கடவுளுக்கு கடன் கொடுத்த கதை

நேற்று மாலை நண்பரின் கடையொன்றில் கணிணிதிருத்தச் சென்றிருந்தேன். நண்பர் வெளியே சென்றிருந்தார்.

அப்போது ஒருவர் உள்ளே வந்தார். பார்த்தால் வட இந்தியர் என்று கூறலாம்.  அப்படி நிறம். 20 வயதுக்கு அதிகம் என்று கூறமுடியாது. தலையைச் சுற்றி ஒரு கறுப்புத்துணி கட்டப்பட்டிருந்தது.

"I am Guru"என்றார்
”Hi Guru, I am Sanjayan" என்றேன். அவரின் பெயர் குரு என்று நினைத்தபடியே.
”no... no.. God send me... my friend.. people call me Guruji"

ஆஹா .. சனியன் என்னில் மீண்டும் கண்வைத்துவிட்டான் என்று சற்று அலேட் ஆனேன். அவனைப் பார்க்க பாவமாயும் இருந்தது.

"God says to me "என்றுவிட்டு கண்ணை மூடினான். (குரு தியானிக்கிறாராம்)
ஏறத்தாள 10 செக்கன்களில் கண்ணைத்திற்தான்.

”He says.. you good man.." என்றான்
”ம்” இது நான்”
”You good heart ... you help people but no money"

தெய்வமே என்று காலில் விழ யோசித்தேன். என்றாலும் சமாளித்தபடியே..
” Any more news from god" என்றபோது நண்பரின் கடையில் இருந்த பிள்ளையார் சிலையைக் கண்டுவிட்டான் ”குரு”

”you believe in him"
"No... I believe in Sanjayanatha"
தோழர் ”குரு” சற்று குழம்பிவிட்டார்
"you not hindu..." என்றார்
”yes.. I am"
"Then who is god Sanjayantha"
"Its me"
" Ohh my friend... you are jocking" என்றார் குரு

இப்படியே பிடி கொடுக்காமல் தப்பித்துக்கொண்டிருந்தேன்.தான் சாத்திரம் கூறுபவன் என்றும், நண்பரின் பெயரைக் கூறி ... ஆள் எங்கே என்றான்.
நண்பர்... சாத்திரம் கீத்திரம் என்று சற்று நம்பிக்கையுள்ளவர்தான். எனவே அவனில் நம்பிக்கை வந்தது.
 
நண்பருக்கு தொலைபேசினேன். ”அய்யோ... அவனா? என்று அலறினார் அவர்”
அதற்கிடையில் குரு, தொலைபேசியை பறிக்காத குறையாக வாங்கி நண்ருடன் கதைத்தான். இருவரும் படு பயங்கரமாக சுகம் விசாரித்துக்கொண்டார்கள். நண்பர் நாளை 8 மணிக்கு வா என்ற ஒப்பந்தத்துடன் தொலைபேசியை வைத்தார்.

நண்பர் 10 மணிக்குப் பின்புதான் கடையைத் திறப்பார் என்பது எனக்கு மிக நன்றாகத்தெரியும்.

குரு, என்னிடம் நண்பரின் தொலைபேசி இலக்கத்தைக் கேட்டான். அப்போது நண்பரின் தொலைபேசி அழைப்பு வந்தது. ”செத்தாலும் அவனிடம் தொலைபேசி இலக்கத்தை கொடுக்காதே” என்றுவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

நண்பர் எதிர்பார்த்தது போலவே குரு தொலைபேசி இலக்கத்தைக் கேட்டான்.
கடைசி இரண்டு இலக்கங்களையும் மாற்றிக் கூறினேன். படுபாவி... உடனடியாக நண்பருக்கு தொலைபேசி எடுத்தான். இலக்கம் பாவனையில் இல்லை என்று பதில் வர... திருகுதாளம் பிடிபட்டது.

நண்பரின் உண்மையான இலக்கம் கைமாறியது. அதுவும் சரியானதா என்று பார்த்தான். ரிங் போனது ... ” God is great ....... God is great" என்று தனக்குத் தானே கூறிக்கொண்டான்.

இப்போது என்னைப் பார்த்து..

"you love chieldren" என்றான்.

ஆச்சர்யமாய் இருந்தது ... எப்படி இது இவனுக்கு தெரிந்தது என்று.

மடையன்போன்று ஆமா ஆமா என்று பல்லை இளித்தபடியே பதிலளித்தேன்.

”I know... God is telling me that"என்றுவிட்டு ஒரு பையுக்குள் இருந்து சில படங்களை எடுத்தான். எல்லாமே வறுமையில் வாழும் குழந்தைகளின் படங்கள்.

அத்துடன் விடவில்லை அவன்..

"Please ..help.. I am going to Nepal. I must help children" என்று போட்டானே ஒரு போடு.

காசு தரமாட்டேன் என்று அடம்பிடித்தேன்.

இறங்கி வந்தான்.

”no eating today... give me some money please" என்றான். அவனைப் பார்த்தேன். சாப்பிடாதவன் போன்று சோர்ந்து இருந்தான். பாவமாய் இருந்தது
சிறிது பணம்கொடுத்தேன்.

”God will pay you back this money" என்றுவிட்டு மறைந்துவிட்டான்.

நண்பரின் கடையை பூட்டிவிட்டு வீடு செல்வதற்காய் வாகனத்தில் ஏறியபோது ஜன்னல் தட்டப்பட்டது.... வாகனத்துக்கு வெளியே ”குருஜீ” நின்றிருந்தார்.

ஜன்னலைத் திறந்தேன்.

ஒஸ்லோவில் ஒரு இடத்தைக் கூறி அங்கு தன்னை இறக்கிவிட முடியுமா என்றார்.

15 நிமிடம் கார் ஓடியது. குருஜி எதுவும் பேசவில்லை. நானும் அவரைக் குழப்பவில்லை.

குருஜியை இறக்கிவிட்டு வீடு வந்துசேர்ந்திருக்கிறேன்.
.
.
என்ட ஒஸ்லோ முருகா! ... ஏனய்யா எனக்கு மட்டும் விதி இப்படி இருக்கிறது?

நினைவின் காயம்

நேற்று முகப்புத்தக உட்பெட்டியில் ஒரு நோர்வேஜிய மொழிச் செய்திவந்தது.
பழசு, எப்படி இருக்கிறாய் என்று இருந்தது அது.

எனது உற்ற நோர்வேஜிய நண்பர். சில ஆண்டுகளாக தொடர்பு குறைந்திருக்கிறது. தொழில் நிமித்தமாக வடமேற்கு நோர்வேயில் இருந்து ஒஸ்லோவிற்கு தற்காலிகமாக குடிவந்திருக்கிறார். 3 மாதங்கள் தங்கியிருப்பாராம்.
என் குழந்தைகளுக்கு அவர் வீடு எங்கள் வீடுபோன்றது. அவருடன் நான் அறிமுகமானது 1987ம் ஆண்டு நடுப்பகுதியில். அன்றில் இருந்து இன்றுவரை தொடர்கிறது எமது நட்பு. அவரது பெற்றோருடனும் அவரது சகோதர சகோதரிகளுடனும் அவரது பாரியாரின் குடும்பத்தினருடனும்கூட எனக்கு நட்பிருக்கிறது.

2004 ஆம் ஆண்டு நத்தார் தினம் அவரது வீட்டில் மிக மகிழ்ச்சியாக நடந்துபோனது. அவரது குடும்பத்தவர்களுடன் எனது இளவரசிகள் இருவரும் மிக மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தார்கள். இளையவளுக்கு 4 வயது. மூத்தவளுக்கு மறுநாள் 8 வயது ஆக இருந்தது.

நத்தார் என்றால் பரிசுப்பொருட்களுக்கு கேட்க வேண்டுமா என்ன? சிறியவள் தனது பரிசுப்பொருட்களுடன் நண்பரின் மகளின் மடியில் விளையாடிக்கொண்டிருந்தாள். மூத்தவள் நண்பரின் தாயாருடன் உரையாடிக்கொண்டிருந்தாள். அம் மூதாட்டிக்கு 92 வயதிருக்கும். மூத்தவள் பிறந்திருந்த ஆரம்ப நாட்களில் எங்கள் வீட்டுக்கு இந் நாட்டு பழக்கவழக்கத்தின்படி தாய்க் கஞ்சிஎன்னும் கஞ்சியுடன் வந்திருந்தவர் அந்த மூதாட்டி. அதுமட்டுமல்ல தனது தாயின் தாயார் தனக்கு தந்திருந்த  கம்பளி ஒன்றினையும் அவர் எனது மகளுக்கு கொடுத்திருந்தார். ஏறத்தாழ 100 வருடங்கள் பழமையான கம்பளி அது. என்னை மிகவும் நெகிழ்ச்சிக்கு   உள்ளாக்கிய நிகழ்வு அது. 

அண்மையில் நண்பரின் மூத்த மகனுக்கு திருமணம் நடைபெற்றபோது நான் அதை அவனிடம் கொடுத்து அதன் பழமையைக் கூறினேன். இறுக அணைத்து கண்கலங்கி நன்றி கூறினான் அவன். நண்பரும் நெகிழ்ந்து என் முதுகில் அன்பாய் தட்டினார்.

மறுநாள் தனக்கு 8 வயது என்பதையும் அவர்கள் மாலை வீட்டுக்குவர வேண்டும் என்றும் மகள் அவர்களுக்கு கூறியபடியே தனது பரிசுப்பொருட்களுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். நண்பரின் மனைவிதான் வரும்போது ஒருகேக் கொண்டுவருவதாகக் கூறினார்.

நத்தார் மரத்தைச் சுற்றி சுற்றி கைகோர்த்தபடியே பாட்டுக்களை பாடியபடியே நடந்து ஓய்ந்து உண்டுகளைத்து மகிழ்ந்தோம். இளையவள் நண்பரின் மடியில் தூங்கிப்போயிருந்தாள். அவர் தனது குழந்தைபோல் அவளை அணைத்திருந்தார். அவளின் கேசத்தை கோதிவிட்டார். முத்தமிட்டார்.

மூத்தவள் சோபாவில் சுறுண்டிருந்தாள். நாம் புறப்பட்டோம். அவர்களது வீடும் எங்கள் வீடும் தூரமில்லை. 50 மீற்றர்கள்தான் இருக்கும். வீடுவந்து சேர்ந்தோம். குழந்தைகள் தூங்கிக்கொண்டிருந்தார்கள்.

தொலைக்காட்சியினை பார்த்தபடியே மகளின் பிறந்தநாளுக்கான வேலைகளை செய்துகொண்டிருந்தேன். நேரம் போய்க்கொண்டிருந்தது. தொலைக்காட்சி எங்கோ ஒருநாட்டில் பலத்த பூமியதிர்ச்சி என்று அறிவித்தது. மகளின் பிறந்தநாள் சிந்தனையில் வேறு எதுவும் மனதைக் கவரவில்லை. தூக்கம் வந்தது.  மூத்தவளை அணைத்தபடியே தூங்கிப்போனேன்.

அப்பா எழும்பு இன்று எனது பிறந்தநாள் என்று எழுப்பப்படும்வரை நான் கடும் நித்திரையில் இருந்தேன். எழும்பி வீட்டுக்குப் பின்னால் அவளுக்காக ஒளித்து வைத்திருந்த சைக்கிலை எடுத்துவந்து கொடுத்தேன். மகள் பெருமகிழ்ச்சியில் துள்ளிக்கொண்டிருந்தாள். இளையவள் என்றும்போல் கைசூப்பியபடியே தொலைக்காட்சியில் தன்னை மறந்திருந்தாள்.

நான் பிறந்தநாள் விழாவுக்கான உணவு மற்றும் வேலைகளில் என்னை மறந்திருந்தேன்.  திடீரென்று தொலைக்காட்சி நிகழ்ச்சி நிறுத்தப்பட்டது. அவசரச் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

தென்கிழக்காசியாவில் பூமியதிர்ச்சியினால் சுனாமி என்னும்  ஆழிப்பேரலை பல நாடுகளை தாக்கியிருக்கிறது. இலட்சக்கணக்கானவர்கள் இறந்திருக்கிறார்கள். அதிகம் பாதிக்கப்பட்டநாடுகள் இந்தோனேசியா இலங்கை ஆகும் என்றதுசெய்தி. ஒளிப்படங்கள் வரத்தொடங்கின. அந்நாட்களில் இருந்த தமிழ் தொலைக்காட்சிகளும் பயங்கரமான படங்களை வெளியிட்டன. நான் விறைத்துப்போயிருந்தேன்.

அப்போது எங்கள் வீட்டுமணி ஒலித்தது. இளையவள் எட்டிப்பார்த்து நண்பரின் பெயரைக் கூறிவந்திருக்காறார் என்று ஓடிச் சென்று கதவைத்திறந்து அவரது கைகளுக்குள் அடைக்கலமானாள். நண்பர் உள்ளேவந்தார். அவர் கண்கள் கலங்கி இருந்தன. மகளை இறக்கிவைத்துவிட்டு என்னை அணைத்து எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.. உங்கள் இனம் கடக்கும் அவலங்களுக்கு அளவில்லை என்றார். எனக்கும் பேச்சுவரவில்லை.

அன்று பல மணிநேரங்கள் எங்களுடன் தங்கியிருந்தார். மனதுக்கு ஆறுதலாய் இருந்தது. அம்மாவுடன் தொலைபேசியில் பேசினேன். அவர் பாதுகாப்பாய் இருந்தார்.

தொலைக்காட்சிகள் மிகவும் வேதனைமிக்க காட்சிகளை ஒலிபரப்பின. இதை எழுதும் இந்த நிமிடத்திலும் ஒருதந்தை இறந்துபோனதனது இரு குழந்தைகளை கட்டிக்கொண்டு அழுத காட்சி என்னுள்  படிந்துபோயிருக்கிறது. அந்தக் கணத்தின் வேதனை இன்றும் நினைவுகூரமுடிகிறது.

மகளுக்கு எதுவும் விளங்கவில்லை. ஆனால் வீடு மகிழ்ச்சியாய் இல்லை என்று புரிந்திருக்க வேண்டும். என்னைச் சுற்றிசுற்றியே நின்றாள். அப்போது அவள் அன்றைய நாளுக்கான அழகிய உடையை உடுத்தியிருந்தாள். நான் மெதுவாய் அழைத்து விடயத்தை விளக்கிக் கூறினேன். குழந்தைகள் இறந்திருந்த காட்சிகள் அவளுக்கு ஒரு புரிதலை ஏற்படுத்தியிருக்க வேண்டும்.

அம்மா! இன்று உனது பிறந்தநாள். ஆனால் இன்று மிகவும் வேதனையானதொரு நிகழ்வும் பல மனிதர்கள் வேதனையிலும் இருக்கிறார்கள் என்று கூறிமாலை நேரத்து விழாவினை நாம் கொண்டாடுவதை தவிர்ப்பதே நல்லது என்றேன். அவளின் முகத்தில் இருந்த மகிழ்ச்சி மறைந்துபோனது. மெதுவாய்  அழைத்து அணைத்து மடியில் உட்கார்த்திக்கொண்டார் நண்பர்.

அவளுடன்  நோர்வேஜிய மொழியில் உரையாடினார். அவளை உரையாடலுக்குள் புகுத்திக்கொண்டார். உலக வரைபடம் எடுத்துவரப்பட்டு நாடுகள், பூமியதிர்ச்சி, சுனாமி என்று நாம் உரையாடிக்கொண்டிருந்தார்கள். இளையவளுக்கு அவளது பெருவிரல் வாய்க்குள் இருந்தமையினால் அவளது உலகம் அவளுக்கு அழகாக இருந்தது.

அன்று மாலைமகள் சாதாரண உடைக்குமாறியிருந்தாள். வீட்டில் எவ்வித சோடனைகளோ, விழாவுக்கான அறிகுறிகளோ இருக்கவில்லை. வீடு மயான அமைதியில் இருந்தது. மகளும் பிறந்தாள் சோபையை இழந்திருந்தாள். மரணமும், மனிதர்களின் ஓலங்களும் அவளையும் பாதித்திருந்திருக்க வேண்டும் என்றே எண்ணுகிறேன்.

அன்றைய நாளும் அடுத்து வந்த நாட்களும் மிகவும் கனமானவை. மழையில் நனைந்த கோழிகள் போன்று தமிழர்கள் நடமாடிக்கொண்டிருந்தார்கள். நானும்தான்.  அடுத்துவந்த நாட்களில் தமிழர்களுக்கு உதவுவதற்காக தமிழர்கள் இணைந்து ஏறத்தாழ நோர்வே குறோணர்கள் ஒரு லட்சத்தினை நாம் சேர்த்திருந்தோம். நண்பரும் இதற்கு பலமாய் உதவினார்.

சுனாமியினால் இறந்த மற்றும் காயப்பட்ட மக்களுக்காக உள்ளுர் தேவாலயத்தில் திருப்பலி நடைபெற்றது. அப்போது தமிழர்களின் சார்பில் அங்கு உரையாற்ற அழைத்திருந்தார்கள். நான் ஆற்றிய மிகமிக சொற்பமான உரைகளில் என் மனதுக்கு நெருங்கிய உரை அது.

நண்பரைப் பற்றியும், அவரது செயல்களும், மனிதநேயமும்  எனக்கும் எனது குழந்தைகளுக்கும் எவ்வளவு ஆறுதலைத் தந்தது என்றும், உள்ளுர் மக்கள் எமது சமுதாயத்திற்கு உதவிய விதத்தையும் அங்குகுறிப்பிட்டேன். உரையின் இறுதியில் குரல் கம்மியது. அங்கிருந்தவர்களின் கண்கள் கலங்கியிருந்ததையும் பலர் கைக்குட்டையினால் கண்களை துடைத்துக்கொண்டிருந்ததும் கலங்கிய கண்களினூடேதெரிந்தது.

தேவாலயத்தில் நான் உட்கார்ந்திருந்த வாங்கினை நோக்கி நடந்தேன். வாங்கின் அருகே நண்பர் நின்றபடியே கையைப்பற்றி அழுத்திப் பிடித்தார். அருகருகே உட்கார்ந்துகொண்டோம்.  மனதை ஊடுருவிப்பாயும் ஓர்கன் இசை தேவாலயத்தினுள் புகைபோன்று பரவிக்கொண்டிருந்தது.

இதன் பின் அந்த ஊரில் 4 வருடங்கள் வாழ்ந்திருந்தேன். என்வாழ்வில் புயலடித்தபோது ஒருவாரத்தில் குறைந்தது 2 - 3 தடவைகள் பேசிக்கொள்வோம். நான் அழும்போது அமைதியாக கண்களை ஒற்றிக்கொள்ள மெதுகாகிதம் தருவார். என் சீழ் வடிந்தோடும் வரை.

நாம் நிட்சயம் சந்திக்கவேண்டும் என்று குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறேன் அவருக்கு.

குடும்பப் பெருமை

தொலைபேசி சிணுங்கியது. யாரொன்று பார்த்தால், அப்பரின் அழகிய ராட்சசி.

”அம்மா” என்று சம்பாசனையை தொடக்கியதும் கிழவி Computer, RGB, HDMI என்று கூறிக்கொண்டிருந்தார். குரல் பதட்டமாய் இருந்தது.

”ஒன்றும் புரியவில்லை” யாரு இரு நம்ம அம்மாவின் (vocabulary) சொல் வங்கியை upgrade பண்ணியது” என்று யோசித்துக்கொண்டிருந்தபோது
திடீர் என்று ”பாபாவை காணவில்லை என்றார் ”(சத்தியசாயி பாபா அல்ல, இது வேறு பாபா.

எனக்கு குஷி பிடித்துக்கொண்டது. கிழவி குளம்பியிருக்கிறாள் எனவே இன்னும் குளப்புவோம் என்று நினைத்தவுடனேயே ...

”யாராவது பாபாவை மண்டையில போட்டுட்டாங்களா அம்மா” என்றேன்.

யோசிக்கிறார்...

”யார் கதைக்கிறது” என்றார். குரலில் தடுமாற்றம்.

”ஏன் உமக்கு யாருக்கு எடுத்தது என்று தெரியாதா” என்றேன்.

”இது சஞ்சீவின் குரல் இல்லையே” என்றார்.

” அப்ப என் குரல் மறந்துவிட்டதா என்றேன்”

”அட நீயாடா..உனக்கா எடுத்திருக்கிறேன், அவனுக்குத்தான் எடுத்தன். நீதான் விசர்க்கதை கதைப்பாய். அவன் அப்படி இல்லை. அவன்தான் ஸ்கைப் போடுறது எப்படி என்று சொல்லித்தந்திருக்கிறான். அதில என்றார் Computer, RGB, HDMI என்று இருக்கு” என்றார்.

”அதென்ன பாபாவை காணல என்கிறீர்கள்”

” ஓம்... ஸ்கைப் எப்படி போடுறது என்று எழுதி இருக்கிற கொப்பில TV ஐ RGB ல விட்டால் பாபா வருவார் என்று இருக்கு என்று அவன் சொல்லியிருக்கிறான்.”

எனக்கு விடயம் விளங்கிவிட்டது. அம்மாவின் கணணியில் Screen saver ஆக அம்மாவின் பிரம்மகுமாரி பாபா சிரித்தபடி இருக்கிறார் என்பது எனக்குத்தெரியும். அவர் அதே சிரிப்புடன் அதே கணிணியில் ஆகக் குறைந்தது குறைந்தது 5 வருடமாக இருக்கிறார்.

”அம்மா போலிசுக்கு போகலியா” என்றேன்”

”ஏன்டா” என்றார் அப்புறாணியாய்

”பாபாவை காணவில்லை என்று முறைப்படு செய்ய”

”டேய், எப்படா நீ திருந்தப்போறாய்? .. பெரியாக்களை மதியடா, தம்பிய பார்... நீயும், உன்ட தங்கச்சியும்தான் இப்படி குரங்குச் சேட்டைவிடுறது”

”சரி சரி.. பாபாவின் முகம் இருக்கிற இடத்தில் ஒருபெரிய சதுரம் இருக்கும் அதில் உள்ள cancel பட்டனை அம்த்தினால் பாபா பறந்துவருவர்” என்றேன்.

”பொறு”.. என்றுவிட்டு அதை அமத்தினார்.

”ஓமடா பாபா வந்திட்டார் ” என்றார். படு குதூகலமாக.

”இது சஞ்சயானந்தாவின் திருவிளையாடல்” என்றேன்.

எனது கதையைக் கேட்டவில்லை கிழவி. ஸ்கைப்பில் வம்ச வாரசான தம்பின் மகனுடன் கதைக்கவேண்டும் என்று கூறிவிட்டு ” கடக்” என்று தொலைபேசியை வைத்தார்.

தம்பியின் மகன் அம்மாவை பாட்டி, அப்பம்மா என்று அழைப்பான் அதைக்கேட்கத்தான் கிழவி ஓடினாள் என்று யாராவது நினைத்தால் அதற்கு கம்பனி பொறுப்பேற்காது.

அவன், அம்மாவை, என் அப்பா அழைத்தது போல் ”சோதி” என்றே அழைக்கிறான். அதில் அம்மாவுக்கு ஏகத்துக்கும் பெருமையும், மகிழ்ச்சியும்.
என்ட ஒஸ்லோ முருகா.... இந்தக் குடும்பத்தின் பெருமைகளைப் பார்த்தாயா?

வாழ்க்கை என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது

சில நாட்களாகவே காலநிலையைப் போல மனநிலையும் சற்று இருண்டும், உட்சாகமின்றியும் இருக்கிறது. இன்று காலை விழித்துக்கொண்டபோது வானம் நீலமாகவும், சூரியன் தனது மெதுவெம்மையை பரப்பியபடியும் இருப்பதைக்கண்ட மனம் மகிழ்ச்சியை உணர்ந்து கொண்டிருந்தது. பல நாட்களின் பின், பல மாதங்களி்ன் பின் இந்த மனநிலையை உணர்ந்தேன். மனம் ஒருவித புத்துணர்ச்சியை உணர்ந்துகொண்டிருந்தது.

இன்று எனக்கு நன்கு அறிமுமான ஒரு நண்பரை சந்திப்பதாய் ஒப்பந்தம் இருந்ததை கைத்தொலைபேசி சிணுங்கியபடிய அறிவித்தது. மனதில் அதைக் குறித்துக்கொண்டேன். அவருக்கு தொலைபேசியில் பின் மதியவேளை அவரை சந்திப்பதாகவும், நாம் ஒஸ்லோவின் மேற்குப் பகுதியில் உள்ள புறநகர் ஒன்றில் உள்ள ஒரு கோப்பிக் கடையில் சந்திப்போம் என்றும் குறுஞ்செய்தி அனுப்பினேன். ”சரி" என்று பதில் குறுஞ்செய்தி வந்தது.

கைத்தொலைபேசியில் ஒஸ்லோ நகரத்து வெப்பநிலை 12 பாகை என்றிருந்தது. இவ்வருடத்தில் இதுவே முதற்தடவை வெப்பநிலை 12 பாகையாக இருப்பது. எனக்கு மிகவும் பிடித்தமான வெப்பநிலை 10 - 20க்கும் இடைப்பட்ட காலநிலையே. எனவே மகிழ்ச்சியுடன் இளம் சூடான வெய்யிலை உணர்ந்தபடி, நண்பரைக் காண்பதற்காக நடந்து கொண்டிருந்தேன். வழியெங்கும் வெய்யிலின் சூட்டை அனுபவித்தபடியே நடந்துகொண்டிருந்தார்கள்.

கோப்பிக்கடைக்கு வெளியே நண்பர் உட்கார்ந்திருந்தார். அவரருகே உட்கார்ந்து கொண்டேன். அற்புத அழகியொருத்தி என்ன தேவை என்று கேட்டறிந்து பரிமாறினாள்.

நண்பருக்கு 65 வயதிருக்கும். அவர் ஒரு வைத்தியர். .நா வின் வைத்தியப்பிரிவினூடாக பல நாடுகளுக்குச் சென்று தொழில் புரிந்தவர். ஒஸ்லோவின் பிரபல வைத்தியராக இருந்வர். விவாகரத்தின் பின் உக்ரைன் நாட்டு அழகியெருத்தியில் ஆசைப்பட்டு  அண்மையில் அவளை திருமணம் செய்திருக்கிறார். எனது நண்பர் பெண்கள் என்றால் அற்புதமாய் ரசிக்கும் கலைப்பண்புடையவர். அந்த அழகிக்கும் இவருக்கும் 20 வயதிலும் அதிக வயது வேறுபாடு உண்டு. வைத்தியரின் புதிய மனைவி உண்மையிலேயே அழகானவர். அவர் எங்களை நோக்கி நடந்து வந்தாலோ, அல்லது எம்மிடம் இருந்து திரும்பிச் சென்றாலோ அவரின் அபரிமிதமான அழகு எமது இதயத்துடிப்பை அதிகமாக்கும். நான் அவரைக் கண்டிருக்கிறேன். அவரும் ஒரு வைத்தியர். இருவரும் அடிக்கடி பயணப்படுவார்கள். நோர்வேயில் தங்கியிருப்பதைவிட அவர்கள் வெளிநாடுகளில் தங்கியிருக்கும் நேரமே அதிகம்.

நான் அவரைச் சந்தித்தது, கணிணியும் இணையமும், பாதுகாப்பும் என்பது பற்றி ஒரு ரோட்டறிக்கழகத்தில் உரையாற்ற அழைக்கப்பட்ட  நாளில். அன்றில் இருந்து அவரது கணிணிப் பிரச்சனைகளை நான் தீர்க்கிறேன், அவர் எனது வைத்திய பிரச்சனைகளை அவர் தீர்க்கிறார். நாம் பணம் கொடுப்பதும் இல்லை, வாங்குவதும் இல்லை. ஆனால் பண்டமாற்று எம்மிடையில் உண்டு. அவரது கணிணி பழுதடைவதைவிட நான் சுகயீனமுறும் சந்தர்ப்பங்கள் அதிகம். ஆனாலும் மனிதர் அதைப்பற்றியெல்லாம் அலட்டிக்கொள்வதில்லை. வைத்தியரிடம் எதையும் மறைப்பது கூடாதல்லவா? எனவே அவருக்கு என்னைப்பற்றிய அனைத்தும் தெரியும். அவரைப் பற்றியும் எனக்கு தெரியும். நகைச்சுவையுணர்வுள்ளவர். நொதித்த பழரசத்திலும், அழகிய பெண்களும் அவருக்கு போதையை தரவல்வை. அவரும் மனிதரல்லவா.

நாம் இருவரும் இளஞ் சூரிய ஒளியினை முகத்தில் விழுத்தியபடியே அதன் இளம்சூட்டினை அனுபவித்துக் கொண்டே உரையாடிக்கொண்டிருந்தோம். இருவரின் வாழ்க்கையும் இருவருக்கும் தெரியும் என்பதால் நாம் எதையும் வெளிப்படையாகப் பேசிக்கொள்பவர்கள். வாழ்க்கைபற்றி பேச்சுத்திரும்பியது.

என்னிடம் ஒரு அயர்ச்சி தென்படுவதாகக் கூறினார். அது பேச்சிலும் எதிரொலிக்கிறது என்றார். மனிதர் என்னையும், அவருடனான எனது உரையாடலையும் மிக நுணுக்கமாக அவதானிக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.

ஆம், யான் என்றேன் நான். யான் என்பது அவரது பெயர். என்னை ஊடுவிப்பார்த்தார். ”உனக்கு அடுததவருடம் 50 வயதாகிறது என்பது புரிகிறதா என்றார். ”புரிகிறது என்றே நினைக்கிறேன் என்றேன் நான்.

வாழ்க்கையை நீ எப்படிப் பார்க்கிறாய் என்றார் அவர்.
உடனேயே என்னால் பதில் சொல்ல முடியவில்லை. தேனீரை எடுத்து உறுஞ்சியபடியே சிந்தித்தேன்.

வாழ்கை ஒரு ஓட்டப் பந்தயம். தொடர்ந்து ஓடிக்கொண்டே இருந்தாலே அன்றி அங்கு உனக்கு இடமில்லை என்று எங்கோ வாசித்த அனுபவம் என்று கூறினேன்.

சிரித்தபடியேதொடர்த்து ஓடினால் மட்டும் அது போதுமானதல்ல, நீ வெற்றியீட்டுவதும் அவசியம் என்றார்

எனக்கு நான் உயிர்த்திருக்கிறேன் என்பதே போதுமாய் இருக்கிறது, வெற்றியீட்டுவது அவசியமாயில்லை என்றேன் அவரிடம்

உயிர்த்திருத்தல் வேறு, வாழ்தல் வேறு என்ற உண்மையை நீ புரிந்து கொள்ளல்b வேண்டும். நீ மன அழுத்தத்தில் வாழுந்து கொண்டிருப்பதால், உனது மனநிலை வாழ்க்கை மீதான எதுவித பிடிப்பையும் கொண்டிருக்கவில்லை. எனவேதான் உயிர்த்திருப்பது போதுமாயிருக்கிறது உனக்கு என்றார்.

உயிர்த்திருத்தல் வேறு, வாழ்தல் வேறு இதே வாசகங்களை முன்பும் ஒருதடவை கேட்டிருக்கிறேன். சென்ற வருடம் இலங்கை சென்றிருந்தபோது, எனது ஆசிரியர்களில் ஒருவரைச் சந்தித்தேன். வாழ்ந்து முடித்த அயர்ச்சியில் இருந்தார் அவர், தனது 90 வயதுகளில் வாழ்க்கை முடிவடையாது தொடர்ந்து செல்கிறது, என்பதை மேற் கூறிய வாசங்களின் முலம் உணர்த்தியிருந்தார்.

நண்பர் தொடர்ந்தார்,

வாழ்வின் மீதான அயர்ச்சி பலரையும் வாழ்வின் மீதான பிடிப்பில் இருந்து விலக்கிவைப்பது மட்டுமல்ல, அவர்களை அவர்களின் பிரச்சனைகளில் இருந்து மீளமுடியாத ஒரு சுழற்ச்சி மனநிலையைக் கொடுக்கிறது. அவர் எதையோ எனக்கு போதிக்கிறார் என்பதை மட்டும் உணர்ந்துகொண்டேன். மிகுதி புரியவில்லை. புரியாதவற்றை புரியாமாலே விடுவதில் ஏற்பில்லை எனக்கு. எனவேநீங்கள் கூறுவது புரியவில்லை, சற்றே விளக்கிக் கூறுங்கள் என்றேன்.

என்னைப் பார்த்து புன்னகைத்தபடியே கேட்டார் ”2012ம் வருடம் நீண்டதொரு நடைப்பயணம் சென்றாயே, ஏன் அந்த நடைப்பணத்தை மேற்கொண்டாய் என்றார்.

என்னுடன் எனக்கு சமரசமாக வேண்டிய அவசியமும், என்னை நான் வெல்லவேண்டிய அவசியமும், என்னாலும் சாதிக்கமுடியும் என்ற எண்ணத்தைப் பெறும் அவசியமும், எனது தோல்விகளை வென்றுவிடவேண்டும் என்ற எண்ணமும் என்னை 750 கி.மீ நடக்கவைத்தன என்றேன் நான்.

ஆக, உனக்கு வாழ்வு மீதான பிடிப்பு வந்திருந்தபடியால், சாதிக்கவேண்டும் என்ற மனநிலை அவசியப்பட்டதால், நீ நடைப்பயணத்தை மேற்கொண்டாய்  என்ன நான் சொல்வது சரிதானே என்றார்.

ம்ம் என்றேன் நான்.

இப்போது கூட உனது அயர்ச்சியின் அடிப்படைக் காரணம் நீ தந்தையாய் தோல்வி அடைந்திருப்பதாய் நினைப்பதே. நீ அதையே நினைத்துக்கொண்டிருக்கிறாய். ஆனால் நீ நினைப்பது தவறு. ஒரு சில தவறுகளால் எழுந்துகொள்ள முடியாத நிலைக்கு மனிதர்கள் தள்ளப்படுவார்கள் எனின், இன்று உலகம் முழுவதும் உன்னைப்போன்ற மனநிலையுடையவர்களே நிரம்பியிருப்பார்கள். நீ உனது வாழ்வினைப்பற்றி, அதன் உண்மைத்தன்மைகளை, யாதார்த்தங்களை, வலிகளை எழுதுகிறேன் என்று கூறுவது உண்மையானால் நீ உனது வாழ்க்கைய வென்றுகொண்டிருக்கிறாய். வலிகள் கடக்கக் கற்றுக்கொள். அவற்றுடன் வாழப்பழகாதே என்றார்.

7 - 8 ஆண்டுகளுக்கு முன்பு, நீ  மேற்கு நோர்வேயின் மலைகளில் நடந்து உனது சோகங்களையும், வலிகளையும், ஏமாற்றங்களையும் வெற்றி கொண்டது போன்றுநடைப் பயணத்தில் உன்னையே நீ வெற்றிகொண்டது போன்று, 12000 அடி உயரத்தில் இருந்து விமானம் மூலமாக குதித்து போன்று அடிக்கடி, உனக்கு  உன்னை நீயே வெற்றிகொள்கிறேன், என்னாலும் முடியும் என்னும் உணர்வு கிடைப்பது அவசியமாயிருக்கிறது. அவ்வணர்வே என்னாலும் வாழமுடியும், தோல்விகளை ஏற்கமுடியும், சாதனைகள் புரியமுடியும் என்னும் எண்ணத்தைத் உனக்குத் தருகிறது அல்லவா என்றபோது எனக்கு அவர் என்ன பேசுகிறார், என்னை எங்கு அழைத்துப்போகிறார் என்பது விளங்கத்தொடங்கியது.

வாழ்வில் தோல்விகளை ஜீரணிப்பதும், ஏற்றுக்கொள்வதும் எவ்வளவு முக்கியமானது என்பதை எது வாழ்க்கை எனக்குப் புகட்டியிருக்கிறது. இழக்கக்கூடாதவற்றை இழந்து எனது தோல்வியை ஏற்றுக்கொண்டிருக்கிறேன். எனது இரு குழந்தைகளையும் பிரிந்தது எனது வாழ்வின் மிகப்பெரியதோல்வி. கடந்த 5 ஆண்டுகளாக இந்த தோல்வியை கடந்து கொள்ள முயன்று கொண்டிருக்கிறேன். சாண் ஏற முழம் சறுக்கும் விளையாட்டு அது. மற்றையவர்களுடன் ஒப்பிடும்போது குழந்தைகளுக்காக எல்லாவற்றையும் பொறுத்திருந்திருக்கலாமோ என்றும் எண்ணத்தோன்றும்கடந்துவந்த பாதையின் போக்குகளை அவசரப்பட்டு முடிவெடுத்திருக்கிறேனோ என்றும் பல பின்மாலைப்பொழுதுகளில் சிந்தித்தபடியேதூங்கிப்போயிருக்கிறேன்.

யான் பேசிக்கொண்டிருந்தார். நான் கேட்டுக்கொண்டிருந்தேன். எனது முதல் மனைவியுடனான விவாகரத்தின்பின் எனக்கு எனது மூத்த மகனுடன் தொடர்பற்றுப்போனது. அவன் அதை விரும்பவில்லை. ஆனால் மற்றையவர்கள் அதை ஏற்றுக்கொண்டார்கள்மனிதர்களின் வாயைப் போன்றதொரு அசிங்கமாக அங்கம் வேறு எதுவுமில்லை. பேச்சுக்கள் அவசியமற்றுப் போகும்போது பிரிவுகள் அவசிமாகிறது. மூத்த மகன் விவாகரத்தை ஏற்றுக்கொள்ளவில்லையே என்பது மனதை நோகடித்தாலும், நான் அதற்காக அலட்டிக்கொள்ளவில்லை.

காலத்தைப்போன்ற ஆசான் எவருமில்லை. எந்தக் காயத்தையும் சுகமாக்கும் மருந்து, காலம். இன்று மகிழ்ச்சியாய் இருப்பவன் நாளை துன்புறலாம், இன்று துன்புறுபவன் நாளை மகிழ்ச்சியாய் வாழலாம். ஏற்றமும் இறக்கமும் உன் நிழலைப்போன்று எப்போதும் உன்னோடு வந்துகொண்டே இருக்கும். கிடைப்பதை ஏற்றுக்கொள். அவை உனது வினைகளின் பெறுபேறுகள். உணர்ச்சிகளை அடிப்படையாக வைத்தும் சிந்திக்காதே. அவை எப்போதும் சிக்கலையே தரும். இப்படியாக பிரசங்கித்துக் கொண்டிருந்தார். எனக்கு பலது புரிந்தும் சிலது புரியாமலும் இருந்தது. என்னைக் கவனிக்காது தொடர்ந்தார்.

உனது பிரச்சனைகளை பட்டியலிடு, வரிசைப்படுத்து, உன்னை மகிழ்ச்சியாக்கும் காரணிகளை அடையாளம் காண், சிறந்த நண்பர்களுடன் சேர்ந்துகொள். உனக்கு மன அழுத்தத்தை தருபவர்களை தவிர்த்துக்கொள், வாசி, இசையை ரசி, பயணப்படு, புதிய மனிதர்ளை சந்தி இப்படி எத்தனையோ வழிகளில் வாழ்வின் மீதான பிடிப்பை சிறிது சிறிதாக மீட்டுக்கொள்.

பெண் என்பவள் இல்லாது ஆணால் இயங்கமுடியாது. எனவே ஒரு துணையைத் தேடிக்கொள். உதாரணத்திற்கு என்னைப்பார். எனக்கும் கத்தரீனாவுக்கும் இடையில் 20வயதுக்கு இடையேயான இடைவெளியுண்டு. இந்த வயதில் கலவிக்கு ஆசைப்பட்டு நான் திருமணம் செய்யவில்லை. ஆனால் எனக்கு பெண்ணிண் அருகாமையும், அன்பும், கரிசனையும், வாசனையும் அவசியமாய் இருக்கிறது. பெண்களைப்போன்று பாதுகாப்பு உணர்வினை எவராலும் தரமுடியாது. தாய்மையின் முக்கிய அம்சம் அது. சில நேரங்களில் மன அறுதலுக்காக அவள் தோளில் சாயும்போது பேரமைதி கிடைக்கிறது. கொடுந்தனிமையில் படுக்கையில் புரண்டுறுள என்னால் முடியாது. இதை சொல்வதற்கு எனக்கு வெட்கமில்லை. ஏனெனில் என்னை நான் நன்கு புரிந்திருக்கிறேன். ஒரு பெண்ணினால் ஒரு மனிதனை அமைதிப்படுத்தவும் முடியும், ஆவேசப்படுத்தவும் முடியும் என்று கூறியபடியே குறும்புச் சிரிப்புடன் கண்ணைச்சிமிட்டினார்நானும் சிரித்தேன்.

உங்கள் கலாச்சாரத்தில் இவை இலகுவாக இருக்கும். எமது கலாச்சாரத்தில் அப்படியல்ல என்றேன். நோர்வேஜிய மொழியில் உள்ள ஒரு கெட்டவார்த்தையால் திட்டினார். சுற்றி இருந்தவர்கள் நிமிர்ந்து பார்த்தார்கள். நாம் இருவரும் சிரித்துக்கொண்டோம். வாழ்வு என்பது கலாச்சாரங்களுக்கு அப்பாற்பட்டது. வாழ்தல் என்பது எல்லோருக்கும் பொதுமையானது. உன் கலாச்சாரங்கள் உனக்கு சிக்கலான வாழ்வினை தருகிறது என்றால் அதை கேள்விக்குட்படுத்தவேண்டும். சில பிரச்சனைகளுக்கு உணர்ச்சிபூர்வமான தீர்வுகளை விட யதார்த்தமான அறிவுசார்ந்த முடிவுகளே அவசியம் என்பதாவது உனக்குப் புரிகிறதாஉன் வாழ்வை நானே, ஏனையவர்களோ வாழ்வதில்லை. அதை நீயே முடிவுசெய்கிறாய். வாழ்கிறாய், வாழப்போகிறாய்  என்றபடியே கையை மேலே உயர்த்தினார். அழகானதொரு பரிசாசகி அருகில் வந்து நின்றாள். இரண்டு ஆப்பிள் கேக், இரண்டு கறுப்புக்கோப்பி என்றார். எனக்கு ஆப்பிள் கேக் என்றால் மிகவும் பிடிக்கும் என்பதை அவர் அறிவார்.

சூடாக ஆப்பிள் கேக் வனிலா ஜஸ்கிறீமுடன் வந்தது. இரண்டையும் கலந்தெடுத்து வாயில் வைத்தேன். மெதுவாய் கர கரவென கரைந்துபோனது. நான் கண்மூடி சுவையை அனுபவித்ததை கண்டிருக்கவேண்டும் அவர். இதுபோலத்தான் வாழ்க்கையும். வாழ்க்கையையும் சுவையாக்கிக்கொள்ளப்பழகிக்கொள். வாழ்க்கையை அனு அணுவணுவாக சுவைக்கப்பளகு என்றார்.

அவருடன் பேசியது மனதுக்கு ஆறுதலாகவும், உற்சாகத்தையும் தந்திருந்தது. சிந்தனையையும் தூண்டியிருந்தது. அன்றிரவு சாமம் கடந்த பின்பும் தூக்கம் என்னை ஆட்கொள்ளவில்லை. மீண்டும் ஒரு நீண்ட நடைப்பயணம் சென்றால் என்ன என்னும் கேள்வி என்னை குடைந்துகொண்டிருந்தது. அதிகாலையில் விழித்துக்கொண்டபோது முதலில் நினைவுக்கு வந்தது நீண்ட நடைப்பயணமே.

தொலைபேசியை எடுத்துமிக விரைவில் மீண்டும் ஸ்பெயின் நாட்டின் வடக்குப்பகுதியில் 830 கி.மீ நடக்க முடிவெடுத்திருக்கிறேன் என்று எழுதி யான்க்கு அனுப்பினேன்.

வாழ்த்துக்கள், உன் பயணக்கதையை கேட்க ஆவலாய் இருக்கிறேன்.

பி.கு: ஸ்பெயின் நாடு பேரழகிகளுக்கும், பழரசத்துக்கும் பிரபல்யமானது என்பதையும் நினைவூட்டுகிறேன் என்றிருந்து அவரது பதில் .