லோக அதிசயம்

எனக்கு அறிமுகமான ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு 3 - 4 வயதிலிருந்தே நாம் Tom & Jerry ஆக விளையாடுவோம். இப்போது கிழவி நான்காம் வகுப்பில் படிக்கிறார்.
நேற்று ஒரு விழாவில் அவள் தோழிகள் புடைசூழ உட்கார்ந்திருந்தாள். அவளின் தோழிகளுக்கும் நான் தோழன்.
நான்கு கால்களுடன் அருகிற்சென்றதும், ”பரிதாபத்துக்குரிய சஞ்சயன் மாமா” என்று இந்நாட்டு மொழியில் அனுதாபித்து ஒரு கதிரையை இழுத்துப்போட்டாள்.
ஒரு பேரரசனைப்போல் உட்கார்ந்திருந்தேன். பேட்டி கண்டார்கள் என்னை. ஏன் கால் முறிந்தது என்பதை படம்கீறிப் புரியவைக்கவேண்டியிருந்தது.
அதன்பின் சீட்டுக்கட்டு விளையாடினோம். மனக்கணக்கு செய்தோம். விடுகதைகள் பரிமாறிக்கொண்டோம்.
அப்போது எனது தலைத் தடவி மயக்கும் அன்பான குரலில் “உனக்கு என்ன வேணும்“ என்றாள் அவள்.
நான் “தேனீர் எடுத்து வரமுடியுமா” என்று சொல்வதற்கு வாயைத்திறந்தேன்.
“இங்கே பாருங்கள், இவரின் தலையில் ஒரு முடி இருக்கிறது என்று மண்டபம் அதிரும்படியாகக் கூவினாள்.
சுற்றியிருந்து, மற்றையவரின் புடவையை கடைக்கண்கால் அளந்தபடி, ஊர் வம்பளந்துகொண்டிருந்த ”ஆன்டி, பாட்டி” மேசைகள் தங்கள் கதையை நிறுத்தி சத்தம்வந்த திசையை நோக்கினர்.
இவளோ அந்த முடியை இரண்டு விரல்களால் பிடித்திருக்க, சுற்றியிருந்து தோழிகள் “ எங்கே, எங்கே” என்று கேட்டபடி அந்த லோக அதிசயத்தை சுற்றியிருந்து, வாயைப்பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அதிலொருத்தி “அது வெள்ளை மயிர்” என்ற பரமரகசியத்தையும் போட்டுடைத்தாள்.
“அதை பிடுங்கவா” என்ற அவர்களின் ஆசையை நிறைவேற்றினேன்.
உலகத்தில் மகிழ்ச்சி என்பது கொட்டிக்கிடக்கிறது. அதை கண்டெடுப்பதுதான் வாழ்க்கையாகிறதா?
இருக்கலாம்.