மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குமட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று

” மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்குமட்டும்தான் தெரியும் முத்தம் காமத்தில் சேர்ந்ததில்லை என்று ” இப்படியான வசனத்துடன் ஒரு பாடல் தங்கமீன்கள் என்னும் திரைப்படத்தில் வருகிறது. அந்தப்பாட்டினை கேட்ட நேரத்தில் இருந்து இப்போதுவரை மீண்டும் மீண்டும் அதையே பல நாட்களாய் கேட்டுக்கொண்டிருக்கிறேன்.  புதிதாய்ப்பிறந்த என் மகள்களை மீண்டும் மீண்டும் பார்த்ந்திருந்த நாட்களைப்போன்று.

எனக்கும் இரண்டு பெண்குழந்தைகள். அவர்களுடன் நான் வாழ்ந்தது சில காலங்கள், வருடங்கள் ஆகிவிட்டன. அவர்களும் வளர்ந்துவிட்டார்கள். அவர்களின் வாசனையும், ஈரமும், நேசமும், மென்மையும், பாசமும் அவர்கள் வளர்ந்துவிட்ட பின்பான இன்றும் என் கைகளிலும், மனதிலும், நினைவுகளிலும் ஒட்டிக்கொண்டேயிருக்கிறது. எதைக் கண்டாலும் நினைவுகள், அதனுடன் சம்பந்தப்பட்ட என் குழந்தைகளின் நாட்களை நினைவூட்டியபடியே இருக்கின்றன.

என்னைச்சுற்றியியங்கும் உலகத்தில் காணும் குழந்தைகளில் என் குழந்தைகளைக் காணும் கலை வசப்பட்டிருக்கிறது, எனக்கு. மிகவும் மகிழ்ச்சியைத் தரும் கலை அது.

கடந்து போகும் குழந்தையின் தலையைக்கோதிவிடும்போது, அக் குழந்தைகள் யார் தன் தலையைக் கோதியது என்று திரும்பிப்பார்க்கும் அழகே தனி. அதன் பின்பான கண்களைச் சுருக்கிச் சிரிக்கும் சினேகமான புன்னகைக்கு விலையேயில்லை. அந்தப்புன்னகையினூடாக எமக்குள் ஒரு உலகம் உருவெடுக்கும். தந்தையின் காலினுள் மறைந்திருந்தபடியே என்னைப்பார்த்து புன்னகைக்கும் அந்த சினேகத்தில் ஆயிரம் அர்த்தங்கள் இருக்கும். அற்புதமான உலகமது.

தற்போது இளவேனிற் காலமாகையினால் எனது தொடர்மாடிக் குடியிருப்பில் வாழும் அனைத்துலக பெண்குழந்தைகளும் அதிகமாக வெளி‌யிலேயே நிற்பார்கள். அவர்களைக் கடந்துபோகும்போது அவர்களின் சினேகமான புன்னகை என்னை தினமும் உயிர்ப்பித்தபடியே இருக்கிறது. அவர்களின் பேச்சுக்கள், செயல்கள் அனைத்தும் எனது இரு பெண்குழந்தைகளின் செயல்களையே நினைவுபடுத்திக்கொண்டிருக்கின்றன.

பெண்குழந்தைகளுக்கு தந்தையாய் இருப்பது என்பது அற்புதமான அனுபவம். கண்ணால் வெருட்டியே காரித்தை சாதிக்கும் சிறுக்கிக்‌கூட்டம் அது. அவர்களின் பார்வைக்கு ஏமாந்த சோணகிரியாய் நடிப்பதும் அலாதியான அனுபவம். அப்பனை ஏமாற்றியதாய் அவர்கள் மகி்ழ்வதும், அவர்களின் மகிழ்வில் நாம் எங்களை மறப்பதும் அனுபவித்தவர்களுக்கே புரியம் இரகசியம்.

தங்க மீன்கள் என்னும் அந்தப் படத்தின் பாடலில் ”உந்தன் கைகள் பிடித்து போகும் வழி அது போதவில்லை, அது இன்னும் வேணுமடி” என்றும் ஒரு வரி வருகிறது . உண்மைதான், எனது அவள்களுடன் வாழ்ந்த வாழ்க்கை போதாததே. வாய்நிறைந்த கேள்விகளை மூச்சடக்கிக் அவள்கள் கேட்டும் அழகே தனி. எப்போதும் கேள்விகளுடனேயே இருப்பவர்கள் பெண்குழந்தைகள். உலகை அறிந்துகொள்வதில் அத்தனை ஆர்வம்கொண்டவர்கள் அவர்கள். இரக்கம், அன்பு, மனிதநேயம் நிறைந்தது அவர்கள் உலகம். மீண்டும், மீண்டும் அந்நாட்களை வாழ்ந்தனுபவிக்க ஆசையாயிருக்கிறது.

குழந்தைகளின் கேள்விகள் எப்போதும் ஏதோ ஒரு செய்தியைக் கேட்டபடியே இருக்கும். உலகைப்பற்றி எதைப்பற்றியாவது கேட்டுக்கொண்டே இருப்பார்கள். மிருகங்கள், குருவிகள், பூக்கள், கடல், மலை, நிறங்கள் என்று ஆயிரம் கேள்விகளை கேட்பார்கள். அவர்களின் அந்தத் தாகத்திற்கு அன்பாயும், உண்மையாயும், அவர்கள் மொழியில் பதில் செல்வதே ஒரு பெரும் பாக்கியம். எங்கள் வீட்டில் ஒரு பூனைக்குட்டி இருந்தது. எனக்கும் புனைகளுக்கும் ஜன்மப்பகை உண்டு. இருப்பினும் என்னையும் பூனையும் நண்பர்ளாக்கியது எனது இளையமகள்தான்
அப்பா பூனை கடிக்காது
நீ வீணே பயப்படுகிறாய்
என்னைப்பார், நான் பூனையுடன் நட்பாய் இருக்கிறேன்.
அது என்னை கடிக்கவில்லையே. உன்னையும் கடிக்காது.
துக்கிப்பார் அப்பா...

இப்படியெல்லாம் சொக்குப்பொடி போட்டால் எந்த அப்பன்தான் கரையாதிருப்பான். நான் மட்டும் விதிவிலக்கா, என்ன? நானும், அதன் காரணமாய் எங்கள் வீட்டுப் பூனையுடன் சில காலம் சினேகமாகமாய் இருந்த காலமிருந்தது. இளையமகள் குதிரைகளில் சற்றுக்காலம் காதல்கொண்டிருந்தாள். நாம் நடந்து போகும் வழியில் மேயும் ஒரு கரியநிறக் குதிரையில் தொடங்கிய குதிரைப்பைத்தியம் சற்று அதிகமாகிய போது எங்கும் எதிலும் குதிரையாய் இருந்தது அவள் உலகம். எமது வீட்டிற்கு அருகே இருந்த குதிரை லாயத்தில் இருந்த ஒரு குதிரைக்கு சில நாட்கள் சேவகம் செய்து தனது ஆசையை நிறைவேற்றிக்கொண்டாள் அவள்.

காலைநேரங்களில் எனது போர்வையுனுள் புகுந்து அதிகாரம் பண்ணும் உரிமை எனது குழந்தைகளுக்கு மட்டுமே இருந்தது. இரண்டு கைகளாலும் இருவரையும் அணைத்தபடியே அவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் சுகஅனுபவமே தனி. எனது அப்பா, இல்லை எனது அப்பா என்னும் அவர்களின் செல்லச் சண்டைகளில் கதாநாயகனாய் இருப்பதே வாழ்வின் உச்சம். இலவசமாய் முத்தம் தந்து என்ட அப்பா என்னும் அழகே தனி. அவளைவிட இரண்டு முத்தம் அதிகமாய் தந்து என்அப்பா என்னும் முத்தச் சண்டையில் சளிப்பிடித்துக் கிடந்திருக்கிறேன். ஒவ்வொரு நிமிடமும் உயிர்த்திருந்த காலம் அது.

பொம்மைக் குழந்தைகளை அவர்கள் கையாளும் அழகே தனி.  அப்பாவின் அதிகாரமும், அன்பும் அவர்களின் வார்த்தைகளில் தெறிக்கும். தன்னை அப்பாவாகவும், பொம்மையை குழந்தையாகவும் நினைத்து  அவர்கள் உருவாக்கும் உலகம் பலதையும் எனக்குக் கற்றுத்தந்திருக்கிறது. ஒருமுறை, முத்தவளுக்கு பேசும், சிரிக்கும், அழும், பசிக்கும், விளையாடும், தன் உணர்வுகளை தெரிவிக்கும் ஒரு பொம்மையை வாங்கிக்கொடுத்தேன். அதனுடன் அவள் வாழ்ந்த வாழ்க்கையில் நான் உருகிப்போனேன். உணவு ஊட்டுவதில் இருந்து, குளிப்பாட்டுவது, உடைமாற்றுவது, குழந்தையை வெளியில் அழைத்துப்போவது, தூங்கவைப்பது என்று அவள் காட்டிய அன்பான அட்டகாசத்தை இன்றும் பசுமையாய் என் மனதில் ஒளித்துவைத்திருக்கிறேன். யாரும் பொம்மைக்குழந்தைகளை தூக்கித்திரிவதை காணும்போதெல்லாம் அந் நினைவுகள் கட்டுடைத்துப்பாயும். கண்களும் நீர்த்துப்போகும்.

எனது இரு மகள்களுக்கும் மிதிவண்டி ஓடப்பழக்கிய அனுபவம் அலாதியானது. அந்நாட்களில் அவர்களை விட நானே அதிக பதட்டமாயிருந்தேன். அவர்கள் தனியே மிதிவண்டி ஓடிய ஒவ்வொரு  அடியும் ஒவ்வொரு மரதன் ஓட்டம் போலுணர்ந்திருந்தேன். இறுதியில் அவர்கள் தனியாகவே மிதிவண்டி ஓடப்பழகிய நாட்களில் அவர்களை விட அதிகமாய் மகிழ்ந்திருந்தது நானே. பெருமை காட்டாற்றைப் போன்று கட்டுடைத்துப்பாய்ந்த நாட்கள் அவை. இளவேனில் காலத்தில் தந்தையர்கள் தங்கள் தங்கள் குழந்தைகளுக்கு மிதிவண்டி பழக்கும்போது, என் மனது பழையனவற்றையே மீட்டுக்கொண்டிருக்கும்.

என் நண்பரின் மகனுக்கு சென்ற வருடம் மிதிவண்டி பழக்கக்கிடைத்தது. அந்த இரு நாட்களும் நான் என்னை மறந்திருந்தேன். அன்பாய், அதட்டலாய், அரவனைத்து ஊக்கம் தந்து, சுயநம்பிக்கையை வளர்த்து அதன்பின் மிதிவண்டி ஓட்டப்பழக்கவேண்டும். உங்களுக்கும் அக்குழந்தைக்கும் ஒரு அன்னியோன்யம் தோன்றி குழந்தைக்கு உங்கள் மீது நம்பிக்கை வருமாயின் அக் குழந்தை எதையும் சாதிக்கும். சென்ற வருடத்தின் இளவேனிற்காலத்தை அழகாக்கியது அவ்வனுபவம்.

ஒரு நாள், வைத்தியசாலையில் ஒரு பெண்குழந்தை தன் தந்தையின் கழுத்தில், நோயின் வீரியம் முகத்தில் தெரிய சோர்ந்துபோய் முனகியபடியே படுத்திருந்தாள். தந்தையும் அவளை ஆறுதல்படுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார். எனது இளையவளுக்கு சுகயீனம் எனின் என் கைகளை விட்டு இறங்காதேயிருப்பாள். நாம் மிகவும் அன்னியோன்யமாய்மாறும் நாட்கள் அவை. சிறு சுகயீனம் என்றாலும் பல மடங்கு வேதனையை நான் உணர்ந்திருப்பேன். தலைகோதி, முதுகினைத் தடவி, அணைத்திருந்து, மெதுவாய் உணவூட்டி, மருந்தூட்டி அவள் சுகமாகும் வரை அவளை ஒரு தவம் போன்று கவனித்திருப்பேன். அதையே அவளும் விரும்புவாள். யார் அழைத்தாலும் இல்லை வரமாட்டேன் என்பது போன்று என் கழுத்தை இறுகக்கட்டிப்பிடிக்கும் இறுக்கம் மொழிகளுக்கு அப்பாற்பட்ட பல உணர்வுகளை உணர்த்தும். என் மனமோ பெருமையின் உச்சத்தில் இருக்கும்.

அன்றொரு நாள் பெண்களுக்கான சோடனைகளைக் விற்பனை செய்யும் Accessorize  என்னும் கடையை கடந்துசென்றுகொண்டிருந்தேன். அங்கு ஒரு தந்தை கைநிறைய சிறுமிகளுக்கான சோடனைப்பொருட்களுடன் நின்றிருந்தார். நானும் அவரைப்போல் வாழ்ந்திருந்த காலமொன்று இருந்தது. அந் நாட்களில் தொழில் நிமித்தம் அடிக்கடி பயணப்படுவேன். அப்போதெல்லாம் நான் தேடியலைவது ‌பெண்கு‌ழந்தைகளின் உடை, சப்பாத்து, சோடனைக் கடைகளையே. நிறம் நிறமாய் தலைச்சோடனைகள், தோடுகள், தொப்பிகள், உடைகள், சப்பாத்துகள் என்று என் பையை நிரப்பிக்கொள்வேன். வீடு வந்ததும் அவற்றை அணிவித்து அழகு பார்ப்பதிலும், மறுநாள் அவற்றுடன் அவள்களை வெளியே அழைத்துச் செல்வதிலேயே மனம் லயித்திருக்கும்.

எனது நண்பர் ஒருவரின் வீட்டில் தங்கியிருந்த ஒரு நாள், நண்பனின் மனைவி குழந்தைகளுக்கு தலைவாரிக்கொண்டிருந்தார். நான் நண்பனிடம் டேய் நீ குழந்தைகளுக்கு தலைவாரிவிடலாமே என்று கேட்டேன். எனக்கு இந்தவேலை சரிவாராது என்றான் அவன். அவனின் ஒரு குழந்தைக்கு நான் தலைவாரி பின்னலிட்டேன். நண்பனின் தாயாரும், மனைவியும் நண்பனைக் கலாய்த்தெடுத்டுத்தார்கள்.

என்னைவிட மிக மிக அழகான முடியினைக்கொண்டவர்கள் என்னவள்கள். தினமும் காலையில் அவள்களின் முடிவாரி, பின்னலிடும் பெரும் பொறுப்பு என்னிடமே இருந்தது. காலையில் சிக்கெடுத்தால் குழந்தைகள் எரிச்சல்படலாம், அழலாம் என்பதால் இரவு தூங்குமுன்பே சிக்கெடுத்து, பின்னலிட்டு தூங்கவைப்பேன். காலையில் மீண்டும் தலைவாரி பின்னலிடுவதில் எவ்வித பிரச்சனையுமே இருக்காது. ஒரு விடுமுறையின்போது மூத்தவள் ஆபிரிக்கநாட்டு சிறு சிறு பின்னல்கள் வேண்டும் என்று கேட்டுப்பெற்றுக்கொண்டாள். இளையவள் வளர்ந்ததும் அவளும் ஆபிரிக்கப்பின்னலுடன் சில நாட்கள் வலம் வந்தாள். ஒரு முறை இளையவளை உறவினர்களிடத்திற்கு அழைத்துச்சென்றபோது ஆபிரிக்கர்கள் போன்று தலையெங்கும் 6 - 7 குடும்பிகட்டி அழைத்துப்போனேன். என்ன இது ஆபிரிக்கர்கள்போல என்று முகம் சுளித்தார்கள், உறவினர்கள். ஆனால் ஆபிரிக்கப் பின்னலை தலையில் சுமந்திருந்தவள் மகிழ்ச்சியாய் இருந்தாள். ஆதலால் நானும் மகிழ்ச்சியாய் இருந்தேன்.

சென்ற வருடத்தின் இளவேனிற்காலத்தில் ஒரு நாள் எனது தொடர்மாடியின் அருகில் சில சிறுமிகள் ஒரு கடைவைத்து காட்டுப்பூக்களை பறித்துவந்து விற்பனை செய்துகொண்டிருந்தர்கள். அவர்களைக் கடந்து சென்ற போது  எங்கள் கடையில் எதையேனும் வாங்குவாயா என்று கேட்ட, அவள்களின் கண்ணில் தெரிந்த ஆவலின் அழகிற்காகவே ஒரு குறோணருக்கு ஒரு பூவை வாங்கக் கொண்டேன். அப்போது அவள்களின் கண்களில் அன்பு கலந்த நன்றி பூத்திருந்து.

எனது மகள்களும் வீட்டில் கடைவைத்து விளையாடுவார்கள். வீட்டில் இருக்கும் பொருட்கள் அனைத்தும் அங்கு விற்பனைக்கு வரும். எனது கணணியை மீண்டும் மீண்டும் விலைகொடுத்து வாங்கியிருக்கிறேன். அவர்களின் புத்தகங்கள், மேசை, கதிரைகள், மதிய உணவு என்று எதையும் விற்பனை செய்யும் சிறுக்கிகள் அவர்கள். கடைகளுக்குச் சென்றால் சினக்கும் நான் அலுக்காமல் அவள்களின்  கடையில் நின்றிருப்பேன். அவர்களுடைய கடை பல அற்புதங்களையுடையது. இன்று அவை விலைமதிக்கமுடியாத  அனுபவங்களாக மாறியிருக்கின்றன..

நான் வாழும் தொடர்மாடியருகே சிலர் தங்கள் குழந்தைகளை தமது கழுத்தைச் சுற்றி தோளில் இருத்தி காவிப்போவார்கள். நானும் அப்படிக் காவித்திரிந்திருக்கிறேன். நாம் நடந்து போகும் போது தோளின் உயரத்தில் இருந்து உலகைப்பார்த்துவருவார்கள் எனது குழந்தைகள். சில நாட்களில் என் தலையிலேயே தூங்கியும் போயிருக்கிறார்கள். ஒரு முறை எனது மூத்தமகள் என் பிறந்த நாளுக்கு ஒரு நோர்வேஜிய புத்தகத்தை பரிசளித்தாள். அதில் இப்படி இருந்தது:

உலகம் கண்ட போது
உயரத்தில்
உன்
தோள் மேலிருந்தேன்
நீ
மெதுவாய் ஆடி
நடக்கையில்
வாழ்க்கை
பெருத்தது
அரைத் தூக்கத்தில்
நீ என்னைத்
தோளில் சுமந்தது
போல்
சுமந்து
மறவேன்
உன்னையும்
நீ
தந்த
குழந்தைப் பிராயத்தையும்

கண்கள் பனித்துப்போகும் அப் புத்தக்தை கையில் எடுக்கும் நேரங்களில். பெரும் பொக்கிசமாய் பாதுகாத்துவருகிறேன் அவள் தந்த அந்தப் புத்தகத்தை.

குழந்தைகள் தங்கள் குழந்தைப்பருவத்தை இலகுவாகக் கடந்துவிடுகிறார்கள், மறந்தும்விடுகிறார்கள். ஆனால் தந்தையர்களால் கடைசிவரையிலும் அதை கடந்துகொள்ளமுடிவதில்லை. அவர்கள் குழந்தைகளின் குழந்தைப்பருவத்திலேயே தங்கிவிடுகிறார்கள். அதை இரைமீட்பதிலேயே அவர்கள் காலங்கள் கடந்துவிடுகின்றன. என் வாழ்க்கையில் நான் மிகவும் ரசித்து, என்னை மறந்து வாழ்ந்திருந்த காலங்கள் அவை. அந்த நாட்களின் சின்னஞ் சிறு நினைவுகள்கூட பரவசமான நிலைக்கு இட்டுச்செல்லக்கூடியவை என்பதை வாழ்க்கை எனக்கு உணர்த்தியிருக்கிறது. கடிவாளங்களுக்கு அப்பாற்பட்டதே நினைவுக்குதிரை. அக் குதிரையில் தினமும் நானும் ஒரு பயணி.

தூண்டில் மீன்கள் படப்பாடல் வரிகளில் ஓரிடத்தில் இப்படி வருகிறது. எனக்கென்னவோ அவை உண்மைபோலவே இருக்கிறது:

”அடி கோயில்கள் எதற்கு, தெய்வங்கள் எதற்கு, உனது புன்னகை போதுமடி. இந்த மண்ணில் இது போல் யாருமிங்கே எங்கும் வாழவில்லை என்று தோன்றுதடி”
ஆம், எனது இரு பெண்குழந்தைகளும் எனது தெய்வங்களே. தெய்வம் தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும் என்பது உண்மைதான்.

கீழுள்ளவாறும் ஒரு பாடல் ஆரம்பிக்கிறது தங்க மீன்கள் திரைப்படத்தில்

அப்பாக்களை பிரியா மகள்கள் அதிஷ்டசாலிகள்
மகள்களை பிரியா அப்பாக்கள் பாக்கியவான்கள்
ஆனால் அப்படி எல்லாம் தந்து விட வாழ்க்கை
ஒன்றும் தோழன் இல்லை.
.
இதுவும் உண்மைதான்
பாடல்களை எழுதிய நா. முத்துக்குமாருக்கு மனம் கனிந்த நன்றிகள். அவரும் ஒரு பெண்குழந்தையின் தந்தையாயிருப்பாரோ?