பிரான்ஸ் நாட்டு தமிழ் குறுந்திரைப்பட விழாவில் ஒரு விசரன்

சில மாதங்களுக்கு முன்பு எனக்கு வெளிநாட்டு இலக்கத்தில் இருந்து ஒரு தொலைபேசி அழைப்புவந்தது. மறுபுறத்தில் பேசியவர் என்னை அறிந்தவராக இருந்தார். என் நினைவில் அவர் இருக்கவில்லை. இது வழமையான விடயம்தான்.

அண்ணை, வைகாசிமாதம் ஒரு குறும்பட போட்டி இருக்கிறது, நீங்கள் நடுவராக கலந்துகொள்ளவேண்டும் என்றார் அவர். எனக்கும் குறும்படப்போட்டிக்கும் சம்பந்தமில்லையே, ஆளைவிடு ராசா என்றேன். இல்லை நீங்கள் கட்டாயம் வரவேண்டும் என்று அடம்பிடித்தான். அத்துடன் நீங்கள் மிக நன்றாக விமர்சனம் எழுதுவீர்கள் என்றும், அவற்றை வாசித்த சிலர் என்னை சிபாரிசு செய்ததாகவும், எனது பதிவுகளை பார்த்திருப்பதால் அவருக்கும் என்னில் நம்பிக்கை உண்டு என்றும், நான் கட்டாயம் கலந்துகொள்ளவேண்டும் என்றும் உரிமை கலந்த அனபுடன் கேட்டுக்கொண்டான். 

நான் ஒரு மாதிரியான ஆள், பிடிக்காததையும் பிடிக்கவில்லை என்று எழுதிவிடுபவன். சமரசம் என்னும் என்னும் சொல்லுடன் எனக்கு அதிகம் சமரசம் இல்லை என்றும் கூறிப்பார்த்தேன். இல்லை சனியனைத்தான் அழைப்பேன் என்று அடம்பிடித்தான். சரி பார்ப்போம் என்றுவிட்டு அத்தோடு அதை மறந்துவிட்டு சில மாதங்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்திருந்தபோது கடந்த திங்கட்கிழமை மீண்டும் தொலைபேசியில் வந்து «அண்ணை, புதன்கிழமை (07.05.2014) இரவு வருவதற்கு ஒழுங்கு செய்கிறேன். சந்திப்போம் என்று கூறி எனது பதிலை எதிர்பார்க்காது தொலைபேசி தொடர்பை துண்டித்தான். 

புதன்கிழமை மாலை பாரீஸ் ஓர்லே விமானநிலையத்தில் வந்திறங்கி திருவிழாவில் தொலைந்த குழந்தைபோல் நின்றிருந்தேன். ஒரு தமிழர் என்னை நோக்கி வருவது தெரிந்தது. என்னை அழைத்துச் செல்ல வருவதாகக் கூறியவர் அவராக இருக்கலாம், எனவே ஏஜமானனின் கடைக்கண் பார்வைக்காக நிற்கும் நாயின் பார்வையுடன் அவரை பார்த்தபடியே நின்றேன். மனிதர் என்னை திரும்பியும் பார்க்கவில்லை. இரண்டு மூன்று தொலைபேசி அழைப்புக்களின் பின் என்னை அழைத்துவர வந்தவர் என்னை தொடர்புகொண்டு எங்கே நிற்கிறீர்கள் என்று கேட்டார். அடையாளம் சொன்னேன். அசையாதீர்கள், அப்படியே நில்லுங்கள் உங்களைத் தெரிகிறது என்றார். எனக்கு எவரையும் தெரியவில்லை. எனக்கு பின்பக்கமாக வந்து «இதால தானே போனேன் எங்கே போயிருந்தீர்கள்» என்றார், சற்றுமுன் என்னைக் கடந்துபோன மனிதர். சிரித்து சமாளித்தேன். 

பாரீஸ் நகர வாகனநெரிசலை லாவகமாக கடந்தபடியே மனிதர் பேசிக்கொண்டிருந்தார். சற்று முன் வாகனத்தில் ஏறியவுடன் என்னைப்பார்த்து அவர் «நீங்கள் யார்? குறும்படப்போட்டிக்கு நடுவராக அழைக்கப்பட்டவர்களில் உங்கள் பெயரைமட்டும் நான் அறிந்திருக்கவில்லை» என்று மிகவும் அன்பாகத்தான் கேட்டார். என் உள்மனது «பார்த்தாயா, நான் வேண்டாம் வேண்டாம் என்னும்போது, என்னை மீறி வந்த உனக்கு இது வேண்டும் என்று எள்ளளாய் கூறியது. நான் ஒரு பதிவன் என்று தமிழில் சொன்னேன். மனிதர் என்னைப் பார்த்த பார்வை என் மனதைப் பிசைந்தது. ப்ளாக் எழுதுவேன் என்றேன். அப்படியா என்று மனிதர் குஷியாவிட்டார். அப்பாடா தப்பித்தேன் என்றபோது கேட்டாரே ஒரு கேள்வி. «உங்கள் பதிவுலகத்தின் விலாசம் என்ன?». நான் வஞ்சகமே இல்லாமல், விசரன்.blogspot.com என்றேன். அதன்பின் பாரீஸ் லாச்சப்பல் பாரதி கபேயில் என்னை இறக்கிவிடும்வரை மனிதர் வாயே திறக்கவில்லை.

பாரீஸ் நகரின் மையத்தில் அமைந்துள்ள லாச்சப்பல் என்னும் குட்டி யாழ்ப்பாணத்தில் உள்ளே கபே பாரத் உணவகத்தினுள் விழாவிற்கு பொறுப்பானவர் அமர்ந்திருந்தார். அவருடன் குறும்படப்போட்டினை ஒழுங்கமைக்கும் பாரீஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றிய நிர்வாக உறுப்பினர்கள் நின்றிருந்தார்கள். அனைவருடனும் கைகுலுக்கிக்கொண்டேன். «அண்ணை, என்ன சாப்பிடுறீங்கள் என்று கூறியபடியே கோப்பியை மேசையில் வைத்தார் ஒரு பரிசாசகர். «பிறகு சாப்பிடுவோம்» என்று கூறியபோது ஒரு சிறு மனிதர் எங்களுக்கு அருகில் வந்தமர்ந்தார். அனைவரும் அவரின் கையையும் குலுக்கினார்கள். நானும் குலுக்கினேன். அப்போது ஒருவர் « இவர்தான் 5 திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் சசி» என்றார். எனக்கு ஆச்சர்யம் தாங்கவில்லை. உடலமைப்புக்கும் சாதனைக்கும் தொடர்பே இல்லை என்பதை மீண்டும் வாழ்க்கை எனக்கு உணர்த்திக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அவரும் நானும் தனியே இருந்தபோது «நீங்கள் என்ன என்ன படங்களை இயக்கியிருக்கிறீர்கள்?» என்று ஒரு சிறுகேள்வியைத்தான் கேட்டேன். மனிதர் என்ன நினைப்பார் என்பது புரிந்தபோது எனது கேள்வியின் கடைசி வார்த்தை வாயைவிட்டு வெளியே சென்றிருந்தது. வெளியேவிட்ட வார்த்தையை உள்ளே எடுக்கமுடியுமா என்ன? முகத்தை பரிதாபமாக வைத்தபடியே அவரைப்பார்த்தேன். மனிதர் ராஜதந்திரமாக தனது ஏமாற்றத்தை மறைத்துக்கொண்டிருப்பது புரிந்தது. சொல்லாமலே, பூ, டிஷ;யூம், ரோஜாக்கூட்டம், ஐந்து ஐந்து ஐந்து என்றார். «சார், நீங்க என் படங்களை பார்த்திருக்கிறீகளா» என்று ஒரு பெரும்கேள்வியையும் வீசினார். நேற்று என்ன செய்தேன் என்பதே நினைவில் இல்லாத ஒரு அறணை நான். இவர் படங்களை பார்த்திருந்தாலும் இவர் நினைவில் இருக்கமாட்டார் என்பது புரிந்தது. இனியும் பில்ட்அப் கொடுத்தால் ஆபத்து என்பதால் ஐயா! நான் பெரும் மறதிக்காரன். கதையைச் சொல்லுங்கள் நினைவுக்கு வரும் என்றேன். 

லிவிங்ஸ்டன் என்றதும் பாக்கியராஜ் போன்று நடிப்பவரா என்றேன். ம்..அவர் தனது காதலிக்காக நாக்கையே வெட்டி எறிவாரே என்று சொன்னபோது உங்களின ஒரு படமாவது பார்த்திருக்கிறேன் என்று சொன்னேன். அடுத்து பூவின் கதையைச் சொன்னார். அதுவும் பார்த்திருந்தேன். எனக்கு பிடித்தபடம் என்றேன். தனக்கும்தான் என்றார். சற்றுநேரத்தில் நாம் நட்பாகிப்போனோம். எதிர்வரும் 4 – 5 நாட்களில் ஒரு அற்புதமான, தன்னடக்கமான, திரைப்பட துறைசார் நிபுணருடன் நெருங்கிய நட்பு கிடைக்கும் என்று நான் அப்போது நினைக்கவே இல்லை.

இருவரும் மாலையுணவை முடித்தபின் தங்கும் விடுதிக்கு அழைத்துச்செல்லப்பட்டோம். அவரின் அறைக்கு எதிரே எனக்கு அறை கிடைத்தது. ஏதும் தேவை என்றால் தொடர்பு கொள்ளுங்கள் சஞ்சயன். காலையில் சந்திப்போம், இரவு வணக்கங்கள் என்று கூறி தனது அறைக்குள் புகுந்துகொண்டார். மறூநாள் காலைஉணவிற்காக கபே பாரத் உணவகத்தில் உணவு உண்ணும்போது ஒருவர் வந்தார். அவர் பெயர் கௌதமன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டார். அவர் இலங்கையர். இயக்குனர் சசி, கௌதமன், நான் ஆகியோர் குறும்படப்போட்டிக்காக நடுவர்களாக கடமையாற்றுவுள்ளோம் என்பதை அறிந்துகொண்டேன் சற்றுநேரத்தின் பின் நாம் ஒரு மண்டபத்தில் அமர்ந்திருந்தோம். சில ஆயத்தங்களின் பின் படங்களை தெரிவுசெய்யும் பணி ஆரம்பமாகியது. இதற்கிடையில் கொதமனின் அசையும் ஒளிப்படங்கள் பற்றிய அலாதியாக அறிவு என்னை கவர்ந்திருந்தது. அவர் இலங்கையில் வாழ்ந்திருந்தபோது இங்கிலாந்து திரைப்பட இயக்குனர் ஒருவரிடம் கல்விகற்றிருக்கிறார். ஒரு தொலைக்காட்சிநிலையத்திலும் தொழில்புரிந்திருக்கிறார். இயக்குனர் சசி ஒரு புறம், கௌதமன் ஒரு புறம். இவர்களுடன் ஒரு ஞான சூன்யமான நான். ஏன் என்னை அழைத்தார்கள் என்றே எனக்கு புரியவில்லை. 

குறும்படங்களை நாம் பார்க்கத்தொடங்கும்போது நான் «எனக்கு திரைப்படத்துறையில் சற்றேனும் அனுபவமில்லை, ஆனால் அதிகம் படம்பார்ப்பேன், ஒரு படம் இப்படி இருக்கவேண்டும் என்று சில பல கருத்துக்கள் உண்டு, அவை திரைப்பட இலக்கணத்தினுள் அடங்குமா என்பதும் எனக்குத்தெரியாது எனவே எனது தெரிவுகள், கருத்துக்கள் என்பன இப்படித்தான் இருக்கும் என்று கூறியபோது அனைவரும் அதைத்தான் நாமும் விரும்புகிறோம் என்றார்கள். 

24 குறுந்திரைப்படங்கள். இலங்கை, டென்மார்க், சுவிட்சலாந்து, பிரான்ஸ் ஆகியநாடுகளில் இருந்து வந்திருந்தன. அவற்றை மூன்று பிரிவுகளாய் பிரித்துப்பார்க்கக்கூடயதாய் இருந்து எனக்கு.
  • கலைத்துவமான குறும்படங்கள்
  • மிகச் சிறப்பாக குறும்பட இலக்கணத்தை கையாண்டு, நச் என்று செய்தியை கூறிய குறும்படங்கள்.
  • வாழ்வியலை பேசிய குறும்படங்கள்
குறும்திரைப்படங்களின் தன்மை, அவற்றின் குறுந்திரைப்படமொழி, இலக்கணம், தொழில்நுட்பம், கதை, கதைநகர்த்தல் ஆகியவற்றில் அதீத வேறுபாடு இருந்தது. சில குறும்படங்கள் மிகச் சிறப்பாக சமுதாயச் சீர்கேடுகளை, வேதனைகளை பேசியிருந்தாலும் அத்திரைப்படங்களில் ஏனைய குறும்படங்களில் இருந்த பல சிறப்பம்சங்கள் இல்லாதிருந்ததனால் அவை இறுதிப்போட்டிக்கு தெரிவாகவில்லை. இதற்கு உதாரணமாக «தளும்பு» குறும்படத்தினைக் கூறலாம். ஒரு விடுதலைப்போராளியின் வாழ்க்கைச்சிரமத்தைப் பேசும் கதை அது. 

இன்றையகாலங்களில் போராளிகள், போரின் இறுதிநாட்களை மையமாகவைத்து பல குறும்படங்கள் தயாரிக்கப்படுகின்றன. இவற்றைத்தயாரிப்பவர்கள் இப்படியான கதைகளை நாம் குறும்படங்களாக எடுத்தால் விருதுகளைப் பெறலாம் என்ற எண்ணத்தில் இருக்கிறார்களோ என்று எண்ணத்தோன்றுகிறது. 

குறும்படத்தின் இலக்கணத்தை இவர்கள் முதலில் கற்றுக்கொள்ளவது அவசியம். குறும்படத்தின் வெற்றிக்கு கதையின் தன்மைமட்டும் போதாது என்பது எனது கருத்து. கதையின் கருவை எவ்வாறு நாம் திரைக்கதையாக்குகிறோம், படமாக்குகிறோம், இயக்குகிறோம், இசையமைக்கிறோம் என்று பல விடயங்களில் அதன் வெற்றி தங்கியிருக்கிறது. 

வசனமே இல்லாத ஒரு குறுந்திரைப்படமே இம்முறை வெற்றிபெற்றது. வசனம் மட்டுமல்ல, நடிகர்களின் முகங்கள் முகமூடிகளால் மறைக்கப்பட்டிருந்தன அப்படத்தில். அப்படம் நிறவாதத்தை மிக அருமையாக குறுந்திரைப்படத்திற்குரிய மொழியில் கூறியிருந்தது. இயக்குனர் சசி, குறுந்திரைப்பட இயக்குனர்களுடனான உரையாடலின்போது ஒரு குறுந்திரைப்படம் நேரடியாகவே கருத்துக்களைகூறாது, மறைமுகமாக கருத்துக்களை கூறும்போது அக்குறும்படத்தின் கலைத்துவம் மேலும் அழகுபெறுகிறது என்றார். 

அதற்கு உதாரணமாக «வப்பு» என்று 6 விருதுகளைப்பெற்ற திரைப்படத்தின் இறுதிக்காட்சியினை அவர் இப்படி வர்ணித்துக்கூறினார். அத்திரைப்படம் கொலையொன்றை செய்த ஒரு மனிதனின் வாழ்வு அழிந்துவிடும் என்னும் மூலக்கதையைக் கூறுகிறது. அப்படத்தின் இறுதிக்காட்சியில் உதிர்ந்துவிட்ட இலைகளின்மேல் கமரா நின்றிருக்க அக்காட்சியின் பின்புலத்தில் படத்தின் நாயகன் நிதானமற்ற நிலையில், மனப்பிறழ்வுடன் நடந்துசெல்வது போகஸ் இல்லாது காட்டப்பட்டிருக்கும். இக் காட்சியில் வாழ்வு அழிந்துவிடும் என்பதை உதிர்ந்த இலைகள் மூலமாகவும், மனப்பிறழ்வுடைய மனிதனை பின்புலத்தில் காட்டுவதன்முலமும் படத்தின் முழுக்கதையையும் ஒரு ஒரு காட்சியில் இயக்குனர் காட்டுகிறார். இப்படியானவையே குறும்படங்களின் உன்னதமான உத்திகள்.

என்னைக் கவர்ந்த இன்னொரு குறுந்திரைப்படம் «பிரதி». தாய் தந்தையரின் பிரதியே குழந்தை என்பதை நச் என்று கூறிய குறுந்திரைப்படம். குறுந்திரைப்படங்கள் திரையிடப்பட்டபோது மக்களின் கரகோசம் படத்தின் கரு பலரையும் சென்றடைந்திருப்பதைக்காட்டியது. ஒரு குழந்தை திருடுவதை தாய் கண்டுபிடிக்கிறாள். தந்தையிடம் திருட்டு அறிவிக்கப்படுகிறது. தந்தை «நீ கோணேசின் மகனா» என்று கூறி அவனை அனுப்பிவிடுகிறார். மறுநாள் அக் குழந்தை மேசையில் இருந்து படித்துக்கொண்டிருக்கிறது. தாய் தந்தையிடம் «டாய்லட் பேப்பர் முடிந்துவிட்டது» என்கிறாள். அதற்கு தந்தை «இன்று எனது மேற்பார்வையர் வேலையில் நின்றதால் எடுக்க முடியவில்லை. நாளைக்கு அவன் வரமாட்டான் அப்போது எடுக்கலாம்» என்ற தொனியில் பதில் கூறுவார். குழந்தை இவர்களின் சம்பாசனையைக் கேட்டுக்கொண்டிருக்கும். மிக இலகுவான கரு. பல இடங்களில் நடைபெறும் நிகழ்வு. பெற்றோரே குழந்தைகளின் முன்மாதிரிகள் என்பதை மிக அழகாக இரண்டு மூன்று நிமிடங்களுக்குள் காண்பிக்கிறார்கள். அதிலும் « நீ கோணேசின் மகனா» என்பது நச் என்ற வசனம். இலங்கையில் இருந்து பல சிறந்த, வித்தியாசமான கதையுள்ள குறும்படங்கள் அனுப்பப்பட்டிருந்தன. புதிய வளமான பாதையில் அமைந்த சிந்தனைகள், முயற்சிகள். பாராட்டப்படவேண்டிய படைப்புக்கள். 

டென்மார்க் படைப்பான «நாம் யார்» சாதீயம் பற்றிப் பேசுகிறது. இயக்குனர் ஒரு இளைஞர். இளைஞர்களிடம் இப்படியான புரட்சிகரமாக கருத்துக்கள் இருப்பது மனதுக்கு இதமாய் இருந்து மட்டுமல்ல பாராட்டப்படவேண்டியது.

 மூன்று நடுவர்களுக்கும் ஏற்பட்ட ஒரு பொதுவான எண்ணம் என்றவென்றால், படைப்பாளிகளின் தேடலும், வாசிப்பும், பிறமொழிப்படங்களை பார்க்கும் தன்மையும் மேலும் அதிகரிக்கப்படவேண்டும். அப்போதுதான் பார்வை அகன்று, விசாலமாகும். ஊரையாடல் நிகழ்வின்போது யார் யார் வாசிப்புப் பழக்கம் உள்ளவர்கள் என்று கேட்டபோது மிகச் சில கைகளே உயர்ந்தன. வெளிநாடுகளில் உள்ளவர்களுக்கு பல்மொழிப் புலமையும், வேற்றுமொழிப் புத்தகங்களும், இணையமும் ஒரு வரப்பிரசாதம். 

கதைகளுக்கான கருவினை, காட்சிகளை, உரையாடல்களை, மனித உணர்வுளை வாசிப்பின் முலம் நாம் மேலும் மேலும் வளர்த்துக்கொள்ளலாம். எனவேதான் வாசிப்பு, பிறமொழிப்படங்களை படங்களைப் பார்த்தல் என்பது முக்கியம் என்றேன். சில படங்களில் உள்ள தொழில்நுற்பத்திறமையானது இயக்குனர் சசி அவர்களை அதிசயிக்கவைத்தது. «இவர்களிடம் இவ்வளவு திறமை இருக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை» என்றார். ஒரு முழநீள திரைப்படத்தினை தயாரிக்கும் அளவிற்கு «வப்பு» திரைபடத்தின் கருவும், தொழில் நுட்பதேர்ச்சியும் இருந்தது. கதாநாயகன் என்ற தென்னிந்திய சினிமாவின் பிம்பத்தை உடைத்தெறிந்து கதாநாயகன் என்பவனும் தோல்வியுறலாம் என்பதை கூறும் கதைக்களம் எமக்கு புதிதுதான். இது வளம்மிக்க யாதார்த்தமான சிந்தனை. 

சில திரைப்படங்களில் பாடல்கள் முக்கிய இடத்தைப்பெற்றிருந்தன. பாடல்கள் கதையுடன் பயணிக்கும்போதும், பார்வையாளர்ளின் உணர்வுகளை பற்றிக்கொள்ளும்போதும் பாடல் மீதான கவனம் முக்கியத்துவம்பெறுகிறது. பாடல்கள் திணிக்கப்படுகின்றன என்ற உணர்வை ஏற்படுத்தாதவாறு பாடல்கள் அமைக்கப்படவேண்டும். 

பல இளம் இசையமைப்பாளர்கள் குறும்படங்களுக்கு இசையமைத்திருந்தார்கள். என்னைப் பொறுத்தவரையில் கதையின், காட்சியின் அமைப்புக்கு தன்மைக்கு ஏற்ப இசை இருப்பதையே நான் விரும்புவேன். காட்சியின் தன்மையை பார்வையாளனக்கு உணர்த்தி, பார்வையாளனை அக்காட்சியுடன் ஒன்றித்துப்போகவைப்பதே இசையின் நோக்கமாய் இருக்கவேண்டும். தவிர்த்து காட்சிக்கு தொடர்பில்லாத இசையை அமைப்பதும், தனக்கு இருக்கும் இசை பற்றிய மேதாவித்தனத்தை காட்டமுனைவதும் இசையமைப்பு என்னும் பதத்தினுள் அடங்காது என்பது எனது எண்ணம். 

பல சிறப்பான கதையினைக் கொண்ட குறுந்திரைப்படங்கள் டப்பிங் செய்யப்படாது, நேரடி ஒலிப்பதிவில் வெளிவந்திருந்தன. இப்படியான தவறுகள் தவிர்க்கப்படவேண்டும். இக்குறும்படவிழாவில் மிகவும் சர்ச்சைக்கு உட்பட்ட படம் «உபதேசம்» குறும்படத்தின் கதை சர்ச்சையை தோற்றுவிக்கவில்லை. இக்குறும்படத்தின் கதை முகப்புத்தகத்தில் இருந்து பெறப்பட்டது என்று பரிசளிப்பு விழாவில் இப்படத்தின் இயக்குனர் கூறியதும், இப்படத்திற்கு சிறந்த கதைக்கான விருது கிடைத்ததுமே சர்ச்சைக்கான காரணம். நடுவர்களாகிய நாம் இப்படத்தின் கதை முகப்புத்தகத்தில் இருந்து எடுக்ப்பட்டது என்பதை அறிந்திருக்கவில்லை. எனவே இத்தவறு நடந்திருக்கிறது என்று இயக்குனர் சசி அறிவித்தபின் சர்ச்சை குறைந்துபோனது. இப்படியான தவறுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்கவேண்டுமாயின், ஒழுங்கமைப்பாளர்கள் சில விதிமுறைகளை உருவாக்கிக்கொண்டு, குறும்படங்களை போட்டிகளுக்கு அனுப்புவோர் இவ்விதிகளுக்கு கட்டுப்படவேண்டும் என்று அறிவிக்கலாம்.

என் மனதை மிகவும் கவர்ந்தவிடயம் ஒன்றினையும் இங்கு குறிப்பிடுவது அவசியம். புங்குடுதீவைச்சேர்ந்த பலரை எனக்கு காலம் அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலர் மனதுக்கு நெருக்கமான மனிதர்களாக இருக்கிறார்கள். அவர்கள் வியாபாரத்தில் சிறந்தவர்கள் என்பதை அனைவரும் அறிவோம். எங்கள் ஊரில் நீர் பற்றாக்குறை என்னும் ஒரே காரணத்திற்காக நாம் எங்கள் ஊரைவிட்டு இலங்கைத்தீவின் பல இடங்களிலும் பரவியிருந்தோம், இப்போது உலகமெங்கும் பரவியிருக்கிறோம் என்று என்னை விமானநிலையத்தில் இருந்து அழைத்துவந்த சஸ்பாநிதி அண்ணண் தெரிவித்தார். 

நீருக்கும் மனிதனுக்குமான போராட்டம் எத்தகையது என்பதை நான் அறிவேன். ஆனால் அப்படியான போராட்டத்தில் ஆரம்பித்த புலப்பெயர்வானது இன்று பாரீஸ் நகரில் உலகத்தமிழர்களுக்காக ஒரு பெரும் குறும்படவிழாவையே வெற்றிகரமாக நடாத்தி கலைஞர்களை ஊக்குவிக்கும் நிலையை எட்டியிருப்பது பாராட்டத்தக்கது மட்டுமல்ல மற்றைய அனைவருக்கும் முன்மாதிரியாக இருக்கிறது. 

இப்படியான போட்டிகளும், அவற்றில் பங்குபெறும் நோக்கோடு தயாரிக்கப்படும் குறும்படங்களும், அவற்றின் காரணமாக முன்நோக்கி நகரும் எம்மவர்களின் வளர்ச்சியும், இப்படியான குறும்படபோட்டிகளினூடாக வளர்ச்சியடைந்த பல சிறப்பான கலைஞர்களையும் ஈழத்தவர்களின் குறும்பட திரைப்பட வரலாற்றில் இன்று காணக்கிடைக்கிறது. அப்படியான ஒரு வளமான சூழலை உருவாக்கிய பெருமை பிரான்ஸ் நாட்டு தமிழர்களுக்கே உண்டு என்பதை எவரும் மறுக்கமுடியாது. 

பிரான்ஸ் நாட்டில் இருந்தே பல சிறப்பான குறும்பட கலைஞர்கள் உருவாகியிருக்கிறார்கள் என்பதற்கு அவர்களின் படைப்புக்களே உதாரணம். இப்படியான ஒரு வளமான சூழ்நிலை அமைவதற்கு கலைஞர்களின் ஒற்றுமை இன்றியமையாதது. விட்டுக்கொடுப்புகளும், சமரசங்களும் இன்றியமையாதவை. 

நான் சந்தித்த கலைஞர்களிடம் இவ்வாறன வளமான சிந்தனைகளும், கருத்துக்களும், தேடல்களும் இருப்பதை அவதானித்தேன். மிக முக்கியமாக மாற்றுக்கருத்துகள்ள இலக்கிய ஆளுமைகளுடன் அவர்களால் சாதாரணமாக பழகவும், உரையாடவும் முடிகிறது.பல மூத்த கலைஞர்களிடம் காணப்படாத வளமான அணுகுமுறை இது. வாழ்த்துக்கள். 

எனது வாழ்க்கையில் பல அற்புதமான மனிதர்களை அறிமுகப்படுத்திய பிரான்ஸ் புங்குடுதீவு மக்கள் ஒன்றியத்தின் நாவலர் திரைப்படவிழா ஒழுங்கமைப்பாளர்களுக்கும், என்னையும் ஒரு நடுவராக அழைத்து பெருமைப்படுத்திய அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும். உங்களைப்போன்ற தன்னலமற்ற பல மனிதர்களாலேயே உலகம் அழகாகிறது. 

நன்றி 

தோழமையுடன் 
சஞ்சயன் நோர்வே

1 comment:

  1. தங்கள் சிறந்த பார்வையை வரவேற்கிறேன்

    ReplyDelete

பின்னூட்டங்கள்