Yo boys i am telling story .. soup story, flop story


தலையங்கத்தைப் பார்த்துவிட்டு இது ஒரு கொலைவெறிக் கதை என்று மட்டும் நினைக்காதீர்கள்.

2012 புதுவருடத்தின் முதல் தினமே காய்ச்சல், வயிற்றோட்டம், காதுக்குத்து என்று படு அமர்களமாய் இருந்ததால் படுக்கையில் இருந்து எழும்புவதே பெரும் பிரச்சனையாயிருந்தது.  நண்பனின் நீர் கொழும்பு  வீட்டு ”எலுமிச்சை ஊறுகாய்” யின் ருசி சுவையற்றுப்போயிருந்த வாயிற்கு அமிர்தமாயிருந்தது. நண்பர் ஒருவரிடம் ”இடியப்பமும் புளிச்சொதியும்” செய்து தரக் கேட்டேன். செய்து தந்தது மட்டுமல்ல ‌கொண்டுவந்தும் தந்தார்.

அம்மாவுடன் தொலைபேசினேன். குரலிலேயே  எனக்கு சுகயீனம் என்று அறிந்து கொண்டார்.
”என்னடா சுகமில்லையா” என்றார் சோகமான குரலில். ”ம்” என்று தொடங்கிய  எமது சம்பாசனை கொத்தமல்லி, ஹோர்லிக்ஸ், மைலோ என்று சென்ற போது
”அம்மா! அதெல்லாம் என்னட்ட இல்லை. ரெண்டு பனடோல் போட்டிருக்கிறன்” என்றதோடு முடிந்து போனது.

அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்களாக என்னை தொலைபேசியில் அழைத்து சுகம் விசா‌ரிக்கிறார். அந் நேரங்கிளில் அந்த ”கொத்தமல்லி, ஹோர்லிக்ஸ், மைலோ” சமாச்சாரங்களை, என் அப்பாவின் அழகிய ராட்சசி மறந்ததாகத் தெரியவில்லை. நானும் பன‌டோலை வைத்து அவரின் ஏக்கங்களை தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று 3ம் திகதி, இன்றும் தொலைபேசியில் அழைத்தார். பழைய கொத்தமல்லிக்கே சம்பாசனை ‌சென்ற போது ”எனக்கு தற்போது காச்சல் இல்லை” என்றேன். அப்ப சரி ”ஆறுதலாய் படுத்திரு” என்று கடுப்பேத்தினார்.

பின்பு இப்படி சம்பாசித்தோம்

 ”இன்று என்ன திகதி”
”3 ம்திகதி”
”திகதி ஞாபகம் இருக்கா?”
”.....”
”அப்பா இறந்த நாள்”
” ஓம் என்ன மறந்துவிட்டேன்” (நமக்கு என்ன நான் நினைவில் நிற்கிறது)
”31 வருஷங்களாயிட்டுதடா” என்றார் மிகவும் சோகமான குரலில்.

அதன் பின் யாருக்கோ உணவும், உடையும் கொடுக்க ஒழுங்கு செய்துள்ளதாகக் கூறினார்.
இத்துடன் எமது சம்பாசனை நின்று போயிற்று.

அம்மா கூறிய 31 வருடங்களாயிற்று என்ற கூறியது மெது மெதுவாய் மனதுக்குள் ஊறிக் கொண்டேயிருந்தது.

இன்றும் அந்த நாள் அப்படியே நினைவில் நிற்கிறது. 3ம் திகதி தை மாதம் 1981.

அப்பாவுக்கும் எனக்கும், அவர் இறக்கும் வரை ஏனோ ”கெமிஸ்ரி” வோர்க் அவுட் ஆகாதிருந்தது . 3 - 4 வயதிலிருந்தே நான் என்ன செய்தாலும் அவருக்கு அதில் ஒரு கடும் விமர்சனம் இருந்தது. அவரின் அந்த விமர்சனத்தில் எனக்கு பலத்த கடும் விமர்சனங்கள் இருந்தன. 

நான் ”மா” விற்கப் போனால் காற்றடித்தது, ”உப்பு” விற்கப்போனால் மழைபெய்தது. இது அந்த மனிதருக்கு புரியவில்லை.  காற்றடிக்காது போது, ‌மழை பெய்யாதபோதும் போ என்றார் அவர். இப்ப‌டியாக ஆரம்பித்த எமது ராஜாங்க உறவு, விமர்சனங்கள் கண்டனங்கள் ஆக மாறி, பிற்காலத்தில் ”ரணகளங்களாவும்” மாறியது என்பது உண்மை. (ரணகளம் எனக்குத் தான் அவருக்கில்லை என்பதை அறிக)

1980ம் ஆண்டு 10ம் வகுப்புத் தேர்வெழுதிய பின்பு மார்கழி மாதமளவில் சில நாட்களுக்கு என்னை அம்மா ”திக்” விஜயம் அனுப்பினார்.  தம்பியும் மார்கழி விடுமுறை என்பதால் ஊர் மாற்றம் செய்யப்பட்டான். எமது அந்த விஜயம் வடக்கு நோக்கியிருந்தது. சில வாரங்கள் உடுவில், சுண்ணாகம், ரொட்டியாலடி, மருதனாமடம் என்னும்  நிலப்பரப்பில் வாழ விதிக்கப்பட்டிருந்தது எனக்கு. அங்கு என்னிலும் ஒரு வயது முத்த ஒன்றுவிட்ட அண்ணண் ஒருவர் இருந்ததால் அவர், அவரின் நட்புகள் என்று காலம் மகிழ்ச்சியாய் ஓடியது.அப்பாவின் அக்காவும், அம்மாவின் அக்காவும் யாழ்பாணவாசிகள். நான் மட்டக்களப்புவாசி. எனது க‌தை, பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் சரியில்லை என்று நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பும் காலங்களில் அம்மாவுக்கு கடிதங்கள் வரும். அதை திருட்டுத்தனமான வாசித்து மறுமுறை அங்கு போகும் போது மாமிக்கும், பெரியம்மாவுக்கும் முன்பை விட சற்று ”பிரஷர்” ஏற்றிவிட்டு திரும்புவேன். மிக வேகமாக அவர்களின் ”அறிக்கை” கடிதங்கள் வரும் மட்டக்களப்புக்கு.

உடுவிலில் இருந்து மருதனாமடம் செல்லும் பாதையில் சற்று வயதான ஒரு மனிதரிடம் ” வாணர்! மழை வருமோ ” என்றால் அவர் அடை மழைபோல ததூஷணத்தால் திட்டுவார் என்று அறியக்கிடைத்ததும் அந் நாட்களில்தான். பின்பு தினமும் அவரிடம் மழைவருமோ என்று கேட்டுவிட்டு ஓடிவோம். ”டேய், உன்ட அப்பாட்ட சொல்லுவன்? என்று வாணர் கத்திய போது போது ” அதுக்கு நீங்க 250 மைல் நடக்ககோணும் என்று கத்திவிட்டு ஓடிப்போய் அண்ணணிண் சைக்கில் பாய்ந்தேறி பறந்த நாட்கள் இனிமையானவை.

1981ம் ஆண்டு தைமாதம் இரண்டாம் திகதி மாமியுடனான ராஜாங்க உறவுகள், அவர் என்னை எதற்காகவோ திட்டியதால் முறிந்துபோனது. மானஸ்தனான நான் இரவுப்புகையிரதத்தில் ஏறிக்குந்திக் கொண்டேன். புகையிரதநிலையத்துக்கு வரும் வழியில் வாணரிடம் ”வாணர்! மழைவருமோ?” என்று கேட்டேன். அவர் அதற்கு, அவரின் மொழியில் பதில் சொன்னார். எனது அண்ணரும் நானும் விழுந்த விழுந்து சிரித்தோம்.

மஹோ சந்தியில் இறங்கி மட்டக்களப்பு புகையிரத்தை எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். வீடு அமைதியாயிருந்தது. தம்பி யாழ்ப்பாணத்தில் என்பதால் வீட்டில் தங்கை மட்டுமே இருந்தாள். அவளுடன் எம்முடன் வாழ்ந்திருந்த எம்மியும் வீட்டிலிருந்தார்.

அப்பாவுக்கு சுகமில்லை, மட்டக்களப்பு பெரியாஸ்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அம்மா அங்கே நிற்கிறார் என்று அறியக் கிடைத்தது.

அப்பாவுக்கு, வைத்தியர்கள் ராட்சச ஊசிகள் போடுவது போலவும் அவர் என்னை விடுங்கோ.. விடுங்கோ.. நான் அவனுக்கு இனி அடிக்கமாட்டேன் என்று கத்துவது போலவும் கற்பனையோடியது.

ஆஸ்பத்திரிக்கு செல்வதானால் டவுனுக்கு செல்ல வேண்டும். டவுனில் புதிய படங்கள் ஓடும் என்று சிந்தனையோடியதால் 5 ரூபாய் பெற்றுக்கொண்டு  படம் பார்க்க வெளிக்கிட்டேன்.

எனது அப்பா ஆங்கிலமொழியில் கற்றவர், தமிழெழுத்துக்களும் என்னைப்போல் அவரிடம் செல்ல அஞ்சின. அவர் ஒரு நாளும் என்னை ”ஊறுப்பமைய எழுது” என்று கூறாததன் ரகசியமும் இது தான்.

தமிழ் சரளமாகப் பேசுவார். ஆனால் எழுத்து என்றால் ஆங்கிலம் தான் அவர் பாஷை. எனக்கு இதில் ஒரு வித ஆட்சேபனைகளும் இருக்கவில்லை, அவர் எனது ஆங்கிலத்தில் தலையிடும் வரை. அம்மாவுக்கும், அப்பாவுக்கும்  ஆங்கிலம் கைவந்த கலை என்றால் எனக்கும் அது அப்படியே ஆகவேண்டும் என்று ஏதும் விதிகள் இருக்கிறதா என்ன? நமக்கு தமிழ்தான் கைவந்த மொழியாக இருந்தது. ஆங்கிலத்தில் 30 - 40 புள்ளிகளை எடுப்பதே குதிரைக்கொம்பாய் இருந்த காலம் அது.

இதை விட அப்பாவுக்கு கணிதத்தில் அதிக விருப்பமிருந்தது. கணக்கு தெரியாவிடில் உன்னை கணக்கிலெடுக்கமாட்டார்கள் என்னும் கோட்பாட்டை பின்பற்றுபவர் அவர். நமக்கு கணக்கு என்றால் காத தூரம் ஓடும் சக்தி இருந்தது.

10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலப் பரீட்சைத்தாளில் ஒரு accident  பற்றி கட்டுரை எழுதச்சொல்லியிருந்ததை பார்த்தவுடனேயே எனக்கு  accident  ஆகிவிட்டது. இருந்தாலும் ஒரு விதமாக கட்டுரையை எழுதி முடித்தேன். பல இடங்களில் ‌ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக அவற்றை தமிழில் உச்சரித்து எழுதினேன். உதாரணமாக: அந்த வாகனம் மலையில் இருந்து உருண்டு உருண்டு விழுந்தது என்பதை.. " That car fall down and ரோலிங் ரோலிங் from the மவுண்டன்" என்று எழுதினேன். பையனுக்கு சொற்கள் தெரிந்திருக்கிறதே என்றாவது வினாத்தாளை திருத்துபவது நினைப்பார் என்று நினைத்தேன். அவர் நான் நினைத்தது போல் நினைக்கவில்லை என்று பெறுபேறுகள் வந்து போது புரியும் என்பது அன்று எனக்கு தெரிந்திருக்கவில்லை

அப்பாவைப் பார்த்துவிட்டு படம் பார்க்கப் போகலாம் என்பதால் கூல் பாருக்குள் சென்று ”பலூடா” அருந்திவிட்டு வைத்தியசாலைக்குச் சென்றேன். அப்பாவின் கட்டிலைச்சுற்றி மறைப்பு செய்திருந்தார்கள். அப்பாவைச் சுற்றி வைத்தியர்களும் தாதிகளும் நின்று கொண்டிருந்தார்கள். அம்மா கால்மாட்டில் நின்றிருந்தார்.

அப்பா காற்றைத் தேடி தேடி தலையை உயா்த்திக்கொண்டிருந்தார். வைத்தியரான என் அம்மா  என்னை அணைத்தபடியே ”அப்பா எங்களைவிட்டு போகப்போறார்டா” என்றார். சில நிமிடங்களில் அப்படியே நடந்தது.


பி.கு: அந்த வருடம் எனக்கு ஆங்கிலத்தில் ”சித்ததியடையவில்லை” என்றும், கணிதப்பாடத்தில் ”மிகச் சாதாரண சித்தி” என்றும் பெறு பெறுகள் வந்தன.

அப்பா இருந்திருந்தால் என்று நினைக்கவே பயமாயிருந்தது .........

5 comments:

  1. புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  2. மனதை தொடும் சம்பவங்கள்!

    ReplyDelete
  3. சாதாரணமானவனின் மனதில் கோர்க்கும் சம்பவங்கள் எங்களையும் எங்கள் வீடுகளுக்கு அனுப்பிவைக்கிறது !

    ReplyDelete

பின்னூட்டங்கள்