டாக்டரின் படுக்கையறை அவஸ்தை


இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடியே அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறும்செய்தி அனுப்பினேன். ”சரி” என்று பதில் குறுஞ்செய்தி வந்தது.

கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்துகொண்டேன். பரிமாறும் அற்புத அழகியொருத்தி என்ன வேண்டும் என்றாள். ஒரு தேத்தண்ணி என்றேன். என்ன தேத்தண்ணி என்றுவிட்டு மாம்பழம், தோடம்பழம், இன்னும் பல பெயா்களைக் கூறி இதில் எது வேண்டும் என்றபடியே புருவத்தை உயர்த்தினாள், மாம்பழம் எனக்குப் பிடிக்கும் என்பதால் மாம்பழம் என்றேன். சற்றுநேரத்தில் மாம்பழத்தின் சுவையுடைய தேனீர் வந்து. நண்பர் ஆப்பிள் கேக், கோப்பி வாங்கினார்.

நண்பருக்கு 65 வயதிருக்கும். அவர் ஒரு முன்னைநாள் வைத்தியர். ஐ.நா வின் வைத்தியப்பிரிவினூடாக பல நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்தவர். ஒஸ்லோவின் பிரபல வைத்தியராக இருந்வர். விவாகரத்தின் பின் உக்ரைன் நாட்டு அழகியெருத்தியில் ஆசைப்பட்டு அண்மையில் அவளை திருமணம் செய்தவர்.

எனது நண்பர் பெண்கள் என்றால் அற்புதமாய் ரசிக்கும் கலைப்பண்புடையவர். இவரது புதிய மனவிக்கும் இவருக்கும் 20 வயதிலும் அதிக வயது வேறுபாடு உண்டு. வைத்தியரின் புதிய மனைவி உண்மையிலேயே அழகானவர். நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவருக்குப் பின்னே நாம் நடந்தாலோ அல்லது அவரை நோக்கி நாம் நடந்தாலோ எமக்கு இதயநோய் வருமளவுக்கு அவர் அழகானவர். அவரும் ஒரு வைத்தியர்.

நாம் இருவரும் சூரினை முகத்தில் விழுத்தியபடியே அதன் இளம்சூட்டினை அனுவித்துக்கொண்டே உரையாடிக்கொண்டிருந்தோம். இருவரின் வாழ்க்கையும் இருவருக்கும் தெரியும். நாம் எதையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்பவர்கள். வாழ்க்கைபற்றி பேச்சுத்திரும்பியது.

தற்போது தனக்கும் புதிய மனைவிக்கும் இடையில் ஒரு பிரச்சனை வந்திருக்கிறது என்றார் நண்பர். அவரே தொடர்ந்தார். நான் அவளைவிட சற்று வயதானவன் என்ற போது நான் வேண்டுமென்றே செருமியபடியே ஆம்.. ஆம் நீங்கள் சற்று வயதானவர்தான் அவருடன் ஒப்பிடும்போது என்றேன். எனது கிண்டலை புரிந்துகொண்டு சிரித்தார். நானும் சிரித்தேன். நான் முன்பைப்போல் உசாராக இல்லை என்று கூறிவிட்டு ஆப்பிள் கேக்ஐ ஒரு கடி கடித்தார். பின்பு கோப்பியை வாயில்வைத்து உறுஞ்சினார். அவர் ஏதோ வில்லங்கமான விடயத்தை கதைகத்தொடங்குகிறார் என்று நினைத்த எனக்கு அவரின் ஆறுதலான நடவடிக்கைகள் பலத்த எரிச்சலைத் தந்தன.

காய்ந்திருந்த தனது உதட்டை நாக்கால் நனைத்தபடியே தொடர்ந்தார். நாம் ஒன்றாக படுக்கையறையில் இருக்கும்போதுதான் பிரச்சனைவருகிறது என்றார். ஆஹா விடயம் சுடுபிடிக்கிறதே என்று நினைத்தபடியே முகத்தை படு சீரியசாக வைத்திருந்தபடியே ”ம்.. ம்” என்றேன்.

மனிதர் மீண்டும் அப்பிள் கேக்ஐ உண்பதில் தீவிரமாகிவிட்டார். கண்ணை மூடி ம்.. ம்.. ம் என்று ஆப்பிள் கேக்கினை ரசித்து ருசித்தார். எனக்கு இருப்புக்கொள்ள முடியாதிருந்தது. நானும் தேனீரை ரசித்து குடிப்பது போல் பாவ்லா காட்டினேன். அவராகவே தொடரட்டும் என்றே நினைத்தேன். மனிதர் இப்போது கோப்பியை கண்ணை முடி ரசித்துக்கொண்டிருந்தார். மெதுவாய் செருமினேன். நண்பர் அதைக் கண்டுகொண்டதாய் தெரியவில்லை. மீண்டும் ஆப்பிள் கேக், கோப்பி என்று நிமிடங்கள் யுகங்களாய் கடந்துகொண்டிருந்தது. இப்போது ஆப்பிள் கேக் முடிந்திருக்கிறது.

சன்சயாஆன் என்றார். எனது பெயரை அவர் இப்படித்தான் இரண்டு வருடங்களாக அழைக்கிறார். என் பெயர் சன்சயாஆன் இல்லை, சஞ்சயன் என்றேன். நீயும் இரண்டு ஆண்டுகளாக திருத்துகிறாய் நானும் முயற்சிக்கிறேன், ஆனாலும் உனது பெயரை சரியாக உச்சரிக்கமுடியவில்லை என்றார்.

எனது பொறுமை காற்றில் ஆடிக்கொண்டிக்க இருப்புக்கொள்ளாமல் அது சரி மனைவிக்கும் உனக்கும் படுக்கையறையில் என்ன பிரச்சனை என்றேன். ”பொறு” என்று கூறியப‌டியே கதிரையை எனக்கு அருகே இழுத்துப்போட்டுக்கொண்டார். என்னை நோக்கிக் குனிந்து மெதுவான குரலில், அவளுக்கு இப்போதெல்லாம் படுக்கையறையில் கோபம் வருகிறது என்றார். எனக்கு இரத்தம் சற்று சூடாக ஆரம்பித்தது.

பெண்கள் என்றால் அவர்களை பூப்போன்று கையாளவேண்டும் என்றேன் நான்.  அவரோ அதைக் கவனிக்காது கோப்பியை வாயில் வைத்து உறுஞ்சிக்கொண்டிருந்தார். இப்போது கோப்பிக் கோப்பை காலியாகி இருந்தது. அவரே தொடர்ந்தார். வயதாகிவிட்டதால் நான் மிக விரைவில் தூங்கிவிடுகிறேன் என்று அவர் கூறியபோது எனக்கு கொடுப்புக்குள் சிரிப்பு வந்தது. அவரைப்பார்த்து கண்ணடித்தடிபடியே ”அப்படியென்றால் தவறு உன்னுடையது தான். உன் மனைவிக்கு கோபம்வராவிட்டால் தான் தவறு” என்றேன்.

மனிதர் கடுப்பாகிவிட்டார். ”நீ அவளுக்கு சார்பாகப் பேசுகிறாய் என்றார்”. ”ஆம், நான் மனைவி கோபப்படுவது நியாயம் தானே” என்றேன்.

அதற்கு அவர் ” நான் தூங்கியதும் எனது குறட்டைச் சத்தம் தாங்கமுடியாததாய் இருப்பதாகவும், அவளுக்கு நித்திரை கொள்ளவதற்கு முடியாதிருப்பதால், அவளுக்கு பெரும் கோபம் வருகிறது என்றும் சென்னார்.

எனது காதுக்குள் ”சப்பாஆஆ” என்று ஒரு சத்தம் கேட்டது.

உங்களுக்கும் கேட்டிருக்குமே அந்த சத்தம். :)




எனது வாழ்வின் சில இரகசியங்கள்

நண்பர் ஒருவர் ஒரு கட்டுரை வேண்டும் என்றிருந்தார். அவருக்குத் தெரியும் முக்கி முக்கி எழுதுபவன் நான் இல்லை என்று. முக்கினால் இயற்கைய‌ை மீறுவது போன்றே உணர்கிறேன். எழுத்து என்பது மனதின் ஊற்று. ஊற்று தானாக ஊறவேண்டும் என நினைப்பவன் நான்.

இன்று காலையும் எதை எழுதலாம் என்று சிந்தித்தபோது எதுவும் மனதில் தோன்றவும் இல்லை, எதுவும் கண்ணில்படவும் இல்லை. ஆனால் மதியம் நீலக்கீழ் தொடரூந்தில் குந்தியிருந்தபடியே எனக்கு மிகவும் பிடித்த எஸ். ராவின் ”காந்தியோடு பேசுவேன்” வாசித்துக்கொண்டிருந்தபோது ஒரு கரு மனதில் தோன்றியது. ”காந்தியோடு பேசுவேன்” புத்தகத்தின் முதலாவது சிறுகதையில் கதையின் நாயகனான லட்சுமணண் தனது தயாருக்கு காந்திமீது இருந்த பக்தியைப் பற்றிக் குறிப்பிடுவார். காந்தியின் வாழ்க்கைமுறைகள், பழக்கவழக்கங்கள் அவரின் தாயாரை பெரிதும் கவர்கவது மட்டுமல்ல அவரை மனரீதியான மாற்றத்திற்கும் இட்டுச்செல்கிறது.

அந்த சிறு கதையை நான் இன்னும் வாசித்து முடிக்கவில்லை. ஆனாலும் ஒவ்வொரு மனிதனுடைய வாழ்விலும், சில மறக்கமுடியாத மனிதர்கள், தங்களின் வாசனையை மற்றையவரும் நுகரும்படி செய்துவிட்டே கடந்துபோகிறார்கள் என்பதை நானும் உணர்ந்திருக்கிறேன். மழையில் நனைவதுபோன்றது இது. சாரல், தூரல், மழை, அடைமழை, தூவானம் என்று மழையில் பலவிதம் உண்டு. இவ்விதமான மழைகளில் நனைவது பலவித அனுபவங்களை தருவது போல பலவிதமான மனிதர்கள் என்னை ஈரலிப்பாக்கியிருக்கிறார்கள், செளிப்படையவைத்திருக்கிறார்கள். அதே வேள‌ை வேறு சிலரோ என்னை தங்கள் மழையினூடாக நோயாளியாக்கிவிட்டும் கடந்துபோயிருக்காறார்கள்.

மேற்கூறப்பட்டவர்களில் சிலரைப்பற்றிய நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆனால் இன்றோ சில சம்பவங்களை பதிவதே எனதுநோக்கம்.

முதலாமவர் என்னை சிறுகச் சிறுக செதுக்கியவர்களில் முதன்மையானவர், எனது மனதில் அவருக்கென்று ஒரு தனி இடமுண்டு. அவர் இன்றேல் நான், இப்போது, வேறு எங்கோ, எப்படியே ஒன்றுக்கும் உதாவதவனாய் இருந்திருப்பேன். ஓருதனிமனிதனின் ஆளுமை என்னை எப்படியெல்லாம் மாற்றியது என்பதற்கு எனது தாயாரும், என்னை பால்யத்தில் இருந்து அறிந்து ஒரு சில நண்பர்களுமே அறிவார்கள். இன்று காலையும் அவர் பற்றிய ஒரு புத்தகம் என்னையில் இருந்தது என்பதை இதை எழுதும் இக்கணம் நினைத்துப்பார்க்கிறேன். ஆச்சர்யமாக இருக்கிறது நிகழ்வுகளின் கோர்வைகளைப் பார்க்கும்போது. நான் குறிப்பிடுவது வேறு யாருமில்லை எங்கள் பேராசான் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னைநாள் அதிபர் பிரின்ஸ் காசிநாதர் அவர்களையே.

கண்டிப்பின் மூலமாக மட்டுமே பலருக்கு அவரை அறிமுகம் இருக்கும். எனக்கும் பல ஆண்டுகள் அப்படியே இருந்தது. ஆனால் காலமும், அனுபவமும் மனிதர்களையும் அவர்களது ஆளுமைகளை எனக்கு உணர்த்தியிருக்கிறது. 1970களின் நடுப்பகுதி, மட்டக்களப்பின் முக்கிய பாடசாலையில் சேர்த்துவிடப்படுகிறேன். அன்று தொடங்கிய பக்தி இன்றைய நாள்வரையில் தொடர்ந்துகொண்டேயிருக்கிறது. என் வாழ்வில் மிக முக்கியமான மனிதராக இருப்பவர் இவர்.

7ம் வகுப்பில் அன்சார் என்று ஒரு வகுப்புதோழன் இருந்தான். நாம் இருவரும் விடுதி மாணவர்கள். நான் பொருட்கள் எதிலும் கவனமில்லாதவன். அன்சார் அதற்கு எதிர்க் குணம் உள்ளவன். அந் நாட்களில் கருவிப்பெட்டி என்று ஒரு பெட்டி இருந்தது. அதை நாம் கொம்பஸ் பெட்டி என்றும் அழைத்தோம். ஒரு நாள் எனது கருவிப்பெட்டியின் உள் இருந்த அடிமட்டத்‌தை காணவில்லை. கணிதப்பாடம் ஆரம்பித்திருந்தது. அந்த ஆசிரியரோ கடும் கண்டிப்பானவர். எங்கே அடிமட்டம் என்று கேட்பார். இல்லை என்றால் தொலைந்தோம். வயிற்றில் கிள்ளுவார். உயிர்போகும் வலி அது. எனவே அருகில் உட்கார்ந்திருந்த அன்சாரின் அடிமட்டத்தை எடுத்து எனது கருவிப்பெட்டியினுள் வைத்துவிட்டேன். அன்று அன்சார் வயிற்றில் கிள்ளு வாங்கினான். என்னிடம் அவனது அடிமட்டம் இருப்பதையும் கண்டுகொண்டான். மறுநாள் காலை அதிபரிடம் சென்று விடயத்தைக்கூறியபோது நான் அழைக்கப்பட்டேன். இருவரையும் விசாரித்தார். பின்பு இவ்வாறு தீர்ப்பு வளங்கினார். சஞ்சயன் அவனின் அடிமட்டத்‌தை நீ உடனே கொடுக்கவேண்டும். இன்று மாலை என்து வீட்டுக்கு வரவேண்டும் என்றிருந்தது அவரது தீர்ப்பு.

அவனின் அடிமட்டத்தை கொடுப்பது பிரச்சனையில்லாத விடயம். ஆனால் அவரின் வீட்டுக்கு அழைக்கப்படுவது என்பது அதீத குற்றவாளிகளுக்கு வழங்கப்படும் தீர்ப்பு. அவரின் வீட்டு விறாந்தையில் நின்றபடியே பலரும் அடிவாங்கியிருப்பதை நான் அறிந்திருந்திருந்தது மட்டுமல்ல கண்டுமிருக்கிறேன். எனது கதியும் அதுதான் என்று நினைத்தபடியே அவரின் வீட்டுக்குச் சென்றபோது அன்பாய் அழைத்து முதல் ஆச்சர்யத்தை தந்தார். திருடுவது தவறு என்தைப்பற்றி 2 - 3 நீதிக்கதைகள் கூறினார். குடிக்க குளிர்பானமும் தந்து அதன்பின், ஏன் அன்சாரின் அடிமட்டத்தை திருடினாயா என்றார். அவரின் உரையாடல் ஏள்கனவே மனதை நெகிழப்பண்ணியிருந்தது. மனம் முழுவதும் குற்ற உணர்ச்சி நிறைந்திருந்தது. தலையைக் குனிந்தபடியே இருந்தேன். கண்ணீர்த் துளியொன்று நிலத்தில் விழுந்து தெறித்தது. தோளில் கையொன்று தோழமையுடன் அழுந்தியயோது என்னையறியாமலே ”இனி எடுக்கமாட்டேன், சேர் என்றேன்”. தெரியும் என்றார் உயிரை ஊடுருவும் அவரின் கணீர் என்ற குரலில்.

இன்னொருமுறை 17 என்று இருந்த கணிதப்பாட புள்ளிகளை 77 என்று மாற்றியதால் கூட்டுத்தொகை பிழைத்ததை அவதானித்த எனது தந்தையார், அதிபரிடம் செய்தியைக் கூற, அம் முறையும் மனச்சாட்சியுடன் பேசு என்னும் தொனியில் அறிவுரை தந்தவர். நகைச்சுவை, இனச்சமத்துவம், சிரமதானம், எதையும் நேருக்கு நேர் பேசுதல், உண்மை, அச்சம் தவிர் என்று பலதையும் கற்றுத்தந்தவர் அவர். இன்றும் இலங்கை சென்றால் அவரை நான் சந்திக்காது திரும்பவது இல்லை. அருகிலமர்த்தி இன்றும் அன்பாய் பேசும் ஆசான் அவர்.

அடுத்தவர் ஞானி மாமா. இவரைப்பற்றி ஒரு முழுப் பதிவு எழுதியிருக்கிறேன். மாமா என்னும் சொல்லின் மகத்துவத்தை அறியத்தந்த மனிதர், அவர். உறவினர் அல்லர் அவர். ஆனாலும் உறவினரைவிட அதிக அன்பு செலுத்தியவர்.

எனது தாயாருடன் பிபிலை வைத்தியசாலையில் தொழில்புரிந்த பல்வைத்தியர் அவர். மாலையில் எமது வீட்டில் தான் ஞானி மாமாவைப்போன்ற வயதுடையவர்கள் கூடுவார்கள். அவர்களுக்கு சராசரி 25 - 26 வயதிருக்கும். கரம் போட்ஐ சுற்றியிருந்து கதைத்து, விளையாடி, பலமாய் சிரித்து, தேநீர் அருந்தி சற்று ”கணகணப்பில்” வரும் எனது தந்தையுடன் தனவிக் கொண்டிருப்பார்கள். ஞானி மாமாவின் கதிரையின் கைப்பிடியில் உட்கார்ந்திருப்பேன் நான். அவரின் அருகாமையே மகிழ்ச்சியைத் தரும். ”இண்டைக்கு ஒரு குளப்படியும் செய்யலயாடா” என்பார் தினமும் என்னைக் காணும் பொழுதுகளில். நான் அதிகமாய் குழப்படி செய்யவேண்டும் என்று விரும்பினாரோ என்னவோ. எனது தந்தை என்னைப்பார்த்து ஏதும் கண்டிப்பாகக் கதைத்தால் தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்பார் அவரிடம். பெரிசும் அடங்கிப்போனது புதினமாய், அவரிடம்.

பல்வைத்தியராக அறிமுகமாகி, குடும்ப நண்பராகமாறி 1980களின் நடுப்பகுதியில் ஒரு ஈழ விடுதலை இயக்கத்தால் கொலைசெய்யப்பட்டார். (பட்டிணி போட்டே அவரை கொலைசெய்தார்கள் என்றார் அவரின் தாயார் ஒர் நாள்). அந்நாட்களில் புகைப்படக்கருவியுடன் இவரைக் காணலாம். எனது தம்பியையும் என்னையும் அதிகமாய் புகைப்படம் எடுத்தவர் இவரே. எனக்குள் இருக்கும் புகைப்படக்கலையின் மீதான ஆர்வத்தை தொடக்கியவரும் ஞானி மாமாதான். சைக்கில் ஓட்டப்பழக்கியது. ஓடும் சைக்கிலில் பாய்ந்து ஏற, இறங்கப் பழக்கியது, ஆறுகளில் குளிக்க, நீர்வீழ்ச்சிகளைப்பார்க்க, கொழும்பு, பேராதெனிய பல்கலைக்கழகம், திருகோணமலை என்று பலதையும் எனக்கு அறிமுகப்படுத்தியவர். பதின்மவயதினுருடன் எவ்வாறு பழகவேண்டும், எவ்வாறு அவர்களுக்கு வழிகாட்டவேண்டும், என்பதை நன்கு அறிந்திருந்தார். எங்கள் வீட்டில் ”ஞானி” க்கென்றொரு இடம் இருந்தது. இப்போதும் உண்டு, இனியும் இருந்துகொணடே இருக்கும்.

அடுத்தவரைப்பற்றியும் நான் தாயிலும் மேலான தாய் என்று ஒரு பதிவு எழுதியிருக்கிறேன். எனது தாயாருக்கு சற்றும் குறையாத அளவு அன்பையும், பெரு மரியாதையையும் வைத்திருக்கிறேன் அவரில். அவர் ஒரு சிங்களவர். எங்கள் வீட்டில் ஏறத்தாள 40 ஆண்டுகளாக வாழ்ந்திருந்தவர். 62ம் ஆண்டு சுகயீனமான எனது அக்காவை பராமரிப்பதற்காய் வந்தவர். வாழ்க்கை எமக்குத் அறிமுகப்படுத்திய அளப்பரிய பரிசு அவர். சிங்களமொழி தங்கைக்கும், தம்பிக்கும், எனக்கும் வசப்படுவதற்கு இவரே காரணம். அப்பாவும் அம்மாவும் இவரை தங்கள் சகோதரியாகவே பார்த்தனர். எமக்கு அனைத்தும் அவரே. வீட்டின் முழு அதிகாரமும் அவரிடம் இருந்தது. லொக்கு புத்தா (பெரிய (மூத்த) மகன்) என்பதால் பெரு மரியாதை எனக்கு. இருப்பினும் கண்டிப்பும் அப்படியே. மனிதர்களிடம் வேறுபாடு என்பது இல்லை என்பதை தனது வாழ்க்கைமூலமாக அறியத்தந்தவர் இவர். பிறப்பில்தான் உறவுகள் உருவாகின்றன என்பதை பொய்ப்பித்தவர். நான் அவரை எம்மி என்று எனது மழழைமொழியில் அழித்ததால் அதுவே அவரது பெயராகியது.

நான் 2 வருடங்கள் கொழும்பில் எனது தாய்மாமா வீட்டில் தங்கியிருந்து கல்விகற்றேன். எம்மியின் அன்பில் உருகிய காலம் அது. நான் வீடு வரும்போது, என்னைக் கண்டதும் எம்மி சொல்லும் முதல் வார்த்தை ”புத்தா கெட்டுவெலா நே” என்பதாகும்.. அதாவது மகன் மெலிந்து விட்டாரென்பதாகும். மாமா என்ன என்னை கொலைப்பட்டினியாபோட்டார், கொழும்பில், நான் மெலிவதற்கு? ஆனால் எம்மி எப்போது கொழும்பில் இருந்து வந்தாலும் இதையே மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

எள்ளுருண்டையில் இருந்து பல் வகை வாழைப்பழங்கள், பல்வ‌கை உணவுகள் என நான் வீட்டிலிருக்கும் ஒரு மாதமும் எனக்கு திருவிழா நடந்த காலமது. மெலிந்தவனை தெம்பாக்குகிறேன் என்று அவர் செய்த இம்சைகள் கொஞ்சமா நஞ்சமா?

ஒரு முறை காய்ச்சல் கண்டு பல நாட்கள் படுத்திருந்தேன்.ஆங்கில மருந்துக்கு காய்ச்சல் அடங்கவில்லை. அந் நாட்களில் ஒரு நாள் வீடே அல்லோலகல்லோலப்பட்டது. எம்மி அறம்புறமாக கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்க, யார் யாரோ வந்து பந்தல் போட்டார்கள். உள்ளூர் மந்திரவாதிகள் வந்து மந்திரித்தார்கள், புத்தபிக்குகள் விடிய விடிய ”பிரித்” ஓதினார்கள். அடுத்த நாள் மந்திரித்த தண்ணீரில் என்னைக் குளிப்பாட்டினார்கள். காய்ச்சல் தன் பாட்டில் அகன்றுபோனது ஆனால் எம்மியோ எல்லாம் மந்திரத்தின் மகிமைதான் எனச் சொன்னார். எனக்கு கண்ணூறு பட்டிருந்ததாம் அதுதான் காய்ச்சல் வந்ததாம்.

எங்கும் வெளியில் போய்வந்தால் சிரட்டைகளை கொளுத்தித் தணலாக்கி ஒரு கையில் உப்பு, காய்ந்தமிளகாய் இன்னும் ஏதோ எல்லாம் எடுத்து சாமிக்குத் தீபம் காட்டுவது போல எனக்கும் தம்பி தங்கைக்கும் காட்டி சிரட்டைத் தணலில் கொட்டுவார். அது பெரிதாய் வெடித்துச் சத்தம் போட்டால் என்னில் யாரோ பெரிய கண்வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். ஏறத்தாள தினமும் என்னில் பலர் கண்வைத்துக்கொண்டிருந்தார்கள் என்றே எண்ணத்தோன்றுகிறது.

1962 இல் இருந்து 2001ம் ஆண்டு என் மடியில் உயிர்விடும்வரை தன்னலனை மதியாது எங்கள் குடும்பத்தின் நலனை மட்டுமே விரும்பிய உன்னதமானதோர் தாய் அவர்.

அடுத்தவரும் ஒரு சிங்களவரே. எனக்குள் உன்னாலும் முடியும் என்று நம்பிக்கையை பதின்மவயதில் ஏற்படுத்தியவர், சந்திரே ஐய்யா (ஐய்யா என்றால் சிங்களத்தில் அண்ணண் என்று பொருள்படும்). எமது கிராமத்தின் சந்தையில் மரக்கறிவிற்கும் மனிதர். எமது Eravur United கிறிக்கட் அணியின் பயிட்சியாளர். அவரிடம் ஓதோவொரு ஆளுமை இருந்தது. எங்கள கிறிக்கட் அணி சிங்களவர்கள், முஸ்லீம்கள், தமிழர்கள் என்று மூவினமும் கலந்த அணி. இவரின் பயிற்சியின் கீழ் மட்டக்களப்பில் பேசப்படும் அணியாக மாற்றப்பட்டோம். அவர் சாரத்துடனேயே விளையாடுவார் என்பது இன்னும் நினைவில் இருக்கிறது.

அந்நாட்களில் என்னைப்பற்றி ஊருக்குள் இருந்த பார்வையை மிக எளிதாக குறிப்பிடுவதாயின் அது இப்படி இருக்கும் ”ஏறத்தாள ஒரு காவாலி, இது உருப்படாது, டாக்டர் அம்மாவின் பெயரைக்கெடுக்க பிறந்திருக்கிறது”. இதை மெதுவாக எனக்குள் ஊறப்போட்டவர் இவரே. அதிலும் 10ம் வகுப்பு பரீட்சையில் சித்‌தியடையும் வழியைப்பார், உன்னால் முடியும் என்று அடிக்கடி கூறுவார். நான் 10ம் வகுப்பில் சராசரியைவிட அதிக புள்ளிகளை பெற்றது எனக்கு பெரு அதிர்ச்சியை தந்திருந்த ஒரு நாளின் மாலைப்பொழுதில், என்னை அழைத்து கையில் ஒரு பரிசினைத் திணித்தார். திறந்துபார்த்தேன். கடும் மண்ணிறமான KG பேனையொன்று இருந்தது. பலரின் கணிப்பில் மண் தூவியிருக்கிறாய் என்று முதுகில் ஓங்கி அறைந்தார். இருவரும் சிரித்துக்கொண்டோம்.

1985இல் ஆரம்பத்தில் போர்மேகங்கள் எமது ஊரையும் சூழ்ந்தபோது அவரின் தொடர்பு அற்றுப்போனது. அன்றில் இருந்து இன்றுவரை எத்தனையோ வழிகளில் அவரைத்தேடிக்கொண்டிருக்கிறேன். ஏறத்தாள 30 ஆண்டுகள் கடந்துபோயிருக்கின்றன அவரை இறுதியாய் சந்தித்து. இருப்பினும் மனதினுள் வாழும் மனிதர்களில் இவரும் முக்கியமானவர். இவரை ஒருநாள் சந்திப்பேன். வாழ்க்கை ஏமாற்றாது என்ற நம்பிக்கை இருக்கிறது, எனக்கு.

அடுத்தவர் நோர்வே நாட்டவர். இவருடனும் இவர் குடும்பத்துடனும் எனக்கு அறிமுகம் கிடைத்தது வைகாசி மாதம் 1987. அந்நாள் மிக நன்றாகவே நினைவிருக்கிறது. அவரிடம் கார் இருக்கவில்லை. மென் கரிய நிறத்த்தில் ஒரு வான் (Van) இருந்தது. அதில் 8 இருக்கைகள் இருந்தன. சாரதியையும் இணைத்தால் 9 இருக்கைகள். நாம் தங்கியிருந்த இடத்திற்கு வந்திருந்தார். தனது வீட்டிற்கு சிலரை அழைத்துப்போவதற்கு விரும்புவதாகக்கூறினார். அன்று அவருடன் அவரின் வீட்டுக்குச்சென்றது எனது வாழ்வின் முக்கியநாள் என்பதை நான் இன்று உணர்கிறேன். அவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு ஆண்குழந்தைகளில் இருவர் இரட்டைக் குழந்தைகள். மனைவி வடக்கு நோர்வேயைச்சேர்ந்தவர். அந்நாட்களில் எனது நோர்வேஜியப் புலமை பூஜ்ஜியம். ஆங்கிலப்புலமை இலங்கையில் இருந்து வெளியேறியவர்களுக்கு இருந்ததுபோன்றளவே இருந்தது.

நாட்கள் செல்லச்செல்லஅவரது வீட்டுக்குச் சென்ற தமிழர்களின் எண்ணிக்கை 2 - 3 ஆகக் குறைந்துபோனது. காரணம் கேட்டால் அந்த மனிதர் விஷக்கடி கடிக்கிறார் என்றார்கள் நண்பர்கள். நான் அவரின் குழந்தைகளுடன் நட்பாகிப்போனேன். அதிலும் முக்கியமாய் அந்த இரண்டு இ‌ரட்டைக்க்குழந்தைகளுடன். காலில் 10 சக்கரம்பூட்டிய வேகமும் குரங்குகளின் சேட்டையும் அவர்களிடம் இருந்தது. அப்போ அவர்களுக்கு 2 - 3 வயதிருக்கும். காலம் என்னை அந்தக் கிராமத்திலேயே குடியேற்றியது. அக் குடும்பத்துடன் மிகவும் நட்பாகியிருந்தேன் கடந்துபோன ஒரு வருடத்திற்கிடையில். அதன் பின் 2008ம் ஆண்டு அந்தக் கிராமத்தைவிட்டகலும்வரை ஏறத்தள தினமும் நாம் பேசிக்கொண்டோம். அவரது வீட்டினுள் அழையாவிருந்தாளியாக நுளையும் பெருமைக்குரியவன் நான் மட்டுமே. என் வீட்டிலும் அவருக்கு அந்த மரியாதை இருந்தது. எமக்கிடையில் 15 வயது அதிகமான இடைவெளி உண்டு.

நட்புக்கு வயதில்லை என்பதற்கு எமது நட்பு சாட்சியம். எதையும் அவருடன் உரையாடலாம். நிதானம், பொறுமை, புரிந்துகொள்ளும் தன்மை இப்படி பல நற்குணங்கள் அவரிடம் உண்டு. என் வாழ்க்கையில் புயலடித்தபோதெல்லாம் என்னைத் தாங்கி, உரையாடி, உயிர்பித்து, அறிவுரைகூறிய மனிதர் அவர். எனது குழந்தைகளுக்கும் அவர்கள் குடும்பத்தினருடன் நெருங்கிய நட்பு இருக்கிறது. அவர்களுக்கும் அப்படியே. அனைத்து நத்தார் நாட்களிலும் எங்களை அழைப்பார். எங்களது விசேடமான நாட்களுக்கு எங்கள் வீட்டுக்கு வருவார். அவரின் பெற்றோரும் அன்பானவர்கள். அவரது தாயார் தனது முதுமையிலும் எனது மூத்த மகள் பிறந்திருந்தபோது எம்மை நோர்வே நாட்டுக் கலாச்சாரப்படி ”தாய்க் கஞ்சி” என்று அழைக்கப்படும் ஒருவகை உணவுடன் வந்து சந்தித்ததும் நினைவிருக்கிறது.

ஒவ்வொரு மனிதர்களும் வித்தியாசமானவர்கள். ஆனால் ஏதோவொரு நண்ணிய உணர்வொன்று காலமெல்லாம் எம்மை பிணைத்துப்போடுகிறது. அது எது என்று தேடுவதில் அர்த்தமில்லை. சில வேளைகளில் சில கேள்விகளுக்கு பதில் இல்லை.

காலம் மனிதர்களை நேசி, அவர்களை சம்பாதி என்ற தத்துவத்தை இப்படியான மனிதர்களின் மூலம் எனக்குக் கூறிப்போய்க்கொண்டிருக்கிறது. என்வாழ்வில் தாக்கத்தை ஏற்படுத்தும் மனிதர்களை நான் எதிர்வரும் காலங்களிலும் சந்திக்கலாம். மனிதர்கள்தான் எங்கும் இருக்கிறார்களே.

கோழைகளின் தோல்விகள்

அன்றொருநாள் காலை உடல்நிலை சரியில்லையாதலால் எனது வைத்தியரைச் சந்திப்பதற்காய் அவரின் வைத்தியசாலையில் காத்திருந்தேன். அப்போது கதவைத் திறந்து கொண்டு ஒரு வயதான தமிழரும், அவர் மனைவியும் உள்ளே வந்தார்கள். அவரை நான் அறிவேனாகையால் கையைக் காட்டினேன். அவரால் என்னை யார் என்று அடையாளம் காணமுடியவில்லை. எனவே அருகில் வந்து பார்த்தபடியே, சற்றுச் சிந்தித்தார். பின்பு ஆஆ... சஞ்சயன் தானே என்றார். சிரித்தேன். நாம் பல வருடங்களுக்குப்பிறகு  சந்திக்கிறோம். குறைந்தது 15 வருடங்களாவதிருக்கும் அருகில் அமர்ந்துகொண்டார். அவர் மனைவி சற்றத் தள்ளி இருந்த ஒரு கதிரையில் அமர்ந்து கொண்டார்.

அவருடனான அறிமுகம் 1987 இல் நடந்தது. மிகவும் திறமையுள்ளவர். அவரின் தமிழ்ப்புலமை அலாதியானது. எல்லோருடனும் மிக இலகுவாகப் பழகுவார். அவரின் தாராளமான பேச்சு அவரின் மீது பலருக்கும் அவர் ஒரு ”அலட்டல்” மனிதன் என்ற ஒரு எண்ணத்தையே கொடுத்தது. அவருக்கு பல பட்டப்பயெர்கள் வைக்கப்பட்டு அழைக்கப்பட்டார். அதிலொன்று ”வெடிப்பு”

நானும் ”வெடிப்பு” என்றழைக்கப்பட்டகாலம் அது. வித்தியாசமான கருத்துள்ளவர்கள் அனைவரும் ”வெடிப்பு” என்று அழைக்கப்பட்ட காலமது.

அவருக்கும் எனக்கும் குறைந்தது 20வயது வித்தியாசம் இருக்கும். அண்ணண் என்றே அவரை அழைத்தேன். 1987ம் ஆண்டு நாம் வெளியிட்ட ஒரு கையெழுத்துப்பிரதியொன்றில் அவர் தமிழ், தமிழின் தொன்மை, பெருமைபற்றியதொரு கட்டுரை எழுதியதும் நினைவில் இருக்கிறது. அம்மலர் வெளியீட்டுக்குழுவிலும் அவர் அங்கம் வகித்தார்.

16திகதி வைகாசி 1987ம் ஆண்டு நான் மறக்கமுடியாத நாள். அன்று தான் முதன் முதலாக நான் பல வருடங்கள் குடியிருந்த நோர்வேயின் வடமேற்குக் கரையோரக் கிராமத்துக்கு இன்னும் பல தமிழர்களுடன் அழைத்துவரப்பட்டேன்.

அந்த கிராமத்து வாழ்க்கயைின் போதுதான் நான் மேற்கூறிய  அந்த அண்ணண் அறிமுகமானார். அதன் பின் நான் அக்கிராமதிலேயே தங்கிவிட, அவர் சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்தில் குடியேறினார். மனைவி குழந்தைகள் ஊரில் இருந்து வந்தார்கள், படித்தார்கள், வளர்ந்து பெரியவரானார்கள்.

அவரை  பல வருடங்களுக்கு முன்பு அடிக்கடி சந்திப்பதுண்டு. காணும்போது மகிழ்ச்சியாய் உரையாடுவார். அப்போதும் அவரைச்சுற்றியிருந்த பலர் அவரை ”வெடிப்பு” என்றே அழைத்துக்கொண்டிருந்தனர்.

அவர் பற்றியதொரு சம்பவம் பசுமரத்தாணியாய் நினைவில் நிற்கிறது. நாம் ஒன்றாய் வாழ்ந்திருந்த காலத்தில், நாம் தங்குமிடத்தில் ஏறத்தாள 50 - 60 இலங்கைத் தமிழர்கள் தங்கியிருந்தார்கள். பலரும் தங்களது 20 வயதுகளில் இருந்தார்கள். சிலர் அதனிலும் இளமையாகவிருந்தார்கள்.

இந்த அண்ணணை எம்முடன் தங்கியிருந்த பலர் எப்போதும் கேலிபேசுவம், நக்கல் பண்ணுவதும் வழக்கம். ஒரு நாள் பலரும் ஓரிடத்தில் கூடியிருந்து உரையாடிக்கொண்டிருந்த போது ஒரு சிலர் குறிப்பிட்ட அந்த அண்ணணை கிண்டல் பண்ணியபடி இருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார் அண்ணண். அவர்களின் நக்கல் எல்லைமீறிய போது ” இவ்வளவு கதைக்கிறீர்களே, நான் செய்வதை உங்களால் செய்ய முடியுமா என்றார்?

”அண்ணை!  சத்தியமா உங்களைப்போல எங்களால கதைக்கஏலாது” என்றான் ஒருத்தன் நக்கலாய். அண்ணணுக்கு ரோசம் பொத்துக்கொண்டுவந்தது. நான் இப்ப செய்யுறதை நீங்கள்யாரும் செய்தால் நான் எனது மாதாந்த கொடுப்பனவை தருகிறேன் என்றார். சிலர் ஓம் என்று பந்தயம் கட்டினார்கள். கூட்டம் கூடியது.

அண்ணண் எழுந்தார். குனிந்தார். திடீர்என்று கைகளால் நடக்கத்தொடங்கினார். நடந்தது மட்டுமல்ல மாடிப்படிகளில் ஏறி இரண்டாம் மாடியை அடைந்தார். பார்த்துக்கொண்டிருந்தவர்களின் முகங்கள் செத்துப்போயிருந்தன.  மீண்டும் கையாலேயே கீழே இறங்கிவந்த அண்ணண், எங்கே உங்களில் யாராவது செய்யுங்கோ பார்ப்போம் என்றார். எவரும் எழும்பவில்லை. தலையைக் குனிந்திருந்தார்கள்

அண்ணண் அவர்களைப் பார்த்து நக்கலாய் சிரித்துவிட்டு தனது அறைக்குச்சென்றுவிட்டார். ஒரு மனிதனை கேலிசெய்யும்போது அவனுக்குள் ஒருவித வேகம் விளித்துக்கொள்கிறது. தனக்கான இடத்‌தை நிறுவிக்கொள்ள, திறமையை வெளிப்படுத்த, அமைதியை உடைத்தெறிய அந்த வேகம் உதவுகிறது என்பதை அன்று அறிந்துகொண்டேன். கேலிபேசுபவர்களுக்கு கேலிபேசப்படுபவரின் மனநிலை, வலி, காயங்கள் எதுவும் புரிவதில்லை. ஆனால் அன்று அந்த அண்ணண் செய்துகாட்டிய ஒரு செயல், அதன்பின் அவர் உங்களால் முடியுமா என்று கேட்டது போன்றவை கேலிபேசியவர்களின் மனநிலையை உலுப்பியிருக்கும் , வெட்கித்துப்போகும் மனநிலையைக்கொடுத்திருக்கும் என்றே எண்ணுகிறேன். கேலிசெய்தவர்களின் வாயை மூடச்செய்த அவரின் செயல் மறக்கமுடியாதது.

”என்ன அண்ணண் சுகமில்லையோ” என்றேன். தனக்கு தலைசுற்றும், காலில் பெரு வலி கண்டிருப்பதாகவும் சொன்னார். அப்போது அவருக்கு அவர் கையால் நடந்த கதையைக் கூறினேன். சிரித்தபடியே ”அது அந்தக்காலம், இப்போ வயதுபோய்விட்டது” என்றார். நாம் பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். வயோதிபம்பற்றி அதிகம் பேசினார். அவரின் பேச்சில் பயமும், இனம்புரியாத நடுக்கமும் இருந்தது.

அப்போது வைத்தியர் அவரை வந்து அழைத்துப்போனார். அண்ணண் மெதுவாக ஒரு காலை இழுத்து இழுத்து நடந்துபோவதைப் பார்த்த எனக்கு, எனது வயோதிபத்தை நினைக்க பயமாயிருந்தது.

நோர்வேயில் ”பொங்குமாங்கடலின்” சாரல்

இப்போதெல்லாம், வாழ்க்கையில்  நடக்கும் சம்பவங்களுக்குள் ஏதோவொரு கண்ணுக்குப் புலப்படாத மெல்லிய தொடர்பு இருப்பதைப்பொல் உணர்கிறேன். அண்மையில் மழையின் வடிவங்களைப்பற்றி ஒரு பதிவில் எழுதிக்கொண்டிருந்தபோது, சாரல் என்பதும் ஒரு வித மழையா என்ற சந்தேகம் வந்தது.

எனக்கு இப்படியான சந்தேகங்கள் வரும்போது நான் ஒரு அற்புதமான மனிதரை தொடர்புகொள்வதுண்டு. அவர் தளும்பாத நிறைகுடம். ஆசிரியர்களுக்கு முன்னுதாரணம். இவருடனான அறிமுகம் கிடைத்து சில ஆண்டுகளேஆகின்றன. இவரது அறிமுகம் எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது. ஒருமுறை பதிலை விளக்கிக்கூறுவார். அதன்பின் அவரது சித்தனையில், தேடலின்பின் ஏதும் புதிய தகவல்கள் கிடைத்தால் உடனே அவரே தொலைபேசி எடுத்து அதைக் கூறுவார். இப்படி அவராகவே 3 முறை தொலைபேசி எடுத்த சம்பவங்களும் உண்டு.

அன்றும் அவரைத் தொடர்பு கொண்டு சாரல் என்பதுபற்றிக் கேட்டேன். அப்போது அவர், சாரல் என்பதற்கு உதாரணமாக குற்றாலம் பகுதியில் தென்மேற்குப்பருவக்காற்றுக்காலங்களில் பெய்யும் மழையை சாரல் என்பதற்கு உதாரணமாகக்கூறலாம், சாரலினூடாக நடந்துசென்ற பின் முகத்தைத் துடைத்தால் கையில் சாரலின் நீரை உணரலாம் என்று விளங்கப்படுத்தினார். அத்துடன் சாரல் என்பது மலையாளவழிச் சொல் என்றும், அது மழையாளத்தி்ல் சாறு என்பதை அடிப்படையாகக்கொண்டது என்றும் அறியக்கிடைத்தது.

இந்த உரையடல் நடந்து ஏறத்தாள பத்து நாட்கள் இருக்கும். இன்று  நிலக்கீழ் தொடரூந்தில் உட்கார்ந்திருந்தபோது காந்தியுடன் உரையாடுவேன் என்னும் எஸ். ராவின் புத்தகத்தை எடுத்து வாசிக்கத்தொடங்கினேன். எஸ். ரா எனக்கு மிகவும் பிடித்த எழுத்தாளர். அடுத்த வசனத்தை ஏன் எழுதினேன் என்பதை நீங்கள் பின்பு அறிந்துகொள்வீர்கள். இந்தியா வந்தால் கட்டாயம் சந்தியுங்கள் என்ற அவரது அன்புக்கட்டளையொன்றும் என்னிடம் இருக்கிறது.

அப்புத்தகத்தில் ”அருவிக்குத் தெரியும்” என்று ஒரு சிறுகதை இருக்கிறது. அந்தச் சிறுகதை குற்றாலத்தில் நடக்கிறது. அக்கதையின் நாயகன் குற்றாலத்துச் சாரலில் நனைந்து திரிகிறான். அத்துடன் அச் சிறுகதையில் குற்றாலத்தில் இருக்கும் பொங்குமாங்கடல் பற்றியும் ஒரு வரி எழுதப்பட்டிருக்கிறது.

எனக்கு முதன் முதலில் ‌குற்றாலத்தில் உள்ள பொங்குமாங்கடலை அறிமுகப்படுத்தியவர் எஸ். ரா. அவரது ஒரு அனுபவக்கட்டுரையில் குற்றால அருவியில் ஒருவர் இறந்துவிடுகறார். அவரின் உறவினர்களின் அலரல் பொங்குமாங்கடலின் இரைச்சலில் அடங்கிப்போவது போன்று எழுதியிருப்பா‌ர். அந்தக் கதையை வாசித்த அன்றே பொங்குமாங்கடல் என்னும் இடத்தை நான் பார்க்வேண்டும் என்று ஒரு எண்ணம் முளைவிட ஆரம்பித்திருந்தது.

இன்று எஸ். ராவின் அருவிக்குத்தெரியும் கதையை வாசித்தபோது, அக் கதையில் குற்றாலத்து சாரல் குறிப்பிடப்பட்டிருந்ததும், சாரல் பற்றி நான் சில நாட்களுக்கு முன் உரையாடியதையும், அப்போது சாரலுக்கு உதாணமாக குற்றாலத்துச் சாரல் குறிப்பிடப்பட்டதும் தற்செயலான சம்பவங்களாக இருக்கலாம். ஆனால் கடந்த சில காலமாகவே என்னைச் சுற்றி நடக்கும் பல சம்பவங்களுக்கிடையில் ஏதோவொரு மெல்லிய பிணைப்பு இருப்பதுபோன்றே உணர்கிறேன்.

மேற்கூறிய சம்பவங்களுக்கும், எஸ். ராவின் அன்பான அழைப்புக்கும், பொங்குமாங்கடலுக்கும், குற்றாலத்துச் சாரலுக்கும்
எதிர்காலத்தில் நடக்கப்போகும் பயணங்களுக்கும் இடையில் கண்ணுக்குப் புலப்படாத மெல்லியதொரு பிணைப்பு இருக்குமா? நிட்சயமாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன்.

வயதாகும்போது சில விடயங்கள் அடர்ந்த புகாரினுள் புலப்படும் காட்சிகள்போன்று மங்கலாகவும், தெளிவின்றியும் புலப்படத்தொடங்குகின்றன. அவைமீது ஒருவித ஆர்வமும், தேடலும் ஏற்படுவதையும் ஏற்றுக்கொள்ளத்தான்வேண்டும்.

இன்றைய நாளும் நல்லதே!

செய்வினை, பில்லிசூனியம், சாத்திரம், மூ......

அன்றொருநாள் காலை நிலக்கீழ் தொடரூந்தில் ஏறியபோதே அவர்கள் இருவரையும் நான் கண்டேன்.  தமிழர்கள். எதிர் எதிரில் உட்காந்திருந்தார்கள். நான் அவர்களுக்கு அருகில் இருந்த இருக்கையில் இருந்துகொண்டேன். எனது பையுக்குள் இருந்த கே. டானியலின் பஞ்சமர் புத்தகத்தில் சாதீயப் பிரச்சனைகள், கொலைகளில் என்னை மறந்து இருந்த போது அவர்களின் உரத்த உரையாடல் எனது கவனத்தை திசைதிருப்பிற்று. எவ்வளவோ முயன்றும் புத்தகத்தில் கவனம் செல்ல மறுத்தது.

அவர்களில் ஒருவர் 35 - 40 வயதானவராக இருக்கு மற்றவரோ 30 களின் இறுதியில் இருந்தார். வயதில் மூத்தவர் திருநீறு, சந்தனம் என பக்தகோடியாகவும் மற்றவர் பக்திக்கான எவ்வித சின்னங்களையும் சுமக்காமலும் அமர்ந்திருந்தார்கள்.

அவர்களின் உரையாடல் சுவராசியமாய் இருந்ததால் அவர்களை கேட்காமலே எனது காதைக் கொடுத்தேன். நாகரீமற்ற செயல் தான் ஆனாலும் எழும்பிப் தூரப் போய் நிற்கும் மனநிலையில் நானிருக்கவில்லை. அவர்களும் மெதுவாய் கதைக்கவில்லை.

அவர்கள் ஏற்கனவே அறிமுகமானவர்கள் போல் இருந்தனர். அவர்களில் வயதனாவர் நோர்வேயில் தங்கியிருப்பதற்கான வதிவிட அனுமதி அற்றவராக இருந்தார். மற்றவர் தற்காலிக வதிவிட அனுமதி பெற்றிருந்தார் என அவர்களின் உரையாடலில் புரிந்தது.


”என்னடாப்பா புதினம்” என்றார் பெரியவர்

”ஒரு புதினமும் இல்லையண்ணை. குளிர்தான் உயிர எடுக்குது” என்றப‌டியே தொடர்ந்தார் இப்படி

“லண்டனில் ஒரு சாத்திரி வந்திருக்கிராராம், காண்டம் பார்ப்பாராம்”  என்றார் இளையவர்.

”என்ட சாதகம் ஊரிலயடாப்பா. இல்லாட்டி ஒருக்கா பார்த்திருக்கலாம், விசா கிடைக்குமோ, இல்லாட்டி பிரான்ஸ்சுக்கு போவமோ என்று கேட்டிருக்கலாம்” என்றார் பெரியவர் அங்கலாய்த்தபடியே.

”அண்ணை!  பேரும் ‌பிறந்த திகதியும் காணுமாம்” ஆள் veitvet center இல்  நிற்கிறாராம். சனம் அள்ளுப்படுதாம்”

”சே.. சாதகமில்லாமல் எப்படி பார்க்கறது, அப்ப உது பொய்ச் சாத்திரம்”என்று பெரியவர் அங்கலாய்க சிறியவர் தனது நண்பர் ‌சாதகமின்றி காண்டம் பார்த்ததை எடுத்துக் ‌கூறினார். பெரியவர் சற்று நம்பியது போல இருந்தது.

”எவ்வளவு காசு கொடுத்தவராம்?” என்றார் பெரியவர்.


”200 குறோணறர் மட்டல எண்டு சொன்னவன். என்னட்ட சாமியார்ட நம்பர் இருக்கு கேக்கட்டோ” என்று பதிலை எதிர்பார்க்காது நம்பரை அமத்தி தொலைபேசியை காதில் வைத்தார்.

மற்றையவர் கா‌தை சின்னிவிரலால் குடைந்தபடியே தொலைபேசி உரையாடலை அவதானிக்கத் தயாரானார்.

” ஹலோ. ஹலோ! ஆர்.. சாமி‌யாரே கதைக்கிறியள்”

”..”

”அய்யா” காண்டம் பார்ப்பியளோ?”

”..”

”நான் ஸ்ரீலங்கா, ஒஸ்லோவில இருக்கிறன்”

”..”

”சாதகம் வேணுமோ?”

”..”

”பிறந்த திகதியும் பெயரும் காணுமோ”

”..”

”தட்சனை எவ்வளய்யா கொண்டுவரவேணும்?”

”..”


” எத்தின மணிவரைக்கும் நிற்பியள்?”

”..”

”நான் பிறகு எடுக்கிறன்”


இப்படியாய் சம்பாசனை முடிய, பெரியவர் ஆவல் தாங்காதவராய்
”என்னவாம் சாமியார்” என்றார்.
”அவர் சாதகம் இல்லாமலும் கணிப்பாராம். ஆனால் அது கொஞ்சம் நேரமெடுக்குமாம். பெயரும், பிறந்த திகதியும் காணுமாம்”

”தட்சனை?”

”அது அங்க வந்தாப்பிறகு பேசலாமாம். கனக்க வராதாம். முதல்ல வரட்டாம். சில வேளைகளில் பரிகாரங்கள் செய்தால் கொஞ்சம் கூடும் என்று நினைக்கிறேன்”

”உந்த விசா பிரச்சுனைக்கு ஒரு முடிவும் இல்ல.. காசு போனாலும் பறவாயில்ல உந்த காண்டம் பார்க்கவேணும்”

”என்ட ப்ரெண்டுக்கு நல்லா தான் பார்த்து சொன்னவராம்” பரிகாரம் செய்தாப்போல அவனுக்கு மனிசியோட பிரச்சனை குறைஞ்சு, வீட்டு பிரச்சனையும், வேலைப் பிரச்சனையும் தீர்ந்ததாம்”

”அப்ப ஆள் ‌ விசயமான ஆள் தான் போல”

அவர்களை மெதுவாய் தட்டி உங்களுக்கு ”சஞ்சயானந்தாவை தெரியுமோ” அவருக்கு மட்டக்களப்பு மாந்திரீகமும் தெரியுமாம்” என்று கூறினால் என்ன என்று சிந்தனையோடியது. என்றாலும் தற்பெருமை அழகில்லை என்பதால் அடக்கிக்கொண்டேன்.

இப்படியாக அவர்களின் உரையாடல் போய்க்கொண்டிருந்த போது தான் ஒஸ்லோ கடைகளில் ஒட்டப்பட்டிருந்த விளம்பரமும், சில மாதங்களுக்கு முன் ஒரு நிகழ்ச்சியில் நடைபெற்ற நகைச்சுவை நாடகமும்  நினைவில் வந்தது. அந்த நாடகத்திலும் இப்படித்தான் ஒருவர் காண்டம் பார்க்கப் போவார். சாத்திரியார் பரிகாரம் செய்து ஒரு தகடு கொடுத்து அதை கையில் கட்டிக் கொள் என்பார். அதை கையில் கட்டியதும் ஒவ்வாமையினால் உடம்பு முழுவதும் அரிப்பு ஏற்படத் தொடங்கிவிடும். அவர்கள் டாக்டரிடம் சென்று மருந்த வாங்கி, தகட்டைக் களட்டிய பின்பு, அவர் சுகப்படுவார்.

இப்போது ஊருக்குள் கொடிகட்டிப் பறக்கும் வியாபாரம் இது தான்.  வேதனைகள், துன்பங்களின் மத்தியில் வாழ்பவர்களுக்கு இது ஒரு மனஆறுதலைக் கொடுக்கிறது என்பது என்னவோ  உண்மைதான். இப்படியான மனிதர்களை வைத்து பிழைப்பு நடத்துபவர்களை  என்ன சொல்வது?

நேற்று குறிப்பிட்ட அந்த சென்டருக்குள் சென்றபோது ஒரு பெண் கையில் வலுக்கட்டாயமாக ஒரு விளம்பரத்தை திணித்தார். சிரித்தபடியே வேண்டாம் என்றேன்.  இதை நீ வாங்காவிட்டால் நீ செத்தாய் என்னும் விதத்தில் பார்த்தார். சரி தாருங்கள் என்று வாங்கியபடியே அதை வாசித்தேன். சாமியார் ஒருவரின் தொ(ல்)லைபேசி இலக்கமும் அவரது திருவிளையாடல்கள்பற்றியும் எழுதியிருந்தது. கசக்கி அருகில் இருந்த குப்பைக்குள் போட்டுவிட்டு நடையைக்கட்டினேன்

மட்டக்களப்பான் ஆகிய எனக்கும் ஒருவர் ‌தேசிக்காய் வெட்டிக்கொண்டிருக்கிறார். அண்ணை தேசிக்காய் வாங்கித் தரவா என்று கேட்டிருக்கிறேன் அவரை.

அது பெரியதொரு காப்பியம். அவரின் கதையை பின்பொருநாள் சொல்கிறேன்.


ஒட்டக மொழி

பங்குனி மாத (2014) காலச்சுவடு இதழில் வெளியாகிய எனது பதிவு.

வாழ்க்கை பல மனிதர்களை எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. எல்லோரும் ஏதோ ஒரு விதத்தில் தங்களின் நினைவுகளை, தாக்கங்களை என்னுள் செதுக்கிவிட்டே கடந்துபோகிறார்கள். மனிதர்களின் மனம் என்னும் இரகசியப் பெட்டியினுள் பலரின் நினைவுகளும் உரையாடல்களும் சம்பவங்களும் ரகசியமாகத் தமக்குள் உரையாடியபடியே உலாவித் திரிகின்றன. சிலர் அவற்றில் சிலவற்றை என்னிடம் நம்பிப் பகிர்ந்துபோகிறார்கள்.

நான் அவர்கள் தந்துபோனவற்றைச் சுமந்து திரிகிறேன்; சுகமான சுமை அது. இன்னொரு மனிதனின் நம்பிக்கையைப் பெறுவதும், அவன் பாதுகாப்புணர்வுடனும் நம்பிக்கையுடனும் என்னை அணுகுவதும் பரம ரகசியங்களைப் பகிர்வதும் மனதுக்கு ஆறுதலைத் தரும் அதேவேளையில், வாழ்க்கை தனது வீரியத்தை மனிதர்களிடத்தில் எவ்வாறெல்லாம் காட்டிப்போகிறது என்பதை அறியவும் தருகிறது.

பால்யத்துக் காலம் தொடக்கம், பலரும் என்னை நம்பித் தங்களின் கதைகளைக் கூறியிருக்கிறார்கள். அந்நாட்களில் காதற்கதைகளே அதிகமாய் இருந்தன. காலம் செல்லச் செல்ல வயதும் ஏற ஏற வாழ்க்கையும் தனது வீரியத்தைக்காட்ட, என்னுடன் பகிரப்பட்ட கதைகளும் அவற்றின் கனங்களும் அதிகரித்தே போகின்றன.

முன்பின் அறியாத மனிதர்கள், சற்றே அறிமுகமானவர்கள், நன்றாகப் பழகியவர்கள், நண்பர்கள் என்று பலரும், என்னை நம்பி ஏன் கொட்டுகிறார்கள் என்று அடிக்க?டி நான் நினைப்பதுண்டு. சில கேள்விகளுக்குப் பதில் தேடுவதில் அர்த்தமில்லை. அப்படியான கேள்வியாகவே இருக்கட்டும் இந்தக் கேள்வியும்.

சில வாரங்களுக்கு முன், கணினி திருத்த வேண்டும் என்று ஒருவர் அழைத்தார். மிகவும் வயதானவர் போன்றிருந்தது அவரது குரல். அவரது பல சொற்களைப் புரிந்துகொள்வதே கஷ்டமாயிருந்தது. அவரின் வீட்டிற்குச் சென்றேன். நோர்வேயின் ஒஸ்லோ நகரின் மிக செல்வச் செழிப்புள்ள சிறு நகரம் அது. சற்றே குளிரான காலநிலை. மெதுவெயிலின் ஒளியில் இலையுதிர் காலத்து நிறங்களில் மரங்கள் அழகாக இருந்தன.

அழைப்பு மணியை அழுத்தினேன். வீட்டினைத் திறந்து என்னை உள்ளே அழைத்தார். அவரது பார்வையில் ஒரு கறுப்பனை அவர் எதிர்பார்த்திருக்கவில்லை என்பது புரிந்தது. “நீ எந்த நாட்டைச் சேர்ந்தவன்” என்றார். “ஸ்ரீலங்கா” என்றேன்.

அப்போதுதான் அவரைக் கவனித்தேன். நிமிர்ந்து நிற்பதற்கே தடுமாறிக்கொண்டிருந்தார். “ஆஹா.. காலையிலேயே ஆரம்பித்துவிட்டார்” என்று மனம் கூறியது. கவனமாய் இருக்க வேண்டும் என்றும் உள்மனம் எச்சரித்தது.

“உங்கள் கணினியில் என்ன பிரச்சனை” என்றேன்.

“உள்ளே சென்று கணினியின் முன் உட்கார்” என்று கட்டளை வந்தது. கணினி இருந்த அறையை நோக்கிக் காற்றில் ஆடும் உயர்ந்த கமுகுபோல நடந்து சென்றார் அவர். அவர் விழுந்தால் பிடித்துக்கொள்வதற்கான தயார்நிலையில் அவர் பின்னே நடந்துபோனேன்.

கணினியின் முன்னே உட்கார்ந்துகொண்டேன். அவர் பிரச்சனைகளை அடுக்கிக் கொண்டே சென்றார். நானும் ஒவ்வொன்றாகத் தீர்த்துக்கொண்டிருந்தேன்.

இப்படியே கடந்து சென்ற ஒரு மணி நேரத்தில் நாங்கள் நட்பாகிப்போனோம். அவர் ஒரு பார்க்கின்சன் நோயாளி, வயது 67தான் ஆகிறது, பார்க்கின்சன் நோயின் தாக்கத்தினைக் குறைப்பதற்காக அவரது மண்டை ஓட்டினைத் திறந்து சில இலத்திரனியல் கருவிகளை அவரது மூளையுடன் இணைத் திருக்கிறார்கள், இதயத்துடிப்பினைச் சீராக்கவும் ஒரு கருவி பூட்டப்பட்டிருந்தது அவரது நெஞ்சுப் பகுதியில். அது அவரின் நெஞ்சின் தோற்பகுதிக்கு வெளியே துருத்திக் கொண்டிருந்ததை மேலாடையைத் திறந்து காட்டினார். பார்க்கவே பயமாய் இருந்தது.

ஒரு மேசை முழுவதும் மருந்துகள் இரைந்து கிடந்தன. ஒரு நாளைக்கு ஒன்பது விதமான மருந்துகளை உட்கொள்கிறார். அவை மூன்று மணி நேரத்துக்கு ஒரு தடவை சீராக உட்கொள்ளப்பட வேண்டும் என்றார். அறுவைச்சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது வைத்தியர்கள் தவறுதலாக நான்கு நாட்கள் தேவைக்கு அதிகமாக மருந்துகளை உட்செலுத்தியிருக்கிறார்கள். அதனால், அவரின் உடல்நிலை மேலும் பாதிப்படைந்திருக்கிறது.

ஐரோப்பாவிலேயே அவருக்குத்தான் இந்தளவு நாட்கள் தொடர்ந்து தேவையற்ற மருந்துகளை வைத்தியர்கள் கொடுத்திருப்பதாகவும், தானே அந்தப் பெருமைக்குரியவன் என்றும் தனது நகைச்சுவையைக் காட்டினார்.

அவருடன் இருந்த சமயங்களில், அவரின் நகைச்சுவையுணர்வினை மிகவும் ரசித்தேன். எதிலும் நகைச்சுவை உண்டு. எதையும் நகைச்சுவையாகப் பார்க்கலாம், ஆனால் அது மற்றவரைக் காயப்படுத்தா திருத்தல் அவசியம் என்றார். எனது கொள்கையும் அதுவே என்பதால் அவருடன் உடன்பட்டேன்.

அவரது அறையில் இருந்த ஒரு சிறு கணினி அலறியது. அதனருகே சென்று பார்த்தார். என்னையும் அழைத்து அதைப் பார்க்கச் சொன்னார். அக்கணினிக்கும் அவரது வைத்தியசாலைக்கும் நேரடித் தொடர்பிருந்தது. எப்போ, என்ன மருந்தினை அவர் எடுக்க வேண்டும் என்று அது சொல்வது மட்டுமல்ல, ‘ஆம். நான் அம்மருந்தினை எடுத்துவிட்டேன்’ என்று இவர் தனது சம்மதத்தைத் தெரிவிக்கும்வரையில் அது கத்திக்கொண்டே இருக்கும். இது எனது மனைவி மாதிரி என்று அதிலும் தனது நகைச்சுவையைக் காட்டினார்.

பார்க்கின்சன் நோயுடன் சில நோய்கள் இலவசமாக வந்திருப்பதாகவும் அதில் முக்கியமானது இந்த மறதி என்றும், அதனால் தான் படும்பாடு பெரும்பாடு என்று கூறி, வீட்டில் ஆங்காங்கே “கஜினி” சூர்யா போன்று நினைவுக்குறிப்புகள் எழுதியிருப்பதைக் காட்டினார். எனக்குக் கிலி பற்றிக்கொண்டது. இப்போதே நான் ஏறத்தாழ ஒரு கஜினி போன்றே இருக்கிறேன்; அத்தனை மறதி எனக்கு.

‘இவரைப்போல் ஆகிவிட்டால்’ என்று சிந்தனையோடியது.

அவரது பிரின்டர் இயங்கவில்லை. எனவே, புதிது வாங்க வேண்டும், “வா... கடைக்குப் போவோம்”என்றார். நான் ‘‘வாருங்கள் எனது வாகனத்தில் செல்வோம்’’ என்றேன். “இல்லை, எனது வாகனத்திற்கு மாற்றுத் திறனாளி வாகனத்தரிப்பிடங்களில் நிறுத்தும் அனுமதி இருக்கிறது அதில் செல்வோம்” என்றார்.

இவர் வாகனம் ஓட்டினால் என் கதி அதோகதி ஆகிவிடும் என்பதால், என் முகத்தைப் பரி தாபமாக வைத்துக்கொண்டு ‘‘நீங்கள் வாகனம் ஓட்டுவீர்களா’’ என்றபோது, ‘‘பயப்படாதே நீ இன்று சாகமாட்டாய்’’ என்றார், வெடித்துச் சிரித்தபடியே. இருவரும் அவரின் வீட்டின் கீழ்த்தளத்திற்குச் சென்றோம். அவரின் வாகனத்தை அண்மித்தவர், ‘‘சற்றுப் பொறு, திறப்பை மறந்துவிட்டேன், எடுத்து வருகிறேன்.” என்றார். என் மனம் ‘திக் திக்’ என்று அடித்துக்கொண்டிருந்தது.

வாகனத்தின் திறப்பை எடுத்து வந்தவர் ‘‘இந்தா இதைப் பிடி, நீ தான் வாகனம் ஓட்டப்போகிறாய்” என்று கூறித் திறப்பை என்னை நோக்கி எறிந்தார். அப்போதுதான் என்னுயிர் திரும்பியது.

தான் இப்படிச் சமநிலை இழந்து இருப்பதைப் பார்த்த தனது மகள் வாகனக் கட்டுப்பாட்டு இலாகா அதிகாரிகளுக்கு அறிவித்ததனால் அதிகாரிகள் தனது சாரதிப் பத்திரத்தை ரத்து செய்துவிட்டனர் என்றும், அந்நாட்களில் தான் மகள்மீது கடும் கோபத்தில் இருந்ததாயும், இப்போது அவளின் நோக்கத்தை உணர்ந்திருப்பதனால் அவளுக்கு நன்றி கூற வேண்டும் என்றும் கூறினார்.

வாகனத்தில் அமர்ந்துகொண்டோம். அப்படியானதோர் மிக மிக சொகுசான வாகனத்தை நான் இதுவரை ஓட்டியதில்லை. அதை இயக்குவதற்குத் தடுமாறியபோது திறப்பைப் பறித்து ஒரு துளையினுள் தள்ளிவிட்டார். தூங்கிக் கொண்டிருந்த சிங்கம் உறுமியது போல் உயிர்த்தது அந்த வண்டி. அதன் சத்தமே மனதுக்கு ஒரு விறுவிறுப்பைத் தந்தது. கப்பல்போல் மிதந்து சென்றுகொண்டிருந்தது அவரது வாகனம். நாங்கள் உரையாடிக்கொண்டிருந்தோம்.

நோர்வேயிலேயே மிகப் பெரிய கடையருகில் வாகனத்தை நிறுத்தி, கடையை நோக்கி நடந்தபோது, எனது நண்பர் தள்ளாடியபடியே வந்தார். பலர் அவரை ஒருவிதமாகப் பார்த்து ஒதுங்கிக்கொண்டனர். சிலர் புறு புறுத்தனர். அவரோ ‘‘இதெல்லாம் சகஜமப்பா” என்னும் ரீதியில் இதைப் பற்றிக் கவனிக்காமல் தள்ளாடியபடியே நடந்து சென்றார், எனக்கு மனதுக்குள் ஏதோ பிசைந்தது. பனைமரத்துக்குக் கீழே இருந்து மனிதர்கள் பாலையும் குடிக்கலாம் என்பதை மனதுக்குள் எனக்கு நானே நாலைந்து தடவைகள் கூறிக்கொண்டேன்.

மீண்டும் வீடு நோக்கி அவரின் வாகனத்தில் மிதந்துகொண்டிருந்தோம். அந்தப் பெரிய வீட்டில் தனியாகவா இருக்கிறீர்கள் என்று கேட்டேன். தலையை இரு புறமும் ஆட்டியபின் சற்றுநேரம் மௌனமானார். ‘‘என் மனைவிக்கு மனஅழுத்தம், மனநோய்கள் காரணமாக இடையிடையே அவர் சுகயீனமுறுவார். நேற்றுத்தான் அவர் ஒரு வைத்தியசாலையில் இருந்து வீடு வந்திருந்தார்’’ என்றும் ‘‘அவர் தற்போது வெளியில் சென்றிருக்கிறார்’’ என்றும் கூறினார்.

நாங்கள் வீடு சென்றபோது அவர் மனைவி அங்கிருந்தார். அவரருகில் என் நிறத்தில் ஒரு நாய் நின்றிருந்தது. நாம் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அமைதியானவராய் இருந்தார். அவர்களது நாய் அவரைச் சுற்றிச் சுற்றியே வந்தது. கணவருடன் பேசியதைவிடத் தனது நாயுடன் அதிகமாகப் பேசிக்கொண்டிருந்தார் அப்பெண். எனது நண்பரோ அதைப் பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.

உனக்கு உணவு சமைக்கிறேன் என்று கூறி எனது சம்மதத்தை எதிர்பார்க்காமலே குசினிக்குள் தள்ளாடியபடியே புகுந்துகொண்டார். சற்று நேரத்தில் மிகச் சுவையான நோர்வேஜிய உணவு பரிமாறப்பட்டது. அதன்பின் அவரே மிகமிக ருசியானதோர் இனிப்பு உணவினைத் தயாரித்தார். மிக மிக ருசியாய் இருந்தது. அவருக்குச் சமையற்கலையில் பெருந்திறமை இருக்கிறது என்பதைப் புரிந்துகொண்டேன். ‘‘நீ நன்றாகச் சமைப்பாயா?’’ என்று கேட்டார். அசட்டுத்தனமாய்சிரித்தபடியே தலையை அங்கும் இங்கும் ஆட்டினேன். ‘‘அது ஒன்றும் பெரிய விசயமில்லை’’ என்று என்னை ஆறுதல்படுத்தினார்.

மறுநாளும் என்னை வந்து தனது கணினியைச் சீர்செய்யச் சொன்னார். அவரிடத்தில் மூன்று கணினிகள் இருந்தன. அவை மூன்றும் இயங்க மறுத்திருந்தன. அவற்றில் ஒன்றினை இன்று இயக்கிக் கொடுத்திருந்தேன்.

மறுநாள், மீண்டும் அவரிடம் வந்தபோது, மனிதர் பெரும் பதட்டத்தில் இருந்தார். ‘‘என்ன பிரச்சனை’’ என்று கேட்டேன். ‘‘தொலைபேசியை எங்கோ மறந்து வைத்துவிட்டேன்’’ என்றார். ‘பொறுங்கள்’ என்று கூறி அவரின் தொலைபேசிக்கு அழைப்பை ஏற்படுத்த முயற்சித்தேன். அவரது கட்டிலில் இருந்து தொலைபேசி மணியடித்தது. எடுத்துக்கொடுத்தேன். முதுகில் பெரிதாய் ஒரு தட்டு தட்டி ‘‘கெட்டிக்காரன்” என்றார். அது நக்கலா பாராட்டா என்பது புரியவில்லை.
இரண்டாம் நாள் அவருக்கு என்னில் மேலும் நம்பிக்கை வந்திருந்தது. அவர் ஒரு அலுமினியத் தொழிற்சாலையின் முக்கிய விற்பனை அதிகாரியாகத் தொழில் புரிந்ததாகக் கூறினார். ஒரு தலைமயிரினை விட 50 மடங்கு மெல்லிய தாளாக அலுமினியத்தைத் தயாரிக்க முடியும் என்பதை அலுமினியம் எவ்வளவு இலகுவாக வடிவமைக்கப்படக் கூடியது என்பதற்கு உதாரணமாக எடுத்துக்காட்டினார். அலுமினியம் பற்றி அவருக்கு அதீத அறிவு இருந்தது. பார்க்கின்சன் நோய் வந்தபின் தொழிலில் தன்னால் ஈடுபட முடியவில்லை என்றார். அவர் தனது தொழிலை மிகவும் நேசித்திருந்திருக்கிறார் என்பதை அவருடனான உரையாடலில் இருந்து புரிந்துகொண்டேன்.

இரண்டாவது நாளும் எனக்கு விருந்து தடபுடலாக இருந்தது. உணவு தயாரிப்பதை மனிதர் மிகவும் விரும்பினார். நானும் ருசித்துச் சாப்பிட்டேன். நான் உணவில் காட்டிய ஆர்வத்தில் மனிதர் குஷியாகிவிட்டார். நானும் அவரின் கைப்பக்குவத்தைப் பாராட்டினேன். சாப்பிட்ட சாப்பாட்டுக்கு அதையாவது செய்யாவிட்டால் சரித்திரத் தவறாகிவிடுமல்லவா?

இரண்டாவது நாளின் பின், நாங்கள் மிக நெருங்கிய நண்பர்களாகிவிட்டோம். அவரது வாழ்க்கையின் சகல பாகங்களையும் ஒப்புவித்தார். அழுதார். சிரித்தார். சிலநேரங்களில் அவரது முதுகினைத் தடவிவிட்டேன். அவ்வப்போது எனது கையினை இறுகப் பற்றிக் கொண்டார். அவரது கையின் அழுத்தத்தில் அவர் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கை பிரதிபலித்தது. என் வாழ்க்கையைப் பற்றிக் கேட்டார்; பகிர்ந்தேன். கேட்டபின் பெருமூச்சொன்றை உதிர்த்தார். இருவருக்கிடையிலும் சிறிதுநேரம் கனமான மௌனம் நிலவியது. அவரின் இருமல் எமது மௌனத்தைக் கலைத்தது.

‘பார்க்கின்சன்’ நோய் அவரைச் சிறிதுசிறிதாக விழுங்கிக்கொண்டிருக்கிறது. தனது பேச்சு வல்லமையை இழந்துகொண்டிருக்கிறார். அதைத் தக்கவைப்பதற்காக அவர் தினமும் அரை மணி நேரம் ஒரு கடினமான பயிற்சி செய்கிறார். ஒரு தண்ணீர்ப் போத்தலுக்குள் ஒரு குழாயினை இட்டு, அதன் மூலமாக வாக்கியங்களை உச்சரிக்கிறார். அவர் பயிற்சி செய்யும்போது பார்த்துக்கொண்டிருந்தேன். எனக்குத் தலைசுற்றியது. என்னை முயற்சித்துப் பார்க்கச் சொன்னார். நான் முயற்சித்தேன். போத்தலுக்குள் காற்றினை ஊதியபடியே ஒரு சொல்லினை உச்சரிப்பதற்குள் எனக்குப் போதும் போதும் என்றாகிவிட்டது. அவரோ வாயில் நுரை தள்ளத்தள்ள அரை மணி நேரம் பயிற்சி செய்தார்.

பயிற்சி முடிந்து, நுரைதள்ளிய வாயினைத் துடைத்த பின் என்னுடன் மிகத் தெளிவாக உரையாடினார். அவரின் கண்கள் ஒளிகொண்டிருந்தன. என்னால் நம்ப முடியவில்லை. அந்தளவுக்குத் தெளிவாகப் பேசினார். மறுநாள் பேச்சு மீண்டும் தடுமாற்றமான நிலைக்கு மாறிவிடும் என்றார். நான் அவரை உற்றுப் பார்த்தேன். முருங்கையில் ஏறிய வேதாளத்தை வெட்டிவிழுத்தும் விக்கிரமாதித்தன்போல் இருந்தார் அவர். அவரது மனஉறுதி என்னை ஆச்சரியப்படவைத்தது.

அன்று நான் விடைபெற்றபோது அவர், தான் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட பின் தனது குடும்பத்தினருக்கு எழுதிய கடிதத்தின் பிரதியை எனக்கும் தந்தார். தந்தது மட்டுமல்ல, அதை வாசித்துப் பார் என்றும் கட்டளையிட்டார். ‘‘நிச்சயமாக’’ என்று கூறி விடைபெற்றேன்.

அன்றிரவு மனம் அமைதியாக இருந்தபோது அவரது கடிதம் நினைவுக்கு வந்தது, அதை எடுத்து வாசிக்கலானேன்.

‘எனது குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும்’ என்று ஆரம்பித்தது, அந்தக் கடிதம்.

நான் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். இது தொற்றுநோயுமல்ல, பரம்பரை நோயுமல்ல. இந்நோய் எப்படித் தோன்றுகிறது என்று இன்னமும் ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால் மூளையில் உள்ள Dopamin கலங்கள் மிக வேகமாக இறக்கத் தொடங்கும்போது இது ஏற்படுகிறது. என்னிடம் உள்ள இக்கலங்களில் 70 - 80 வீதமானவை இறந்துவிட்டன. மருந்துகள் என்னைப் பூரணமாகக் குணப்படுத்தாது. ஆனால் மருந்துகளால் நோயின் தாக்கம் சற்று தாமதப்படுத்தப்படும். இந்நோயுடன் கூடவே வரும் சில நோய்களும் உண்டு. அவையும் என்னைப் பாதிக்கின்றன. நான் என்னை இந்தப் புதிய வாழ்வுக்குப் பழக்கிக்கொள்ள வேண்டும். உங்கள் அனைவரின் உதவியும் எனக்குத் தேவை. என்னோடு வாழ்ந்திருங்கள் என்றிருந்தது, அவரது கடிதத்தின் முதலாவது பகுதி.

எனது மனதுக்குள் அவரின் குரல் கேட்டுக்கொண்டிருந்தது. அவரே எனக்கு அக்கடிதத்தை வாசிப்பது போலுணர்ந்து கொண்டிருந்தேன்.

தொடர்ந்து வாசிக்கலானேன்.

சிலநேரங்களில் நான் அழலாம், அல்லது கோபமாக, எரிச்சலுடன் இருக்கலாம். நீங்கள் நினைப்பீர்கள். அதற்குக் காரணம் நீங்கள்தான் என்று. அது நீங்களாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. அது பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்று. இப்படியான திடீர் திடீர் உணர்ச்சிகளின் வெளிப் பாடுகளை எனது வைத்தியர் ‘உணர்ச்சிகளின் ஒழுக்கு’ என்கிறார். எனது இப்படியான உணர்ச்சிகளின் ஓழுக்கினை நீங்கள் பெரிதுபடுத்தாதீர்கள். அது சற்றுநேரத்தில் அகன்று விடும். எனக்குத் தேவையான நேரத்தை எனக்குத் தாருங்கள். அதுவே நீங்கள் எனக்குச் செய்யும் உதவி.

எனது நினைவுகள் மழுங்குகின்றன. நான் பல சொற்களை மறந்திருக்கிறேன். உச்சரிப்புக் களையும் மறக்கிறேன் இவை யெல்லாம் இந்நோயின் பாதிப்புக்களே. நான் நடுங்கிக்கொண்டிருப்பேன் என்று நீங்கள் நினைக்கலாம், நானும் அப்படித்தான் ஆரம்பத்தில் நினைத்தேன். இன்றைய காலத்தில் பல புதிய மருந்துகள் நடுக்கத்தைக் குறைக்கின்றன. மருந்துகளைத் தவிர நடுக்கத்தைக் குறைப்பதற்காக நான் எனது கைவிரல்களின்மேல் உட்கார்ந்திருப்பேன் அல்லது காற்சட்டைப்பையினுள் கைகளை வைத்திருப்பேன்.

போதையில் மது அருந்தியவர் போன்று நான் வீதியில் தள்ளாடித் தள்ளாடித் திரிவதாக யாராவது உங்களிடம் கூறினால் அவர்களிடம் கூறுங்கள் அது மதுவின் பாதிப்பல்ல. அது பார்க்கின்சன் நோய் என்று, ‘தள்ளாடும் நிலை’ என்பது பார்க்கின்சன் நோயின் அறிகுறிகளில் ஒன்று என்றும். நான் புன்னகைப்பதோ, சிரிப்பதோ இல்லையாதலால் நான் முன்பைப் போன்று கலகலப்பாக இல்லை என்றும் நீங்கள் நினைக்கலாம். நான் ஒன்றையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருக்கலாம். இவையெல்லாம் பார்க்கின்சன் நோயின் பாதிப்புகளே அன்றி வேறெதுவுமில்லை.

‘‘என்னை என் நோயுடன் நேசியுங்கள்’’ என்று தனது கடிதத்தை முடித்திருந்தார். கடிதத்தை வாசித்தபின் மனிதர் என்னுள் இன்னும் அதிகமாய் நெருங்கியிருப்ப தாய் உணர்ந்தேன்.

தன் நோய்மை பற்றி வெளிப்படையாகக் கூறி, ஏற்படக் கூடிய அசௌகரியமான சந்தர்ப்பங்களை விளக்கி, நோய்பற்றி நுணுக்கமாக விளக்கிக் குடும்பத்தினரை ஆறுதல்படுத்தி, தானும் ஆறுதலடைந்திருக்கிறார். எம்மில் எத்தனை பேரால் இது முடிந்திருக்கும்?

இனிமேல் தன்னால் மீண்டு கொள்ள முடியாது என்பதை ஏற்றுக் கொண்டிருக்கிறார். மெது மெதுவாய்த் தான் இல்லாது போய்க் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்வது என்பதானது, இலகுவான காரியமில்லை. தன் சுயத்துடன் அவர் சமரசமாகியிருந்தார் என்பதை அறியக்கூடியதாயிருந்தது. தனது முடிவினை ஏற்றுக் கொண்டிருக்கிறார். அவர் இந்த மனநிலைக்கு வருவதற்கு, எத்தனை காலம் தனது மனதுடன் போராடியிருப்பார். எத்தனை கடினமானது அது. இதைப்பற்றி நினைக்க நினைக்க அவர் மீதான மரியாதை எனக்குள் அதிகரித்துக்கொண்டேயிருந்தது.

அவரை இரண்டாவது நாள் நான் சந்தித்தபோது, ஒரு ஒலிப் புத்தகத்தைக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆர்வக் கோளாறினால் ‘‘என்ன புத்தகம் அது?” என்று கேட்டேன். ‘‘ஒட்டக மொழி” என்று பதில் வந்தது. தொடர்ந்து ‘‘உனக்கு ஒட்டகத்தின் மொழி தெரியுமா?” என்றார். எனக்கு அவரது உரையாடலின் உள்ளர்த்தம் புரியாததால் கண்ணைச் சுருக்கிய படியே நின்றிருந்தேன். ‘உட்கார்’ என்றார். சரிந்தபடியே உட்கார்ந்து கொண்டேன்.

Marshall R. Rosenberg என்பவர் ஒரு தொடர்பாடல் செய்முறை பற்றிக் கூறியிருக்கிறார். அது Nonviolent Communication. NVC என்றும் அழைக்கப்படுகிறது. இதை அன்பின்மொழி - ஒட்டகமொழி என்றும் அழைக்கிறார்கள்.

‘‘ஒட்டகம் உலகத்திலேயே நீளமான கழுத்தையுடையதால் அதன் கண்கள் மிக உயரத்தில் இருக்கும். ஆதலால் எதையும் தெளிவாகப் பார்க்க முடிகிறது. ஒட்டகத்தின் காதுகள் பெரியவை, அவை நீ மற்றவர்கள் பேசுவதை செவிமடுக்க வேண்டும் என்பதைக் குறிக்கிறது. அனைத்து ஜீவராசிகளின் இதயங்களுடனும் ஒப்பிடும் போது ஒட்டகத்தின் இதயம் பெரியது. இது அன்பினைக் காட்டுகிறது’.

‘‘ஒரு தொடர்பாடலில் அல்லது உரையாடலில் நீ தெளிவான பார்வை, செவிமடுத்தல், அன்பு ஆகியவற்றைக் கொள்வாயாயின் அந்தத் தொடர்பாடல் - உரையாடல் வெற்றிபெறுகிறது’’ என்று விளக்கினார். ‘‘நீ அவசியம் இந்தப் புத்தகத்தை வாசிக்க வேண்டும்’’ என்றும் அறிவுறுத்தினார். ‘‘எனக்கும் ஆர்வமாய் இருக்கிறது அதனை வாசிக்க’’ என்றேன் நான்.

அவர் தனது குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எழுதிய கடிதத்தையும், மூன்று நாட்கள் அறிமுகமான என்னுடன் அவர் பழகும் முறையையும், நம்பிக்கையையும் ஒப்பிட்டுப் பார்த்தேன். அவருக்கு ஒட்டகமொழி வசப்பட்டிருப்பது புரிந்தது.

இதற்குப் பின்னான நாட்களிலும் அவர் என்னை மீண்டும் மீண்டும் அழைத்தார், உபசரித்தார், உதவி கேட்டார், உரையாடினார், அழுதார், சிரித்தார். நானும் உரையாடினேன், சிரித்தேன், வாழ்க்கையைப் பகிர்ந்தேன். அவருடனான உரையாடல்களில் தொண்டை கரகரக்க கண்கள் குளமாகியிருக்கும்போது அவர் கை, என் கையைப் பற்றியிருக்கும்.

நான் ஒட்டகமொழியினைக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

விமர்சிப்பவன் எதிரியா?

ஒரு விமர்சனம் உடன்பாடற்றதாக இருக்கலாம். ஆனால் அது தேவையற்றதாக இருக்க முடியாது. மனித உடலி்ல் வலியின் செயற்பாட்டை இது ஒத்திருக்கிறது. அதாவது இது நலமற்ற நிலையின் மீது கவனத்தைக் குவிக்கச் செய்கிறது. என்று விமசனம் பற்றி  Winston Churchill கூறுகிறார்.

(Criticism may not be agreeable, but it is necessary. It fulfils the same function as pain in the human body. It calls attention to an unhealthy state of things. ― Winston Churchill)


சுதந்திரத்திற்கான அச்சுறுத்தல் விமர்சனமின்மையே என்கிறார்.1986 இல் இலக்கியத்திற்காக நோபல் பரிசுபெற்ற நைஜீரிய நாட்டு எழுத்தாளும் நாடகசாரியருமான Wole Soyinka.

(The greatest threat to freedom is the absence of criticism. ― Wole Soyinka)

எமது சமுதாயம் விமர்சனங்களை ஏற்றுக்கொள்ளுமளவுக்கு பண்படைந்துள்ளதா அல்லது நெகிழ்ச்சித்தன்மையுள்ளதா?

எமது சமுதாயம் விமர்சனத்தை எவ்வாறு பார்க்கிறது?  விமர்சனம் செய்பவர் எவ்வாறு சமூகத்தால் நோக்கப்படுகிறார்? விமர்சிப்பவருக்கும், விமர்சிக்கப்பட்டவருக்குமான உறவு எவ்வாறு இருக்கிறது என்று நோக்குவோமெனில் நாம் கடந்துசெல்லுவேண்டிய பாதை அதிகமாய் இருப்பதுபோல இருக்கிறது

எமது சமுதாயம் உணர்ச்சிகளினால் கட்டுண்டது. பலரும் விமர்சனங்களை அறிவார்த்தமாக பகுத்தாராய்வு செய்வதில்லை. தன்னைச் சூழவுள்ள மனிதர்கள், நெருக்கமானவர்கள், தாம் சார்ந்துள்ள நிறுவனங்கள், குழுக்கள் என்று விமர்சனங்களை பல வித நிறங்களைக்கொண்ட கண்ணாடிகளுக்குள்ளால் பார்ப்ப‌தே வழமையாக இருக்கிறது. அதன் காரணமாக விமர்சனம் புகழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே பலராலும் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.

மாற்றுக்கருத்துடைய விமர்சனங்கள் பெரும்பாலும் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. மாற்றுக்கருத்துடைய விமர்சனத்தை முன்வைப்பவரை எதிரியாகநோக்கும் சிந்தனையையும் கொண்டது எமது சமூகம். எவையும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது கிடையாது.

அதேவேளை விமர்சனத் தர்மம், விழுமியங்கள், நெறிமுறைகளுக்கு உட்பட்டு விமர்சனம் அமையவேண்டும் என்பதும் மிகவும் அவசியம்.


பலரிடம் உள்ள பலவீனம் என்னவென்றால், அவர்கள் புகழ்ச்சியினூடாக பாழாகிப்போவதையே விரும்புகிறார்கள், விமர்சனத்தினூடாக மீட்கப்படுவதைவிட  என்கிறார் Norman Vincent Peale என்னும் அறிஞர்.

(The trouble with most of us is that we would rather be ruined by praise than saved by criticism. - Norman Vincent Peale)


புகழ்ச்சியை அதிகம் உள்ளடக்காது, மாற்றுக்கருத்துக்களை முன்வைத்து எழுதப்படும் விமர்சனங்களால் விமர்சகருடன், விமர்சிக்கப்பட்டவரும் அவரது ஆதரவாளர்களும் முரண்பட்டுக்கொள்ளும் நிலையே எமது சமூகத்தில் அதிகம் காணப்படுகிறது. இது வளமான ஒரு பண்பட்ட சமூகத்திற்கு உகந்ததல்ல.

விமர்சனங்களும் விமர்சிக்கப்படவேண்டும் என்னும் கருத்துடையவன் நான். ஆனால் விமர்சனங்கள் விமர்சிக்கப்படும்போது மிக முக்கியமாக அந்த கருத்துப்பரிமாற்றல் விவாதமாக மாறிவிடாதிருப்பது அவசியம். மற்றையவரின் நியாயமான கருத்தை / விமர்சனத்தை புரிந்துகொள்ளும் நெகிழ்ச்சித்தன்மை எம்மிடம் இல்லாதுவிட்டால் நாம் எமது முன்னேற்றத்தின் படிக்கட்டுகளை மூடிவிடுகிறோம் என்றே நான் கருதுகிறேன்.

நோர்வேயில் விமர்சனங்களை முதுகுக்குப்பின்னே விமர்சிக்கும் தன்மையே அதிகம். நேருக்கு நேர் தமக்கு கூறப்பட்டு புகழ்ச்சி தவிர்ந்த விமர்சனங்களை விமர்சித்து வளமான உரையாடலை நடாத்துபவர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். விமர்சனங்களில் உள்ள குறைகளை சுட்டிக்காட்டாது இருப்பதும் விமர்சனத்தை விரும்பாத தன்மையை ஒத்ததுதே.

வேதனை என்னவென்றால் பல மாபெரும் கலைஞர்களுக்கும், மனிதர்களுக்கும், கல்விமான்களுக்கும் மேலே கூறப்பட்ட நெகிழ்ச்சித்தன்மை இல்லாதிருப்பதே ஆகும். தற்பெருமையும், அதீத சுயநம்பிக்கையும் தேவைக்கு அதிகமாகும்போது வரட்டுக்கௌரவம் அதிகரித்து, நெகிழ்ச்சித்தன்மை அற்றுப்போகிறது. இதுவே வளர்ச்சியை தேக்கநிலையடையவைக்கிறது.

அண்மையில் ஒரு பேராசிரியரை எனது நண்பர் ஒருவர் சந்தித்தார். அப் பேராசிரியர் தமிழர்களிடத்தில் மட்டுமல்ல, இலங்கையிலும், வேறு பல நாடுகளிலும் தனது ஆராய்சிகளை மேற்கொண்டு தனக்கென்றெரு தனிஇடத்தை கல்விமான்களுக்கிடையில் பெற்றுக்கொண்டவர். பல் மொழி வித்துவர். தலைசிறந்த அறிஞர்.

எனது நண்பரோ நோர்வேயில் 27 வருடத்திற்கும் அதிகமாக வசிப்பவர். நோர்‌வே கலாச்சாரத்தின் அடிப்படையிலேயே சிந்திப்பவர். அவரின் பேச்சும் நோர்வேஜிய சிந்தனையோட்டத்தை ‌‌அடிப்படையாகக்கொண்டது. குறிப்பிட்ட அந்த பேராசிரியர் நோா்வேக்கு வந்து 5 - 6 ஆண்டுகள் ஆகியிருப்பினும் அவரிடம் நோர்வேஜியப் புலமை இல்லை. 

போராசிரியர் தமிழக்குழந்தைகளுக்கு தமிழின் தொன்மை, பெருமைபற்றி கற்பித்துக்கொண்டிருந்தார். அவரின் மொழியாடல் ஆங்கலமும், தமிழும் கலந்திருந்தது. மாணவர்களுக்கு தமிழ் கற்பதன் அவசியம் பற்றியும் கூறினார்.

என் நண்பருக்கு பேராசிரியர் சற்றேனும் நோர்வேஜிய அறிவு இல்லாதிருப்பதும், தமிழை சற்றெனும் அறிந்த குழந்தைகளிடம் அவர் தமிழ் கற்றுக்கொள்ளுங்கள் என்று கூறுவது இரட்டை நாக்கால் பேசுவதுபோல் இருக்கிறது என்றார், என்னிடம். அவரிடமே இதுபற்றிக் கேட்கலாமே என்றேன் நான். சம்மதித்தாா்.

நண்பர், இடைவேளையின் போது சற்று காரமாகவே தனது கேள்வியைக் கேட்டார். பேராசிரியர் ஆம், நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. ஆனால் தனது தொழில், வயது, சூழ்நிலை போன்றவற்றினாலேயே தான் இம்மொழியை இன்னும்  கற்கவில்லை. அதற்கான சந்தர்ப்பம் சூழ்நிலைவந்தால் நான் இம்மொழியை கட்டாயம் கற்பேன். நோர்‌வே மொழியை கற்கக் கூடாது என்று நான் நினைக்கவில்லை என்பதை மிகவும் அழகாகவும், பண்பாகவும், நெகிழ்ச்சித்தன்மையுடனும் விளக்கியபோது நண்பர் தனது விமர்சனம் தவறு என்று ஓரளவு புரிந்துகொண்டார். பேராசிரியருக்கும் அக் கேள்வி பலத்த சிந்தனையை தூண்டிவிட்டிருக்கும் எனது எண்ணம்.

இப்படியான ஒரு அறிஞர் ஒரு சாதாரண மனிதனின் விமர்சனத்துக்கு பணிவாக விடையளித்து உரையாடியது ”நிறைகுடம் தளும்பாது” என்பதை உறுதிப்படுத்தியது.

விமர்சனத்தை தனிப்பட்ட தாக்குதலாக எடுக்காது, அதன் சாரம்சத்தை உணர்ச்சிகளை தவித்து, குழுவாதங்களை தவித்து ஆறிவுபூர்வமாக சிந்திப்போமேயானால் பண்பட்ட, வளமான ஒரு சமுகமாற்றத்திற்கு நாம் அடித்தளமிடுகிறோம்.

இதைத்தவிர்த்து விமர்சனத்தை விஷம் என்று கருதி, விமர்சித்தவனையும் கோடாலிக்காம்பு என்று விமர்சித்து, குழுவாதங்களை மீண்டும் மீண்டும் நிறுவமுற்படுவது பண்பட்ட, வளமான சமூகத்தை நோக்கி இட்டுச்செல்லுமா என்றும் கேள்வியை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

நஞ்சற்ற நெஞ்சமே வளமான சமூகத்தின்  சாரளம் என்பேன் நான்.

விமர்சனம் பற்றி உங்கள் கருத்து என்ன நண்பர்களே!
----------------

விமர்சனத்தை எவ்வாறு பெற்றுக்கொள்ளலாம் என்பதை கீழுள்ள வரைபு அழகாகக் காட்டுகிறது. இந்த செயற்பாடு (Process)  ஆறு பகுதிகளைக்கொண்டது.
  1. செவிமடுத்தல்
  2. உள்வாங்கிக்கொள்ளுதல்
  3. விமர்சனம் பற்றிய உங்கள் கருத்தினை பகிர்தல்
  4. உண்மையான கருத்துக்களை ஏற்றுக்கொள்ளல்
  5. விமர்சித்தவருக்கு நன்றி தெரிவித்தல்
  6. நீங்கள் ஏற்றுக்கொண்ட விமர்சனக்கருத்துக்களுக்கேற்ப உங்களை மாற்றிக்கொள்ளல்.
    மீண்டும் 1வது இலக்கத்திற்கு செல்லல். (இது ஒரு தொடர்ச்சியான செயற்பாடு)



கட்டிப்புடி வைத்தியம்


வாழ்வு எனக்கு பல அருமையான மனிதர்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. இனம், மொழி, மதம், நாடு  என்று நாம் வேறுபட்டிருந்தாலும் அனைவரும் வாழ்க்‌கையுடன் போராடும் மனிதகள் என்பதும், சக மனிதனை நேசிப்பவர்கள் என்பது மட்டுமே எமக்கிடையில் உள்ள ஒற்றுமை.

வலிகளை பகிரும்போது எம்மையறியாது ஒரு ஆறுதல் எமக்குள்,  ஊருக்குள் ஊடுருவும் பனிபோல் மெதுவாய் எம்மையறியாது எம்மை சுற்றிக்கொள்கிறது, பனிக்காலத்து குளிரில் போர்வையின் வெம்மைபோன்ற சுகத்தை தருபவை அவை. நானும் பலரிடம் எனது வலிகளைப் பகிர்ந்திருக்கிறேன். அதேபோல் பலரும் என்னிடத்தில் தங்கள் வலிகளை பகிர்ந்திருக்கிறார்கள்.

முதன் முதலில் என்னுடன் தன் இரகசியத்தை பகிர்நதுகொண்டவர் யார் என்று நினைத்துப்பார்க்கிறேன். அது 1970 இறுதிக்காலங்களில் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் விடுதி நண்பனாய் இருக்கவேண்டும். பெற்றோர் மீதான ஏக்கமும், வீடும், பசியும், அவனது கிராமமும் அவனை பாடாய்படுத்திய ஒரு மாலைப்பொழுதில் நாம் ஒழிந்துபிடித்துவிளையாடிய பொழுதில், நாளை நான் விடுதியில் இருந்து மாணதலைவர்களின் அடாவடியான கட்டுப்பாடுகளாலும், பசியின் காரணமாகவும்தப்பி ஓடப்போகிறேன் என்றாான் அவன். எனக்கு நா வரண்டுபோனது. அவன் பிடிபட்டால் அவனது கதி என்னவாகும் என்று எனக்கு நன்கு தெரிந்தே இருந்தது.

எங்கள் பேராசான் பிரின்ஸ் காசிநாதரின் அரசாட்சி நடந்துகொண்டிருந்த காலம் அது. ஒழுக்கம் என்பதைத்தவிர வேறு எதையும் பேசாத கடும் கண்டிப்புள்ள மனிதர் அவர். அவரின் கட்ளையின் கீழ் இயங்கும் மாணவதலைவர்களை கடந்து இவன் எப்படி தப்பி ஓடப்போகிறான் என்று சிந்தித்து பயந்துகொண்டதை எல்லாம் பொய்யாக்கி அடுத்தநாள் காலை மாயமாய் மறைந்திருந்தான் அவன். அன்று அவனது இரகசியத்தை காத்ததால், அவன் மீண்டும் விடுதிக்கு திரும்பியபின் அவனுக்கு நெருங்கிய நண்பனாய் மாறியிருந்தேன்.

இதன் பின், பால்யத்து தோழர்களின் சில்மிசங்கள்,  என்னுடன்  இணைந்து காட்டுப்பகுதியில் உட்கார்ந்திருந்து 20  ‌கோல்ட்லீப் சிகரட்டுக்களை ஊதித்தள்ளிய தோழன், இந்துப் பெண்ணை ஒருதலையாய் காதலித்த இஸ்லாமிய நண்பன் என்று தொடங்கி, சென்னையின் மொட்டைமாடிகளில், பம்பாய் நகரத்து வீடு ஒன்றில், நோர்வேயில் பலபாகங்களிலும், நேற்று மாலை (28.02.2014) எனது  ”அந்தரத்தில் உறைந்துபோன மழைத்துளி” பதிவினை வாசித்துவிட்டு உரையாடுகையில் தன்வாழ்வின் வலிபற்றி பேசிய முன்பின் அறியாத ஒரு பெண்வரை என் மனதுக்குள் பலரின் இரகசியங்கள் உண்டு. ஏன் என்னிடத்தில் பலரும் தங்கள் மனதின் வலிகளைப் பகிர்கிறார்கள் என்று நான் நினைத்துப்பார்ப்பதுண்டு. சில கேள்விகளுக்கு பதில் கிடைக்காவிட்டால் மனம் மகிழும். அப்படியான கேள்விதான் அதுவும்.

என்னிடம் உள்ள கடும் முன்கோபம் எனது தந்தையுடடையது. ஆனால் பலர் கூறும் ”உன்னுடன் பேசுவது ஆறுதலானது” என்னும் வார்த்தையின் முழுப் பெருமையும் எனது தாயாருக்கே உரியது. அவரிடம் எத்தனையோ நல்ல பழக்கவழக்கங்கள் இருந்தாலும் நான் என்னையறியாமல் அவரிடம் இருந்து இதைமட்டுமாவது கற்றுக்கொண்டிருக்கிறேன் என்பது, பலமனிதர்களும் என்னுடன் உரையாடலாம் என்று கூறும்போது புரிகிறது.

அம்மா ஒரு வைத்தியர். அவரிடம் வைத்தியம்பார்த்துக்கொள்ளவேண்டும் என்று பலர் பல மணிநேரங்கள் பயணம்செய்து வருவார்கள். எங்கள் வீட்டில் தங்கியிருந்து மறுநாள் பயணப்பட்டவர்களும் உண்டு. சிலர் வாரக்கணக்கில் வீட்டில் தங்கியிருந்து மருத்துவம் பெற்ற கதைகளும் உண்டு. அம்மா இவர்களிடம் பணம் வாங்கியதில்லை.

இப்போது அம்மா வைத்தியம் பார்ப்பதில்லை. சில வருடங்களுக்கு முன் ஏறாவூருக்கு அம்மாவை அழைத்துப்போயிருந்தேன். அம்மாவை அங்கு எல்லோருக்கும் ”அம்மா” என்றால்தான் தெரியும். அம்மா ஏறாவூரில் தங்கியிருந்த சில மணிநேரங்களுக்குள் ஊருக்குள் அம்மா வந்திருக்கிறார் என்ற கதை பரவ அம்மாவை சந்திக்க பலரும் வந்தபோதுதான் வாழ்க்கையில் பணத்தால் சம்பாதிக்கமுடியாத ஒன்றை அம்மா தனது அடக்கமான மனதாலும், அன்பான வார்த்தைகளினாலும், தன்னடக்கத்தினாலும் சம்பாதித்திருக்கிறார் என்பதை அறிந்துகொண்டேன்.

”செய்யதுஉம்மா” என்னும் பெயரில் அம்மாவை மிக நன்றாக அறிமுகமான ஒரு முதிய முஸ்லீம் பெண் இருக்கிறார். அம்மா என்றால் அவருக்கு அத்தனை பிடிப்பு. அம்மாவும் நான் ஏறாவூருக்கு செல்லும்போதெல்லாம் அவரை சந்தித்து அன்பைத்தெரிவி என்பார். அவரைச் சந்திக்கும்போதெல்லாம் இவர் தான் அம்மாவின் மகன், அம்மா என்னை பார்க்க மகனை அனுப்பியிருக்கிறார் என்று அனைவருக்கும் சொல்லியபடியே பெருமைப்படுவார். அம்மாவைப் பற்றி எப்போதும் பேசிக்கொண்டே இருப்பார் என்பார்கள் அவரது அயலவர்கள்.

இவர் மட்டுமல்ல ஏறாவூரைச் சுற்றி பலர் இருக்கிறார்கள். அவர்களுக்கு அம்மாவில் அத்தனை பிடிப்பு, அத்தனை மரியாதை. இத்தனைக்கும் அம்மா அவர்களுக்கு உறவினரோ, அயலவரோ, ஊரவரோ இல்‌லை. ஆனால் அம்மாவிடம் சில முக்கிய தன்மைகள் உண்டு. அவையே அம்மாவை அனைவருக்கும் பிடித்துப்போக காரணமாய் இருக்கிறது என்று நினைக்கிறேன்.  தன்னடக்கம், நான் டாக்டர் என்ற செருக்கு சற்றும் இல்லாதவர். அனைவரும் சமம் என்னும் கருத்துடையவர். எமது வீட்டினுள் எவரும் வரலாம் செல்லலாம். அம்மாவும் எங்கும் செல்வார், வருவார். நோயாளிகளிடம் பேசுவதற்கு அதிக நேரத்தினை எடுத்துக்கொள்வார். எவர், எப்பொழுதிலும் நோய் என்று வந்தால் முகம்சுளிப்பதில்லை. அது சாமம் கடந்த பொழுதுகளாக இருப்பினும்கூட. இனம், மொழி, சாதி இதையெல்லாம் அவர் சிந்திப்பதே இல்லை. சக மனிதன்மீதான அவரது அன்பும், மரியாதையும், அவரது எளிமையும், தன்னடக்கமுமே அவரை இப்போதும் பலருக்கு பிடித்துப்போக காரணமாயிருக்கிறது.

நானோ குறிப்பிட்டதொரு எல்லையை மனிதர்கள் கடந்துவிடும்போது கொதிக்கும் தன்மையுடையவன். எதையும் நேருக்குநேரே பேசிவிடுபவன். மனதுக்குள் எதையும் அடக்கத்தெரியாதவன். ஆனால் அம்மா இதற்கு எதிர்மாறானவர்: அவரின் பொறுமைக்கு எல்லை இல்லை, மற்றையவரின் மனம்நோகப் பேசமாட்டார். எதையும் மனதுக்குள் புதைத்துவிடுவார்.  இதனால் எமக்கிடையெ அவ்வப்பொது சற்று முறுகல்நிலை வந்துபோவதுண்டு.  நீ ஒரு சோடாப்போத்தில் என்பார் என்னை அந்நேரங்களில்.

அம்மாவுக்கு உரையாடற்கலை இயற்கையாகவே வாய்த்திருக்கிறது.

உரையாடலுக்கும், விவாதத்துக்கும் இடையே உள்ள ‌வேறுபாட்டினை நாம்  சிந்திப்பதில்லை. இவை இரண்டும் எதிர் எதிர் திசையில் மனிதர்களை இட்டுச்செல்பவை. உரையாடல் நண்பர்களையும், விவாதங்கள் எதிரிகளையும் சம்மாதித்துத்தருபவை. இதனாலோ என்னவோ அம்மா உரையாடலையே விரும்புவார்.

உரையாடலின் பின்பு இரு மனிதர்கள் ஒருவரை ஒருவர் புரிந்திருப்பார்கள். விவாதத்தின் பின்பு புரிதல் என்பது இருக்காது. ஒருவரின் கருத்தை ஒருவர் வென்றிருப்பார். தோல்வியுற்றவர் மனம் தோல்வியின் மனநிலையிலும், வெற்றியுற்றவர் மமதையிலும் இருப்பார்.  இது இரு மனிதர்களுக்கிடையில் புரிதலை ஏற்படுத்தப்போவதில்லை.

நோர்வேஜிய மொழியில் ஒட்டகமொழி என்று ஒரு புத்தகம் பல ஆண்டுகளுக்கு முன் வெளிவந்திருந்தது. அது உரையாடலின் அவசியம் பற்றியும், சிறந்த உரையாடலின் அம்சங்கள் என்ன என்பது பற்றியும் பேசுகிறது. ஒட்டகத்தைப் போன்று விசாலமான பார்வையும், ஒட்டகத்தின் இருதயத்தைப்பொன்ற பெரிய இதயத்தினுடனும் உங்கள் உரையாடலை மேற்கோள்ளுங்கள் என்பதே அப் புத்தகத்தின் சாரம்.


எனக்கு நோர்வேக்கு வந்த காலங்களில் ஒரு எரித்திரிய நாட்டு நண்பன் இருந்தான். அற்புதமான மனிதன் அவன். முபரஹாது என்பது அவன் பெயர். அவனின் முகத்தில் அதீத அமைதி குடியிருக்கும். அன்பாகப்பேசுவான். எவ்வளவு நேரம் கதைத்துக்கொண்டிருந்தாலும் அவனால் செவிமடுத்துக்கொண்டிருக்கமுடிந்தது. 


அதேபோல ஒரு நோர்வேஜிய நண்பர் இருக்கிறார். என்னை விட வயதில் அதிகமானவர்.  அவரும் முன்னையவரைப்போலவே அழகிய மனதினைக் கொண்டவர்.


நான் நோர்வே வந்து வாழ்ந்திருந்த வடமேற்குக் கரையேரத்துக் கிராமத்தில் பல வைத்தியர்கள் இருந்தனர். அதில் ஒருவர் எந்த நோயுடன் சென்றாலும் நீ உடற்பயிட்சி செய்பவனா என்பதே அவரது கேள்வியாய் இருக்கும். இது முழுமாத கர்ப்பிணியாக இருப்பினும்கூட. அவரது மருந்துகளில் முக்கியமானது உடற்பயிட்சி. அவரை ஊரே உடற்பயிட்சி வைத்தியர் என்றே அழைத்தது. அவா் ஒரு பிரபல்யமான மரதன்ஓட்ட வீரன் என்பதை நான் அறிந்துகொண்டபோது அவர்மீது இருந்த கோபம் குறைந்துபோனது. அவரால் நோயாளியுடன் ஒரு சிறுவார்த்தையையேனும் அன்பாகவோ பரிவாகவோ பேசமுடியாது. மனிதர்களை ஏதோ ஒரு இயந்திரம் போலவே நினைத்துக்கொண்டார். நடாத்தினார். அதனால் பலரும் அவரிடம் செல்வதை விரும்பவில்லை.

இன்னொரு டாக்டர் அதிகமாய் வாயைத்திறக்கவேமாட்டார். மிக மிக மெதுவாகப் பேசுவார். அவரிடம் சென்றால் நோயும் மெது மெதுவாகவே குணமாகியது. அதிககாலம் சுகயீன விடுமுறை வழங்கும் குணமும் இருந்தது, அவரிடம். எனவே தமிழர்கள் பலர் அவரிடம் நோயாளிகளாகச் சென்றார்கள்.

நான் மன அழுத்தத்தினால் அவதிப்பட்டபோது உடற்பயிட்சி வைத்திய‌ரே எனக்கு வைத்திராக இருந்தார். எப்போதும் மலை ஏறு, குளத்தைச் சுற்றி நட, கிராமத்தைச் சுற்றி ஓடு என்றே கூறியதைகேட்டு அலுத்தனால் அந்தக்கிராமத்தில் இருந்த முன்றாவது டாக்டரை அணுகி பிரச்சனையைக் கூறி, உதவிகோரினேன்.

அந்த மனிதர் நோயாளிகளுடன்  உரையாடுவதையே முக்கியமாகக் கருதினார். அதிலும் வெளிநாட்வர்கள் என்றால் அதிகநேரம் செலவளித்தார். காலப்போக்கில் அவரே எனது குடும்ப வைத்தியரானார். எனது நோயில் இருந்து நான் மீண்டுகொள்ள அவர்  வழங்கிய உதவியும், உரையாடல்களும் முக்கிய காரணிகளாய் இருந்தன.

அம் மனிதரின் இதயம் பெரியது என்பதற்கு சாட்சியாக ஒரு நிகழ்வு நடந்தது. அவரின் மனைவி ஒரு மருத்துவத்தாதி. அவர் தொழில்புரிந்த இடத்தில் இருந்து அவர் சில மருந்துகளை திருடிப் பாவித்தார் என்று அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டது. அம்மருந்துகள் போதைமருந்துகளுக்கு ஒப்பானவை, ஆனால் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுபவை. முதலில் ஊருக்குள் கதை பரவியது. பின்பு பத்திரிகை, தொலைக்காட்சி  என அனைத்திலும் இது முக்கிய செய்தியாகியது. மனைவி நீதிமன்றத்தினால் தண்டிக்கப்பட்டார். அந்நாட்களில் அந்த வைத்தியர் எமது கிராமத்தின் வைத்திய தலைமை வைத்திய அதிகாரியாக இருந்தார். அவரின் மானம், கௌரவம் என்பன பலத்த ஏளனத்திற்கும், கேலிக்கும் உட்பட்டது. அந்நாட்களிலும் மனிதர் மனைவியின் கையைப்பிடித்தபடியே நாயுடன் காற்றாட நடந்து செல்வதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் பிரியப்போகிறார்கள் என்றும் கதையுலாவியது. நான் 2008ம் ஆண்டு அக்கிராமத்தில் இருந்துவெளியேறும்வரையில் அவர்கள் இருவரும் கைகோர்த்தபடியே காற்றாட நடந்துதிரிந்தார்கள். அப்போதுதான் அந்த மனிதரின் அசாத்தியமான மனம் புரிந்தது. அவரின் மனிதாபிமானம் புரிந்தது. என்னால் அவ்வாறு நடந்திருக்கவே முடியாது. அத்த‌னை அவமானத்தையும் தாங்கிக்கொண்டாா் தனது துணைவிக்காக.

இன்று முகப்புத்தகத்தில் அவருக்கு பிறந்தநாள் என்று அறிவித்தல் வந்தது. உடனே வாழ்த்துக்கள் என்று எழுதி வாழ்த்தினேன். நாளை, நன்றி சஞ்சயன் என்று பதில் வரும். அத்துடன் என்னைப்பற்றி கேட்பார். குழந்தைகளைப் பற்றிக்கேட்பார். வாழ்க்கையைப்பற்றிக்கேட்பார். முக்கியமாய் 5 வருடங்களின் முன் எனக்கிருந்த நோய்கள் பற்றியும் கேட்பார். நான் அவருக்கு பொய் எழுதுவதில்லை. என்னால் பொய்கூற முடியாத மனிதர்களில் அவரும் ஒருவர்.

சில மனிதர்கள் எம் வாழ்க்கையில் கிடைப்பதற்கு நாம் அதிஸ்டசாலிகளாக இருக்கவேண்டும்.

நான் அதிஸ்டசாலி.



மேதாவிகளின் நல்லிணக்கப் பேச்சுக்கள்


நோர்வேயில் எதிர்வரும் திங்கட்கிழமை மாலை "இலங்கையின் வலிமிகுந்த சமாதானப் பாதை” என்னும் தலைப்பில் ஒரு உரையடலை அரச ஆதரவு நிறுவனமான Utviklingsfondet நடாத்துகிறது.

இலங்கை அரசும் இன்றைய நிலையும், நல்லிணக்கமும் என்னும் தொனியைக்கொண்ட தலைப்பிலும் அங்கு உரையாடப்படவிருக்கிறது.

இதன்போது அங்கு தமிழர்கள் சார்பில், தமிழர்களின் அரசியலில் ஆழமான, பரந்த அரசியல் அறிவுடைய பலரும் நோர்வேயில் இருந்தபோதும் Utviklingsfondet நிறுவனம் தமிழர்களின் ஒரு குழுவினையும், அக் குழுவினரிடம் இருந்து அரசியலில் பரீட்சயம் இல்லாத ஒரு நபரை உராயாடலின் தமிழர்தரப்பு பேச்சாளராக அழைத்திருக்கிறது.

அத்துடன் அங்கு, அக் குழுவின்சார்பில் பங்குபெறுபவர் அரசியல் களத்தில் இன்றுவரை ஈடுபாடாத ஒருவர்.

அவரது கல்வித் தகமைகள் பற்றியோ, பொதுச் சேவைகள் பற்றியோ எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை. அவர் சமூத்திற்கான  பல சேவைகளை செய்துவருபவர். அவரில் பெரு மதிப்பு கொண்டவர்களில் நானும் ஒருவன். எனது கருத்தில் உள்ள உண்மைத்தன்மையை அவர் ஏற்றுக்கொள்ளக்கூடிய பெருந்தன்மை அவரிடம்  உண்டு என்றே நம்புகிறேன்

ஆனால் அரசியல் என்று வரும்போது இவரைவிட மிக மிக ஆழந்த அரசியல் அறிவும், 30 வருடத்திலும் மோலாக  அரசியல், போராட்ட அனுபவமும் உள்ளவர்களும், அரசியல் அறிவுள்ள பேராசியர்களும் பலர் இங்கு இருக்கிறார்கள் என்பதை நோர்வே அரசு நன்கு அறியும். அவர்களது நிறுவனங்களும் அதை நன்கு அறியும்.

இருப்பினும், குழுவாதங்கள் நோர்வேயில் உச்சத்தில் இருப்பதையும் அது இவ்வாறான நிறுவனங்களுக்குள்ளும் ஊடுருவுகிறது என்னும் சமிக்ஞையையே மேற்கூறப்பட்ட விடயம் காட்டுகிறது என்றே கருதவேண்டியிருக்கிறது.

தவிர நல்லிணக்கம் பற்றி உரையாடும்போது அதை தமிழர்களும் நோர்வேஜியர்களும் மட்டுமே உரையாடுவதால் என்ன நிகழப்போகிறது?
  • இலங்கை அரச‌ை எங்கள் கருத்துக்கள் சென்றடையுமா? (அது அவர்கள் செவிமடுப்பார்களா இல்லையா என்பது வேறுவிடயம்)
  • அல்லது நோர்வேயில் உள்ள ம‌ற்றைய இலங்கைச் சமூகங்களை அது சென்றடையுமா? 
  • அந்தக் கூட்டத்தில் பங்கு பற்றுவதற்கு ஆகக் குறைந்தது நோர்வே பாராளுமன்ற அமைச்சர் ஒருவரின் செயலாளார் கலந்துகொண்டிருந்தாலாவது (உரையாடலில்)  எமது கருத்துக்கள் சற்று மேலிடத்துக்கு செல்லலாம் என்று நாம் நினைத்துக்கொள்ளலாம். அதுவும் அங்கு இல்லை.

இது பற்றி நான் Utviklingsfondet இல் இந்த உரையாடலுக்கு பொறுப்பானவரிடம் ஏன் ஏனைய சமூகத்தவர்களை அழைக்கவில்லை என்று கேட்டபோது,  வேறு சமூகத்தவர்களை  அழைப்பதானது சென்சிடிவானது என்று பதிலளித்தார். 

இப்படியான பதில் Utviklingsfondet இன் பெயரையும் இலங்கை பற்றிய அவர்களது பார்வை பற்றியும் பலத்த கேள்வியை எழுப்புகிறது.

அவரின் கருத்தினை  சற்று ஆராய்வோமேயானால் தமிழர்களும் சிங்களவர்களும் ஒரே மேசையில் உட்கார்ந்து பேசவே மாட்டாாகள் போன்றிருக்கிறது. அவர்களை உரையாடலுக்கு அழைப்பதே பிரச்சனையானது என்று  அவர்கள் நினைப்பதாகவே எண்ணத்தோன்றுகிறது.

தமிழர்களும் நோர்வேஜியர்களும் ஒன்றாகக் கூடியிருந்து ”ஆம், இலங்கையில் தமிழர்களுக்கு பிரச்சனைகள் இருக்கின்றன” என்ற கருத்தை மீண்டும் மீண்டும் கூறி, தமிழர்களுக்கு ஆதரவான கருத்துக்களை வழங்கினால் இலங்கையில் நல்லெண்ணம் வளரும் என்று நினைக்கிறார்களோ என்று பயமாகவிருக்கிறது.

Utviklingsfondet க்கு நோர்வேயில் உள்ள தமிழர் தரப்பு பற்றிய அறிவே மட்டப்படுத்தப்பட்டிருக்கும்போது, அதைவிட அதிக ஆழமுள்ள செயற்பாடுகளை எதிர்பார்க்கமுடிமா என்னும் கேள்வியும் இங்கு எழுகிறது.

சென்சிட்டிவான விடயங்களை உரியவர்களுடன் உரையாடாது ஒரு சாராருடன் மட்டும் உரையாடுவதனால் என்ன பயன் என்பது எனக்குப் புரியவில்லை.  அப்படியான சென்சிடிவான உரையாடலை உரிய நபர்களுடன் நடாத்தியிருந்தால் சமூகத்திற்கு அதனால் சிறு பயனாவது கிடைத்திருக்கலாம். ஆனால் இந்த உரையாடலால் என்ன பயன் கிடைக்கும் என்று எனக்குப் புரியவில்லை.

இந்த உரையாடலுக்காக செலவளிக்கப்பட்ட நேரத்தினை, ஒரு சிங்களவருக்கோ அல்லது முஸ்லீம் இனத்தவருக்கு எமது பிரச்சனைகளை விளங்கப்படுத்தவோ, அல்லது உரையாடவோ பயன்படுத்தினால் கிடைக்கும் பயன் மிக அதிகம் என்பேன் நான்.

அல்லது புலிகளுடன் இணைந்து  இலங்கையில் நடந்த மனிதவுரிமை மீறல்கள், போர்க்குற்றங்களை உலகிற்கு வெளிப்படுத்தும் மிதவாத சிங்களவர்களையாவது இந்தக் கூட்டத்திற்கு அழைத்து அவர்கள் மூலமாக சிங்களவர்கள் தமிழர்களின் பிரச்சனைகளை உணர்நதுகொள்கிறார்கள் என்பதை பல தமிழர்கள் முன்னிலையில் பேசவைத்திருந்தால் அது நல்லிணக்கத்திற்கு  ஒரு சிறு பங்களிப்பையாவது வழங்கியிருக்கும்.

இப்படியான  உரையாடலை Utviklingsfondet  என்னும் பொறுப்புமிக்க நிறுவனம் நடாத்துவது ஏன் என்று புரியாவிட்டாலும்,  நோர்வேவாழ் ஒரு தமிழ்க் குழுவினர் தங்களது காய்நகர்த்தல்களை சிறப்பாக செய்திருக்கின்றனர் என்றே கருதுகிறேன். அதனாலேயே தமிழர் தரப்பில் ‌உரையாடலில் கலந்துகொள்ள வேறு ஒருவரும் உள்வாங்கப்படவில்லை என்பதையும் புரியக்கூடியதாகவிருக்கிறது. வாழைப்பழத்தில் ஊசிஏற்றப்பட்டதை Utviklingsfondet அறிந்திருக்கவாய்ப்பில்லை எனவும் கொள்ளலாம். இனிவரும் காலங்களிளாவது கவனத்தில் கொள்வார்கள் என்று நம்புவோமாக.

இப்படியான கூட்டங்களை நடாத்துபவர்கள் சமுதாயம் ‌மீதான ஆழமான கருத்துக்களையும், தமது செயற்பாடுகளின் தன்மையையும், சாதக பாதகமான (impact) தாக்கங்களை முழுமையாக உணராது இப்படியான கூட்டங்களை நடாத்துவது வரவேற்கத்தக்கதல்ல.

இப்படியான கூட்டங்களை குழுவாதங்களுக்காக பயன்படுத்திக்கொள்வதும் தேசியத்திற்கு உகந்ததல்ல.


பி.கு: இவ்விடயம்பற்றி Utviklingsfondet இன் முகப்புத்தகத்தில் எழுதிய பின் அவர்கள் என்னுடன் தொடர்புகொண்டு உரையாடினார்கள். எனது தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்களில் அவர்கள் உடன்படுவதாகவும், இருப்பினும் சிங்களவர்களுடன் சமமாக இருந்து உரையாட தமிழர்தரப்பு விரும்பவில்லை என்று தங்களிடம் கூறியதாகவும் அதனாலேயே சிங்களவர்கள் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்றும், இருப்பினும் தற்போதைய பேச்சாளர் பட்டியலில் நடுவிலை இல்லை என்பதை உணர்வதனால் சிங்களவர்  அல்லது முஸ்லீம்களை பேச்சாளர்களை பட்டியலில் இணைக்கமுயல்வதாகவும் கூறியதை இங்கு பதிவது அவசியம் என்று கருதுகிறேன்.

அத்துடன் நோர்வேஜிய மொழியில் தமிழர்தரப்பு பேச்சாளர் பேசுவது முக்கியம் என்பதானாலேயே மேற்குறிப்பிட்ட தமிழ்ப்பேச்சாளர் அழைக்கப்பட்டார் என்ற போது நான் சில பெயர்களை குறிப்பிட்டபோது,  ஆம் அவர்கள் அழைக்கப்பட்டிருக்கலாம் என்ற பதிலும் கிடைத்தது.

தமிழர் தரப்பு சிங்களவர்களுடன் சமமமாக இருந்து பேசமாட்டோம் என்றால், அந்த குறுந்தேசியவாதத்தை Utviklingsfont  உம் ஆதரிக்கிறதா? அப்படியானவர்களுடன் நல்லிணக்கம் பற்றி என்ன பேச இருக்கிறது?


-----------------------------

சரி ... இவ்வளவும் சொன்னவனை சும்மா விடலாமா? என்னை மீண்டும் துரோகி, உளவாளி பட்டியலில் இணைத்து குறுஞ்செய்தி அனுப்புங்க.