பால்யம் - சினேகம் - காமம்

பால்யத்து நாட்களில் இருந்து இன்றுவரை காலம் எனக்கு பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலரின் நினைவுகள் என்னுக்குள் பசுமையாய் படிந்துபோயிருக்கிறது. அவற்றில் சில நினைவுகளுக்குள் சில இரகசியங்கள் ஒளிந்திருக்கின்றன. 48 வருடங்கள் வாழ்ந்து கழித்தபின், எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு காட்சியில் அவர்கள் பற்றிய நினைவுகள், நீரின் அடியில் இருந்து மேல்நோக்கி எழும் நீர்க்குமிழிகள் போன்று எனது நினைவுகளின் மேற்பகுதிக்கு  வருகின்றன. இன்றைய கதையும் அப்படித்தான்.

Trivandrum Lodge என்னும் மலையாளப் படத்தை இன்று பார்க்கக்கிடைத்தது. எனது தம்பியைப்போன்று, நான் மலையாளப்படங்களை தேடித் தேடி பார்ப்பவன் அல்லன். மோகன்லாலின் நண்பனும் அன்று. அவ்வப்போது காலம் என்க்கு மிகவும் சிறப்பான மலையாளப்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் Trivandrum Lodgeம்.

அதில் ஒரு சிறுவனுக்கு  சகவயதுடைய ஒரு சிறுமிமீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தக் காட்சிகள் எனக்குள் படந்துபோயிருந்த சில பரவசமான நினைவுகளைக்கிளவிட்டது.

படத்தில் வரும் சிறுவனைப்போன்று எனக்கும் ஒரு சிறுமியில்  ஈர்ப்பு 1977 - 78  காலப்பகுதியில் அந்நாட்களில் நாம் இலங்கையின் மத்திய பிரதேசத்துக்கு அருகாமையில் உள்ள ஒரு கிராமத்தில்வாழ்திருந்தோம். நான் மட்டக்களப்பில் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்றேன். வருடத்திற்கு 3 தடவை விடுமுறை. விடுமுறை என்றால் நான் காற்றில் பறந்து திரிந்த நாட்கள் அவை.

அந்த கோடைவிடுமுறைக்கு வீடுசென்றிருந்தேன். அம்மாவின் மேலதிகாரின் உறவினர் பெண் அவள். அம்மாவும் மேலதிகாரி தமிழர். எனவே எனக்கு விளையாட்டுத்தோழியாய் அறிமுகப்படுத்தப்பட்டாள்.

அம்மாவின் மேலதிகாரி ஒரு சிங்களவரை மணமுடித்திருந்தார். அந்த ஆன்டியின் சகோதரியின் மகள் அவள். என்னிலும் ஒரு வயது அதிகமானவள். 

அரசல்புரசலாக சில விடயங்கள் புரியத்தொடங்கியிருந்த காலம் அது. தகாத சகவாசத்தால் சற்று பிஞ்சிலே பழுத்திருந்தேன். எனினும் என்னைத்தவிர எவருக்கும் இதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

அந் நாட்களில் எனது தந்தை ஒரு கரும்புத்தோட்டம் வைத்திருந்தார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் கரும்புத்தோட்டதின் காவலுக்கு என்னையும், தர்மலிங்கம் என்னும் ஒரு தொழிலாளியுடன் அனுப்புவார். தர்மலிங்கம் ஒரு இளைஞர். என்னை விளையாட அனுப்பிவிட்டு, மரத்தின் உச்சியில் இருக்கும் பரண்மீது ஏறி உட்காந்திருப்பார்.. அப்பா கேட்டால் தம்பி என்னுடன் இருந்தார் என்பார். அதனாலோ என்னவோ தர்மலிங்கம் இன்னும் நினைவில் இருக்கிறார்.

அந்நாட்களில்தான் அவளுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவள் கொழும்பில் வாழ்ந்திருப்பவள் என்பதால் விடுமுறைக்கு சித்தியின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்கு ஒரு தங்கையிருந்தாள். எனக்கு தம்பியிருந்தான். அவர்கள் இருவருக்கும் 9 வயதிருக்கும். அவர்கள் தூய்மையான குழந்தைகளில் உலகத்தில் இருந்தார்கள். நாம் அந்த தூய்மையான குழந்தைகளின் உலகத்தைவி்ட்டு வெளியேறிக்கொண்டிந்த காலம்அது. வாழ்க்கை பலவிடயங்களை  எமக்கு அறிமுகப்படுத்திய காலம் அது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர்களும், நாங்களும் சந்திப்பது வழக்கமானது. ஆரம்பத்தில் சாதாரணமாக சென்ற எமது நட்பு காலப்போக்கில் வில்லங்கமானது. ஒரு கோடைவிடுமுறையின் போது அவள் ருதுவெய்தினாள். அவளின் சித்தியின் வீடு திருவிழாபோலானது.

அவர்களுக்கு தெரிந்த ஒரே ஒரு குடும்பம் நாம் ஆகையால் நாம் அங்கு நின்றிருந்தோம். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பலரின் வருகையும், பாட்டுகளும், இனிப்புவகைகளும், கொண்டாட்டத்திலும் நான் என்னை மறந்திருந்தேன். வழமையாக விளையாட வரும் அவள் மட்டும் விளையாடவரவில்லை.

அந்த விடுமுநையின் பின் மீண்டும் பாடசாலை என்று காலம் ஓடியது. அடுத்த விடுமுறையின்போது எனக்கும் 13 வயதாகியிருந்தது. பாடசாலை மற்றும் விடுதி நண்பர்கள் அந்த வயதிற்குரிய பலதையும் கற்றுத்தந்திருந்தார்கள். பெண்கள் என்றால் மனதில் சற்று வேகம் புகுந்திருந்தது. மனதுக்குப்புரியாத ஒரு விறுவிறுப்பு, பயம், வெட்கம் என்று பல உணர்வுகளின் தாக்கத்தில் இருந்தேன். என் உயிர் நண்பன் ஒருவன்  எமது பாடசாலையிலே‌யே மிக மிக அழகிய ஆசிரியையில் பெருங்காதல் கொண்டிருந்த காலம் அது. அவனும் எனது உணர்வுகளுக்கு புகைபோட்டிருக்கலாமோ என்று இன்று யோசிக்கிறேன்.

‌அப்போது விடுமுறை. விடுதியில் இருந்து வீடு சென்றிருந்தேன். ஒரு மதியப்பொழுதில் அம்மா அவள் வந்திருப்பதாகவும் அங்குபோய் விளையாடலாம் என்றும் கூறியபோது, தம்பியை அழைத்துக்கொண்டு அவர்களின் வீடு சென்றேன்.

அவர்களின் வீட்டுக்கு முன்னால் தன் தங்கையுடன் பூப்புந்து விளையாடிக்கொண்டிருந்தாள் அவள்.  அவளைக் கண்டதும் எனக்கு ஏதோ ஆனது. பூக்களால் ஆன ஒரு சட்டையை அணிந்திருந்தபடியே தனது தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் துள்ளும்போதெல்லாம் நான் விழுந்துகொண்டிருந்தேன். எனது ஹோர்மோன்கள் நர்த்தனமாடத்தொடங்கின. அவள் கடந்துபோன அரைவருடத்தில் முற்றிலும் மாறியிருந்தாள். முன்னிலும் பலமடங்கு அ‌ழகாக இருந்தாள். உடலின் வளைவு நெளிவுகளும் அவளைப்போல் பேரழகாய் மாறியிருந்தன. பிஞ்சிலே பழுத்திருந்ததால் அவைபற்றிய சிற்றறிவு எனக்கு வாய்த்திருந்தது.

எனது தம்பியும் அவளின் தங்கையும் குழந்தையுலகத்தில் இருக்க நாம் இருவர் மட்டும் குழந்தையுலகத்தைவிட்டு வெளியேறியிருந்தோம். குழந்தைகளுக்கான தூய்மை எம்மைவிட்டு அகன்று களவு சற்றே எட்டிப்பார்த்தது.

நாம் வாழ்ந்திருந்து இடம் ஒரு கிராமப்பகுதி. காலம் 70களின் நடுப்பகுதிய‌ை கடந்துகொண்டிருந்தது. தொலைக்காட்சி வந்திராத காலம். வெளியில் விளையாடுவதே எமது காலத்தை கடத்திக்கொண்டிருந்து. நாம் தனித்து இருப்பதற்கு அவர்களின் வீட்டுக்குப்பின்னால் இருந்த நீரோடைப்பக்கம் துணைசெய்தது. அவள் எதைக்கேட்டாலும்  மந்தரித்துவிட்டவன்போன்று தலையாட்டினேன். அவள் பின்னாலேயே அலைந்தேன். அவளின் அருகாமை மனதை காற்றில் பறக்கடித்தது. அவள் அருகில் வந்தால் காற்றில் நடந்தேன். அவள் பேசினால் காதில் தேன்பாய்ந்தது. அவள் உடல் என்னுடலுடன் கணப்பொழுதேனும் உரசினால் முதலில் நாவரண்டு, இதயம் பெரிதாய் ஒலித்து, வியர்த்தது, பின்பு மோட்சமடைந்தேன்.

அவள் கொழும்பின் நாகரீகத்தில் வளர்ந்தவள். நானோ மட்டக்களப்பின் ஏக புத்திரன். எமக்கிடையில் நாகரீகத்தில் காததூரம் வித்தியாசம் இருந்தது. ஆனாலும் நான் பிஞ்சில் பழுத்திருந்‌தது மேற்கூறிய இடைவெளியை குறைத்தது என்றே கூறவேண்டும்.

அவள் காதல் என்னும் சொல்பற்றி அறிந்திருந்தாள். ஓரளவு நானும். எம் நால்வரையும் சில நாட்களில் சிங்களப் திரைப்படங்களை பார்ப்பதற்கு அனுமதிப்பார்கள்.  நாம் அருகருகே அமர்ந்திருப்போம். காமினிபொன்சேகா, விஜயகுமாரதுங்க ஆகியோர் மாலினி பொன்சேகாவை கட்டிப்பிடித்துப் பிரளும் காதற்காட்சிகளின்போது, அவள் அர்த்தமாய் பார்த்து மர்மமாய் புன்னகைப்பாள். காதருகில் குசுகுசுப்பாள். எனக்கு வேர்த்து நடுங்கி, வெட்கம் என்னை தின்றுதீர்க்கும்.

மறுநாள் படத்தின் காதற்காட்சிகளைபற்றி பேசுவாள். எனக்கு வெட்கம் பிடுங்கித்தின்றாலும், ஆனாலும் அவள் மேலும் மேலும் பேசவேண்டும் என்று நினைப்பேன்.

அவளுக்கு என்னைவிட சிலவிடயங்கள் அதிகமாகவே தெரிந்திருந்திருக்கவேண்டும். அடிக்கடி ஒளிந்து பிடித்துவிளையாடும்போது என்னை இழுத்தோடினாள் வீட்டின் பின்புறம் இருந்து நீரேரிக்கு என் தம்பியும் அவளின் தங்கையும் எம்மை தேடிக்களைத்தனர். நாம் அங்கிருந்தபடியே பேசிக்கொண்டிருப்போம்

அவளின் கைகள் என்னை பற்றி இழுத்ததும் மந்தரித்துவிட்ட மந்திபோன்று அவள்பின்னே ஓடுவேன். என்ன என்னவோல்லாம் பேசினோம். எதுவும் நினைவில் இல்லை. நீரோடையை கடந்து சென்ற ஒரு நாள் முதன் முதலாக கபரகொயா என்னும் ஒரு மிருகத்தைக் கண்டோம். முதலைமாதிரியான மிருகம் அது. தாவரபட்சனி ஆகிய அம் மிருகம் தனது வாலால் மட்டுமே தாக்கும். அதைக் கண்டு பயந்த அவளை கைபிடித்து அழைத்துவந்தேன். அன்று பெரும் கதாநாயகனைப்போல் உணர்ந்தேன். அதன்பின் அவள் நீரோடைப்பக்கம் வர மறுத்துவிட்டாள்.

அவர்களின் வீட்டுக்குமுன் பல கொய்யாமரங்கள் இருந்தன.  ஒரு நாள் கொய்யாப்பழம் ஆய்ந்துதா என்றாள். மரம் ஏறத்தெரியாத மந்தி நான். அவளுக்காய் பெரும்பாடுபட்டு ஏறினேன். கொய்யாப்பழமும் ஆய்ந்து கெடுத்தேன். அப்போதுதான் அந்த பெரும் பிரச்சனை ஏற்பட்டது.

மரத்தில் சிரமப்பட்டு ஏறத்தெரிந்த எனக்கு இறங்கத்தெரியவில்லை. தட்டுத்தடுமாறி கால்வைத்தபோது வழுக்கி விழுந்த என்னை கீழே இருந்த ஒரு ஒரு கொப்பு தாங்கிக் காப்பாற்றியது. அதன் பின் அவள் ஒரு ஏணியைக் கொணர்ந்து என்னை இறக்கினாள். ”உனக்கு மரம் ஏறத்தெரியாதா” என்ற போது கால் வழுக்கிவிட்டது என்றேன். என்னிலும் ஓரிரு வயதான அவள் அதை நம்பவில்லை என்பதை அவள் புன்னகை காட்டியது. வெட்கமாய் இருந்தது. எதுவும்‌ பேசாது வீட்டுக்கு ஓடினேன்.

என்னிடம்  கொய்யா மரக்கிளையில் செய்ப்பட்ட கட்டப்பொல்  (catapul) இருந்தது. ஆனால் குறிபார்த்து அடிக்கத்தெரியாது. அவனை பிரமிக்கவைப்பதற்காக அதை எடுத்துச்செல்வேன். ஒரு நாள் அவளுக்கு குறிபார்த்து அடிக்க கற்றுதர நேர்ந்தது. அவளின் பின்னால் நின்று அவள் கையைப்பிடித்து இப்படித்தான் இதைப்பாவிக்கவேண்டும் என்று கற்றுக்ககொடுக்கவேண்டும். அவள் கையினை பிடித்திருந்த எனது கை உணர்ந்த குளிர்ச்சியும், அவளின் அருகாமையும் வந்த காரியத்தை மறக்கடித்தது. கற்பதில் அவளுக்கும், கற்பிப்பதில் எனக்கும் ஆர்வம் இருந்திருக்க நியாயமில்லை என்றே நினைக்கிறேன்.

ஒரு நாள் ஒளிந்து பிடித்துவிளையாடினோம். என் தம்பியும், அவளின் தங்கையும் போலீஸ், நாம் இருவரும் கள்வர்கள். அவர்களுக்கு தெரியாத ஒரு இருட்டறைக்குள் ஒளிந்துகொண்டோம். மிகவும் குறுகிய இடம். என்னருகில், மிக மிக அருகில் நின்றிருந்தாள். அவளின் முகமும் எனது முகமும் உராய்வதை தடுக்க பெரும்பாடுபட்டேன். அவளின் முச்சு என்னை திணரடித்தது. கொழும்பில் வளர்ந்த அவளோ அதுபற்றி பிரக்ஞை இன்றி இருந்தாள் போன்றே உணர்ந்தேன். அவள் மூச்சின் காற்றும், மார்பும், உடலும் என்னில் உரசியபோது நாவறண்டு, உடல் நடுங்கி வியர்த்தது. மறுபுறம் திரும்பிக்கொண்டேன். அப்போதும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அவளும் திரும்பிக்கொண்டாள்.

இதன்பின் எமக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. அவளே எனது நினைவில் இருந்தாள். எப்போதும் 16ம் வாய்பாட்டை பாடமாக்கு என்று பெரும் வில்லனாய் இருந்த எனது தந்தைகூட நினைவில் இருந்து மறந்துபோனார். அவளே யாதுமாய் இருந்தாள். அவளுக்கும் அப்படியாயே இருந்திருக்கவேண்டும். என்னைக் கண்டதும் மயக்கும் புன்னகையால் மயங்கடித்தாள். அதிகமாய் பேச மறுத்தாள். தனியே இழுத்தோடினாள் அதன் பின்பும் நாம் தனியே உரசிக்கொள்ளும் கள்ளன்போலீஸ் விளையாட்டுநடந்தது. அந்நேரங்களில் எனது தொண்டை காய்ந்து, நா வரண்டு, என் நடுக்கம் சற்றுக் குறைந்து, அவள் சிவந்தது பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை இந்த நிமிடம்வரை.

அந்த வருடம் அவளைப்பிரிவது மிகக்கடினமாய் இருந்தது.  அதே வருடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏறாவூருக்கு மாற்றமாகியது. காலப்போக்கில் அவள் நினைவில்இருந்து மறந்துபோனாள். வேறுசிலர் அவளின் இடத்தை கைப்பற்றிக்கொண்டார்கள்.

ஏறத்தாள 35 ஆண்டுகளின் பின்பு

2013ம் ஆண்டு கோடைவிடுமுறையின்போது இலங்கை சென்றிருந்தேன். ஒரு மாலைநேரம் வீடுவந்தபோது, வீட்டில் விருந்தினர் ஒருவர் இருந்தார். அவரை அடையாளம் தெரிந்தது. பிபிலையில் இருந்த அம்மாவின் மேலதிகாரின் மனைவி அவர். கடந்துபோயிருந்த 35 வருட காலம் அவரை முதுமையினுள் அழைத்துப்போயிருந்தாலும் அவர்  முதுமையின் அழகான கம்பீரத்துடன் இருந்தார்.

நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் எப்போதாவது அவரின் சகோதரியின் மகள் பற்றிக் ஏதேனும் கூறுவார் என்று  காத்திருந்தேன். மனம் தவியாய் தவித்தது. இதயம் வேகமாய் அடித்தது. அவளின் அருகாமையையும், வெம்மையையும் உணர்ந்தேன். வாய்விட்டுக்கேட்க வெட்கமாய் இருந்தது. எனவே அவளின் தங்கைபற்றிக் கேட்டேன்.

அப்போது அவர் அவளின் பெயரைக்கூறி, நேற்று அவளைச் சந்தித்தபோது, இன்று உன்னை சந்திப்பதாகக் கூறினேன், உன்னைப்பற்றி மிகவும் விசாரித்தாள் அத்துடன் அவள் உன்னை மிகவும் அன்பாக விசாரித்ததாகவும் கூறச்சொன்னாள் என்று அவர் கூறியபோது அவர்  முகத்தில் பெரும்குறும்பும் சிரிப்பும் கலந்திருந்தது.

எனது பேரன்பையும் தெரிவியுங்கள் என்றேன் சிங்களத்தில் தலையைக்குனிந்தவாறே. 

அன்று மாலை முழுவதும் அவளும் இன்றுவரை என்னை மறக்கவில்லை என்பது என்‌னை காற்றில் சுமந்துபோய்க்கொண்டிருந்தது.

பால்யத்து நினைவுகள் பேரனந்தமானவை!

11 comments:

 1. பருவகால நினைவுகளை மறக்க முடியுமா ? ரொம்ப ரசனையோடு எழுதி இருப்பதில் இருந்தே தெரிகிறது உங்களின் பேரானந்தம் !

  ReplyDelete
 2. பால்யத்து நினைவுகள் பேரனந்தமானவை!

  mano

  ReplyDelete
 3. சரியான கள்ளன் நீர் !

  ReplyDelete
 4. எல்லாவற்றையும் எழுதவில்லைப்போல் உள்ளது. (சுயதணிக்கை?)

  ReplyDelete
  Replies
  1. அந்தக் காலத்தில தெரிந்தது அதுதான். ஒஸ்லோ முருகன் சத்தியமா அவ்வளவு தான். :)

   Delete
 5. கொஞ்ச நாள் ஓய்வெடுத்து எழுதியது விறுவிறுப்பாகத்தான் இருக்கிறது ..பலருக்கும் அவரவர் நினைவைக் கொண்டுவரும் ... இதற்குத்தானா அந்த ஒளிச்சுபிடிச்சு விளையாடுகிற விளையாட்டுக் கண்டு பிடிச்சது என்ற சந்தேகம் எனக்கு முன்பே இருந்தது ...அது சரியாகத்தான் போச்சுது..

  ReplyDelete
 6. ஹே ஹே, அவளுக்கும் பிடித்தது, நமக்கும் பிடித்தது..

  ReplyDelete
 7. அவள் கொஞ்சநாட்களாக வளைகிறாள்... என்னைக் கண்டதும் ஒரு "ஸ்பெசல்' சிரிப்பும், சிவந்த கன்னங்களுமாக... (இப்படியே கொஞ்ச நாட்கள் போகின்றன)

  படம் பார்க்கக் கேட்போம் என்று யோசனை. கேட்கப் பயம். ஒருநாள், வயிற்றில் சத்தியமாகப் பட்டாம் பூச்சிகள் பறக்க ,நாக்கு உலரக் கேட்டான், "படம் பார்ப்போமா?" என்று சிங்களத்தில். பிழைத்தால் தனக்குச் 'சிங்கள' மொழித்தேர்ச்சி சரியில்லை என்றும் ஒரு சிங்கள நண்பன் சொல்லித் தந்ததை விபரம் தெரியாமல் அப்படியே சொல்லிவிட்டேன், மன்னித்துக்கொள்" என்றும் சொல்லலாம் என்றும் எண்ணீயிருந்தான். ஆனால் அதற்குத் தேவை வரவில்லை.

  "சீ, முன்பே கேட்டிருக்கலாமே? போன சனி நான் வந்திருப்பேன்,,, இனி அடுத்த சனிவரை காத்திருக்கவேண்டும்" என்றாள் சிங்களத்தில் நளினமாக. உடம்பும் மனமும் சூடாகத் தொடங்கின. அவள் மார்பகங்களைப் பார்த்துக் கொண்டே சொன்னான், "சரி அடுத்த சனி பார்ப்போம்" என்று. அவன் கண்கள் போகுமிடத்தைப் பார்த்ததும் கன்னம் சிவந்தாள். கைகளால் சட்டையைக் கொஞ்சம் மேலுக்கு இழுத்து விட்டுக் கொண்டாள். "அக்கா தங்கச்சியோடை கூடப் பிறக்கவில்லையா" என்பதை எப்படிச் சிங்களத்தில் சொல்லியிருப்பாள்" என ஒரு யோசனை ஓடியது.

  ஒருவழியாக அடுத்த சனிக்கிழமை வந்தது... பல்கனி டிக்கட் எடுத்து அவளோடு பல்கனியில் உட்கார்ந்தான்.
  விளக்குகள் அணைக்கப்பட்டுப் படம் தொடங்கியது...

  பயந்து பயந்து அவள் தோளில் கை போட்டான். அடுத்த கணம், உதட்டில் சிறிதளவு மின்சாரம் லோ வோல்டேஜ்ஜில் ஓடுவதுமாதிரி இருந்தது.. பிறகு சற்று ஈரலிப்பாகவும் சூடாகவும் (உதட்டில்தான்) உணர்ந்தான். சொண்டில் அறைந்து விட்டாளோ என்று ஒரு கணம் தடுமாறினாலும், அடுத்த கணத்தில் அவள் இவன் உதட்டோடு உதடு வைத்துக் கண்கள் கிறங்க முத்தமிட்டுக் கொண்டிருக்கிறாள் என ஊணர்ந்தான். மெதுவாக தன் உதட்டைப் பறிப்பதுபோல் பாசாங்கு செய்தான். அவள் இன்னும் இறுக்கமாக உதட்டைக் கவ்விக் கொண்டாள். மிகுதி என் அடுத்த தொகுதி நாவலான "இலங்கை இனப் பிரச்ச்னையும் கிழிந்த பனியனும்" நாவலிற் காண்க.....

  (நண்பன் ஒருவன் சொன்ன கதையுங்கோ.. நம்புங்கோ)

  ReplyDelete
 8. சென்சார் செய்யப்பட்டுள்ளது என நினைக்கிறேன்... பட் ஐ லைக் இட்... :)

  ReplyDelete
 9. ////அவள் துள்ளும்போதெல்லாம் நான் விழுந்துகொண்டிருந்தேன்/////
  விழுந்தவர் இன்னும் எழும்பவில்லை.........

  ReplyDelete

பின்னூட்டங்கள்