சில நாட்களுக்கு முன்பொரு நாள் மாலை நேரம் வெளிநாட்டவர் செறிந்து வாழும் புறநகர்ப்பகுதியினூடாக நடந்து கொண்டிருந்தேன். நேரம்
9 மணியிருக்கும். பனி பெய்துகொண்டிருந்தது. பனிசுத்திகரிப்பு வாகனங்கள்
பாதையை சுத்திகரிக்க மனிதர்கள் தத்தமது வீடுகள் நோக்கி நகர்ந்து
கொண்டிருந்தனர். பனியில் பட்டுத்தெறித்த மங்கிய மஞ்சல் நிற வீதி விளக்கின்
வெளிச்சம், பனிக்கால கும்மிருட்டை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது.
எனது வாழ்க்கை நிலை பற்றி
சிந்தித்தபடியே, சுய பரிதாபத்துடன் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன்.
ஒருவர் என்னைக் கடந்து போனார். உள்ளுணர்வின் தூண்டலினால் திரும்பிப்
பார்த்தேன். அவரும் திரும்பிப் பார்த்தார். பின்பு ”அண்ணே நீங்களா
என்றார்”. எனது நினைவுவங்கியில் அவர் பற்றிய எதுவித இருப்பும் இருந்ததாய்
தெரியவில்லை. எனவே ”யாரய்யா நீங்க” என்றபடியே அருகில் சென்று அவரின்
முகத்தைப் பார்த்தேன். பரீட்சயமான முகமாயிருந்தது. ஆனால் பெயர் நினைவில்
இருக்கவில்லை. ”அங்கே வாருங்கள் பேசுவோம்” என்று கூறியபடியே எனது பதிலை
எதிர்பார்க்காமல் நடக்கத் தொடங்கினார். அவரின் வேகத்துக்கு என்னால்
ஈடுகொடுக்கமுடியவில்லை. வீதியில் ஒளி குறைந்த ஒரு சந்தில் நின்றிருந்தார். அருகில் சென்று உரையாடினேன், அவருடன்.
சில மாதங்களுக்கு முன் அவரை ஒரு கடையில் சந்தித்திருக்கிறேன். அதன்
பின் அதே கடையில் அவரை சிலதடவைகள் சந்திருந்தது நினைவிற்கு வந்தது. ”எப்படி
இருக்கிறீர்கள்?” என்ற போது, சில நாட்களுக்கு முன் அவரை போலீசார் கைது
செய்ய வந்தபோது ஓடித்தப்பி தற்போது வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வருவதாகச்
சொன்னார். இருட்டிய பின்பே வெளியே திரிவதாகவும், தற்போது வேலைக்கு
சென்றுகொண்டிருப்பதாகவும் கூறினார்.
அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நோர்வேயில் வதிவிட அனுமதியும், அகதி
அந்தஸ்தும் மறுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவிக்கப்பட்டவர்.
முன்பு நான் சந்திக்கும் போதே இது பற்றி அவர் கூறியிருந்தார். இருப்பினும்
தனது மூன்றாவது விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதால் அந் நாட்களில் அவருக்கு
வதிவிட அனுமதியிருந்தது. அவரின் நண்பர்களாக சில மலையத்தவர்களும் அவருடன்
இருந்தார்கள். அவர்களில் சிலரர் வதிவிட அனுமதி மறுக்கப்பட்டவர்கள். எனவே
தொடர்ந்து ஒரேயிடத்தில் தங்குவதை தவிர்த்து வந்தார்கள். அவர்கள் அனைவரும்
தொழில் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களாகையால் இரகசியமாகவே தொழில்
புரிந்தனர். அவர்களின் சம்பளங்களும் உரிமைகளும் சராசரிச் சம்பளத்தை விட
மிகவும் குறைவானதாகவும், எவ்வித உரிமைகள் அற்றதாகவுமே இருந்தன. இப்படியான
தொழில்களை தெரிவு செய்வதை விட அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.
நான் குறிப்பிடும் நண்பர் அவரது குடும்பச்சொத்தான வீட்டை ஈடுவைத்த
பணத்திலேயே இங்கு வந்துள்ளார். அவருக்கு 30 - 33 வயதிருக்கலாம்.
திருமணமாகாதவர். தனது சகோதரியின் திருமணத்திற்கு முன்
வீட்டை மீட்டு கொடுக்கவேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். வீட்டையே
இன்னும் மீட்கவில்லை, அதற்கிடையில் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவு
வந்திருக்கிறது. ஊரிலேயே இருந்திருக்கலாம் வீடாவது மீதமிருந்திருக்கும்
என்றார். சகோதரியின் திருமணம், தனது வாழ்க்கை, தாயாரின் உடல்நிலை என்று
அவரின் பேச்சு அலைந்துகொண்டிருந்தது. மன அமைதியை முற்றிலும் இழந்து
அமைதியற்றவராயிருந்தார்.
தற்போது ஒரு இடத்தில் தொழில் புரிவதாகவும் மிகவும் கடினமான வேலை,
சம்பளம் மிகக் குறைவு என்றும், தன்னை போலீஸ் தேடுவதை ஏனையவர்கள் அறிவதை
அவர் விரும்பாதிருந்தார். சில இடங்களில் சிலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள்
சம்பளம் கொடுக்கப்படாமல் அவர்கள் போலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டு
அவரவர்களின் நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதை அவர் அறிந்திருந்தார்.
நானும் இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அறிந்த சம்பவத்தில் 6 மாத
சம்பளம் கொடுக்கப்படாமலே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதாகப்
பேசிக்கொண்டார்கள்.
நோர்வேயில் இருப்பது ஆபத்தானது என்பதால் போர்த்துக்கல் சென்று
அந்நாட்டு வீசா பெற்றுக்கொண்டால் மீண்டும் இங்கு திரும்பவரலாம் என்று
ஒருவர் கூறுவதாகவும் அது பற்றி ஏதும் எனக்கு தெரியுமா என்றார். இல்லை,
ஆனால் விசாரித்துப் பார்க்கலாம் என்றேன். ஆனால் போர்த்துக்கல் வீசா எவ்வாறு
கிடைக்கும் என்று எனது கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை. மாறாக ஒரு
பாக்கிஸ்தானியர் 30000 குறோணர்கள் தந்தால் போர்த்துக்கல் வீசா
பெற்றுத்தருவதாகக் கூறுகிறார், என்றார். என்ன செய்யப்போகிறீர்கள் என்றதற்கு
ஒரு பெருமூச்சொன்றே பதிலாய்க் கிடைத்தது. மௌனத்தில் கடந்து போனது சில
கணங்கள். வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லையே என்ற போது அவர் குரல்
தளுதளுத்திருந்தது. என்னால் ஏதும் பேச முடியவில்லை. ”ஏதோ யோசித்துச்
செய்யுங்கள்” என்று கூறி
விடைபெற்றுக்கொண்டேன். கும்மிருட்டினுள் கரைந்து போனார் அவர். இருட்டு
அவருக்கு பழக்கப்பட்டது போல் இருந்தது. இருட்டும் அவரை விழுங்கிக்கொண்டது.
வீசா, தங்குமிட அனுமதி, இந் நாட்டுப் பிரஜை, நிரந்தரத் தொழில் என்று பல
வசதிகள் உள்ள நான் எனது வலிகள் தாங்கமுடியாதவை என்று புலம்பிக்
கொண்டிருக்கும் போது, வாழ்வாதாரமே இன்றி, இருட்டின் துணையுடன் வாழும் அவர்,
எனக்கு எதையோ உணர்த்திப்போனது போலிருந்தது. அது பற்றி சிந்தித்தபடியே வீதி
வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினேன்.
இன்றைய நாளும் நல்லதே!
///வீசா, தங்குமிட அனுமதி, இந் நாட்டுப் பிரஜை, நிரந்தரத் தொழில் என்று பல வசதிகள் உள்ள நான் எனது வலிகள் தாங்கமுடியாதவை என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, வாழ்வாதாரமே இன்றி, இருட்டின் துணையுடன் வாழும் அவர், எனக்கு எதையோ உணர்த்திப்போனது போலிருந்தது. அது பற்றி சிந்தித்தபடியே வீதி வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினேன்.////
ReplyDeleteமனதின் திருப்தியின் எல்லையை இதுவரை யாரும் அறிந்திராத போது நீங்கள் மட்டும் விதிவிலக்காக பார்க்கிறீர்கள்..... அப்படி நாங்களெல்லாம் போதுமென திருப்தி கொண்டிருந்தால் ஏழை என்றொரு இனமும் பட்டினி என்றொரு உணர்வும் இல்லாமலே இருந்திருக்கும்..
>வீசா, தங்குமிட அனுமதி, இந் நாட்டுப் பிரஜை, நிரந்தரத் தொழில் என்று பல வசதிகள் உள்ள நான் எனது வலிகள் தாங்கமுடியாதவை என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, வாழ்வாதாரமே இன்றி, இருட்டின் துணையுடன் வாழும் அவர், எனக்கு எதையோ உணர்த்திப்போனது போலிருந்தது
ReplyDeleteஎன்ன செய்வது, "இரு கோடுகள்" என்று முன்பொரு காலத்திற் பார்த்த சினிமாப்படம் ஞாபகத்திற்கு வருகிறது..
யாரைப் பார்த்து யார் அனுதாபப்படுவது என்கிற நிலைதான் எங்களுக்கு.ஆனால் சிலசமயங்களில் இரங்கி அனுதாபப்படுவதாலேயே சிக்கலும் கூட !
ReplyDeleteஅருமையான பதிவு ! விரும்பிப் படித்தேன். நன்றி சார்!
ReplyDelete