அமோகமாக வருவாயடி

 இன்று ஒருசாப்பாட்டுக் கடையில் எகாந்தமான மனநிலையில் உட்கார்ந்திருந்தபடியே இஞ்சி பிளேன்டீயை வாயில் வைத்து உறுஞ்சுகிறேன்..”சஞ்சயன் மாமா” எனறு ஒரு பழக்கமான குரல் கேட்டது.

திரும்பிப் பார்த்தேன். பல வருடங்களாக சந்திக்காத ஒருத்தி நின்றிருந்தாள். கர்ப்பமாய் இருப்பது தெரிந்து.

”அடியேய் நீயா? என்னடி ஆளைக் கனகாலமாகக் காணவில்லை” என்றேன்.
”ம்.. உங்களையும்தான்” என்றாள்.

”என்னடி புதினம், கொப்பன் எப்படி?” என்றேன்.

”இருக்கிறார்.. அவருக்கென்ன..”

இப்படி சில நிமிடங்கள் உரையாடியபின் ”மாமா எனக்கு கலியாணம் முடிஞ்சுது” என்றாள் வயிற்றைத் தடவியபடி.

”யாரந்தப் பாவி?”

வெட்கப்பட்டு சிரித்தாள்.


”அடியேய்... கலியாணம்கட்டினால் யாரொன்றாலும் பாவிதான்”

”மாமா .. ” என்றாள் கடுமையாய். பின்பு தன்னுடன் படித்தவனாம் சுத்தத் தமிழனாம் என்றாள்.

ஏற்கனவே ஒரு குட்டி போட்டிருக்கிறார்களாம். கிடாய்க் குட்டி. இப்போது இரண்டாவது தயாரிப்பில்.

”எங்கே வேலை செய்கிறாய்? இது நான்.

ஒரு பெரிய கம்பனியில் சிவில் என்ஜினியராக வேலை செய்கிறாளாம். என்றாள்.

சற்று நேரம் பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு வாழ்க்கைபற்றித் திரும்பியது.

மாமா! இந்த சம்மர் லீவுக்கு மாமி எங்களிட்ட வாறா. அதுதான் யோசனையாய் இருக்கு என்றாள்”

”அதுக்கு என்னத்துக்கு பயப்படுறாய்?”

”உங்களுக்கு உங்கட மாமியில பயம் இருக்கவில்லையா?”

”அடியேய்! மாமியும் நானும் அவ்வளவு பயங்கர ஒற்றுமை.. நாயும் கல்லும்மாதிரி” என்றேன்.

பகிடி அவளுக்கு புரியவில்லை. புரியவைத்தேன். விழுந்த விழுந்து சிரித்தாள்.
உனக்கு, மாமியுடன் என்னடி பிரச்சனை என்று கேட்டேன்.

”எனக்கு மாமியை அவ்வளவு பிடிக்காது. அவ அவரில எல்லாத்துக்கும் பிழைபிடிப்பா”

” அட.. அப்ப உனக்கு உதவிக்கு ஒரு ஆள்வருது என்று சொல்லு என்றபடியே கண்ணடித்தேன்”

”கதையைக் கேளுங்க.. விசர்ப்பகிடி விடாம”

”ம்”

”அவருக்கு தன்ட அம்மாவோட ஒரே சண்டைவரும்”
”ம்”

”இவர் எடுத்த பொருட்களை எடுத்த இடங்களில் வைக்கமாட்டார். உடுப்புக்களை கண்ட இடத்தில் போடுவார். குசினியை தலைகீழாக்குவார். வீடு குப்பையாய் இருக்கும். ஆனால் மாமி படு சுத்தம்”

”அடியேய் அவன் ஆம்பிளைச் சிங்கமடி, அப்படித்தான் இருப்பான் என்றேன் எள்ளல் கலந்த குரலில். அவள் அதைக் கவனிக்கவில்லை.

”எனக்கு பிரச்சனை இல்லை. ஆனால் மாமிக்கு கொதி வரும்”

”ம்”

”பிறகு அம்மாவுக்கும் மகனுக்கும் இடையில் சண்டைதான்”

”அப்பிடி சண்டை நீங்க யாருடனும் பிடித்திருக்க மாட்டீங்க”

”ம்”

என்மீது அவளுக்கு இருக்கும் நம்பிக்கையை நினைத்து எனக்கு பரிதாபமாக இருந்தது.

”சரி அம்மா மகன் சண்டையால் உனக்கு என்னடி பிரச்சனை ?”

அய்யோ மாமா.. இங்கதான் பிரச்சனையே இருக்கு.

”அவங்க சண்டை பிடிப்பாங்க. நான் ”ஙே” என்று பார்த்துக்கொண்டிருப்பேன். ஏவுகணை மாதிரி வாா்த்தைகள் இரண்டு பக்கமும் பறக்கும். மாமி அழுவா.

பிறகு மருமகளே .... நான் செய்தது பிழையா என்று என்னைக் கேட்பா. அவரும் செல்லம் நான் செய்தது பிழையா என்பார்? அம்மாவுக்கு சப்போர்ட் பண்ணுறது இவருக்கு பிடிக்காது..”

”ம்... இப்ப பிரச்சனை விளங்குது” என்றேன்.

”நான் அவருக்கு சப்போர்ட் பண்ணினால் மாமிக்கு கோவம் வரும். பிறகு ஒரு 2 நாளைக்கு முகத்தை தூக்கிவைத்துக்கொண்டிருப்பா. 2வது நாள் இன்னொரு சண்டை வரும். அப்பயும் நான் அவருக்கு சப்போட் பண்ணினால் அடுத்த சண்டை வரும்வரையில் மாமி முகத்தை தூக்கிவைத்துக்கொண்டிருப்பா. எனக்கு என்ன செய்யுறது என்று தெரியவில்லை மாமா”

”என்னடி செய்யப்போகிறாய்”

யோசித்தபடியே 4 -5 தோசைகளை ஒரு கை பார்த்தாள். பின்பு... தோசையை வாய்க்குள் மென்றபடியே.. ”மாமி சொல்லுறது, செய்யுறது எல்லாம் சரி" என்று சொல்லப்போறன்.

”அடியேய்... அரசனை நம்பி புருசனை கைவிடாத அவன் உன்னில கோபப்படப்போறான்”

”மாமா.. மாமியை சமாளிக்க எனக்குத் தெரியாது.. ஆனால் அவர் கிடந்தார்.... அவரும் அவர்ட கோபமும். நம்மட ஆள். எப்படியும் நம்மளிட்ட சரண்டர் ஆகத்தானே வேண்டும். அப்ப அவரை சமாளிக்கலாம்” என்றாள்.

”அமோகமாக வருவாயடி” என்று ஒஸ்லோ முருகனின் சார்பில் வாழ்த்துக்கூறிப் புறப்பட்டேன்.

எனதருமை ஆண் சமூகமே ஐ ஆம் வெரி வெரி சாரி.

இலங்கை என்னும் அற்புத மனிதன்

ஆனி 2015 ஆக்காட்டி இதழில் வெளியான எனது பத்தி.

வாழ்க்கை  எனக்கு அற்புதமானவர்களை காலத்துக்கு காலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் ”இலங்கை”யும். ஆம் இலங்கை என்பது ஒரு அற்புதமான மனம்கொண்ட மனிதனின் பெயர்.  கள்ளம் கபடம், பொய் புறட்டு, பொறாமை, வஞ்சம் எதுவுமே இல்லாத 26 வயதுக் குழந்தை அவன். ஒரு மாற்றுத்திறணாளி.

நாம் அறிமுகமாகி சில மணிநேரங்களிலேயே என் மனதில் சிம்மாசனம்போட்டு அமர்ந்துவிட்டான். நான் அவனை சந்தித்ததும் ஒரு எதிர்பாராத நிகழ்வுதான்.

இவ்வருடம் (2014) நண்பர் ஒருவரின் குழுவினருடன் நான் கதிர்காமத்துக்கு நடந்துசெல்வதற்கு ஒழுங்குசெய்திருந்தேன். ஆனால் அவர்கள் நடப்பதற்கு ஆரம்பித்த நாளன்றுதான் நான் நோர்‌வேயில் இருந்து கொழுப்பிற்கு வந்துசேர்ந்திருந்தேன். மறுநாள் உகந்தைக்குச் சென்று நடக்க ஆரம்பித்துபோது, அன்று மாலையே நண்பரின் குழுவினரோடு சேர்ந்துகொள்ளலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் அவர்க‌ளோடு இணைந்தபோது மேலும் ஒரு நாள் சென்றிருந்தது.


அங்கு எனது நண்பர்களின் குழுவினரோடும், தனது தாயாருடனும் நின்றிருந்தான், இலங்கை. நான் பசித்து களைத்துப்போயிருந்தேன். எனக்கு உணவு தயாரித்தார்கள். அதற்கு முன் தேனீருடன் என்னிடம் வந்தான், இலங்கை. அதுதான் எங்கள் முதல் சந்திப்பு

”இந்தா, குடி” என்றான் ஒருமையில்.  அவனின் மொழியாடல் என்னை நெருடியது. நிமிர்ந்து பார்த்தேன். கட்டையான உருவம். என்னிலும் நிறமான நிறம். இரண்டு பொக்கட்டுக்கள் இருக்கும் ஒரு சேட் அணிந்திருந்தான். கரியநிறத்தில் ஒரு காற்சட்டை என்றிருந்தான்.

அவன் கண்கள் என்னை எவ்வித சலனங்களும் இன்றி மிகத் தீர்க்கமாக என்னை எதிர்கொண்டன. நான் அவனை பார்த்துக்கொண்டிருந்தபோது ”என்ன பார்க்குறா” என்றான் மட்டக்களப்புத் தமிழில். அவனின் மொழியாடல் என்னை இப்போதும் நெருடியது. இருப்பினும் நான் புன்னகைத்தேன். அவன் திரும்பி நடந்தான். அவனது நடையில் ஒரு அழகான வேகம் இருந்தது. அவன் நடக்கிறானா இல்லை ஓடுகிறானா என்று கூறமுடியாது. நடையும், ஓட்டமும் கலந்த நடை அது.

இலங்கைக்கு ஒரு வயதானபோது மற்றைய குழந்தைகளைப்போல் அவன் நடக்கவில்லையாம். அவன் 15 வயதுவரையில் தனது இடுப்பிலேயே இருந்தான். நான் பார்க்காத டாக்டர்கள் இல்லை. போகாத கோயில் இல்லை. உள்ளூர் நாட்டுவைத்தியர் ஒருவர் மணலில் இலங்கையின் கால்களை தாட்டுவைத்து வைத்தியம் செய்திருக்கிறார். எண்ணைகள், களிம்புகள் ஆகியவற்றுடன் முருகனின் அருளுடன் இலங்கை தனது 15வது வயதில் நடக்கத்தொடங்கியிருக்கிறான். அன்றில் இருந்து இன்றுவரை அவன் தன் நடையை நிறுத்தியதில்லை. நடையை ஒரு வித ஓட்டமாய் மாற்றிக்கொண்டிருக்கிறான். இப்போது அவனால் ஒரு நாள் முழுவதும் நடக்கமுடிகிறது. எப்படியான நிலப்பகுதியிலும் லாவகமாக நடந்து ஓடுகிறான், என்றார் இலங்கையின் அம்மா.

இலங்கைக்கு இப்போது 26 வயது. 15 வயதில் இருந்து இன்றுவரை 11முறை கதிர்காமத்திற்கு நடந்திருக்கிறான். அதைவிட தாந்தாமலை, வெருகல், கொக்கட்டிச்சோலை, சித்தாண்டி என்று எங்கெல்லாம் முருகன் கோயில் இருக்கிறதோ அங்கெல்லாம் வருடமொருமுறை நடக்கிறான். வெறுங்காலுடன் நடக்கும் அவனின் பாதம்பட்டு குளிர்ந்துபோகிறது நிலம்.

எனக்கு உணவு தயாரித்துத் தந்தார் நண்பர். நான் ஆற்றங்கரையில் இருந்த ஒரு மரக்குற்றியில் உட்கார்ந்திருந்து உணவருந்திக்கொண்டிருந்தேன். ஆற்றில் இறங்கி உடைகளை கழுவிய இலங்கை என்னருகில் வந்தமர்ந்தான்.

”நீ கதிர்காமத்திற்கு நடதிரிக்கியா, நான் 10தரம் நடந்திருக்கேன்” என்றான். இப்போதும் நான் இலங்கை ஒரு மாற்றுத்திறனாளி என்பதை முழுமையாக அடையாளம் கண்டுகொள்ளவில்லை. ஆனால் மனம் இலங்கைக்கு ஏதோ சுகயீனம் இருக்கிறது என்று உணர்ந்திருந்தது. எனவே ”இல்லை இதுதான் முதல் தடவை, நீங்க 10 தரம் நடந்திருக்கிறீங்களா” என்றேன். தனது உடைகளை காயவைத்தபடியே என்னுடன் பேசிக்கொண்டிருந்தான் இலங்கை. ” நீ அம்மாவ கேளு” என்றவன் எழும்பி நடந்தான்.

இலங்கை அப்பாவித்தனமான மனமும், நடையும் என்னை அவன்பால் இழுத்திருந்தன. நாம் நடக்கத்தொடங்கினோம். இலங்கை,  அரோகா அரோகரா என்றப‌டியே நடந்தான். நான் அவன் பின்னே நடந்தேன். அவன் அரோகரா என்றபோது நான் மௌனமாய் இருந்ததை கண்டதும் ”நீயும் அரோகரா சொல்லணும்” என்றான். அவன் குரலில் கடுமை இருந்தது. அதன் பின் நானும் அரோகரா சொல்லனானேன். இலங்கை புன்னகைத்தான்.
,
இலங்கைக்கு காடு பழக்கமானதொன்றாய் இருந்தது. மிருகங்கள், பறவைகள் அவற்றின் ஒலிகள், மரங்கள், பழங்கள், மிருகங்களின் காலடித்தடங்கள் என்று அவனுக்கு அனைத்தும் தெரிந்திருந்தது. வெய்யிலும் வியர்வையும் அவனுக்கு ஒரு பொருட்டல்ல. தேவாரத்துடன் அரோகரா என்றபடியே நடந்துகொண்டே இருப்பான் இலங்கை. அவனின் வேகத்துக்கு எம்மால் ஈடுகொடுக்கமுடியாது. அவ்வப்போது அவனின் தாய் ”லங்க, நில்லுடா டேய்” என்று கூவியிபின்‌பே அவன் நிற்கலானான். தாயின் சொல்லுக்கு மறுபேச்சு பேசாதவன் அவன்.

அவனுக்கு இதைச் செய் அதைச் செய் என்று கட்டளையிடத் தேவையில்லை. 10 வருட காதிர்காம யாத்திரை அவனுக்கு அனைத்தையும் கற்பிந்திருந்தது. தங்குமிடங்களில்  கொள்ளி (விறகு) பொறுக்க, அடுப்புக்கு கல் தேட, நீர் எடுத்துவர என்று அழைப்பான். நானும் அவனின் பின் செல்லலானேன். இப்போதும் என்னை ஒருமையில் வா, போ, இரு, எடு என்றே இலங்கை அழைத்துக்கொண்டிருந்தான். இப்போது எனக்கு அவனது மொழியாடல் எரிச்சலை தரவில்லை. மாறாக அதை நான் ரசிக்கத்தொடங்கியிருந்தேன். அவன் என்னை அப்படி ஒருமையிலேயே அழைக்கவேண்டும் என்று மனம் விரும்பியது.

இரவுகளில் நாம் பேசிக்கொண்டிருப்போம். அவனுக்கு கூத்துப் பாடல்கள் பல தெரிந்திருந்தன. அவற்றை கூத்திற்கேற்ற லாவகத்தோடும் ஏற்ற இறங்கங்களோடும் பாடிக்காட்டுவான். ”உனக்கு கூத்து தெரியுமா” என்றான் ஒரு நாள். ”இல்லை” என்றேன். ”நான் பாடுறன் நீ படி” என்றபின் பாடத்தொடங்கினான். எனக்கு வெட்கமாக இருந்தது. அருகில் ஒருவரும் இருக்கவில்லை. எனவே இரண்டு வரி பாடினேன். இலங்கைக்கு கூத்து மட்டுமல்ல, குளிர்த்தி நேரங்களில் கோயில்களில் பாடும் பாடல்களும் தெரிந்திருந்தது. அவனது வாயில் இருந்து ஒரு சினிமாப்பாட்டும் வரவில்லை என்பது எனக்கு ஆச்சர்யமான மகிழ்ச்சியைத் தந்தது.

இலங்கையின் அம்மாவுடன் பேசியபோது இலங்கை அவனது சுற்றாடலிலும், அண்டைய கிராமங்களிலும் பிரபல்யமானவன் என்று கூறினார். யுத்த காலங்களிலும் இலங்கை பயமின்றி எங்கும் சென்றுவருவானாம். இயக்கத்தவர்களும் இலங்கையை மிகவும் மரியாதையாக நடாத்துவர்கள், ராணுவத்தினரும் அப்படியே என்றார். கோயில் திருவிழாக்களில் இலங்கை ஒரு முக்கியஸ்தன். ஐயருக்கு உதவியாக தேவாரம் பாடுவதற்கு இலங்கையை வீடுதேடிவந்து அழைத்துப்போவார்களாம். இவற்றை இலங்கையின் அம்மா கூறும்போது இலங்கையின் முகத்தில் பெருமிதம் வழிந்தோடியது.

இலங்கை யார் எதைச் சொன்னாலும் அப்படியே நம்பும் தன்மையுடையவன். கதிர்காமத்திற்கு பாதயாத்திரை தொடங்குவதற்குமுன் உகந்தை முருகன்கோயிலில் தங்கிருந்துபோது அங்கிருந்த ஒரு வயதான பிச்சைக்காரர் இலங்கையிடம் பிச்சை கேட்டிருக்கிறார். இலங்கையிடம் பணம் இருக்கவில்லை எனவே ”இல்லை” என்றிருக்கிறான். அவர் கோபத்தில் இலங்கையிடம் நீ காட்டுகுள் நடந்து போகும்போது நான் கட்டி வைத்திருக்கும் யானை, புலி, சிங்கம், பாம்பு  எல்லாவற்றையும் அவிட்டுவிட்டு விடுவேன், அவை உன்னையும் மற்றையவர்களையும் கடிக்கும் என்றிருக்கிறார். என்றிருக்கிறார். இலங்கை அதை நம்பி, நான் வரமாட்டேன் என்று அடம்பிடித்த இலங்கையை அவனின் அம்மாதான் சமாளித்து அழைத்துவந்திருக்கிறார்.

நாம் கதிர்காமத்துக்கு நடந்தபோது எம்முடன் நான்கு சிங்கள நண்பர்களும் வந்திருந்தார்கள். அவர்கள் சென்றவருடமும் இலங்கையுடன் கதிர்கமாத்திற்கு நடந்தவர்கள் என்று அறிந்துகொண்டேன். அவர்களுக்கு அதிகம் தமிழ் அதிகம் புரியாது. அதிலும் மட்டக்களப்புத் தமிழும், இலங்கையின் அதி வேகமான ரஜனிகாந் தமிழும் புரிய வாய்பே இல்லை. இதைப் பற்றியெல்லாம் இலங்கை கவலைப்படுவதில்லை. அவன் தன் மொழியில் பேசிக்கொள்வான். சிங்கள நண்பர்கள் எப்படியோ புரிந்துகொள்வார்கள். அவர்கள் செல்லத்தமிழில் பதிலளிப்பார்கள் இலங்கையும் எப்படியோ அதை புரிந்துகொள்வான். அன்பால் கனிந்த மனிதர்களுக்கு மொழி எதற்கு என்றே எண்ணத்தோன்றுகிறது.

அவர்களுடன் இலங்கை எவ்வித இடைவெளியும் இன்றிப் பழகுவான். அவர்களும் அப்படியே. அவர்களையும் இலங்கை நீ, வா, போ என்றே ஒருமையில் அழைப்பான். அவர்கள் பொருட்படுத்துவதில்லை. இலங்கை நாம் ஆற்றில் குளிக்கும் நேரங்களில் எம்முடன் இணைந்துகொண்டால் கொண்ட்டம்தான். தண்ணீரில் படுத்துக்கிடப்பதில் அப்படியொரு அலாதியான பிரியம் அவனுக்கு. மகிழ்ச்சியில் பாடுவான். அப்போதும் தேவாரம்தான் அவன்வாயில் வரும்.

கதிர்காமத்திற்கு யாத்திரை செல்லும் அனைவரும் மற்றையவரை சாமி என்றே அழைத்தனர். நான் இலங்கையை இலங்‌கை சாமி என்று அழைத்தேன். ”உன்ட பெயர் என்ன?” என்றான் ஒருநாள். ”சஞ்சயன்” என்றேன். கூறிப்பார்த்தான். என் பெயர் அவன் வாயில் நுளையவில்லை. சந்றே யோசித்தவன் ” நீ மொட்டைசாமி” என்றான். அவனின் அம்மா ”அப்படிச் சொல்லப்படாது ” என்றார். ”நீ சும்மா இரி” என்று அம்மாவை அடக்கினான். அன்றிலிருந்து என்னை அவ்வப்போது மொட்டைசாமி என்று அழைத்தான். எனக்கு அது பிடித்திருந்தது.

இலங்கையின் அம்மா அவனை எப்போதும் தனது கண்ணுக்குள்ளேயே வைத்திருப்பார். வேறுயார் எதைக் கொடுத்தாலும் அவன் அம்மாவின் கண்களுடன் கலந்துபேசிய பின்பே எடுப்பான், உண்பான். இலங்கையின் அம்மா இலங்கையை ”அவன்” என்றே அழைப்பதில்லை. மரியாதையான சொற்கலாளேயே அழைப்பார். நானும் சில நாட்களின் பின் ”அய்யா” என்றே அழைக்கத்தொடங்கினேன். செல்லமாய் அழைக்கும்போது ”இலங்கை, இங்க வாடா என்பேன்”. அவன் இதுவரை ஆட்சேபித்ததில்லை.

ஒரு நாள் இரவு உணவின்பின் அனைவரும் உறங்குவதற்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்தோம். ”இங்க வா” என்று இலங்கையால் அழைக்கப்பட்டேன். ”என்னய்யா” என்றபடியே அவனருகில் அமர்ந்துகொண்டபோது, எனது வலது கையை எடுத்து பார்த்தபடியே எனக்கு சாத்திரம் சொல்லத்தொடங்கினான், இலங்கை. அன்று அவன் மிக உல்லாசமான மனநிலையில் இருந்திருக்கவேண்டும். ”உனக்கு மொட்டை” என்று அவனது சாத்திரம் ஆரம்பித்தது. அவனது சாத்திரத்தில் எனக்கு 40 வயது என்றும். மூன்று கல்யாணங்கள், 13 பிள்ளைகள் என்றும், 10 ஏக்கர் வெள்ளாமை (நெல்) செய்கை, 3 மெசின் (ட்ரைக்டர் வாகனம்) என்னிடம் இருக்கிறது, என்றும் கூறி கள்ளச் சரிப்பு  சிரித்தான். நானும் சேர்ந்து சிரித்தேன். அடுத்த வருடமும் நான் அவனுடன் இணைந்து கதிர்காமம் நடப்பேனாம் என்றும் சாத்திரம் கூறினான். இந்த விடயத்தில் மட்டும் இலங்கை ஒரு உண்மையான சாத்திரி என்றே நான் நினைக்கவேண்டியிருக்கிறது.

நாம் கதிர்காமத்தை சென்றடைந்தபின் நான் கொழும்புக்கும் அவன் மட்டக்களப்பிற்கும் செல்ல முன் இலங்கை என்னிடம் ” தங்கச்சிக்கு கல்யாணம் நீ வருவியா” என்றான். கட்டாயம் வருவேன் என்றேன். என்னை இறுகக் கட்டிப்பிடித்து எனது பெருத்தவண்டியில் சாய்ந்துகொண்டான் சற்று‌ நேரம். நானும் அவனை அனைத்திருந்தேன். என் மனம் யாத்திரையின் அதி உச்ச மகிழ்ச்சியான மனநிலையைத் தந்திருந்தது.

‌நாட்கள் நிற்காமல் ஓடிக்கொண்டிருந்தன. ஏறத்தாள ஒன்றரை மாதங்களின் பின் இலங்கையின் தங்கையின் திருமண நாள் வந்தது. திருமணத்திற்கு முதல் நாள் நான் மட்டக்களப்பிற்கு சென்றிருந்தேன். என்னுடன்  கதிர்காமத்திற்கு பயணித்த சிங்கள தமிழ் நண்பர்களும் வந்திருந்தார்கள். மனம் முழுவதும் இலங்கையும் அவனது நினைவுகளும் நிறைந்திருக்க, இங்கையின் வீட்டை வாகனம் நெருங்கிக் கொண்டிருந்தது. வீட்டருகே வாகனத்தை நிறுத்தி உள்ளே சென்றோம். இலங்கையின் அம்மா எங்களை வரவேற்று உட்காரவைத்தார். வீடு திருமணக்கொண்டாட்டங்களுக்கு தயாராகிக்கொண்டிருந்தது. இலங்கை மட்டும் அங்கு இல்லை.

இலங்கை எங்கே என்றேன். இப்போதுதான் உறவினர்களுடன் வெளியே சென்றான் என்றார்கள். தொலைபேசியில் அவனுக்கு செய்தி தெரிவிக்கப்பட்டது. சற்று நேரத்தில் இலங்கை வீட்டுக்குள் வேகமாய் வருவது தெரிந்தது. எங்கள் அனைவரையும் பார்த்துச் சிரித்தான். என்னருகே வருவதை கண்ட நான் எழுந்து நின்றேன். அருகில் வந்தவன் என்னை இறுகக் கட்டிக்கொண்டான். வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் கணங்களை நான் கண்மூடி அனுபவித்துக்கொண்டிருந்தேன்.

”அம்மா, மொட்ட சாமி வந்திரிக்கார்” என்றான் மட்டக்களப்பின் அழகு தமிழில். நாம் அனைவரும் சிரித்தோம்.

நான் இலங்கை சாமியின் அருகில் அமர்ந்திருந்தேன். அவர் என்னை ரட்சித்துக்கொண்டிருந்தார்.