பால்யத்துத் திருட்டுக்களும் இன்றைய பரவசங்களும்

அப்போ எனக்கு 10 - 12 வயதிருக்கும். விடுமுறைக்கு விடுதியிலிருந்து வீடுவந்திருந்தேன்.

அம்மா எனது கையெழுத்து ஒழுங்காக வரவேண்டும் என்பதற்காய் தனக்குத் தெரிந்த தமிழையெல்லாம் எழுது எழுது என்றும் சொல்வதெழுதல் எழுது என்றும் பாடாய்படுத்திக்கொண்டிருந்தார். அப்பாவோ தமிழின்பால் திரும்பியும் பாராதவர். அது ஒன்று தான் அவர் தமிழுக்குச் செய்த தொண்டு. ஆங்கிலமும், கணிதமும் அவர் கரைத்துக் குடித்த பாடங்கள். என்னையும் கரைத்துக்குடி குடி என்று என் உயிரை எடுத்துக்கொண்டிருப்பார்.  அவரால் முடியாது போன காரியங்களில் இதுவும் ஒன்று.

விடுமுறைக்கு வந்தால் அப்பாவின் சகோதரிகளிடம் அழைத்துப்போவார்கள். நெடுந்தூரப்பயணம் அது. பஸ், ரயில், இறுதியில் அப்பய்யாவின் சோமசெட் கார் என்று அப்பயணம் முடிவுறும். இம்முறையும் அப்படியே முடிவுற்றிருந்து எங்கள் பயணம்.

அப்பாவின் தங்கைகளின் ஒருவர் ஆங்கில ஆசிரியை. அவர் சமயபாடம் கற்பித்திருக்க வேண்டியவர் தவறி ஆங்கிலம் கற்பித்துக்கொண்டிருந்தார். அப்பப்பா.. விடிந்து இரவு தூங்கும்வரையில் கடவுள் பக்தியில் உருகிக்கொண்டிருப்பார். என்னைக் கண்டால் அவருக்கு தனது ஆங்கலப் புலமை ‌தலைக்கேறிவிடும். ஆங்கிலத்தில் சொல்வதெழுதல் எழுதச்சொல்வார். எனது ஆங்கிலப் புலமை  மட்டுப்படுத்தப்பட்டதாயே இருந்தது, இருக்கிறது. எனது ஆங்கிலப் பேரறிவைக் கண்ட அப்பாவின் அக்கா எனது அப்பாவிடம் ”தம்பி! இவனுக்கு ஒரு மண்ணும் தெரியாது” என்று ‌கூறுவார். அப்பாவின் எதிர்வினை எப்படியிருக்கும் என்பது அவர் அன்று பாவித்திருக்கும் பதார்த்தத்தைப் பொறுத்திருக்கும். அவர் என்னை ”கவனிக்காது” விட்டால் அவரின் அன்பு அக்கா  அப்பாவுக்கு ”தம்பி! நீதான் இவனுக்கு செல்லம்கொடுத்துக் கெடுக்கிறாய்” என்பார். இதைக் கேட்டு அப்பர் சிலிர்த்தெழும்பினால் அதன் பின் என்கதி அதோகதியாகும் வரை நிறுத்தமாட்டார்.

அந்த விடுமுறையில் ஒரு நாள் மாமியுடன் நாம் ஒரு கோயிலுக்குச் செல்வதென்று முடிவாகியது. அம்மாவும் வந்தார். அப்பா வரவில்லை. அன்று அவர் வராதது  தண்டவாளத்தில் நான் படுத்திருக்கும் போது ரயில் வராதது போன்ற அதிஸ்டம் என்றே நினைக்கிறேன்.

அப்பாவின் இரு தங்கையர், அக்கா, அவரின் மகள், அம்மாவும், தம்பியும், நானும் கோயிலுக்குப் புறப்பட்டோம். அது ஏறத்தாள  1 -2 மணி நேரத்துப் பயணம். பஸ்ஸில் ஏறியபின் அம்மாவினருகே குந்திக்கொண்டேன். தம்பியிடம் இருந்து யன்னலோரத்தையும் கைப்பற்றிக்கொண்டேன். எவ்வளவு நேரம் தான் ஒரு டெக்னீஷியன் புதினம் பார்ப்பான். எனவே கையில் பட்டதையெல்லாம் நோண்டிக்கொண்டிருந்தேன்.

அந் நாட்களில் இருக்கைக்கு அருகில் ஒரு மின்சாரவிளக்கு இருந்ததாகவே நினைவில் இருக்கிறது. அவ்விளக்கினைச் சுற்றி ஒரு கம்பி வலை இருந்தது. அவ்வலையினை இரு ஆணிகளைக் கொண்டு பொருத்தியிருந்தார்கள். அவற்றில் ஒரு ஆணி வெளியே வந்திருந்து. மெதுவாய் இழுத்தேன். அசைந்தது. சற்றுப்பலமாய் இழுத்தேன் கழன்றுவந்தது. கம்பி‌வலையை அகற்றி மின்குமிழைக் களற்றி எடுத்தேன். அம்மா தூங்கிக்கொண்டிருந்தார். ஆங்கில ஆசிரியையோ பஸ்ஸின் முகட்டைப் பாத்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மின்குமிழை மெதுவாய்க் களற்றியெடுத்து காற்சட்டை பையினுள் வைத்துக்கொண்டேன்.

பயணம் முடிவுற்றதும் அம்மாவும், அப்பாவின் அருமை சகோதரிகளும் தூக்கம் கலைந்து எழும்பி எம்மை இழுத்துக்கொண்டு இறங்கினார்கள். கோயிலுக்குச் சென்று தேவைக்கு அதிகமாகவே தேவாரம் பாடியபடியே மாமி நடந்துகொண்டிருந்தார். அம்மா, ஏனைய மாமிமார் என்று ஒரு நீண்ட வரிசை மாமிக்குப் பின்னால் சென்று கொண்டிருந்தது. நான் கடைசியாக வந்துகொண்டிருந்தேன்.  அந்த மின்குமிழ் என்து முழுக்கவனத்தையும் ஈர்த்திருக்க அதை கையில் வைத்துப்பார்த்தபடியே நடந்து கொண்டிருந்தேன். அந்த மின்குமிழை வீட்டில் பூட்டி அது எப்படி ஒளிர்கிறது என்று கற்பனையில் பார்த்தபடியே நடந்துகொண்டிருந்தேன். திடீர் என்று பல்ப் என்னிடம் இருந்து பறிக்கப்பட்டது. நிமிர்ந்து பார்த்தேன். அருகில் அப்பாவின் அழகிய ராட்சசி நின்றுகொண்டிருந்தார். அவரருகில் அப்பாவின் அன்புச் சகோதரி (அப்பாவின் அக்கா).

அம்மா ”இதை எங்கயடா எடுத்தனீ ?”என்றார்
நானாவது பதில் சொல்வதாவது என்பது போல் வாயை திறக்காதிருந்தேன்.
அம்மா குரலை உயர்த்தினார். (எனக்குள் சிரித்துக்கொண்டேன்)
அப்பாவிடம் சொல்லுவேன் என்றார் (சொல்லவே மாட்டார் என்று தெரியுமாதலால் அமைதியாயிருந்தேன்)
அப்போது தான் அப்பாவின் அக்கா தனது கடைசி ஆயுதத்தை எடுத்தார். நீ இப்ப சொல்லாவிட்டால் அப்பாவிடம் சொல்வேன் என்றார். இனியும் மெளனம் காப்பது உயிருக்கு ஆபத்து என்பதால் ”பஸ்ஸில் இருந்து களட்டினேன்” என்றேன். அம்மா அதிர்ந்துவிட்டார். மாமியோ ”டேய் உன்ட கொப்பன் ஒரு போலீஸ், நீ களவெடுக்கிறியோடா” என்றார். அப்பாவிடம் சொல்வதாகவும் கூறியதனால் எனது உடல் மெதுவாக ஆட்டம்காணத் தொடங்கியிருந்தது.

கோயிலில் இருந்து பஸ் நிலையத்துக்கு வந்ததும் அம்மா என்னை அழைத்துக்கொண்டு பேருந்துநிலயத்தின் காரியாலயத்திற்கு அழைத்துப்போனார். மின்குமிழைக் கையில் தந்து அங்கிருந்த ஒரு அதிகாரியை காண்பித்து அவரிடம் மின்குமிழைக் கொடுத்து களவெடுத்தற்கு மன்னிப்புக் கேள் என்று கூறிவிட்டு அங்கிருந்த கதிரையில் உட்கார்ந்துகொண்டார்.

நிமிர்ந்து அந்த அதிகாரியைப் பார்த்தேன். கறுப்பு நிறமான யானைக்கு காக்கி உடை அணிவித்தது போன்று கதிரையையும் அடைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார். அவரின் மீசை அவரைவிடப் பெரிதாகவிருந்தது. வெற்றிலை சப்பியபடியே எதையோ எழுதிக்கொண்டிருந்தார்.

கொடுக்காவிட்டால் அப்பாவிடம் அடியுதை, கொடுத்தால் இம்மனிதர் என்ன செய்வாரோ என்று தெரியாததால் முகத்தை பரிதாபமாக வைத்துக்கொண்டு அம்மாவைப் பார்த்தேன். அதிகாரியிடம் போ என்று கையைநீட்டிக்காட்டினார். அழுதேன். அம்மா மசியவில்லை. இப்படியே நேரம் சென்றுகொண்டிருந்தது. இறுதியில் அம்மா என்னை அழைத்துப் போனார், காக்கிச்சட்டை யானையிடம்.

அவரும் அம்மாவின் வாக்குமூலத்தை கேட்டபின் என்னை நோக்கி கையை நீட்டினார். எனக்கேதோ தும்பிக்கையொன்று நீண்டுவந்தது போலிருந்தது. மின் குமிழ்  கைமாறியது. என்னை நிமிர்ந்து பார்த்தார். போலீசுடன் தொடர்பு கொள்ளப் போகிறேன் என்றார். நான் அழுதபடியே அம்மாவை கட்டிக்கொண்டேன்.

களவு கூடாது என்று அறிவுரை கூறி, அம்மாவைப் பாராட்டி அனுப்பினார். வெளியில் அப்பாவின் சகோதரி தங்கள் பரம்பரையிலே கள்ளன் இல்லை என்றும், பரம்பரையின் மானம் கப்பலேறிவிட்டது என்றும் புலம்பிக்கொண்டிருந்தார்.

எனது தம்பியின் கையிலும், மச்சாளின் கையிலும் ஐஸ்கிறீம் இருந்தது. அது எனது மனநிலையை மிகவும் பாதித்தது. கௌரவத்துக்கும் ஏற்றதாயிருக்கவில்லை. அம்மாவிடம் அடம்பிடித்து ஐஸ்கிறீம் கேட்டேன். இல்லை என்றார். அழுது அழிச்சாட்டியம் பண்ணினேன். வாங்கித்தராவிட்டால் வீட்டிற்கு வரமாட்டேன் என்று அறிக்கை விட்டேன். எனது அரசியல் அறிக்கைய‌ை அம்மா கவனத்திலேயே எடுக்கவில்லை.

பஸ் வந்ததும் எல்லோரும் ஏறி உட்கார்ந்தார்கள். நான் வெளியில் நின்றேன். அம்மா வருவார், ஜஸ்கிறீம் வாங்கித்தருவார் என்ற நம்பிக்கையில். அவர் வரவில்லை. பஸ்புறப்பட்ட போது ஏறி அம்மாவின் மடியில் குந்திக்கொண்டேன். அணைத்தபடியே இனி களவெடுக்கக்கூடாது என்றார். அப்பாவிடம் சொல்லவேண்டாம் என்று மாமியிடம் கூறும் படி கேட்டுக்கொண்டேன். அம்மா சிரித்தபடியே மாமியைப் பார்த்தார். மாமி வாயைப்பளந்தபடியே குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார். மாமியின் பற்கள் பயத்தை உண்டுபண்ணின.

வீடு வந்ததும் நான் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. ஆனால் அப்பாவின் அக்காவின் கணவர் (மாமா), பின்பொருநாள்  மாலை, சோமபானததின் மயக்கத்தில் ”அடேய்! எடுத்தால் பஸ் இன்ஜினை களவெடுக்கணும். பல்ப் ஒன்றுக்கும் உதவாதுடா” என்று  கூறியபோதுதான் உணர்ந்தேன் எனது பிரச்சனை சர்வதேசப்பிரச்சனையாக உருவெடுத்திருப்பதை.

அன்று வீடு வந்ததும் அப்பாவின் இன்னொரு தங்கை இரகசியமாக என்னை அழைத்து ஜ்ஸ்கிறீம் வாங்கவும், சகோதரன் முறையான ஒருவருடன் படம் பார்க்கவும் பணம் தந்தார். அன்று இந்தப் பூலோகத்தில் அவர் மட்டுமே அன்பான மனிதராக இருந்தார்.

அன்றிரவு நாகம்ஸ் திடய்டரில் ஜக்கம்மா பார்த்தோம். வீடு வரும் போது அந்த கறுப்பு யானை போன்ற மனிதரை ஜக்கம்மா படத்தில் வருவது போல மரத்தில் கட்டித் தலைகீழாகத் தொங்கவிடவேண்டும் என்று கற்பனையோடியது.
......



அப்பாவின் அக்காளாகிய எனது புவனேஸ் மாமிக்கு இது சமர்ப்பணம்.


இன்றைய நாளும் நல்லதே!

தெய்வீகத் தூக்கங்கள்

இன்று மாவீரர் நாள். எனது தென்னிந்திய நண்பரெருவர் தெற்கு நோர்வேயில் இருந்து வந்திருந்தார். அவருடன் மாவீர்நாளுக்கு செல்வது என்று முடிவாகியிருந்தது.

இன்று மதியம் அவரைச் சந்தித்தபோது அவரின் குழந்தையும் அவருடன் இருந்தாள். அவளும் நானும் ஏற்கனவே ஒருவரை ஒரு‌வர் ஓரளவுக்கு அறிவோம். கண்டதும் மயக்கும் ஒரு புன்னகை புரிந்தாள். ”பிடி” என்று கூறியபடியே அவளைத் துரத்திப்பிடிக்க வருவது போல ஓடினேன். முத்துக்கள் கொட்டியது போல் சிரித்தபடியே ஓடினாள். அவளின் அழகிய சிரிப்பிலும், அழகிய பல்வரிசையிலும் உலகின் அழகெல்லாம் தெரிந்தது.

அவர்களின் வாகனத்தில் மாவீரர்விழா நடைபெறும் இடத்துக்குச் சென்றபோது நோர்வேஜிய மொழியிலும், அழகான தென்னிந்தியத் தமிழிலும் பேசியபடியே வந்தாள். அவளின் குறும்பும், சிரிப்பும் என் குழந்தைகளை நினைவூட்டின.

விழாமண்டபத்தில் என்னருகில் அவளை உட்காரவைத்தேன். இல்லை அப்பாவின் ம‌டியே பாதுகாப்பனது என்பது போல் தந்தையின் மடியில் குந்தியிருந்து என்னுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். எமது பேச்சு அவளின் நண்பர்களைப்பற்றியதானபோது ”என்னருகில் வந்தால் உனது நண்பர்களின் பெயரைச் சொல்லுவேன்” என்று கூறினேன். கண்கணை அகலமாக விரித்தபடியே ”உனக்கு அவர்களை தெரியுமா?” என்றாள் நோர்வேஐிய மொழியில்.

அவனைத் தூக்கி எனது மடியில் வைத்துக்கொண்டேன். எனது இளைய மகளின் சகல நண்பிகளையும் நான் மிக நன்றாக அறிவேன். முத்தவளின் நண்பிகளையும் அறிவேன். எனவே அவர்களின் பெயர்களைக் கூறியபடியே, ”இதுவா உன் நண்பியின் பெயர், இதுவா உன் நண்பியின் பெயர்?” என்று கேட்கலானேன். அவளும் என் மடியில் இருந்தவாறே இல்லை, இல்லை என்று சிரித்தபடியே கூறிக்கொண்டிருந்தாள். நான் பிழையாக பெயர்களை கூறியபோது அவள் அழகாகக் கண்களால் சிரித்தாள். அவளின் சிரிப்பு மயக்கும் அழகாய்இருந்தது. இப்படியான தெய்வீகச் சிரிப்புக்களுடனேயே, சில வருடங்களுக்கு முன், எனது நாட்களும் இருந்தன. குழந்தைகளின் சிரிப்புக்கு இணையான பொருள் இவ்வுலகில் எதுவுமில்லை என்று வாழ்க்கை என்க்குணர்த்திப் போன நாட்கள் அவை.

சற்று நேரத்தில் இவள் தந்தையின் மடியிலேறி உட்கார்ந்து தந்தையின் கழுத்தைக் கட்டிப்பிடித்தவாறு துங்கிப்போனாள்.

என் குழந்தைகள் என் கழுத்தைக்கட்டியபடியே தூங்கிப்போன நாட்களில் நான் என்னை மறந்து அவர்களை ரசித்திருக்கிறேன்.

என் நெஞ்சில் காற்றின் மிருதுடன் சாய்ந்திருக்கும் அவர்களின் உடல்,
கழுத்தில்படும் அவர்களின் வெம்மையான மூச்சுக்காற்கு,
எவ்வித ஆரவாரத்தையும் கவனிக்காது பாதுகாப்பாய் உறங்கும் அவர்களின் நம்பிக்கை,
குழந்தைகளின் கையினுள் எமது விர‌லொன்றை வைத்தால் அதை தூக்கத்திலும் பொத்திப்பிடிக்கும் அதிசயம்,
‌அவ்விரலகளின் வெம்மை,
தூக்கத்தில் ”அப்பா” என்றழைக்கும் போது பெருமையில நிரம்பும் என் மனது,
அவ்வப்போது அவர்களின் தலையைக் கோதிவிடும் என் கைகள் என்று என் குழந்தைகள், என்னுடன் தூங்கிப்போன கணங்கள் ஒரு நெடுங்கவிதைபோல் எனக்குள் இருக்கிறது. அக் கவிதையை மீண்டும் வாசிப்பது போலிருந்தது, அவள் என் பக்கமாக பார்ததபடியே தனது தந்தையின் மார்பில் தூங்கிய பேரழகு.

என்னையறியாமலே அவள் தலையைக் கோதிவிட்டேன். அவளின் கண்களுக்குள் வழிந்துகொண்டிருந்த தலைமுடியை ஒதுக்கினேன்.
தந்தையின் கழுத்தை கட்டியிருந்தன அவள் கைகள்.
அவள் நித்திரை குழம்பிவிடக் கூடாது என்று மனம் பதபதைத்துக்கொண்டிருந்து.

சற்று பொறாமையாயும் இருந்தது அவளின் தந்தையில், உலகின் பேரழகை கையில் வைத்திருக்கிறாரே என்று.

அவளைப் பார்ப்பதும், முகத்தை வருடுவதும், தலைமுடியை கோதிவிடுவதுமாய் இருந்தேன் சில நிமிடங்கள்.

இப்போது அவள் தந்தையின் கழுத்தை கட்டியிருந்த கைகளை விடுவித்து, கைகளை தொங்கவிட்டபடியே பெருந்தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாள்.

என்னையறியாமலே அவளின் கையினுள் எனது ஆட்காட்டி விரலை வைத்தேன். அவளின் கையின் வெப்பம் எனது குழந்தைகளின் வெப்பததைப்போலிருப்பதாய் உணர்ந்தேன்.

அப்போது தெய்வம் என் விரலை இறுக்கமாய் பற்றிக்கொண்டது. நான் மோட்சமடைந்திருந்தேன், அடுத்துவந்திருந்த சில கணங்கள்.

என் மனம் பல ஆண்டுகளுக்கு முன்பான நாட்களில் நனைந்துகொண்டிருக்க அவளின் முகத்தை மெதுவாய் வருடினேன். தெய்வீகமாய், அவள் தூக்கத்தில் சிரித்தாள்.


இன்றைய நாள் மிக மிக நல்லது.


இது அதித்தி என்னும் அக் குழந்தைக்குச் சமர்ப்பணம்.


பிரிந்தது ஓர் உயிர்

அவன் எனக்கு அறிமுகமாகியது 2008ம் ஆண்டு யூலைமாதம் என்றே நினைவில் இருக்கிறது. என்னைப் போல் அவனும் கறுப்பன்.

காலம் எம்மை பலமாய் இணைத்துப்போட்டது. நான் எங்கு சென்றாலும் அதிகமாக என்னுடயே வருவான். நானின்றி அவன் எங்கும் சென்றது கிடையாது. எனது சுமைகளை எதுவித முகச்சுளிப்பின்றியும் தாங்கிக்கொள்ளும் பெரிய மனது அவனிடமிருந்தது. நானும் அவனின் சுமைகளை சுமந்து திரிந்திருக்கிறேன். என்னைக் கண்டவர்கள் அனைவரும் அவனையும் நிட்சயமாகக் கண்டிருப்பார்கள்.  அவ்வளவு ஒற்றுமை எம்மிடையே இருந்தது.  நாம் இணைந்து வெளிநாட்டுப் பயணங்களும் செய்திருக்கிறோம்.

நான் களைத்துப்போகும் போதெல்லாம் அன்புடன், தோளில் கைபோட்டு எதையாவது உண் அல்லது குடி என்று கூறும் நண்பன் அவன். இன்று என்னை தெம்பூட்டும் நண்பனை இழந்திருக்கிறேன். வாழ்க்கை என்பது நிலையில்லாது என்பதை வாழ்க்கை மீண்டும் எனக்கு கற்பித்திருக்கிறது. மரணத்தைப் போன்றதோரு ஒரு சிறந்த ஆசான் எதுவுமில்லை. அது, தன்னை பல மனிதர்களின் மனதில் ஆழமாகப் பதிந்து போகிறது. என் நண்பனின் பிரிவும் அப்படியானதே.

நான் அவனை முதன் முதலில் சந்தித்தபோது மிகவும் திடகாத்திரமான உடம்புடன் தான் இருந்தான். காலப்போக்கில் சில பல நோய்கள் அவன் உடல்நிலையை பலவீனமாக்கின. மருந்து மாத்திரைகளில் நாட்டமற்ற மனிதன் அவன்.

அவன் எப்போதுமே ஆழமான மௌனத்தைக் கடைப்பிடிப்பவன். என்னைப் போல் அலட்டித்திரியும் குணம் அவனிடமில்லை. அவனுக்குள் பலதும் இருக்கும். பலதையும் உள்ளடக்கியவனே அவன். முக்கியமாய் புத்தகங்களை தன்னுடன் எப்போதும் வைத்திருப்பான். இறுதியாய் அவன் வைத்திருந்த புத்தகம் புஸ்பராணியின் ”அகாலம்”. அவன் காலமும் அத்துடன் அகாலமாகியது தான் வேதனை.

ஒரு நாள் ஒரு நண்பன் தலையிடிக்கிறது என்றான். இந்தா என்று குளிசையை நீட்டினான். வேறொரு நாள் நாம் ஆப்பிள் சாப்பிடும் போது எமக்குக் கிடைத்த அப்பிள் பழத்தை இரண்டாக வெட்‌டவேண்டியேற்பட்டது. தன்னிடம் இருந்த சிறு கத்தியை நீட்டினான். இன்னொரு நாள் ஒரு நண்பர் எழுதுவதற்காக பேனை தேடினார், அதுவும் அவனிடமிருந்தது. குடை, நீர்,  கணணி இப்படி எதையும் தன்னோடு கொண்டலையும் அற்புதமான ஜீவன் அது.

முடியாது என்று அவனிடம் இருந்து வார்த்தை வெளிப்பட்டது இல்லை. எதையும் தன்னை வருத்தியென்றாலும் செய்யும் குணம் நான் அவனை சந்தித்த முதல்நாளில் இருந்தே அவனிடம் இருந்தது. அவனிடம் இருந்து நான் கற்றுக்கொள்வதற்கு அதிகமிருக்கிறது.

ஒரு வருடத்திற்கு முன் அவனுடம்பில் ஏற்பட்ட சில காயங்கள்  அவனது உடலை பலமாய் பாதித்தது. ஒரு காயம் ஆறுவதற்கு முன் மறுகாயம், அது ஆறுவதற்கு முன்  இன்னொன்று என்று விதி அவனுடன் விளையாடிக்கொண்டே இருந்தது. அவனின் கட்டுமஸ்தான உடலும் காலப்போக்கில் வலுவிழந்து அவனை முன்பைப்போல் சுகதேகியாய் நடமாட முடியாது முடக்கிப்போட்டது. இருப்பினும் என்னுடன் அலைந்து திரிந்தான்.

நானும் என்னாலானதைச் செய்து பார்த்தேன். விதி சில முடிவுகளை எடுக்கும் போது நான் அல்ல யார் எதைச் செய்தாலும் அது விதியின் படியே செல்லும் என்று நான் கடந்துவந்தபாதை எனக்கு அறிவித்திருக்கிறது. நண்பனின் வாழ்க்கையிலும் அப்படியே நடந்தது.

நண்பனும் நானும் இரண்டு நாட்களுக்கு முன் ஒஸ்லோவின் வீதியொன்றில் நடந்து கொண்டிருந்து போது எனது ஒரு பக்கத்து தோளில் கையை ஊன்றியபடியே வந்துகொண்டிருந்தான். அவனின் சுகயீனத்தின் கனத்தை நான் எனது தோளில் உணர்ந்தேன்.

கண்ணிமைக்கும் நேரத்தில் தோளில் இருந்து அவன் கை சறுக்கியதை உணர்ந்து திரும்பிப்  பார்த்தேன். மூச்சுப் பேச்சற்று வீதியில் கிடந்தான். அள்ளியெடுத்து அணைத்துக்கொண்டேன் அவனை. உடல் குளிர்ந்தது போலிருந்தது. எம்மைக் கடந்து சென்றவர்கள் பரிதாபத்துடன் என்னைப் பார்த்தார்கள்.

அவனைத் தூக்க சிலர் உதவினர். நெஞ்சோடு அணைத்தபடியே அருகில் இருந்த கடைத் தொகுதிக்குள் அவனைக் கொணடுபோனேன் போனேன். பலரும் என்னைத் திரும்பிப் பார்த்தார்கள். உதவிக்கு எவரும் வரவில்லை.

அருகில் இருந்த கடைக்குள் அவனைக்கிடத்தினேன்.

அக் கடையில் அமர்ந்திருந்த அழகி நட்புடன் புன்னகைத்தாள். ஏதும் உதவி வேண்டுமா என்றாள். ஆம் என்று தலையாட்டினேன். அருகில் உட்கார்ந்து நண்பனை பரிசோதித்தாள். மௌனமாய் நிமிர்ந்து பின்பு உதட்டைப் பிதுக்கினாள்.

உனது தோள் பை (rucksack) இனிபாவிக்க முடியாதளவுக்கு கிழிந்துவிட்டது. இதனால் இனி எதுவித பிரயோசனமும் இல்லை என்றாள். அத்துடன் பயப்படாதே, அங்கே பல புதிய தோள்பைகள் (rucksack) இருக்கின்றன என்றாள்.

அவள் காட்டிய திசையில் சென்று, நான்  எனது புதிய நண்பனை தேடத்தொடங்கினேன்.

எனது பழைய தோள் பை (rucksack)யின் ஆத்மா சாந்தியடையக் கடவதாக!

நீங்கள் என்னை கொல்லாமலும் இருக்கக் கடவதாக!

புறக்கணிப்பின் கால்கள் புகைபோன்றது

அண்மையில் ஒரு நண்பரைச் சந்தித்தபோது அவர் மிகவும் நலிந்த மனநிலையில் இருந்தார். இருவரும் உரையாடிக்கொண்டே இலையுதிர்காலத்து மாலையிருட்டில் நடந்துகொண்டிருந்தோம். மழையும் குளிருமாய் இருந்தது ஒஸ்லோவின் வீதிகள். எங்காவது உட்கார்ந்து தேனிரருந்தியபடியே பேசலாம் என்றபடியே நடந்துகொண்டிருந்தோம்

ஒரு ஒதுக்குப்புறத்துத் தேனீர்க்கடையொன்றில் அமர்ந்து தேனீர் தருமாறு கேட்டுவிட்டு உட்கார்ந்து, இருவரும் குளிர் காலத்து உடைகளை களற்றி கதிரையில் வைத்துத்ததும் உடலில் இருந்து பெரும்பாரம் இறங்கியது போலிருந்தது. இன்னும் 5 மாதத்துக்கு குளிர் தான் என்று அங்கலாய்த்தார் நண்பர். நானும் அதை ஆமோதித்தேன்.

இருவரின் பேச்சும் வாழ்க்கைபற்றித் திரும்பியது. வாழ்கையில் புறக்கணிப்பு என்பது எந்தளவுக்கு ஒரு மனிதனை பாதிக்கிறது என்று ஆரம்பித்த நண்பர் பேசி முடித்த போது அவர் கண்கள் கலங்கியிருந்தன. எனது கண்களும் தான். எங்களில் எத்தனை மனிதர்கள் எத்தனை எத்தனை அந்தரங்கங்‌களை மௌனமாய்ச் சுமந்தபடி அலைந்து திரிகிறோம்? வாழ்க்கையின்பால் பலத்த ஏமாற்றத்தில் இருந்தார், அவர். தனிப்பட்ட வாழ்க்கை, குடும்பவாழ்க்கை, பொதுவாழ்க்கை எங்கும் புறக்கணிப்பின் நிழல் அவரைத் தொடர்ந்துகொண்டிருந்தது.

புறக்கணிக்கப்படுவதன் வலியையும், புறக்கணிக்கப்படும் போது ஏற்படும் குரூர இன்பம் இவையிரண்டையும் தான் அனுபவித்திருப்பதாயும், இவையிரண்டாலுமே தனது வாழ்க்கைத்துணையுடனான நட்பு, அன்பு, அன்னியோன்யம், புரிந்துணர்வு, சில மனிதர்களுடனான நட்புகள் ஆகியவை தொலைந்துபோயின என்ற போது நானும் அவரின் கருத்துடன் உடன்பட்டிருந்தேன்.

எப்போது புறக்கணிப்பு மனிதர்களுக்கிடையே ஆரம்பிக்கிறது? எவ்வாறு அது ஒரு நெருக்கமான உறவுக்குள் புகுந்து, அவ்வுறவுகளைப் பிளவடையச்செய்கிறது? இதில் இருந்து மீண்டுகொள்ள முடியாதா? என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தோம்.

அடுப்பங்கரையின் புகைபோன்று புறக்கணிப்பு எதுவித ஓசையும் இன்றி மனிதர்களின் வாழ்வுக்குள் புகுந்து, நிறைந்து, நிமிர்ந்து பார்க்கமுடியாதளவுக்கு வாழ்வினை சிரமப்படுத்துகிறது. ஏமாற்றங்களில் தான் புறக்கணிப்பின் பிறப்பு நிகழ்கிறது. அதன் பின் அது எங்களுடனேயே வாழ்நாள் முழுவதும் ஒட்டிக்கொண்டுவிடுகிறது. அது தன் சுமையைச் சுமக்கும் பொறுப்பை அது எங்கள் மீது சுமத்திவிட்டு அது எங்கள் மேலேயே சவாரிசெய்கிறது.

நண்பரின் சரிதத்துடன் நானும் என் வாழ்வினை ஒப்பிட்டுப்பார்த்தால், புறக்கணிப்பு என் வாழ்வின் எந்தக் காலகட்டத்தில் உட்புகுந்தது என்பதை திட்டவட்டமாகக் கூறமுடியாதிருக்கிறது. திருமணமாகி காதல்கசிந்துருகியபோதா? காமம் வடிந்ததோடியபின்பா? குடும்பம் குட்டி என்றாகியபோதா? அல்லது எனது சுயம் மறுக்கப்பட்டபோதா? வாழ்வின் எல்லா படிநிலைகளிலும் புறக்கணிப்பினை உணர்ந்ததாகவே நினைவு பதிலளிக்கிறது. அதேபோல் நானும் தெரிந்தும் தெரியாமலும் மற்றையவரை புறக்கணித்திருக்கிறேன் என்பதை ஏற்றுக்கொள்வதில் எதுவித வெட்கமும்இல்லை, எனக்கு.

வாழ்வின் எல்லாபடிநிலைகளிலும், ஏமாற்றங்கள் என்னை அல்லது மற்றையவரை சுழ்ந்த கணங்களில், புறக்கணிப்பின் புகை எம்மிருவருக்குமிடையில் புகையத்தொடங்கியிருக்கவேண்டும். அதை நாம் நுகர்ந்தறியத் தவறியதன் விளைவை இன்று அனுபவிக்கிறோம். புறக்கணிப்பிற்கு, புரிந்துணர்வு என்பதை புரியாதிருப்பதும் ஒரு முக்கிய காரணம் என்றே எண்ணத் தோன்றுகிறது. புரிந்துணர்வு இருப்பின் ஏமாற்றங்கள் குறையுமல்லவா. புரிந்துணர்வு என்பது இருபாலாருக்குமே அவசியம்.

நீண்டகால புறக்கணிப்புக்கள் மனித உறவுகளின் மென்மைத்தன்மைகளை, ஈரலிப்பை மரத்துப்போகச் செய்கிறது. ஒருவரின் மென்மையான உணர்வுகளைப் பற்றி மற்றையவர் உணரும் தன்மையை இழந்துபோகிறார். இதுவே ஒரு உறவின் முடிவின் ஆரம்பம். கண்களில் அன்பு மறைந்து குரோதம் குடிவந்துவிடுகிறது. குரலில் அன்பின் ஈரம் வறண்டு காய்ந்துபோகிறது, வெறுப்பும் எரிச்சலும் தெறிக்க ஆரம்பிக்கிறது . செய்கைகளில் அலட்சியமும், சினமும் தெரிய ஆரம்பிக்கிறது.  அவர்களுக்கிடையே பேச்சற்ற நிலை வரும் போது புறக்கணிப்பு தனது முழுவெற்றியையும் கொண்டாடிக்கொண்டிருக்க ஒரு மனிதஉறவு தொலைந்துபோயிருக்கும்.

நானும் இப்படியானதொரு நிலையைக் கடந்துவந்தவன். என்னைப்போல் பலரும் இப்படியானதொரு வாழ்வினை வாழ்ந்துகொண்டிப்பதை நன்கு அறிவேன். விழுங்கவும் முடியாது மெல்லுவும் முடியாது போன்ற மிகவும் கொடுமையான வாழ்வுதான் அது. எனது நண்பரும் வாக்குமூலத்தின் சாரமும் இவற்றையே கூறின..

எனது நண்பர் தேனீரை ஊறுஞ்சியபடியே என்னைப் பார்த்து இப்படியான ஒரு உறவில் தொடர்ந்தும் வாழவேண்டுமா என்றார். நான் அப்படியானதொரு வாழ்க்கையை வாழ்வதினால் உனது ”வாழ்க்கைத் தரம்” உயர்கிறது என்று நினைக்கிறாயா என்றேன். மெளனமே பதிலாயிருந்தது அவரிடம்.

மனிதர்களால் மீண்டும் புறக்கணிப்பற்ற அன்பின் ஆரம்பகாலத்திற்குச் செல்லலாம் என்னும் நம்பிக்கை என்னிடம் இல்லை. அப்படியான பொறுமையும், நற்குணமும் என்னிடமில்லாதிருக்கலாம். ஆயினும் எனது பலவீனங்களுடனேயே நான் எனது வாழ்வினை வாழப்பழகிக்கொண்டிருக்கிறேன். அது ஒருவிதத்தில் பெருத்த ஆறுதலைத்தருகிறது.

புறக்கணிப்பு என்பது புரையோடிய புண்போன்று ஆறாது தொடர்ந்துகொண்டே இருக்கும். ஆம், எனக்கு அப்படித்தான் இருக்கிறது என்றேன், நண்பரிடம். தலையைக் குனிந்தபடியே இருந்த அவரின் தலை மேலும் கீழுமாக ஆடிக்கொண்டிருந்தது.

வீடு, வசதி, வங்கியிலே இருப்பு, ஊருக்குள் பெயரும் புகழும் என்று புறவாழ்வு நிம்மதியாருந்தாலும் அகவாழ்வானது நிம்மதியின்றி இருக்கும் தன்மையின் தார்ப்பர்யத்தை நான் நன்கு அறிவேன். எனது நண்பரும் அதை ஆமோதித்தார். வாழும் வாழ்க்கையின் தரம் என்பது மனிதர்களுக்கு மனிதர்கள் வேறுபடுகிறது. தேடுதல் இருப்பவர்கள், அது பற்றிய புரிதல் இருப்பவர்களே பல சிக்கல்களை, மனப்போராட்டங்களை கடந்துகொள்ளவேண்டியிருக்கிறது. தனது அகவாழ்வின் வாழ்க்கைத்த்தரம்பற்றி அலட்டிக்கொள்ளாதவர்கள் ஒருவிதத்தில் பல சிக்கல்களில், மனப்போராட்டங்களில் இருந்து தப்பித்துக்கொள்கிறார்களாஎ ன்ற கேள்வி எம்மிருவரிடமும் இருந்தது.

தன் வாழ்வில் இப்படியானதொருநிலை வரும் என்பதை நண்பர் எதிர்பார்த்திருக்கவில்லை என்றும், இப்போது என்ன செய்வது என்று தடுமாறிக்கொண்டிருப்பதாயும், முறிந்துபோன மனங்களை சீர்செய்வது சாத்தியமற்றது என நன்கு அறிவதாயும் கூறினார். மௌனமாய், அவர் பேச்சைக் கேட்டுக்கொண்டிருந்தேன்.

அவரின் இல்வாழ்வு தோல்வியடைந்திருப்பதை ஏற்கும் மனம் இதுவரை அவருக்கு வாய்க்கவில்லை என்பது புரிந்து. பெற்றோர், சகோதர சகோதரிகள், உறவினர்கள், நண்பர்கள், சமூகம் என்று பலருக்காகவும் அவர் பயந்துகொண்டிருப்பதை உணர்த்தியது அவர் பேச்சு. இது ஒன்றும் புதிதில்லை. எமது சமுதாயத்தில் பலரும் கடந்துகொள்ளும் ஒரு படிநிலைதான் இது, ஆனால் மனமுறிவுகளை ஆழ்மனரீதியாக, உணர்வுபூர்வமாக அவர் சீர்படுத்திக்கொள்ளமுடியாதுபோயின் சிரமமான மன அழுத்தங்களுடன் நீங்கள் இருவரும் வாழும்நிலை ஏற்படலாம் அதற்குத் தயாரா என்றேன். எங்களுக்கிடையில் சில மௌனமான கணங்கள் கடந்துபோயின. இருவரினதும் தேனீர்க்கோப்பைகளும் காலியாகியிருந்தன.

என்னசெய்யலாம் என்றார் என்னிடம்.

மனதுடன் உரையாடு, மீண்டும் மீண்டும் உரையாடு. பதில் கிடைக்கும். எப்போ என்று என்னிடம் கேட்காதே. ஆனால் நிட்சயமாய் ஒரு நாள் பதில் கிடைக்கும் என்றேன்.

அர்த்தமாய் புன்னகைத்தபடியே எழுந்து குளிர்காலத்து உடைகளை அணிந்துகொண்டு புறப்பட்டோம். வெளியே குளிர் முகத்திலடித்தது. விடைபெற்றுக்கொண்ட நண்பர் எதிரே இருந்த வீதியில் இறந்கி நடக்கத்தொடங்கினார். நடையில் தளர்வு தெரிந்தது.

நிலக்கீழ்தொடருந்து நிலயத்தைநோக்கி நடக்கலானேன், நான். மனதுக்குள் நண்பரின் மனதுக்கு என்ன பதில் கிடைக்கும் என்று சிந்தனையோடிக்கொண்டிருந்து.
 
 

மாவீரர் வாரத்தில் களியாட்டவிழா - வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது


நான் 23.10.12 அன்று The Srilankan assosiation of norway மாவீரர் நாட்கள் நடைபெறும் காலப்பகுதியில் ஒரு களியாட்டவிழாவினை ஒஸ்லோவில்  தமிழர்களை இணைத்து நடாத்துவது பற்றி எனது முகப்புத்தகத்தில் ஒரு பதிவிட்டிருந்தேன்.


பார்க்க:
முகப்புத்தகப் பதிவு

23ம் திகதி எழுதிய பதிவுக்கும் இன்றைக்கும் (15.11) இடையிலான காலப்பகுதியில் எனக்குக் கிடைத்த தகவல்கள் சிலவற்றை நான் பகிரவும், எனது சில தனிப்பட்ட கருத்துக்களை பதியவும் விரும்புகிறேன்.

  1. நோர்வேக்கான இலங்கைத் தூதுவர் சமூகமளித்த, தமிழர்கள் கூடும் பொது இடமொன்றில் இந் நிகழ்வு பற்றிய விளம்பரங்களை இணைக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார். இதன் மூலம் தூதுவராலயத்திற்கும் இந் நிகழ்விற்கும் நெருங்கிய தொடர்பிருப்பது புலப்படுகிறது.
  2. The Srilankan assosiation of norway அமைப்பினரால் இந் நிகழ்வு வருடாந்தம் கார்த்திகை மாத இறுதி வாரத்தில் நடைபெறும நிகழ்வு அல்ல.
  3. இந்நிகழ்விற்கு அழைக்கப்பட்ட விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக்கருத்துடைய சில தமிழர்கள், தாம் ஏற்கனவே பிளவுபட்டிருக்கும் எமது சமுதாயத்தின் நலன் கருதியும், மாவீரர்களைக் கொண்டாடும் எம்மவர்களின் கருத்துக்களை மதிப்பதாலும் தாம் இந் நிகழ்வினில் கலந்துகொள்ளவில்லை என அறிவித்திருக்கிறார்கள்.
  4. தாம் இக் களியாட்டவிழாவினைத் திட்டமிட்டபோது மாவீரர் தினம் வருவது தமக்கு தெரியாது என்றும், தற்போது நுளைவுச்சீட்டுக்கள் விற்றபின் இந் நிகழ்வினை நிறுத்தமுடியாது என்றும், எனினும் அனைவரின் ஒற்றுமையையுமே தாம் விரும்புவதாகவும் நிகழ்ச்சித் தயாரிப்பாளர்கள் கூறுகிறார்கள்.
  5. தற்போது Roots  இசைக்குழுவினர் இந்நிகழ்விற்கு இசையமைக்கவில்லை. தனிப்பட்ட சில தமிழர்கள்  இவ்விழாவிற்கு இசையமைக்கிறார்கள்.

எனது கருத்துக்கள்:

The Srilankan assosiation of norway அமைப்பினர் சில தமிழர்களைகளை உள்வாங்கியும், சில தமிழ் இசைக்கலைஞர்களை இணைத்தும் இந்நிகழ்வினை திட்டமிட்டபோது, அத்தமிழர்கள் மாவீரர்தினம் பற்றி கூறவில்லை என்றும், The Srilankan assosiation of norway க்கு வருடாந்தம் நடைபெறும் மாவீரர் தினம் வருவது தெரியாது என்று கூறுவதை நாம் ஏற்றுக்கொள்கிறோம் எனக் கொள்வோம்.

அதேவேளை இக்களியாட்டவிழா பற்றிய தமிழர்களின் விசனம் பற்றி எனது நண்பர்கள் The Srilankan assosiation of norway க்கு அறிவித்திருந்தார்கள். அவை 23ம் திகதியளவிலேயே அறிவிக்கப்பட்டன.

ஏறத்தாள விழா நடைபெறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே, விழாபற்றிய அறிவிப்பு வெளிவந்து மிகக் குறுகிய காலத்தில் இது பற்றி தமிழர்களால் அறிவிக்கப்பட்டும், இந் நிகழ்வினை  பின்போட்டிருக்கமுடியாதென்று கூறுவது எனக்கு ஆச்சர்யத்தைத் தருகிறது.

இவ்விழாபற்றிய அறிவித்தல் கிடைத்து ஒரு சில நாட்களுக்குள் நுளைவுச்சீட்டுக்கள் விற்றுவிட்டன, அதனால் திகதியை மாற்றமுடியாது என்னும் கருத்தை கூறுவது நியாயமா என்பதையும், ஒரு மாற்றுத்திட்டத்தை ஏற்படுத்தியிருக்க முடியாதா என்னும் கேள்விக்கான விடையை உங்களிடமே விட்டுவிடுகிறேன்.

பிளவுண்டிருக்கும் இனங்களுக்கிடையிலான இணக்கப்பாட்டை, ஒற்றுமையை மதிக்கும் எவரும்  தமிழர்களின் உணர்வுரீதியான முக்கிய விடயம் சுட்டிக்காட்டப்படும் போது அது பற்றி சிந்திக்காது தொடந்தும் கசப்புணர்வுகளை வளர்க்கும், காயங்களைக் கிளரும்,  நடவடிக்கைகளை முன்னெடுக்கமாட்டார்கள் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.

சமூகங்களுக்கு இடையே நட்புறவையும், ஒற்றுமையையும் சகிப்புத்தன்மையையும் வளர்க்கவேண்டும் என்று கூறும் மனிதநேயமுள்ள தமிழர்கள், தமிழ்பேசும் மக்கள், பெரும்பான்மையினத்தவர்கள் ஆகியோர்  ஈழவிடுதலைப் போடாட்டத்தில் பங்குபற்றிய அனைத்து விடுதலைப் போராளிகளும் தமிழர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பர்கள் அனைவரின் மனங்களிலும் தியாகிகளாகவே இருக்கிறார்கள், இருப்பார்கள் என்பதனை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்வார்கள். காரணம் அவர்களிடம் சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இருக்கிறது.

இன ஒற்றுமையையும், சமத்துவத்தையும் விரும்பும் The Srilankan assosiation of norway க்கு சக மனிதனின் மனதையும், அவனது கருத்துக்களுக்கு மதிப்பளிக்கும் பெருந்தன்மையும் இல்லாதிருக்கிறது என்பதையே அவர்களின் இந் நடவடிக்கை காட்டுகிறது. அத்துடன் அவர்கள் தமிழர்கள் மத்தியில் தமக்கிருக்கும் நற்பெயரையும் சிதைத்துக்கொள்கிறார்கள் என்பதயையும் அவர்கள் உணராதிருக்கிறார்கள்.

இனங்களுக்கிடையில் நல்லுறவைப் பேணுகிறோம் கூறப்படும் கருத்துக்களை இலங்கைத் தூதுவராலயம் நேர்மையாக முன்னெடுக்கிறது என்றால், அவர்களுக்கிருக்கும் ”சகிப்புத் தன்மையுடன், நட்புறவுடன், பெருந்தன்மையுடன்” இவ் விழாவினைப் பின்போட்டிருக்கலாமல்லவா?

இலங்கைத் தூதுவரே இவ்விழாபற்றி தமிழர்கள் கூடுமிடத்தில் விளம்பரம் செய்வது எதைக்காட்டுகிறது? இதுவா அவர்களால் கூறப்படும் சகிப்புத்தன்மை, பெருந்தன்மை, நட்புணர்வு, இணக்கப்பாடு?

எனக்கு பெரும்பான்மையினத்தவருடன் எதுவித விரோதமோ குரோதமோ இல்லை. ஆனால் விழா நடைபெறும் காலம் தவறு என்பதே எனது கருத்து.

தவிர இவ்விழாவின் மூலம் ஒரு சிறுபான்மைச் சமூகத்தின், பெரும்பான்மையினரை வேண்டுமென்றே சீண்டுவது போலவும், அச் சமூகத்தை அச் சமூகத்தவரைக்கொண்டே மேலும் பலவீனமாக்குவதையும், பிளவுபடுத்துவதையும் மிகவும் தெளிவாக காணக்கூடியதாகவிருக்கிறது. பிரிததாளுதற் தந்திரமே இது. இதை வேறு என்னவென்று கூறுவது?

விடுதலைப் புலிகளின் கருத்துக்களுக்கு மாற்றுக் கருத்துக்களைக்கொண்டிருக்கும் ஒஸ்லோவாழ் ஏனைய தமிழ் இயக்கத்தவர்கள் கூட, தமக்கு இவ் விழாவிற்கான அழைப்புக் கிடைத்த போதும், அதனை எமது சமூகத்தின் நலம் கருதி, அழைப்பினை ஏற்கமுடியாது என்றும் அதற்கான காரணத்தை விளக்கியும் உள்ளார்கள்.

இவ்விடயம் பற்றிய எமது சமூகத்தின் அதிர்வுகளை உள்வாங்கி, Roots இசைக்குழு இவ்விழாவிற்கு இசையமைக்காது தவிர்த்துள்ளது பாராட்டத்தக்கது. கலைக்குழுக்களுக்கும் சமூகம் பற்றிய பிரஞ்ஞை இருக்கிறது, எமது சமூகத்தின் கருத்துக்களுக்கு அவர்கள் மதிப்பளிக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணமாகும்.

ஆனால் வேறு சில தமிழர்கள் இந் நிகழ்வில் கலந்து கொள்கிறார்கள், இசையமைக்கவும் செய்கிறார்கள்.

இவ்விழாவில் கலந்து கொள்ளும் தமிழர்களுக்கு மாவீரர்நாள் பற்றிய பிரஞ்ஞை இல்லாதிருக்கலாம் அல்லது அவர்கள் மாவீரா்நாளில் ஏற்புடையாதவர்களாக இருக்கலாம். அது அவர்களின் தனிப்பட்ட கருத்து. அதில் தலையிடுவதற்கு எவருக்கும் உரிமையில்லை.

ஆனால் அவர்கள் அவ் விழாவில் கலந்துகொள்வதால், எமது சமூகத்தில் ஏற்படும் விசனங்களையும், கசப்புணர்வுகளையும், பேரினவாதிகளின் பிரச்சாரங்களுக்கு அவர்கள் துணைபோவதையும்  அறியாதிருப்பது மிகவும் தூரதிஸ்டவமானது.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளும் தமிழர்கள் பெரும்பான்மை தமிழர்களின் மன உணர்வுகளை புரிந்துகொள்ளவேண்டும். கருத்துவேற்றுமை இருப்பினும் தமிழர்கள் சில விடயங்களில் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள் என்னும் எண்ணத்தை பலருக்கும் புரியவைக்கவேண்டிய காலத்தில் நாம் வாழ்கிறோம் என்பதை மறத்தலாகாது.

வெளிப்படையான சுயலாபமும், பிரபல்யமும், ஏனைய வசதிகளுக்காகவும் பேரினவாதத்தின் இப்படியான திட்டங்களுக்கு துணைபோவதன் அபாயத்தை தமிழர்களாகிய நாம் நன்கு உணரவேண்டும்.

இந் நிகழ்வில் கலந்து கொள்ளவிருக்கும் தமிழர்களே, தமிழ்பேசும் மக்களே, பெரும்பான்மையினத்தைச்சேர்ந்தவர்களே! இன்னும் காலம் கடந்துவிடவில்லை என்பதை நாங்களும், நீங்களும் அறிவோம்.

வரலாறு எல்லோரையும் கவனித்துக்கொண்டேயிருக்கிறது என்பதை மறக்காதிருப்போமாக!

கருத்தில் உடன்படுகிறீர்கள் எனின் ஏனையவர்களுடன் பகிர்ந்தால் மகிழ்ச்சி.


தோழமையுடன்
சஞ்சயன்

காயங்களின் வடுக்கள்

அபியும் நானும் படத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்தேன். அதில் மகளுக்கு காதுகுத்தியபோது ரத்தம் வந்தது பற்றி பிரிதிவிராஜ், பிரகாஸ்ராஜ்இடம் விபரிக்கும் காட்சியின் பின் என்னால் இன்று படத்தில் லயிக்க முடியவில்லை. மனது நினைவகளுக்குள் மூழ்கத்தொடங்கியது.

சில நாட்களாகவே எழுதுவதற்கான உந்துதல்இருந்தும் எதை எழுதுவது என்று தெரியாதிருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கனவில் இருந்து, நான், விளித்துக்கொண்டபோது எழுதுவதற்கு அருமையான ஒரு கரு கிடைத்திருந்தது. அந்த மகிழ்ச்சியில் மீண்டும் தூங்கிப்போனேன். ஆனால் காலையில் அந்தக் கனவும், அந்தக் கருவும் மறந்துபோயிருந்தது. அந்தக் கரு என்னவென்று சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் அது நினைவில் வருவதாயில்லை.

ஆனால் அபியும் நானும் எனக்கு ஒரு கருவைத் தந்திருக்கிறது. என் குழந்தைகளுடன் வாழ்ந்திருந்த காலங்களில் நானும் பிரகாஸ்ராஜ் போன்றே இருந்தேன். பிரகாஸ்ராஜ்க்காவது ஒரு பெண் குழந்தை. எனக்கோ இரண்டு: அவர்களுடனான நாட்கள் மிகவும் இனிமையானவை. இன்றும் என்னைத் தாலாட்டும் நாட்கள், அவை.

குழந்தைகளுக்கு சிறு வலியேற்படும்போதும் நாம் வெகுவாய்ப் பதறிப்போகிறோம். ஆனால் குழந்தைகளோ தங்கள் வலியைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. இப்படித்தான் ஒரு நாள் எனது தொழிட்சாலைக்கு வந்த தொலைபேசி, மகள் ஒரு தகரப்டப்பா ஒன்றினுள் விரலைவிட்டு இழுத்ததால் அது அவளின் விரலை பெரிதாக வெட்டிவிட்டதாகவும் உடனே வரவும் என்று கூறியது.

வீடு சென்று மகளை அழைத்துக்கொண்டு வைத்தியரிடம் சென்றேன். மகள் அழுது முடித்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

வைத்தியரும் வந்தார். விரலைச்சுற்றியிருந்த துணியை மகளுடன் பேசியபடியே, அவள் அழாதிருப்பதை பாராட்டியபடியே ‌மிக மெதுவாய் அகற்றிக்கொண்டிருந்தார். என்மடியில் இருந்த மகளும் அவரின் பேச்சுக்கு பதில் கூறியபடியே தனது காயத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

வைத்தியர் காயத்த்தை சுற்றியிருந்த துணியை அகற்றினார். ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியில் பெருங்காயம் ஒன்று இருந்து. மகளுக்கு வலித்திருக்கவேண்டும் தனது முகத்தை எனது கழுத்துக்குள் புதைத்து விக்கி விக்கி அழத்தொடங்கினாள். வைத்தியர்  விறைப்பு மருந்தை இட்டவாறே அவளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அவளைத் தேற்ற முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

அவளின் கையில் இருந்து வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கண்டதும் எனக்கு தலைசுற்றத் தொடங்கியது. அசௌகரீயம் உணர்ந்தேன். வைத்தியரிடம் கூறியதும் ஒரு குவளையில் நீர் தந்தார். அதை அருந்தியதும் ஓரளவு நிதானம் திரும்பியது. காயத்தை பரிசோதித்த வைத்தியர், இக்காயத்திற்கு தையல் போடவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மருந்திட்டு காயம் ஆறும்வரையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காயத்தினை சுத்தப்படுத்தி மருந்திடவேண்டும் என்றும், விரலை மேல்நோக்கி வைத்திருக்கும்படியும் கூறி எம்மை அனுப்பினார்.

வரும் வழியில் மகள் கேட்ட அனைத்து இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுத்தேன். அவளோ காயத்தை மறந்துபோயிருந்தாள். ஆனால் முழங்கையை மடித்து  மருந்திட்ட விரலை மட்டும் நிமிர்த்திவைத்திருந்தாள். வீடு வந்ததும் அவளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். அதன் பின்னான சில நாட்கள் அவளுக்கு மருந்திடும் போது அல்லது காயத்தினை சுத்திகரித்து புதிய துணி சுற்றும் போது அவளைவிட எனக்கே அதிகமாக வலித்தது. மிக மிக அவதானமாகவே எதையும் செய்தேன். விரைவாகச் செய், அல்லது என்னை செய்ய விடு என்பாள் மகள், சில வேளைகளில். அவளைவிட எனக்கே அந்நேரங்கள் வலியைத்தந்தன.

அவள் எதைச் செய்தாலும் அவளின் விரல் மட்டும் கீழ்நோக்கி இருக்கவில்லை. எப்பொழுதும் ஒரு விரலை நிமிர்த்திப் பிடித்தபடியே இருந்தாள், நடந்தாள், ஓடினாள், உறங்கினாள், உறக்கத்தில் இருந்து எழும்பினாள்.

அவளைக் குளிப்பாட்டும் போதும் அந்தக் கையை உயரத்தில் பிடித்திருப்பாள். இயற்கை உபாதைகளை கடந்துகொள்ளும் நேரங்களிலும் அவளின் அந்த விரல் மேல்நோக்கி தூக்கப்பட்டிருக்கும்.

சில நாட்களின் பின் அவளின் கை குணமாகியது. டாக்டரிடம் காட்டினோம். குணமாகிவிட்டது என்றார். ஆனாள் மகளோ தனது கைவிரலை தூக்கிப்பிடித்தவாறே நின்றாள். அவளுக்கு இனி கையை கீழேவிடுங்கள் என்று பல நாட்கள் கூறி, அதன் பின்பே அவள் தனது கைவிரலை தூக்கிப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டாள்.

இதன் பின்பான சில வருடங்களில் அவள் தனக்கு தனி அறை வேண்டும் என்றும், அறைக்கு இளவரசிகளின் படங்கள் இருக்கும் சுவரலங்காரத்தை செய்து தாருங்கள் என்றாள். சரி என்று அதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஒரு நாள், நான் சுவருக்கான அழகிய இளவரசிகளின் படம் பதிக்கப்பட்ட அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தேன். என்னிடம் அந்த அலங்கார மட்டைகளை வெட்டும் மிக மிக கூர்மையான  தகடு இருந்தது.

நான் அலங்காரங்களைச் செய்யும் கவனத்தில் இருந்தபோது, அக்காள் அந்த கூர்மையானத் தகட்டினை எடுக்க, தங்கையும் அதை இழுக்க அது தங்கையின் கையினை மிக ஆழமாக வெட்டிவிட்டது. இரத்தம் ஆறாய் ஓடியபோதும் அவளிடம் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அவசர அவரசமாய் துணியினால் சுற்றிக்கட்டி  அவசரசிகிச்சைப்பிரிவுக்கு அவளை அழைத்துப்போனோம்.

அக்காவிடம் இது தற்செயலாக நடந்தது. உங்களில் பிழையில்லை என்று கூறி அவளை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவள் அழுதுகொண்டே சிவந்துபோன கண்களுடன் தங்கையின் அருகிலேயே நின்றிருந்தாள்.

வைத்தியர் எமது வீட்டிற்கு அருகில் இருப்பவராகையால் மகளுக்கு அவரை ஏற்கனவே அறிமுகமாயிருந்தது. அவர்கள் வீட்டில் ஒரு குதிரை இருந்தது. எனது மகளுக்கும் குதிரைப் பைத்தியம் பிடித்திருந்த நாட்கள் அவை. எனவே வைத்தியர் அவளுடன் குதிரைகள்பற்றி உரையாடியபடியே விறைப்பு மருந்திட்டு, அவளின் கையில் 8 தையல்கள் இட்டார். என்னுடலில் தையலிட்டது போன்று துடித்துப்போனேன். ஆனால் அவளோ அழவே இல்லை. வைத்தியரின் கதைகளில் லயித்துப்போயிருந்தாள். 

அக் காயமும் சில நாட்களிகளின் பின் ஆறிப்போயிற்று.

இன்னொருமுறை கையை முறித்துக்கொண்டாள்.  வைத்தியசாலையில் முழங்கையி்ல் இருந்து விரல்கள் வரையிலான பகுதிக்கு Plaster of Paris இட்டு அனுப்பினார்கள்.  வரும் வழியிலேயே  வெள்ளை நிறததிலான அந்த Plaster of Paris இல் என் பெயரை  எழுது என்றாள். எழுதினேன். வீட்டிற்குச் சென்றதும் அக்காளிடமும் பெயரை எழுது என்றாள். அவளும் எழுதினாள். மறு நாள் பாடசாலையில் இருந்து அவள் வீடு வந்த போது அவளின்  கையில் அவளின்  ஆசிரியரின் கையெழுத்தில்  இருந்து வகுப்புத் தோழியர், தோழர்களின் கையெழுத்து  இருந்தது. அதன் பின்பு எமது வீட்டிற்கு  வந்தவர்களும் அவளின் கையில் கையெழுத்திட கட்டளையிடப்பட்டார்கள்.

சில நாட்களின் பின் அவளுக்கு வியர்வை, மற்றும் காற்றோட்டம் இன்மையினால் Plaster of Paris  இருந்த இடத்தில் அசௌகரீயமான உணர்வு ஏற்பட்டது. நானும் மெதுவாய் ஒரு பென்சிலினை அவளின் Plaster of Paris க்குள் இட்டு சொறிந்து விடுவேன். கண்கள் சொருகி சொக்கிப்போயிருப்பாள். அப்பா நீ கெட்டிக்காரன் என்று கூறியபடியே ஒரு முத்தம் பதித்துச் செல்வாள்.

அவளின் கை நனையாமல் அவளைக் குளிப்பாட்டுவது பெரும் வேலை. முதலில் பேப்பர் சுற்றுவேன். பின்பு போலித்தீன் பை சுற்றிக் குளிப்பாட்டுவேன்.  உடைமாற்றும் போது கழுத்தில் இருக்கும் பட்டியில் இருந்து கையைக் மெதுவாய் அகற்றி உடையணிந்தபின் மீண்டும் கையைத் தொங்கவிடுவேன். ஆனால் அதில் அவளுக்கு இஸ்டமில்லை. எனது கண்டனங்களை அவள் கவனித்ததாயில்லை. கழுத்துப்பட்டியில் அவளின் கை இருக்காது. எனினும் எப்படியோ  4 வாரங்களின் பின் அவளின் கை சுகமாகிவிட்டது என்று வைத்தியர் கூறிய பின்பே என் மனம் அமைதியாகியது. அவளின் கையில் இருந்து அகற்றப்பட்ட Plaster of Paris இன்றும் பாதுகாப்பாய் இருக்கிறது ஒரிடத்தில். எனது பெரும் பொக்கிஷங்களின் ஒன்று, அது.

இச்சம்பவங்கள் ஏறத்தாள 6 - 7 வருடங்களுக்கு முன்பு நடந்தவை

அண்மையில் அவளுக்கு 12  வயதான போது அவளைச் சந்தித்தபோது,  நான், அவளின் விரலை வருடியவாறு ”அம்மா, இந்த விரலில் ஏற்பட்ட காயம் நினைவிருக்கிறதா” என்றேன்.

மயக்கும் புன்னகையுடன், ஆம் என்று தலையாட்டினாள். இரண்டு காயங்களும் அவளுக்கு நினைவிருந்தன. அவை பற்றிய சம்பவங்களையும் கூறினாள். நான் பயந்து பயந்து அவளின் விரலுக்கு மருந்திட்ட நாட்களையும், புண் ஆறிய பின்பும் கைவிரலை தூக்கித்திரிந்ததும் அவளுக்கு நினைவிருந்தது. உங்களை வெருட்டி வெருட்டி கனக்க இனிப்பு வாங்கினேன் என்று அவள் கூறிய போது, சேர்ந்து சிரித்தோம்.

அந்தக் காயங்கள் இரண்டும் அவளின் கையில் சிறு வடுக்களைத் தந்திருக்கிறது. 
அந்த நாட்கள், அவளின் நினைவில் பசுமையான நினைவுகளாயிருப்பது எனக்குள் ஒரு இதமான வடுவைத் தந்திருக்கிறது.

வாழ்வு என்றும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. கற்றுக்கொண்டேயிருப்போமாக!


முகப்புத்தகத்தில் ஒரு அந்தரங்கம்


அன்பு நண்பர் ஒருவரின் கணணியுனுள் ஒருவித வைரஸ் புகுந்து அட்டகாசம் பண்ணுகிறதாம், இணையத்தினுள் செல்லும் வேளைகளில் ”அந்த மாதிரியான” படம்தான் திரையில் தெரிகிறது என்றும், அதை தர்மபத்தினி கண்டு சந்தேகப்பட்ட போது, தானும் நகைச்சுவையாக ”எத்தனை நாளைக்குத் தான் உன்னைப் பார்க்கிறரது” என்று ஒரு A ‌ ஜோக் அடித்தாராம்.

அதன்பின் தர்மபத்தினியின் பார்வை மதுரையை எரித்த கண்ணகியின் பார்வை போலிருப்பதாகவும், உடனே இந்தப் பிரச்சனையை தீர்ததுவைய்யுங்கள் இல்லை என்றால் உங்களுடன் தான் நான் இனிமேல் தங்கவேண்டும் என்று கூறியபடியே இரவு 9 மணிபோல் கதவைத்தட்டினார், நண்பர்.

கையோடு கணிணியைக் கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டுவந்திருந்தார்.

எனது இதயம் எதையும் தாங்கும். ஆனால் நண்பரை என்னுடன் தங்கவைப்பதைத் தாங்காது. எனவே கணணியை வாங்கி மேசையில் வைத்தேன்.

நண்பர், எனது சமயலறைக்குள் புகுந்து, ஒரு கிளாஸ் எடுத்துவந்து எனது மேசையில் இருந்த பழரசத்தை ஊற்றி, ரசித்துக் குடித்தார். பின்பு எனது கணிணியை எடுத்து மடியில் வைத்தபடியே முகப்பத்தகத்தில் யாருடனோ சிரித்துச் சிரித்து உரையாடிக்கொண்டிருந்தார். நானோ அவரது கணிணியை இயக்கிக்கொண்டிருந்தேன்.


”டேய், கொம்பியூட்டருக்குள்ள எக்கச்சக்க படம் இருக்கு, முக்கியமா அவள் இந்த வருசம் ஊருக்கு போய் தன்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் என்று ஒரு தொகை படம் இருக்கு. அதுகள் கவனமடா, அதுகளுக்கு ஏதும் நடந்தால் என்னைய இனிமேல் நீ பார்க்க ஏலாது” என்று கணணியைத் தரும்போது கூறியிருந்தார்.
 
அவர் கூறியதை, ”ஒஸ்லோ கஜனி” என்றழைக்கப்படும் நான் மறந்துபோவேன்  என்றோ, அதனால் நான் சிக்கலில் மாட்டுவேன் என்றோ எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.


நானும் எனது மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக சில கேள்விகளைக் கேட்டேன்அவரிடம்.
”டேய்! என்ன ஒப்பரோட்டிவ் சிஸ்டம் வேணும்?”
”எதையாவது போடு, பேஸ்புக்கு போனால் காணும்”
”இல்லை, XP, Vista, Win 7 இதுல எது வேணும்”

நண்பர் தனது Iphone ஐ இயக்கினார். (சம்பாசனை தொடர்கிறது)

”எடியேய், உனக்கு என்ன சிஸ்டம் வேணும் என்று கேக்கிறான்”
”அப்பிடியெண்டால் எனன? (நண்பரின் தர்மபத்தினி)

நண்பர் என்னிடம் ”என்னட்ட சொன்னததை இவளிட்டயும் சொல்லு” என்று நினைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.

”வணக்கம்” என்றேன் நான்
”அண்ணை! அவருக்கு கொம்பியூட்டரைப்பற்றி ஒண்டும் தெரியாது, எல்லாத்துக்கும் எனக்கு போன் பண்ணுறார்” என்றார் நண்பரின் தர்மபத்தினி. (சப்பாஆஆ என்றது எனது உள் மனது)

”இல்ல இல்ல அவன் உங்களில் இருக்குற அளவுகடந்த மரியாதையில் தானே கேக்கிறான்” (எனக்கு அடிக்கடி சமைத்துப்போடும் புண்ணியவதியை சற்று குளிரவைப்பதில் தவறில்லை என்பதால் சற்று தாராளமாகவே அவரைப் புகழ்ந்தேன்)

”அண்ணை! எனக்கு நாடகம், சூரியாவின்ட படம் வந்தால் காணும். மிச்சத்தை அவரிட்ட கேளுங்கோ, அவர வெளியில அலைந்து திரியாம கெதியில வீட்ட வரச்சொல்லுங்கோ” என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

நண்பரோ இரண்டாவது கிளாஸ் கடந்து, சற்று அதிகமாகவே சிரித்தபடியே உதட்டை நாக்கால் நனைத்தபடி முகப்புத்தகத்தில் ஐக்கியமாகியிருந்தார்.

அவனிடம் எதையும் கேட்டால் சிக்கல் வரும் என்ப்தால் Win 7 இன்ஸ்டால் பண்ணினேன். 

நண்பர் நான் இன்ஸ்டால் பண்ணிய அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு போத்தல் வைன் முடித்து மிகவும் ஜாலியான மூடில், முகப்புத்தகத்தில் உரையாடிக்கொண்டிருந்தார். எனது கீபோட் இல் இருந்து புகை வருவது போல் பிரமை ஏற்பட்டது எனக்கு. அவ்வளவு விரைவாக எழுத்தித் தள்ளிக்கொண்டிருந்தார், நண்பர்.

வேலை முடிந்ததும், நண்கரிடம் கூறினேன். நண்பரோ தான் மிகுந்த நிதானத்துடன் இருப்பதாக நினைத்து, எனது கதவினில் சாய்ந்தபடியே, நிதானமாகப் புன்னகைகிறேன், என்று நினைத்து கோணலாகப் புன்னகைத்தார்.

”டேய் மச்சான், நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” இதை இரண்டுதரம் கூறியபின் அடுத்த வசனமாக என்னத்தை கூறுவது என்று யோசித்தார். எதுவும் வாயில் வராததால் அவரால் நிதானமாக கதவில் சாய்திருக்க முடியவில்லை. எனவே கட்டிலில் குந்திக்கொண்டார்.

எனது வாய் சும்மாயிருக்கவில்லை.
”டேய்! என்னது பேஸ்புக்கில உதட்டை நனைத்து நனைத்து எழுதுகிறாய், கனக்க சிரிக்கிறாய், என்ன விசயம்” என்று கேட்டேன்
கோணலான சிரிப்புடன் ”அது ரகசியம்” என்றார்.
பொறுடீ... வீட்ட வந்து ஆத்தாளிட்ட போட்டுக்கொடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டேன்.

கணணியுடன் புறப்பட்ட நண்பர், திடீர் என்று என்னைப் பார்த்து
”டேய்! அந்த ”பலான படங்கள்” இனியும் வரு‌மா என்று கேட்ட போது அவரின் குரலில் ஒரு சோகம் இளையோடியிருந்தது போலிருந்தது எனக்கு.
”ஒஸ்லோ முருகன் சத்திமா இனிவராது” என்றேன்.
”டேய்! அவளின்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்கள் எல்லாம் இருக்குத்தானே? ” என்ற போது தான் எனது மரமண்டையில் நான் அவர் கூறியதை மறந்து, அனைத்துப்படங்களையும் அழித்திருப்பது தெரியவந்தது.

நண்பர் மீண்டும் கேள்வியைக் கேட்டார். ” ஓம் ஓம். அப்ப நீ வீட்ட போ, இல்லாட்டி மனிசி தேடும்” என்றேன்
”யார் அவளோ, என்னைத் தேடுறதோ. தொல்லை தொலைந்தது என்று நினைத்து, இப்ப நாலாஞ்சாமத்தில் இருப்பாள்” என்றார் நண்பர்.

எப்படி உங்களுக்கெல்லாம் ரெண்டு கிளாஸ் பழரசம் போனதும் வீரம் பிறக்கிறது என்று கேட்க நினைத்தேன் என்றாலும் அடக்கிக்கொண்டேன்.

மறுநாள், நானாகவே நண்பரின் வீட்டுக்கு அழையாவிருந்தாளியாய் போய் உட்கார்ந்து கொண்டேன்.

”அண்ணை, உங்களிட்ட சொன்னனான் தானே இந்தாளுக்கு கொம்பியூட்டரப் பற்றி ஒன்றும் தொரியாது என்று”
நான் ஆம் என்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறேன். பின்பு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தேன்.

”என்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்க‌ளையெல்லாம் இந்த ஆள் எனவோ செய்துட்டார், அதுகளைக் காணேல்ல, அண்ணண்” என்றார்

நான் நண்பனைப் பார்த்து

”டேய்! எவ்வளவு முக்கியமான படங்கள், என்னடா செய்த நீ” என்று குரலை கடுமையாக்கிக் கேட்டேன்.

சோபாவின் முலையில் ஒடுங்கி்ப்போயிருந்த நண்பன்

”மச்சான், நேற்று வீட்ட வந்த பிறகு நீ சொன்ன மாதிரி படங்கள் இருக்குதா என்று பார்த்தன். அங்க ஒன்றும் இருக்கேல்லடா” என்றார் நண்பர்.

நான் வாய் திறக்கமுதலே நண்பரின் மனைவி முந்திக்கொண்டார்”

”உங்களுக்கு ஒண்டும் ஒழுங்காச் செய்யத்தெரியாது, எத்தன தரம் அவர் உங்களுக்கு கொம்பியூட்டர் திருத்தித் தந்திருக்கிறார். அவர பிழைசொல்லாதீங்க. நீங்க நேற்று வரேக்க உங்களுக்கு பயங்கர வெறி, உங்கட சிரிப்பில கண்டுபிடிச்சனான். நீங்கள் தான் படம் பார்க்கிறன் என்று அழித்திருப்பீங்க” எனறு கூறினார்.

”என்ன, பயங்கர வெறியோ? டேய் எங்கயாடா போய் ஊத்தின நீ” என்று கதையைத் திசைதிருப்பமுயற்சித்தேன்.
நண்பனின் மனைவி தொடர்ந்தார்
”உங்க எத்தனைபேர் இருக்கினம், இல்லாட்டி போலந்து ஆக்களிட்ட வாங்கிக் குடிச்சிருப்பார்” என்றார். அத்துடன் நண்பருக்கு செம டோஸ் விட்டுக்கொண்டேயிருந்தார்.

எனக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது.

”நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்காதீங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா மெலிஞ்சு வடிவா இருக்கிறீங்க, உங்கட கமராவை கொண்டுவாங்க உங்க ரெண்டுபேரையும் வடிவா படம் எடுத்துத்தாறன்” என்றேன். எதிர்பார்த்த பலன் கிடைத்துது.

” நான் இப்ப சாப்பாட்டிலயும் கவனம், பின்னேரத்தில நடக்கிறனான், ஆனால் எனக்கெண்டால் இவர் மெலி்ஞ்சமாதிரி தெரியேல்ல. நீங்கள் உங்கட ப்ரெண்டுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க” என்றபடியே கமராவை எடுத்துவந்தார்.

இருவரையும் சில படங்களை எடுத்தேன். அத்தோடு மெமரிகார்ட்ஐயும் கழட்டி எடுத்து காட்சட்டைப்பையினுள் போட்டுக்கொண்டேன்.

”சாப்பிட்டுட்டு போங்கோ, உங்கட கருவாடுதான் இண்டைக்கு இங்கயும் என்றார்”. ஒரு பிடி பிடித்துவிட்டு புறப்படும் போது இண்டைக்கு கொம்பியூட்டர தாங்க இவன் அழித்த படங்களை திருப்பி எடுக்க ஏலுமோ என்று பார்க்கிறேன் என்று கூறி கணணியை வாங்கிச் சென்றேன். நண்பன் குளிந்த தலை நிமிராது உட்கார்ந்திருந்தான்

வீடு வந்து மெமரிக்கார்ட் இல் படம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவில்லை. கமரா வாங்கிய காலத்திலிருந்து எடுத்த படங்கள் அனைத்தும் இருந்தன. அவற்றை கணணியுக்குள் ஏற்றி, மறுநாள் அவர்கள் வீட்டில் கொண்டுசென்று கொடுத்தேன்.

”இனிமேல் இந்த கொம்பிட்டரை நீங்க தொடப்படாது” என்றார் மனைவி, எனது நண்பனைப் பார்த்து.
என்னால் நண்பனைப் பார்க்க முடியவில்லை. மேலே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அன்றும் இறைச்சிப்பொரியல், இறைச்சிக்கறி என்று சாப்பாடு அமர்க்களப்பட்டது.

அவர்களுடன் உணவு உண்ணும் போது நண்பனிடம் ” டேய் உன்ட பேஸ்புக் எப்படி போகுது” என்று கேட்டேன். நண்பன் மேசைக்குக் கீழ்ப்பகுதியினூடாக எனது காலை மிதித்தான். அவனின் மனைவி, அது என்ன அண்ணை என்று கேட்ட போது ”அது பெடியங்களின்ட” விசயம் என்றேன்.

அப்ப அது ஏன்  கிழவன்களுக்கு? என்று மடக்கினார். என்னிடம் இல்லை, ஆனால் இவன் வைச்சிருக்கிறார்ன் என்றேன். அக்கினிப் பார்வை ஒன்றை வீசினார். அதுல கனக்க பொம்பிளையளும் வருவினம், எல்லாரும் கதைப்பினம், வீடியோவிலயும் பார்ப்பினம் என்று நான் கூறி முடிக்கமுன்பே, ”அதுதானோ மாப்பிள ரூமுக்குள்ள போயிருந்து கொம்பியூட்டர் பாவிக்கிறவர்” என்றார் மனைவி.

நண்பன் என்னை ” நண்பேன்டா” என்று கூறி தலையைக் குனிந்தபடியே ஆட்டிறைச்சியில் கவனத்தை செலுத்துவது போன்று நடித்துக்கொண்டிருந்தார்.

இனி எனக்குப் பக்கத்தில இருந்து தான் கொம்பியூட்டர பார்க்கலாம் இல்லாவிட்டால் தொடப்படாது என்னும் ரீதியில் தனது பத்ரகாளித் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் மனைவி.

அதன் பின் பல வாரங்கள் இவ் விடயத்தை மறந்து போயிருந்தேன்.
ஒரு நாள் நண்பரின் மகனின் பிறந்த நாள் வந்தது. என்னை அழைத்திருந்தார்கள்.

”இந்த ஆள், ஒழுங்கா படம் எடுக்காது, நீங்க எடுங்கோ அண்ணை” என்றார் நண்பரின் மனைவி. நண்பர் என்றும்போல் அன்றும் குனிந்த தலை நிமிராதிருந்தார்.

கமரைவை செக் பண்ணிப்பார்த்தேன். மெமரிக்கார்ட்ஐ காணவில்லை. அது எப்படி அங்கு இருக்கும்? அன்று நான் அதை எனது கணணியில் இட்டு படங்களை பிரதி செய்த பின் அது எனது கணணியிலேயே இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது.

”எங்க மெமரிக்கார்ட்?” என்றேன். அப்படி என்றால் என்ன அண்ணண் என்றார் நண்பனின் மனைவி.
என்னிடம் கனக்க இருக்கு எடுத்துவருகிறேன் என்று புறப்பட்டேன். எனது அருமை நண்பருக்கு பலத்த அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது.

அவர்களன் மெமரிக்கார்ட்ஐ ‌ கொண்டுவந்து கமராவினுள் புகுத்தி படம் எடுத்துக்கொடுத்தேன்.

அன்றும் ”கல்யாண சமையல் சாதம்” பிரமாதமாயிருந்தது.

எனினும் மனச்சாட்சி உறுத்திக்கொண்டிருந்ததால் ஒரு வெள்ளி மாலை நண்பனை அழைத்து நீராகாரம் படைத்தேன். பழரசத்தில் இருந்து, ருஸ்யநாட்டுப் பானம் வரை அருந்தி இருவருக்கும் மதிமங்கும் நிலையில் முழுக்கதையையும் நண்பணுக்குச் சொன்னேன். நண்பர் என்னை விட மிக மிக அதிகமாகவே சுருதிசேர்த்திருந்தார். எனவே அவர் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்து, இப்படிச் சொன்னார்:

”அவளுக்கு கொம்பியூட்டரைப்பற்றித் தெரியாது, சரியான நாட்டுக்கட்டை, அவள் தான் அழித்திருப்பாள். உன்ட புண்ணியத்தால படம் கிடைச்சிட்டுது, மச்சான். நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” என்றார்.

நண்பருக்கு ருஸ்யநாட்டுப்பானம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்பது புரிந்தது.

நானும் ”மச்சான் கொம்பியூட்டர் கிங்க்கு ஒரு சியெர்ஸ்..டா” என்று அவனின் கிளாசுடன் எனது கிளாசை முட்டினேன்.

இன்றும் அவர்களுக்கு நான்தான் கொம்பியூட்டர் கிங். என்ட மனிசனார் அழித்த படங்களை எடுத்துத் தந்தவர் என்று ஊருக்குள் நண்பரின் மனைவி ஏகத்தக்கும் புழழ்ந்துகொண்டிருக்கிறார், என்னை. நண்பருக்கு முகப்புத்தகத்தினுள் நுளைவதற்கும் தடை போட்டிருக்கிறார்.




இடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக!

அண்மையில் ஒரு தொலைபேசி அழைப்பினூடே ஒருவர் பேசினார். அவரை நான் சில காலங்களாக அறிவேன்.  ஏனைய தமிழர்களைப்போலல்லாது நேரடியாகவே விடயத்துக்கு வந்தார். அவரின் வாழ்வின் போராட்டத்திற்கு வழிகேட்டார். நானே, திசைதெரியாது தடுமாறிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் வழி கேட்கிறீர்களே என்று கூறினேன்.  சிரித்தார். சேர்நது சிரித்தோம்.

அடுத்து வந்த ஒரு மணிநேரமும், ஒரு வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து, அவ் வாழ்க்கை முர்ச்சையடையும் நிலைவரையிலான கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நானும் இவ்வாறான நாட்களை கடந்து கொண்டவன் என்பதால், சோகங்களைப் பகிர்ந்துகொள்வதன் அவசியத்தையும், அது தந்து போகும் ஆறுதலையும் நன்கே உணர்ந்திருக்கிறேன். இன்னொருவரின் சோகங்களை ஒருவர் பகிரும் போது அமைதியாய் செவிமடுத்தபடியே, அவர்கள் மனம் திறந்து பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் அவரின் சோகங்களின் கனம் பலமாய் குறைந்து போகும் என்பதனை நான் எனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளினூடே அனுபவரீதியாக உணர்ந்துகொண்டுள்ளேன்.

அவர் கூறிய ஒரு வசனம் என்னை பலமாய் சிந்திக்க வைத்தது.

”நானோ, மூர்ச்சையடையும் நிலையி்ல் இருக்கிறேன், என்னைச் சுற்றியிருப்பவர்கள் எனக்குச் செய்யும் முதலுதவி  என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது” என்றார் அவர்.

வாழும் கலை என்னும் நோர்வேஜியப் புத்தக்தை வாசித்தபோது அதில் ஒரு முக்கிய கருத்தொன்று கூறப்பட்டிருந்தது. ” வாழ்வினை இன்னொருவருடன் சேர்ந்து, பகிர்ந்து வாழும் போது மற்றையவர் மீதான மரியாதையும், சுய மரியாதையும் இவற்றோடு அன்பும், காதலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கவேண்டும்” என்றிருந்தது.

இவை எத்தனை உண்மையான வார்ததைகள் என்பதை வாழ்க்கை எனக்குக் கற்பித்திருக்கிறது. அவற்றைக் கற்று, உணரும் போது நான், வாழ்வின் பெரும்பகுதியை கடந்தும், தொலைத்தும் இருப்பதை உணர்கிறேன்.

ஒருவர் இல்லையேல் மற்றவர் இல்லை என்று  ஹோர்மோன்களின் ஆட்டங்கள் உச்சத்தில் இருக்கும் போது நினைத்திருந்த இருவரும் தனித்தனியே, மற்றையவர் போய்த் தொலையமாட்டாரா என்று நினைக்கும் நிலை எதனால் உருவாகிறது?

எப்போது நாம் மற்றையவர் எனக்குச் சொந்தமானவர் என்றும், அவரின் செயல்கள், கருத்துக்கள் போன்றவை என் செயல்கள், கருத்துக்கள் போன்றிருக்க வேண்டும் என்றும், மற்றையவரின் கருத்துக்கள், செயல்களுக்கு நாம் மதிப்பளிக்காமலும், என்று நாம் செயற்பட ஆரம்பிக்கிறோமோ அன்றே அவர்கள் இருவர்களுக்கிடையிலும் கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன.

கணவன், மனைவி, குழந்தை இப்படி எல்லா மனிதர்களிடத்தேயும் அவரவர்களுக்கென்ற ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தத் தனித்தன்மையினுள் மற்றயவர்கள் புகுவது ஒரு வித மனிதஉரிமை மீறலே.

அன்பின் முக்கிய அம்சங்களாக ஒருவரை ஒருவர் மதிப்பதும், ஒருவரை ஒருவர் செவிமடுப்பதும் இருக்கின்றன.

இரு மனிதர்கள் சேர்ந்துவாழும் உறவானது இருவரின் தனித்தன்மைகளும் இருவராலும் மதிக்கப்படும் போதே பலமானதோர் உறவாக மாறுகின்றது. இக் கருத்தானது இருவரினதும் சுயமரியாதையில் இருந்தே உருவாகிறது.

ஒரு மனிதனின் சுயமரியாதை அலட்சியப்படுத்தப்படும் போது அமைதியாயிருக்கும் விடுதலையுணர்வு விளித்துக்கொள்வதாயே நான் எண்ணுகிறேன். அதன் காரணமாய் ”ஏன்” என்னும் கேள்வியும், அதனால் தொடரும் வாதப் பிரதிவாதங்களும், அதிகாரமனப்பாங்கும், அதிகாரப் போட்டியும் பல மனிதர்களின் வாழ்வில் விளையாடியிருக்கிறன்றன. விளையாடுகின்றன.

என்னுடன் தொலைபேசியில் உரையாடிவரின் சுயமரியாதை பலமாய் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரினுள் இருந்த விடுதலையுணர்வு கேள்வியெழுப்ப, அவரின் வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கிறது தற்போது.

”பல்லைக்கடிச்சுக்கொண்டு இரு”, ”பிள்ளைகளுக்காக பொறுத்துக்கொண்டு போ”, ”நீதான் விட்டுக்குடுத்துப்போகவேணும்” என்று இப்ப‌டி பல பல ஆலோசனைகளை இருபாலாருக்கும் கூறுபவர்கள் ஒரு மனிதனின் சுயமரியாதையை தாம் மதிக்கவில்லை என்பதை உணர்கிறார்கள் இல்லை என்பதே மிகவும் வேதனைக்கரிய விடமாகும்.  
 
குடும்பக் கப்பல் தண்ணீரில் முழ்கிறது எனக்கு உதவுங்கள் என்று கூக்குரலிடும் ஒருவருக்கு ”கப்பலுக்குள் வரும் தண்ணீரை இறைத்தால் கப்பல் தாளாது” என்று அறிவுரை கூறுபவர்களே எமது சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறார்களே அன்றி, கப்பலில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, கப்பலுக்குள் நீர் புகாது இருக்க நடவடிக்கைகளை இருவரும் எடுங்கள் என்று கூறுபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள்.

உறவுகள் பிரியும் போது, அந்த உறவுக்குள் அதிக அதிகாரத்துடன் இருந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மற்றையவர் பிரிந்துபோகும் காரணம் புரிவதில்லை. அவ் அதிகாரத்தின் காரணமாகவே மற்றையவரின் சுயமரியாதை காயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியாது போகிறது, அவரால். இந்த அதிகார மனப்பான்மையினால் அவர் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்வதோ, மாற்றங்களை மனதார ஏற்று நடைமுறைப்படுத்துவதோ இல்லை. பல சொற்களை விட ஒரு செயல் வீரியமானது என்பது இங்கும் பொருந்துகிறது.

சில உறவுகள் காயப்படத் தொடங்கியபின் அவ்வுறவுகளில் அதிகாரத்தில் உள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் காலப்போக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனதில் ”என்னில் தான் ஏதோ பிழை” என்னும் மனநிலையை உருக்கிவிடுகிறது. இது அவரது சுயநம்பிக்கையை மட்டுமல்ல சுய மரியாதையும் கலைத்துப்போடுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் நடைமுறைப்படுத்தும் ”முளைச்சலவை” கருத்துக்கள், மற்றையவரை நேர்மையாக சுயவிமர்சனம் செய்வது போன்று அல்லாது, தமது கருத்தினை மறைமுகமாக வலியுறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் மற்றையவரை வைத்திருக்கும் வடிவமாகவே இருக்கும்.

எனது தொலைபேசி நண்பரும், தான் மூளைச்சலவை செய்யப்படுதாயும், தனது சுயம் மறுக்கப்படுவதாயும், தனது நெருங்கிய சகோதர ‌சகோதரிகள், உறவினர்கள் கூட தனது சுயத்தை மதிக்காமல், கலாச்சாரம் என்னும் சொற்பதத்தினுள் தன்னை முர்ச்சைதெளிவிப்பதாய் நினைத்து முழ்கடிப்பதாய் உணர்வதாயும் கூறினார். 
 
புரிகிறது, நான் கடந்து வந்த பாதையில் நடந்துகொண்டிருக்கும் பலரைப்போன்று நீங்களும் நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்றேன்.  சிரித்தார், அவர். சேர்ந்து சிரித்தோம்.

ஓருவருக்கு நாம் சுதந்திரமளிக்கும் போது, அவனை அல்லது அவளை நீங்கள் இழப்பதற்கான அபாயம் இருக்கிறது என்பது உண்மையே, ஆனால் சுதந்திரமில்லாத ஒரு மனிதனை நீ பெற்றிருப்பாயானால் அம்மனிதனை நீ ஏற்கனவே இழந்துவிட்டாய் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். 
 
இவையிரண்டுக்குமிடையே தான் வாழ்வின் இரகசியம் ஒளிந்திருக்கிறது.

ஒரு குடும்பஉறவில் மகிழ்ச்சியாய் நாம் இருக்கவேண்டும் எனில் நாம் முக்கியமாக ஒன்றை உணர்ந்திருக்கவேண்டும் என்கிறார் ”வாழும் கலை”  புத்தகத்தின் எழுத்தாளர். அதாவது உனது எல்லாவிதமான தேவைகளை, உணர்ச்சிகளை மற்றவரால் திருப்தி செய்ய முடியாது என்பதை நீ மிகவும் தீர்க்கமாய் உணரவேண்டும், உன் தேவைகளை திருப்திசெய்யும் மனிதனை நீ பெற்றிருப்பாயானால் உன் தேவைகள் உனக்கு இருக்கவேண்டிய தேவைகளின் அளவை விட குறைந்திருக்கிருக்கிறது என்று  அர்த்தப்படுகிறது என்கிறார் அவர்.

தொலைபேசி நண்பரிடம், நீங்கள் இருவரும் மூழ்கும் கப்பலுக்குள் நீர் உட்புகாதிருக்கும் நடவடிக்கைகளை எடுங்கள். இருவரும் சேர்ந்தே கப்பலுக்குள் இருக்கும் நீரை அகற்றுங்கள். இருவரும் கப்பலை முழுமனதாக காப்பாற்றுவதற்கு முன்வராவிட்டால், கப்பல் மூழ்குவது நிட்சயம். அப்போது தற்பாதுகாப்புக்காக இருக்கும் கப்பலில் ஏறிக் கரைசேருங்கள், என்றேன்.

குழப்புறீங்களே என்று கூறி தொலைபேசியை வைத்தார்.
 
வாசகர்களாகிய உங்களையும் நான் குழப்பிருந்தால் மன்னியுங்கள். யார் கண்டது நானும் குழம்பியிருக்கிறேனோ என்னவொ?

வாழ்க்கை சொர்க்கத்தில் (வானத்தில்) நிட்சயிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆம், இடியும் மின்னலும் கூட வானத்திலேயே நிட்சயிக்கப்படுகிறது. 
 
 இடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக!
 

வறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி

வறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி

அன்றைய தினம் காலையிலேயே எழுந்து விட்டேன். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் தேர்த்திருவிழாவினை காண்பதற்ககாவும், கொக்கட்டிச்சோலைக்கு சற்றுத் தொலைவில் வாழும் ஒரு முன்னாள் போராளியைச் சந்திப்பதாகவும் திட்டமிட்டிருந்தோம். மோட்டார்சைக்கில் மண்முனைக் கரையில் நிறுத்தப்பட்ட போது நேரம் 10 மணியிருக்கும். வாவியைக் கடப்பதற்கு உதவும் மிதப்புப் பாதைகள்  இரண்டும் இரு ‌கரைகளிலும் இருந்து புறப்பட்டு ஆற்றின் நடுவே வந்து கொண்டிருந்தன. ஒரு மிதப்புப் பாதையில் ஒரு சிறு வாகனம் ஏற்றப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் கனத்தை தாங்க முடியாமல் ஒரு பக்கமாய் சாய்ந்தபடியே வந்துகொண்டிருந்தது, அந்த மிதப்புப்பாதை.  பாதை கரைக்கு வந்ததும் நாமும் ஏறிக்கொண்டோம்.  எம்முடன் ஒரு ஆட்டோவும், பல மோட்டார்சைக்கில்களும், மனிதர்களும் ஏறிக்கொண்டனர். நான் பயந்திருந்தபடி அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி பாதை எம்மை மறுகரையில் இறக்கிவிட்டது.

பறவைக்காவடிகள், முள்ளுக்காவடிகள், பக்கதர்கள் என்று பலரையும் கடந்தபடியே மேட்டார் சைக்கில் ஓடிக்கொண்டிருந்தது. வீரமும் சோகமும் விளைந்த கொக்கட்டிச்சோலைக்குள் நாம் நுளைந்த போது எமது மோட்டார்சைக்கிலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது என்றார்கள் திருவிழாவின் வாகனங்களை கட்டுப்படுத்தும் இளைஞர் கோஸ்டியினர். அவர்கள் காட்டிய இடத்தில் நிறுத்தும்படியும் கட்டளை வந்தது. அப்போது எனது வழிகாட்டி நண்பர் வாயில் விரலை வைத்து விசில் அடிக்க, அருகில் இருந்த ஒருவர் ”அண்ணை நீங்களா” என்ற படியே அருகில் வந்தார். அடுத்த நிமிடம் எமக்கு தொடர்ந்து செல்ல அனுமதி கிடைத்தது.

எனது வழிகாட்டி நண்பருக்கு எங்கு சென்றாலும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அவருக்கு தெரியாத ஒழுங்கையோ, தெருவோ, ஊரோ இருக்காது என்னுமளவுக்கு மனிதர் படுவாங்கரையை அறிந்துவைத்திருந்தார். சேவை நோக்கம் கொண்ட அவரை ஊர் பெருசுகள் எல்லோரும் பலரும் அறிந்திருந்தனர்.

படுவாங்கரை கடந்து சிறிது நேரத்தில் நாம் ஒரு சிறு கிராமத்தினுள் நின்றிருந்த போது எனது நண்பர் தொலைபேசியூடாக நாம் இன்று சந்திக்கவிருப்பவருடன் தொடர்புகொண்டு இடத்தை நிட்சயப்படுத்திய பின்னர் ஒரு சிறு ஒழுங்கையினூடாகச் சென்று ஒரு வீட்டின் முன் மோட்டார்சைக்கிலை நிறுத்தினார்.  எம்மை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வந்தான். அவனின் பின்னே அவனின் தாயார் வந்தார். உள்ளே செல்லமுடியாத அளவிலான ஒரு குடிசை. வெளியே கிணற்றிகு அருகே மரநிழலில் அமர்ந்து கொண்டோம். எம்மருகிலேயே அமர்ந்து கொண்டார் அந்தப் பெண்ணும்.

அவரின் ஒரு கை சிதைந்திருந்தது. தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான இடைவெளி மிகவும் சிறிதாக இருந்தது. நான் அதை கவனி்ப்பதை கண்ட அவர்,  2008ம் ஆண்டு இறுதியில் முழுமாதக் கர்ப்பிணியாக இருந்த போது செல் பட்டு தனது கை முறிந்த போது அதை மருத்துவர்கள் தகடுகள் வைத்து காப்பாற்றியதாகவும், அப்போது ‌தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான எலும்பில் பெரும்பகுதி அகற்றப்பட்டதாகவும் கூறினார். அந்தக் கையினால் எதுவித வேலைகளையும் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டதாகவும் எனினும் கணவரை முள்ளிவாய்க்காலில் இழந்பின் கைக்குழந்தையை பராமரிப்பதற்காக அந்தக் கையை பாவித்ததனால் கையினுள் இருந்த தகடுகளும் ஆனிகளும் இடம்பெயர்ந்து பலத்த சிரமத்தை தந்த போது மீண்டும் வைத்தியர்களை அணுகியிருக்கிறார். ‌ அவரது கையை பரிசோதித்த வைத்தியர்கள் கையை அகற்றுமாறு அறிவுரை கூறிய போது அதை மறுத்து மீண்டும் ஒரு வைத்தியரிடம் சென்ற போது அவர் இந்தக் கையை காப்பாற்றுவது மிகக் கடினம் ஆனால் முயற்சிக்கிறேன் என்று முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்தக் கையால் எதுவித பாரத்தையும் தூக்கினால் கையை அகற்றவேண்டி வரும் என்னும் செய்தியும் கூறப்பட்டிருக்கிறது அவருக்கு.

அவர் வீட்டில் நான் தங்கியிருந்த போது அவர் கிணற்றில் நீர் அள்ளும் முறையைக் கண்ணுற்றேன். ”கப்பியில் இருந்த வரும் கயிற்றை ஒரு கையால் இழுத்து பின்பு குனிந்து இழுத்த கயிறை வாயினால் கவ்வி மீண்டும்  கயிற்றை இழுத்து” இவ்வாறு நீரை அள்ளுகிறார். இவரை இவரது வயதான தகப்பனாரே கவனித்துவருகிறார். ஆனால் அவர் தொழில் தேடிச் செல்லும் போது இவர் தனியேயே வாழ்க்கையை நடாத்துகிறார்.

தன்னால் தலை சீவி முடிகட்டவோ, உடைகளை ஏனையவர்கிளன் உதவியின்றி மாற்றிக்கொள்ளவோ முடிவதில்லை அவரால்.  குழந்தையை ஒரு கையால் பராமரிக்க மிகவும் சிரமப்படுகிறார். அவரின் உறவினர் ஒருவரின் உதவி கிடைக்கிறது என்பதனால் சமாளிக்கமுடிகிறது என்றார்.

அவரது உடலெங்கும் காயங்கள். ஒரு காலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவரும் கணவரும்  போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.  2008 ம் ஆண்டு இறுதியில் காயப்பட்ட பின்னர் பிரசவம் நடந்திருக்கிறது. அதன் பின்பும் 2009ம் ஆண்டு மீண்டும் காயப்பட்டிருக்கிறார். காயங்களின் வலியும், சூழ்நிலைகளும் மன அழுத்ததை கொடுத்திருக்கின்றன. அந் நாட்களில் கணவரும் கொல்லப்பட மனம்பேதலித்து சில காலம் இருந்ததாயும், அந் நாட்களில் குழந்தையையும் தூக்கியபடியே பங்கருக்கு வெளியில் நின்றிருந்த நேரங்களில் அருகில் இருந்தவர்கள் இவரை பல முறை உள்ளே  பங்கரின் உள்ளே இழுத்து காப்பாற்றியதாகவும் கூறினார்.

அப்படி  அவர்  செல் மழைபோல் கொட்டிய நேரங்களில் வெளியே நின்றும் தனக்கு மரணம் வரவில்லையே என்று கூறியழுதார். முள்ளிவாய்க்கால் நாட்களின் பின் வருமானமின்றி, குழந்தைக்கான உணவுகளின்றி வாழ்ந்திருந்த நாட்களில் இரு தடவைகள் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்று தோற்றிருக்கிறார்.

இவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரின் படலைக்கருகே வந்த ஒருவருடன் உரையாடிவிட்டு வந்தார். அவர் கண் கலங்கியிருந்தது. ஏதும் பிரச்சனையா என்றார் எனது நண்பர்.

அண்மையில் கையை இரண்டாம் தரம் சத்திரசிகிச்சை செய்வதற்காக பணம் தேவைப்பட்டிருக்கிறது. உள்ளூரில் 20.000 ரூபா வட்டிக்கு எடுத்திருக்கிறார். மாதாந்தம் வட்டியாக 1200 ருபாய் கொடுத்துவந்திருக்கிறார்.  ஏறத்தாள ஒரு வருடத்தின் பின்பும் கடன் வாங்கிய தொகை குறையவில்லை. வட்டியை மட்டுமே கொடுத்திருக்கிறார். தற்பொது  கடன் வாங்கிய தொகை மீளச் செலுத்தமாறு கேட்டுப்போகிறார் வட்டிக்குப் பணம் வழங்கியவர்.

20000 ரூபாவுக்கு 1200 ரூபா வட்டி என்பது எனக்குப் நம்ப முடியாத தொகையாக இருந்ததால் இரு தடவை அது பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தேன். அருகில் இருந்த நண்பர் ஆம் இது ஊர் வட்டி. அவர் சொல்வது உண்மைதான் என்றார். என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

எவ்வாறு இந்த வட்டிக்கான பணத்தைக் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். ஒரு உதவி நிறுவனம் தனக்கு தரும் 2000ரூபாயில் இந்தத் தொகையை செலுத்துவதாகவும் மிகுதியிருக்கும் 800 ரூபாயில் மாதச் செலவை கவனிப்பதாயும் கூறினார்.  சில நிமிடங்கள் பெருத்த மௌனமொன்று எம்மிடையே நிலவிற்று.

சிகிச்‌சைக்கான பணம் தேவைப்பட்டபோது தனது காணித்துண்டினை  பொறுப்பாகவைத்து கடன்பெற்றிருக்கிறார். அது தற்போது 1 இலட்சம் ருபாவாக வளர்ந்து நிற்கிறது என்றார்.

போராட்டத்திற்காக வாழ்வினை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு இத்தனை கொடியதாக இருக்கும் என்று நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேதனைகளையும்‌ சோதனைகளையும் கொண்டிருக்கிறது அவர்களது வாழ்வு.

அங்கிருந்தபடியே நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து இவருக்கு உதவ முடியுமா என்றேன். மிக விரைவிலேயே இந்தப் போராளியின் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பபுவதாகப்பதில் அனுப்பியிருந்தார், நண்பர்.  அன்று மாலையே எனது வழிகாட்டி நண்பர் வட்டிக்கு கொடுத்தவரிடம் சென்று இந்தப் போராளியின் கடனை அடைத்தார். அதன் பின்பு நாம் கொக்கட்டிச்சோலை தேர்த்திருவிழாவில் அவரைச் சந்தித்த போது நன்றி என்று கூறி தான்தோன்றீஸ்வரர்தான்  உங்களை இன்று அனுப்பியிருக்கிறார் என்றார். எந்த நன்றியும்  எனது நண்பருக்கே உரியது என்று கூறினேன்.  அவர் முகத்தில் ஒருவிதமான அமைதி தெரிந்தது. இதற்குப் பின்னான நாட்களில் இவரின் வேறுசில கடன்களையும் இன்னொரு நண்பர் செலுத்தி அவரின் காணிக்கான உறுதியையும் பெற்றுக்கொடுத்தார். இவர்களை விட வேறுசிலரும் இவருக்கு தற்போது உதவுகிறார்கள்.

அன்று மாலை மட்டக்களப்பில் ஒரு உணவகத்தில் மாலையுணவின் விலை 800ருபா என்ற போது உணவின் ருசியை மனச்சாட்சி தின்றிருந்தது.


நோர்வே வந்தபின் ஒரு நண்பருடன் உரையாடியபோது அவர் அந்தப் பெண்ணிண்  அனைத்துக் கடன்களையும் தீர்த்துவைத்தார்.

----------------------------------
அறாவட்டிக்கு இவர்களுக்கு பணம் கொடுத்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள் போராட்டத்தின் பெயரால் ‌சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது.

அறா வட்டிக்கு பணம் கொடுப்பவன் ஏதோ ஒரு வழியில் இவர்களது வாழ்விற்கு உதவுகிறான் என்றே கூறவேண்டும். ஆனால் மக்களுக்காக வழங்கப்பட்ட பணத்தையே சுருட்டிக்கொண்ட மகான்கள் போராளிகளை மறந்துபோயிருப்பினும் இன்றும் மக்கள் கூடுமிடங்களில் இன்றும் பணம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மறைந்து விட்ட போராளிகளுக்கு  பெரியளவில்அஞ்சலி செய்யும் இவ்வமைப்புக்கள், உயிர்வாழ்வதற்கு போராடும் இம் மனிதர்களைக் கவனிக்காத காரணமும், போராளிகளின் இன்றைய நிலைபற்றி மக்களிடம் எடுத்துக் கூறி புலம் பெயர்ந்து வாழும் மக்களை உதவி தேவைப்படுபவர்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை எடுக்காதிருப்பதற்கான காரணமும் என்ன? தெரிந்தால் பதில் அறியத்தாருங்கள். நானும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.

பெருமைந்தர்களின் பெருந்தன்மைகள்


30.09.2012 இன்று எனக்குப் பிறந்த நாள். இன்றைய நாள் பிறந்தபோது, அதாவது 00:01 மணியின்போது முதலாவது தொலைபேசி வாழ்த்து வந்தது. குறுஞ்செய்திகளும் வந்தன. நேற்றைய மாலை மிகவும் மகிழ்ச்சியாக இருந்ததனால், என்னை நான் சற்று குஷிப்படுத்திக்கொண்டேன். அதன் காரணமாக நடுநிசி கடந்து சில நிமிடங்களில் தூங்கியும் போனேன்.

நேற்றை நாள் ஒஸ்லோவில் யாழ் மகஜனா கல்லூரியின் முன்னாள் அதிபர் திரு. பொ.கனகசபாபதி அவர்களின் இரு புத்தகங்களின் அறிமுகவிழா நடைபெற்றது. ”எம்மை வாழவைத்தவர்கள்” என்னும் புத்தகத்தில் திரு கனகசபாபதி அவர்கள் தன்னைக் கவர்ந்த பாடசாலை அதிபர்களைப் பற்றி எழுதியிருக்கிறார்.

இவ் பற்றிப் நண்பர் உமைபாலன் அறிவித்த நாளில் இருந்தே எனக்குள் ஒரு பெரும் கேள்வி இருந்து கொண்டே இருந்தது. புத்தகம் தனியே யாழ்ப்பாணத்து அதிபர்களை மட்டுமே உள்ளடக்கியிருக்குமா? அல்லது கிழக்குப்பிரதேச அதிபர்களையும் உள்ளடக்கியிருக்குமா? அப்படி இருந்தால் இலங்கை முழுவதும் பலராலும் மிகக் கடுமையானவர், மிக மிக நேர்மையானவர் என்று அறியப்படும் எங்கள் பாடசாலையின் முக்கிய அதிபராகக் கருதப்படும் Prince G. Gasinader அவர்களன் பெயரும் இருக்குமா என்று சிந்தனையோடிக்கொண்டிருந்தது.

அறிமுகவிழாவின் இடைவேளையின் போது முதலாவது ஆளக நீன்று புத்தகத்தை வாங்கிக்கொண்டேன், ஒரு முலையில் நின்றபடியே எனது பேராசானின் பெயரைத் தேடினேன். அது அங்கு இருக்கவில்லை. மனது கனத்துப்போனது. பொ. கனகசபாபதியின் மேல் சற்று எரிச்சலும் வந்தது. எவ்வாறு இவரால் Prince G. Gasinader அறியமுடியாது போனது? இவர் யாழ்ப்பாணத்தையே முன்னிலைப்படுத்தியிருக்கிறார் என்று நினைக்கத்தோன்றியது.

மனதுக்குள் இந்தக் கேள்வியை அடக்கிவைப்பதில் மனதுக்கு சம்மதம் இருக்கவில்லைவில்லையாதலால், புத்தகத்தில் கைழுத்து வாங்கிக் கொண்ட பொழுதினைப் பயன்படுத்தி நீங்கள் ஏன் Prince G. Gasinader ஐப் பற்றி எழுதவில்லை என்று கேட்டேன். கையெழுத்துப் போட்டுக்கொண்டிருந்த பொ. கனகசபாபதி அய்யா வெள்ளை நிறமான நேர்த்தியாக வாரப்பட்டிருந்த முடியுடனான தனது  முகத்தை நிமிர்த்தி, என்னைக் கூர்ந்து பார்த்தார். அவரின் கண்கள் என்னை அளவிட்டன. பின்பு மெதுவாய் கையெழுத்திட்டு புத்தகத்தைத் தந்தார்.

நான் அவரருகிலேயே நின்றிருந்தேன். நிமிர்ந்து பார்த்தார்.  அவரிடம் படித்தவனா நீ என்றார். ஆம் என்றேன் பெருமையுடன். தலையை ஆட்டிக்கொண்டார். எனது புத்தகத்தில் எழுத விரும்பிய முக்கிய மனிதர் அவர். அவரிடம் தொடர்பு கொண்டு இது பற்றிப் பேசினேன். அவர் தனது விபரங்களை அனுப்புவதற்குத் தாமதமாகியதாதலால் இப் பதிப்பில் அவர் பற்றிய விபரங்கள் இடம்பெறவில்லை என்றார். அத்துடன் அவர் கூறிய S.V.O. Somanader இன் விபரங்களையே நான் இங்கு பதிந்திருக்கிறேன் என்னும், Prince G. Gasinader ஐப் போன்ற அதிபர்கள் தற்போது இல்லாதிருப்பது மிகவும் துயர்தரும் விடயம், அவர் ஒரு மிகப் பெரிய மனிதர் என்றும் கனகசபாபதி அய்யா கூறிய போது ”மடையா இந்த பெரிய மனிசனையே சந்தேகப்பட்டியே” என்று மனச்சாட்சி கத்தியது. பெருமக்கள் பெருமக்களே என்பதை மீண்டும் உணர்ந்திருந்தேன்.

நேற்றைய அவ் விழாவினில் அறிமுகவிழாக்களில் இருக்கும் சம்பிரதாய முகமன்கள், தூக்கிப்பிடிக்கும் உரைகள், துதிபாடல்கள் எதுவுமின்றி மிகவும் அன்னியோன்னியமான விழாபோலிருந்தது. அதற்குக் முக்கிய காரணம் ஒரு பாடசாலையின் பெருமைமிக்க அதிபர், அவரை  மனதார நேசிக்கும் பழையமாணவர்கள். அவர்களுக்கிடையில் போலியான உறவுவோ, பாசாங்குகளோ இருக்கமுடியாதல்லவா. இப்படியான நிகழ்வுகளே மனதுக்கு அமைதியையும் ஆறுதலையும் தருகின்றன.

விழா முடிந்து வீடு நான் திரும்பிய போதும், பழையமாணவர்கள் தங்கள் அதிபரைச் சுற்றி நின்று அளவளாவிக்கொண்டிருந்தார்கள். ஒரு விதத்தில் பொறாமையாய் இருந்தது எனக்கு. ஆசிரியர்களுக்கு இந்த உலகத்தில் எந்தத் தொழிலுக்கும் இல்லாத ஒரு மிகப் பெரிய கௌரவம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கிறது. அவர்களுக்கு உலகெங்கும் குழந்தைகள் இருக்கிறார்கள். தங்கள் ஆசிரியர்களை தங்கள் பெற்றோர் போல் நடாத்துகிறார்கள். ஆசிரியர்களும் தங்கள் குழந்தைகளைப் போல் மாணவர்களை நடாத்துகிறார்கள்.

காலம் மாணவர்களை, பழைய மாணவர்கள் என்ற நிலைக்கு மாற்றும் போது,  மாணவனுக்கும் ஆசிரியர்க்கும் இடையே இருந்து உறவு பலமுள்ள ஒருவித நட்பாகவே மாறுகிறது.  ஆசிரியரிடம் இருந்த பயம் பக்தியாக மாறுகிறது. ஆசிரியரும் பல ஆண்டுகளை கடந்துவிடுவதால் இவர்களுக்கிடையில் ஒரு பரிசுத்த நட்பு ஏற்பட்விடுகிறது.

எனது அதிபருடன் பேசிக்கொண்டிருந்த ஒரு நாள், அவர் கூறினார்: தான் ஓய்வுபெற்று மிகவும் வயதான காலத்தில் என்னருகில் எனது குழந்தைகள் இல்லையே என்று வருந்துகிறேன் என்று ஒரு முறை தனது மனைவியிடம் கூறானாராம். அதற்கு அவர் உங்களுக்குத் தானே தினமும் குறைந்தது 5 பழைய மாணவர்கள் வந்துபோகிறார்கள், தவிர உலகெங்கும் உங்களின் மாணவர்கள் பரந்திருக்கிறார்கள், உங்களுக்கு என்னக குறை என்று கூறினாராம் என்று.

உண்மைதான் மாணவர்களின் மனதில் சில ஆசிரியர்கள் சிம்மாசனம் போட்டு ஏறி உட்கார்ந்துவிடுகிறார்கள். அவர்கள் எப்போதும் அச் சிம்மானத்தை இழப்பபதேயில்லை. நான் ஒரு ஆசிரியனாக வரவில்லையே என்ற ஏக்கம் மாணவர்களின் மனதை வென்ற ஆசிரியர்களைக் காணும் போது ஏற்படுவததை மறுப்பதற்கில்லை.

இன்று காலை தொலைபேசி சிணுங்கியோது நேரத்தைப்பார்த்தேன். நேரம் 05:30 என்றிருந்தது. இந்த நேரத்தில் எனக்கு தொலைபேசி எடுப்பது எனது தாயார் மட்டுமே. நான் பல தடவைகள் நோர்வே நேரங்கள் பற்றி அவரிடம் கூறிய பின்பும் அதை அவர் கவனிப்பதேயில்லை. தான் உரையாடி முடிந்ததும் ”சரி மகன்,  நான் வைக்கிறன் நீ படு” என்பார்.

இன்று எனது பிறந்த நாள் என்பதால் அதற்கு வாழ்த்து தெரிவிக்க எடுத்திருக்கிறார். அவர் வாழ்த்தி முடிந்ததும் அம்மா நித்திரை வருகிறது படுக்கவிடுங்கள் என்று அவரிடம் இருந்து விடைபெற்று போர்வையினுள் புகுந்து, ஆழந்த தூக்கம் ஆட்கொள்ளும் வேளை மீண்டும் தொலைபேசி அடித்தது. நிட்சயம் அம்மாதான் சாப்பிட்டியா என்று கேட்க எடுக்கிறார் என்று நினைத்தபடியே சற்றுக் காரமாக ஹலோ என்றேன்.

மறு புறத்தில் My son  என்று தொடங்கி கடவுள் உன்னை  ஆசிர்வதிப்பாராக என்று ஒரு குரல் ஆங்கிலத்தில் கூறியது.  வார்த்தைகள்  காதிற்குள் புகுந்து முளையை எட்டுவதற்கு முதல் அக் குரலினை அடையாளம் கண்டுகொண்டேன். என்னையறியாமலே துள்ளி எழுந்து கட்டிலில் அமர்ந்து கொண்டேன். அதற்குள் அவர்  தனது வாழ்த்தினை தெரிவித்துவிட்டு, நான் யார் என்ற சொல் பார்ப்போம் என்றார் ஆங்கிலத்தில் .

திகைப்பின் உச்சியில் நின்று, ஆச்சர்யத்தில் திண்டாடியபடியே தெரியும் Sir, என்றேன். அப்ப நீ இன்னும் இந்தக் கிழவனை இன்னும் மறக்கலியா என்றார் அவர்.

மறக்கக்கூடிய குரலா அது.  ஏறத்தாள 8 வருடங்கள் தினமும் கேட்டுப்பழகிய அளப்பரிய ஆளுமை மிகுந்ததோர் குரல் அது. எந்த நெஞசினை துளைத்துச்செல்லும் கம்பீரமான சக்திஇந்தக் குரலுக்கு உண்டு. 87வயதிலும் தன்னிடம் கல்விபயின்ற ஒரு மாணவனின் பிறந்தநாளினை நினைவிற்கொண்டு வாழ்த்துவதற்காய் தூரதேசம் தெலைபேசி எடுத்த ஒரு பேராசானின் குரல்.

ஆம், எங்கள் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் முன்னாள் அதிபரும், எனது பேராசானுமாகிய Prince G. Casinader மறுபக்கத்தில் பேசிக்கொண்டிருந்தார்.

தூக்கத்தின் கலக்கம் மறைந்து சிறுகுழந்தை போலானது மனது. அவர் தொடர்ந்தார். என்னை நீ ஒரு முறை தான் வந்து பார்த்தாய் இவ் வருடம் இலங்கை வந்திருந்த போது, மீ்ண்டும் உரையாட வருவதாகக் கூறியிருந்தாய். என்னிடம் இருந்து விடைபெறாமலே சென்றுவிட்டாய், இது அழகான பழக்கமில்லை, உன்னிடம் இதை நான் எதிர்பார்க்கவில்லை என்றார் 30 ஆண்டுகளுக்கு முன்னிருந்து அதே கண்டிப்பான குரலில்.

மன்னித்துக்கொள்ளுங்கள் Sir, நினைத்திருந்ததை விட வேலைகள் அதிமாகிவிட்டன அதனால் வரமுடியவில்லை என்றேன். இருப்பினும் மனிதர் விடுவதாயில்லை. தொலைபேசியாவது எடுத்திருக்கலாம் என்பது அவரது ஆதங்கம். உண்மை தான் தவறு என்னுடையது தான் Sir  என்றேன்.

பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். நேற்று ‌நடைபெற்ற பொ.கனகசபாபதி அவர்களின் புத்தக அறிமுக விழாவைப்பற்றிக் பற்றிக் கூறினேன். My son,  என்று ஆரம்பித்தார்: நீ நினைப்புது போல் நான் ஒன்றும் மகான் அல்லன் . நீயும் உன்னைப்போல என்னிடம் கல்விகற்ற பலரும் என்னை பெரிய மனிதனாகப் பார்க்கிறீர்கள். என்னை விடப் எவ்வளவோ பெரியவர் S.V.O. Somanader. அவரைப் போன்றவர்களைப் பற்றி எழுதப்படுவதே சிறந்தது. எனவே தான் அவரைப்பற்றிய தகவல்களைக் கொடுததேன் என்றார்.

எனது மாணவன் நீ. உன்னுடன் நீ வரும் நேரங்களில் மனம்விட்டுப் பேசியிருக்கிறேன். வாழ்க்கை என்னை பாலைவனங்களுக்குள்ளாலும், ரோஜாத்தோட்டம் போன்ற மாணவர்களினூடாகவும் நடத்திப்போயிருக்கிறது. எனது அந்திம காலத்தில் நானிருக்கிறேன். அடுத்தமுறை நீ வரும்போது நான் இருப்பேனோ தெரியாது. ஒன்றை மட்டும் அறிந்துகொள் பல மாணவர்களுக்கு நான் ஆசிரியனாக இருந்திருக்கிறேன். சில மாணவர்களுக்கு ஆசிரியனாக இருப்பதற்கு நான் ஆசீர்வதிக்ப்பட்டிருக்கிறேன். நீயும் அவர்களில் ஒருவன் என்ற போது என் கண்கள் கலங்கி பேசமுடியாதிருந்தேன். இதை எழுதும் போதும் நெஞ்சமெல்லாம் பெருமையை உணர்கிறேன்.

பலதையும் பேசியபின் உரையாடலை முடித்துக்கொண்டோம். என்னால் தொடந்து உறங்க முடியவில்லை. பேராசானின் நினைவுகளில் நனைந்துகொண்டிருந்தேன். எத்தனையோ வருடங்களின் பின், எனக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்துக்கூறுவதற்காக தொலைபேசி இருக்கிறார். என்றுமே கேட்காத பெருமை தரும் வார்த்தைகளால் என்னை ஆசீர்வதித்திருக்கிறார். நேற்றைய நாளுடன் இன்றைய நாளை ஒப்பிடும் போது மனதுக்குள் சுகமானதோர் உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

பல மாணவர்களைப் பெற அவர் தான் ஆசீர்வதிக்கப்பட்டவன் என்றாரல்லவா? ஆனால் எனக்கேதோ நாங்கள் தான் அவரை ஆசிரியனாய்ப் பெற ஆசீர்வதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று தோன்றுகிறது. உங்களுக்கு?


இன்றை நாள் மிக மிக அழகானது.



இடுப்பிற்கு கீழ் இயக்கமற்ற ஒரு போராளியின் வாழ்க்கைப் போராட்டம்

இன்று சந்திக்கப்போகும் போராளியின் வாழ்க்கை மிகவும் வேதனையான நிலையில் இருக்கிறது என்றும், அவர் குடும்பத்திற்கு மட்டக்களப்பில் வருமானம் இல்லாததால் வன்னிப் பகுதிக்கு இடம்பெயர்ந்து அங்கு கூலிவேலை செய்து வருவதாகவும் நண்பர் கூறியிருந்தார். அவர்கள் மட்டக்களப்பிற்கு வந்திருந்தார்கள். அவர்களின் நண்பர்களின் வீட்டில் அவர்கள் தங்கியிருப்பதால் அவர்களை அங்கு சந்திப்பதற்காக புறப்பட்டுக்கொண்டிருந்தேன். நண்பர் மட்டக்களப்பிற்கு அருகாமையில் உள்ள ஒரு பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றார். மாலை நேரம். இருள் ஊருக்குள் குடிவந்திருந்தது.

இரண்டு வேலிகளுக்கு இடையே அமைந்திருந்த ஒரு சிறு மணற்பாதையூடாக ஒரு வீட்டினை அடைந்தோம். எம்மை வரவேற்றார் அந்தப் போராளி. அவரால் எழுந்த நிற்கமுடியவில்லை. கதிரையில் உட்கார்ந்திருந்தார். அவர் தங்கியிருந்த வீட்டு நண்பர்கள் நாகரீகம் கருதி  அகன்றுகொண்டார்கள்.  மங்கலான மின் குமிழ் ஒளிர்ந்து கொண்டிருந்தது. சிறிய குழந்தைகள் தாயின் அருகில் நின்றிருக்க  முத்த மகள் மட்டும் தந்தையின் கதிரையின் கைப்பிடியில் அமர்ந்திருந்தாள்.

பொதுவான அறிமுகங்களுடன் ஆரம்பதித்த பேச்சு அவர்களின் வாழ்க்கை நிலமை பற்றித் திரும்பியது.  மட்டக்ளப்பில் இருந்து பல வருடங்களுக்கு முன் முக்கியமானதொரு படையணிக்காக வன்னி சென்று, கிழக்கின் பிரிவின்போதும் வன்னிக்கே விசுவாசமாய் இருந்திருக்கிறார். களத்தில் பல காயங்களை பெற்றிருந்தாலும் முதுகெலும்பை தாக்கிய ஒரு செல் துண்டு அவருக்கு பாரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இன்று அவர் இடுப்புக்கு கீழ் இயங்க முடியாத நிலையில் இருக்கிறார். தனது கைகளை ஊன்றியே அவரால் வீட்டுக்குள் நடக்க முடிகிறது.  வெளியல் செல்வதாயின் சக்கரநாற்காலி இருக்கிறது.

இவர் காயப்பட்டிருந்த காலங்களில் தனக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள், உதவிகள் பற்றிப் பேசினார்.  தனக்கு 2009ம் ஆண்டு சித்திரை மாதம் வரையில் விடுதலைப் புலிகளின் மாதாந்தக் கொடுப்பனவு இவரின் குடும்பத்திற்கு கிடைத்திருக்கிறது. அதன் பின் முள்ளிவாய்க்கால் நாட்களைக் கடந்து மீண்டும் மட்டக்களப்பிற்கு வந்த பின் வருமானமின்றி தடுமாறத்தொடங்கியிருக்கிறார்.

அவர் மீன்பிடித்தொழில் தெரிந்தவராகையால் நண்பர்கள் யாராவது அவரை வீட்டில் இருந்து தூக்கிச்சென்று, ஒரு வாகனத்தில் இருத்தி, வாவிக்கரையில் இருக்கும் தோணியில் உட்கார உதவுவார்கள் எனின் அவர் வாவியில் மீன்பிடித்துத் திரும்புவார். மீண்டும் அவரை யாராவது வீட்டுக்குச் செல்ல உதவும் வரை தோணியிலேயே காத்திருக்கவேண்டும். வீடு சென்ற பின்‌பு மனைவி அவர் பிடித்த மீன்களை விற்பனைசெய்ய சந்தைக்குச் செல்லவேண்டும்.

மற்றவர்களின் உதவிகள் கிடைப்பது அவ்வளவு இலகுவல்ல. எனவே வருமானமும் குறைவாகவே இருந்திருக்கிறது.  எனவே அவர்கள் வன்னியில் முன்பு வாழ்ந்திருந்த பிரதேசத்திற்கு இடம் பெயர்ந்திருக்கிறர்ர்கள். அங்கு கிடுகு பின்னும் வேலை பார்த்திருக்கிறார் அவரது மனைவி. அவர்களுடைய ஒரு நாள் வருமானம் ஏறத்தாள 250 ரூபாய்.  ஐந்துத மனிதர்களின் வயிற்றினை 300  ரூபாவால் எப்படி நிரப்பினார்கள் என்பது எனக்கு இன்றுவரை புரியாத புதிராகவே இருக்கிறது.

குழந்தைகளின் பட்டினி, மருந்துகள், உடல் உபாதைகள், என்று அவர்களின் இன்றைய நிலையைக் கூறிய போது அவர் அழுதுவிட்டார். மக்களின் விடிவுக்காகவே நாம் இரண்டுபேரும் போராட்டத்திற்குச் சென்றோம். ஆனால் இன்று எம்மை மக்கள் தீண்டத்தகாதவர்கள் போல் பார்க்கிறார்கள், எம்முடன் மிகவும் நெருங்கிய நண்பாகளைத் தவிர வேறு எவரும் பழக விரும்புவதில்லை. எமது குழந்தைகள் பட்டினி கிடக்கின்றன. இதற்காவா நாம் எமது வோழ்க்கையை போராட்டத்திற்கு அர்ப்பணித்தோம்? ஏன் எமக்கு உதவுவதற்கு எவரம் முன்வருகிறார்கள் இல்லை? இப்படி அவர் கேள்விகளை அடுக்கிக்கிய போது எதுவும் பேச முடியாது தலையைக்குனிந்திருப்பதை தவிர வேறுவழி எதுவும் தெரியவில்லை.

அதன் பின் எமது உரையாடலில் பெரும் கனதி படிந்துபோயிருந்தது. இந்தப் போராளியின் மனைவியும் முன்னாள் போராளி.  அங்கவீனமானவர்களின் மீது இருந்து பரிவின் காரணமான  இந்தப் போராளியை மணமுடித்திருக்கிறார்.  விடுதலைப் புலிகளின் தலைவர் மீதும், அவர்கள் இவர்களை நடாத்திய விதத்திலும் பெரு மதிப்புக்கொண்டிருக்கிறார்கள் இருவரும். அங்கவீனமானவர்களை மிகுந்தத கவனத்துடனும், கௌரவத்துடனும் நடாத்தியது மட்டுமல்ல அவர்களுக்கு தொழில்வாய்ப்புக்களையும் ஏற்படுத்திக்கொடுத்திருந்தார்கள் விடுதலைப் புலிகள் என்பதை அவர் எடுத்துக்கூறிய பல சம்வங்களினூடாக அறியக் கிடைத்தது. 2009  ஏப்ரல் மாதம் வரை ஊட்டச்சத்துள்ள உணவுகள், மருந்துகள், மாதாந்தக் கொடுப்பனவு என்பன இவர்களுக்கு தொடர்ந்தும் கிடைத்திருக்கின்றன.

இவர்களின் வாழ்க்கைப் பிரச்சனைகளை எனது நண்பர் முன்பே கூறியிருந்ததால் அவுஸ்திரேலியாவில் வாழும் ஒருவரிடம் இவர்களுக்கு உதவ முடியுமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று பதில் கிடைத்தது.

இன்று அவர்களின் குடும்பத்திற்கு  சிறுகைத்தொழில் முயற்சி ஆரம்பிப்பதற்கான  உபகரணங்கள் இரண்டு கொள்வனவு செய்யப்பட்டு, அவர்களை முறையான பயிற்சிவகுப்பிற்கு அனுப்பி, அவர்களை மேற்பார்வைசெய்து மேலும் வளர்ச்சியடைய உதவுவதற்குகான அறிவுரையாளாகளை ஒழுங்கு செய்து அவர்களின் வாழ்வினை சற்றே மாற்ற முடிந்திருக்கிறது. குழந்தைகள் பாடசாலைக்குச் செல்கிறார்கள்.

இவர்களும் ஏனைய முன்னாள் போராளிகளுடன் நாம் சென்றிருந்த சுற்றுலாவிற்கு வந்திருந்தார்கள். கணவனை சிறு பிள்ளையைப் போல் பராமரிக்கும்  மனைவின்  மனப்பாங்கும், தாயார் தந்தையாரை கவனிக்கும் நேரங்களில் தன் இரண்டு சிறிய தங்கைகளையும் 9 வயதேயான பெண்குழந்தை கவனித்துக்கொண்ட விதமும்  சுற்றுலா சென்றிருந்த எல்லோரையும் கவர்ந்தது. கணவன், குழந்தைகள் என்று அந்தப் பெண் எப்போழுதும் அயராது உழைத்துக்கொண்டே இருந்தார்.

நாம் புறப்பட்ட போது வீதி வரை வந்த அந்தப் பெண் ” உங்களின் உதவியால் இனி என்ட பிள்ளைகள் பட்டினி கிடக்காதுகள் அண்ணண்” என்ற போது, அது என்னால் அல்ல, அது உங்களுக்கு உதவி செய்த குடும்பத்தினரையே சாரும் என்றபடியே மோட்டார் சைக்கிலில் ஏறிக்கொண்டேன்.  மனதுக்குள் இனம்புரியாதவொரு அமைதி குடிவந்திருந்தது. நண்பர் மட்டக்களப்பை நோக்கி மோட்டார்சைக்கிலை செலுத்திக்கொண்டிருந்தார். தூரத்தே நிலவு தெரிந்துகொண்டிருந்தது.


கடலில் காவியமான அப்பாவுக்காய் காத்திருக்கும் பாலன்

இந்தப் படத்திலிருப்பர்கள் இக்கதையின் உரிமையாளர்கள்
...................................................................................

நாளை காலை நாம் நீண்டதொரு பயணம் செய்கிறோம். ஏறத்தாள 3 மணிநேரம் மோட்டார்சைக்கில் பயணம்.  எனவே மனதையும் உடலையும் தயாராக வைத்திருங்கள் என்றார், எனது வழிகாட்டி.
 
கடந்த சில நாட்களாக இவருடனே எனது காலம் கடந்து கொண்டிருக்கிறது. ஏழ்மையிலும் சேவையையும் நேர்மையும் கொண்டிருக்கும் இம் மனிதரை எனக்கு மிகவும் பிடித்துப்போயிருக்கிறது. அவரின் கருத்தை உள்வாங்கியபடி ”சரி” நாளை காலை சந்திப்போம் என்றபடியே விடைபெற்றுக்கொண்டேன்.

மறு நாள் காலை 7 மணியளவில் அவரின் மோட்டார்சைக்கில் மட்டக்களப்பு, பிள்ளையாரடி, ஏறாவூர், சித்தாண்டி என்று கடந்து கொண்டிருந்தது. காலைப்பொழுதில் கடந்து போன பஸ்கள், பாடசாலை மாணவர்கள் என்பன எனது பால்யத்தை நினைவுபடுத்த அவற்றில் லயித்தபடியே இடைக்கிடையே போத்தலை எடுத்து நீர் அருந்தியபடியே மோட்டார் சைக்கிலில் குந்தியிருந்தேன். வீதிகள் மிகவும் அழகாக செப்பனிடப்பட்டிருந்தன.

நண்பர் இடையிடையே ஹெல்மட்டுக்குள் தொலைபேசியை சொருகிக்கொண்டபடியே பேசிக்கொண்டிருந்தார். பாசிக்குடாவுக்கு செல்லும் வீதியையும் கடந்து சென்று கொண்டிருந்த போது எம்மை நிறுத்தினார்கள் வீதிக் கண்காணிப்பில் இருந்த போலீசார். நண்பரிடம் வாகனத்திற்கான பத்திரங்களை பரிசோதித்த பின் எம்மை தொடர்ந்து செல்ல அனுமதிததனர்.

நேற்று எமக்குக் கிடைத்த ஒரு தொலைபேசிச் செய்தி, மட்டக்களப்பில் இருந்து தொலைதூரத்தில் உள்ள ஒரு இடத்தில் ஒரு கேர்ணல் தரத்திலான போராளியின் குழந்தையும் மனைவியும் மிகுந்த வறுமையில் வாழ்கிறாகள் என்று அறியக்கிடைத்தது. அவரின் குடும்பத்தில் 5 உறுப்பினர்களை அவர்கள் இறுதியுத்தத்தில் இழந்திருக்கிறார்கள். அவர்களைச் சந்திப்பதற்காகவே நாம் சென்றுகொண்டிருக்கிறோம்.

மனம் இனம்புரியாதவோர் வெறுமையில் உளன்றுகொண்டிருந்தது. கடந்த சில நாட்களாக கேட்டும், பார்த்தும், உணர்ந்தும் கடந்துவந்த மனிதர்களின் கதைகள் என்னை பலமாகவே உலுக்கியிருக்கின்றன. எவருடனும் மனம் விட்டு பேச முடியாததால் மனதுக்குள் பெரும் பாரம் கனத்துக்கொண்டிருக்கிறது. சந்தித்த குழந்தைகளின் கண்களும், அவற்றின் ஏக்கங்களும் அடிக்கடி மனக்கண்ணில் வந்துபோகின்றன. ஒரு வித இயலாமையை, வெறுமையை அனுபவித்துக்கொண்டிருக்கிறேன்.

ஒரு மணிநேர பயணத்தின் பின் ஒரு கடையில் நிறுத்தி குளிர்பானம் அருந்தி களைப்பை தீர்த்துக்கொண்டோம். மீண்டும் நீண்டதோர் பயணம். ஏறத்தாள 11மணிபோல் அவர்களின் வீடு இருந்த இடத்திற்கருகில் மோட்டார்சைக்கிலை நண்பர் நிறுத்தினார்.  வீட்டை விசாரித்து அறிந்துகொண்டோம். நாம் அங்கு சென்று போது இரண்டு பெண்கள் எம்மை வரவேற்று அவர்களின் குடிசையினுள் அழைத்துச்சென்றனர். என்னால் நிமிர்ந்து நிற்க முடியவில்லை. மேலிருந்து தகரத்தினூடாக வெப்பம் தகித்துக்கொண்டிருந்தது. குடிசைக்கு வெளியிலும் அமர்ந்திருக்க முடியாது. காரணம்  உளவாளிகளின் கண்கள் எங்கிருக்கும் என்று எவருக்கும் தெரியாத நிலை அங்கிருந்தது. எனவே எம்மை அவர்களின் குடிசையினுள்ளேயே இருக்கும்படியே கேட்டுக்கொண்டார்கள்.

வியர்வையில் நனைந்து கொண்டிருந்தேன். மிகவும் அசௌகரீயமாக இருந்தாலும் அவர்களின் வேண்டுகோளை மறுக்கமுடியவில்லை. அந்த குடிசையில் 3 குழந்தைகள், மூன்று தாய்மார், அவர்களின் தங்கை, அவர்களில் ஒருவரின் கணவர் 8 மனிதர்கள் வாழ்ந்திருந்தார்கள். நிலம் கழிமண்ணினால் அமைக்கப்பட்டிருந்தது. சுவாமியறையில் சுவாமிகளுடன் பல மனிதர்களின் படங்களும் இருந்தன. குழந்தைகள் ஓடித்திரிந்துகொண்டிருந்தாகள். ஒரு அடைக்கோழி வீட்டுக்குள் வரமுயற்சித்துக்கொண்டிருந்தது. அவர்கள் அதை கலைத்துக்கொண்டிருந்தார்கள்.

குழந்தைகளுடன் மெதுவாய் நட்பாகிப்போனேன் எனது வழிகாட்டி நண்பரை அவர்கள் நன்கு அறிந்திருந்தார்கள். அவரை அண்ணண் அண்ணண் என்று அவர்கள் உரிமையுடன் கொண்டாடியது என் மனதுக்குள் சற்று பொறாமைய் தந்தது என்பதை மறுப்பதற்கில்லை. அவர் அவர்களுடன் பல காலம் வாழ்ந்திருக்கிறார். ஆனால் ஏறத்தாள 10 வருடங்களின் பின் இன்று சந்திக்கிறார்.

நண்பர் மெதுவாய் பேச்சை ஆரம்பித்த போது ஒரு பெண் அழுதபடியே தனது கதையைக் கூறத் தொடங்கினார். வன்னியில் வாழ்ந்திருந்த காலத்தில் அவாகள் குடும்பத்தில் மூவருக்கு திருமணம் நடந்திருக்கிறது. இரண்டு மாப்பிள்ளைகள் போராளிகள். ஒருவர்  மிக உயர்ந்த பதவியில் இருந்தவர். பெற்றோர்கள் மற்றும் 6 சகோதர சகோதரிகளுடன்  வாழ்திருக்கிறார்கள். திருமணமான ஒருவருக்கு  முதுப்பகுதியில் குறைபாடு இருக்கிறது. எனவே அவரை அவரின் நெருங்கிய உறவின‌ரே திருமணம் செய்திருக்கிறார்.

இந்தக் குடும்பத்தில் தற்போது இரண்டு முன்றரை வயதுப் பாலகர்கள் இருக்கிறார்கள். அதாவது 2009ம் ஆண்டு ஆரம்பத்தில் பிறந்த குழந்தைகள். முள்ளிவாய்க்காலைக் கடந்து வந்து குழந்தைகள். இந்த இரண்டு குழந்தைகளினதும் தந்தையர்களில் ஒருவர் இறுதி யுத்தத்திலும், ஏனையவர் இறுதியுத்தத்தின் போது கடலிலும் உயிரிழந்தவர்கள். கடலில் இறந்தவரின் உடலம் கிடைக்கவில்லை.

இக்குடும்பத்தாரின் பெற்றோரும் இரண்டு சகோதரிகளும் முல்லைத்தீவில் இருந்து திருகோணமலைக்கு கப்பலில் வரும் போது கடற்படையினரின் தாக்குதலில் உயிர‌ிழந்துள்ளனர். அவர்கள் ‌தம்முடன் வைத்திருந்த காணி உறுதிகள், நகைகள், பணம் அனைத்தையும் கடல் எடுத்துக்கொண்டிருக்கிறது.

ஒரு சகோதரியும் கணவனும் முள்ளிவாய்க்கால் காலங்களின் பின்பு செஞ்சிலுவைச் சங்கத்தின் உதவியுடன் ஏனைய குடும்பத்தினருடன் இணைந்துகொண்டிருக்கிறார்கள். அவர்களின் பூர்வீக நிலம் அரசால் பறித்தெடுக்கப்பட்டிருக்கிறது. இவர்களுக்கு ஒரு தம்பி இருக்கிறார். அவரை ஒரு திருச்சபை பொறுப்பெடுத்து தங்குமிட வசதியும் கல்வியும் பெற்றுக்கொடுக்கிறார்கள்.

கடலில் காணாது போன கணவர் வருவார் என்ற நம்பிக்கையில் ஒருவர் வாழ்ந்துகொண்டிருக்கிறார். எனது நண்பரின் கூற்றுப்படி அவர் தப்பியிருந்தால் எப்படியாவது தொடர்புகொண்டிருப்பார் என்றும் கைது செய்யப்பட்டிருந்தால் ”நிட்சயாமாய் உயிருடன் வெளியே விட முடியாதவர்களின் பெயர்ப்பட்டியிலில் அவர் பெயர் இருப்பதால் அவர் கொல்லப்பட்டிருப்பார் என்றும் கருதுகிறார்.

குழந்தையிடம் அப்பா எங்கே என்றால் கடலில் நிற்கிறார் என்று பதிலளிக்கிறான். அதையே தாயாரும் விரும்பகிறார். தாயாரின் சுயநம்பிக்கை பெரிதும் காயப்பட்டிருக்கிறது. நாம் அங்கு நின்றிருந்து முழுநேரமும் அவர் கண்கலங்கியபடியே நின்றிருந்தார்.

இவர்களின் குடும்பத்திற்கு  அரசு தண்ணீர் இல்லாத ஒரு குடியேற்றத்தில் நிலம் ஒதுக்கிக் கொடுத்திருக்கிறது. அந்துக் குடியேற்றத்தில் நீர் வசதி இல்லை என்ற காரணத்தினால் அங்கு எவரும் குடியேறவில்லை. தமது கட்டளையை மறுத்ததால் இலவகமாகக் கொடுத்த உணவுப்பொருட்களையும்  அரசு நிறுத்தியிருக்கிறது.

தற்போது சகோதரி ஒருவரின் கணவர் காட்டுக்குச் சென்று விறகு வெட்டி விற்பனை செய்து உழைக்கும் 450 ரூபாயிவில் அக்குடும்பத்தின் உள்ள 8 மனிதர்களின் தினசரி வாழ்வு ஓடிக்கொண்டிருக்கிறது.  வறுமையின் காரணமாக குழந்தைகளின் கல்வி, ஒரு சகோதரியின் கல்வி என்பன தடைப்பட்டுவிடும் அபாயம் தேவைக்கு ‌அதிகமாகவே இருக்கிறது.

நாம் அங்கு தங்கியிருந்த இரண்டு மணிநேரத்தில் வீட்டில் இருந்த ஒரு கோழி அடுப்பில் கொதித்துக்கொண்டிருந்தது. கீரை, முருக்கங்காய் ஆகியவற்றுடன் நாட்டுக்கோழிக்கறியுடன் அன்பும் கலந்து பரிமாறினார்கள். அமிர்தமாய் இருந்தது உணவு.

இவர்களிடம்  நாம் செல்வதற்கு முதலே இவர்களின் பிரச்சுனைகளை நான் அறிந்திருந்ததால், நோர்வேயில் இருந்த ஒரு நண்பரிடம் இவர்களுக்கு உதவமுடிமா என்று கேட்டிருந்தேன். ஆம் என்று அவர் கூறியிருந்தார் எனது நண்பர்.

கல்விகற்பதற்கு வசதியாக முதலில் இவர்களை அந்த இடத்தில் இருந்து இடம் பெயரச்செய்து, வீடு ஒன்றை வாடகைக்கு எடுத்து, அவர்களின் வாழ்வாதாரத்தை திடப்படுத்த ஒரு கைத்தொழில் முயற்சியையும் உருவாக்கித்தர எனது நண்பர் பொறுப்பேற்றுக்கொண்டிருந்தார். வாடகை வீடுகளின் முற்பணம் ஏறத்தாள 120.000 ரூபாக்கும் அதிகமாக இருக்கிறது. 3 தொழிலாளர்களை உள்ளடக்கிய கைத்தொழில் ஆரம்பிக்க ஏறத்தாள 75.000 ரூபாயும், அதுவரை அவர்களின் வாழ்வாதரத்திற்கு குறிப்பிட்ட ஒரு தொகை என அவர் அந்தக் குடும்பத்திற்கு செய்யும் உதவி அளப்பெரியது.  திருச்சபையில் பாதிரியாரின் கவனத்தில் வளரும் அவர்களின் தம்பியும் இன்னும் சில நாட்களில் அவர்களுடன் வாழத் தொடங்கிவிடுவார். 3 குழந்தைகள், 6 வளர்ந்தவர்களின் வாழ்க்கைச் சுமையை ஏற்றுக் கொண்ட அந்த நண்பரின் மனிதநேயம் மிகப்பெரியது. அவருக்கு நன்றி சொல்ல என்னிடம் வார்த்தைகள் இல்லை. இப்படியான நண்பர்களைப் பெற்றதற்காக பெருமைப்படுகிறேன்.

இவ்வாறு நான் இன்னொருவரிடம் உதவி கேட்டபோது நான்  புதிய கார் வாங்கவேண்டும் நீ எனக்கு உதவுகிறாயா என்று நக்கலாக கேட்ட மனிதர்களும் இருக்கிறார்கள். மனிதர்களின் மனம் விசித்திரமானது.

இவர்களை சந்தித்து சில நாட்களின் பின் நான் சந்தித்த முன்னாள் போராளிகளை அழைத்துக்கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம். அந்தச் சுற்றுலாவின் போது நாம் கடலில் குளிப்பதாகவும் ஒப்பந்தமாகியிருந்தது. இன்று நான் சந்தித்த குடும்பத்தில் இருந்து கடலில் காவியமான தனது அப்பாவுக்கு என்று இரண்டு காகிதக் கப்பல்களுடன் வந்திருந்தான் அவரின் மகன். நானும் அவனும் இந்து சமுத்திரத்தில் இரண்டு கப்பல்கள் விட்டோம்.

குழந்தைகள் கடலுடன் விரைவில் நட்பாகிப்போனார்கள். ஆனால் அந்தக் குடும்பத்தின் இருந்த வளர்ந்தவர்களுக்கும் கடலுக்கும் இடையில் ஒரு பாரிய இடைவெளியே இருந்தது. அவர்களில்  ஒருவர் கடலை நம்ப மறுத்தார். தனது குழந்தையை கரையில் இருந்து குளிக்கவும் அவர் அனுமதிக்க மறுத்தார். பலத்த சிரமத்தின் பின் அவர் அவரது தம்பியின் கையை பற்றியிருக்க நாம் பலர் குழந்தைக்கு அருகில் அரண்போல் நின்றிருக்க குழந்தையின் கையைப் பிடித்தபடியே அவனை குளிக்க அனுமதித்தார். சற்று நேரத்தில் குழந்தை கதறக் கதற  உடைமாற்றி அவனை கடல் மண்ணிலேயே உட்கார்த்தி வைத்திருந்தார்.

ஏன் அவனை இவ்வளவு பாதுகாப்பு இருந்தும் கடலில் குளிக்கவிடுகிறீர்கள்  , இல்லை என்று கேட்டேன். ” அண்ணண், என்ட குடும்பத்தில இருந்து 5 உறுப்பினர்களை இந்தக் கடல் எடுத்திருக்கிறது. நான் கடலை நம்புவதற்கில்லை என்றார். எதுவும் பேச முடியவில்லை என்னால்.

அவர்களுடன் உணவருந்தி உரையாடிக்கொண்டிருந்த போது அவர்களுக்கு உதவுவதற்கு ஒரு நண்பர் முன்வந்துள்ள‌தை அறிவித்தேன். மகிழ்ச்சியும் ஆனால் சிறு அவநம்பிக்கையும் தெரிந்தது அவர்களிடம். வாக்குறுதிகளை நம்பி நம்பி ஏமாந்த மனிதர்களின் அவநம்பிக்கை அது என்பதை புரிய அதிக நேரம் நேரம் செல்லவில்லை எனக்கு. சில நாட்களின் பின் நண்பரின் உதவி அவர்களை சென்றடைந்ததும் அவர்களின் அந்த அவநம்பிக்கை அகன்று போனது.

மதியம் போல் அவர்களிடம் இருந்து விடைபெற்றுக்கொண்டோம். வெளியே வெய்யில் அனல் போல் காய்ந்துகொண்டிருந்தது. நண்பர் மோட்டார்சைக்கிலை இயக்கினார். பின்னால் குந்திக்கொண்டேன். சற்றுத் தொலைவில் ஒரு குடிசையின் வாயிலை அடைத்தபடியே கைகாட்டிக்கொண்டிருந்தனர் 8 மனிதர்கள்.

நண்பர் புழுதியை சுவாசித்தபடியே கடமையில் கண்ணாயிருந்தார். இன்னொரு மனிதரினூடாக இவர்களின் வறுமைக்கும், துன்பங்களுக்கும் ஓரளவாவது உதவ முடிந்த மகிழ்ச்சியில் என் மனம் பெரும் மகிழ்ச்சியில் இருந்தது.




ஒரு காலுடன் பால்வினைத்தொழில் செய்யும் முன்னாள் பெண் போராளி

அன்று காலை ஹோட்டலைவிட்டு காலை 9 மணிபோல் வெளியே வந்ததும் இன:றைய நாள் தரப்போகும் வேதனைகளுக்கு முன்னுதாரணமாக தாங்கமுடியாத வெம்மையும், பழுக்கமும் முகத்திலடித்தது.

இன்று ஒரு முன்னாள் போராளியினை சந்திக்கச் செல்வதாக எனது வழிகாட்டி கூறியிருந்தார். நாம் நாளை நீண்ட தூரம் பயணிக்கவேண்டியிருக்கும், செல்லும்  வழியில் கடைகள் பெரிதாக இருக்கமாட்டாது எனவே நீங்கள் உணவு, நீர் போன்றவற்றை எடுத்துவாருங்கள் நேற்று விடைபெற்ற போது அறிவித்திருந்தார்.

நானும் அதற்கேற்றவாறு தயாராகவே நின்றிருந்தேன். நண்பர் வந்ததும் மோட்டார்சைக்கிலில் ஏறிக்கொண்டேன்.  வாவிவீதியினூடாக நாம் சென்றுகொண்டிருந்தோம். வாவிவிதி கடந்ததும் வெள்ளைப்பாலத்தைக் கடந்து மட்டக்களப்பு பஸ்நிலயத்தை நோக்கி சென்றுகொண்டிருந்தது மோட்டார் சைக்கில்..

நீல நிறத்தில் புதிய பஸ்நிலையம் அழகாக இருந்து. நண்பர் மோட்டார்சைக்கிலை நிறுத்திக்கொண்டார். சற்று நேரத்தில்  புழுதியை இறைத்தபடியே ஒரு பஸ் வந்தது. பலரும் அதிலிருந்து இறங்கினர். சில இளம் பெண்கள் மட்டும் ஆட்டோக்களில் ஏறிக்கொள்ள அந்த ஆட்டோக்கள் மார்க்கட் பகுதிநோக்கி விரைந்தன.

நண்பர் அர்த்தமுள்ள ஒரு பார்வையை என்மீது வீசினார். தலையை ஆட்டினேன் நான்.  நேற்று மாலை எமக்கு கிடைத்த தகவலின்படி படுவாங்கரைக் கிராமங்களைச் சேர்ந்த பெண்களும், முன்னாள் போராளிகளும் மட்டக்களப்பில் பால்வினைத்தொழிலில் ஈடுபடுத்தப்படுகிறாகள் என்று கூறப்பட்டது. அச்செய்தியில் குறிப்பிட்ட  இந்த பஸ் பற்றியும் கூறப்பட்டது. அதை உறுதிசெய்யவே இங்கு வந்திருந்தோம்.

மார்க்கட் நோக்கிச் சென்ற ஆட்டோக்கள் குறிப்பிட்ட ஒரு இடத்திற்கு செல்வதால் அவ்விடத்தில் நாம் ஒரு நண்பரை நிறுத்தியிருந்தோம். தொலைபேசியில் வந்த நண்பர் ஆட்டோக்களின் வருகையை உறுதிப்படுத்தினார்.  எனவே நேற்றுக் கிடைத்த தகவல் உண்மை என்பதை உறுதி செய்து கொண்டேன்.

நான் மீண்டும் மோட்டார் சைக்கிலில் உட்கார்ந்துகொண்டேன்.

விமானநிலைய விதியால் சென்று புதூரினூடாக மோட்டார்சைக்கில் சென்றுகொண்டிருந்தது. எமக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த ட்ராக்டர் இன் புழுதி எங்கள் முகத்தில் படிந்துகொண்டிருந்தது.

ஏறத்தாள இரண்டு மணிநேர மோட்டார் சைக்கில் ஓட்டத்தின் பின்பு ஒரு மிகவும் பின்தங்கிய கிராமத்தில் நின்றிருந்தோம். எனது நண்பர் குறிப்பிட்டஒருவரின் பெயரைக் கூறி விசாரித்துக்கொண்டிருந்தார்.

சிலர் முகத்தைச் சுளித்தனர். அசிங்கமான வார்த்தைகளில் திட்டினர். ”அவளுக்கு என்னத்துக்கு உதவி செய்யிறீங்க  ஊருக்குள வேற ஆட்கள் இல்லையா” என்ற வார்த்தைகளும் காதில் விழுந்தன. எம்மீது விழுந்த சிலரின் பார்வையில் சந்தேகம் குடியிருந்ததையும் அவதானிக்கமுடிந்தது.

இறுதியில் நாம் தேடிவந்த வீட்டினை அடையாளம்காட்டினான் ஒரு சிறுவன். உள்ளே இருந்து  ஒரு வயதான பெண் வெளியே வந்தார். நண்பர் அவருடன்  எம்மைப்பற்றி அறிமுகப்படுத்திக்கொண்டார்.” மனே ஓடிப்போய் முன் வீட்டுல ரெண்டு கதிர வாங்கிவாடா”  என்று கட்டளையிடப்பட்டது, அவளுக்கு. கிழிந்த ஊத்தையான துணியினை உடுத்தியிருந்த ஒரு பெண்குழந்தை படலையைத்தாண்டி ஓடினாள்.

மேலாடைமட்டும் அணிந்திருந்த ஒரு சிறுமி அப்பெண்ணருகிலேயே நின்றிருந்தாள். அப்போது  செயற்கைக்கால்களை பொருத்திய ஒரு பெண் வீட்டுக்குள் நுளைந்துகொண்டிருந்தார். அவரது மற்றைய கால் முழங்காலுக்கு கீழே சிதைந்திருந்தது. காயங்களில் இருந்து இரத்தமும் நீரும் வழிய கொசுக்கள்  அவர் காலை மொய்த்துக்கொண்டிருந்தன.

மெதுவாய் உள்ளே நுளைந்த அவரைப் பார்த்தேன் 30 அல்லது 33 வயது கடந்திருக்கமுடியாது என்று கூறியது உணர்ச்சிகளற்ற அவர் முகம். கடின வாழ்வின் இறுக்கம் அவரது முகத்தில் தெரிந்தது.

அந்நேரம் பார்த்து கதிரைகள் இரண்டினை இரு சிறுவர்கள் தலையில் சுமந்து வந்தனர்.  எம்மை உட்காரச்சொன்னார்கள். உட்கார்ந்து கொண்டோம். பெரும் அமைதி அங்கு பேசிக்கொண்டிருந்தது. நான் அங்கிருந்த பெண்குழந்தையை அருகில் அழைத்தேன். அம்மாவின் பின்னால் மறைந்துகொண்டாள் அவள்.

செம்பில் எமக்கு நீர் வழங்கப்பட்டது. அண்ணாந்து குடிக்க சற்றே சிரமப்பட்டேன். அதைக் கண்ட குழந்தைகள் சிரித்தார்கள். சேர்ந்து சிரித்தேன். அதுவே எமக்கிடையில் ஒரு வித நட்பை ஏற்படுத்தியது.

அதன் பின் அங்கிருந்த நேரமனைத்தும் என் வாழ்வினில் மறக்கமுடியாத நேரங்களாகப்போகின்றன என்பதை அறியாமல் அங்கு நின்றிருந்தேன். அப் பெண் பேசத் தொடங்கினார்.

குழந்தைப் போராளியாய் பலவந்தமாக இயக்கத்தில் இணைக்கப்பட்டு, பயிட்சி கொடுக்கப்பட்டு சில ஆண்டுகளின் பின்பு கண்ணிவெடி அகற்றும் போது அது வெடித்ததினால் ஒரு காலையும் மறு காலில் முழங்காலுக்கு கீழேயும் காயப்பட்டிருக்கிறார். சிறந்த வைத்திய வசதி இல்லாததனால் பாதிக்கப்பட்ட ஒரு காலில் இன்றும் புண்கள்  வருகின்றன.காயப்பட்டு ஏறத்தாள 12 ஆண்டுகளாகின்றன.

திருமணம் முடித்துவைக்கப்பட்டிருக்கிறது. கிழக்கின் பிரிவின் பின் வீட்டுக்கு அனுப்பப்பட்டிருக்கிறார். கணவன் காணாமல் போய்விட்டார். இரண்டு  பெண் குழந்தைகள் இருக்கின்றன. தாய் தந்தையருடன் வசித்து வருகிறார். தந்தைக்கு 70 வயதாகிறது. சிங்களப் பகுதிகளில் வெள்ளாமை (வயல்) வெட்டும் தொழில் புரிகிறார்.

முதலாவது குழந்தைக்கு 9 வயதாகிறது. அவளிடம் அவளின் பெயரைக் கேட்டேன். சிரித்தாள். அப்போது அவளின் தாய் அவளால் ‌பேச முடியாது என்றார். அன்றைய அதிர்ச்சிகளின் ஆரம்பம் அது. அக் குழந்தை இன்று வரை பாடசாலைக்குச் செல்லவில்லை. செவிப்புலனற்றவர்களின் பாடசாலைக்கு  வாரத்தில் ஒரு தடவை அவளை அழைத்துச் சென்று வருவதற்கு அவர்களுக்கு 40 இலங்கை ருபாய்கள் தேவைப்படுகிறது. அத் தொகை அவர்களிடம் இல்லையாகையால் இன்றுவரை அக் குழந்தை பாடசாலைக்குச் செல்லவில்லை. அவளுக்கு ஒரு தங்கை இருக்கிறாள் அவள் அருகில் உள்ள ஒரு பாடசாலைக்குச் செல்கிறாள்.

அவர்களின் வீட்டில் ஒரு முலையில் ஒரு மீன் வலை இருந்தது. அதைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அதைக் கண்ட அவர் அது தனது தந்தை வீடு திரும்பும் நாட்களில் மீன்பிடிக்கும் வலை என்றார்.  அவரின் தாயார் மகளின் சோகமான வாழ்க்கையின் சில பகுதிகளையும் தாம் அனுபவித்த வேதனைகளையும் பகிர்ந்து கொண்ட போது கண்ணீர் வழிந்தோடிக்கொண்டிருந்தது, அவருக்கு.

கணவர்  கைது செய்து காணாமல் போன பின் வாழ்க்கை அதிகமாய் இவரை ஆட்ப்படைத்திருக்கிறது. ஒரு அரச பிரபலத்தை சந்திதது உதவி கேட்டபோது சரி, பார்ப்போம் என்றாராம்.

வறுமை தறிகெட்டு ஓடியகாலங்களில் அங்கவீனமான உடலுடன் பால்வினைத்தொழில் செய்திருக்கிறார். அதன் காரணமாக கருவுற்று ஒரு குழந்தைக்கு தாயாகியும் இருக்கிறார். தன்னால் வளர்க்க முடியாது என்பதனால் அக் குழந்தையை  நல்ளுள்ளம் படைத்த ஒரு குடும்பத்திடம்  தத்துக்கொடுத்திருக்கிறார்.

தற்போது ஊர் மக்கள் இது பற்றி அறிவதால் இவர் குடும்பம் தீண்டத்தகாத குடும்பமாகியிருக்கிறது. ஓதுக்கிவைக்கப்பட்டிருக்கிறார். கூலித்தொழிலும் கிடைப்பதில்லை. தாயார் அவவப்போது மீன்பிடித்து குடும்பத்தை காப்பாற்றிவருகிறார்.

இவரின் கதைகளை பேசிக்கொண்டிருந்த போது அவரின் குழந்தைகள் நட்பாகிப்போகின என்னுடன். ‌நாம் அங்கிருந்து புறப்பட்ட போது ஒரு சிறுமி எனது கையைப்பற்றியிருந்தாள், எனது கையை விடுவித்துக்கொண்ட போது என் கண்களைச் சந்தித்த அவளின் பார்வையை நேரே சந்திக்கமுடியாததால் தலையைக் குனிந்து கொண்டேன்.

மோட்டார்சைக்கில் புறப்பட்டபோது  காயும் வெய்யிலையும், புழுதியையும் பொருட்படுத்தாது எம்மெதிரே ஓடினார்கள் அக் குழந்தைகள். சற்று நேரத்தில் நாம் அவர்களைக் கடந்த போது அவர்களை நிமிர்ந்து பார்க்க திராணியற்றதனால் helmet இனுள‌்  முகத‌்தை மறைத்துக் கொண்டேன்.

மீண்டும் மோட்டார்சைக்கில் படுவான்கரைக்குள் ஓடிக்கொண்டிருந்தது.


மேலே உள்ள படம் குறிப்பிட்ட குடும்பத்தவர்களின் கால்களையே காட்டுகிறது.