ஆயிரமாண்டுக் குளிரில் ஒரு தமிழன்


சில நாட்களுக்கு முன் கணணி திருத்துவதற்காய் ஒரு வயதான பெண்மணி அழைத்தார். போனேன்.

அமைதியாயும் அழகாயும் இருந்தது வீடு. அதிகமாய் எல்லா நோர்வேஜியர்களும் காலநிலையைப் பற்றி கதைப்பார்கள். இவரும் அதற்கு விதிவிலக்கில்லை. ஆனால் இவர் சற்று அதிகமாகவே காலநிலையைப் பற்றிக் கதைத்தார்.

ஆம், குளிர் தொடங்கிவிட்டது. வின்டருக்கு நீ தாயாரா என்றேன். அது நான் தயாராக இருந்தாலும், இல்லாவிட்டாலும் வந்து தான் ஆகும். வந்ததும் நான் ஸ்பெயின் போவாதாக உள்ளேன் என்றார். கேட்டதும் பொறாமையாக இருந்தது.

என்னையும் அதே கேள்வியைக் கேட்டார். எனக்கு எனது வாகனத்தை உள்ளே விடுவதற்கு கராஜ் இருந்தால் மகிழ்ச்சியாய் இருக்கும் என்றேன். புன்னகைத்து, அப்ப சென்ற வருடம் உயிர் போயிருக்குமே என்றார் நக்கலாய் (சென்ற வருடம் பனி கொட்டோ கொட்டு என்று கொட்டியது நோர்வேயில்).  சிரித்தேன் நான்.

அவருக்கு காலநிலையைப் பற்றி கனக்க தெரிந்திருந்தது. எனக்கு புரிந்தவற்றிற்கு தலையாட்டினேன், புரியாதவற்றிற்கும் சிரித்துக் கொண்டு தலையாட்டினேன்.

உங்களுக்கு காலநிலையைப் பற்றி இவ்வளவு தெரிந்திருக்கிறதே எப்படி என்றேன். ஒரு மூலையில் தான் இருப்பதே தெரியாமல் மடிக் கணணியுடன் குந்தியிருந்த தன் கணவனை அழைத்தார்.அவரும் எதிர்த்துப் போசாமல் வந்தார். அவர் வந்ததும் இவரைத் தெரியுமா என்றார்? உற்றுப் பார்த்தேன். அவரைத் தெரிந்ததாய் எனக்குத் தெரியவில்லை.  இல்லை என்று தலையாட்டினேன்.

இவர் நோர்வேயின் வானிலைஅவதான நிலையத்தில் தொழில் புரிந்தவர் என்றும், தொலைக்காட்சியில் தோன்றி வானிலை பற்றி அறிவித்தவர் என்றும் சொன்னார். அப்படியா என்று கேட்டுக் கொண்டிருந்தேன்.

அது பல வருடங்களுக்கு முன் என்றும்.அது கணணிகளின் காலம் அல்ல என்றும் சொன்னார். தற்போது தான் ஓய்வு பெற்று பல வருடங்களாகிவிட்டதாகவும்,  இருப்பினும் காலநிலையில் மிகுந்த ஆர்வமுடையவர் என்றும், அது பற்றி பல புத்தகங்கள் எழுதியுள்ளதாகவும் சொன்னார்.

எனக்கு ஆர்வம் தாங்கமுடியவில்லை. அய்யா! இந்த வருட வின்டர் சென்ற வருடத்தைப் போல் கடுமையாக இருக்குமா என்று கேட்டேன். பொறு என்றவர் உள்ளே போய் ஏதோ பல புள்ளிவிபரக் கோவை ஒன்றை பார்த்து சற்று நேரத்தின் பின் சொன்னார் சென்ற வருடம் கடந்த 100 வருடங்கிளிலேயே குளிர் அதிகமாய் இருந்திருக்கிறது. அப்படியானதோர் குளிர் 100 வருடத்திற்கு ஒரு முறையே வரும் எனவே இந்த வருடம் குளிர் அதிக குளிர் இருக்காது என்றார்.

இவரை நம்பாதே.. அவர் சொல்லும் காலநிலை மெய்த்ததாய் சரித்திரமில்லை என்றார் மனைவி நக்கலாய். இந்தப் பெண்களே இப்படித்தான் என்றார் பதிலுக்கு அவர், நக்கலாய்.

அவர்களின் கணணி திருத்தி வீடு வந்து சேர்ந்தேன். அன்றிரவு இணையத்தில் உலாவிய போது ரஸ்யநாட்டு காலநிலை அவதானிகள் இந்த வருட பனிக் காலம் மிகவும் குளிரானதாக இருக்கும் என்று அறிக்கை விட்டிருந்தார்கள். ஆர்வம் காரணமாக முழுவதுமாய் படித்தேன் அவர்களின் அறிக்கையை.

கடலில் உள்ள வெப்பமான நீரோட்டம் ஜரோப்பாவின் பனிக்காலத்தை அதிகமாக நிர்ணயிக்கிறது என்றும். இவ்வாண்டு அதன் வெப்பமும், வேகமும் மிகவும் குறைந்திருப்பதால் இந்த வருடம் மிகவும் குளிரானதாக இருக்கும் என்றிருந்தார்கள். இந்த வருடம் கடந்த 1000 ஆண்டுகளில் இருந்த குளிரை விட அதிகமாக இருக்கும் என்று தாங்கள் எதிர்வு கூறுவதாகவும் சொல்லி இருந்தார்கள். அதை வாசித்து முடிய முதலே எனக்கு குளிரில் உடம்பு நடுங்கிக் கொண்டிருந்தது.

ரஸ்ய விஞ்ஞானிகளை நம்புவதா? அல்லது நோர்வே வானிலை அவதானிப்பாளரை நம்புவதா? ஓரே குழப்பமாய் இருக்கிறது. ஆனால் பனிக்காலம் மட்டும் இதுகளைப் பற்றி கவலைப்படாமல் நெருங்கி வந்து கொண்டிருக்கிறது. வழமை‌போல.



.

3 comments:

  1. இப்பவே குளிர் பற்றி தொடங்கி விடீர்க்லா? இப்பவே நடுங்குது...........சென்றதடவை நாங்க. (கனடா) சற்று தப்பி விடோம் .
    தாக்கம் அதிகமில்லை.

    ReplyDelete
  2. இயற்கை பல சமயங்களில் நம்மை குழப்புகிறது!:-)

    ReplyDelete
  3. வடதுருவத்தில் இருப்பவர்கள் எப்படி இருப்பார்கள்?

    ReplyDelete

பின்னூட்டங்கள்