சொக்ஸ் உம், சொக்ஸ் தின்னி மெசீனும் கோதாரிவிழுந்த நானும்

இந்த சொக்ஸ் பண்ணுற தொல்லை தாங்கமுடியவில்லை.

மூக்குள்ளவரை சளிபோல இதுவும் நான் இந்த ஊரில இருக்கும்வரையில் என்னைத்தொடரும் போலிருக்கிறது. விதி வலியது இவ்விடயத்திலும்.

முதலில் பிரச்சனையை விபரித்தால்தான் உங்களுக்குப் புரியும்? கடந்த 23 வருடங்களாக நான் வாஷிங் மெசீனுக்குள் 2 சொக்ஸ் போட்டால் வாஷிங் மெசீன் ஓன்றைத்தான் திருப்பித்தருகிறது. 2 சோடி போட்டால் ஒரு சோடியை மட்டும் திரும்பித் தருகிறது ஆனால் அது வேற வேற நிறத்திலிருக்கும். ஆச்சர்யம் என்னவென்றால் அடுத்தமுறை உடுப்புகளைக்களுவும் போது முதல் முறை காணாமல்போன சொக்ஸ் வந்திருக்கும் ஆனால் இந்த முறை போட்டது வந்திருக்காது. கல்லைக் கண்டா நாயைக் காணோம், நாயைக் கண்டால் கல்லைக் காணோம் மாதிரி அல்லது பார்முடா முக்கோத்தினுள்ளக்குள் சென்ற கப்பல் மாதிரி.. மாயமாய் மறைகிறது.

வாஷிங் மெசீன் என்ற பெயரைமாற்றி சொக்ஸ்தின்னி மெசீன் என்று வைத்திருக்கலாமோ என்று எண்ணுமளவுக்கு அதன் தொல்லை தாங்க முடியாதிருக்கிறது. இதனால் குடும்பத்துக்குள்ளும் பிரச்சனைகள் வருகிறது.

உங்களுக்கு ஒரு சொக்சைஐக் கவனமா கழுவி எடுத்து வைக்கத் தெரியல என்றும் இதை ஆதாரமாக வைத்து உங்களுக்கு ஒன்றுமே உருப்படியா செய்யத் தெரியாது என்றும் தேணொழுகப் ”பேசுகிறாள்”” தர்மபத்தினி.

காலை அவசரத்தில் மகள் அப்பா ஒரு சொக்ஸ் தான் இருக்கு என்று கத்தி மற்றதை தேடு என்று கட்டளையிட்டு இம்சை பண்ணுகிறாள்.

நான் ஏதோ வைத்துக்கொண்டு வஞ்சகம் செய்வது போலிக்கிறது இவர்கள் பேச்சு. இல்லாத சொக்ஸை நான் எங்கு தேடுவேன்? நீங்கள் என் மீது பரிதாபப் படுவது புரிகிறது. ஆனால் அவர்களுக்குப் புரியமாட்டேன் என்கிறதே.

எங்கள் வீட்டில் மூன்று சொக்ஸ” பாக் (பைகள்) இருக்கிறது. அ வையும் உருண்டு திரண்டு எனது வண்டியைப்போன்று வளருகின்றனவேதவிர குறையமாட்டேன் என்கின்றன. ஒவ்வொரு முறையும் தனி சொக்ஸ் வரும் போது அதனுள் திணிப்பேன்.

ஆண்டுக்கு ஒரு முறை குடும்பமாக இருந்து தனி சொக்ஸ்களை சோடி சேர்ப்போம். கலியாண புரோக்கர் மாதிரியான வேலை தான் இதுவும். நிறம் பார்த்து, சைஸ் பார்த்து, நீள அகலம் பார்த்து சோடி சேர்ப்போம். அடுத்த முறை கழுவும் வரை சோடிகள் சேர்ந்திருக்கும் ஆனால் கழுவப்போட்டால் டிவோஸ் தான்.

எனக்கு சொக்ஸ்  தட்டுப்பாடு வரும் போது பையை கிண்டி பகுத்தமதிப்பாக நிறம், அளவு பெருந்தும் சொக்ஸ்களை எடுத்து மாட்டிக் கொண்டு போவேன். ஒன்று கறுப்பாயும் மற்றது கிட்டத்தட்ட கறுப்பாயும் இருக்கும். அனால் எனக்கு ரெண்டும் கறுப்புத்தான்.

இந்த சொக்ஸ்களால் வரும் தட்டுப்பாட்டை நான் ராஜதந்திரமாக யோசித்து தீர்த்துக் கொண்டிருக்கிறேன். எப்படித் தெரியுமா? நான் சொக்ஸ் வாங்கும் பொது ஒரே விதமான 4 -5 சோடி வாங்குவேன்... நாசமா போன மெசீன் ஒன்றைத் தின்னாலும் மற்றது இருக்கமுள (சீச்..சீ யாரது கண்ணலங்கி தெய்வமே சொல்லி என்று காலில் விழுந்திருப்பது... அண்ணன் சிஸ்யனா யாரயும் சேர்த்துகிறதில்லப்பபா)

நானும் என்னால் முடிந்தவரையில் இந்தப் பிரச்சனையை துப்பறிந்து பார்த்துவிட்டேன்.  இதுவரையில்  துப்புத்தலங்கவில்லை. சங்கர்லாலை அழைப்போம் என்றால் அந்த மனிதரும்ம் உயிருடன் இல்லை. மூத்த மகள் பெல்ஜியம் நாட்டு துப்பறியும் நிபுணர் Poirotஇன் தீவிர ரசிகையாகிவிட்டாள். அவரை அழைப்போம் என்றால் மனிதர் கொலைக் கேஸ் மட்டும் தான் எடுப்பாராம் என்கிறாள் மகள்.

ஒரு நாள் இதற்கு ஒரு முடிவு காண்பது என்று முடிவு செய்தேன். தலையை வாஷிங் மெசீனுக்குள் விட்டு தலைகீழாக இருந்தும் தேடிப் பார்த்தேன். காணாமல் போன அந்த சொக்ஸ் உண்மையிலேயே காணாமல் போயிருந்தது. (அந்த நேரம் யாரும் மெசீன ஆன் பண்ணியிருந்தால்... ஒஸ்லோ முருகா..)

ஏதும் பில்லி சூனியமாயிருக்குமோ என்று நினைத்து இந்தியாவில் இருந்து லண்டன் வந்து டீவீல விளம்பரம் பண்ணும் ”ஆதிவாசியிடம்” அம்மன் படம் போட்ட யந்திரத் தகடு ஒன்றை வாங்கி வந்து வாஷிங் ரூமுக்குள் வாஷிங் மெசீனுக்கு மேல் மாட்டியிருந்தேன். ஆனால் அம்மனுக்கும் தண்ணி காட்டியது சொக்ஸ். அந்த ஆதிவாசி டீவீ வளம்பரத்தில் நாடிபிடித்து, கைபார்தது, காண்டம் பார்த்து அது இது பார்த்து என்றாரே தவிர சொக்ஸ் பிடித்து என்று சொல்லவில்லை, நானும் அதை நானும் கவனிக்கவில்லை. யந்திரத் தகடு போட்ட பின்பும் சொக்ஸ் வராததன் காரணம் அதுவாயிருக்குமோ? என்னவோ? அம்மனுக்குத் தான் வெளிச்சம்.

எனது தூரதிஸ்டமோ தர்ம பத்தினியின்அதிஸ்டமோ தெரியவில்லை அவள் உடுப்பு தோய்க்கும்போது எல்லாம் சரியாக வருகிறது. சொக்ஸ்சும் அவளுடன் கள்ளன் பொலீஸ் விளையாடாமலும், எண்ணிக்கை குறையாமலும் சரியாக வருகிறது. எதிர்த்துக் கதைக்க முடியவில்லை என்னால். அவள் சொக்ஸ்ஐ கையால் கழுவி பிறகு தோய்த்த உடுப்புக்குள் கலந்து வைக்கிறாளோ என யோசிக்கிறேன் அல்லது சொக்ஸ் காணாமல் போகும் போது அடக்கி வாசிக்கிறாளோ? யாமறியோம் பராபரமே.

இன்று உடுப்பு தோய்க்கப்போடும் போது 2 சோடி சொக்ஸ் போட்டேன் வாஷிங் மெசீனிக்குள். முன்னைய அனுபவங்களின் காரணமாக வடிவாக, நிதானமாக 1 , 2    1 , 2 என்று எண்ணி எண்ணி மெசீனுக்குள் போட்டேன் வாஷிங் மெசீனை பூட்டினேன். அதன் பிறகும் மனம் பொறுக்காமல் மீண்டும் திறந்து நான்கும் உள்ளே இருக்கிறதா என சரிபார்த்து மீண்டும் பூட்டினேன். ஒரு தரம் என்னைச் சுற்றி நிலத்தையும் பார்த்துக் கொண்டேன். நிலத்தில் விழுந்திருக்கலாம் அல்லவா. வர வர இந்த சொக்ஸ் பிரச்சனையால் மனநோயாளியாகிக் கொண்டிருக்கிறேன் போலிருக்கிறது.

இந்த சர்வதேச பிரச்சனை பற்றி பலருடன் விவாதித்திருக்கிறேன் (ஜ.நா வுக்கு கொண்டு போகாத குறைதான்) எல்லோரும் இதையே சொல்கிறார்கள் அல்லது நோ கொமன்ட்ஸ் என்கிறார்கள்  (மனைவி அருகில் இருந்தால்). நோ கொமன்ஸ் என்றால் அவர்கள் எனது கூற்றை மறைமுகமாக ஆதரிக்கிறார்கள் என்று அர்த்தம்.

உங்களுக்கு ஏதும் தீர்வு தெரிந்தால் தயங்காமல் தொடர்பு கொள்ளுங்கள்.

அது வரை சொக்ஸ் தேடிக் கொண்டிருக்கும், நான்.

(இந்த ”நான்” ஆணவத்தின் அறிகுறி அல்ல என்றும் சிலருக்கு அறியத்தருகிறேன்)

30.05.10

23 மே. 2010 நேற்றய தொடர்ச்சி

ஆகா...ஆஸ்பத்திரியில் படுத்தால் என்னமாய் நித்திரை வருகிறது. உலகம் மறந்து துயில்ந்திருந்தேன். திரைச்சீலைக்குள்ளால் திரு. சூரியன் சுட்டெரித்த போது தான் எழும்பினேன். வானம் மேகங்களின்றி செக்சியாய் இருந்தது (நீலமாய் இருந்தது)

எல்லாம் முடித்து (அது தான் ‌எல்லாம் என்கிறேன்.. பிறகு என்ன லொள்ளுக் கேள்வி வேண்டிக்கிடக்கு) பேஸ்புக், ப்ளாக் பார்த்த முடிய வயிறு புகைந்தது. எட்டி ”உதவி தேவை” மணியை இழுத்துவிட்டேன்.


கண்ணிமைக்கும் நேரத்தில் வெள்ளைத்தேவதை என் முன் தோன்றி என்ற வேண்டும் என்றாள். காலையுணவு என்றேன். கால் முளைத்து கட்டிலுக்கு வந்தது காலையுணவு. புகைபோட்டு பதப்படுத்திய சாலமன் (சாலமன் பாப்பய்யா அல்ல), பொரித்த முட்டைமஞ்சற்கரு, சலாட், ஜாம். ஈவு இரக்கமின்றி உட்தள்ளிக் கொண்டேன்.

கவிதாவின் தொப்புள் கொடியை கொஞ்சம் வாசித்த போது மனம் சொல்லியது இதுவல்ல அப்புத்தகத்தை வாசிக்கும் நேரம் என்று. சரி என்று அதை வைத்துவிட்டு பளாக் எழுதத் தொடங்கினேன் (சோமாலியாகாரங்களின் இம்சை பற்றியது).

இடையில் ஒரு வெள்ளைத்தேவதை வந்து ECG எடுக்கவேணும் என்றாள். எதையோ உடம்பில் ஒட்டி, எதையோ பூட்டி, என்னவோ பார்த்தாள்.
வெளிக்கிடு வைத்தியரிடம் என்றாள். மாடு மாதிரி அவள் பின்னால் போன போது வைத்தியரின் கந்தோரைக் காட்டி அங்கு போ என்றாள்.

கதவருகில் வந்து வரவேற்றார் டாக்டர். நாலு தரம் சஞ்சயன் செல்வமாணிக்கம் என்று உச்சரித்துப் பார்த்தார். முடிவில்லை அவருக்கு. சகிக்கவில்லை எனக்கு.

உனக்கு மாரடைப்பு வரவில்லை ஆனால் கொலஸ்ரோல், சீனி, பிரசர் அதிகமாய் இருக்கிறது என்றும் அதை வைத்து ஒரு 30 நிமிடங்கள் அலட்டி நாளை மறுநாள் புதியதோர் வைத்தியசாலையில் ஏதோ இயந்திரம் பூட்டி இதயத்துடிப்பு அளக்க வேண்டும் என்றும் அதற்கு கடிதமும் தந்தார். வாங்கி வீடு வந்து சேர்ந்தேன். நேரம் 13:30


பேஸ்புக் இல் சற்று குந்தியிருந்தேன். சற்றே அலுப்பாய் இருந்தததால் சற்று அயர்ந்த போது தொல்லைபேசி தொல்லை தந்தது. மறுபக்கத்தில் எனது கொம்பனியின் ஒரு வாடிக்கையாளன். இன்டர் நெட்டை காணவில்லை என்று பெரியோர் குண்டைத் தூக்கிப் போட்டார். கிண்டலாய் அவ்வளவு பெரிய சாமான் துலையாது என்ற போது பெரிதாய் சேர்ந்து சிரித்து உடனே வா என்றார்.


அவரிடம் போன போது அவரின் நாயும் அங்கிருந்தது. நாயா அது பேய் மாதிரியல்லவா இருந்தது. எனக்கும் அந்த மனிதர்களின் நண்பர்களுக்கும் பெரிதாய் ஒத்துவருவதில்லை அந்தக் காலம் தொடக்கம். நாயோ புதிய மனிதனை மணந்து கொண்டிருக்க நான் காற்றில் இருந்த நாயின் நாற்றத்தை சுவாசித்துக் கொண்டிருந்தேன். நாய் நிமிர்ந்து நேரே என்னைப் பார்த்த போது கண்ணை மற்றப்பக்கம் திருப்பிக் கொண்டேன்.


கணணியைப் பார்த்தேன். வயலெஸ் பட்டன் ஓப் ஆக இருந்தது. ஒன் ஆக்கினேன். துலைந்து போயிருந்த இன்டர்நெட் மீண்டு வந்திருந்தது. தேவைக்கு அதிகமாகவே பாராட்டினார். ஆனால் குறைவாகப் பணம் தந்தார்.


திரும்பி வீட்டவந்து அயர்ந்து தூங்கினேன். தொ(ல்)லைபேசிச் சத்தத்தில் எழும்பிய போது மறுகரையில் ஆப்கான் நாட்டு நண்பரொருவர் நின்றிருந்தார். அவர் ஒரு அரசர்.. ஆம் அவரின் பெயர் கான். (மதனின் வந்தார்கள் வென்றார்கள் வாசித்ததில் கான் என்றால் அரசன் எனறு அறியக்கிடைத்தது). வரமுடியுமா என்றார்? மன்னனின் அழைப்பை மறுக்க முடியுமா என்ன?

எழும்பி குளித்து வெளிக்கிட்ட போது நட்பு சாப்பிட வாடா என்றது உரிமையாய்.

சாப்பிட்டு, மன்னனின் அரண்மணை நோக்கி வாகனத்தை திருப்பினே். வெளிநாட்டுவர்களுக்கே சொந்தமான புறநகர்ப்பகுதியில் இருந்தது மனன்னனின் அரண்மணை. பார்க்கிங் தேடியலுத்து தொலைவில் நிறுத்தி, நடந்து போய் மன்னனை தரிசித்த போது மன்னன் இன்னும் நால்வருடன் ஒரே பாத்திரத்தில் (பெரிய பாத்திரம்) கடலைக்கறியுடன் பாண் தின்றுகொண்டிருந்தார். அன்பாய் வா சாப்பிடுவோம் என்ற போது கலாச்சார அதிர்ச்சியின் காரணமாக பயத்தில் வேண்டாம் என்றேன். அப்ப தேத்தண்ணி கு‌டி என்ற போது ஓம் என்றேன். ஆப்கான் தேத்தண்ணி வந்தது குடித்தேன்.

வின்டோஸ் ஏழு போடு என்றார் ஒரு கணணி‌யைக் காட்டி. சரி என்று போட்டுக் கொண்டிருந்த போது (ஒரிஜினலான லைசன்ஸ் ஆ என்று நீங்க கேட்டா எனக்கு கெட்ட கோபம் வரும்) ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளதாக தொல்லைபேசி சிணுங்கியது. எடுத்துப் பார்தேன். இப்படி எழுதியிருந்தது அதில்.


ஹாய்! கொஞ்சம் குறோணர்கள் கடன் கிடைக்குமா? என்று

பிச்சைக்காரனிடம் கடன் கேட்பது யார் என்று பார்த்தேன்.. அட நம்மட செபஸ்தியான் என்னும் போலந்து நாட்டு ஜீவன் ஒன்று.

அரசனின் கதையை சற்றே நிறுத்தியிருக்கிறேன்

இவ்விடத்தில் நாம் ஏறத்தாள 1 மாதம் பின்னோக்கிப் போக வேண்டும். எனென்றால் அப்போது தான் உங்களுக்கு நான் இந்த செபஸ்தியானை அறிமுகப்படுத்தலாம்.

அதுவும் ஒரு மாலைநேரம் தான். செபஸ்தியான் தொலைபேசியில் வந்து தனது கணணி செத்து விட்டதாகவும் என்னால் உயிப்பிக்க முடியுமா எனவும் கேட்டார். நானென்ன கடவுளா.. பார்த்த பின் தான் சொல்லலாம் என்றேன். சரி என்றவன் ஆனால் ஒரு பிரச்சனை என்றான். என்னய்யா உன்ட பிரச்சுனை என்ற போது.. தன்னிடம் இப்போதைக்கு காசு இல்லை எனவும், திருத்தித்தந்தால் காசு வரும் போது தருவதாகவும் சொன்னான்.


என் உள் மனதுடன் உரையாடினேன். பதில் வழமை போல் சாதகமாகவே இருந்தது உதவி கேட்பவருக்கு. சரி பறவாயில்லை என்றேன். வீட்ட கொண்டு வா பார்க்கிறேன் என்ற போது பரிதாபமாய் உன்னால் வரமுடியாதா என்றான்?


சரி விதி அழைக்கிறது என்று நினைத்தபடியே வாறேன் என்றேன். மாற்றுக் கணணணி இருந்தால் கொண்டு வா என்று சொல்லி தொடர்பைத் துண்டித்தான் செபஸ்தியான்.

அவனைச் சந்தித்த போதே மனம் அவன் பால் பரிதாபப்படத தொடங்கியிருந்தது. (நாம கொஞ்சம் சாப்ட் டைப்பு)

கணணியை பார்த்தேன் செத்துப் போயிருந்தது அது. உயிர்ப்பிப்பதற்கு மூன்று நாட்கள் வேணும் என்றேன் பகிடிடியாய்... கணணணி என்ன யேசுவா என்றான் பதிலுக்கு நக்கலாக...
இவனிடம் கவனமாயிரு என்றது மனம்.

நான் அவனைக் கண்ட போது சோர்ந்து போய் இருந்தான். எனய்யா சோர்ந்திருக்கிறாய் என்று போது சாப்பிட்டு மூன்று நாட்களாகிறது என்றான் தயங்கித் தயங்கி. ஏதும் காமடி கீமடி பண்ணுகிறானோ என்று நினைத்து மீண்டும் கேட்டேன் அதே பதிலைச் சொன்னான்.

சத்தியமாய் அதிர்ந்து போனேன். நோர்வேயில் பட்டிணியா? அதுவும் மூன்று நாள். நம்ப முடியவில்லை. ஆனால் பாவிப்பயல் உண்மையென்கிறானே.


சரி வாகனத்தில் ஏறு என்றேன்.. எதுக்கு என்றான்
போய் சாப்பிடுவோம் என்றேன்.
வந்தான்.
கேபாப் கடையொன்றில் நிறுத்தினேன்
அவனுக்கு கேபாப்பும், எனக்கு சுகர் ப்ரீ கோலாவும் வாங்கிக் கொண்டு வாகனத்தில் ஏறிய போது நன்றி சொல்லி கண்கலங்கி நின்றிருந்தான். முதுகில் தட்டி சாப்பிடு முதலில் பிறகு பேசுவோம் என்றேன்.

முச்சுபபேச்சில்லாமல் சாப்பிட்டு முடித்து கை துடைத்து கோலா குடித்து
நீ நல்லவன் போல என்றான்
(
அண்ணண் வடிவேலுவின் ” நீங்க ரொம்ப நல்லவர்ண்ணே” டயாலாக் ஞாபகத்தில் வந்து போனது
சிரித்து வைத்தேன்

சுய சரித்திரம் சொன்னான்

நாடு போலந்து
நோர்வேயில் பல வருடங்கள்
மூன்று நாட்களுக்கு முன் காதலியால் கைவிடப்பட்டு துரத்தப்பட்டவன்
(f)பாமசி பற்றி ப‌டிக்கிறானாம்
தனக்கு மனநோயிருப்பதாயும்
மருந்து எடுப்பதாயும்
சொன்னான்

கண்கள் நிலையில்லாமல் தழும்பியபடி எதையோ சொல்லிக் கொண்டிருந்து. சரளமாய் நோர்வே மொழி கதைத்தான். ஆனால் ஒரே வார்த்தையை பல தடவைகள் மீண்டும் மீண்டும் உச்சரித்துக் கொண்டிருந்தான். பாவமாயிருந்தது ஒரு இளைஞனை இப்படிப் பார்க்க.

அவனை இறக்கிவிட்டு கையில் சற்று பணமும் குடுத்து உதவி தேவை என்றால் சொல் என்றேன். சற்றே யோசித்தவன்

தன் குரலில்
சந்தேகம் கலந்து கேட்டான்
ஏன் எனக்கு உதவி செய்கிறாய் என்று

தடுமாறிப் போனேன் சற்று நேரம்
சுதாரித்து
தெரியாது
ஆனால் மனம் சொல்லியதைச்
செய்தேன் என்றேன்
நீல நிறமான பளிங்குக் கண்களால்
என் உயிர்வரை ஊடுருவி
நான் சொல்வது உண்மையா என்று ஆராந்து
ஏதோ உணர்ந்து
புன்‌னகைத்தான்

விடைபெற்ற போது மாற்றுக் கணணி கேட்டான்.
இன்னொருவருக்கு சொந்தமான ஒரு கணணியை என் கைகள் எடுத்து கொடுத்திருந்தன.. நான் எனது முட்டாள்தனமான செய்கையை உணர்ந்த போது.

நன்றி சொல்லி மறைந்து போனான் செபஸ்தியான்.
நான் கொடுத்த கணணியின் சொந்தக்காரன் கேட்டால் என்ன சொல்லப் போகிறேன்.. மண்டை வெடித்துக் கொண்டிருந்தது எனக்கு.

‌அடுத்து வந்த 6 நாட்களும் நரகமாய் போனது எனக்கு

தனது கணணியை தா என்றான் கணணியின் உரிமையாளன்
காற்றைப் போல் கண்ணுக்குத் தெரியாமல் மறைந்திருந்தான் செபஸ்தியான்.
தெலைபேசி அடித்தது... எடுக்க மறுத்தான்
குறுஞ் செய்திகளை உதாசீனம் செய்தான்

கடுஞ்சினத்தில் அவன் பரம்பரையை திட்டிக் கொண்டிருந்தேன்.

அவனின் வீடும் எனக்குத் தெரியாது. அவனை நான் சந்திதத்ததும் ஒரு பொது இடத்தில்
என்ன செய்ய, ஏது செய்யவெனத் தெரியவில்லை

நட்பிடம் புலம்பித் தீர்த்தேன்
மோடா, மடையா, விசரா என்று பேச்சு விழுந்தது
வாங்கி வைத்துக் கொண்டேன், மௌனமாய்

6ம் நாள் கட்டாயம் கணணி வேண்டும் என்றான் கணணியின் உரிமையாளன். மத்தளத்தின் நிலையில் நான்
சரி.. எனது கணணணியை குடுத்து,உண்மை இயம்பி, பிரச்சனையை முடிப்போம் என்று நினைத்திருந்த போது
தொலைபேசியில் தானே வந்தான் எனதன்பு செபஸ்டியான்.
மன்னித்துக்கொள் என்றான்.
மெளனித்திருந்தேன்
சுகயீனம் காரணம் என்றான்.
கணணியை திரும்பித் தருகிறேன் வா என்றான்
போய் எடுத்து வந்து
உரியவனிடம் ஒப்படைத்து வீடு வந்தத போது
வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் ..... என்னும் முது மொழி ஞாபத்தில் வந்தது.....

அது சரி.. நான் விதைத்திருந்தது வினையா? திணையா?

நோர்வே நாட்டு சுதந்திரதினத்தன்று குறுஞ்செய்தியில் வாழ்த்தும் அனுப்பியிருந்தான் செபஸ்தியான்.

இத்துடன் செபஸ்தியானின் பழைய கதை முடிந்தது. அரசனின் கதை தொடர்கிறது


100 குறோணர்கள்... கடனாய் கேட்கிறான். குடுப்பதா வேண்டாமா என்று மனதுக்குள் போராட்டமே நடந்தது.
இம் முறையும் அவனே ‌ஜெயித்தான்
இன்ன இடத்திற்கு வா தருகிறேன் என்றேன்
வந்து
நன்றி சொல்லி
திருப்பித் தருவதாய் உறுதி கூறி
பெற்றுப்போனான் சில பலகுறோணர்கள்

அவன் வந்த போது வா சாப்பிடுவோம் என்றேன்
தீர்க்கமாய் மறுத்தான்.

அரசனின் கணணி வேலை முடியும் தருவாயி்ல் இருந்தது. அதை முடித்து கொடுத்து
வீடு வந்த போது நேரம் சாமத்தை தொட்டுக் கொண்டிருந்தது.

இன்றைய நாளும் இனிமையானதே

இத்தால் சகல சோமாலிய நாட்டவருக்கும் சஞ்சயன் என்னும் நான் அறியத்தருவது என்னவென்றால்

இத்தால் சகல சோமாலிய நாட்டவருக்கும் ஏறாவூரைச் சேர்ந்த சஞ்சயன் என்னும் நான் அறியத்தருவது என்னவென்றால்:

இனி மேல் நீங்கள் யாராவது எனக்கு அஸ்லாமலைக்கும் சொல்லும் போது நான் அலைக்கும் அஸ்லாம் சொன்னால் அது நான் உங்கள் நாட்டவன் என்று அர்த்தப்படாது என்பதை இத்தால் மிகத் தெளிவாக அறியத்தருகிறேன்.

என் நிறம் கொண்ட சகோதரமே சற்று யோசி

” a ஐ @ ஷ d ஹா % \ ” என்று எனக்கு புரியாத மொழியில் பக்கத்தில வந்து இருந்து கதைத்தால் நான் நான் என்ன செய்வேன். நீங்கள் பண்ணும் இம்சை கொஞ்சமா? பஸ்ஸில், புகையிரதத்தில், நிலக்கீழ் புகையிரதத்தில் மற்றும் பொதுக் கழிப்பறையில் தொடங்கி எல்லா இடத்திலும் உங்களிடம் நான் படும் பாடு... பெரும்பாடய்யா..

அலுத்துவிட்டதய்யா உங்கள் தொல்லை. கண்ட கண்ட இடத்திலெல்லாம் வைத்து புரியாத பாசையில் நீங்கள் ஏதோ சொல்ல நான் முழிச..பிறகு நீங்கள் முழுச. நமக்கு தேவையா இது? ஒரு சின்ன புன்னகையுடன் கடந்து போனாலென்ன?

நேற்று ஒருத்தன் திரத்தோ திரத்து என்று திரத்தி வந்து ஏதோ கேட்கிறான்... ஒரு மசிரும் புரியவில்லை. ஒரு மாதிரியாய் நான் தமிழன் உன் மொழி தெரியாது என்றேன். பாவிப்பயல் ஒரு புன்னகையைத்தானும் காட்டாமல் முகத்திலடித்த மாதிரி விருக்கென்று திரும்பிப்போனான். சரியான கஞ்சப் பரம்பரையய்யா உன்னுடையது. ஒரு புன்னகைக்கும் உன்னிடம் பஞ்சமா? கஞ்சப்பயலுக.....


ஒரு நாள் ஒரு முக்காட்டுத் தேவதையும் ஏதோ கேட்டாள்.... பாவிப்பய மகன் நான் பதில் சொல்லத் தெரியாமல் இருந்தேனே... தேவதை என்ன கேட்டாளோ யார் கண்டார்கள். (ஜ லவ் யூ சொல்லியிருப்பாளோ?... நம்ம பர்சனாலிடி அப்பிடித் தானே)


தேவதைகள் மட்டும் என்னுடன் பேசலாம்.. அவர்களுக்கு மட்டும் விதிவிலக்களிக்கிறேன். அதற்காக உடம்பில் குண்டு கட்டிய ‌தேவதையுருவிலுள்ள பேய்களை அனுப்பாதீர். பிரச்சனை ஏதும் எனின் பேசித் தீர்த்துக் கொள்வோம். நான் தமிழன்.... ஆயுதம் களைந்து பேச்சாயுதம் பூண்டிருப்பவன்.... புரிகிறதா என்நிறத்தவனே?

என்னைப் பார்த்தால் கடற் கொள்ளைக்காரன் மாதிரியா இருக்கிறது? ஏதும் காமடி கீமடி பண்ணலியே நீங்கள்?

சத்தியமாய்ச் சொல் உண்மையிலேயே அவவ்வளவு பயங்கரமானவானகவா தெரிகிறேன்? அகத்தின் அழகு முகத்தில் காணும் வித்தை அறிந்தவரோ நீவிர்?

அதனாலேயே நீங்கள் ஏதும் business பேச வருகிறீர்கள் என்றால், மனிதர்களுக்கு நான் விலை பேசுவதில்லை என்பதையும் அறிவிக்கிறேன். ஆனால் உனக்கு ஒரு டிப்ஸ் தருகிறேன். தமிழர்களிலேயே நானறிந்த தலைசிறந்த கொள்ளைக்காரன் தமிழ்நாட்டில் கறுப்புக் கண்ணாடியுடன் இந்தா அந்தா என்ற வாழ்கிறானாம்
பணம் என்றால் பிணமான பின்பும் வாய்திறப்பானவன்.
விரும்பினால் business பேசு அவனுடன்...
கவனம்! அடுத்து அவன் விற்பது உன் நாடாயுமிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த ஒரே ஒரு கடற் கொள்ளைக்காரன் எனது பெருமதிப்பிற்குரிய சீனத்து ”அகூதா” வும் அவனின் தளபதி சோழநாட்டு இளையபல்லவனும் தான். அவர்களுடன் என் இளைய பிராயத்தில் பல தடவைகள் ஆயிரம் தீவுக் கூட்டம் (பிலிப்பைன்ஸ்) வரை கடல் புறாவில் கடலோடியிருக்கிறேன். எத்தனையோ கப்பல்களை இளையபல்லவனுடனும், அமீருடனும் சேர்ந்து எரியூட்டி கைப்புற்றியிருக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும் சத்தியமாய் உண்மை உங்களின் இன்றைய கப்பல்களை விட பெரியது, வல்லது சாண்டில்யனின் அன்றைய கடல்புறா.


அது சரி உங்களுக்கு ஏனிந்த business இல் இவ்வளவு ஆர்வம்? கொள்ளை லாபம் கிடைக்கிறதோ? ஏதோ விளம்பரம் எல்லாம் செய்கிறீர்களாமே தொலைக்காட்சியில், உண்மையா? ‌வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் தானே... என்ன?

ஏன் ஆயுதம் என்றதும் பல்லிளிக்கிறீர்கள்.... நான் சொன்னது வேற ஆயுதமய்யா... ஹய்யோ... ஹய்யோ..

இறுதியாய் ஒன்று...

கண்ணா! கவனமய்யா கவனம்
கவனமாய் business பண்ணு. எதிரிகளை சம்பாதிக்காதே... சுவடே இல்லாமல் பண்ணிப்புடுவாய்ங்க பாவிப்பயலுக.. (எல்லாம் அனுபவம் தான்)


அன்புடன்

சோமலியனல்லாத
சஞ்சயன்

நோர்வே

மே 22. 2010உம் கவிதாவின் கவிதைகளும்

மே 22. 2010 நேரம் 23:50
இடம்: ஒஸ்லோ அவசர நோயாளர் வைத்தியசாலை (Olso legevakt)

இன்றைய
நாள் நல்லாகத் தான் விடிந்தது மலர்ந்தது. மாலை வரை பிரச்சனையேஇல்லாமல் சிவனே என்று போய்க் கொண்டிருந்தது.
அதிசயமாய் கொம்பியூட்டர் திருத்தச் சொல்லி எனது கம்பனிக்கு ஆடர்வரமலிருந்தது இன்று.
முன் மதியம் நட்பு ஒன்றுடன் குறொன்லான்ட் என்றும் புறநகர்ப் பகுதிக்கு போய்வந்தேன்.
மதியம் ப்ளாக் இல் எழுதினேன்.
மாலை காவிதாயினி கவிதாவிடம் இருந்து இரண்டு புத்தகங்கள் வாங்கிக் (காசுகொடுக்காமல்) கொண்டு (தொட்டில் பூ, என் ஏதேன் தோட்டம்) வீடு வந்தேன்.
நடந்து வீடு வரும் வழியிலேயே கவிதாவின்என் ஏதேன் தோட்டத்தின்அரைவாசியை கடந்திருந்தேன்.

வீட்டு
வந்து ப்ளாக்கில் எழுதியதை பிரசுரித்துவிட்டு ஆறுதாய் ன் ஏதேன்தோட்டம் வாசித்துக் கொண்டிருந்த போது சற்றே இடது கை வலித்து, வர வர கைபாரமாகியது, கையுக்குள் ஏதொ மின்சாரம் ஓடுவது போல் இருந்தது. திடீர் எனமரடைப்பால் போய்ச்சேர்ந்த அப்பா ஞாபகத்தில் வந்தார். அவருடன் எனதுகொலஸ்ரோல் லெவலும் சேர்ந்துகொள்ள மனதுக்குள் இனம் புரியாதபயமொன்று சூழ்ந்து கொண்டது. (மரணபயமோ?)

சற்று
நிதானித்து போசித்தேன். யோசனையின் ஆலோசனையின் படி 113 க்குதொலைபேசினேன்.
பூராயம் வசாரித்தவள் சொன்னாள் நீ அவசர வைத்திய பிரிவுக்கு உடனே போஎன்றும், என்னை வாகனமோட வேண்டாம் என்றும்.
நட்பை அழைத்தேன்.
10 நிமிடம் கேட்டான்.
கொடுத்தேன்
அதற்கிடையில் வீட்டு வாசலி்ல் அம்பியூலன்ஸ் வந்து நின்றது.

மஞ்சல்
உடுப்பு போட்ட மனிதர் இருவர் வந்தனர். ஏதோவெல்லாம் கேட்டனர்.
நெஞ்சு மயிர் மளித்து
எதையோ ஒட்டி
வயர் பொருத்தி
எதையோ பார்த்து
திருப்தியாய் இருக்கிறதென்றனர்.

ஆனால்
இதயத்துடிப்பு மட்டும் குறைவாக இருக்கிறது என்பதால்
அத்துடன் உன் தந்தை மாரடைப்பால் இறந்தவராகையால் உன்னை மேலதிகமாகபரிசோதிக்க வேண்டுமெனவும், அவசர நோயாளர் பிரிவுக்கு போகும் படியும்கட்டளையிட்டனர்.
நட்புடன் அவசரநோயாளர் பிரிவு வந்து சேர்ந்தேன்
(கொம்பியூட்டரும், கவிதாவின் இரு புத்தகங்களும் என்னுடன் வந்தன)

இங்கும்
அதே பரிசோதனைகள்.. காத்திருப்புக்கள்
கவிதாவின் என் ஏதேன் தோட்டம் முடிந்து விட்டது. மற்ற புத்தகத்திலும் அரைதூரம் கடந்துவிட்டேன்.

நாளை
ஏதோ பரிசோதனை செய்ய வேண்டுமாம் வைத்தியசாலையில் தங்குஎன்று உத்தரவிடப்பட்டிருக்கிறேன்.

இன்றைய
நாள் நல்லதா கெட்டதா?

எது
எப்படியோ கவிதாவின் புத்தகங்கள் பல நாட்களின் பின் வாசிப்பின் ருசியைமீட்டுத் தந்திருக்கின்றன.

நான் என்றும் கவிதைகளை சிறு சிறுவாய் பிரித்து.. அதனூடே வரும் வார்த்தைகளை, வசனங்களை ரசிப்பவன். அதனாலோ என்னவோ ஒரு கவிதைக்குள் எனக்கு பல கவிதைகள் கிடைக்கின்றன. அதுவும் பற்பல அர்த்தங்களில்

அவரின்
புத்தகத்தில் இருந்து ரசித்த, சிந்திக்கத் தூண்டிய பகுதிகளை உங்களுடன்பகிர விரும்புகிறேன்.

முக்கியமாக இரு பகுதிகள் என்னைக் கவர்ந்தன. எனக்கும் அவை பொருந்தும்போல் இருப்பாதாலோ என்னவோ....தெரியவில்லை

முதவாவது

””காலம்கடந்த பயணம்” என்றும் கவிதையை இப்படி முடித்திருக்கிறார்:

என் வா‌ழ்க்கைத்தாள்

விரிந்து கிடக்கிறது
நான் கவிதை எழுத

தள்ளி நில்
நான் போகவேண்டும்

அவர் எதையும் தாண்டிப் போய் சுவாசம் நிரப்ப சிந்திக்கும் விவேகமும் அதைச்சொன்ன அழகும் அலாதி.

இரண்டாவது
”பெண்மை விலங்கில்” என்னும் கவிதையில்

மரபுகளை முறித்துக்கொண்டு
மனிதனாக இருக்கச் சொல்கிறது
எனது சுயம்

மற்றவர்களுக்கு இந்த வார்த்தைகள் பொருந்துகிறதோ இல்லையோ, எனக்கு சற்றும் பிசகாமல் பொருந்துகிறது. (”பெண்மை விலங்கில்” என்னும் கவிதையின் ஒரு பகுதி ஒரு ஆணுக்கும் பொருந்துகிறது..... சிரிப்பாயிருக்கிறது.. ஆனால் முற்றிலும் உண்மை)


”பதில் நீ தான் சொல்ல வேண்டும்” என்றும் கவிதையில் வாழ்வியலின் தத்துவம் பற்றி அவர் சொன்ன விதம் பலரின் முகத்திரையை கிழித்திருக்கலாம். என்னுடையதையும் கூட..

இப்போது நான்
கங்கை தான்
நீ நீந்தலாம் என்னோடு

காலப்போக்கில்
வற்றிவிடும் நதியாக
சுடு மணலில்
நீ நடக்க வேண்டி வரலாம்

உ ன் கால்களில் கொப்புளங்களும்
மனதில் ரணங்களும்
வராலாம்

கவிதா: எப்போ மற்றய மனிதர்களின் மனதை வாசிக்கப் பழகினீர்கள்.... வாழ்த்துக்கள்.

அதே கவிதையில் இன்னொருடத்தில்

என் பருவத்தின்
உடல் சுகமென்றாய்
காலத்தின் மாற்றத்தால்
என் சுருக்கம் இழைந்த
முகத்தை உன் கைகளில்
ஊந்திக் கொள்ள நீ
தயாரா

என்று கேட்கிறார். பதிலை நாம் எங்களையே கேட்டுக் கொள்வோம்.

மூலைகள் என்னும் கவிதையில்

எல்லாமே என்னுடையவை தான்
என் சுய வாழ்வு
தவிர

என்னை நினைத்து இந்த கவிதையை எழுதினாரோ என்னவோ... அல்லது இது எல்லோரினதும் சுயமோ?
யாமறியோம் பராபரமே!

அருகாமை என்னும் கவிதையில்

காதல் வித்தெடுத்து தூவிய
என் உயிர் நிலத்தில்
முளைத்ததெல்லாம் நீ

என்று வாசித்தபோது போது எனது முதற் காதல் ஞாபகத்தில் வந்து போனது. 13க்கும் 45 க்கும் அப்பப்பா எத்தனை தூரம்... :-)

மொழி என்னும் கவிதையின் கீழ்வரும் பகுதியை பார்த்த போது வாழ்வு ஞாபகம் வந்தது

உனது மொழிகளுக்கு நான்
வேறு அர்த்தங்களைத்
தீட்டிக்கொண்டேன்
எனது மொழிக்கு நீ
செவி கொடுப்பதையே மறந்தாய்
நான் உன்னுடன்
மொழிவதையே துறந்தேன்

இதை நான் அனுபவிக்கவில்லை என்று யாரும் சொன்னால்
அது பச்சைப் பொய்

முடுச்சுகள் என்னும் கவிதையில்

நீ எறிந்த
வார்த்தைக்கயிறுகளும்
மயான அமைதியும்
அறுந்து கிடக்கிறது
எம்மைச்சுற்றி

இதையும் நான் அனுபவிக்கவில்லை என்று யாரும் சொன்னால்
அது முன்பு சொன்னதை விட பெரிய பொய்

வலியும் புன்னகைக்கும் என்னும் கவிதையில்
வாழ்வின் வலி பற்றி கூறுகையில்

காதல் தோற்பதில்லை என்று
எனக்குத் தெரியும்
காதலர்கள் தோற்றுப்போவதுண்டுதானே

என்று சொல்கிறார்.
அது உண்மைதானே?

கடவுள் வந்தார் என்னும் கவிதையில் கடவுளுக்கு சவால் விடுவது போன்று
ஞானமற்ற அரசியல்வாதிகளை சாடும் விதம் அலாதியானது (எனக்கு அப்படித் தான் தோன்றியது)

பூ உதிர வேண்டும்!
பீரங்கிகளில்

தென்றல் புறப்பட வேண்டும்
துப்பாக்கிகளில்

ஒன்றாகுதல் வேண்டும்
இனமும் மொழியும்

என்பது என்னைப் பொறுத்தவரை அரசியல்வாதிகளுக்கு விடப்பட்ட சவால்.

எது கவிதையில் கொஞ்சம் அதிகமாகவே காதல்வயப்படுகிறார் இப்படி

கவிதைக்கு
மொழி தேவையென்று
எவன் சொன்னான்
அடி முட்டாள்
உன் விழி பாராத
கவிஞன்

அதே கவிதையில் மேலும் இப்படி தேவைக்கு அதிகமாகவே வழிகிறார்

நீ அழைத்ததும்
தொலைபேசி கூட
கவிதை பேசும் அதிசயம்
யாரும் கண்டதில்லை

முடிவென்ன என்னும் கவிதை என்னை மிகவும் கவர்ந்தது. யுத்தம் பற்றியது அது.
அது பற்றி நான் இங்கு எழுதவில்லை புத்தகத்தை வாங்கிப் படித்துப் பாருங்கள்.
அதன் சோகமும் வேதனையும் அத்துடன் அதில் கலந்திருக்கும் நக்கலும் புரியும்.

நீளமான இரவுகளில் ஒரு பந்தி இப்படி சொல்கிறது

அழகான மழை வெளியே
அற்புதமாயிருக்கிறது மண்வாசனை.

அருமையான, யதார்த்தமான வார்த்தைகள்
மூக்கில் மண்ணின் வாசனை உணர்ந்தேன்.

இறை மீட்பில் மீண்டும் வழிகிறார் காதலனிடம் இப்பூடீ

யாசகனாய் நான் இருப்பதில்

ஆட்சேபனை எனக்கில்லை
கர்ணனாக நீ இருந்தாலும்
கொடுப்பதெல்லாம் எனக்கென்றால்

கவிதா.. திஸ் இஸ் டு மச்

கறுப்பு தேசத்தில் உண்மை அரசியல் ‌புரியவைக்கிறார் எமக்கு இப்படி

எரிந்து கொண்டிருக்கும்
என் ‌தேசத்திற்கு
நீர் கொடுப்பதாய் சொல்லி
எண்ணைய் ஊற்றியவர்கள் தாம்
அதிகம்

கடைசிக் கவிதையில் ”மரணப்படுக்கையில் இருந்து ஒரு கடிதம்”
அது எழுதப்பட்ட திகதி மார்கழி 31. 2010.

பண்பட்ட செம்மண்
கண்ணி வெடிகள் விதைத்து
விருட்சங்கள் வளர்ந்து
தூங்கும் விழுதுகள்
பாசக்கயிறுகளாகிப் போய்
பிணக்குவியல் செய்கிறது

இன்றைய
குருதி படிந்த செம்மண்
கவ்வி நிற்கிறது
வீரச்சாவென்று சொல்லி
நாளைய உலகத்தை

தை விட
அதே கவிதையில்

கருங்கழலையும், சுடுங்குழல்களையும்
ஈட்டி வாள்களுடன்
புராதனப் பொருட்கள் காப்பகத்தில்
சேர்க்க ஆணையிடு என்கிறார்.

எனக்கு
நான் ஆணையிட்டால்
அது நடந்துவிட்டால்
என்னும் பாட்டு
ஞாபகத்தில் வந்துபோனது

ஆடுகளம் என்னும் கவிதையினை முழுவதுமாக இங்கு பதிகிறேன்
எனது
இரண்டு இளவரசிகளும்
அதைப்
பயின்று பட்டம் பெறட்டுமென்று

சாண்டில்யன் கதை நாயகியாக
வெள்ளைக்குதிரை நாயகனிடம்
பறிகொடுக்கும் கன்னியாக
சீதையாக கண்ணகியாக
இதிகாசங்களின் நாயகியாக
நினைத்துப் பார்த்திருக்கிறேன் என்னை

பாவம் என்று விட்டுவிடுவேன்
ராமனும் கோவலனும்

இவர்கள்
என்னிடம் மாட்டியிருந்தால்
புராணங்கள் மாறியிருக்கும்

நீ நினைக்கிறாயா
நான் பதுமையென்று

புதுமையும் பதுமையும்
எம் விரல் நுனியில்தான்
எந்த விரல் நீட்டுவதென்று
நானே தீர்மானிக்கிறேன்

நானி ஆடவும்
நாண் ஏற்றவும் கூட
என் சுற்றுவிரல் போதும்
சுடுகுழல் தூக்குவதுக்கும் கூட
செக்குமாடாய் பின் முற்றத்தில்
போட்ட வட்டுங்கள் எல்லாம்
இன்று நாம் கடந்து வந்த
பாதைகளாகவும்
சில கவிதைகளின் காரணங்களாகவும்
மாறிப் போனபின்
அறுத்தெறிய ஒன்றுமில்லை என்னிடம்
ஒற்றைக் கயிற்றைத் தவிர
அதன் அவசியம் கூட எனக்கில்லை

நான் பெண்
ஆணை விரும்புபவள்
நீயும் விரும்பு
இன்னும் ஏதும் அறியாதவள் என்று
நினைத்தால்
விதியிடம் இனி உன்னைக்
காக்கப் பழகு

வலியாம்
பெண் மொழியாம் என்று
உன் உதடு வளைத்து
என்னை அஃறினையாக
நீ பார்த்தாலும்
ஆன் பெண் என்ற ஆடுகளத்தில்
மனு என்றே பார்க்கிறேன்
நான் உன்னையும் என்னையும்

முக்காடு போட்டு
என் முகம் தொலைத்த நான்
போனது போகட்டும்
என கவிதைகளும் முகவரியாகட்டும்

யாரும் தூக்கிப்போட
”ஓருநாள்” தினம் ஏந்தும்
பிச்சைக்காரியில்லை நான்
நேற்றும் நொடிப்பொழுதும்
எதிர்காலங்களும் ஆளத்தெரிந்த
கொற்றவைக் குமரி

எதற்கு பின்னம் முன்னும்
இழுபாடு
என் தோளோடு நட

நாலு பேர்கள்
நாலுவிதமாய் பேசுவார்கள்
உதவாத மினிதர்களுக்காக
அடங்கிப் பார்க்கவோ
எனது நேரங்களுக்கு இனி
நேரமில்லை

பாரதி பெண் நானில்லை
படைத்த பிரம்மனும் கூட
வரையறுக்க முடியா என்னை
சிந்தனை உளிகொண்டு
அறிவு விரல்களினால்
என் விளியின் ஒளியில்
என்னை நானே செதுக்கி
நிமிர்ந்து நிற்கும்
எனது பார்வையில் பெண்
நான்
.........................

இப்படி இன்னும் கனக்க எழுதலாம்..


அருமையான‌தோர் புத்தகம் வாசித்த திருப்தியில் தூங்க முற்படுகிறேன்.
நேரம் சாமம் 3 மணி என்கிறது.
இரத்தமெடுக்க வேண்டும் என்கிறாள் வெள்ளையுடுத்திய தாதி.
கையை நீட்டுகிறேன்.
குத்தி......... குப்பி குப்பியாய் எடுத்துப் போகிறாள் அந்த மோகினிப் பிசாசு

தூங்க முயற்சிக்கிறேன்


ஆஸ்பத்திரியில் எனக்கு பக்கத்தில்
இருப்பவர் நித்திரையில், சற்று சத்தம் சேர்த்து, பின்புறமாக காற்றில் வெடி வைத்து இம்சைபண்ணுகிறார்......
கந்தா கடம்பா காப்பாத்துடா என்னை.

புத்தகங்கள் தந்தமைக்கு நன்றி கவிதா.

Eravur United Sports Clubஉம், சந்திரே அய்யாவும், அந்தக் காலத்து சில ஞாபகங்களும்.

சந்திரே அய்யா (சந்திரே என்பது ஒரு பெயர். அய்யா என்றால் சிங்களத்தில் அண்ணண் என்று பொருள்படும்)

சந்திரே அய்யா, சிங்கள இனத்தவர், எங்கள் கிரிக்கட் அணியின் குரு, சக விளையாட்டாளன், இது தவிர்ந்த நேரங்களில் ஏறாவூர் மார்க்கட்டில் மரக்கறி விற்கும் வியாயாரி. சிறந்த ஆளுமையுள்ளவர். அவர் எப்படி அறிமுகமாகினார் என்பது ஞாபகமில்லை, ஆனால் இன்னும் ஞாபகத்தில் இருக்கும் மனிதர்களில் ஒருவர். ஏறத்தாள 30 -33 ஆண்டுகளுக்கு முன்னான நினைவுகளிவை. இருப்பினும் இன்றும் மனதை தென்றலாய் தடவிப் போகும் ரம்யமான பால்யகாலத்து நினைவுகள்.

வெளிநாட்டு வாழ்க்கையின் ரணங்களை ஆற்றிக் கொள்ள நான் எனது பழைய ஞாபகங்களுக்குள் நான் மூழ்குவதுண்டு. இன்றும் அப்படித்தான் என்று நினைக்கிறேன். 20:20 கிறிக்கட் போட்டிகளைப் பார்த்த பாதிப்போ என்னவோ இன்று சந்திரே அய்யா ஞாபகத்தில் வந்திருக்கிறார்.

1970 களின் இறுதி 1980 களின் ஆரம்பம். எனக்கு பதின்ம வயது.  எனது அப்பாவைத் தவிர்ந்த மற்றயதெல்லாம் அழகாய்த் தெரிந்திருந்த கலமது.

எனது (எமது) ஆட்சியெல்லையாக ஏறாவூரும், செங்கலடியும் இருந்தது. நட்பு வட்டத்தில் இஸ்லாமியர்களும், சிங்களவர்ளும், தமிழர்களும் சரிசமமாய் குடியிருந்தனர். இனபேதங்களையும் கடந்து மனிதம் வாழ்ந்திருந்த  காலம் அது.

ஏறாவூரில் மூன்றின மக்களும் அவ்வப்போது வெட்டுக்குத்துப்படுவதுண்டு ஆனால், அது எம்மை இம்மியளவும் பாதித்தில்லை.
என்ன மச்சாங் என்று சிங்கள நண்பர்களும், சுகமா இரிக்கியா என்று இஸ்லாமிய தோழர்களும் குசலம் விசாரித்து குதூகலாமாய் வாழ்ந்திருந்த நாட்களவை

இன்றைய இளைஞர்களுக்கு பரீட்சயமில்லாத வாழ்வு அது. மனிதன் மனிதனுடனும், இயற்கையுடனும் வாழ்ந்து கடந்த காலம். மானாட மயிலாட, கைத்தெலைபேசி, கணிணி, இணையம், இலத்திரனியற் விளையாட்டுக்கள் என எதுவுமற்று, நட்பே யாதுமாய் நாம் கடந்து வந்த பாதை. பால்யத்தின் பசுமையை அது.

அந்த நாட்களில் தான் ஏறாவூர் யுனைடட்ஜ (Eravur United Sports Club) (மன்செஸ்டர் யுனைடட் மாதிரி) உருவாக்கினோம். முக்கியமாக ஏறாவூரில் வாழ்ந்திருந்த சிங்கள நண்பர்களும், TCகுடிமனை வாழ் நண்பர்களும், நாம் சிலரும் சேர்ந்து சிங்கள மாகாவித்தியால ‌மைதானத்திலிருந்த சிறுசுகளை  பலவந்தமாக வெளியேற்றி, எங்களுக்கான மைதானத்தை உருவாக்கிக் கொண்டோம்.

அந்தச் சிங்கள மாகாவித்தியால அதிபருக்கு அழகானதொரு பூவினைப்போன்றதொரு மிக மிக அழகான மகள் ஒருத்தி இருந்ததையும் அவர்கள் மைதானத்துக்கு மிக மிக அருகிலேயே வாழ்ந்ததையும் நான் இங்கு குறிப்பிடாதுவிடுவேனேயாயின், அது மிகப் பெரிய வரலாற்றுத் தவறாகிவிடும்.

வறண்ட காதற் பூமியில் வாழ்ந்திருந்த பலருக்கு பூவாய் தெரிந்திருந்தாள் அவள். பாடசாலைச் சீருடையில் அவளொரு வெள்ளைத் தேவதை. சிலர் அவளின் காரணமாக, காலையிலும் அதீத உடற்பயிற்சி செய்தனர். அவள் பாடசாலைக்குச் செல்லும் அழகை ரசிப்பதற்காக.

நாம் விளையாடும் மாலை நேரங்களில் எமக்கு அடிக்கடி தாகமெடுத்து அவளின் வீட்டுக் கிணற்றிற்குச் சென்றதும், அவளைக் கண்டால் 150 மைல் வேகத்தில ”கிறிக்கட் பந்து வீசுவதும்”  ஏன்என்று ஏன்னென்று அவளுக்கு இறுதிவரையில் தெரியாது போனது, அவளின் பேரதிஸ்டமா இல்லை எங்களின் தூரதி்ஸ்டமா என்று தெரியவில்லை.

இனி எமது கதையின் நாயகன்பற்றிப் பார்ப்போம்.

ஏறாவூர் யுனைடட் உருவாவதற்கு முன்பே நாம் விளையாடும் மாலை நேரங்களில் சாரமுடுத்தியபடியே, கையில் Spots Star புத்தகத்துடன் தனது சைக்கிலில் வந்து எம்மைக் கவனிப்பார் சந்திரே அய்யா. அவரின் மருமகனும் (மோகன) எம்முடன் தான் விளையாடிக் கொண்டிருப்பான்.

எங்கள் விளையாட்டின் தரம் குறைவு என்று சொல்ல முடியாது. பல சிறந்த விளையாட்டு வீரர்கள் எம்முடன் இருந்தார்கள். முக்கியமாய் ரொனால்ட் என்றும் பறங்கிஇனத்து நண்பன். கவாஸ்கர் மாதிரி ஆள் கட்டை தான், ஆனால் கடுகு சின்னன் காரியம் பெரிது போன்று மிகச் சிறப்பாய் விளையாடுவான். ஆப் (Off) இல் பந்து வந்தால் அது அவனுக்கு அல்வா சாப்பிடுவது மாதிரி. கால்பந்திலும் விண்ணண்.

சந்திரே அய்யா எமக்கு  தனக்குத் தெரிந்த கிறிக்கட் சூட்சுமங்களை கற்றுத்தருவார். நாமும் முடிந்தளவு கற்றுத்தேர்ந்தோம்.

எங்களின் மைதானம் மிகவும் மோசமான நிலையில் இருந்தது. புல்லும், திட்டு திட்டான மண்ணும் எப்படி பந்து வீசினாலும் விக்கட்டுக்கு மட்டும் போகாமல் வெறு எல்லா திசைகளையும் நோக்கியும் போய்க் கொண்டிருந்தது, பந்து.

இதைக் கண்ட சந்திரே அய்யா ஒரு நாள்!
”மல்லி.. மேம செல்லங்கரன்ட பா” (தம்பி.. இப்படி விளையாட முடியாது)
”மெனாஹறி கரலா அபி மேக ஹதாகரகன்ட ஓனே” (ஏதாவது செய்து மைதானத்தை சீர்செய்யவேண்டும்)
என்று ஒரு மைதானப் புரட்சிக்கு அடித்தளமிட்டார்.

கிறிக்கட் பிட்ச் செய்ய வேண்டுமென்றார்
மைதானத்தினுள் இருந்த மணல் மேடுகளை சமமப்படுத்தி,
மைதானத்தின் இரண்டு கரையிலும், புட்போல் போஸ்ட் நடவேண்டுமென்றார்.

சாரமுடுத்திய அந்தத் தலைவனுக்கு பின்னால் திரண்டு நின்றது ஒரு விடலைக் கூட்டம்.

அடுத்து வந்த காலங்களில் எப்போதும் இதுவே பேச்சாயிருந்தது.
அடுத்து வந்த சனிக்கிழமை கடலுக்கு குளிக்குப் போன போது (ஒரு சைக்கிலில் நாலு பேர் போவோம்), காட்டுக்குள் விழுந்திருந்த இரண்டு தென்னைகளை கட்டி இழுத்து வீதிக்கு கொணர்ந்து, பின்பு, வண்டில் பிடித்து  மைதானத்தில் இறக்கிய போது ஏதையோ சாதித்த சந்தோசம் அனைத்து முகங்களிலும் தெரிந்தது. உடனேயே கிடங்கு வெட்டி, தென்னங் குற்றிகளை நாட்டி, அவற்றிற்கு மேலாக களவெடுத்து வந்த மூங்கில் ஒன்றைக்கட்டி  புட்போல் விளையாடினோம். ஆன்று முதல் கோல் அடித்தவன் தேவைக்கு அதிகமாகவே ஆர்ப்பாட்டம் பண்ணினான்.

அன்று மாலை சந்திரே அய்யா இருவருக்கு ஒரு தேனீர் என்ற கணக்கில் எல்லோருக்கும் தேனீர் வாங்கித்தந்தார். நட்பின் ருசி அன்று அந்த தேனீரில் தெரிந்தது.

ஒரு கொசுறுத்த தகவல்:

சேவியர் என்று ஒரு அண்ணண், கப்பலில் வேலை செய்தவர் மைதானத்துக்கு அருகில் வாழ்ந்திருந்தார். அந்நாட்களில் அவர் புது மாப்பிள்ளை. அவரின் மோட்டார்சைக்கில், நடை உடை பாவனை என்பன எம்மை மிகவும் கவர்ந்தன. அந்தக்காலத்து கமல் மாதிரி இருப்பார், மிக அழகாகஉடுத்துவார். கால்பந்து விளையாட்டின் நுனுக்கங்களை எமக்கு கற்றுத் தந்தவர் அவர் தான்.  தற்போது கனடாவில் வசிக்கிறார் என அறிகிறேன்.

கால்ப்பந்து விளையாடுவதற்கு போஸ்ட் நட்டாச்சு..
அடுத்தது கிறிக்கட் பிட்ச்.
இது கொஞ்சம் சிக்கலான வேலை.
அதிகம் சிந்தித்தோம்.
பிட்ச் என்றால் இறுக்கமாக இருக்க வேண்டும்.
ஆனால், எங்கள் யுனைடட் மைதானம் கடல்மணலைப் போன்ற மணலைக் கொண்டது.

இதை தீர்க்க ஜடியா மன்னன் தயா ஒரு ஜடியா சொன்னான். இப்போ தயா என்றுஅழைக்க முடியாது, அவனை. ஊரில் அவனை “தயா சாமி” என்று பயபக்தியாய் அழைக்கிறார்களாம். என்னைப் பொறுத்தவரையில் ஆசாமி சாமியாகிவட்டான்
(இந்த ஆசாமி சாமியாகிய கதையை பின்பொரு நாள் சொல்கிறேன்)

பிள்ளையாரடியில இருக்கும் கிறவற்குழியில் இருந்து ஒரு ட்ராக்டர் நிறைய  கிறவல் எடுத்து வந்தால் கிட்டத் தட்ட முழு பிட்ச்சும் போடலாம் என்பது தான் அவனின் ஜடியா.

இதைக் கேட்ட சந்திரே அய்யா படு உசாராகிவிட்டார். தயாவின் முதுகில் தட்டிய படியே எம்மைப் பார்த்து “மினியாகே ஒலுவே டிகக் தியனவா” என்றார்.. நாம் கொல்லென்று சிரித்தோம். தயா சாமியும் சேர்ந்து சிரித்தார். (அதனர்த்தம் இவன்ட தலைக்குள்ளும் கொஞ்சம் இருக்கு என்பதாகும்)

சரி.. ஜடியா கிடைத்தாகிவிட்டது. எப்படி லாரி பிடிப்பது. எம்மவர்கள் எவரிடமும் அது இருக்கவில்லை. ஆனால் எனது நண்பனெருவனிடம் இருந்தது. அவனின் அப்பாவிடம் கேட்டபோது காசு தாருங்கள் வருகிறேன் என்றார். பிறகு தருகிறோம் என்ற போது மறுத்தார். எமது அவஸ்தை புரியாமல் இருக்கிறார் மனிதர் என்று திட்டியபடியே வந்தோம் அன்று.

மீண்டும் சந்திரே அய்யாவின் தலைமையில் கூட்டம் ஆரம்பமானது. தயா சாமி இந்த முறையும் நல்ல ஜடியா சென்னான். அதாவது இனி ஒவ்வொரு நாளும் விளையாட வருபவர்கள் எல்லாம் 5 சதம் கொண்டு வந்து தந்தால் தான் விளையாடலாம் என்று

எதிர்ப்பு இருந்தாலும் முதல் நாளே கிட்டத்தட்ட 1,50 ரூபாய் சேர்ந்ததை கண்டதும் எதிர்ப்பு மறைந்து போயிற்று. தயா சாமியின் தம்பி ராஜன் காசுக்கு பொறுப்பாய் இருந்தான்.

சில நாட்களின் பின் ஏறத்தாள 25 ரூபாயுடன் நண்பனின் அப்பாவிடம் போய் நின்றோம். மனிதர் மீண்டும் வாயைப் பிதுக்கினார்.

மீண்டும் கூட்டம் கூடிணோம். தயா 10 சதம் வாங்குவோம் என்ற போது சந்திரே அய்யா தனது வீட்டோ அதிகாரத்தை பாவித்து அதை நிராகரித்தார். மீண்டும் ஒரு சனிக்கிழமை 50 ரூபாயுடன் போன போது ட்ராக்டர் பெட்டியில ஏறுங்கோ என்றார் நண்பனின் அப்பா.

சந்திரே அய்யா ட்ரக்டர் மட்காட்இல் தளபதி போல உட்கார்ந்திருக்க தொண்டர் படையொன்று மண்வெட்டி, அலவாங்கு, இன்னும் பிக்கான் போன்ற ஆயுதங்களுடன் பின்னால் குலுங்கி குலுங்கி போய்க்கொண்டிருந்தது பிள்ளையாரடி கிறவல் குழிக்கு.

ட்ரக்டர் கிறவல் குழியில் நின்றதும் இயந்திரமாய் இயங்கினோம். சிலர் அலவாங்கால் குத்தி கிறவலை மலையில் இருந்து பிரிக்க, மற்றோர் கூட்டம் அதை சவள் மற்றும் மண்வெட்டியால் ட்ரக்டர் பெட்டிக்குள் வீசியெறிந்து கொண்டிருந்தது. ட்ரக்டர் பெட்டியினுள் நின்றவர்கள் அதை பெட்டி முழுக்க பரப்பிக் கொண்டிருந்தார்கள். சந்திரே அய்யா கட்டளையிட்டுக் கொண்டு வேலையை கவனித்துக் கொண்டிருந்தார். இடைக்கிடை பிக்கானால் கொத்தியும் தந்தார்.

வேர்யர்வை ஆறாய் ஓடியது.. அது பற்றி யாரும் கவலைப்பட்டதாக தெரியவில்லை. வியர்வை கிறவல் புழுதியை தன்னுடன் கலந்து எல்லோர் முகத்திலும், முதுகிலும் ஒரு வித செம்மஞ்சல் நிறத்தில் நட்பின் சரித்திரத்தை வரைந்து கொண்டிருக்க, மறுபக்கத்தில் ட்ரக்டர் பெட்டி நிரம்பிக் கொண்டிருந்து.

ட்ராக்டர் பெட்டியை நிரப்பி பிள்ளையாரடிக்கு வந்த போது, சந்திரே அய்யா பிளேன் டீயும், பணிசும் வாங்கித் தந்தார். கையில் படிந்திருந்த கிறவல் புழுதியும் பணிசுடன் உள்ளே போனது. களைத்திருந்தாலும் களைப்பு தெரியவில்லை. சிரமதானம் தந்த சுகம் உடம்பெல்லாம் பரவியிருக்க நட்பு வட்டத்தின் நெருக்கமும் முன்பைவிட கூடியிருந்தது.

கிறவல் பாரத்தில் ட்ரக்டர் பெட்டி ஆடாமல் எம்மைத் தாங்கி வந்து எமது மைதானத்தில் இறக்கியது. ஒரு லோட் கிறவல் எங்களுக்கு ஏதொ ஒரு பெரிய சாதனையை செய்து முடித்துவிட்டோம் என்ற மன நிலையை தந்திருந்தது. அன்று மாலை பல மணி நேரம் கிறவல் லோட்க்கு பக்கத்திலேயே குந்தியிருந்து அடுத்த நாளை திட்டமிட்டுக் கொண்டிருந்தோம்.

நாம் கிறவலை எப்படி சமம்படுத்துவது என்றார் சந்திரே அய்யா. ஒருவருக்கும் அதை எப்படி செய்யலாம் என்று தெரிய தெரியவில்லை. இப்பவும் தயா சாமி தான் கை கொடுத்தார். இயந்திரமென்று இருப்பதாயும், அதுக்கு தனக்கு 5 பேர் தந்தால் இயந்திரத்தை எடுத்து வருவதாக சொன்னான்.

”மல்லி பொறு கிய்ன்ட எபா”.. என்றார் சந்திரே அய்யா சிரித்துக் கொண்டே.. (தம்பி பொய் சொல்லாதே என்பது தான் அதன் அர்த்தம்).

தயா சாமி தனது மாஸ்டர் தாக்குதல் திட்டத்தை விளக்கினான்.
செங்கலடிச்சந்தியில் வீதியை செப்பனிடுகிறார்கள். அங்கு ஒரு சிறிய ரோலர் இருப்பதாயும் அதைக் எடுத்துவந்தால் வந்தால் கிறவலை சமப்படுத்தலாம் என்றானே பார்க்கலாம். பலரின் ஏளனப் பார்வை அவனை நோக்கியிருந்தது. சுவாமி அதைக் பொருட்படுத்தவில்லை.

நக்கலை கவனிக்காத “தயா சாமி”, ரொனால்ட், பாமி, ராஜன், அப்துல்ஹை, மற்றும் எனது பெயரையும் சொல்லி இரவு 10 மணிக்கு வேலை ஆரம்பம் என்றான். நான் அம்மாவிடம் 10 மணிக்கு வெளியே செல்வதற்கு என்ன பொய் செல்வது என்று சிந்திக்கவேண்டியிருந்தது.

சந்திரே அய்யா மௌனமாயிருந்தார்.

அடுத்த நாளுக்கான திட்டங்களை கதைத்துப்பேசி முடித்து கலைந்து போனோம்.

இரவு பத்து மணிபோல், நண்பனிடமுள்ள பாடப்புத்தகம் எடுத்துவர வெளியே செல்வதாக் கூறியபோது, அம்மா சந்தேகமாய் பார்த்தார்.  நிட்சயமாக இவன் செக்கன்ட் சோவுக்கு போகிறான் என்று நினைத்திருப்பார்.

10 மணிபோல் ஜவர் படையணி செங்கலடி சந்தியை நெருங்கிக் கொண்டிருக்க, எனக்குப் பயத்தில் சிறுநீர் கழிந்துவிடும் நிலையில் இருந்தது. ஆனால் அதைக் காட்டாமல் வடிவேலு மாதிரி பில்ட்அப் குடுத்து கதைத்தபடியே வந்து கொண்டிருந்தேன். ”தயா சாமி” ஏதோ கோயிலுக்கு போவது போல் மிகவும் பயபக்தியுடன் எவ்வித கவலையுமின்றி வந்து கொண்டிருந்தான்.

பதுளை வீதியில் நாம் தேடிவந்த ரோலர் எமக்காக காத்துக் கொண்டிருந்தது. அதன் அருகே சென்ற “தயா சாமி” சுற்றும் முற்றும் பார்த்தபின் அதை தனியே இழுத்துப் பார்த்தான். அது அசையவேயில்லை.

இப்போது எல்லோரும் சாமியுடன் சேர்ந்து இழுக்கிறோம். மெதுவாய் தனது பிடிவாதத்தை தளர்த்தி அசையத் தொடங்குகிறது. அது அசைய அசைய எமது உட்சாகமும் அதிகரித்தது. திடீர் என எந்த வழியால் அதனை இழுத்துப்போவது போவது என்ற பிரச்சனை வந்தது. ஊரை இணைக்கும் முக்கியக வீதியால் ‌இழுத்துச்செல்வது  பிரச்சனையைத் தரும். எனவே வெகு விரைவாக உள்வீதியொன்றுக்குள் இழுப்பது என்று முடிவு செய்து, வேகமாய் இழுத்தபடியே நடக்கத் தொடங்கினோம். சற்றுத்  துரத்தில் ஒரு துவிச்சக்கரவண்டி வருவது தெரிந்தது. ஏதும் நடக்காதது போல் ரோலரின் மீது உட்கார்ந்திருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். துவிச்சக்கர வண்டிக் எம்மை கடந்ததும் வேகமாய் இழுத்து உள்வீதியினுள் புகுந்துகொண்டோம். ஏறத்தாள 2 மணிநேரம் இழுத்து வந்து ஒரு பற்றைக்குள் அதை ஒளித்து வைத்துவிட்டு வீடு சென்ற போது நேரம் இரண்டைக் காட்டிக் கொண்டிருந்தது. அம்மா அப்போதும் எனக்காக காத்துக் கொண்டிருந்தார். ஆனால் ஏதும் கேட்கவில்லை.

ஞாயிறு காலை நாம் மைதானததுக்கு செல்வதற்கு முனபே சந்திரே அய்யா மண்வெட்டியுடன் பிட்ச் போடப்படும் இடத்தை கிண்டிக் கொண்டிருந்தார்.

மைதானத்துக்கு நடுவே கிட்டடத்ட்ட 25-30 மீற்றர் நீளத்திற்கு 1 மீற்றர் அகலத்துக்கு 10 சென்டி மீற்றர் ஆழத்திற்கு மண்ணைக் கிண்டி மைதானத்தின் பள்ளமான இடங்களில் கொட்டிணோம். எமது மைதானத்துக்கு அருகாமையிலேயே ஏறாவூர் புகையிரத நிலையம் இருந்தது. அங்கிருந்த கருங்கற் குவியலில் இருந்து. அங்கிருந்து கற்களை எவரையும் கேட்காது எடுத்து துடுப்பாடும் இடத்தின் கீழ் இட்டு கிறவலைக் கொட்டத்தொடங்கினோம்.

தண்ணீர் தேவைப்பட்டது. வாளியை எடுத்துக் கொண்டு ஓடினார் தயா சாமி தேவதையின் கிணற்றிற்கு. விடுவார்களா மற்றவகள்? தண்ணி எடுத்து வர மாபெரும் போட்டீயே நடந்தது. சந்திரே அய்யாவுக்கு தெரியாது எமது ஆர்வத்தின் காரணம். அவர் அட.. பசங்களின் உட்சாகத்தைப்பார் என நினைத்திருப்பார்.

சாரத்தை மடித்துக்கட்டு கட்டிக் கொண்டு நாம் தண்ணீர் ஊற்ற ஊற்ற கிறலை காலால் மிதித்து மிதித்து நிரப்பிக் கொண்டிருந்தார் சந்திரே அய்யா. முழு பிட்ச்சுக்கும் கிறவல் போட்டு முடிந்தபின், ஒரு பலகையை பிட்ச்சுக்கு குறுக்கால் பிடித்து, இழுத்து ஓரளவு சமப் படுத்தினோம். மதிய வெயிலின் அகோரத்தில் கிறவல் சற்றே இறுகியிருந்தது மாலை. தயா சாமி தான் ஒளித்து வைத்திருந்த ரோலரை சிலருடன் சேர்ந்து எடுத்து வந்தான்.
அதைக் கண்ட சந்திரே அய்யா.. “மினியா ஹொந்த வடக் நே கரலா தியன்னே” என்றார் சிரித்தபடியே. (மனிசன் நல்ல வேலை செய்திருக்கிறான் என்று பொருள்படும்)
பிகு. அன்றைய நாளின் பின் அந்த ரோலர் பல மாதங்களாக எமது மைதானத்திலேயே வாழ்ந்திருந்தது.

உருளை உருண்டு, உருண்டு ஏறாவூர் யுனைடட் இன் பிரபல்யமான கிறிக்கட் பிட்ச்சை சமமப்படுத்தித் தந்தது. அன்று நாம் விளையாடவில்லை. பிட்ச்சை பார்த்தபடியே சுற்றி இருந்து கதைத்துக் கொண்டிருந்தோம். தயா சாமி மட்டும் தண்ணியூற்றினால் நல்லம் எனவும், தண்ணீர் எடுத்து வரவா எனவும் கேட்டபோது சந்திரே அய்யாவின் பார்வையாலேயே அவனை அடக்கினார். மற்றவர்கள் குமட்டுக்குள் சிரித்துக் கொண்டார்கள்.

அடுத்த நாள் புதிய பிட்ச்சில் கோலாகலமாக மாலையிருட்டு பந்தை மறைக்கும் வரை விளையாடினோம். அன்று முதல் பந்து சொன்ன சொல் கேட்டது.

அடுத்து வந்த விடுமுறையின் போது மேடாய் இருந்த நிலமும் சமமாக்கப்பட்டது. நெருஞ்சி முள்ளின் தொல்லையை டெக்னிக்கலாக யோசித்து தீர்த்துக் கொண்டோம் (வெட்டிய வாழைமரங்களை மைதானம் முழுக்க உருட்டி உருட்டி முள்ளுகளை அகற்றினோம்).

1983 என நினைக்கிறேன் தமிழ் சிங்கள புத்தாண்டின் போது பெரிதாய் விளையாட்டுக்கு ஒரு விழா எடுத்தோம்.

சைக்கில் ஓட்டப்போட்டி, மரதன், என ஆரம்பித்து மாலை கையிறு இழுத்தல், கால்பந்து சுற்றுப் போட்டி என ஆடி ஓய்ந்த போது ஊருக்குள் ஏறாவூர் யுனைடட் இன் மதிப்பு பலமாய் அதிகரித்திருந்தது.

(தயா சாமி சைக்கில் ஓட்டப் போட்டியின் போது முதல் மூன்று மைல்களுக்கும் முதலாவதாய் வந்து போட்டியின் இறுதில் கடைசியாய் வந்தான்.. கேட்டதற்கு சைக்கில் சரியில்லடா மச்சான் என்றார் சுவாமிகள்

புதுப் பிட்ச் இல் டென்னிஸ் பந்தில் ஓப் ஸ்பின், லெக் ஸ்பின் போடவும் பழக்கினார் சந்திரே அய்யா (பந்து இடது பக்கம், வலது பக்கம் திரும்பிய போதெல்லாம் குழந்தையாய் மாறி குதூகலித்தார் சந்திரே அய்யா.

அந்த மைதானததில் இன்னுமொரு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியொன்றும் நடந்தது. எனது நண்பன் ஒருவன் விளையாட வந்து, மைதானத்துக்கு முன்னால் இருந்த வீட்டுக்கு பிற்காலத்தில் மாப்பிள்ளையாகினான். (மிச்சத்தை நீங்களே ஊகித்துக் கொள்ளுங்கள்)

83ல் தயா சாமி கொழும்புக்கு வேலை தேடிப்போனார். புதிதாய் பலர் எம்முடன் இணைந்து கொண்டனர். சந்திரே அய்யாவின் தலைமையில் அடுத்தடுத்து வந்த காலங்களில் மட்டுக்களப்பு மாநகரசபை கிறிக்கட் டீமையும் வென்று வந்தோம் (அக்காலததில் அவர்கள் தான் மட்டக்களப்பு மாவட்ட சாம்பியன்களாக இருந்தனர்). அதன்பின் பல சில காலங்கள் வாழைச்சேனையில் இருந்து மட்டக்களப்பு வரை பிரபல்யமாக இருந்தது ஏறாவூர் யுனைடட்.

1984 - 85 இல் நாட்டு நிலைமைகளால் பலரும் ஏறாவூரை விட்டு இடம் பெயர்ந்தனர். முக்கியமாய் சிங்கள நண்பர்கள்.

நான் 1985ம் ஆண்டு கார்த்திகை மாதம் ஏறாவூரில் இருந்து வெளிநாடு புறப்பட்டிருந்தேன். புகையிரதம் “ஏறாவூர் யுனைடட்” மைதானத்தை கடந்தபோது மைதானம் வெறிச்சோடிக் கிடந்தது ஊரைப் பிரியும் என் மனதைப் போல்.

18 ஆண்டுகளின் பின் 2003 இல் ஊர் போன போது ஆமி காம்ப் ஆக மாறியிருந்த எமது மைதானத்தை தொலைவில் நின்று பார்க்கும் சந்தர்ப்பம் மட்டுமே கிடைத்தது. அங்கு ஏறாவூர் யுனைடட் மைதானம் இறந்து கிடந்தது, நாட்டின் ஒற்றுமையைப் போல்.

அந்த சிங்களத்து தேவதை கடைசிவரை எம்மை கண்டு கொள்ளவில்லை. முக்கியமாய் தயா சாமியை. அப்படி அவள் தயா சாமியை பார்த்திருந்தால் இரண்டு நன்மைகள் கிடைத்திருக்கும்.
1. தயா சாமி என்று அழைப்பதற்கு ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள்.
2. நாட்டின் ஒற்றுமையை கொஞ்சமாவது கூடியிருக்கும்.

ஏனோ விதி இவையிண்டையும் விரும்பவில்லை.

நாடு அமைதியடைந்திருக்கிறது என்கிறார்கள் அரசியல்வாதிகள். முன்பு போல ஏறாவூர் யுனைடட் உருப்பெற்றால் மட்டுமே நம்புவேன் அதை.

கூகில் மப் இல் பிரபல ஏறாவூர் யுனைடட் மைதானத்தைப் பார்க்க இங்கு அழுத்தவும்
.........

எம்முடன் தோழமையுற்றிருந்த ஒரு ஜீவன் இன்று இல்லை. விடுதலைக்கு நாம் கொடுத்த விலைகளில் அவனின் உயிரும் ஒன்று.
ஆனால் நினைவுகள் மட்டும் பசுமரத்தாணியாய் மனதில்

இது அவனுக்கு அர்ப்பணம்


போர்க்குற்றவியல் நாள்

போர்க்குற்றவியல் நாள்

இன்று (18.05.2010)போர்க்குற்றவியல் நாள் ஒஸ்லோவில் அனுட்டிக்கப்பட்டது. முள்ளிவாய்காலில் நடைபெற்ற போர்க்குற்றங்களே முதன்மைப்படுத்தப்பட்டன.


ஐ.நா அதிகாரிகளின் புள்ளிவிபரத்தின் படி ஏறத்தாள 40000 மக்கள் கொல்லப்பட்டார்கள். இது தவிர பல விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே இந்த நாள் இன்று அனுட்டிக்கப்படுவதற்கான காரணங்கள் போல் எனக்குத் தெரிகின்றன.

என்னைப் பொறுத்தவரை எனக்கு
போர்க்குற்றவியல் நாள் என்னும் வார்த்தை சில பல சிந்தனைகளை எனக்குள் ஏற்படுத்தியதை ம‌றுப்பதற்கில்லை. அவற்றை பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.. இதை பிரசுரிப்பதற்கான நேரம் இதுவா எனலாம் பலர். எனது பதில் ஆம்! என்பதே.
மாற்றுக் கருத்து இருப்பதி்ல் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

......................


எனக்குள்ளான ரணங்களை மற்றவர்களுடன் சேர்ந்து ஆற்றிக்கொள்வதற்காகவும், உயிரிழந்த சக உறவுகளை நினைவு கூர்ந்து கொள்ளவும் ஒஸ்லோவி்ல் நடைபெற்ற நிகழ்வுக்கு போயிருந்தேன். நிகழ்வின் பெயர்
போர்க்குற்றவியல் நாள் என்பது அங்கு போன பின்பே தெரிந்தது.

போர்க்குற்றவியல் நாள்.......
மெதுவாயும் ஆறுதலாயும் உள் மனதால் மீண்டுமொரு முறை உச்சரியுங்கள்
போர்க்...........குற்ற........
....வியல்...........நாள்.......


போர்க்குற்றவியல் நாள்
போர்க்குற்றவியல் நாள்

உணர்ந்தாயா அச் சொல்லின்
உக்கிரம்..
சோகம்..
வேதனை
ஏக்கம்..
காழ்புணர்ச்சி ..
முக்கியமாய் சுயமழிந்த நிலை


மேற் கொண்டு நீ வாசிக்க முதல்

உன்னை நீ சார்ந்த அமைப்புக்களில் இருந்து ஒரு நிமிடம் விடுவித்துக்கொள்....
இழப்பின் காழ்ப்பணர்ச்சியையும், ஆக்ரோஷத்தையும் சற்றே தள்ளி வை...
உணர்ச்சிகளை சற்றே உதறு...
சற்றே.....மனிதம் பருகு

செய்தாயா?

சரி

நான் கேட்கும் கேள்வி என் மீது உனக்கு தீராத வெறுப்பை ஏற்படுத்தலாம்..
பறவாயில்லை
உறவுக்கு இல்லாத உரிமையா..
திட்டு
காறி உமிழ்
ஏதும் பட்டம் தா
அடி
வெடி வை
என்னவும் செய்

ஆனால் எனக்காக நான் கேக்கும் கேள்வியை
ஆறுதலாய்
மனட்சாட்சியுடன் பேசி
பதில் தா

வேண்டாம் வேண்டாம்
பதில் தராதே...தேடு
தேடி எடுத்து
உன் வாரிசிடம் கொடு
அது காணும் எனக்கு

போர்க்குற்றவியல் என்றும் சொல் சிங்களவனுக்கு மட்டுமா?
எம்கைகள் மட்டும் என்ன இரத்தக்கறையற்றதா?

ஆழமாய் பேசவும் வேண்டாம், விவாதிக்கவும் வேண்டாம் நாம்
இப்போதைக்கு
இது பற்றி

ஆனால்
எமக்குள் நாமே செய்து கொண்ட போர்க்குற்றங்கள்....
தவிர
போர்க்குற்றம் என்னும் சொற்பதத்துக்குள் வராத குற்றங்கள்
எத்தனை எத்தனை

நண்ப...
வா சுயவிமர்சனம் கற்போம்

உறவே..
உன் வலி நானறிவேன்.. நன்கு அறிவேன்
நானும் உன்னைப் போல் மௌனமாய் அழுபவன் தான்.....
இருப்பினும்

மரத்தால் விழுந்தவனை மிதித்ததாம் மாடு
என்பது போல் பேசுகிறேனென்கிறாயா?

இல்லையய்யா... இல்லை
சத்தியமாய் இல்லை
ஏதும் பேசாமல் துயிலும்
என் உயிர்த் தோழனுக்காக
பேசுகிறேன்

அவனும் மாவீரன் தான் உன்னவன் போல்
ஆனால்
உறங்குகிறான்
எம்மால் சூட்டப்பட்ட
துரோகி
என்னும் பட்டத்தோடு

எப்படியிருக்கும் அவன் தாய் மனம்?
அவள் வலி உணர்

இறுதியாய் இரு விண்ணப்பங்கள்

அவனையும் ”மாவீரன்” என்று உரத்துச் சொல்
பெருந்தன்மையாய்

துன்பியல் நிக‌ழ்த்தப்பட்டதால் புலம் பெயர்ந்திருப்பவனிடம்
நேர்மையாய்ச் சொல்
மன்னித்துக்கொள் ”நானா” (அண்ணன்)
என்று

நண்ப....

எழு
மண்ணைத்தட்டு
பக்கத்தில் உள்ளவனையும்
கைகொடுத்து எழுப்பு
நடந்து போ
மனிதத்துக்குள்
எதிரியென்று ஓரினமில்லை
என உணர்த்தி
கைகுலுக்கு
தட்டிவிடப்பட்டால்
புன்னகைத்து மீண்டும்
கையை நீட்டு
எம் தேசத்தில்
மாண்டு போன மனிதம்
மீண்டு எழும்வரை.


வலி மறந்து
மனிதம் படைப்போம்
வா
.

மாற்றம் ஒன்றே நிட்சயமானது
அப்பாவும் சைக்கிலும் நானும்

இதை 90 களில் எழுதினேன் என்று நினைக்கிறேன்.
மூலப்பிரதியை துலைத்துவிட்டேன் ஞாபகமிருந்ததை இரைமீட்டிருக்கிறேன்.அப்பாவும் சைக்கிலும் நானும்

செயின் அறுந்து,
டயர் தேய்ந்து,
நெளிந்த மட்காட்டுடன்
வால்டியூப் உருகி
காற்றுப் போயிருந்த சைக்கிலைக் காட்டி
டேய் பெரிய தம்பி
இது இனி
உனக்குத் தான்  என்றார் அப்பா
(அப்படியே கட்டிப்பிடிக்க ஆசையாக இருந்தாலும் பயம் தடுத்தது)

அம்மாவிடம் ஓடி
கெஞ்சிக் கூத்தாடி
காசு வாங்கி
ஏறாவூர் பிள்ளையார் கோயிலடி
பம்மியடியானின் சைக்கில் கடையில்
பழைய செயின் போட்டு
புது வால் டியூப் போட்டு
பெடலுக்கு சன்னம் வைத்து
பச்சை, மஞ்சல், நீல நிறத்தில்
றிம்முக்கு பூ போட்டு
மெயின் றோட், கோயிலடி சுற்றி
அவள் வீட்டருகிலும் ஒரு சுற்றுச் சுற்றி
பால்ய சினேகங்களிடம்
காட்டி விட்டு
வந்த போது
இருட்டத் தொடங்கியிருந்தது
என்டா இவ்வளவு நேரம் என்றார்
அப்பா, வளமை போல

அடுத்து வந்த புதுவருட கைமுழுத்த காசில்
பம்மியடியானிடம் கொடுத்து
கழுவிப் பூட்டி
16 மைல் சைக்கில் ஓடி
பாடசாலை போய் வந்த போது
எனக்கும் சைக்கிலுக்கும்
நெருக்கம் கூடியிருந்தது

மாமி, தம்பிக்கு
புதிய பிளையிங் பிஜின்
சைக்கில் வாங்கிக்‌ கொடுத்த போது
இருந்த எரிச்சல்
அதை கள்ளமாய்
ஓட்டிப் பார்த்து
எனது சைக்கில்
better என்றறிந்த போது
கரைந்து போயிருந்தது

பின்பொரு நாள்
அப்பாவை
டபிள் ஏத்திக் கொண்டு போகும் போது
தம்பி இது 1965 இல்
பொன்னையாவிடமிருந்து
150 ரூபாவுக்கு வாங்கினது
ஒரு ஒட்டும் (welding)
ஓட்டேல்ல
கவனமா பாவி
என்ற போது
நானும், சைக்கிலும் இன்னும் நெருங்கியிருந்தொம்

1980 இல்
அப்பா
கிட்டத்தட்ட 500 ரூபாய்க்கு
புது ரிம்
மட்காட்
செயின் பெட்டி
ஜப்பான் செயின்
ரிம்முக்கு பூ
ஹான்டிலில் புத்தகம் வைக்க சின்ன கரியர்
எல்லாம் வாங்கித் தந்தார்

பம்மியடியான் தான்
பூட்டித் தந்தார்
காற்றில் சருகாய் மாறியிருந்தேன்
அடுத்து வந்த காலங்களில்

மஞ்சல் துணி கொண்டு
தினம் தினம் துடைத்தேன்
கண்ணாடி பூட்டி அழகு பார்த்தேன்
மட்காட் களட்டி
ரேசிங் சைக்கிலாக்கினேன்
பெயின்ட் அடிப்பித்தேன்
இந்தியன் பிரேக் கட்டை மாத்தி
ஜப்பான் பிரேக் கட்டை போட்டேன்

ஒரு நாள்
அப்பா தன்னை கோயிலடியில்
இறக்கி விடு என்ற போது
100 கிலோ தாண்டும் அப்பா
பஞ்சாய் இருந்தார்
சைக்கில் பாரில்

அடுத்த வருடம்
அப்பா
மாரடைப்பால் போய்ச் சேர்ந்த போது
ஐரிட்டயும்,
கடைக்கும்
அதுக்கும்
இதுக்கும்
ஓடியதும்
அந்த சைக்கிலில தான்

தயாவுக்கு
சைக்கில் ரேஸ் ஓட
சைக்கில் கொடுத்த போது
முதல் 3 மைலுக்கும் முதலாவதாய் வந்து
முடியும் போது கடைசியாய் வந்தான்.
ஏன்டா என்ற போது
சைக்கில் சரியில்லை
என்றான் (ஆடத் தெரியாதவனுக்கு ......போல)

ஆனால் அடுத்த முறை தம்பி ஓடி
மூன்றாவதாய் வந்தான்

16 வயதில்
பாலினக்கவர்ச்சி வந்த போது
ரோட்டு, கோயில், பஸ் ஸ்டான்ட்
என்று ஓடி
அவளைப் பார்த்துருகி
நின்றதும்
அதே சைக்கிலில் தான்

டியூசனுக்கு போனதும்
சந்தைக்கு போனதும்
படத்துக்கு போனதும்
தங்கையை பாள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டு போனதும்
தம்பிக்கு சைக்கில் பழக்கியதும்
83ம் ஆண்டு சிங்கள நண்பர்களுடன் ஏறாவூரிலிருந்து மூதூர் வரை போனதும்
பாரில் ஒருவன், ஹான்டிலில் ஒருவன், பின்னால் ஒருவன் இவை தவிர நான்
இப்படி புன்னைக்குடா போய் குளித்ததும்
அந்த சைக்கிலில் தான்

சைக்கிலில் ஒட்டியிருந்த
புலி ஸ்டிக்கரை
அம்மா பயத்தில் களட்டி எறிந்த போது
அம்மாவுக்கும் எனக்கும்
சண்டை வந்தது

1985 இல்
சைக்கிலை பூட்டி வை
களவெடுக்கிறாங்களாம் என்று
அம்மா சொன்ன போது
ஒம் என்று சொல்லி
பூட்ட மறந்து
காலையில்
ஓரெல்லாம் தேடி
ஓய்ந்து
பொலீஸ் ஸ்டேசன் போய்
என்றி போட்டு
நடந்து
வீட்ட வந்த போது
கனத்துக் கிடந்தது
மனமும் காலும்

சோர்ந்து போய்
கதிரையில் விழுந்திருந்த போது
புன்னகைத்துக் கொண்டிருந்தார்
சுவரிருந்த அப்பா

மரியாதைக்குரிய மக்ஸ் (Max) என்னும் Sigfus Sverrisson

மரியாதைக்குரிய மக்ஸ் (Max) என்னும் Sigfus Sverrisson


சில வாரங்களுக்கு முன் தொலைபேசியில் தடித்த, கரகரப்பான, விறைப்பான, அவசரமான குரலுடன் அறிமுகமானவர் தான் இந்த மக்ஸ். விசித்திரமான மனிதர். இரண்டு நாட்கள், அதுவும் 4 மணித்தியாலங்கள் மட்டுமே பழகியவர் என்னை அதிகமாகவே பாதித்தார்.

அவரின் கணணி மக்கர் செய்த போது நான் கணணி திருத்துவது பற்றி அறிந்து அது பற்றி உரையாட என்னைத் தொடர்பு கொண்டார்.

ஆரம்பத்திலேயே அவர் நோர்வே நாட்டிவரில்லை வெளிநாட்டவர் என்று தெரிந்தது. நான் நோர்வே நாட்டவனா என்று கேட்டார். நான் இல்லை என்றது அவருக்கு திருப்தியை கொடுத்திருக்க வேணும். தனது கொம்பியூட்டர் இன்டர் நெட்டுக்கு போகுதில்லை என்றும், வைரஸ் இருக்கு என்றும் சொன்னார். வைரஸ் இருப்பது எப்ப‌டி உங்களுக்கு தெரியும் என்று கேட்டபோது... அப்படித்தான் நினைக்கிறேன் என்று குரலை உயர்த்தி கடுமையாகச் சொன்னார். ஆகா, அப்படியா என்றேன்... உடனே வா...என கட்டளையும் போட்டு விலையையும் கேட்டார்.

ஐயா! என்னிடம் இன்று வாகனம் இல்லை.. நாளை வரவா என்றேன்? இல்லை, இல்லை உன் விலாசம் சொல் நான் வருகிறேன் என்றார். சரி என்று விலாசமும், வழியும் சொல்லி, நேரம் குறித்துக் கொண்டோம்.

ஒரு மணிநேரத்தில் தொலைபேசியில் அவசரமாய் அழைத்து தான் தொலைந்து விட்டதாக அதே தடித்த, கரகரப்பான, விறைப்பான, அவசரமான குரலில் கூறினார்.

எங்கே நிற்கிறீர்கள், ஏதும் அடையாளம் சொல்லுங்கள் என்றேன்.
Narvesen என்னும் கடைக்கு முன்னால் என்றார். (ஒஸ்லோவில மட்டும் 100 க்கு குறையாத அளவு Narvesen கடைகள் இருக்கு)
அய்யா! அது எல்லா இடத்திலயும் இருக்கும் கடை. நீங்கள் எங்கே நிற்கிறீர்கள் என்றேன்?
மீண்டும் Narvesen என்றார். எனக்கு மண்டை விறைக்கத் தொடங்கியது. மிகவும் ஆறுதலாகவும்...அன்பாகவும் (பல்லைக்கடித்துக் கொண்டு) ஐயா நீங்கள் நிற்கும் இடத்தில் யாரிடமாவது நீங்கள் நிற்கும் இடத்தின் பெயரை கேட்டுச் சொல்லுங்கள் என்றேன்.. பக்கத்தில் போன யாரோ ஒரு (அப்)பாவியை மடக்கி அவரின் தடித்த, கரகரப்பான, விறைப்பான, அவசரமான குரலில் நான் எங்கே இருக்கிறேன் என்று கேட்டது தொலைபேசியினூடாக தொளிவாகக் கேட்டது. பதில் அறிந்து மீண்டும் வழி சொன்னேன். மீண்டும் இரண்டு தரம் தொலைந்து 1 மணி நேரத்தின் பின் வீட்டுக்குள் வந்தார்.

கதவைத் திறந்ததும் விறு விறு என்று தனது பையுடன் சப்பாத்தையும் களட்டாமல் ஹால்க்குள் நுளைந்தார். நான் அதிர்ச்சியில் இருந்து மீண்டு நண்பரே! நாம் வீட்டுக்குள் சப்பாத்துடன் போவதில்லை, நீங்களும் சப்பாத்தை களட்டிவிட்டு வாருங்கள் என்றேன்.
என்ன சப்பாத்தை களட்டுவதா? என்ற தொனியில் என்னை பார்த்தவர். முடியாது எனது காலில் புண் இருக்கு என்றார். என்னடா வம்பு இது என்று நினைத்து விட்டு விருப்பமில்லாமல் மக்ஸ்க்கு எனது ராஜ்யத்தில் விதிவிலக்களித்தேன். நன்றி என்றார் தடித்த,........ குரலில்.

சரி.... என்னய்யா உனது பிரச்சனை? என்றேன்.
தூசனத்தில் திட்டியபடியே இந்த சனியன் வேலை செய்யுதில்லை, தான் இசையமைத்த பாடல்களைக் காணவில்லை, அவை மிக மிக முக்கியமானவை என்றார் தனது கணணியை பார்த்தபடியே. அவர் சொல்லி முடிய முதல் குப்பென என் முகத்திலடித்தது நொதித்துப் போன பதார்த்ததொன்றும் சிகரட் வாசனையும். மறு பக்கம் திரும்பி மூச்செடுத்தேன்.

ஊத்தையாய் கண்றாவியாய் இருந்த கணணியை ‌வாங்கி இயக்கினேன்....
அதுவோ திரையில் ”நீ கள்ளப் ப்ரோகிறாம் பாவிக்கிறாய்” என்ற தொனியில் அறிவிப்புச் செய்து கொண்டிருந்தது. அதைவிட பாதுகாப்பு சம்பந்தமான எதுவும் கணணியில் இருக்கவில்லை. விசயத்தை ஆறுதலாக விளக்கினேன்.

அது தான் நான் செய்த மோட்டு வேலை....

தூசனத்தில் என்னை திட்டியபடியே பீரங்கியாய் முழங்கினார் மக்ஸ். (நானும் ‌முதலில் கொஞ்சம் பயந்தது தான் போனேன்)
டு ஆர் கால் மன் (நீ விசரன்) என்று கத்தினார்.
நான் பயத்தில் விறைத்துப் போய் அவரை பார்த்துக் கொண்டே தலையை ஆட்டிக் கொண்டிருந்தேன். (வேறு என்னத்தை செய்வது?)
நான் 700 குறோனர்கள் குடுத்து திருத்தினேன் என்றார்.
இதற்கும் தலையாட்டினேன்
சென்ற வருடம் தான் இந்த கணணியை வாங்கினேன் என்றார்.
நான் இப்பவும் தலையாட்டிக் கொண்டிருந்தேன்
நீ நான் கள்ளப் ப்ரோகிறாம் பாவிக்கிறேன் என்கிறாய்... உனக்கு விசர் இல்லாமல் வேறு என்ன? என்றார் உக்கிரம் குறையாமலே
இப்போது எனக்குள் இருந்த பயம் மறைந்து பரிதாபமாய் மாறியிருந்தது.
என்னை கொஞ்சம் பேச அனுமதிப்பாயா? என்றேன் மிகவும் ம‌ரியாதையாக
உடனடி பலன் கிடைத்தது
ம்..ம்.. சொல் என்றார் கரகரத்த குரலில்

அய்யா! நீ கணணி வாங்கியதும் உண்மை.
அவன் திருத்தியதும் உண்மை
ஆனால் அவன் போட்ட ப்ரோகிறாம் தான் பிழை என்றேன்
சொல்லி வாய் மூடவில்லை.. தொலைபேசியில் கணணியை திருத்தியவனை திட்டிக் கொண்டிருந்தார் மக்ஸ்
இவர் கதை புரியாமல் அவன் திட்ட, அவன் கதை புரியாமல் இவர் திட்ட
சிறுது நேரம் தொலைபேசி யுத்தம் நடந்தது. நானோ... ஆகா, ஆபத்தான ஆளிடம் மாட்டிவிட்டேனே எப்படி தப்புவது என்று வடிவேலு மாதிரி யோசித்துக்கொண்டிருந்தேன்.
சற்று நேரத்தில் தொலைபேசியை வைத்தவர்...

அவனை சும்மாவிட மாட்டேன் என்று கறுவிக் கொண்டார்
கோபத்தில் அங்கும் இங்கும் நடந்தார்
நடையை நிறுத்தி, நிமிர்ந்து என்னைப் பார்த்து
நீ கோட்டுக்கு வருவேணும் என்றார்.
திகைத்துப் போன நான்
ஏன்? என மிகவும் மரியாதையுடன் கேட்டேன்.
சாட்சி என்றார்..
எதற்கு என்று கேட்கமுதலே தான் போலீஸ் போய், திருத்தியவனை கோட்டுக்கு இழுத்து நட்ட ஈடு கேட்கப் போகிறேன் என்றார்
என்னடா கோதாரி இது.. சும்மா இருந்த சங்கை ஊதிக் கெடுத்தானாம் யாரோ என்ற மாதிரி நான் இவனிட்ட மாட்டுப்பட்‌டிட்டனே என்று போசித்துக் கொண்டிருந்தேன்.

மக்ஸ் தனது கணணியை எடுத்து மூடியபடியே..
வா, கணணி திருத்தியவனிடம் போவோம் என்று இன்னொரு போடு போட்டார்.
இப்போது நான்
குரலை கடுமையாக்கி மக்ஸ் என்றேன்.
என்ன என்றார்
உனக்கு கணணி திருத்தி தர என்னால் முடியும் ஆனால் கோட்டுக்கு அல்லது வேறு இடத்துக்கு வர முடியாது.. மன்னித்துக்கொள் என்றேன் கடுமையும், நட்பும் கலந்து.
தன் தாடியை சொறிந்தபடியே போசித்த மக்ஸ்
தான் கணணி திருத்தியவனிடம் போவதாகவும், பின்பு போலீசிடம் போவதாகவும் சொல்லி
உனக்கு எவ்வளவு காசு தரவேண்டும் என கேட்டார்.
எதற்கு என்றேன்
கணணியை பார்த்தற்கு என்றார்
இல்லை...நண்பரே...நான் வேலை செய்யாடமல் காசு வேண்டுவதில்லை என்றேன்

குட்.... குட் பிரின்சிபல்.. என்று எனது கையைப் பற்றி முறியுமளவுக்கு கைகுலுக்கி, மீண்டும் சந்திப்பதாக கூறி மிக அவசரமாக மறைந்து போனார் நன்பர் மக்ஸ்
புயலடித்து ஓய்ந்தது போலிருந்தது வீடு.
அப்பபா என்ன பரப்பான மனிதர்... சற்று நேரம் கூட மனிதர் உட்காரவில்லை, அமைதி கொள்ளவில்லை, அமைதியாய் பேசவில்லை எதையோ தொலைத்தவர் போல பரபரத்துக் கொண்டிருந்தார்.

மக்ஸ்ஐ திட்டியபடியே நிலத்தில் இருந்த மக்ஸின் சேற்றுக் காலடிகளை கழுவிமுடித்தேன்

அதே நாள் மதியம் மக்ஸ்ஜ மறந்து மதிய தூக்கத்தின் ஏகாந்தத்தை அனுபவிததுக் கொண்டிருந்தேன்....
தொலைபேசி மணியடித்தது... விசரைக் கிளப்பியது
தூக்க கலக்கத்தில் தொலைபேசியை எடுக்க முதலே
ஹலோ, ஹலோ நான் மக்ஸ், மக்ஸ் கதைக்கிறேன் என்று கத்திக் கொண்டிருந்தார் நமது மக்ஸ்
என்ன என்றேன் சற்று எரிச்சலுடன்?
எனது எரிச்சலை கண்டுகொள்ளாமலே, கணணி திருத்தியவன் தன்னை மிகவும் மரியாதை இன்றி திட்‌டி அனுப்பி விட்டதாகவும், தான் தற்போது போலீசுக்கு போய்கொண்டிருப்பதாயும் கோபத்துடன் சொன்னார்.
ம் ..ம் என்றேன் எரிச்சல் கலந்த தூக்க கலக்கத்தில்
ஐ கோல் யூ என்ற படியே தொலைபேசியை வைத்தார்.
எனக்கு நித்திரை போய் விசர் வந்திருந்தது

அரை மணிநேரத்தில் மீண்டும் தொலைபேசியில் வந்த மக்ஸ்
போலிசில் தான் காத்திருப்பதாய் சொன்னார். தேவை என்றால் உன்னை தொடர்பு கொள்வேன் என்று சொல்லி எனது பதிலை எதிர்பார்க்காமல் தொலைபேசியை வைத்தார்.
இரண்டு மணிநேரத்தில் மீண்டும் மக்ஸ்
என்னய்யா என்றேன் சலிப்புடன்
போலீஸ் தன்னை கலைத்து விட்டதாகவும், போலீஸ் தனது கடமையை செய்யவில்லை எனவும் திட்டினார்.
ஆறுதல் படுத்தி தொலைபேசியை வைத்தேன். (போலீஸ்சுக்கு இருக்கிற பிரச்சனைகளில் இவரின் பிரச்சனையை அவர்கள் பிரச்சனை இல்லை என்றே நினைத்திருப்பார்கள்....கற்பனையில் மக்ஸ் போலீசுடன் எப்படி கதைத்திருப்பார் என்பதை நினைத்துப் பார்த்தேன்...போலீஸ்காரனிடத்தில் பரிதாபம் ஏற்பட்டது.

ஒரு வாரத்தின் பின் நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் இருந்து என்னை தொடர்பு கொண்டார் நண்பர் மக்ஸ்
இந்த முறை நுகர்வோர் பாதுகாப்பு சங்கத்தில் வழக்கு போட்டிருந்தார். அவர்கள் இது பற்றி முடிவு சொல்ல 8 மாதமாகும் என்றதால் அதிகமாகவே சலிப்படைந்து என்னை என்ன செய்யலாம் என்று கேட்டார். 8 மாதம் கணணி இன்றி இருப்பது தனக்கு கஸ்டம் என்றார்.

உனது கணணியில் இருப்பது கள்ள ப்ரோகிறாம் என்பதை ஒரு கணணி கடையில் கொடுத்து எழுத்து மூலமாக உறுதி செய்து கொள், அதை சாட்சியாக பயன்படுத்தலாம். அதன் பின் கணணியை என்னிடம் தா திருத்தித் தருகிறேன் என்றேன்.

சரி என்று சொன்னார். சொன்ன படியே 4 நாட்களின் பின் ‌மீண்டும் தொல்லை பேசியில் வந்ததார்.

இம் முறை மக்ஸ்ஜ வீட்டுக்கு அழைப்பதில்லை என்று முடிவெடுத்திருந்தேன். எனவே அவரின் விலாசம் கேட்டு நவிகேசனில் தட்டிவிட்டேன். இடது பக்கம் திரும்பு, நேரே போ, மீண்டும் இடது பக்கம் திரும்பு என கட்டளையிட்டுக் கொண்டிருந்தது நவிகேசனுக்குள் இருந்த பெண் குரல்.

10 நிமிடங்களின் பின் நீ தேடிய இடம் வந்து விட்டது என்றது பெண்ணின் குரல்.
ஆனால் மக்ஸ் சொன்ன 68A ஜ மட்டும் காணவில்லை. 62, 64, 66, .. ,70, 72 இலக்கங்கள் இருந்தன...ஆனால் 68 மட்டும் கண்ணுக்கு தெரியவில்லை.. வாகனத்தை விட்டு இறங்கி தேடத் தொடங்கினேன். இதற்கிடையில் 2 தரம் மக்ஸ் இடம் வழி கேட்டேன். 68A க்கு வந்து போன் பண்ணு என்று ஈவுஇரக்கம்மின்றி தொலைபேசியை துண்டித்தார்.பத்திக் கொண்டு வந்தது எனக்கு

நான் நிற்கும் இடம் சரியில்லை என்று எனது பலனாய்வுத்துறை எச்சரித்துக் கொண்டிருந்தது. சுற்றிலும் குப்பை கூழங்களும், ஒதுக்கி விடப்பட்ட கரிய நிற ஸ்நோவும், ஒரு வித நாற்றமும் அவ்விடத்தின் தரத்தை கூறிக் கொண்டிருந்தன. சுற்றியிருந்த அடுக்குமாடிக் கட்டடங்கள் பராமரிக்கப்படாததால் மிகவும் பழுதடைந்த நிலையில் இருந்தன. என்னடா இது நோர்வேயிலா நிற்கிறேன் என்றளவுக்கு அந்த இடம் ஊத்தையாயும், குப்பையாயும், பராமரிப்பற்றும், பயத்தை தருவதாயும் இருந்தது.

சற்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சற்று முன்னேறினேன். எங்கும் ஆபிரிக்கரர்கள் மட்டுமே தெரிந்தனர். 62ம் இலக்கத்துக்கு பின்புறமாய் ஒரு பாதை போயிற்று... அதனூடாக நடந்து போய்ப் பார்த்தேன். 64 வந்தது. இன்னும் சற்று நடந்தேன் சுற்றாடல் பயங்கரமாக இருந்தது. உடைந்த கார்களும், குப்பையும், வீட்டுக் கழிவுகளும், உடைந்த போத்தல்களும், துர்நாற்றமும் அவ்விடத்தின் தரத்தை சொல்லிக் கொண்டிருந்தன. ”கெத்தோ” என்னும் சேரிப்புறத்தில் நிற்பதை உணர்ந்த போது அமெரிக்க படங்களில் வரும் ”கேத்தோ” கறுப்பர்களின் அட்டகாசங்கள் பின்னந்தலையில் வந்து போயிற்று

ஆனால் என்னைக் கடந்து போன எல்லா ஆபிரிக்கர்களும் வலது கையை இடது பக்க நெஞ்சில் வைத்து தலையாட்டினார்கள் அல்லது அஸ்லாம் அலைக்கும் என்றார்கள், அல்லது நோர்வேஜி மொழியில் மாலை வணக்கம் சொன்னார்கள். நானும் புன்னகைத்தபடியே தலையாட்டிக் கொண்டு ‌அவர்களை கடந்து கொண்டிருந்தேன். மனமோ மனிதர்களின் உடை, இடம் பார்த்து முன்கூட்டியே எடைபோடாதே என்று எத்தனை தரம் உனக்கு சொல்வது என என்னைத் திட்டிக் கொண்டிருந்தது.

ஆபிரிக்கர்களைப் போல நாம் ஏன் மற்றவர்களை பார்த்து சிரிப்பதோ, தலையாட்டுவதோ இல்லை என்று எனக்குப் புரியவில்லை. நம்மவர்கள் முன்னால் வருபவன் தமிழன் என்றாலே முகத்தை இறுப்பிடித்துக் கொண்டு காணாத மாதிரி கடந்து போவார்கள். சக மனிதனுக்கு ஒரு புன்னகையைத்தானும் இலவசமாக தர முடியாத பிசினிகனா நாம்?

66ஆம் கட்டடத்தின் பின்னால் 68ம் இலக்க கட்டடம் இருந்தது. மக்ஸ்க்கு போன் பண்ணினேன். சற்று நேரம் காக்க வைத்துவிட்டு வந்தார் மிரியாதைக்குரிய மகஸ்.

வா, வா என்று அழைத்தபடியே வழிகாட்டிக் கொண்டு நான்கு மாடிகளுக்கான படிகளை லாவகமாக கடந்து தனது அப்பார்ட்மன்ட் கதைவை திறந்து வா உள்ளே என்றார். முதல் வேலையாக தனது சப்பாத்தை கழட்டி வைத்தார். ஆகா என்னடா இது.. எனது வீட்டிற்கு வந்த போது சப்பாத்தை களட்டாதவர் தனது வீட்டில் சப்பாத்தை களட்டுகிறார் என்று யோசித்தபடியே எனது சப்பாத்தை களட்டினேன். அதற்கிடையில் மக்ஸ் தனது கதிலையில் அமர்ந்து சிகரட் ஒன்னற பத்த வைத்துக் கொண்டிருந்தார்.

கதவைத் தாண்டி உள்நோக்கி நகர்ந்தேன்.... என் கண்களை என்னாலேயே நம்பமுடியவில்லை. இந்த 44 வருடத்தில் அப்படி குப்பையான, ஒழுங்கற்ற இடத்தை நான் கண்டதில்லை. சற்று பயந்து தான் போனேன்.

உட்கார் என கதிரையை இழுத்துப் போட்டு கட்டளையிட்டார் நண்பர் மக்ஸ். உட்கார்ந்தேன்
இதைப் பார் என ஒரு கடதம் ஒன்றைத் தந்தார். அதில் ஒரு கணணி நிறுவனம் இவரின் கணணியில் இருப்பது கள்ள ப்ரோகிறாம் என உறுதி செய்யப்பட்டிருந்தது. பார்த்தாயா என்ன எழுதியிருக்கு என வெற்றிப் பெருமிதத்தோடு என்னைப் பார்த்தார்.
புன்னகைத்தேன் நான்
அவனிடம் 1 லட்சம் குறோணர்கள் நட்டஈடு கேட்கப் போகிறேன் என்றார்.
இதற்கும் புன்னகைத்தேன்
தான் தயாரித்த இசை (பாடல்களை) கணணி திருத்தியவன் அழித்து விட்டான் என்றார்.
என்ன.. உனது பாடல்களா என்றேன் ஆச்சசரியத்துடன்.
ஆம், நான் ஒரு இசையமைப்பாளன் என்றார் வலு கூலாக
மனிதரிடம் எனக்கு ஒரு வித மரியாதை கூடியிருந்தது

சரி உனது கணணியை திருத்த வேண்டுமானால் எனக்கு கணணியின் மென்பொருட்கள் வேண்டும் என்றேன்.
உனக்கு முன்னால் இருக்கிறது என்றார்..
கணணியை இன்ஸ்டோல் பண்ண போட்டேன்... அது தன்பாட்டில் இயங்கிக் கொண்டிருந்தது.

மெதுவாய் கண்களை சுற்ற விட்டேன்
முருகா! இப்படியும் குப்பையாய் இருக்க முடியுமா என மனம் கேட்கத் தொடங்கியது
முதலில் கண்ணுக்குத் தெரிந்தது இசை சம்பந்தமான கருவிகளே.
3 விதமான கிட்டார்கள்,
4 பெரிய Peavey இன ஒலிபெருக்கி சாதனங்கள்,
Amplifier கள்
ஒலி வாங்கிகள் பல
இரைந்து கிடந்த சீடிக்கள்
நூடில்ஸ் மாதிரி சிக்குப்பட்டிருந்த வயர்கள் ஒரு கும்பம்

இவற்றை விட எங்கும் பியர் போத்தல்கள் கொஞ்சம் குடித்தும், குடிக்காமலும், பதிதாயும் இருந்தது. நான் அங்கிருந்த 2,5 மணிநேரத்தில் மக்ஸ் 4 - 5 ‌பியர் போத்தல்களை காலி பண்ணியிருப்பார்.

மேசையில் பழைய பிட்சா துண்டுகளும், புளித்துபோன பால்பெட்டியும், கசங்கிய கைதுடைத்த பேப்பர்களும், ஒரு தொகை சிகரட் கட்டைகளும், 2 பியர் போத்தல்களும் இருந்தன.

திடீர் என என்னைப் பார்த்த மக்ஸ் வங்கிக் கணக்கில் உள்ள பணத்தை கணணி மூலமாக களவெடுக்கிறார்களாம் உண்மையா என்றார்?
ஓம் அப்படித் தான் கதைக்கிறர்ர்கள் என்றேன்.
தனது பணம் பற்றி தான் பயப்படுவதாயும் ஆனால் வங்கி தானே அதற்றுப் பொறுப்பு என்பதால் சற்று ஆறுதலாய் இருப்பதாகவும் கூறினார்.
நான் வழமைபோல தலையாட்டிக் கொண்டிருந்தேன்

மக்ஸ் இன் படுக்கையறையும், வரவேற்பறையும் ஒன்றாகவே இருந்தது. மே‌லே ஒரு லைட் மங்கலாக எரிந்து கொண்டிருந்தது. சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டிருந்தேன்.

என்ன குப்பையாய் இருக்கிறது என யோசிக்கிறாயா என எனது மனதை திறந்து பார்த்தவர் போல என்னைக் கேட்டார்... சிரித்தபடியே ஓம் என்றேன்.

நான் சொல்வதை மிக அவதானமாகக் கேள் என்றார். எனது பதிலை எதிர்பார்க்காமலே இப்படிச் சொன்னார்.

ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் ஒளிந்திருக்கிறாள் அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு ஆன் ஒளிந்திருக்கிறான் என்றும்.... ஆனால் தன்னிடம் மட்டும் அந்த பெண் இல்லை என்றும் கூறினார்.

புரியவில்லை என்றேன் (சத்தியமாக எனக்கு புரிந்திருக்கவில்லை)

இந்த முறை உதாரணத்துடன் விளக்கினார்.
வீட்டை ஒழுங்காக வைப்பது, சமைப்பது என்பவற்றை பெண்களே அதிகமாகச் செய்கிறார்கள் அல்லவா? அதே வேலைகளை ஆணும் செய்கிறான் ஆனால் பெண்களை விட குறைவாக. அதே மாதிரி ஒரு ஆண் செய்யும் வேலையை சில பெண்களும் செய்கிறார்கள்...

எனுவே தான் ஒவ்வொரு ஆணிடமும் ஒரு பெண் ஒளிந்திருக்கிறாள் அதேபோல ஒவ்வொரு பெண்ணிடமும் ஒரு ஆன் ஒளிந்திருக்கிறான் என்றும்.... கூறுகிறேன் என்றார்.
புரிகிறது என்று தலையாட்டினேன்.

எனக்கு ஏதோ புரிந்த மாதிரியும் இருந்தது ஆனால் புரியாத மாதிரியும் இருந்தது.

சரி அதற்கும் உனது வீடு குப்பையாய் இருப்பதற்கும் என்ன சம்பந்தம் என்றேன்...
அடாவடித்தனமாக வெடித்துச் சிரித்துவிட்டு சொன்னார்
என்னில் பெண்ணுக்குரிய தன்மைகள் இல்லை என்று

இப்ப புரிந்தது அவரின் துத்துவம் எனக்கு..
சிரித்தபடியே புரிகிறது என்றேன்..

மக்ஸ் தனது PS2 இல் chess விளையாட ஆரம்பித்தார். நான் கணணியுடன் சண்டை பிடித்துக் கொண்டிருந்தேன். இடைக்கிடை பியர் போத்தலை வாயில் வைத்து தலையை உயர்த்தி வாழ்வை அனுபவித்துக் கொண்டே chess விளையாடிக் கொண்டிருந்தார். திடீர் என பெரும் ஆரவாரத்துடன் உன்னை இன்றும்வென்றுவிட்டேன் என்று டீவியை பார்த்து கத்திவிட்டு....என்னிடம் நீ chess விளையாடுவாயா என்றார். ஓம் என்றால் வா விளையாடுவோம் என்பார் என்ற பயத்தில் இல்லை என்றேன். திருப்தியடைதமாதிரி தலையை ஆட்டினார்.

தான் தனது 8 வயதில் இருந்தே chess விளையாடுவதாயும்..Bobby Fischer என்னும் உலகச் சம்பியனை ஜஸ்லாந்தில் இருதடவை சந்தித்திருப்பதாயும். அவர் 2008 ம் ஆண்டு இறந்து விட்டார் என்றும் சொல்லிவிட்டு என்னைப் ஊடுருவிப் பார்த்த படியே தான் 2 தடவைகள் ஜஸ்லாந்து நாட்டு சம்பியனாக வந்திருக்கிறேன்... அவை எனது வாழ்வின் மிக அழகிய நாட்கள் என்றார்.

எனக்குள் மக்ஸ் இமயம் போல் வளர்ந்திருந்தார் இப்போது. இப்படி ஒரு குடிகாரனுக்குள் இப்படியும் திறமை இருந்திருக்கிறது என்பது என்னை ஆச்சரியப்படுத்தியிருந்தது. நீ கெட்டிக்காரன் மக்ஸ் என்று எழுந்து அவரின் கையைக் குலுக்கினேன். நன்றி.. நான் கெட்டிக்காரன் தான் என தனக்குத தானே சொல்லிக் கொண்டார். அதை நானும் ஆமோதித்தேன்.

அப்போது தான் அவரை முழுமையாக பார்த்தேன். ஆறு அடியை விட உயரமான உடம்பு, வயது 50 க்கும் 60 க்கும் இடையில் இருக்கும், மாதக்கணக்கில் சவரம் செய்யாத முகம் முழுக்க பிறவுன் நிற தாடி பச்சைப்பசேல் என வளர்ந்திருந்தது. மிகவும் தடகாத்திரமான குடியே கதி என கிடக்கும் உடம்பு.

நான் இப்படி அவரை அளவெடுத்துக் கொண்டிருக்கும் போது ஒரு பியர் போத்தலை எடுத்து அநாயசியமாக லைட்டரால் மூடியைத் திறந்து, வாய்க்குள் போத்திலை கவிட்டுக் கொண்டார்.

தண்ணிவிடாய்தது எனக்கு...எனினும் அடக்கிக் கொண்டேன் குசினியை எட்டிப் பார்த்தபின்...மாதக்கணக்கான பாத்திரங்களும், போத்தல்களும், சிகரட் துண்டுகளும் குசினி எங்கும் இரைந்து கிடந்தது. மனிதரைப் பார்த்தால் பாவமாகவும் இருந்தது (பயமாகவும் தான்).

கணணியை திருத்தி முடிய.. மக்ஸ் இன்டர்நெட் கனேக்சன் வேனும் அப்டேட் செய்ய என்றேன். இங்கு இன்டர் நெட் இலவசம் எடுத்துக் கொள் என்றார். இல்லை எல்லாம் பாஸ்வேட் கேக்கிறது என்றேன். தன்னிடம் பாஸ்வேட் இல்லை என்றார் வலு கூலாக.
சரி அன்டி வைரஸ் ப்ரோகிறாம் இருக்கா என்றேன்.. ஆம் என்று சொல்லி தேடத் தொடங்கினார். வீடு முழுக்க தேடி கடைசியாய் ஒரு பெட்டியை திறந்து கொட்டினார். 100க்கு மேற்பட்ட சீடிக்கள் சிதறி விழ அதிலிருந்து அன்டி வைரஸ் ப்ரோகிறாம் சீடியை 10 நிமிடங்களில் தேடித்தந்தார்.

இன்டர் நெட்டுக்கு என்ன செய்ய என்று கேட்டேன். தெரியா என்றார். சரி வா எனக்குத் தெரிந்த ஒருவரின் நெட்கபேக்கு போய் இணைப்பை எடுப்போம் என்றேன். நீ நல்லவன் என்று சொல்லியபடியே வெளிக்கிட்டார். எங்கே என்வாகனம் என்றவரிடம் அது மெயின் ரோட்டில் நிற்கிறது கொஞ்சம் நடக்க வேண்டும் என்றேன். ஆலுத்துக் கொண்டே நடந்தார்.

எனது பூர்வீகம் விசாரித்தார். சொன்னேன். தனக்கும் இரண்டு பெண் குழந்தைகள் என்றார். அவர்கள் வளர்ந்துவிட்டார்கள் எனவும் ஐஸ்லாந்தில் வாழ்வதாயும், தனது மனைவி நோர்வேக்கு வர இருப்பதாகவும் தனது சரித்திரம் விளக்கிக் கொண்டே வந்தார்.

நெட்கபேயில் இவரைக் கண்ட நண்பர் ஒருவர்
என்ன... ஒரு வெறிக்குட்டி போல என்றார்....எனக்கு எரிச்சல் வர
அவர் ஐஸ்லாந்து நாட்டில் 2 தரம் chess சம்பியனானவர் என்றதும்... பார்த்தா இப்படி தெரியேல்லேயே.. உமக்கு ஏதோ கதைவிட்டிருக்கிறான் நீரும் நம்பீட்டீர் என்றார்.
எனது மனதில் ஏதோ அப்படியான சந்தேகம் வரவில்லை. ஏன் அவர் எனக்கு பொய் சொல்ல வேனும் என்ற கேள்‌வியே எழுந்தது.

வெளியே போய் வாய் நிறைய சோக்லேட்டுடன் வந்தார் மக்ஸ்.
எனது வேலை முடிந்து விட்டது. இந்தா உன் கணணி என்றேன்.
என்னைக் வீட்டில் விட்டுவிடு என்றார்.
சரி வாருங்கள் என்று அவரின் வீட்டருகில் வந்தவுடன். கைகுலுக்கி ,பேசிய பணத்தையும் மேலதிகமாக சில குறோனர்களும் தந்து மீண்டும் சந்திப்போம் என்றார்.
முன்பிருந்த பயம், சந்தேகம் இன்றி கட்டாயம் சந்திப்போம் என்றேன்.
வாகனத்தில் இருந்து இறங்கி கை காட்டியபடியே இருட்டினுள் கரைந்து போனார் நண்பர் மக்ஸ்

பேரன்புமிக்க ஆசான் பிரின்ஸ் சேர் - Prince G. Casinader


பிரின்ஸ் சேர் - Prince G. Casinader

45 வயதிலும் இந்தப் பெயரைக் கேட்டால் அன்பும் பயமும் கலந்த மரியாதை என்னை சுற்றிக் கொள்ளும். இதயம் தேவைக்கு அதிகமாக அடிக்காது; ஆனால் இடிக்கும்.

'ஏன்டா அந்தாளுக்கு இப்பவும் இப்படி பயப்படுகிறாய் என அம்மா இப்பவும் கேட்பதுண்டு.
அம்மா! அது பயமல்ல, பக்தி.

கொல்லன் பட்டறையில் இரும்பைச் சூடுகாட்டி, தண்ணீரில் நனைத்துக் குளிர வைத்துச், சுத்தியலால் அடித்து, வளைத்து, மீண்டும் சூடுகாட்டி தான் விரும்பும் விதத்தில் கத்தி செய்யும் கொல்லன் போன்று எம்மை வார்த்தெடுத்த (வாட்டி எடுத்த) மரியாதைக்குரிய எங்கள் ஆசான் அவர்.

இவருக்கும், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கும், எனக்குமான உறவு 1976 தை மாதம் தொடங்கியது. 8 ஆண்டுகள் மட்டுமே ஆன நெருக்குமான எமது உறவு என் வாழ்வில் இத்தனை முக்கிய இடத்தைப் பெறும் என நான் கனவிலும் நினைத்ததில்லை.

எதை எழுத எதை விட என்று புரியவில்லை. தொண்டையில் ஏதோ அடைக்கிறது, உணர்ச்சியில் கண்கள் பனிக்கின்றன… என்னே பசுமையான நினைவுகள் அவை.

தாயின் மடி போலானது பாடசாலை நினைவுகள். அவை உங்களை தாலாட்டி தட்டிக்கொடுக்கும். வாழ்க்கை தரும் ரணங்களை இது போன்ற பசுமையான நினைவுகளால் செப்பனிட்டுக் கொள்கிறோம்.. உங்களுக்கு எப்படியோ தெரியாது ஆனால் நான் அப்படித்தான்.

1976 தை மாதம் 6B; வகுப்பில் சேர்ந்தேன். அன்றே பாடசாலை விடுதியில் என்னையும், தம்பியையும் சேர்த்து விட்டு அம்மா பிபிலைக்கு அடுத்த நாளே திரும்பியிருந்தார். பதுளை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் என்னுடன் படித்த ஒரு நண்பனும் அவனின் இரு சகோதரர்களும் மட்டுமே பரீட்சயமானவர்களாக இருந்தார்கள். மற்ற எல்லாமே புதிதாக இருந்தது, மொழி உட்பட.

அன்று மாலை சடுகுடு விளையாடிய போது என்னை வெ.. வெ…வெ..வெட்டையால போ என்ற போது மொழி புரியாமல் அவ்விடத்திலேயே நின்றதால் கன்னத்தைப் பழுக்க வைத்தார் புண்ணியமூர்த்தி அண்ணன். அவருக்கு கொன்னை என்பதால் வெட்டையால போ என்பதை 2, 3 வே வே போட்டு அப்படி சொன்னாராம். அதோடு வெட்டையால போ என்றால் வெளியே போ என்று அர்த்தம் என விளக்கம் கிடைத்தது அன்று மாலை.

இப்படியானதோர் புதிய உலகில் சஞ்சரித்துத் திரிந்து கொண்டிருந்த ஒரு இரவு studyhall இல் இருந்த போது வெள்ளைக்காரன் போல ஒருவர் அவ்விடத்தால் நடந்து போனார். திடீர் என்று எங்கும் மயான அமைதி. சத்தியமாக குண்டுசி விழுந்தால் கேட்டிருக்கும்.

என்ன நடக்குது என்று புரியவில்லை. அவர் போய் கன நேரம் வரை அந்த அமைதி குலையவே இல்லை. studyhall இல் இருந்த hostel master கூட வெளியில் போகவில்லை.

அது தான் One And Only Prince G. Casinader உடனான எனது முதல் அறிமுகம். மனிசன சும்மா பார்த்தாலே வெள்ளைக்காரன மாதிரித் தான். நிமிர்ந்த தலையும் நடையும், அளவான கட்டுடைய உடம்பும் ஆளப் பார்த்தால் ஒரு ஸ்டைலாகத்தான் இருக்கும். அவருடைய குரல்...இன்று வரை அப்படியான ஆளுமையுள்ள குரலை நான் கேட்டதில்லை. அவர் கட்டளையிட்டால் எமது மனது எமக்கு கட்டளையிடும் செய் அல்லது செத்து மடி என்று.. அப்படிப்பட்தோர் குரல் அவருடையது. அன்பு, ஆளுமை, கட்டளை கலந்ததோர் கம்பீரமான குரல் அது.

காலம் ஓடியது Prince Sir என்பது மந்திரச் சொல் என்று புரியத்தொடங்கியது. மனிசனின் பெயரை கேட்டால் முழு பாடசாலை மட்டுமல்ல, வாகரையில் இருந்து அம்பாறை வரையிருந்த பழைய மாணவர்களும், எங்கள் பாடசாலை ஆசிரியர்களும் கூட நடுங்கினார்கள்.

மனிதருக்கு டிசிப்ளின் என்ற சொல்லின் மேல் அப்படியொரு லவ்வு. அதைத்தான் மூச்சாக விட்டுக் கொண்டிருந்தார் பென்சன் எடுக்கும் வரை. இப்பயும் அதத் தான் விட்டுக் கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

டிசிப்பிளினுக்கு அடுத்ததாக அவருக்கு மிகவும் பிடித்தது சேக்ஸ்பியரும், ஆங்கில மொழியும் தான். ஆங்கிலத்தை அவர் மாதிரி கற்பிக்கக் கூடியவர்கள் இருப்பார்களா என்பது சந்தேகமே. Free பாடம் என்றால் அவரிடம் இருந்த பயத்தையும் தாண்டி அவரிடம் போய் சேர் இங்கிலிஸ் படிப்பியுங்கோ என்று கேட்குமளவுககு ஆங்கிலத்தினுள் தேன் கலந்து ஊட்டக் கூடியவர் அவர். ஒரு காலத்தில் மட்டகளப்பு ஆசியர்களுக்கு இலவசமாக ஆங்கிலம் கற்பித்தார் விடு முறை நாட்களில்.

படு ஸ்மாட் ஆன ஆள், வெள்ளையும், கறுப்பும் அவருக்கு பிடித்த நிறம். கறுப்பு நிறத்தில் ஒரு கார் வைத்திருந்தார். பின்பு வந்த காலங்களில் ஒரு வெள்ளை ஸ்கூட்டர் மாதிரி ஒன்று வைத்திருந்தார். அதன் சத்தம் கேட்டாலே எங்களுக்கு உதறலெடுக்கும். அந்த சத்தத்தினால் நாம் உசார் அடைவதை அறி்ந்த மனிதர் பிறகு பிறகு பாடசாலையை நெருங்கும் போது இறங்கி ஸ்கூட்டரை தள்ளி கொண்டு வரத் தொடங்கினார். அவரின் உளவுத்துறை படு பயங்கரமானது. யாரிடமும் சேட்டை விடலாம் அந்த மனிசனிட்ட விட்டா அதோ கதி தான் என்பதால் பலதடவைகள் நாம் அடக்கியே வாசித்திருக்கிறோம்.

பல நேரங்களில் மதிலால் குதித்து வந்து ஒளிந்திருந்து புலனாய்வு வேலை செய்து, திங்கள் கிழமை அசம்பிளியில் வைத்து தாக்குதல் நடாத்துவார். முழு பாடசாலைக்கும் முன்னால் அடிவாங்குறதின்ட வலி வாங்கினவனுக்குத் தான்தெரியும்.. (நம்மளுக்கு அதெல்லாம் நல்லா தெரியுமுள்ள)

அவரின் சிந்தனையில் ” மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி” என்பதை விட வேறு எதுவும் இருந்திருக்க வாய்ப்பே இல்லை என்பேன் நான். மனிதர் பாடசாலையை தனது குழந்தை போலவே நினைத்தார். அதன் நலனுக்காக எதையும் செய்யக் கூடியவராகவே இருந்தார். அதற்குரிய சக்தியும் அவரிடமிருந்தது. பெட்டிக்கடை வைத்திருப்பவரில் இருந்து அமைச்சர் வரை தொடர்பு வைத்திரு்தார். திடீர் திடீர் என வருவார்.... வசதிகளைப் பற்றி ஆராய்வார்.. பல நாட்கள் சாமம் கடந்தும் அவரின் அறையில் லைட் எரியக் கண்டிருக்கிறேன். (நாங்க படம் பார்த்திட்டு வரும்போது.. உஸ் உஸ்ஸ் ... சத்தம் போடாதிங்க.. இந்த வயதிலும் செவட்டையப் பொத்தி நாலு அறைவிட்டாலும் விடுவார் ... )

எமது கல்லலூரியில் படித்து, அங்கே ஆசிரியராக ஆரம்பித்து பின்பு அதிபராக ஏறத்தாள 40 ஆண்டுகளுக்கு மேலாக முடி சூடா மன்னனாக ஆட்சி செய்தவர் அவர்.

மட்டக்களப்பில் எத்தனையோ பெரிய பெரிய ஐம்பவான்களின் பாடசாலைகள் இருந்தாலும் அவர்கள் எவரிடமும் எமது Prince Sir ஐப் போல் ஒரு ஆளுமையுடைய அதிபர் இருந்ததில்லை என்பதை முழு மட்டக்களப்பும் அறியும். இதை முழு மட்டக்களப்பும் அறியும்.

அவரின் காலத்தை எமது பாடசாலையின் பொற் காலம் எனலாம். அந்த நாட்களின் மிடுக்கும், செருக்கும் அவற்றிற்கு சற்றும் குறையாத தரமும் அங்கு இருந்தது. பெற்றோர் மற்றவர்களிடம் மகன் சென்ரல்ல பிரின்ஸ் சேரிட்ட படிக்கிறான் என்று பெருமையாய் சொல்லித் திரிந்த காலமது. டிசிப்ளின் என்றால் சென்றல் தான் என்பார்கள் ஊரார்.

மனிதர் விளையாட்டிலும் கெட்டிக்காரர். டென்னிஸ் பிரியர். பாடசாலைக்கு நடுவே ஒரு டெனிஸ் கோட் செய்து வைத்திருந்தார்... நாங்கள் யாராவது மக்கன்றோ அல்லது பியோன் பேர்க் ஆக வரலாம் என்று நினைத்தாரோ என்னவோ... நமக்கு ஏதோ அந்த வெள்ளகார விளையாட்டில ஈடுபாடு வரவில்லை. ஒரே ஒரு நாள் எம்முடன் கால்பந்தாடினார்... மனிதரின் காலில் பந்தே படவில்லை... பாவமாயிருந்தது.

Prince Sir இன் காலத்தில் தான் சௌந்தரராஜன் சேர் எமது பாடசாலைக்கு விளையாட்டு ஆசிரியராக வந்து சேர்ந்தார் (Head hunting செய்தாலும் செய்திருப்பார் Prince Sir). அவரின் சாதனைகள் ஏராளம் ஏராளம்.. அதில் முக்கியமானது சங்கரப்பிள்ளை அண்ணணின் அகில இலங்கை சாதனைகளும், கிழக்கு மாகாண கால்பந்து வெற்றிக் கிண்ணமும்.

Prince Sir விளையாட்டுப் போட்டிகளின் போது யாரிட்டயும் தோக்கலாம் ஆனா சென் மைக்கல்ஸ்ட மட்டும் தோக்கக் கூடாது என்பார் மெதுவாய். (சென் மைக்கல்ஸை வெல்வது லேசான வேலையில்லை.. ஆனாலும் பல தடவைகள் வென்றிருக்கிறோம்) இப்பவும் எனக்கு அவர்களிடம் தோற்பது பிடிக்காது.

மட்ச்இல் வென்றால் சொந்தரராஜன் சேரயும், பிறகு பிரின்ஸ் சேரயும் தூக்கி தோளில் வைத்தபடி ஊர் உலா வருவோம்... Cap collection ஒரு இனிமையான அனுபவம்.. கொலிஜ் கொலிஜ், சென்றல் கொலிஜ் என்று மட்டக்களப்பு டவுனை ஒரு வழிபண்ணி விட்டுத்தான் ஓய்வோம்.. மனிசனும் எம்முடன் நடந்து திரியும்.. பூரித்த முகத்துடன்... வென்றது அவர் குழந்தைகளல்லவா..

ஒரு முறை, நாம் ஒரு மட்ச் வென்று கத்திய போது ஒரு தொண்டன் டவுன் டவுன் சென்மைக்கஸ் டவுன் டவுன் என்று கத்த அவனை கிட்ட கூப்பிட்டு ரெண்டு அறை அறைந்து, பேசி அனுப்பினார்.

அடுத்து வந்த அசம்பிளியில் தோற்பவனைப் பழிப்பது நன்றன்று என்றும் அவனின் நிலையில் உன்னை வைத்துப் பார் உனக்குப் புரியும் என்றும் போதித்தவரும் அவர் தான். எவ்வளவு பெரீய உண்மையது.

மட்டக்களப்பில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு இலகுவில் பாடசாலையில் இடம் கொடுக்காத காலத்தில் hostel இல் தங்கியிருந்து படிப்பதற்கு வசதி செய்து கொடுத்து இஸ்லாமிய சமூகத்துக்கும் எமக்கும் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்தியதும் இவர் என்றால் மிகையாகாது. இன்றைய சமூக அரசில் நிலையைப் பார்க்கும் போது Prince Sir எத்தனை ஆழமாகச் சிந்தித்து பல வித சமூகங்களையும் ஒன்றாய் படிக்க வைத்திருக்கிறார் என்பது ஆச்சரியத்தைத் தருகிறது. என்னுடன் படித்த இஸ்லாமிய நண்பர்களின் தந்தையர்கள் பலர் எமது பாடசாலையிலேயே படித்திருந்தார்கள்.. அதுவும் Prince Sir இடம்.

உன் அப்பன் என்ன தொழில் செய்தாலென்ன, யாராக இருந்தாலென்ன, எந்த சமயமாயிருந்தாலென்ன நீங்கள் எல்லோரும் மனிதர்கள் என்றும்; ஒற்றுமையின் முக்கியம் என்னவென்றும் எமக்கு கற்பித்தவர் அவர். ஒற்றுமை பற்றி அசம்பிளியில் கதை கதையாக சொல்லுவார். பல கதைகள் இன்னமும் ஞாபகம் இருக்கின்றன.

அவர் ஒரு சிரமதானப் பிரியர்... அடிக்கடி பாடசாலையில் சிரமதானம் நடக்கும். சிரமதானத்தின் வியர்வை இனிக்கும் என்பதைக் கற்றுத் தந்ததும் அவர் தான். அவரின் சிரமதானங்கள் பாடசாலையுடன் நின்றுவிடாது வெபர் ஸ்டேடியம், மாந்தீவு தொழுநோயாளர் ஆஸ்பத்திரி, தேவாலயம் என்று விஸ்தீரணமாயிருந்ததது, அவரின் மனதைப் போல.

அவரின் கந்தோருக்குள் பிரம்புச்சத்தம் கேட்பது குறைவு, அப்படி பிரம்புச் சத்தம் கேட்டால் அவர் உசாராக இல்லை என்று அர்த்தம். 8 வருடத்தில் அவர் பிரம்பெடுத்தது மிகக் குறைவு.

அவர் பிரம்பு எடுக்கத் தான் மாட்டார் ஆனால் அடிக்க மாட்டார் என நான் சொல்லவில்லையே. அவரின் கை பதம் பார்க்காத கன்னங்களே இல்லை எனலாம். ”இது கிட்டடிக்கும் சரிவராது” என்று சொல்லி கதிரையின் இரண்டு கைபிடியையும் பிடித்து எழும்பினார் என்றால் பிறகு என்ன வாசிப்புத் தான். மனிதர் நாயடி பேயடி அடிப்பார்.  சென்றல்ல படிச்சு பிரின்ஸ்சேரின் அறை வாங்கியிருந்தால் தான் மரியாதை...

பிரின்ஸ் சோ் மகா நக்கல் பேர்வழி... குசும்பு பிடித்தவர்.நல்லா நக்கலடிப்பார்...2004ம் ஆண்டு என்று நினைக்கிறேன். கொழும்பில் நடந்த பழையமாணவர் கூட்டத்தின் போது அவரும் வந்திருப்பதாக அறிந்து அங்கு போன போது (21 வருடங்களின் பின் சந்திக்கிறேன் அவரை) டேய் இங்க பாருங்கடா என்னட்ட படித்த ஒரு மொட்டை வருது என்றார் சபையோரிடம் என்னைப் பார்த்தவுடன்.. சபை கொல் என்று சிரிக்கிறது...(அவரின் பட்டப்பெயரும் மொட்டை) நீங்கள் ஏன் சிரிக்கிறீங்கள் என்று தெரியும் என்றார் சபையோரைப் பார்த்து சிரித்தபடியே. பயந்து பயந்து சிரித்தேன், அவருக்கு முன் நின்றபடி. இங்க வாடா என்று தோளில் கைபோட்டு பக்கத்தில் இருத்திக் கொண்டார். மெதுவாய் நடுங்கிக் கொண்டிருந்தது உடம்பு. 21 வருடங்களின் பின்பும் அவர் என்னை பெயர் சொல்லி அழைத்தது இன்னும் தித்திக்கிறது.

அன்று அதிக நேரம் கதைத்துக் கொண்டிருந்தார்,  என்னுடன்.  ஒரு ஆசிரியனாய் நான் தோற்று விட்டேன் என்றார். ஏன் எனக் கேட்டபோது என்னை ஒருவரும் நான் படிப்பித்த பாடங்களுக்காக ஞாபகம் வைத்திருக்கவில்லை எனவும், தான் கொடுத்த அடியாலேயே ஞாபகம் வைத்திருக்கிறார்கள் என்றார். பாவமாய் இருந்தது அவரைப் பார்க்கும் போது.

சேர்.. உங்களின் அடியால் வந்த பக்தியல்ல இது. பல ஆசிரியர்களிடம் இல்லாத பல விடயங்கள் உங்களிடம் உண்டு. உங்களின் ஆளுமையின் வல்லமை பற்றி எத்தனையோ இரவுகள் கண்கள் பனிக்க யோசித்திருந்திருக்கிறேன். நீங்கள் ஆங்கிலம் கற்பிக்கும் அழகும், முறையும் அலாதியானவை. நீங்கள் தோல்வி கண்டவராக இருந்தால் நான் இதை எழுதிக் கொண்டிருப்பேனா.. எனவே ”அச்சம் தவிர்” குருவே

எனக்கும் அவருக்குமான உறவு அடியால் ஏற்பட்டதல்ல, பாடசாலைக்காலத்தில் மொட்டை மொட்டை என நானும் மற்றவர்களுடன் சேர்ந்து திட்டி, அவரின் அடிக்கு பயந்து திரிந்தவன் தான். அவரின் கணிப்பில் நான் மோசமானவானாக இருக்கவில்லை என்றே நினைக்கிறேன். இல்லை என்றால்  தலைமை மாணவர் தலைவராக, நியமித்திருப்பாரா? சில வேளை கள்ளனுக்குப் பொலீஸ் வேலை குடுத்தால் களவு குறையும் என்று நினைத்தாரோ என்னவோ?

மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராக திரு ராஜன் செல்வநாயம் இருந்த காலத்தில் நடந்த ஒரு சுவராசியமான விடயம் இது.

பாடசாலைக்கு ஒரு பெரிய கட்டிடத்தைத் திரு ராஜன் செல்வநாயம் கட்டித் தந்து கொண்டிருக்கிறார். கட்டிட வேலை நடக்கிறது. ஒரு நாள் திடீர் என திரு ராஜன் செல்வநாயம் கட்டிட வேலை நடக்குமிடத்தை பார்க்க வந்தார். அவர் கட்டடம் கட்டும் என்ஜீனியரிடம் போய் ஏதோ கதைத்துக் கொண்டிருப்பது பிரின்ஸ்சேருக்கு தெரிய வர.. அவ்விடம் வந்து சினம் கலந்த குரலில் இது எனது பாடசாலை.. உமது கந்தோரல்ல யாரிடமும் சொல்லாமல் உள்ளே வர என்றார்.
அன்று தான் இரண்டு பெரிய மனிதர்களை கண்டேன்..
ஒருவர் பிரின்ஸ் சேர்... தனது ஆளுமையின் வீரியத்தை காட்டுகிறார்
மற்றவர் திரு ராஜன் செல்வநாயகம் அய்யா
ஐ ஆம் வெரி சொறி சேர் என்று சேரிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறார். (அப்ப அவர் அமைச்சர் என்று நினைக்கிறேன்)
பிறகு இருவரும் கன்டீனில் பிளேன் டீ குடித்தது வேற கதை

இன்னொரு கதை

அதே ராஜன் செல்லநாயகத்தின் மகன் நாம் மாணவர் தலைவர்களாக (சிறப்புத் தளபதி மாதிரி) உலாவந்த காலத்தில் தினமும் இடைவேளையின் போது வெளியில் போய் வருவது தெரியவர மெதுவாய் சேரின் காதில் போட்டு வைத்தேன். அடுத்த நாள் இன்னொருத்தனை வேவு பார்க்க அனுப்பி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார். பிறகு என்னையும், வேவு பார்க்க போனவனயும் (ராஜ்மேனன் என்று நினைக்கிறேன்) அழைத்து
ராஜன் செல்லநாயகத்தின் மகனை அழைத்து வரச் சொல்கிறார். நாமும் அவனை அழைத்து வருகிறோம்..
அவன் வந்தவுடன் அண்ணண்மார் நீ வெளியில போறாய் என்று சொல்கிறார்கள் உண்மையா என்றார்.
அவனோ பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு இல்ல சேர் என்றான்.
சரி நீ போ என்றார் அவனைப் பார்த்து..
அவரின் கந்தோரை விட்டு அவன் போகும் வரை சற்றே பொறுத்தவர்
ராஜன் செல்லநாயகத்தின் மகனை மிகவும் அன்பாக கூப்பிட்டு மிக பாசமாய் அப்பாவை பற்றி, அம்மா பற்றி, அவங்கட புதுக் கார் பற்றியெல்லாம விசாரித்து விட்டு சொன்னார்..
நாளைக்கு நீ வெளியில போகேக்க சப்பாத்து போட்டுட்டு போ.. இல்லாட்டி அப்பா எனக்கு பேசுவார் என்று
ஆகா.. மனிசன் கொக்கி போடுது என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது
இல்ல சேர் நான் சப்பாத்தோட தான் போற நான் என்றான் கள்ளன்.
எம்மை பார்த்து வெற்றிச்சிரிப்பு சிரித்தவர் மெதுவாய் எழும்பி கள்ளனுக்கு ரெண்டு அறை விட்டார்
பிறகு ராஜன் செல்லநாயகத்துக்கு போன் போட்டு உன்ட பெடியன் ஒழுங்கா இருக்காட்டி வெளிய கலைச்சுப்போடுவன் என்றார் ஆங்கிலத்தில்...

எங்களுடன் படித்த ரமேஸ் எதுக்கெடுத்தலும் ஒரு ”டக்” போட்டுத்தான் கதைப்பான்.. டக் எண்டு வாறன். டக் எண்டு போறன். இப்படி ஏகப்பட்ட டக் போடுவான். ஒரு நாள் ஆங்கில வகுப்பு நடக்கிறது... பிரின்ஸ் சேர் ரமேஸ்ஐ எதையோ வாசிக்கச் சொல்ல. ஓம் சேர் டக்கெண்டு வாசிக்கிறன் என்றான்... மனிதர் கரும்பலனையில் duck என்று எழுதி இனி இது தான் உனக்கு பெயர் என்றார். அவன் சொன்ன டக் வேற இந்தாள் சொன்ன டக் வேற.. இப்படி குசும்பு வேலையும் செய்வார்..

எவருக்கும் பயப்படாத மனிதன் அவர்.. மனதுக்குப் பட்டதை நேருக்கு நேர் சொல்பவர். பலர் வாங்கிக் கட்டியிருக்கிறார்கள் அவரிடம் ..

ஒரு முறை ஒரு ஆமி கொமான்டர் யாரையோ தேடி பாடசாலைக்குள் வர மனிசன் ரஜனி ஸ்டைலில் அவரை வழி மறித்து நல்ல பேச்சு குடுத்தார்-- (this is my school மட்டுமே விளங்கியது.. மிச்சத்தை விளங்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.. ஆமி கொமான்டரும் ”சமாவென்ட மாத்தயா” ( மன்னியுங்கள் அய்யா ) சொல்லி தனது வாலைச் சுருட்டிக் கொண்டு வெளியேறினார். பெருமையாய் இருந்தது எனக்கு.

மனிதர் 2004 ம் ஆண்டு சுனாமியின் போது உயிர் தப்பிய விதம் மிகவும் சுவராசியமானது. 2006 ம் ஆண்டு மனிதரை கண்ட போது டேய் உனக்கு தெரியுமா என்ட கார் மட்டும் இ்லையென்றரால் நான் இப்ப ஆலையடிச்சோலையில (மட்டகளப்பின் பொது மயானம்) படுத்திருக்கவேண்டிய ஆள் என்றார்.. புரியாமல் கண்ணைச் சுருக்கிப் பார்த்தேன்..
விளக்கினார்..
அவர் அந் நாட்களில் கடற்கரைக்கருகில் வீடு கட்டி வாழ்ந்திருந்தாராம். 25ம் திகதி தேவாலயத்துக்கு குடும்பத்துடன் காரில் போயிருக்கிறார். கும்பிட்டு, எல்லோரையும் சந்தித்த பின் வீடு திரும்பும் போது கார்
நான் வரமாட்டேன் என்று அடம் பண்ணியிருக்கிறது. தனக்கு தெரிந்த முறையில் காரை திருத்திப் பார்த்தாராம் (நான் சிரித்தேன், அதைக் கண்ட அவரும் சேர்ந்து சிரித்தார்), பிறகு தன்னிடம் படித்த காராஜ் வைத்திருப்பவனை கூப்பிட்டிருக்கிறார். அவரும் தலையை உள்ளுக்குள் விட்டு 2 மனித்தியாலம் திருத்திப் பார்த்தாராம். கார் அசையவில்லையாம். களைத்துப் போய் குடும்பமாய் டவுனுக்குள் எங்கோ தங்கியிருக்கிறார். காலையில் மனிசன் எழும்ப முதல் கடல் அவரின் வீட்டை தன்னுடன் எடுத்துப் போயிருந்ததாம். (அவரின் வீடு இருந்த இடத்தில் தான் சுனாமியால் உயிரிழந்தவர்கன் அதிகம்) பார்த்தாயா என்ட கூஸ்ட காலத்தை என்றார்... குசும்பு கலந்த புன்னகையுடன்

காலப்போக்கில் வாழ்க்கை தந்த பாடங்களினாலும், யதார்த்தம் புரிந்ததாலும் அவரின் செயல்கள் (வேறென்ன அடி தான்) நியாயமானவையாகப் பட அவரின் மேல் இருந்த பயம் பக்தியாய் மாறியிருக்கிறது. எனக்குள் ஆல விருட்டசமாய் நிற்கும் மனிதர்களில் பிரின்ஸ் சேரும் ஒருவர். ஊருக்கு போனால் கட்டாயம் அவரை எட்டிப் பார்ப்பேன்... அன்பாய் சிரித்து கதைத்து வாசல் வரை வந்து வழியனுப்புவார். ஏனோ மனம், கெதியில் இன்னொரு தரம் போய் பார் என சொல்லிக் கொண்டேயிருக்கிறது.

இரண்டு வருடங்களுக்கு முன்னிருக்கும். எனது பெயருக்கு தட்டச்சு (டைப் ரைட்டர்) இயந்திரத்தில் எழுதப்பட்ட ஒரு கடிதம் இலங்கையில் இருந்து வந்திருந்தது. அதை உடைக்க முதலே புரிந்தது கடவுள் கடிதம் போட்டிருக்கிறார் என்று.

அன்றிரவு முழுவதும் வெட்கித் தலைகுனிந்திருந்தேன். நகர மறுத்த பல இரவுகளில் அதுவும் ஒன்று. விடிய விடிய மனச்சாட்சி என்னைக் கொன்று தின்று கொண்டிருந்தது.

My dear Sanjayan என்று தொடங்யிருந்த கடிதத்தில் முதலில் நான் என் குடும்பமும் சுகமாயிருக்க கர்த்தரை வேண்டியிருந்தார். அடுத்து வந்த 3 பக்கங்கள் முதுமையும், தனிமையும் (மனைவி இறந்து பல வருடங்களாகின்றன) அவரின் சுகயீனம், இதய அறுவைச்சிகிச்சை, அதற்காக விற்ற வீடு, சுனாமியில் கரைந்து போன அவரின் வீடு, பென்சன் என்று எத்தனையோ சோகங்களை பகிர்ந்திருந்தார்.

என் மனச்சாட்சி கூரிய கத்தியுடன் என மேல் குந்தியிருந்து குத்திக் கொண்டிருந்தது.
நீயும் மனிதனா என்றது?
அவர் இல்லையென்றால் நீ இப்படி இருப்பாயா என்றது?
அந்த மெழுகுவர்த்தி அணையமுதல் சற்றே சிந்தி என்றது அது.

சிந்தித்து செயல்பட்டாலும் அது அவரின் துயர்ப் பெருங்கடலில் ஒரு சிறு துளியாய் மறைந்து விட்டது என்னுதவி.

எனதன்பு நட்பே!

குரு பிச்சையிடலாம் ஆனால் குரு உன்னிடம் கையேந்துவது இயற்கைக்கு புறம்பானதில்லையா? உன்னிடம் எதையும் நான் கேட்கப் போவதில்லை ஆயினும் உனது மனதுடன் சற்றே உரையாடுவாயா?

கொடியது இளமையில் வறுமை என்பது மட்டுமல்ல, முதுமையில் வறுமையும் கொடியது. அது மிகக் மிகக் கொடியது.

வேதனை என்னவென்றால் முதுமையின் தனிமையில், சுகயீனத்துடன் குறைந்த வருமானத்தில் வாழ்ககையை ஒட்ட அவர் மற்றவர்களில் தங்கியிருக்க வேண்டியிருப்பது தான்.

அவருக்கு பல விதத்திலும் உதவும் அனைத்து நெஞ்சங்களுக்கும் எனது முழந்தாளிட்ட வணக்கங்கள். முக்கியமாக அவரைத் தினமும் ஒரு முறை சென்று அவரின் தேவைகளைக் கவனிக்கும் பெயர், முகம் அறியாத அந்த மனிதம் நிறைந்த மனிதனுக்கு!!
அவன் தான் மனிதன்.

இப்போது தனது 80 களில் குழந்தையாய் அவர்.. இன்னும் எத்தனை காலம் இருக்கிறது ஒரு சரித்திரம் சரித்திரமாவதற்கு?.. அதுவே வாழ்வின் யதார்த்தம் அது கசப்போ, இனிப்போ தவிர்க்க முடியாததாகிறது.


அன்புடன்
”ஓரு சரித்திரத்தின்” மாணவன் என்றும் பெருமையுடன்
சஞ்சயன்.