உலகத்தரத்தில் ஈழத்தமிழனின் திரைப்படம் (A Gun & a Ring)

A Gun & a Ring (துப்பாக்கியும் மோதிரமும்)

நேற்று மாலை The Gun And The Ring படம் பார்க்கக் கிடைத்தது. எம்மவர்களின் சினிமாத் தயாரிப்புக்களில் மிகவும் முக்கியமானதும், உயர்ந்த தரமுள்ளதுமான திரைப்படம் இது. 
ஈழத்தமிழர்களாலும் தென்னிந்திய சினிமாவை மிஞ்சும் வகையில் உலகத்தரமுள்ள படங்களை, மிகவும் சிறிய செலவில், எம்மவர்களின் நடிப்பில் படமாக்கும் திறமையுண்டு என்பதை இப்படம் நிரூபிக்கிறது.

ஆனால், தென்னிந்திய சினிமாவின் மதிமயக்கத்தில் கதாநாயகன், உடலைக்காட்டும் நாயகி, பஞ்ச் டயலாக், ஆடல் பாடல் காட்சிகள், வன்முறை, வக்கிரம், நகைச்சுவை என்ற பெயரில் இரட்டைஅர்த்த வசனங்கள் என்பவையே உலத்தரமான சினிமா என்று நினைக்கும் அறிவாளிகளுக்கான படம் இல்லை A Gun & a Ring என்ப‌து மட்டும் உண்மை.

இப்படத்தில் கதாநாயகன் இல்லை, கதாநாயகி இல்லை, வில்லன் இல்லை, நகைச்சுவையாளர்கள் இல்லை. ஏன் விறுவிறுப்பு என்பதும் படத்தில் இல்லை. ஆனால் சிறந்ததெரு கதையும், அற்புதமான கதை நகர்த்தும் உத்தியும் உண்டு. படத்தின் முழுப்பலமே கதையை முற்றிலும் வேறுபட்ட கோணத்தில் நகர்த்தியிருப்பதே. இயக்குனரிடம் அதீத திறமை இருக்கிறது என்பதற்கு இதுவே சாட்சி. ஒரு மோதிரமும், துப்பாக்கியும் சில மனிதர்களின் வாழ்க்கையை எவ்வாறு பாதிக்கிறது என்பதே படத்தின் மையக்கரு.

வித்தியாசமான திரைப்படங்களின் ரசிகரா நீங்கள்? அப்படியாயின் உங்களுக்கான படம் இது. தவறவிடாதீர்கள்.

மனித மனங்களின் மெல்லிய உணர்வுகள், நிகழ்காலத்தை எட்டிப்பிடித்து மிரட்டும் கடந்தகாலம், குழந்தைகளை இழக்கும் இரண்டு குடும்பங்கள், வக்கிரமே இல்லாத ஓரினச்சேர்க்கை பற்றிய சிறு கிளைக் கதை, வாழ்க்கையில் பலதையும் இழந்த வேற்றின, வேற்றுநாட்டு மனிதர்கள் இருவர், ஒரு Pedophilia நோய்கண்ட மனிதன், அவ‌னைப் பின்தொடரும் புலனாய்வுப் போலீஸ், அந்த புலனாய்வுப் போலீசின் வாழ்க்கை, கணவனிடம் இருந்து பிரிந்து வேறு ஒருவனுடன் வாழும் பெண், அவளது கணவன் இப்படியாக மனிதர்களையும், அவர்களது மனப்‌போராட்டங்களையும் பின்னிப் பிணைந்ததே படத்தின் கதை.

படத்தின் ஆரம்பத்தில் Blues தொனியிலான ஆங்கிலப் பாட்டு அருமையிலும் அருமை. பின்பு மிகவும் மெதுவாய் ஆரம்பிக்கும் கதை ஆரம்பத்தில் புரிந்துகொள்வதற்கு சற்று சிரமத்தைத் தந்தாலும் கதை நகர்த்தப்படும் முறை புலப்படஆரம்பிக்கும்போது கதை உங்களை உள்ளிளுத்துக்கொள்ளும் நிலைக்கு நகர்ந்துகொள்கிறது. கதையின் ஒவ்வாரு முடிச்சும் ஆங்காங்கே தொங்கிநிற்கும்போது ஏற்படும் அயர்ச்சிநிலையானது, அம் முடிச்சுக்கள் அவிள்கப்படும்போது அகன்று இப்படியும் ஒரு கதையை நகர்த்தலாமா என்ற ஆச்சர்யமான எண்ணத்தைத் தருகிறது.

கனடிய தமிழ்ப்பெண்ணாக வரும் பெண்ணின் காட்சிகளில் ஒருவித செயற்கைத்தன்மையை உணர்ந்தேன். இருப்பினும் சிறப்பான பாத்திரத்தேர்வுகளும், நடிப்பும் படத்தின் மிகப்பெரிய பலம். அந்த வெளிநாட்டுமனிதனுக்கும், தமிழ்ப்பெண்ணுக்குமான நெருக்கமான உறவு மிளிரும்போதான உரையாடல்களின் வசனங்கள், தத்துவார்த்தமாக ஆழமான வாழ்க்கையனுபவங்களை பிரதிபலித்திருந்தால் அவர்களுகிடையிலாக உறவு நெருக்கமடைகிறது என்பதை மேலும் நம்பத்தகுந்ததாக்கலாம்.

இறுதிக்காட்சிகளின்போது தந்தைக்கும், புலனாய்வு போலீஸ் அதிகாரிக்கும் இடையில் நடைபெறும் உரையாடலின் வசன அமைப்பும், காட்சியமைப்பும் படத்தின் முக்கிய காட்சிகள் என்பேன் நான். இரண்டு மனிதர்களின் மனப்போராட்டங்கள் மிகவும் அழகாக படமாக்கப்பட்டுள்ளன.

இசையும், ஒளிப்பதிவும் மேலும் சிறப்பாக அமைந்திருக்கலாமோ என்று எண்ணத்தோன்றுவதை மறைப்பதற்கில்லை.

எது எப்படியாயினும் ஈழத்தமிழர்களின் பெயரை உலகத்தரத்தில் பேசவைத்த படம் இது என்றால் அது மிகையில்லை. 5 முக்கிய திரைப்படவிழாக்களில் தேர்வாகியிருக்கிறது இப்படம் என்பதே இப்படத்தின் சிறப்பினைக் கூறுகிறது. Lenin M. Sivam அவர்களுக்கும் அவரது குழுவினருக்கும் எனது வாழ்த்துக்களும் பாராட்க்களும்.

இப்படம் இந்நாட்களில்(27.04. 2014) ஒஸ்லோவில் திரையிடப்பட்டுக்கொண்டிருக்கிறது. தவறவிடாதீர்கள்.

A Gun & a Ring போன்ற படங்களின் பாதையில் பயணிப்போமாயின் எங்களின் படங்களும் ‌பலராலும் கொண்டாடப்படும் நாள் தூரத்தில் இல்‌லை.

மரத்தால் விழுந்தவனை யானை மிதித்தால்...

ஒருவன் மரத்தால் விழுந்திருக்கும்போது மாடு மிதித்தால் தாங்கலாம். ஆனால் யானை மிதித்தால்?

சில நாட்களாக வைத்தியசாலையில் அனுமதிக்ப்பட்டிருக்கிறேன். நேற்று, வைத்தியசாலையில் என்னை சுகம் விசாரிப்பதற்காக வந்த ஒரு ”குசும்பு”, நோா்வேயில் ஆண்கள் மட்டும் வாசிக்கும் ”நாம் ஆண்கள்” Vi menn என்னும்  அதீத கலைரசனை மிக்க சஞ்சிகையை எனக்கு அன்பளிப்பாகத் தந்தார். அதில் சற்று இசகு பிசகான புகைப்படங்கள் இருந்தன.

எனக்கும் அதை வாசிக்கும் மனநிலை அப்போது இல்லையாததலால், எனது அறையில் இருந்த மேசையில் புத்தகத்தை தலைகீழாகவைத்துவிட்டேன்.

இன்று, இன்னொரு நண்பர் குடும்பசகிதமாக சுகம் விசாரிக்க வந்திருந்தார்.

நாம் உரையாடிக்கொண்டிருக்க நண்பரின் மனைவி, மேசையில் இருந்த அந்தப்புத்தகத்தை எடுத்தபோது எனது இதயம் வாய்க்குள் வந்துவிட்டது. காரணம், எனக்கு  அவ்வப்போது சோறுபோடும் மகராசி அவர்.

அவர் அதை எடுத்தது மட்டுமல்ல, அதை மிக அழகாகப் புரட்டிப்பார்க்கவும் செய்தார். எனது இதயம் பெருஞ்சத்தமாய் அடித்துக்கொண்டது. நண்பனுக்கு கணகளால் சமிக்ஞை செய்தேன். அவன் உடனேயே அதைப் புரிந்துகொள்ளவில்லை.

சில பக்கங்களை புரட்டியபோது நண்பனின் மனைவியின் முகம் இரத்தச்சிவப்பானது.  கோபத்தினாலாயிருக்கலாம்.

நண்பரிடம் ”இங்க பாருங்கப்பா, இவருக்கு என்ன ”வருத்தம்” வந்திருக்கு என்றார் ”வருத்தம்” என்பதை பலமாய் அழுத்தியும் உச்சரித்தார்.

இயன்றளவு படு அப்பாவியாய் முகத்தை மாற்றிக்கொண்டு அவர்களைப்பார்த்தேன்.


நிலமையை உணர்ந்த நண்பன் மனைவியிடம் ”உனக்கு எப்பவும் சந்தேகம்தான், இது ஆஸ்பத்தியின்ட புத்தகம். இங்க பார் வேற புத்தகங்களும் இருக்கு. அவன்ட கட்டிலில பார் அங்க ஒரு புத்தகம் இருக்கு” என்றார்.
நான் என்கையிலில் இருந்த ”ஒரு புளியமரத்தின் கதை” என்னும் புத்தகத்தை காட்டினேன்.

”மன்னியுங்கள், தப்பாக நினைத்துவிட்டேன் என்றார் நண்பரின் மனைவி”

”உண்மையாக இருந்தாலே சோதனை அதிகமமாக வரும்” என்று  அதீத உணர்ச்சியை குரலில் காட்டியபடியே கூறினேன். மீ்ண்டும் தான் தவறுக்கு வருந்துவதாகக் கூறினார். நான் தலையை ஆட்டினேன்.

நண்பரும், மனைவியும் வெளியேறியபோது நண்பன் சற்று பின்வாங்கி, மனைவியை முன்னே செல்ல அனுமதித்தான். மனைவி வெளியே சென்றதும், அந்த சஞ்சிகையை எடுத்து ஜக்கட்டுக்குள் அடைந்துகொண்டான்.

என்னைப் பார்த்து ”சென்றுவருகிறேன்” என்றுகூட சொல்வதற்கு அவனுக்கு நேரம் இருக்கவில்லை.

என்ட ஒஸ்லோ முருகா... நண்பனை காட்டிக்கொடுத்து அவனை ‌சொந்த வீட்டிலேயே அகதியாக்கிவிட்டுவிடா‌தே.