ஓர்பால் விருப்புக்கொண்டவனின் நெஞ்சுரம்

தமிழனான ஒரு பதின்மவயது இளைஞன் தன் பாலியல் நிலையை வீடியோ பதிவின் மூலம் கூறியதைக் காணக்கிடைத்தது. அவ் இளைஞனின் நெஞ்சுரத்துக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். தான் ஒரு ஓர்பால் விருப்புக்கொண்டவன் என்பதனை அவ்வயதுக்கே உரிய உணர்ச்சிகளுடனும், போராட்டங்களுடனும் பேசியது தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதியது.

இளைஞனின் மனப்போராட்டங்களை சிந்தித்துப்பாருங்கள். தனித்து நின்று சமூகத்தால் பேசப்பயப்படும், ஒதுக்கப்படும், ஏளனப்படுத்தப்படும் விடயத்தை பேசுவதற்கு எத்தனை நெஞ்சுரம் வேண்டும். தாய்தந்தையரின் மனநிலைகளுடன் அவனது உள நிலை நடாத்தும் போராட்டதில் எத்தனை எத்தனை உணர்ச்சிகள் கலந்திருக்கும்? அன்பில் இருந்து, அவமானம், கோபம், ஏமாற்றம், தோல்வி, தாழ்வு மனப்பான்மை, சுயகௌரவம் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

அவ் இளைஞனின் மனநிலையை சிந்தித்துப்பார்க்கிறேன். மூச்சு விட முடியாத ஒரு பெட்டிக்குள் இருந்து அதை உடைத்துக்கொண்டு வெளிவந்து சுதந்திரமாய் சுவாசிப்பதைப் போல் உணர்வான் என்றே நம்புகிறேன். ”இது நான்” என்னும் அவனின் சுய இருப்பின் கூவல் அவனின் முதுகுக்குப்பின்னால் பேசியவர்களை வாயடைத்துப் போகச்செய்திருக்கும். எல்லாவற்றையும் விட ரகசியத்தின் சுமையை இறக்கிவைத்த மனதின் ஆறுதலே அவனுக்கு பெரிதாயிருக்கும் என்றே எண்ணுகிறேன். உலகத்தையே வென்றது போலிருக்கும் அவனுணர்வுகள்.

ஓர்பால் விருப்புடைய குழந்தைகளைப் பெற்றவர்களின் மன நிலை மிகவும் பரிதாபமானது. குழந்தையை தவறாக வளர்த்துவிட்டோ‌மா என்பதில் இருந்து அவமானம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை என்று அவர்களின் உளநிலை மிகவும் வேதனைக்குரியதாயிருக்கும். யாருடன் இதைப் பற்றி பேசலாம்? எவ்வாறு பேசலாம்? அல்லது பேசாமலே இருப்போமா? என்று போராடிக்கொண்டீடயிருப்பார்கள். அவர்கள் வளர்ந்த காலத்தில் இப்படியான விடயங்கள் வெளியில் பேசப்படாதிருந்ததால் அவை பற்றிய எவ்வித கருத்துக்களும் இல்லாதிருக்கலாம் அவர்களிடம். எவ்வாறு இதைப் பற்றி தமது குழந்தைகளுடன் பேசுவது என்பதே ‌பெரும் திண்டாட்டமாயிருக்கும் அவர்களிடம்.

சமுதாயத்தில் அப் பெற்றோர்களின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள். அதுவும் எங்கள் சமுதாயத்தில் ”கலாச்சார காவலர்கள்” என்பவர்களின் விமர்சனங்கள் இப் பெற்றோரை உயிருடனே கொல்லும் சக்தியுடையவை.  மிகவும் சொற்பமானவர்களே இப் பெற்றோருக்கு ஆறுதலாக இருப்பார்கள். எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் அவர்களின் ஆறுதலான வார்த்தைகள்  அப் பெற்றோருக்கு மலைபோன்ற பலத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

எமது ஊரில் இப்படி நடைபெறுவதில்லை என்று பேசும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவது முற்றிலும் பிழை. ஓர்பால் விருப்புடையவர்கள் எங்கும் இருக்கிறார்கள். பேசக்கூடாத விடயம், பேசத் தயங்கும் விடயங்களை மூடிபோட்டு நிறுத்த முயற்சிப்பது ஆரோக்கியமான விளைவுகளைத்தராது. தவிர்த்து, நாம் அவற்றைப் பற்றிப் பேச, உரையாட வேண்டும்.

இப்படியானவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள், நோயாளிகள், வன்புணர்ச்சிக் காமுகர்கள் என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். இப்படியான கருத்துக்களைக் கொண்டவர்கள் சம மனிதர்களை புரிந்து கொள்ளமுடியாதவர்களே. எனக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது. அதே போல் அவனுக்கு இன்னொரு அவன் மீதும், அவளுக்கு இன்னோரு அவள் மீதும் காதல் வருகிறது. இதில் என்ன பிழையிருக்கிறது? பாலியல் நிலை அல்லது பாலியல் தன்மை என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அது பற்றி விமர்சிக்க உரிமையில்லை.

ஓர்பால் விருப்புடையவர்கள் தனியே உடல் இச்சைகளை மட்டுமே நோக்காக் கொண்டவர்கள் என்னும் பிழையானதே. தனியே உடல் இச்சைகளை மட்டுமே நோக்காக் கொண்டவர்கள் எப்படிப்பட்ட பாலியல் நிலையைக் கொண்டவர்களிடமும் இருக்கிறது என்பதே உண்மை. ஒர்பால் விருப்புடையவர்களில், அன்பின் ஈர்ப்பால் இணைந்து வாழ்பவர்கள் மிகக் குறைவு என்னும் கருத்தும் ஏற்புடையதல்ல.

சற்று வித்தியாசமானவர்கள் என்பதால் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்காமல் அவர்களையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.


பி.கு:
நோர்வே வாழ் நண்பர் தியாகலிங்கம் ஓர்பால் விருப்பை அடிப்படையாகவைத்து ”திரிபு” என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார். புலம்பெயர் இலக்கியவுலகில் இது முக்கியமான நாவலாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். 12.02.2012 ‌ ஒஸ்லோவில் நூல் அறிமுகவிழா நடை பெறுகிறது. நாவலை வாசிப்பதற்கு ஆவலாயிருக்கிறேன்.


இன்றைய நாளும் நல்லதே

11 comments:

 1. ஹ்ம்ம், கொஞ்சம் கஷ்டம் தான்

  ReplyDelete
 2. நல்ல பதிவு நண்பரே!!!!!!
  வாழ்த்துக்கள்.ஓர் பாலின விரும்பிகளும் இயல்பான மனிதர்களே என்பதை புரிந்து கொள்ள மறுக்கும் சமுதாயம்.இது அவர்கள் விரும்ப்பி வேண்டுமென்றே செய்வதாகவே பல்ரும் நினைக்கின்றனர்.அவர்கள் கொஞ்சம் வித்தியாசமான் இயல்புடையவர்கள் அவ்வளவுதான்.
  விலங்குகளிலும் ஓரினப் புணர்ச்சி உண்டு .


  http://en.wikipedia.org/wiki/Homosexual_behavior_in_animals
  நன்றி

  ReplyDelete
 3. Antha video pathivinudaya URL kodungalen sanjayan....Thanks.

  ReplyDelete
 4. நான் இதை கடுமையாக ஆட்சேபிக்கிறேன் நண்பரே!. எதிலும் ஒரு ஒழுங்கு, வடிவமைப்பு, ஒரு நேர்த்தி இருக்கவேண்டும். வாழ்விலும் இப்படித்தான் வாழ வேண்டும் என்று விதிகள் வகுத்து வாழ்ந்தால்தான் உயர்ந்த இலட்சியங்களை அடைய முடியும். ஒழுக்கத்தைக் குறித்து திருவள்ளுவர் எத்தனை குறட்பாக்களை அருளியிருக்கிறார். மேன்மையான குணங்களை வலியுறுத்திய முன்னோர்கள் என்ன முட்டாள்களா? இந்த கேடு கெட்ட செயலுக்கு தயவு செய்து வக்காலத்து வாங்காதீர்கள். இடித்துரைத்து திருத்துவதே அறிவுடையோக்கழகு. தவறாக நினைக்க வேண்டாம் சகோ. நட்புரீதியில்தான் சொல்கிறேன்.

  ReplyDelete
 5. நண்பர் சார்வாகன் சொன்னது தவறு. விலங்குகளும் மனிதர்களும் ஒன்றா. ஆயிரம் எறும்புகளையோ பிராணிகளையோ கொன்றால் இவ்வுலகம் வியப்பதில்லை. ஆனால் ஒரு சிறு குழந்தையை கொலை செய்தால் அய்யோ கொன்றுவிட்டானே என்று உலகம் பதைக்கிறதே. இதிலிருந்தே புரியவில்லையா? மனிதன் வேறுவகையான படைப்பு. விலங்குகள் வேறுவிதமான படைப்பு. குழப்பிக் கொள்ளாதீர்கள்.இதுதனர் எல்லா தீய செயல்களுக்கும் அடிப்படை கோளாறாய் இருக்கிறது.

  ReplyDelete
 6. உங்கள் பெயரை நீங்கள் குறிப்பிடவில்லை நண்பரே. இத்துடன் youtube இணைப்பை இணைத்திருக்கிறேன். http://www.youtube.com/watch?v=BNQy3awyysc&feature=player_embedded

  அவ் இளைஞனின் பேட்டி நோர்வேஜிய மொழியிலேயே அமைந்திருக்கிறது என்பதை அறிக.

  நன்றி

  நட்புடன்
  சஞ்சயன்

  ReplyDelete
 7. நண்பர் துரை டேனியல்
  //நண்பர் சார்வாகன் சொன்னது தவறு. விலங்குகளும் மனிதர்களும் ஒன்றா//
  நான் சொல்ல வந்தது இதுதான்.
  ஓர் பால் விரும்பிகள் அதனை அவர்களாகவே முடிவு எடுத்து ஈடுபடுவது இல்லை,இதன் காரணம் ஜீன் குறை பாடுதான்,இதே குறை பாடும் சில விலங்குகளிலும் உண்டு என்பதையே சுட்டினேன்.

  விலங்குகள்தான் இப்படி செய்யும் என புரிய வேண்டாம்.குறைந்த பட்சம் சில விலங்குகளும் இப்படி செய்யும் என்பதை ஒத்துக் கொண்டதற்கு நன்றி.

  நல்ல வசதியுள்ள குடும்பத்தில் பிறந்தும் கூட பால் குழப்பத்தால் உறவு,கல்வி,செல்வம் அனைத்தையும் விட்டு ஓடி கொடுமையான வாழ்வு வாழும் பல ஓர் பால் விரும்பி& திரு நங்கைகளின் கதைகள் படித்தது இல்லையா?

  இதில் சிலவகை மட்டும் மன நல் மருத்துவத்தின் மூலம் சரி செய்ய முடியும் என கூறுகின்றனர்.
  இது ஒரு மருத்துவ,மன்நலம் சார்ந்த பிரச்சினை.இதனை தவிர்க்க இயலுமா என்பதற்கு சில முயற்சிகள் முன்னெடுக்கலாமே தவிர இதை ஒழுக்கம் சார்ந்த பிரச்சினையாக பார்ப்பதை தவிர்க்கலாம்.
  நன்றி

  ReplyDelete
 8. நண்பர் துரை டேனியல்
  ஓர் பால் விரும்பிகள் ஏன் அப்ப்டி செய்கிறார்கள் என்பது அறிவியலின் இபோதைய விடை தெரியா கேள்விகளுல் ஒன்று.அது ஏன் என்று கண்டறியும் போது இதற்கு தீர்வு வரலாம்.
  **************
  Biology and sexual orientation is the subject of research into the role of biology in the development of human sexual orientation. No simple, single cause for sexual orientation has been conclusively demonstrated, but various studies point to different, but it is generally accepted by pediatricians to be caused by a combination of genetic, hormonal, and environmental influences,

  http://pediatrics.aappublications.org/content/113/6/1827.full?maxtoshow=&hits=10&RESULTFORMAT=&fulltext=%2522Sexual+orientation+and+adolescents%2522&searchid=1&FIRSTINDEX=0&sortspec=relevance&resourcetype=HWCIT
  ***************
  http://pediatrics.aappublications.org/content/113/6/1827.full?maxtoshow=&hits=10&RESULTFORMAT=&fulltext=%2522Sexual+orientation+and+adolescents%2522&searchid=1&FIRSTINDEX=0&sortspec=relevance&resourcetype=HWCIT
  ****************
  "அவர்கள் செய்வது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்"

  ReplyDelete
 9. naan neenaikiren neengal thavarakka purinthukoondirkal avillangeneen pettiyai ungalukku norsk puriyatha .

  ReplyDelete
 10. எனக்கு நோர்வேஜிய மொழி நன்கு புரியும் நண்பரே. நான் அந்த பேட்டியை தவறாகப் புரிந்திருக்கிறேன் என்கிறீர்களே.. அதை சற்று விளக்கிக்கூறினால் புரிதலுக்கு இலகுவாக இருக்குமே.

  ReplyDelete
 11. First Gay Marriage Proposal in Singapore....

  http://www.youtube.com/watch?v=s_QIiAvO5TI

  ReplyDelete

பின்னூட்டங்கள்