சிறுத்துப்போன உலகமும், சில மனிதர்களும்
தம்பி இந்த இன்டர்நேட் பிரச்சனையாயிருக்குது. ஒருக்கா வாறீங்களோ என்று தமிழில் அழைத்தபடி அறிமுகமாயினார், அந்த அம்மா. சரி நாளைக்கு வாறேன் என்றேன்.
இன்று காலையும் மீண்டும் அழைத்தார். அம்மா! பின்னேரம் 8 மணிபோல் வருகிறேன் என்றேன். சொன்ன மாதிரி 8 மணிபோல், இந்த பனிக்காலத்தின் முதல் பனி கொட்டிக் கொண்டிருக்கும் போது போய் இறங்கினேன். விலாசம் சற்று குழப்பமாயிருந்ததால் தொலைபேசினேன். பொறுங்க மகன், எனது மகனை அனுப்புகிறேன் என்று சொல்லி மகனை தொடர்மாடி வீட்டின் வாசலுக்கு அனுப்பினார்.
கொட்டும் பனியில் அவரும் காத்திருந்து, என்னை அழைத்துப் போனார். லிவ்ட் இல் 9ம் மாடிக்குப் போனோம். வீட்டுக் கதவை திறந்ததும் வீட்டின் வாசனையும் இது தமிழ் வீடு தான் என்று உறுதி செய்தது.
என்னுடன் கதைத்தது தான் தான் என அறிமுகம் செய்து கொண்டார் அம்மா. எனது அம்மாவுக்கு தங்கையாய் இருக்கும் வயதிருக்கும் அவருக்கு. அட இந்த வயதில் இன்டர்நெட் இல்லாமல் கஸ்டப்படும் அளவுக்கு கணணி பாவிப்பவரோ என அதிசயத்து, அம்மா! கொம்பியூட்டர காட்டுங்கோ என்றேன்.
என்ன கொம்பியூட்டரோ? அதென்னத்துக்கு .......என்று அவர் ஒரு போடு போட்டார், சற்று ஆடித்தான் போனேன்.
என்ன கொம்பியூட்டர் இல்லையா என்றேன். இல்லையே.. அது கட்டாயம் இருக்கோணுமோ என்றார்.. உண்மையான அப்பாவியாய்.
எனது காதுக்குள் வடிவேலுவின் ”ஆகா” என்றும் டயலாக் கேட்டது.
அம்மா.. இன்டர்நெட் பூட்டத்தானே அழைத்தீர்கள். இப்ப கொம்பியூட்டர் இல்லை என்றால் நான் எப்படி வேலை செய்வது என்றேன்.
டேய் .. அண்ணா கொம்பியூட்டர் வாங்கவேணும் என்று சொன்னவனே என்றார் மகனைப் பார்த்து. அவரும் இல்லையே என்று தலை அங்கும் இங்கும் ஆட்டினார்.
அப்போது தான் தொலைக்காட்சிப் பெட்டிக்கு அருகில் இருந்த அந்த சின்ன பெட்டி கண்ணில் பட்டது. புரிந்தது அம்மாவின் பிரச்சனை.
இதற்கிடையில் அம்மா சுவிஸ்க்கு போன் போட, மகன் என்னைப் பார்த்து இந்த பெட்டிக்கு இன்டர்நெட் பூட்டுங்கோ என்றார். சுவிஸ்லாந்தில் இருந்த மகன் தொலைபேசியை எடுக்காததால், அம்மாவின் கவனம் என்னை நோக்கித் திரும்பியது.
தம்பி, நான் இந்த வீட்டில 15 வருசமா இருக்கிறேன்.. ஆனா தமிழ் டீவி வருகுதில்லை. சட்டி பூட்டுற ஆக்கள் நாலைந்து பேர் வந்து பார்த்திட்டு கையைவிரிச்சுப் போட்டாங்கள். நான் வாடகைக்கு கொப்பி எடுத்து படமும், நாடகம் பார்க்கிற நான். ஆனா இப்ப அந்த கடையும் பூட்டிட்டாங்கள். அதால சுவிசில இருக்கிற மகன், கனடாவில இருக்கிற ஒரு ஆளுட்ட சொல்லி இந்த பெட்டிய, நான் கனடா போயிருந்த நேரம் எடுப்பிச்சு தந்தவன் என்றார்.
நான் நாடகம் பார்க்க இத பூட்டித்தாய்யா என்றார் மிகுந்த வாஞ்சையுடன் (உண்மையான வாஞ்சையுடன்).
சரி என்று சொல்லி ஒரு விதமாய் அதைப் பூட்டி சன் டீவியை ஓட விட்டேன். படமும், ஒலியும் விக்கி விக்கி வந்தது.
தம்பி என்ன விக்குது என்றார், அம்மா.
எனக்கு உதவியாய் அவரின் மகன் வந்து, அம்மா அண்ணை இடைக்கிடை விக்கும் என்று சொன்னவர் என்றார். அது எனக்கு ஆறுதலாயிருந்தது.
தம்பி கோப்பி தாறன் என்றார். சரி சீனி போடாதீங்கம்மா என்றேன். சரி என்றார். கோப்பியும் வந்தது. குடித்தபடியே பூராயம் விசாரித்தார். தனக்கு 6 பெடியங்கள் என்றும் பெண் குழந்தை இல்லை என்பது வேதனை என்றும் சொன்னார். உங்களுக் 6 மருமகள்மார் இருக்கினம் பிறகு என்ன கவலை என்றேன்.
குசும்புச் சிரிப்புடன் அவளவ நான் போனால் என்ட கையைத் தான் பார்ப்பார்கள் என்ன கொண்டு வந்திருக்கிறேன் என்றார். மகள் மகள் தான். மருமகள் மருமகள் தான் என்றார். என்னால் ஏதும் சொல்ல முடியவில்லை.
தம்பி எந்த ஊர் என்றார். ஏறாவூர் என்ற போது மட்டுக்களப்போ என்றார். ம் என்றேன். என்ட மகன் மட்டக்களப்பில தான் இருக்கிறார் என்றார். கல்லடியில் ஒரு வீதியைக் குறிப்பிட்டு அங்கு ஒரு பிரபலமான டீச்சரை திருமண முடித்திருக்கிறார் என்றார். எனது மண்டையில் ஏதோ பொறி தட்டியது போலிருந்தது. பொறுங்கள்.. என்று சொல்லி எனக்கு பாடம் கற்பித்த ஒரு ஆசிரியரின் பெயரைச் சொல்லி அவரா என்றேன். ஆம் ஆனால் அது அவர் திருமணம் முடிக்க முதல் இருந்த பெயர் என்றவுடன், நான் ஆசிரியரின் கணவரின் பெயரைச் சொன்னேன்.
அட.. அப்ப என்ட மூத்தவனையும் உனக்குத் தெரியுமோ என்றார். இல்லை, ஆனால் பெயரைக் கேட்டிருக்கிறேன் என்றேன். அத்துடன், நீ வருமுன் தான் உன்ட டீச்சரோட கதைத்தேன் என்றார்.
அதன் பின் பேச்சு எங்கெல்லாமோ சுற்றி.. எனது குடும்பத்தினுள் புகுந்தது. இரண்டும் பெண் குழந்தைகள் என்றவுடன் நீ குடுத்து வைத்தவன் என்றார். புன்னகைத்தேன்.
அப்ப மனிசியும் ஏறாவூரோ என்றார்? இல்லை திருகோணமலை என்றேன். எவிடம் என்ற போது.. வீதியின் பெயரைச் சொன்னேன். கோயிலுக்கு முன்பா என்றார். ம்.. என்ற போது சற்று அதிகமாய் சிந்தித்தவர்.. ஒருவரின் பெயரைச் சொல்லி இன்னாரின் தமக்கையின் மகளா என்றார்.
ஆம் என்றேன்.
அப்ப நீங்களும் எனக்கு சொந்தம் மாதிரித்தான் என்றார். புன்னகையுடன்.
நான் அங்கு நின்றிருந்த ஒரு மணிநேரமும் மிகுந்த அன்புடனும், அன்னியோன்யமாகவும் பழகினார்.
தம்பி ஏதும் தேவை என்றால் வந்து உதவி செய்யோனும் என்று வழியனுப்பிய போது, நிட்சயமாக என்று பதில் என்னையறியாமலே வந்து விழுந்தது.
நேர்வேஜியர்கள் இப்படி எதிர்பாராத மனித சந்திப்புக்ளை ”உலகம் சிறியது” என்னும் அர்த்தமுடைய சொற்றொடர் ஒன்றினால் வர்ணிப்பதுண்டு.
ஆம்.. உலகம் மிகச் சிறியது என நான் அறிந்திருந்தாலும்.. அது இவ்வளவு சிறியதாயிருக்கும் என எதிர்பார்க்கவில்லை.
இன்னுமோர் நாள் இந்த உலகம் இதை விட மிக மிகச் சிறியதாயிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை
இன்றைய நாளும் நல்லதே!
.
Subscribe to:
Post Comments (Atom)
விஞ்ஞான உலகில் உலகம் சுருங்கித்தான் விட்டது .ஊரவர்கள் பற்றிய அறிமுகம் ..இனம் புரியாத மகிழ்வை தந்திருக்கும். அவர்களுக்கும் உங்களுதவி பெரும் ஆறுதலாய் இருக்கும். எங்கு சென்றாலும் நம்மவர்கள் விசாரித்து கண்டுபிடித்து விடுவார்கள்.
ReplyDelete//இன்னுமோர் நாள் இந்த உலகம் இதை விட மிக மிகச் சிறியதாயிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை//
ReplyDeleteநிச்சயம்!!!! நன்றாக இருந்தது!
உங்க தமிழ் நெசமா இனிக்குது :)
ReplyDeleteதமிழர்களின் உலகம் சுருங்கிவிட்டது என்பதில் ஐயமில்லை.
ReplyDeleteஎங்கள் உலகம் உங்களது படைப்புலகிற்குள் ஒடுங்கிவிட்டது.
நன்றாக எழுதுகின்றீர்கள் அண்ணா,தொடர்ந்து எழுதுங்கள்.
ReplyDelete