அம்மா எழுதிய தொல்காப்பியம்


அம்மாவின் அட்டகாசங்கள் - 06

******
அப்பா எனக்கு தமிழ் வராது என்று முடிவெடுத்திருக்கவேண்டும். அவர் எனக்குத் தமிழ் கற்பித்ததே இல்லை. புத்திசாலி.

பெற்ற கடனுக்காக அம்மாதான் எழுத்தறிவித்தார்.

«பார்த்தேன்» என்பதை «பார்தேன்» என்று எழுதும்போதெல்லாம் «டேய், த்தன்னாவை மறக்காதே» என்று அழகாக உச்சரித்து அதைத் திருத்துவார். ஈசாப்புநீதிக்கதைப் புத்தகத்தில் இருந்து பந்திகளை எழுதவிடுவார்.

அம்மாவின் கையெழுத்து அச்சுப்போன்றது. அதைப்போன்று நானும் எழுதவேண்டும் என்று அவர் ஆசைப்பட்டது எனது தவறு அல்ல. அப்பாவுக்கும் எனக்கும் சுந்தரத்தமிழில் இருந்த ஒரே ஒரு ஒற்றுமை இருவரினதும் கோழிக்கிறுக்கல்தான்.

நான் பலகாலம் விடுதியில் தங்கியிருந்து படித்தேன். அப்போது அம்மாவுக்கு இரண்டு நாட்களுக்கு ஒருதடவை «வந்து என்னை அழைதுப்போங்கள்» என்று கடிதம்போடுவேன். அந்த அழைத்துப்போங்களில் த்தன்னா இருக்காது. அதை பதில்க் கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பார் அம்மா.

அம்மாவின் பின் என் தமிழாசான் எங்கள் ஈஸ்வர சர்மா சேர். அவரும் தலைகீழாக நின்று பார்த்தார். அவராலும் அடியேனின் எழுத்துப்பிழைகளைத் திருத்தமுடியவில்லை.

2009இல் அவரைப்பற்றி எழுதிய ஒரு பத்தியை யாரோ அவருக்குக் காண்பித்திருக்கிறார்கள். எனக்குத் தொலைபேசி எடுத்து «எக்கச்சக்கமான எழுத்துப்பிழை» என்று பாராட்டினார்.

சரி, இன்றைய அம்மாவின் அட்டகாசத்திற்கும் இதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் சம்பந்தம் இருக்கிறது. வாருங்கள் அந்தக் கதைக்குள் போவோம்.

குசினிக்குள் பெருஞ் சத்தம் கேட்டது. அம்மா சண்டைபிடிக்கும் ஆள் இல்லையே என்று நினைத்தபடியே கட்டிலால் எழும்பிவந்தேன். «ய் யன்னா எங்கே, ஒற்றைக்கொம்பு எங்கே» அதை யார் எடுத்தது என்று அம்மாவின் குரல் கேட்டது. குரல் சற்று சூடாகவும் இருந்தது.

என்னடா வில்லங்கம் இது. அம்மா யாருடன் கதைக்கிறார் என்று மெதுவாய் எட்டிப்பார்த்தேன்.

அம்மாவுக்கு உதவி செய்பவர் ஒருவர் நின்றிருந்தார். அவர் அதிகம் படிப்பறிவில்லாதவர். அம்மா தனக்குத் தேவையான பொருட்களைக் கூற, இவர் பட்டியலில் எழுதிக்கொண்டிருந்தார்.

அம்மா அவருக்கு «தேங்காய் எண்ணை» வாங்கவேண்டும் என்று கூற, அதை அவர் அதை «தேங்கா என்னய்» என்று எழுதியிருந்தார் என்று பின்பு அறிந்துகொண்டேன்.

இங்குதான் அம்மாவுக்கும் அவருக்குமாக பிரச்சனை தொடங்கியிருக்கிறது.

‘இப்படி பிழை பிழையாக எழுத ஏலாது’ இது மாணிக்காத்தாரின் 84 வயதுப் புத்திரி


‘--------’ தலையைச் சொறிகிறார் உதவியாளர்

‘எத்தனை தரம் சொல்லித் தந்திருக்கிறேன்’ என்று குரலை உயர்த்துகிறார் அம்மா.

உதவியாளர் இப்போதும் தலையைச் சொறிகிறார்.

நான் கூத்துப்பார்ப்பதற்காக ஒளிந்து நின்றுகொண்டேன்.

‘தேங்காய் எண்ணைய்க்கு ய்யன்னா வரவேணும், எண்ணை மூன்று சுழியுடன் எழுதவேணும் சரியா?

விளங்கியதா? இப்ப எழுதுங்க பார்ப்போம்’ என்றுவிட்டு பக்கத்திலேயே நின்றுகொண்டார்.

அவர் அம்மாவை பரிதாபமாக பார்த்தார். அம்மா தேங்கா… ய் எ….ண்…ணை.. ய் என்று அறுத்து உறுத்து உச்சரிக்கிறார். ண் ணண்ணாவை அழகாக நாக்கை உள்நோக்கி மடித்து உச்சரிக்கிறார்.

அவர் மீண்டும் பிழையாக எழுத… அம்மா திருத்த என்று ஐந்து நிமிடம் பெருங்கூத்து நடக்கிறது.

இப்போது அவரை அம்மா சரியாக எழுதவைத்துவிடடார்.

இப்போது உதவியாளர் ‘அம்மா, வேறு என்ன வேணும்’ என்று அவர் கேட்டபோது…. இந்த ஆள் பொல்லு கொடுத்து அடிவாங்குகிறாறே என்று அவருக்காக பரிதாபப்படத்தான் முடிந்தது.

«அங்கர் பால்மா» என்றார் அம்மா.

இந்த இடத்தில் உதவியாளரின் விதி அவரைப்பார்த்து பெரிதாய் சிரிக்கத் தொடங்கியது.
‘எழுதுங்க’

‘இல்லை அம்மா, அது நினைவில இருக்கு அம்மா’ இது அவர்.

ஆனால், அம்மா விடுவதாக இல்லை.

‘இல்லை, நீங்க மறந்துவிடுவீங்க’. அ..ங்..க..ர் என்று ஆறுதலாக உச்சரித்து எழுதுங்க என்றார்.

அவர் ‘அன்கர’ என்று சுந்தரத் தமிழில் எழுத.. அம்மா ‘என்னது அன்கர் ஆ? A..n..c..h..o..r என்று ஆங்கிலத்தில் உச்சரித்தபோது அவர் அழுவதுபோன்று அம்மாவைப் பார்த்தார்.

எனக்கு இருந்த பயமெல்லாம் எங்கே இந்தக் கிழவி அவரை ஆங்கிலத்தில் எழுதச்சொல்லிவிடுவாரோ என்பதுதான்.

அப்படி அழிச்சாட்டியம் பண்ணினால் இடையில் புகுவது என்று நினைத்தபோது அம்மாவிற்கு தாகமெடுத்தது. தண்ணீரைத் எடுத்து குடித்துவிட்டு நிமிர்ந்தார்.

இப்போது நான் குசினி வாசலில் நின்றேன். அம்மா உதவியாளரைப் பார்த்து இவனுக்கு தமிழ் படிப்பித்தது நான்தான் என்றார்.

அவர் என்னை பெரும் தமிழ் மேதாவி என்று நினைத்திருக்கக்கூடும். அவரின் அந்த ஆசையை நான் கெடுக்க விரும்பவில்லை. அம்மாவும் நான் இப்போது பிழைவிடாது எழுதுகிறேன் என்று நினைத்துக்கொண்டிருப்பார்.

சீத்தலைச்சாத்தனார் போன்ற ரோசக்காரன் நானில்லை என்பது அம்மாவுக்கும் தெரியாது, அம்மாவின் உதவியாளருக்கும் தெரியாது.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

செத்தான்டா முனாஅம்மாவின் அட்டகாசங்கள் - 05


******


நேற்று மாலை அம்மாவுடன் ஒரு சிறு நடைப்பயணம் செல்வதற்கு முன் வீட்டிற்கு என்ன என்ன தேவை என்று ஒரு பட்டியல் எழுதினார்.

ஊதுபத்தி
நெருப்பெட்டி
இட்டிலி மா
சிக்னல் பற்பசை


அந்தப் பட்டியலை நான் எடுத்துக்கொண்டேன். வீட்டில் இருந்து 20 மீற்றருக்குள் இருக்கிறது அம்மாவின் ஆஸ்தானக் கடை.

கடையின் முதலாளியை நான் இந்தக் கதையில் «முனா» என்றே அழைக்கவிருக்கிறேன் என்பதை அறிக.

அம்மாவின் ஆஸ்தான கடையின் முனா, அம்மாவைக் கண்டதும் ‘அம்மா, வாங்கோ. உங்களைக் கன நாட்களாகக் காணவிலலை’ என்றார்.

அம்மாவின் காதுகளில் அவரின் கதை விழவில்லை.

முனாவிற்கு அம்மாவையும், அம்மாவின் பீ.ஏ ஆகிய எனது மருமகளையும்;, அம்மாவிற்கு உதவிசெய்பவர்களையும் நன்கு தெரியும். நான் அம்மாவின் மகன் என்பது மட்டும் அவருக்குத் தெரியாது.

அம்மா, என்னைப் பார்த்து ‘என்ன வாங்கவேண்டும் என்று எழுதிக்கொண்டுவரவில்லை மறந்துவிட்டேன்’ என்றபடியே யோசித்துக்கொண்டிருந்தார். அம்மா தான் எழுதிய பட்டியலை மறந்துவிட்டார் என்பதை உணர்ந்துகொண்டேன்.

‘அம்மா, என்ன வேணும்’ இது முனா.

‘ஊதுபத்தி, நெருப்பெட்டி, இட்டிலி மா, சிக்னல் பற்பசை’ என்றேன் நான்.

‘இது மட்டும்தானா அம்மா’ இது முனா

இப்போது கடைக்குள் ஒரு தம்பதிகள் வருகிறார்கள்.

‘அய்யா, அம்மாவின் கணக்கைச் சொன்னால் பணம் தரலாம்’ என்றேன்,

கணக்கை எழுதினார். 401 ரூபாய் வந்தது. பணத்தை எண்ணி அவர் கையில் கொடுப்பதற்கு முன், அவர்...

அம்மாவைப் பார்த்து ‘அம்மா, சிக்னல் பற்பசை சிறியதா? பெரியதா? என்றார்.
‘பெரியது’ என்றார் அம்மா.

இப்போது முனா கடைக்குள் வந்த தம்பதியினருக்கு பொருட்களை எடுத்துக்கொடுத்தார்.

அம்மா, முனாவிடம் ‘தம்பி, ஒரு லக்ஸ் சோப் வேணும்.’

‘சரி, அம்மா’ என்றுவிட்டு தம்பதிகளின் கணக்கை முடித்து அனுப்பினார்.

மேசைக்கு லக்ஸ் சோப் வந்தது. விலை 401 இல் இருந்து சற்று அதிகரித்தது.

அய்யா கணக்கைச் சொல்லுங்கள் என்று நான் வாயை மூடவில்லை

அம்மா ‘நல்ல உழுந்து இருக்கிறதா?’ என்றார்.

ஒரு கிலோ உளுந்து மேசைக்கு வந்தது.

‘அம்மா நல்ல அரிசி’ இருக்கிறது என்று முனா ஒரு அரிசி மூட்டையை அம்மாவிற்குக் காட்டினார்

‘அரிசி ஒரு கிலோ’ என்றார் அம்மா. அதுவும் மேசைக்கு வந்தது.

இப்போதும் முனா கணக்கை முடிப்பதாய் இல்லை.

இதற்கிடையில் அம்மா, பினாயில் (pynol) தேவை என்றார். அதுவும் மேசைக்கு வந்தது.

முனா இப்போதும் கணக்கை முடிப்பதாய் இல்லை.

எனக்கு உள்ளுற சற்றுச் சூடாகத்தொடங்கியது.

‘அம்மா, வாங்கோ போவோம் என்றேன்’

‘தம்பி ஒரு பாண் வேணும்’ என்றார் அம்மா.

பாணும் வந்தது.

பயறு, கடலை, இன்னொருவிதமான சவர்க்காரம், நீலம் என்று அம்மா கடையையே விலைக்கு வாங்கிக்கொண்டிருந்தார். முனா கடைக்குள் பம்பரமாய் சுளன்றபடி புதிய புதிய பொருட்களை அம்மாவுக்கு காட்டினார். அம்மாவும் வாங்கினார்.

வீட்டுக்கு அவசியமானவையாக்கும் என்று நானும் எதுவும் பேசவில்லை.

இப்போது அம்மா மீண்டும் அரிசி ஒரு கிலோ என்றார்.

இப்போதும் முனா அதே அரிசியை மேசைக்கு எடுத்துவந்தார்.

அப்போதுதான் எனக்கு முனாவின் விளையாட்டுக்களின் அற்புதம் புரிந்தது.

‘இந்த அரிசி வேண்டாம்’ இது நான்.

‘அம்மா அரிசி வேண்டாமோ’ என்றார் முனா

‘வேணும்’ இது அம்மா

நான் கண்ணால் முனாவை எரித்தேன்.

முனா அதையும் கணக்கில் எழுதினார்.

அம்மா கடையையே வாங்குவதில் மும்மரமாய் இருந்தார்.

‘அம்மா, வாருங்கள் போவோம் என்று அழைத்தேன்.

முனா ‘அம்மா, பால்மா வாங்கேல்லயோ’ என்றார்.

‘ஓரு அங்கர் பால் பெட்டி’ என்றார் அம்மா.

எனது இரண்டு காதாலும் புகைந்தது.

முனாவைப் பார்த்துக் கடும் கறாரான குரலில் ‘இது காணும். பில்லைத் தருகிறீரா, இல்லை இவ்வளவு சாமானையும் உள்ளே எடுத்துவைக்கிறீரா’ என்று அம்மாவிற்கு கேட்காத குரலில் கூறினேன்.

முனா கல்குலேட்டரைவிட வேகமாக இயங்கினார். அய்யா இந்தாருங்கள் 1930 ரூபா வருகிறது என்று பற்றுச்சீட்டை நீட்டினார்.

பணத்தைக் கொடுத்தேன்.

பின்புறத்தில் “சஞ்சயன்.. நாளைக்கு தோசை செய்து தருகிறேன். தோசைமா வாங்கவேண்டும் என்றார், அம்மா.

முனா தோசை மாவை எடுத்தார். கண்ணால் எரித்தேன் அவரை.

‘அம்மா, நாளைக்கு நான் விரதம் என்றுவிட்டு அம்மாவை இழுத்துக்கொண்டு புறப்பட்டேன்.

‘என்ன விரதமடா’ என்றார் அம்மா.

‘ஓஸ்லோ முருகனுக்கு விரதமிருக்கிறேன்’ என்றேன்

‘யாரடா அது’ என்றார் அம்மா

வீடு வந்தோம்.

வீட்டினுள் வந்து உட்கார முன் மருமகள் தொலைபேசியில் வந்தாள்.

‘மாமா, எங்கே போயிருந்தீர்கள்?

‘கடைக்கு’

‘எந்தக் கடைக்கு?’

‘முனாவின் கடைக்கு’

‘அய்யோ மாமா, நேற்றுத்தானே ஒரு மாதத்திற்குரிய பொருட்களை வாங்கிக் கொடுத்தேன்’ என்றாள்

செத்தான்டா முனா.


#அம்மாவின்_அட்டகாசங்கள்

அம்மா ஒரு அற்புதமான கதைசொல்லி

அம்மாவின் அட்டகாசங்கள் - 04
******
ஒவ்வொரு முறையும் அம்மாவிடம் வரும்போது ஒரு புத்தகத்தோடு வருவதுண்டு.

அன்னா கரீனினா, ராமகிருஸ்ணன் கதைகள் என்று அளவில் பெரிய புத்தகங்களாக இருந்திருக்கின்றன அவை.

அப்புத்தகங்களைக் கண்டதும் ”எனக்குத் தா. நான் வாசிக்கவேண்டும்” என்று வாங்கிக்கொள்வார்.

இம்முறை ஓரான் பாமூக் இன் “பனி“ எடுத்துவந்தேன்.
இன்று அம்மா அதைக் கண்டார், எடுத்தார், தலைப்பை இருதடவைகள் வாசித்தார், நோபல்பரிசு பெற்ற நாவல் எனக்குத்தா, வாசிக்கவேண்டும் என்றிருக்கிறார்.

”முதல் தந்த புத்தகங்களை வாசித்துவிட்டீர்களா” என்றேன்.

“என்ன புத்தகம், எப்போ தந்தாய்?“ என்று மிகப்பிரபல்யமான கேள்விகளால் மடக்கினார்.

ஒரு அலுமாரினுள் பல புத்தகங்களுக்கு கீழ் இருந்து அன்னா கரினீனாவையும், எஸ். ராவையும் மீட்டு எடுத்து அம்மாவிற்கு காட்டினேன்.

அதையும் தா வாசிப்போம் என்று வாங்கி வைத்திருக்கிறாள் கிழவிச் செல்லம்.

தங்கைக்கும் எனக்கும் வாசிக்கும் நல்நோய் தொற்றியது அம்மாவினால்தான். உண்ணும்போதும் அவருக்கு வாசிக்கவேண்டும். இப்போதும் காலையில் குறைந்தது இரண்டு பத்திரிகைகளை மேய்வார்.

தம்பிக்கும் எனக்கும் அவர் வாசித்த கதைகள் ஏராளம். அம்மா அருமையான ஒரு கதைசொல்லி. அழகாக வாசிப்பார்.

அம்மாவை இப்போது முதுமையும், மறதியும் பற்றிக்கொண்டிருக்கிறது.

அம்மாவை ஓரிடத்தில் இருத்தி அவருக்கு வாசிக்கவேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

அம்மாவுக்கு நான் இப்படி கிறுக்குகிறேன் என்று யாரோ வத்திவைத்துவிட்டார்கள். “நீ எழுதியதைக் காண்பி, வாசிக்கவேண்டும்“ என்றிருக்கிறார்.

அம்மாவின் வாசிப்புப் பழக்கத்திற்கு முடிவு எனது பத்திகளை வாசித்துத்தான் வரவேண்டும் என்று விதியிருக்கிறதோ என்னவோ?

#அம்மாவின்_அட்டகாசங்கள்

அம்மாவா கொக்காஅம்மாவின் அட்டகாசங்கள் - 03


******


நோர்வேக்கும் அம்மாவுக்கும் நேரவித்தியாசம் 4.30 மணிநேரங்கள். நான் தூங்குவதோ சாமத்தில். அதாவது இலங்கை நேரப்படி ஏறத்தாள காலை 6 மணியாகிவிடும்.

நேற்றுத்தான் அப்பாவின் அழகிய ராட்சசியிடம் வந்தேன்.

இரவு 10 மணிக்கு அம்மா மின் விளக்குகளை அணைத்துவிட்டு குந்தியிருந்தார். ‘அம்மா, நீங்க நித்திரை கொள்ளுங்கள்’ என்றேன். ‘இல்லை, நீ படு. நான் பிறகு படுக்கிறேன்’ என்றார்.

அம்மாவிற்கு நோர்வேயின் நேரவித்தியாசத்தை மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.


‘பறவாயில்லை, களைத்திருப்பாய். போய் படு’ இது அம்மா.


சரி, நானும் படுக்கிறேன் என்றுவிட்டு இரண்டு மின்விசிறிகளை இயக்கியபின், 180 பாகையில் சரிந்தேன். அம்மாவும் தூங்கிப்போனார்.


கையில் தொலைபேசியுடன் நேரம் போனது. 12 மணிக்கு அம்மா எழும்பிவந்தார்.

‘இன்னும் படுக்கலியா’

‘இல்லை’

அம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும் மிக ஆறதலாக விளக்கிக் கூறினேன்.

‘அப்ப நீ நித்திரை கொள்ளமாட்டாயா?’ என்றார்.

‘அம்மா, நித்திரை வரும்போது படுக்கிறேன்’ என்றேன்.

அம்மாவிற்கு மனம் ஆறவில்லை.

‘ராசா, உனக்கு ஏதும் சுகயீனமா, ஏதும் பிரச்சனையா, பிள்ளைகளின் நினைப்பா, நுளம்பு கடிக்கிறதா’ என்று தனது சந்தேகங்களைக் கேட்டார்.

அருகே இருத்தி நேரவித்தியாசத்தை மீண்டும் விளங்கப்படுத்தினேன். முதல் இரண்டு மூன்று நாட்கள் இப்படி இருக்கும் இது வழமை என்றேன்.

தலையை ஆட்டினார். கண்ணில் சந்தேகம் தெரிந்தது.

இப்படி மணிக்கொருதடவை வந்து கேட்டார். நானும் மணிக்கொருதடவை அம்மாவிற்று நோர்வேயின் நேரவித்தியாசத்தை மீண்டும மீண்டும்; மிக ஆறதலாக விளக்கி விளக்கி களைத்துப்போனேன்.

காலை 5 மணிக்கு அம்மா எழும்பிவரும்போது எனக்கு நித்திரை வந்தது. அம்மா நித்திரை வருகிறது. படுக்கப்போகிறேன் என்றேன்.

ஆத்தாவுக்கு கோபம் வந்தது.

என்ன கெட்ட பழக்கம் இது? எங்கே பழகினாய்? காலை 5 மணிக்கு படுக்கிறது கூடாது. எழும்பு, குளி, சாமியைக் கும்பிடு, தேத்தண்ணி போடுகிறேன் என்று சூடாகினார்.

எனக்கு 5 மணி என்பது சாமம் என்பதை எனதன்பு ரௌடிக் கிழவிக்கு எப்படி புரியவைப்பேன்?

ஒருவாறு 8மணிபோல் தூங்கிப்போனேன்.

“மதியம் பத்துமணியாகிவிட்டது எழும்பு“ என்று நச்சரித்து நச்சரித்து என்னை எழுப்பி விட்டிருக்கிறாள் கிழவி.

என்ட ஒஸ்லோ முருகா.... என்னைக் காப்பாத்தய்யா.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

பொம்பளை ரௌடி

அம்மாவின் அட்டகாசங்கள் - 02
******
அம்மா இப்போது அதிகம் வெளியே நடந்து திரிவதில்லை. என புலனாய்வுத்துறை அறிவித்தது. எனவே அம்மாவை அழைத்தபடி ஒரு சிறு நடை நடப்போம் என்று நினைத்தபடியே..
“அம்மா வாங்கோ ஒரு சிறு நடைப்பயணம் போவோம்“ என்றேன்.
“என்னத்துக்கு“ என்றார்.
“கோத்தபாயவை சந்திக்கவேண்டும்“ என்றேன்
“யார் அது... உன்னுடன் படித்த யாருமா?“ என்று சீரியசாகவே கேட்டார்.
ஏதும் விதண்டாவாதமாகக் கதைத்து, அம்மா வரமாட்டேன் என்றால் என்ன செய்வது என்பதால், கடைக்குப்போவோம் என்றேன்.
மாணிக்கம் தங்கமுத்து தம்பதிகளின் 84 வயதுப் புத்திரியும் அந்த புத்திரியின் மூத்த புத்திரனும் நடந்து காலிவீதியை வந்தடைந்தோம்.
காலிவீதியின் மறுபக்கத்திற்குச் செல்லவேண்டும். மாலைநேரமாகையால் போக்குவரத்து வீதியை விழுங்கியிருந்தது. பாதசாரிகளுக்கான போக்குவரத்து மின் சமிக்ஞைவிளக்கு சிவப்பாக எரிந்ததுகொண்டிருக்க.. அம்மா வாகனங்களைப் பார்த்துக்கொண்டிருந்தார். நான் எதிரே இருந்த சாப்பாட்டுக்கடையைப் பார்த்துக்கொண்டிருந்துவிட்டு திரும்பினேன். அம்மாவைக் காணவில்லை.
நிமிர்ந்துபார்த்தேன். கிழவி கிடு கிடுவென்று வாகனங்களுக்கு “நில்“ என்று கையைக் காட்டியபடி, காலி வீதியை ஊடறுத்துத் தாக்கி வீதியின் மறுபக்கத்திற்கு போய்விட்டாள். வீதியில் வாகனம் தாறுமாறாய் வருகிறதே என்ற எண்ணம் சற்றும் இல்லை, அவருக்கு.
நானும் வீதியில் காலை வைத்தேன். ஒரு பேருந்து பெருச் சத்தத்துடன்.... ”மவனே செத்தாய்” என்று எச்சரித்தது. பயத்தில் நின்றுகொண்டேன்.
பாதசாரிகளுக்கான பச்சை விளக்கு எரிந்ததும் பாதையைக் கடந்துபோனேன்.
அப்போது அம்மா கேட்டாரே ஒரு கேள்வி....
”இவ்வளவு நேரமும் என்ன செய்தாய்?”
இந்தப் பொம்பிளை ரௌடியுடன் இனிமேல் காலிவீதியைக் கடப்பதில்லை என்று முடிவெடுத்திருக்கிறேன்.
அப்புறமாய் ஒரு கடைக்குப்போனோம்.
அங்கு நடந்தது, வீதியைக் கடந்ததைவிட பெருங் கூத்து.
அதை நாளை எழுதுகிறேன்.

அம்மாவின் அட்டகாசங்கள் - 01

இருபது வருடமாக எனது அழகிய தலையின் வெளிப்புறத்தில் எதுவித மாற்றமும் இல்லை. ஏதோ ஒன்று இரண்டு முளைத்திருக்கலாம் அல்லது நாலைந்து விழுந்திருக்கலாம்.
இன்று, அம்மா என்னைக் கண்டதும், 
 “என்னடா முழு மொட்டையாகிவிட்டது என்று மிக மனவருத்தத்துடன்“ கேட்டார்.
காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சுதானே, என்று நினைத்தபடியே பொறுத்துக்கொண்டேன்.
சற்று நேரத்தின் பின் அப்பாவின் படத்தைக் காண்பித்து “பார், அப்பாவுக்கு தலைமயிர் இருக்கிறது என்றார்“
எனக்கு சுர்ர்ர் என்றது.
அவரின் தலையில் ”வறண்டுபோன குளத்தைச் சுற்றி நாலு புல்லு முளைப்பதில்லையா என்று அதுபோல நாலு மயிர் இருக்கிறது” என்றேன்.
“வந்திட்டான், குதர்க்கம் கதைக்க என்று முணுமுணுத்தார்“, அம்மா.
“காக்கைக்கும் தன் குஞ்சு பொன்குஞ்சு“ என்றேன்.
அடிப்பதற்கு கையை ஓங்குகிறாள் கிழவி.
----------
காலை இடியப்பம் படைக்கப்பட்டது. சாப்பிட்டேன்.
சாப்பிட்டு இன்னும் ஒரு மணிநேரம் ஆகவில்லை.
தம்பி, நீ இன்னும் சாப்பிடவில்லை, சாப்பிடு சாப்பிடு என்று கலைத்தபடி இருக்கிறார். நானும் ”ஆத்தா, ஆளைவிடு தாயி“ என்று ஓடிக்கொண்டிருக்கிறேன்.
திருவிழா ஆரம்பித்திருக்கிறது.
“வெள்ளவத்தை விசா பிள்ளையாரே உனது *Oslo தம்பியின்* பக்தனைக் காப்பாற்று..

”நண்பேன்டா குடும்பம்”

என் நண்பருக்கும் சக்கரைவியாதி. எனக்கும் சக்கரைவியாதி.

நண்பரின் பாரியார் ஒரு வைத்தியர். நண்பருக்கு இங்குதான் பிரச்சனை ஆரம்பிக்கிறது. இந்த வைத்தியருக்கும் எனக்கு சக்கரை வியாதி இருப்பது தெரியும்.

நண்பர் கொழும்பில் இருந்து தேன்குழல் கொண்டுவந்திருக்கிறாா். ”வா தேத்தண்ணி குடிப்போம்” என்று அழைத்தார்.

அரை மணிநேரத்தில் அவரது சோபாவில் குந்தியிருந்தேன்.

நண்பர் இலங்கையில் இருந்து கொணர்ந்த இனிப்பு வகைகளை மேசையில் அடுக்கினார். தேனீர் எடுத்துவந்தார்.

அவர் வருவதற்கிடையில் நான் 4 தேன்குழல்களை விழுங்கியிருந்தேன்.

நண்பர் வாயை நாக்கினால் சுற்றி நக்கியபடி, தேன் குழலை எடுத்து வாய்கருகில் கொண்டுசெல்லும்போது ஒரு அசரீரீ கேட்கிறது இப்படி
”அப்பா! தேன் குழல் வந்திருக்கிறவருக்கு மட்டும்”

குரலின் உரிமையாளர்....நண்பரின் உரிமையாளர்.

நண்பர் கையில் எடுத்த தேன் குழலை என்னிடம் நீட்டினார். நான் விழுங்கினேன்.

வந்திருப்பவன் இருந்தால் என்ன செத்தால் என்ன என்னும் நண்பரின் பாரியாரின் பெரிய மனதை அவதானித்தீர்களா?

இதைத்தான் ”நண்பேன்டா குடும்பம்” என்பது

Oslo முருகனும் அவனது குருவிகளும்

நேற்று Oslo முருகனின் தீர்த்த நாள். அங்கு நின்றபோது, நண்பரின் பதின்மவயது மகள் ”அப்பா, ”இந்தக் குருவி” என்னை சுற்றி சுற்றி வருகிறது” என்றாள். நண்பரோ ”சும்மா இருடி...அது கடிக்காது” என்றார்.
கண்கலங்கிய கண்ணுடன் அவள் என்னிடம் ”மாமா.... குருவி” என்று ஆரம்பித்தாள்.
நான் குருவியைப் பார்த்தேன். அது அளவில் சிறியது. இலங்கையில் நாம் அதை தேனீ என்போம்.
இவ்வளவு விடயத்தையும் ஒரு பதின்மவயதுக் காளை அவதானித்துக்கொண்டிருந்தது. அவரையும் நான் நன்கு அறிவேன்.
நான் அந்தக் குருவியை கையால் தட்டிவிட்டபின், ”அடியேய், ஏன் குருவி உன்னைச் சுத்துகிறது தெரியுமா?” என்றேன்.
”இல்லை மாமா”
”அம்மா... நீங்க முகத்தில பூசியிருக்கும் ”மேக்கப்” பொருட்களில் ஒரு வித சீனிப்பதார்த்தம் உண்டு. குருவிக்கு அது பிடித்தமான உணவு. அதை உண்பதற்குத்தான் அது வருகிறது” என்று காற்றில் அள்ளிவிட்டேன். அவளின் முகத்தில் கிலிபடர்ந்தது.
இப்போதும் அந்தக் காளை என்னைக் கவனித்துக்கொண்டிருந்தது.
சற்று நேரத்தில் அவளின் காதில் குருவி குத்திவிட்டது. காதைப்பிடித்தபடி ஓடி வந்தாள் என்னிடம். அவளின் பின்னால் நண்பிகள் கூட்டமும் வந்தது. இவளின் காது சிவந்து, வீங்கியிருந்தது.
”அம்மா இனிமேல் கோயிலுக்கு மேக்கப்புடன் வராதே.... கடவுளுக்கும் மேக்கப்பிடிக்காது.... குருவிக்கும் பிடிக்காது” என்றேன்.
”நண்பிகளும், உண்மையா என்றார்கள்?
 ”அடியேய் ஆண்களை குருவி சுற்றுகிறதா என்று பாருங்கள்” என்றேன். எனது அதிஸ்டத்திற்கு ஆண்களை குருவி சுற்றவில்லை.
”இல்லை.. ஆண்களைச் சுற்றவில்லை” என்றார்கள்.
இதையும் அவதானித்துக்கொண்டிருந்த அந்தக் காளை, என்னிடம்......
”மாமா .. உங்களுக்கு ஏன் இந்த வேலை? மேக்கப்போட்டால் ஆபத்து என்பதால், இவள்கள் இனி கோயிலுக்கே வரமாட்டாள்கள்” என்றான் கவலையாய்.
அவசரப்பட்டு இளைஞர்களுக்கு துரோகியாகிவிட்டேனோ?
என்ட Oslo முருகா....

6 விரல் தேவதையும் ஒரு விசரனும்

கடந்த ஞாயிற்றுக்கிழமை நோர்வே தமிழ்ச் சங்கத்தின் விளையாட்டுப்போட்டியின்போது அவசர அவசரமாக சென்றுகொண்டிருந்த ஒரு 5 வயது அழகியை வழிமறித்து:
«அம்மா உங்கட பெயர் என்ன என்று» என்று கேட்டேன். «சொல்லமாட்டேன்» என்றுவிட்டு ஓடினாள்.
மீண்டும் அதே வழியால் அவள் வந்தபோது «ஏன் நீங்கள் நகத்திற்கு lipstic அடித்திருக்கிறீர்கள்» என்று கேட்டேன்.
«போடாங்» என்பதுபோன்று ஒரு நக்கல் பார்வையை வீசிவிட்டுச் சென்றாள்.
மீண்டும் அதேவழியால் வந்த போது «நீங்கள் ஏன் உதட்டுக்கு nail polish போட்டிருக்கிறீர்கள் என்றேன்.
இப்போது என்னை பரிதாபமாக மேலும் கீழும் பார்த்துவிட்டுச் சென்றாள்.
சற்று நேரத்தின்பின் மீண்டும் அகப்பட்டாள் அவள்.
«அம்மா உங்கட கையில் 6 விரல் இருக்கிறது» என்றேன்.
சிங்கம்.. சற்று நிதானித்து, கைவிரல்களை எண்ணியது.
1 2 3 4 5 என்று எண்ணியபின் «உங்களுக்கு ஒன்றும் தெரியாது» என்றாள்.
நமக்குத்தேவை தேவதைகளுடனான உரையாடலே என்பதனால், «கையைக் காட்டுங்கோ» என்றேன். காட்டினாள்.
அவளின் கையைப்பிடித்து வேகமாக எண்ணி 6 என்று முடித்தேன்.
சிங்கம் சற்று யோசித்தது. மீண்டும் எண்ணி 5 விரல்தான் என்றாள்.
நான் மிகவும் ஆறுதலாக எண்ணினேன். இரண்டு என்று சொல்லும்போது முதலாவது விரலைத்தொட்டு எண்ணி 6 என்று முடித்தேன்.
என்னருகில் உட்கார்ந்துகொண்டு நிலத்தில் கையைவைத்து 1 2 3 4 5 என்று எண்ணினாள்.
நான் 6 என்று எண்ணி, மறுகையிலும் 6 எண்ணினேன்.
அதுமட்டுமல்லாது எம்மை கடந்து சென்ற சிலரின் கைவிரல்களை எண்ணி அவர்களுக்கு 5விரல் உங்களுக்கு மட்டும் 6 விரல் என்றேன்.
"அப்பாவிடம் கேட்டுவிட்டு வருகிறேன்" என்று துள்ளியோடினாள்.
சற்றுநேரத்தில் திரும்பிவந்தாள். கையில் இனிப்புப் பண்டம் இருந்தது. எனக்கு ஒன்றைத் தந்தாள்.
«அப்பா எனக்கு 5 விரல் என்றார்» என்று கூறியபின் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தாள்.
அவளின் அழகிய சுறுள் முடி, நிரம்பி வழிந்த கன்னம், கன்னத்தில் விழுந்த குழி, கண்களில் ஒளிர்ந்த குழந்தைத்தன்மை, ஓயாத கதைகள் என்பன என்னை ஒரு அற்புத உலகத்தினுள் அழைத்துப்போயிருந்தது. பல காலங்களுக்குப் பின்னான ஒரு அழகழய உரையாடல் அது.
அவளின் தோழிகள் அவளைத் தேடி வந்தார்கள். அவர்களுக்கு எத்தனை விரல்கள் என்று எண்ணச்சொன்னாள்.
அவர்களில் ஒருத்திக்கு 7 விரல் என்று எண்ணிக் காட்டினேன். இல்லை 5 விரல்தான் என்று என்னுடன் சண்டைபோட்டார்கள்.
அப்புறமாய் விளையாடப்போகிறோம் என்றுவிட்டு எழுந்துபோனார்கள்.
என்னைக் கடந்து சென்ற அந்த முதலாவது பெண்குழந்தை சற்றுத்தூரம் சென்றபின் என்னைநோக்கி ஓடிவந்தாள்.
«என்னம்மா?» என்றேன்.
«ஏன் உங்களுக்கு தலையில் முடி இல்லை» என்று ஒரு கேள்வியை சாதாரணமாக வீசிவிட்டு எனது பதிலுக்காகக் காத்திருந்தாள்.
நான் இப்போதும் அதற்கான பதிலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.

தீராப் பேச்சுக்கள்

ஏறத்தாள 29 வருடங்களாக ஒருவரை அறிவேன். இப்போது அவருக்கு 70 வயதிருக்கலாம். அன்றில் இருந்து இன்றுவரை அவர் எப்போதும் உரத்துப் பேசியபடியே இருக்கிறார். வாழ்வின் சந்தோசங்களை அவர் பேசி நான் கேட்டதில்லை. அவரது மனதின் ஆதங்கங்களே எப்பொதும் பெருமழைபோன்று அவர் வாயில் இருந்து கொட்டிக்கொண்டே இருக்கிறன.

தனது காலம் முடிந்துபோவதற்குள் எல்லாற்றையும் பேசித்தீர்க்க வேண்டும் என்ற பெரும் அவசரம் அவரது மனதை அலைக்கழிக்கிறது என்றே எண்ணத்தோன்றுகிறது. ஆனால் அவரது வழக்குகள் பேசித்தீர்க்க முடியாதவை என்பதை அவர் இன்றும் அறிந்துகொள்வில்லை.
நானும் அவரும் 1987ம் ஆண்டுகாலத்தில் நோர்வேயில் ஒரே அகதிகள் முகாமில் பல மாதங்கள் ஒன்றாக வசித்திருந்தோம். சந்தித்த முதல் நாளில் இருந்தே அவர் வித்தியாசமானவராகவே இருந்தார். அதிகம் பேசினார். அதிகம் அமைதியாக இருந்தார். அதிகம் நடந்தார். அதிகம் யோகாசனம் செய்தார், அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டார். அதிகமாகவே திட்டித்தீர்த்தார்.
அண்மையில் அவரைச் சந்தித்தபோது 29 வருடங்களுக்கு முன் கூறிய கதைகளில் பலதை மீண்டும் உரத்துப் கூறிக்கொண்டிருந்தார். நான் அவரது பேச்சைக் கேட்டுக்கொண்டிருக்கிறேனா என்று அவசியம் அவருக்கு முன்பும் இருந்ததில்லை. இப்போதும் இல்லை. தான் நினைத்ததைக் கூறுவார். நிறுத்தாமல் தொடர்வார். அவர் நினைத்தபொழுதில் கதை புதிய திருப்பத்தில் நுழைந்து வேறு பாதையில் தொடர்ந்துகொண்டிருக்கும். அவர் நினைக்கும்போது மட்டும்தான் கதை நிற்கும்.
அன்றொரு நாள் தமிழர்கள் அதிகம் வந்துபோகும் பல்பொருள் அங்காடியினுள் நண்பர்களுடன் நின்றிருந்தேன். அங்கு யாரோ உரத்துப்பேசுவது கேட்டது. குரலும் பரீட்சயமானதாய் இருந்தால் காதைக் கொடுத்தேன். 29 வருடங்களுக்கு முன் எங்கள் அகதி முகாமில் அவருக்கும் இன்னொருவருக்கும் இடையில் நடந்த ஒரு வழக்கைக் காற்றுக்குக் கூறி நியாயம் கேட்டுக்கொண்டிருந்தார். இடையிடையே வந்துபோன பெயர்களில் எனது பெயரும் ஒன்று. என்னிடம் அவருக்கு சிறு பட்சம் உண்டு என்பதை அறிவேன் நான்.
ஏன், எப்படி அந்த பட்சம் வந்தது என்பதை நான் அறியேன். காரணம் தேடக்கூடாத கேள்விகளில் இதுவும் ஒன்று.
என்னைக் காணும் இடங்களில் சஞ்சயன் என்று கையைப்பிடித்து உரையாடுவார். அவருடன் அதிகம் உரையாடிய ஒரே காரணத்தால் 29 வருடங்களுக்கு முன்பே ‘விசரன்’ என்று பட்டத்தையும் நண்பர்கள் தந்திருக்கிறார்கள். அதெல்லாவற்றையும் கடந்து எனக்கு அவரில் ஒருவித ஈர்ப்புண்டு என்பதை மறைப்பதற்கில்லை.
அவரின் பேச்சுக்களில் அறிவார்த்தமான விடயங்கள இருக்கும். விசாலமான தமிழிலக்கிய அறிவுடையவர். ஆங்கிலப்புலமை உண்டு. சிங்களமும் அறிந்தவர், 1970களில் யாழ்ப்பாணத்தின் முக்கிய மேடைப்பேச்சாளர் என்றும் கூறக்கேட்டிருக்கிறேன்.
இத்தனை இருந்தும் என்ன அவரின் பேச்சின் நீளத்தினாலும், தொடர்பின்மையாலும் அவரது புலமை அடிபட்டுப்போய்விடும். அவருடன் உரையாட அதீத பொறுமைவேண்டும்.
நோர்வேயில் வடமேற்குப்பாகத்தில் வாழ்ந்திருந்த தமிழர்கள் 1987இல் தொடர்ச்சியாக ஒரு கையெழுத்துப்பிரதியொன்றை வெளியிட்டிருந்தோம். அதில் ”தமிழின் தொன்மை” என்ற தொனியிலான ஒரு தொடர் கட்டுரையை எழுதினார். நாம் வாழ்ந்திருந்த இடத்தில் அமைக்கப்பட்ட தமிழ்ச் சங்கத்தின் யாப்பினையும் இவரே எழுதியதாகவே நினைவிருக்கிறது.
நாம் வாழ்ந்திருந்த அகதிமுகாமில் அந்நாட்களில் இளைஞர்களே நிறைந்திந்தார்கள். ஒரு மனிதரை கேலிபேச, சேட்டைவிட இளைஞர்களுக்கு யாரும் கற்பிக்கவேண்டியதில்லையே.
எனவே இந்தக் கதையின் நாயனுக்கும் இளைஞர்களுக்கும் எப்போதும் அன்பான மோதல்கள் நடக்கும். சமத்துவபானம் உட்புகும் நேரங்களில் மோதல்கள் எல்லைமீறியதுமுண்டு.
அன்றொரு நாள், இளைஞர்கள் அவரை எல்லைமீறிக் கலாய்த்துக்கொண்டிருந்தார்கள். பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார், ஒரு கட்டத்தில் அவரது பொறுமை காற்றில் பறந்தது. நாற்காலியில் இருந்து எழுந்தார். இளைஞர் கூட்டம் ‘ஓ’ என்று பெரிதாய் ஆரவாரித்தது.
‘டேய்……………., வேசைமக்களே…………! உங்களுக்கு ஒரு சவால்’ என்றார்.
இளைஞர் கூட்டம் நக்கலாய் தங்களுக்குள் பார்த்துக்கொண்டபின் சிரிக்கவும் செய்தது. யாரோ விசில் அடித்தார்கள்.
‘என்ன சவால்? யார் கூட தண்ணியடிக்கிறது என்றா?’ என்றது ஒரு இளசு.
ஏளனமாக அவனைப்பார்த்தபடியே ‘நான் செய்வதை நீங்கள் செய்தால், இனிமேல் நீங்கள் எப்படியும் என்னை நக்கல்பண்ணலாம்’ என்றார்.
பெரும் ஆரவாரம் எழுந்தது. அதுவே சவாலுக்கு நாம் தயார் என்று அறிவித்தது.
சவாலை ஏற்றுக்கொண்டுவிட்டார்கள் என்றுணர்ந்தபின் இரு கைகளையும் நிலத்தில் ஊன்றி கால்களை மேலே தூக்கிக்கொண்டு நின்றார்.
‘இதுவா….. போட்டி, எவ்வளவு நேரம் நிற்கவேண்டும் ?’ என்று ஒரு இளசு கேட்டது.
தலைகீழாக நின்றபடியே நடந்துபோனார். மாடிப்படிகளுக்கு அருகில் சென்றவர், இரண்டாம் மாடிக்கு லாவகமாக கைகளால் ஏறிப்போனார். அப்புறமாய் இறங்கியும் வந்தார். வந்தவர் காலை ஊன்றி நிமிர்ந்தார்.
இளைஞர்கள் சபை அதிர்ந்துபோய் ஆளையாள் பார்த்துக்கொண்டது. பெரும் அமைதி நிலவியது.
அவர் எதுவும் பேசவில்லை. ஆறுதலாக அனைவரையும் ஊடுருவிப்பார்த்தார். பின்பு விறுவிறு என்று தனது அறைக்குள் புகுந்து கதவைச் சாத்திக்கொண்டார்.
இதன்பின்பும் இளைஞர்கூட்டம் அவரைக் நக்கலடித்தது. ஏளனமாய் அவர்களைப் பார்த்துச் சிரிப்பார்.
சில மாதங்களுக்கு முன் அவரை ஒரு வைத்தியரின் கந்தோரில் சந்தித்தேன். மனைவியுடன் வந்திருந்தார். அங்கு அவர் நொண்டி நொண்டி நடந்தார். டாக்டர் வந்து இருவரையும் அழைத்துப்போனார். அவர் தனது முதுமையுடன் போராடிக்கொண்டிருக்கிறார் என்று புரிந்துகொண்டேன்.
சில தினங்களுக்கு முன்னர் வந்த ஒரு தொலைபேசி அவரின் மனைவி இறந்துவிட்டதாக அறிவித்தது. வீடுதேடிப்போனேன். இப்போதான் வெளியே சென்றார் என்றார்கள். நான் அங்கு நின்றிருந்தபோது அவர் வரவில்லை. மறுநாள் நல்லடக்கம் முடிந்து அவரைச் சுற்றியிருந்த கூட்டம் மெதுவாகக் கலைந்தபின் அவரருகே சென்றேன். எனது முழங்காலில் அறுவைச்சிகிச்சை நடந்திருப்பதால் ஊன்றுகோல்களின் உதவியுடனேயே நடந்தேன்.
கண்டதும் ‘சஞ்சயன், என்ன நடந்தது’ என்றார். நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் வழமைபோன்று பேசத்தொடங்கியிருந்தார். நான் அமைதியாய் நின்றிந்தேன். பலர் அவரிடம் கைலாகுகொடுத்து விடைபெற்றார்கள். அவர் அதைப்பற்றி கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. அவருக்கு அவரது பேச்சே முக்கியமாய் இருந்தது.
அவரது மகள் வந்து அவரை அழைத்துப்போனார். அப்போது அவர் என்னைப் பார்த்து ‘வந்து சாப்பிட்டுவிட்டுப் போ’ என்றார். ‘நிட்சயமாய்’ என்றேன்.
உணவருந்தும் இடத்தில் எனது மேசை காலியாக இருந்தது. எனைய மேசைகளில் பலர் உட்கார்ந்திருந்தார்கள்.
என்னைத் தேடிவந்து என்னருகே இருந்த நாற்காலியில் அமர்ந்தார். தனது குடும்பம் நோர்வேக்கு வரமுன் அனுபவித்த அல்லல்களை கூறிக்கொண்டிருந்தார். கண்கள் பிற்காலத்தில் அலைந்துகொண்டிருந்தன. பலர் வந்து விடைபெற்றார்கள். தலைமட்டும் அசைந்தது. பேச்சு நிற்காமல் தொடர்ந்தது.
உணவருந்தியபடியே அரைமணி நேரத்திற்கும் அதிகமாக பேசியிருப்போம். நான் புறப்படவேண்டும் என்றேன்.
கையைப்பிடித்தார். ‘சஞ்சயன், எனக்கு இனி ஒருவரும் இல்லை. அவளும் போய்விட்டாள். ஒருவருக்கும் இனிமேல் பாரமாக இருக்கக்கூடாது. எனது பெரிய பிரச்சனையே நான் எப்போதும் பேசிக்கொண்டே இருப்பதுதான்’
‘ம்’
‘இனி நான் பேசப்போவதில்லை. வாயை மூடிக்கொள்ளப்போகிறேன்’ என்றார்.
நான் எதுவும் பேசவில்லை. ஆனால், அவரால் அது முடியாதது என்பதை நான் அறிவேன்.
உட்கார்ந்திருந்த அவரது தோளைப்பற்றி ‘அண்ணை, நான் விடைபெறுகிறேன்’; என்றேன்
தோளில் இருந்த எனது கையின்மேல் தனது கையைவைத்தார். முதுமையான அந்தக்கைகள் நடுங்கியதை உணர்ந்தேன்.
கடலுக்கு அலைகள் வேண்டியிருப்பதைப்போன்று மனிதனுக்கு பேசிக்கொண்டே இருக்கவேண்டிய அவசியமிருக்கிறது.
கடலின் அலைகளை ஏற்றுக்கொள்ளும் கரைகளைப்போன்று மனிதர்களின் பேச்சுக்ளை கேட்டுக்கொண்டே இருக்கத்தான் எவருமில்லை.

'இவருக்கு ஒன்றும் தெரியாது'

நேற்று பலரின் மத்தியில், கையில் தேனீருடன் சிவனே என்று தனியே குந்தியிருந்தேன்.
நீண்ட வெள்ளைநிறச் சட்டையுடன் முன்பின் அறியாத சிறுமி வந்தாள். புன்னகைத்தாள், அருகில் இருந்த நாற்காலியை இழுத்து உட்கார்ந்தாள்.
அவள் ஒரு இரகசியம் பகிர்ந்தாள்.
அவளின் அம்மாவின் வயிற்றில் ஒரு பேபி இருக்கிறதாம். என்றுவிட்டு அழகிய புன்னகையுடன் மறைந்துபோனாள்.
***
இதன்பின் இரண்டு சிறுவர்கள் அருகில் வந்தார்கள். என்னைப்பார்த்தார்கள். நின்றார்கள்.
விசாரணை ஆரம்பமாகியது.
“பெயர் என்ன?“
”சஞ்சயன்“
“ம்“
கைத்தொலைபேசியில் ஒரு விளையாட்டைக் காண்பித்து
“இது விளையாடுவாயா“ என்றார்கள்
“இல்லை“
“உனக்கு என் அப்பாவைத் தெரியுமா?“ என்று ஒருவன் என்னைக் கேட்டபோது மேலுமொரு சிறுவனும் அங்கு வந்தான்.
“இல்லை அய்யா, எனக்கு அவரைத் தெரியாது“
“ம், அம்மாவைத் தெரியுமா?“
“இல்லை“
இப்போது இரண்டாமவன் கேட்டான்.
'என் அப்பாவைத் தெரியுமா?“
“தெரியாது“
“அங்கே பார், கறுப்பு உடையுடன் நடனமாடுகிறாறே, அவர்தான்“
அவரைப் பார்த்தபின் “ இல்லை அய்யா, அவரையும் தெரியாது“ என்றேன்.
அம்மாவைத் தெரியுமா?
இல்லை ராசா, தெரியாது
மூன்றாமவன் தொடங்கினான்
'என் அப்பாவைத் தெரியுமா?“
“தெரியாது“
”அம்மாவைத் தெரியுமா?”
”இல்லை அய்யா...”
உனக்கு ஒருவரையும் தெரியாது என்றபடியே, மேலும் இரு சிறுவர்களை அழைத்துவந்து அதே கேள்விகளைக் கேட்டார்கள். நானும் ”இல்லை, தெரியாது என்றேன்”
ரவுண்டு கட்டி நின்று சிரித்தார்கள்.
அதைத் தாங்கலாம்... ஆனால்...
அப்புறமாய் என்னைக் கடந்துசென்ற எல்லோரிடமும்
”இவருக்கு ஒருவரையும் தெரியாது என்பதற்குப்பதிலாக, இவருக்கு ஒன்றும் தெரியாது, இவருக்கு ஒன்றும் தெரியாது என்று ஒலிபரப்பிக்கொண்டிருந்தார்கள். அவர்களும் என்னை பரிதாபமாகப் பார்த்தபடியே கடந்துபோனார்கள்.
இதைத்தான் தாங்கமுடியவில்லை.
அடேய்... நான் சிவனே என்றுதானே உட்கார்ந்திருந்தேன். நீங்களாகவே வந்தீர்கள், கேள்வி கேட்டீர்கள், உண்மையான பதிலைச் சொன்னேன்.
அதற்காக இப்படியா விழா முடியும்வரையில் ரணகளப்படுத்தி ஒலிபரப்புவீங்க...
நேற்றில் இருந்து 5 இல் இருந்து 10 வயதுச் சிறுவர்களுக்கு பதிலே சொல்வதில்லை என்று தீர்மானித்திருக்கிறேன்.
எங்கே இருந்தடா வருகிறீர்கள்?
என்ட Oslo முருகா.... ”ஏனப்பா உன் பக்தனை இப்படி” சோதிக்கிறாய்?
************************
வாழ்க்கையின் அற்புதக் கணங்கள் இவைதான்.
இதுவே பேரின்பம்.
இங்குதான் வாழ்வின் நிலத்தடி நீர் இருக்கிறது.

23. oktober

Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல்.

இன்றுகாலை வீட்டில் இருந்த புறப்பட்டபோது எல்லாமே நன்றாகத்தான் இருந்தது. நீல வானம். 16 பாகை வெய்யில். சுகமான மெதுகாற்று. வீதியில் அழகிகள். எக்சேட்ரா எக்சேட்ரா.
போயிருந்த இடத்தில் அனிச்சையாக காற்சட்டைப் பையினுள் கையைவிட்டேன். மனது திடுக்கிட்டது. வீட்டுத்திறப்பைக் காணவில்லை. திறப்புடன் 64gb usb pendriveம் அதில் எனக்கு அவசியமான ஆவணங்களின் backupஉம் இருக்கிறது. அதுவும் மாயமாக மறைந்துவிட்டிருந்தது.
வாகனத்தில், நண்பரின் வீட்டில், கடையில், நடந்துபோன வழியில் என்று எங்கு தேடியும் அது கிடைக்கவில்லை. சுந்தரமூர்த்தி நாயனாரும் உயிரோடு இல்லை.
வீட்டு ஜன்னலை திறந்துவிட்டு வந்தேனோ என்பதும் நினைவில்லை. அப்படியென்றால் ஜன்னலால் உள்ளே பாயலாம்.
வாகனத்தை வீட்டிருகில் நிறுத்திவிட்டு ஜன்னல் திறந்திருக்கிறதா என்று பார்த்தேன். ஜன்னல் மூடியிருந்தது.
எப்படியோ கதவினை உடைக்கவேண்டும். வானத்தினுள் இருந்தபடியே வீட்டு உரிமையாளருக்கு அறிவித்தேன். புதிய கதவின் செலவு உன்னுடையது என்றார் அன்பாக. மறுக்க முடியுமா?
திறப்பு செய்யும் கடைக்கும் தொலைபேசினேன். கையை விரித்தார்கள்.
கதவு உடைப்பதா... ”பொறு வருகிறேன் அது சின்ன வேலை” என்றபடியே வருவதாக அறிவித்தான் ஒரு சுத்தத் தமிழன்.
நான் தமிழன் வரும் வரையில் தொலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தேன்.
தமிழன் வந்ததும் வீட்டுக்குச் சென்றோம்.
திறப்பு கதவில் தொங்கிக்கொண்டிருந்தது.
கதவு உடைக்க வந்த தமிழன் வீட்டுக்குள் இருந்த சந்தோச நீர் போத்தல் ஒன்றையும், நேற்று இராப்பிச்சையாக கிடைத்த 5 ரோல்ஸ்இல் 3ஐயும் எடுத்துக்கொண்டு போயிருக்கிறான்.
ஒரு சிறு துரும்பையேனும் அசைக்காமல் ஒரு புதிய கொன்யாக் போத்தலை துாக்குவது அதர்மம்..
என்ட Oslo முருகா .. இது நல்லா இல்ல ஆமா

பறக்கும் கம்பளம்

சில வாரங்களுக்கு முன், எனக்கு நன்கு அறிமுகமாகிய ஒரு தம்பதியினருடன் அவர்களது மகளைக் காணக்கிடைத்தது. 2 வயதானஅவளுக்கு மாயா என்று அற்புதப் பெயர். முத்துப்போன்ற பற்கள். நிறைந்த சொக்கு, தீர்க்கமான கண்கள், நெளி நெளியான மினுங்கும் வாசனையான பட்டுப்போன்ற தலைமுடி.
ஒரு தேனீர்க்கடையினுள்தான் அவளைக் கண்டேன். குழந்தைகளின் அருகில் செல்லும்போது கிடைக்கும் பரிசுத்தமான அலைவரிசையை மனது உணர்ந்துகொண்டிருக்க அவளருகே இருந்து அவளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். முன்னே உட்கார்ந்திருந்த அவளின் தாய் தந்தையர் மறைந்துபோனார்கள். அதன்பின் உலகமும் மறைந்துபோனது. எமக்கான ஒரு அற்புத உலகம் திறந்துகொண்டது. அப் புதிய உலகில் ஏறத்தாள 50 வயது வித்தியாசமுடைய அவளும் நானும் மட்டுமே இருந்தோம்.
இப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்திருக்கவில்லை. அதனை அனுபவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது குழந்தைகள் இருவரும் பெண்குழந்தைகளே. அவர்களுக்கிடையில் 4 வயது இடைவெளியுண்டு. மூத்தவளுக்கு 20 வயதாகிறது இப்போது.
எனது பால்யத்துக்காலம் தொடக்கம் குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் தந்தையானபின்பே குழந்தைகளுடனான எனது உறவு முற்றிலும் வேறுபடத் தொடங்கியது. குழந்தைகளைப் பார்ப்பது, ரசிப்பது, அவர்களுடன் பழகுவது, அவர்களுடன் விளையாடுவது, அவர்களை தூக்குவது என்று அனைத்திலும் மனதினை அமைதிப்படுத்தும ஒரு மென்மையான குதூகலப்படுத்தும் ஒரு உணர்வு உண்டு என்பதை கண்டுகொண்டிருக்கிறேன். நான் என்னை முற்றிலும் மறந்துபோகும் நிலை அது.
எனது குழந்தைகளில் மட்டும இவற்றை நான் உணர்ந்ததில்லை. நான் பழகும் அனைத்துக் குழந்தைகளிலும் இந்த பரிசுத்தமான உணர்வினை அனுபவித்திருக்கிறேன். குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவது என்பது இலகு அல்ல. முதல் முறை அவர்களைக் காணும்போது நாம் எவ்வாறு அவர்களைக் கையாள்கிறோம் என்பதில் தங்கியிருக்கிறது எதிர்காலத்து உறவு. இதை நான் உணர்ந்தபோது ஒரு குழந்தை என்னைக் கண்டால் பயந்து ஓடத்தொடங்கியிருந்தது.
வடக்கு நோர்வேயில் கல்விகற்றுக்கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் சிலரின் வீடுகளுக்கு அருகில் ஒரு வருடம் தங்கியிருந்தேன். அங்கிருந்த ஒரு ஆசிரியருக்கு ஒரு பெண் குழந்தை. அவளுக்கு 2 வயதிருக்கும் அப்போது. முதல் நாள் அவளைக்கண்டபோது அவளுக்கு பின்புறமாக நின்று “பாஆஆஆ” என்று சத்தமிட்டேன். பயந்து அழுதபடி வீரிட்டுக் கத்தியபடியே திரும்பிப்பார்த்தாள். அதன் பின் என்னைக் கண்டாலே அழத்தொடங்கினாள். அந்த ஒரு வருடமும் என்னைக் கண்டதும் அழுதாள். அங்கிருந்த ஏனைய ஆசிரியர்களுக்கும் சிறிய குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் நான் நட்பாயிருந்தேன். ஆனால் அந்த பெண்குழந்தை மட்டும் என்னுடன் நட்பாகவே இல்லை. அதன்பின் நான் குழந்தைகளை பயமுறுத்துவதை விட்டுவிட்டேன்.
இப்போது என்னுடன் நட்பாகாத குழந்தைகளே இல்லை. குழந்தைகளுடனான நட்பு வாழ்வின் மிகவும் வலிமிகுந்த காலத்தை கடந்துகொள்ள உதவியது. உதவிக்கொண்டிருக்கிறது. வளர்ந்தோருடனான எனது நட்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. விரல்விட்டு எண்ணலாம் எனது நண்பர்களை. ஆனால் எனக்கு பல குழந்தைகள் நட்பாக இருக்கிறார்கள்.
அவர்களில் பலர் என்மீது காட்டும் நம்பிக்கை வாழ்வின் மீதான பிடிப்பினை தக்கவைத்துக்கொள்ள உதவியிருக்கிறது. எங்கு என்னைக் கண்டாலும் எதுவித முன் கற்பிதங்களும் இன்றி தூய்மையான அன்புகலந்த புன்னகையுடன் ஓடிவந்து “சஞ்சயன் மாமா” என்னும் அவர்களது அன்பின் கரைந்துபோகும் நேரங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தந்திருக்கின்றன.
குழந்தைகளுடனான உரையாடல்கள் எப்போதும் அழகானவை. கருப்பொருள்களும் அப்படியே. ஆண் குழந்தைகளின் கருப்பொருள்களும் பெண் குழந்தைகளின் கருப்பொருள்களும் வெவ்வேறானவையாகவே இருக்கும். ஆண் குழந்தைகள் விளையாட்டு, திரைப்படங்கள், கணிணி என்று உரையாட விரும்புவார்கள். இவர்களை மென்மையான மனித உறவு, இயற்கை, சூழல் என்று பேசவைப்பதற்கு முயற்சிப்பேன். ஆனால் பெண் குழந்தைகள் பொம்மைகள், நிறங்கள், சித்திரம், உணவு, நட்பு, புத்தகங்கள் என்று பேசினாலும் இயற்கை, சூழல் என்பவற்றில் அதிக கவனமாய் இருப்பார்கள்.
குழந்தைகளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அதிகம். பெரியவர்களிடம் இல்லாத மனிதநேயத்தை, உதவும் மனப்பான்மையை, மிருங்களிடம் அவர்கள் காட்டும் நட்பை, இயற்கையின் மீதான அவர்களது கவனம், விருப்பம் என்பவை என்னை சிந்திக்கவைத்திருக்கின்றன. வாழ்க்கை மீதான அயர்ச்சி வளர்ந்த மனிதர்களான எம்மை வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை அனுபவிப்பதை தடுக்கிறதோ என்று நான் எண்ணுவதுண்டு. அப்படியும் இருக்கலாம்.
குழந்தைகளிடம் நான் கண்டுகொண்டு இன்னுமொரு அழகிய பழக்கம் “சிரிப்பு”. ஒரு சம்பாசனையின்போது எத்தனை முறை அவர்கள் சிரிக்கிறார்கள், புன்னகைக்கிறார்கள் என்பதை அவதானியுங்கள். அதோபோல் வளர்ந்தவர்களுடனான உரையாடலில் அவர்கள் எத்தனை முறை சிரிக்கிறார்கள் என்று பாருங்கள். குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறையும் வளர்ந்தோர் 25 முறையும் சிரிக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். சிரிக்கும்போது எமது மனமும் இலகுவாகின்றது. சுற்றாடலையும் நாம் மகிழ்வாக்குகிறோம். இங்கும் குழந்தைகள் எமக்கு கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பின் ஒலிகூட மனதுக்கு அற்புதமானதொரு மருந்து. அந் நேரங்களில் அவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வானவில்லைப்போன்று அழகாயிருக்கும்.
மனம் வருந்தியிருக்கும் குழந்தையை, அழும் குழந்தையை, ஏதோ ஒன்றிற்காகப் அச்சபபடும், ஏங்கித் தவிக்கும் குழந்தையை ஆறுதல்படுத்தியிருக்கிறீர்களா? குழந்தையின் மனதோடு ஒன்றிப்போய் அதன்வலியை உணாந்து அணைத்து, அறுதல்படுத்தி, நம்பிக்கையூட்டி அவர்களை அமைதிப்படுத்தும்போது அவர்களின் மனதில் ஏற்படும் ஆறுதலான அமைதியின் ஓசையை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு மனிதனை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பான அற்புதமான உணர்வு அது. விக்கி விக்கி அழும் குழந்தை மூச்சை ஒவ்வொரு முறையும் விக்கி விக்கி உள்ளே இழுக்கும்போது உங்களின் மூச்சும் திணருகிறது எனில் நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். குழந்தைகளை தேற்றுவது என்பது ஒரு கலை. தாய்மார்களுக்கு அது இயற்கையாக அமைந்திருக்கிறது. சில அப்பாக்களுக்கும்தான்.
குழந்தைகளின் முன்னால் எப்போதாவது முட்டாளாக நடித்திருக்கிறீர்களா? அது ஒரு பெரும் கலை. இந்தப் பெரிய மனிதனுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று அவர்களை நினைக்கவைக்கவேண்டும். உங்களுக்குத் தெரியாததை கற்பிக்க முனையும் அவர்களுடைய மனது மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். தம்மை ஒரு பெரிய மனிதாக நினைத்தபடி எமக்கு கற்பிக்கும் அவர்களது சொல்லாடல்கள், செய்கைகள், முகபாவனைகள் என்று அந்த உலகம் பெரியது.
ஒரு முறை 5 வயதான ஒருத்தியிடம் ஒரு சிவப்புப் பூ ஒன்று இருந்தது. நான் அவளிடம் “ஏன் பச்சை நிறமான பூ” வைத்திருக்கிறீர்கள் என்றேன். தலையில் கையை வைத்தபடியே “உங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.” அதன்பின்னான அந்த மாலைப்பொழுதில் நான் நிறங்களை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அந்த மாலைப்பொழுது அழகானதாய் மாறிப்போனது. கடந்துபோன காற்றும் சற்று நிதானித்து எங்களை பார்த்தபடியே கடந்துபோயிருக்கும்.
குழந்தைகளுக்கு கதை சொல்வது எனக்குப்பிடிக்கும். பெண்குழந்தைகளுக்கு ஒருவித கதைகளும், ஆண் குழந்தைகளுக்கு இன்னொருவித கதைகளுமே பிடிக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள், அமைதியான மிருகங்கள், நிறங்கள், இயற்கை, அமைதியான நீரோட்டம் போன்ற சம்பவங்கள் உள்ளடங்கிய கதைகளை பெண்குழந்தைகளக்கு பிடிக்கும். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு விறுவிறுப்பான கதைகள், அரக்கர்கள், மூர்க்கமான மிருகங்கள், ஓடுதல், பாய்தல், வேகம் என்ற கதைகளை; பிடிக்கும். என்னிடம் பெண்குழந்தைகளுக்கான கதைகள் அதிகம் உண்டு. அதில் பல என்னால் உருவாக்கப்பட்டவை. என் குழந்தைகளை அரக்கர்களிடம் இருந்தும் பூதகணங்களிடம் இருந்து பறக்கும் கம்பளத்தில் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறேன். வாய்பிளந்திருந்து கதை கேட்டிருப்பாள்கள் என்னவள்கள்.
குழந்தைகளை உறங்கவைப்பது எனக்குப் பிடிக்கும். எந்தக் குழந்தையும் மனம் அமைதியில்லாதபோது அல்லது நம்பிக்கையில்லாதவர்களின் கையில் உறங்காது. உங்கள் கையில் ஒரு குழுந்தை உறங்கிப்போகிறது என்றால் நீங்கள் அதிஸ்டசாலி. மெதுவாய் தாலாட்டுப்பாடி அல்லது ஒரு ஆறுதலான ஒலியெழுப்பி குழந்தைகளை தூங்கவைக்கும்போது என் மனமும் ஒருநிலைப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன். தூக்கத்தின் மயக்கத்தில் பாரமாகிப்போகும் இமைகளையும், தூங்கிப்போனபின் முகத்தில் வந்தமரும் பேரமைதியும், சீராக மூச்சும்… அப்பப்பா அது ஒரு அற்புதமான அனுபவம்.
குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுளையும் தகுதி எமக்கு உண்டா இல்லையா என்பதை குழந்தைகள் அறிவார்கள். நாம் அவர்களின் உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டால் அதைவிட பேரதிஸ்டம் வேறெதுவும் இல்லை. இந்த விடயத்தில் நான் பெரும்பேறு பெற்றவன்.
பேரின்ப முக்தியடைய விரும்புபவரா நீங்கள். அப்படியாயின் நீங்கள் தேடும் முக்தி உங்கள் வழிபாட்டுத்தலங்களில் இல்லை.

புல்லாலானாலும் புருசன் நாயானாலும் புருசன்.

வேதனைகள் பலவிதம். இது சற்று வித்தியாசமானது. நீங்களும் அறிந்து வைத்திருங்களேன்.
எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். அவருக்கு ஒரு மனைவியும் உண்டு. இருவரும் நல்லவர்கள். எனக்கு.
இவர்களை சந்தித்து பல காலம் ஆகிவிட்டதால் சென்ற கிழமை அவர்களை எட்டிப் பார்ப்போம் என்று புறப்பட்டேன். அவர்கள் நகரத்துக்கு வெளியே சற்றுத் தூரத்தில் வாழ்கிறார்கள். எனவே பெருவீதிகள், சிறுவீதிககள், காடு, மலை, அறுகள் கடந்து சென்று வாகனத்தை நிறுத்தியபோது வீடு அழகாய் இருந்தது. வீட்டின் வெளியே நன்ற அல்ஷேசன் நாய்க்குட்டி “நீ யார்” என்பதுபோல் என்னைப் பார்த்து குரைத்தது.
நண்பர் வந்தார். நாய்குட்டியிடம் சத்தம் போடாதே என்றார். அது அவரை ஒரு மனிதாகவே கணக்கில் எடுக்கவில்லை.
நண்பரின் மனைவி வந்தார். ஒரு சிறு அதட்டு அதட்டினார். நாய்குட்டி அமைதியாகியது. என்னை நாய்க்குட்டிக்கு அறிமுகப்படுத்திவிட்டு என்னையும் நாய்குட்டியையும் வீட்டுக்குள் அழைத்துப்போனார். திருடனைக் கண்ட நாய்போன்று நாய்க்குட்டி என் முன்னேயே நாக்கை தொங்கப்போட்டபடி குந்தியிருந்தது. நான் என்ன விளையாட்டுக் காட்டினாலும் அது அசையவே இல்லை.
நாம் உட்கார்ந்திருந்து பேசிக்கொண்டிருந்தோம். நண்பரின் அருமைப் பாரியாரும் வந்தமர்ந்தார்.
அவர்களின் வரவேற்பரை நீள் சதுரமானது. ஒரு மூலையில் உட்கார்ந்திருந்து உரையாடினோம். அந்த இருக்கைக்கு நேரே மறு மூலையில் நண்பரின் சாப்பாட்டுமேசை இருந்தது.
தேனீர், சிற்றூண்டி வந்தது. உண்டு குடித்து மகிழ்ந்திருந்தோம். அப்போதுதான் என் கண் அந்தக் காட்சியைக் கண்டது.
நண்பரின் வரவேற்பறை இருக்கைகளுக்கு மேலே இருந்த அதி விலையுயர்ந்த அலங்கார மின்விளக்கின் ஒரு பகுதி உடைந்திருந்தது.
என்னது உடைந்திருக்கிறதே என்று அதனை ஆராய்ந்தேன். நண்பர் ஆம் இது உடைந்துவிட்டது. இதற்குரிய உதிரிப்பாகத்தை எங்கே வாங்கலாம் என்றார். எனது சிற்றறிவுக்கு அதற்குரிய உதிரிப்பாகத்தை வாங்குவது முடியாத காரியம் என்று புரிந்ததால் அதனைச் சொன்னேன். நண்பரின் முகம் குடிகாரனுக்கு தவறணையில் சாராயம் இல்லை என்றது போலாயிற்று.
நண்பரின் மனைவி அசாதாரண அமைதியாய் இருந்தார். நாய்குட்டியும் தான்.
என் கர்மாவிற்கு எப்போதும் ஒரு கெட்ட பழக்கம் உண்டு. தவறான நேரத்தில், தவறான இடத்தில், தவறான மனிதர்களிடம், தவறான கேள்வியை, தவறிப்போய் கேட்டுவிடுவதுதான் அது. அன்றும் அது நடந்தது.
நான் உட்கார்ந்திருந்தது பதிவான ஒரு சோபாவில் மின் விளக்கு இருந்ததோ ஒட்டகச்சிவிங்கி உயரத்தில். இது எப்படி உடையும் என்று எனக்குத் தோன்றியதை நான் யோசிப்பதற்கிடையில் வாய் அதனை வெளியே துப்பிவிட்டது.
நண்பர் மனையாளைப் பார்க்க.. மனையாள் நண்பரைப் பார்க்க என் நண்பர் அசடு வழிந்தார். நண்பரின் மனைவி அரம்பித்தார்.
நண்பருக்கு நாய் என்றால் அதீத விருப்பம். அவரின் யாழ்ப்பாண வீட்டில் நான்கு திசைகளுக்கும் ஒவ்வொரு நாள் காவல் இருந்ததாம் என்பார். நானும் ஓம் யாழ்ப்பாணம் என்றால் கள்ளர் அதிகம்தான். 4 நாய் காணாதே என்று சற்று பிரதேசவாதமும் காட்டியிருந்தேன் சில வருடங்களுக்கு முன்.
நண்பரின் பையன்கள் இருவரும் வேறு இடத்தில் வேலை செய்வதால் அவர்கள் வேறு இடத்தில் வாழ்கிறார்கள். எனவே நண்பர் நாய்க்குட்டி வாங்குவதற்கு விரும்பினார். விரும்பினால் மட்டும் காணுமா. மேலிடம் அனுமதிக்கவேண்டுமல்லவா. எனவே விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதற்கு ஏற்ற நேரத்துக்காக காத்திருந்திருக்கிறார்.
அந்த நேரமும் வந்தது. நேரம் வந்தபோது நண்பர் நான் இப்போது உட்கார்ந்திருந்த பதிவான சோபாவில் உட்கார்ந்திருந்திருந்திருக்கிறார். மேலிடம் நான் முன்பு கூறிய சாப்பாட்டு மேசையில் உட்கார்ந்திருந்திருக்கிறது.
இப்போது நீங்கள் இருவரும் உட்கார்ந்திருக்கம் சூழலை நன்றாக புரிந்துகொள்ளவேண்டும். ஒரு நீள் சதுர வரவேற்பறை. அதன் மூலைகளுக்கு நாம் A, B, C, D என்று பெயரிவோம். ஒரு மூலையில் (A) பதிவான சோபாவில் நண்பர் உட்கார்ந்திருக்கிறார். எதிரே மறு மூலையில் (C) மனைவி உட்கார்த்திருக்கிறார். வலது பக்க மூலையில் (D) உயரத்தில் மின் விளக்கு சிவனே என்று தொங்கிக்கொண்டிருக்கிறது.
“அம்மா, பெடியளும் வீட்டில இல்ல.. எனக்கு அலுப்படிக்குது” என்று நண்பர் கதையை அரம்பித்தாராம்.
“உங்களுக்கு 25 வருசமா அதுதானே வேலை, வெளியே போய் புல்லு வெட்டுங்கோ” இது அன்பு மனையாள்.
நண்பருக்கு காது சற்று சூடாகினாலும் நாய்குட்டி விடயம் முக்கியம் என்பதால் அமைதியாக இருக்கிறார்.
“உனக்கும் தனிமை. எனக்கும் தனிமை” என்கிறார் நண்பர்.
“சரி.. சரி.. இழுத்தடிக்காம விசயத்தை சொல்லுங்கோ” இது மனைவி
“இல்லம்மா…”
“என்ன அன்பு எக்கச்சக்கமா வழியுது”
நண்பரின் பொறுமை காற்றில் பறக்க ஆயத்தமாக இருந்தாலும், நாய்க்குட்டிக்காக பொறுத்துக்கொள்கிறார்.
“உனக்கும் நீரழிவு நோய், எனக்கும் கொலஸ்ரோல்” இது நண்பர்.
“அது மட்டுமா உங்களுக்கு.. ஒரு வைத்தியசாலையில் இருக்கும் எல்லா நோயும் இருக்கு உங்களுக்கு.. உங்கட பரம்பரை மாதிரி”
நண்பரின் பொறுமை காற்றில்பறந்துவிட்டது. என்றாலும் நாய்க்குட்டி முக்கியமல்லவா. எனவே பறந்த பொறுமையை எட்டிப்பிடித்து கட்டிப்போடுகிறார்.
“அம்மாச்சி”… என்று தேனொழுக ஆரம்பித்து… நான் ஒரு நாய் வாங்குவம் என்று நினைக்கிறன் என்று கூறி முடிக்குமுன் பதில் ஏவுகணையாய் காற்றில் வருகிறது.
“ஏன் எங்கட வீட்டக்கு மட்டும் ரெண்டு நாய் வேணும். ஓன்று காணும் தானே”
நண்பரின் பொறுமை கட்டை அறுத்துக்கொண்டு பாய்கிறது. அவரது கையில் கிடைத்தது தொலைக்காட்சியின் ரிமோட் கொண்ரோல்.
குறிபார்த்து எறிகிறார். ரிமோட் கொன்றோல் காற்றில் பறக்கிறது.
மனைவி இருந்ததோ 4 மீற்றர் தொலையில், அதுவம் நேரெதிரே 90 பாகையில்.
ரிமோட் கொன்றோல் எங்கேயோ இருக்கும் மின் விளக்கினை தாக்கி அதனை உடைத்துவிட்டு தானும் விழுந்துடைந்து தற்கொலை செய்துகொள்கிறது.
இதுதான் அந்த மின்விளக்கு உடைந்த கதை.
எனக்கு ஒரு பெரிய ஆச்சர்யம். எப்படி இந்தக் குறி தப்பியது என்று. காரணம். மின்விளக்கு இருக்கும் இடத்திற்கும் நண்பருக்கும் ஏறத்தாள 3 மீற்றர் இடைவெளி இருக்கும். அதுவும் நண்பரின் மனைவிக்கும் நண்பருக்கும் நடைபெற்ற முன்னரங்கப் போர்முனையின் வட கிழக்குப் பக்கத்தில்.
நண்பரிடம் இந்த சந்தேகத்தையும் கேட்டேன். நண்பர் ஒரு காலத்தில் இந்திய காடுகளில் போர்ப்பயிட்சி பெற்றவர். குறிதவறாமல் சுடுவார் என்று கூறியிருக்கிறார்.
நண்பர் ஒரு சிறு வார்த்தையில் வேதனையைச் சொன்னார்.
“மிஸ்-பையர்”
அதுசரி… உங்களை ரிமோட்கொண்ரோலால் தாக்கி அழிக்க நினைத்த மனிதரின் நாய்க்குட்டி ஆசையை நீங்கள் எவ்வாறு அனுமதித்தீர்கள் என்று நண்பரின் மனைவியைக்கேட்டேன்.
ஒரு நாயை 25 வருசமா வளர்க்கிறன். அந்த நாயை 30 வருசமா பழக்கம். இன்னாரு நாய் வளர்க்கிறது பெரிய வேலை இல்லை என்றார் சர்வ சாதாரணமாக.
நண்பனின் காது செவிடாகி இருந்தது.
நண்பரைப் பார்த்தேன். அவர் நாய்குட்டிக்குமுன்னால் நின்றபடியே உட்கார் என்று கட்டளையிட்டுக்கொண்டிருந்தார். அதுவோ உட்கார மறுத்தது.
அப்போது மனைவி நாயைப் பார்த்து “இரு” என்று கறாரான குரலில் கூறினார்.
நாய்க்குட்டிக்கு முன்பு நண்பர் சோபாவில் குந்திக்கொண்டார். நாயும் நண்பரின் மனைவிக்கு முன்னால் மண்டியிட்டுக்கொண்டது.
நண்பரின் மனைவி என்னைப் பார்த்து வெற்றிப் புன்னகை புரிந்தார்.
நான் புறப்பட்டேன். நண்பர் எனது வாகனம் வரையில் வந்தார். என்னால் ஒரு கேள்வியை மட்டும் அடக்க முடியவில்லை.
“டேய், எப்படியடா மனைவி அந்த விலையான மின் விளக்கையும், ரிமோட்கொன்ரொலையும் உடைத்தபின் நாய்க்குட்டி வாங்குவதற்கு சம்மதித்தார்?” என்றேன்
“வேணாம்…. அதைச் சொன்னால் நீ கதை எழுதி அசிங்கப்படுத்திவிடுவாய்” என்றான்.
இப்ப மட்டும் என்ன வாழுதாம்?

”தெறி” விஜய் ஐ சூரசம்ஹாரம் செய்த Oslo முருகன்.

அந்நாட்களில் எனது மூத்தவளுக்கு 2 வயது கடந்திருந்தது. ஆண்டு 1999. நாம் வசித்திருந்ததோ வடமேற்கு நோர்வேயில் ஒரு கிராமத்தில். தமிழர்களுக்கான பொழுதுபோக்குகள் குறைந்த இடம்.
இதே காலத்தில்தான் இப்போது தென்னிந்திய திரைஉலகையும், எனது வயிற்றையும் அடிக்கடி கலக்கும் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் பிரகாசிக்கத்தொடங்கியிருந்தார்.
அந்நாட்களில் ஏதோ ஒரு தமிழ்த் தொலைக்காட்சி சேவையும் செய்மதி (சட்டலைட்) மூலமாக உலாவந்துகொண்டிருந்தது. பொழுது போகவேண்டுமே என்பதற்காய் ஒரு டிஷ் ஆன்டன்னாவை பூட்டிக்கொண்டேன். தென்னிந்தியாவில் உலாவிய விஜய் எனது வீட்டுக்குள் வந்ததும் இந்த வழியாகத்தான்.
அந்நாட்களில்தான் துள்ளாத மனமும் துள்ளும் படம் வெளிவந்திருந்தது. எனவே தொலைக்காட்சியும் இப்படத்தின் பாடல்களை அடிக்கடி ஒலிபரப்பினார்கள். அதிலும் இன்னிசை பாடிவரும் என்ற பாடல் திரைப்படத்தைப்போன்று மிகப் பிரபலமாகியதால் அப்பாடல் ஒரு நாளைக்கு பல தடவைகள் ஒளிபரப்பாகியது.
எனது மகளுக்கு இந்தப்பாட்டு ஏனோ பிடித்துப்போயிற்று. விஜய் மாமா ஆகினார். சிம்ரன் ஆன்டி ஆகினார். மணிவண்ணண் தாத்தாவாகினார். இந்தப் பாட்டினை எங்கே எப்போது கேட்டாலும் அவளின் முகம் பூவாய் மலர்ந்து, கையும் காலும் தானாகவே ஆடத்தொடங்கின.
தொலைக்காட்சியில் பாடல் ஒலிபரப்பினால் அதன் முன் வாயை ஆ என்று பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருப்பாள். அந்த நேரங்களில் எனக்கும் சாப்பாடு தீத்துவதும் பிரச்சனையாக இருக்கவில்லை. பிற்காலத்தில் அவளுக்க என்று அந்தப்பாடலை ஒரு வீடியோ கசட்இல் பதிந்த வைத்திருந்தேன்” அவள் என்னிடம் கட்டுப்பட மறுத்தால் விஜய் மாமாவும். சிம்ரன் ஆன்டியும் அவளைக் கட்டுப்படுத்தினர். மணிவண்ணனை அவளுக்குப் பிடிக்கவில்லை.
காலம் கடந்து கொண்டிருந்தாலும் அவளுக்கு “இன்னிசை பாடிவரும்” பாடலில் இருந்த பிரியம் மட்டும் குறையவவே இல்லை. பிற்காலத்தில் நான் பயந்ததுபோன்று அவளுக்கு விஜய் பைத்தியம் பிடித்துக்கொண்டது. அந்த பைத்தியத்திற்கு என்னிடம் மருந்து இருக்கவில்லை.
இதற்குப்பின் காலம் என்னுடன் கோபித்துக்கொண்டதால் அவள் இங்கிலாந்திலும் நான் நோர்வேயிலும் என்றாகியது. எமது தொடர்புகள் குறைந்துபோயின. பெண்குழந்தையை எவ்வாறு வளர்க்கவேண்டும் என்று எனக்கிருந்த கனவுகளைக் கடந்து அவள் சுயம்புவாய் வளர்ந்துகொண்டாள்.
7 - 8 ஆண்டுகளின் பின் என்னுடன் ஒரு மாதம் தங்கியிருக்க வந்திருக்கிறாள்.
அவளுக்கு 19 வயது நடந்துகொண்டிருக்கிறது இப்போது. சுயாதீனமாய் இயங்கும் மனம் கொண்டவளாயும், இவ்வயதில் உலகத்தையே மாற்றவேண்டும் என்று நினைத்த அப்பனைப்போல் அவளது சிந்தனைகளும் இருக்கிறன்றன. கொள்கைகளில் பிடிவாதக்காறியாய் இருக்கிறாள். வயதுக்கேற்ற திமிர் குறைவில்லாமல் கொட்டிக்கிடக்கிறது. இவையெல்லாவற்றையும் மௌனமாய் ரசித்துக்கொண்டிருக்கிறேன், நான்.
அனால் நான் விரும்பாத ஒன்றை அவள் சுவீகரித்திருக்கிறாள். அவளது உலகம் ஆங்கில உலகமாய் மாறிவிட்டது. எப்போதும் ஆங்கிலப் புத்தகங்கள், திரைப்படங்கள், தொலைக்காட்சி, பாடல்கள் என்றிருக்கிறது அவள் உலகம். தடையின்றித் தமிழ் பேசுவாள், அவளுக்கு தேவை என்னும் பொழுதினில் மட்டும். இனி அவளை மாற்றமுடியாது என்பதை உணர்ந்திருக்கிறேன்.
இரண்டு நாட்களுக்கு முன் “இன்னிசை பாடிவரும்” என்ற பாடலை யூடியூப் இல் வேண்டுமென்றே இசைக்கவிட்டேன். என்னைப் பார்த்து கள்ளச் சிரிப்பொன்று சிரித்தாள். கரைந்துபோனேன்.
நேற்று மாலை:
“அப்பா, தமிழ்ப்படம் பார்த்து 100 வருடமாகிவிட்டது, ஒரு படம் சொல். பார்ப்போம் என்றாள்”
“என்ன மாதிரியான படம்? அக்சன், கொமடி, ரொமான்டிக், திறில்லர், ட்ராமா?” என்றேன்
“எனி திங். எ குட் மூவி”
சற்று சிந்தித்தேன்.
“சரி… ஐன்துசன்.கொம்க்கு போய் “காக்கா முட்டை” என்று தேடிப் பாருங்கம்மா” என்விட்டு அயர்ந்துபோனேன்.
சற்று நேரத்தில் என்னை எழுப்பினாள்
“என்னய்யா”
“இவங்க காக்காவின் முட்டையை எடுத்து குடிக்கிறாங்க. பாவம் காக்கா”
“அய்யோ ராசாத்தி, அது படத்துக்காக எடுத்திருப்பாங்க”
“எனிவே… திஸ் ஈஸ் நாட் குட்”
“திரைப்பட காட்சிகளை உண்மை என்று நினைத்து மனதை குழப்பிக்கொள்ளாதே”
அதன்பின் நான் தூங்கிப்போனேன்.
விழித்துக்கொண்டபோது படம் இடைவேளை கடந்து ஓடிக்கொண்டிருந்தது. மகள் படத்தினை மிகவும் ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்தாள். இடையிடையே பெரிய சிரிப்புச் சத்ததமும் கேட்டது.
படம் முடிந்ததும் “குட் மூவீ” என்று பாராட்டும் கிடைத்தது.
மகள் விஜய் ஐ மறந்துவிட்டாள் என்று எனக்கு மிகுந்த மகிழ்ச்சி. நேற்றிரவு அந்த மகிழ்ச்சியில் அயர்ந்து தூங்கிப்போனேன்.
இன்று காலை எழும்புகிறேன். மகள் ஐன்துசன்.கொம் இல் படம் பார்த்துக்கொண்டிருந்தாள்.
“என்ன படம் அம்மா” என்று கேட்டேன்
“தெறி”
எனது நெஞ்சு தெறித்துப்போய் விழுந்தது. நான் எதுவுமே பேசவில்லை. எனது நண்பன் Oslo முருகனின் இன்னொரு திருவிளையாடல் என்று நினைத்தபடியே போர்வையால் தலையை மூடிக்கொண்டேன்.
சற்றுமுன் எழுந்து பார்கிறேன்… மகளின் கணிணி தரையில் கிடக்கிறது. மகளைக்காணவில்லை.
“அம்மா” என்று அழைத்தேன்.
“ம்”
“படம் பார்க்கலியா”
“நோ”
“ஏன்டா”
முறைய்த்துப் பார்த்தாள்.
புரிந்துகொண்டேன்.
Oslo முருகா, தெய்வமய்யா நீ.
உனக்காக நான் முதன் முதலில் நோர்வேயில் மொட்டையடித்து தூக்குக்காவடி எடுக்கிறேன்.

திருமணம் அவசியமா? இணைந்து வாழ்ந்தால் என்ன?

அவளுடன் ஒப்பிடுகையில் நான் ஒரு கிராமத்து ராமராஜன். அவளோ உலகத் தாரகை Naomi Campbell போன்ற கறுப்புக் கட்டழகி. எமக்குள் நிறத்தில் மட்டும்தான் ஒற்றுமை இருந்தது. ஆனால் காதலுக்குத்தான் கண்ணில்லையே.
அவளை நான் முதன் முதலில் நேரடியாகச் சந்தித்தது ஒரு கடையில்தான்;. ஆழகிகளால் கவரப்படாத ஆண்கள் யாராவது இருக்கிறார்களா? அதுபோன்றுதான் எனக்கும் முதலில் அவளில் ஒரு ஈர்ப்பு வந்தது. அது பின்னாட்களில் காதலாகியது.
ஒரு நாள் நான், அவளை விரும்புவதாகக் கூறி என்னுடன் சேர்ந்து வாழ வா என்று அழைத்தேன். சில நாட்கள அவளைப் சந்திப்பதும், பார்ப்பதும் பேசுவதுமாய் இருந்தது. சில காலத்தின் பின் நாம் சேர்ந்து வாழத்தொடங்கினோம். உலகறிய திருமணம் என்பதில் நம்பிக்கையில்லாதவன். இது இணைந்து வாழ்தல் முறை. இரண்டரை வருடங்கள் இணைபிரியாது இருந்தோம்.
ஆரம்பத்தில் நான் அவளில் மிகவும் அன்பாகவே இருந்தேன். புது மாப்பிள்ளையைப்போன்று. பின்னான நாட்களில் கவனம் குறைந்தபோது அவ்வப்போது சிறு சிறு மோதல்கள் வந்துபோயின. மனித உறவுகளில் எற்படும் கீறல்களைப்போன்றவை அவை.
நான் ஆண்.
ஆஆண்ண்ண்.
மீண்டும் ஒரு தடவை கூறிப்பாருங்கள், ஆஆண்ண்ண்.
அதாவது நெடில்.
பெண்களைப்போல் எம்மால் இருக்கமுடியுமா என்ன?
இப்படி இறைவி திரைப்படத்தில் கூறப்படுவதுபோன்று. அவ்வப்போது அவளைவிட அழகானவர்களை, இளமையானவர்களைக் கண்டால் சபலம் எட்டிப்பார்க்கும். எனினும் தப்பேதும் நடந்துவிடவில்லை.
நம்ம தகுதிக்கு இவளே போதும் என்று மனதை கட்டுப்படுத்தும் கலை வசப்பட்டிருந்தது எனக்கு. வயது காரணமாயிருக்கலாம்.
நேற்று மாலை காலநிலை சிறப்பாக இருந்ததால் இருவரும் நடந்தபடியே உரையாடிக்கொண்டிருந்தோம். ஒரு நாய் எங்கிருந்தோ ஓடிவந்து என்னை நக்கியது. அவள் அதை புகைப்படமெடுத்தாள். நாயின் உரிமையாளர் ”மன்னித்துக்கொள்ளுங்கள், இவன் எல்லோருடனம் இப்படித்தான்” என்றார். ”பறவாயில்லை” என்றபடியே நாயின் தலையைத் தடவிவிட்டேன்.
இருவரும் அமைதியான ஒரு ஏரியின் கரையோரமாக நடந்து சென்று ஒரு மலையின் உச்சியை நோக்கி ஏறிக்கொண்டிருந்தோம். மிகவும் ஒடுக்கமான, செங்குத்தான ஒற்றையடிப்பாதையை கடந்துகொண்டிருக்கும்போது மேலிருந்து கீழே இறங்கியவர்களுக்காக நாம் சற்றே ஒதுங்கிநிற்கவேண்டியிருந்தது.
அப்போது எனது காலடியில் இருந்த கற்கள் சறுக்கத்தொடங்கின. நான் சமநிலையை இழந்து விழுந்தேன். என் கையைப் பற்றியிருந்த அவளும் விழுந்தாள். எனது காலில் பலத்த அடி. என்னருகில் விழுந்த அவளை கை கொடுத்து எழுப்பியபோது அவள் காயப்பட்டிருப்பது தெரிந்தது. அவள் கண்ணாடி உடைந்துவிட்டிருந்தது. தலைசுற்றுகிறது என்றாள். சற்று உட்கார்ந்திருந்து நிதானித்துக்கொண்டோம். எம்மை கடந்து சென்ற அறிமுகமானவர்கள் இருவர் “காயம் பலமா, உதவி தேவையா” என்று கேட்டார்கள். இல்லை, சமாளித்துக்கொள்ளலாம் என்றுவிட்டு அவளைப் பார்த்தேன். அவள் முகத்தில் இரத்தம் கட்டியிருந்தது. அவள் வெளிறிப்போய் வெறித்துப்பார்த்துக்கொண்டிருப்பதாய் உணர்ந்தேன். அவளை உலுப்பினேன். தட்டினேன். இடையிடையே “என்ன?” என்றாள். மறுநிமிடம் மீண்டும் மௌனமாய் வெறிக்கத்தொடங்கிவிடுவாள்.
மனம் திக் திக் என்று அடிக்க, பயம் மெது மெதுவாக மனதைப் பற்றிக்கொண்டது. மலையில் இருந்து இறங்கி வந்தோம். அவள் பேசவே இலலை. அவளை அவ்வப்போது இறுகப்பற்றிக்கொண்டேன்.
அன்றிரவு முழுவதும் அவள் நினைவு தப்பிக்கொண்டிருந்தது. அவசர சிகிச்சைப் பிரிவுடன் பேசினேன். காலைவரையில் பாருங்கள். அதன்பின் தேவை என்றால் தொடர்புகொள்ளுங்கள் என்றுவிட்டு தொலைபேசியை வைத்தார்கள்.
காலையில் அவளது நினைவு அடிக்கடி தப்பத்தொடங்கியது. நான் ஏதும் கேட்டால் பல நிமிடங்களின்பின் பதிளித்தாள்: அவளாக ஏதும் பேச மறுத்தாள். உணவு உண்ணவில்லை. அவளது உடலில் சக்தி குறைந்துவருவதை உணர்ந்தேன்.
அவசர அவசரமாக எனது வீட்டிற்கு அருகில் உள்ள வைத்தியசாகை;கு அழைத்துச் சென்றேன். நேரம் 10 மணியைக் கடந்துகொண்டிருந்தது. வைத்தியருக்காக காத்திருந்தபோது அவள் மயங்கி என்மீது சரிந்தாள். அவளைத் தாங்கிக்கொண்டபோது வைத்தியரும் உதவியாளர்களும் அவளை படுக்கையில் கிடத்தி அழைத்துப்போனார்கள்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. நானோ பதட்டத்தில் வைத்தியருக்காக காத்திருந்தேன். பத்துநிமிடங்களில் வைத்தியர் வந்து நேற்று என்ன நடந்தது என்று கேட்டறிந்தார். கணிணியைப் பார்த்தபடி யாருடனோ தொலைபேசினார். என்னை மாலை வருமாறு பணித்தார்.
மாலை வந்தபோது டாகடர் என்னை அழைத்துச் சென்று தனது அலுவலகத்தில் உட்கார்த்தினார். “அவளுக்கு எப்படி டாக்டர்” என்றேன்.
“அவரது தலையில் அடிபட்டிருக்கிறது. அதனால் அவர் நினைவிழந்திருக்கிறார். மூளையில் பெருத்த இரத்தக்கசிவு ஏற்பட்டதனால் அவர் சிந்தனை ஆற்றல், உடலுறுப்புக்கள் என்பன செயலிழந்துவிட்டன என்றார். எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. டாக்டர் ஆறுதல் கூறியபடியே அவருக்கு காப்புறுதி ஏதேனும் உண்டு அப்பணத்தைக்;கொண்டு நாம் மேலதிக சிகிச்சையளிக்க முயற்சியுங்கள் என்றார்.
நான் காப்புறுதி நிறுவனத்துடன் தொடர்புகொண்டபோது “உடனே வாருங்கள், அதற்கான ஒழுங்குகளைச் செய்ய ஆரம்பிப்போம் என்றார்கள். அரைமணிநேரத்தில் அங்கு நின்றிருந்தேன்.
தங்களது அனுதாபத்தை தெரிவித்தார்கள். சோர்வாகப் புன்னகைத்தேன். என்னை அழைத்துச் சென்று ஒரு காரியலயத்தில் உட்கார்த்தி தேனீரும் தந்தபின் உரையாடத்தொடங்கினார்கள்.
என்ன நடந்தது என்பதை மிகவும் தெளிவாக விபரிக்கவேண்டிவந்தது. எழுதிக்கொண்டார்கள். “இதுபற்றி மிக விரைவில் ஒரு முடிவுசொல்கிறோம். தயவுசெய்து இங்கு காத்திருங்கள்” என்றுவிட்டு அகன்றுகொண்டார்கள்.
தனிமை அசௌகரியமாகவும், மனது பழைய நினைவுகளிலும் அலைந்துகொண்டிருந்தது. அவளின் ஸ்பரிசத்தினை நினைத்துப் பார்த்தேன். மிருதுவான அவளது தோல். கறுப்பென்றாலும் அவள் கட்டழகி. ஒரு சிறு விபத்து எப்படி ஒரு மனிதனின் வாழ்க்கை புறட்டிப்போடுகிறது. அவளுக்கு மிக மிக அருகில் நானும் விழுந்திருந்தேன். ஆனால் எனக்கு எதுவும் ஆகவி;லை. அவள் எறத்தாள ஜடமாகிவி;டாள். வாழ்க்கையில் எதுவுமே நிட்சயமில்லை என்பதை மீண்டும் உணர்ந்துகொண்டேன்.
நேரம் ஓடிக்கொண்டிருந்தது. 15 நிமிடங்களில் என்னை அழைத்துவந்தவர் வந்தார்.
“உங்களின் காப்புறுதிப் பணம் உங்களுக்கு கிடைக்கும்.”
“மிக்க நன்றி”
“தயவு செய்து இந்தப் படிவத்தை நிரப்பித்தாருங்கள்” என்றபடியே ஒரு படிவத்தை நீட்டினார்.
அதில் காப்புறுதி செய்யப்பட்டவரின் பெயர் என்று இருந்த இடத்தில் Samsung galaxy S4 என்று எழுதினேன்.
இப்போது புதிதாய் ஒருத்தியுடன் வாழத்தொடங்கியிருக்கிறேன். அவளின் பெயர் Huawei P9. செம செக்சியாக இருக்கிறாள். புகைப்படங்கள் எடுப்பதில் இவள் கில்லாடி.
தலைப்பைப் பார்த்து கதையை வாசித்த உங்களுக்கு நன்றி கூறாவிட்டால் என்னப்பன் Oslo முருகன் மன்னிக்கமாட்டா