பிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு விசரன்

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. மறுபுறத்தில் பேசியவர் என்னை அறிந்தவராக இருந்தார். என் நினைவில் அவர் இருக்கவில்லை. இது வழமையான விடயம்தான்.

அண்ணை, வைகாசிமாதம் ஒரு குறும்பட போட்டி இருக்கிறது, நீங்கள் நடுவராக கலந்துகொள்ளவேண்டும் என்றார் அவர். எனக்கும் குறும்படப்போட்டிக்கும் சம்பந்தமில்லையே, ஆளைவிடு ராசா என்றேன். இல்லை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அத்துடன் நீங்கள் மிக நன்றாக விமர்சனம் எழுதுவீர்கள் என்றும், அவற்றை வாசித்த சிலர் என்னை சிபாரிசு செய்ததாகவும், எனது பதிவுகளை பார்த்திருப்பதால் அவருக்கும் என்னில் நம்பிக்கை உண்டு என்றும், நான் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்றும் உரிமை கலந்த அனபுடன் கேட்டுக்கொண்டான். 

நான் ஒரு மாதிரியான ஆள், பிடிக்காததையும் பிடிக்கவில்லை என்று எழுதிவிடுபவன். சமரசம் என்னும் என்னும் சொல்லுடன் எனக்கு அதிகம் சமரசம் இல்லை என்றும் கூறிப்பார்த்தேன். இல்லை சனியனைத்தான் அழைப்பேன் என்று அடம்பிடித்தான். சரி பார்ப்போம் என்றுவிட்டு அத்தோடு அதை மறந்துவிட்டு சில மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தபோது கடந்த திங்கட்கிழமை மீண்டும் தொலைபேசியில் வந்து «அண்ணை, புதன்கிழமை (07.05.2014) இரவு வருவதற்கு ஒழுங்கு செய்கிறேன். சந்திப்போம் என்று கூறி எனது பதிலை எதிர்பார்க்காது தொலைபேசி தொடர்பை துண்டித்தான். 

புதன்கிழமை மாலை பாரீஸ் ஓர்லே விமானநிலையத்தில் வந்திறங்கி திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் நின்றிருந்தேன். ஒரு தமிழர் என்னை நோக்கி வருவது தெரிந்தது. என்னை அழைத்துச் செல்ல வருவதாகக் கூறியவர் அவராக இருக்கலாம், எனவே ஏஜமானனின் கடைக்கண் பார்வைக்காக நிற்கும் நாயின் பார்வையுடன் அவரை பார்த்தபடியே நின்றேன். மனிதர் என்னை திரும்பியும் பார்க்கவில்லை. இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புக்களின் பின் என்னை அழைத்துவர வந்தவர் என்னை தொடர்புகொண்டு எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டார். அடையாளம் சொன்னேன். அசையாதீர்கள், அப்படியே நில்லுங்கள் உங்களைத் தெரிகிறது என்றார். எனக்கு எவரையும் தெரியவில்லை. எனக்கு பின்பக்கமாக வந்து «இதால தானே போனேன் எங்கே போயிருந்தீர்கள்» என்றார், சற்றுமுன் என்னைக் கடந்துபோன மனிதர். சிரித்து சமாளித்தேன். 

பாரீஸ் நகர வாகனநெரிசலை லாவகமாக கடந்தபடியே மனிதர் பேசிக்கொண்டிருந்தார். சற்று முன் வாகனத்தில் ஏறியவுடன் என்னைப்பார்த்து அவர் «நீங்கள் யார்? குறும்படப்போட்டிக்கு நடுவராக அழைக்கப்பட்டவர்களில் உங்கள் பெயரைமட்டும் நான் அறிந்திருக்கவில்லை» என்று மிகவும் அன்பாகத்தான் கேட்டார். என் உள்மனது «பார்த்தாயா, நான் வேண்டாம் வேண்டாம் என்னும்போது, என்னை மீறி வந்த உனக்கு இது வேண்டும் என்று எள்ளளாய் கூறியது. நான் ஒரு பதிவன் என்று தமிழில் சொன்னேன். மனிதர் என்னைப் பார்த்த பார்வை என் மனதைப் பிசைந்தது. ப்ளாக் எழுதுவேன் என்றேன். அப்படியா என்று மனிதர் குஷியாவிட்டார். அப்பாடா தப்பித்தேன் என்றபோது கேட்டாரே ஒரு கேள்வி. «உங்கள் பதிவுலகத்தின் விலாசம் என்ன?». நான் வஞ்சகமே இல்லாமல், விசரன்.blogspot.com என்றேன். அதன்பின் பாரீஸ் லாச்சப்பல் பாரதி கபேயில் என்னை இறக்கிவிடும்வரை மனிதர் வாயே திறக்கவில்லை.

பாரீஸ் நகரின் மையத்தில் அமைந்துள்ள லாச்சப்பல் என்னும் குட்டி யாழ்ப்பாணத்தில் உள்ளே கபே பாரத் உணவகத்தினுள் விழாவிற்கு பொறுப்பானவர் அமர்ந்திருந்தார். அவருடன் குறும்படப்போட்டினை ஒழுங்கமைக்கும் பாரீஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் நின்றிருந்தார்கள். அனைவருடனும் கைகுலுக்கிக்கொண்டேன். «அண்ணை, என்ன சாப்பிடுறீங்கள் என்று கூறியபடியே கோப்பியை மேசையில் வைத்தார் ஒரு பரிசாசகர். «பிறகு சாப்பிடுவோம்» என்று கூறியபோது ஒரு சிறு மனிதர் எங்களுக்கு அருகில் வந்தமர்ந்தார். அனைவரும் அவரின் கையையும் குலுக்கினார்கள். நானும் குலுக்கினேன். அப்போது ஒருவர் « இவர்தான் 5 திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சசி» என்றார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. உடலமைப்புக்கும் சாதனைக்கும் தொடர்பே இல்லை என்பதை மீண்டும் வாழ்க்கை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அவரும் நானும் தனியே இருந்தபோது «நீங்கள் என்ன என்ன படங்களை இயக்கியிருக்கிறீர்கள்?» என்று ஒரு சிறுகேள்வியைத்தான் கேட்டேன். மனிதர் என்ன நினைப்பார் என்பது புரிந்தபோது எனது கேள்வியின் கடைசி வார்த்தை வாயைவிட்டு வெளியே சென்றிருந்தது. வெளியேவிட்ட வார்த்தையை உள்ளே எடுக்கமுடியுமா என்ன? முகத்தை பரிதாபமாக வைத்தபடியே அவரைப்பார்த்தேன். மனிதர் ராஜதந்திரமாக தனது ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. சொல்லாமலே, பூ, டிஷ;யூம், ரோஜாக்கூட்டம், ஐந்து ஐந்து ஐந்து என்றார். «சார், நீங்க என் படங்களை பார்த்திருக்கிறீகளா» என்று ஒரு பெரும்கேள்வியையும் வீசினார். நேற்று என்ன செய்தேன் என்பதே நினைவில் இல்லாத ஒரு அறணை நான். இவர் படங்களை பார்த்திருந்தாலும் இவர் நினைவில் இருக்கமாட்டார் என்பது புரிந்தது. இனியும் பில்ட்அப் கொடுத்தால் ஆபத்து என்பதால் ஐயா! நான் பெரும் மறதிக்காரன். கதையைச் சொல்லுங்கள் நினைவுக்கு வரும் என்றேன். 

லிவிங்ஸ்டன் என்றதும் பாக்கியராஜ் போன்று நடிப்பவரா என்றேன். ம்..அவர் தனது காதலிக்காக நாக்கையே வெட்டி எறிவாரே என்று சொன்னபோது உங்களின ஒரு படமாவது பார்த்திருக்கிறேன் என்று சொன்னேன். அடுத்து பூவின் கதையைச் சொன்னார். அதுவும் பார்த்திருந்தேன். எனக்கு பிடித்தபடம் என்றேன். தனக்கும்தான் என்றார். சற்றுநேரத்தில் நாம் நட்பாகிப்போனோம். எதிர்வரும் 4 – 5 நாட்களில் ஒரு அற்புதமான, தன்னடக்கமான, திரைப்பட துறைசார் நிபுணருடன் நெருங்கிய நட்பு கிடைக்கும் என்று நான் அப்போது நினைக்கவே இல்லை.

இருவரும் மாலையுணவை முடித்தபின் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரின் அறைக்கு எதிரே எனக்கு அறை கிடைத்தது. ஏதும் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள் சஞ்சயன். காலையில் சந்திப்போம், இரவு வணக்கங்கள் என்று கூறி தனது அறைக்குள் புகுந்துகொண்டார். மறூநாள் காலைஉணவிற்காக கபே பாரத் உணவகத்தில் உணவு உண்ணும்போது ஒருவர் வந்தார். அவர் பெயர் கௌதமன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் இலங்கையர். இயக்குனர் சசி, கௌதமன், நான் ஆகியோர் குறும்படப்போட்டிக்காக நடுவர்களாக கடமையாற்றுவுள்ளோம் என்பதை அறிந்துகொண்டேன் சற்றுநேரத்தின் பின் நாம் ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். சில ஆயத்தங்களின் பின் படங்களை தெரிவுசெய்யும் பணி ஆரம்பமாகியது. இதற்கிடையில் கொதமனின் அசையும் ஒளிப்படங்கள் பற்றிய அலாதியாக அறிவு என்னை கவர்ந்திருந்தது. அவர் இலங்கையில் வாழ்ந்திருந்தபோது இங்கிலாந்து திரைப்பட இயக்குனர் ஒருவரிடம் கல்விகற்றிருக்கிறார். ஒரு தொலைக்காட்சிநிலையத்திலும் தொழில்புரிந்திருக்கிறார். இயக்குனர் சசி ஒரு புறம், கௌதமன் ஒரு புறம். இவர்களுடன் ஒரு ஞான சூன்யமான நான். ஏன் என்னை அழைத்தார்கள் என்றே எனக்கு புரியவில்லை. 

குறும்படங்களை நாம் பார்க்கத்தொடங்கும்போது நான் «எனக்கு திரைப்படத்துறையில் சற்றேனும் அனுபவமில்லை, ஆனால் அதிகம் படம்பார்ப்பேன், ஒரு படம் இப்படி இருக்கவேண்டும் என்று சில பல கருத்துக்கள் உண்டு, அவை திரைப்பட இலக்கணத்தினுள் அடங்குமா என்பதும் எனக்குத்தெரியாது எனவே எனது தெரிவுகள், கருத்துக்கள் என்பன இப்படித்தான் இருக்கும் என்று கூறியபோது அனைவரும் அதைத்தான் நாமும் விரும்புகிறோம் என்றார்கள். 

24 குறுந்திரைப்படங்கள். இலங்கை, டென்மார்க், சுவிட்சலாந்து, பிரான்ஸ் ஆகியநாடுகளில் இருந்து வந்திருந்தன. அவற்றை மூன்று பிரிவுகளாய் பிரித்துப்பார்க்கக்கூடயதாய் இருந்து எனக்கு.
  • கலைத்துவமான குறும்படங்கள்
  • மிகச் சிறப்பாக குறும்பட இலக்கணத்தை கையாண்டு, நச் என்று செய்தியை கூறிய குறும்படங்கள்.
  • வாழ்வியலை பேசிய குறும்படங்கள்
குறும்திரைப்படங்களின் தன்மை, அவற்றின் குறுந்திரைப்படமொழி, இலக்கணம், தொழில்நுட்பம், கதை, கதைநகர்த்தல் ஆகியவற்றில் அதீத வேறுபாடு இருந்தது. சில குறும்படங்கள் மிகச் சிறப்பாக சமுதாயச் சீர்கேடுகளை, வேதனைகளை பேசியிருந்தாலும் அத்திரைப்படங்களில் ஏனைய குறும்படங்களில் இருந்த பல சிறப்பம்சங்கள் இல்லாதிருந்ததனால் அவை இறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை. இதற்கு உதாரணமாக «தளும்பு» குறும்படத்தினைக் கூறலாம். ஒரு விடுதலைப்போராளியின் வாழ்க்கைச்சிரமத்தைப் பேசும் கதை அது. 

இன்றையகாலங்களில் போராளிகள், போரின் இறுதிநாட்களை மையமாகவைத்து பல குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத்தயாரிப்பவர்கள் இப்படியான கதைகளை நாம் குறும்படங்களாக எடுத்தால் விருதுகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

குறும்படத்தின் இலக்கணத்தை இவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவது அவசியம். குறும்படத்தின் வெற்றிக்கு கதையின் தன்மைமட்டும் போதாது என்பது எனது கருத்து. கதையின் கருவை எவ்வாறு நாம் திரைக்கதையாக்குகிறோம், படமாக்குகிறோம், இயக்குகிறோம், இசையமைக்கிறோம் என்று பல விடயங்களில் அதன் வெற்றி தங்கியிருக்கிறது. 

வசனமே இல்லாத ஒரு குறுந்திரைப்படமே இம்முறை வெற்றிபெற்றது. வசனம் மட்டுமல்ல, நடிகர்களின் முகங்கள் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்தன அப்படத்தில். அப்படம் நிறவாதத்தை மிக அருமையாக குறுந்திரைப்படத்திற்குரிய மொழியில் கூறியிருந்தது. இயக்குனர் சசி, குறுந்திரைப்பட இயக்குனர்களுடனான உரையாடலின்போது ஒரு குறுந்திரைப்படம் நேரடியாகவே கருத்துக்களைகூறாது, மறைமுகமாக கருத்துக்களை கூறும்போது அக்குறும்படத்தின் கலைத்துவம் மேலும் அழகுபெறுகிறது என்றார். 

அதற்கு உதாரணமாக «வப்பு» என்று 6 விருதுகளைப்பெற்ற திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை அவர் இப்படி வர்ணித்துக்கூறினார். அத்திரைப்படம் கொலையொன்றை செய்த ஒரு மனிதனின் வாழ்வு அழிந்துவிடும் என்னும் மூலக்கதையைக் கூறுகிறது. அப்படத்தின் இறுதிக்காட்சியில் உதிர்ந்துவிட்ட இலைகளின்மேல் கமரா நின்றிருக்க அக்காட்சியின் பின்புலத்தில் படத்தின் நாயகன் நிதானமற்ற நிலையில், மனப்பிறழ்வுடன் நடந்துசெல்வது போகஸ் இல்லாது காட்டப்பட்டிருக்கும். இக் காட்சியில் வாழ்வு அழிந்துவிடும் என்பதை உதிர்ந்த இலைகள் மூலமாகவும், மனப்பிறழ்வுடைய மனிதனை பின்புலத்தில் காட்டுவதன்முலமும் படத்தின் முழுக்கதையையும் ஒரு ஒரு காட்சியில் இயக்குனர் காட்டுகிறார். இப்படியானவையே குறும்படங்களின் உன்னதமான உத்திகள்.

என்னைக் கவர்ந்த இன்னொரு குறுந்திரைப்படம் «பிரதி». தாய் தந்தையரின் பிரதியே குழந்தை என்பதை நச் என்று கூறிய குறுந்திரைப்படம். குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது மக்களின் கரகோசம் படத்தின் கரு பலரையும் சென்றடைந்திருப்பதைக்காட்டியது. ஒரு குழந்தை திருடுவதை தாய் கண்டுபிடிக்கிறாள். தந்தையிடம் திருட்டு அறிவிக்கப்படுகிறது. தந்தை «நீ கோணேசின் மகனா» என்று கூறி அவனை அனுப்பிவிடுகிறார். மறுநாள் அக் குழந்தை மேசையில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறது. தாய் தந்தையிடம் «டாய்லட் பேப்பர் முடிந்துவிட்டது» என்கிறாள். அதற்கு தந்தை «இன்று எனது மேற்பார்வையர் வேலையில் நின்றதால் எடுக்க முடியவில்லை. நாளைக்கு அவன் வரமாட்டான் அப்போது எடுக்கலாம்» என்ற தொனியில் பதில் கூறுவார். குழந்தை இவர்களின் சம்பாசனையைக் கேட்டுக்கொண்டிருக்கும். மிக இலகுவான கரு. பல இடங்களில் நடைபெறும் நிகழ்வு. பெற்றோரே குழந்தைகளின் முன்மாதிரிகள் என்பதை மிக அழகாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் காண்பிக்கிறார்கள். அதிலும் « நீ கோணேசின் மகனா» என்பது நச் என்ற வசனம். இலங்கையில் இருந்து பல சிறந்த, வித்தியாசமான கதையுள்ள குறும்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. புதிய வளமான பாதையில் அமைந்த சிந்தனைகள், முயற்சிகள். பாராட்டப்படவேண்டிய படைப்புக்கள். 

டென்மார்க் படைப்பான «நாம் யார்» சாதீயம் பற்றிப் பேசுகிறது. இயக்குனர் ஒரு இளைஞர். இளைஞர்களிடம் இப்படியான புரட்சிகரமாக கருத்துக்கள் இருப்பது மனதுக்கு இதமாய் இருந்து மட்டுமல்ல பாராட்டப்படவேண்டியது.

 மூன்று நடுவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு பொதுவான எண்ணம் என்றவென்றால், படைப்பாளிகளின் தேடலும், வாசிப்பும், பிறமொழிப்படங்களை பார்க்கும் தன்மையும் மேலும் அதிகரிக்கப்படவேண்டும். அப்போதுதான் பார்வை அகன்று, விசாலமாகும். ஊரையாடல் நிகழ்வின்போது யார் யார் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் என்று கேட்டபோது மிகச் சில கைகளே உயர்ந்தன. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு பல்மொழிப் புலமையும், வேற்றுமொழிப் புத்தகங்களும், இணையமும் ஒரு வரப்பிரசாதம். 

கதைகளுக்கான கருவினை, காட்சிகளை, உரையாடல்களை, மனித உணர்வுளை வாசிப்பின் முலம் நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளலாம். எனவேதான் வாசிப்பு, பிறமொழிப்படங்களை படங்களைப் பார்த்தல் என்பது முக்கியம் என்றேன். சில படங்களில் உள்ள தொழில்நுற்பத்திறமையானது இயக்குனர் சசி அவர்களை அதிசயிக்கவைத்தது. «இவர்களிடம் இவ்வளவு திறமை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை» என்றார். ஒரு முழநீள திரைப்படத்தினை தயாரிக்கும் அளவிற்கு «வப்பு» திரைபடத்தின் கருவும், தொழில் நுட்பதேர்ச்சியும் இருந்தது. கதாநாயகன் என்ற தென்னிந்திய சினிமாவின் பிம்பத்தை உடைத்தெறிந்து கதாநாயகன் என்பவனும் தோல்வியுறலாம் என்பதை கூறும் கதைக்களம் எமக்கு புதிதுதான். இது வளம்மிக்க யாதார்த்தமான சிந்தனை. 

சில திரைப்படங்களில் பாடல்கள் முக்கிய இடத்தைப்பெற்றிருந்தன. பாடல்கள் கதையுடன் பயணிக்கும்போதும், பார்வையாளர்ளின் உணர்வுகளை பற்றிக்கொள்ளும்போதும் பாடல் மீதான கவனம் முக்கியத்துவம்பெறுகிறது. பாடல்கள் திணிக்கப்படுகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தாதவாறு பாடல்கள் அமைக்கப்படவேண்டும். 

பல இளம் இசையமைப்பாளர்கள் குறும்படங்களுக்கு இசையமைத்திருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் கதையின், காட்சியின் அமைப்புக்கு தன்மைக்கு ஏற்ப இசை இருப்பதையே நான் விரும்புவேன். காட்சியின் தன்மையை பார்வையாளனக்கு உணர்த்தி, பார்வையாளனை அக்காட்சியுடன் ஒன்றித்துப்போகவைப்பதே இசையின் நோக்கமாய் இருக்கவேண்டும். தவிர்த்து காட்சிக்கு தொடர்பில்லாத இசையை அமைப்பதும், தனக்கு இருக்கும் இசை பற்றிய மேதாவித்தனத்தை காட்டமுனைவதும் இசையமைப்பு என்னும் பதத்தினுள் அடங்காது என்பது எனது எண்ணம். 

பல சிறப்பான கதையினைக் கொண்ட குறுந்திரைப்படங்கள் டப்பிங் செய்யப்படாது, நேரடி ஒலிப்பதிவில் வெளிவந்திருந்தன. இப்படியான தவறுகள் தவிர்க்கப்படவேண்டும். இக்குறும்படவிழாவில் மிகவும் சர்ச்சைக்கு உட்பட்ட படம் «உபதேசம்» குறும்படத்தின் கதை சர்ச்சையை தோற்றுவிக்கவில்லை. இக்குறும்படத்தின் கதை முகப்புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது என்று பரிசளிப்பு விழாவில் இப்படத்தின் இயக்குனர் கூறியதும், இப்படத்திற்கு சிறந்த கதைக்கான விருது கிடைத்ததுமே சர்ச்சைக்கான காரணம். நடுவர்களாகிய நாம் இப்படத்தின் கதை முகப்புத்தகத்தில் இருந்து எடுக்ப்பட்டது என்பதை அறிந்திருக்கவில்லை. எனவே இத்தவறு நடந்திருக்கிறது என்று இயக்குனர் சசி அறிவித்தபின் சர்ச்சை குறைந்துபோனது. இப்படியான தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்கவேண்டுமாயின், ஒழுங்கமைப்பாளர்கள் சில விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு, குறும்படங்களை போட்டிகளுக்கு அனுப்புவோர் இவ்விதிகளுக்கு கட்டுப்படவேண்டும் என்று அறிவிக்கலாம்.

என் மனதை மிகவும் கவர்ந்தவிடயம் ஒன்றினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். புங்குடுதீவைச்சேர்ந்த பலரை எனக்கு காலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலர் மனதுக்கு நெருக்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் ஊரில் நீர் பற்றாக்குறை என்னும் ஒரே காரணத்திற்காக நாம் எங்கள் ஊரைவிட்டு இலங்கைத்தீவின் பல இடங்களிலும் பரவியிருந்தோம், இப்போது உலகமெங்கும் பரவியிருக்கிறோம் என்று என்னை விமானநிலையத்தில் இருந்து அழைத்துவந்த சஸ்பாநிதி அண்ணண் தெரிவித்தார். 

நீருக்கும் மனிதனுக்குமான போராட்டம் எத்தகையது என்பதை நான் அறிவேன். ஆனால் அப்படியான போராட்டத்தில் ஆரம்பித்த புலப்பெயர்வானது இன்று பாரீஸ் நகரில் உலகத்தமிழர்களுக்காக ஒரு பெரும் குறும்படவிழாவையே வெற்றிகரமாக நடாத்தி கலைஞர்களை ஊக்குவிக்கும் நிலையை எட்டியிருப்பது பாராட்டத்தக்கது மட்டுமல்ல மற்றைய அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. 

இப்படியான போட்டிகளும், அவற்றில் பங்குபெறும் நோக்கோடு தயாரிக்கப்படும் குறும்படங்களும், அவற்றின் காரணமாக முன்நோக்கி நகரும் எம்மவர்களின் வளர்ச்சியும், இப்படியான குறும்படபோட்டிகளினூடாக வளர்ச்சியடைந்த பல சிறப்பான கலைஞர்களையும் ஈழத்தவர்களின் குறும்பட திரைப்பட வரலாற்றில் இன்று காணக்கிடைக்கிறது. அப்படியான ஒரு வளமான சூழலை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டு தமிழர்களுக்கே உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது. 

பிரான்ஸ் நாட்டில் இருந்தே பல சிறப்பான குறும்பட கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் படைப்புக்களே உதாரணம். இப்படியான ஒரு வளமான சூழ்நிலை அமைவதற்கு கலைஞர்களின் ஒற்றுமை இன்றியமையாதது. விட்டுக்கொடுப்புகளும், சமரசங்களும் இன்றியமையாதவை. 

நான் சந்தித்த கலைஞர்களிடம் இவ்வாறன வளமான சிந்தனைகளும், கருத்துக்களும், தேடல்களும் இருப்பதை அவதானித்தேன். மிக முக்கியமாக மாற்றுக்கருத்துகள்ள இலக்கிய ஆளுமைகளுடன் அவர்களால் சாதாரணமாக பழகவும், உரையாடவும் முடிகிறது.பல மூத்த கலைஞர்களிடம் காணப்படாத வளமான அணுகுமுறை இது. வாழ்த்துக்கள். 

எனது வாழ்க்கையில் பல அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நாவலர் திரைப்படவிழா ஒழுங்கமைப்பாளர்களுக்கும், என்னையும் ஒரு நடுவராக அழைத்து பெருமைப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். உங்களைப்போன்ற தன்னலமற்ற பல மனிதர்களாலேயே உலகம் அழகாகிறது. 

நன்றி 

தோழமையுடன் 
சஞ்சயன் நோர்வே

தேசியத்தின் விசுவாசிக்கு ஒரு துரோகியின் பதில்

தேசியத்தின் விசுவாசிக்கு ஒரு துரோகியின் பதில்
நோர்வே ஈழத்தமிழர் அவை உறுப்பினரான திரு. சிவராஜா அவர்கள்,  08.04.2014 அன்று நோர்வே தமிழ்முரசம் வானொலியில் என்னை துரோகி என்று குற்றம்சாட்டியதற்கான எனது பதில்:

சிலரிடம், உதாரணமாக ஒரு மாட்டைப்பற்றி நீ பேசவேண்டும் என்று கூறினால், அவர்களுக்கு மாடுபற்றி அவர்களது பேரறிவு மட்டுப்படுத்தப்பட்டிருப்பின், அவர்கள் மாட்டினை இழுத்துவந்து ஒரு மரத்தில் கட்டியபின் மரத்தைப்பற்றி பேசுவார்கள். கேட்டால் மாடு மரத்தில் கட்டப்பட்டுள்ளது என்பார்கள். இப்படித்தான் இருக்கிறது ஈழத்தமிழர் அவை உறுப்பினரின் உரை.

நோர்வே ஈழத்தமிழர் அவையின் முக்கிய பிரமுகர்கள் இருவர் என்னை பல காலமாக துரோகி என்று வருகின்றனர். இவர்கள் எப்போதும் என்னுடன் நேருக்கு நோ் உரையாடவோ, வாதிக்கவோ வந்ததில்லை. பானையில் இருந்தால்தானே அகப்பையில் வருவதற்கு. இவர்களின் கொள்கைக்கு உடன்படாதவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் தேசியத்தின் துரோகிகளே என்னும் குறுகிய சிந்தனையோட்டத்தில் நீந்திக்கொண்டிருப்பவர்கள் இவர்கள்.

திரு. சிவராசா அவர்கள், அதி புத்திசாலித்தனமாக பிரதேசவாதம் காட்டாமல், என்னைத் தாக்குகிறேன் என்று நினைத்து, அவர் தனது ஆழ்மனத்தில் உள்ள பிரதேசவாதத்தையும், என்மீதான காட்டத்தையும் கக்கியிருப்பது ஒன்றும் ஆச்சர்யமில்லை. இங்கும் பானையில் இருப்பதுதான் அகப்பையில் வந்திருக்கிறது..

உங்களின் வாதங்களை மற்றும் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும்போது உணர்ச்சியின் அடிப்படையில் முன்வைக்காதீர்கள். வலுவான ஆதாரங்களையே சற்றாவது சிந்திக்கும் மனிதர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். கேள்வி கேட்காத காலம் மலையேறிவிட்டது.

சிவராஜா அவர்களே! ஒன்று தெரியுமா உங்களுக்கு? நீங்கள் அங்கம் வகிக்கும் நோர்வே ஈழமக்கள் அவை ஒழுங்குசெய்யும் ”நியாயமான” போரட்டங்களில், உங்களைவிட நானே அதிகம் சமூகமளித்திருக்கிறேன் என்பதை, உங்களுக்கு இணையாக என்னை துரோகி என்று பாராட்டி மகிழும்  மற்றைய  அரசியல்வாதிகள் உங்களுக்கு கூறியிருக்கக்கூடும். முரண்நகை என்னவென்றால் சில நோர்வே ஈழத்தமிழர் அவை அரசியல்வாதிகளைவிடவும் நான் உங்கள் கூட்டங்களில் அதிகம் கலந்துகொண்டிருப்பதே.

எனது படுவான்கரை புத்தகத்தை வாசித்துப்பாருங்கள். தேசியத்துக்கு பாடுபட்ட போராளிகளை, போராட்டத்திற்காக வாழ்க்கையையே அர்ப்பணித்தவர்களை விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்னும் நீங்களும் உங்கள் நண்பர்களும் எவ்வாறு கவனிக்கிறீர்கள், ஆதரவளிக்கிறீர்கள் என்னும் பேருண்மை தெரியவரலாம். உங்கள்  நண்பர்கள் இப்புத்தகத்தை ஓஸ்லோவில் வெளியிடுவதை தடைசெய்ய பெரும்பாடுபட்டார்கள் என்பதையும் அறியத்தருகிறேன்.

அப்புத்தகம் வெளிவந்த பின், போராளிகளை ஆத்மார்த்தமாக நேசிக்கும் அற்புதமான மனிதர்களின் உதவியுடன், 133 மனிதர்களின் வாழ்க்கைய‌ை என்னால் வளமான திசையில் மாற்ற முடிந்திருக்கிறது.

மேற்கூறிய இரண்டு விடயங்களையும் எனது தற்பெருமைக்காக கூறவில்லை. ஏன் கூறினேன் என்பதை இப்பதிவின் இறுதியில் புரிந்துகொள்வீர்கள்.

உங்களது வானொலி உரையில் நீங்கள் முக்கியமாகக் குறிப்பிட்ட விடயம் என்னவென்றால் நான் ‌தமிழ்த் தேசியத்தையும், போராளிகளையும் கேவலப்படுத்துகிறேன், கொச்சைப்படுத்துகிறேன் என்பதாகும். அதற்கு நான் இன்னும் சிலருடன் இணைந்து ஒழுங்குசெய்த நாட்டிய நாடகத்தை காரணமாக முன்வைத்திருந்தீர்கள்.

அந்நாடகத்தின் கரு ”அன்பே சக்தி, அன்பு எதிரியையும் அணைத்துக்கொள்ளும்” என்பதாகும். இன்னொருவிதத்தில் அன்பே சிவம், சக மனிதனையும் உன்னைப்போல் நேசி என்னும் உயர்ந்த கருத்தையே இந்த நாட்டிய நாடகம் பேசுகிறது.

அனால் உங்களின் மித மிஞ்சிய பேரறிவுக்கு அந்த நாட்டிய நாடகத்தின் கருவாகிய ”அன்பே சக்தி, அன்பு எதிரியையும் அணைத்துக்கொள்ளும்” என்னும் கருத்து தேசியத்திற்கு எதிரானது என்று தோன்றுகிறது அப்படித்தானே? அதனால்தானே நான் என்னைத் துரோகி என்றீர்கள்.

அந்த நாட்டிய நாடகத்தில் தீயசக்தி மன்னிக்கப்படுகிறது.

உங்களுக்கு அது தேசியத்திற்கு எதிரானதாகத் தெரிகிறது. இதனால்தான் அந்த நாட்டிய நாடகம் தமிழ்க் குழந்தைகளை கெடுக்கிறது என்றும், அவர்களை தவறான வழியில் வழிநடத்துகிறது என்றும், இந்த நாடகத்திற்கு மேடைஒழுங்குகளை செய்த என்னை துரோகி, ராஜபக்சேயின் எச்சில்நாய் என்றும் பெயரிட்டீர்கள்.

அதாவது, உங்களின் தேசியத்தில் எதிரியை மன்னிப்பது தவறு என்றீர்கள்.

தேசியத் தலைவர் தான் எதிரியை வெற்றிகொண்ட நேரங்களில், மற்றும் தன்னிடம் சரணடைந்த எதி‌ரிகளை மிகுந்த மரியாதையுடன் நடாத்தி, வைத்தியசிகிச்சையளித்து, மன்னித்து,‌ அவர்களின் குடும்பங்களை அழைத்து, அவர்களின் குடும்பத்தவர்களிடம்ஒப்படைத்தி

ருக்கிறார் என்பதை உலகமே அறியும். ஒரு இராணுவச் சிப்பாயின் மனைவி கர்ப்பமாய் இருக்கிறாள் என்பதை அறிந்த அவர், அந்த சிப்பாயை விடுதலைசெய்த உண்மைச் சம்பவமும் இருக்கிறது. அவரும் எதிரியை மன்னித்திருக்கிறார்.

தேசியத்தலைவரின் பெருந்தன்மையான கருத்தையே அந்த நாட்டிய நாடகமும் கூறுகிறது என்பது இப்போது உங்களுக்கு புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

தேசியத்தலைவரின் சிந்தனையை, கருத்தை ஏற்றுக்கொள்ளாத நீங்கள் எவ்வாறு தேசியத்தின் விசுவாசியாக இருக்கமுடியும்?

எனவே நீங்களும் துரோகி என நிறுவவேண்டியிருக்கிறது.  நீங்கள் என்னை விளித்தது போன்று நானும் உங்களை எச்சில்நாய் என்று விளிக்கலாம். ஆனால் நான் உங்களளவுக்கு மலினப்பட விரும்பவில்லை.

நீங்கள் ”தேசியத்தலைவரை தேசியத்தின் துரோகி” என்று கூறுகிறீர்கள் என்று நான் இன்று முகப்புத்தகத்தில் எழுதுவதற்கான முக்கிய காரணங்களில் மேற்கூறியது முக்கியமானது.

நான் உங்களை துரோகி என முகப்புத்தகத்தில் எழுதியதற்கு மேற்கூறியது மட்டுமல்ல காரணம்.

இவ்வாறு பொதுவெளியில் கேவலமாகப் பேசப்பட்டால், அது ஊரெல்லாம் பரவி எவ்வகையான வேதனைகளை, மன உளைச்சல்களை உங்களுக்கும், உங்கள் குழந்தைகளுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் தரும், சமூகம் உங்களை எவ்வாறு நோக்கும் என்பதை நான் அனுபவித்தவன். அதை எனக்கு கற்பித்தது நீங்களும், உங்கள் ஈழத்தமிழர் அவை அரசியல்வாதிகளும்தான்.

நீங்கள் என்னை துரோகி, உளவாளி என்று தூற்றியது மட்டுமல்ல, என்னுடன் பழகும் பெண்களுடன் இணைத்து நீங்கள் பேசியதையும், அது எத்தனை மனிதர்களுக்கு எவ்வளவு மனஉளைச்சலைக் கொடுத்தது, கொடுத்துக்கொண்டிருக்கிறது என்பதையும் நான் நன்கு அறிவேன்.

நீங்களும் உங்கள் நண்பர்களும், உங்களுடன் இணைந்து செயற்பட்டவர்களுடன் கருத்துரீதியாக முரண்பட்டபின் அவர்களை எந்தளவுக்கு கொச்சைப்படுத்தி, அவமானப்படுத்தி, சமூகத்தில் இருந்து ஒதுக்கி, அவர்களின் முகத்தில் உமிழ்ந்திருக்கிறீர்கள் என்பதை சற்றேனும் மனச்சாட்சியுள்ள மனிதர்கள் அனைவருக்கும் புரியும், தெரியும்.

இப்படியான உங்களின்  முறைகேடான செய்கைகள், மற்றையவர்களுக்கு நீங்கள் கொடுத்த மன உளைச்சல்கள், வேதனைகளை நீங்களும் உணர்வுபூர்வமாக உணர்ந்துகொள்ளவேண்டும், இவ்வாறான உங்களின் மலினமான செய்கைகளை உங்கள் குடும்பத்தாரும், மக்களும் உணர்ந்துகொள்ளவேண்டும் என்பதற்காகவே அவ்வாறு நான் எழுதினேன்.

ஆனால், என் நெஞ்சுக்கு மிக நன்றாகத் தெரியும் நீங்கள் துரோகி இல்லை. விலைபோக முடியாத மனிதர் நீங்கள். உங்களின் மக்கள் மீதான கரிசனம் உண்மையானது. உங்களைப் போன்றவர்களினாலேயே எங்கள் போராட்டத்தின் தீபம் அணையாது இருக்கிறது. இது நீங்கள் சார்ந்திருக்கும் கொள்கையுடைவர்களுக்கும் பொருந்தும்.

உங்கள் கருத்துடன் உடன்படாதவர்கள் , மாற்றுக்கருத்துடையவர்கள் அனைவரும் துரோகிகள், எச்சில் நாய்கள், பெண்பித்தர்கள் என்று வசைபாடுவதை இனியாவது நிறுத்துவீர்கள் என்று நம்புகிறேன்.

உங்களைப்போன்று நாமும் எம்மக்களை நேசிக்கும் மனிதர்களே. நாம் எம்மால் முடிந்தவகையில், எமது சிந்தனைகளின் வழிகாட்டலில், எம் மக்களுக்காக இயங்குகிறோம். நாமும், எமக்கான விடுதலையை விரும்பும் உங்களைப்போன்ற உண்மையான விசுவாசிகளே. எமது இலக்கு ஒன்று. நாம் பயணிக்கும் பாதைகள் மட்டுமே வேறுபட்டவை. பாதைகள் வேறு என்பதன் அர்த்தம் எதிரியுடன் சல்லாபிக்கிறோம் என்பதல்ல. எங்கள் கொள்கைகள், சிந்தனைகள் வேறுபட்டவை என்பதற்காக நீங்கள் எங்களை துரோகிகள், எச்சில் நாய்கள், பெண்பித்தர்கள் என்பது எப்படி நியாயமாகும்?

இனியாவது மாற்றுக் கருத்தாளர்களுடன் கருத்தியல் ரீதியாக உரையாட, வாதிட கற்றுக்கொள்ளுங்கள். பொதுவெளியில் நியாயமான முறையில் ஒரு சகமனிதனுடன் பேசமுடியாதளவுக்கு நாம் என்ன பரம எதிரிகளா? ஒரு குறிக்கோளுக்காக செயற்படுபவர்கள், ஒரே இனத்தவர். நாமே நம்மை எதிரிகளாகப் பார்த்துக்கொண்டும், வசையாடிக்கொண்டும், மனங்களை ரணப்படுத்திக்கொள்வதாலும் எதிரியே எம்மை வென்றுகொண்டிருக்கிறான் என்பதை நாம் எப்பொது உணர்ந்துகொள்ளப்போகிறோம்?

உங்கள் கையில் மக்களமைப்புக்களும், ஊடகங்களும் இருக்கிறன என்பதற்காக எதையும் பேசலாம், எப்படியும் பேசலாம், எவரையும் வசைபாடலாம் என்னும் எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். உங்களின் நியாயமற்ற செய்கைகளும், வசைபாடல்களும் வெளியே தெரியவரும்போது, உங்களை, உங்கள் மக்கள்அமைப்புக்களை, உங்களது ஊடகங்களை மக்கள் புறக்கணிக்கத் தொடங்குவார்கள் என்பதையும் புரிந்துகொள்ளுங்கள்.

2009ம் ஆண்டுக்கு முன்னிருந்த எங்கள் பலம் இன்று நோர்வேயில் சிதறிப்போயிருப்பதற்கு என்ன காரணம் என்பது உங்களுக்கு இப்போதாவது புரிந்திருந்தால் மகிழ்ச்சி.

என்றோ ஒரு நாள் வாசித்த ஒரு கவிதையின் சில வரிகள் நினைவிற்கு வருகின்றது


ஒளி நிறைந்த சூரியனை நோக்கி
எல்லா உயிரினங்களும் கையசைத்து மகிழும்போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளிவெறுப்பு?இவ்வண்ணம்

நாம் மீண்டும் தோழர்களாவோம் என்ற அதீத நம்பிக்கையுடன்
சஞ்சயன்

குறும்பட விழாவும் தொலைபேசித் திருடர்களும் ஒரு போத்தல் Remy Martin ம்

உலக சரித்திரத்தில் முக்கிய இடம்பெற்ற, பல நாடுகளை தன் காலனித்துவத்தில் வைத்திருந்த, ஐரோப்பிய நாடு ஒன்றில் நடைபெறும் தமிழர்களின் குறும்படவிழா ஒன்றிற்கு என்னை நடுவர்களில் ஒருவராக அழைத்திருக்கிறார்கள். (ஏன் அழைத்தார்கள் என்று நானே குழம்பிப்போயிருக்கிறேன்).

எனக்கு தமிழில் ஓரளவு வார்த்தைகள் தெரியும். சிங்களமும் அப்படியே. எனது ஆங்கிலப் புலமை சராசரியானது. நோர்வேஜியப் புலமை சற்று  உண்டு. எனவே டெனிஸ், சுவீடிஸ் மொழிகள் சற்று புரியும். மலையாளப் படங்கள் பார்ப்பதால் (அவ்வ்) சில சொற்கள் புரியும். பல புரிவதுபோன்று இருக்கும்.

இன்று நான் வந்திருக்கும் இந்த நாட்டு மொழியில் எனக்கு இரண்டே இரண்டு சொற்கள் மட்டுமே தெரியும். ஒன்று ”ஓம்” மற்றையது ”நன்றி”. இது நான் ஒரு ஹோட்டலில் வேலை செய்தபோது கற்றுக்கொண்டது.

இன்று மாலை ஒஸ்லோவில் இருந்து புறப்பட்ட விமானத்தில் உட்கார்ந்திருந்தப‌டியே தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தபோது ஒரு வயதான தமிழ் மூதாட்டி ஒருவர் ”தம்பி  ”.... ” க்கோ போகிறாய்?” என்றார். ”ஓம்” என்றேன்.

”தம்பி ”...” அங்க டெலிபோன கவனமா வைத்திரு. கள்ளன்கள் அதிகம். எடுத்துக்கொண்டு ஓடுவார்கள்” என்றார். அதன்பின் ஒரு வாசகம் எழுதிய துண்டு ஒன்றைக் காட்டி ”இதை எங்கே வாங்கலாம்” என்றார். அதில் அழகான கையெழுத்தில் ”Remy Martin" என்று இருந்தது.

பாட்டி நம்ம ஜாதி என்று நினைத்தபடியே ”உங்களுக்கா” என்றேன் அர்த்தமான புன்னகையுடன்.
”இல்லை, மகளின் மகள் சாமத்தியப்பட்டுட்டாள்” என்றார்.
”அப்ப அவளுக்கா” என்றேன் அளவற்ற ஆச்சர்யத்துடன்.
”தெரியாது, மருமகன் கட்டாயமாக, மறக்காமல் வாங்கிவரச்சொன்னார்” என்றார்.
”பாட்டியம்மா, மருமகன் நல்லா வருவார்” என்று கூற நினைத்தேன்.  என்றாலும் அடக்கிக்கொண்டேன்.

குறிப்பிட்ட அந்த நகரத்தை விமானம் வந்தடைந்தது. காலநிலை 17 பாகையாக இருக்கும் என்றார் விமானி. விமானத்தில் இருந்து இறங்கி வெளியே வந்தபோது  வாய்க்குள் நுளையமறுத்த பெயருடன் ஒருவர் என்னை தமிழர்களின் கடைகள் அதிகமுள்ள ஒரு தெருவுக்கு அழைத்துப்போனார்.

அங்கு மீசைக்கார கவிஞனின் பெயருடைய ஒரு உணவகத்தினுள் என்னை அழைத்துச் சென்றார். ஒரு மூலைக்குள் பலர் உட்கார்ந்திருந்தனர். என்னைக் கண்டதும் அனைவரும் எழுந்து கையைக் குலுக்கினார்கள். நானும் அவர்களின் கையைக் குலுக்கினேன்.

அவர்களில் இருவர், நோர்வேயில் நான் தினமும் உணவு உண்ணும் உணவகத்தின் உரிமையாளரின் நெருங்கிய உறவினர்கள் என்று அறியக்கிடைத்தது. அவர்களின் முகச்சாயலும், நிறமும் அதை உறுதிசெய்தது. அந்த உறவினர்களும்  சாப்பாட்டுக்கடை வைத்திருக்கிறார்கள்.

சற்று நேரத்தில் உயரம் சற்றுக் குறைந்த மனிதரொருவர் வந்தார். அனைவரும் மீண்டும் எழுந்து கையைக் குலுக்கினார்கள்.  நானும்  ‌கையைக் குலுக்கினேன். தனது பெயர் சசி என்றார். நான் சஞ்சயன் என்றேன். அப்போது ஒருவர் என்னைப் பார்த்து ”இவர்தான்   சொல்லாமலே, ரோஜாக் கூட்டம், பூ, ஐந்து ஐந்து ஐந்து  என்ற தென்னிந்தயப் படங்களின் இயக்குனர் சசி என்றார். மலைப்பாக இருந்தது மனிதரின் தன்னடக்கத்தைப்பார்த்தபோது. மனிதரையும் எனக்கு மிகவும் பிடித்துக்கொண்டது. நாம் நட்பாகிப்போனோம்.

இருள் அந்த நகரத்தை சுழ்ந்துகொண்டபோது. நாம் தங்கவேண்டிய விடுதிக்கு எம்மை அழைத்துச்சென்றவர் ”அண்ணை கவனம். தொலைபேசிகளை கவமாக வைத்திருங்கள்” என்றார். எனக்கு விமானத்தில் சந்தித்த பாட்டியம்மா நினைவில் வந்தார். அது மட்டுமல்ல அவரின் மருமகன் இப்போது Remy Martin  உடன் மித மிஞ்சிய மகிழ்ச்சியில் மிதந்துகொண்டிருப்பார் என்றும் நினைத்துக்கொண்டேன்.

எம்மை அழைத்துவந்தவர், இயக்குனர் சசிக்கும், எனக்கும் இரண்டுநாட்கள் ஊர்சுற்ற அனுமதி உண்டு என்றிருக்கிறார். இங்கிலாந்து இளவரசி கேட் அம்மையாரின் மாமியார் தனது இரகசியக் காதலனுடன் நடந்து திரிந்த இந்த நகரத்து வீதிகளிலும், மாவீரன் அலெக்சான்டர் குதிரையில் பாய்ந்தோடிய இந்த நகரத்தின் வீதிகளிலும், நானும் இயக்குனர் சசியும் நடந்துதிரியவேண்டும் என்று விதி எழுதியிருக்கிறது. அது வரவேற்கத்தக்கது, இளவரசி கேட் அம்மையாரின் மாமிக்கு இந்த நகரத்தில் நடந்த கதி எனக்கு நடக்காதவரை.

பி.கு: இயக்குனர் சசியின் ஒரு படத்தையும் நான் இதுவரை பார்க்கவில்லை. எனவே இரவோடு இரவாக சில படங்களை பார்க்கவேண்டியிருக்கிறது. சசியிடம் இதுபற்றி வாய் திறவாதிருப்பீர்களாக.A Gun & a ring திரைப்படத்தின் விமர்சனம் மீதான எதிர்வினை

www.nortamil.no  இணையத்தளத்தில் வெளியாகிய ” நண்பர்” என்பவரது ”A Gun & a ring” திரைப்படத்தின் விமர்சனம் மீதான எதிர்வினை.
------------------------------------------------------------------------------------------நண்பன் என்ற பெயரில் முகம்காட்ட விரும்பாது விமர்சனம்வைக்கும் நண்பருக்கு!

சமூகம், கலைகள் மீதான விமர்சனங்கள்பற்றி பேசுபவர்கள் உண்மையான முகத்தை காட்டமறுப்பதில் எனக்கு ஏற்பில்லை.

அதுவும் ஒரு திரைப்படத்திற்கான விமர்சனத்திற்கே முகத்திரை தேவைப்படுகிறது என்பதும், விமர்சனம் எழுதப்பட்டிருக்கும் விதமும் விமர்சனத்தின் மீதான உள்நோக்கத்தை சந்தேகத்துக்குட்படுத்துகிறது. கருத்துக்கூற விழைபவர்களும், படைப்பாளிகள் பொதுவெளியில் முகம் காட்டி பேசவும் தயங்குவதும் ஒருவித அகமுரணுடைய கோழைத்தனம். இருப்பினும் அது அவரவர்களின் விருத்திநிலைகளின் வெளிப்பாடு என்பதையும், அது அவர்களின் தனிப்பட்ட உரிமை என்பதையும் நான் ஏற்றுக்கொண்டேயாகவேண்டும்.


எமது சமுதாயத்தில் சில படைப்பாளிகளின் படைப்புக்கள்  பொதுவெளியில் அங்கிகரிக்கப்படாத /  கடுமையாக விமர்சிக்கப்பட்ட நிலையில் அப் படைப்பாளிகள் மற்றைய படைப்புக்களை ஒருவித காழ்ப்புணர்ச்சியுடன் பார்க்கும் நிலையுள்ளது என்பதையும்  மறைப்பதற்கில்லை. இதுவும் ஒருவிதத்தில் சுயவிமர்சன மறுப்புச்சிந்தனையே.


புலம்பெயர் ஈழத்தமிழர்களின் குறுகிய திரைப்படத்துறை வரலாற்றில் ”மோதிரமும் துவக்கும்” முக்கிய இடத்தைப்பெற்றிருக்கிறது என்பது எனது கருத்து. காரணம் படத்தின் காட்டப்பட்டிருக்கும் கதை நகர்த்தும் உத்தி. 

5 குறும்படங்களின் கதை என்றிருந்தீர்கள். அந்த 5 குறும்படங்களையும் இணைத்து கதையை நகர்த்திய உத்தியை தென்னிந்தியப்படங்களிலோ அல்லது இலங்கைப்படங்களியோ நான் கண்டதில்லை. மம்முட்டி நடித்த பாலேறி மாணிக்கம் என்னும் மலையாளப்படத்திலும் கதை நகர்த்தும் உத்தி சிறப்பாக இருக்கும். அப் படத்தில், கடந்துபோன காலத்தினுள் ஒருவர் செல்வதுபோலவும், இறந்தகாலமும், நிகழ்காலமும் ஒரேகாட்சியில் அமையப்பெயற்றிருப்பதுபோலவும் காட்சிகள் அமைந்திருக்கும். ஆனால்  துவக்கும் மோதிரத்திலும் படத்தில் உள்ள லாவகம் மற்றும் உள்ளக விறுவிறுப்பும் பாலேறி மாணிக்கத்தில் இல்லை. எனவேதான் எனக்கு துவக்கும் மோதிரமும் பிடித்திருக்கிறது.


இத்திரைப்படம் முழுமையானது என்று நான் கூறவில்லை. படத்தில் பலவீனங்கள் இருக்கின்றன. ஆனால் புலம்பெயர் தமிழர்களின் குறுகிய ‌திரைப்பட வரலாற்றில்  எம்மவர்கள் இப்படியான தரமான படங்களை இயக்குவது எம்மிடமும் அசாத்திய திறமை உண்டு என்பதை காட்டுகிறது. அது பாராட்டப்படவேண்டியது. 

படத்தின் கதையில் உள்ள யதார்த்தநிலைமீது கேள்வியெழுப்பியிருக்கிறீர்கள். உண்மைதான் சில யதார்த்தநிலைத்தவறுகள் உண்டுதான். ஆனால் நீங்கள் கொண்டாட விரும்பும் வியாபாரத்தில் வெற்றியளித்த தென்னிந்தியப்படங்களில் உள்ள யதார்த்தநிலைத் தவறுகளில் ஒரு 5 - 10 வீதமே இப்படத்தில் உண்டு. ஒரு கிளைக்கதையின் சில காட்சிகளைமட்டுமே அடிப்படையாகவைத்து முழுப்படத்தையும் கேள்விக்குறியாக்குவது ஆச்சர்யமாக இருக்கிறது.


தவிர இப்படத்தில், நடிகர்களின் தொழில்சார் திறமை (நடிப்பையே தொழிலாகக் கொண்டவர்கள் அல்லர்), படத்தின் பட்ஜெட்,  படத்தின் செயற்பாடடுகளை நெறிப்படுத்தியோரின் அனுபவம், படம் தயாரிக்கப்பட்ட காலம் (இரண்டு மூன்று வாரங்கள்) என்று நாம் பலதையும்நோக்குவோம் எனின் இப்படம் கொண்டாடப்படவேண்டியபடம் என்பது புரியும்.

 
எம்மவர்களில் பலர் முக்கியமான இளைஞர்கள் புலம்பெயர்  ஈழத்தமிழ் சினிமாவின் ஆரம்பகால பாதையை வடிவமைத்துக்கொண்டிருக்கிறார்
கள். அவர்களில் லெனின், அவதாரம் இளைஞர்கள் என்று குறிப்பிட்டு கூறக்கூடியவர்கள் இருக்கிறார்கள். ஏன் நோர்வேயிலும் வித்தியாசமான குறும்படங்களை இயக்கி உலகளவில் பேசப்பட்ட இளைஞர்கள் இருக்கிறார்கள்.

இப்படியான வித்தியாசமான சிந்தனைகளே வளமானதோர் பாதையை எமக்குத்தரும் என்பது எனது கருத்து. வளமான, விருத்திநிைலையைக்கு இட்டுச்செல்லும் கதைகளும், உத்திகளும், தொழில்நுட்பங்களும் உள்ளடங்கிய பாதையில் பயணிக்கும்போது மட்டுமே எம்மாலும் தரமான திரைப்படங்களை தரமுடியும்.


வித்தியாசமாய் சிந்திக்கும், மேற்கூறப்பட்ட இளையோர்களுடன் ஒப்பிடும்போது, தென்னிந்திய சினிமாவின் பாதிப்பில் கதாநாயகியின் மார்பையும், குட்டைப்பாடையையும், அவற்றிற்குள்ளால் கமராவை அலையவிடுவதை ‌யே ”கலை” என நினைப்பதும், காலத்திற்கு ஒவ்வாத கதைகளை, உத்திகளை, உரைநடைகளை, நகைச்சுவையின் அடிப்படை வடிவங்களை அறியாத நகைச்சுவைகளை படமாக்குவதும், புதிய சிந்தனையற்ற முயற்சிகளை அடிப்படையாகக்கொள்வதும், புலம்பெயர் தேசங்களில் தமக்கு மட்டும்தான் கலைவசப்பட்டிருக்கிறது என்று எண்ணும் அதீத புத்திஜீவிகளால் வளமானதோர் பாதையை ஒருபோதும் எம் சமுகத்திற்கு தரமுடியாது என்பதும் எனது  கருத்து. இப்படியானவர்களால் இன்றைய இளைஞர்களின் படைப்புக்களுக்கு போட்டியாக அல்லது உலக புலம்பெயர் அரங்கில் ஒரு சிறுபடைப்பையும் இன்றுவரை முன்வைக்கமுடியவில்லை என்பது மிகமுக்கியமாகக் குறிப்பிடத்தக்கது.

கடந்த ஓராண்டுக்குள் நோர்வேயில் வெளியிடப்பட்ட சில புலம்பெயர் தமிழர்களின் திரைப்பட முயற்சிகளையும் மேற்கூறிய எனது கருத்துக்கு உதாரணமாகக் கூறலாம். அவற்றுடன் ”துவக்கம் மோதிரமும்” திரைப்படத்தை ஒப்பிடவே முடியாது. மலையும் மடுவையும் ஒப்பிடமுடியுமா என்ன?


நோர்வேயில் காண்பிக்கப்பட்ட ஒரு காட்சியில் மிகச் சிலரே உட்கார்ந்திருந்ததை அடிப்படையாகவைத்து உலகெங்கும் அப்படியே என்று நினைப்பதும், இப் படத்தினைப்பற்றி ஊடகங்கள்  ஏனைய விமர்சகர்கள் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதையும் நீங்கள் ஆராய்ந்து பார்க்க முயலவில்லை அல்லது விரும்பவில்லை என்றே எண்ணத்தோன்றுகிறது.


இத்துடன் ”துவக்கும் மோதிரமும்”  பற்றிய சில விமர்சனங்களை / தகவல்களை கீழே இணைத்துள்ளேன்.  கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளில் அரங்கம் நிறைந்து பல காட்சிகள் காட்டப்பட்டுள்ளன என்பதை இணையச் செய்திகள் கூறுகின்றன என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.


இறுதியாக:


அண்மையில் அ. யேசுராசா எழுதியுள்ள சினிமா சம்பந்தமான கட்டுரைகள் வாசிக்கக் கிடைத்தன.

அதிலிருந்து ஒரே ஒரு வரி...

இந்த நூற்றாண்டின் மாபெரும் கலாசாரப்படுகொலையே தமிழ்த் திரைப்படங்கள்தாம்
- லெஸ்ரர் ஜேம்ஸ் பீரிஸ்


இப்படியானதொரு அவப்பெயர் புலம்பெயர் தமிழ்ச் சினிமாக்களுக்கு கிடைக்காதிருக்கவேண்டுமாயின் நாம் சற்றாவது வித்தியாசமாக சிந்திக்கவேண்டும். அவ்வாறு சிந்திப்பவர்களை கொண்டாடவேண்டும்.

இணைப்புக்கள்:

சோபா சக்தியின் விமர்சனம்:  http://www.shobasakthi.com/shobasakthi/?p=1115

 

யமுனா ராஜேந்திரனின் விமர்சனம்: http://www.geotamil.com/pathivukalnew/index.php?option=com_content&view=article&id=2003%3A2014-03-06-23-45-11&catid=55%3A2013-08-30-03-06-41
 

ரயாகரனின் விமர்சனம்: http://ndpfront.com/tamil/index.php/articles/articles/rayakaran/2227-gun-ring?fb_action_ids=10152148996292661&fb_action_types=og.likes&fb_source=aggregation&fb_aggregation_id=288381481237582
 

ரமணணின் விமர்சனம்: http://www.ramanansblog.com/2013/09/gun-and-ring.html

அவுஸ்திரேலிய தமிழரும் பிரபல பதிவருமான கானா பிரபாவின் 01.12.2013 அன்றான முகப்பத்தக நிலைத்தகவலை பார்ப்பீர்களாயின் அவரது விமர்சனத்தைக் காணலாம்

ஏனைய இணைப்புக்கள்.
http://www.tamilguardian.com/article.asp?articleid=10062&utm_source=twitterfeed&utm_medium=twitter
http://www.vanakkamlondon.com/mn-230214/