வாய்ச்சொல் கோழைகளும், வாய்திறவா வீரர்களும்


ஒரு வாரத்திற்று முன்னான ஒரு மாலை, எனது வாகனத்தில், பயணித்துக்கொண்டிருந்தேன். வாகனத்தினுள் இருக்கும் வானொலி மெதுவாய் இயங்கிக்கொண்டிருந்தது. இலையுதிர்காலத்து இருட்டு ஊருக்குள் படிந்து‌போயிருக்க, மெது மழை தூறிக்கொண்டிருந்தது வெளியே. வானொலில் நத்தார் பண்டிகையை முன்னிட்டு நோர்வேயில் உள்ள அனைத்து வேலைத்தளங்களிலும், சங்கங்கள், நண்பர்கள் நடாத்தும் ”நத்தார் வி‌ழாவைப்” பற்றி பேசிக் கொண்டிருந்தனர். (நோர்வேயில் இந்த விழா முக்கியமான நிகழ்வாகக் கருதப்படும்)

பலரும் விழாவைப்பற்றி புகழ்ந்து தள்ளிக்கொண்டிருந்தனர். ஒரு வயதான பெண் தனக்கு அப்படியான விழாக்களில் தற்போது ஈடுபாடில்லை என்று கூறினார். ஏன் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தனக்கு வயதாகி விட்டது என்றும், அந்த விழாக்களுக்கு இளம் பெண்கள் அணிந்து வரும் ”குட்டைப்பாவாடை” இவ் வருடம் மிகவும் குட்டையாகிப் போயிருப்பது தனக்கு கவலையைத் தருகிறது  என்றார். பொறாமையாய் இருக்குமோ என்று நினைத்துக்கொண்டேன்.


அடுத்தடுத்து பலரையும் வானொலியில் பேட்டி கண்டனர். அனைவரும் அவ்விழாவினை மிகவும் விரும்புவதாகக் கூறினர். எனக்கும், இவ் விழாக்களில் பெருத்த விருப்பமுண்டு. இவ் விழாக்களின் போது ருசியான உணவு மட்டுமல்ல, அதனிலும் ருசியான பானங்கள் தொடக்கம் அழகான மனிதர்கள் வரை  அங்கிருப்பார்கள். ”வரம்புயர நீருயரும்” என்பது போல போதை ஏற ஏற விழா சிறப்புறும். அந்த குட்டைப்பாவைடை விடயமும் அப்படியாய் இருக்கக்கூடும்.

வானொலி நிகழ்ச்சி முடியுமுன் ஒரு வயதானவரை பேட்டி கண்டார்கள். அவருக்கு வயது 80. தனியே வாழ்கிறார். அவர் இப்படியான விழா ஒன்று நடைபெறுகிறது என்பதையே அறியாதிருந்தார் என்றார். வானொலி நிகழ்ச்சித்தொகுப்பாளரால் அதை நம்பமுடியவில்லை. மீண்டும் மீண்டும் கேட்டார். வயதானவரோ ஒரே பதிலையே மீண்டும் மீண்டும் கூறினார்.

தொடந்து அவரை பேட்டிகண்ட போது அவர் கூறிய சில வார்த்தைகள் என்னை சிந்திக்கத்தூண்டின.
.
நான் தனிமையில் வாழும் மனிதன் என்றார். நாட்பது வருடங்கள் மாலுமியாக இருந்தார் என்றும், தனக்கு ஒரு  அழகான அன்பான மனைவி இருந்தார் என்றும் கூறினார். அத்துடன் அவருக்கு ஒரு மகள் இருப்பதாகவும் அறியக்கிடைத்தது. ஆனால் மகள் தன்னிடம் வருவதில்லை என்றும், மனைவி இறந்துவிட்டார் என்றும் மிகவும் வருத்தத்துடன் கூறினார். கடந்த 20 ஆண்டுகளாக தான் தனியே வாழ்ந்து வருவதாயும், தனக்கு ஒரு நண்பர் ஏனும் இல்லை என்றும் கூறிய போது அவர் மீது பரிதாபமாய் இருந்தது எனக்கு.

தனிமை, கரையான்பூச்சிகளைப்‌ போல் பலரையும் எப்போதும் அரித்துக்கொண்டேயிருக்கிறது. தனிமை மட்டும் வாழ்ந்துகொண்டிருக்க  மனிதர்கள் மட்டும் அழிந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒஸ்லோவில் ஒரு பாக்கிஸ்தானிய மனிதர் இருக்கிறார். அவர் வருடம்தோறும் ”தனிமையில்” வாழ்பவர்களுக்காக ஒரு மிகப் பெரிய நத்தார் விழாவை நடாத்துகிறார். பல நோர்வேஜியர்களும், நோர்வேஜிய பிரபலங்களும் அவரின் நத்தார் விழாவில் கலந்து கொண்டு, அங்கு  வந்திருக்கும் அனைவருடனுடம் குதூகலமாக பழகிப்போகின்றனர். ஒரு வருடம் நோர்வேயின் அரசகுடும்பத்தில் இருந்தும் சிலர் கலந்து கொண்டார்கள் என்றே நினைவிலிருக்கிறது.

நத்தார்கொண்டாட்டக் காலங்களும், அதற்கு முன்னைய காலங்களும் அதிக தனிமையை உணர்த்தக் கூடியவை என்பதை நானும் உணரந்திருக்கிறேன். எனது நண்பரான நோர்வேஜிய பாதிரியார் ஒருவர் வருடம் முழுவதும் ஒரு ”தொலைபேசி” திட்டமொன்றினை நடாத்திவருகிறார். அத் தொலைபேசிக்கு யாரும் தொடர்பு கொள்ளலாம், தமது பிரச்சனைகளை பகிர்ந்துகொள்ளலாம். குழந்தைகள் தொடக்கம் வயோதிபர் வரை பலர் தினமும் தொடர்பு கொள்வதாகச் சொன்னார். அவரிடத்தில் தினமும் 15 - 20 பேர் தொழில்புரிகின்றனர். 24 மணிநேரமும் அத் தொலைபேசி இயங்குகின்றது. அத் திட்டத்தில் தொழில் புரியும் அனைவரும் எவ்வித கொடுப்பனவுகளும் இன்றி இலவசமாகவே தொழில் புரிகிறார்கள். மற்றவரின் ரகசியங்கள் எங்கும் பதியப்படுவதில்லை. எவருடனும் பகிரப்படுவதில்லை. அவர்கள் இருவருடனேயே அவ்வுரையாடல் முடிந்துபோகிறது.

துன்பங்கள் பகிரப்படும் போது அவற்றின் உக்கிரம் பலமாய் குறைந்து போகிறது என்னும் வார்த்தைகள் உண்மையானவையே என்பதை பாதிரியாராகிய நண்பரின்  செயல் உணர்த்திநிற்கிறது.

தாய் தந்தையரின் சண்டைகள், குடி, வன்முறை, பாலியல் வன்முறை, வன்புணர்ச்சி, குடும்பச்சிக்கல்கள், நோய்மை, தனிமை இப்படி பல பிரச்சனைகளுடன் தினமும் பலர் தொலைபேசுகிறர்கள். காது கொடுத்து கேட்பதும், ஆறுதலாகப் பேசுவதும், அரச அலுவலகங்களின் தொடர்புகளை அவர்களுக்கு அறிவிப்பதுமே இவர்களது தொழிலாயாயிருக்கிறது. ஒரே மனிதருடன் நீங்கள் இரு நாட்கள் தொடர்ந்து பேசமுடியாது. தொலைபேசி இலக்கங்கள் இரகசியமாககப் பாதுகாக்கப்படுகின்றன. இப்படி பல வித பாதுகாப்புக்களுடன் பலருக்கும் அவர்களது வேதனையை கடந்து போக உதவுகிறார்கள்.

நான், ஆயுதங்களை விட வார்த்தைகளே கூர்மையானவை என்பதை  அண்மையில் மீண்டுமொருமுறை உணர்ந்து,  ”அவ் வேதனையை” கடந்த சில நாட்களாக  கடந்துகொண்டிருக்கிறேன். நண்பர்கள் சிலர் என்னை பேச அனுமதித்து, அமைதியாகவே கேட்டுக்கொண்டிருக்கிறார்கள், இவர்கள் வீரர்கள. நானும் இவர்களுடன் பேசியதால் அமைதியடைந்துள்ளதாகவே உணர்கிறேன்.


மேற்கூறியவர்கள் போன்று மற்றவர்களை அரவணைக்கும் மனமுள்ள மனிதர்கள் மத்தியில் தான், சக மனிதனை, வார்த்தைகளாலும், கோழைத்தனமான செயல்களாலும், துன்புருத்தும் செயல்களாலும் ”உயிருடன் கொலைசெய்யும்” உறவினர்கள், நண்பர்கள் தொடக்கம் எதிரிகள் வரை நடமாடுகிறார்கள்.

ஜாக்கிரதையாக புதிய வருடத்தை கடந்து கொள்ளுங்கள் நண்பர்களே.. தோழர்களே.. தோழியர்களே!

3 comments:

 1. >ஏன் என கேட்கப்பட்ட கேள்விகளுக்கு, தனக்கு வயதாகி விட்டது என்றும், அந்த விழாக்களுக்கு இளம் பெண்கள் அணிந்து வரும் ”குட்டைப்பாவாடை” இவ் வருடம் மிகவும் குட்டையாகிப் போயிருப்பது தனக்கு கவலையைத் தருகிறது என்றார்..

  அங்கேயும் ஒரே கூத்துத்தானா?

  ReplyDelete
 2. >மேற்கூறியவர்கள் போன்று மற்றவர்களை அரவணைக்கும் மனமுள்ள மனிதர்கள் மத்தியில் தான், சக மனிதனை, வார்த்தைகளாலும், கோழைத்தனமான செயல்களாலும், துன்புருத்தும் செயல்களாலும் ”உயிருடன் கொலைசெய்யும்” உறவினர்கள், நண்பர்கள் தொடக்கம் எதிரிகள் வரை நடமாடுகிறார்கள்.

  அதுமட்டுமல்ல, "நீ இருப்பதே எனக்குத் தெரியாது" என்று பாசாங்குபண்ணும் ஒரு கூட்டமே இருக்கிறது. (உண்மையிலே தெரியாமல் விடுவது வேறு)

  ReplyDelete
 3. உண்மைதான் விசரன் தொடருங்கள்

  ReplyDelete

பின்னூட்டங்கள்