குதர்க்கங்களும் ஒரு கொலையும்
சூரியன் மேற்கே உதிக்கிறதாம்
என்றார்கள்
”வாதம்” என்னும் பெயரில்
குதர்க்கம் பேசியவர்கள்

என்னைக் கொல்வதாயும்
நினைத்துக் கொள்கிறார்கள்
ஆனால்
அது வாதம் இல்லை
குதர்க்கம் என்பது
எனக்கு மட்டுமே
புரிகிறது

ஆனால் அதை
வாதித்து,
சாதிக்கும்
அவசியம் எனக்கில்லை

பாவம் அவர்கள்
கற்பனையில் வாழட்டும்
மட்டற்ற மகிழ்ச்சியில்

புரிந்ததா
கொலைஞர்கள்
பலவிதம் என்று?


.

குழந்தையின் உலகத்தில் ஒரு விசரன்

சில தினங்களுக்கு முன் தங்கள் கணணி இயங்கவில்லை உதவி  செய்ய முடியுமா என கேட்டார் ஒருவர். ஒப்பந்தம் செய்தடி போய் இறங்கினேன். வீட்டின் சுற்றுப்புறம் நம்பிக்கையற்றதொரு சூழ்நிலையை தெரிவித்துக்கொண்டிருக்க மனது எச்சரிக்கை மணியை பெரிதாயே அடித்தது.

13ம் நம்பர் வீடு எனக் குறிப்பிட்டிருந்தார் தொலைபேசியில் தொலைபேசியில் தொடர்பு கொண்டவர். வீட்டு மணியை அழுத்தினேன். ஒருவரும் வெளியே வரவில்லை பல நிமிடங்கள். திடீர் என உடம்பு முழுவதையும் கம்பளியால் போர்த்தபடி, முகத்தில் நித்திரைக்களையும் ஒரு வயதான சீக்கியர் ஒருவர் வெளியே வந்தார்.

நீங்களா என்ளை அழைத்தீர்கள் என்று கேட்டேன். நான் கேட்டது அவருக்கு புரியவில்லை எனப் புரிந்தது. அதை வேளை அவர் அவரின் பாசையில் அவர் சொன்னது எனக்கும் பரியவில்லை. மன்னித்துகொள்ளுங்கள் என்று சொல்லி வாகனத்தை நோக்கி திரும்பிய போது எனக்குப் பின்னால் கதவு அறைந்து சாத்தப்படும் சத்தம் தேவைக்கு அதிகமாகவே கேட்டது.

வாகனத்தில் அமர்ந்து தொலைபேசியை இயக்கி தொடர்பு கொண்டேன். தொடர்பு கிடைத்த போது நான் நீங்கள் தந்த விலாசத்தில் நிற்கிறேன் என்றேன். பொறுங்கள் வருகிறேன் என்றார். வாகனத்தால் இறங்கி காத்திருந்தேன்.

நிலத்தின் கீழ் இருந்து மேல் நோக்கி இருந்த ஒரு படியில் மேலேறி வந்‌து என்னை அவரது நிலக்கீழ் வீட்டிற்கு அழைத்துப் போனார். வாசலில் அழகே உருவான ஒரு பெண்குழந்தை தந்தையை அணைத்தபடி என்னை எட்டிப் பார்த்தாள். அவளது சொக்கையில் மெதுவாய் தட்டினேன். மிக அழகாய் வெட்கப்பட்டு நட்பாய் புன்னகைத்தாள்.

வாழ்க்கை, உலகில் குழந்தைகளின் புன்னகைகளுக்கு ஈடான அழகு வேறெதுவுமில்லை இல்லை என்பது மீண்டும் நிரூபித்துக் கொண்டிருந்தது.

அவர்களின் கணணிக்கு முன்னால் ஒரு சிறுவன் உட்கார்ந்திருந்தான். அவனுக்கு நான்கு வயதிருக்கும். கணணி இயங்கவில்லை. இருப்பினும் அதை அமத்தியபடியும்,  மௌஸினால் ஆட்டியபடியும் இருந்தான். அவன் முகத்தில் மகிழ்ச்சி இல்லை.

தந்தை கணணியை அவனிடமிருந்து எடுத்துத் தந்தார். மனமின்றி அதை அவரிடம் கொடுத்தான்.

மெதுவாய் கணணியை இயக்கினேன். இயங்க மறுத்தது. அந்த சிறுவன் எனக்குப்பக்கத்திலேயே நின்று கொண்டான். தந்தை வெளியே சென்றார். தாய் குசினுக்குள் நின்றார். சிறுவனைப் பார்த்து உனது பெயர்  என்ன என்றேன். மெளனமாய் கணணியைப் பார்த்தபடியே நின்றிருந்தான். மெதுவாய் அவனின் வயிற்றில் கீச்சம் காட்டினேன். அவன் கண்கள் அதை விரும்பவில்லை என்பதை காட்டின.

சில நிமிடங்களின் பின் கணணியை இயக்கும் நிலைக்கு கணணியை கொண்டுவந்த போது எனக்குப் பின்னால் நின்றிருந்த சிறுவன் என்னருகில் நெருங்கி நின்றிருந்தான். அவன் கண்கள் ஒளி கொண்டிருந்தன. மீண்டும் கீச்சம் காட்டினேன். சிரித்தான், சினுங்கினான். அவனின் நீல நிறக் கண்கள் ஒளி வீசிக் கொண்டிருந்தன.

அம்மாவை அழைத்து ஏதோ சொன்னான் எனக்குப் புரியாத ஒரு மொழியில். அவன் குரலில் ஒரு வித துள்ளல் இருந்தது. கணணி இயங்கத் தொடங்கியதும் ஆளே மாறிப்போயிருந்தான்.

கணணி தன்பாட்டில் தன்னைத் தானே திருத்திக் கொண்டிருந்தது. தாய் மிகவும் சிறப்பாக ஆங்கிலம் கதைத்தார். ஆனால் நோர்வேஜிய மொழி அவருக்கு சிக்கலாக இருந்தது.

அவர்கள் ரூமானியா நாட்டவர்கள் என்றும். நோர்வேயில் தங்கியிருந்து வேலை செய்வதாயும் சொன்னார்கள். தற்போது இருவரும் வேலை இன்றி இருப்பதாயும், இங்கிலாந்தில் இருந்து கணவரின் சகோதரி அனுப்பும் பணத்தில் வாழ்வதாயும், நோர்வே அரசின் கொடுப்பனவுகள் ஏதும் இது வரை கிடைக்கவில்லை எனவும் சொன்னார். அவர்கள் தங்கியிருக்கும் வீட்டின் நிலக்கீழ் பகுதியினை இந்த இளவேனில் காலத்தின் போது தனது கணவர் புணரமைத்துக் கொடுத்ததாகவும், கணவருக்கு கட்ட வேலைகள் தெரியும் என்றும், தான் 5 நட்சத்திர ‌ஹோட்டலில் வேலை செய்திருந்தாலும் தனக்கு நோர்ஜிய மொழி தெரியாததனால் இங்கு வேலை கிடைப்பதில்லை என்றும் சொன்னார். எங்காவது வேலை இருப்பதாக தெரிந்தால் அறிவிக்கும் படியும் கேட்டுக் கொண்டார். எனது மனம் ஏதோ கனத்துப் போனது. தெரிந்தவர்களிடம் கேட்டுப் பார்க்கிறேன் என்றேன்.

கணணியை திருத்தி இணையத்துடன் இணைத்தேன். தாயிடம் இணையத்துடன் கணணியை இணைத்துள்ளது பற்றிச் சொல்ல அதை தாய் அந்தப் பையனிடம் சொல்ல அவனின் குதூலத்தை நீங்கள் பார்த்திருக்க வேண்டுமே. துள்ளினான், சோபாவில் ஏறிக் குதித்தான், தாயைக் கட்டிக் கொண்டு கத்தினான்.

அவனின் அந்த குதூகலம் எனக்கு ஆச்சர்யமாய் இருந்தது. தாயே அப்புதிரை அவிழ்த்தார். நோர்வேஜிய மொழி தெரியாததனால் அவனுக்கு நண்பர்கள் இல்லை என்றும் அதனால் அவனின் பொழுது போக்கு இணையத்தில் கணணி விளையாடுவது என்றும் சொன்ன போது புரிந்தது எனக்கு அவனின் குதூகலத்தின் காரணம்.

அருகில் அழைத்து பெயர் என்ன என்றேன். தாய் மொழி பெயர்த்தார். தான் பெயர் ப்ளோரின் ஜூனியர் என்றான். அழகான பெயர் என்றேன். தாய் மீண்டும் மொழிபெயர்த்தார். நன்றி என்றான் ஆங்கிலத்தில்.

கணணியை தூக்கி அவனிடம் கொடுத்‌தேன். பளிங்கு போன்ற நீலக்கண்ணால் நன்றி சொல்லியபடி கணணியை மிகவும் லாவகமாய் இயக்கி, தான் விளையாடும் இணையத்தினுள் புகுந்தான். பின்பு இவ்வுலகை மறந்தும் போனான்.

நான் வெளிக்கிட்டதும் பெண்குழந்தை முத்தம் தந்து கையசைத்தது, ப்ளோரினோ கணணிணயை பார்த்தபடி இடது கையால கையைக் காட்டினான். அவனது வலது கை மௌஸ்ஐ அசைத்து ஒரு காரை  வேகமாக இயக்கிக் கொண்டிருந்தது.

எனக்கும் அந்தக் குழந்தை போல் உலகத்தை மறந்திருக்க அசைதான். ஆனால் வாழ்வு தான் விடமாட்டேன் என்கிறது. ஆனாலும் எனக்குள் இன்னும் ஒரு குழந்தை இருந்து கொண்டிருப்பதே ஆறுதலாயிருக்குிறது எனக்கு.

இன்றைய நாளும் நல்லதே


.

விடை தெரியாத வினாவும், ஏகாந்தமும்

அன்றொருநாள் கோயிலுக்குச் செல்ல நேர்ந்தது.  அங்கு எனது நண்பருக்காய் காத்திருந்த போது எதிர்பாராதவிதமாய் அறிமுகமாயினார் இன்றைய கதையில் வரும் மனிதர்.

வயது 80க்கு மேலிருக்கும். மெலிந்து ஒடுங்கிய உடம்பு, வயதுக்கேற்ற குரல், தடக்கமில்லாத நிதானமான வார்த்தைகள், பழுத்த அனுபவங்கள், சிறு கூனல், இவையே அவரின் அடையாளங்களாய் இருந்தன.

டாக்ஸிக்காய் காத்திருப்பதாய்ச் சொன்னார். டாக்ஸி வர நோமாகியது. அதிக நேரமாகியது.

அம்மா, இருங்கோ என்று ஒரு கதிரையை எடுத்துப் போட்டேன். இருந்தார். உரையாடத் தொடங்கினோம். உரையாடல் எடுத்த உடனேயே அவரின் ஊர், ‌வீடு, குடும்பம், கோயில் என்றலைந்து இறுதியில் அவரின் இன்றைய வாழ்க்கைக்குள் புகுந்தது. பேசிக் கொண்டே இருந்தார்.  நிறுத்தாமல். அவருக்கு பேசவேண்டிய அவசியம் இருந்தது.  பல நாட்கள் பேசாதவர் போல் நிறுத்தாமலே பேசிக்கொண்டிருந்தார்.

அடிக்கடி ”ஏன்னடா மோனே, நான் சொல்லுறதில ஏதும் பிழை இருந்தால் சொல் என்றார்”.  எனக்கும் அவரின் வார்த்தைகளில் பிழை இருந்தாய் தெரியவில்லை. ஆதலால் மெளனமாய் இருந்திருந்தேன்.

நீ என்ட பேரன் மாதி‌ரி, ஆனபடியால் தான் உன்னுடன் கதைக்கிறேன் என்று சொல்லிச் சொல்லி தனது முழு வேதனைகளைகளையும் இறக்கிவைத்தார்.

மோனே! மற்றவன்ட சொத்தில ஆசைப்படாதே, உன்ட கையாலயும், தலையாலயும் உழைத்தது மட்டுமே உன்னுடையது என்றும், மதியாதார் வாசல் மிதியாதே என்னும் வார்த்தைகள் அடிக்கடி அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

மோனே! நான் ஊரில வீடு கட்டேக்க 8000 ரூபாவுக்கு வீடு கட்டினனான், நாங்கள் தான் சிற்றாள் வேலை செய்தோம், சீமெந்து 8ரூபாவுக்கு வாங்கினேன் என்றார் பெருமையுடன். ஊரிலேுயே முதல் கல் வீடு அவர்களுடையதாயிருந்ததாம். போரில் வீடு அழிந்தது ‌அவருக்குள் அழியாத வடுவாயிருக்கிறது என்பதை புரிந்து கொள்ளக் கூடியதாக இருந்தது. ஆனாலும் அவரின் பிள்ளையார் கோயில் போரில் அழியாமல் இருந்ததாம். அது பிள்ளையாரின் சக்தி இன்றி வேறென்னவாயிருக்கலாம் என்றும் கேட்டார். ஏதும் பேச முயாதிருந்தது என்னால்.

தனது பிள்ளைகளுக்கு என்னென்ன சீதனம் கொடுத்தார், அதில் எத்தனை பவுண், எத்தனை வீடு, எத்தனை நிலம், எத்தனை பனை என்பது அவருக்கு நன்றாகவே நினைவிருந்தது.

”உன்ட அம்மாவ வடிவா பார்த்துக் கொள்கிறாயா?”என்று எனது மனச்சாட்சியையும் உலுப்பினார். என் மனம் ஏதோ கனத்துப் போனது அதைக் கேட்டதும். ஏலுமான அளவு செய்கிறேன் என்ற போது பொக்கைவாயால் வெற்றிலை தெறிக்க பெரிதாய் சிரித்தார்.

டேய் என்று அன்பாய் அழைத்து, உன்னைப் போல மற்றவனையும் நேசி என்னும் தொனியில் பலமாய் அறிவுறுத்தினார். மற்றவர்களின் மனதை புண்படுத்தாதே என்றும், மற்றவர்களின் பிழைகளை மன்னித்துவிடு என்றும் அவை உன் உயர்த்தும் என்றார். கேட்க நல்லாயிருக்கு ஆனால் உதுகளை செய்யுறது கஸ்டமெல்லோ என்றேன்? என்ட வயது வரேக்க உனக்கு விளங்குமடா என்றார் என்னைப் பார்த்து. சிரித்தேன், அவரும் சேர்ந்து சிரித்தார்.

நேர்வேயில் வாழ்ந்தாலும் அவரின் மனம் முழுக்க ஊரிலேயே அலைந்து திரிந்தது. தனது பனைகளை ஆமிக்காறன் தறித்து விட்டதாயும், உவங்களுக்கு பனையின்ட அருமை தெரியுமே தம்பீ.. அறுவாங்கள்.. என்றார்.

தனக்கேற்பட்ட சோதனைகள், வேதனைகள், வாழ்க்கையில் கடந்து வந்த, கடந்து கொண்டிருக்கும் வலிகள் என எல்லாவற்றையும் கொட்டித் தீர்த்தார்.  பகிரக் கூடாத பல பரம ரசியங்கயையும் பகிந்து கொண்டார். அவரின் கண்கள் கலங்கி இருந்ததை காணக் கூடியதாயிருந்தது, அந்நேரங்களில்.

மோனே! இந்த வயதிலயும் உடம்பில ஒரு வருத்தம் கிருத்தம் இல்ல, ஏன் என்று தெரியுமோ என்றார்? வாயைப் பிதுக்கினேன். உன்ட நெஞ்சுக்கு உண்மையாயிரு, மற்றவனுக்கு அள்ளி வைக்காதே, உதவி செய், அதோட பிள்ளையார கும்புடு என்ட வயதிலயும் சுகமாயிருப்பாய் இருப்பாய் என்றார். நான் இந்து வயதிலயும் கண்ணாடி போடுறதில்ல ஆனா நீ போடுறாய் என்று ஒரு நக்கலும் விட்டார். சேர்ந்து சிரித்தோம்.

அவரின் டாக்ஸி வந்தது. எழுந்து ஜக்கட்டை எடுத்தார். அதைப் போடுவதற்கு உதவினேன்.  மெதுவாய் திரும்பி, உனக்கு எத்தனை பிள்ளைகள் என்றார். இரண்டு பெண் குழந்தைகள் என்றார். என் கையை பிடித்து நீ குடுத்துவைச்சவன்டா என்று சொல்லி டாக்ஸியில் ஏறிக் கொண்டார். டாக்ஸி புறப்பட்டது. ஜன்னலினூடாக அவர் கை காட்டுவது தெரிந்தது. நானும் கையைக் காட்டினேன்.

அவர் போனதும் மனம் அவரைச் சுற்றியே வந்து கொண்டிருந்தது. அவருக்கும் எனக்கும் என்ன தொடர்பு? ஏன் என்னிடம் தன் வாழ்வின் பகிரக் கூடாத ரகசியங்களையெல்லாம் பகிர்ந்து போகிறார்?

இன்றைய நாளைப் போல் பல நாட்கள், பலர் என்னிடம்  தங்களின்  சுகங்களையும், சோகங்களையும் பகிந்து என்னைப் பெருமைப் படுத்திப் போயிருக்கிறார்கள். என்னைக் கடந்து போகும் பலரும் ஏன் இந்தளவுக்கு என்னை நம்பி தங்களின் வாழ்க்கையை பகிர்ந்து போகிறார்கள்?  இந்த வினாவுக்கான விடையை  பல நாட்களாக தேடுகிறேன். அனால் விடை மட்டும் கிடைக்காமலிருக்கிறது.

சில வினாக்களுக்கு விடைகள் இல்லை என்கிறார்கள். அப்படிப் பட்டதாயிருக்குமா எனது வினாவும்?

சில வினாக்களுக்கு விடை தெரியாவிட்டால் ஏற்படும் பயம், ஏக்கம், தவிப்பு, என்னிடம் இல்லை. என்னிடமிருப்பதெல்லாம் பலரின் ரகசியங்களும் அவை தந்து போயிருக்கும் எகாந்தமும் தான்.

இன்றைய நாளும் நல்லதே.


.

விபத்தில் தொலைந்த தமிழ்


மேகங்கள்ற்ற வானம், மெது சூட்டுடனான இளஞ்சூரியன், இலையுதிர்காலத்து நிறங்களுடனான சுற்றாடல் என, இன்று காலை விடியும் போது அழகாயும் அமைதியாயும் இரதது. 

காலையுணவை உண்டு கொண்டிருக்கும் போது தங்கையிடம் இருந்து ஒரு குறுந்தகவல் வந்தது. அதில், உங்களின் ஆசிரியர் விஜயரட்ணம் மாஸ்டர் இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என்றிருந்தது. உடனே இலங்கைக்கு தொடர்பு கொண்டு இத்தகவலை உறுதிசெய்யுமாறு கேட்டு, 5 நிமிடங்குளுக்குள் அது உண்மையான தகவல் என்று இலங்கையில் இருந்து வந்த குறுந்தகவல் உறுதி செய்தது. நேற்று முன் தினம் விபத்தென்றில் சிக்குண்டு, காயப்பட்டிருந்து, இன்று காலை இறைவனடி சேர்ந்தார் என அறியக்கிடைத்தது.

வாழ்வின் நிதர்சனமான உண்மைகளில் ஒன்றான மரணம், இன்றும் தன்னை விஜயரட்டணம் சேர் மூலமாக நிறுவிப்போயிருக்கிறது. மனம் கனத்துப் போன நிலையில் னது பால்யக் காலமும், விஜயரட்ணம் சேரும், ஏறாவூரும், மெதடிஸ்த மத்திய கல்லூரியும் ிில்
நிழலாடின.

1980களின் ஆரம்பத்தில், ஏறவூரில் வாழ்ந்திருந்த காலின் காலையில், ள் ீட்டி்க பால்வாங்கி வரும் ‌வேலை என்னிடமே தரப்பட்டிருந்தது. காலையில் விஜயரட்ணம் சேரின் மாமனாரின் (மணியத்தார்) வீட்டிற்குப்  போய் பால் வாங்கிவருவேன். அவர்கள் கூட்டுக் குடும்பமாய் வாழ்திருந்தார்கள் என்றே எனது ஞாபகம் சொல்கிறது.

நான் பால் வாங்கப் போகும் போது சேர், தனது சாம்பல் நிற பஜாஜ் வண்டியை  மஞ்சல் ித் துணியினால் துடைத்துக்கொண்டிருப்பார். அவரின் மாமாவை நாம் மணியம் பெத்தப்பா என்றே அழைத்தோம். பெறுங்க மகன் அவர் வருவார், என்பார் சேர்.  றே பழிய பழைய சாரய போத்தலுடன் காத்திருந்தால் மணியம் பெத்தப்பா அதை பாலால் நிரப்பித் தருவார்.

வீடுபோய், உடை மாற்றி, பஸ் எடுத்து பள்ளிக்கு போகும் போது சில வேளைகளில் சேர்,எங்கள் பஸ்சையும் எங்கள் பஸ், சேரையும் கடந்து போகும். யன்னலால் தலை நீட்டி கை காட்டினால் தலையை மட்டும் ஆட்டுவார். பாடசாலைக்கு வந்ததும் யன்னலால் இனிமேல் எட்டிப்பார்க்காதே என்றும் அறிவுரை சொல்வார்.

சேர் படு ஸ்மார்ட் ஆகவே உடையுடுத்துவார். எப்பவும் கறுப்பு பெல்ட் கட்டியிருப்பார். வெள்ளை உடைகளுடனேயே அவரைப் பார்த்தாக நினைவிருக்கிறது. என்றும் அவரின் தலைமுடி கலைந்திருக்காது. சீப்பு வைத்து வாரிக்கொள்வதைக் கண்டிருக்கிறேன். அவரின் பஜாஜ் என்றும் ின் அலரி மரத்தின் கீழ் நிப்பாட்டப்பட்டிருக்கும்.

1980 களில் விடுலைப்போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலங்களில் சேர் ஒரு பெரிய தமிழர் விடுதலைக் கூட்டனித் ”தூண்” என்று பாடசாலையில் ஒரு கதையிருந்தது. அந் நாட்களில் ப்ளொட் இயக்கம் ஒரு வானொலிச்சேவையை வாரமொருமுறை நடாத்திக்கொண்டிருந்தது. அதன் அலைவரிசையை எங்களுக்கு அறிவித்தவர் சேர் தான். மிகுந்த இனப்பற்றுடையவர். தெளி்ந்த அரசியல் ஞானமும் கொண்டவர்.

எனக்கு தமிழின் பால் ஆர்வமேற்பட காரணமாயிருந்த ஆசான்கள் இருவர். ஒருவர் சா்மாசேர், மற்றையவர் விஜரட்ணம் சேர். 11ம் வகுப்பில் பொருளாதாரம் படிப்பித்தவரும் சேர் தான்.

அவர் தமிழை கற்பிக்கும் அழகே தனி. மற்றைய அசியர்களைப் போல் அடி, உதையில் நம்பிக்கை இல்லாதவர். விடலைகளின் மனம், போக்கறிந்து அதனூடாக தமிழை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவது போல கற்பிப்பார்.

அவர்  கற்பித்த ”நான் மலரோடு தனியாக என்   இங்கு   நின்றேன்” என்ற பாடலும் எனக்குத் தமிழின்பால் ஈர்ப்பைத் தந்தது. 1980   களில்  இலங்கைத்   தொலைக்காட்சியில் ”இரு வல்லவர்கள்” காண்பிக்கப்பட்ட   அடுத்த   நாள் யார்  நேற்று படம் பார்த்தீங்க டீவியில என்ற வகுப்பைத்   தொடங்கினார்.  அடுத்து வந்த  40 நிமிடங்களும் தமிழ் என்னும் தேன்  உண்ட   களைப்பில்  மயங்கிக் கிடந்தேன்  நான்.

அந்தப் பாடலில் ஜெயசங்கர் விஜயலட்சுமியை  கட்டிப்பிடிப்பதே எங்களுக்கு  கிளுகிளுப்பைத் தந்திருந்த காலம் அது. இருப்பினும் அடுத்து வந்த நாட்களில்  அந்த பாட்டை அக்கு வேறு ஆணி வேறாக  பிரித்து, உதாரணங்களை அங்கிருந்தே  எடுத்து உவமானம், உவமேயம் புரிவைத்தார்.

அப் பாட்டில் இருந்த வார்த்தைகள் அனைத்தையும் மனிதர் பிரித்துப் பிரித்து  ஊட்டினார். திகட்டத் திகட்ட தின்று தீர்த்தோம் நாங்கள்.

உன் இளமைக்குத் துணையாக தனியாக வந்தேன் என்னும் வசனம் வந்த போது முழு   வகுப்பும் குசும்புச் சிரிப்பு சிரித்ததை கண்டு எம்முடன் சேர்ந்து   சிரித்தார் தமிழாசனும்.

பாடசாலையில் மிகவும் பிரபலமான ஆசியர்களில் ஒருவர் விஜயரட்ணம் சேர் என்றால் அது மிகையாகாது.

பதின்மவயதின் பருவங்களை அவர் அறிந்ததாலோ என்னவோ நான் விடலைப்பருவத்தில் டுபாடிறி ்து ிி்த ில், அன்பாய் அழைத்து, மகன் உங்களுக்கு அப்பா இல்லை, நீங்க தான் முத்தவர்.  படித்து முன்னுக்கு வரனும் என்றார் ஒரு நாள். தெறித்துத் திரியாதே (குப்படி செய்யாதே)  என்று அவர் சொல்லவேயில்லை. மேல்வகுப்பில் சித்தியடைந்த போது முதுகில் தட்டி கெட்டிக்காரன் என்றதும் அவர் தான்.

புலம் பெயர்ந்து பல ஆண்டுகளின் பின்னான ஒரு நாள் பாடசாலைக்கு போயிருந் போது கண்டதும் முதுகில் தட்டி கடந்து வந்த பாதையை மறக்காதீர்கள் என்றும், பாடசாலை என்பது தாய்க்குச்சமனானது என்றும் றி மனதுக்குள் ஒரு விதை ிதைத்தார். அந்த விதை முளைத்து மரமாகவிருக்கிறது, இன்று.

 வ் வருடம் ஆனி மாதம் எனது ‌பேரன்புக்குரிய அதிபரின் பாராட்டு விழாவிற்கு அவரை அழைப்பதற்கு அவரின் வீட்டுக்குச் ிரன்.

கண்டதும் அவரால் என்னை அடையளம் காண முடியாவிட்டாலும், சற்று நேரத்தில்  சஞ்சயன் தானே என்று அழைத்து ஆச்சர்யப்படுத்தினார். ன்்பட்ட போது வெளிவாசல் வரை வந்து வழியனுப்பிய போது எனது ப்ளாக் வாசிக்கவென அதன் விலாசமும் வாங்கி வைத்துக்கொண்டார். வாசித்திருப்பாரோ?

எங்கள் அதிபரின் பாராட்டு விழாவிற்கான அழைப்பிதழை சேருக்கு கொண்டுபோய்க் கொடு என்று எது என்னைத் தூண்டியது? அது தற்செயலாக எனது மனதுக்கு தோன்றியதா? அல்லது இது தான் நீ அவரை இறுதியாகச் சந்திக்கும் சந்தர்ப்பம் என என் மனதுக்கு யாரும் அறிவித்தார்களா? எது எப்படியோ, இறுதியாய் அவரை சந்தித்தது மனதுக்கு ஆறுதலாயிருக்கிறது.

என் ஆசானின் உடல் மறைந்திருக்கலாம், ஆனால் நினைவுகளும், அவர் கற்பித்தவைகளும் என்னுடன் இருக்கும் நான் இருக்கும் வரை.

தமிழ் அறிவித்த என்னாசானுக்கு இது சமர்ப்பணம்.

.

பனியில் சறுக்கிப் போன காலம்

 நோர்வேக்கு வந்த புதிதில் என்னைச் சுற்றியிருந்த உலகம் முழுவதும் புதினமாயிருந்தது. வந்து அடுத்த வருடமே மொழியைக் கற்பதற்காக புகைப்படக்கலையும், இயற்கையும் என்னும் தலைப்பிலான ஒரு கற்கை நெறியை தெரிவு செய்து வடநோர்வேக்கு பயணமானேன். தனியே  நோர்வேஜியர்களுடன் வாழ்ந்தால் மொழியை சீக்கிரமே கற்கலாம் என்ற என்னமும், வட நோர்வேயின் இயற்கையை அனுபவிப்பதுமே எனது நோக்கமாயிருந்தது.

பாடசாலையில் என்னைத் தவிர வேறு 5 தமிழர்களும் இருந்தார்கள். அவர்கள் தனியே நோர்வேஜிய மொழியை மட்டுமே தெரிவு செய்திருக்க, எனது கற்கை நெறியில் நான் ஒருத்தன் மட்டுமே எனது நிறத்தில் இருந்தேன்.

வாழ்க்கையின் மிக இனிமையான வருடம் அது. மொழியும் புரியத் தொடங்கி, நான் படம் எடுத்தால் படமும் உருப்படியாய் வரத் தொடங்கியதும் அப்போது தான்.

பனிச் சறுக்கிலும் ஓரளவு தேர்ச்சி வந்தது, எனக்கு. கிழமையில் 3-4 நாட்கள் பாடசாலைக்கு வெளியே  காடுகளிலும், திறந்த வெளிகளிலும், மலையுச்சிகளிலும் தங்கினோம். ”டென்ட்” அடித்து, மீன் பிடித்து, கண்டதையும் படமெடுத்து திரிந்திருந்தேன், மற்றவர்களுடன் சேர்ந்து.

இந்த நாட்களில் மிக நன்றாக அதிக தூரம் ஓடுவேன். விளைட்டுக்களில் பிரியமாயிருந்தேன். இதனால் அறிமுகமாகினார் Anders Ims என்னும் நோர்வேஜிய இம்சையரசனொருவன். அவரும் இதே பாடசாலையில் படித்தார்.

அவனுக்கு தூங்குவது என்றால் கொல்லக் கொண்டுபோவது போல. பயங்கர சுறுசுறுப்பானவன். அதேவேளை மிகவும் இரக்க்கமும், மிக மிக வெட்கமும் கொண்டவன்.

ஒரு நாள் ஜொக்கிங் போன போது அறிமுகமானான். பேசிய படியே ஓ‌டி முடித்தோம். அது வெள்ளிக்கிழமை என்பதால் அடுத்த நாள் அலுப்பில் காலைத் தூக்கத்தை அனுபவித்துக் கொண்டிருந்தேன். தட தட என்று அறைக்கதவை யாரோ தட்டுவது கேட்டு திறந்தேன். இம்சையரசன் ஜொக்கிங் போகும் உடுப்புடன் புன்னகைத்துக் கொண்டிருந்தான். என்ன விசயம் என்றேன். வா ஓடப் போவோம் என்றான். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. அவனின் அப்பாவியான அழைப்பையும் மறுக்க முடியவில்லை. சரி என்று வெளிக்கிட்டேன்.

அது தான் அந்த வருடம் நான் செய்த மிகப் பெரிய பிழை. அடுத்து வந்த ஒவ்வொரு சனியும் ஏதாவது ஒரு திட்டத்துடன் வருவான். மலைஏறுவொம், மீன் பிடிக்க பல மைல் தூரம் நடந்து போவோம், ஜொக்கிங் என்று அவன் அழைத்தால் அது கிட்டத்தட்ட அது ஒரு குட்டி மரதனுக்கு சமமாயிருக்கும்.  எனது அனுமதியையோ, விருப்பத்தையோ அவன் ஒரு நாளும் கேட்டதில்லை. நானும் மறுத்ததில்லை. எனக்கு வடநோர்வேயை சுற்றிக்காட்டிய பெருமையை அவனுக்கே சேரும்.

இப்படி ஒரு சனிக்கிழமை நடந்த ‌கதை தான். இன்று நான் எழுதப் போகும் கதை.

அன்று கதவு தட்டப் பட்டது, வா உள்ளே என்றேன். பனிச்சறுக்கு உடுப்புடன் நின்றிருந்தான். இன்று என்ன திட்டம் என்றேன்? வா பனிச்சறுக்கு போவோம் என்றான். தூரமா என்ற போது சீச்சீ.. சற்றுத் தூரம் என்றான். சரி என்று உடைமாற்றி வெளிக்கிட்டேன். நேரம் 8 மணி என்று தெரிந்தது.
கையில் இரண்டு தோடம்பழங்களும், நீரும் கொண்டு போனேன். அவனோ இரண்டு தோடம்பழங்களுடன் மட்டுமே வெளிக்கிட்டான்.

பனிச்சறுக்கு உபகரணத்தை காலில் பூட்டி நடக்கத் தொடங்கினோம். அவன் எனக்கு முன்னால் நடக்கிறான். நான் வ‌ழமை போல் அவனைப் பின்தொடர்ந்து கொண்டிருந்தேன். இடக்கிடை நான் பின்னால் வருகிறேனா என்று திரும்பிப் பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தான். அவனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியாது தடுமாறும் போது தனது வேகத்தை சற்று குறைத்து என் உசார் படுத்தியதாக பின்பொரு நாள் சொல்லிச் சிரித்தான்.

நேரம் போய்க் கொண்டிருந்தது. அவன் தனது நடையை நிறுத்துவதாயில்லை. பசி வயிற்றைக் கிண்ட.  எனக்கு பசிக்கிறது என்றேன். அதற்கிடையிலா என்று அங்கலாய்த்தவன், சற்று நேரம் ஆறுதலைடைந்து தோடம்பழத்தை சாப்பிட அனுமதித்தான். நோரம் 12ஐ நெருங்கிக் கொண்டிருந்தது.

மீ்ண்டும் ஆரம்பித்தான். நானும் பின்னால் இழுபட்டுக் கொண்டு போனேன். மலையை ஏறுவதும், கடப்பதும், இறங்குவதுமாயிருந்தோம். கையில் இருந்த கடைசி தோடம்பழமும் வயிற்றுக்குள் போய் பல மணிநேரங்களாகிய போது நேரம் மாலை 3 மணி ஆகியிருந்தது. எனக்கு பசிக்கொடுமை அதிகரிக்க நிலத்தில் இருந்த பனியை தின்னத் தொடங்கினேன். அதைக் கண்டவன் பனியை சாப்பிடாதே வயிறு வலிக்கும் என்றான். எனக்கு பசிக்கிறது என்றேன். தனது தோடம்பழத்தை உரித்து அதில் பாதியை எனக்குத் தந்தான்.

என்னால் நடக்க முடியாது என்று சொன்னேன். கெதியில் போய் சேர்ந்துவிடுவோம் என்றான். எங்க பரலோகத்துக்கா என்று கேட்கத் தொன்றியது என்றாலும் அடக்கிக் கொண்டு. மீண்டும் அவனைப் பின் தொடர்ந்தேன்.

மாலை 5 மணிபோல் என்னால் நடக்க மு‌டியாது குந்திய போது, வா இன்னும் சற்றுத் தூரம் போனால் பள்ளி மட்டும் பள்ளமான பகுதி, சறுக்கிக் கொண்டே போகலாம் என்றான். ஒரு விதமாய் மாலை 7 மணிபோல் படசாலைக்கு வந்த போது ”வெல்டன்” என்று நோர்வேஜிய மொழியில் சொல்லிப் போனான். எனக்கு பதில் சொல்லவே தெம்பிருக்கவில்லை. பிழிந்து போட்ட கரும்பு சக்கை போலிருந்தது உடம்பு.

மாலை அனைவரும் சுற்றியிருந்து உணவு உண்ட போது அருகில் வந்து உட்காந்து கொண்டான். அவனைக் கவனிக்காமல் வயிற்யை நிரப்பிக் கொண்டிருந்தேன். இன்று நீ 54 கிமீ போய் வந்திருக்கிறாய் என்றான். எனக்கு அவனைக் கொல்லவேணும் போலிருந்தாலும், எனது சாதனை சந்தோசத்தை தந்து கொண்டிருந்தது. அவனைப் பார்த்து புன்னகைத்தேன்.

நாளைக்கு காலை ரெடியாயிரு என்று சொல்லி எழுந்து போனான். ஏனக்கு தலை சுற்றத் தொடங்கியிருந்தது.
...................
ஒவ்வொரு நத்தார் பண்டிகைக்கும் அவனிடமிருந்து வாழ்த்தும், அந்த வருடம் என்ன என்ன செய்தான் என்றும் எழுதியிருப்பான். கடைசியாய் வந்த கடிதத்தில் (Alska)அலாஸ்காவில் பல நாட்கள் தங்கி பல நூறு கிலோமீற்றர்கள் பனியில் பயணித்ததாய் எழுதியிருந்தான். நல்ல நேரம் நான் அருகில் இல்லை என்று நினைத்துக் கொண்டேன். அப்படி நான் அவனுக்கருகி்ல் இருந்திருந்தால், இந்த நேரம் எனக்கு அஞ்சலி நோட்டீஸ் அடித்திருப்பாகள்.


.

வானத்திலிருந்து விழுந்த நான்

 2009 ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு பயணமாவதற்கு முன்பே, இந்தப் பேரழகனின் மனதுக்குள் விமானத்தில் இருந்து பரசூட் மூலம் குதிக்கும் ஆசை வந்திருந்தது. ஏற்கனவே நோர்வேயில் முயற்சித்தது தான். இருப்பினும் அது விமானத்தில் இருந்து குதித்ததல்ல, அது. ஒரு மலையுச்சியில் இருந்து குதித்தேன். நான் தரையிரங்கும் இடத்தில் எனது இரண்டு இளவரசிகளும் நின்றிருந்தார்கள். இறங்கியதும் சிட்டாய் வந்து கட்டிக்கொண்டார்கள், பெரும் பெருமையுடன்.

சிட்னியில் விமானம் மூலம் பாயலாம் என்று அறிந்திருந்தேன். எனினும் ஒன்றரை மாதமாய் அங்க தங்கியிருந்து, புறப்படுவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தான் இதைப்பற்றி சிந்திக்க நேரம் கிடைத்தது. இணையத்தில் தேடி ஒரு இடத்தைக் கண்டுபிடித்து, அடுத்த நாள் பாய்வதற்கான ஒழுங்குகளையும், அதற்கான பதிவுகளையும் செய்து கொண்டேன்.

தனது மூத்த அண்ணண் இன்று ”மண்டையப்போட்டாலும்” என்று நினைத்தாளோ என்னவோ  எனது தங்கை, தானும் வருகிறேன் என்று கூறி, மச்சானின் வாகனத்தை அபகரித்து, அந்த ரதத்தில் என்னையும் ஏற்றிக் கொண்டு புறப்பட்டாள்.

ஏறத்தாள 1,5 மணிநேரம் பயணம் என கூகிளாண்டவர் கூறியிருந்தமையினால், நிம்மதியான தூக்கமடிப்போம் என்று நினைத்திருந்தேன், நான். ஆனால் தங்கையோ, இன்றுதான் அண்ணணுடன் கடைசியாகக் கதைக்கிறேன் என்று நினைத்திருக்கவேண்டும், வழி முழுவதும் முச்சுவிடாது கடித்துக்கொண்டே வந்தாள்.

நாம் பரசூட்இல் இருந்து பாயும் இடத்தை நெருங்கிய பேது வானில் பல நிறங்களில் பரசூட்கள் தெரிந்தன. அவை ஆடி ஆடி  மெதுவாய் இறங்கிக்கொண்டிருந்தன. எவரும் முட்டை விழுந்து உடைவது போன்று விழுந்து உடல்சிதறி என்னைப் பயமுறுத்தவில்லை.

தங்கை காரை நிறுத்தியதும் அலுவலகத்துக்குள் புகுந்து எனது ஆசையை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகளில் இறங்கினேன்.

 நான் இறந்தால் அதற்கு அவர்கள் பொறுப்பல்ல என்ற தொனியில் பல பக்கங்கள் கொண்ட ஒப்பந்தம் ஒன்றிலும், எனக்கு சில பல நோய்கள் இல்லை என்ற தொனியிலும் இருந்த ஒப்பந்தங்களை வாசிக்காமலே கையெழுத்திட்டேன். தங்கை சிட்னி முருகனுக்கு நோ்த்தி வைத்திருந்திருப்பாள் என்றே நினைக்கிறேன்..

அந்த அலுவலகத்துஅழகி, சுளையாக 250 அவுஸ்திரேலிய டாலர்களை வாங்கிக் கொண்டாள். புகைப்படமும், வீடியோவும் எடுத்துத் தருவதற்காக இன்னும் கொஞ்சம் டாலர்களை உருவிக்கொண்ட பின், இன்னும் சற்று நேரத்தில் எனது வாழ்க்கையையே முடிவுசெய்யப்போகும் பயிற்சியாளரை அறிமுகப்படுத்தினாள். அருகில் தங்கை மெளன அஞ்சலிக்கு நிற்பது போல  அமைதியாக நின்றிருந்தாள். உள்ளுக்குள் அப்பாடா இன்றுடன் நிம்மதி என்று நினைத்திருக்கலாம் ... யார் கண்டது.

பயிட்சியாளரும் வாங்கிய பணத்துக்காகக் கதைத்தார். பலர் வீடுகளில் சர்வதிகாரியின் கட்டளைகளுக்கு பூம் பூம் மாடு போல் தலையாட்டுவது போன்று நானும் அவர் கூறிய எல்லாவற்றிற்கும் தலையாட்டினேன். ஆனால் அவரின் கதையும் பலரின் வீடுகளைப்போன்று இங்கும் ஒரு காதால் உள்ளே போய் மற்றய காதால் காலதாமதமின்றி உடனேயே வெளியேறியது.

எனது கண்கள் அங்கு வந்து ஆட்களை ஏற்றிச் செல்லும் விமானத்தில் இருந்த போது, தங்கை கையில் ஒரு தொல்லைபேசியுடன் ஓடி வந்தாள். யாரருக்காவது எமன் கையிற்றை எறிந்துவிட்டானோ என்று பயந்தபடியே தொல்லைபேசியை வாங்கி காதருகில்வைத்தபோது மறுபக்கத்தில் எனது தங்கையின் அடிமையான எனதருமை மச்சான், மச்சான்! கவனம், கவனம், கவனம் என்று எனது கவனத்தை திருப்பப் பார்த்தார். நான் அவரின் பேச்சில் கவனமில்லாமல் இருப்பதை அறிந்ததும் மீண்டும் கவனம், கவனம் என்று கூறி மறைந்தார்.

எனக்கு வானத்தில் இருந்து பாய்வதற்கான உடைகள் தரப்பட்டது. எனது அழகிய உடலுடன் ஒட்டியபடி செக்சியாக இருந்தது உடை. ஒருவித பட்டிபோன்றதொன்றைத் தந்தபோது, ஏன் இது? என்றேன்.

இது தான் உன்னை என்னுடன் இணைத்துவைத்திருக்கப்போகும் பட்டி என்றார்.

உடனே அத
ை கவனமாகப் மூன்று முறை கண்ணில் ஒற்றி எடுத்து .. சிட்னி முருகா .. என்றபடியே பூட்டிக் கொண்டேன்.

பயிட்சியாளர் எனக்குப் பின்புறம் வந்து நின்று அந்த பட்டியை மேலும் இறுக்கினார். எனது இரண்டு கால்களும் உடலுடன் இணையயும் ஒரு பகுதியில் பலமாய் வலித்தது, நான் நெளிந்தேன், குனிந்தேன், நிமிர்ந்தேன். வலிக்கிறதா என்று கேட்டபடியே பட்டியை சற்று தளர்த்தினார் பயிட்சியாளர். சென்றுகொண்டிருந்த உயிர் திருப்பியது எனக்கு.


சில பயிட்சிகள் தரப்பட்டன. விமானத்தில் இருந்து பாய்ந்தபின் கை, கால்களை எப்படி வைத்திருப்பது என்றும் விளக்கினார். நானும் என்னை James Bond  போன்று கற்பனை செய்தபடியே பயிற்சிகளைச் செய்தேன்.

அங்கே பார், என்று பயிட்சியாளர் வானத்தைக் காட்டினார். வானத்திலிருந்து பலர் குதித்து பூமியை நோக்கி வந்துகொண்டிருந்தனர். தேவர்களும், தேவைதைகளும் முகில்களைக் கடந்துவரும் அந்தக்காலத்து விட்டலாச்சாரியாவின் திரைப்படக்காட்சிகள் போலிருந்தது, அது. அவர்களுக்குள் ”எமன்” தெரிகிறாரா என்று பார்த்தேன். இல்லை போலிருந்தது.

என்னை ஏற்றிச் செல்ல வேண்டிய விமானம் வந்து நின்றது. தங்கை கட்டிப்பிடித்து முத்தமிட்டு அனுப்பினாள். ”அம்மா கிழவியை அன்பாக விசாரித்ததாகச் சொல்” என்று கூறினேன், நக்கலாய். எவ்வளவோ செய்திட்டமாம் இத செய்யமாட்டமா என்று டயாலாக் பேசினாள், அவள்.

அது ஒரு மிகச்சிறிய விமானம். அதில் ஏறினேன். இருக்கைகளை அகற்றி விட்டிருந்தார்கள். நெரிசலான பஸ்ஸில் ஆட்களை ஏற்றுவது போல 15 பேரை ஏற்றினார்கள். எல்லோரும் குந்திக் கொண்டதும் காதடைக்கும் சத்தத்துடன் புறப்பட்டது விமானம்.

எனது பயிட்சியாளர் என்னைப் பார்த்து ”ஓகே”யா? என்பது போல சாடையில் கேட்டார். ஓம் என்றேன். விமானம் மேலெழும்பிக்கொண்டிருந்தது. எனது இதயத்துடிப்பைப் போல.

யன்னலால் எட்டிப் பார்த்தேன் எல்லாம் சிறிதாய் தெரிந்தன. அவை சற்று நேரத்தில்  புள்ளி புள்ளிகளாய் மாறின. விமானம் 10000 அடி உயரத்தை அடைந்ததும் ஆயத்தமாகுமாறு உத்தரவிட்டார் பயிட்சியாளர். விமானத்தின் பின் கதவு திறந்தது. 12000 அடி உயரம் வந்ததும். எல்லோரும் யாய்ந்தனர்.

பயிட்சியாளர் என்னை தன்னுடன் இணைத்துக் கொண்டார். வாசலுக்கு வந்தோம். பயிட்சியாளர் எனக்கு பின்னால் இருந்து தயாரா என்றார். பூலோகத்தை ஒரு தரம் பார்த்தேன். எல்லாம் மிக மிக தூரத்தில் புள்ளிகளாயும் நீல நிறத்திலும் தெரிந்தன. இனி நான் தலைகீழாக நின்றாலும் பயிட்சியாளர் இந்தப் பாய்தலை நிறுத்தமாட்டார் என்பது புரிந்த போது ”ஜம்ப்” என்று கத்தினார் பயிட்சியாளர்.

எனது இரு இளவரசிகளையும் நினைத்துக் கொண்டே பாய்ந்தேன். என்னுடன் ஒட்டியபடியே பயிட்சியாளரும் பாய்ந்தார். விமானத்தில் இருந்து விழுந்துகொண்டிருந்தேன் நான். என்ன நடக்கிறது என்று முளை உணர்வதற்கு சற்று நேரமெடுத்தது. விழும் வேகத்தில் முகத்தில் இருந்த சதைகள் எல்லாம் தள தள என்று ஆடின. நான்  எமன் கண்ணருகில் தெரிகிரானா என்று தேடிக்கொண்டிருந்தேன்.

பயிட்சியாளர் தனது கையில் பூட்டியிருந்த புகைப்படக்கருவியை இயக்கி என்னைப் படம் எடுத்துக் கொண்டிருந்தார். சில நொடிகளின் பின்பு பயிட்சியாளர் பரசூட்“இனை இயக்கினார். பயிட்சியாளர் பரசூட் கயிற்றினை இழுத்தபோது வானத்தை நோக்கி எம்மை இழுத்துக் கொண்டு போனது பரசூட். வயிற்றுக்கள் ஏதோ செய்வது போலிருந்தது எனக்கு. சற்று நேரத்தில் அழகாய் விரிந்து மெதுவாய் ஆடி ஆடி இறங்கத் தொடங்கியது.

James Bond ஆக நடித்த அந்தக் காலத்து கதாநாயகன் Roger Moore ஒரு படத்தில் தங்கப்பல்லினைக்கொண்ட வில்லனுடன் இப்படி விமானத்தில் இருந்து பாய்ந்து சண்டை பிடித்தது நினைவில் ஆட, என்னையும் James Bond ஆக நினைத்துக் கொண்டேன்.

எறும்புகள் ஒரு பாதையில் போவது போல மிகச் சிறிதாய் தெரிந்தன வாகனங்களும்,வீதிகளும். பயிட்சியாளர்  என்னை பரசூட்டை இயக்க விட்டார். நானும் சிறுபிள்ளை போல் அதை அங்கும் இங்கும் ஆட்டி இயக்கிப் பார்த்தேன். நாம் இறங்கும் இடம் தூரத்தில் தெரிந்து, மெது மெதுவாய் அருகில் வந்தது.

பயிட்சியாளர் கற்றுத் தந்தது போன்று உனது தொடைகள் இரண்டையும் இரு கைகளாலும் தூக்கிப் பிடிக்,க அவர் மெதுவாக என்னை உயிருடன் பூலோகத்தில் மீண்டும் இறக்கிவிட்டார்.

தங்கை பேயைப் பார்ப்பது போல் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். நான் பேய் இல்லை என்று உறுதி செய்து கொண்ட சற்று நேரத்தின் பின் தான் புன்னகைத்தாள்.

பயிட்சியாளருக்கு நன்றி சொல்லி, மறக்காமல் வீடியோவையும் பெற்றுக்ண்டேன். நாம் வீடு திரும்பியபோது  தங்கை ஏதும் பேசாது  காரோடினாள். நான் வானத்தால் விழுந்த அலுப்பில் தூங்கியிருந்தேன்.

என்னை யாராவது ”நீ என்ன வானத்தால விழுந்தவனா” என்று கேட்டால், ஓம் நான் வானத்தால விழுந்தவன் தான் என்று பதில சொல்ல யோசித்திருக்கிறேன்.

இன்றைய நாளும் நல்லதே.வீடியோ லிங்க்
http://www.facebook.com/video/video.php?v=1158887298742

.

சிறுத்துப்போன உலகமும், சில மனிதர்களும்


தம்பி இந்த இன்டர்நேட் பிரச்சனையாயிருக்குது. ஒருக்கா வாறீங்களோ என்று தமிழில் அழைத்தபடி அறிமுகமாயினார், அந்த அம்மா. சரி நாளைக்கு வாறேன் என்றேன்.

இன்று காலையும் மீண்டும் அழைத்தார். அம்மா! பின்னேரம் 8 மணிபோல் வருகிறேன் என்றேன். சொன்ன மாதிரி 8 மணிபோல், இந்த பனிக்காலத்தின் முதல் பனி கொட்டிக் கொண்டிருக்கும் போது போய் இறங்கினேன். விலாசம் சற்று குழப்பமாயிருந்ததால் தொலைபேசினேன். பொறுங்க மகன், எனது மகனை அனுப்புகிறேன் என்று சொல்லி மகனை தொடர்மாடி வீட்டின் வாசலுக்கு அனுப்பினார்.

கொட்டும் பனியில் அவரும் காத்திருந்து, என்னை அழைத்துப் போனார். லிவ்ட் இல் 9ம் மாடிக்குப் போனோம். வீட்டுக் கதவை திறந்ததும் வீட்டின் வாசனையும் இது தமிழ் வீடு தான் என்று உறுதி செய்தது.

என்னுடன்  கதைத்தது தான் தான் என அறிமுகம் செய்து கொண்டார் அம்மா. எனது அம்மாவுக்கு தங்கையாய் இருக்கும் வயதிருக்கும் அவருக்கு. அட இந்த வயதில் இன்டர்நெட் இல்லாமல் கஸ்டப்படும் அளவுக்கு கணணி பாவிப்பவரோ என அதிசயத்து, அம்மா! கொம்பியூட்டர காட்டுங்கோ என்றேன்.

என்ன கொம்பியூட்டரோ? அதென்னத்துக்கு .......என்று அவர் ஒரு போடு போட்டார், சற்று ஆடித்தான் போனேன்.

என்ன கொம்பியூட்டர் இல்லையா என்றேன். இல்லையே.. அது கட்டாயம் இருக்கோணுமோ என்றார்.. உண்மையான அப்பாவியாய்.

எனது காதுக்குள் வடிவேலுவின் ”ஆகா” என்றும் டயலாக் கேட்டது.

அம்மா.. இன்டர்நெட் பூட்டத்தானே அழைத்தீர்கள்.  இப்ப கொம்பியூட்டர் இல்லை என்றால் நான் எப்படி வேலை செய்வது என்றேன்.

டேய் .. அண்ணா கொம்பியூட்டர் வாங்கவேணும் என்று சொன்னவனே என்றார் மகனைப் பார்த்து. அவரும் இல்லையே என்று தலை அங்கும் இங்கும் ஆட்டினார்.

அப்போது தான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் இருந்த அந்த சின்ன பெட்டி கண்ணில் பட்டது. புரிந்தது அம்மாவின் பிரச்சனை.

இதற்கிடையில் அம்மா சுவிஸ்க்கு போன் போட, மகன் என்னைப் பார்த்து இந்த பெட்டிக்கு இன்டர்நெட் பூட்டுங்கோ என்றார். சுவிஸ்லாந்தில் இருந்த மகன் தொலைபேசியை எடுக்காததால், அம்மாவின் கவனம் என்னை நோக்கித் திரும்பியது.

தம்பி, நான் இந்த வீட்டில 15 வருசமா இருக்கிறேன்.. ஆனா தமிழ் டீவி வருகுதில்லை. சட்டி பூட்டுற ஆக்கள் நாலைந்து பேர் வந்து பார்த்திட்டு கையைவிரிச்சுப் போட்டாங்கள். நான் வாடகைக்கு கொப்பி எடுத்து படமும், நாடகம் பார்க்கிற நான். ஆனா இப்ப அந்த கடையும் பூட்டிட்டாங்கள். அதால சுவிசில இருக்கிற மகன், கனடாவில இருக்கிற ஒரு ஆளுட்ட சொல்லி இந்த பெட்டிய, நான் கனடா போயிருந்த நேரம் எடுப்பிச்சு தந்தவன் என்றார்.

நான் நாடகம் பார்க்க இத பூட்டித்தாய்யா என்றார் மிகுந்த வாஞ்சையுடன் (உண்மையான வாஞ்சையுடன்).

சரி என்று சொல்லி ஒரு விதமாய் அதைப் பூட்டி சன் டீவியை ஓட விட்டேன். படமும், ஒலியும் விக்கி விக்கி வந்தது.
தம்பி என்ன விக்குது என்றார், அம்மா.
எனக்கு உதவியாய் அவரின் மகன் வந்து, அம்மா அண்‌ணை இடைக்கிடை விக்கும் என்று சொன்னவர் என்றார். அது எனக்கு ஆறுதலாயிருந்தது.

தம்பி கோப்பி தாறன் என்றார். சரி சீனி போடாதீங்கம்மா என்றேன். சரி என்றார். கோப்பியும் வந்தது. குடித்தபடியே பூராயம் விசாரித்தார். தனக்கு 6 பெடியங்கள் என்றும் பெண் குழந்தை இல்லை என்பது வேதனை என்றும் சொன்னார். உங்களுக் 6 மருமகள்மார் இருக்கினம் பிறகு என்ன கவலை என்றேன்.

குசும்புச் சிரிப்புடன் அவளவ நான் போனால் என்ட கையைத் தான் பார்ப்பார்கள் என்ன கொண்டு வந்திருக்கிறேன் என்றார். மகள் மகள் தான். மருமகள் மருமகள் தான் என்றார். என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை.

தம்பி எந்த ஊர் என்றார். ஏறாவூர் என்ற போது மட்டுக்களப்போ என்றார். ம் என்றேன். என்ட மகன் மட்டக்களப்பில தான் இருக்கிறார் என்றார். கல்லடியில் ஒரு வீதியைக் குறிப்பிட்டு அங்கு ஒரு பிரபலமான டீச்சரை திருமண முடித்திருக்கிறார் என்றார். எனது மண்டையில் ஏதோ பொறி தட்டியது போலிருந்தது. பொறுங்கள்.. என்று சொல்லி எனக்கு பாடம் கற்பித்த ஒரு ஆசிரியரின் பெயரைச் சொல்லி அவரா என்றேன். ஆம் ஆனால் அது அவர் திருமணம் முடிக்க முதல் இருந்த‌ பெயர் என்றவுடன், நான் ஆசிரியரின் கணவரின் பெயரைச் சொன்னேன்.

அட.. அப்ப என்ட மூத்தவனையும் உனக்குத் தெரியுமோ என்றார். இல்லை, ஆனால் பெயரைக் கேட்‌டிருக்கிறேன் என்றேன். அத்துடன், நீ வருமுன் தான் உன்ட டீச்சரோட கதைத்தேன் என்றார்.

அதன் பின் பேச்சு எங்கெல்லாமோ சுற்றி.. எனது குடும்பத்தினுள் புகுந்தது. இரண்டும் பெண் குழந்தைகள் என்றவுடன் நீ குடுத்து வைத்தவன் என்றார். புன்னகைத்தேன்.

அப்ப மனிசியும் ஏறாவூரோ என்றார்?  இல்லை திருகோணமலை என்றேன். எவிடம் என்ற போது.. வீதியின் பெயரைச் சொன்னேன். கோயிலுக்கு முன்பா என்றார். ம்.. என்ற போது சற்று அதிகமாய் சிந்தித்தவர்.. ஒருவரின் பெயரைச் சொல்லி இன்னாரின் தமக்கையின் மகளா என்றார்.

ஆம் என்றேன்.
அப்ப  நீங்களும் எனக்கு சொந்தம் மாதிரித்தான் என்றார். புன்னகையுடன்.

நான் அங்கு நின்றிருந்த ஒரு மணிநேரமும் மிகுந்த அன்புடனும், அன்னியோன்யமாகவும் பழகினார்.

தம்பி ஏதும் தேவை என்றால் வந்து உதவி செய்யோனும் என்று வழியனுப்பிய போது, நிட்சயமாக என்று பதில் என்னையறியாமலே வந்து விழுந்தது.

நேர்வேஜியர்கள் இப்படி எதிர்பாராத மனித சந்திப்புக்ளை ”உலகம் சிறியது” என்னும் அர்த்தமுடைய சொற்றொடர் ஒன்றினால் வர்ணிப்பதுண்டு.

ஆம்.. உலகம் மிகச் சிறியது என நான் அறிந்திருந்தாலும்.. அது இவ்வளவு சிறியதாயிருக்கும் என எதிர்பார்க்கவில்லை.

இன்னுமோர் நாள் இந்த உலகம் இதை விட மிக மிகச் சிறியதாயிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை

இன்றைய நாளும் நல்லதே!


.

பூலான்தேவியின் கொள்ளைகள்

இந்தக் கதை ஏறத்தாள 25 வருடப் பழசான கதை தான்.

அப்போ எனக்கு 18 வயதிருக்கும். ஏ. எல் எடுத்து விட்டு சுளட்டித்திரிந்த காலம். ஊரில இருந்த தகரடப்பா பொண்ணுங்கெல்லாம் தேவைக்கு அதிகமாகவே அழகாகத் தெரிந்த காலம். நேரமே இல்லாம சைட அ‌டித்துக் கொண்டும், நண்பர்கள் சைட அடிக்கும் பிகருகளுக்கு பின்னால் நண்பர்களை சைக்கிலில் ஏற்றியபடியே ரொம்பவே பிசியாக ஓடித்திருந்துகொண்டிருந்தேன்.

நம்ம வீட்டில ”தங்கச்சி” என்ற பெயரில ஒரு பூலான்தேவி இருந்தாள். அவள்பண்ணிய இம்சை கொஞ்ச நஞ்சமல்ல? அவளின் அட்டகாசங்களில் முக்கிய அட்டகாசம் பற்றிய கதையே இது.

அதிரடிப்படையும், சிறப்பு போலீசும் நம்ம தம்பியை நன்றாக ”கவனித்ததால்” அம்மா தனது இளையபுத்திரனை லண்டனுக்கு அனுப்பினார். அதனால் தங்கையை தினமும் பாடசாலைக்கு போகும் வாகனத்தில் அவளை ஏற்றிவிடுவது எனது வேலையாகிப் போனது.

காலை 7மணியளவில் தங்கை பாடசாலைக்குப் போகும் வாகனம் ஒரு கடையருகில் வந்துநின்றதும் அவளை அதில் ஏற்றிவிட்டு நானும் வெள்ளைச்சட்டைகளைப் பார்க்கப் போவது வழக்கம். என்னைப் போல் கடமையுணர்வுள்ள சில நண்பர்களும் எனக்காக காத்திருப்பார்கள்.

தங்கை முதல் முதலில் பாடசாலைக்குப் சென்ற மாதங்கள் ஒரு வித பிரச்சனையுமில்லாமல் கடந்துபோயின. சைக்கிலில் அழைத்து வருவேன். வரும் வழியெல்லாம் அந்த பூலான்தேவி தன் வாயையே துப்பாக்கியாக்கி, கேள்விகளை தோட்டாக்களாக்கி, என்னைச் சுட்டபடியே‌ வருவாள். (முற்பிறப்பில் பல்குழல் பீரங்கியாக இருந்திருப்பாளோ?)

பாழாய்ப் போன யாரோ எனது தங்கைக்கு கள்ளத் தீனி உண்ணும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவளுக்கும் ருசி பிடித்துக்கொண்டது. ஆனால் காசுக்கு எங்கேபோவது என்னும் பிரச்சனை வந்த போதுதான் அவள் பூலான்தேவியாக மாறினாள்.

அன்றும் சைக்கிலில் ஏற்றிவந்தேன், அவளை. அவள் செல்லவேண்டிய வாகனம் நிறுத்தும் கடையருகே வந்ததும் வழமை போல் இறங்கிக் கொள்வாள், நாமும் நமது கடமையைச் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் அவளோ நான் இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

அன்பாய் சொன்னேன், மறுத்தாள்.

செல்லமாய் கூறிப்பார்த்தேன், தலை அங்கும் இங்கும் ஆட்டினாள்

சற்று மெது உஸ்ணத்துடன் சொல்லவேண்டியதாயிற்று, அதையும் மறுத்தாள்.

இறங்கிப் போடீ, இல்லாட்டி அம்மாட்ட சொல்லுவேன் என்றேன், நக்கலாய் சிரித்தபடி மறுத்தாள்.

பயங்கரமாய் வெருட்டினேன், கண்களை குழமாக்கி அழுதபடியே மறுத்தாள்.

எனக்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. பெண்களுக்கான பஸ்கள் எல்லாம் போய்விடும் என்ற கவலையில் பிரசரும் ஏறிக்கொண்டிருந்தது.

”சரி.. அண்ணா இண்டைக்கு 10 சதம் தாறன் இறங்கிப் போங்கோ” என்றேன். பூலான்தேவி சிரித்தபடியே கையை நீட்டினாள். நானும் முதன் முதலாய் லஞ்சம் (கப்பம்) கொடுத்தேன். துள்ளிக் குதித்து ஓடினாள், அவளின் வாகனத்துக்கு.

எனது கடமையின் அவசரத்தில் இதை நான் பெரிதாய் எடுக்கவுமில்லை, ஞாபகத்தில் வைக்கவுமில்லை.

அடுத்தநாளும் வந்தது. அன்றும் அழுதாள். நானும் 10 சதம் வெட்டினேன்.

இப்படித் தொடங்கிய கொள்ளை காலப்போக்கில் 20 - 30சதம் என்று அதிகரித்து, காலப்போக்கில் 50 சதமாகுமளவுக்கு அதிகரித்தது. அம்மாவிடம் வீட்டில் கூறமுடியாதிருந்தது. நீயே அவளை பாடசாலையில் கொண்டு போய் விட்டு விட்டு வா என்றால்... சகலதும் சிக்கலாகிவிடும் என்பதால் அடக்கியே வாசித்தேன்.

அந் நாட்களில் போலீஸ்காரன் பெண்டாட்டியான எனது அம்மா காசு வைக்கும் பெட்டியில் இருந்து தினமும் 2-3 ரூபா திருடுவது எனது வழக்கமாய் இருந்தது. தினமும், படம் பார்க்கவும் இதர செலவுகளுக்கும், அது போதுமானதாகவிருந்தது.

அந்தக் பணத்தில் 50 சதத்தை பூலான்தேவி தினமும் பகல்கொள்ளையடித்துக் கொண்டிருந்தாள். எனக்கு இது பலத்த பொருளாதார சிக்கலை ஏற்படுத்தியிருந்தது மட்டுமல்ல நண்பர்கள் மத்தியில் மானப்பிரச்சனையையும் ஏற்படுத்தியது. அதை பல வழிகளில் முயன்றும் நிறுத்த முடியவில்லை.

1985 இன் இறுதியில், நான் ஊரில் இருந்து புறப்படும் வரை, பூலான் தேவி என்னிடம் தினமும் கொள்ளையடித்தபடியேயிருந்தாள்.

இருபது வருடங்களுக்கு பின்பான ஒரு சுப முகூர்த்தத்தில் பரணீதரன் என்றொரு கொள்ளைக்காரன் எங்கள் பூலான்தேவியை கொள்ளையிட்டுப்போனார், தான் ஒரு கொள்ளைக்காறியை கொள்ளையடிக்கிறேன் என்பது தெரியாமலே.

தற்போது சிட்னி மாநகரத்தில் தன்னைக் கொள்ளையடித்த கொள்ளைக்காரனையே கொள்ளையடித்துக்கொண்டிருக்கிறாளாம் எங்கள் பூலான்தேவி.

தொட்டில் பழக்கம் சுடுகாடு வரைக்கும் என்று சும்மாவா சொன்னார்கள்.

எங்கள் பூலான்தேவிக்கு இது சமர்ப்பணம்


.

33 வருட ரகசியம்: அவளும் கோயிலும் நானும்

சர்வதேச ராணுவ ரகசியங்கள், உள் நாட்டு அரசியல் ரகசியங்கள் என்பவை 30 ஆண்டுகளின் பின் காலாவதியானவை என அறிவிக்கப்பட்டு அந்த ரகசியங்கள் வெளிவருவது போலத் தான் இந்தக் கதையும். ஏறக்குறைய 33-34 வருடங்களுக்கு முன்னான ரகசியம் இது. இன்று வரை பகிரப்படாத கதை. 

இனி இது ரகசியமில்லை.

கதைக்குப் போவோம் வாருங்கள்.....

காலம்: 1977ம் அல்லது 1978ம் ஆண்டு.
இடம்: இந்தப் பிரபஞ்சத்திலேயே அழகான மட்டக்களப்பு நகரமும், என் பாடசாலையும், அங்கிருந்த விடுதியும், ஆனைப்பந்தி கோயிலும், ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியும்.

பாத்திரங்கள்: 33 ஆண்டுகளுக்கு முன்னிருந்த நானும், அந்த வெள்ளைச்சட்டை, வெள்ளைப்பாவாடைத் தேவதையும்.

எனது பால்யக் காலங்கங்களில் பல ஆண்டுகள் விடுதி வாழ்க்கை என்று விதிக்கப்பட்டிருந்தது. விடுதி வாழ்க்கை என்பது இயந்திரமாக்கப்பட்ட வாழ்க்கை. அன்புக்காக ஏங்கி, ஏங்கி வாழும் வாழ்க்கை அது. அப்படிப்பட்ட வாழ்க்கையையும் அழகாக்கிய நிகழ்வு இது.

அந் நாட்களில் வெள்ளிக்கிழமைகளில் கோயிலுக்கும், சனிக்கிழமைகளில் 2 மணிநேரம் வெளியில் செல்லவும் அனுமதிப்பார்கள். படம் பார்ப்பதற்கு அனுமதி கிடைப்பது விடுதிக்கு பொறுப்பான ஆசிரியரின் மனநிலையைப் பொறுத்தது. அத்தி பூத்தாற் போல் அதற்கும் அனுமதி கிடைக்கும்.

ஆனால், வெள்ளிக்கிழமைகளில் ஆனைப்பந்தி கோயிலுக்கு போவது என்றால் அன்று காலையே மனம் ஆனந்தக்கூத்தாடத் தொடங்கிவிடும். காரணம் பக்தியல்ல, வெள்ளி இரவு படிப்பு இல்லாமல் போவதும், கோயில்புக்கையும், மோதகமும், புறக்கித் தின்னும் தேங்காய்ச் சொட்டும் தான்.


1976இல் விடுதியில் சேர்ந்த பின் பல வெள்ளிக்கிழமைகள் கடந்து போயின. எனக்கும் பதின்மக்காலங்கள் புகுந்து தனது விளையாட்டுக்களை அரம்பித்திருப்பதை நான் அன்று உணர்ந்திருக்காவிடினும் இன்று அது நன்காகவே புரிகிறது.

அதே கோயிலுக்கு நாம் ஒவ்வொரு வெள்ளியும் கோயிலுக்குப் போவது போல ஆனைப்பந்தி பாடசாலையின் பெண்கள் விடுதியில் இருந்தும் பெண்கள் (சிறுமிகள்) வருவார்கள். இவர்களை நான் கண்டுகொள்வதில்லை. அவர்களும் என்னை கண்டுகொள்வதில்லை. நானும் கோயில்புக்கையும், தேங்காய் சொட்டுமாய் எனது உலகம் உறுண்டோடிக் கொண்டிருந்தது.

அந்த சிறுமிகளில் ஒருத்தி (சத்தியமாய் இன்றும் பெயர் தெரியாது) ஒவ்வொரு வெள்ளியும் தேவாரம் பாடுவாள். உருகி உருகிப் பாடுவாள். கேட்பவர்களையும் உருக்கும் குரல் அது. அவள் தேவாரம் பாடும் நேரம் மட்டும் எனது எண்ணம் கோயிலில் இருக்கும். மற்றய நேரங்களில் பிள்ளையாருக்கு படைத்திருக்கும் புக்கையிலும், மோதகத்திலும் இருக்கும். பிள்ளையாரும் அதைக் கண்டுகொள்ளவில்லை, வழமை போல.

அதுவும் ஒரு வெள்ளிக்கிழமை தான். வழமை போல் வேட்டி, திறுநீறு சந்தனத்துடன் கோயில் மணலில் விளையாடிக் கொண்டிருந்தேன். தேவாரம் பாடும் பெண் கோயிலுக்குள் வந்து கும்பிட்டபடியே உள்வீதி சுற்றிவந்த கொண்டிருந்தாள். மனதுக்குள் ஏதோ செய்தது. அவளைப் பார்த்தபடியே இருந்தேன். நான் இருப்பதை அவள் கவனிக்கவேயில்லை. தேவாரங்களை முணுமுணுத்தபடியே கடந்து போனாள்.

அன்று தொடங்கியது ஹோர்மோன்களின் ஆட்டம்.
மனம் அவளையே தேடியது. தேவாரம் படிப்பதற்காக முன்னால் நிற்பாள். அன்று முதல் நானும் நின்றேன். அவள் தேவாரம் படிக்கத் தொடங்குவதும் தெரியாது, படித்து முடிப்பதும் தெரியாது. அவளின் முகம் மட்டுமே தெரியும். கண்மூடி, அவள் தன்னிலை மறந்து தேவாரம் படித்த போது நானோ என்னிலை மறந்து அவளைப் படித்துக் கொண்டிருப்பேன். இதுவும் ஓருவித பக்தி தான்.

அமைதியான அழகுடன் இருப்பாள். தலையில் மல்லிகைப் பூவிருக்கும். கூப்பியிருக்கும் அவள் கைகளில் பிளாஸ்டிக் காப்புகள் இருக்கும். வெள்ளை சட்டையும், பழுப்படித்துப் போயிருந்த வெள்ளை பாவாடையுமாய் நின்றிருப்பாள்.

அன்று தொலைந்தவன் தான் அதன் பின் வந்த சில மாதங்கள் தொலைந்து போயிருந்தேன். ஒவ்வொரு வெள்ளியும் திருவிழா தான். வியாழன் இரவே எப்படா விடியும் என்றிருப்பேன். வெள்ளி மாலை குளித்து, மற்றவர்களுடன் வரிசையாக நடந்து கோயிலுக்குள் போனால் அவள் வரும் வரை மனது தவியாய் தவிக்கும். கண்டதும் அமைதி கொள்ளும். அப்பா அடித்து, அடித்து கற்பித்த தேவாரமெல்லாவற்றையும் அவள் அடிக்காமலும், கற்றுத் தராமலும் கற்பித்தாள். சமர்த்தாய் கற்றுக்கொண்டேன்.

தேங்காய் சொட்டு புறக்குபவர்களும், மோதகத்துக்கு அடிபடுகிறவர்களும் ஏதோ அற்பப் பிராணிகளைப் போல் தெரிந்தார்கள். அவர்களும் போட்டிக்கு ஒருவன் குறைந்துவிட்டான் என்பதால் மகிழ்ச்சியாய் இருந்தார்கள்.  பட்டினியாய் விடுதிக்குப் போனாலும், மனம் நிரம்பியிருக்கும்.

அவளுடனான அந்த நாட்களில் ஒரு துளியேனும் காமம் என்னும்  சொல்லுக்கு இடமிருக்கவில்லை.. எழுத்தில் சொல்லமுடியாத பரிசுத்தமான மகிழ்ச்சியான நிலையை மட்டுமே தந்து போன அனுபவமது.

ஒரு முறை மட்டும் இரு வார்த்தைகள் பேசினேன் அவளுடன். கோயிலில் திருவிழாவின் போது அய்யர் தேவாரம் படிப்பவளை தேடினார். என்னையும் தேடச் சொன்னார். தேடாமலே அறிந்திருந்தேன் அவளிடத்தை.  அவளிடம் சென்று ”அய்யா வரட்டாம்” என்றேன். நிமிர்ந்து பார்த்தாள் என்னை. என்னால் பார்க்கமுடியவில்லை. கொலுசின் ஒலி கேட்க ஓடினாள். பதட்டம் குறைந்ததும் நானும் ஓடி அவளுக்கு எதிர் வரிசையில் நின்ற போது

” இடரினும் தளரினும் எனதுறு நோய்
தொடரினும் உன்கழல் தொழுதெழுவேன்”

என்று கண்மூடி உருகிக் கொண்டிருந்தாள். ”அய்யா வரட்டாம்” என்ற அந்த  இரு வசனங்களைக் கொண்ட காட்சி எனது மனத் திரையரங்கில் 100 நாட்களுக்கு மெலாக ஓடி சாதனை புரிந்தது என்பதை அவளுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை.

சில மாதங்களின் பின் அவளின் வருகை நின்று போனது. ஆரம்பத்தில் கஸ்டமாயிருந்தாலும், சில காலங்களில் அவள் ஞாபகத்தில் இருந்தும் மறைந்து போனாள்.

எனக்கு அவளைத் தெரியும், அவளுக்கு நான் யார் என்றே தெரியாது.

ஒரு வேளை நான் நினைப்பது போல, எனக்கு அவனைத் தெரியும், அவனுக்கு என்னைத் தெரிந்திருக்காது என்று இந்த 33 ஆண்டுகளில் ஒரு நாளாவது அவள் நினைத்திருகக்கூடுமோ?

நினைத்திருக்கலாம்.

நினைவுகள் தாலாட்டும் என்று எங்கோ கேட்ட ஞாபகம் வருகிறது.


.

என் இளவரசியும், கண்முன்னே விரியும் அதள பாதாளமும்


எனது 100 வது பதிவு இது. எனது அனுபவங்களை ஏதோ ஒருஆர்வத்தில் எழுதத் தொடங்கி எறக்குறைய 99 அனுபவகளை பதிந்தாகிவிட்டது.

இன்று, எனது இளைய மகளின் 10வது பிறந்த நாள்.அவளின் பிறந்த நாளும், எனது 100வது பதிவும் தற்செயலானவையே. வாழ்க்கை எமக்கு தந்து போகும் பல சம்பவங்களைப் போல.

இன்றைய பதிவு, மகள் எனக்குத் தந்த இனிமையான, ஈரலிப்பான நினைவுகளை சுமந்து வருகிறது. குழந்தைகளுடன் வாழும் ஒவ்வொரு நாளும் இனிமையான, சுகமான நாட்களாகவே இருக்கின்றன, தினமும் வாழ்வு தன் வலிமையைக் காட்டிப் போகினும் கூட.

2000மாம் ஆண்டு ஐப்பசி மாதம் 15ம் திகதி ஞாயிற்றுக்கிழமை மதியம் ஒரு மணி போல் வடமேற்கு நோர்வேயின் மலைகளுக்கும், மலைகளைச் சூழ்திருந்த கடலேரிகளுக்கும் நடுவில் அமைந்திருந்த ஒரு மகப்பேற்று மருத்துவமனையின் ஒரு அறையில் ஒலித்துக்கொண்டிந்த மெதுவான பியானோ இசைக்கு மத்தியில், தாயின் அலரலையும் தாண்டி, பியானோ இசையை விட இனிமையான அழுகையுடன் என்னுடன் அறிமுகமாகினாள் ”அட்சயா மாதுமை” என்னும் எனது பூக்குட்டி.

ரத்தமும் சதையும் கலந்திருந்தவளின் தொப்புள் கொடியை என்னை வெட்ட அனுமதித்தார்கள். பயந்து பயந்து வெட்டினேன். அதன் பின்பே தாயிடம் போனாள்.

முதன்முதலில் மூத்த மகளை தூக்கும் போதிருந்த அநாவசியமான பயங்கள் மனதிலிருந்து அன்றிருந்தது, அனுபவம் தந்து போயிருந்த பாடங்களால்.
தாய்ப்பாலை தவிர்த்து தாய்க்குச் சமனாய் கவனித்துக் கொண்டேன் அவளை. மெதுவாய் நிலைகொள்ளத் தொடங்கிய கண்கள் என்னைப் பார்த்திருக்கும் போது உலகமே மறந்து போகும். பின்பு என்னைப் பார்த்து புன்னகைத்த போது காற்றில் பஞ்சாயிருந்தது மனது.

குளிப்பாட்டி,உணவூட்டி, பால் பருக்கி, உலாவி வந்து, தாலாட்டுப் பாடி அவள் தூங்கும் போது, நானும் தூங்கிப் போவேன் அவளருகில்.

முகமெல்லாம் எச்சில் முத்தம் தந்து,
மெதுநடை பயின்று,
பா.. ப்பா, அப்பா என்று அழைத்து,
கழுத்தில் அமர்ந்து இளவரசி போல் ஊர் உலாவந்து,
அழுது அமர்களம் பண்ணி,
கண்டதும் ஒடிவந்து கட்டியணைத்து
பொம்மைகளுடன் விளையாடி, மகிழ்ந்து
என்னைப் போல் முகச்சவரம் செய்ய அடம் பிடித்து
முகம் முழுக்க சவர்க்காரம் பூசி, கையால் சவரம் செய்து
கேள்விகளாலேயே உலகம் பயின்றிருந்த போது
அவளுக்கு வயது நான்காயிருந்தது.

அவளின் சிறுவர் பூங்கா நண்பிகள் எனக்கும் நண்பிகளாய் இருந்தனர். பூக்களுடன் வாழ்ந்திருந்த காலம் அது.


முச்சக்கர வண்டியில் இருந்து இரு சக்கர வண்டிக்கு மாறிய நாளும் மறக்க முடியாதது. அப்பா விடாதே பிடி என்று உத்தரவிட்டு, மெதுவாய் ஓடி, சற்று வேகமெடுத்து தனியே, ஓடி நான் இல்லாதிருப்பதை உணர்ந்து, விழுந்து, அழுது, மீண்டும் தனியே ஓடியபோது பெருமித்தில் உலாவியது அவள் மட்டுமல்ல நானும் தான். அதன் பின்னே ஆனந்தமான சைக்கில் பயணங்கள் பல தந்ததும் அவளே.

ஒரு முறை டென்மார்க் போயிருந்த போது, உடுப்புக்கடையினுள் நின்றவளை கணநேரத்தில் தவற விட்டனால்,கடைகளெல்லாம் தேடிக் களைத்து நெஞ்சு பட படக்க பயந்திருந்த போது அருகில் க்ளுக் என்று சிரிப்புச்சத்தத்துடன் உடைகளுக்குப் பின்னால் ஓளிந்திருந்தாள். போயிருந்த உயிர் மீண்டிருந்தது எமக்கு.


பொம்மைகளின் உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்தியவர்களில் இவளும் ஒருத்தி. Barby, Bratz, Moxy girls என்று பொம்மைகளின் பெயர்கள், உடைகள், அலங்காரப் பொருட்கள், வாகனங்கள், விளையாட்டுப் பொருட்கள் என ஒரு உலகத்தையே உருவாக்கி என்னையும் சேர்த்து விளையாடுவாள். புரியாததையும் புரிந்ததாய் காட்டியும், புரிந்தததை புரியாததாய் காட்டியும் கடந்து வந்த காலங்கள் அவை. அறிஞர்கள் அவையில் அறிவாளியாவதை விட குழந்தைகளின் உலகில் முட்டாளவதே மகிழ்ச்சியைத் தரும் என வாசித்தறிந்த வார்த்தைகளின் உண்மையும் புரிந்தது இங்கு தான்.

5 வயதில் ஒரு முறை விடுமுறையின் பெட்டி பெட்டியாய் stroberry வாங்கி வந்து பாலும், சீனியும் கலந்து வயிறு முட்ட அவற்றை உண்டு முடித்த போது உடம்மை அசைக்க முடியாததனால் அவ்விடத்திலேயே தூங்கிப் போனோம் நாமிருவரும். இன்றும் அதை அடிக்கடி ஞாபகப்படுத்தி பழைய நினைவுகளுக்குள் பயணிக்கும் பழக்கத்தையும் கொண்டிருக்கிறாள் என்பது என்னைப் பெருமைப்படுத்தும் விடயங்களில் ஒன்று.

பழங்கதைகளில் பெரு விருப்பம் கொண்டவள். எனது சிறுபிராயத்துக் கதைகளை கேட்டுச்சிரிப்பாள். அப்பப்பா உங்களுக்கு அடித்தாரா என்பாள் கண்கள் விரிந்த ஆச்சர்யத்தில்? தினமும் படுக்கும் போது புதிய கதைகளை அவளுக்காகவே உருவாக்க வேண்டியிருந்தாலும் என் மனமும் சலிக்காமல் அதையே செய்கிறது.

முதலாம் வகுப்பில் சேர்ந்த அன்று பெருமையாய் ஆசிரியரைப் பற்றியும், நண்பகளைப் பற்றியும் சொன்னவள், சொன்னாள் தான் பெரியவளாய் வந்து விளையாட்டுச் சாமான் விற்கும் கடையில் வேலை செய்யப் போவதாக. அதற்கும் சம்மதித்து தலை ஆட்டினேன். பரிசாய் தந்தாள் முத்தமொன்று. இடையிடையே அவள் எதிர்காலத் திட்டங்கள் மாறின. ஓரு நாள் தான் ஆசியர் என்பாள், மறு நாள் வைத்தியர் என்பாள் தற்போது விஞ்ஞானி என்கிறாள்.. அதற்கும் தலையாட்டிக் கொண்டுதானிருக்கிறேன்.. முத்தம் கிடைக்கும் என்ற நப்பாசையில்.

பூனை வேண்டும் என்று குதித்து, ஒரு பூனையைப் பெற்றுக்கொண்டாள்.அப் பூனையும் அவளையே சுற்றி நடந்தது, ஓடியது, விளையாடியது, படுத்தது.  பூனையைப் பிரிந்து வேறு நாடு வந்த பின்பும் அப் பூனையை மட்டும் மறக்காமல் இருக்கிறாள்.

விளையாடி கையை முறித்துக் கொண்டாள், தேனீக்களின் கூட்டைக் கலைத்து குத்து வாங்கினாள், விரலை கூர்மையான கத்தியால் வெட்டிக் கொண்டாள், அதற்கு 8 தையல் போட்ட போது அழாமலும் ஆச்சர்யப்படுத்தினாள், அப்பாவின் முதுகில் நடந்து நடந்து அப்பாவின் முதுகு நோவிற்கு மருந்திட்டாள். அப்பாவை யானையாக்கி தன்னை பாகனாக்கினாள்.

தற்போது எனது உடைகளையும் தேர்ந்தெடுக்கிறாள், கேட்டால், உனக்கு உடைகளை‌ தேர்வு செய்யத் தெரியவில்லை என்றும் ‌no colour sence என்றும் குற்றம் சுமத்துகிறாள். 45 வருட விதிமுறைகளை சொற்ப நேரத்தில் உடைத்தெறிகிறாள், ஏதிர்க்கும் இயலாமையை உணர்ந்தாலும் ஏனோ உயிர்க்கிறேன்.

இவ்வுலகத்தில் எனக்கு தலைமயிரில்லை என்பதையிட்டு வருந்துபவள் அவள் மட்டுமே. அன்றொரு நாள் வாய்க்கு லிப்ஸ்டிக்கும், கண்ணுக்கு மையும், காதுக்கு தோடும், நெற்றியில் (மொட்டையில்) உச்சிப்பட்டமும் அணிவித்துச் சிரித்தாள். நான் அ‌ழகாய் இருந்தேனாம் என்றாள் குறும்புச் சிரிப்புடன்.

சில வருடங்களுக்கு முன் இப்படித்தான் இவளின் அக்காவும் அப்பா!..அப்பா! யாதும் என் அப்பாவே! என்றிருந்தாள் 11-12 வயது வரை.

அவள் இப்போ தாயுடன் நண்பியாகி விட்டாள் அவள். இதன் பின் அப்பாவை கண்டு கொள்கிறாள் இல்லை. மவுசு இழந்த தென்னிந்திய கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். அதை ஜீரணிக்க முடியாது தவித்துக் கொண்டிருக்கிறேன் இன்று வரை.

இளையவளின் கதாநாயகனாய் இருந்ததால் பெரியவயளுடனான இடைவெளியை இலகுவாய் கடந்து கொண்டேன். ஆனால் இவளும் தாயுடன் நண்பியாகும் காலம் அதிக தூரத்தில் இல்லை என்னும் நினைப்பே பயத்தைத் தருகிறது. தனித்து விடுவேனோ என்னும் பயம் அதள பாதாளம் போல் என் முன்னே தெரிகிறது.

ஆனால் வாழ்வு அதற்கும் ஒரு பதிலை வைத்திருக்கும்.

பதின்மக்காலத்தின் பின் குழந்தைகள் மீண்டும் தந்தையிடம் வருவார்கள் என்கிறர்கள் அனுபவஸ்தர்கள்.

நானும் கைவிரித்துக் காத்திருப்பேன், அவர்கள் தந்திருக்கும் நினைவுகளில் நனைந்தபடியயே.

எனது ”உயிருக்கு” இது சமர்ப்பணம்.


.

ஆயிரமாண்டுக் குளிரில் ஒரு தமிழன்


சில நாட்களுக்கு முன் கணணி திருத்துவதற்காய் ஒரு வயதான பெண்மணி அழைத்தார். போனேன்.

அமைதியாயும் அழகாயும் இருந்தது வீடு. அதிகமாய் எல்லா நோர்வேஜியர்களும் காலநிலையைப் பற்றி கதைப்பார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் இவர் சற்று அதிகமாகவே காலநிலையைப் பற்றிக் கதைத்தார்.

ஆம், குளிர் தொடங்கிவிட்டது. வின்டருக்கு நீ தாயாரா என்றேன். அது நான் தயாராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் வந்து தான் ஆகும். வந்ததும் நான் ஸ்பெயின் போவாதாக உள்ளேன் என்றார். கேட்டதும் பொறாமையாக இருந்தது.

என்னையும் அதே கேள்வியைக் கேட்டார். எனக்கு எனது வாகனத்தை உள்ளே விடுவதற்கு கராஜ் இருந்தால் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றேன். புன்னகைத்து, அப்ப சென்ற வருடம் உயிர் போயிருக்குமே என்றார் நக்கலாய் (சென்ற வருடம் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டியது நோர்வேயில்).  சிரித்தேன் நான்.

அவருக்கு காலநிலையைப் பற்றி கனக்க தெரிந்திருந்தது. எனக்கு புரிந்தவற்றிற்கு தலையாட்டினேன், புரியாதவற்றிற்கும் சிரித்துக் கொண்டு தலையாட்டினேன்.

உங்களுக்கு காலநிலையைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கிறதே எப்படி என்றேன். ஒரு மூலையில் தான் இருப்பதே தெரியாமல் மடிக் கணணியுடன் குந்தியிருந்த தன் கணவனை அழைத்தார்.அவரும் எதிர்த்துப் போசாமல் வந்தார். அவர் வந்ததும் இவரைத் தெரியுமா என்றார்? உற்றுப் பார்த்தேன். அவரைத் தெரிந்ததாய் எனக்குத் தெரியவில்லை.  இல்லை என்று தலையாட்டினேன்.

இவர் நோர்வேயின் வானிலைஅவதான நிலையத்தில் தொழில் புரிந்தவர் என்றும், தொலைக்காட்சியில் தோன்றி வானிலை பற்றி அறிவித்தவர் என்றும் சொன்னார். அப்படியா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

அது பல வருடங்களுக்கு முன் என்றும்.அது கணணிகளின் காலம் அல்ல என்றும் சொன்னார். தற்போது தான் ஓய்வு பெற்று பல வருடங்களாகிவிட்டதாகவும்,  இருப்பினும் காலநிலையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்றும், அது பற்றி பல புத்தகங்கள் எழுதியுள்ளதாகவும் சொன்னார்.

எனக்கு ஆர்வம் தாங்கமுடியவில்லை. அய்யா! இந்த வருட வின்டர் சென்ற வருடத்தைப் போல் கடுமையாக இருக்குமா என்று கேட்டேன். பொறு என்றவர் உள்ளே போய் ஏதோ பல புள்ளிவிபரக் கோவை ஒன்றை பார்த்து சற்று நேரத்தின் பின் சொன்னார் சென்ற வருடம் கடந்த 100 வருடங்கிளிலேயே குளிர் அதிகமாய் இருந்திருக்கிறது. அப்படியானதோர் குளிர் 100 வருடத்திற்கு ஒரு முறையே வரும் எனவே இந்த வருடம் குளிர் அதிக குளிர் இருக்காது என்றார்.

இவரை நம்பாதே.. அவர் சொல்லும் காலநிலை மெய்த்ததாய் சரித்திரமில்லை என்றார் மனைவி நக்கலாய். இந்தப் பெண்களே இப்படித்தான் என்றார் பதிலுக்கு அவர், நக்கலாய்.

அவர்களின் கணணி திருத்தி வீடு வந்து சேர்ந்தேன். அன்றிரவு இணையத்தில் உலாவிய போது ரஸ்யநாட்டு காலநிலை அவதானிகள் இந்த வருட பனிக் காலம் மிகவும் குளிரானதாக இருக்கும் என்று அறிக்கை விட்டிருந்தார்கள். ஆர்வம் காரணமாக முழுவதுமாய் படித்தேன் அவர்களின் அறிக்கையை.

கடலில் உள்ள வெப்பமான நீரோட்டம் ஜரோப்பாவின் பனிக்காலத்தை அதிகமாக நிர்ணயிக்கிறது என்றும். இவ்வாண்டு அதன் வெப்பமும், வேகமும் மிகவும் குறைந்திருப்பதால் இந்த வருடம் மிகவும் குளிரானதாக இருக்கும் என்றிருந்தார்கள். இந்த வருடம் கடந்த 1000 ஆண்டுகளில் இருந்த குளிரை விட அதிகமாக இருக்கும் என்று தாங்கள் எதிர்வு கூறுவதாகவும் சொல்லி இருந்தார்கள். அதை வாசித்து முடிய முதலே எனக்கு குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.

ரஸ்ய விஞ்ஞானிகளை நம்புவதா? அல்லது நோர்வே வானிலை அவதானிப்பாளரை நம்புவதா? ஓரே குழப்பமாய் இருக்கிறது. ஆனால் பனிக்காலம் மட்டும் இதுகளைப் பற்றி கவலைப்படாமல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. வழமை‌போல..

பாலஸ்தினத்தின் கண்ணீரும் ஒரு கணணியும்

Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினர்.
2008 ம்பாலஸ்தீனர்களின் நகரமான ”காசா” நகரத்தின் இஸ்ரேலியர்கள் யுத்தம் தொடுத்த போது அம் மக்கள் அனுபவித்த கொடுமைகளை உள்ளூர் ஓளிப்படக்கலைஞர்களை வைத்து படமாக்கி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் நோர்வேயைச் சேர்ந்த Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினர். நேற்று முன்தினம் அவர்களின் படம் ரொரொன்டா நகரத்தில் நடந்ததொரு திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. நோர்வேயில் இம் மாத இறுதியில் வெளியிடப்படுகிறது.


இவர்கள் இந்தப் படம் தயாரித்துக் கொண்டிருந்த போது 2009ம் ஆண்டு வைகாசி மாதம் இவர்களிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. கணணி சம்பந்தமாக உதவி வேண்டும் என்றும், உடனடியாக வர முடியுமா என்றும் பதட்டத்துடன் அழைக்கப்பட்டேன்.

முன்பு ஒரு தரம் ஒஸ்லோ ரோட்டறி சங்கத்தினருக்கு  ”இணையமும் கணணிப் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது அறிமுகமாகியிருந்தார் Terje Kristiansen என்னும் பிரபல இயக்குனர்.

அன்று என்னை பதட்டத்துடன் அழைத்ததும் அவ‌ர் தான். சரி மாலை வருகிறேன் என்று சொல்லி அன்று மாலை அங்கு போய் இறங்கினேன்.

அழகிய பழையகாலத்து வீடு. வீட்டின் முன் அழகிய பெண்ணொருத்தியின் சிலையிருந்தது.

கைகுலுக்கி அறிமுகமானோம். வீட்டுக்குள் போன போது அவர்களின் சுவரில் மிகப் பெரியதோர் கறுப்பு வெள்ளை படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

அப்படத்தில் இருப்பவரை எனக்கு அறிமுகமில்லாவிட்டாலும் அப்படம் மிகுந்த பரீட்சயமுள்ளபடம் என்பதை பார்த்ததும் உணர்ந்து கொண்டேன். ‌அது நோர்வேயின் உலகப்பிரபலமான புகைப்படக் கலைஞர் Morten Krogvold என்பவர் எடுத்த மிகப் பிரபல்யமானமான புகைப்படம். முன்பொரு காலத்தில் புகைப்படக் கலையில் நான் பைத்தியமாய் அலைந்து திரிந்த போது Morten Krogvold இன் ஏகலைவனாய் இருந்திருக்கிறேன். எனவே அப்படம் பற்றி ஏற்கனவே நான் அறிந்திருந்தேன்.

அந்தப் படத்தைக் காட்டி இது உலக பிரபல நடிகை Vibeke Løkkeberg அல்லவா என்றேன். ஆம் என்றார். நீ அவரின் பயங்கர விசிரி போல என்றேன். அவர் ஏதோ அர்த்தமாய் புன்னகைக்க.. ஆம் அவர் அவளின் பயங்கர விசிரி தான் என்ற பெண் குரல் கேட்டுத் திரும்பினேன். எனக்கு முன்னால் நின்றிருந்தார் Vibeke Løkkeberg நீண்டு பெருத்த அவரின் அழகிய கூந்தலுடன்.

அப்போது தான் புரிந்தது இவர்கள் தம்பதிகள் என்று. கைகுலுக்கி அறிமுகமானோம். வயது ஐம்பதை தாண்டியிருந்தாலும் மிகவும் இளமையாய் இருந்தார்.  என்னை அழைத்தத காரணம் என்ன என்று கேட்டேன், தேனீர் மற்றும் அரேபிய கேக் சகிதமாக பேசத் தொடங்கினோம்.

தாங்கள் பாலஸ்தீனம் பற்றி படமெடுப்பதாகவும், அது பற்றி பல வீடியோ படங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கணணி தங்கள் வீட்டில் இருந்து களவு போய்விட்டதாகவும். அத்துடன் தங்கள் காரும் களவு போயிருப்பதாகவும் சொன்னார்கள். தமக்கு புதிய கணணி வாங்குவதற்கும், கண்காணிப்பு கமரா பூட்டுவதற்கும், தங்களிடமிருக்கும் backup ஆவணங்களை  மீள்பதிவு செய்வதற்கும் உதவி வேண்டும் என்றும் சொன்னார்கள்.

அடுத்து வந்த நாட்களில் அவர்கள் தொலைத்த ஆவணங்கள், வீடியோ படங்கள், மின்னஞ்சல்கள் என்பவற்றில் ஏறக்குறைய 70 விதமானவற்றை பெற முடிந்தது. அதே வேளை போலீசார் காரையும் குற்றவாளியையும் கண்டுபிடித்தனர். குற்றவாளி இவர்களின் வீட்டில் வேலை செய்த ஒருவரின் மகனாய் இருந்தார். ஆனால் கணணி மட்டும் கிடைக்கவில்லை.

உதவிக்கு மிகுந்த நன்றி என்றும். இப்படம் வெளி வந்தால் உனது  பங்கும் அதில் உண்டு என்று சொல்லியனுப்பினார்கள். புன்னகையுடன் விடைபெற்றேன்.

நேற்று முன் தினம் அப்படத்தின் வெளியீட்டுவிழா நடந்தது. சிவப்புக் கம்பளத்தில் Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினர் நடந்து போயினர். ‌அவர் தனது பேட்டியின் போது இப்படத்தை தயாரிக்க உதவிய அனைவருக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். என் மனம் ஏனோ காற்றில் சருகாய் மாறியிருந்தது.

அவர்கள் காசாவின் கண்ணீரை தயாரித்த 2009 ‌ஏப்பல், மே மாத காலங்களில் என்னூர் வாய்க்கால்களில்  கண்ணீருடன் ரத்தமும், சதையும் கலந்தோடிக்கொண்டிருந்தது ஆனால் கண்டு கொள்ளத்தான் எவருமிருக்கவில்லை.


ஆனால் எங்களவர்களிடமும் ஒளி நாடாக்கள் இருக்கின்றன.

-----------------------------------------------------------------------------------------------
பி.கு: Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினருக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.


அப்படத்தின் முற்பிரதியினை இங்கு பார்க்கலாம்.

.

விழுதுகளைத் துலைத்தவர்கள்

 வாயிலும், நினைவிலும் புக மறுத்த பெயருடன் அறிமுகமாகினார் இன்றைய நண்பர், சில நாட்களுக்கு முதல்.

தனக்கு ஒரு கணணி வாங்குவதற்கும், பின் அதை பாவிப்பதெப்படி என்று கற்றுத் தரவும் எனது உதவியினைக் கேட்டார். நானும் சரி உங்களுக்கு வசதியான நேரத்தில் கடைக்குப் போவோம் என்று சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டேன்.

அவரின் பேச்சு சுவிடடிஸ் மொழி போல் இருந்து. எனவே அவர் சுவீடன் நாட்டவர் என்று நினைத்துக் கொண்டேன்.

இன்று காலை மீண்டும் தொடர்பு கொண்டார். எனக்கும் வசதியாக இருந்ததால் குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சொல்லி அங்கு வரச்சொல்லி சந்தித்துக் கொண்டோம்.

பார்த்ததும் புரிந்தது அவர் சுவீடன் நாட்டவரல்ல என்று. சந்தேகத்தை கேட்டதும் தான் மொராக்கோ நாட்டவன் என்றார். எனது மனம் முன்பொருதரம் மொராக்கோ நாட்டவரொருவருடன் நடந்த கசப்பான அனுபவத்தால் எச்சரிக்கை மணியை பெரிதாய் மனதுக்குள் அடித்தது.

கடைக்கு போகும் வழியில் மனிதர் மிகவும் சகஜமாக பேசிக் கொண்டு வந்தரார். சில நிமிடங்களில், அவர் பேச்சு எனது எச்சரிக்கை உணர்வை அகற்றிவிட்டிருந்தது. என்னையறியாமலே நட்பாகிப் போனேன் அவருடன்.

தான் 50 வருடங்களுக்கு முன்பு சுவீடனுக்கு வந்ததாயும், வளர்ந்த குழந்தைகள் உண்டு என்றும்,  அண்மையில் பெரிதோர் இதய அறுவைச்சிகிச்சை செய்திருப்பதாயும் சொன்னார். அவர் பேச்சில் தனது பிள்ளைகள் தன்னை கவனிக்காவிட்டாலும் பறவாயில்லை ஆனால் அவர்களுக்கு தொலைபேசியில் பேசக்கூட நேரமில்லை என்று சொல்லி வேதனைப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தம் நோர்வேக்கு இடம் பெயர்ந்ததாயும். ஒஸ்லோவின் மேட்டுக்குடி மக்களிடையே பிரபலமானதோர் ஒரு உணவகத்தில் சிப்பந்தியாக தொழில் புரிந்ததாயும் சொன்னார்.

வெளிநாட்டு வாழ்கை தன்னை ஒரு முழு மொராக்கோ நாட்டவனாக அல்லாமலும், ஒரு சுவீடன் நாட்டவனாக அல்லாமலும் ஆக்கவிட்டதென்றும், அதனால் தான் மிகுந்த சிரமமடைகிறார் என்றும் சொன்னார். தனிமையின் பாரம் உணர்ந்திருந்தார் மனிதர்.

எனக்கு அவரின் கூற்றினையும், அதன் ஆதங்கத்தையும் முழுவதுமாக புரியக்கூடியதாக இருந்தது. நான் அவரைப் போல் 50 வருடங்கள் வெளிநாட்டில் வாழாவிடனும், எனது 23 ஆண்டுகள் போதுமானவையாக இருக்கிறது அவரை புரிந்து கொள்ள.

சில வருடங்களுக்கு முன் தனிமையின் கொடுமையினாலும், குடும்பத்தாரின் நிர்ப்பந்தத்தினாலும் ‌ஒரு மொராக்கோ நாட்டு பெண்ணை திருமணம் புரிந்ததாயும் ஆனாலும் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாயில்லை என்றார். இது தவிர மது, புகைத்தல், தொழில் அழுத்தம், உணவுக்கட்டுப்பாடின்மை ஆகியவற்றால் மாரடைப்பு வந்ததாயும் தற்பொது அறுவைச்சிகிச்சையின் பின் தேறி வருவதாகவும் சொன்னார்.

வெளிநாட்டு வாழ்வில் பணத்தைத் தவிர வேறான்றும் கிடைப்பதில்லை என்பதனை பல வெளிநாட்டவர்கள் உணர்கிறார்கள் இல்லை என்றும்,  வெளிநாட்டவர்கள் தமது சுய மரியாதையில் தொடங்கி கலாச்சாரம், பண்புகள், விழுமியங்கள், இன மத உணர்வுகள் போன்றவற்றை தொலைத்து அர்த்தமற்றதொரு வாழ்க்கை வாழ்வது போல் உணர்வதாகவும் சொன்னார்.

எனக்கும் அவரின் கருத்துக்களில் பாரிய மாற்றுக் கருத்து இல்லாததால் மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்தேன். அவரும் பேசியபடியே இருந்தார்.

கடையில் புதிய கணணி வாங்கினோம். கற்பிப்பதற்கான நாட்களை குறித்துக் கொண்டோம்.

வரும் வழியில் ஒரு நிலக்கீழ் சுரங்க ரயில் நிலயத்தில் இறங்கிக் கொண்டார்.  எனது கைகளை இறுப்பற்றி உன்னுடன் பேசியது மிக ஆறுதலாக இருந்தது என்று சொல்லி, மீண்டும் நன்றி சொல்லி படிகளில் இறங்கி மறைந்து போனார்.

எத்தனையோ நாட்கள் என்னைக் குடைந்து கொண்டிருந்த அதே கேள்விகளை இம் மனிதரும் கடந்து வந்திருக்கிறார் என்பதும், நாம் ஒரே பதில்களையே கொண்டிருக்கிறோம் என்பதும் எனக்கு எதையோ அறிவித்தது.

ஆனால் மனதோ வழமை போல் எனது சிந்தனைகளும் பதில்களும் சுகமானவையா அல்லது சுகயீனமானவையா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது.

புரிந்ததா ஏதும் உங்களுக்கு?


.

இவரின் தலையெழுத்தும், அவரின் கையெழுத்தும்

இவ்வருடத்தின் ஆரம்ப மாதங்களில் (மாசி மாதமாயிருக்கலாம்) ஒரு நாள், நான் தினமும் பாவிக்கும் குளிசைகளில் ஒரு விதமான குளிசைகள் முடிந்திருப்பதை இரவு 11 மணிபோலத்தான் அறிந்து கொண்டேன். அது வில்லங்கமான குளிசை என்பதை முன்பு ஒரு தரம் அதை தொடர்ந்து போடாமல் விட்டதால் அறிந்து கொண்டிருந்ததால், உடனேயே வாகனத்தை எடுத்து கொண்டு ஒஸ்லோ நகர மையத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் மருந்துக் கடைக்கு போகலானேன்.

இரவு நேரமாதலால் நகரம் தன்னை உறக்கத்திற்கு தயாராக்கிக் கொண்டிருந்தது. வாகனத்தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி மருந்துக் கடையினுள் புகுந்தேன்.

வரிசையில் சிலர் நின்றிருந்தனர். நானும் அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டேன். மருந்துக்கடையில் சிப்பந்தி ஒருவர் மட்டுமே இருந்ததனால் வரிசை மிக மிக மெதுவாகவே முன்னேறிக்கொணடிருந்தது.

எனக்குப் பின்னால் இருந்த கதவினை யாரோ திறப்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன். நடுத்தர வயதுள்ள மனிதர் ஒருவர் மிக அழுக்கான, கிழிந்த உடைகளுடன் உள்ளே வந்தார். அவரைப் பார்த்தவுடனேயே புரிந்தது போதைப்பொருளுக்கு அ‌டிமையானவர் என்று. நி்ற்க முடியாது தள்ளாடியபடி எனக்கு பின்னால் வந்து நின்றார். நான் அசௌகரீயம் உணர்ந்தேன். சற்று தள்ளியும் நின்று கொண்டேன்.

அவரோ என்னைப் பார்த்து மாலை வணக்கம் என்றார். விரும்பாவிட்டாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தினால் மாலை வணக்கம் என்றேன். அவரே சம்பாசனையைத் தொடர்ந்தார். கடுங்குளிர் தாங்கமுடியாததாயிருப்பதால் இக்கடைக்குள் அடிக்கடி வந்து போவதாகவும், தற்போது மருந்து வாங்க வந்துள்ளதாகவும் சொன்னார்.

ம்ம் என்று சொல்லி சம்பாசனையை தவித்தேன். அவரோ அதைக் கவனிப்பதாக தெரியவில்லை. கதைத்துக் கொண்டேயிருந்தார்.
ம்ம் என்று நேரத்தை போக்காட்டிக் கொண்டிருந்தேன்.

வரிசையில் எனது சந்தர்ப்பம் வந்தது

மருந்துச் சீட்டை வாங்கிய சிப்பந்தி மருந்தை தேடிப்போனார். கடைக்குள் நாமிருவரும் மட்டுமே நின்றிருந்தோம்.

மருந்திற்கான பணத்தை கொடுப்பதற்காக பணப்பையில் இருந்து நோர்வேஜிய பணம் 200 குரோணர்களுக்கான தாள் பணத்தினை எடுத்து கையில் வைத்திருந்தேன். எனக்குப் பின்னுக்கு நின்றிருந்தவர் எனது கையில் இருந்த பணத்தையே பார்த்தபடி நின்றிருந்தார். எச்சரிக்கை மணியடித்தது எனது மனதுக்குள்.

திடீர் என்று என்னைப் பார்த்து உனது கையில் உள்ள பணம் மிகவும் குறைந்தளவில் அச்சடிக்கப்பட்ட தாள்களில் ஒன்று என்றும் அதில் கையெழுத்திடப்பட்டிருப்பதால் அது மற்றைய 200 தாள்களை விட வித்தியாசமானது என்றும் சொன்னார். அந்த 200 தாளில் உள்ளவர் யார் என்று தெரியுமா என்றும் ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார்.

இல்லை என்று தலையை ஆட்டினேன்.

அவரின் பெயர் Kristian Birkeland (1867 -1917), அவர் நோர்வேயின் முக்கிய பௌதீகவியல் அறிஞர் என்றும், அவர்  Sam Eyde என்னும் பௌதீக அறிஞருடன் சேர்ந்து காற்றில் இருந்து நைதரசனை பிரித்தெடுக்கும் Birkeland-Eyde முறையை கண்டுபிடித்தவர் என்றும் சொல்லி, அவரைப் பற்றி (Kristian Birkeland) ஒரு பெரிய லெக்கசர் அடித்தார்.

எனக்குள் அந்த மனிதரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது இந்த சில நிமிடங்களுக்கு. அதனால் பேச்சுக் கொடுத்தேன். Kristian Birkeland பற்றி இன்னும் அதிகமான தகவல்கள் தந்தார். Kristian Birkeland இன் மனைவி ஒரு மனநோயாளியாக இருந்ததாகவும், 1906 ஆம் ஆண்டிலேயே அணுவை பிரிக்கலாம் என்று கூறியவர் என்றும் சொன்னார்.

இதற்கிடையில் மருந்துக்கடை சிப்பந்தி வந்து மருந்தைத் தந்தார். நானும் கையிலிருந்த 200 தாளை கொடுத்து மருந்தினைப் பெற்றுக் கொண்டேன்.

கடையிலேயே தண்ணீர் வாங்கி குளிசையை போட்டுக்கொண்டேன். நண்பரும் மருந்து வாங்கி புறப்பட நானும் புறப்பட நேரம் சரியாயிருந்தது.

என்னையறியாமலே உங்களுக்கு இவ்வளவும் எப்படித் தெரியும் என்றேன். நிமிர்ந்து என்னைப் ஊடுருவிப் பார்த்தார்.

அவரைப்பற்றி நான் பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் கற்ற பேது கற்றிருக்கிறேன் என்று சொல்லி எனது பதிலை எதிர் பார்க்காமல் வெளியே போய், இரவின் இருட்டில் கரைந்து போனார்.

வெளியில் வந்தேன். கடும் குளிரும், கசப்பான யதார்த்தமும் முகத்திலடிக்க; உருவத்துக்கும், மனிதரிடமுள்ள உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை என்பதை வாழ்க்கை மீண்டும் நிறுவிப்போனது.

அன்றைய நாளும் நல்லதே!
----------------

பி.கு: அன்றிலிருந்து இன்று வரை கையெழுத்து அச்சிடப்பட்ட 200  குரோணர் தாள் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.... கிடைக்குதே இல்லை.


.

காற்றில் பறந்த விமானமும், நிதானமும்

 ஒரு முறை விமானத்தில் இலங்கைக்கு பறந்து கொண்டிருந்த போது என்னைப் போல் நிதானத்தை காற்றில் விடும் மனிதர் ஒருவரை காண நேர்ந்தது. அன்று வரை, எனக்கு கண்டதற்கு கோபம் வருகிறது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால் அந்த மனிதர் நம்மளையும் மிஞ்சி விட்டார். கொதிக்கும் எண்ணையில் தண்ணீர் தெளித்த மாதிரி வெடித்துக் கொண்டே இருந்தார் எப்போதும்.
 
விமானத்தினுள் ஏறி எனது இருக்கையில் அமர்ந்து ஆறுதலாயிருக்கையில் பணிப்பெண்ணுடன் வாக்குவாதப்பட்டுக் கொண்டே வந்தமர்ந்தார் மனிதர். அவள் காட்டிய இருக்கையில் புரியாத மொழியில் ஏதோ திட்டியடி உட்கார்ந்தார், பணிப்பெண் காட்டிய இருக்கையில்.

விமானம் பறக்கத் தொடங்கியது. எமது இருக்கைகளுக்கு சற்று பின்னால் இருந்து ஒரு குழந்தை வீரிட்டு அழத் தொடங்கியது. அமுக்க வித்தியாசத்தில் காது நோகத் தொடங்கியிருக்கும் என நினைத்துக் கொண்டேன்.

திடீர் என பயங்கர சத்தமாய் புரியாத ஒரு மொழியில் ஒரு பெருஞ் சத்தம் எனக்குப் பின்னால் கேட்டது. திரும்பிப் பார்த்தேன் நானும், மற்றவர்களைப் போல. அந்த மனிதர் தனது இருக்கையை விட்டடு எழும் அந்தக் குழந்தையை நோக்கி ஏதோ சொல்லி கத்தியபடியே உட்கார்ந்தார். இவரின் சத்தம் குழந்தைதையை இன்னும் கஸ்டப்படுத்தியதோ என்னவோ அது முன்னிலும் அதிகமாய் வீரிட்டது.

பணிப் பெண்கள் இருவர் வந்தனர். ஏதோ பேசினர். குழந்தை முன்னிலும் வீரிட்டது. நம்ம கதாநாயகனை திரும்பிப் பார்த்தேன் இரு கைகளாளும் காதை பொத்திக் கொண்டு தலையை ஆட்டிக்கொண்டு இருந்தார். திடீர் என மீண்டும் எழுந்து ஏதோவெல்லாம் தனது மொழியில் திட்டினார். பின் விறு விறு தனது உடமைகளை எடுத்துக் கொண்டு போனார். அப்பாடா இந்த மனிசனின் தொல்லை துலைந்தது என்று நினைப்பதற்கிடையில் பணிப்பெண் அவரை அழைத்து வந்து இது தான் உங்கள் இருப்பிடம் என்றும் விமானத்தில் வேறு இடம் இல்லை என்றும் சொல்லி அவரை அதே இடத்தில் இருத்தினாள். இதற்கிடையில் குழந்தை தூங்கிப் போயிருந்தது. மனிதரும் ஏதோ புறுபுறுத்தபடியே உட்கார்ந்தார்.

உணவு வந்தது. சாப்பி்ட்டு ஆறுதலாக ஒரு படம் பார்த்தடியே என்னை மறந்திருந்தேன். எனக்குப் பின்னால் மெதுவாய் ஒரு சத்தம் கேட்கத் தொடங்கியது. அதை நான் பெரிதாய் கவனிக்கவில்லை. நேரம் போக போக சத்தம் பெருஞ்சத்தமாகிய போது தான் தரும்பிப் பார்த்தேன். அந்த மனிதர் குறட்டை விட்டுக் கொண்டிருந்தார். எனக்குள் இருந்த மிருகம் சற்றே உறுமத் தொடங்கியிருந்தது. இருந்தாலும் அடக்கிக் கொண்டேன்.

சத்தியமாய் சொல்லுகிறேன் வீட்டுக் கூரையை தூக்கி துக்கி போடுமளவுக்கு குறட்டைவிடும் மனிதர்களுடன் தூங்கியிருக்கிறேன். ஆனால் இம் மனிதரின் குறட்டையின் ராகமும், ஓலியின் அளவும் தாங்கமுடியாததாய் இருந்தது. பலரும் முகம் சுளித்தனர். அவருக்கு பக்கத்தில் இருந்தவர் நிலையைப் பார்க்க பரிதாபமாய் இருந்தது.

ஒருவர் பணிப் பெண்ணை அழைத்து ”இம்சையை” காட்டினார். அவர் சிரித்தபடியே ஒரு ஆண் சிப்பந்தியை அழைத்து வந்து எமது கதாநாயகனை எடுப்பினாள். மனிதர் எழும்பினார். பேந்தப் பேந்தப் முளித்தார். எல்லோரும் தன்னைப் பார்ப்பதை உணர்ந்ததும் சற்று அமைதியடைந்தார். அந்த ஆண் சிப்பந்தி ஆங்கிலத்தில் உங்கள் குறட்டை ஒலி மற்றவர்களை குழப்புகிறது என்றார். அவருக்கு புரியவில்லை. சிப்பந்தி மெதுவாய் குறட்டை ஒலியெழுப்பி வாயில் விரலை வைத்து உஷ்ஷ்ஷ் என்று காட்டியதும் ஏதோ புறுபுறுத்தபடியே அமர்ந்திருந்தார், மனிதர்.

விமானம் உயரே பறந்து காற்றைக் கிழித்துக் கொண்டிருந்தது.

அந்தக் குழந்தை துக்கம் கலைந்து மீண்டும் அழுகையை ஆரம்பித்தது. பெருங்குரலெடுத்து அழுதது. நம்ம மனிதர் பொறுமையை மீண்டும் காற்றில்விட்டார்.

அன்று நாம் மத்தியகிழக்கு நாடொன்றில் இறங்கும் வரை மனிதர் பல தடவைகள் அக் குழந்தையை நோக்கி தனது மொழியில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அக் குழந்தை இவரை மறந்து தன்னிஸ்டத்துக்கு கத்திக் கொண்டிருந்தது. அம் மனிதர் தான் தூங்கிய போதெல்லாம் குறட்டையில் எம்மை கொன்று கொண்டிருந்தார்.

விமானத்தில் இருந்து இறங்கிய பின்னும் மனிதர் என் நினைவுகளில் சுற்றியபடியே வந்து ஏன் அவர் இப்படி நடந்து கொண்டார் என்று சிந்திக்கவைத்தார். இருப்பினும் இறுதிவரை அவரின் கோவத்திற்கான காரணம் புரியவில்லை. அதே மாதிரி அவர் மீது எனக்கு வந்த கோவத்திற்கும் நியாயமான காரணங்கள் ஏதும் தெரியவில்லை.

சகிப்புத்தன்மையை இழந்து கொண்டிருக்கிறோமா என கேட்டுக்கொண்டிருந்தது, என் மனது.


.

மலைகளில் தொலைந்து போன மனப்பாரங்கள்

சில ஆண்டுகளுக்கு முதல் தொழில், வீடு, பொது வேலைகள் என ஓய்வே இல்லாது ஓடிக்கொண்டிருந்த போது மனமும் உடலும் களைத்து ஒரு சோர்வு மனதையும் உடலையும் பற்றிக் கொண்டது. எதிலும் வெறுப்பும், பிடிப்பற்றநிலையும், எரிச்சலும், களைப்பும், மகிழ்ச்சியின்மையும் தொடரத் தொடங்க பயந்து தான் போனேன் சற்று.

டாக்டரை தொடர்பு கொண்ட போது மிக ஆறுதலாகப் பேசி காரணங்களை அறிந்து, சொன்னார் உமக்கு மனச்சோர்வு வந்திருக்கிறது என்று. அது பற்றியும் விளக்கினா எர். இது நோர்வேயில் பெரிதாய் பரவிவரும் நோய் என்றும், அமைதியான வாழ்க்கையை இதற்கு மருந்து என்று சொல்லி ”குட் லக்” என்று சொல்லி கையை குலுக்கி வெளியே அனுப்பினார்.

நானாவது அமைதியாய் இருக்கிறதாவது என்ற ”வாழ்க்கை” மீண்டும் ஓடத் தொடங்கி சில காலதிற்குள் மீண்டும் அதே பிரச்சனை வர டாக்டர் வலு சீரியசாக 2 மாதம் சுகயீனலீவு தந்து, கனக்க அறிவுரைகள் தந்து வெளியே மீண்டும் ”குட் லக்” என்று சொல்லி கையை குலுக்கி வெளியே அனுப்பினார்.

அவர் சொன்ன மாதிரி நானும் வீட்டில் தங்கி ஆறுதலாக இருப்போம் என்று தான் நினைத்தேன். அந்த நாட்களில் 5 நிமிடம் நடந்தாலும்  ஓடிக்களைத்த குதிரை‌ போல நுரைதள்ளி மூச்சு விடுவேன். இந்த இம்சையால் நடப்பதையும் குறைத்துக் கொண்டேன். வீட்டில் இருப்பதும் கண்ட கண்ட நேரத்தில் தூங்குவதும் என்று சில பல நாட்கள் ஓடன. ஆனால் மனச்சோர்வு மட்டும் குறையவே இல்லை.

இந்த நேரத்தில் தான் எங்கள் ரோட்டறி கிளப்பில் உள்ள ஒரு மிகவும் வயதானவர் தனக்கும் இப்படியான நிலைகள் வந்து போன போது தான் மலைகளில் ஏறி இறங்கி, இயற்கையுடன் உறவாடி இந்தப்பிரச்சனையை தீர்த்துக் கொண்டதாக ஒரு உரையாடலின் போது தெரிவித்தார்.

அன்றிரவு எனக்கு ஏதோ ஞானம் வந்த மாதிரி இருந்தது. விடிந்ததும் குழந்தைகளை பாடசாலையில் விட்டு விட்டு, வீடு வந்து உடைமாற்றி மலைக்குப் புறப்பட்டேன்.

அந்த மலை எனது வீட்டில் இருந்து பார்த்தால் தெரியும். 4 கீமீ தூரத்தில் இருந்தது. இந்த ஊரில் வாழ்ந்திருந்த 13 வருடத்தில் ஒரு நாளும் இந்த மலையின் உச்சியை தொட்டதில்லை நான். அன்று ஏதோ ஒரு உந்துதலில் புறப்பட்டேன். தண்ணியும், நாலைந்து பாண் துண்டுகளும் வாழைப்பழம் முதுகுப்பையில் இருந்தது.

மெதுவாய் மலை அடிவாராத்தை அடைந்து ஏறத் தொடங்கி 10 நிமிடத்திலேயே வாழ்கை வெறுத்து விட்டது.  இதயமும், சுவாசப்பையும் எம்மால் முடியாது என்று கூச்சல் போட்டன. கால்கள் வர மாட்டேன் என்று அடம் பிடித்தன. மெதுவாய் குந்தியிருந்து ஆறுதலடைந்த பின் மெது மெதுவாய் நடக்கலானேன் உச்சியை நோக்கி. நானும் நடக்கிறேன் நடகக்கிறேன் உச்சி மட்டும் வரவேயில்லை. மனம் கெலித்திரிந்த போது  என்னைக் கடந்து ஒருவர் கீழ் இறங்கிக் கொண்டிருந்தார். உச்சிக்கு செல்ல எவ்வளவு நேரமாகும் என்ற போது 45 நிமிடங்கள் என்றார். ஏற்கனவே  இரண்டு மணிநேரம் ஏறியிருந்தேன்.. இன்னும் 45 நிமிடங்களா........ வாழ்க்கையே வெறுத்துவிட்டது. இருப்பினும்  உச்சியை தொடாமல் இறங்குவதில்லை என்பதில் திடமாயிருந்தேன். ஏறத்தாள 3 மணிநேரத்தின் பின் உச்சியை தொட்டபோது எதையோ சாதித்ததன் உணர்வு என்னை ஆட்கொண்டிருந்தது. மனது காற்றாய் மாறியிருந்தது.  மெதுவாய் இறங்கி வீடுவந்து சேர்ந்தேன். அன்றைய நாளின் பின் அந்த மலையை பல தடவைகள் ஏறியுள்ளேன். 3 மணியாயிருந்த நேரம் 56 நிமிடங்களாக குறைந்திருந்தது இறுதியாய் நான் ஏறியபோது.

மலையின் மருத்துவ மகத்துவம் மெதுவாய்ப் பிடிபடத் தொடங்கியது. நான் வாழ்ந்திருந்த வடமேற்கு நோர்வேயில் மலைகளுக்கு பஞ்சமில்லை. கிழமைக்கு 3 -4 நாலு மலைகள் ஏறினேன். புதிய புதிய மலையுச்சிகள் என் வசமாயின. உடம்பு களைப்பு என்னும் சொல்லை விரும்பத் தொடங்கியிருந்தது. இதயுமும், சவாசப்பையும் மீண்டும் என்னுடன் நட்பாயிருந்தன. எந்த மலையுச்சியையும் தொடுவது இயலாதகாரியமில்லை என்பது புரிந்தது. சில நாட்கள் 8-10பத்து மணிநேரம் வரை மலைகளில் நடந்து திரிந்திருக்கிறேன்.

நடக்கும் போது சிந்தனையும் கூடவே வந்து பேசியது, தர்க்கித்தது, விமர்சித்தது என்னை. மனதின் களைப்பு மெதுவாய் மறைந்து புதிய மனிதாயிருந்தேன் 2-3 மாதங்களில். இத்துடன் spinning  என்னும் சைக்கில் ஓட்டம் (குழுவாய் ஒரு இடத்தில் இருந்த படியே சைக்கில் ஓடுவது) தொடங்கினேன். அந்த வருடத்தின் பனிக்காலம் முழுக்க மலை ஏற முடியாவிட்டாலும் ‌spinning உம், உடற் பயிற்சியும் செய்தேன்.

உடற்பயிற்சிக்கும் மனதுக்குமான நெருங்கிய தொடர்பை நான் அறிந்து கொண்டது இங்கு தான். அந்த வருடம் எனது தம்பியுடன் அயர்லாந்தில் ஏறக்குறைய 600 கீமீ சைக்கில் ஓடும் மனத் தைரியத்தையும், உடற்பலத்தையும் தந்தது அந்த மலைகள் தான் என்றால் அதை நான் மறுப்பதற்கில்லை. மலையின் மருத்துவம் மகத்தானது.

மலை தான் வேண்டுமென்றில்லை...மனதை மீட்டெடுக்க.  ஆனால் உடற்பயிட்சி, உள்ளத்தை மீட்டத்தரும் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.


.

ஒரு ராஜாவும் ஒரு விசரனும்

 சில வாரங்களுக்கு முன் கிடைத்த அனுபவம் இது.
அன்று ஒரு நெட்கபேயில் பின் மதியத்தில் இருந்து கணணி திருத்திக் கொண்டிருந்தேன். நேரம் மாலையாகி பின்பு இரவுமாகிவிட்டது.

அந்நேரம் ஒருவர் உள்ளே வந்தார். பார்த்த உடனேயே அவரை எடைபோடத் தொடங்கிவிட்டது மனது. களைத்த முகம், தழும்பிக் கொண்டிருந்த பழுப்படைந்த கண்கள், காவியடித்துப், சூத்தைபற்றிப் போயிருந்த பற்கள், சவரம் செய்யாத முகம், போலியான புன்னகை என தன்னைப்பற்றி ஒரு நல்ல அபிப்பிராயத்தையும் கொடுக்காத மனிதராயிருந்தார் அவர்.

வந்ததும் ஒரு மூலை கணணியை தெரிவுசெய்து அது வேண்டும் என்றார். கடையுரிமையாளரும் அவரை எடைபோட்டபடியே ஒரு மூலையில் இருந்த கணணியைக் கொடுத்தார்.

அங்கு போய் குந்தியவர். சற்று நேரத்தில் உதவி வேண்டும் என்று வந்து சொன்னார். கடையுரிமையாளர் என்னை அவருக்கு உதவிசெய்ய முடியுமா என்ற போது வழமைபோல உனது தலை மேலும் கீழும் ஆடியது. என்ன உதவி என்றேன்? வா கணணிக்கருகில் என்றார். அருகில் போனதும் அவரது கதிரையில் இருத்தினார். அவரும் அருகில் குந்திக் கொண்டார். சுற்றும் முற்றும் சுத்திப் பார்த்தார். சூழ்நிலையில் திருப்திப்பட்டவராய்

தனக்கு சில பொருட்கள் வாங்க வேண்டும் என்றும், அவற்றை என்னைத் தேடித்தரும்படியும் சொன்னார். சரி என்று சொல்லி ”கூகில் ஆண்டவனை” துணைக்கழைத்தேன். சரி பொருட்களை சொல் என்றேன்.

 கண்ணாடி வெட்டும் லேசர் இயந்திரம் (கையடக்கமானது)
செல்போன்களை 100 மீற்றர் தொலைவுக்கு செயலற்றதாக்கும் கருவி
அலாரம் கருவிகளை செயலற்றதாக்கும் கருவிகள்
அலாரம் நம்பர்களை பதியும் கருவி

என்றார் மிக மிக சாதாரணமாய். ஏதோ கடையில் போய் சீனி வாங்கி வா என்பது போலிருந்தது அவர் நடவடிக்கை. நானோ விறைத்துப்போய் போசித்துக் கொண்டிருந்தேன்.

மெதுவாய் சுதாரித்து.. தேடிக் கண்டுபிடித்தேன் சில பொருட்களை. இதற்கிடையில் பரஸ்பரம் விசாரித்து நண்பர்களாகியிருந்தோம். அவர் இலங்கைக்கு அருகிலுள்ள ஒரு நாட்டவராம், பெயர் ராஜாவாம் (இதை நம்ப நான் ஒன்றும் முட்டாளில்லை), நோர்வேயில் வசிக்கிறாராம், மூன்று குழந்தைகள் உண்டாம் என்றெல்லாம் சொன்னார். நான் மிகவும் அடக்கியே வாசித்தேன்.

அது சரி இப் பொருட்களைக் கொண்டு என்ன செய்வாய் என்ற போது தந்தார் விளக்கம். தனது தொழிலை புரிந்திருப்பாய் என்ற போது மறுக்காமல் தலையாட்டினேன். புன்னகைத்துக்கொண்டோம்.

கடைகளில் களவெடுக்க கண்ணாடி வெட்டும் கருவிகளை பயன்படுத்துவதாயும், அலாரம்களை செயலிழக்கவைக்க மற்றைய கருவிகளை பாவிப்பதாகவும், இப்பொருட்கள் நோர்வேயில் தடைசெய்யப்பட்ட பொருட்கள் என்றும், ஆனால் அவற்றை நெதர்லாந்தில் இருந்து தனது சகாக்கள் கொண்டு வருவார்கள் என்றும் சொன்னார்.

உனக்கு பயமில்லையா என்ற போது நக்கலான புன்னகையை பதிலாய்த் தந்தார். அவருக்கு தேவையான பொருட்களின் பட்டியலை ”பிரின்ட்” எடுத்துக்கொண்டார்.

அப்பாடா என்றிருந்தது அவரை விட்டகல்ந்த போது.
சற்று நேரத்தில் மீண்டும் அழைத்தார். கடைக்காரர் இப்பவும் என்னையே அனுப்பினார்.
(நம்ம விதியப் பார்த்தீர்களா.. சிரிக்காதீங், அழுதுடுவன்..ஆமா)

எங்கள் ராஜா தற்போது ஒரு வைத்தியரின் கையெழுத்தில் இருந்த மருந்து வாங்கும் பற்றுச்சீட்டை கணணியில் செய்து கொண்டிருந்தார். அவருக்கு சில எழுத்துக்களுக்கு நிறம் மாற்ற வேண்டியிருந்தால் என்னை அதைச்செய்ய காட்டித்தரும்படி கேட்டார். சொல்லிக் கொடுத்தேன்.

அதை வைத்து என்ன செய்வாய் என்ற போது, பொய் பற்றுச்சீட்டு செய்து அதன் மூலம் போதை மிகுந்த மருந்துகளை வாங்கி போதைமருந்துகளுக்கு அடிமையானவர்களுக்கு விற்பதாகவும், இதனால் சில நிமிடங்களிலேயே தான் பல ஆயிரம் குறோணர்கள் (600 குறோணர் =100$) சம்பாதிப்பார் என்றும் தனக்கு அது காணும் என்றும் தொழில் இரகசியம் விளக்கிய போது அதிர்ந்து தான் போனேன்.

உனக்கு என்ன வேண்டுமானாலும் சொல் கொண்டுவந்து மலிந்த விலைக்கு தருவேன் என்றார். 60 அங்குல புத்தாம் புதிய 3D தொலைக்காட்சிப்பெட்டி இருப்பதாயும் அதன் விலை கடையில் 6000$  என்றும் தான் அதை எனக்கு 1500 $ விலைக்கு தருவதாகவும் சொன்ன போது அன்பாய் மறுத்தேன். உனது நண்பர்களுக்கும் சொல் என்று சொன்னார். கட்டாயம் சொல்கிறேன் என்ற படியே அகன்று கொண்டேன் அவரிடமிருந்து.

அன்று இரவு தனிமையில் படுத்திருந்து போசித்த போது தான் விளங்கியது ஒஸ்லோவின் பாதாளகோஸ்டியொன்றின் முக்கியமானதோர் மனிதனையே நான் சந்தித்திருக்கிறேன் என்று. எனக்கு என்னை நினைத்தால் சிரிப்பாயிருந்தது. நான் சந்திக்கும் மனிதர்கள் எப்போது எதையோ தந்தபடியே என்னைக் கடந்து போய்க்கொண்டிருக்கிறார்கள். நன்மையாயும் தீமையாயும். இந்த ராஜாவை சந்தித்தது நன்‌மையா, தீ‌மையா? காலம் தான் பதில ‌சொல்ல ‌வேண்டும்.

இன்னொரு நாள் ட்ராம்ப் வண்டியில் சந்தித்துக் கொண்டோம். நான் காணாதது போல் நடித்துக் கொண்டிருந்தேன்.. ராஜாவோ அதைக் கவனிக்காமால் அருகில் வந்து நண்பரே! என்று சொல்லி கையை குலுக்கினார். அசௌகரீயமாக இருந்தாலும் நாகரீகத்துக்காய் கைகுலுக்கினேன். மெதுவாய் எனது காதுக்கருகில் கண்ணாடி வெட்டும் கருவி வந்துவிட்டது என்றார். எனது நெஞ்சு வெளியில் வந்து விழுந்தது போலிருந்தது எனக்கு. படபடப்பு அடங்கமுதல்அடுத்து வந்த தரிப்பில் இறங்க முதல, மீண்டும் சந்திப்போம் நண்பரே! என்று சொல்லி எனது பதிலை எதிர்பார்க்காமல் இறங்கியோடினார் ராஜா...

ஒரு இம்சை அரசனிடம் மாட்டிக்கொண்டிருக்கிறேன் என்பது மட்டும் புரிந்தது..

கந்தா கடம்பா காப்பாத்து......
.