தங்கத்தில் செய்த விளாம்பழம்



எனது அம்மாவுக்கு ஒரே ஒரு மருமகன்தான் இருக்கிறார்.

எனக்கும்‚ தம்பிக்கும் ஒரே ஒரு மச்சான்தான் இருக்கிறார்.

தங்கைக்கும் ஒரே ஒரு கணவர்தான் இருக்கிறார்.

இந்த மூன்று பாத்திரங்களிலும் சிங்கம்போல் வாழ்ந்துகொண்டிருப்பதும் ஒரே ஒரு ஜீவன்தான்.

அவரை நான், அவர் அரைக்காற்சட்டையோடு ஏறாவூர் புகையிரத நிலையத்திற்கருகில் மூக்கால் வழிய வழிய ஓடித்திரிந்த காலத்தில் இருந்து அறிவேன்.

எனவே அவரை .. டேய்‚ வாடா.. போடா என்று அன்பாகத்தான் அழைப்பேன். தங்கையை கட்டியதற்குப்பின்னும் மரியாதை சற்றேனும் அதிகரிக்கவில்லை. அவன் இதுபற்றிக் கவலைப்படுவதில்லை. நீங்களும் கவலைப்படாதீர்கள்.

அவனைப் பார்த்தால் 90களில் தமிழ்த்திரைப்படங்களில் நடித்த அரவிந்தசாமியோ என்று நீங்கள் நினைப்பீர்கள். அந்தளவு ஒற்றுமை இருக்கிறது அவர்களிருவருக்கும்.
வசிப்பதோ சிட்னி நகரத்தில். தொழில் வியாபாரக் காந்தம். அதாவது Business Magnet.

பில்கேட்சுக்கே Business சொல்லிக்கொடுக்கக்கூடிய திறமை அவனுக்கிருக்கிறது.

இப்படியானப்பட்ட அவன் செய்த ஒரு வியாபாரம்பற்றிய சிறிய கதைதான் இது.

இரண்டு நாட்களுக்கு முன் கொழும்பில் தங்கியிருந்தபோது கடும் வெய்யில். நான் ஒரு விளாம்பழ விரும்பி என்பதை அவன் நன்கு அறிவான். அவனுக்கும் விளாம்பழத்தில் காதல் உண்டு.

”விளாம்பழம் கரைத்துக் குடிப்போமா?” என்றான்.

”ஓம்” என்றேன்.

பையன், சப்பாத்து அரைக்காற்சட்டை கூலிங்கிளாஸ் சகிதமாகப் புறப்பட்டான்.

பழக்கடை வீட்டில் இருந்து 5 நிமிட நடை. ஆனால் நேரம் 15 .. 30 .. 45 நிமிடங்களான பின்பும் பையனைக் காணவில்லை.

மாமியார் பதட்டப்பட்டார்.

யாருக்கோ வியாபாரம் கற்பிக்கிறான் என்று நான் நினைத்தேன்.

ஆனால் தங்கையோ ”மன்னவனைக் காணவில்லை” என்ற மகிழ்ச்சியில் குதூகலித்துக்கொண்டிருந்தாள்.

”அம்மா .. டேய் போய் பார்த்துவிட்டு வாடா” என்றபின் நான் புறப்பட்டேன்.

பழக்கடைக்குச் சென்று ”அரவிந்தசாமிபோல ஒருவர் வந்தாரா” என்றேன். பழக்கடைக்காரர் உதட்டைப் பிதுக்கினார்.

சற்றுத்தூரம் நடந்தேன் .. அரவிந்தசாமி கையில் விளாம்பழத்துடன் ஆடி ஆடி வந்துகொண்டிருந்தான்.

”என்னய்யா.. வளாம்பழமரம் தேடிப்போனாயா” என்றேன்.

”இல்லை… வெள்ளவத்தை சந்தையில் நல்ல பழம் இருக்கும் என்பதால் அங்கு போயிருந்தேன்” என்றான்.

அதன்பின்‚ தான் எவ்வாறு விலைகுறைத்து விளாம்பழம் வாங்கியது என்பதை ரசித்துச் ரசித்துச் சொன்னான்.

விளாம்பழம் கிடைத்ததே பெரியவிடயம் என்றும் எனது ஆசை மச்சான் பேரம்பேசுவதில் கில்லாடிதான் என்றும் நான் நினைத்து மகிழ்ந்தேன்.

இருவரும் உரையாடிக்கொண்டே எங்களுக்கு பழக்கமான பழக்கடையைக் கடந்தபோது எனக்கு வாழைப்பழ ஆசை வந்தது.

கடையில் புளிவாழைப்பழம் வாங்கியபோது கடைக்காரர் எனது மச்சானிடம் ”அய்யா! விளாம்பழம் என்ன விலைக்கு வாங்கினீர்கள் என்றார்”.

எங்கள் குடும்பத்து குலவிளக்கும் வியாபாரக் காந்தமுமாகிய அரவிந்தசாமி நெஞ்சை நிமிர்த்தி பெருமையாக ஒன்று 90 ரூபாய் என்றதும் … கடைக்காரர்

”அய்யா விழாம்பழத்தினுள் தங்கமா இருக்கிறது?” என்றாரே பார்க்கலாம் நம்மாளுக்கு முகம் கறுத்துவிட்டது.

”உங்களிடம் என்னவிலை?” என்றார்.

”உங்களுக்கு நான் 25 ரூபாவுக்கு தந்திருப்பேன் என்றார் கடைக்காரர்.

நான் வியாபாரக் காந்தத்தை திரும்பிப் பார்த்தேன்.

காந்தம் விறு விறு என்று நடந்துகொண்டிருந்தான். நடையில் கடும் சோகம் தெரிந்தது.

கடைக்காரர் என்னிடம் .. அய்யாவிடம் சொல்லுங்கள் … இப்படி சப்பாத்து அரைக்காற்சட்டை கூலிங்கிளாஸ் உடன் கடைக்கு போவேண்டாம் என்று‚ அப்படிப்போனால் இப்படித்தான் ஆகும் என்றார்.

வீடு வந்தேன்.

இந்தாருங்கள் விளாம்பழம் கரைத்திருக்கிறேன் குடியுங்கள் என்றான் நான் செருப்பைக் களற்றுவதற்கு முன்பே.

குரலில் பாசமும் நேசமும் வழிந்தோடியது. மச்சானல்லவா என்று நினைத்தேன்.

கண்ணை மூடி ஏகாந்த உலகில் சஞ்சரித்தவாறே விளாம்பழச்சாறினை உறுஞ்சுகிறேன்‚ காதருகில் இப்படி கிசுகிசுத்தான்.

”சத்தியமாக இந்தக் கதை மற்றையவர்களுக்குத் தெரியவரக் கூடாது‚ நமக்குள் இருக்கட்டும்” என்றான்.

ஒஸ்லோ முருகன் சத்தியமாக ஒருவருக்கும் கடைசிவரைக்கும் சொல்லமாட்டேன் என்று கையில் அடித்துச் சத்தியம் செய்திருக்கிுறேன்.

சத்தியம் செய்ததைப்போன்று நான் ஒருவருக்கும் சொல்லவில்லை.
எழுதுவதற்கும் சொல்வதற்கும் வித்தியாசம் உண்டல்லவா..

1 comment:

  1. எப்படியோ இன்று பதிவு வந்தாச்சு! அரவிந்தசாமி மீண்டும் நடிக்க வந்தது போல நீங்களும் பதிவு போட்டாச்சு[[[

    ReplyDelete

பின்னூட்டங்கள்