இன்னொரு மனிதனின் தனிமை

அண்மையில் ஒர் நாள் முகப்புத்தகத்தில் அலைந்துகொண்டிருந்த போது மனம் இலகுவாய் இருப்பது போல உணர்திருந்தேன். சில நண்பர்கள் வந்து உரையாடிப் போயினர். சிலர் மௌனமாயிருந்தனர். மற்றும் பலர் முகப்புத்தக வாழ்வினை வாழ்ந்துகொண்டிருந்தனர்.

எனக்கு நெருங்கிய நண்பரொருவரின் மூலம் அறிமுகமான ஒருவர் எனது முகப்புத்தக நட்பு வட்டத்திலிருக்கிறார். அவருடன் நான் சில நாட்கள் தொலைபேசியில் உரையாடியுள்ளேன். இலங்கைக்குச் சென்றிருந்த நாட்களில் ஒரு முறை அவரைச் சந்தித்திருக்கிறேன்.

மிகவும் கலகலப்பானவர். முற்போக்குச் சிந்தனையுள்ளவர், மும் மொழிகளிலும் திறமைமிக்கவர். பல நண்பர்கள் இருந்தனர் அவருக்கு. எனினும் வயது 35 நெருங்கியும் திருமணம் செய்யாது தாய் தந்தையருடன் வாழ்ந்திருந்தார். தகப்பனாருடன் அவருக்கு மிக நெருங்கிய உறவிருந்தது. நெருங்கிய நண்பர்கள் போன்றே இருவரும் பழகினர்.

திடீர் என்று அவரின் தந்தை நோய்வாய்ப்பட்டு சில மாதங்களின் பின் இறந்துபோனார். தந்தையின் இழப்பு அவரை மிகவும் பாதித்தது. அவரின் சகோதர சகோதரிகள் அனைவரும் வெளிநாடுகளில் இருந்தார்கள். தந்தையாரின் மறைவின் பின் மிகுந்த மன அழுத்தத்ததற்கு உட்பட்டிருந்த நாட்களில் என்னுடன் முகப்புத்தகத்தினூடாக உரையாடுவார். அவரினால் தந்தையின் இழப்பை தாங்க முடியாதிருந்தது. அதே வேளை அவர் பலத்த மன அழுத்த்துக்கும் உட்பட்டார்.

இவை நடந்து சில மாதங்களுக்குள் அவரின் தாயாருக்கு புற்றுநோய் இருப்பதாக வைத்தியர்கள் கூறியபோது நண்பர் முழுவதுமாக இடிந்து போனார். இது நடந்து ஏறக்குறைய 10 - 12 மாதங்களிருக்கும்.

மேற் குறிப்பிட்ட நண்பர் இன்று நான் முகப்புத்தகத்தில் குந்தியிருந்த போது ”ஹாய்” என்று சம்பாஷனையைத் தொடங்கினார். நான் அவரின் தாயாரின் நிலையை கேள்விப்பட்டிருந்ததால் அது பற்றிப் பேசாமல் இருப்போம் என்றே நினைத்திருந்தேன்.  ஆனால் அவரின் இரண்டாவது வரியில் தனக்கு பயமாக இருக்கிறது என்ற போது எதற்கு என்று தெரிந்திருந்தாலும் சம்பிரதாயத்திற்காக எதற்கு என்று கேட்டேன்.

தாயாரின் புற்றுநோய் மிகவும் வீரியமாக இருப்பதால் எப்போதும் எதுவும் நடக்கலாம் என்றார். தாய் தந்தையர் இருவரையும் இழந்து தனித்து வாழப்போகும் காலத்தைப் பற்றி அவர் மிகவும் கவலைகொண்டிருந்தார். அவர் திருமணமாகாதவர் என்பதாலும், தனித்து வாழ்வதால் ஏற்படப்போகும் சிக்கல்கள் அவரை பயமுறுத்துவதாகச் சொன்னார். அண்மைக் காலங்களில் எதிர்கால வாழ்வினை உறுதிசெய்யக் கூடிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுக்கொண்டும், தன்னை எதையும் தாங்கும் நிலைக்கு தயார்படுத்திக்கொண்டிருந்திருந்தாலும் நிட்சயமற்ற மனநிலையில் அவர் இருந்தார்.

நானும் உலகில் எதுவும் நிரந்தரமானது இல்லை என்றும், வாழ்வினை துணிவோடு எதிர்கொள்ளுமாறும், எதற்கும் தயாராகவிருக்குமாறும் கூறிய போது சில நிமிடங்கள் மௌனமாக இருந்தார்.

தொடர்ந்த எமது சம்பாஷனையில் அவர் ஒரு சிறு குழந்தையைப் போல் தனியே வாழும் நாட்களையிட்டு அஞ்சுவது புரிந்தது. நம்பிக்கையானவர்களின் அருகாமை இல்லாது போகும் போது, பாதுகாப்பான எண்ணங்களும் எம்மைவிட்டு மெல்ல மெல்ல ஊர்நது வெளியேறுவதால் அவ்வெற்றிடங்களை பயம் கைப்பற்றிக்கொள்கிறது. இப்பயமே வாழ்வின் மீதான பாதுகாப்பற்ற நிலையை உருவாக்குகிறது.

இப்படியான நிலைகளை நானும் பல தடவைகள் கடந்திருக்கிறேன். அடர்ந்த பெரும் காட்டின் நடுவே, அல்லது வெட்ட வெளியின் நடுவே தனியே நிற்பது போன்றது அவ்வுணர்வு. ஒரு நிர்க்கதியான நிலையை உணர்த்திப்போகும் உணர்வு அது. நாமாகவே சுதாரித்துக் கொள்ளாவிட்டால் சுயபரிதாபம் நம்மை மூச்சடைக்கச் செய்துவிடும். அதன் பி்ன் அதிலிருந்து மீ்ள்வது கடினமாகிவிடும். உற்ற நண்பர்களின் துணையுடனேயே நான் அக்காலங்களைக் கடந்துகொண்டேன்.

எனது அனுபவங்களைக் கூறியபடியே அவருடன்  பேசிக்கொண்டிருந்தேன். அவருக்கு நான் கூறுவது புரிந்திருந்தாலும் அவர் மனம் சமாதானமடையவில்லை. சிறு குழந்தையைப் போல் பயந்திருந்தார். இலங்கை வந்தால் தன்னை வந்து பார்ப்பேனா என்று கேட்ட போது அவரின் தனிமையின் பயமும், சோகமும் புரிந்தது எனக்கு. நிட்சயமாக உங்களை சந்திப்பேன் என்று கூறினேன். எனினும் அவர் சமாதானமடைந்ததாய் இல்லை.

தனிமையின் பாரத்தை நான் நன்கு அறிவேன். தனிமையுடனேயே எனது காலங்கள் கழிந்து கொண்டிருக்கின்றன. எனது வாழ்வில் தனிமையுடன் நான் சமரசமாகிவிட்டேன் என்றே நினைக்கத்தோன்றுகிறது. இருப்பினும் மனதின் ஒரு மூலையில் தனிமை பற்றிய ஒரு பயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை நான் மறைப்பதற்கில்லை. ஒரேநேரத்தில் நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கக் கூடியது தனிமை.

ஓரளவாவது வாழ்க்கையின் சுட்சுமங்களை, மேடு பள்ளங்களை அறிந்துகொண்டு நானே ஒருவித பயத்தை உணர்கிறேன் என்றால், வாழ்வு பற்றிய பலத்த அனுபவமில்லாத அவரின் திண்டாட்டங்களை, தடுமாற்றங்களை புரிந்து கொள்வதொன்றும் பெரியவிடமன்று என்றே நினைக்கிறேன், உணர்கிறேன். எது எப்படியெனினும் அவரவர் பாரத்தை அவரவரே சுமந்து, நடந்து, இறக்கிவைக்கவேண்டும். நாம் பேச்சுத்துணையாகவே அருகில் நடந்து செல்லலாம். அவரின் பாரத்தை சுமக்கமுடியாதல்லவா?

முடியுமானவரை அவரைஆறுதல்படுத்தியபின் அவரிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டேன். ஆனால் அவர் பற்றிய சிந்தனையில் இருந்து விடைபெற்றுக்கொள்ள முடியவில்லை, இன்னும். 
 
மனித வாழ்வின் விசித்திரங்கள் சிறிது சிறிதாக மனிதர்களின் வாழ்வில் எவ்வளவு ஆழமான, வீரீயமான, பாதிப்புக்களை ஏற்படுத்திப் போகிறது என்பதை நண்பரின் கதையும் நிறுவிப்போகிறது.

”தனிமை” என்னும் சொல் தந்து போகும் அனுபவங்கள் மிகவும் கொடியவை, எந்த மனிதனையும் அவை ஆட்டிப்போடும் வல்லமை கொண்டவை என்பதை நான் மிகவும் தெளிவாகப் புரிந்துகொண்டிருக்கிறேன்.

வாழ்வின் இறுதியில், இந்த தனிமையை நாம் வென்றோமா அல்லது  தனிமையிடம் தோற்றோமா என்பதில் மகிழ்ச்சியில்லை. வாழ்வினை திறம்பட வாழ்ந்தோமா என்பதிலேயே மகிழ்ச்சி தந்கியிருக்கிறது.

வாழ்வினை திறம்பட வாழ்வது என்றால் என்ன?  தெரிந்தால் கூறுங்கள். அது பற்றி அறிந்துகொள்ளும்  அவா தினமும் அதிகரித்துப் போகிறது.... தெளிவான பதில் கிடைக்காததனால்.

இன்றை நாளும் நல்லதே.

2 comments:

  1. //ஒரேநேரத்தில் நண்பனாகவும், எதிரியாகவும் இருக்கக் கூடியது தனிமை//

    எவ்வளவு ஆழமான உண்மை.

    ReplyDelete
  2. தனிமையின் கொடூரம் அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும்.கொடுமை !

    ReplyDelete

பின்னூட்டங்கள்