சிங்கத்திடம் சிக்கி சின்னாபின்னமான சோகக் கதை

எனக்கு ஒரு “சிங்கம்” நண்பராக இருக்கிறார் என்று ஏற்கனவே கூறியிருக்கிறேன். எனது நண்பர் என்றதும் அச்சனின் வயது அதிகமாயிருக்கும் என்று நீங்கள் நினைக்கக்கூடாது. அச்சனுக்கு வயது இந்த இளவேனிற் காலம் வந்தால் 10 முடிந்து 11 ஆரம்பிக்கிறது.

சிங்கத்தைப்பற்றி ஓரிரண்டு கதைகள் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். ஆனால் இதுவரை அவருக்கு ஏன் சிங்கம் என்று பெயர் வந்தது என்று எழுதவில்லை. அதைக் கூறிவிட்டு இன்றைய கதையை ஆரம்பிக்கிறேன்.

இன்றைய காலத்தில், சிங்கத்தின் கதாநாயகன் தனுஸ் என்பதில் எனக்கு எவ்வித ஐயமில்லை. அதற்குக் காரணம் அண்மையில் வெளிவந்த ஒரு திரைப்படத்தின் சண்டைக்காட்சி. தனுஸ்’க்கு முன் விஜய். விஜய்க்கு முன் சூர்யா. சூர்யாவுக்கு முன் அதே சூர்யாதான்.

சூர்யா நடித்த சிங்கம் மற்றும் சிங்கம்-2 திரைப்படங்களை பார்த்திருக்கிறீர்களா? இந்த இரண்டு படங்களையும் எனது சிங்கம் விடுமுறை நாட்களின்போது காலை, மதியம், மாலை என்று ஒரு நாளைக்கு 3 தடவைகள் என்று மாதக்கணக்கில் பார்த்த ஒரு பொற்காலம் இருந்தது.

“ஒவ்வொரு அடியும் ஒண்ணரை தொன்’டா, பாக்றியா.. பாக்றியா” என்றெல்லாம் எனக்கு டயலாக் பேசி, சண்டைக்காட்சிகளின்போது சோபாவின் நுனிக்கு வந்து, கண்கள் விரிந்திருக்க, உலகமே மறந்த ஒரு உன்னதமான ஜென் மனநிலையில் அந்த இரண்டு படங்களையும் அவன் பார்த்து ரசித்ததை நான் கண்ணுற்றபின் அச்சனுக்கு “சிங்கம்” என்று பெயர் வைத்தேன்.

அவன் இன்றுவரை அந்தப் பெயரை ஆட்சேபிக்கவில்லை. அவ்வப்போது அவருக்கு, தான் அப்படி அழைக்கப்படுவதில் பெருமை இருப்பதை நான் சிங்கத்தின் புன்னகையில் இருந்து புரிந்துகொண்டுள்ளேன்.

இன்றைய கதை இனிமேல்தான் ஆரம்பமாகிறது.

இன்று சிங்கத்தை எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். அப்புறமாய் நாம் படம் பார்க்கப்போவதாய் திட்டம்.

எப்போழுது வந்தாலும் கேட்டும் இரண்டு கேள்விகளையும் சிங்கத்தார் இன்றும் கேட்டார்.
எப்போதும் சொல்லும் பதில்களை நானும் கூறினேன்.

“என் இவ்வளவு சிறிய வீட்டில் இருக்கிறாய்?”
“ராசா…. எனக்கு இது போதுமாயிருக்கிறது”
“உன்னிடம் ஏன் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை?”
“என்னிடம் கணிணி இருக்கிறது. எனவே தொலைக்காட்சிப்பெட்டி தேவையில்லை”
“ம்” என்று கர்ச்சித்தது சிங்கம்.

“அய்யா, பெப்சி குடிக்கிறாயா” இது நான்.
“எனக்கு ஆட்சேபனையில்லை” என்றான் நோர்வேஜிய மொழியில், அநாயசியமாக.

எனக்கு ஆட்சேபனை என்னும் சொல் 11 வயதில் தெரிந்திருக்கவில்லையே என்று நினைத்துக்கொண்டேன். இப்படித்தான் ஆரம்பித்தது அந்த சோகமான நாள்.

“அய்யா, இன்று என்ன திரைப்படம் பார்ப்போம்” என்றேன்.

எங்கள் இருவருக்கும் குழந்தைகளுக்கான அனிமேசன் திரைப்படங்கள் என்றால் மிகவும் பிடிக்கும். எனவே கணிணியில் புகுந்து, கூகிள்இல் மேய்ந்து ஒரு திரைப்படத்தைக் கண்டுபிடித்தான். அது அனிமேசன் படம் இல்லை.

“எத்தனை வயதுக்குரியவர்களுக்கான படம்”; என்று சிங்கத்தாரைக் கேட்டேன்.
கொடுப்புக்குள் சிரித்தபடியே “15 என்றான். படத்தின் பெயர் ஏதோ பட்மேன் - சூப்பர்மேன் என்றும் கூறினான்.

கடந்த முறை சிங்கத்தை ஒரு 15 வயது திரைப்படத்திற்கு அழைத்துச் சென்றபோது ஒரு ஏடாகூடமான முத்தக்காட்சியின் போது கண்கணை மூடிக்கொண்டு “சஞ்சயன் மாமா, நான் அவர்கள் முத்தமிடுவதை பார்க்கவில்லை என்று கூறிய அதி மேதாவி இவன். அது மட்டுமல்ல அன்று படம் முடிந்ததும் “சஞ்சயன் மாமா, வீட்டில் முத்தக்காட்சியைப்பற்றி சொல்லாதே” என்றும் ஒப்பந்தமும் போட்டுக்கொண்டான்.

எனவே இவனை மீண்டும் 15 வயது படத்துக்கு அழைத்துப்போனால் எனக்குத்தான் வில்லங்கம்வரும் என்று நினைத்து, வேறு படம் தேடு என்று கட்டளையிட்டேன்.

சிங்கம் ”இல்லை அது நல்ல படம், அதைப் பார்ப்போம்” என்றது.

”அது எனக்கும் தெரியும். நீங்க இப்ப வேற படம் தேடுறீங்க இல்ல வீட்ட போவோம்” என்றேன் சற்று அழுத்தமாக.

மறுநிமிடமே ஒரு குழந்தைகளுக்கான அனிமேசன் படத்தைக் கண்டுபிடித்தான்.
வாகனத்தில் ஏறிக்கொண்டோம்.

ஜானி படத்தில் ஜென்சி பாடிய “ஒரே வானிலே” என்ற பாட்டு ஒலிக்கத்தொடங்கியது. நான் தலையை மேலும் கீழும் ஆட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தேன். சிங்கம் சகிக்கமுடியல என்னும் அர்த்தத்தில் தலையை வலது இடது என்று ஆட்டியது மட்டுமல்ல எனது பாடலை நிறுத்தி, வானொலியை தட்டி காதுகொடுத்து சகிக்க முடியாத ஒரு ஆங்கலப்பாடலை கேட்கத்தொடங்கினான்.

இப்போது மேலேத்தேய இசை இசைத்தது. சிங்கம் என்னை கடைக் கண்ணால் பார்த்தபடி, தலையாட்டியபடி ரசித்துக்கொண்டிருந்தது.

அவன் என்னைக் கலாய்க்கிறான் என்பது அவனது நக்கல் சிரிப்பில் புரிந்தது.

எனவே மிகவும் மரியாதையான குரலில் “அய்யா, இந்த பாடலை யார் பாடியது?” என்றேன். சிக்கினான்டா சிங்கம் என்று நான் நினைத்து முடிப்பதற்கிடையில் ….
"Pitbull" என்னும் தென் அமெரிக்கக் கலப்பு இனத்துப் பாடகர் பாடியது” என்றான்.

“டேய், பொய் சொல்லாதே என்றபோது, வானொலியில் “இந்த பாட்டை பாடியவர் "Pitbull” என்று அறிவிப்பாளர் அறிவித்தார்.

விதி என்னோடு தன்விளையாட்டை ஆரம்பித்திருந்தது.

அடுத்து ஒரு பாட்டு வந்தது. “சரி, இந்த பாட்டு யார் பாடியது” என்றேன். சிங்கம் அசரவிலலை… சற்றும் யோசிக்காது “Alan Walker". இவர் ஒரு "You Tuber” என்றான். வானொலி இம்முறையும் அவனை ஆமோதித்தது. வீடு வந்தபின் Alan Walker ஐ கூகிள்பண்ணினேன். அவன் சொன்னது அத்தனையும் உண்மை.

11 வயதில் எனக்கு TMSஐ தெரியாதே....

அவனின் வாயில் அப்போது வந்தமர்ந்த அந்த நக்கல் சிரிப்பை இப்போது நினைத்தாலும் எனக்கு பயமாக இருக்கிறது.

அதன்பின் நான் வாயைப்பொத்திக்கொண்டேன். வாகனம் தியட்டருக்குச் சென்றுகொண்டிருந்தது. சிங்கத்தார் தலையாட்டியபடியே பாடலை ரசித்துக்கொண்டிருந்தார்.

இருவரும் இனிப்புக்களுடன் படத்தைப் பார்ப்பதற்கு அமர்ந்துகொண்டோம்.

அருமையான படம். சிங்கத்தார் படத்தை ரசித்தும், விழுந்து விழுந்து சிரித்தும் பார்த்துக்கொணடிருந்தார்.

அப்போது படத்தில் ஒரு காட்சியில் வெள்ளை நிற நீண்ட தாடிவைத்த கதாநாயகனின் குருநாதர் “உனக்கு “Inner Peace” தேவை” என்று தனது மாணவனுக்கு அறிவிப்பார்.
அட. இது பெரிய அர்த்தமுள்ள சொல் ஆயிற்றே. சிங்கத்திற்கு விளங்கியிருக்காதே என்று நினைத்தபடியே, மெதுவாகக் குனிந்து “ராசா, “Inner Peace” என்றால் என்ன என்று தெரியுமா” என்று கேட்டேன்.

“சூ... சும்மா படத்தைப் பார். அலட்டாதே, பிறகு கதைப்போம்” என்ற கர்ச்சித்தது சிங்கம்.

இவனுக்கு அதன் அர்த்தம் தெரியாது என்பதால் கதையை மாற்றுகிறான் என்று நினைத்தேன்.

பொறுடீ.. படம் முடியட்டும், வச்சுகிறேன் கச்சேரியை என்றும் கறுவிக்கொண்டே படத்தைப் பார்த்தேன்.

படம் முடிந்ததும் இருவரும் பீட்சா கடைக்குள் புகுந்துகொண்டோம். சிங்கத்தார் தனக்குரிய பீட்சாவை ஆடர் பண்ணியபின் எனக்கு முன்னே வந்து உட்கார்ந்துகொண்டார்.

“Inner Peace” என்றால் என்ன என்று உனக்கு சொல்லவேண்டும். அது முக்கியமான சொல் என்றுவிட்டு அதுபற்றி சொல்வதற்கு ஆயத்தமாக மூச்சினை உள் இழுக்கிறேன், சிங்கம் “சஞ்சயன் மாமா.. நான் சின்னப்பிள்ளை இல்லை, “Inner Peace” என்றால் அது ஆழ் மனது சம்பந்தப்பட்டது. நீ அதை “சமாதானம்” என்று நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பாகாது என்பது போல நோர்வே மொழியில் கூறி ஏளனமாக என்னைப் பார்த்தான்.

எனது “Inner Peace” மறைந்துபோனது. ஆழ் மனது வலித்த்து.

எனக்கு “ஆழ்மனது” என்ற சொல் அறிமுகமானபோது எனக்கு எத்தனை வயதிருக்கும் என்று யோசித்துக்கொண்டிருக்கிறேன். 11 வயது கடந்த பல பத்து வருடங்களின்பின்னான ஒரு காலமாய் இருக்கவேண்டும்.

எனது சிங்கம் சும்மா சிங்கம் இல்லை…. அவன் ஒரு Lion King

கரைந்து, நிறையும் நான்


இரவு நித்திரை முறிந்து முறிந்து வந்தது. 5 மணிபோல் தூக்கம் கலைந்துபோனது. தனிமை கடும் புகார்போன்று சூழ்ந்துகொண்டபோது பாதுகாப்பற்ற, ஆநாதரவான மனநிலையை மிக மிக அருகில் உணர்ந்தேன். மார்பு தட தட என்று அடித்துக்கொண்டது. அருகில்யாரும் இருந்தால் அவரருகில் அடைக்கலமாகலாம். அப்போது மனது இப்படி அநாதரவான உணர்வினை உணர்ந்து, தவிக்காது என்பதை அறிவேன்.

முன்பு இளையமகள் என்கருகிலேயே தூங்குவாள். அவளுக்கு அடுத்ததாக மூத்தவள். அதிகாலையில் இளையவள் கையைச் சூப்பியபடியே என் மார்பில் ஏறித் தூங்கிப்போவாள். அவளை இறக்கி வைக்கமுனைந்தால், இறுக்கமாய் கட்டிக்கொள்வாள், அசையவேமாட்டாள். அவளது அக்காள் என்னருகில் ஒட்டிக்கொண்டு தூங்கியிருப்பாள். மனது பாதுகாப்பான, நம்பிக்கையான மனஉணர்வில் நிரம்பி வழியும். என்வாழ்வின் உச்சமான நாட்கள் அவை என்பதை நான் அன்று அறிந்திருக்கவில்லை.

அந்நாட்கள் கடந்துபோய் இப்போது தனிமையின் உக்கிரத்தை உணர்ந்துகொண்டிருக்கிறேன். இன்றும் குழந்தைகள் இருந்திருந்தால் என்று நினைத்தேன். மனது வலித்தது. அப்புறமாய் சற்று வாசித்தேன். அதன்பின் தூங்கியும் போனேன். அப்போது மணி 7 இருக்கலாம்.

காலை 09.00 போல் தூக்கம் கலைந்தது. தொலைபேசி மின்னிக்கொண்டிருந்தது. எடுத்துப்பார்த்தேன். இலங்கையில் இருந்து ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது.
கண்ணாடியை அணிந்துகொண்டு யார் அனுப்பியது என்று பார்த்தேன். இலக்கம் மட்டும் இருந்தது. பெயர் என்னிடம் இருந்திருந்தால் அது தெரிந்திருக்கும். எனவே இது முன்பின் அறியாத ஒருவர் என்று நினைத்தபடியே செய்தியை திறந்து வாசித்தேன். அது இப்படி இருந்தது.

“அண்ணண் வணக்கம். நான் ____ (ஒரு பெயர்). 23ம் திகதி வேலை ஆரம்பிக்கிறேன். உங்களுக்கு எனது நன்றிகள் அண்ணண்” என்றிருந்தது.
பெரைப் பார்த்ததும் அனைத்தும் புரிந்தது.

2013ம் ஆண்டு என்று நினைக்கிறேன். அவரை நான் படுவான்கரையில் ஒரு தகரக்கொட்டகையில் சந்தித்தேன். அவர் ஒரு பெண். அதிக வயதில்லை. ஒரு குழந்தையின் தாய். முள்ளிவாய்க்காலில் கணவர் காணாமல் போயிருந்தார். அவரும் போராளி. இவரும் போராளி. ஊருக்குள் இவரை வட்டமிட்டபடி ஒரு கூட்டம்.

இதனால் ஒளிந்து ஒளிந்து வாழ்ந்துகொண்டிருந்தார். எம்மால் நிரந்தர வருமானம் கொடுக்கும் தொழில் செய்துகொடுக்க முடியவில்லை. சிறு சிறு உதவிகள் செய்தோம். இலங்கை செல்லும்போது ஒவ்வொருமுறையும் அவரை கட்டாயம் சந்திப்பேன். 3 வருடங்களின்பின் அமைதியான ஒரு இடத்தில் வாழத்தொடங்கியிருந்தார் அவர்.

இந்த வருட ஆரம்பத்தில் முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் என்னுடன் தொடர்பு கொண்டார். யாராவது ஒருவருக்கு உதவுவதற்கான அவரும் அவரது நண்பர்களும் விரும்புவதாக அறிவித்தார்.

அவர் நம்பிக்கையானவரா என்பதை உறுதி செய்துகொண்டபின், இன்று குறுஞ்செய்தி அனுப்பியவரை அறிமுகப்படுத்தினோம். இடையிடையே சில உதவிகளை செய்யவேண்டி வந்தது. இலங்கையில் உள்ள எனது நண்பர்கள் மூலமாக அவற்றைச் செய்துகொடுத்தோம்.
இரண்டு, மூன்று மாதங்கள் கடந்த நிலையில் ஒரு சிறு கைத்தொழில் முயற்சியினை ஆரம்பித்து, அதற்கான உபகரணஙகள், இயந்திரங்கள், முலப்பெருட்கள் என்று அந்தப் போராளிக்கு உதவியிருந்தார்கள்.

23ம் திகதி தொழில் ஆரம்பிக்கப்படுகிறது.
இதுதான் குறுஞ்செய்தியின் பின்னான கதை.

இன்று அதிகாலை, என் மனதில் இருந்த பாதுகாப்பற்ற அநாதரவான மனநிலை அகன்று மகிழ்ச்சியாய் உணர்ந்தேன். வாழ்க்கை அர்த்தமுள்ளதாக இருந்தது.
வாழ்க்கையில் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பதில்லையே. கிடைப்பதை அடிப்படையாகக்கொண்டு வாழப் பழகுவதே மகிழ்ச்சியானது.

இன்று வரை நண்பர்களின் உதவியுடன் ஏறத்தாள 150 மணிதர்களுக்கு அவர்களின் வாழ்க்கையை சற்றாவது வளமாக மாற்றியமைப்பதறகு உதவ முடிந்திருக்கிறது என்பது எனக்கு பலதையும் கற்றுத்தந்திருக்கிறது.
மிக முக்கியமாக இந்த மனிதர்களின் அன்பில் நான் கரைந்தும், நிறைந்தும் போகிறேன். இன்றும் அப்படியே.
நிறைந்திருக்கிறேன்.

வாழ்க்கை அழகானது நண்பர்ளே.

ஒரு கூர்வாளின் நிழலும் சாத்தானின் மதமாற்றமும்


நேற்று மதியம் தமிழினியின் ‘ஒரு கூர்வாளின் நிழலில்’ வாசித்துக்கொண்டிருந்தேன். தமிழினி விடுதலையாகியிருந்தார் அப்போது. அப்போது எனது வீட்டிற்கு யாரோ நடந்துவரும் ஒலி கேட்டது. மனது மகிழ்ந்தது. நம்மிடம்தான் யாரும் வருவதில்லையே. வருவது யாராக இருக்கும் என்று நினைத்தபோது, அழைப்ப மணியும் அடித்தது.

கதவைத் திறந்தேன். இரண்டு வெள்ளைக்காரர்கள் நின்றிருந்தார்கள். பெரிய கம்பனி ஒன்றின் முக்கியஸ்தர்கள்போன்று உடையணிந்திருந்தார்கள்.

‘வணக்கம், நீங்கள் நோர்வேஜியன் நாட்டு மொழிபேசுவீர்களா’ என்று கேட்டார்கள்.

‘ஆம்’

‘உங்களை சொர்க்கத்திற்கு அழைத்துப்போக வந்திருக்கிறோம்’ என்றதும் வெளியே எட்டிப்பார்த்தேன். வந்தவர்கள் எருமையிலா வந்திருக்கிறார்கள் என்று. அப்படி எததையும் காணக்கிடைக்கிவில்லை. அவர்கள் கையில் பாசக்கயிறும் இருக்கவில்லை.

எனது அமைதி அவர்களுக்கு நம்பிக்கையை கொடுத்திருக்கவேண்டும். பையைத்திறந்து ஒரு புத்தகத்தை எடுத்தார்கள். அதில் சொர்க்கத்திற்கான வழி இருப்பதாகக் கூறப்பட்டது எனக்கு.

வாங்கிக்கொண்டேன். அவர்கள் இனிப்போய்விடுவார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் அங்கு நின்றபடியே ஆரம்பித்தார்கள்.

‘கர்த்தர் உனக்காவும்தான் மரித்தார்’

எனது காதுக்குள் புகைக்கத் தொடங்கியது.

இருப்பினும் என்னுடன் உரையாடியவர் வயதானவர். 70 வயதிருக்கலாம். எனவே மரியாதை கொடுக்கவேண்டியது அவசியமாயிற்று.

என்ன யேசு இறந்துவிட்டாரா? என்று கேட்க நினைத்தேன். ஆனால் அதை அடக்கியபடியே ‘எனக்காகவா அவர் இறந்தார்?’ என்றேன் ஆச்சர்யமாக.

‘ஆம் சகோதரா, உனக்கா, எனக்காக, இவருக்காக, மனிதகுலத்துக்காக’ என்றார்.

மற்றையவர் தொடர்ந்தார் ‘அன்பான சகோதரனே, நாங்கள் கர்த்தர் உயிர்த்தெழுந்த நாளன்று அன்று ஒரு சந்திப்பு நடாத்தவுள்ளோம் நீங்களும் அதில் கலந்துகொள்ளவேண்டும்’ என்றார்.

‘அய்யா, எனது பெற்றோர் இந்துக்கள். நான் கடவுளை நம்புவதில்லை. அவ்வப்பொது Oslo முருகனுடன் சேட்டைவிடுவதோடு எனது ஆன்மீகம் நின்றுகொள்கிறது. எனது மனச்சாட்சியே என் கடவுள் என்றேன்.

‘உங்கள் மனைவியைக் கூப்பிடுங்கள், அவரையும் சொர்க்கத்திற்கு அழைத்துச்செல்வோம்’ என்றனர்

‘அய்யா, நான் விவாகரத்தானவன். எனவே நான் சொர்க்கத்தில்தான் வாழகிறேன்’ என்று கூற நினைத்ததை மீண்டும் அந்த வயதானவரின் வயது தடுத்தது.

‘நான் மணவிலக்கானவன். தனியே வசிக்கிறேன்’ என்று வாயை மூடவில்லை..

ஒருவர் கையை வானத்தை நோக்கித் தூக்கினார். மற்றையவரும்தான்.

‘பிதாவே, இந்த சகோதரனின் வலிகளைகளுக்கு விடுதலையளியும். இவரது வேதனைகளில் இருந்து இவரை இரட்சியும். இவரது குடும்பத்தினருக்கு கிருபையளித்து, இவரது தவறை மன்னித்து இவர்களை இணைத்து வைய்யும்’ என்று வானத்தைப்பார்த்து பெரியவர் கூற, மற்றையவர் தொடர்ந்தார். நானும் வானத்தைப்பார்த்தேன். ஒரு தனிக் காகம் பறந்துபோனது. ஆகா கருடபகவான். நம்ம ஆள்.

‘விவாகரத்து’ சாத்தானின் விளையாட்டு. என்றபோது எனக்கு இரண்டுகாதாலும் ‘ நீராவி அடுப்பில் புகைவருமே, அதுபோன்ற சூட்டினை உணர்ந்தேன்.

‘அய்யா, நான் ஒரு இந்துவாக வளர்க்கப்பட்டவன். இப்போது மதம் அற்றவன். நான் உங்கள் மதத்தினை மதிக்கிறேன். அதேபோல் நீங்களும் என் மதமற்ற மதத்தை மதிக்கவேண்டும்’

‘சகோதரா, இந்த உலகின் பாவங்களைச் சுமக்கவே கர்த்தர் பிறந்தார். அதுவே உண்மை. நிங்கள் எங்கள் ஜெபக்கூட்டங்களுக்கு வாருங்கள். கர்த்தரைப் புரிவீர்கள். உங்கள் மனதை பீடித்ததிருக்கும் சாத்தானை கர்த்தர் அகற்றுவார்’

ஏறாவூரில் வாழ்ந்த போலீஸ் 1124 இலக்கத்தையுடைய கான்ஸ்டபிளான செல்லையா செல்வமாணிக்கத்தின் மூத்த மகனுக்கு ‘இருந்த கொஞ்ச நஞ்ச பொறுமையும் காற்றில் பறந்துபோனது. இருந்தாலும் அந்த மனிதரின் வயது என்னை தடுத்தபடியே இருந்ததால் ‘சென்று வாருங்கள், நான் சாத்தானுடனேயே வாழ்ந்துகொள்கிறேன்’ என்று கூறியபோது, பின்னால் நின்றிருந்தவர் ‘சகோதரா, கோபப்படாதே. சாத்தான்தான் உன்னை பேசவைக்கிறான்’ என்றார்.

அப்பொழுது எனக்கு என்னுடன் ஒன்றாக வாழ்ந்த ஒரு தம்பி நினைவுக்கு வந்தான். அது நான் ஒஸ்லோவுக்கு குடியெர்ந்த காலம் 8 வருடத்திற்கு முன்பான கதை. அந்தத் தம்பியின் தந்தை கிறீஸ்தவர். தாயார் இந்து. காதல் கல்யாணம். இவன் இரண்டு மததைத்தையும் நன்கு அறிந்திருந்தான். உயர்தரத்தில் ‘இந்துகலாச்சரம்’ என்னும் பாடத்தையும் கரைத்துக் குடித்திருந்தான். தமிழின்மேல் பற்றுக்கொண்ட பையன் அவன்.

அவனுக்கு இரவில் ஒரு பேக்கறியில் வேலை. எனக்கு பகல்வேலை. பகலில் தூங்குவான். இரவில் வெளவால்போன்று பறந்து திரிவான். அவன் உறங்கும் நேரங்களில் அவரைன எழுப்புவது உறங்கியிருக்கும் காட்டெருமையை எழுப்புவதற்குச் சமமானது.

ரொம்பவும் நல்லவன். அமைதியான சுபாவம். அவன் ‘அண்ணண் பெயர் சொல்லு, அணிவகுத்து நில்லு’ இயக்கக்காரன். இருப்பினும் எமக்கிடையில் மிக நல்ல உறவு இருந்தது. என்னில் பேரன்பானவன். தினமும் எனக்கு சமைத்துவைப்பான். சற்று கோவக்காரன் அவ்வளவுதான். எனக்கும் அவனில் அன்பு இருக்கிறது.

ஒருநாள் வேலை முடிந்து நான்கு மணிபோல் வீட்டுக்கு வருகிறேன். வீட்டு வாசலில் கதவினை மூடி வெளியே கதவருகில் உட்கார்ந்திருந்தான் தம்பி. முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்துக்கொண்டிருந்தது.

‘அண்ணைக்கு என்னடா சாப்பாடு’ என்றேன் பகடியாக.

‘விசர்க்கதை கதைக்காதீங்கோ, அண்ணை. எனக்கு விசரைக் கிளப்பிப்போட்டாங்கள்’ என்றான்.

‘ஆரப்பு உனக்கு விசரக்கிளப்பினது’ என்று கேட்டேன்.

‘உள்ளுக்கு போய் பாருங்கோ’

உள்ளே சென்றேன். சோபாவில் இரண்டு மனிதர்கள் உட்கார்ந்திருந்தார்கள். அவர்களுக்கு முன் தேனீர், சிற்றூண்டிகள் இருந்தன. அவர்கள் மிக அழகாக உடுத்தியிருந்தார்கள். உயர்ந்த உத்தியோத்தில் இருக்கவேண்டும் என்று நினைத்தபடியே ‘யாரடா இது?’ இது என்றேன்.

முன் கதவு மூடப்பட்டது.

தம்பி வந்தான். மற்றைய இருவரும் கலவரப்பட்டு எழும்பினார்கள்.’

‘அண்ணை, இவங்களை எழும்பவேண்டாம் இருக்கச்சொல்லுங்க’
அப்படியே கூறினேன். அவர்கள் மந்தரித்து விட்டவர்கள்போன்று இருந்தார்கள்.

‘அண்ணை, இண்டைக்கு மத்தியானம் 3மணிபோல வீட்டுபெல் அடி அடி அடி என்று அடிச்சுது. நான் நித்திரை குழம்பிப்போய் யார் என்று பார்த்தால் இவையள்’

‘ம்’
‘நான் நினைச்சன் யாரோ நகரசபை ஆக்கள் என்று. என்னுடன் உரையாடவேண்டும் என்று கேட்டபடியால் நானும் உள்ளே அழைத்து தேனீர் கொடுத்து, கடலை, பிஸ்கட் கொடுததுக் கதைதேன். நான் என்ன சமயம் என்றார்கள். இந்து என்றேன். அதில் இருந்து ஒரு மணித்தியாலத்திற்கு அதிகமாக என்னை மதம்மாற்ற முயற்சித்து தோற்றபின் அவர்கள் புறப்படார்கள்.’

‘ம்’ இது நான்.

‘நான்தான் அவர்களை மறித்துவைத்திருக்கிறேன்’

‘ஏன்டா வில்லங்கத்தை மறித்துவைத்திருக்கிறாய்?’

‘அண்ணை எனக்கு ஒரு மணித்தியாலமாக லெக்சர் அடித்தவைதானே, அப்ப நான் சொல்லுறதையும் கேட்டவேணும்தானே. இவை கேட்கமாட்டினமாம். போகப்போகினமாம். அதுதான் வெருட்டி வைத்திருக்கிறேன்.’

‘நீ என்னடா அவங்களுக்கு சொல்லப்போறாய்? விடுடா அவங்களை.’

‘என்ன விடுறதோ, அவயள் கதைக்கலாம் நான் கதைக்கப்படாதோ? நல்ல நியாயம் இது. நான் கதைக்கிறதை இவயள் ஒரு மணித்தியாலம் கேட்கவேணும். அதுவரை இவயள் எழும்பப்படாது. போலீச கூப்பிறது எண்டா கூப்பிடு என்றும் சொல்லியிருக்கிறன். மாமா வந்தாலும் நான் நியாயம் கேட்பன்.’

அவனின் ரௌத்திரம் என்னை ஆச்சர்யப்படுத்தியது. அவர்களுக்கு எடுத்துச்சொன்னேன். அவர்களோ கிறீஸ்தவம் மட்டுமே மதம் என்றார்கள். இவனோ கதைக்க அனுமதிக்காவிட்டால் விடமாட்டேன் என்றான்.

போலீசுக்கு அறிவிக்கவா என்றுபோது அவனை கதைக்க அனுமதித்தார்கள்.

வெற்றிப்புன்னகையுடன் ஆரம்பித்தான். கணியன் பூங்குன்றனாரில் ஆரம்பித்தான். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றால் என்ன என்று விளக்கினான். ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சமத்துவம் பேசிய மொழி தமிழ் என்றான். திருக்குறள் தெரியுமா என்றான். வேதங்களை பிட்டு பிட்டு வைத்தான். அவர்கள் உங்கள் கடவுளுக்கு சிலையுண்டு என்றபோது இயற்கைவழிபாட்டில் இருந்து தொடங்கி எப்போது கடவுளர்களுக்கு திராவிடர் சிலை வைக்கத்தொடங்கினார்கள், என்றான். அவனுக்குள் உரு வந்துவிட்டதோ என்று பயந்தேன். உணர்ச்சியில் வார்த்தைகள் தடுமாறின. ஏச்சில் தெறித்தது.

இறுதியில் நானும் ஒரு கிறீஸ்தவன் என்று தனது கழுத்தில் இருந்த சிலுவையை எடுத்துக்காட்டிவிட்டு, எனது கிறீஸ்தவம் என்னைப்போல் மற்றையவனையும் மதிக்கிறது. அனைத்து மதங்களையும் ஏற்றுக்கொள்கிறது. ஏனைய மதங்களை, மனிதர்களின் மனங்களை நோகடிப்பதில்லை, அவமதிப்பதில்லை. உங்களைப்போன்றவர்களுக்காகத்தான் யேசு சிலுவையில் ஏறினார். நீங்கள் பாவிகள் என்று கூறி முடித்துபோது 25 நிமிடங்கள் கடந்திருந்தன.

இன்னும் 35 நிமிடங்கள் நீங்கள் உட்கார்ந்திருந்தபின் நீங்கள் போகலாம் என்றான்.

அவர்கள் வாய்திறக்கவில்லை. நானும்தான். அவன் தேனீர் வேண்டுமா என்றபோது அவர்கள் வேண்டாம் என்றார்கள்.

இன்றும் அந்தத் தம்பி என்னுடன் இருந்திருக்கவேண்டும். என்னை சொக்கத்திற்கு அழைத்தவர்களும் அவனின் கூர் வாளினை கண்டிருப்பார்கள்.

அவ்வப்போது கூர் வாள்கள் அவசியமாகத்தான் இருக்கின்றன.

இன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை

நான் பனிக்காலத்து வெய்யிலினை உணர்ந்தபடியே நடந்துகொண்டிருந்தேன். எனது வீட்டினை சென்றடைய இன்னும் 1 மணிநேர நடைபாக்கியிருந்தது. நிலத்தில் பனி உருகி, பளிங்குபோன்று மினுங்க, அது எனது சிந்தனையின் கவனத்தை திசைதிருப்பியதால், மூளை தற்பாதுகாப்பில் கவனம்செலுத்தியது. ஒவ்வொரு அடியையும் நான் கவனமாகவே எடுத்துவைக்கவேண்டியிருந்தது. வழுக்கலான இடத்தை பாதுகாப்பாகக் கடந்துகொண்டேன். நேற்றும் இப்படி பாதுகாப்பாக இருந்திருக்கலாமோ என்று சிந்தித்தேன். இருந்திருக்கலாம்தான்.

அழகிய பெண் குழந்தையொருத்தி தாயின் கையினை பிடித்துபடி வாய் ஓயாது தாயுடன் உரையாடிபடியே கடந்துபோனாள். அவளது நாய் அவளை கதைகளைக் கேட்டபடியே அவளைப்பார்த்தபடி, அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டே போனது. அவளை திரும்பிப்பார்த்தேன். மகிழ்ச்சியான மனிதர்களின் நடையும் அவர்களது மனதைப்போல் அழகாகத்தானிருக்கிறது. 

வெய்யில் எனக்குப் பின்னால் எறித்துக்கொண்டிருக்க, என் நிழல் எனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தது. என் நடையின், மனதின் சோர்வு நிழலிலும் தெரிந்தது. உண்மையான நிழல் என்பது அதுதானோ? நான் நிழலைப்பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். பனிக்காலத்து உடை உருமாற்றிக்காட்டியது. நரித்தோலிலான தொப்பி மயிர்களின் நிழல் மிக நுணுக்கமாக வீதியில் தெரிந்தது. 

எனது முதுப்பையும் நிழலில் தெரிந்தது. என் நிழல் அல்லவா. நிழலும் என் வாழ்வின் பொதிகளை சுமக்கிறது என்பதுபோன்ற படிமமாயிருக்கலாம் அது. நிழல் என்பது எதுவுமற்ற வெறும் கருமை நிறம் மட்டுமா? இல்லையென்றுதான் எண்ணுகிறேன். அது என் பிரதி. என் கனவுகளில் இருந்து… நிராசைவரை அனைத்தையும் அது ஒரு கழுதையின் அமைதியுடன் மௌனமாக சுமந்துதிரிகிறது. ஒரு ஞானியின் அமைதியுடன். கழுதையும் ஞானியாகலாம்.
நிழல் எதற்காகவும் அலட்டிக்கொள்வதில்லையே. நான்தான் அனைத்தையும் வாழ்க்கையைப்போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நிழலின் பக்குவம் எனக்கு எப்போ வரும். அப்பக்குவம் வரும்போது நிழல் இல்லாதுபோகலாம். நிழல் எப்போது இல்லாதுபோகும்?

மீண்டும் சிந்தனை நேற்றைய நிகழ்வினுள் புகுந்துகொண்டது. எப்படி என்னால் அதனை அப்படிக் கூற முடிந்தது. இது நான் இல்லையே? மனது பாரத்தை உணர்ந்தபோது மனமும் கால்களும் கனத்தன. மனது அந்தரித்துக்கொண்டிருந்தது.

ஒரு வார்த்தை எவ்வாறு எம்மை அடித்துப்போட்டுகிறது? வார்த்தைக்கு அந்த சக்தி எப்படி கிடைக்கிறது? வெறும் காற்றலைதானே வார்த்தை. வார்த்தை எங்கே, எவ்வாறு அவ்வளவு பலத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது? வெறும் காற்றை ஒலியலையாக நாக்கு மாற்ற அந்தக் காற்றலை எத்தனை பலத்தைப்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது அதியசம்தான். 

மொழி இல்லாத காலத்தில் மனிதர்கள் எவ்வாறு இன்னொரு மனிதரை காயப்படுத்தியிருப்பார்கள்? கல்லால் அடித்தா? இல்லை வேறு எதானாலாவது அடித்தா? அது மிக ஆறுதலான விடயமாயிற்றே. சில நாட்களில் காயம் ஆறிவிடுமே.
நான் நேற்றுக் கூறியது ஆறுமா? அந்த ஒரு கணத்தில் மொழி இல்லாதிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

ஒருவார்த்தை, ஒரு கெட்டவார்த்தை என் தாய்மொழியில் கொடுக்கும் வீரியத்தை, நோர்வெஜிய மொழி கொடுக்கிறதா என்று யோசனை ஓடியது. நேற்றுக் கூறிய வார்த்தையை சிந்தித்துப்பார்த்தேன். அதை மொழிபெயர்த்தும் பார்த்தேன். தாய்மொழியில் கெட்டவார்த்தையின் கனதி அதிகம்தான். திடீர் என்று இது அர்த்தமில்லாத சிந்தனை என்றது மனது.

நடந்துகொண்டிருந்த நடைபாதை முடிவடைந்ததால் வீதியின் மறுபக்கத்திற்கு மாறுவதற்காய் அங்கும் இங்கும் பார்த்தேன். வீதியின் அழுக்குகளை சுமந்தபடி ஒரு லாறி நான் பாதையை கடப்பதற்காக தன்னை நிறுத்திக்கொண்டபோது, நிமிர்ந்து அந்தச் சாரதியைப் பார்த்து நன்றி என்பதுபோன்று கையசைத்தேன். புதிலுக்கு ஒரு புன்னகை கண்ணாடியினூடாகத்தெரிந்தது. அந்த புன்னகை நொந்திருந்த மனதுக்கு ஆறுதலாக இருக்க நடை சற்று உற்சாகமாகியது. இன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை என்பதை அந்த சாரதி உணர்ந்தவராக இருப்பாரோ? இருக்கலாம். பலருக்குத்தான் இது புரிவதில்லையே.

வாழ்வில் பல மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள். சிலர் நெருக்கமானவர்களாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கிறார்கள். அவர்களுடன் நாம் உரையாடும்போது வார்த்தைகள் எம்மையறியாமலே ஒருவித தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு வாயிலிருந்து வெளியே வருகிறது. நேற்றுவரை அப்படித்தான் அவருடன் உரையாடியிருக்கிறேன். 

ஒரு செக்கன்.. இல்லை அதனிலும் மிகக்குறைவு. ஒரு நனோ செக்கன் அளவு இருக்கலாம். அந்தச் சிறு கணத்தை என் என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லையே? என்னில் எனக்கே எரிச்சல் வந்தது.

கடந்த ஒரு மாதமாக கடும் காற்றில் அங்கும் இங்குமாய் ஆடும் பட்டம்போன்று நிலையில்லாது அலைந்துகொண்டிக்கிறது மனது. நிம்மதி தொலைந்திருக்கிறது. போதுமான அளவு அழுதாயிற்று, யோசித்தாயிற்று, கோபப்பட்டாயிற்று, எழுதியாயிற்று. இருப்பினும் ஒரு அநாதரவான, பாதுகாப்பற்ற உணர்வு என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அயர்ச்சி என்னை முற்றிலுமாக விழுங்கியிருக்கிறது. நடைப்பிணம்போலிருக்கிறது வாழ்க்கை.

இந்த நிலையில்தான், வேறு பல சந்தர்ப்பங்களின் ஊடாக அந்த வார்த்தை என் வாயில் இருந்த வெளியே வந்தது. நான் இப்போது கடந்துகொண்டிருக்கும் இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமோ அது? இதை நான் என்னை நியாயப்படுத்துவதற்காகக் கூறவில்லை. அச்செயலை நான் நியாயப்படுத்த முடியாது, கூடாது. ஆனால் என் சுயவிமர்சனத்திற்கு இது உதவலாமா என்று நினைத்துப்பார்க்கிறேன்.
எனது செயலை நான் உணர்ந்துகொண்டவுடனேயே “தவறு என்னுடையது, மனித்துக்கொள்;ளுங்கள்” என்றேன். ஆனால் அது மட்டும் எனக்கு போதுமானதாய் இல்லை. நேற்றில் இருந்து நான் இழந்திருந்த நிம்மதியை மேலும் இழந்திருக்கிறறேன். இல்லாத நிம்மதியை இழப்பது என்பது எப்படி சாத்தியம் என்று கேட்காதீர்கள். ஆனால் அது சாத்தியம் என்பதை நான் அறிவேன்.

நடந்துகொண்டிருந்த பாதை திடீர் என்று நீண்ட மேடான பாதையாகியது. அதில் ஏறத்தொடங்கினேன். திடீர் என்று சூரியன் தன்னை தடித்த மேகங்களுக்குள் மறைத்துக்கொண்டது. முழச் சுற்றாலும் சோபையிழந்ததுபோலாகியது. இது நடந்ததும் ஒரு நனோ செக்கன் நேரத்தில்தான். நேற்றைய அந்த கணத்தைப்போன்று. 

நான் நேற்று மதி மயங்கினேன். இன்று மதி தன்னை மறைத்துக்கொள்கிறது. இயற்கை எனக்கு எதையாவது போதிக்க முற்படுகிறதா என்றே தோன்றியது. இந்தப் பயணத்தின் இறுதியில் இயற்கை வாழ்க்கை என்பது என்பதை போதிக்கும் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. கணப்பொழுதில் நடப்பவைதான் வாழ்கையையின் அமைதியை நிம்மதியை நிர்யிக்கின்றனவா? இருக்கலாம்.

மேடான பாதையில் நடப்பது இலகுவாய் இருக்கவில்லை. கால் வலித்தது. களைத்தது. முதுகுப்பை கனத்தது. நான் வருந்தி என்னை நடக்கவைக்கவேண்டியுமிருந்தது. ஆனால் இப்போது நான் வலியை விரும்பினேன். இன்னும் இன்னும் அதிகமாக வலிக்கவேண்டும் என்று விரும்பினேன். அந்த வார்த்தையைக் கூறியதற்கான பிராயச்சித்தமாக வலி எதையாவது நான் ஏற்றாகவேண்டும் என்று உள்மனது விரும்புவதாலா நான் இந்த வலியை விரும்புகிறேன்? இருக்கலாம்.

திடீர் என்று இருண்ட முகில்கள் மறைய, சூரியன் வெளியே வந்தது. காற்று அசைந்தது. என்னைச்சுற்றியிருந்த அனைத்தும் அழகாகின. மனதும் .. சற்று. எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே. மீண்டும் சூரியன் மறைந்துபோனதுபோது எல்லாமே இருண்டுவிட்டதுபோலாகியது. மெது பனி கொட்டவும் தொடங்கியது. 

கொட்டியபனியில் இரண்டுதரம் வழுக்கிவிழுந்து மிகுந்த சிரமத்துடனும், களைப்புடனும் மேடான பாதையையின் உயரமான இடத்திற்கு வந்தேன். இன்னும் 1 கிலோ மீற்றர் தூரம் இருந்தது எனது வீட்டுக்கு. நடந்துகொண்டிருந்தேன். -8 பாகைக் குளிரிலும் எனக்கு வியர்த்தது.

இப்போது மீண்டும் சூரியன் வெளியே வர... மீண்டும் அழகாகியது உலகு. மெதுபனி நின்றுபோனது. உட்சாகமா நடக்கத் தொடங்கினேன். 2 - 3 நிமிடத்தில் மீண்டும் சூரியன் மறைய கடும் பனிக்காற்று வீசியது. தொப்பியை இறுக கட்டிக்கொண்டேன். அதிக துாரம் பார்க்கமுடியாத அளவு முகத்துக்கு எதிரே பனிக்காற்று வீசியது. குனிந்துகொண்டேன். நடை தடைப்பட்டது.

நான் நேற்றுக் கூறியதை மீளப்பெற்றுக்கொள்ள முடியாது. அதனை சீர்செய்ய இன்னொருவரது மனதாலேயே முடியும். அது சாத்தியமாகும் என்ற சாத்தியம் உண்டு. அது நடைபெறாவிட்டால் எனது தவறோடு வாழ்ந்து அதனைக் கடந்துகொள்வோம். அது எதைத் தந்தாலும் இரு கைகளாலும் அதை ஏற்றுக்கொள் என்று மனம் சொல்லத்தொடங்கியிருக்கிறது.
அது இழக்கப்படும் நட்பாகவும் இருக்கலாம். நட்பில் இருந்த நம்பிக்கையின் ஒரு சிறு பாகமாகவும் இருக்கலாம். அல்லது நட்பின் நம்பிக்கை அல்லது பாதுகாப்புணர்வாகவும் இருக்கலாம். எதுவாயினும் எதிர்கொள்வோம். வினை விதைத்துவிட்டு தினையையா எதிர்பார்க்கமுடியும்? என்ற ஞானம் வரத்தொடங்கியபோது வீட்டின் வாசலுக்கு வந்திருந்தேன். 

திடீர் என இருண்டிருந்த வானம் வெளித்தது. சுற்றாடல் உயிர்த்து, அழகானது.
இயற்கை எதையோ போதிக்கிறது என்பது மட்டும் புரிந்தது எனக்கு.