பாலஸ்தினத்தின் கண்ணீரும் ஒரு கணணியும்

Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினர்.
2008 ம்பாலஸ்தீனர்களின் நகரமான ”காசா” நகரத்தின் இஸ்ரேலியர்கள் யுத்தம் தொடுத்த போது அம் மக்கள் அனுபவித்த கொடுமைகளை உள்ளூர் ஓளிப்படக்கலைஞர்களை வைத்து படமாக்கி மிகுந்த பரபரப்பை உண்டாக்கியிருக்கிறார்கள் நோர்வேயைச் சேர்ந்த Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினர். நேற்று முன்தினம் அவர்களின் படம் ரொரொன்டா நகரத்தில் நடந்ததொரு திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டிருக்கிறது. நோர்வேயில் இம் மாத இறுதியில் வெளியிடப்படுகிறது.


இவர்கள் இந்தப் படம் தயாரித்துக் கொண்டிருந்த போது 2009ம் ஆண்டு வைகாசி மாதம் இவர்களிடம் இருந்து எனக்கு ஒரு தொலைபேசி வந்தது. கணணி சம்பந்தமாக உதவி வேண்டும் என்றும், உடனடியாக வர முடியுமா என்றும் பதட்டத்துடன் அழைக்கப்பட்டேன்.

முன்பு ஒரு தரம் ஒஸ்லோ ரோட்டறி சங்கத்தினருக்கு  ”இணையமும் கணணிப் பாதுகாப்பும்” என்ற தலைப்பில் உரையாற்றிய போது அறிமுகமாகியிருந்தார் Terje Kristiansen என்னும் பிரபல இயக்குனர்.

அன்று என்னை பதட்டத்துடன் அழைத்ததும் அவ‌ர் தான். சரி மாலை வருகிறேன் என்று சொல்லி அன்று மாலை அங்கு போய் இறங்கினேன்.

அழகிய பழையகாலத்து வீடு. வீட்டின் முன் அழகிய பெண்ணொருத்தியின் சிலையிருந்தது.

கைகுலுக்கி அறிமுகமானோம். வீட்டுக்குள் போன போது அவர்களின் சுவரில் மிகப் பெரியதோர் கறுப்பு வெள்ளை படம் ஒன்று தொங்கிக் கொண்டிருந்தது.

அப்படத்தில் இருப்பவரை எனக்கு அறிமுகமில்லாவிட்டாலும் அப்படம் மிகுந்த பரீட்சயமுள்ளபடம் என்பதை பார்த்ததும் உணர்ந்து கொண்டேன். ‌அது நோர்வேயின் உலகப்பிரபலமான புகைப்படக் கலைஞர் Morten Krogvold என்பவர் எடுத்த மிகப் பிரபல்யமானமான புகைப்படம். முன்பொரு காலத்தில் புகைப்படக் கலையில் நான் பைத்தியமாய் அலைந்து திரிந்த போது Morten Krogvold இன் ஏகலைவனாய் இருந்திருக்கிறேன். எனவே அப்படம் பற்றி ஏற்கனவே நான் அறிந்திருந்தேன்.

அந்தப் படத்தைக் காட்டி இது உலக பிரபல நடிகை Vibeke Løkkeberg அல்லவா என்றேன். ஆம் என்றார். நீ அவரின் பயங்கர விசிரி போல என்றேன். அவர் ஏதோ அர்த்தமாய் புன்னகைக்க.. ஆம் அவர் அவளின் பயங்கர விசிரி தான் என்ற பெண் குரல் கேட்டுத் திரும்பினேன். எனக்கு முன்னால் நின்றிருந்தார் Vibeke Løkkeberg நீண்டு பெருத்த அவரின் அழகிய கூந்தலுடன்.

அப்போது தான் புரிந்தது இவர்கள் தம்பதிகள் என்று. கைகுலுக்கி அறிமுகமானோம். வயது ஐம்பதை தாண்டியிருந்தாலும் மிகவும் இளமையாய் இருந்தார்.  என்னை அழைத்தத காரணம் என்ன என்று கேட்டேன், தேனீர் மற்றும் அரேபிய கேக் சகிதமாக பேசத் தொடங்கினோம்.

தாங்கள் பாலஸ்தீனம் பற்றி படமெடுப்பதாகவும், அது பற்றி பல வீடியோ படங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள் போன்றவற்றை உள்ளடக்கிய கணணி தங்கள் வீட்டில் இருந்து களவு போய்விட்டதாகவும். அத்துடன் தங்கள் காரும் களவு போயிருப்பதாகவும் சொன்னார்கள். தமக்கு புதிய கணணி வாங்குவதற்கும், கண்காணிப்பு கமரா பூட்டுவதற்கும், தங்களிடமிருக்கும் backup ஆவணங்களை  மீள்பதிவு செய்வதற்கும் உதவி வேண்டும் என்றும் சொன்னார்கள்.

அடுத்து வந்த நாட்களில் அவர்கள் தொலைத்த ஆவணங்கள், வீடியோ படங்கள், மின்னஞ்சல்கள் என்பவற்றில் ஏறக்குறைய 70 விதமானவற்றை பெற முடிந்தது. அதே வேளை போலீசார் காரையும் குற்றவாளியையும் கண்டுபிடித்தனர். குற்றவாளி இவர்களின் வீட்டில் வேலை செய்த ஒருவரின் மகனாய் இருந்தார். ஆனால் கணணி மட்டும் கிடைக்கவில்லை.

உதவிக்கு மிகுந்த நன்றி என்றும். இப்படம் வெளி வந்தால் உனது  பங்கும் அதில் உண்டு என்று சொல்லியனுப்பினார்கள். புன்னகையுடன் விடைபெற்றேன்.

நேற்று முன் தினம் அப்படத்தின் வெளியீட்டுவிழா நடந்தது. சிவப்புக் கம்பளத்தில் Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினர் நடந்து போயினர். ‌அவர் தனது பேட்டியின் போது இப்படத்தை தயாரிக்க உதவிய அனைவருக்கும் தங்களின் மனமார்ந்த நன்றியை தெரிவித்தார். என் மனம் ஏனோ காற்றில் சருகாய் மாறியிருந்தது.

அவர்கள் காசாவின் கண்ணீரை தயாரித்த 2009 ‌ஏப்பல், மே மாத காலங்களில் என்னூர் வாய்க்கால்களில்  கண்ணீருடன் ரத்தமும், சதையும் கலந்தோடிக்கொண்டிருந்தது ஆனால் கண்டு கொள்ளத்தான் எவருமிருக்கவில்லை.


ஆனால் எங்களவர்களிடமும் ஒளி நாடாக்கள் இருக்கின்றன.

-----------------------------------------------------------------------------------------------
பி.கு: Vibeke Løkkeberg, Terje Kristiansen தம்பதியினருக்கு எனது பாராட்டுக்களும் நன்றிகளும்.


அப்படத்தின் முற்பிரதியினை இங்கு பார்க்கலாம்.

.

7 comments:

 1. நெகிழ்ச்சியாக உள்ளது!

  ReplyDelete
 2. //ஆனால் எங்களவர்களிடமும் ஒளி நாடாக்கள் இருக்கின்றன. //

  அனுபவ பகிர்வுக்கு நன்றி.பாலஸ்தீனியம் புராதன நிகழ்வுகளுடன் தற்போதைய மத்திய கிழக்கு பொருளாதாரம் சார்ந்த உலகநாடுகளின் தேவை என்ற ஒன்றாக இருக்கின்ற காரணத்தினால் உயிர்ப்போடு இருக்கிறது.

  நம்மவர்களில் எட்டப்பன்கள் நிறைய காரணம் கொண்டு சிதறு தேங்காயாய் போய் விட்டது.உலகளாவிய பார்வையாய் என்றாவது கொண்டு போய் சேர்ப்பதில் இருக்கிறது ஒளி நாடாக்களின் உண்மை.நன்றி மீண்டும் பகிர்வுக்கு.

  ReplyDelete
 3. நல்லதொரு உணர்வு பூர்வமான பதிவு.நம் தமிழர்கள் கதை சொல்லும் சமூகத்தை சார்ந்தவர்கள். ஒற்றுமையாக செயல் பட துணிவற்றவர்கள். ஜாதி ,மதம் அரசியல் ,இடம், குலம் சார்ந்து எத்தனை அதிருகள் அவர்களாகவே வரைந்து வைத்துள்ளனர்.

  ReplyDelete
 4. நல்ல அனுபவப் பதிவு. சுவையான தகவல்கள்.
  "..எங்களவர்களிடமும் ஒளி நாடாக்கள் இருக்கின்றன.." என்ற முத்தாப்பு வசனத்திற்காக மட்டுமல்ல.

  ReplyDelete
 5. உங்களின் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நன்பர்களே!

  ReplyDelete
 6. //அவர்கள் காசாவின் கண்ணீரை தயாரித்த 2009 ‌ஏப்பல், மே மாத காலங்களில் என்னூர் வாய்க்கால்களில் கண்ணீருடன் ரத்தமும், சதையும் கலந்தோடிக்கொண்டிருந்தது ஆனால் கண்டு கொள்ளத்தான் எவருமிருக்கவில்லை.//

  அன்புள்ள ‘விசர’னுக்கு ?!......
  இவ்வாறு எழுதுவதற்குச் சற்றுக் கூச்சமாக உள்ளது, என்றாலும் நீங்களே ‘விரும்பி’ ஏற்றுக்கொண்ட பெயர் இது.ஆகையால் மன நெருடலைப் புறந்தள்ளி விட்டு அப்படியே எழுதியுள்ளேன்.
  எதேச்சையாகத் தான் தங்களது பதிவினை இன்று நான் பார்க்க நேர்ந்தது. இத்தனை நாளாக இது என் கண்களில் படவில்லையே என்ற ஏக்கம் உண்டாயிற்று. தங்கள் 10-10-2010 பதிவும் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் இறுதி வரிகளும் ‘மனிதம்’ இந்த மண்ணில் சிறுகச்சிறுக மடிந்து கொண்டிருப்பதை உணர்த்தின.தொடரட்டும் தங்கள் எழுத்துப் பணி.
  “சர்வசித்தன்”[www.sarvachitthan.wordpress.com]

  ReplyDelete
 7. இத்தனை நாளாய் வலை மேய்ந்தாலும் இப்பொழுதுதான் உங்களைப் படிக்கின்றேன். எமது வலியையும்,வாழ்வையும் பிரதிபலிக்கும் உங்கள் பதிவுகள் மனநிறைவைத்தருகின்றன.

  ReplyDelete

பின்னூட்டங்கள்