்டார். அந்த வீட்டில் 3 குழந்தைகள். ஒருவனுக்கு என் வயது. ஏனைய இருவரும் என்னைவிட 4 – 5 வயது அதிகமானவர்கள். அவர்களின் அம்மாவை நான் ஆன்டி என்றே அழைத்தேன். அவர் அழகானவரா இல்லையா என்பது நினைவில்இல்லை. அவர் தினமும் வெள்ளையான தாதிமாருக்குரிய உடையுடனேயே வெளியே செல்வார். பதுளையில் இருந்த மிகப்பிரபலமான தனியார் ஆஸ்பத்திரியில் தாதியாக தொழில்புரிந்தார். அவரின் தலையில் குத்தும் வெள்ளையான மடிப்புள்ள துண்டு, வெள்ளைச்சீருடை, மணிக்கூடு, நீண்ட காலுறை, கறுப்புச்சப்பாத்து என்பன இன்றும் நினைவில் நிற்கின்றன.

ஆன்டி தனியேயே குழந்தைகளை பராம‌ரித்துவந்தார். அவர் விவாகரத்தானவரா அல்லது கைம்பெண்ணா என்பது எனக்கு நினைவில் இல்லை. அவர்கள் வீட்டில் வறுமை வாழ்ந்துகொண்டிருந்தது. எனினும் பணம்கொடுத்து அங்கு வாழும் என்னை பட்டிணிபோட முடியாது அல்லவா? அதனால் எனக்கு உணவுகிடைக்கும். ஆனால் அதுவும் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாகவே அது இருந்தது.

அந்நாட்களில் ஆன்டியின் வீட்டுக்கு ஒரு கறுப்புநிறமான காரில் ஒரு மாமா வருவார். மிடுக்கான மனிதர். வீட்டிற்கு முன் கார் நிற்கும். அன்டியுடன் சிரித்து சிரித்துப் பேசுவார். அன்டியும்தான். அவருக்கு வீட்டுக்குள் எங்கும் சென்றுவர அனுமதி இருந்தது. அதிகமாய் முன்மாலைப்பொழுதில் வருவார். அந் நேரங்களில் ஆன்டி எங்களை என்றுமில்லாதவாறு விளையாடிவிட்டு வாருங்கள் என்பார். அது ஏன் என்பது புரிந்திராத காலம் அது என்பதால் நானும் அதைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை. அந்த மாமா சில நாட்களில் இரவிலும் வருவார். மறுநாள் காலைவரை தங்கியிருப்பார். அந்த மாலைப்பொழுதுகளில் எம்மை விரைவாக உணவருந்தச்சொல்லி படுக்கைக்கு அனுப்படுவோம்.

ஒரு நாள் பின்மாலைப்பொழுதில் மாமாவும் ஆன்டியும் அறைக்குள் இருந்தார்கள். வீட்டுக்கு வெளியே சத்தம்கேட்டது. அன்டியும் மாமாவும் வெளியே வர, மாமாவின் மனைவி தனது உறவினர்களுடன் வெளியே நின்றிருந்தார், பத்திரகாளிவேடத்தில். மாமாவுடன் வாய்த்தர்க்கம் நடந்தது. ஆன்‌டி கதிரையில் இருந்தபடியே தலையை இரு கைகளாலும் பிடித்திருந்தார். வேலிகளுக்கு அப்பால் பல தலைகள் தெரிந்தன. மாமாவின் மனைவியின் உறவினர்களுக்கும் மாமாவுக்கும் சண்டை வந்தது. சிலர் பிரித்துவிட்டார்கள்.

அன்றில் இருந்து மாமா காரில் வருவதில்லை. பகலிலும் வருவதில்லை. இருட்டியபின் பின்மாலைப்பொழுதில் இரகசியமாக கொல்லைப்புறத்தால் வந்து பின்மாலை முடியமுன்பு வந்ததைவிட இரகசியமாகப் போய்விடுவார். இந்தக் கதை நடந்தது 1974 -75 காலத்தில். எனக்கு ஏறத்தாள 9 – 10 வயதிருக்கும்.

காலம் ஓடியது. எனது பதின்ம ஆண்டுகள் முடியும் காலத்தில் நான் நின்றிருந்தேன். பல விடயங்கள் பற்றிய அறிவு கிட்டியிருந்தது.

காலம் 1983. எனக்கு 18 வயது. இலங்கையின் சரித்திரத்தில் முக்கிய இடத்தினைப்பெற்ற இனக்கலவரம் நடந்து முடிந்திருந்த காலம்.

அந்நாட்களில் ஏறாவுருக்கு ஒருவர் புதிதாக இடம்பெயர்ந்துவந்தார். எனது உற்ற நண்பனுடன் அவருக்கு நட்பு ஏற்பட்டது. அதனால் அவருடன் எனக்கும் சற்று பழக்கம் ஏற்பட்டது. அவரிடம் கார் இருந்தது. அதுவும் கறுப்புக்கார். மிகவும் மிடுக்காக உடுத்துவார். கறுப்புக்கண்ணாடி அணிவார். அவர் பதுளையைச்சேர்ந்தவர் என்று அறிந்ததும், நான் பதுளையில் படித்தவன் என்றேன். அவர் தான் ஒரு பிரபலவைத்தியசாலையின் உரிமையாளர்களில் ஒருவராக இருந்தவர் என்றார். அந்த வைத்தியசாலையிலேயே எனது ஆன்டி தொழில்பார்த்தார்.

அன்டிக்கும், அவரின் இரகசிய சினேகிதனுக்கும் இடையேயான உறவுபற்றிய அனைத்துவிடயங்களையும் 1975 க்கும் 1983க்கும் இடையேயான காலம் எனக்குக் கற்பித்திருந்தது. எனது விடலைப்பருவம் அது. எனவே சிரித்தபடியே ஆன்டியை தெரியுமா? அவருக்கு ஒரு இரகசிய நண்பன் இருந்தார் தெரியுமா என்றெல்லாம் கேட்டேன்.

எல்லாம் தெரியும், மிக நன்றாகத்தெரியும் என்று கூறி ஒரு மாதிரியாகச் சிரித்தார். அந்த மாமா யார்? அவரை உங்களுக்கு தெரியுமா? என்றேன். மனிதர் வாயைத் திறக்கவே இல்லை. அதன் பின் என்னுடன் பேசுவதையும் குறைத்துக்கொண்டார்.

இன்றுவரை வராத ஒரு சந்தேகம் இதை எழுதும் இக் கணம் வந்திருக்கிறது. எனது மரமண்டைக்கு இந்த சந்தேகம் 31 ஆண்டுகளுக்குமுன் ஏன் தோன்றவில்லை?

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்