பந்தும் உருண்டை தான் - (யாத்திரைப் பயணம்)

எனது யாத்திரைப் பயணத்தில் இன்று ஓய்வு நாள்.  கால்விரல்கள் இரண்டு நீர் கட்டி உபாதைதருவதால் நாளை மறுநாள் காலை வரை ஓய்வு அவசியமாகிறது. எனவே Burgos  என்னும் நகரத்தில்என் வாழ்க்கை ஓடுகிறது.

Sports சாமான்கள்  விற்கும் ஒரு கடையைத் தேடியலைந்தேன். கண்ணில்படவில்லை ஒரு கடையும்.

அந்த நேரத்தில் என் நிறம் கொண்ட, என்னைப்போன்ற தலை  உடைய, என்னைப்போன்ற அழகான ஒரு ஆபிரிக்க நாட்டவர் சைக்கிலில் வந்தார். அவரைப் பார்த்துச் சிரித்தேன்.

அவரும் சிரித்தபடியே என்னருகில் வந்து  ஒரு காலை ஊன்றி மறுகாலை சைக்கிலில் வைத்தபடியே  ஸ்பானிய மொழில் பேசினார்.

நான் பேய் முழி முழிப்பதை பார்த்த அவருக்கு புரிந்திருக்கவேண்டும். Fransi என்று கேட்டார். இல்லை என்று தலையை அங்கும் இங்கும் ஆட்டினேன். Arabi என்றார் இதற்கு முன்னிலும் மிக வேகமாய் இல்லை என்று தலையாட்டினேன்.

அவரை விட்டால் எனக்கு தெரியாத மொழியை எல்லாம் கேட்பார் என்பதால் English  என்றேன். அவர் என்னை விட அதிகமாக இல்லை என்று தலை அங்கும் இங்கும் ஆட்டினார்.

அவரிடம் Sports கடை எங்கேஇருக்கிறது என்று கேட்க வேண்டும். Sports shop என்றேன். அவருக்குப் புரியவில்லை. பந்து போன்று கையால் சைகை செய்து காட்டினேன். நோ நோ English என்றார். டேய்! இது கைப்பாசை என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.  மீண்டும்  பெரிய பந்து ஒன்றை சைகையால் காட்டி காலால் அடித்தும் காட்டினேன். அத்துடன்:

எனக்கு தெரிந்த 4 - 5 Franchசொற்களில் boutique என்றால் கடை என்பதும் ஒன்று.

Spanish மொழியில்பல சொற்களை ” ஓ ” போட்டு பேசுகிறார்கள் என்பதை அவதானித்திருக்கிறேன். எனவே நானும் Sport"O" boutique"O"என்று  English, Franch, Spanish  கலந்து ஒரு புதிய மொழியில் சொன்னேன். சீ சீ சீ என்று தலையை ஆட்டினார்.

மனிதர் சைக்கலில் இருந்த இறங்கி நடக்கத் தொடங்கினார். என்னை வா என்று அழைத்தார்.

ஆஹா.எனது மொழி அவருக்கு புரிந்துவிட்டது என்ற பெருமிதத்துடன் எனது English, Franch, Spanish கலந்த மொழியில் நானும், Franch, Spanish, Arabi மொழியில் அவரும் பேசிக் கொண்டே சென்றோம்.

இருவருக்கும் ஒன்றும் புரியவில்லை என்று கூறமுடியாது.அதே வேளை எல்லாம் விளங்கியது என்றும் கூற முடியாது.

மனிதர் நடக்கிறார் நடக்கிறார். Burgos  நகரத்தின் எல்லைக்கே என்னை அழைத்துப் போனது போல இருந்தது அவருடனான பயணம்.

ஏறத்தாள 20 நிமிடங்களின் பின் திடீர் என்று ஒரு நாற்சந்தியில் நின்றபடியே hay hay என்றார். யாரையோ அழைக்கிறார் என்று நினைத்தேன், நான்.

அவர் எனது தோளில் பிடித்தபடியே hay hay என்று கையைக் காட்டினார். (பின்பு தான் google traslater மூலம் hay என்றால் ”அங்கே” என்று அறிந்து கொண்டேன்)

அவர் காட்டிய திசையில் கட்டங்களும், மனிதர்களும், வாகனநெருக்கடியுமே தெரிந்தது. எனவே புருவத்தை சுருக்கினேன்.

இரண்டு தடவைகள் முயற்சித்தார். எங்கள் மொழியில் அவர் நினைத்த வார்த்தை இருக்கவில்லை.

எனவே ”வா” என்று அழைத்துப் போய் ஒரு கட்டடத்தின் முன்னே நிறுத்தி, உள்ளே செல் என்றார். நானும் Thank you, Merci, gracias, ரொம்ப நன்றிங்கண்ணா என்று கூறினேன். கையை குலுக்கோ குலுக்கு என்று குலுக்கி,இழுத்தணைத்து அணைத்து முதுகில் அறைந்து ஆபிரிக்க முறைப்படிவிடைபெற்றார் நண்பர்.

என்ன அன்பு, என்ன பண்பு முகமறியா எனக்கு இவ்வளவு உதவி செய்த மனிதரைப் பற்றி மனது பெருமிதம் கொண்டது.  நான் எப்பொழும் சிக்கல்களில் இருந்து மீள்வதற்கு ஏதோ ஒரு நல்ல சக்தி என்னை எப்போதும் காப்பாற்றிக்கொண்டிருக்கிறது என்று நினைத்துக் கொண்டேன்.

அப்போது தான் நான் அந்தக் கட்டடத்தைப் நிமிர்ந்து பார்த்து Sports கடை எங்கே இருக்கிறது என்று தேடினேன்.

இப்போது தான் புரிந்தது நண்பர் என்னை அழைத்து வந்திருந்தது உள்ளரங்கத்தில் காற்பந்து விளையாடும் இடம் (indoor sports stadium) என்று.

யாத்திரையின் முதலிரவு


19ம் திகதி பின் மாலைப் பொழுதில் Barcelona விமானநிலையத்தில் இறங்கிய பொழுது தான் புரிந்தது, நான்  spanish மொழி தெரியாது திண்டாடப் போகும் அவலம். 


எதைக் கேட்டாலும் சீ ..சீ (si si) என்றார்கள். விமானநிலையத்தில் இருந்து நான் உள்ளூர் பிரதான புகையிரதநிலையம் செல்லவேண்டும். சுற்றுலா பிரயாணிகளின் அலுவலகம் நான் வருவதை அறிந்ததாலோ என்னவோ அலுவலகத்தை பூட்டிப்விட்டுப் போயிருந்தார்கள்.

ஒருவர் படித்தவர் மாதிரி இருந்தார். அவரிடம் எனது கேள்வியை கேட்டேன். அவரின் பார்வை பதில் சொன்னார். உடற்சேதம் ஏற்படுவதற்கு முன் நகர்ந்து கொண்டேன்.

விமானநிலையத்தை விட்டு வெளி‌யேறினேன். சற்றுத் தூரத்தில்  பலர் ஒரு bus க்கா காத்திருப்பது புரிந்தது.  எனவே அங்கு சென்றேன்.

ஒருவரிடம் மட்டும் கேட்பதைத் தவிர்த்து, எனது இனிமையான குரலை உயர்த்தி இந்த bus புகையிரதநிலையம் செல்லுமா என்றேன்.  உடனே பலர் சீ ..சீ என்றார்கள்.  வெறுத்துவிட்டது எனக்கு. அருகில்  நின்றிருந்த ஒரு புண்ணியவதி ஆங்கிலத்தில்  புரியவைத்தாள். இந்த bus மூலமாக நகரத்துக்கு போய் அங்கிருந்து நிலக்கீழ் தொடரூந்து மூலம் புகையிரத நிலையத்தை சென்றடைய வேண்டும் என்றாள். அந்த bus இல் ஏறி பாதுகாப்பாக அவளருகிலேயே அப்பாவி போல குந்திக் கொண்டேன்.

நான் busஇல் ஏறிய போது நேரம் நடுநிசி இருக்கும். வழியெங்கும் மக்கள் விதிகளில் உலாவிக்கொண்டிருந்தனர். உணவுக்கடைகள் திறந்திருந்தது. வெப்பநிலை ஏறத்தாள 20 பாகை இருக்கும்.

அந்த புண்ணியவதி இடையில் இறங்கிக் கொண்டாள். எனது விதியை நொந்து கொண்டேன். சற்று நே‌ரத்தில் bus ஒரு இடத்தில் நின்றது. நான் எனது பயணப் பொதியை இறுக்கட்டிப்பிடித்தபடியே சிவனே என்று உட்கார்ந்திருந்தேன். சாரதி  என்னைப்பார்த்து ஏதோ சொன்னார். yes yes என்று விட்டு குந்தியிருந்தேன். மனிதருக்கு வந்ததே கோபம். வெளியே போ என்று கையைக் காட்டினார். அப்போது தான் புரிந்தது அது தான் bus இன் இறுதித் தரிப்பு என்று. சாரதியைப் பார்த்து புன்னகைத்தபடியே இறங்கிக் கொண்டேன்.

வயிறு புகைந்தது. நாலைந்து உணவகங்களுக்கு முன்னால் நாலைந்து தரம் நடந்து நிலமையை உளவு பார்த்த பின் ஒரு உணவகத்தினுள் புகுந்து கொண்டேன். அழகான பெண்ணொருத்தி அருகில் வந்து அழைத்துப்  போய் ஒரு மேசையில் குந்த வைத்தாள். மெனு வந்தது. எதுவும் புரியவில்லை. பின்பு இன்னுமொருத்தியை அழைத்து வந்து எனக்கு மொழிபெயர்ப்பாளராக வைத்தாள் முன்னவள். எனக்கு பசிக்கிறது சிறந்த உணவு ஏதும் இருக்கிறதா? என்றேன் என்னிடம் கேட்டு, அவளிடம் சொல்லி, அவளிடம் கேட்டு என்னிடம் சொன்னாள். எங்கள் உணவகத்தின் சிறந்த உணவை  உனக்கு தருகிறோம் என்று சொல்லி மறைந்து போனாள்.

சற்று நேரத்தில் அத்திலாந்திக் சமுத்திரத்தில் உள்ள அனைத்து கடல் வாழ் உயிரினங்களையும் கொலை செய்து என் முன்னால் வைத்திருந்தாள். வாழ்க்கையில் காணாத உயிரினங்களும் இருந்தன. எனக்கு புரதச்சத்து அதிகமுள்ள உணவுகளை  உண்டால் சிறுநீரகத்தில் கல்  உண்டாகும் வியாதி உண்டு. டாக்டர் என்னை கடல் உணவில் மீனை மட்டுமே உண், என்றிக்கிறார். இவளோ மீனைத் தவிர்த்து மீதமிருக்கும் அனைத்தையும் தந்திருக்கிறாள். இவளிம் சண்டைபிடித்தால் சீ ..சீ என்று சொல்வாள் எனவே பிரச்சனை வேண்டாம் என்பதால் மௌனமாக விழுங்கத் தொடங்கினேன். வேறு ஏதும் வேணுமா என்றாள்? தண்ணீர் என்றேன். உண்டு முடிந்ததும் அருமையான ஒரு டெசேர்ட் தந்தாள். அந்த மாலைப் பொழுதை காப்பாற்றியது அந்த டெசேர்ட் தான். அதன் பிறகு உணவின் விலையை அவள் சொன்னபோது தான் தலைசுற்றியது. 40 யூரோவை அழுது அழுது  கொடுத்துவிட்டு அசட்டுச் சிரிப்புடன் வெளியேறினேன்.

நிலக்கீழ் தொடரூந்துக்கு வழியைக் கேட்க நினைத்த போது போலீ்சு அருகில் நின்றிருந்தார். அவரிடம் கேட்டேன். அவரும் நோ இங்கிலிசு என்றா‌ர். அருகில் இருந்த அழகானபெண்போலீசு அழகான ஆங்கிலத்தில் அழகாக வழிகாட்டினார். இந் நாட்டில் பெண்கள் மட்டும் தான் ஆங்கிலம் பேசுவார்களோ என்று எண்ணத் தோன்றிற்று.

நிலத்துக்கு கீழ் அமைந்திருந்தது தொடருந்து நிலையம். அதை வார்த்தைகள் வர்ணிக்க என்னால் முடியாது. Oslo  நகரத்தின் நிலக்கீழ் தொடரூந்து நிலையங்களை இதனுடன் ஒப்பிட்டால் oslo முருகன் என்னை மன்னிக்கவே மாட்டார். எங்கு போவது, எப்படி போவது என்று தெரியாது முளித்துக் கொண்டிருந்தேன் நேரமோ நடுநிசி 1 மணி. சிலரிடம் கேட்டேன். தெரியாது என்பதை எனக்குத் தெரியாத மொழியில் செல்லியபடியே நகர்ந்தனர். மீண்டும்  தாய்க்குலம் உதவியது. ஒரு விதமாக Barselonaவின் புகையிரநிலையம் வந்து சேர்ந்தேன். புகையிரதநிலையம் காலை 5 மணிக்கு திறக்கும் என்று எழுதியிருந்தது வாசலில்.

தூக்கம் வந்தது. புகையிரதநிலைய வாசலுக்கருகில் பலர் தூங்கிக்கொண்டிருந்தார்கள். என்னினமே என் சனமே என்று சொல்லியபடியே அவர்களுக்கருகில் படுத்துக்கொண்டேன். திடீர் என்று விழித்துப் பார்த்த போது என்னினத்தையும் சனத்தையும் காணவில்லை. காலை வெளித்திருந்தது. நேரம் 6 மணி ஆகியிருந்தது. வாரிச்சுருட்டிக்கொண்டு புகையிரத நிலையத்தினுள் ஓடினேன்.

எனது புகையிரதம் 7.35 மணிக்கு என்று இருந்ததை நான் ஏற்கனவே அறிந்திருந்ததால் பிரயாணச்சீட்டைபெற்றுக்கொணடு காலையுணவுக்காக ஒரு உணவகத்தில் குந்திக்கொண்டேன். நோரம் 7.15 மணியானவுடன் புகையிரதத்தில் ஏறிக் கொண்டேன். எனது இருக்கையில் குந்தியபோது தான் எனது iPod மற்றும் எனது ‌jacket ஆகியவற்றை எங்கோ தவறவிட்டது தெரியவந்தது. இறங்கி ஓடினேன்.  காலையுணவு உணவு உண்ட கடைக்காரர் தன்னிடம் இல்லை என்னார். புகையிரதம் புறப்பட இன்னும் 5 நிமிடங்களே இருந்தன. விதியை நொந்தபடியே ஓடிவந்து புகையிரதத்தில் குந்திக் கொண்டேன். அப்போது தான் கவனித்தேன் எனது தொலைபேசியை எனது இருக்கையில் விட்டுவிட்டு iPod தேடி ஓடியிருந்ததை. சரி தொலைபேசியாவது மிஞ்சியதே என்று மனதை தேற்றிக்கொண்டேன்.

புகையிரதம் ஓடிக் கொண்டிருந்தது. தூங்கிப்போனேன். திடீர் என்று மூளையில் ஏதோ பொறி தட்டியது. துடித்தெழுந்து எனது பயணப்பொதியை திறந்து மேல் பக்கத்தில் பார்த்தேன். iPod மற்றும் எனது ‌jacket ஆகியவை என்னைப் பார்த்துச் சிரித்துக் கொண்டிருந்தன.

iPod ஐ இயங்கிக் கொண்டிருந்துது காதில் ”மயக்கம் என்ன” படத்தின் பிறை தேடும் பாடல் வழிந்தோடிக்கொண்டிருந்தது.

விரைவில் ரெபின்சன் குரூசோவின் பயணத்தின் போது அவருக்கு வெள்ளிக்கிழமை என்றதோர் நண்பர் கிடைத்தது போல எனக்கும்  பேபே என்று ஒரு நண்பர் கிடைத்தார் என்னும் கதையைச் சொல்கிறேன்.

புகையிரதம் ஓடிக்கொண்டிருக்கிறது Pamplona நோக்கி

இன்றைய நாளும் இனிமையானதே.

வாழ்வின் யாத்திரைகள்

இன்னும் இரண்டு நாட்கள் இருக்கின்றன, ஒரு பெரும் பயணத்திற்கு. இதுவரை நான் பயணிக்காத பயணம் அது. பயணத்தின் விறுவிறுப்பும், குதூகலமும், வார்த்தைகளில் விபரிக்க முடியாத ஒரு இனிமையான படபடப்பும் மனதுக்குள் குடிவந்திருக்கிறது. எனக்காக நான், தனியே ஒரு பயணம் இதுவரை சென்றதில்லை என்றே கூறலாம். ‌அதுவும் ஏறத்தாள 4 - 5 வாரங்களுக்கு நான் சென்றதேயில்லை.

எனது வாடகை அறை, வேலை, எனது கணணி, நண்பர்கள், உற்ற நண்பர்கள், நிலக்கீழ் தொடருந்து, தொலைபேசி அழைப்புக்கள், முகப்புத்தகம் என்று என் வாழ்வில் அங்கம் வகிக்கும் அத்தனையையும் ஏறத்தான 30 நாட்களுக்கு ஒதுக்கிவைத்துவிட்டு ஒரு நீண்டதொரு நடைப்பயணத்தை ஆரம்பிக்கவிருக்கிறேன். ஆனால் இது சுற்றுலாப்பயணம் அல்ல.

ஏன் இந்தப் பயணம்?

வாழ்வில் நான் தடுமாறி விழுந்தபோதெல்லாம் ஏதோவொன்று வேறு மனிதர்களின் வடிவிலும், சந்தர்ப்ப சூழ்நிலைகளினூடாகவும் புதிய புதிய பாதைகளை காண்பித்தபடியே இருக்கின்றது. எழும்பு, எழும்பி நட என்னும் ஒரு அசரீரி எங்கிருந்தோ ஒலிக்கிறது. இவைகள் என்னை ரட்சித்து ஒரு பாதுகாப்பான பாதையில் அழைத்துப்போய்க்கொண்டேயிருக்கின்றன.

கடந்து வந்த பாதையை சற்றே திரும்பிப்பார்க்கும் போது இவ்வளவையும் எப்படிக் கடந்து கொண்டேன் என்ற ஆச்சர்யமான எண்ணம் ஏற்படுவதையும் மறுப்பதற்கில்லை. எத்தனையோ தளைகளை அறுத்தெறிய நேர்ந்திருக்கிறது. இன்று எனக்கும் எனது கடந்துபோன நாட்களுக்கும் இடையில் பாரிய இடைவெளியை உணர்கிறேன். அதுவும் ஒருவிதத்தில்  ஆறுதலாகவே இருக்கிறது. இந்த ஆறுதலானது என் மகிழ்ச்சியின் அளவுகோல் அல்ல.

வாழ்வின் சுக துக்கங்கள்,  நாவினால் சுடப்பட்ட வடுக்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், அநியாய நியாயங்கள், இழக்கக்கூடாத இழப்புக்கள், தனிமை, பல ஆண்டுகளாகத் தொடரும் மன அழுத்தம், வேறு சில பல நோய்கள் என்று ஒரு பெரும் பட்டியலே இருக்கிறது என் வாழ்வில். இவற்றையெல்லாம் கடந்துமிருக்கிறேன், கடந்துகொண்டுமிருக்கிறேன்.

தனிமையின் வலியும், அதன் பாதிப்பும் அதை அனுபவித்தவர்களாலேயே உணரப்படக்கூடியவை. பலதையும் கடந்தவொரு நிலையில் நான் இருந்தாலும் நானும் மனிதன் என்பதை வாழ்க்கை இப்போது அடிக்கடி உணர்த்திக்கொண்டிருக்கிறது. இதன் காரணமாக எனக்குள் ஒரு வித பய உணர்வு  ஊறத்தொடங்கியிருக்கிறது. சுய நம்பிக்கையும் குறையத் தொடங்கியிருக்கிறது.

இவற்றில் இருந்து நான் மீளவேண்டுமானால் என் சுயநம்பிக்கையை நான் வளர்த்தக் கொள்ளல் வேண்டும். என்னாலும் முடியும் என்ற எண்ணம் மனதில் பதியப்படல் வேண்டும் என்பது எனக்கு புரிந்திருக்கிறது.

என்னைப் பொறுத்தவரை எனது எல்லைகள் என்ன? அவற்றை  ‌மேலும் மேலும் அதிகரித்துக்கொள்ளலாமா? என்பவை என்றும் எனக்கு அத்தியாவசியாமாய் இருந்திருக்கின்றன. கடந்த காலங்களில் அயர்லாந்தில் சைக்கில் பயணம், வடமேற்கு நேர்வேயில் தொடர் மலையேற்றம், அவுஸ்திதிரேலியாவில் பரசூட் முலம் 12000 அடி உயரத்தில் இருந்து குதித்தது என்று என் எல்லைகளை நானே பெரிதாக்கிக் கொண்டதால் கிடைத்த சுயநம்பிக்கை எனக்கு பெரிதும் உதவியிருக்கிறது. எனவே தான் இ்ம் முறை இது வரை நான் சாதிக்காத ஒரு விடயத்தை செய்தாலென்ன என்று தோன்றிற்று. அந்த சிந்தனையின் வடி‌வமே இந்த 800 கிமீ யாத்திரை.

முப்பது நாட்கள் தொடர்ந்து நகரம், கிராமம், காடு, மலை என்று  எல்லாவித காலநிலைகளுக்குள்ளாலும் நடக்கவேண்டியிருக்கிறது. நான் தேர்ந்தெடுத்திருக்கும் வழி கிறீஸ்தவர்களின் மிகவும் பிரபல்யமான பாதயாத்திரை பயணங்களில் ஒன்று என்பதை நான் முக்கியமாக குறிப்பிட வேண்டும். உலகெங்கிலும் இருந்து பலர் வருடம் முழுவதும் இவ்வழியில் யாத்திரை செய்துகொண்டேயிருக்கின்றனர். புதிய புதிய மனிதர்களை, நட்புகளை நான் பெறலாம். ஒரு புதிய நாட்டினை, புதிய கலாச்சாரத்தை மிக அருகில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

நடைப்பயணம் என்பது இலகுவல்ல. எனக்குத் தேவையான பொருட்களை நானே சுமக்கவேண்டும், இரவுகளில் தேவாலய மடங்களில் தங்கியிருக்கவேண்டும். அங்கெல்லாம் நான் கடந்த 25 வருடமாக அனுபவிக்கும் வசதிகள் இருக்கமாட்டாது, எனவே மிகவும் குறைந்த வசதிகளுடனேயே தங்கவேண்டியிருக்கும், உடல் வலிகள் தரப்போகும் உபாதைகளை தாங்கிக்கொள்ளவேண்டும், மனம் தளராது இருக்கவேண்டும், நோய்வாய்ப்படாதிருப்பது என்று பல விடயங்களை நான் கருத்தில்கொள்ளவேண்டியிருக்கிறது.

இவைஎல்லாவற்றையும் மனது தாங்கிக்கொண்டு எனது பயணத்தின் இறுதி எல்லை Satiago de Compostela தேவாலயத்தில் முடிவுறும் போது என் மனநிலை எப்படி இருக்கும் என்பதை அறிய ஆவலாயிருக்கிறேன். சுயநம்பிக்கையும், ஒன்றைச் சாதித்த மகிழ்ச்சியும், நடைப்பயணம் தந்த சிந்தனைகளும், புதிய மனிதர்கள் தந்துபோன நினைவுகள் என எத்தனையோவிதமான உணர்வுகளை மனம் அனுபவித்துக்கொண்டிருக்கும்.

சில வேளைகளில் இந்த நடைப்பயணத்தின் போது இனி நான் எப்படி வாழ வேண்டும், எதெதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும், என் வாழ்க்கையை எவ்வாறு அமைத்துக்கொள்ளவேண்டும் என்பதை என் மனம் எனக்குப் போதிக்கலாம். எது எதுவாகினும் சில சமரசங்களை மட்டும் நான் விரும்பவில்லை. நான் சாதாரண ஆசாபாசங்களுடன் வாழ விரும்பும் ஒரு சாதாரண மனிதனே.

காலம் இதுவரை என்னை வழிநடத்தியிருக்கிறது. நான் விழுந்தபோதெல்லாம்  என்னை எழுப்பி, இதோ உன் வழி என்று வழிகாட்டியிருக்கிறது. எனவே மனதில் எவ்வித கவலையோ பயமோ இன்றி பயணம் போகும் சிறு குழந்தையின் குதூகலத்துடன் நடைப்பயணத்தின் ஆரம்பத்திற்காக காத்திருக்கிறேன்.

ஏறத்தாள ஒரு மாதத்தின் பின் மீண்டும் சந்திக்கக்கடவதாக!

பிரதியெடுக்கப்பட்ட கனாக்காலங்கள்

அன்றொரு நாள் எனது கணணி மக்கர் பண்ணத் தொடங்கியது. எனவே அதில் உள்ள ஆவணங்களை பாதுகாப்பாக சேமிக்கத்தொடங்கினேன். அப்போது பல காலமாக கண்ணில் படாத சில புகைப்படங்கள் கண்ணில்பட்டன. புகைப்படங்கள் எத்தனை எத்தனை கதைகள் சொல்லிப்போகக்கூடியவை என்பதையும், மயிலிறகு போல் மனதை மிருதுவாய் வருடக்கூடியவை என்பதையும் கடந்த சில நாட்களாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

ஒரு சில புகைப்படங்களைக் கண்ணுற்ற போது அந்தச் சம்பவங்கள் மட்டுமல்ல, அந்தப் புகைப்படத்தில் பதியப்பட்டிராத ஆனால் அந்தப் புகைப்படத்திற்கு அருகில் இருந்த சுற்றுச்சூழல், ஒலிகள், வாசனைகள், மனிதர்கள், காலநிலை இவை எல்லாவற்றையும் மனம் உணர்ந்த போது நான் ஒரு ஏகாந்தமாக மனநிலையில் இருந்தேன். நினைவுகள் பின்னோக்கிப் போய் அந் நாட்களில் வாழ்ந்துகொண்டிருந்தன.

17.08.2006 ம் திகதி காலை, வடமேற்கு நோர்வேயில் ஒரு சிறிய கிராமத்தில் வாழ்ந்திருந்தோம் நாம். அன்று காலை எங்கள் வீட்‌டின்  காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்தது.

என்னை தூக்கத்திலிருருந்து வலுக்கட்டாயமாக எழுப்பிக்கொண்டிருந்தாள் எனது இளைய மகள் பூக்குட்டி.

”அப்பா, நேரமாகிறது எழும்பு”  என்று சினுங்கினாள் பின்பு கடுமையான குரலில் கட்டளையிட்டாள். நான் அவை ஒன்றும் கேட்காதது போல் இழுத்துப் போர்த்திக்கொண்டு தூங்குவது போல நடித்தேன். இரண்டு தரம் அழைத்துப் பார்த்தாள். பின்பு வந்து போர்வையை இழுத்தெறிந்து என்னை உலுப்பினாள். கோபப்பட்டாள். சிரித்தபடியே அவளைத் துக்கியபடியே எழுந்து குளியலறைக்கு அழைத்துபோனேன். கட்டியணைத்து முத்தமிட்டாள்.

அவள் அன்றுதான் முதன் முதலாக பாடசாலைக்குச் செல்கிறாள், எனவே அவள் இருப்புக்கொள்ளாமல் பரபரத்துக்கொண்டிருந்தாள். யார் யார் பாடசாலைக்கு இன்று வருவார்கள், என்ன அங்கு நடக்கும், தனது ஆசிரியை கண்டிப்பானவரா, விளையாட விடுவாரா என்ற அவளின் கேள்விகளுக்கிடையில் அவள் பல் துலக்கி, குளிப்பாட்டி, கிறீம் பூசி உடையணிவித்தேன்.

உன்னுடன் சிறுவர்பூங்காவில் படித்தவர்கள் தானே அங்கு வருவார்கள், நீ அந்த ஆசிரியரை ஏற்கனவே சந்தித்துப் பேசியிருக்கிறாய், உங்களை அதிக நேரம் விளையாடவிடுவார்கள் என்றெல்லாம் கூறியபடியே குளிக்கவைத்து, தலைமயிரை சிக்கெடுத்து அழகாக வாரிவிட்டேன்.

சில நாட்களுக்கு முன், பாடசாலை முதல்நாளுக்கு என்று அவள் உடைகள் வாங்கியிருந்தாள். எனக்கு உடைகள் வாங்கும் கலை பற்றிய பேரறிவு இல்லாததால்  அந்த விடயத்தில் நான் தலையிடுவதில்லை. பூக்குட்டியும், காவியாவும் தாயாரும் உடைகள், சப்பாத்து வாங்கியிருந்தார்கள்.

என்னுடன் வந்து புத்தகப் பையை வாங்கிக் கொண்டாள். முதல் நான் இரவு பென்சில்களை தீட்டி அவளது பென்சில் பெட்டியினுள் வைத்துக்கொண்டாள். அடுத்த நாளுக்கான உடைகளை மினுக்கி வைக்க உத்தரவிட்டாள், துங்குவதற்கு முன் ஆயிரம் கேள்விகள்  கேட்டாள். எனது பாடசாலை அனுபவத்தை கேட்டறிந்தாள். அக்காவின் அனுபவங்களை சொல்லச் சொல்லி பல கேள்விகளைக் கேட்டாள். நானும் காவியா அக்காவும் அவளருகில் படுத்திருந்து  அவளின் கேள்விகளுக்கு பதிலளித்தபடியே அவளுக்கு முன் தூங்கிப் போனோம்.

குளித்து  தயாரானதும் உச்சம் தலையில் இருந்து சப்பாத்து வரை அழகான உடை, தலைமயிர் கிளிப், நெட் போன்றதொரு hair band, சிறிய அழகான தோடு, நீண்ட காட்சட்டை  என்பவற்றை அணிந்து கொண்டாள்.

உணவு உண்ண பொறுமையில்லாதபடியே கட்டாயத்துக்கு பாணை விழுங்கினாள். சப்பாத்தை அணிந்து கொண்டு புத்தகப்பையுடன் வீட்டுக்கு வெளியில் காத்திருந்தாள். நான் தயாராகும் வரையில் 4 - 5 தரம் என்னை ”என்ன செய்யுறீங்க அப்பா, நேரம் போகுது” என என்னையும், அக்காவையும் அழைத்துக்கொண்டிருந்தாள். அதன் பின்னான காலங்களில் நான் தினமும் 4-5 முறை  ”என்ன செய்யுறீங்க பூக் குட்டி, நேரம் போகுது” என்று அழைக்கவேண்டியிருந்தது.

வெளியில் மழை தூறிக் கொண்டிருந்தது. வாகனத்தில் ஏறும் போது. வழமை போல் யார் அப்பாவுக்கு அருகில் உட்கார்வது என்ற பிரச்சனை வந்த போது அவளே வென்றாள். வேகமாக ஓடு, நேரம் போகிறது என்றபடியே கடந்த போன அறிமுகமானவர்களுக்கெல்லாம் கைகாட்டிக்கொண்டு வந்தாள். காவியா கண்ணாடியில் என்னைப் பார்த்துச் சிரித்தாள். நானும் சிரித்தேன். தனது தங்கை தனது பாடசாலையில் கல்வி பயில்வது அவளுக்கு பெருமையாயிருந்தது. தங்கையின் நடவடிக்கைகள் அவளுக்கு சிரிப்பாகவும் இருந்தது.

வாகனத்தை நிறுத்தி வெளியே வந்து போது என் கைகைப் பிடித்துக் கொண்டாள். அவளது முகத்தில் விறுவிறுப்பின் பயம் தெரிந்தது. அவனுடன் மெதுவாய் பேசியபடியே வகுப்புக்கு அழைத்துப் போகும் வழியில் ஒரு படம் எடுத்தக்கொண்டேன். அழகாய் சிரித்தாள் படம் எடுக்கும் போது.

ஆசிரியர் வாசல் வரை வந்து பூக்குட்டியின் கையைப் பற்றி குலுக்கி அழைத்துப் போனார். திரும்பிப் பார்த்தாள் புன்னகைத்துக் கொண்டோம். என் மனதுக்குள் அவள் பாடசாலை தொடங்கியதை ஜீரணிக்க முடியாத தவிப்பு ஏற்பட்டது. அவள் இனி குழந்தையில்லை என்பதும் புரிந்தது. இன்று நான் இதை எழுதும் போது அவளுக்கு 12 வயதாகிறது. இருப்பினும் குழந்தையாகவே எனக்குள் இருக்கிறாள்.

பல பெற்றோர்கள் அங்கிருந்தார்கள். எல்லோரும் சிறுவர்பூங்கா மூலமாக ஏற்கனவே அறிமுகமானவர்கள். நாம் பேசிக் கொண்டிருந்தோம். சில குழந்தைகள் அ‌டிக்கடி வந்து தத்தமது பெற்றோரின் கைகளுக்குள் அடைக்கலமாகினர்.  என் பூக்குட்டி வரவே இல்லை. வரமாட்டாளா என்று நான் ஏங்கிக்கொண்டிருந்தேன். அடிக்கடி தனது நண்பியிடம் ஏதொ சொல்லிச் சிரித்தபடியே என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவர்களின் அழகை ரசித்தபடியே நின்றிருந்தேன் நான். ஒரு சிறிய இடைவேளியின் போது காவியா வந்தாள். எப்படிப் போகிறது என்றாள்? சிரித்தேன். மனியடித்த போது தனது நண்பிகளுடன் அவள் மறைந்து போனாள்.

ஏறத்தாள ஒரு மணி நேரத்தின் பின், ஆசிரியர் என்னிடம் நீங்கள் விரும்பினால் போகலாம் என்ற போது பூக்குட்டியை அழைத்து பாடசைலை முடிந்ததும் என்ன செய்ய வேண்டும் என்று கூறி, விடைபெற்றபோது கட்டியணைத்து முத்தம் கொடுத்தேன். வெக்கப்பட்டு நெளிந்தாள்.

வெளியே வந்து ஜன்னலினால் பார்த்தேன். ஆசிரியரின் பேச்சை கவனமாகக் கேட்டுக்கொண்டிருந்தாள். திரும்பிப் பார்க்கமாட்டாளா என்று ஏங்கியபடியே நின்றிருந்தேன், சில நிமிடங்கள்.

என்னைப் பார்த்து அழகாய் புன்னகைத்து கையை ஆட்டி விடைகொடுத்தாள். வாயில் கையைவைத்து காற்றில் முத்தம் அனுப்பினேன். அவளும் அப்படியே செய்து நண்பியுடன் சேர்ந்து சிரித்தாள்.

என் உடல் நகர்ந்தாலும் மனம் நகர மறுத்தது. 

ஒரு புகைப்படத்திற்கு இவ்வளவு ஞாபகசக்தியிருக்குமா என்று சிந்தித்துக்கொண்டிருந்தேன். எத்தனை எத்தனை நினைவுகளை தூண்டிவிடுகிறது ஒரு புகைப்படம்.

அந்த நாட்கள் என் வாழ்வினை அழகுபடுத்திய மிக அற்புதமாதமான நாட்கள் என்பதை மறுபபதற்கில்லை. இதே போல் பல புகைப்படங்கள் இருக்கின்றன. அவற்றினுள்ளும் ஏறாளமான கதைகள் ஒளிந்திருக்கலாம்.

இன்றைய நாளும் நல்லதே!