உச்சிதனை முகர்ந்தால், பட விமர்சனமல்ல மன விமர்சனம்

மனதின் அதிர்வுகளும் உணர்ச்சிகளும் அடங்காத நிலையில் இருந்து இப்பதிவு எழுதப்படுகிறது என்று அறிக.

1999ம் ஆண்டு வெளிவந்த The Green Mile படத்தில்  கறுப்பனாக நடித்திருந்த John Coffey இன் மரணதண்டணை மனதை எந்தளவு பாதித்ததோ அதேயளவு, அல்லது அதற்கு மேலான உணர்ச்சிகளை உணர்ந்தேன் உச்சிதனை முகர்ந்தால் பார்த்த பின்.

கதை பயணிக்கும் நிலம் எனது ஊர் என்பதில் ஒருவித பெருமையிருக்கத்தான் செய்கிறது என்பதை மறுப்பதற்கில்லை.

படத்தின் கருவும், கதையும் அக்கதையினூடாக நான் புரிந்துகொண்டவையும், நான் இப்படத்தை மிகவும் ரசித்தேன் என்றே கூறவைக்கின்றன. தொழில்நுட்பம், இயக்கம், காட்சியமைப்பு, இசை இவைகள் பற்றி நான் பேசப்போவதில்லை. இப்படம் எனக்கு போதித்ததென்ன என்பதே எனக்கு முக்கியமாக இருக்கிறது. அனைத்து தமிழர்களுக்கும் முக்கியமாக இருக்கவேண்டும் என்பதே எனது அவா.

முதலில் இப்படத்தினை தயாரித்த நேர்வேவாழ் ஐந்து தமிழர்களுக்கும் தலைசாய்த்து ஒரு வணக்கம். கருத்துவேறுபாடுகளைத் தாண்டி மனம் திறந்து பாராட்டவேண்டிய நேரம் இது. மீண்டும் உங்களை வாழ்த்துகிறேன். இப்படியான உங்கள் கலைப்பணி தொடர எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.

சீமானுடன் மற்றும் தென்னிந்திய அரசியல்வாதிகளின் ”ஈழத்தமிழர் அரசியலில்” எனக்கு ஏற்பில்லை என்றாலும் சீமானுக்கு ஒரு சிறந்த கலைஞன் என்ற முறையிலும், சத்யராஜ், சங்கீதா மற்றும் சிறுமியின் தாய், சிறுமி, டாக்டர் என்று பலரும் நடித்திருக்கிறார்கள் அனைவருக்கும் ஈழத்தமிழன் என்ற முறையில் எனது வாழ்த்துக்கள்.

படத்தின் கதையை நகர்த்திப்போகும் சிறுமியின் நடிப்பு அபாரம். சிறுமியின் தாயாக வருபவரின் இயல்பான நடிப்பும், மட்டக்களப்புத் தமிழையும் ரசித்தேன். மட்டக்களப்புத் தமிழின் ”எலுவா”, ”மனே” என்னும் சொற்கள், திரைப்படத்தின் வசனகர்த்தா எந்தளவு நுணுக்கமாக பிராந்தியச் சொற்களை இணைத்திருக்கிறார் என்பதற்கு சாட்சியாக இருக்கின்றன.

முதன் முறையாக தென்னிந்தியத் திரைப்படங்களில் ஈழத்தமிழ் செயற்கைத்தன்மை இன்றி பேசப்பட்டுள்ளது. அதற்கான முழுப்பாராட்டையும் சிறுமியின் தாயா‌ராக நடித்தவரையே சாரும். (அல்லது டப்பிங் குரல் கொடுத்வருக்கு) சிறுமியின் தமிழில் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கவேண்டும் என்பது எனது கருத்து. இருப்பினும் சிறுமியின் நடிப்பு மொழியாட‌லின் சறுக்கலை இல்லாது செய்கிறது என்றே கூறவேண்டும்.

2012 ம் ஆண்டு நோர்வே தமிழர் திரைப்படவிழாவில் விருது வழங்கப்படும் போது சிறுமியாக நடித்த சிறுமிக்கு ஒரு சிறப்பு விருது அறிவிக்கப்படவேண்டும் என்று முன்மொழிகிறேன். அவளுக்கு அதற்கான முழுத்தகுதியும் உண்டு.

தென்னிந்திய திரைப்படங்களில் கேலித்தனமாக சித்தரிக்கப்படும் திருநங்கைகளை, முதன் முதலில் மனிதநேயமுள்ள மனிதர்களாக காட்டிய முழுப்பெருமையும் உச்சிதனை முகர்ந்தாலுக்கு உண்டு. ஈழத்தமிழர்களின் படமே இப்படியானதொரு முற்போக்கான கருத்தை சொல்லுகிறது என்பதில் எமக்கும் பெருமையுண்டு.

இயல், இசை, நாடகம் என்று ஒரு அரசியல் நெடி படிந்த ஒரு வசனம் வருகிறது. அதை சீமானே சொல்கிறார். எனக்கேதோ இது ஒன்று தான் படத்தின் நகைச்சுவை போலிருந்தது. (சீமான் மன்னிப்பாராக).

படத்தின் பாடலாசிரியர், எனது பால்யகாலத்தில் எனது கதாநாயகனாக இருந்தவர். ”ஆண்ட பரம்பரை மீண்டும் ஒருமுறை ஆள நினைப்பதில் என்ன குறை?” என்று பேசியே மட்டக்களப்பு சிறுவர்கள், இளைஞர்களை தன்வசம் இழுத்த பெரும் கவிஞன், ‌சிறந்த மேடைப்பேச்சாளர் அவர். கவிஞனான அண்ணண் காசியானந்தனிடம் எனக்கு பெருமதிப்புண்டு. பாடல்களில் அவரின் முத்திரைகளை நாம் காணலாம். உதாரணமாக ”ஊரில் நான் வளர்த்த கிளிப்பிள்ளை, மனதைவிட்டு பறக்கலியே” என்ற வரிகள்.

போலீஸ் நிலையத்தில் இருக்கும் இந்தியாவின் சின்னமான அசோக சின்னத்தை சிறுமி ” இந்த பொம்மையை நான் எடுக்கவா” என்று கேட்பது எத்தனையோ அர்த்தங்களை சொல்லிப்போகிறது. இயக்குனருக்கும், வசனகர்த்தாவுக்கும் எனது பாராட்டுக்கள்.

படத்தின் கதை பற்றி நான் இங்கு பேசவில்லை. பேசவும் போவதில்லை. மனதை கனக்கவைக்கும் கரு என்பதோடு நிறுத்திக்கொள்கிறேன். இப்படம் ஒரு செய்தியை மட்டும் சொல்லிப்போகவில்லை. மனிதஉரிமைமீறல், பாலியல் துன்புறுத்தல், வன்புணர்ச்சி, நோய், நோயின் கொடுமை, மரணம், பிரிவு, அன்பு, மனிதநேயம், ஈழத்தமிழர்களை ஆதரிக்கும் தமிழக மனிதர்கள் என்று பல செய்திகளை சொல்லிப்போகிறது.

படத்தில் ஒரு வசனம் வருகிறது, இப்படி: அவள் செத்துக்கொண்டே இருந்தா, நாங்கள் பார்த்துக்கொண்டே இருந்தம்”. எனது நெஞ்சை சுரீர் என்று சுட்டது இவ் வசனம். எனக்கு இப்படத்தினை பிடித்துப்போவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இந்த வசனம். என்னை சிந்திக்கத் துண்டியதும் இந்த வசனம் தான்.

படத்தைப்பற்றி எனது மனது கூறியதை பதிந்துவிட்டேன். எனது சிந்தனையில் தோன்றியதையும் எழுதிவிடுகிறேன்.
படத்தில் சிறுமியின் பெயர் புனிதா. அவளுக்கு உதவி செய்பவர் (சத்யராஜ்) பெயர் நடேசன். அந்த புனிதாவுக்கு ஒரு நடேசன் கிடைத்தார். ஆனால் இன்று அந்த புனிதாவைப் போல் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள். உதவுவதற்குத்தான் நடேசன்களுக்கு பஞ்சமாயிருக்கிறது. லட்சம் லட்சமாய் எத்தனையோ ஈழத்து நடேசன்கள் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் என்ன, அவர்களுக்கு புனிதாக்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் அல்லலுறும் ஒரு குடும்பத்தினை பொறுப்பேற்போமானால் எத்தனையோ குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள், வயோதிபர்களின் வலியை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்கலாமல்லவா?

இன்று பதவிக்கும், பணத்துக்கும், புகழுக்கும் ஆசைப்பட்டு, பிரித்தாளுபவர்களின் சதிக்குட்பட்டு, எம்முறவுகளை மறந்திருப்பது எமது இன்றைய நிலைக்கு அவசியம் தானா? ஒன்றுபட்டால் உண்டுவாழ்வு எங்கோ கேட்ட ஞாபகம்.

இவ்வளவு உள்ளூர் விளம்பரங்களின் பின்பும் பல இருக்கைகள் காலியாய் இருந்தது மனதை நெருடியது என்று சொல்லித்தான் ஆகவேண்டும்.

என்றோ ஒரு நாள் கேட்ட ஒரு கவிதையின் இறுதிவரிகளுடன் இப்பதிவு நிறைவுறுகிறது

ஒளி நிறைந்த கூடத்தில் இருந்து
எல்லோரும் கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள்
நாமும் கையசைத்து மகிழ்வோம்.

இன்றை நாள் மிக நல்லது.

13 comments:

 1. வணக்கம். மிகவும் அருமை. படத்தின் கதையைச் சொல்லாமலே படம்பற்றி விமர்சித்திருப்பது எல்லோரையும் பார்க்கத் தூண்டுகின்றது. கடுகு சிறிது காரம் பெரிது. மிகச்சாதாரணமானவன். பெருமை அணியுமாம் என்றும் பணிவு. நன்றி (கங்கைமகன்)

  ReplyDelete
 2. அவுஸ்திரேலியாவில் திரையிடப்படுமா? அல்லது DVD (ஒறிஜினல் :-) ), இங்கு எப்படி வருவிப்பது?

  __

  மற்றது, ”எலுவா”, ”மனே” என்றால் என்ன அண்ணாச்சி?

  ReplyDelete
 3. vanakkam thiru visaran avargale padhivu nandru
  surendran
  surendranath1973@gmail.com

  ReplyDelete
 4. உங்க்ள விமர்கனமே படத்தைப் பார்த்த திருப்தி. நிச்சயமாய் அனைத்து ஈழத்தமிழரும் பார்க்க வேண்டும். உங்கள் வேண்டுகோளுக்கு செவி சாய்க்க வேண்டும். காத்திருக்கின்றோம் எம்மை அந்த ஒளிவெறுப்பு கடந்து போகும் வரை.

  ReplyDelete
 5. //எஸ் சக்திவேல் said...
  அவுஸ்திரேலியாவில் திரையிடப்படுமா? அல்லது DVD (ஒறிஜினல் :-) ), இங்கு எப்படி வருவிப்பது?

  __

  மற்றது, ”எலுவா”, ”மனே” என்றால் என்ன அண்ணாச்சி?//
  எலுவா என்பது அல்லவா? என்பதன் சிதைவு. மனே என்பது அனேகமாக தாய் மார் பிள்ளைகளை பாசத்தோடு சொல்லுவது, மக்னே என்பதன் சிதைவு .


  படத்தினை பார்க்க வைக்கும் விமர்சனம்.. பார்க்கலாம் என எண்ணுகின்றேன்.

  இந்த படம் பற்றி அனேகமான கருத்துரைகளை எமது தமிழ் இணையப் பரப்பில் காணக்கிடைக்கவில்லையே!!

  ReplyDelete
 6. கறுவல் @இப்படம் அவுஸ்திரேலியாவில் திரையிடப்படும் என்று தயாரிப்பாளர்கள் சார்பில் நேற்று கூறப்பட்டது.

  DVD (ஒறிஜினல் :-) ) வரும் ஆனா இப்போ வரக்கூடாது என்பதே எனது விருப்பம்.

  எலுவா என்றால் ”அல்லவா?” மற்றும் ”இல்லையா” என்று பொருள்படும்.

  மனே என்றால் மகனே என்று பொருள்படும்.

  இணையத்தில் மட்டுமில்லை தமிழ்நாட்டு தொலைக்காட்சிகளில் கூட இப்படம் பற்றி விமர்சஙகள் வெளிவரவில்லையாம். காரணம் அரசியல் தலையீடு. காசு கொடுத்தும் ஒளிபரப்ப மறுத்தார்களாம் என்று அறியக்கிடைத்தது இன்று மாலை.

  (அம்மாவை நம்பி அரசியல் நடத்தும் எங்கள் ”கற்பனை அரசியல்வாதிகள்” இதன் பின்பாவது தமிழக அரசியலைப் புரிந்து கொண்டாலாவது மகிழ்ச்சி. இந்தப் படத்துடன, சீமான் தமிழர்களின் ”காவலனாக” எம்மவர்களால் மாற்றப்பட்டாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.

  ReplyDelete
 7. ungaluku padamum edukka venum athila vera kathaipathu konjam pilai endu muttaila myir pudungaveum venum.. ponngada neengalum ungada.... ithuku thann ippadi irukkriram eelatamilarkal naangal.
  VKN

  ReplyDelete
 8. vanakkam visaran. nalla padam yendru naanum kelvipatten!

  ReplyDelete
 9. மிக அருமையான படம் பாக்காதவர் நிச்சயம் ஒருநாள் கவலைப்படுவர்.

  ReplyDelete
 10. படத்தினைப் பார்க்கத்தூண்டும் விமர்சனம் இதுவரை பார்க்கும் அளவு நேரம் கிடைக்கவில்லை நன்றி பகிர்விற்கு!

  ReplyDelete
 11. நானும் பார்த்தேன் .. அருமையான படம்

  ReplyDelete
 12. சபாஷ் !!! இந்த உணர்வு தமிழர்களுக்கு இருந்திருந்தால் என்றோ எங்கள் பிரச்சனை தீர்ந்திருக்கும்.... அவர்கள் கண்ணுக்கு தெரியும் புனிதாக்கள்.............


  "படத்தில் சிறுமியின் பெயர் புனிதா. அவளுக்கு உதவி செய்பவர் (சத்யராஜ்) பெயர் நடேசன். அந்த புனிதாவுக்கு ஒரு நடேசன் கிடைத்தார். ஆனால் இன்று அந்த புனிதாவைப் போல் பலர் உதவிக்காக காத்திருக்கிறார்கள். உதவுவதற்குத்தான் நடேசன்களுக்கு பஞ்சமாயிருக்கிறது. லட்சம் லட்சமாய் எத்தனையோ ஈழத்து நடேசன்கள் வெளிநாடுகளில் வாழ்ந்திருக்கிறார்கள். ஆனால் என்ன, அவர்களுக்கு புனிதாக்கள் கண்ணுக்கு தெரிவதில்லை.

  நண்பர்களே! நாம் ஒவ்வொருவரும் அல்லலுறும் ஒரு குடும்பத்தினை பொறுப்பேற்போமானால் எத்தனையோ குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், வளர்ந்தவர்கள், வயோதிபர்களின் வலியை பகிர்ந்து அவர்களின் வாழ்க்கையை வளமாக்கலாமல்லவா?"

  ReplyDelete

பின்னூட்டங்கள்