எனது பதிவுலகம் எனது மனதின் எண்ணங்களை மட்டுமே பிரதிபலிக்கிறது. மனதில் தோன்றிய இப் பதிவின் உட்கருத்து, இன்றைய நோர்வே தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைகளையும், உணர்ச்சிவசப்பட்ட நிலையில் செயற்படும் சிலரையும் சற்றேனும் சிந்திக்கவைத்தால் மகிழ்வேன்.
மேலே போகு முன்:
குறிப்பிட்ட முத்திரை வெளியீடு பற்றி மட்டுமே நான் எழுதுகிறேன், கருத்துக் கூறுகிறேன்.
பின்னூட்டமிடுபவர்கள் இப் பதிவின் கருத்தினை மட்டுமே கவனத்திற்கொண்டு பின்னூட்டங்களை இடவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இப் பதிவு எனது முகப்புத்தகத்திலும் வெளியிடப்பட்டுள்ளது.
அண்மையில் nortamil.com மற்றும் ஏனைய தமிழ் இணையச் செய்திநிலையங்கள் வெளியிட்ட இவ் விடயம் பற்றிய செய்தியை வாசித்தவர்கள் NCET என்னும் தமிழர்களின் அமைப்பின் முக்கிய உறுப்பினர் ஒருவர் வேறு சிலருடன் சேர்ந்து நோர்வே பாராளுமன்றத்துக்கு முன் நின்றபடியே வெளியிடும் படத்தை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.
அம் முத்திரை வெளியீடானது அவரின் தனிப்பட்ட செயல் என்றும் அதற்கும் NCET க்கும் எவ்வித தொடர்புமில்லை என்று நாம் தற்போதைக்கு எடுத்துக்கொள்வோம்.
நான் இவ்விடயத்தில் NCET தவறிழைத்திருக்கிறது என்று கூறவில்லை என்பதை மேற்கொண்டு எழுத முன்பு அறியத்தருகிறேன்.
இருப்பினும் அவ்வமைப்பின் முக்கிய அங்கத்தவர்களின் ராஜதந்திரமற்ற நடவடிக்கைகள் எவ்வாறு அவ்வமைப்பையும், அவ்வமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களையும் பாதிக்கிறது என்பது பற்றியுமே கருத்துக் கூறவிரும்புகிறேன்.
நிற்க:
நோர்வே தமிழர் அமைப்புக்களுக்கும் நோர்வே அரசுக்குமான தொடர்பில் முன்பு இருந்ததைப் போன்ற சிறந்த, நெருக்கமான, ஆரோக்கியமான உறவு இல்லை என்பதனை இவ்விடயம் பற்றி சற்றேனும் தகவலறிந்தவர்கள் நன்கு அறிவார்கள். இது பற்றி நான் விளக்கிக்கூற வேண்டிய அவசியமில்லை.
அண்மையில் tamilnet.com இல் வந்த அறிக்கையும் NCET இன் நம்பகத்தன்மை பற்றி ஒரு வித குழப்பமான எண்ணத்தையே நோர்வே அரசுக்கு ஏற்படுத்தியிருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.
முக்கியமாக மேற்குறிப்பிடப்பட்ட அறிக்கையானது NCET இன் இணையத்தளத்தில் வெளியிடப்படவில்லை என்பதையும், தமிழில் வெளிவரவில்லை என்பதையும் இவ்விடத்தில் நான் குறிப்பிட விரும்புகிறேன். இதனால் இவ்வறிக்கை பற்றி பலரும் அறியாதிருக்கினறனர்.
ஏன் நோர்வே அரசுடன் தமிழர்களாகிய எமக்கு மிக நெருங்கிய ராஜதந்திர உறவுகள் அவசியமாகின்றன?
- நோர்வே தமிழர்களாகிய எமது கருத்துக்களை வெளிநாடுகளுடனும், இலங்கை அரசுடனும் பரிமாறும் ராஜதந்திர தொடர்புகளை நோர்வே அரசு மட்டுமே கொண்டிருக்கிறது. நோர்வே தமிழர்களாகிய எமக்கு நோர்வே அரசின் நெருங்கிய அனுசரனை தேவைக்கு அதிகமாகவே இருக்கிறது. (வேறு நாடுகளின் தொடர்புகள் பற்றி நான் பேசவில்லை)
- இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் அபிவிருத்தி உதவி மற்றும் பொருளாதார பரிமாற்றத் திட்டங்களை நோர்வே முன்னெடுத்துவருகிறது.
- நோர்வே வாழ் தமிழர்களின் உதவி வழங்கும் நிறுவனங்கள் நோர்வேயின் வெளிநாட்டு அபிவிருத்தி நிதியில் இருந்து தமது திட்டங்களுக்கு உதவிகள் பெறுகிறார்கள்.
- அண்மைக் காலங்களில் தமிழரின் உதவி நிறுவனங்கள் நோர்வேயிடம் இருந்து நிதியுதவி பெறுவது சிரமமாக உள்ளது.
- இனங்களுக்கிடையில் இணக்கப்பாடுகளை உருவாவதை நோர்வே விரும்புகிறது என்று நோர்வே அரசு வெளிப்படையாகவே கூறியிருக்கிறது.
- வாழ வழியின்றி தற்கொலை செய்துகொள்ளும், உடல் அவயவங்களை விற்று வாழும், தொழிவாளர் என்னும் போர்வையில் தெற்கில் அடிமைகளாக பணிபுரியும், விபச்சாரத்திறகு தள்ளப்படும் முன்னாள் போராளிகளுக்கு மற்றும் எமது விளிம்புநிலை மக்களுக்கு உதவும் கடமை எமக்கிருக்கிறது. இவர்களுக்கு நேரடியாக உதவும் வழிமுறைகளை இலங்கை அரசு கண்காணிப்பதால் எமது உதவிகளை பெரியளவில் செய்ய முடியாதுள்ளது. வெளிநாடுகளின் உதவியுடனேயே நாம் இவற்றை ஓரளவாவது நிவர்த்தி செய்யலாம். வெளிநாடுகள் என்னும் போது அதற்குள் நோர்வேயும் அடங்குகிறதல்லவா.
மேற்கூறிய கேள்விக்கான பதிலை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.
தமிழர்களின் அமைப்பாக தம்மை அடையாளப்படுத்தும் NCET அமைப்பின் முக்கிய உறுப்பினர் அம் முத்திரையை வெளியிட்டார் என்பதை நோர்வே அரசு அறிந்து கொள்ள அதிக நேரம் எடுத்திருக்காது. அது எவ்வகையான எண்ணத்தை நோர்வே அரசிடம் ஏற்படுத்தும்? தவிர எமக்கெதிரானவர்கள் இதை தமக்குச் சாதகமாகப் பாவித்துக்கொள்ளவும் சந்தர்ப்பத்தை நாம் வழங்குகிறோம்? இவை எமக்குச் சாதகமானவையா?
NCET இதுரை அம் முத்திரையை தாம் வெளியிடவில்லை என்று இன்று வரை அறிவிக்கவில்லை என்பதையும் இவ்விடத்தில் குறிப்பிடுகிறேன். வேறு இணையத்தளங்களிலும் எவ்வித மறுப்பறிக்கைகளும் காணப்படவில்லை.
தமிழ் மக்களின் பிரதிநிதிகள் தனிப்பட்ட முறையில் செய்யும் இப்படியான செய்கைகள் நோர்வே வாழ் தமிழர்களுக்கு மட்டுமல்ல மிக முக்கியமாக இலங்கையிலுள்ள எமது உறவுகளையும் பலமாக பாதிக்கும் என்பதை நாம் இந்த முத்திரை விடயத்தினூடாக அறிந்து கொள்ளலாம். நாம் இனியாவது சற்று ராஜதந்திரமாக செயற்பட கற்றுக்கொள்ளவேண்டும் என்பதே எனது கருத்து.
விடுதலைப்புலிகளின் தோல்விக்கு அவர்களின் ராஜதந்திரமற்ற நடவடிக்கைகளே காரணம் என்னும் கருத்து இருப்பதை நான் இவ்விடத்தில் நினைவூட்ட விரும்புகிறேன்.
இராஜதந்திரம் பற்றி "போ பென்னட்" இப்படிக் கூறுகிறார்.
இராஜ தந்திரம் என்பது சரியான நேரத்தில் சரியான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் விட மேலானது மட்டுமல்ல; எந்த நேரத்திலும் பிழையான விடயங்களை சொல்வதையும் செய்வதையும் தவிர்ப்பதுமாகும்.
இந்த முத்திரை விடயம் பற்றி நோர்வே தமிழர் அமைப்புக்கள் அனைத்தும் வாய் மூடியிருப்பது ஏன்? அவர்களும் இப்படியான தீர்க்கசிந்தனையற்ற செயல்களை ஆதரிக்கிறார்களா? தனிப்பட்ட பலர் இது முட்டாள்தனமான சிறுபிள்ளைச் செயல் என்றே கூறுகிறார்கள்.
முத்திரை வெளியீட்டால் என்ன நன்மையை நாம் அடைந்து விட்டோம் எனப் பார்ப்போம்?
எனது பார்வையில் நன்மை ஏதுமில்லை, பாதகமான, விரும்பத்தகாத சம்பவங்களே தமிழர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இந்த முத்திரை வெளியீட்டினால் எமக்கு ஏதாவது பிரயோசனம் கிடைத்திருக்கிறதா? தெரிந்தால் அறியத்தாருங்கள் உள்வாங்கிக் கொள்கிறேன்.
நோர்வேயின் முத்திரை வெளியிடும் விதிகளை மீறியே இந்த முத்திரை வெளியிடப்பட்டிருக்கிறது. எமக்கு புகலிடம் தந்த நாட்டின் விதிகளை மீறி நாம் நடந்தததானால், நோர்வே, தமிழர்களுக்கு அநீதியிழைக்கும் உரிமைகளை மறுக்கும் ஒரு நாட்டிடம் ஒரு சில தமிழர்களின் தவறுக்காக மன்னிப்புக் கோரியிருக்கிறது.
சிறந்த வெளிநாட்டுப் பிரஜைகள் என்று குறிப்பிடப்படும் நாம், இப்படியா நடந்து கொள்வது? இது பெருமைக்குரிய செயலா?
உண்மையில் நோர்வே நமது நாடு என்று நாம் கருதுவோமெனில் .....தமிழர்களாகிய நாம் தான் சிறிலங்காவிடம் மன்னிப்புக் கோரியிருக்கிறோம் என்றே கொள்ளவேண்டும்.
தவிர அம்முத்திரை தற்போது தடைசெய்யப்பட்டிருக்கிறது. அச் செய்தி பெரிதாக உலகம் முழுவதும் பரவியிருக்கிறது. நாம் வாழும் நாடு இலங்கையிடம் மன்னிப்புக் கேட்டிருக்கிறது.
தலைவரின் படத்துடன் முத்திரை வெளிவந்து அது உலகறிய தடைசெய்யப்படுவது அவருக்கு நாம் செய்யும் இழுக்கு என்றே நான் இப்போதும் கருதுகிறேன். மாசி மாதம் 4ம் திகதி தமிழர்களின் பூவான கார்த்திகைப் பூ அல்லது எமது அடையாளம் ஒன்று முத்திரையாக வெளிவந்து தொடர்ந்தும் பல வருடங்கள் பதிப்பிலும், பாவிப்பிலும் இருப்பின் அது தடைசெய்யப்பட்ட முத்திரையை விட பல மடங்கு பலனை பல காலம் தொடர்ந்து தந்திருக்கும் இல்லையா?
தனது படத்துடனான முத்திரை வெளியீட்டினால் இப்படியான விளைவுகள் ஏற்படுவதையா பிரபாகரன் விரும்பியிருப்பார்?
இச் செயலைப் புரிந்தவர்கள், அவர்களின் ”தலைவரின் பெயருக்கும்” களங்கத்தை ஏற்படுத்தியுள்ளார்கள்.
விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்கள் என்பவர்கள் பிரபாகரனுக்கு காட்டும் மரியாதை இது தானா? என்னும் கேள்வியுடன் எனது பதிவை முடிக்கிறேன்.
பி.கு:
உரையாடல் ரீதியில் அல்லது தர்க்க ரீதியில் பின்னூட்டமிடுபவர்களுக்கு மட்டுமே பதிலளிக்கப்படும்.
நோர்வே வாழ் தமிழர்களே சற்று அண்ணனின் பதிவை சிந்தியுங்கள்.... செயற்படுங்கள் உங்கள் ஆதங்கத்தை நோர்வே தமிழர்கள் புரிந்து கொண்டால் மிக்க நல்லது.
ReplyDeleteYou have expressed your views in a right way. However,this article is too long to tell this. Such efforts are "childish" and we cannot really compromise our struggle for freedom like this.
ReplyDelete