ஒரு பெண், ஒரு ஆண், ஒரு கணணி

நான் கணணி திருத்தப் போகும் பல இடங்களில் எனக்கு பல விதமான மனிதர்களையும் சந்திப்பதால் வித்தியாசம் வித்தியாசமான அனுபவங்கள் கிடைத்துப் போகின்றன. இன்றும் அப்படித்தான் கணணி திருத்தப் போயிருந்தேன். வெளியே பனிக்கால குளிர் இலைதுளிர்க் காலத்தின் இளஞ் சூட்டில் சற்றே அடங்கியிருந்தது.  GPS அவரின் வீட்டுக்கு அருகில் வந்ததும் வீடு வந்துவிட்டது என்று அறிவிக்க, அருகில் வாகனத்தை நிறுத்தி அவர் வீடு நோக்கி நடந்தேன். கதவைத் தட்டிய போது வயதான ஒரு பெண் கதவைத் திறந்தார். ஏறத்தாள 60 - 65 வயதிருக்கும். பரஸ்பர அறிமுகத்தை முடித்த பின், கணணியை பார்க்கத் தொடங்கினேன்

அவரின் கணணிப் பிரச்சனையைப் பார்த்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். இலைதுளிர்க் காலம், இளவெனிற் காலம் என்று எமது உரையாடல் இருந்தது. இம்முறை சென்ற வருடத்தை விட அதிக வெப்பத்தை எதிர்பார்ப்பதாகக் கூறினேன். அது பற்றி தனக்குக் கவலையில்லை என்று கூறினார். ஆச்சர்யத்துடன் அவரைப் பார்த்தேன். சிரித்தபடியே ”நான் கிரேக்கத் தீவுகளுக்கு போய்விடுவதால் நோர்வேயின் காலநிலை பற்றி தான் பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை என்றார்”. எமது பேச்சு வாழ்க்கை, உலக நடப்புகள் சுழன்றுகொண்டிருந்தது.
நான்  கணணிதிருத்துபவன் என்பதை எவ்வாறு அறிந்து கொண்டீர்கள் என்று கேட்டேன். தனது கணணி இயங்க மறுத்த பின் தனது நண்பியுடன் உரையாடிய போது விசாரித்ததாயும், அப்பொது போது அவர் என்னைப் பற்றிக் கூறி அதன் பின்பு புகழ்ந்து தள்ளினார் என்றும் கூறி, அப்படி அவள் உன்னைப் புகழுமளவுக்கு என்ன செய்தாய் என்றார்?

எனது நினைவுப் பெட்டகத்திலிருந்து இவரின் நண்பி யார் என்பதை கண்டுகொள்ளமுடியாதிருந்தது. யார் உங்கள் நண்பி என்று கேட்டேன். ஒரு பெயரைச் சொன்னார். எனது நினைவில் அவர் இருக்கவில்லையாதலால் வாயைய் பிதுக்கினேன். நண்பியின் வீடு இருக்கும் இடத்தைச் சொன்னார். ஒரு பொறி தட்டியது. ”ஒம் ஓம் .. அவரின் பிரச்சனைகள் தீர்ந்துவிட்டதா? என்றேன். ஆம் என்றார்.

ஏறத்தாள 1 வருடத்துக்கு முன்னிருக்கும், ஒரு நாள், இவரின் நண்பி என்னைக் கணணி உதவிக்கு அழைத்தார். குரலிலேயே பதட்டமிருந்தது. உடனே வா என்றார். மாலை வருவதாகக் கூறினேன். மாலை அவரின் வீட்டின் மணியை அழுத்தி எனது வரவை அறிவித்தேன்.  நான்காம் மாடி என்றார். லிப்ட் இல்லாதகட்டடமாகையால் மூச்சிரைத்தபடி நான்கு மாடிகளையும் ஏறி அவரின் வீட்டின் முன் நின்ற போது கதவு ஓட்டைவழியாக என்னைப் பார்த்து, பின்பு கதவுச் சங்கிலியை திறக்காமல் கதவைத் திறந்து என்னை இன்னும் இரண்டுதரம் மேலும் கீழுமாகப் பார்த்தார். நீயா கணணி திருத்துவது என்றார். அவரின் குரலில் பலத்த அவநம்பிக்கை இருந்தது. கறுப்பன் ஒருவனை அவர் அங்கு எதிர்பார்த்திருக்கவில்லை என்பதை நான் அறிந்து கொண்டேன். அதுவும் என்னைப் போன்ற கறுப்பான கறுப்பனை அவர் எதிர்பார்த்திருக்கவே மாட்டார். மெதுவாய் நட்புடன் புன்னகைத்தேன்.

ஆம் நான் தான் கணணி திருத்துவது என்றேன். சந்தேகத்துடன் என்னை உள்ளே அனுமதித்தார். நான் உள்ளே நுளைந்ததும் கதைவை தாழ்ப்பாள் இட்டு சங்கிலியையும் மறக்காமல் பூட்டினார். அவரின் பதட்டம் குறைந்ததாய் இல்லை. என்னை சந்தேகத்துடனேயே நடாத்தினார்.

எங்கே இருக்கிறாய்? எந்த நாடு? நோர்வேயில் எத்தனைவருடமாக இருக்கிறாய்? என்ன வேலை செய்கிறாய் என்று கேள்விகளை அடுக்கினார். நானும் சளைக்காத விக்கிரமாதித்தன் முருங்கை மரத்தில் ஏறுவது போன்று  பதில்களை அடுக்கினேன். சற்று நம்பிக்கை வந்ததும் கணணியைக் காட்டினார். அதனருகில் குந்திக்கொண்டேன். அவரைப் பார்த்து ”என்ன பிரச்சனை என்றேன். ”சிலர் என் கணணியை எனக்குத் தெரியாமல் எனது கணணியினுள் வருகிறார்கள், எனது நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள்” என்றார் பதட்டத்துடன்.

எனக்கு தலை சுற்றத் தொடங்கியது. இருந்தாலும் மீண்டும் என்ன என்று கேட்டேன்.

”சிலர் என் கணணியை எனக்குத் தெரியாமல் எனது கணணியினுள் வருகிறார்கள், எனது நடவடிக்கைகளை கவனிக்கிறார்கள்” என்றார் மிகவும் கண்டிப்பான குரலில்.

அவசரப்பட்டு அது உங்களுக்கு எப்படித் தெரியும் என்று சற்று அழுத்தமான குரலில் கேட்டது தப்பாகிவிட்டது. சற்று சினத்துடன் நான் என்ன பொய் சொல்கிறேன் என்கிறாயா? நான் இல்லாத நேரங்களில் கணணிமௌஸ் விருப்பத்திற்கு அலைகிறது. எனது மெயில்  தானே திறந்து மூடுகிறது. எனது ஆவணங்கள் திறந்து மூடுகின்றன. இதைவிட வேறு என்ன சாட்சி வேண்டும்? நான் ஒன்றும் முட்டாளில்லை என்றார்.

என்னால் நம்ப முடியவில்லை. இப்படியான கணணிப் பிரச்சனைகள் எற்படுவது மிக மிகக் குறைவு. வைரஸ் ஏதும் புகுந்திருக்குமா என்று சிந்தனையோடினாலும், அதை மனது ஏற்றுக்கொள்ள மறுத்தது. சற்று நேரம் கணணிக்குள் தலையை விட்டு பிரச்சனையை தேடிப்பார்த்தேன். எதுவும் தென்படவில்லை. கூகிலாண்டவரும் பதில் தெரியாது, பக்தா என்றார்.

இந்தக் கணணியை நீங்கள் மட்டுமா பாவிக்கிறீர்கள் என்ற கேள்வியை அவரிடம் கேட்டேன். என்னை உற்றுப் பார்த்தவர் கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஒரு கதையைச் சொன்னார்.  முன்பு மெதுவாய்ச் சுற்றத் தொடங்கிய தலை இப்போது 100 மைல் வேகத்தில் கண்படி சுற்றத்தொடங்கியது.

அவரின் கதையைக் கேட்டு அதன் பின் அவரின் வீட்டை விட்டு நான் வெளியே வர ஐந்து மணிநேரம் எடுத்தது. அவரின் கதையின் சாரம் இது தான்.

அவர் சுகயீனம் காரணமாக தொழில் செய்ய முடியாததனால் சுகயீன ஓய்வு பெற்றவர். தனியே வாழ்பவர். அடிக்கடி கிரேக்கத்தீவுகளுக்கு வெக்கையை அனுபவிப்பதற்றகாகவும், சுகயீனத்தை தவிர்க்கும் பொருட்டும் பயணிப்பவர். அப்படி அவர் அங்கு பயணப்பட்ட நாட்களில் அங்கு ஒரு குடும்பத்தினர் நன்கு அறிமுகமாயிருந்ததனால் அவர்களுக்கு இவர் சில உதவிகளைப் புரிந்துள்ளார். அந்தக் குடும்பத்தில் இருந்த ஒரு மனிதர் 40 வயதிருக்கும் நோர்வேயில் வேலை‌ தேடி வந்திருக்கிறார். இவரும் தான் தனியே இருப்பதால் அவரை தன்னுடன் தங்கியிருக்க அனுமதித்திருக்கிறார். ஆரம்பத்தில் பிரச்சனையின்றிப் போயிருக்கிறது.

இந்தப் பெண்ணிண் வருமானம் மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. கிரேக்கப் பயணங்களைக் கூட அவருக்கு சுகயீனம் என்பதால் அரசாங்கமே ஒழுங்கு செய்து வந்தது. இவரின் வீட்டில் தங்கிய மனிதர் எதுவித ‌பண உதவியையும் இவருக்குச் செய்யாமல் தன்னிஸ்டப்படி  அவரின் வீட்டில் ஏறத்தாள 4 - 5 மாதங்கள் வாழ்ந்திருக்கிறார். இவரின் சேமிப்பும் கரைந்திருக்கிறது. ‌இவரால் அம்மனிதனை வெளியேறு என்று கூறமுடியாதிருந்திருக்கிறது.

இதற்கிடையில் அம் மனிதரின் அடாவடித்தனங்கள் அதிகரித்து, இவரின் கணணியை பாவிப்பது.  தொலைபேசியை பாவிப்பது என்று எல்லைகளை மீறியபடியே இருந்திருக்கிறார் அம் மனிதர். இவர் வயதானவர். எதையும் எதிர்க்கும் துணிவின்றி பயம் காரணமாக அமைதியாய் இருந்திருக்கிறார். ஒரு நாள் இவர் சமைக்கவில்லை என்ற கோபத்தில் அம் மனிதர் பெரிதாய் சத்தம் போட்டு அமர்க்களம் செய்த போது பயந்து போன இவர் சற்றுத் துணிவை வரவழைத்தபடியே வெளியே போ என்றிருக்கிறார்.
அன்று தொடக்கம் இவரை வெருட்டியபடியே அவ் வீட்டில் அம்மனிதன் வாழ்ந்திருக்கிறான். கணணி, தொலைபேசி  ஆகியவற்றை அம் மனிதனே பாவித்திருக்கிறான். இவரைப் பாவிக்க அனுமதிக்கவில்லை. இவரும் தொடை எலும்பு அறுவைச்சிகிச்சை செய்திருந்ததால் அதிகம் வெளியே செல்ல முடியாதிருந்திருக்கிறார். அம் மனிதனே தேவையான பொருட்களை இவரின் பணத்தில் வாங்கிவர இவர் சமைத்துக்கொடுத்திருக்கிறார்

தொல்லை தாங்க முடியாத நாட்களில் ஒரு நாள், அம் மனிதன் பயணம் சென்றிருந்த போது வீட்டுக்கதவுக்கான பூட்டை அருகில் இருந்த பூட்டுக்கடையின் உதவியுடன் மாற்றியிருக்கிறார். அத்துடன் அம் மனிதனி்ன்உடமைகளையும் வீட்டுக்கு வெளியே வைத்திருக்கிறார்.

ஓரிரு நாட்களில் திரும்பி வந்த அம் மனிதன் சினமுற்று  இம்சை செய்த போது வேறு பலர் அவனைக்கலைத்திருக்கிறார்கள். அதன் பின் அவன் அங்கு வருவதில்லை. ஆனால் இவரின் கணணி இணையத்துடன் தொடர்பு உள்ள நேரங்களில் தன்னிச்சையாக இயங்க ஆரம்பித்திருக்கிறது.

இவரின் இந்தக் கதையைக் கேட்டதும் எனக்கு கணணி தானே இயங்கும் மர்மம் புரிந்தது. தொலைவில் இருந்து கணணியை இயக்கும் மென் பொருள் இருக்கிறதா என்று பார்த்தேன். பிரபல்யமான ஒரு மென்பொருள் இருந்தது. அதன் இரகசியச்சொல்லும் அடிக்கடி மாறாதாவாறு செய்யப்பட்டிருந்தது.

அவருக்கு பிரச்சனையை விளக்கிக் கூறினேன். கணணியை தூக்கி எறி ‌என்னும் தொனியில் பேசினார். அதற்கு அவசியம் இல்லை  என்று கூறி அக் கணணியை மீண்டும் இன்ஸ்டால் செய்து கொடுத்தேன்.

தேனீர், பிஸ்கட், பழங்கள் என்று பெரும் உபசாரம் நடாத்தினார்.  ஒரு கரிய கறுப்பனும் ஒரு வௌளை மூதாட்டியும் அங்கு நண்பர்களாகியிருந்தனர். கேட்ட தொகையை விட 100 குறோணர்கள் அதிகமாகவும்  தந்தார். நன்றி கூறிப் புறப்பட்டேன்.

அதன் பின் சிறு சிறு பிரச்சனைகளுக்காக என்னை அழைத்திருக்கிறார். ஒவ்வொரு முறையும்  அம் மனிதனைப் பற்றிப் பேசுவார். தனக்கு பயமாய் இருப்பதால் மிகவும் கவனமாகவே இருப்புதாகவும், இருட்டிய பின் வெளியே செல்வதில்லை என்றும் கூறினார். பாவமாய் இருந்தது அவரைப் பார்க்கும் போது. வயது முதிர்ந்த காலத்தில், தனியே பயந்து பயந்து வாழ்ந்து கொண்டிருந்தார். குடும்பத்தவர் என்று குறிப்பிடத்தக்க வகையில் எவருமில்லை. எனவே தனிமையில் தான் அவரது வாழ்க்கை ஓடிக்கொண்டிருந்தது.

இறுதியாக அவரைச் சந்தித்த போது நல்லவர்களையே கடவுள் சோதிப்பார் என்று நாம் தமிழில் கூறுவதுண்டு என்றேன் நான். சிரித்தார். தற்போதும் அம் மனிதனின் குடும்பத்தவர்களுக்கு முடிந்த உதவிகளைச் செய்வதாகச் சொன்ன போது எனக்கு ‌ அவர் மீது சற்று கோபம் வந்தது. உங்களுக்குப் பைத்தியம் என்றேன். என்னைப் பார்த்துச் சிரித்தார். அச் சிரிப்பு, அவரளவுக்கு நான் இன்னும் பக்குவப்படவில்லை என்பதை உணர்த்திப் போயிற்று.

”ஆற்றைக் கடந்த ஞானியும், தண்ணீரில் மூழ்கிக்கொண்டிருந்த தேளும்” கதை தெரிந்தவர்களுக்கு  அந்த மூதாட்டியின் செயல் நன்கு புரியும்.

மனிதர்கள் பலவிதம். இவரைப் போன்றவர்களாலேயே உலகம் இன்னும் இயங்கிக் கொண்டிருக்கிறதோ என்று எண்ணத்‌ தோன்றுகிறது.


இன்றைய நாளும் நல்லதே.

”எங்கே” (எங்கள் போராட்டம்?) ஒரு பார்வை

அண்மையில் எழுத்தாளர் தியாலிங்கம் ஐந்து புத்தகங்களின் அறிமுகவி‌ழாவினை ஒஸ்லோவில் நடாத்திருந்தார். ஒரு பயணத்தின் காரணமாக என்னால் அந் நூல் அறிமுகவிழாவில் கலந்து கொள்ள முடியவில்லை. மாசி மாத இலக்கியப் பூங்காவில் வைத்து எனது கையில் ஐந்து புத்தகங்களைத் தந்தார்.

அதில் சில புத்தகங்களை நான் முன்பே வாசித்து அவை பற்றி எனது மனதுக்குத் தோன்றியதை எழுதி பதிவிட்டிருந்தேன். வெளியீட்டுக்கு முன்பே ”திரிபு”, ”எங்கே” ஆகிய நாவல்களை தியாகலிங்கத்திடம் கேட்க சங்கடமாக இருந்ததனால் வெளியீட்டு விழா முடியும்வரை காத்திருக்க வேண்டியேற்பட்டது. ”எங்கே” என்னும் நாவல் பற்றிய பலத்த எதிர்பார்ப்பு என்னிடம் இருந்ததனாலும், திரிபு புத்தகத்தை நண்பர் ஒருவருக்கு கொடுத்ததாலும் ”எங்கே” நாவலை முதலில் வாசிக்கத் தொடங்கினேன்.

எப் புத்தகமாயினும் அப் புத்தகத்தை வாசிப்பதற்கு முன் புத்தகத்தை மேலோட்டமாகப் புறட்டிப்பார்ப்பது எனது வழக்கம். இம்முறையும் புறட்டினேன். கண்ணில்  பட்டது 111ம் பக்கம். அதில் இப்படி எழுதியிருக்கிறார் தியாகு:

”எங்கள் சமுதாயத்தின் வளர்ச்சி எந்தத் திசையில் விருத்தியடைந்து சென்றது? ஆன்மீகத்திலா? கலையிலா? அல்லது காதல் வசனம் பேசுவதிலா?  ஏன் எங்கள் சமுதாயம் வளர்ச்சி குன்றியதாக, தரவுகளை விட்டு தற்பெருமை பேசுபவர்களாக, இறுதியில் நாடற்ற பரதேசிக் கூட்டமாக மாறியது?”

என்னை சற்று நேரம் ஸ்தம்பிக்க வைத்தது இந்தக் கேள்வி. தியாகலிங்கத்தின் நாவல்களில் எப்போதும் ஒரு செய்தி அல்லது சமுதாயம் மேலான விமர்சனம் இருந்து கொண்டே இருக்கும். எங்கே நாவலும் பலவிதமான கேள்விகளை, விமர்சனங்களை எம்மீதும், நாம் கடநது வந்த பாதைமீதும் வைக்கிறது. அவை சிந்தனையையும் தூண்டிவிடுகின்றன.

எனக்கு எப்புத்தகமாயினும் அப் புத்தகத்தைப் பற்றிய எழுத்தாளரின் கருத்தை அறியும் ஆவல் அளவுக்கதிகமாய் இருக்கிறது. எனவே நான், முன்னுரையில் அதிக ‌நேரம் செலவிடுவதுண்டு.

அண்மைக் காலங்களில் எனது மனதுக்குள் தோன்றிமறையும் இனம்புரியாத சில உணர்வுகளுக்கு சிறப்பான, இலகுவான முறையில் என்னால் வடிவம் கொடுக்க முடியாதனால் ஒரு வித ”எழுத்து வெற்றிடம்” என்னை சூழ்ந்திருந்தது. இரண்டே இரண்டு பக்கங்களில் நான் நினைத்ததன் சாராம்சத்தை அப்படியே எழுதியிருந்தார் நண்பர் தியாகலிங்கம். நாம் கடந்து வந்த பாதைகளும், வாழும் தளமும், ஒரே சிந்தனையோட்டமும் இதற்குக் காரணமாயிருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுகிறது,  எனக்கு.

உங்கள் கையில் புத்தகம் கிடைத்தால் இந்த முன்னுரைக்கு முக்கியத்துவம் கொடுங்கள். உங்களுடனிருக்கும்  கொள்கைகள், கருத்துக்கள், விமர்சனங்கள், விமர்சனமற்ற பக்தி, வறட்டுக் கௌரவம் ஆகியவற்றை சற்றே களைந்து உங்கள் சிந்தனைக் குதிரையை தட்டிவிடுங்கள். உணரவேண்டிய பலவற்றை உணர்ந்து போவீர்கள் என்பதற்கு நான் உறுதி தருகிறேன். முன்னுரையில் சற்று அரசியலும் உண்டு. அதுவும் ஒருவிதத்தில் அவ்விடத்தில் அவசியமானதே.

முன்னுரையில் இருந்து ஒரு சிறு பகுதி:

”ஈழத் தமிழன் ஒவ்வொருவருக்கும் மனிதம், மனச்சாட்சி, சமூகநீதி பற்றிய அலசல் இருக்கவேண்டும். ஈழப்போராட்டத்தில் கண்ணை மூடிக்கொண்டு ஒரு பக்கம் தான் அநீதி இழைக்கப்பட்டது என்று ஒரு போதும் கூறமுடியாது. அது பிடியற்ற கத்தியாக பார்க்குமிடமெல்லாம் பாய்ந்த வரலாறுண்டு. அந்தச் சோகங்களில் எனக்குத் தெரிந்த சிலவேனும் ஆதாரப்படுத்தப்படவேண்டும். எனக்கேன் தொல்லையென மௌனித்து இருப்பதால் பல உண்மைகளை நாம் எம் வருங்கால சமுதாயத்திற்குச் சொல்லாது மறுதலித்துச் செல்கிறோம் என்பதை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். எங்கள் போராட்டத்திலும் Holocaust பல தோன்றி மறைந்தன என்பதை இனபேதமற்று வருங்காலச் சந்ததிக்காய் ஆதாரப்படுத்தல் வேண்டும். அதிலிருந்து சில பாடங்களை நாம் கற்றுக்கொள்ளுதல் சாத்தியம்.”

மேற் கூறப்பட்ட கருத்தில் பலருக்கும் ஏற்புடையதாக இருப்பினும் அதை இன்றைய சூழ்நிலையில் வெளிப்படையாகப் பேசுபவர்கள் மிகக் குறைவு. ஆனால் துணிந்து இது பற்றி பேசும் தியாகலிங்கத்தின் எண்ணம் எமது சமுதாயத்தின் மேலான அக்கறையே அன்றி வேறொன்றுமில்லை. பேசாப் பொருளையும் பேசுவது அவசியம் என்பதை தியாகலிங்கம் வாசகர்களுக்கு தனது ”என்னுரை”யினூடாக உணர்த்தியிருக்கிறார்.

தியாகலிங்கம் 1980 களிள் PLOT  அமைப்பில் இருந்தவர். அதன் காரணமாக இந்தியாவிலும் வாழ்ந்தவர். பின்பு PLOT அமைப்பின் உட்பூசல்களின் காரணமாக அதில் இருந்து வெளியேறி தற்போது ஏறத்தாள இருபது ஆண்டுகளுக்கு மேலாக நோர்வேயில் வாழ்ந்து வருகிறார். இந்த நாவலின் கதையயும் நோர்வே, இலங்கை, இந்தியா ஆகிய  நாடுகளினூடாக நகர்ந்து போகிறது.

என் சந்ததியினருக்கு பெற்றோருடன் இருந்த உறவுக்கும் அதிலும் முக்கியமாய் தந்தைமாருடன் இருந்த உறவுக்கும் இன்றைய சந்ததியினரின் தந்தை - மகன் உறவையும் மிகவும் யதார்த்தமாகக் கூறியிருக்கிறார். நாவல் எனது தந்தயாரை மிகவும் நினைவூட்டியது.

நாவலில் அவர் தனது ஊரை (காரைநகர்) வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தியிருக்கும் விதமும் அழகானது. 10ம் அத்தியாயத்தில் சூரன் போர் நடைபெறும் நிக‌ழ்வினை கூறியிருக்கும் விதமும் என்னை மிகவும் கவர்ந்து.

சாதீயம், சமுதாய ஏற்றத்தாள்வு, மக்களின் அன்றாட வாழ்கை நிகழ்வுகள்,  உப்புநீர்க் கிணறுகள், காரைதீவின் ஏனைய பகுதிகள், காரைதீவில் வாழ்ந்திருந்த சிங்களவர்கள், கடற்படையினர் இப்படி பலதையும் மிக நூணுக்கமாக அவதானித்து கதையோட்டத்தினூடாக அவற்றை நேர்த்தியாக நகர்த்தும் தன்மையினால் கதையில் ஆரம்பத்தில் இருந்தே ஒரு உண்மைத்தன்மை, நம்பகத்தன்மை புகுந்து கொள்கிறது. ‌அதை விட நோர்வேயில் நடைபெறும் தந்தை - மகன் உரையாடல்களும், PLOT அமைப்பின் பிரச்சனைகளும் கூட அப்பட்டமான உண்மைகள் என்பதனால் இதை நாவலா, உண்மைக் கதையா என்று நம்புவதற்கு எனக்கு சற்று நேரம் தேவைப்பட்டது. இருப்பினும் நாவலை வாசித்து சில மணிநேரங்களாகிய பின்பும் இது ஒரு உண்மைக் கதையா என்ற எண்ணம் ஏற்படுவதை தவிர்க்க முடியாதிருக்கிறது, எனக்கு. அதுவும் தியாகலிங்கத்தின் எழுத்தின் வெற்றி என்பேன் நான்.

நாவலில் அரசியல், தமிழாராய்ட்சி மகாநாடு, சிவகுமாரன், துரையப்பா என்று ஆரம்பிக்கிறது. உரையாடல்களினூடே பல உண்மைச்சம்பவங்களையும், அவை தந்த அந்தக் காலத்து விறுவிறுப்புக்களையும் கலந்திருப்பதால் எம்மை மீண்டும் 70 களின் நடுப்பகுதிக்கு அழைத்துச் செல்கிறார் தியாகலிங்கம்.

சிவகுமாரனின் மரணத்திற்குப் பின்பு நடைபெறும் சம்பாசனையில் அரசியல்வாதிகளின் நம்பகத்தன்மையை இளையசமுதாயம் சந்தேகிக்கும் தன்மையையும் கூறி, அவர்களின் பாதைகள் பிரிவுபட்ட சரித்திரத்தையும் அவர் சுட்டிக்காட்ட மறக்கவில்லை. துரையப்பாவின் மரணம், அவரை ஆதரித்த, ஏதிர்த்த எம் மக்கள், அந்தக்காலத்து அரசியல் பிரச்சாரங்கள், அரசியலில் சாதீயம், த. வி. கூட்டணியின் தந்திரங்கள், மக்களின் மனநிலை என்று போரட்ட வரலாற்றின் ஆரம்ப நாட்களையும் க‌தையோட்டத்தோடு கலந்துவிட்டிருப்பது சிறப்பு.

நாவலில் இடையிடையே அரசியல் உட்குத்துக்கள் இருக்கத்தான் செய்கின்றன. ஆனால்  வாசகர்கள் தம்மை தமது  கொள்கைசார் அமைப்புக்களில் இருந்து, அரசியற் கருத்துக்களில் இருந்து சற்று நேரம் விடுவித்தக்கொண்டு, தம்மை ஒரு வாசகனாக மட்டும் பார்ப்பார்களேயானால் அந்த அரசியற் உட்குத்துக்கள் கூட ஒரு வித சுயவிமர்சமாகவே தெரியும். நான் இ்விடத்தில் சுய விமர்சனமென்பது எமது விடுதலைக்காய் புறப்பட்ட அனைத்து இயக்கங்களையும் குறிக்கிறது.

83 ஜூலை காரைதீவுக்கு கொடுத்த பரிசு, நீண்ட விதவைகளின் பட்டியல் என்னும் என்னும் பகுதியினூடே எமது ஆயுதம் கலந்த விடுதலைப் போராட்டம் கதையினுள் புகுகிறது. கலவரத்திற்கு பின் PLOT  இன் கொள்ளை பரப்புக் கூட்டத்தினில் கலந்து கொள்ளுவதன் மூலம் காதாநாயகனின் போராட்ட வாழ்வும் பங்களிப்பும் ஆரம்பமாகின்றன.

நானும் இவ்வாறான சில கூட்டங்களுக்குச் சென்றிருப்பதால் நாவலில் உள்ள ”உரிமைகள் கொடுக்கப்படுவதில்லை, எடுக்கப்படவேண்டியவை” போன்ற வசனங்கள் எனக்கும் பரீட்சயமானவையாகவே இருக்கின்றன. PLOT இன் அந்தக்காலத்துப் பரப்புரைகளை அவற்றின் உள்ளர்த்தமும் தொனியும் பிறளாதவாறு எழுதியிருப்பது சிறப்பு.

இயக்கத்தில் இணைதல், குறுக்கிடும் சிறுபருவக் காதல், வீட்டைப் பிரியும் சோகம் என்று இவையெல்லாவற்றையும் கடந்து வந்ததனாலோ என்னவோ மிகவும் தத்ரூபமாக இவற்றை வர்ணித்து எழுதியிருக்கிறார். இயக்கத்தில் சேர்ந்த பின் ஏற்படும் ஆரம்ப காலப் பயத்தை அவர் ”வீரப் போரின் வித்துக்கள், பயத்தில் தான் முளையிடப்படுகின்றனவோ” என்று எழுதியிருந்ததை மிகவும் ரசித்தேன். எத்தனையோ அர்த்தங்கள் அந்த வாத்தைகளுக்குள் ஒளிந்திருக்கின்றன.

தமிழ்நாட்டில் B முகாம், சவுக்குத் தோப்பு, கொடிக்கம்பம், பண்ணையார் என்று பலருக்கும் அறிமுகமான இந்தச் சொற்களுடன் PLOT   இயக்கத்தினுள் நுளையும் தியாகலிங்கம் நாவலின் இறுதிவரை இந்தியாவில் PLOT முகாம்களில் நடந்தேறிய மிகவும் வேதனையான, கொடுமையான போராட்ட வரலாற்றை கூறிச் செல்கிறார்.

தியாகலிங்கம் கூறும் PLOT விடயங்களை நான் ஏற்கன‌வே ”புதியதோர் உலகம்”  புத்தகத்தினூடாகவும் மற்றும்  சில நண்பர்கள்  மூலம் அறியக் கிடைத்த  தகவல்கள் போன்றவற்றினாலும் அறிந்திருப்பதால், நாவலின் பின் பகுதியை எங்கோ கேட்டிருக்கிறேன் என்ற எண்ணம் எழுவதைத் தவிர்க்கமுடியவில்லை. அதே வேளை அவ்வுணர்வு தியாகலிங்கம் எதையும் புதிதாய் புனையாமல் உள்ளதை உள்ளபடியே எழுதியிருப்பதை உணர்த்துகிறது.

முக்கியமாக நோர்வேயில் நடந்தேறிய சில உண்மைச் சம்பவங்களையும், அது பற்றிய தனது கருத்தையும் ஓரு இடத்தில் கூறியிருக்கிறார். அவையும் நாவலின் நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்கின்றன.

இலங்கைப் பிரச்சனை மட்டுமல்ல பல சர்வதேசப் பிரச்சனைகளையும், அவற்றினுள் அடங்கியிருக்கும் சில பதில் கிடைக்காத ஆனால் பதில் தேட வேண்டிய கேள்விகளையும் நாவலினூடே ஓரிடத்தில் முன்வைக்கிறார். ஒரு சராசரி மனிதனாக தனது நாட்டுடன் மட்டும் நின்று விடாமல் வேறு நாடுகளில் நடக்கும் மனிதாபிமானமற்ற செயல்கள், கதையின் நாயகனின் சிந்தனையோட்டத்தில் எவ்வாறு கலந்து  அவனது சமநிலையை பாதிக்கிறது என்பதையும் கூறுகிறார்.

தியாகலிங்கத்தின் எழுதிய திரிபு தவிர்ந்த ஏனைய புத்தகங்கள் அனைத்தையும் வாசித்திருக்கிறேன். ”எங்கே” அவயனைத்தையும் விட எனது மனதை மகவும் கவர்ந்திருக்கிறது. அதற்கு இந் நாவலை அவர் மிகவும் சிறப்பான மொழியாடலுடனும், நம்பகத்தன்மையுடனும் படைத்திருப்பதே காரணம்.

2009ம் ஆண்டுக்கு முன் மாற்று இயக்கங்களில் இருந்தவர்கள் எவ்வாறு நடாத்தப்பட்டார்கள், அவர்களின் மன உளைச்சல்கள், அவர்கள் வேதனைகள், அவர்களின் கருத்துச் சுதந்திரம் ஆகியன வெளிநாடுகளில் எவ்வாறு இருந்தது என்பதை அவர் இன்னும் மிகவும் ஆழமாகவும், ஆதார நிகழ்வுகளை கதையினுள் புகுத்தியும் இருந்திருந்தால் இப்புத்தகம் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும் என்று எண்ணத் தோன்றுவதை மறுப்பதற்கில்லை. அவற்றில் இருந்தும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது அதிகமிருக்கிறது.

படைப்பாளி என்பவன் சமூகப்பிரஞ்ஞையுடன் இருக்கவேண்டும் என்பதை தியாகலிங்கம் நாவலின் பல இடங்களில் சூட்சுகமாகச் சுட்டிக்காட்டுகிறார். வாசகர்களை சிந்திகவும் தூண்டுகின்றன அவரது எழுத்துக்கள்.

தமிழர்கள் கடந்து வந்த பாதை பல விதங்களிலும் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அது அவ்வளவு இலகுவானதல்ல. விமர்சித்தாலே எதிரி என்னும் சிந்தனையுடது எமது சமூகம்.

PLOT இன் முக்கிய விடயங்கள் ஆவணப்படுத்தப்பட்டது போல, ஏனயை இயக்கங்களின் முக்கிய விடயங்கள் உண்மையுடன் ஆவணப்படுத்தப்பட வேண்டும். அவை, நாம் எமது எதிர்காலச் சந்ததியினருக்கு விட்டுச் செல்லும் முக்கியமான படைப்புக்களாக இருக்கும், இருக்க வேண்டும்.

தியாகலிங்கத்துக்கு எனது வாழ்த்துக்கள்.

பிரபாகரனை அவமதிக்கும் ”முத்திரைக் கலாச்சாரம்”

நோர்வேயில் ”பிரபாகரனின் முத்திரை வெளியீடு” சம்பந்தமான எனது கருத்தினை உள்ளடக்கியதே இப் பதிவு.

எனது பதிவுலகம் எனது மனதின் எண்ணங்களை மட்டுமே பிரதிபலிக்கிறது. மனதில் தோன்றிய இப் பதிவின் உட்கருத்து, இன்றைய நோர்வே தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளையும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செயற்படும் சிலரையும் சற்றேனும் சிந்திக்க‌வைத்தால் மகிழ்வேன்.

மேலே போகு முன்:
குறிப்பிட்ட முத்திரை வெளியீடு பற்றி மட்டுமே நான் எழுதுகிறேன், கருத்துக் கூறுகிறேன்.
பின்னூட்டமிடுபவர்கள் இப் பதிவின் கருத்தினை மட்டுமே கவனத்திற்கொண்டு பின்னூட்டங்களை இடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப் பதிவு எனது முகப்புத்தகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.

அண்மையில் ‌nortamil.com  மற்றும் ஏனைய தமிழ் இணையச் செய்திநிலையங்கள் வெளியிட்ட  இவ் விடயம் பற்றிய செய்தியை வாசித்தவர்கள் NCET என்னும் தமிழர்களின் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வேறு சிலருடன் சேர்ந்து நோர்வே பாராளுமன்றத்துக்கு முன் நின்றபடியே வெளியிடும் படத்தை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

அம் முத்திரை வெளியீடானது அவரின் தனிப்பட்ட செயல் என்றும் அதற்கும் NCET க்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நாம் தற்போதைக்கு எடுத்துக்கொள்வோம்.

நான் இவ்விடயத்தில் NCET தவறிழைத்திருக்கிறது என்று கூறவில்லை என்பதை மேற்கொண்டு எழுத முன்பு அறியத்தருகிறேன்.

இருப்பினும் அவ்வமைப்பின் முக்கிய அங்கத்தவர்களின் ராஜதந்திரமற்ற நடவடிக்கைகள் எவ்வாறு அவ்வமைப்பையும், அவ்வமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் பாதிக்கிறது என்பது பற்றியுமே கருத்துக் கூறவிரும்புகிறேன்.

நிற்க:

நோர்வே தமிழர் அமைப்புக்களுக்கும் நோர்வே அரசுக்குமான தொடர்பில் முன்பு இருந்ததைப் போன்ற சிறந்த, நெருக்கமான, ‌ஆரோக்கியமான உறவு இல்லை என்பதனை இவ்விடயம் பற்றி சற்றேனும் தகவலறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இது பற்றி நான் விளக்கிக்கூற வேண்டிய அவசியமில்லை.

அண்மையில் tamilnet.com இல் வந்த அறிக்கையும் NCET இன் நம்பகத்தன்மை பற்றி ஒரு வித குழப்பமான எண்ணத்தையே நோர்வே அரசுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முக்கியமாக மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையானது NCET இன் இணையத்தளத்தில் வெளியிடப்படவில்லை என்பதையும், தமிழில் வெளிவரவில்லை என்பதையும் இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். இதனால் இவ்வறிக்கை பற்றி பலரும் அறியாதிருக்கினறனர்.

ஏன் நோர்வே அரசுடன் தமிழர்களாகிய எமக்கு மிக நெருங்கிய ராஜதந்திர உறவுகள் அவசியமாகின்றன?
 • நோர்வே தமிழர்களாகிய எமது கருத்துக்களை வெளிநாடுகளுடனும், இலங்கை அரசுடனும் பரிமாறும் ராஜதந்திர தொடர்புகளை நோர்வே அரசு மட்டுமே கொண்டிருக்கிறது. நோர்வே தமிழர்களாகிய எமக்கு நோர்வே அரசின் நெருங்கிய அனுசரனை தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. (வேறு நாடுகளின் தொடர்புகள் பற்றி நான் பேசவில்லை)
 • இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி உதவி மற்றும் பொருளாதார பரிமாற்றத் திட்டங்களை நோர்வே முன்னெடுத்துவருகிறது.
 • நோர்வே வாழ் தமிழர்களின் உதவி வழங்கும் நிறுவனங்கள் நோர்வேயின் வெளிநாட்டு அபிவிருத்தி நிதியில் இருந்து தமது திட்டங்களுக்கு உதவிகள் பெறுகிறார்கள்.
 • அண்மைக் காலங்களில் தமிழரின் உதவி நிறுவனங்கள் நோர்வேயிடம் இருந்து நிதியுதவி பெறுவது சிரமமாக உள்ளது.
 • இனங்களுக்கிடையில் இணக்கப்பாடுகளை உருவாவதை நோர்வே விரும்புகிறது என்று நோர்வே அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கிறது.
 • வாழ வழியின்றி தற்கொலை செய்துகொள்ளும், உடல் அவயவங்களை விற்று வாழும், தொழிவாளர் என்னும் போர்வையில் தெற்கில் அடிமைகளாக பணிபுரியும், விபச்சாரத்திறகு தள்ளப்படும் முன்னாள் போராளிகளுக்கு மற்றும் எமது விளிம்புநிலை மக்களுக்கு உதவும் கடமை எமக்கிருக்கிறது. இவர்களுக்கு நேரடியாக உதவும் வழிமுறைகளை இலங்கை அரசு கண்காணிப்பதால் எமது உதவிகளை பெரியளவில் செய்ய முடியாதுள்ளது.  வெளிநாடுகளின் உதவியுடனேயே நாம் இவற்றை ஓரளவாவது நிவர்த்தி செய்யலாம். ‌ வெளிநாடுகள் என்னும் போது அதற்குள் நோர்வேயும் அடங்குகிறதல்லவா.
இந்நிலையில் நோர்வே அரசுக்கு சங்கடமான நிலையை ஏற்படுத்துவது ராஜதந்திரமானதா?

மேற்கூறிய கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

தமிழர்களின் அமைப்பாக தம்மை அடையாளப்படுத்தும் NCET அமைப்பின் முக்கிய உறுப்பினர் அம் முத்திரையை வெளியிட்டார் என்பதை நோர்வே அரசு அறிந்து கொள்ள அதிக நேரம் எடுத்திருக்காது.  அது எவ்வகையான எண்ணத்தை நோர்வே அரசிடம் ஏற்படுத்தும்? தவிர எமக்கெதிரானவர்கள் இதை தமக்குச் சாதகமாகப் பாவித்துக்கொள்ளவும் சந்தர்ப்பத்தை நாம் வழங்குகிறோம்? இவை எமக்குச் சாதகமானவையா?

NCET இதுரை அம் முத்திரையை தாம் வெளியிடவில்லை என்று இன்று வரை அறிவிக்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுகிறேன். வேறு இணையத்தளங்களிலும் எவ்வித மறுப்பறிக்கைகளும் காணப்படவில்லை.

தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் செய்யும் இப்படியான செய்கைகள் நோர்வே வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல மிக முக்கியமாக இலங்கையிலுள்ள எமது உறவுகளையும் பலமாக பாதிக்கும் என்பதை நாம் இந்த முத்திரை விடயத்தினூடாக அறிந்து கொள்ளலாம். நாம் இனியாவது சற்று ராஜதந்திரமாக செயற்பட கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து.

விடுதலைப்புலிகளின் தோல்விக்கு அவர்களின் ராஜதந்திரமற்ற நடவடிக்கைகளே காரணம் என்னும் கருத்து இருப்பதை நான் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.

இராஜதந்திரம் பற்றி "போ பென்னட்" இப்படிக் கூறுகிறார்.

இராஜ தந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் விட மேலானது மட்டுமல்ல; எந்த நேரத்திலும் பிழையான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் தவிர்ப்பதுமாகும். 

இந்த முத்திரை விடயம் பற்றி நோர்வே தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் வாய் மூடியிருப்பது ஏன்? அவர்களும் இப்படியான தீர்க்கசிந்தனையற்ற செயல்களை ஆதரிக்கிறார்களா? தனிப்பட்ட பலர் இது முட்டாள்தனமான சிறுபிள்ளைச் செயல் என்றே கூறுகிறார்கள்.

முத்திரை வெளியீட்டால் என்ன நன்மையை நாம் அடைந்து விட்டோம் எனப் பார்ப்போம்?

எனது பார்வையில் நன்மை ஏதுமில்லை, பாதகமான, விரும்பத்தகாத சம்பவங்களே தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இந்த முத்திரை வெளியீட்டினால் எமக்கு ஏதாவது பிரயோசனம் கிடைத்திருக்கிறதா? தெரிந்தால் அறியத்தாருங்கள் உள்வாங்கிக் கொள்கிறேன்.


நோர்வேயின் முத்திரை வெளியிடும் விதிகளை மீறியே இந்த முத்திரை வெளியிடப்பட்டிருக்கிறது. எமக்கு புகலிடம் தந்த நாட்டின் விதிகளை மீறி நாம் நடந்தததானால், நோர்வே, தமிழர்களுக்கு அநீதியிழைக்கும் உரிமைகளை மறுக்கும் ஒரு நாட்டிடம் ஒரு சில தமிழர்களின் தவறுக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறது.

சிறந்த வெளிநாட்டுப் பிர‌ஜைகள் என்று குறிப்பிடப்படும் நாம், இப்படியா நடந்து கொள்வது? இது பெருமைக்குரிய செயலா?

உண்மையில் நோர்வே நமது நாடு என்று நாம் கருதுவோமெனில் .....தமிழர்களாகிய நாம் தான் சிறிலங்காவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறோம் என்றே கொள்ளவேண்டும்.

தவிர அம்முத்திரை தற்போது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அச் செய்தி பெரிதாக உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நாம் வாழும் நாடு இலங்கையிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.

தலைவரின் படத்துடன் முத்திரை வெளிவந்து அது உலகறிய தடைசெய்யப்படுவது அவருக்கு நாம் செய்யும் இழுக்கு என்றே நான் இப்போதும் கருதுகிறேன். மாசி மாதம் 4ம் திகதி தமிழர்களின் பூவான கார்த்திகைப் பூ அல்லது எமது அடையாளம் ஒன்று முத்திரையாக வெளிவந்து  தொடர்ந்தும் பல வருடங்கள் பதிப்பிலும், பாவிப்பிலும் இருப்பின் அது தடைசெய்யப்பட்ட முத்திரையை விட பல மடங்கு பலனை பல காலம் தொடர்ந்து தந்திருக்கும் இல்லையா?

தனது படத்துடனான முத்திரை வெளியீட்டினால் இப்படியான விளைவுகள் ஏற்படுவதையா பிரபாகரன் விரும்பியிருப்பார்? 

இச் செயலைப் புரிந்தவர்கள்,  அவர்களின் ”தலைவரின் பெயருக்கும்” களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.

விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பவர்கள் பிரபாகரனுக்கு காட்டும் மரியாதை இது தானா? என்னும் கேள்வியுடன் எனது பதிவை முடிக்கிறேன்.

பி.கு:
உரையாடல் ரீதியில் அல்லது தர்க்க ரீதியில் பின்னூட்டமிடுபவர்களுக்கு மட்டுமே பதிலளிக்கப்படும்.

இன்னொரு மனிதனின் தனிமை

அண்மையில் ஒர் நாள் முகப்புத்தகத்தில் அலைந்துகொண்டிருந்த போது மனம் இலகுவாய் இருப்பது போல உணர்திருந்தேன். சில நண்பர்கள் வந்து உரையாடிப் போயினர். சிலர் மௌனமாயிருந்தனர். மற்றும் பலர் முகப்புத்தக வாழ்வினை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

எனக்கு நெருங்கிய நண்பரொருவரின் மூலம் அறிமுகமான ஒருவர் எனது முகப்புத்தக நட்பு வட்டத்திலிருக்கிறார். அவருடன் நான் சில நாட்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளேன். இலங்கைக்குச் சென்றிருந்த நாட்களில் ஒரு முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.

மிகவும் கலகலப்பானவர். முற்போக்குச் சிந்தனையுள்ளவர், மும் மொழிகளிலும் திறமைமிக்கவர். பல நண்பர்கள் இருந்தனர் அவருக்கு. எனினும் வயது 35 நெருங்கியும் திருமணம் செய்யாது தாய் தந்தையருடன் வாழ்ந்திருந்தார். தகப்பனாருடன் அவருக்கு மிக நெருங்கிய உறவிருந்தது. நெருங்கிய நண்பர்கள் போன்றே இருவரும் பழகினர்.

திடீர் என்று அவரின் தந்தை நோய்வாய்ப்பட்டு சில மாதங்களின் பின் இறந்துபோனார். தந்தையின் இழப்பு அவரை மிகவும் பாதித்தது. அவரின் சகோதர சகோதரிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தார்கள். தந்தையாரின் மறைவின் பின் மிகுந்த மன அழுத்தத்ததற்கு உட்பட்டிருந்த நாட்களில் என்னுடன் முகப்புத்தகத்தினூடாக உரையாடுவார். அவரினால் தந்தையின் இழப்பை தாங்க முடியாதிருந்தது. அதே வேளை அவர் பலத்த மன அழுத்த்துக்கும் உட்பட்டார்.

இவை நடந்து சில மாதங்களுக்குள் அவரின் தாயாருக்கு புற்றுநோய் இருப்பதாக வைத்தியர்கள் கூறியபோது நண்பர் முழுவதுமாக இடிந்து போனார். இது நடந்து ஏறக்குறைய 10 - 12 மாதங்களிருக்கும்.

மேற் குறிப்பிட்ட நண்பர் இன்று நான் முகப்புத்தகத்தில் குந்தியிருந்த போது ”ஹாய்” என்று சம்பாஷனையைத் தொடங்கினார். நான் அவரின் தாயாரின் நிலையை கேள்விப்பட்டிருந்ததால் அது பற்றிப் பேசாமல் இருப்போம் என்றே நினைத்திருந்தேன்.  ஆனால் அவரின் இரண்டாவது வரியில் தனக்கு பயமாக இருக்கிறது என்ற போது எதற்கு என்று தெரிந்திருந்தாலும் சம்பிரதாயத்திற்காக எதற்கு என்று கேட்டேன்.

தாயாரின் புற்றுநோய் மிகவும் வீரியமாக இருப்பதால் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்றார். தாய் தந்தையர் இருவரையும் இழந்து தனித்து வாழப்போகும் காலத்தைப் பற்றி அவர் மிகவும் கவலைகொண்டிருந்தார். அவர் திருமணமாகாதவர் என்பதாலும், தனித்து வாழ்வதால் ஏற்படப்போகும் சிக்கல்கள் அவரை பயமுறுத்துவதாகச் சொன்னார். அண்மைக் காலங்களில் எதிர்கால வாழ்வினை உறுதிசெய்யக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டும், தன்னை எதையும் தாங்கும் நிலைக்கு தயார்படுத்திக்கொண்டிருந்திருந்தாலும் நிட்சயமற்ற மனநிலையில் அவர் இருந்தார்.

நானும் உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை என்றும், வாழ்வினை துணிவோடு எதிர்கொள்ளுமாறும், எதற்கும் தயாராகவிருக்குமாறும் கூறிய போது சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

தொடர்ந்த எமது சம்பாஷனையில் அவர் ஒரு சிறு குழந்தையைப் போல் தனியே வாழும் நாட்களையிட்டு அஞ்சுவது புரிந்தது. நம்பிக்கையானவர்களின் அருகாமை இல்லாது போகும் போது, பாதுகாப்பான எண்ணங்களும் எம்மைவிட்டு மெல்ல மெல்ல ஊர்நது வெளியேறுவதால் அவ்வெற்றிடங்களை பயம் கைப்பற்றிக்கொள்கிறது. இப்பயமே வாழ்வின் மீதான பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறது.

இப்படியான நிலைகளை நானும் பல தடவைகள் கடந்திருக்கிறேன். அடர்ந்த பெரும் காட்டின் நடுவே, அல்லது வெட்ட வெளியின் நடுவே தனியே நிற்பது போன்றது அவ்வுணர்வு. ஒரு நிர்க்கதியான நிலையை உணர்த்திப்போகும் உணர்வு அது. நாமாகவே சுதாரித்துக் கொள்ளாவிட்டால் சுயபரிதாபம் நம்மை மூச்சடைக்கச் செய்துவிடும். அதன் பி்ன் அதிலிருந்து மீ்ள்வது கடினமாகிவிடும். உற்ற நண்பர்களின் துணையுடனேயே நான் அக்காலங்களைக் கடந்துகொண்டேன்.

எனது அனுபவங்களைக் கூறியபடியே அவருடன்  பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு நான் கூறுவது புரிந்திருந்தாலும் அவர் மனம் சமாதானமடையவில்லை. சிறு குழந்தையைப் போல் பயந்திருந்தார். இலங்கை வந்தால் தன்னை வந்து பார்ப்பேனா என்று கேட்ட போது அவரின் தனிமையின் பயமும், சோகமும் புரிந்தது எனக்கு. நிட்சயமாக உங்களை சந்திப்பேன் என்று கூறினேன். எனினும் அவர் சமாதானமடைந்ததாய் இல்லை.

தனிமையின் பாரத்தை நான் நன்கு அறிவேன். தனிமையுடனேயே எனது காலங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. எனது வாழ்வில் தனிமையுடன் நான் சமரசமாகிவிட்டேன் என்றே நினைக்கத்தோன்றுகிறது. இருப்பினும் மனதின் ஒரு மூலையில் தனிமை பற்றிய ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை நான் மறைப்பதற்கில்லை. ஒரேநேரத்தில் நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கக் கூடியது தனிமை.

ஓரளவாவது வாழ்க்கையின் சுட்சுமங்களை, மேடு பள்ளங்களை அறிந்துகொண்டு நானே ஒருவித பயத்தை உணர்கிறேன் என்றால், வாழ்வு பற்றிய பலத்த அனுபவமில்லாத அவரின் திண்டாட்டங்களை, தடுமாற்றங்களை புரிந்து கொள்வதொன்றும் பெரியவிடமன்று என்றே நினைக்கிறேன், உணர்கிறேன். எது எப்படியெனினும் அவரவர் பாரத்தை அவரவரே சுமந்து, நடந்து, இறக்கிவைக்கவேண்டும். நாம் பேச்சுத்துணையாகவே அருகில் நடந்து செல்லலாம். அவரின் பாரத்தை சுமக்கமுடியாதல்லவா?

முடியுமானவரை அவரைஆறுதல்படுத்தியபின் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டேன். ஆனால் அவர் பற்றிய சிந்தனையில் இருந்து விடைபெற்றுக்கொள்ள முடியவில்லை, இன்னும். 
 
மனித வாழ்வின் விசித்திரங்கள் சிறிது சிறிதாக மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு ஆழமான, வீரீயமான, பாதிப்புக்களை ஏற்படுத்திப் போகிறது என்பதை நண்பரின் கதையும் நிறுவிப்போகிறது.

”தனிமை” என்னும் சொல் தந்து போகும் அனுபவங்கள் மிகவும் கொடியவை, எந்த மனிதனையும் அவை ஆட்டிப்போடும் வல்லமை கொண்டவை என்பதை நான் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

வாழ்வின் இறுதியில், இந்த தனிமையை நாம் வென்றோமா அல்லது  தனிமையிடம் தோற்றோமா என்பதில் மகிழ்ச்சியில்லை. வாழ்வினை திறம்பட வாழ்ந்தோமா என்பதிலேயே மகிழ்ச்சி தந்கியிருக்கிறது.

வாழ்வினை திறம்பட வாழ்வது என்றால் என்ன?  தெரிந்தால் கூறுங்கள். அது பற்றி அறிந்துகொள்ளும்  அவா தினமும் அதிகரித்துப் போகிறது.... தெளிவான பதில் கிடைக்காததனால்.

இன்றை நாளும் நல்லதே.

மனிதத்தை மீட்டுத்தரும் உரையாடல்கள்

மனிதர்களுடன் பேசுவது என்பது நினைப்பதைப் போன்று இலகுவானதன்று என்பதை இப்போது உணரக்கூடியதாகவிருக்கின்றது. உரையாடல் என்பது ஒரு பெரும் கலை.

திரும்பிப் பார்க்கும் போது சில மனிதர்களுடனான எனது பேச்சுவார்த்தைகள் மனக்கசப்புகளுடன், பிரிவுகளுடன், கைகலப்புடன், எதிரி என்றான நிலைகளுடன் முடிவந்திருக்கின்றன. இப்போதெல்லாம் முன்பைப் போலல்லாது என் மனது கடந்து வந்த பாதைகளில் எங்கெங்கே தவறு விட்டேன், தவறுக்கான காரணம் என்ன, எப்படி அச் சிக்கலைத் தவிர்த்திருக்கலாம் என்று சிந்திக்கிறது.

முன்பெல்லாம் பொதுவேலைகள், விளையாட்டுகள், சங்கங்கள், என்று கூடல்கள் என்று ஓடித்திரிந்த காலங்களில் பல உரையாடல்களை நான் உரையாடலாகக் கொள்ளாமல் விவாதமாக - தர்க்கமாக மாற்றிக் கொண்டதனால் நட்புகளை மட்டுமல்லாமல் எனது நிம்மதியையும் இழக்க நேர்ந்தது என்பதை இந்நாட்களில் புரிந்து கொள்ளக்கூடியதாக இருக்கிறது. இப்போதும் கூட நான் உரையாடலுக்கும் விவாதத்துக்குமான முழுமையான இடைவெளியை புரிந்து கொண்டேனா என்று என்றால் இல்லை என்பதே எனது பதிலாகவும் இருக்கிறது. ஆனால் அவையிரண்டுக்கும் மிகப் பெரிய இடைவெளியுண்டு என்பதை உணர்ந்திருக்கிறேன். உரையாடும் கலையை கற்றுக்கொள்ளும் ஆர்வமும் வந்திருக்கிறது இந் நாட்களில்.


உரையாடுவதால் மட்டுமே மற்றைய மனிதர்களை எம்மால் புரிந்துகொள்ளமுடியும் என்பது மெல்ல மெல்ல புரிந்திருக்கிறது.

உரையாடலுக்கும், வாதம் - தர்க்கம் என்பவற்றிற்கான வேறுபாடுகளை நாம் அறிவதன் முலமே அவற்றிற்கிடையிலான வேறுபாட்டையும், மனித வாழ்வில் உரையாடலின் முக்கியத்துவத்தையும் உணரலாம்.

முதலில் வாதம் - தர்க்கம் செய்யும் போது நாம் எவ்வகையான நோக்கங்களைக் கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம்
 • எமது கருத்து சரியானது என்பதை நிலைநாட்ட முயற்சிக்கிறோம்.
 • அதற்கான காரணங்களைக் கூறி விவாதிக்கிறோம்.
 • எதிராளியிடம் கருத்தில் உள்ள பலவீனங்களைத் தேடுகிறோம்.
 • எதிராளி தனது கொள்கையில் கொண்டுள்ள நம்பிக்கையை தகர்க்க முயற்சிக்கிறோம்.
 • அவர் தனது கருத்தை மாற்றிக் கொண்டால் அவர் பலவீனப்படுகிறார் எனக்கொள்கிறோம்.
 • எமது உடல் மொழி (body lanquage) மூலமாயும் ஆதிக்கக்கம் செலுத்துகிறோம். (கை காலை ஆட்டி ஆர்ப்பாட்டமாய் பேசுதல்).
உரையாடல் செய்யும் போது நாம் எவ்வகையான நோக்கங்களைக் கொண்டிருக்கிறோம் என்று பார்ப்போம்.
 • எமது கருத்தினை விளங்கப்படுத்துவதன் மூலம் புரியவைக்க முயற்சிக்கிறோம்.
 • எம்முடன் பேசுபவரின் கருத்தை நிதானத்துடன் உள்வாங்கிக் கிரகிக்கிறோம்.
 • பேசுபவரிடம் உள்ள சிறப்புக்களை, திறமைகளை அவதானிக்கிறோம்.
 • பேசுபவர் எம்முடன் பேசும்போது அவருக்கு பாதுகாப்பான ஒரு உணர்வை ஏற்படுத்துகிறோம்.
 • பேசுபவர் தனது கருத்தை மாற்றிக்கொண்டால் அதை ‌அவரின் உயர்ந்த பண்பாகக் கொள்கிறோம்.
 • எமது உடல் மொழி (body lanquage) மிகவும் இனிமையானதாக, மற்றவருக்கு ஆறுதல் தருவதாக இருக்கும்படியாக நடந்துகொள்கிறோம் (ஆர்ப்பாட்டமில்லாத அமைதியான உடல்மொழி)
மேற் கூறிய இரண்டு மொழியாடல்களின் தன்மையையும் நாம் பார்க்கும் போது நமக்கு இவை இரண்டும், இரு வேறு திசைகளில் பயணிப்பதை அறியக்கூடியதாய் இருக்கிறது.
நான் விவாதம் - தர்க்கம் தவறு என்று கூறவில்லை. அதற்குரிய சந்தர்ப்பங்களில் அவற்றை நாம் நாடலாம். மனிதர்கள் சக மனிதனை புரிந்துகொள்ள முயலும் போது தர்க்கம், விவாதங்களை விட உரையாடலே அவர்களுக்கிடையில் புரிந்துணர்வை அதிகரிக்கிறது.
எஞ்சியிருக்கும் எனது வாழ்நாளில் உரையாடலுக்கே அதிகநேரம் செலவிட விரும்புகிறேன். வாதம் - தர்க்கம் புரிந்து அலுத்துவிட்டது. அதனால் எஞ்சியிருக்கும் வெற்றிகளை விட தோல்விகளும், ஏமாற்றங்களுமே அதிகம்.
நாம் ஒருவருடன் உரையாடும் போது உரையாடுபவர்களிடம் இருந்து என்ன எதிர்பார்க்கப்படுகிறது என்று நோக்குவோமானால் ஒரு உரையாடலை மேற்கொள்பவாகள் ஒரே கருத்துள்ளவர்களாக இருக்கவேண்டியதில்லை. ஆனால் அவர்களுக்கிடையில் சமத்துவம் இருக்கவேண்டும். இச் சமத்துவத்தின் மூலமாக பலவீனமானபவர்களும் அவர்களின் கருத்தை முன்வைக்கும் சந்தர்ப்பம் கிடைக்கும் அதே நேரத்தில் உரையாடல் ஒன்றில் அதிக ஆதிக்கம் செலுத்துபவரின் வாதம் செய்யும் தன்மை அற்றுப்போகிறது.

எவ்வாறு நாம் ஒரு உரையாடலை உருவாக்கலாம்?
 • மற்றவரின் கருத்தை மிக அவதானமாகக் கேளுங்கள். ஒரு உரையாடலுக்கு ”கேட்டல்” என்பது இன்றியமையாதது. ஒருவரை புரிந்து கொள்வதற்கு மிக அவதானத்துடனான, புரிதலுடனான ”கேட்டல்” முக்கியமானது. 
 • எவரையும் உங்களை புரிந்து கொள்ளும்படி திணிக்காதீர்கள். உரையாடலின் நோக்கம் உரையாடுபவரின் கருத்தை மாற்றியமைப்பதல்ல. உரையாடலில் திணிப்பு என்பதற்கு இடமில்லை. உரையாடலானது கேட்டல், உணர்தல், மற்றவரின் கருத்தை நான் புரிதல் ஆகியவற்றையே அடிப்படையாகக் கொண்டது. உங்களால் மற்றவர்களை உங்கள் கருத்துகளின் மூலமானக மாற்றமுடியாது போகலாம். ஆனால் உரையாடலின் மூலம் உங்கள் கருத்தை மற்றவர்கள் அவதானிக்கும்படி செய்யலாம்.
 • விமர்சனமின்றி  மற்றவரின் கருத்துக்களை ஏற்றுக்கொள்ளாதீர்கள். புரியாத விடையங்களை கேள்விகளின் மூலமாக தெளிவுபெற முயலுங்கள்.
 • ஒரு வளமான உரையாடலானது அவ்வுரையாடலில் பங்கு பெறுபவர்களின் மனத் துணிச்சலிலேயே தங்கியிருக்கிறது. தனக்கும் மற்றவருக்கும் உண்மையாகவும், திறந்த மனப்பான்மையுடனும் இருப்பவர்களால் சிறந்த உரையாடல்களை நாடாத்திக்கொள்ள முடிகிறது.
நான் எப்போதாவது சிறந்த உரையாடல் ஒன்றை நடாத்தியிருக்கிறேனா என்று என்னை நான் அண்மையில் கேட்டுக் கொண்டேன். முற்றிலும் இல்லை என்று கூறமுடியாது. இருப்பினும் இன்னும் சிறந்த முறையில் அவ்வுரையாடல்களை நான் நடாத்தியிருக்கலாம் என்பதை உணர்ந்து கொண்டேன். அதனூடாக பல மனித மனங்களை வென்றிருந்திருக்கலாம்.

தவிர இப்படியான சிந்தனைகள் தோன்றும் போது வாழ்வின் அனுபவங்களே அவற்றை கற்பித்துப்போகின்றன என்பதும் புரிகிறது. தவிர இடையிடையே எனக்குக் கிடைத்த பயிற்சிப்பட்டறைகளும், வாசிப்பும், சம்பாசனைகளும், வாழ்வினைப் புரிந்த மனிதர்களின் அறிவுரைகளும் பலதையும் போதித்துப் போகின்றன.

இந்த உரையாடல் பற்றிய ஞானம் எனக்கு அண்மையில் கிடைத்த அனுபவமே.

இன்றைய நாளும் நல்லதே!


குளிர்காலத்து நாட்கள்

இன்று மனுஷ்ய புத்திரனின் அதீதத்தின் ருசி வாசிக்கத்தொடங்கி‌னேன். முன்னுரையில் அவர் குளிர் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். ” கோடைக்கால இரவுகள் நம்மை பரந்த வெளியை நோக்கிச் செலுத்துகின்றன என்றால் இந்தக் குளிர் இரவுகள் நம்மை நம் நினைவுகளின் இதயத்தை நோக்கி திருப்புகின்றன”. இவ் வரிகளை வாசித்ததும் சில நிமிடங்கள் குளிர் பற்றியே சிந்திததுக் கொண்டிருந்தேன். 

மனுஷ்ய புத்திரன் கூறுவது போன்று கோடைகால இரவுகளில் மனம் ஏகாந்தமாய் வெளியே அலைந்து கொண்டிருக்கும். குளிர் கால இரவுகள் சிந்தனையை தூண்டுவதாயும், தனிமையை உணர்த்துவதாயும் இருக்கின்றன. குளிர் நாடொன்றிற்கு இடம் பெயர்ந்த பின்னாலேயே கோடையின் அருமை புரிந்தது. கோடையின் வெம்மை தாங்கமுடியாத நேரங்களில் குளிரின் அருமையும் புரிகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இவ்விடத்திலும் உண்மையாகவே இருக்கிறது.

பனிக்காலங்களில் நிலம் கல்போல் இறுகிப்போகிறது. மணல் கூட கல் போலாகிவிடுகிறது. கோடைக்காலங்கள் இதற்கு எதிர்மாறானவை. குளிர்காலங்களில் நானும் மனதளவில் இறுகிப் போய்விடுகிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு. கோடைக்காலங்களில் வந்தமரும் புன்னகையைக் கூட வலிந்தழைத்து இருத்தவேண்டியிருக்கிறது, பனிக்காலங்களில். மனதும் இலகுவாய் இருப்பதில்லை. பனிக்காலங்களில் நாள் பல மணிநேரங்கள் படர்ந்திருக்கும் இருட்டும்  இதற்கு ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். இந்த இருளான பனிக்காலங்களில் பலர் பலத்த மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

கோடையில் மனம் கவரும் காட்சிகளைக் கண்டால் நின்று, ரசித்து, அனுபவித்துப் போவேன்.  ஆனால் பனிக்காலத்தில் மனம், சுற்றாடலில் கவனமற்று சென்றடைய வேண்டிய இலக்கு நோக்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும். மற்றையவர்களும் குளிருக்குப் பயந்து ஓடுபவர்கள் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மட்டும் எப்போதும் போல குளிரைப் பற்றிய எதுவித சிந்தனைகளும் இன்றி தமது குதூகல உலகில் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

இலையுதிர்ந்து காய்ந்து போயிருக்கும் மரங்கள், பூக்காத பூமரங்கள், காணாமல் போய் விட்ட குருவிகள், மௌனித்துப் போன மனிதர்கள் என்று குளிர் ஊரையே அமுக்கிப்போடுகிறது, பனிக்காலங்களில். அதற்காக மகிழ்ச்சியான சம்பவங்களோ, மனிதர்களோ இல்லை என்பது தவறு. பனிக்காலத்தை காதலிப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்னால் அவர்களைப்போல் தற்போது குளிர்காலத்தை கடந்து போக முடியாதிருக்கிறது.

குளிருடனான எனது முதல் அனுபவம் மிகவும் கொடியது. நோர்வே வந்து இரண்டாவது நாள் வெப்பநிலை - 40 என்று காட்டிக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் +40 இல் இருந்து இடம் பெயர்ந்திருந்தேன். நான் நின்றால் குளிர்ந்தது. இருந்தால் குளிர்ந்தது. படுத்தால் குளிர்ந்தது. என்ன செய்தாலும் குளிர்ந்தது. 

அந் நாட்களில் குளியல் மற்றும் கழிப்பறையிலேயே நாம் ஐவர் ஒன்றாய்த் தூங்கினோம். அங்கு மட்டும் தான் தேவையான அளவு வெப்பம் ஹீட்டர் மூலம் கிடைத்தது, தவிர அங்கு நிலத்திலும் ஹீட்டர் இருந்தது. அந்த ஆரம்ப நாட்களின் பின் நான் குளிருடன் மிகவும் நட்பாகிப்போனேன்.

அந் நாட்களில் சிலி நாட்டு மனிதர் ஒருவர் நட்பானார். அவரும் அகதி, நானும் அகதி. நாம் பேசிக்கொள்வதற்கு மொழி இருக்கவில்லை. அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு லத்தீன் தெரியாது. எனக்கு தெரிந்திரிருந்த கொஞ்சநஞ்ச ஆங்கிலமும் அவருக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ பேசிக்கொண்டோம். அவர் தான் குளிருடன் என்னை நட்பாக்கினார். 

தினமும் காலை உணவு முடிந்ததும் மதிய உணவுக்கு காத்திருப்பது, அதன் பின்பு மாலையுணவுக்கு காத்திருப்பது என்பது தான் எமக்கு இருந்த வேலை. சிலர் இவ்வுணவு இடைவேளைகளில் தூங்கி எழுந்தனர். சிலர் சீட்டுக்கட்டுடன் அலைந்தனர். சிலர் பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்த்தனர்.

ஒரு நாள் என்னை அந்த சிலி நாட்டு நண்பர் நடந்து போய் வருவோம் என விரலால் நடப்பது போல சைகைகாட்டி அழைத்தார். அன்று ஏறத்தாள 1 மணிநேரம் நடந்தோம். ஆளையாள் அடிக்கடி பார்த்துச் சிரித்துக்கொண்டோம். தண்ணீர் தாகமெடுத்த போது  வெள்ளை மா போன்றிருந்த உறைபனியை வாய்குள் போட்டுக்கொண்டேன். காலப்போக்கில் எமது நடைப்பயணங்கள் 2, 3 மணி நேரமாக மாறிய போதும் எமக்குள் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அப்போதும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். அந்த நண்பர் பனிச்சறுக்குதலிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். அவரிடம் பனிச்சறுக்கு பழகிய முதல் நாள் நான் நிமிர்ந்து நின்ற நேரத்தை விட விழுந்து கிடந்த நேரமே அதிகமாயிருந்தது. ஆனால் குளிரை மறந்திருந்தேன்.

வடக்கு நோர்வேயில் கல்விகற்றிருந்த நாட்களில் தொடர்ந்து 5 நாட்கள் பனியிலேயே கூடாரமடித்து தங்கியிருக்க நேர்ந்தது. அப்போதும் குளிர் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

எனக்குக் குழந்தைகள் என்றாகிய பின் எனது குழ‌ந்தைகள் காவியாயுடனும், அட்சயாவுடனும் பனிக்காலங்களில் பல மணி‌நேரம் குளிருக்குள் நின்றபடியே விளையாடியிருக்கிறேன். அந் நாட்களில் குளிர் அழகாயிருப்பது போலிருந்தது.

இப்போ நோர்வே வந்து 25 வருடங்களின் பின்பும் குளிரை நான் வெறுக்கவில்லை. ஆனால் முன்பு போல ரசிக்கும் தன்மை சற்றே குறைந்திருக்கிறது. வயது தான் காரணமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

குளிரின் போதுதான்  வெம்மையின் சுகம், கம்பளியின் அருமை, பானத்தின் இதம், உடல்களின் ஸ்பரிசம், தேனீரின் சுவை, நெருப்பின் அருகாமை என்பனவற்றின் அருமை புரிகிறது.

இதை எழுதிக்கொண்டிருக்கிறேன், நேரம் நள்ளிரவினைக் கடந்திருக்கிறது. ஒஸ்லோவின் காலநிலை   -14 என்று இணைத்தளமொன்று கூறுகிறது.

நாளைய நா‌ளுக்கு தேவையான கம்பளியினாலான காலுறை, குளிரைத் தாங்கும் உள்ளுடுப்புக்கள், கையுறை, குளிர் தாங்கும் மேலாடை, அதற்கு மேல் அணியும் இன்னொரு மேலாடை, நீளக் காட்சட்டை, கழுத்தைச் சுற்றும் கம்பளிச் சால்வை, ஜக்கட், கம்பளியினாலான தொப்பி, பனிக்காலத்துச் சப்பாத்து ஆகியன கண்ணில் படுகின்றனவா என்று பார்க்கிறேன். மனது நிம்மதியடைகிறது. மின் விளக்கினை அணைத்த பின் அட்சயா தந்த கரடிப்பொம்மையை எடுத்தணைத்துக் கொள்வேன். நினைவுகளும் குளிரை மறக்கவைத்துப் போகும் என்பதனையும் அறிந்திருக்கிறேன்

இன்றைய இரவு எல்லோருக்கும் அழகானதாயிருக்கட்டும்.

இன்றைய நாளும் நல்லதே