தீராக் காமமும் அன்பான மனிதரும்

இன்று மாலை ஏறத்தாள 6 மணிபோல் ஒரு பேரூந்தில் ஏறிய போது ஒரு சோமாலிய நாட்டவர், அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நானும் தலையச் சாய்த்து, நெஞ்சில் கையை வைத்து அலைக்கும் அஸ்ஸலாம் என்று வணக்கம் கூறினேன்.

மேற் கூறியதை பேரூந்தில் உட்கார்ந்திருந்த ஒரு ஒரு தமிழர் கண்டார். அவருக்கு வயது ஒரு 50 - 55 இருக்கும். இதனால் என்னை அவர் ஒரு சோமாலியனாக கருதியிருக்கவேண்டும். எனது நிறத்தின் அழகும் , தலையும்  கூட அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்காது.

அவர் அருகில் இடம் இருந்ததால் (கடைசி இருக்கை) அவரருகில் உட்கார்ந்து கொண்டேன்.

நான் அவரை கவனிக்காமலே கண்போன போக்கில் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னிருக்கையாதலால்அடிக்கடி குலுங்கிக் கொண்டுமிருந்தேன். சிந்தனையும் குலுங்கியபடி எங்கோ அலைந்து கொண்டிருந்தது, வளமைபோல.

”என்னடி ...சாப்பிட்டு படுத்தாச்சே? என்று ஒரு ரொமான்டிக்கான குரல் கேட்ட போது அவரை முழுவதுமாக் கவனித்தேன்.

நம்ம கதையின் கதாநாயகன் ஒரு சுத்தத் தமிழன், முதிர் இளைஞன், முடி நிரம்ப கரு கரு என்று இருந்தது. வானிலை அறிக்கையில் ஆங்காங்கு மழை பெய்யும் என்பது போல அவரிடம் ஆங்காங்கே வெள்ளை முடி இருந்தது. அழகியதொரு வண்டியும், ஆங்காங்கே சிறு வெள்ளை மயிருடன் கூடிய மீசையும் வைத்திருந்தார். கையில் ஒரு சிவப்பு Nokiaவும் இருந்தது.

அவர் குரலின் டெசிபெல் அளவு தேவைக்கு மிக மிக மிக மிக அதிகமாக இருந்ததனால் சிலர் அவரை திரும்பியும் பார்த்தார்கள். ஆனால் அவரோ ரொமான்டிக் மூட் இல் இருந்ததால் திரும்பிப் பார்த்தவர்களோ, அல்லது அருகில் இருந்த இந்த ஆபிரிக்கனோ அவருக்குத் தெரியவில்லை. அவர் கண்கள் ஏகாந்த, மயக்க உலகில் இருந்தன. வெள்ளையுடைத் தேவதைகள் அவரைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அவர் பேசியது மட்டுமே எனக்குக் கேட்டது. அதை மட்டுமே பதிந்திருக்கிறேன் இன்று.

இந்த உரையாடலில் அதிகளவு காமம் கலந்திருந்தது. எனவே ”குணா” திரைப்படப் பாடல் போன்று நீங்கள் அங்கங்க மானே, தேனே போட்டுக்கொள்ளுங்கள். அது மட்டுமல்லாது அவ்வப்போது பாக்கியராஜ் ரொமான்ஸ் பண்ணுவது போல சிணுங்குங்கள்.. தேவையான அளவு ரொமான்டிக்கான பின்னணி இசையும் போட்டுக்கொள்ளுங்கள்

இவ்வுரையாடலில் எனக்கு நமது கதாநாயகனின் குரல் மட்டுமே கேட்டது. எனவே இவ்வுரையாடலில் அவரின் பேச்சுக்களை மட்டுமே பதிந்திருக்கிறேன்

”என்னடீ சாப்பிட்டாய்”

”நான் வீட்ட போய்த்தான் சாப்பிடவேணும்”

ஓம் ..ஓம் இப்ப தான் அவனிட்ட போய் ஒரு சின்ன பார்சலும், இங்கத்தய காசு 1000 ரூபாயும் குடுத்திட்டு வாறன். வெள்ளிக்கிழமை உங்க வருவானாம். பிள்ளைகளோட  வாரதால வானில தான் வருவான். உனக்கு ஒரு ரெலிபோணும், உடுப்பும் அனுப்பியிருக்கிறன். (உடுப்புக்களை விபரிக்கிறார் ... அது சென்சார் செய்யப்பட்டுள்ளது)

ரொமான்டிக்கானஒரு முத்தம் Nokiaவினூடாக காற்றில் கலந்து போகிறது.

”இல்லடீ, நகை அனுப்பேல்ல. இப்ப தங்கம் விக்கிறவிலைக்கு எனக்கு கட்டாது”
”என்ட தங்கத்துக்கு நான் பிறகு வாங்கித் தருவனடீ”
” உனக்கு மூக்குத்தி வடிவாயிருக்கும்”
” ஓம் ஓம் கட்டாயம்”   (  மூக்குத்தியை விட ஏதும் பெரிய நகையாக கேட்டிருப்பாரோ? )

”இல்ல இல்ல கட்டாயம் சீட்டு எடுத்தவுடன் வாங்கித தாறன்.. ஓம் ஓம் சத்தியமா வாங்கித் தாறன்”
”இந்த மாதம் சீட்டுக்கு பேட்டி போட்டு எடுக்கிறாங்கள். நல்ல கழிவு.ஆக்கள்  ஊருக்கெல்லே போயினம். அது தான்.”

பேருந்து முக்கியஒரு தரிப்பிடத்தை வந்தடைந்ததால் பலர் இறங்கிக் கொள்ள நம்மவர் எனக்கு முன்னால் இருந்த ஜன்னலோர இருக்கைக்கு மாறிக்கொள்கிறார்.

பேச்சு சற்று திசை மாறி ரொமான்டிக்கான பாதையில் பயணிக்கிறது.  முத்தத்தின் சத்தத்தை அவரின்  Nokia தாங்குமோ என்று பயந்து கொண்டிருந்தேன் நான். நல்ல வேளை அந்தப் பெண் அருகில் இல்லை.

பேச்சு மிகவும் ரொமான்டிக்காக சென்றுகொண்டிருந்ததால் நாகரீகம் கருதி சில இருக்கைகளுக்கு அப்பால் சென்று உட்காந்து கொண்டேன். அவரோ தனது உரையாடல் ஒலியினை  குறைத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.

காதலில் காமம் இல்லாவிட்டால்  எப்படி? அன்பின் உச்சமான வெளிப்பாடு அ தல்லவா?. அதற்கு மட்டும் அவர் விதிவிலக்காக முடியுமா என்ன?
அவர் சுற்றாடலேயே மறந்திருந்தார்.

காமம் எங்கும் இருக்கிறது, எதிலும் இருக்கிறது, நீர் ஊறிய மண்ணின் கனம் போல் காமத்தை மனிதர்கள் சுமந்து கொண்டுதிரிகிறார்கள். காமம் வடிந்தோடி அடங்கும் போது மனம் நீர் காய்ந்த மண்ணைப் போல் இலகுவாகிறார்கள். அவர் காமத்தின் கனம் அவரின் பேச்சில் தெரிந்தது. அன்பு  நிறைந்திருந்தது அவரின் காமத்தில். பேசிய கெட்ட வார்த்தைகளில் கெட்ட நெடி அற்று அதை அன்பில் குழைதது, குளைந்து குளைந்து பேசிக்கொண்டிருந்தார்.

அவர்களின் உரையாடல் அவர்களின் பிரிவையும், தாபத்தையும், காமத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அவர்களின் அன்பின் தேடலுக்கும், அதன் பின்னான விடயங்களுக்கும் அவரின் வயதுக்கும் தொடர்பில்லாதிருந்தது. காதலுக்கும், காமத்துக்கும் வயதில்லை என்பது எனது காதுகள் வழியே நிரூபித்துக் கொண்டிருந்தார், அவர்.

சற்று நேரத்தில் அவர்கள் பேச்சு வீசா எடுப்பது பற்றி மாறியது.

”விசா வந்திட்டுதே?”
” ம்ம் அப்ப நீ கொல்லன்டுக்கு வா, நான் அங்க வந்து சந்திக்கிறன்”
” 2 மாத விசாவே தந்திருக்கிறாங்கள்”
”சீச் சீ .. அங்க வந்திட்டு அசூல் அடிக்கலாம்,  இறங்கேக்க பாஸ்போட்ட கிழிச்சு கக்கூசுக்குள்ள போட்டுட்டு போ”
”உன்ட பெயரை மாத்திப் பதி, ஸ்பான்சர் பண்ணியவர்ட பெயரை சொல்லாத”

இடையிடையே மானே, தேனே, முத்தம் என்று மனிதர் ஜாலியாக இருக்கிறார்.

தனது சகோதரங்களுக்கு காசு அனுப்ப வேண்டும் என்றார்.  அண்ணணின் மகளுக்கு கலியாணமாம். ஒரு லட்சம் கொடுத்திருக்கிறார்.
”அதுகளும் சொந்தங்கள் தானே, கொடுக்கத்தானே வேணும் என்ற போது அவரின் மனத்தை ஓரளவு புரிந்து கொண்டேன்.

”சரி, ஒரு உம்மமா தந்துட்டு வைய்யடி”  என்று  ஆரம்பத்த பேச்சு  பேரூந்தின் இறுதித்தரிப்பு  வந்த பின்பும், அவர் என் கண்ணில் இருந்து மறையும் வரையும் தொடந்து கொண்டிருந்தது.

Nokia connecting people  என்பது உண்மை. சத்தியமாக உண்மை.

மனம் ஒரு பெரும் புதைகுழி. மனிதர்கள் மனதுக்குள்அன்புக்காக ஏங்கிக் கொண்டும், கனவுகளை சுமந்து கொண்டும், ஏக்கம், கற்பனை, வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பு, நிரைசைகள், தோல்விகள் இப்படி எத்தனையோ பல ரகசியங்களை சுமந்து கொண்டு எம்மிடையே அலைந்து கொண்டிருக்கிறார்கள். மனம் அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் தனக்குள் புதைத்துக்கொள்கிறது, எதுவும் பேசாமல்.

நாம்  சிலவற்றை பேசுவதில்லை. காமமும் பேசாப்பொருட்களில் ஒன்று எமது சமுதாயத்தில். ஆனால் அந்தக் காமம் இல்லாவிட்டால் நானும் இல்லை, நீங்களும் இல்லை என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

இந்த மனிதருடனான அனுபவம் சற்று அசௌகரீயமமாக இருந்தது என்பது உண்மைதான். இருப்பினும் இந்த அனுபவம் காதல், காமம் ஆகியவற்றிற்கு இடம், பொருள், ஏவல் இல்லை என்பதையும்,  அன்பின் இயக்கத்திலேயே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் புரியவைத்தது.

எஸ். ரா காமம் பற்றி தனது நூலில் ” அங்கு, காமம் வற்றாத நதியைப் போல எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக்கொண்டிருந்து” என்னும் தொனியில் எழுதியிருந்தார்.   அது உண்மைதான் போலிக்கிறது.

அற்புத அழகியின் அற்புத முத்தம்


பல தொழில்கள் இருக்கின்றன. ஆனால் சிலர் இந்தத் தொழிலை ஏன் தேர்ந்தெடுக்கின்றனர் என்று என் சிற்றறிவுக்கு இன்றுவரை புரியவில்லை. எது வித மகிழ்ச்சியையும் தராத ஒரு தொழில், மற்றவர்களுக்கு மகா எரிச்சலை ஏற்படுத்தும் தொழில்.  எவரும் இந்தத் தொழிளார்களை மதிப்பதில்லை, நிட்சயமாக வாழ்த்துவதில்லை. நான் உட்பட.

எப்போதும் மற்றவர்களுடன் மனக்கசப்புகளை தந்து போகும் தொழில் அது.

நேற்று முக்கியமான, ஜன மற்றும் வாகன நெருக்கம் உள்ள ஒரு இடத்தில் நின்றிருந்தேன். அந்த இடத்தில் சில நாட்களுக்கு முன்புவரை ஒரு பிரபல்யமான எரிபொருள் விற்பனைநிலையம் இருந்தது. இன்று அது முடப்பட்டுள்ளதாக அறிவிப்புப்பலகை மாட்டப்பட்டிருந்தது அதன் வாசலில்.

நான் எனது நண்பர்  என்னை இந்த எரிபொருள் விற்பனை நிலைகயத்தில் காத்திருக்கும்படி கூறியிருந்தார். ஒருவருக்காக அங்கு காத்திருந்தேன்.

அப்போது ஒரு இளைஞன் தனது அழகிய கறுப்பபு நிறமான காரில், காரரைவிட அழகான இளம் பெண்ணுடன் வந்தான். அவளின் நிறம் என்னுடையதைவிடவும், காரினுடையதைவிடவும், அந்த இளைஞனைவிடவும் கறுப்பாக இருந்தது. அவர்களது வாகனத்தை என்னருகில் நிறுத்தி இறங்கிப் போயினர். பெண்ணின் பிட்டம் ஆபிரிக்கர்களுக்குரியது போன்று இருந்தது. என்னருகில் நின்றிருந்த பல கண்கள் அப் பெண்ணின் பின்னழகை ரசித்ததை  அவதானிக்க முடிந்தது என்னால்.

அவர்கள் சென்று 5 நிமிடங்களின் பின் அவர்களின் வாகனத்துக்கு முன்னாலிருந்த ஒரு மிகச் சிறிய வாகனத்தில் இருந்தது ஒருவர் வெளியே இறங்க முயற்சிப்பது தெரிந்தது.  அவர் காரினுள் இருந்து இந்த உலகத்திற்கு பிரசவித்துக்கொள்ள முயற்சிப்பது போன்று இருந்தது அந்தக்காட்சி. சற்று நனைச்சுவையான காட்சியாகவே இது இருந்தது.

சற்று அதிகமாகவே பெருத்த உடலைக்கொண்ட அவர் ஒரு போலீஸ் அதிகாரி போலிருந்தார். அவரது மேலுடலையும் கீழுடலையும் ஒரு கறுப்புநிறபட்டி பிரித்துக் காட்டியபடி இருந்தது. அவரின் அந்த பட்டியில் பல உபகரணங்கள் தொங்கிக் கொண்டிருந்தன. இவையெல்லாம் இலத்திரணியல் உபகரணங்கள். தொலைபேசி, ஒரு அன்டனா கொண்ட சிறு கணிணி, இன்னொரு உபகரணம், கமரா, பாட்டுக்கேட்கும் கருவி போன்றவை அவரிடத்தில் இருந்தன. காதில் பாட்டு கேட்கும் உபகரணம் இருந்தது. அவரது நடையில் அவர் கேட்டுக்கொண்டிருந்த பாட்டிற்கா னதாளலய நடனம் தெரிந்தது.

மனிதர் வித்தியாசமானவராக இருக்கிறாரே என்று நான் நினைத்தபடியே அவரை பார்த்துக்கொண்டிருந்தேன்.

அந்த கறுப்பு இளைஞனின் காரை நன்கு உற்றுப்பார்த்தார். நான்கு முறை சுற்றிப்பார்த்தார். பின்பு மணியைப்பார்த்தார். தலையை மெதுவாய் ஆட்டிக்கொண்டார். மெதுவாய் தொலைபேசியை எடுத்து அதைவிட மெதுவாய் ஒரு இலக்கத்தை தட்டி அதனிலும் மெதுவாய் தொலைபேசியை காதிற்கருகில் கொண்டுசென்றார். ஏதோ பேசினார். மிகவும் மெதுவாய் தொலைபேசியை இடுப்புப்பட்டியில் பொருத்திக்கொண்டார்.

இடுப்புப்பட்டியில் இருந்து சிறு கணணியை எடுத்து குச்சி போன்னதோர் பொருளினால் ஏதோ எழுதினார். இடுப்புப்பட்டியில் இருந்த இருந்த ஒரு உபகரணத்தை அமத்த அது பச்சை நிற ஒளிவீசி தனது இருப்பை அறிவித்தது.

இப்போது மனிதர் சிறு கணணியை இடுப்பில் பொருத்திக் கொண்டு, கமராவை எடுத்துக் கொண்டார். அழகிய அந்த கறுப்புக் காரை படம் எடுத்தார்.

இவர் சிவில் போலீஸ் ஆக இருக்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன். என் மனதில் அந்த கறுப்பு இளைஞன் காரைத் திருடுவது போலவும், இவர் போலீசுடன் தொடர்புகொண்டு திருட்டுக்காரை என்பதை உறுதி செய்திருக்கிறார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் போது தான் அந்த அதிசயம் நடந்தது.

பச்சை நிற ஒளிவீசி தனது இருப்பைக் காட்டிய அந்த உபகரணம் கிர்ர்ர் என்று இயங்கத் தொடங்கியது அதனுள் இருந்து ஒரு மஞ்சல் காகிதம் வெளியே வரவும் அவர் அதை லாவகமாகக் கிழித்து அந்த இளைஞனின் காரின் கண்ணாடியில் ஒட்டிவிட்டார்.

அப்போது தான் புரிந்தது சகலரும் வெறுக்கும், இன்பத்தையே தராத தொழிலான வாகனத்தரிப்பிட கண்காணிப்பாளர் அவர் என்று.

அதன் பின்னான 10 நிமிடங்களில் மேலும் 4 – 5 வாகனங்களுக்கு தண்டப்பணம் விதித்து மஞ்சல் நிற கடதாசியை ஒட்டிவிட்டார்.

பலருக்கும் அந்த தரிப்பிடம் முன்பு போல இலவச தரிப்பிடம் அல்ல என்பது தெரியாதிருந்தது. பாவமாய் இருந்தது அவர்களை நினைத்த போது.

அந்நேரம் பார்த்து தனது அழகியின் பிட்டத்தில் வைத்த கையை எடுக்காது   மறு கையில் தொலைபேசியுமாக நடந்து வந்து கொண்டிருந்தான் அந்த இளைஞன்.

ஆஹா … கிளைமாக்ஸ் ஆரம்பிக்கப்போகிறது என்று என் உள் மனது ஆனந்தக்கூத்தாடியது.

எனது எதிர்பார்ப்பை ஏமாற்றவில்லை அந்த இளைஞன். தனது காரில் மஞ்சல் துண்டினைக் கண்டதும் அவனது இரத்தம் கொதிநிலைக்கு ஏறியது. வாயில் இனிமையான வார்த்தைகளுடன் வாகனத்தை சுற்றிச் சுற்றி வந்தான்.

என்னைப் பார்த்தான். நான் அந்த மனிதர்தான் இதை எழுதிவைத்தார் என்று பத்தவைத்துவிட்டு புதினம் பார்க்கலானேன்.

மெலிந்த இளைஞனும், மிகவும் பருத்த மனிதரும் நேரெதிரில் நின்று கொண்டிருந்தனர். அந்த மனிதர் மிதித்தால் இவன் சப்பளிந்துவிடுவான்.

வாகனதரிப்பிட கண்காணிப்பாளரோ அவனின் பேச்சை கேட்டமாதிரி தெரியவில்லை. ஒரு சிறு குச்சியினால் பல்லைக் குடைத்து, நாக்கினால் எதையோ தட்டியெடுத்து துப்பியபடியே வேறொரு வாகனத்துக்கு தண்டப்பணம் விதித்துக்கொண்டிருந்தார்.

இளைஞனின் முகம் அவனது கரிய நிறத்தையும் கடந்து சிவந்தது போல இருந்தது எனக்கு.

மீண்டும், ஆனால் ஏன் எனக்கு தண்டப்பணம் விதித்தாய் என்றான் இளைஞன்

நிமிர்ந்து இளைஞனைப் பார்த்து முதலில் அதிகாரிகளுடன் பேசக் கற்றுக்கொள் என்றார்.

இளைஞன் நிதானத்தை இழந்திருந்தாலும் மிக அறுதலாக தனது கேள்வியை மீண்டும் கேட்டான். பின்பு அவரே அவனை அழைத்துவந்து எனது வாகனம் நிறுத்தப்பட்டிருக்கும் முறை பிழையானது. அடுத்தவருடைய இடத்தையும் சேர்த்து உனது வாகனம் நிற்கிறது என்றார். தவிர இது கட்டணம் செலுத்தி வாகனம் நிறுத்துமிடம், நீங்கள் கட்டணமும் செலுத்தவில்லை, அது தான் தண்டம் விதித்தேன் என்றார்.

அவன் எவ்வளவோ வாதாடியும் அவர் இரங்கவில்லை.

நானும் இப்படி சில சமயங்களி;ல் மாட்டிக் கொண்டதுண்டு. ஒரு முறை எல்லாவிதமான விதிகளையும் வாசித்த பின் எனது வாகனத்தை தரிப்பிடக்கட்டணம் செலுத்தியபின் நிறுத்திவிட்டுச் சென்றேன். நான் திரும்பி வந்த போது தண்டப்பணம் வைக்கப்பட்டிருந்தது.

மறுநாள் தண்டப்பணம் விதித்த கம்பனியுடன் தொடர்பு கொண்ட போது நீ நிறுத்தியிருந்தது போலீசார் மட்டும் நிறுத்த அனுமதியுள்ள இடத்தில் என்றார்கள். அவ்விடத்திற்குச் சென்று அது பற்றி ஏதும் எழுதியிருக்கிறதா என்ற தேடினேன். எதுவும் கண்ணில்.படவில்லை. மீண்டும் தேடியபோது ஒரு மரத்தின் அடர்ந்த கிளையொன்று அந்த போலீசாருக்கு மட்டும் என்னும் பெயர்ப்பலகையை மறைத்திருந்தது தெரிந்தது. (எனது அப்பா போலீஸ் ஆக இருந்தவர் என்று சொன்னால் கேட்கவா போகிறார்கள்)

நோர்வேயில் வாகனங்களை சந்திகளுக்கருகில் நிறுத்தும் போது சந்தியில் இருந்து 5 மீற்றர் தூரத்திற்கப்பால் நிறுத்தவேண்டும் என்ற விதியிருக்கிறது. ஒரு முறை நானும் ஏறத்தாள 6 – 7 மீற்றர் அளந்து எனது வாகனத்தை நிறுத்திவிடுட்டுச் சென்றிருந்தேன். அன்றும் தண்டப்பணம் விதித்திருந்தார்கள். அருகில் இருந்த நண்பர் வீட்டிற்குச் சென்று மீற்றர் அளவுகோல், கமரா ஆகியவற்றை கொணர்ந்து படம் எடுத்துக்கொண்டேன். மறு நாள் விளக்கம் கேட்டபோது 5 மீற்றர் விதியை மீறினேன் என்றார்கள். இல்லையே என்னிடம் படங்கள் இருக்கின்றன என்று கூறிபடங்களை மின்னஞ்சலில் அனுப்பினேன். உடனே பதில் வந்தது. படங்களைப் பார்த்தோம். நீங்கள் விதிகளை மீறியுள்ளீர்கள். 5 மீற்றர் விதி வீதியின் உட்பக்க கரையில் இருந்தே அளக்கப்படுகிறது. நீங்கள் வெளிப்பக்க கரையில் இருந்து அளந்திருக்கிறீர்கள் என்றார்கள். மீறப்பட்டிருந்த தூரம் 150 செ. மீ.

ஒரு முறை ஏறத்தாள 8 நிமிடம் பிந்திவிட்டது. அதற்கும் 150 டாலர் தண்டம் விதித்திருந்தார்கள். இப்படி நானும் இந்த வாகனத்தரிப்பிட கண்காணிப்பாளர்களிடம் மாட்டிக்கொண்டதுண்டு. எப்போ பணத்தட்டுப்பாடு இருக்கிறதோ அந்த நேரத்தினை எப்படியோ அறிந்துகொண்டு இந்த தண்டப்பணத்தை விதிக்கிறார்கள்.

அந்நேரங்களில் இரத்தம் கொதிநிலைக்குச் செல்லும், இதயம் வேகமாக அடித்துக்கொள்ளும், வாயில் படு தூஷண வார்த்தைகள் வரும், சுருக்கமாகச் சொன்னால் அது ஒரு வித கொலைவெறி.

அந்த ஆபிரிக்க இளைஞனும் அப்போது அப்படித்தான் இருந்தான். காரின் உள் இருந்த அந்த அற்புத அழகி அவனுக்கு ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. கோபத்தில் வெடித்துக்கொண்டிருந்தான். அற்புத அழகி முத்தம்கோடுத்து அவனை அடக்கப்பார்த்தாள். முத்தத்தையும் கடந்து அவனது கோபம் எல்லை மீறியதாய் இருந்தது.

அனுபவி ராஜா ஆனுபவி .. நானும் இப்படி எத்தனை தரம் மாட்டியிருக்கிறேன் என்று நினைத்துக் கொண்டிருந்த போது நண்பர் வந்தார். வாகனத்தில் ஏறிக்கொண்டேன். மறக்காமல் அற்பத அழகியையும் திரும்பிப் பார்த்துக்கொண்டேன்.

பாவிப்பயல்  மீண்டும் அவளின் உதட்டு முத்தத்தையும் உதாசீனப்படுத்தியபடி கொதித்துக்கொண்டிருந்தான். 

 இன்றைய நாள் அவனுக்கு நல்லதல்ல..

அவன் தான் மனிதன்

சில மாதங்களுக்கு முன்பு ரோட்டறிக் கழகத்தின் கூட்டமொன்றில் வயதான, சமூக சேவையில் அனுபமிக்க, ஒரு நோர்வேஜியரின் உரை ஒன்றைக் கேட்கக் கிடைத்தது. அவர் மிகவும் வயதானவர்.  நடுங்கிய குரல், மெலிந்த உடம்பு, தெளிந்த தேஜஸ் நிறைந்த முகத்தடன் இருந்தார்.

அவர் தனது உரையை ஒரு சமூக அக்கறையுள்ள மனிதன் எப்படி இருக்கவேண்டும் என்று தொடங்கினார்.
பலரும் பல பதில்களைக் கூறினார்கள். நேர்மை, இரக்கத்தன்மை, அரசுக்கு வரி செலுத்துதல், சிரமதானம், குற்றம்செய்யமாதிருத்தல் என்று பல விதமான கருத்துக்கள் கூறப்பட்டன. ‌ தலையை ஆட்டியபடியே நின்றிருந்தார் பெரிவர். இடையிடையே புன்னகைத்தார்.

பின்பு கேட்டார் ஒரு சிறந்த சப்பாத்து தைக்கும் ‌கடைக்காரரின் நற்பண்புகள் எவை என்று? அதற்கும் பல பதில்கள் கிடைத்தன. நியாயவிலை, நேர்மை, தரமான தொழிட் திறமை, குறிப்பிட்ட நேரத்துக்கு சப்பாத்தை திருப்பிக் கொடுத்தல் (நேரம், வாக்கு தவறாமை), தன்னிடம் வரும் பயனர்களை (கஸ்டமர்) சிறப்பாக கவனித்தல் என்று பலரும் பலவிதமான கருத்தக்களை அடுக்கினர்.

அடுத்து ஒரு வைத்தியர், அதன் பின் ஒரு வழக்கறிஞர், சுத்திகரிப்பத் தொழிலாளி ஆகியோரின் நற்பண்புகளைக் கேட்டார். சப்பாத்துக்கடைக்காரருக்கு கூறிய பதில் போன்ற தொனி‌யிலேயே இவர்களுக்கும் பதில் கிடைத்தது.

சில கணங்கள் அமைதியாய் நின்றிருந்தார். நிமிர்ந்து எல்லோரையும் பார்த்தார். மெதுவாய் செரிமிக்கொண்டு நீங்கள் எல்லோரும் ஒரு சமூகத்தின் அங்கத்தவர்கள். எனவே, இப்போது புரிந்திருக்குமே ஒரு சமூகம் எதை விரும்புகிறது என்று கூறினார்.

பலரும் பலமாய் சிந்தித்தனர். சிலருக்கு உடனேயே புரிந்தது. சிலருக்கு சற்று அவகாசம் தேவைப்பட்டது.

சற்று நேரத்தின் பின் தொடர்ந்தார் பெரியவர்.
சமூகத்தின் தேவைகளை உணர்ந்து அதற்கேற்ப வாழ்பவர்களே சமூக அக்கறையுள்ள மனிதர்களாகிறார்கள் என்றார் பெரியவர்.

எனக்கு அவரின் கருத்து புரிய சற்று நேரமெடுத்தது. புரிந்த போது, அவ் வார்த்தைகளின் ஆழம் என்னை பலமாய் சிந்திக்கத் தூண்டியது.
இன்றைய நாளும்  நல்லதே!யாத்திரையின் பழிக்குப் பழி

நேற்றிரவும், இன்றைய அதிகாலையும் மிகவும் நம்பிக்கையுடையதாக இருக்கவில்லை. மனதுடன் போராடிப் போராடியே காலை 4 மணி போல் தூங்கிப்போனேன். காலை 6 மணிக்கு நடக்க ஆரம்பிக்க வேண்டும் என்பது எனது திட்டமாயிருந்தது. எனினும் விழித்தெழுந்த போது நேரம் 5.50. நடக்க ஆரம்பித்த போது நேரம் 6:40.

என்னை நானே திட்டியபடியே நடக்க ஆரம்பித்தேன். கணுக்காலின் நேற்றைய வலி குறைவாகவே இருந்தது, இன்று. எனவே எனது வேகத்துக்கு ஏற்ப நடந்து கொண்டிருந்தேன். அப்பப்ப வலியை உணர்ந்தாலும் அதன் பாதிப்பு இன்றும் இருக்குமோ என்பதனை அறிய ஆவலாயிருந்தது மனது. பலரும் என்னைக் கடந்தப‌டியே சென்றனர். நானும் அவர்களுடன் போட்டிக்காக நடக்கும் நிலையில் இருக்கவில்லை. எனது உடல் நிலைக்கேற்ற வேகத்துடன் இயற்கையை ரசித்தபடியே  நடந்து கொண்டிருந்தேன். வெய்யிலின் கொடுமை இன்றிருக்கவில்லை. மிகவும் இனிமையான காலநிலையாகவே இருந்தது.

முதல் 17 கிமீ எதிர்பார்த்திருந்தபடியே எதுவித கிராமங்களும் இல்லாமல் வயல் வெளிகளிகளினூடாக சென்றுகொண்டிருந்தது. எனது கால் வலி அதிகரிக்க ஆரம்பித்தது. ஒரு இடத்தில் சற்று ஓய்வு எடுத்தபடியே பாதத்தில் இருந்து நீர் வடிவதற்கா இடப்பட்டிருந்த இருந்த நூலை அகற்றினேன். பழைய சப்பாத்துக்களை மாற்றிக் கொண்டு நடக்க ஆரம்பித்தேன். எதிர்பார்த்ததை விட பலன் அதிகமாய் இருந்தது.

மதியம் போல் பலரும் அவரவர்களின் தங்குமிடங்களில் தங்கிக்கொண்டனர். நான் நடந்து கொண்டிருந்தேன். மனம் முழுவதும் ஒரு எகாந்தமான நிலைக்குள் சென்றுகொண்டிருந்தது. நேற்றைய மாலை, இரவு மற்றும் இன்று காலை மனதில் இருந்த சஞ்சலங்கள் மறைந்திருந்தன. மனதில் தெம்பு குடிவந்திருந்தது.

iPod  ”ஆத்தாடி பாவடை காத்தாட”  என்று தன் பாட்டுக்கு பாடி மனதை எனது விடலைப்பருவத்திற்கு அழைத்துப்போனது. அதே போல் மயக்கம் என்ன திரைப்படத்தின் ”பிறை தேடும்” பாடலும் மனதை இதமாக வருடிப்போனது. இசையும், வார்த்தைகளும் மனதை இதமாக வருடி, ரணமான மனதுக்கு களிம்பு தடவக்கூடியவை என்பது எத்தனை உண்மை என்பதை உணரக்கூடியதாயிருந்தது இன்று.

iPod இல் சில podcast கள் இருந்தன. அவற்றைக் ரசித்தபடியே நடந்து கொண்டிருந்தேன். மதியம் 3 மணிபோல் பசிக்காக ஒரு உணவகத்தினுள் ஒதுங்கினேன். அங்கு காத்திருந்தது ஒரு அதிசயம்.

என்னைக் கண்டதும் நீ இலங்கையைச் சேர்ந்தவனா என்றார், அந்த வயதான பெண் உரிமையாளர். தலையை மேலும் கீழுமாய் ஆட்டினேன். உன்னைப் பார்த்தாலே தெரிகிறது என்றார். சிரித்துவைத்தேன். அதன் பிறகு வந்த 30 நிமிடங்களில் நான் உண்பதற்கு மட்டுமே வாயைத் திறந்தேன். உரிமையாளரோ மிகுதி எல்லா நேரமும் வாயைத்திறந்திருந்தார்.

Martina Bòtel என்ற பெண் Germany நாட்டைச் சேர்ந்தவர். 1994ம் ஆண்டு இலங்கைக்கு சென்ற போது நீர்கொழும்பில் ஒருவரைக் காதலித்திருக்கிறார். இருவரும் கத்தோலிக்கர்கள். இலங்கையின் வட கிழக்கு தவிர்ந்த பல இடங்களும் அவருக்கு தெரிந்திருந்தன. காதல் சில மாதங்களில் தொலைந்து போயிருக்கிறது. ஆனால் அந்த காதலன் ஒரு நியூசிலாந்து பெண்ணை திருமணம் முடித்து நியுசிலாந்தில் வசிப்பதாகக்  கூறினார். இலங்கையை நன்றாகவே அறிந்திருந்தார்.

தற்போது ஒரு Spain நாட்டவரை காதலித்து, இங்கு ஒரு தங்குமிடத்தையும் உணவகத்தையும் நடாத்தி வருவதாகக் கூறினார். அவரின் உணவகத்திற்கு சென்ற முதல் இலங்கையர் என்ற கொளரவம் எனக்குத்தான் என்றும், எனவே அவரது விருந்தினர் புத்தகத்தில் என் வரவை தமிழிலும் நோர்வே மொழியிலும் பதியக்கேட்டார். வாழ்த்திக் கையெழுத்திட்டுக்கொடுத்தேன்.

மாலை 4 மணியில் இருந்து 18:45 மணிவரை ஒரு ஏகாந்தமான மனநிலையில் நடந்து கொண்டிருந்தேன். சுற்றுவட்டாரம் முழுவதிலும் மனித நடமாட்டமே இல்லை. இயற்கை முழுவதும் எனக்காகவே இருந்தது. மனதில் இருந்த சில ஏமாற்றங்கள், தளும்புகள், காயங்கள், தோல்விகள், ஏமாற்றங்கள் எல்லாம் மெதுவாய் கழுவுப்பட்டுக்கொண்டிருப்பது போலிருந்தது. மனது பஞ்சாய் இருக்க, கால்கள் வலியை மறந்து நடந்து கொண்டிருந்தன. 28 கி.மீ  கடந்தது. 30 கி.மீ கடந்தது 31கி.மீ நெருங்கிற்று.

எத்தனையோ வருடங்களின் பின் மனதில் ஒருவித சமரசம் குடிவந்திருப்பது போல் உணர்ந்தேன். எய்தவன் இருக்க அம்பின்மேல் நான் வன்மம் வளர்ப்பதை உணரக்கூடியதாய் இருந்தது. அம்புகளை மன்னிக்கும் பக்குவம் என்னை நெருங்குவதை அவதானிக்க முடிந்தது. இருப்பினும் எய்தவர்களை மன்னிக்கும் பக்குவம் வர மாட்டாது என்றே எண்ணுகிறேன். அதையே நானும் ஒரு விதத்தில் விரும்புகிறேன் போலிருக்கிறது. அப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்.

இன்று ஏறத்தாள 12  மணிநேரங்களாக இன்று நடந்து கொண்டிருக்கிறேன். கூரிய வார்த்தைகளினால் சீழ்கட்டுப்பட்ட மனதின் சீழ்க்கட்டிகள் உடைந்து, சீழ் வடியும் போது ஏற்படும் வலியுடன் கூடிய சுகம் மனதில் குடிவந்திருக்கிறது. வார்த்தைகளை விட கூரிய ஆயுதங்கள் எதுவுமில்லை இவ்வுலகில் என்பதனை நன்கு அனுபவித்து அறிந்திருக்கிறேன்.  அவற்றையெல்லாம் மன்னிக்கும் மனமும் காலமும் வரும் என்னும் நம்பிக்கை எனக்கில்லை.

அப்பப்பா .. எத்தனை எத்தனை குற்றச்சாட்டுகள், பொய்கள், திட்டமிட்ட கூட்டுத்தாக்குதல்கள், மிக மிக நெருங்கியவர்களாய் இருந்தவர்களிடம் இருந்து பரிசாய் கிடைத்திருக்கிறது. மறுக்கப்பட்ட மென்மையான உறவுகள், உரிமைகள் எத்தனை எத்தனை. இழந்தபோன காலங்களின் பெறுமதி அளவிட மு‌டியாதது.  நினைத்திருக்கவே முடியாத இடங்களில் இருந்து கிழித்தெறியப்பட்ட முகமூடிகள் மூலம் புரிந்த உண்மைகள், வாழ்க்கையை உணர்த்திய பின் அவற்றை உணர்ந்து நிமிரும் போது வாழ்க்கை 47 வருடங்களை கடந்து கொண்டிருக்கிறது.

இன்யை நாளைப் போன்றதோர் நாளை இதுவரை நான் அனுபவித்ததில்லை. என்னை மறந்து நடந்து கொண்டிருக்கிறேன். நடக்க நடக்க எவற்றையெல்லாம், எவரையெல்லாம் ‌‌‌ஜெயிக்க விரும்பினேனோ அவற்றையெல்லாம், அவர்களையெல்லாம் ஜெயித்த உணர்வு மனதினை ஆட்கொண்டுகொண்டிருந்தது.

32 கி.மீ கடந்து 34 - 36 கி.மீ என்று வெற்றியின் போதையை அனுவணுவாய் ஒரு வித குரூரத்துடன் ரசித்து, ருசித்தபடி நடந்து கொண்டிருந்தேன். நேரம் 18:45 வந்த போது  ஏறத்தாள 38 கி.மீ கடந்திருந்தேன். உணர்ச்சிகள் கட்டுக்கடங்கத் தொடங்கியிருந்தன.

19:00 மணிபோல் ஒரு தங்குமிடத்தினுள் புகுந்து, குளித்து, உணவுண்ட பின்பும் இன்றைய உணர்ச்சிகளின் போதையை இன்னும் உணர்ந்து கொண்டிருக்கிறேன்.

வெற்றிகொள்ள முடியாத எதையோ அல்லது எவரயோ வெற்றி கொண்ட போதையின் சுகமே அலாதியானது. அது ஒரு வித தன்னம்பிக்கையை தந்து போயிருக்கிறது. என்னாலும் முடியம் என்று உணரத் தொடங்கியிருக்கிறேன்.

எனது பயணத்தின் நோக்கமாக எதை நான் கருதினேனோ அதை இன்று உணர்ந்திருக்கிறேன்.

நாளையும், அதற்கடுத்து வரும் நாட்களிலும் மீண்டும் மீண்டும் சிலரையும், பலதையும் நான் வென்றாக வேண்டும்.

என்மதில் உள்ள அனைத்து வலிகளையும் நடந்து நடந்து, வெற்றியை உணர்ந்தபடியே நான் கடந்து கொள்வேண்டும்.

இல்லை இல்லை கடந்து கொள்வேன்.

இன்றைய நாள் மிகவும் நல்லது.

கொசுறுத் தகவல்:
யாத்திரையில் இன்று வரை ஏறத்தாள 330 கிமீ நடந்து முடித்திருக்கிறேன். :-)

.........................

உங்களால் இந்தப் பதிவி‌னை புரிந்துகொள்வது சிரமமாயிருக்கலாம் என்பதனை நான் புரிந்து கொள்கிறேன். இது எனது இன்றை நாளின் வாக்குமூலமே அன்றி வேறெதுவுமில்லை. தவிர என்னை நான் புனிதனாகவும் அறிவித்துக்கொள்ளவில்லை என்றும் அறிக.