வாய்ச்சொல் கோழைகளும், வாய்திறவா வீரர்களும்


ஒரு வாரத்திற்று முன்னான ஒரு மாலை, எனது வாகனத்தில், பயணித்துக்கொண்டிருந்தேன். வாகனத்தினுள் இருக்கும் வானொலி மெதுவாய் இயங்கிக்கொண்டிருந்தது. இலையுதிர்காலத்து இருட்டு ஊருக்குள் படிந்து‌போயிருக்க, மெது மழை தூறிக்கொண்டிருந்தது வெளியே. வானொலில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நோர்வேயில் உள்ள அனைத்து வேலைத்தளங்களிலும், சங்கங்கள், நண்பர்கள் நடாத்தும் ”நத்தார் வி‌ழாவைப்” பற்றி பேசிக் கொண்டிருந்தனர். (நோர்வேயில் இந்த விழா முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும்)

பலரும் விழாவைப்பற்றி புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தனர். ஒரு வயதான பெண் தனக்கு அப்படியான விழாக்களில் தற்போது ஈடுபாடில்லை என்று கூறினார். ஏன் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தனக்கு வயதாகி விட்டது என்றும், அந்த விழாக்களுக்கு இளம் பெண்கள் அணிந்து வரும் ”குட்டைப்பாவாடை” இவ் வருடம் மிகவும் குட்டையாகிப் போயிருப்பது தனக்கு கவலையைத் தருகிறது  என்றார். பொறாமையாய் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.


அடுத்தடுத்து பலரையும் வானொலியில் பேட்டி கண்டனர். அனைவரும் அவ்விழாவினை மிகவும் விரும்புவதாகக் கூறினர். எனக்கும், இவ் விழாக்களில் பெருத்த விருப்பமுண்டு. இவ் விழாக்களின் போது ருசியான உணவு மட்டுமல்ல, அதனிலும் ருசியான பானங்கள் தொடக்கம் அழகான மனிதர்கள் வரை  அங்கிருப்பார்கள். ”வரம்புயர நீருயரும்” என்பது போல போதை ஏற ஏற விழா சிறப்புறும். அந்த குட்டைப்பாவைடை விடயமும் அப்படியாய் இருக்கக்கூடும்.

வானொலி நிகழ்ச்சி முடியுமுன் ஒரு வயதானவரை பேட்டி கண்டார்கள். அவருக்கு வயது 80. தனியே வாழ்கிறார். அவர் இப்படியான விழா ஒன்று நடைபெறுகிறது என்பதையே அறியாதிருந்தார் என்றார். வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளரால் அதை நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டார். வயதானவரோ ஒரே பதிலையே மீண்டும் மீண்டும் கூறினார்.

தொடந்து அவரை பேட்டிகண்ட போது அவர் கூறிய சில வார்த்தைகள் என்னை சிந்திக்கத்தூண்டின.
.
நான் தனிமையில் வாழும் மனிதன் என்றார். நாட்பது வருடங்கள் மாலுமியாக இருந்தார் என்றும், தனக்கு ஒரு  அழகான அன்பான மனைவி இருந்தார் என்றும் கூறினார். அத்துடன் அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அறியக்கிடைத்தது. ஆனால் மகள் தன்னிடம் வருவதில்லை என்றும், மனைவி இறந்துவிட்டார் என்றும் மிகவும் வருத்தத்துடன் கூறினார். கடந்த 20 ஆண்டுகளாக தான் தனியே வாழ்ந்து வருவதாயும், தனக்கு ஒரு நண்பர் ஏனும் இல்லை என்றும் கூறிய போது அவர் மீது பரிதாபமாய் இருந்தது எனக்கு.

தனிமை, கரையான்பூச்சிகளைப்‌ போல் பலரையும் எப்போதும் அரித்துக்கொண்டேயிருக்கிறது. தனிமை மட்டும் வாழ்ந்துகொண்டிருக்க  மனிதர்கள் மட்டும் அழிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒஸ்லோவில் ஒரு பாக்கிஸ்தானிய மனிதர் இருக்கிறார். அவர் வருடம்தோறும் ”தனிமையில்” வாழ்பவர்களுக்காக ஒரு மிகப் பெரிய நத்தார் விழாவை நடாத்துகிறார். பல நோர்வேஜியர்களும், நோர்வேஜிய பிரபலங்களும் அவரின் நத்தார் விழாவில் கலந்து கொண்டு, அங்கு  வந்திருக்கும் அனைவருடனுடம் குதூகலமாக பழகிப்போகின்றனர். ஒரு வருடம் நோர்வேயின் அரசகுடும்பத்தில் இருந்தும் சிலர் கலந்து கொண்டார்கள் என்றே நினைவிலிருக்கிறது.

நத்தார்கொண்டாட்டக் காலங்களும், அதற்கு முன்னைய காலங்களும் அதிக தனிமையை உணர்த்தக் கூடியவை என்பதை நானும் உணரந்திருக்கிறேன். எனது நண்பரான நோர்வேஜிய பாதிரியார் ஒருவர் வருடம் முழுவதும் ஒரு ”தொலைபேசி” திட்டமொன்றினை நடாத்திவருகிறார். அத் தொலைபேசிக்கு யாரும் தொடர்பு கொள்ளலாம், தமது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளலாம். குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை பலர் தினமும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். அவரிடத்தில் தினமும் 15 - 20 பேர் தொழில்புரிகின்றனர். 24 மணிநேரமும் அத் தொலைபேசி இயங்குகின்றது. அத் திட்டத்தில் தொழில் புரியும் அனைவரும் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி இலவசமாகவே தொழில் புரிகிறார்கள். மற்றவரின் ரகசியங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. எவருடனும் பகிரப்படுவதில்லை. அவர்கள் இருவருடனேயே அவ்வுரையாடல் முடிந்துபோகிறது.

துன்பங்கள் பகிரப்படும் போது அவற்றின் உக்கிரம் பலமாய் குறைந்து போகிறது என்னும் வார்த்தைகள் உண்மையானவையே என்பதை பாதிரியாராகிய நண்பரின்  செயல் உணர்த்திநிற்கிறது.

தாய் தந்தையரின் சண்டைகள், குடி, வன்முறை, பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, குடும்பச்சிக்கல்கள், நோய்மை, தனிமை இப்படி பல பிரச்சனைகளுடன் தினமும் பலர் தொலைபேசுகிறர்கள். காது கொடுத்து கேட்பதும், ஆறுதலாகப் பேசுவதும், அரச அலுவலகங்களின் தொடர்புகளை அவர்களுக்கு அறிவிப்பதுமே இவர்களது தொழிலாயாயிருக்கிறது. ஒரே மனிதருடன் நீங்கள் இரு நாட்கள் தொடர்ந்து பேசமுடியாது. தொலைபேசி இலக்கங்கள் இரகசியமாககப் பாதுகாக்கப்படுகின்றன. இப்படி பல வித பாதுகாப்புக்களுடன் பலருக்கும் அவர்களது வேதனையை கடந்து போக உதவுகிறார்கள்.

நான், ஆயுதங்களை விட வார்த்தைகளே கூர்மையானவை என்பதை  அண்மையில் மீண்டுமொருமுறை உணர்ந்து,  ”அவ் வேதனையை” கடந்த சில நாட்களாக  கடந்துகொண்டிருக்கிறேன். நண்பர்கள் சிலர் என்னை பேச அனுமதித்து, அமைதியாகவே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், இவர்கள் வீரர்கள. நானும் இவர்களுடன் பேசியதால் அமைதியடைந்துள்ளதாகவே உணர்கிறேன்.


மேற்கூறியவர்கள் போன்று மற்றவர்களை அரவணைக்கும் மனமுள்ள மனிதர்கள் மத்தியில் தான், சக மனிதனை, வார்த்தைகளாலும், கோழைத்தனமான செயல்களாலும், துன்புருத்தும் செயல்களாலும் ”உயிருடன் கொலைசெய்யும்” உறவினர்கள், நண்பர்கள் தொடக்கம் எதிரிகள் வரை நடமாடுகிறார்கள்.

ஜாக்கிரதையாக புதிய வருடத்தை கடந்து கொள்ளுங்கள் நண்பர்களே.. தோழர்களே.. தோழியர்களே!

ஒரு மனிதன், அவன் கட்டில், அவன் மனச்சாட்சி

சில நாட்களாகவே உடலும் உள்ளமும் கனத்துப்‌ போய் இருக்கின்றன. இது ஒன்றும் புதிதில்லை. பகலை விழுங்கிய பனிக்கால நாட்களில் நான் ஆண்டாண்டுகளாய் அனுபவிக்கும் ஒரு உணர்வு இது.

நேற்று, வெளியில் இருளும், குளிரும் தாராளமாய் விளைந்திருந்தன.  எனது அறையினுள் சாய்ந்திருந்தவாறே வாசித்துக்கொண்டிருந்தேன். யாரோ மெதுவாய் கனைப்பது போலிருந்தது. நிமிர்ந்து பார்த்தேன். எவருமில்லை. மீண்டும் வாசிப்பில் ஆழ்ந்து போகும் போது அதே கனைப்புச் சத்தம் கேட்டது. அறைக்குள் பாரும் இல்லை, அப்போ கனைப்பது யார்? என்று சிந்தித்த போது மிகவும் பரீட்சயமான குரலொன்று பேசிற்று. அது எனது கட்டிலின் ஆன்மாவின் குரல்.

”உன்னுடன் ஒரு பிரச்சனை பற்றிப் பேச வேண்டும்” என்றது அது.

நமக்கிடையில் பெரிதாய் எந்தவிதமான பூசல்களும் வருவதில்லை. இருவரும் பூசல்களை விரும்புவதுமில்லை. ஒருவரை ஒருவர் அன்பாய் கவனித்துக்கொள்கிறோம். இருவரும் தனித்தவர்கள். நான் தனியே உறங்குபவன். எனக்குத் துணை என் கட்டில். கட்டிலுக்கு  துணை நான்.

எனது கட்டிலுக்கு ஆன்மா இருக்கிறது. கட்டில் என்னும் சடப்பொருள் அதன் உடலாக இருக்கிறது. எனவே கட்டில் என்னை தனது ஆன்மாவுடனேயே பேசு என்றிருக்கிறது. அதுவும் ஒரு விதத்தில் ஆறுதலாகவே இருக்கிறது. கட்டிலின் ஆன்மா நான் பிறந்த நாள் தொடக்கம் என்னை பிரியாமல் வந்து கொண்டே இருப்பதால் அது நான் எங்கு தூங்கிப் போனாலும் தனக்கென்றொரு உடலை தற்காலிகமாக பெற்றுக்கொண்டு என்னுடன் சேர்ந்துறங்குகிறது. எனது நெருங்கிய நண்பனாயும் இருக்கிறது.

எங்கள் நட்புக்குள் மூன்றாமவர் ஒருவரும் இருக்கிறார். அது என் மனச்சாட்சி. அதற்கும் கட்டிலின் ஆன்மாவுக்கும் பெரிதாய் சொல்லிக்கொள்ளுமளவுக்கு நட்பில்லை. நான் மட்டும் மனச்சாட்சியுடன் நட்பாயிருக்க முயன்றுகொண்டிருக்கிறேன். ஆனால் மனச்சாட்சியோ எம்மிருவருடனும் நட்பாய் இருக்கவே விரும்புகிறது. கட்டிலின் ஆன்மாவோ,  உன் மகிழ்ச்சி எதுவோ அதையோ நானும் விரும்புகிறேன் என்கிறது, என்னிடம்.  கட்டிலின் ஆன்மாவுக்கு தெரிந்த, மனச்சாட்சிக்கு தவறாகப்படும் விடயங்களும் இருக்கின்றன. எனவே மனச்சாட்சியுடன் மோதாதே என்ருரைத்திருக்கீறேன் கட்டிலின் ஆன்மாவிடம்.

சற்று சிந்தித்த பின் ”பின்பொரு நாள் பேசுவோம்” என்று கூறினேன். கட்டிலின் ஆன்மா அமைதியாயிற்று.

அடுத்த நாள்:

அன்றைய பின்னிரவு மிகவும் அமைதியாய் இருந்தது. குளிர் கட்டுக்கடங்கியதாய் இருக்க, வானம் மட்டும் புகார்களை பரப்பிக்கொண்டிருந்தது ஊருக்குள் பரப்பிக்கொண்டிருந்தது. எனக்கு கட்டிலின் ஆன்மாவுடன் பேசும் ஆர்வம் இருந்தாலும் ஏனோ ஒரு பயம் மனதினுள் படந்தபடியே இருந்தது.

ஒரு கிளாஸ் கொன்யாக் எடுத்துக் கொண்டேன்.
5 - 10 நிமிடங்களின் பின் அமரிக்காவின் வான்படையையே எதிர்க்கும் தைரியம் வந்தமர்ந்து கொண்டது, என்னிடம். மெதுவாய் கட்டிலில் சாய்ந்து கொண்டேன்.

க்கும் .. என்று கனைத்துக்கொண்டேன்
” ஏதோ பேச வேண்டும் என்றாயே?,  பேசு, என்றேன்” கட்டிலின் ஆன்மாவிடம்.
எது வித பதிலுமில்லை.

எனது மனச்சாட்சி மட்டும் என்னை  பார்த்தபடியே உட்கார்ந்திருந்தது, பெரு அமைதியுடன். எனக்கு, அது இவ்வாறு அமைதியாய் இருப்பது பிடிப்பதில்லை. அது என் தோல்வியின் அறிகுறி. எனவே மீண்டும் கட்டிலின் ஆன்மாவை நோக்கி பெருஞ் சத்தமாய் ”ஏதோ கதைக்க வேண்டுமென்றாயே அது என்ன என்றேன்”

கட்டிலின் ஆன்மா மனச்சாட்சியினை நிமிர்ந்து பார்க்க அவர்கள் இருவதும் எதோ ரகசியம் பேசுவது போலிருந்தது எனக்கு. ”கொன்யாக்” போதை எனக்குள் எகிறிக்கொண்டிருந்தாலும் என்னையறியாத ஒரு ஒரு நிதானத்தை உணர்ந்திருந்தேன்.

தி்டீர் என கட்டிலின் ஆன்மா பேசத்தொடங்கிற்று. எனது மனச்சாட்சியோ அதன் கருத்துக்களை ஆதரிப்பது போன்றதொரு புன்னகையுடன் அமர்திருந்தது.

”உனது போக்கு சரியில்லை, குடித்திருக்கிறாய் என்றது கட்டிலின் ஆன்மா.

மனச்சாட்சி அதை ஆமோதிப்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டிக்கொண்டது.

”சற்று சுயவிமர்சனம் செய்து கொள்” என்று மனச்சாட்சி உரைத்த போது அதன் கழுத்தை அப்படியே திருகினால் என்ன என்றிருந்தது எனக்கு. கடும் பார்வை ஒன்றை ஒன்றை வீசினேன்.

மெதுவாய் ஏளனப்புன்னகை செய்தது மனச்சாட்சி. மனச்சாட்சியை எரித்துவிடுவது போல் பார்த்தேன்.

என் காதுகளின் ‌செவிப்பறைகளில் கட்டிலின் ஆன்மா பேசுவது எங்கோ தொலைவில் ஒலிப்பது போல் ஒலித்துக்கொண்டிருந்து.

இன்னுமாரு ஒரு கிளாஸ் கொன்யாக் விழுங்கிக் கொண்டேன். சற்று கைத்தது. ஒரு ரொல்ஸ்ஐ கடித்துக் கொண்டேன்.

”பேசு” என்றது கட்டிலின் ஆன்மா. மனச்சாட்சி அமைதியாய் என்னைப் பார்த்தபடியே இருந்தது.

”நீதானே பேசவேண்டும் என்றாய்” என்றேன் நான், வீம்பாய்

”உன் மனதை நாம் அறிவோம்” என்றன கட்டிலின் ஆன்மாவும், மனச்சாட்சியும் ஒரே சமயத்தில்.

‌அவர்கள் இருவரும் எனக்கெதிராய் ஒற்றுமையானதை என்னால் தாங்கமுடியாதிருந்தது. இன்னுமொரு கிளாஸ்ஐ ஊற்றிக் கொண்டேன்.

”என்ன ” ..... ”  அறிவீர்கள்” என்றது உட்சென்ற கொன்யாக்.
.
அவர்களிருவரையும் என்னால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை.

நீ செய்யும் செயலை மன்னிக்க முடியாது என்றது கட்டிலின் ஆன்மா.

”நான் என்ன கொலையா செய்துவிட்டேன்” என்றேன். அவர்கள் இருவரும் புன்னகைத்துக் கொண்டார்கள். எனக்குள் எரிச்சல் பற்றியெரிந்து கொழுந்துவிட்டெரியத்  தொடங்கியது.

”இல்லை, ஆனால் என்னைக் கொடுமைப்படுத்துகிறாய்” என்றது கட்டிலின் ஆன்மா

”என்னையும் தான் என்றது” மனச்சாட்சி

”பேசுவதை தெளிவாய் பேசுங்கள்” என்றபடியே மேலும் ஒரு கிளாஸ்ஐ வாயினுள் கவிட்டுக்கொண்டேன்.

கட்டிலின் ஆன்மா பேசாதிருந்தது. மனச்சாட்சியோ .. என்னை ஊடுருவிப்பார்த்து.

தலையைக் குனிந்து கொண்டேன். பின்பு  மீதமாய் இருந்த கொன்யாக்ஐ குடித்து, கடைசித் துளியையும் நாக்கால் தட்டிக் குடித்தேன். பின்பு ”ரோல்ஸ்”ஐ கடித்தேன்.

சில நிமிடங்கள் ஓடியதும், அமெரிக்காவின் வான்படையை மட்டுமல்ல முப்படையையும் எதிர்க்கும் வல்லமை வந்தது போலிருந்தது.

கட்டிலின் மனச்சாட்சி ” நீ என்ன செய்கிறாய் என்று உனக்குத் தெரியும் என்றது”

எனது பொறுமை காற்றில் பறக்க ”என்ன மண்ணாங்கட்டியை செய்கிறேன்” என்று கத்தியபடியே மேசையில் ஒரு குத்து குத்தினேன். மேசையில் இருந்த பொருட்கள் அனைத்தும் அதிர்ந்து அடங்கின.

”மெதுவாய் பேசு, நிதானத்தை இழக்காதே” என்றது மனச்சாட்சி

நூல் அறுந்த பட்டம் போல், நிதானம் காற்றில பறக்க, பச்சைத் தூஷணத்தால் பேசினேன்.

மனச்சாட்சி என்னைப்பார்த்தபடியே மௌனித்திருந்தது. என்னால் மனச்சாட்சியை நிமிர்ந்து பார்க்க முடியவில்லை. நிலத்தைப்பார்த்தபடியே கட்டிலின் ஆன்மாவிடம் புரியும்படி சொல் என்று புறுபுறுத்தேன்

ம்..  கொட்டிப‌டியே சொல்லிற்று கட்டிலின் ஆன்மா, இப்படி:

உனது கட்டில் விரிப்பையும், தலையணையுறையும், போர்வையும் தயவு செய்து சலவை செய்..... என்னால் தாங்கமுடியவில்லை.

உட்சென்ற கொன்யாக்கும், அமெரிக்க முப்படையையும் எதிர்க்கும் சக்தியும் கண நேரத்தில் காலியாகியிருந்தன.

கட்டிலின் ஆன்மா கண்சிமிட்ட, மனச்சாட்சி புன்னகைத்தது,

உச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்

மனதின் அதிர்வுகளும் உணர்ச்சிகளும் அடங்காத நிலையில் இருந்து இப்பதிவு எழுதப்படுகிறது என்று அறிக.

1999ம் ஆண்டு வெளிவந்த The Green Mile படத்தில்  கறுப்பனாக நடித்திருந்த John Coffey இன் மரணதண்டணை மனதை எந்தளவு பாதித்ததோ அதேயளவு, அல்லது அதற்கு மேலான உணர்ச்சிகளை உணர்ந்தேன் உச்சிதனை முகர்ந்தால் பார்த்த பின்.

கதை பயணிக்கும் நிலம் எனது ஊர் என்பதில் ஒருவித பெருமையிருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

படத்தின் கருவும், கதையும் அக்கதையினூடாக நான் புரிந்துகொண்டவையும், நான் இப்படத்தை மிகவும் ரசித்தேன் என்றே கூறவைக்கின்றன. தொழில்நுட்பம், இயக்கம், காட்சியமைப்பு, இசை இவைகள் பற்றி நான் பேசப்போவதில்லை. இப்படம் எனக்கு போதித்ததென்ன என்பதே எனக்கு முக்கியமாக இருக்கிறது. அனைத்து தமிழர்களுக்கும் முக்கியமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.

முதலில் இப்படத்தினை தயாரித்த நேர்வேவாழ் ஐந்து தமிழர்களுக்கும் தலைசாய்த்து ஒரு வணக்கம். கருத்துவேறுபாடுகளைத் தாண்டி மனம் திறந்து பாராட்டவேண்டிய நேரம் இது. மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன். இப்படியான உங்கள் கலைப்பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சீமானுடன் மற்றும் தென்னிந்திய அரசியல்வாதிகளின் ”ஈழத்தமிழர் அரசியலில்” எனக்கு ஏற்பில்லை என்றாலும் சீமானுக்கு ஒரு சிறந்த கலைஞன் என்ற முறையிலும், சத்யராஜ், சங்கீதா மற்றும் சிறுமியின் தாய், சிறுமி, டாக்டர் என்று பலரும் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் ஈழத்தமிழன் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்.

படத்தின் கதையை நகர்த்திப்போகும் சிறுமியின் நடிப்பு அபாரம். சிறுமியின் தாயாக வருபவரின் இயல்பான நடிப்பும், மட்டக்களப்புத் தமிழையும் ரசித்தேன். மட்டக்களப்புத் தமிழின் ”எலுவா”, ”மனே” என்னும் சொற்கள், திரைப்படத்தின் வசனகர்த்தா எந்தளவு நுணுக்கமாக பிராந்தியச் சொற்களை இணைத்திருக்கிறார் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன.

முதன் முறையாக தென்னிந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழ் செயற்கைத்தன்மை இன்றி பேசப்பட்டுள்ளது. அதற்கான முழுப்பாராட்டையும் சிறுமியின் தாயா‌ராக நடித்தவரையே சாரும். (அல்லது டப்பிங் குரல் கொடுத்வருக்கு) சிறுமியின் தமிழில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இருப்பினும் சிறுமியின் நடிப்பு மொழியாட‌லின் சறுக்கலை இல்லாது செய்கிறது என்றே கூறவேண்டும்.

2012 ம் ஆண்டு நோர்வே தமிழர் திரைப்படவிழாவில் விருது வழங்கப்படும் போது சிறுமியாக நடித்த சிறுமிக்கு ஒரு சிறப்பு விருது அறிவிக்கப்படவேண்டும் என்று முன்மொழிகிறேன். அவளுக்கு அதற்கான முழுத்தகுதியும் உண்டு.

தென்னிந்திய திரைப்படங்களில் கேலித்தனமாக சித்தரிக்கப்படும் திருநங்கைகளை, முதன் முதலில் மனிதநேயமுள்ள மனிதர்களாக காட்டிய முழுப்பெருமையும் உச்சிதனை முகர்ந்தாலுக்கு உண்டு. ஈழத்தமிழர்களின் படமே இப்படியானதொரு முற்போக்கான கருத்தை சொல்லுகிறது என்பதில் எமக்கும் பெருமையுண்டு.

இயல், இசை, நாடகம் என்று ஒரு அரசியல் நெடி படிந்த ஒரு வசனம் வருகிறது. அதை சீமானே சொல்கிறார். எனக்கேதோ இது ஒன்று தான் படத்தின் நகைச்சுவை போலிருந்தது. (சீமான் மன்னிப்பாராக).

படத்தின் பாடலாசிரியர், எனது பால்யகாலத்தில் எனது கதாநாயகனாக இருந்தவர். ”ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?” என்று பேசியே மட்டக்களப்பு சிறுவர்கள், இளைஞர்களை தன்வசம் இழுத்த பெரும் கவிஞன், ‌சிறந்த மேடைப்பேச்சாளர் அவர். கவிஞனான அண்ணண் காசியானந்தனிடம் எனக்கு பெருமதிப்புண்டு. பாடல்களில் அவரின் முத்திரைகளை நாம் காணலாம். உதாரணமாக ”ஊரில் நான் வளர்த்த கிளிப்பிள்ளை, மனதைவிட்டு பறக்கலியே” என்ற வரிகள்.

போலீஸ் நிலையத்தில் இருக்கும் இந்தியாவின் சின்னமான அசோக சின்னத்தை சிறுமி ” இந்த பொம்மையை நான் எடுக்கவா” என்று கேட்பது எத்தனையோ அர்த்தங்களை சொல்லிப்போகிறது. இயக்குனருக்கும், வசனகர்த்தாவுக்கும் எனது பாராட்டுக்கள்.

படத்தின் கதை பற்றி நான் இங்கு பேசவில்லை. பேசவும் போவதில்லை. மனதை கனக்கவைக்கும் கரு என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்படம் ஒரு செய்தியை மட்டும் சொல்லிப்போகவில்லை. மனிதஉரிமைமீறல், பாலியல் துன்புறுத்தல், வன்புணர்ச்சி, நோய், நோயின் கொடுமை, மரணம், பிரிவு, அன்பு, மனிதநேயம், ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் தமிழக மனிதர்கள் என்று பல செய்திகளை சொல்லிப்போகிறது.

படத்தில் ஒரு வசனம் வருகிறது, இப்படி: அவள் செத்துக்கொண்டே இருந்தா, நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தம்”. எனது நெஞ்சை சுரீர் என்று சுட்டது இவ் வசனம். எனக்கு இப்படத்தினை பிடித்துப்போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த வசனம். என்னை சிந்திக்கத் துண்டியதும் இந்த வசனம் தான்.

படத்தைப்பற்றி எனது மனது கூறியதை பதிந்துவிட்டேன். எனது சிந்தனையில் தோன்றியதையும் எழுதிவிடுகிறேன்.
படத்தில் சிறுமியின் பெயர் புனிதா. அவளுக்கு உதவி செய்பவர் (சத்யராஜ்) பெயர் நடேசன். அந்த புனிதாவுக்கு ஒரு நடேசன் கிடைத்தார். ஆனால் இன்று அந்த புனிதாவைப் போல் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள். உதவுவதற்குத்தான் நடேசன்களுக்கு பஞ்சமாயிருக்கிறது. லட்சம் லட்சமாய் எத்தனையோ ஈழத்து நடேசன்கள் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் என்ன, அவர்களுக்கு புனிதாக்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் அல்லலுறும் ஒரு குடும்பத்தினை பொறுப்பேற்போமானால் எத்தனையோ குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள், வயோதிபர்களின் வலியை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்கலாமல்லவா?

இன்று பதவிக்கும், பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, பிரித்தாளுபவர்களின் சதிக்குட்பட்டு, எம்முறவுகளை மறந்திருப்பது எமது இன்றைய நிலைக்கு அவசியம் தானா? ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு எங்கோ கேட்ட ஞாபகம்.

இவ்வளவு உள்ளூர் விளம்பரங்களின் பின்பும் பல இருக்கைகள் காலியாய் இருந்தது மனதை நெருடியது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

என்றோ ஒரு நாள் கேட்ட ஒரு கவிதையின் இறுதிவரிகளுடன் இப்பதிவு நிறைவுறுகிறது

ஒளி நிறைந்த கூடத்தில் இருந்து
எல்லோரும் கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள்
நாமும் கையசைத்து மகிழ்வோம்.

இன்றை நாள் மிக நல்லது.

அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன், அவள் தூங்கிக்கொண்டேயிருந்தாள்

1996ம் ஆண்டு, டிசம்பர் மாதம் 26ம் திகதி, மதிய வேளை, பனிக்கால நாட்கள். குளிர் ஊருக்குள் படிந்துபோயிருந்தது. நான் வடமேற்கு நோர்வேயில் உள்ள ஒரு வைத்தியசாலையின் மகப்பேற்றுப் பிரிவில் நின்றிருந்தேன்.

கனிவான தாதியர், அமைதியான அறை, மெதுவான இசை, தாங்கொணா வேதனையில் ஒருவர், மற்றும் நான். மகப்பேற்றுத் தாதியின் கட்டளைகள், அன்பான வார்த்தைகளுக்கு மத்தியில் ஒரு அலரல். ஒரு பிரசவம் நடந்து கொண்டிருந்தது, அங்கு. இரத்தமும், ச‌தையும், நீரும் கலந்ததொரு குழந்தையை கையிலெடுத்து, தொப்புள் கொடியை ‌வெட்ட என்னை அழைத்த போது பயத்தில் மறுத்துவிட, ஒரு தாதி அதை வெட்டினார். குழந்தையை எடுத்துப்போய் சுத்தப்படுத்தி, தலையைச் சுற்றி தொப்பி போன்றதொன்றை இட்டு, அளந்து, நிறுத்து, ஊசி போட்டு என் கையில் தந்த போது முதன் முதலில் அவளை என்னுடன் அணைத்துக்கொண்டேன். வார்த்தைகளில் விபரிக்க முடியாத அனுபவம். பயமும், மகிழ்ச்சியும், தடுமாற்றமும் ஒன்றாய் கலந்த நிலை அது. நாமிருந்த அறையுனுள் ஒரு சிறிய நோர்வேநாட்டுக் கொடி வைக்கப்பட்டது.

அன்று மாலையே தனிஅறைக்கு மாற்றப்பட்டோம். குழந்தையையே பார்த்திருந்தேன். தூங்கிக் கொண்டிருந்தாள். தூங்கியபடியே இருந்தாள். ஒருவித பயம் என்னை சுழ்ந்துகொள்ள, மருத்துவத் தாதியை அழைக்கும் மணியை அமத்தினேன். கனிவான பார்வையுடன் வந்தார் ஒரு தாதி. குழந்தை கண்திறக்கவில்லை, தவிர ஒரே தூங்கிக்கொண்டிருக்கிறது என்றேன். ஆம் அதற்கென்ன என்றார் அலட்சியமாய். பின்பு, இது ஒன்றும் ஆபத்தில்லை, இப்படித்தான் எல்லாக் குழந்தைகளும் என்றபடியே அன்றுவிட்டார். என்னால் அவரை நம்பமுடியவில்லை. அடிக்கடி குழந்தை  மூச்சுவிடுகிறதா என்று பார்த்தபடியே இருந்தேன்.

அதே நாள், குழந்தை பால் குடித்த பின் அவளுக்கு விக்கியது. அவள் விக்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு எனது நெஞ்சு வெளியே வருவது போலிருந்தது. குந்தையை துக்கியபடியே தாதிகளின் அறைக்கு ஓடினேன், குழந்தை விக்குகிறது என்றேன். எனது அவஸ்தையை சட்டைசெய்யாமலே விக்கல் தானாகவே அடங்கும், வீணாகக் குழம்பாதே என்றார்கள், என்னை திரும்பியும் பாராமல். சற்று நேரத்தில் விக்கல் அகன்று போனது.

மறுநாள் குழந்தைகளை எவ்வாறு நீராட்டுவது என்று கற்றுத் தந்தார்கள். பயந்து பயந்து கற்றுக்கொண்டேன். உடைமாற்றவும் கற்றுக்கொண்டேன். வீடு வந்த போது எனக்கு என்று சமைத்துக்கொள்ள முடியவில்லை. பத்திய சாப்பாட்டை எனக்கும் சேர்த்து செய்துகொண்டேன்.

குழந்தையை அடிக்கடி பார்ப்பதும், அவள் மூச்சு விடுகிறாளா என்று அவதானிப்பதுமாயிருந்தேன். வீடுவந்த பின்பும் ஒரே தூங்கிக் கொண்டிருந்தாள் குழந்தை. என்னை ஒரு தடவையேனும் பாக்கவில்லையே என்று ஒரு ஆதங்கம் குடிவந்துகொண்டது. கட்டிலின் அருகே குந்தியிருந்து பார்த்துக்கொண்டேயிருப்பேன். நான் அருகிலிருப்பதை அறியாது தூங்கிக்கொண்டிருப்பாள் அவள்.

நாட்கள் ஓட, ஓட அவளின் கண்பார்வை ஒரு இடத்தில் குத்திநின்று என்னைப் பார்த்துச் சிரித்த போது உலகமே மறந்துபோன நிலையில், நாள் முழுவதும் அவளுடனேயே ஓடிற்று. அவள் இரவில் தூங்க மறுத்த நாட்களில் அவளை காரில் வைத்து மணிக்கணக்காய் கார் ஓடியிருக்கிறேன். அவளும் தூங்கிப் போவாள். மீண்டும் வீட்டுக்குள் வந்ததும் அழத்தொடங்குவாள். அவளின் கையுக்குள் எனது சின்னவிரலை வைத்தால் பிஞ்சு விரல்களால் இறுக்கமாய் முடிக்கொள்வாள். அந்த ஸ்பரிசத்தில் மெய்சிலிக்கும். பால் குடித்தபின் ”ஏவறை” எடுப்பதற்காய் அவளை நிமிர்த்தி, எனது தோளில் அவள் தலை சாய்த்து, முதுகில் தட்டியபடியே ஏவறை வரும் வரை நடந்துகொண்டிருப்பேன். அவளுக்கு ஏவறை வராதிருந்தால், எனக்கு ஏவறை வராது அசௌகரீயப்படுவது போலுணர்வேன். இப்படி எத்தனை எத்தனை சம்பவங்கள்.

விரைவில் என்னை பார்த்து சிரிக்கமாட்டாளா என்று நினைப்பேன். சிரித்ததும், உடம்பு திருப்புவாளா என்று காத்திருப்பேன். உடம்பு திருப்பியதும், உட்கார மாட்டாளா, தவழமாட்டாளா என்று கனவு ஓடிக்கொண்டேயிருந்தது. நாட்கள் மெதுவாய் கடந்து போவது போல் ஒரு பிரமை. அவளை அணைத்தபடியே தூங்கிப்போவேன். திடீர் என்று முழிப்பு வரும். அவளின் வசதியாகத் தூங்குகிறாளா என்று எழும்பியிருந்து பார்ப்பேன். நாட்கள் செல்லச் செல்ல அவளின் மெதுவான சத்தங்களுக்கெல்லாம் அர்த்தம் புரிந்தது. எது எது பசிக்கான, தூக்கத்துக்கான, சுத்தத்திற்கான, மகிழ்ச்சிக்கான சத்தங்கள் என்று தெரிந்த பின் அவளுடன் ஒரு வித தொடர்பாடல் கிடைத்ததுபோலாயிற்று.

மிருதுவான தலைமுடி, மெதுமையான கன்னங்கள், ஒளி கொண்ட கண்கள், உமிழ்நீரில் நனைந்தொழுகும் வாய், மடிப்பு விழுந்த கழுத்தும் வயிறும் தொடைகளும், மிருதுவான கால்கள் ஒவ்வொரு அங்கத்திற்கும் ஒவ்‌வொரு வாசனை, எல்லா வாசனைகளும் கலந்ததோர் இன்னுமொரு வாசனை. என்னால் இன்றும் அவ்வாசனைகளை உணர முடிகிறது.

5 - 6 மாதங்களின் பின்னான காலங்கள் மிகவும் இனிமையானவை. என்னை யார் என்று அடையாளம் கண்டு கொண்டாள். அன்னியர்கள் அழைத்தால் என் கழுத்தைக் கட்டிக்கொள்வாள். பெருமையில் நிறைந்து போகும் மனது. அப்பாவின் குழந்தை என்பார்கள், மகிழ்ச்சிக்கு அளவிருக்காது அந்நேரங்களில். 

”முட்டு முட்டு” என்றால் முட்டுவாள், ”சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு” விளையாடுவோம். அவளை தூக்கியபடியே துள்ளினால் அல்லது ஓடினால் பெரிதாய்ச் சரிப்பாள். அவளின் எச்சில் கலந்த முத்தங்களினாலும், பல்லில்லா வாயினால் கடித்தும், பூப்போன்ற அவளது கைகளினால் அணைத்தும், அவளின் அன்பிளை அள்ளி அள்ளி பொழிந்திருக்கிறாள், என்மீது.

எமது வீட்டில் ஒரு சாய்மனைக்கதிரை இருந்தது. பின் மாலைப்பொழுதுகளில் அவளை என் நெஞ்சில் சாய்த்தபடியே தூங்கவைப்பேன். துங்கியதும், அவளின் அழகு தெய்வீக அழகாய் மாறிப்போகும். அவள் சுவாசத்தின் ஒலியினை ரசித்தபடியே அவளைப் பார்த்திருப்பேன். தூக்கத்தில் சிரிப்பாள், நானும் சிரிப்பேன். சில வேளைகள‌ில் அழுவது போல் விம்முவாள், அதை தாங்க முடியாது அவளின் தலைவருடி முதுகினைத் தடவி என்னுடன் அணைத்துக்கொள்வேன். சிறு சிறு சுகயீனங்களின் போது என்னுடனேயே இருப்பாள். சுருண்டு, தளர்ந்து போயிருக்கும் அவளைப் பார்ப்பதே பெரும் வேதனையாயிருக்கும். என் தோளில் சார்த்தியபடியே தாலாட்டுப்பாடுவேன். மெதுவாய் உறங்கிப்போவாள். இன்றுவரை என் தாலாட்டில் உறங்கிப்போனவர்கள் இருவர். அவர்களில் இவள் முதலாமவள்.

‌உடலைப் புறட்டி, உட்காந்து, தவண்டு, எழுந்து நின்று, தள்ளாடி நடந்த போது அவள் ஏதோ உலகசாதனை செய்தது போலிருந்தது எனக்கு. மாலைநேரங்களில் வீடு வரும் போது கதவருகில் காத்திருப்பாள். அள்ளி‌ கையில் எடுத்தால் அதன் பின்னான நேரங்கள் நீராய் கரைந்தோடும். அவளின் நீராட்ட நேரங்கள் மிகவும் மகிழ்ச்சியானவை. நீரினுள் விளையாடி அலுக்காது அவளுக்கு. உடல் துடைத்து, தலை துவட்டி, ஓடிகொலோன் இட்டு, உடைமாற்றிய பின் அழகியதோர் பொம்மையாய் மாறியிருப்பாள் அவள். தூக்கமும் வந்தமர்ந்திருக்கும், அவள் கண்களில். பால்போத்தலுடன் என்னருகில் தூங்கிப்போவாள். என்னை மறந்து ரசித்திருப்பேன் நான். அவளின் ஈரம் துவட்டிய ஒரு பருத்தித்துணியோன்று இன்றும் என்னிடம் இருக்கிறது. அதில், இன்னமும் அவளின் ஈரமும், வாசனையும் ஒட்டியிருப்பதாகவே உணர்கிறேன். அதைக் கையிலெடுத்து முத்தமிடும்  நாட்களும் உண்டு.

முதன் முதலில் ”அப்பா” என்று அழைத்த போது எமது நெருக்கம் மேலும் கூடிப்போனது. நெருக்கம் மேலும் அதிகரித்தது தன்னை தேற்றிக்கொள்ள அவள் என் கழுத்தையே கட்டிக்கொள்ளத் தொடங்கியதால். அந் நேரங்களில் அவளின் குழந்தையாய் மாறிப்போனேன் நான். அந் நாட்களில்,  அவளை அம்மா என்று அழைப்பதையே விரும்பினேன். எனது அம்மாவிடம் கிடைக்கும் ஆறுதல் அவளிடம் கிடைத்தது.

அவளின் வயது ஒன்று, இரண்டு, மூன்று என்று ஆகிய போது அவளே யாதுமாய் இருந்தாள். எமது நடைப்பயணங்கள், சைக்கில் பயணங்களில் அவளின்  ”ஏன்” என்னும் கேள்விகளுக்கு அவளுக்கு புரியும் படி பதில் ‌கூறமுடியாது தடுமாறியிருக்கிறேன். சில நேரங்களில் அவளின் கேள்விகள் சிந்திக்கத்தூண்டும்.

அவளின் தூக்கம் கலையும் நேரங்களில் அருகில் இருந்து தலைகோதி, முத்தமிட்டு, அள்ளி அணைத்து, தூக்கி, இறுக அணைத்திருக்க வேண்டும். இல்லையெனில் ”போர்” தான். நான் கெஞ்சி, அவள் மிஞ்சி அதன் பின்பு தான் எங்கள் போர் ஓய்நது போகும்.

அவளுக்கு மூன்று, நான்கு வயதாயிருக்கும் நாட்களில் படுக்கைக்கு செல்லும் முன் கதை சொல்லத் தொடங்கியிருந்தேன். தினம் தினம் புதிய புதிய கதைகள். பாட்டி வடை சுட்ட கதை, சொன்னதை செய்யும் சுப்பன் கதை, குரங்குகளும் தொப்பிகளும் கதைகளில் இருந்து தற்கால ”பார்பி”, ”டெலி டபீஸ்” மற்றும் ”ப்ராங்லின்” போன்றவர்களை வைத்து நான் இயற்றிய கதைகள் வரை தினமொரு கதை அவளுக்கு 10 வயதாகும் வரை கூறியிருக்கிறேன். அவளுக்கு பிடித்த ”கதைசொல்லி” நான் என்பதில் எனக்கு ஏகத்துக்கும் பெருமையுண்டு.

அவளுக்கு சைக்கில் ஓடப்பழக்கியது என் வாழ்வில் மறக்கமுடியாத அனுபவம். இரண்டே நாளில் ”அப்பா கையை விடு, நான் இப்போ தனியே ஓடுகிறேன்” என்றாள். பயந்து பயந்து கையை விட்டதும் தடுமாறி தடுமாறி ஓடி, சற்று நேரத்தில் திடமாய் ஓடினாள். அவளின் மகிழ்ச்சிக்கு அளவில்லை. மகிழ்ச்சிக் கூச்சலிட்டாள். பெருமையாய் நெஞ்சுவிம்பி நின்றிருந்தேன் நான். பனிச்சறுக்க விளையாட்டிலும் அப்படியே. அவளும் நானும் பனியில் நீண்ட தூரம் சறுக்கிச் செல்வோம். நேரம் மறந்து நீண்டு போகும் எமது விளையாட்டு.

வாழ்க்கையின் அர்த்தத்தை உணர்த்திய நாட்கள் அவை. தினம் தினம் உயிர்த்திருந்தேன். அண்மையில் ”அபியும் நானும்” திரைப்பட இயக்குனர் ராதாமோகனுடன் பழகும் சந்தர்ப்பம் கிடைத்தது. அத் திரைப்படத்தைப்பற்றியும் பேசக்கிடைத்தபோது எனது வாழ்வின் ஒரு பகுதியை படம் பிடித்திருக்கிறீர்கள் என்றேன். புன்னதை்தபடியே ”தந்தைக்கும் தாயமுதம் சுரந்ததம்மா” என்னும் அப் படத்தின் பாடல் வரிகள் உண்மையானவை என்றார். என் நெஞ்சு விம்மியடங்கியது. ஆம், அந்த வரிகளின் உண்மையை நான் உணர்ந்திருக்கிறேன். அதுவே வாழ்வின் உச்சம்.

இருப்பினும், பெருங்குடி நன்மக்கள் சிலர், தந்தையர்க்கு குழந்தைகளின் மேல் பாசமில்லை என்கிறார்கள். ஏளனப் புன்னகையுடன் கடந்துபோகிறேன், அவர்களையும்.


காவியா என்னும் எனது காவியத்துக்கு இது  சமர்ப்பணம்.


பயணம், பெரும் பிரிவின் தொடக்கம்

1984 -85 ம் ஆண்டின் இறுதிக் காலங்கள், இழக்கப்போகும் பெறுமதிமிக்க  காலங்களைப் பற்றிய எதுவித அறிகுறிகளுமில்லாமல்  ஓடிக்கொண்டிருந்தது. ஊருக்குள் பிரச்சனைகள் மெதுவாய் தொடங்கியிருந்த காலம்.  19 - 20 வயதுக்கான எவ்வித முதிர்ச்சியும் இன்றி, எவ்வித கனவுகளும் இன்றி, பல்கலைக்கழக  அனுமதிக்கான பரீட்சை எழுதிவிட்டு, பெறுபேறுகளுக்காகக் காத்திருந்தேன்.

சிங்கள நண்பர்கள் பலர் ஊரைவிட்டு மெது மெதுவாய் இடம் பெயர, இஸ்லாமிய நட்புகளும் பிரச்சனைகளின்  காரணமாக தொலைந்து கொண்டிருந்தன. இருப்பினும் துணிந்தவர்கள் சிலரின் நட்புகள் மங்கலான மாலைப் பொழுதுகளில் தொடரத்தான் செய்தன.

ஒன்றாய் பழகிய மூவின நட்புகளும் தனித்தனியே தொடர்பில்லாது தம்வழியே சென்றுவிட்டாலும், நட்பு என்னும் சொல் மட்டும் தனது தன்மையை இழக்காதிருந்தது என்பது பல ஆண்டுகளின் பின் தான் எனக்குப் புரியும் என்பது எனக்கு அன்று தெரியாதிருந்தது.

ஒரு புறம் தமிழ் முஸ்லீம் கலவரங்கள், இராணுவத்தினரின் கெடுபிடிகள், இயக்கங்ளின் வீரப்பிரதாபங்கள் என எமது ஊரின் காற்றில் கூட விறுவிறுப்பு கலந்திருந்த காலமது. கைதுகளும், மரணங்களும் பழகிப்போயின. நண்பர்கள் தீடீர் என காணாமல் போய் முறுகிய உடம்புடன் இறுகிய பார்வையுடன் 4 -5 மாதங்களின் பின் பின்மாலைப் பொழுதுகளில் வந்து சந்தித்தனர். ஒரு சிலர் இடுப்பில் இருந்த சில ஆயுதங்களையும் காட்டினர். சிலர் கொள்கைப்பரப்புரைகளும் செய்தனர். 

சகோதர முறுகுநிலை தொடங்கியிருந்தது. நண்பர்களாய் இருந்தவர்களும் முறாய்த்துக்கொண்டனர். அல்லது முறாய்க்க கட்டளையிடப்பட்டனர்.

ஒரு நாள் மட்டக்களப்பு ரஷீடியாஸ் குளிர்பானக்கடையினுள் எமக்கும் ஒரு ”அண்ணர்” வகுப்பு எடுத்தார். தமிழீழ விடுதலை ராணுவம் என்றார். அரசியற்பிரிவு, ராணுவப்பிரிவு, முழுநேரப் போராளி, பகுதி நேரப் போராளி என்றார். நான் பகுதி நேரம் என்றேன். எனது பெயர் விபரம் எழுதிப் போனார். பின்பொருநாள் ஏறாவூர் ரயில்நிலையத்தருகில் ஒரு கைத்துப்பாக்கியையும் காட்டினார். அதன் பின்பு அவர் வரவும் இல்லை. அவர் வரவில்லை என்று நான் கவலைப்படவும் இல்லை.

ஒரு முறை ”ஹர்த்தால்” என்று சுவரொட்டி எழுதவேண்டியேற்பட்டது. அழகான கையெழுத்தை கொண்டிருந்த ஒரு நண்பனை காட்டுக்குள் அழைத்துப்போய் சுவரொட்டியை எழுதவைத்தோம். அதுவே அவன் தொழிலாகியது பின்னாலில். எல்லா இயக்கங்களுக்கும் அவனே சுவரொட்டி எழுதினான். அந்த சுவரொட்டியை ஒட்டுவதற்கிடையில் நான்கு தடவைகள் மூத்திரம் போயிருப்பேன்.

தினமும் ஒருவர் வீதிக் கம்பத்தில் தலை சரிந்து கிடந்தார். ஊராரும் சிவப்பு நிறத்தில் இருந்த நோட்டீஸ்களை நம்பத் தொடங்கயிருந்த காலம். வீதிக்கம்பத்தில் சரிந்திருந்தவர்கள் எல்லோரும் குற்றவாளியாக்கப்பட்டார்கள். அவர்களை சரித்தவர்களின் குற்றங்கள் பற்றி யாரும் பேசமுன்வரவில்லை. எவரும் கொல்லப்பட்டவர்களின் வலியை கண்டுகொள்ளவும் இல்லை.  கொலைசெய்யப்படுவதற்கு முன்னான வினாடியில் கூட தான் மன்னிக்கப்படலாம் என்று அவர்கள் எண்ணியிருக்கக்கூடும். துப்பாக்கியின் விசை அழுத்தப்படுதை காணும் போது அவர்கள் தமது குடும்பத்தை, குழந்தையை, காதலியை நினைத்திருக்கக்கூடும். சில வேளைகளில் ”நாசமாய்போவீர்கள்” என்றும் சபித்திருக்கவும் கூடும்.

ஒரு ‌முறை பெருங்கலவரம் மூண்டது தமிழர்களுக்கும், இஸ்லாமியர்க்கும் இடையில். எனது ஊர் எல்லையில் இருந்ததால், ஊரே இடம் பெயர்ந்தது. வந்தாறுமூலையில் உள்ள கிழக்குமாகாண பல்கலைக்கழகம் அகதிமுகாமனது. வீடு வீடாய் சென்று உணவு சேகரித்துவரக் கட்டளையிட்டார்கள் ”அண்ணா”க்கள். மாலையில் கத்தி, கோடாலி, அலவாங்கு, திருக்கைவால் போன்ற ஆயுதங்களுடன் செங்கலடிச்சந்ந்தியில் காவல் வேறு போட்டார்கள். நாங்கள் அருகே இருந்த ஒரு பேக்கரிக்குள் 304 விளையாடிக்கொண்டிருந்தோம்.

நண்பர்கள் சிலர் வெளிநாடு போயினர். சிலர் ”கப்பலுக்கு” போயினர். நாங்கள் சிலர் மட்டும் எங்கும் போகவில்லை. எங்கு போவது என்றும் எமக்குத் தெரிந்திருக்கவில்லை. நாம் குந்தியிருக்கும் சந்திக்கு ஆமி வரும்போது ஓடுவதும், அவர்கள் அங்கிருந்து அகன்றதும் நாம் திரும்பி வருவதும் வழமையாகியது.

இப்படியான நாட்களில் தான் ஊரில் இருந்தால் பிரச்சனை என்பதால் அம்மா என்னை இந்தியா அனுப்ப  யோசித்தார். இதை அறிந்த இரு நண்பர்களும் என்னுடன் இணைந்துகொள்ள இந்தியாப் பயணம் தொடங்கிற்று.

தெரிந்த பெரியவர் ஒருவருடன் நாம் கொழும்பு போய்,  அங்கிருந்து வீசா எடுத்து இந்தியா போவது போல் ஒப்பந்தமாகி நண்பர்களின் பெரும் பிரியாவிடையுடன் 1985ம் ஆண்டு கார்த்திகை  மாதத்தின் இறுதி நாட்களில் ஒரு நாள், காலைப் புகையிரதத்தில் கொழும்பு நோக்கிப் புறப்பட்டடோம். புகையிரதம் எமது Eravur United விளையாட்டுத்திடலைக் கடந்த போது, தரிசாய் கிடந்த நிலத்தை மூவின நண்பர்களும் சேர்ந்து செப்பனிட்டு விளையாடிக்களித்த நாட்கள் நினைவிலாடியது.

அன்றைய  அந்தப் பயணம் , ஒரு பெரும் பிரிவின் தொடக்கம் என்பதும், அதுவே என் வாழ்வினை நிர்னயிக்கப்போகிறது என்பதும் எனக்கு புரிந்திருக்கவில்லை அன்று. ஒரு சாதாரணப்பயணம் போலிருந்தது அது. பெரும் பயணங்கள் அனைத்தும் சாதாரணமாகவே தொடங்குகின்றனவோ என்னவோ?

வெய்யில் காய்ந்து, காற்றும் காய்திருந்திருந்த தென்னைமர தோட்டங்களினூடாகவும், வெட்ட வெளிகளினூடாகவும் புகையிரதத்தின் வேகத்தில் தலைமுடி காற்றிலாட, காலம் செய்யப் போகும் கோலத்தினை உணராமல் பயணித்துக்கொண்டிருந்தேன். புகையிரதம் எதையும் கவனிக்காமல் கட கட கடவென ஓடிக்கொண்டிருந்தது, வாழ்வைப்போல்.

இருபத்திஏழு ஆண்டுகளின் பின்பான இன்று இதை எழுதிக்கொண்டிருக்கும் போது ஊரின் வாசனையையும் காட்சிகளையும், நட்பின் ஈரத்தையும், காற்றின் வெம்மையையும் மனம் நுகர்ந்ததை உணர்ந்தேன். ஏகாந்தமான அனுபவம். என் குழந்தைகளின் வாசனையை நான், குழந்தைகளின் அருகாமையின்றியே அறிவது போன்றது அது.

காலமும், வாழ்வும் நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கிறது. நினைவுகளைச் சுமந்தபடி அவற்றுடன் பயணித்துக்கொண்டிருக்கிறேன் நான். நீங்களும்தான்.

இன்றைய நாளும் நல்லதே!.