இன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை

நான் பனிக்காலத்து வெய்யிலினை உணர்ந்தபடியே நடந்துகொண்டிருந்தேன். எனது வீட்டினை சென்றடைய இன்னும் 1 மணிநேர நடைபாக்கியிருந்தது. நிலத்தில் பனி உருகி, பளிங்குபோன்று மினுங்க, அது எனது சிந்தனையின் கவனத்தை திசைதிருப்பியதால், மூளை தற்பாதுகாப்பில் கவனம்செலுத்தியது. ஒவ்வொரு அடியையும் நான் கவனமாகவே எடுத்துவைக்கவேண்டியிருந்தது. வழுக்கலான இடத்தை பாதுகாப்பாகக் கடந்துகொண்டேன். நேற்றும் இப்படி பாதுகாப்பாக இருந்திருக்கலாமோ என்று சிந்தித்தேன். இருந்திருக்கலாம்தான்.

அழகிய பெண் குழந்தையொருத்தி தாயின் கையினை பிடித்துபடி வாய் ஓயாது தாயுடன் உரையாடிபடியே கடந்துபோனாள். அவளது நாய் அவளை கதைகளைக் கேட்டபடியே அவளைப்பார்த்தபடி, அவர்களைப் பின்தொடர்ந்துகொண்டே போனது. அவளை திரும்பிப்பார்த்தேன். மகிழ்ச்சியான மனிதர்களின் நடையும் அவர்களது மனதைப்போல் அழகாகத்தானிருக்கிறது. 

வெய்யில் எனக்குப் பின்னால் எறித்துக்கொண்டிருக்க, என் நிழல் எனக்கு முன்னால் நடந்துகொண்டிருந்தது. என் நடையின், மனதின் சோர்வு நிழலிலும் தெரிந்தது. உண்மையான நிழல் என்பது அதுதானோ? நான் நிழலைப்பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். பனிக்காலத்து உடை உருமாற்றிக்காட்டியது. நரித்தோலிலான தொப்பி மயிர்களின் நிழல் மிக நுணுக்கமாக வீதியில் தெரிந்தது. 

எனது முதுப்பையும் நிழலில் தெரிந்தது. என் நிழல் அல்லவா. நிழலும் என் வாழ்வின் பொதிகளை சுமக்கிறது என்பதுபோன்ற படிமமாயிருக்கலாம் அது. நிழல் என்பது எதுவுமற்ற வெறும் கருமை நிறம் மட்டுமா? இல்லையென்றுதான் எண்ணுகிறேன். அது என் பிரதி. என் கனவுகளில் இருந்து… நிராசைவரை அனைத்தையும் அது ஒரு கழுதையின் அமைதியுடன் மௌனமாக சுமந்துதிரிகிறது. ஒரு ஞானியின் அமைதியுடன். கழுதையும் ஞானியாகலாம்.
நிழல் எதற்காகவும் அலட்டிக்கொள்வதில்லையே. நான்தான் அனைத்தையும் வாழ்க்கையைப்போட்டுக் குழப்பிக்கொள்கிறேன். நிழலின் பக்குவம் எனக்கு எப்போ வரும். அப்பக்குவம் வரும்போது நிழல் இல்லாதுபோகலாம். நிழல் எப்போது இல்லாதுபோகும்?

மீண்டும் சிந்தனை நேற்றைய நிகழ்வினுள் புகுந்துகொண்டது. எப்படி என்னால் அதனை அப்படிக் கூற முடிந்தது. இது நான் இல்லையே? மனது பாரத்தை உணர்ந்தபோது மனமும் கால்களும் கனத்தன. மனது அந்தரித்துக்கொண்டிருந்தது.

ஒரு வார்த்தை எவ்வாறு எம்மை அடித்துப்போட்டுகிறது? வார்த்தைக்கு அந்த சக்தி எப்படி கிடைக்கிறது? வெறும் காற்றலைதானே வார்த்தை. வார்த்தை எங்கே, எவ்வாறு அவ்வளவு பலத்தையும் ஒளித்து வைத்திருக்கிறது? வெறும் காற்றை ஒலியலையாக நாக்கு மாற்ற அந்தக் காற்றலை எத்தனை பலத்தைப்பெறுகிறது என்று எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது அதியசம்தான். 

மொழி இல்லாத காலத்தில் மனிதர்கள் எவ்வாறு இன்னொரு மனிதரை காயப்படுத்தியிருப்பார்கள்? கல்லால் அடித்தா? இல்லை வேறு எதானாலாவது அடித்தா? அது மிக ஆறுதலான விடயமாயிற்றே. சில நாட்களில் காயம் ஆறிவிடுமே.
நான் நேற்றுக் கூறியது ஆறுமா? அந்த ஒரு கணத்தில் மொழி இல்லாதிருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?

ஒருவார்த்தை, ஒரு கெட்டவார்த்தை என் தாய்மொழியில் கொடுக்கும் வீரியத்தை, நோர்வெஜிய மொழி கொடுக்கிறதா என்று யோசனை ஓடியது. நேற்றுக் கூறிய வார்த்தையை சிந்தித்துப்பார்த்தேன். அதை மொழிபெயர்த்தும் பார்த்தேன். தாய்மொழியில் கெட்டவார்த்தையின் கனதி அதிகம்தான். திடீர் என்று இது அர்த்தமில்லாத சிந்தனை என்றது மனது.

நடந்துகொண்டிருந்த நடைபாதை முடிவடைந்ததால் வீதியின் மறுபக்கத்திற்கு மாறுவதற்காய் அங்கும் இங்கும் பார்த்தேன். வீதியின் அழுக்குகளை சுமந்தபடி ஒரு லாறி நான் பாதையை கடப்பதற்காக தன்னை நிறுத்திக்கொண்டபோது, நிமிர்ந்து அந்தச் சாரதியைப் பார்த்து நன்றி என்பதுபோன்று கையசைத்தேன். புதிலுக்கு ஒரு புன்னகை கண்ணாடியினூடாகத்தெரிந்தது. அந்த புன்னகை நொந்திருந்த மனதுக்கு ஆறுதலாக இருக்க நடை சற்று உற்சாகமாகியது. இன்னொரு மனிதனுக்கு ஆறுதலாக இருப்பதே வாழ்க்கை என்பதை அந்த சாரதி உணர்ந்தவராக இருப்பாரோ? இருக்கலாம். பலருக்குத்தான் இது புரிவதில்லையே.

வாழ்வில் பல மனிதர்கள் வருகிறார்கள், போகிறார்கள். சிலர் நெருக்கமானவர்களாகவே வாழ்க்கை முழுவதும் இருக்கிறார்கள். அவர்களுடன் நாம் உரையாடும்போது வார்த்தைகள் எம்மையறியாமலே ஒருவித தரக்கட்டுப்பாடு செய்யப்பட்டு வாயிலிருந்து வெளியே வருகிறது. நேற்றுவரை அப்படித்தான் அவருடன் உரையாடியிருக்கிறேன். 

ஒரு செக்கன்.. இல்லை அதனிலும் மிகக்குறைவு. ஒரு நனோ செக்கன் அளவு இருக்கலாம். அந்தச் சிறு கணத்தை என் என்னால் கட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லையே? என்னில் எனக்கே எரிச்சல் வந்தது.

கடந்த ஒரு மாதமாக கடும் காற்றில் அங்கும் இங்குமாய் ஆடும் பட்டம்போன்று நிலையில்லாது அலைந்துகொண்டிக்கிறது மனது. நிம்மதி தொலைந்திருக்கிறது. போதுமான அளவு அழுதாயிற்று, யோசித்தாயிற்று, கோபப்பட்டாயிற்று, எழுதியாயிற்று. இருப்பினும் ஒரு அநாதரவான, பாதுகாப்பற்ற உணர்வு என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது. அயர்ச்சி என்னை முற்றிலுமாக விழுங்கியிருக்கிறது. நடைப்பிணம்போலிருக்கிறது வாழ்க்கை.

இந்த நிலையில்தான், வேறு பல சந்தர்ப்பங்களின் ஊடாக அந்த வார்த்தை என் வாயில் இருந்த வெளியே வந்தது. நான் இப்போது கடந்துகொண்டிருக்கும் இயலாமையின் வெளிப்பாடாக இருக்குமோ அது? இதை நான் என்னை நியாயப்படுத்துவதற்காகக் கூறவில்லை. அச்செயலை நான் நியாயப்படுத்த முடியாது, கூடாது. ஆனால் என் சுயவிமர்சனத்திற்கு இது உதவலாமா என்று நினைத்துப்பார்க்கிறேன்.
எனது செயலை நான் உணர்ந்துகொண்டவுடனேயே “தவறு என்னுடையது, மனித்துக்கொள்;ளுங்கள்” என்றேன். ஆனால் அது மட்டும் எனக்கு போதுமானதாய் இல்லை. நேற்றில் இருந்து நான் இழந்திருந்த நிம்மதியை மேலும் இழந்திருக்கிறறேன். இல்லாத நிம்மதியை இழப்பது என்பது எப்படி சாத்தியம் என்று கேட்காதீர்கள். ஆனால் அது சாத்தியம் என்பதை நான் அறிவேன்.

நடந்துகொண்டிருந்த பாதை திடீர் என்று நீண்ட மேடான பாதையாகியது. அதில் ஏறத்தொடங்கினேன். திடீர் என்று சூரியன் தன்னை தடித்த மேகங்களுக்குள் மறைத்துக்கொண்டது. முழச் சுற்றாலும் சோபையிழந்ததுபோலாகியது. இது நடந்ததும் ஒரு நனோ செக்கன் நேரத்தில்தான். நேற்றைய அந்த கணத்தைப்போன்று. 

நான் நேற்று மதி மயங்கினேன். இன்று மதி தன்னை மறைத்துக்கொள்கிறது. இயற்கை எனக்கு எதையாவது போதிக்க முற்படுகிறதா என்றே தோன்றியது. இந்தப் பயணத்தின் இறுதியில் இயற்கை வாழ்க்கை என்பது என்பதை போதிக்கும் என்பதை நான் அப்போது அறிந்திருக்கவில்லை. கணப்பொழுதில் நடப்பவைதான் வாழ்கையையின் அமைதியை நிம்மதியை நிர்யிக்கின்றனவா? இருக்கலாம்.

மேடான பாதையில் நடப்பது இலகுவாய் இருக்கவில்லை. கால் வலித்தது. களைத்தது. முதுகுப்பை கனத்தது. நான் வருந்தி என்னை நடக்கவைக்கவேண்டியுமிருந்தது. ஆனால் இப்போது நான் வலியை விரும்பினேன். இன்னும் இன்னும் அதிகமாக வலிக்கவேண்டும் என்று விரும்பினேன். அந்த வார்த்தையைக் கூறியதற்கான பிராயச்சித்தமாக வலி எதையாவது நான் ஏற்றாகவேண்டும் என்று உள்மனது விரும்புவதாலா நான் இந்த வலியை விரும்புகிறேன்? இருக்கலாம்.

திடீர் என்று இருண்ட முகில்கள் மறைய, சூரியன் வெளியே வந்தது. காற்று அசைந்தது. என்னைச்சுற்றியிருந்த அனைத்தும் அழகாகின. மனதும் .. சற்று. எல்லாம் சில நிமிடங்கள் மட்டுமே. மீண்டும் சூரியன் மறைந்துபோனதுபோது எல்லாமே இருண்டுவிட்டதுபோலாகியது. மெது பனி கொட்டவும் தொடங்கியது. 

கொட்டியபனியில் இரண்டுதரம் வழுக்கிவிழுந்து மிகுந்த சிரமத்துடனும், களைப்புடனும் மேடான பாதையையின் உயரமான இடத்திற்கு வந்தேன். இன்னும் 1 கிலோ மீற்றர் தூரம் இருந்தது எனது வீட்டுக்கு. நடந்துகொண்டிருந்தேன். -8 பாகைக் குளிரிலும் எனக்கு வியர்த்தது.

இப்போது மீண்டும் சூரியன் வெளியே வர... மீண்டும் அழகாகியது உலகு. மெதுபனி நின்றுபோனது. உட்சாகமா நடக்கத் தொடங்கினேன். 2 - 3 நிமிடத்தில் மீண்டும் சூரியன் மறைய கடும் பனிக்காற்று வீசியது. தொப்பியை இறுக கட்டிக்கொண்டேன். அதிக துாரம் பார்க்கமுடியாத அளவு முகத்துக்கு எதிரே பனிக்காற்று வீசியது. குனிந்துகொண்டேன். நடை தடைப்பட்டது.

நான் நேற்றுக் கூறியதை மீளப்பெற்றுக்கொள்ள முடியாது. அதனை சீர்செய்ய இன்னொருவரது மனதாலேயே முடியும். அது சாத்தியமாகும் என்ற சாத்தியம் உண்டு. அது நடைபெறாவிட்டால் எனது தவறோடு வாழ்ந்து அதனைக் கடந்துகொள்வோம். அது எதைத் தந்தாலும் இரு கைகளாலும் அதை ஏற்றுக்கொள் என்று மனம் சொல்லத்தொடங்கியிருக்கிறது.
அது இழக்கப்படும் நட்பாகவும் இருக்கலாம். நட்பில் இருந்த நம்பிக்கையின் ஒரு சிறு பாகமாகவும் இருக்கலாம். அல்லது நட்பின் நம்பிக்கை அல்லது பாதுகாப்புணர்வாகவும் இருக்கலாம். எதுவாயினும் எதிர்கொள்வோம். வினை விதைத்துவிட்டு தினையையா எதிர்பார்க்கமுடியும்? என்ற ஞானம் வரத்தொடங்கியபோது வீட்டின் வாசலுக்கு வந்திருந்தேன். 

திடீர் என இருண்டிருந்த வானம் வெளித்தது. சுற்றாடல் உயிர்த்து, அழகானது.
இயற்கை எதையோ போதிக்கிறது என்பது மட்டும் புரிந்தது எனக்கு.

3 comments:

  1. நல்லாயிருக்கு. வானம் எனக்கு போதிமரம் என்ற வரிகள் மனதில் வந்து போனது...

    ReplyDelete
  2. நல்லாயிருக்கு...வானம் எனக்கொரு போதிமரம் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது...

    ReplyDelete
  3. நன்றாக எழுதியிருக்கீங்க...வானம் எனக்கொரு போதிமரம் என்ற வரிகள் நினைவுக்கு வந்தது...

    ReplyDelete

பின்னூட்டங்கள்