மரணம் இல்லாத வீடு

மரணத்தின் அருகே பலமுறை உட்கார்ந்திருந்திருக்கிறேன். அவற்றில் முதலாவது எனது தந்தையுடையது. மட்டக்களப்பு பெரியாஸ்பத்திரியில் கறள் பிடித்து, வண்ணம் மங்கியிருந்த இரும்புக் கட்டிலில் படுத்திருந்தபடி, நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காற்றைத் தேடிக்கொண்டிருந்தார் அப்பா. என்னை அணைத்திருந்த அம்மாவை நிமிர்ந்து பார்த்தேன். “தேவாரம் படி, அப்பா இனி இல்லை” என்றார் எனது காதுக்குள். கைகளைக் கூப்பி "ஐந்து கரத்தனை..." என்று மனதுக்குள் முணுமுணுத்தேன். அப்பா காற்றைத் தேடுவதை நிறுத்திக்கொண்டார்.


அதேபோல் அம்மாவின் இரட்டைத் தங்கையின் இறுதி மூச்சும் அவரருகே உட்கார்ந்திருந்தபோது நின்றுபோனது.

எங்களை வளர்த்த ஒரு சிங்களப்பெண் எங்கள் வீட்டில் ஏறத்தாழ நாற்பது வருடங்கள் வாழ்ந்திருந்தார். தாயிலும் மேலான தாய் அவர். விழுந்து காயப்பட்டிருந்த அவரை எனது மடியில் தாங்கியிருந்தபோது அவரது உயிர் பிரிந்தது.

மூத்தோர் இல்லங்களில் பணிபுரிந்த பொழுதுகளில், சிலரின் இறுதிக் கணங்களில் அருகே நின்றிருக்கிறேன். உதவ முடியாது என்பதை உணர்ந்த நிலையில், அவர்களது கண்களைச் சந்திப்பது என்பது இலகுவானதல்ல.

பல பத்து வருடங்களுக்கு முன்பொரு நாள் 82 வயதான மூதாட்டியின் அருகே உட்கார்ந்திருந்தேன். எலும்புடன் ஒட்டிய தோல், குழிவிழுந்த கண்கள். வெளிறிய முகத்தில் கரு நீல நிறத்தில் நாளங்கள் புடைத்துத் தெரிந்தன.

கண்கள் மூடியிருக்க நினைவினை இழந்திருந்தார். காய்ந்துபோயிருந்த வாயினைக் குளிர் நீரில் நனைத்த பஞ்சினால் ஒற்றியெடுத்தேன். நீண்ட ஆறுதலான மூச்சொன்றை விட்டார். அண்மையில்தான் விழுந்து தொடையெலும்பு முறிந்திருந்தது. சில நாட்களாக மெது மெதுவாக நடக்கத்தொடங்கியிருந்தார். ஆனால், திடீரென்று சுகயீனமுற்றதனால் படுத்திருக்கிறார். இதயத்துடிப்பு பலவீனமாகவும் குறைவாகவும் இருந்தது.

கணவருக்குச் செய்தியை அறிவிப்பதற்கு முயற்சித்தோம். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை. கைத்தொலைபேசி இல்லாத காலம். முன்மதிய நேரத்தில் கணவர் வந்தார். வந்தவருக்குப் பெரும் அதிர்ச்சி. அப்பெண்ணின் அருகில் உட்கார்ந்திருந்து அவரது தலையை நீவிவிட்டபடியே உட்கார்ந்திருந்தார். அவர்களைத் தனியே விட்டுவிட்டு வெளியேறினேன்.

மதியம்போல் அவருக்குக் காப்பி எடுத்துச்சென்றபோது அப்பெண்ணின் கையில் தலையைவைத்து அழுதுகொண்டிருந்தார்.

மெதுவாக அவரது தோளில் கையைவைத்தேன். நிமிர்ந்து பார்த்துத் தேம்பினார். அருகே இருந்து அணைத்துக்கொண்டேன். “இவளை இப்படி என்னால் பார்க்க முடியாதிருக்கிறது” என்றவரிடம் காப்பி குடியுங்கள் என்று குவளையை நீட்டினேன். “நன்றி” என்று வாங்கிக்கொண்டார்.

சூடான காப்பி அவருக்கு ஆறுதலாக இருந்திருக்க வேண்டும். முழுவதையும் குடித்துமுடித்துவிட்டு…

“இவளை இப்படிப் பார்ப்பது எனக்கு எனது முதலாவது மனைவியை நினைவூட்டுகிறது. அவளும் இப்படித்தான் மூச்சுப்பேச்சின்றி இரண்டு நாட்கள் இருந்து இறந்தாள். அப்போது அவளுக்கு 30 வயது. ஐம்பது ஆண்டுகளுக்கு மேலான பின்பும் அந்த நாட்களை என்னால் மறக்க முடியவில்லை”

மனிதர்கள் தங்களை மறந்து பேசும்போது அவர்களைப் பேச விட வேண்டும் என்பதால், அவரது கதைகளுக்கு "ம்… "போட்டுக்கொண்டிருந்தேன்.

அவரது கண்கள் கலங்கியிருந்தன. குரல் தழுதழுத்தது.

“அவள் இறக்கும்போது நாம் திருமணம் முடித்து இரண்டு வருடங்கள்."

“ம்”

“அதே வருடம் எனது தம்பியும் விபத்தொன்றில் இறந்துபோனான். அம்மாவும் அப்பாவும் புற்றுநோயினால் இறந்துபோனார்கள். மிகவும் நொடித்துப்போயிருந்த என்னை மீட்டு எடுத்தவள் இவள். இவளுடன் ஏறத்தாழ 50 ஆண்டுகளுக்கு மேலாக வாழ்ந்திருக்கிறேன். இப்போது இவளும் போய்விடுவாளோ என்று பயமாக இருக்கிறது”

“வாருங்கள் வெளியே சென்று வருவோம்” என்று அழைத்தேன். எழும்பியவரால் சமநிலையைப் பேண முடியவில்லை. தள்ளாடினார். அவரைப் பிடித்துகொண்டேன். எனது கையை இறுகப்பிடித்தபடியே நடந்தார்.

வெளியே உட்கார்ந்திருந்தபோது “எனக்குப் புரஸ்ட்ரேட் புற்றுநோயிருக்கிறது” இன்னும் எத்தனை காலம் உயிரோடிருப்பேன் என்று தெரியாது. இவளுக்கும் நான் அதைச் சொல்லவில்லை” என்றுவிட்டு மௌனமானார்.

நான் அவரது முதுகை ஆறுதலாகத் தடவிவிட்டேன்.

“உங்கள் குழந்தைகளுக்குத் தெரியுமா?“

“இல்லை, எமக்குக் குழந்தைகள் இல்லை. இவளை இப்படிப் பார்க்க என்னால் முடியாதிருக்கிறது. இறந்துவிடுவாளோ என்று பயமாக இருக்கிறது. ஏறத்தாழ ஐம்பது வருடங்கள் மரணம் என்னருகே வரவில்லை. நானும் அதன் நீண்ட கரங்களை மறந்துவிட்டிருந்தேன். ஆனால், இப்போது அது மீண்டும் நெருங்கிவருகிறது போலிருக்கிறது” என்று சொல்லி அழுதார்.

“வைத்தியர் அப்படி எதையும் எங்களிடம் சொல்லவில்லை. சற்று பலவீனமாக இருக்கிறார் என்றுதான் சொன்னார்” என்று ஒரு பொய்யை அவருக்குச் சொன்னேன். அவருக்கு அது ஆறுதலாக இருந்திருக்க வேண்டும்.

“அப்படியா சொன்னார். கடவுளே! நன்றி”

“வாழ்வு எப்போதும், தான் தற்காலிகமானது என்பதை எமக்கு மரணங்களின் ஊடாகத்தானே அறிவிக்கிறது. இல்லையா?” என்றேன்.

நிமிர்ந்து பார்த்து… “புரியவில்லையே” என்றவரிடம் -

“நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. நீங்கள் பெரியவர். உங்களவு வாழ்வனுபவம் என்னிடம் இல்லை. ஆனால், நீங்கள் கலங்குவதைக் காணும்போது வருத்தமாக இருக்கிறது. எங்களுக்குப் பாடசாலையில் புத்தர் மரணம்பற்றிப் போதித்த கதையைக் கற்பித்தார்கள். உங்களுக்கும் அது தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்” என்றுவிட்டு நிறுத்தினேன்.

‘கீழைத்தேய நாட்டவர்களிடம் இப்படியான பல கதைகள் இருக்கின்றன என்று தெரியும் ஆனாலும் எனக்கு அவற்றில் அதிக நாட்டமிருந்ததில்லை. இருப்பினும், இப்போது அந்தக் கதையைக் கேட்க ஆர்வமாயிருக்கிறேன். சொல்”

“நான் இறை நம்பிக்கை உடையவன் அல்லன். ஆனால், யதார்த்த வாழ்க்கையைப் பேசும் கதைகளில் ஆர்வமுள்ளவன்”

“அப்படியா? நான் கிறிஸ்தவன். கடந்த ஞாயிறும் தேவாலயத்திற்குச் சென்றிருந்தேன். நீ ஏன் உன் மதத்தைப் பின்பற்றுவதில்லை.”

“எனக்கு எதற்கும் விளக்கம் அவசியம். புரியாதவற்றை 'அவை அப்படித்தான்' என்று ஏற்றுக்கொள்ள முடிவதில்லை. சடங்குகளை மேற்கொள்வதுதான் மதப்பற்று என்பதையும் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. எனவே, அன்பையும் மனச்சாட்சியையும் அடிப்படையான நெறிகளாகக் கொண்டிருக்கிறேன்”

“வித்தியாசமாக இருக்கிறது உனது விளக்கம். புத்தரின் அந்தக் கதையைச் சொல்”

”ஒரு கைம்பெண் தன் குழந்தை இறந்தபோது அதை உயிர்ப்பித்துத் தருமாறு புத்தரிடம் கேட்கிறார். புத்தர் அவரிடம் “ஊரில் மரணம் நடைபெறாத ஒரு வீட்டிலிருந்து கடுகு வாங்கி வா, உன் குழந்தையை உயிர்ப்பிக்கிறேன் என்ற நிபந்தனையை முன்வைக்கிறார்”

“கடுகு என்றால் என்ன?”

“உணவுப்பொருள். வாசனைப் பொருள் என்றும் கொள்ளலாம்”

“ம்”

“அப்பெண் ஊரெல்லாம் அலைந்தும் மரணம் நடைபெறாத வீடு ஒன்றையேனும் கண்டுபிடிக்க முடியாது திரும்பும்போது அவளுக்கு மரணம் அனைவருக்குமானது என்பது புலப்படுகிறது”

எனது தோளை இறுகப்பற்றிக்கொண்டார். அதன்பின் நாம் அதிகம் பேசிக்கொள்ளவில்லை.

அன்று இரவுவரை அப்பெண்ணின் அருகிலேயே இருந்தார் என்று மறுநாள் அறிந்தேன். மறுநாள் காலையிலேயே வந்து அப்பெண்ணருகே உட்கார்ந்திருந்தார்.

அடுத்த நாள் அப்பெண்ணுக்கு நினைவு தவறிக்கொண்டிருந்தது.

அன்றும் காப்பி எடுத்துப்போனேன். எனது கைகளைப் பற்றியபடி என்னையும் உட்காரச் சொன்னார்.

அவரது முகத்தில் முன்பிருந்த இயலாமையும் சோர்வும் களைப்பும் குறைந்து நிதானித்திருப்பது போன்று உணர்ந்தேன்.

வெளியே முகில்களற்ற வானம் நீலமாய் விரிந்திருந்தது. மெதுவான காற்றிற்கு மரங்கள் அசைந்துகொண்டிருந்தன.

திருந்திய நம்பியாரும் திருந்தாத MGRஉம்

எனக்கும் சமையலறைக்கும், நாய்க்கும் கல்லுக்குமான பொருத்தம். எனது நாக்கு அதிகம் எதிர்பார்ப்பதில்லை. கிடைக்கும் எதையும் ஏற்றுக்கொள்ளும். கிடைக்காவிட்டால் அதற்கேற்றவாறு சுருண்டு கிடக்கும்.


நான் Osloவிற்கு இடம்பெயர்ந்த காலத்தில், ஒரு வீட்டில், ஒரு அறையை வாடகைக்கு எடுத்திருந்தேன். அந்த வீட்டிலும் சமையலறை இருந்தது. நான் தண்ணீர் எடுப்பதற்கு மட்டுமே அங்கு செல்வேன். அந்த வீட்டிலிருந்து 6-7 நிமிடத் தொலைவில் தமிழ் உணவுகளை விற்கும் உணவகம் ஒன்று இருந்தது. அதுதான் எனது அட்சயபாத்திரம். சில காலம் மாதாந்தக் கணக்கும் இருந்தது.

ஒவ்வொரு உணவகத்திற்கும் என்று நம்பிக்கையான தொடர்ச்சியான வாடிக்கையாளர்கள் இருப்பார்கள் அல்லவா? அவ்வாறான சில வெள்ளையினத்தவர்கள் அங்கு வருவதுண்டு. அதில் பலர் தினசரி வேலை முடிந்து வந்து ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட பியர்கள் அருந்துபவர்கள். பியரின் அளவிற்கு ஏற்ப அவர்களும் ததும்பித் தள்ளாடுவார்கள்.

இப்படி ததும்புபவர்களில் ஒருவர் கடும் சிடுமூஞ்சி. எப்போதும் வேலைக்கு அணியும் மஞ்சல் நிறமான ஆடையுடன் உட்கார்ந்திருப்பார். டென்மார்க் நாட்டவர் என்றே நினைவிருக்கிறது. முகத்தைத் தாடி நிரப்பியிருக்கும். கண்களில் கடும் அலட்சியமும் வெறுப்பும் குடியிருக்கும். வார்த்தைகளில் நெடி வீசுமளவிற்குப் பேசுவார். நாக்கில் கத்தி வைத்திருக்கிறாரோ என்று நினைப்பதுண்டு நான்.

அவர் யாரைத் திட்டுவார் யாரை வாழ்த்துவார் என்று சொல்ல முடியாது. அது அவரது காலநிலையைப் பொறுத்தது.

எவரும் அவருடன் அதிகம் ஒட்டுவதில்லை. குழந்தைகளுடனும் அவருக்கு எட்டாப்பொருத்தம். தன்னுடன் பழகும் நண்பர்களுடனும் அடிக்கடி அழகிய சொற்களால் மோதிக்கொள்வார். இவனெல்லாம் ஒரு மனிதனா என்று நான் நினைப்பதுண்டு.

அவருக்கு நண்பர்கள் குறைவு. நுணலும் தன் வாயால் கெடும் என்றால், இவர் மட்டும் எப்படித் தப்பலாம்?

இவரது சிடுமூஞ்சிக் குணத்தினால் நானும் அவரைவிட்டு ஒதுங்கியே இருந்தேன்.

எனக்கு, தமிழ் உணவு என்றால் அதைக் கையால் பிசைந்து, குழைத்தெடுத்துப் பெருவிரலால் வாய்க்குள் தள்ள வேண்டும். அதற்கெனத் தனி ருசி இருக்கிறது என்று நினைப்பவன் நான். அந்த உணவகத்திலும் நான் அப்படித்தான்.
முருங்கைக்காய்க்கறி என்றால் கண்ணை மூடி, சப்பிச் சப்பி, முருக்கைச்சாறு பல்லினூடாக ஊறி, நாவில் நனைந்து தொண்டையை எரித்தபடி உள்ளிறங்கும் அந்த அற்புத உணர்வைத் தலைக்குள் இருக்கும் மூளை உணரும்போது கிடைக்கும் பேரின்பம் வேறு எங்கேனும் உண்டா?

இதற்காகவெல்லாம் வெட்கப்பட்டுக் கிடப்பவன் நான் அல்ல. சீன உணவகங்களுக்குச் சென்றால் குச்சியால் உண்பதில்லையா அல்லது வெள்ளைக்காரர்களின் கடைக்குச் சென்றால் முள்ளுக்கறண்டியும் கத்தியும் பாவிப்பதில்லையா… அதுபோலத்தான் இதுவும் என்பது எனது வாதம்.

ஒரு நாள் எனது மேசைக்கு முன்னால் உட்கார்ந்திருந்த அந்த மனிதர், நான் கையால் உண்பதைப் பார்த்து ஏதோ முணுமுணுத்தார்.
எனக்குச் சுர்ரென்று சூடேறி காதால் புகை வந்தது.

வேண்டும் என்றே, அவரைப் பார்த்தபடி ஒவ்வொரு விரலாக நக்கியெடுத்து உள்ளங்கையையும் நக்கினேன். மனிதர் வெறுத்துப்போய் திட்டியபடியே வெளியே சென்றார்.
அதன்பின் நாங்கள் எம்ஜிஆரும் நம்பியாரும் ஆனோம். கடுமையாகப் பார்த்துக்கொண்டோம். திட்டிக்கொண்டோம். எனது நண்பர்களுக்கும் அவர் தமிழருக்கு எதிரானவன் என்று கூறியதால் அவர்களும் அவரைக் கடுமையாகப் பார்க்கத் தொடங்கினார்கள். எங்கள் ஆட்பலத்தைக் கண்ட அவர் மோத விரும்பவில்லை.

அவர் இருக்கும் பகுதிக்கு நான் செல்வதில்லை. எனது பகுதிக்குள் அவர் வருவதில்லை. ஆளையாள் பார்ப்பதுமில்லை. எப்போதும் அவருக்குப் பிடித்தமான ஒரு மூலையில் பியருடன் உட்கார்ந்திருந்தபடியே பத்திரிகையில் மூழ்கியிருப்பார்.

பாவி போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியும் என்பதுபோல ஒரு நாள் நான் வாடகைக்கு எடுத்திருந்த வீட்டின் சமையறை எரிந்துபோயிற்று.

வீட்டுக்காரர் வீட்டைத் திருத்த வேண்டும் என்பதால் வீடு தேடியபோது Osloக்கு வெளியே ஒரு வீடு கிடைத்தது. அதன்பின் பல ஆண்டுகள் அங்குதான் வாழ்ந்தேன்.

அவ்வப்போது அந்த உணவகத்திற்கு வரும்போது அவரைக் காண்பேன். அப்போதுகூட எம்ஜிஆரும் நம்பியாரும் சமாதானமாகவில்லை. முடியுமான நேரங்களில் எல்லாம் பார்வையால் மோதிக் கொண்டோம்.

வாழ்க்கை என்னைப் பாலஸ்தீனத்திற்கு அழைத்துப்போயிற்று. சில காலங்களின் பின், அங்கிருந்து இடம்பெயர்ந்து மீண்டும் Osloக்கு வந்தபின், அந்தக் கடைக்கு அருகிலேயே குடியிருக்கவேண்டியாயிற்று. இப்போது முன்பைப் போன்று அந்த உணவகத்திற்குச் செல்வது குறைவு. வேலையிடத்தில் மாதாந்த அடிப்படையில் நல்ல சத்தான சாப்பாடு போடுகிறார்கள். அத்துடன் அன்பான நண்பர்களின் ராப்பிச்சையுடன் எனது காலம் ஜாம் ஜாம் என்று ஓடிக்கொண்டிருக்கிறது.

கடந்த சனிக்கிழமை உதைபந்தாட்டப் போட்டியைப் பார்ப்பதற்காக அந்த உணவகத்தினுள் உட்கார்ந்திருந்தேன்.

அந்தக் கடை புதியவர் ஒருவருக்கு கைமாறி இருக்கிறது. அவருக்குத் திருமணமாகி இப்போதுதான் முதற்தடவையாகக் குட்டி ஈன்றிருக்கிறார். உரிமையாளரின் மகளுக்கு ஒன்றரை வயதிருக்கும். அதிகமாகப் பகல் நேரங்களில் உணவகத்தில் இருப்பாள். அவளின் மழலைக்குரலின் இனிமை உணவகத்திற்கு அதிக ருசியைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. அவளைக் கண்டாலே என் மனது புத்துணர்ச்சி பெறுகிறது. மழழைக் கால்களினால் உணவகமெங்கும் ஓடித்திரிகிறாள். அள்ளிக்கொஞ்சத் தோன்றும் பேரழகி. நாம் இப்போது நண்பர்களாகிவிட்டோம்.

இன்று மீண்டும் அந்த மனிதரைக் கண்டேன். எம்ஜிஆருக்கு ரோசம் பொத்துக்கொண்டுவந்தது. இவனுடன் கதைப்பதுமில்லை புன்னகைப்பதுமில்லை என்று நினைத்துக்கொண்டேன். பியர் குடித்தபடியே அவர் தினசரிப்பத்திரிகையில் குறுக்கெழுத்துப்போட்டிப் பகுதியை நிரப்பிக்கொண்டிருந்தார். அருகில் மெழுகுதிரி எரிந்துகொண்டிருந்தது. எப்போதும் போலத் தனியே இருந்தார்.

நான் சிறுமியின் சேட்டைகளில் என்னை மறந்து இருந்தபோது, சிறுமி அவரை நோக்கிச் சென்று அவரது மேசைக்கருகே நின்று அவரைப் பேச்சுக்கழைத்தாள். குழந்தைக்குத் திட்டப்போகிறார். அப்படி அவர் திட்டினால் களத்தில் இறங்கி நம்பியாரை ஒரு கைபார்ப்பது என்று நினைத்துக்கொண்டேன்.

அவளது மழழை மொழி அவருக்குப் புரியவில்லை என்பதை மிகவும் அழகாக ஆறுதலாக அவளிடம் சொன்னார். அவளுக்குப் புரியவில்லை. அவள் மெழுகுதிரியை இழுத்தாள். எனது மனம் இந்த மனிதன் அவளைத் திட்டப்போகிறான் என்றது.

அவரோ மெழுகுதிரியை தள்ளி வைத்தார். இப்போது அவள் இவரது பேனையைக் கேட்டாள். பேனையைக் கொடுத்தார். அவள் இவரை அழைத்தாள். எழும்பி எஜமானனின் பின்னால் செல்லும் நாய் போன்று அவளுடன் நடந்தார். அவள் இவரைக் கடைக்கு வெளியே அழைத்துச் சென்றாள். இவரும் மந்திரித்துவிட்டவர் போன்று அவளின் பின்னால் நடந்தார். அவள் கால்தடுக்கி விழுந்தபோது முழந்தாளிட்டு அமர்ந்து அவளைத் அணைத்து ஆறுதற்படுத்தினார்.

அவர்கள் எனது மேசையைக் கடந்தபோது நான் அவரைப் பார்த்தேன். அவர் என்னைப் பார்த்துப் புன்னகைத்துத் தலையை ஆட்டினார். நான் புன்னகைக்கவில்லை.

சற்று நேரத்தில் என்னருகே வந்து நின்று “பல வருடங்களாக உன்னைக் காணவில்லையே” என்றார். அதிர்ந்துபோனேன். சமாளித்தவாறே இடப்பெயர்வுகளைச் சொன்னேன்.

வாழ்க்கை எப்போதும் எதையோ கற்றுத்தந்துகொண்டே இருக்கிறது. நீயும் இடப்பெயர்வுகளிலிருந்து பலதையும் கற்றிருப்பாய் என்றார்.
அவர் குடித்திருந்தாலும் பேச்சு நிதானமாய் இருந்தது.

அந்த மனிதர் எனக்கு எதையோ போதித்திருப்பதுபோல் உணர்கிறேன். அடுத்த முறை அவரைக் காணும்போது புன்னகைக்க வேண்டும்.

நம்பியார் திருந்திவிட்டார். MGRதான் திருந்த வேண்டும்

தேற்றுதல்

பிரசவத்திற்கு முன்பே கருப்பையினுள் இருக்கும் குழந்தையைத் தாய் தேற்றியிருப்பாள். வயிற்றைத் தடவிக் கொடுத்திருப்பாள். தாயின் குரலாலும் தொடுகையாலும் குழந்தை தேற்றப்பட்டு, அமைதியை உணர்ந்திருக்கும். இப்படியாக மனிதன் பிறப்பதற்கு முன்னிருந்தே தேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறான். அவன் பிறந்தபின் இறக்கும் வரையிலும் தேற்றப்படுகிறான்.


குழந்தைப் பருவத்தில் பெரியவர்களால் கதைத்தும், அணைத்தும் நாம் தேற்றப்பட்டிருப்போம். வளர்ந்த பின்பும் இன்னொரு மனிதனின் அணைப்பில் தேற்றப்படுவதுபோன்று, மன ஆறுதலைத் தருவது எதுவுமில்லை. அது நண்பனின் தோளாக இருந்தாலென்ன... தாயின் கரங்களாக இருந்தாலென்ன... அல்லது துணையின் மடியாயிருந்தாலென்ன... தொடுகையின் மகத்துவம் தேற்றப்படும்போதுதான் அதீதமாக உணரப்படுகிறது.

தேற்றுதல் என்பது ஒரு கலை. தன்னைத்தானே தேற்றுதலும் அப்படித்தான். ஆனாலும் பலருக்கும் தன்னைத்தானே தேற்றும்கலை வாய்ப்பதில்லை.
தேற்றும் கலையறிந்தவர்களை நண்பர்களாக, அன்பர்களாக, தோழர்களாகப் பெற்றுக் கொண்டவர்கள் தம் வலிகளைப் பகிர்ந்து, அழுது, தேற்றப்பட்டு தங்களின் பாரங்களைக் கடந்து செல்கிறார்கள். இவ்வாறான தேற்றும் மனிதர்கள் கிடைக்காதவர்களின் பாடு பெரும் சிரமமாக அமைந்து விடுகிறது.

வாழ்க்கையில் என்னைத் தேற்றியவர்களை நான் என்றுமே மறக்க முடியாது. மறக்கவும் கூடாது. 'நன்றி மறப்பது நன்றல்ல' அல்லவா! வாழ்க்கையைப் புறநிலைக் காரணிகள் புரட்டிப் பந்தாடும்போதுதான், தேற்றுதலின் தாற்பரியம் எப்படியென்பது எனக்குப் புரிந்தது. அதீத காற்றடைத்த பலூன் எப்போது வெடிக்கும்...? என்பது தெரியாதிருப்பதைப்போன்று, யாரேனும்,
"நீங்கள் நலமா.. ?" எனக் கேட்கும் பொழுதுகளில் உணர்ச்சியின் உந்துதலால் துயரக்குமிழிகள் உடைந்து கொள்ள, கண்ணீர்த்துளிகள் கன்னங்களில் பொலுபொலுவென வழிந்து கொண்டிருக்கும். அவ்வேளைகளில் தங்களின் நேரங்களையும், தோளையும், மடியையும் ஆறுதலுக்காகத் தந்தவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

ஒருகட்டத்தில், ' இவரிடம் பேசினால் மனம் தேற்றப்பட்டு, வலிகளை ஆற்றிக் கொள்ளலாம்...' என்று வாழ்க்கை ஓரிருவரை அடையாளம் காண்பிக்கும்.

எனக்கும் அப்படித்தான் ஒரு பாதிரியர் வந்து அமைந்தார். நாம் பழகத்தொடங்கிய காலங்களில், அவர் பாதிரியார் அல்லர். காலப்போக்கில்தான் அவர் பாதிரியார் ஆனார். மனிதர்களை எவ்வாறு தேற்றுவது? என்பதுபற்றி அவரிடமிருந்தே நான் கற்றுக் கொண்டேன். மனிதர்களோடு எப்போது பேச வேண்டும்? அவர்கள் அழும்போது அவர்தம் மூக்குநீரைச் சிந்துவதற்கு எப்போது ஒரு சிறு துணி கொடுக்க வேண்டும்? என்பதுபற்றி தெளிவாகத் தெரிந்திருந்தது.

சீழ் வடிவதற்கு சத்திர சிகிச்சையொன்றும் அவசியமில்லை.நுண்ணியதொரு துளையிட்டாலே சீழ் வடிந்து, வலி மறைந்து விடுமல்லவா! அப்படித்தான் இந்தத் தேற்றுதல் கலையும் இருக்கிறது. பல வருடக் கல்வியறிவும் பட்டங்களும் இதற்கு அவசியமில்லை. மனிதர்களின் ஆன்ம ஓலங்களைப் புரிந்துகொள்ளும் சக்தியும் மன அலைவரிசையும் இருந்தாலே போதுமானது. இதைவிடப் பெறுமதியான வேறு எதையும் இந்த மனிதர்களுக்குக் கொடுத்துவிட முடியாது.

காலப்போக்கில் எனக்கும் சிலரைத் தேற்றும் சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது. சிலரை ஓரிரு உரையாடல்கள்மூலம் தேற்ற முடிந்திருக்கிறது. வேறுசிலரை மாதக்கணக்கில் தினமும் உரையாடி, உரையாடி அவர்களது மனப்பாரத்தைக் குறைத்துக் கொள்ள உதவியிருக்கிறேன். சில மனவேதனைகள் காலாகாலங்களுக்கும் தொடர்ந்து வந்துபோகும். அதன் தாற்பரியத்தினை வாழ்க்கை முழுவதும் சுமந்து செல்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களுக்கு ஆறுதலாக இருப்பதைத்தவிர வேறு எதைச் செய்துவிட முடியும் எம்மால்?

புத்திர சோகத்தைப்போன்று தேற்ற முடியாதது எதுவுமில்லை. நீறுபூத்த நெருப்பு அது. சிலநாள்களாக நெருங்கிய நண்பர்களைத் தேற்றுவதற்கு நாம் முயன்று கொண்டிருக்கின்றோம். அவர்களுக்கு எந்தவோர் ஆறுதல் வார்த்தைகளும், தேற்றுதல்களும் மன நிம்மதியைக் கொடுப்பதாக இல்லை. அவர்களது வார்த்தைகளிலும், பார்வைகளிலும் நம்பிக்கையுணர்வு துவண்டு, ஈரம் அற்ற ஒரு வெறுமை விரவிக் கிடக்கிறது. நடந்ததை அவர்கள் ஒருகணம் ஏற்றுக் கொண்டாலும், மறுகணம் இழப்பின் வலி அந்த நடப்பை மறைத்து விடுகிறது. வார்த்தைகளால் தேற்றவே முடியாத வலி அது. தோழமைகளின் அன்பும், அரவணைப்பும், பாதுகாப்பும், உதவிகளுமே இவர்களை மீண்டும் ஓரளவேனும் சாதாரண வாழ்வுக்கு மீட்டெடுத்துக் கொள்ள உதவும்.

சாவிற்குக் காத்திருந்த நண்பனொருவனை அறிவேன். ஒரு கட்டத்திற்குப்பிறகு எந்தவோர் ஆறுதலும் அவனைத் தேற்றவில்லை. கூரையை வெறித்தபடியே பார்த்துக் கொண்டிருப்பான். சிலவேளைகளில் கையைப் பற்றியிருப்பான். கண்களில் இருந்து நீர் வடிந்து கொண்டிருக்கும்.
இறுதிக்காலங்களில் நினைவுகளை இரைமீட்பதைத் தவிர, எம்மிடையே பேசுவதற்கு எதுவுமிருக்கவில்லை. இறுதியில் அதுவும் நின்று போனது. கடைசிநாள்களில் ஒரு மனிதனுக்கு அருகே இருப்பதுவும் ஓர் ஆறுதல்தான். எவரும் அருகில் இன்றி இறந்துபோகும் மனிதர்கள்... அந்த இறப்புக்கு முன்னான கணங்களில் அனுபவிக்கும் மனவேதனை எவ்வளவு கொடியதாக இருக்க வேண்டும். கருணையான ஒரு பார்வையின்றியல்லவா இவர்கள் இந்த உலகத்தை விட்டு விடைபெறுகிறார்கள்.

மரணபயத்தை எதனாலும் தேற்ற முடியாது என்றே நினைக்கிறேன். ஓர் அற்புதம் நிகழ்ந்து 'நான் பிழைக்க மாட்டேனா...?' என்றதொரு நம்பிக்கை... அவர்களிடத்தில் கடைசிவரையும் இருக்கும்.

' நாளை நான் இல்லாது போய்விடுவேன்...' என்பதை நினைத்துப் பார்ப்பேன். மூச்சு தன் செயற்பாட்டை நிறுத்தி விட்டதுபோன்று ஒரு பயம் என் நெஞ்சைப் பற்றிக் கொள்ளும். உடம்பும் நடுநடுங்கும்.

இதற்காகத்தான் மரணம் தன்வருகையை எவருக்கும் முன்கூட்டியே அறிவிப்பதில்லைப் போலும்!

அண்மையில் ஒரு காணொளி பார்க்கக் கிடைத்தது. ஒரு குடும்பத்தில் யாரேனும் ஒருவரைக் கொலை செய்தால், அக் கொலையைச் செய்தவருக்கு தண்டனையாக அவரையே கொலை செய்தல்... எனும் கலாசாரத்தினைக் கொண்ட, ஓர் இறுக்கமான நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கும் ஒரு நாட்டில் நடைபெற்ற கதை இது!

ஒரு பெற்றோரின் மகனைக் கொன்றவனின் கழுத்தை வெட்டிக் கொல்வதற்காக, அவனை பொதுவெளியொன்றில் நிறுத்தியிருக்கிறார்கள். முழந்தாளிட்டு, கைகள் கட்டப்பட்டு, தலை குனிந்து நிற்கும் அந்த மனிதனுக்கு அருகில் பெரியதொரு மனிதன், கூர்மையான பளபளக்கும் ஒளி கொண்ட வாளுடன் நிற்கிறான்.

முழந்தாளிட்ட அந்த மனிதன் குலுங்கிக் குலுங்கி
அழுவது தெரிகிறது. சற்று தொலைவில் அவனது குடும்பத்தினர்... தேற்ற முடியாத சோகத்தினைச் சுமந்து கொண்டு, இந்நிகழ்வினைக் கண்கொண்டு பார்க்க முடியாமல் இறைவனை யாசிக்கிறார்கள். வாளொடு நிற்கும் அந்தப் பெரியமனிதன், தன் வாளை ஓங்குகிறான். முழந்தாளிட்ட மனிதனின் பின்கழுத்தைநோக்கி அவன் வாளைப் பதிக்கையில், ஒரு குரல் பெரிதாக ஒலிக்கிறது! ஓங்கியவனின் வாளும் ஒகணம் ஸ்தம்பித்துப் போகிறது!

கொலை செய்யப்பட்டவனின் தாய், கொலை செய்தவனை மன்னித்து விட்டாள்!

எனவே, மரண தண்டனை செயலற்றுப் போகிறது. முழந்தாளிட்ட இளைஞன் அந்தத் தாயையும் அக்குடும்பத்தாரையும் அணைத்துக்கொண்டு அழுகிறான். தேற்றமுடியாத நிலையில், அவன் கண்களில் இருந்து வழியும் கண்ணீரை... அவனை அணைத்தபடியே துடைத்து விடுகிறார் இழப்பை அனுபவித்த தந்தை. அவரது கண்களிலும் கண்ணீர்!

எத்தனை அற்புதமான காட்சி அது! செய்த குற்றத்தை மன்னிப்பதே பெருஞ்செயல். ஆனால், அதையும் கடந்து, தன் குற்றத்தையுணர்ந்து அழும் தன்மகனின் கொலையாளியை அணைத்து, அவனைத் தேற்றி, தன் மனதையும் தேற்றிக்கொள்ளும் அந்த மனிதரை நினைத்துப் பார்த்தேன். எத்தனை பெருதன்மையுடையவராக இருக்க வேண்டும் அவர்.

இந்த உலகில் தேற்றுவதற்கு ஆளில்லாது பலர் இருக்கிறார்கள். நான்குபுறமும் பார்த்துக் கொள்வோம் நண்பர்களே. தேற்றுதலுக்குத் 'தெளிதல்' என்றும் ஓர் ஒற்றைக் கருத்துள்ள சொல் இருக்கிறதாம்.

பெருங்காதல்

வீதியெங்கும் பஞ்சுபோன்று வெள்ளையாகக் கொட்டிக் கிடந்த பனியை வழித்து வீதியின் இருகரைகளிலும் தள்ளியபடி போய்க்கொண்டிருந்தது ட்ராக்டர் ஒன்று.

கடையில் இருந்து வீடு நோக்கி நடந்துகொண்டிருந்தேன். வீதி வெறிச்சோடிக்கிடந்தது. அழுக்கற்ற வெள்ளைப் பனி மனதுக்குத் தரும் புத்துணர்ச்சியை அனுபவித்தபடி... நடந்துகொண்டிருந்தபோது, காலில் ஏதோ இடறுப்படுவதை உணர்ந்து குனிந்தேன்.

தோலினாற் செய்யப்பட்ட சிறியதொரு விலையுயர்ந்த பணப்பை. கையில் எடுத்துப் பார்த்தேன். சாரதிப்பத்திரம், வங்கிஅட்டை, பணம் என்பன இருந்தன.

சுற்றும் முற்றும் பார்த்தேன். எவரும் இல்லை. கூகிள் ஆண்டவரிடம் சாரதிப் பத்திரத்தில் இருந்த பெயரைக் கொடுத்து விலாசத்தினைக் கேட்டேன்.

எனது வீட்டுக்கு அருகில் உள்ள ஒரு விலாசத்தினைக் காண்பித்தது. தேடிச் சென்று கதவைத் தட்டினேன். ஹாலிவூட் பிரபலம் எலிசபத் டெய்லரின் வயதிலும், அழகிலும், ஒப்பனையிலும் கையில் விலையுயர்ந்த சிகரட்டுடன் ஒருவர் கதவைத் திறந்தார்.

சாரதிப்பத்திரத்தில் இருந்த பெயரைக் கூறி, அவரிடம் இதனைக் கொடுங்கள் என்றேன். வாங்கிக் கொண்டார்.

“நான் வருகிறேன். மாலைப் பொழுது அழகாகட்டும்” என்று கூறிவிட்டு இரண்டடி வைக்கு முன் “உன்னை உபசரிக்காது விட்டால் கர்த்தர் என்னை மன்னிக்க மாட்டார். உள்ளே வா“ என்றார்.

எனக்கும் வேலைகள் எதுவும் இருக்கவில்லையாதலால் உள்ளே சென்றேன்.

தனியே வாழும் பெண் மூதாளர். குழந்தைகள் குடும்பம் இல்லை.

இது நடந்து ஏறத்தாழ ஒரு வருடமாகிவிட்டது.

இப்போது நானும் அவரும் நண்பர்கள். அவருக்காக நான் தோட்டக்காரன், வேலைக்காரன், வீடு திருத்துபவன், கணினி ஆசிரியன், சாரதி என்று பல வேடங்களை ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. எனக்கும் அதில் ஆட்சேபனை எதுவும் இல்லை.

அண்மையில் புதிதாக ஒரு விலையுயர்ந்த கைத்தொலைபேசியை வாங்கிக் கொண்டார். அதில் அவருக்குத் தொலைபேசி அழைப்புக்களுக்குப் பதிலளிக்கவும், குறுஞ்செய்திகளை வாசிக்கவும் மட்டுமே தெரியும்.

ஒரே ஒரு மனிதரிடம் இருந்துதான் அவருக்குக் குறுஞ்செய்தி வரும். இவருக்குப் பதில் எழுதத் தெரியாது. எனவே, நேரடியாகத் தொலைபேசி உரையாடலை ஆரம்பித்து, குறுஞ்செய்திக்கான பதிலைச் சொல்லுவார்.

அவருக்குத் தொலைபேசியை எவ்வாறு பாவிப்பது என்று கற்பிக்கும் வேலை என்னுடையது. அது சாண் ஏற முழம் சறுக்கும். எனவே, அவர் இன்றுவரை ஒரு குறுஞ்செய்தியும் எழுதியதில்லை.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை மாலை.

தொலைபேசியில் அழைத்தார். குரலில் பதட்டம் தெரிந்தது. “உடனே வரமுடியுமா?” என்றார்.

வீட்டுக் கதவை தட்டியபடி உள்ளேசென்றேன்.

பாதிவழிவரை வந்து எனது கையைப் பிடித்து இழுத்துச் சென்றார். அவரின் செய்கைகளில் பரபரப்பும் பதட்டமும் தெரிந்தது.

“என்ன விடயம் என்று சொல்லுங்கள்?" என்றேன்.

“உனக்கு ஏகிலைத் தெரியும் தானே?”

***
ஏகில் அவரது காதலர். ஓரிரண்டு ஆண்டுக் காதல் அல்ல. ஏறத்தாழ 40 ஆண்டுப் பெருங்காதல்.

ஏன் அவர்கள் சேர்ந்து வாழவில்லை என்ற உங்கள் கேள்விகளுக்கு என்னிடம் பதில் உண்டு. ஆனால், அது இந்தக் கதைக்கு அவசியமில்லை என்பதால் தவிர்க்கிறேன்.

***
இன்று காலை ஏகிலின் வாகனத்தை இந்த வீதியில் கண்டேன். கையில் பூங்கொத்துடன் தனது காதலியிடம் அவர் செல்வதையும் கண்டேன் என்று சொல்லிக் கண்ணைச் சிமிட்டினேன்.

“உனது கிண்டல் புரிகிறது. அவர் இன்று காலை வந்திருந்தார். அவருக்கு விருப்பமான ரஸ்ய நாட்டு மீன் சினையும் பாணும் தயாரித்திருந்தேன். ரசித்து உண்டார். மதியம்போல் நாம் இருவரும் வெளியே நடந்துபோனோம்.“

“ம்“

அதன் பின் அவர் பேசிவில்லை. அமைதியாக இருந்தார். எதையோ சொல்வதற்கு சக்தியைத் திரட்டுகிறார் என்பது மட்டும் புரிந்தது.

அவரது கோப்பிக் குவளையினுள் கோப்பியினை ஊற்றினேன்.

“நன்றி“ என்றுவிட்டு இரு முறை உறுஞ்சிக் குடித்தார்.

“ஏகில் இனி வரமாட்டார்“ என்றார் விசும்பும் குரலில்.

“ம்“

“இன்று காலை நடந்து சென்ற போது நான் அநாவசியமாக அவருடன் சண்டையிட்டேன். என்னில்தான் முழுப் பிழையும். ஏகிலுக்கு கடுங்கோபம் வந்தது. என்னுடன் கடும் வாக்குவாதப்பட்டார். அதன்பின் என்னை வீட்டில் விட்டுவிட்டு சென்றுவிட்டார். பத்து பதினைந்து தடவைகள் அவருக்கு தொலைபேசிவிட்டேன். அவர் தொலைபேசியை எடுக்கிறார் இல்லை“

“ம்“

“அவருக்கு குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும். அதுதான் உன்னை அழைத்தேன்“

“சரி… என்ன எழுதவேண்டும்“ என்றுவிட்டு தொலைபேசியை எடுத்து எழுதத் தயாரானேன்.

“ஏகில் இனி வரமாட்டாரா? என்னில் தான் பிழை. நான் கோபப்பட்டது தவறு“ என்றார் மீண்டும்.

“40 ஆண்டுகளாக மயக்கி வைத்திருக்கிறீர்கள் அவரை. எனவே அச்சம் வேண்டாம். மனிதர் சினமடங்கியதும் பூங்கொத்துடன் உங்களிடம் வருவார்“ என்றேன்.

“எனக்கு நம்பிக்கையில்லை. அவரை அதீதமாக மனவருத்தப்படுத்திவிட்டேன்“

“சரி… என்ன எழுதவேண்டும்?“ என்று கதையை மாற்றினேன்.

சற்று சிந்தித்துவிட்டுத் தொடங்கினார்.

ʻஅன்பு ஏகில்! இன்று உங்களுடன் சண்டைபிடித்ததற்காக நான் வருந்துகிறேன். தவறு முழுவதும் என்னுடையது. தயவுசெய்து தொடர்பு கொள்ளுங்கள்ʼ.

செய்தியை அனுப்பினேன். இருப்பினும் அவர் அமைதியடையவில்லை.

“இன்னுமொரு செய்தி எழுது“

ஒரு செய்தி எழுத பத்தாயிரம் குறோணர்கள் என்று அவரை சிரிக்கவைக்க முயன்றேன். சம்பவத்தின் தாக்கத்தின் காரணமாக அவர் நகைச்சுவையை கவனிக்கவும் இல்லை, ரசிக்கவும் இல்லை.

“சரி… என்ன எழுத? “

ʻஅன்பு ஏகில், என்னை மன்னித்துவிடு. தயவுசெய்து மன்னித்துவிடு. இன்று வெள்ளிக்கிழமை. மலையில் உள்ள எனது விடுமுறை வீட்டுக்குச் செல்லலாம். நான் அனைத்துப் பொருட்களையும் எடுத்துவைத்திருக்றேன். கோவிக்காமல் தொலைபேசுʼ.

இதையும் அனுப்பிய பின், அவருடன் உட்கார்ந்திருந்து கோப்பி அருந்தியபடி அவரைத் தேற்றிக்கொண்டிருந்தேன்.

பதில் ஏதும் வரவில்லை. இவரது தொலைபேசி அழைப்புக்களுக்கு அவர் பதில் சொல்லவும் இல்லை.

“அவர் வரமாட்டார்“

“உங்களில் அவருக்கு அன்பு இல்லை என்றால் நீங்கள் சண்டைபிடித்த இடத்திலேயே உங்களை விட்டுவிட்டுச் சென்றிருப்பார். வீடுவரை அழைத்துவந்து உங்களை விட்டிருக்க மாட்டார்“ என்று அவருக்கு நம்பிக்கை தருமாறு சொன்னதைக் கேட்டதும் சற்று ஆறுதலடைந்தார்.

“இன்னுமொரு செய்தி அனுப்பு“

ʻஅன்பு ஏகில், நான் இனி இவ்வாறு நடந்துகொள்ள மாட்டேன். தயவுசெய்து உடனே புறப்பட்டு வாʼ.

நேரம் போனதே தவிர பதில் ஏதும் வரவில்லை. ஏறத்தாழ ஆறு ஏழு குறுஞ்செய்திகள் அனுப்பியிருப்போம்.

அவரைத் தேற்றுவது இலகுவாய் இருக்கவில்லை.

மிகவும் சிறப்பான இரவு உணவு தயாரித்தார். அவரை அமைதிப்படுத்தாவிட்டால் இன்றைய இரவு குறுஞ்செய்திகளை எழுதுவதற்காக நான் இங்கு தங்க வேண்டி ஏற்படும் என்பது புரிந்தது.

எனவே, அவரது திராட்சைரச பானங்களில் சிறப்பான ஒரு போத்தலை எடுத்து அவருக்கு ஒரு கிண்ணத்தில் ஊற்றி நீட்டினேன்.

இரவு உணவினை உண்டபடி பேசிக்கொண்டிருந்தோம்.

புறப்படுவதற்கு முன்பும் ஒரு குறுஞ்செய்தி அனுப்பினோம். பதில் வரவே இல்லை.

நான் புறப்பட்டு வீட்டுக்கு வந்தேன்.

மறுநாள் காலை மீண்டும் வந்தேன். சாய்மனைக் கதிரையில் வாடிய செடிபோல் கிடந்தார்.

அவருக்கு சக்கரைவியாதி உண்டு என்பதால் சக்கரையை அளவீடு செய்தேன். அளவுக்கு அதிகமாக இருந்தது. இரவு திராட்சைப்பழச்சாறினை முழுவதுமாகக் குடித்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொண்டேன்.

வைத்தியருக்குத் தொலைபேசியபோது மருந்துகளைக் கொடுக்கும்படி சொன்னார். கொடுத்தேன்.

அன்றும் குறுஞ்செய்திகள் அனுப்பினோம். பதில் இல்லை.

திங்கட் கிழமை காலை, வேலைக்குப் புறப்பட்டு ரயில் நிலையத்தைநோக்கி நடந்துகொண்டிருந்தேன்.

எதிரே ஊன்றுகோலுடன் தூக்க முடியாத அளவு ரோஜாப்பூக்களைத் தனது வாகனத்தில் இருந்து ஒருவர் இறக்கிக்கொண்டிருப்பது தெரிந்தது.

என்னைக் கண்டதும்… “உனது குறுஞ்செய்திகளால் என்னைக் கரைத்துவிட்டாய். எப்படி இருக்கிறாள் எனது கிழவி“ என்றார்.

“அது சரி… அவர் அப்படி என்ன சண்டைபிடித்தார்… உங்களுக்கு இவ்வளவு கோபம் வருவதற்கு?“

“அவளுக்கு நான் அவளது அடிமை என்று நினைப்பு” என்றுவிட்டு நீண்டதொரு மூச்சை இழுத்து விட்டபின் “ஆம்… அவளது அன்புக்கு நான் அடிமைதான்“ என்றுவிட்டு வீடுநோக்கி நடந்தார்.

“அவர் வீட்டில் இல்லை. வைத்தியாலைக்கு அழைத்துச் சென்று விட்டிருக்கிறேன்“

“ஏன், என்ன நடந்தது? நீ ஏன் எனக்குச் சொல்லவில்லை? அவளைப் பார்த்துக்கொள்ளவேண்டும், என்னவென்றாலும் எனக்கு அறிவிக்கவேண்டும் என்று சொல்லியிருக்கிறேன் அல்லவா?” என்று பதறினார்.

“ஒன்றுக்கும் பயப்படாதீர்கள். சக்கரையின் அளவு அதிகமாக இருந்தது. அதுதான் வைத்தியர் அழைத்துவரச் சொன்னார்“

“நான் பயந்தே விட்டேன். கர்த்தருக்கு நன்றி. அவள் வீடு வரும்போது, நான் வீட்டினுள்ளே காத்திருக்கிறேன். கிழவிக்கு இன்ப அதிர்ச்சி கொடுப்போம்“ என்றார்.

நான் பூங்கொத்தை வாங்கி வீட்டு வாசலில் வைத்தேன். அவர் வாகனத்தை அருகில் உள்ள தெருவில் நிறுத்திவி்ட்டு கைத்தடியுடன் வந்துகொண்டிருந்தார். நடையில் காதலின் வேகமும் துடிப்பும் தெரிந்தது.

#அந்திமக்_கதைகள்

கம்பிப்பொம்மை விற்பவனின் ஜீவிதம்

யாத்திரை சென்றிருந்த நாளொன்றில், Borgos நகரத்தின் பழம்பெரும் தேவாலயத்தின் படிகளில் உட்கார்ந்திருந்தபடியே அயர்ந்துபோனேன். சூரியனை மேகங்கள் மறைத்திருக்க, காற்றில் வெப்பம் பரவியிருந்தது. யாரோ அழைப்பது கேட்டு விழித்தபோது எதிரே ஒருவர் நின்றிருந்தார். நடுத்தர வயது. அளவான உயரம், சுருட்டையான முடி, முகத்தில் தாடி, சில பற்கள் கறுப்பாக இருந்தன. கண்கள் மஞ்சளாக, மெலிந்த சற்றே வளைந்த உடல். கையில் கம்பியினால் செய்த சில உருவங்கள் சில இருந்தன. சுற்றுலாப் பயணிகளுக்கும் யாத்ரீகர்களுக்கும் கைவினைப் பொருட்களை விற்பனை செய்பவர் என்று ஊகிக்க முடிந்தது.


***

வாழ்வு தரும் மனிதர்களுக்கு அளவே இல்லை. இதுவரை பெரும்பாலும் நன்மையையே வாழ்வு தந்திருக்கிறது என்றுதான் நினைக்கிறேன். இருப்பினும் நன்மையும் தீமையும் கலந்ததல்லவா மனிதர்களும் வாழ்வும்?

எல்லோரையும் போன்று நானும் நன்மையாயும் தீமையாயும் இருந்திருக்கிறேன்,
சுயவிமர்சனத்தையும் அதன் நல்விளைவுகளையும் வளர்த்துக்கொள்ளும்போது ஆழ்செல்லும் வேர்போல் மனது நிமிர்ந்து உட்கார்ந்துவிடுவதால் வாழ்வின் மேடு பள்ளங்களை இலகுவாக எதிர்கொள்ள முடிகிறது.

இப்போதெல்லாம் வாழ்வு தரும் மனிதர்களை இழந்துவிடாதிருக்கவே மனது விரும்புகிறது. அதிகமாக மனிதர்களை நெருங்காமலும், நியாய அநியாயங்களுக்காக முட்டி மோதுதல், விவாதங்கள் மற்றும் எதிர்பார்ப்புகளைக் குறைத்துக்கொண்டாலே வாழ்வு தரும் மனிதர்கள் பல காலம் உங்களுடன் வருவார்கள் என்பது புரிந்திருக்கிறது. இவை புரியும்போது திரும்பப் பெற முடியாது இழந்தவை ஏராளம்.

காலத்தைப் பின்னோக்கிச் சுற்ற முடியுமா என்ன? கடந்தவற்றைப் பாடமாகக் கொள்ளலாம். அவ்வளவுதான்.

***

இப்படியான சிந்தனையுடன் யாத்திரைப் பயணத்தில் நடந்துகொண்டிருந்த நாளொன்றில் பெய்த பெரு மழை, ஊரைக் கழுவிவிட்டிருந்தது. Burgos நகரத்துப் பெருந்தேவாலயத்தின் படிகளில் முதுகுப்பையை இறக்கிவைத்தபோதே இனி இரண்டு நாட்களுக்கு நடக்க முடியாது என்பதை உணர்ந்திருந்தேன். முதல்நாள் ஆரம்பித்த கால்வலி இன்று வலி தாங்க முடியாதிருந்தது.

எனக்கு எங்கும் உறங்கும் கலை வசப்பட்டிருக்கிறது. சரீரத்தினை நீட்டிக்கொள்ள இடமிருந்தால் போதுமானது. அப்படி அத்தேவாலயத்தின் படிகளில் உறங்கிக் கிடந்தபோதுதான் அவர் என்னை எழுப்பி மிகச் சிறப்பான ஆங்கிலத்தில் ஆரம்பித்தார்.

“கைவினைப் பொருட்களை விற்றுக் கிடைக்கும் வருமானத்தில் வாழ்பவன். உனக்கான இப்போதே ஒரு யாத்திரிகனின் உருவத்தைக் கம்பியில் செய்து தருகிறேன்” என்றுவிட்டு எனது பதிலை எதிர்பார்க்காமலே கம்பியை எடுத்துக் குறட்டினால் வளைக்கத் தொடங்கினார். ஓரிரு நிமிடங்களில் அதை என்னிடத்தில் தந்தார். அதன் நேர்த்தியில் அசந்துபோனேன்.

“நான் இன்னும் 400க்கும் அதிகமாகக் கி. மீ. தூரம் நடக்கவேண்டியிருக்கிறது. இதனைப் பாதுகாத்து எடுத்துச் செல்வதற்கிடையில் இந்த உருவம் நெளிந்து சிதைந்துவிடும், மன்னியுங்கள்” என்றேன்.

“ஐ அண்டஸ்டான்ட்” என்றுவிட்டு அருகே இருந்த இன்னொருவரிடம் சென்றார். நான் மீண்டும் கண்களை மூடிக்கொண்டேன்.

பின் மதியம்போல், தங்குவதற்காக ஒரு மடத்தினைத் தேடிக்கொண்டிருந்தபோது மீண்டும் அவரைச் சந்திக்க நேர்ந்தது.

“தங்குவதற்கு இடம் தேடுகிறாயா? இன்று அனைத்து மடங்களும் நிறைந்துவிட்டன. 4 – 5 நட்சத்திர விடுதிகள்தான் இருக்கின்றன. வா அழைத்துப்போகிறேன்” என்றார்.

“நட்சத்திர விடுதிகளின் விலைகள் எனக்கு ஒவ்வாதவை. அங்கு தங்க குறைந்தது 150 யூரோக்களாவது தேவை. 150 யூரோக்களில் நான் குறைந்தது நான்கு நாட்கள் உண்டு, உறங்குவேன். எனவே நட்சத்திர விடுதி வேண்டாம்”

“இந்த நகரத்தை நான் நன்கு அறிவேன். இங்கு இன்று யாத்ரீகளுக்குரிய மடங்களில் இடமே இல்லை. என்ன செய்யப்போகிறாய்?”

“எனக்குக் கால் வலி உயிர்போகிறது. இரண்டு நாட்களுக்கு நடக்க முடியாது. எனவே அடுத்த நகரத்திற்கு பேரூந்தில் செல்லாம் என்று நினைக்கிறேன்”

நான் நொண்டி நொண்டி நடப்பதைக் கண்டவர் உரிமையாக “உனது முதுகுப் பையைத் தா” என்றார்.

எனது மனதுக்குள் இருந்த சாத்தான் விழித்துக்கொண்டு “சஞ்சயா, உன்னால் நடக்கவே முடியவில்லை. உனது முதுகுப் பையினுள் கடவுச்சீட்டு, பணம், வங்கி அட்டைகள், மருந்துகள், கணினி, உடைகள் என்று அனைத்தும் இருக்கிறன. இவனைப் பார்த்தால் நம்பிக்கை தரும் முகமாக இல்லை. இவன் உனது முதுகுப் பையுடன் ஓடினால் என்ன செய்வாய்?” என்றது.
சாத்தானின் கருத்து நியாயமாகத்தான் இருந்தது. ஆனால், வாழ்வில் என்னை எவரும், அப்படி இதுவரை ஏமாற்றவில்லை. நானும் யாரையும் ஏமாற்றி அபகரித்ததில்லை.

அன்றொருநாள் ஒரு சக யாத்ரீகருக்கு கால் வலித்தபோது நான் அவரது பொருட்களைக் காவியிருந்தேன். இப்போது எனக்குக் கால்வலி. யாரோ ஒருவர் எனக்கு உதவுகிறார். இது நன்மையின் சுழற்சி. “நீ அவரை நம்பலாம்” என்றது மனது.

எனது மனதை வாசித்தவர் போன்று “யோசிக்காதே, நான் ஓடமாட்டேன்” என்றபடியே என்னிடம் இருந்த முதுகுப் பையை உரிமையாக இழுத்து எடுத்தபடியே “வா, போகலாம்” என்றார்.

ஒரு மடத்திற்கு வந்து சேர்ந்தோம். அது யாத்ரீகர்ளால் நிரம்பி வழிந்து கொண்டிருந்தது. அப்போது, “Pablo உனது விற்பனையைப் பிறகு பார்க்கலாம். எங்கே போய்விட்டாய்? இரவு உணவு சமைக்க ஆரம்பிக்க வேண்டும்” என்றார் மடத்தின் உரிமையாளர்.

அவரிடம் சென்று என்னைக் காண்பித்து எதோ பேசினார். “மடத்தில் இடம் இல்லையே” என்றார் அவர். Pablo அவரது காதுக்குள் எதையோ குசு குசுத்தார். அவர் முகத்தைச் சுழித்தார். பின்பு சம்மதிப்பது போன்று தலையாட்டினார்.

மடத்தின் பின்புறமாக இருந்த பண்ணையிலிருந்த ஒரு குடிலின் நிலத்தில் படுக்க இடம் கிடைத்தது. “இதுதான் உனது இடம். நான் சமைக்க வேண்டும். இரவு உணவின் பின் சந்திப்போம்” என்று விட்டு மறைந்துபோனார்.

நான் குளித்து, ஓய்வெடுத்து, உறங்கி எழுந்தபோது நேரம் மாலை 19.00 மணியிருக்கும். உணவருந்த ஆயத்தங்களும், கிட்டார் இசையுடன் யாரே ஒருவர் பாடுவதும் கேட்டது. உணவு மேசையைச் சுற்றி யாத்ரீகர்கள் இருந்தார்கள். நானும் அங்கு சென்று உண்டபின், எனது படுக்கையில் சாய்ந்திருந்தபோது Pablo வந்தார்.

அருகே இருந்த ஒரு பெட்டியினுள் இருந்த சில உடைகளை எடுத்தபடியே “குளித்துவிட்டு வருகிறேன்” என்றபடி வெளியேறினார்.

அப்போதுதான் நான் அவரது அறைக்குள் இருப்பது புரிந்தது. மிகவும் சிறிய இடம். பழங்காலத்துச் சுவர். சாரளத்தின் ஒரு கண்ணாடியும் நிலத்தின் ஒரு பகுதியும் வெடித்துக் கிடக்க, கூரையில் சிலந்தி தனது கைவண்ணத்தைக் காண்பித்திருந்தது. சுவரில் தொங்கிய மங்கிய ஒரு புகைப்படத்தில் ஒருவர் கால்பந்துடன் 10ம் இலக்க மேலங்கியுடன் நின்றார். இன்னொரு புகைப்படத்தில் ரசிகர்கள் ஒருவரைத் தோளில் சுமந்து சென்றுகொண்டிருந்தார்கள். அவரது தனது கரங்களைத் தோளுக்கு மேலே தூக்கியிருந்தார். சுவரெங்கும் காற்பந்தாட்டப் படங்கள். பேலே, மரோடோனா, மற்றும் பெயர் தெரியாத வீரர்கள். மேசையில் சில பத்திரிகைகள், புத்தங்கள் இருந்தன. முள் கழன்று விழுந்த ஒரு மணிக்கூடு சுவரில் தொங்கிக்கொண்டிருந்தது.

***

1984ஆம் ஆண்டு ஒரு நாள், யாழ்ப்பாணத்திலிருந்து மட்டக்களப்புக்குச் புகையிரத்தில் செல்லும் வழியில், இலங்கையின் புகையிரதச் சந்திகளில் மிக முக்கியமான மாகோ சந்தியில் ஒரு இரவு தங்க நேர்ந்தது. அது வாழ்வில் மறக்க முடியாத இரவு. இராணுவ மற்றும் காவல்துறையின் கெடுபிடியிலிருந்து என்னையும் இன்னொரு தமிழரையும் காப்பாற்றி தனது வீட்டில் தங்க வைத்தார் ரயில் நிலையத்தின் கடைநிலைச் சிற்றூழியரான ஒரு சிங்களவர். ஏழ்மை நிறைந்த குடிசையில், அவரிடம் இருந்ததை எங்களுடன் பகிர்ந்துகொண்டார். தனது கிழிந்த பாயினை எனக்குத் தந்துவிட்டு நிலத்தில் சுருண்டு படுத்துக்கொண்டார் அவர். காலையில் தனது ரொட்டியை மூன்றாகப் பிரித்துத் தேனீருடன் தந்தார். ஏறத்தாழ 38 வருடங்களின் பின்பும் அன்றைய இரவு பசைபோல் மனதில் ஒட்டிக்கிடக்கிறது.

அப்படியானதொரு இரவு எனக்கு மீண்டும் கிடைக்கவிருக்கிறது என்பதை அப்போது நான் அறிந்திருக்கவில்லை.

***
Pablo குளித்துவிட்டு வந்தார். நான் கீழே படுத்திருந்தேன். தனது கரும் பச்சை நிறமான பழைய உறங்கும் பையினை எடுத்து எனக்கருகில் விரித்தார்.

மேசையின் கீழ் இருந்து ஒரு மதுப்போத்தலையும் இரண்டு கிண்ணங்களையும் எடுத்துவந்தார்.
“பச்ரான் குடிப்பாயா?” என்றவரை நான் ஏமாற்றவில்லை. பச்ரான் ஸ்பெயின் நாட்டின் பாரம்பர்யக் குடிவகைகளில் ஒன்று. இனிப்பான மதுரசம். சிவப்பு நிறமாக இருக்கும்.

“இது உங்களின் வீடா?”

“அதுபற்றிப் பின்பு பேசுவோம். “Buen camino” (உனது யாத்திரை சிறக்கட்டும்) என்றவாறே கிண்ணத்தை எடுத்து நீட்டினார். கிண்ணங்கள் கிளிங் என்றன.

“ஆம், தற்போது இதுதான் எனது வீடு” என்ற அவரது குரலில் ஏக்கத்தினை உணரமுடிந்தது. நான் எதுவும் பேசவில்லை.

“நான் இந்த மடத்தில் சமையலறையில் உதவிக்கு நிற்கிறேன். ஓய்வு நேரங்களில் கைவினைப் பொருட்களை விற்கிறேன்” என்றார்.

மழையும், முன்னிரவுக் குளிரும், காற்றும் திறந்திருந்த கதவினூடாக அறையை நிரப்பிக்கொண்டிருக்க நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். எப்போது தூங்கினேன் என்று தெரியவில்லை. காலையில் விழித்தபோது Pablo ஐக் காணவில்லை.

அன்று நான் அதிகம் நடக்கவில்லை. காலையுணவின் பின் நகரத்திற்குச் சென்று வீதியோரக் கடையொன்றிற்கு வெளியே உட்கார்ந்திருந்து தேநீரருந்திக்கொண்டிருந்தபோது, பெருந் தேவாலயத்தின் மணி 10 முறை ஒலித்தோய்ந்தது. அவர் தேவாலயப் பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்குத் தனது கைவினைப் பொருட்களை விற்றுக்கொண்டிருப்பதைக் கண்டேன்.

அன்றும், இரவு உணவின் பின், மடத்தில் உணவின் பின்னான கொண்டாட்டங்கள் ஆரம்பித்திருந்தன. மனம் அதில் லயிக்கவில்லை. அவரது அறைக்கு வெளியே, ஒரு மரக்குற்றியில் உட்கார்ந்திருந்தபடியே பச்ரான் பானத்துடன் உரையாடிக்கொண்டிருந்தோம்.

சுவரில் தொங்கிய படங்களைப் பற்றிக் கேட்டேன். The Shawshank Redemption திரைப்படத்தில் சுவரில் ஒட்டியிருக்கும் ஒரு படத்தின் பின்னால் பெருங்கதை ஒளிந்திருக்கும் இருக்கும் அல்லவா, அதுபோன்றதொரு பெருங் கதை அந்தக் கால்பந்தாட்ட வீரனின் படத்தின் பின்னால் இருந்தது.

“நான் எனது இளமைக் காலத்தில், ஏறத்தாழ இருபது வருடங்களுக்கு முன் சிறந்த கால்பந்தாட்ட வீரனாக இருந்தேன். அக்காலத்தில் பெரும் சம்பளத்தில் இரண்டாம் நிலை கழகத்தில் முன்னணி வீரனாக விளையாடியபோது சிறந்த எதிர்காலம் உண்டு என்று கருதப்பட்ட விளையாட்டு வீரன். முதல் நிலை கழகங்கள் என்மீது கவனம் செலுத்தியிருந்த காலம். தேவையான அளவு பணம், ஊருக்குள் புகழ், வரிசையில் பேரழகிகள், பெற்றோர், சகோதரிகள் என மகிழ்வான வாழ்வு எனக்கு அமைந்திருந்தது.

எனது கழகம் இரண்டாவது லீகாவில், முன்னணி வகித்தபோது ஒரு முக்கிய போட்டியினை இறுதி நிமிடத்தில் 3-2 என்ற ரீதியில் அடித்து வென்றோம் என்று விட்டு “யார் அந்தக் கோலினை அடித்திருப்பார் என்று நினைக்கிறாய்?” என்றார்.

“நீங்களா?”

“ஆம், அது நான் பெற்ற பெருவெற்றி. ஊரே என்னைத் தலையில் வைத்துக் கொண்டாடியது. அன்றிரவு நரகமெங்கும் என்னைத் தோளில் சுமந்து சென்றார்கள்.

அளவுகடந்த உற்சாகத்தில் நண்பர்களுடன் விளையாட்டாக ஆரம்பித்த போதைப் பொருள் பாவனையும் மதுப் பாவனையும் ஆறு மாதத்தினுள் என்னை உள்ளிழுத்துக்கொண்டது.
இருந்தாலும் சிறப்பாகவே விளையாடினேன். அந்நாட்களில் நான் மிகச் சிறந்த விளையாட்டு வீரன் என்ற ஆணவமும் கர்வமும் இருந்தது. வயது அப்படியல்லவா? விளையாட்டு மங்கத்தொடங்கிய ஒரு நாள், எனது பயிற்சியாளர் “உனது விளையாட்டு மங்கிப்போகிறது. விளையாட்டின் தரத்தில் கவனம் செலுத்து” என்ற ஆரம்பித்த உரையாடல் தர்க்கமாகி, கைகலப்பில் முடிந்தபோது அணியிலிருந்து விலக்கப்பட்டேன்.

போதையின் உச்சம் அனைத்தையும் இழக்கவைத்தது. பெற்றோரும் குடும்பத்தினரும் கூட என்னைத் திருத்த முடியாது என்று ஒதுக்கிக்கொண்டனர்.

கையிலிருந்த பணமும் சொத்துக்களும் கரைந்தபின், போதைப்பொருள் கொள்வனவிற்காகச் சிறு சிறு குற்றச்செயல்களில் ஈடுபட நேர்ந்தது. போதைப்பொருட்கள் விற்றேன். வாழ்வு புரண்டு, 15-16 வருடங்கள் போதைப்பொருட்களுக்கு அடிமையான நிலையில் உருக்குலைந்து போனது. இரண்டுமுறை சிறைக்கும் சென்று வந்தேன்”.

மெதுவாகத் தூறிக்கொண்டிருந்த மழை பெரிதாகக் கொட்டத்தொடங்கியது. கொடியில் தொங்கிக்கொண்டிருந்த தனது உடைகளை உள்ளே எடுத்து வந்தார்.

இருவரும் உள்ளே வந்து சுவரில் சாய்ந்து கொண்டோம். “எனக்குக் குளிர்கிறது” என்றபடி நான் எனது உறங்கும் பையினுள் எனது கால்களைப் புகுத்திக் கொண்டேன். அவர் அன்றும் இரண்டு கிண்ணங்களை ‘பச்ரான்’ பானத்தால் நிரப்பினார்.

அவருக்குப் பேச வேண்டும் என்று மனம் உந்தியிருக்க வேண்டும். தன்னை மறந்து கதை சொல்லிக்கொண்டிருந்தார்.

“சமூகத்தின் கடை நிலை மனிதனாக வாழ்ந்திருந்த ஒரு நாள், Borgos பெருந்தேவாலயத்திற்கு வந்த ஒரு யாத்திரிகரிடம் யாசகம் கேட்டேன். அவரோ என்னைச் சிறப்பானதொரு உணவகத்தினுள் அழைத்துச் சென்று உபசரித்தபடி “வாருங்கள் இணைந்து நடப்போம், உணவுக்கும் தங்குமிடத்திற்கும் நான் பொறுப்பு”” என்று அழைத்தார் என்றுவிட்டு நிறுத்தினார்.

***

நான் எனது கடந்த காலத்தினை நினைத்துக்கொண்டேன். வாழ்வு எப்போது யாரை உங்களிடம் அனுப்பும் என்பது புரியாத புதிர் அல்லவா? இருட்டில் வழிதெரியாது தடுமாறும் ஒரு பொழுதில், மின்னலடித்தால் தொலைவில் இருக்கும் வழி தெரிந்து மறைவதில்லையா? அப்படி, நான் வாழ்வின் அயர்ச்சியில் மூர்ச்சையடைந்த பொழுதுகளில் காலம் சில முன்பின் அறியாத பேரன்பான மனிதர்களை என்னிடம் அனுப்பி அவர்கள் மூலமாக மூர்ச்சை தெளிவித்திருக்கிறது. அது போன்று, Pabloக்கும் அந்த மனிதர் வெளிச்சத்தினைக் காண்பித்திருக்கிறார்.

***

அவர் தனது கிண்ணத்தையும் எனது கிண்ணத்தையும் மீண்டும் நிரப்பினார். நான் எதுவும் பேசவில்லை. இப்படியான பொழுதுகளில் மறையவர்களைப் பேச விட வேண்டும் என்று காலம் கற்பித்திருக்கிறது.
“அவருடன் நடந்த முதலாவது நாள், என்னால் 10 கி. மீ ஏனும் நடக்க முடியவில்லை. என்னை அழைத்தவர் அதுபற்றிக் கவலைப்படவே இல்லை. “உன்னால் முடிந்தளவு நடப்போம்” என்றார். ஒரு வாரத்தின் பின் சற்று முன்னேற்றம் கண்டேன். ஒரு மாதம் அவருடன் இணைந்து நடந்தபின் போதைப் பழக்கம் ஓரளவுக்குக் கட்டுப்பாட்டுக்குள் வரத்தொடங்கியது. அந்த மனிதர் Santiago de Compostela நகரத்திலும், தேவாலயத்திலும் ஒரு மாதம் தங்கியிருக்க உதவிவிட்டுச் சென்றார்.

அங்கு ஒரு சமூக நிறுவனத்தின் உதவியுடன் போதைப்பொருள் பாவனையிலிருந்து விடுபட மருத்துவ உதவி கிடைத்து 6 மாதங்கள் சிகிச்சைபெற்று நலமான பொழுதில் குடும்பத்தையும் காதலியையும் சந்திக்க மனது உந்தியது. ஊருக்குச் சென்றேன்” என்று விட்டு நிறுத்தினார். குரல் நெகிழ்ந்து தழதழத்தது.

“பெற்றோர்கள் இறந்து சில ஆண்டுகள் ஆகியிருந்தன. உடன் பிறந்தவர்கள் சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்த்தில் இருந்தார்கள். அவர்கள் என்னைக் கண்டுகொள்ளவோ, தோளணைக்கவோ விரும்பவில்லை. காதலி தனித்து வாழ்வது அறிந்து அவரிடம் சென்றபோது அவரும் என்னை நண்பனாகவேனும் ஏற்றுக்கொள்ள மறுத்தார்.

எனது நகரத்தினரும் நண்பர்களும்கூட எனது கடந்தகாலத்தை மன்னிக்கத் தயாராக இல்லை. திருடன், போதைப்பொருள் பாவனையாளன் என்பவையே நிலைத்துவிட்டிருந்தன. வலிமிகுந்த வார்த்தைகளைப் பெற்றுக்கொண்டு இந்த நகரத்திற்கு வந்தேன்.

வாழ்வில் திருந்தி வருபவர்களைச் சமூகம் ஏற்பதில்லை. மனிதர்களிடத்தில் நம்பிக்கையை இழந்துவிட்டால் அதைப் மீளப்பெற்றுக்கொள்வது இலகு அல்ல. இதைக் கற்றுக்கொண்டபோது வாழ்வு ஏறத்தாள முடிந்துவிட்டிருக்கிறது. இப்போது, தனியே, இந்த மடத்தின் உரிமையாளரின் தயவில் வாழ்கிறேன். உணவும், தங்குவதற்கு இடமும் கிடைக்கிறது. அதற்குப் பிரதியுபகாரமாய் இங்கு வேலை செய்கிறேன். போதைப்பொருள் பழக்கம் இப்போது இல்லை. இருந்தாலும் வாழ்வு தனிமையிலும் வெறுமையிலும் கழிந்துகொண்டிருக்கிறது. மிகவும் வலியான வாழ்வு” என்ற போது கண்ணீர் வழிந்தது.

***

நானும் எனது வாழ்வில், சினத்தினால் பலரையும் இழந்திருக்கிறேன். அவர் சொன்னது உண்மைதான். கசங்கிய தாளைப் போன்றது இழந்த நம்பிக்கை. அதனை மடிப்புக்களின்றி நிமிர்த்துவதென்பது முடியாத காரியம். மன்னிக்கத் தெரிந்த மகத்தான மனமுள்ளவர்கள் மட்டுமே தவறு செய்தவர்களை முழுவதுவமாக மன்னித்து ஏற்றுக்கொள்கிறார்கள்.

***

என்னால் எதையும் பேச முடியவில்லை. கிண்ணத்தில் பச்ரான் பானத்தை ஊற்றி நீட்டி “Pablo, நீங்கள் அற்புதமானவர். உங்களிடம் எதுவுவே இல்லாதபோதும் எனக்கு உங்களின் இடத்தையும் நேரத்தையும் அன்பையும் தந்திருக்கிறீர்கள் அல்லவா? என்னை அழைத்து வந்து உங்களின் மேளாளரிடம் கெஞ்சி, இடம் எடுத்துத் தரவேண்டிய அவசியம் என்ன? உங்களுக்கும் எனக்குமான தொடர்புதான் என்ன? ஏன் இப்படி நீங்கள் செய்ய வேண்டும்? சகமனிதனை எதிர்பார்ப்பும் பிரதியுபகாரமும் இன்றி அரவணைக்கும் எவரையும் வாழ்வு ஒருபோதும் கைவிடுவதில்லை. வாழ்வு உங்களிடம் மீண்டும் வரும்.

உங்களைப் போலவே வாழ்விற்குப் பெருவிலை கொடுத்தவன் நான். உங்களை முழுவதுமாகப் புரிய முடிகிறது. சுயவிமர்சனத்தினூடாக உணர்ந்தும் என்னை மாற்றிக் கொண்ட பின்னும் எனது நண்பர்கள் என்னை ஏற்றுக்கொள்ளவில்லை. மன்னிப்பு கேட்டு அழுது கெஞ்சிய பொழுதில் அதை உதாசீனம் செய்தவர்களும் இருக்கிறார்கள். பேச மறுத்தவர்களும் மறுப்பவர்களும் உண்டு.

கடந்தவை கடந்தவையே. ஆனால், காயங்களுக்குக் காலத்தைப்போன்றதொரு களிம்பு வேறு எதுவும் இல்லையல்லவா? அது ரணங்களை ஆற்றும். சில ஆண்டுகள் கடந்துவிட்ட இப்போது காலம் என்னைத் தனது தோளில் தூக்கிப் போகிறதுபோல் உணர்கிறேன். ஆனால் தனித்திருப்பதான உணர்வு மிகவும் பாதிக்கிறது. நீங்கள் சொல்லும் தனிமையை வென்று கொள்ளவே நான் இந்த யாத்திரையை ஆரம்பித்தேன்.

வாழ்வில் எதுவும் நிரந்தரம் என்று எதுவும் இல்லை? தனியே இருப்பவர்களுக்கே வாழ்வினை மீட்டுக்கொள்வதற்குப் பெரும் சக்தி தேவைப்படுகிறது. சக மனிதர்களிடத்தில் நேசமும் அன்பும் இருந்தால் வாழ்வு தானாகவே சிறக்கும். உங்களிடத்தில் அது நிறையவே இருக்கிறது. அதைவிட,15 வருட போதைப் பழக்கத்தை விட்டொழிப்ப்பதற்கான திடமான மனமும் உங்களிடம் இருக்கிறது. உங்கள் வாழ்வு நிச்சயம் சிறக்கும், சியேர்ஸ்” என்றபடி கிண்ணத்தை உயர்த்தினேன்.

எழுந்துவந்து தோளணைத்துக்கொண்டார். நெஞ்சு விம்முவதை உணர்ந்தேன். நானும் நெகிழ்ந்திருந்தேன், கண்கள் கலங்கின.

***

நான் பேசுவதற்கேனும் எவரும் இல்லாது அல்லாடிய நாட்களும், சந்திப்பவர் யாராகினும் என்னுடன் உரையாடமாட்டார்களா என்று எதிர்பார்த்து ஏங்கி அலைந்த நாட்களும், தோளணைக்க எவருமின்றி தனித்திருந்த நாட்களும் நினைவிற்கு வந்தன. நான் அவரை இறுக அணைத்துக்கொண்டேன். வார்த்தைகள் இல்லாத மொழியில் பேசிக்கொண்டோம்.

அன்று, கனவுகள் அற்ற ஆழ்ந்த தூக்கம் வாய்த்தது. மறுநாள் நான் விழித்துக்கொண்டபோது அவர் இல்லை. எனது முதுகுப்பையின் மேல் பலகையால் ஆன ஒரு சிறு பெட்டி இருந்தது. எடுத்துத் திறந்து பார்த்தேன்.

அதனுள் கம்பியினால் செய்யப்பட்ட ஒரு யாத்ரீகனின் உருவம் இருந்தது.

#Camino_Sanjayan
#Santiago_de_Compostela

காலம் என்னும் பெரு வலையின் இழைகள்

வாழ்வு பல நகரங்களுக்குள் என்னை அழைத்துப்போய் ”வாழ்ந்து பார்” என்றிருக்கிறது. வாழ்ந்துமிருக்கிறேன். கெட்டுமிருக்கிறேன். அவற்றுள் முக்கியமானது ஒஸ்லோ.

பெரும் மனப்பாரத்துடன், இற்றைக்கு 14 வருடங்களுக்கு முன், இரண்டாம் முறையாக இந்நகரத்தினுள் குடிவந்தபோது, தங்குவதற்கு இடமிருக்கவில்லை, நிலக்கீழ் வாகனத்தரிப்பிடத்தில், ஒரு பழைய வாகனத்தினுள் சில காலங்களைக் கடந்துகொண்டேன். வேலைநேரத்தில் குளித்துக்கொள்வேன். கடைகளிலே உணவு. இருகரங்களையும் நீட்டி என்னை அணைத்துக்கொண்டது இந்நகரம்.

நண்பர்களைத் தேடிப்போக விரும்பாத மன அழுத்தம் நிறைந்த காலம் அது. அதன்பின் மெது மெதுவாக வேரூன்றி எழுந்து, நிமிர்ந்து சிலகாலங்களின்பின், மீளவும் விழுந்து, அடியுடன் சாய்ந்து, தற்போது மீளவும் உயிர்த்துக்கொண்டிருக்கிறேன்.

முன்பைப் போலல்லாமல், பல விடயங்களில் இருந்து ஒதுங்கியிருப்பதால், மனம் அமைதியாகவும் ஆறுதலாகவும் இருப்பதுபோலவும், வாழ்வு என்னைத் தன்தோளில் தூக்கிப்போகிறதுபோலவும் உணர்கிறேன்.

1989 ஆண்டுக் காலத்திலும் ஐந்து ஆண்டுகள் இங்கு குடியிருந்திருக்கிறேன். நான் நண்பர்கள் புடைசூழ அலையும் மனிதனல்லன். தன்னந்தனியே அலையும் பிரகிருதி. அன்றும் இன்றும்.

நகரின் மத்திய பகுதி, புறநகர்கள், வெளிநாட்டவர் செறிந்துவாழும் பகுதிகள், சமூகத்தின் கடைநிலை மனிதர்களான போதைப்பொருள் நுகர்வாளர்கள், பால்வினைத்தொழில் புரிபவர்கள், வதிவிட அனுமதியுற்றவர்களின் இரகசியச் சந்திப்பிடங்கள், திருட்டுப்பொருட்கள் விற்பனை செய்யுமிடங்கள், செல்வச் செழிப்புள்ள பகுதிகள், நூதனச்சாலைகள், பிரபல்யமான உணவகங்கள், புராதனக் கட்டடங்கள், வாசிகசாலைகள், கலையங்கள், கண்காட்சி நிலையங்கள், பூங்காக்கள் என நகரின் அனைத்து இடங்களும் பெரும்பாலும் எனக்குப் பரீட்சயமானவை.

நன்மையாகவும் தீமையாகவும் நகரின் அனைத்து இடங்களிலும் அவைபற்றிய ஒரு சிறு நினைவாவது மனதின் ஆழத்தில் உறங்கிக்கொண்டிருக்கும். அவ்விடங்களைக் கடந்துசெல்லும்போது அவை உயிர்பெறுவதுண்டு.

***

முதன் முதலில், எனது இளைய மகளை இந்நகருக்கு அழைத்து வந்தபோது, அவளுக்கு 3 - 4 வயதிருக்கும். Disney on ice பார்ப்பதற்காக 600 கி. மீ . கடந்து வந்திருந்தோம். அப்போதுதான் முதன் முதலாக நிலக்கீழ் தொடரூந்தையும், வீதியின் நடுவே தண்டவாளத்தில் ஓடும் ட்ராம்ப் வண்டியையும் கண்டாள். பெருவீதிகளில் ராட்சத அட்டைகள்போல் ஏதோ நகர்வது அவளுக்கு அதிசயமாக இருந்திருக்கவேண்டும். அதில் பயணிக்க வேண்டும் என்றாள். அவளுக்காகவே ஒரு மாலை முழுவதும் ட்ராம் வண்டியில் ஏறி, இறங்கி, நிலக்கீழ் தொடரூந்தில் நீண்ட தூரம் பயணித்துக்கொண்டிருந்தோம். ஐன்னலோரங்களில் உட்கார்ந்திருந்தபடியே கண்களில் பெருங் கனவுடன் எனது கைகளைப்பற்றியபடி வந்துகொண்டிருந்தாள்.

அவள் அயர்ச்சியுற்று, சற்று நேரம் பயணிகளின் வாங்கு ஒன்றில் காலைநீட்டி எனது மடியில் உறங்கிப்போனாள். நான் அவளின் கேசத்தினை கோதியபடி ஆழ்ந்த அவளின் உறக்கத்தினை ரசித்துக்கொண்டிருந்தேன்.

18 ஆண்டுகளின் பின் இன்றும், பயணிகள் ஓய்வெடுக்கும் ”அந்த வாங்கு”, நகரின் மத்திய நிலக்கீழ் தொடரூந்து நிலையத்தில் இருக்கிறது. தினமும் வேலைக்கு அதனைக் கடந்துசெல்லும்போது... மகளின் வாசனையை உணர்வேன்.

***

இதேபோன்று பல வேதனையான, அவமானப்பட்ட நிகழ்வுகள் நடந்த இடங்களும் இந்த நகரத்தில் உண்டு. நகரமும் போதிமரங்களாகலாம் எனக் கற்றுக்கொண்டது இங்குதான்.

இந்நகரத்தில் ஓர் அரசனின் பெயரைக்கொண்ட, நீண்டதொரு வீதியிருக்கிறது. நகரத்தின் மத்தியிலுள்ள புகையிரத நிலையத்தில் தொடங்கி அரசனின் மாளிகையில் முடிவடையும் அது.

நான் துன்புற்றிருக்கும்போதும், மகிழ்வுடன் இருக்கும்போதும் அவ்வீதியில் நடந்துகொண்டிருப்பேன். தோழனைப்போன்று மனநிலைக்கு ஏற்ப என்னுடன் துணைநிற்கும் பெருவீதி அது. அவ்வீதியைப் பற்றிச் சொல்வதற்கு அத்தனை இருக்கிறது.

***

சில நாட்களுக்கு முன் கடும் மழை. நகரத்தின் மத்தியில் ஒரு நிகழ்வில் கலந்துகொள்ளவேண்டியுமிருந்தது. நண்பர் ஒருவரும் தன்னைச் சந்திக்குமாறு கேட்டுக்கொண்டிருந்தார்.

நகரின் கிழக்கே, நண்பரைச் சந்தித்துவிட்டு நடந்து வந்துகொண்டிருக்கிறேன், காற்றின் வேகத்தில் குடை உடைந்துபோனது, வானம் உடைந்துவிட்டதுபோன்று மழை கொட்டியது. அருகிருந்த கட்டத்தினுள் கால்கள் என்னை இழுத்துப் போயின. வாசல் திறந்தேயிருந்தது, பழக்கமான இடமாயிற்றே என்று மனம் முணுமுணுத்தபோது, நிமிர்ந்து சுற்றாடலைப் பார்த்தேன்.

***

1980களின் இறுதி, புகைப்படமெடுப்பது எனது முக்கிய பொழுதுபோக்காக இருந்த காலம். ஒஸ்லோவில் பழமைவாய்ந்ததொரு ”புகைப்பட ஆர்வலர்களுக்கான சங்கம்” உண்டு. அங்கு அங்கத்தவனாக இருந்து கற்றதும் பெற்றதும் ஏராளம். வாரத்தில் பல நாட்கள் அங்கு செல்வேன். பயிற்சிப்பட்டறைகள், கருத்தரங்குகள், புகைப்படப் போட்டிகள், தொழில்நுட்ப அறைகள் என பல வசதிகள் அங்கிருந்தன.

ஒரு நாள், நகரத்தின் அடையாளம் என்ற தலைப்பில் படம் எடுத்து வரச்சொன்னார்கள். நண்பர்கள் இருவருடன் இணைந்து இதுபற்றி இயங்கிக்கொண்டிருந்தோம்.

ஒரு வாரமாயிற்று. திருப்தியாக எதுவும் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவர் நினைவில் வந்தார்.

வீதியில் அலையும், அழுக்கான, நல்வாசனையற்ற வயதான பெண்மணி. குப்பைகளுக்குள் இருக்கும் பெறுமதியான பொருட்களையும் போத்தல்களையும் சேகரிப்பது, யாசகம் கேட்பது, நகரத்தினுள் தனது தள்ளு வண்டிலுடன் அலைவது, தேவாலயத்திற்குச் செல்வது, தீடீர் திடீர் என்று வடக்கு நோர்வேயின் மொழியாடலில் தூசணத்தில் திட்டுவது மறுநிமிடம் கர்த்தரை நோக்கிப் பாடுவது என்று வாழ்வைக் கடத்திக்கொண்டிருந்தவர் அவர். சற்று மனசமநிலை குழம்பியவர்.

தான் சேகரித்துக்கொள்ளும் பணத்தில் யாசகம் செய்பவர்களுக்கு உணவு வழங்குவார். இராமாயணத்தில் வரும் கூனிபோன்று வளைந்த முள்ளந்ததண்டு. பெயர் Aagot Hanshaugen. பல முறை வீதியில் நின்றபடி உரையாடியிருக்கிறோம். எனவே, சற்றுப்பழக்கம் இருந்தது. நகருக்குள் அவர் பிரசித்தமானவர்.அனைவரும் அவரைஅறிவர்.

நண்பர்களிடம் அவரைப்பற்றிச் சொன்னேன். சம்மதித்தார்கள். அவரைத் தேடிப்பிடிக்க இரண்டு நாட்களாயிற்று. தேநீரகத்தில் இருத்தி விடயத்தைச் சொன்னோம். "உணவும், சற்றுபணமும் வேண்டும். எத்தனை படம்வேண்டுமாலும் எடுங்கள்" என்றார்.

வீதிச் சூழ்நிலைகளில் அவரைப் படம் எடுத்தோம். அவரது வீட்டுக்கு அழைத்துப்போக மறுத்துவிட்டார். மறுநாளும் படங்கள் எடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டபோது, ஒரு குறிப்பிட்ட இடத்தைச் செல்லி, ”அங்கே நில்லுங்கள் வருவேன்” என்று கூறிவிட்டு விடைபெற்றார்.

மறுநாள், அவர் குறிப்பிட்ட இடத்தில் நின்றிருந்தேன். தூரத்தே அவர் தனது கூனிய முதுகுடன் மெதுவாக வந்துகொண்டிருந்தார். இரண்டு கைகளிலும் குப்பைகளில் பொறுக்கிய பொருட்கள்.

அருகில் இருந்த பூக்கடைக்கு வெளியே தனது பைகளை வைத்துவிட்டு உட்சென்றார். யாசகம் எடுக்கிறாராக்கும்... என்று நினைத்தேன். கையில் அழகிய பூங்கொத்துடன் வெளியே வந்தார்.

எனக்குள் ”யாருக்கு இந்தப் பூக்கள்?” என்ற ஆர்வம் வந்திருந்தது. எனவே, மறைந்து நின்று அவதானிக்கலானேன்.

***

வடக்கு நோர்வேயை பிறப்பிடமாகக்கொண்டு 24. september 1919இல் பிறந்த இவருக்கு எட்டுச் சகோதர, சகோதரிகள் இருந்தனர். இரண்டாம் உலக மகா யுத்தத்தின்போது சுவீடனுக்கு இடம்பெயர்ந்து, ஒரு வீட்டில் வேலைக்காரியாக தொழில் புரிந்த அந்நாட்களிலேயே மன அழுத்தங்களினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். சுவீடனில் அவர் வேலைசெய்த வீடு எரிந்துபோனபோது, அனைத்தையும் இழந்து மேலும் மனஅழுத்தத்திற்கு உட்பட்டு நோயாளியாகினாராம்.

பின்பு, வடக்கு நோர்வேயில் Bodø என்னும் இடத்திலும் Oslo விலும் மனநல மருத்துவமனைகளில் இவருக்குச் சிகிச்சை அளித்திருக்கிறார்கள். இந்நாட்களில் இவரது நோயினைக் கட்டுப்படுத்த, நினைவுகளை அகற்றும் Lobotomy சத்திர சிகிச்சை நடைபெற்றதாம். பிற்காலத்தில் இச்சத்திரசிகிச்சைமுறை நடாளவிய ரீதியில் தடைசெய்யப்பட்டபோது, இவருக்கு அரசு நட்ட ஈடும் வழங்கியது.

இவர் திருமணம் செய்திருந்தார் என்று ஒரு இணையைத்தளத்தில் வாசித்தேன். பிற்காலத்தில் வயோதிபர்களைப் பராமரிக்கும் இடத்தில் சுத்திகரிப்புத் தொழில் செய்துவந்தாராம்.

***

அவர் நான் நின்றிருந்த இடத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். நான் மறைந்துகொண்டேன்.

அவர் வந்த வழியில் ஒருவர் விழுந்து கிடந்தார். போதைப்பொருள் பாவனையாளராக இருக்கலாம். அவரருகே சென்று உரையாடுகிறார். தனது கையில் இருந்த உணவினையும் ஒரு பிஸ்கட் பெட்டியையும் அவருக்குக் கொடுத்துவிட்டு, வீதியைக் கடந்து செல்லத் தயாராகியபோது, வாகனங்கள் அவருக்கு வழிவிட்டன. கையைத் தூக்கி நன்றியறிவித்தார். உரத்து கிறீஸ்தவப் பாடலைப் பாடியபடி... வீதியைக் கடந்து, அருகே இருந்த தேவாலயத்தினுள் புகுந்தார்.

எனது நண்பர்களைக் காணவில்லையாதலால் நான் அங்கு நின்றிருந்தேன். சற்று நேரத்தில் நண்பர்கள் வந்தார்கள். காத்திருந்தோம்.

தேவாலத்தில் இருந்து வெளியே வந்து எம்மை உள்ளே அழைத்துச்சென்றார்.

மிகப் பழமைவாய்ந்த 1869ஆம் ஆண்டு கட்டப்பட்ட தேவாலயம் அது. பழங்காலத்து தேவாலயங்களுக்கு இருக்கும் தெய்வீக உணர்வும் வாசனையும் பேரமைதியும் அங்கிருக்க, ”வாருங்கள் வாருங்கள்” என்று எம்மை உள்ளழைத்துச்சென்ற அவர் குரல் தேவாலத்தினுள் எதிரொலித்தது.

முதலாவது வாங்கில் எம்மை இருத்திவிட்டு, தேவாலயத்தினுள் மெழுகுதிரிகளை ஏற்றினார். முழந்தாளிட்டு செபித்தார். எடுத்துவந்த பூக்களை உதிர்த்து சிலுவையின் காலடியில் பரப்பிவிட்டு உருக்கமான குரலில் தேவாரம் ஒன்றைப் பாடினார்.

அவரது உருக்கமான குரல் தேவாலயமெங்கும் பரவிற்று. ‘

***

அவரைப்பற்றிய எமது புகைப்படங்களை ஒரு பத்திரிகை நடுப்பக்கம் முழுவதிலும் பிரசுரித்திருந்தது. எமக்கு பலத்த பாராட்டும் கிடைத்தது.

இப்பத்தியை எழுதிவிட்டு இணையத்தில் அவரைப்பற்றி என்ன எழுதப்பட்டிருக்கிறது என்று தேடினேன்.

Kårvikhamn என்பவர் 13. September 2019 அன்று தனது முகப்புத்தகத்தில் இவ்வாறு எழுதியிருந்தார்:

***

1990இல் ஒரு நாள், ஒஸ்லோவின் பழைய விமானநிலையத்தில் Wien நகருக்குச் செல்வதற்காய் காத்திருந்தேன். ஒரு வயதான பெண் அனைவரிடமும் யாசகம் பெற்றுக்கொண்டிருந்தார்.

என்னிடமும் வருவார். ஏன் யாசகம் செய்யமாட்டேன்? என்பதற்கான வாதங்களை மனது தயார்படுத்தியிருந்தது. அங்கிருந்த அனைவரும் வசதிபடைத்தவர்கள். எவரும் அவருக்குப் யாசகம் போடவில்லை. என்னிடம் வந்தார். நானும் யாசகம் போடவில்லை.

என்னைக் கடந்துபோனபோது ”நீயும் உன்னை கிறீஸ்தவன் என்கிறாய்?” என்றுவிட்டுக் கடந்துபோனார்.

அவரது வார்த்தைகளை உள்வாங்கிப் புரிந்துகொள்ள எனக்கு நேரம் எடுத்தது.

யாசகம் கேட்பது என்பது, நான் என்னிடம் இருப்பதை பகிர்வதற்கான சந்தர்ப்பம் என்பதைப் புரிய ஆரம்பித்தேன். தவிர, இன்னொருவரது வாழ்வினை முன்அபிப்பிராயங்களுடன் அணுகுவது தவறு என்பதும், வாழ்வு எனக்குத் தந்திருக்கும் வசதிகளைக் கடைநிலை மனிதர்களுடனாவது பகிர மறுப்பது, நான் எத்தனை மனவறுமையைக் கொண்டிருக்கிறேன் என்பதைக் காட்டுகிறது என்பது புரிந்தது என்றும் Aagot அவர்கள் 31. october 2003 இல் இறந்துபோனார் என்றும் அவர் எழுதியிருந்தார்.

***

தனது வறுமையிலும் நோய்மையிலும் சக மனிதனையும், மற்றையவரது வலிகளைத் தனதாகவும் உணர்ந்த பெரு மனம் கொண்ட மனிதர் Aagot Hanshaugen. வறுமையிலும், அன்பு என்பதே கிறீஸ்தவத்தின் அடிப்படைத் தத்துவம் என்பதைப் புரிந்தவர். அதன்படி வாழ்ந்தவர்.

1992ஆம் ஆண்டு நான் ஒஸ்லோவைவிட்டு இடம்பெயர்ந்தேன். வாழ்வு என்னும் பெருங்காற்றில் Aagotஐ நினைவுகள் அகன்றுவிட்டிருந்தன.

***

வானமுடைந்து கொட்டிய பெருமழை, ஏறத்தாழ 31 வருடங்களின்பின், அவரைச் சந்தித்த அதே தேவாலயத்தினுள் என்னை ஒதுங்க வைத்திருக்கிறதே, ஏன்?

---
உள்ளம் இதழிலும், இணைய சஞ்சிகையிலும் வெளிவந்த பத்தி.

https://ullamm.com/

பேரன்பின் சுவை

1980களில் ஏறாவூரில் வாழ்ந்திருந்த காலத்தில் எமது சாம்ராஜ்யமாகச் செங்கலடி இருந்தது. எங்கள் பதின்மக் காலத்தின் காதல் மற்றும் வீரபராக்கிரமக் கதைகளும் இந்த ஊர்களைச் சேர்ந்தவைதான்.


இக்காலத்தில் ஆங்கிலத்தில் buddies என்பதற்கு உதாரணமாகக் கூறப்படுவது போன்று எனக்கு ஒரு நண்பன் இருக்கிறான். பதினொரு குழந்தைகள் கொண்டது அவர்களது வீடு.

காலையில் சென்று, கிடந்து, விளையாடி, மாலை வருவேன். பல நாட்கள் அங்கு தூங்கி எழுந்து வந்ததும் உண்டு. அம்மாவுக்கும் எங்கு நிற்பேன் என்று தெரிந்திருப்பதால் கவலைப்படமாட்டார். அவர்கள் வீட்டில் நான் ஒரு மகன். எனது அம்மாவுக்கு அவர்கள் வீட்டில் 11 குழந்தைகள். நெருக்கமான குடும்ப உறவு.

நண்பனின் தாயார் காலையில் குளித்து, சாமியறையில் மணியடித்துக் கும்பிட்டு, திருநீறு தரித்து , சந்தனப் பொட்டின் கீழ் குங்கும் இட்ட பின்பே வேலைகளைத் தொடங்குவார். அங்கு தங்கியிருக்கும் நாட்களில் அந்த மணிச் சத்தத்தில் கலையும் எங்கள் துயில்.

அவரது காலைத் தேநீரின் சுவை இன்னும் ஆழ்மனதில் ஒட்டிக்கிடக்கிறது. “சஞ்சயன் இஞ்சித் தேத்தண்ணி போடவா?” என்றபடி, இதமான குடிக்கத் தக்க சூட்டில், காரமான தேயிலைச் சுவையுடன், சீனி சற்று அதிகமாக் கலந்து தருவார். பிலாக்கொட்டையிட்ட காரமான அவரது முருங்கைக்காய் குளம்பும் நினைவிருக்கிறது.

நண்பனும் நானும் இன்னும் சில நண்பர்களும் 1985ஆம் ஆண்டு சென்னைக்குக் குடிபெயர்ந்தோம். 1987இல் நோர்வேக்கு வந்து சேர்ந்தேன். நண்பன் கனடா சென்றான். பெற்றோரும் புலம் பெயர்ந்துவிட்டனர்.

நான் நேற்று கனடா வந்தேன்.

நம்புவதற்கு சிரமாகத்தான் இருக்கும், கடந்த 35 வருடங்களில் நண்பனும் நானும் இரண்டாவது தடவையாகச் சந்தித்துப் பேசியது நேற்றிரவு.

அவனது பெற்றோரின் வீட்டில் தங்கியிருக்கிறேன். காலத்தின் செலவு அவர்களில் தெரிகிறது. என்னைக் கண்ட அவர்களின் முகத்தில் அத்தனை ஈரம்.

இப்படியான கணங்கள் வாழ்வின் வரம்.

புதைந்து கிடக்கும் நினைவுகளைக் கிண்டுவதில்தான் எத்தனை எத்தனை ஆனந்தம்!

மூத்தோரின் நினைவுகளின் அனைத்து இடுக்குகளிலும் புழுதியும், சேறும், குச்சொழுங்கைகளும், வீதிகளும், நிலங்களும், வயல்களும், ஆலயங்களும், மனிதர்களும், அவர்தம் கதைகளும் படிந்து கிடக்கின்றன. எங்கள் குறும்புகளையும் அட்டகாசங்களையும் நேற்றைய நாள் போன்று நினைவினில் வைத்திருக்கிறார்கள்.

இரவு முழுக்க ஊரை அழைத்து வைத்துப் பேசிக்கொண்டிருந்தோம். போராட்டம் அழைத்துப்போன பலர் உயிருடன் வந்து போனார்கள்.

இலங்கையின் கிழக்கே, ஆர்ப்பாட்டமற்ற ஒரு சிற்றூர், உடைந்த அரிசி மூட்டை போன்று உலகெங்கும் சிதறிக்கிடக்கிறது. ஒவ்வொரு மணியாய் எடுத்துக் கோர்த்து மகிழ்ந்தோம். நீரும் நெருப்புமாய் நினைவு ஊடாடியது.

அதி நீண்ட இரவு. மனமின்றி உறங்கப்போனோம்.

அதிகாலையில் நேர மாற்றம் காரணமாக 5 மணிக்கே எழுந்திருந்தேன். நண்பனின் பெற்றோர் உறங்கிக்கொண்டிருந்தனர்.

பசித்தது…

எனது வீடுபோல் நினைத்து, குளிர்சாதனப் பெட்டியினைக் கிண்டினேன். பிட்டும் முருங்கைக்காய் கறியும் இருந்தது. கதிரியக்கில் சூடாக்கி, பிட்டுடன் முருங்கைக்காய் கறியைக் குழைத்து உண்டேன்.

ஏறத்தாழ 40 வருடங்களுக்கு முன் உண்ட அதே பிலாக்கொட்டை கலந்த, புளிப்பு, உவர்ப்பு, காரம் என்று சற்றும் மாறாத சுவை. கண்ணை மூடி ருசிக்கும்போது சாமியறையில் மணியடித்துக் கேட்டது. ஓரிரு நிமிடங்களில் திருநீற்றுப் பூச்சுடன், சந்தனப் பொட்டின் கீழ் குங்குமத்துடன் படிகளில் இறங்கிவந்து…

“சஞ்சயன் இஞ்சித் தேத்தண்ணி போடவா?” என்றார். குரலில் அதே வாஞ்சையும் அன்பும்.

தேநீரை உறுஞ்சினேன்.

40 வருடத்திற்கு முன் கிடைத்த அதே தேநீர். குடிக்கத் தக்க சூடு, காரமான தேயிலை, சற்று அதிகமான சீனி.

இதை எழுதிக்கொண்டிருக்கிறேன். சமையலறை பெரும்பாடுபடுகிறது.

பெற்றால்தான் பிள்ளையா?

வாழ்வின் கொடுப்பினை இப்படியும் வரலாம்.

பால்யம் - சினேகம் - காமம்

பால்யகால நாட்களில் இருந்து இன்றுவரை காலம் எனக்குப் பலரை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அவர்களில் பலரின் நினைவுகள் என்னுள் பசுமையாய்ப் படிந்துபோயிருக்கின்றன. அவற்றில் சில நினைவுகளுக்குள் சில இரகசியங்களும் உண்டுதான். 48 வருடங்கள் வாழ்ந்து கழித்தபின், எங்காவது ஒரு சந்தர்ப்பத்தில், ஒரு காட்சியில் அவர்கள் பற்றிய நினைவுகள், நீரின் அடியில் இருந்து மேல் எழும் நீர்க்குமிழிகள் போன்று எனது நினைவுகளின் மேற்பகுதிக்கு வருவதுண்டு.

Trivandrum Lodge என்னும் மலையாளப் படத்தை இன்று பார்க்கக்கிடைத்தது. நான் மலையாளப்படங்களைப் தேடித் தேடிப் பார்ப்பவன் அல்லன். அவ்வப்போது காலம் எனக்கு மிகவும் சிறப்பான மலையாளத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறது. அப்படித்தான் Trivandrum Lodge எனும் திரைப்படமும்.

அதில் ஒரு சிறுவனுக்கு சகவயதுடைய ஒரு சிறுமிமீது ஈர்ப்பு ஏற்படுகிறது. அந்தக் காட்சிகள் எனக்குள் படிந்துபோயிருந்த சில பரவசமான நினைவுகளைக் கிளறிவிட்டன.

படத்தில் வரும் சிறுவனைப்போன்றே எனக்கும் ஒருத்தியில் ஈர்ப்பு வந்தது. 1977 - 78 காலப்பகுதியில் நாம் இலங்கையின் மத்திய பிரதேசத்துக்கு அணுக்கமான ஒரு கிராமத்தில் வாழ்ந்திருந்தோம். அங்கு தமிழ்ப் பாடசாலைகள் எதுவும் இல்லையாதலால், நான் மட்டக்களப்பில் விடுதியில் தங்கியிருந்து கல்விகற்றுக்கொண்டிருந்தேன். வருடத்திற்கு மூன்று தடவைகள் மட்டுமே விடுமுறை கிடைக்கும். வீடு வருவது என்றாலே நான் காற்றில் பறந்து திரிந்த நாட்கள் அவை.

அந்தக் கோடைவிடுமுறைக்கு வீடு வந்திருந்தேன். அம்மாவின் மேலதிகாரியினுடைய உறவினர் பெண் அவள். மேலதிகாரி ஒரு தமிழர். எனவே, எனக்கு விளையாட்டுத் தோழியாய் அறிமுகப்படுத்தப்பட்டாள். அம்மாவின் மேலதிகாரி ஒரு சிங்களவரை மணம்முடித்திருந்தார். அவரது சகோதரியின் மகள் இவள். என்னிலும் ஒரு வயது அதிகம்.

அரசல் புரசலாக சில விடயங்கள் புரியத் தொடங்கியிருந்த காலம் அது. தகாத சகவாசத்தால் சற்று பிஞ்சிலே பழுத்திருந்தேன். எனினும், என்னைத் தவிர எவருக்கும் இதுபற்றி எதுவும் தெரிந்திருக்கவில்லை.

அந்நாட்களில் எனது தந்தை ஒரு கரும்புத்தோட்டம் வைத்திருந்தார். விடுமுறைக்கு வீட்டுக்கு வந்தால் கரும்புத்தோட்டதின் காவலுக்கு என்னையும், தர்மலிங்கம் என்னும் ஒரு தொழிலாளியுடன் கூட அனுப்புவார். தர்மலிங்கம் ஒரு இளைஞர். என்னை விளையாட அனுப்பிவிட்டு, மரத்தின் உச்சியில் இருக்கும் பரண்மீது ஏறி உட்காந்திருப்பார். அப்பா கேட்டால் தம்பி என்னுடன் இருந்தார் என்பார். அதனாலோ என்னவோ தர்மலிங்கம் இன்னும் நினைவில் இருக்கிறார்.

அப்போதுதான் அவளுடன் அறிமுகம் ஏற்பட்டது. அவள் கொழும்பில் வாழ்ந்திருப்பவள் என்பதால், விடுமுறைக்கு சித்தியின் வீட்டுக்கு வந்திருந்தாள். அவளுக்கு ஒரு தங்கையுமிருந்தாள். எனக்குத் தம்பியிருந்தான். அவர்கள் இருவருக்கும் 9 வயதிருக்கும். அவர்கள் தூய்மையான குழந்தைகளின் உலகத்தில் இருந்தார்கள். நாம் அந்தத் தூய்மையான குழந்தைகளின் உலகத்தைவி்ட்டு வெளியேறிக்கொண்டிந்த காலம். பதின்ம வயது பலவிடயங்களை எமக்கு அறிமுகப்படுத்தத் தொடங்கியிருந்தது.

ஒவ்வொரு விடுமுறைக்கும் அவர்களும், நாங்களும் சந்திப்பது வழக்கமாகியது. ஆரம்பத்தில் சாதாரணமாகச் சென்ற எமது நட்பு காலப்போக்கில் சற்று வில்லங்கமானது. அங்கு வந்திருந்த ஒரு கோடைவிடுமுறையின் போது அவள் ருதுவெய்தினாள். அவளது சித்தியின் வீடு திருவிழாபோலானது.

அவர்களுக்குத் தெரிந்த ஒரே ஒரு குடும்பம் நாம் ஆகையால், நாம் அங்கு நின்றிருந்தோம். எனக்கு என்ன நடக்கிறது என்றே புரியவில்லை. பலரின் வருகையும், பாட்டுகளும், இனிப்புவகைகளும், கொண்டாட்டத்திலும் நான் என்னை மறந்திருந்தேன். வழமையாக விளையாட வரும் அவள் மட்டும் விளையாட வரவில்லை.

அந்த விடுமுறையின் பின் மீண்டும் பாடசாலைக்குச் சென்றிருந்தோம். காலம் ஓடியது. அடுத்த விடுமுறையின்போது எனக்கும் 13 வயதாகியிருந்தது. பாடசாலை மற்றும் விடுதி நண்பர்கள் அந்த வயதிற்குரிய பலதையும் கற்றுத்தந்திருந்தார்கள். பெண்கள் என்றால் மனதில் சற்று ஆர்வம் புகுந்திருந்தது. மனதுக்குள் இனம் புரியாத ஒரு விறுவிறுப்பு, பயம், வெட்கம் என்று பல உணர்வுகளின் கதம்பத்தில் இருந்தேன். என் உற்ற நண்பன் எமது பாடசாலையிலே‌யே மிக அழகிய ஆசிரியையில் பெருங்காதல் கொண்டிருந்த காலம் அது. அவனும் எனது உணர்வுகளுக்கு தூபம்போட்டிருக்கலாமோ என்று இன்று யோசிக்கிறேன்.

அடுத்து விடுமுறையின்போதும் விடுதியில் இருந்து வீடு சென்றிருந்தேன். ஒரு மதியப்பொழுதில் அம்மா அவள் வந்திருப்பதாகவும் அங்குபோய் விளையாடலாம் என்றும் கூறியபோது, தம்பியை அழைத்துக்கொண்டு அவர்களின் வீடு சென்றேன்.

அவர்களின் வீட்டுக்கு முன்னால் தங்கையுடன் பூப்பந்து விளையாடிக்கொண்டிருந்தாள் அவள். அவளைக் கண்டதும் எனக்கு ஏதோ ஆனது. குட்டி குட்டிப் பூக்களின் படம்போட்ட ஒரு சட்டையை அணிந்திருந்தபடியே தங்கையுடன் விளையாடிக்கொண்டிருந்தாள். அவள் துள்ளும்போதெல்லாம் நான் விழுந்துகொண்டிருந்தேன். எனது ஹோர்மோன்கள் நர்த்தனமிடத்தொடங்கின. அவள் கடந்துபோன ஆ்றுரேழு மாதங்களில் முன்னிலும் அழகாகியிருந்தாள். உடலின் வளைவு நெழிவுகளும் அவளை இன்னும் பேரழகாகியாய் மாற்றியிருந்தன. பிஞ்சிலே பழுத்திருந்த எனக்கு அவைபற்றிய சிற்றறிவு வாய்த்திருந்தது.

எனது தம்பியும் அவளின் தங்கையும் குழந்தையுலகத்தில் இருக்க, நாம் மட்டும் அதிலிருந்து வெளியேறியிருந்தோம். குழந்தைகளுக்கான தூய்மை எம்மைவிட்டு அகன்று களவு புகுந்திருந்தது.

தொலைக்காட்சி வந்திராத எழுபதுகளின் நடுப்பகுதி அது. வெளியே விளையாடியே எமது காலத்தைக் கடத்திக்கொண்டிருக்க வேண்டிய நிர்ப்பந்தம். நாம் தனித்து இருப்பதற்கு அவர்களின் வீட்டுக்குப் பின்னால் இருந்த நீரோடை துணைசெய்தது.

அவள் எதைக்கேட்டாலும் மந்திரித்துவிட்டவன்போன்று தலையாட்டினேன். அவள் பின்னாலேயே அலைந்தேன். அவளின் அருகாமை என்னைக் காற்றில் அலைக்க அவள் பின்னால் திரிந்தேன். அவள் பேசினால் மனது கிளர்ந்தது. அவள் உடல் என்னுடலுடன் கணப்பொழுதேனும் உரசினால் முதலில் நாவரண்டு, இதயம் பெரிதாய் அடித்துக்கொண்டது, வியர்த்தது, பின்பு மோட்சமடைந்தேன்.

அவள் கொழும்பு நாகரிகத்தில் வளர்ந்தவள். நானோ நவ நாகரிகத்தின் வாசனையற்ற மட்டக்களப்பின் ஏக புத்திரன். எமக்கிடையில் நாகரிகத்தில் காததூரம் வித்தியாசம் இருந்தது. ஆனாலும் நான் பிஞ்சில் பழுத்திருந்‌தது மேற்கூறிய இடைவெளியை குறைத்தது என்றே கூறவேண்டும்.

அவள் காதல் என்னும் சொல்பற்றி அறிந்திருந்தாள். ஓரளவு நானும். எம் நால்வரையும் சில நாட்களில் சிங்களத் திரைப்படங்களைப் பார்ப்பதற்கு அனுமதிப்பார்கள். நாம் அருகருகே அமர்ந்திருப்போம். காமினிபொன்சேகா, விஜயகுமாரதுங்க ஆகியோர் மாலினி பொன்சேகாவைக் கட்டிப்பிடித்துப் புரளும் காதல்காட்சிகளின்போது, அவள் அர்த்தமாய் பார்த்து மர்மமாய்ப் புன்னகைப்பாள்.

மறுநாள் படத்தின் காதல்காட்சிகளைப் பற்றி நாணத்துடன் பேசுவாள் எனக்கும் வெட்கம் பிடுங்கித்தின்னும் . ஆனாலும் அவள் மேலும் அதைப்பற்றிப் பேசவேண்டும் என்று நினைப்பேன்.

அவளுக்கு என்னைவிட சிலவிடயங்கள் அதிகமாகவே தெரிந்திருந்திருக்க வேண்டும். அடிக்கடி ஒளிந்து பிடித்துவிளையாடும்போது என்னை இழுத்தோடினாள். வீட்டின் பின்புறம் இருந்து நீரேரிக்கு என் தம்பியும் அவளின் தங்கையும் எம்மை தேடிக்களைத்தனர். நாம் அங்கிருந்தபடியே பேசிக்கொண்டிருப்போம்.

அவளின் கைகள் என்னை பற்றி இழுத்ததும் மந்திரித்துவிட்ட மந்திபோன்று அவள்பின்னே ஓடுவேன். என்னென்னவோ எல்லாம் பேசினோம், எதுவும் நினைவில் இல்லை. நீரோடையைக் கடந்து சென்ற ஒரு நாள் முதன் முதலாக கபரகொயா என்னும் ஒரு பிராணியைக் கண்டோம். முதலைமாதிரியான தோற்றமுள்ள கபரகொயா என்னும் பிராணியைக் கண்டோம். . தாவரபட்சணியான அப் பிராணி தனது வாலால் மட்டுமே தாக்கும். அதைக் கண்டு பயந்த அவளைக் கைபிடித்து அழைத்துவந்தேன். அன்று என்னை ஒரு கதாநாயகனைப்போல் உணர்ந்தேன். அதன்பின் அவள் நீரோடைப்பக்கம் வர மறுத்துவிட்டாள்.

அவர்களின் வீட்டுக்குமுன் பல கொய்யாமரங்கள் இருந்தன. ஒரு நாள் “கொய்யாப்பழம் ஆய்ந்து தா” என்றாள். மரம் ஏறத்தெரியாத மந்தி நான். அவளுக்காய் பெரும்பாடுபட்டு ஏறிக் கொய்யாப்பழமும் ஆய்ந்து கொடுத்தேன்.

மரத்தில் சிரமப்பட்டு ஏறிய எனக்கு இறங்கத்தெரியவில்லை. தட்டுத்தடுமாறிக் கால்வைத்தபோது வழுக்கி விழுந்த என்னை கீழே இருந்த ஒரு கொப்பு தாங்கிக்கொண்டது. அதன்பின் அவள் ஓர் ஏணியைக் கொணர்ந்து இறங்க உதவினாள். “உனக்கு மரம் ஏறத்தெரியாதா?” என்றபோது, "கால் வழுக்கிவிட்டது" என்றேன். என்னிலும் ஓரிரு வயதான அவள் அதை நம்பவில்லை என்பதை அவள் புன்னகை காட்டியது. வெட்கமாய் இருந்தது. எதுவும்‌ பேசாது வீட்டுக்கு ஓடினேன்.

என்னிடம் கொய்யா மரக்கிளையில் செய்ப்பட்ட கட்டப்பொல் (catapul) இருந்தது. ஆனால், குறிபார்த்து அடிக்கத்தெரியாது. அவளைப் பிரமிக்க வைப்பதற்காக அதை எடுத்துச்செல்வேன். ஒரு நாள் அவளுக்கு குறிபார்த்து அடிக்க கற்றுதரக் கேட்டாள். அவளின் பின்னால் நின்று, அவள் கையைப்பிடித்து இப்படித்தான் இதைப் பிரயோகப்பதென்று கற்றுக்கொடுக்க வேண்டும். அவள் கையினைப் பிடித்திருந்த எனது கை உணர்ந்த குளிர்ச்சியும், அவளின் அருகாமையும் வந்த காரியத்தை மறக்கடித்தன. கற்பதில் அவளுக்கும், கற்பிப்பதில் எனக்கும் ஆர்வம் இருந்திருக்க நியாயமில்லை.

இன்னுமொரு நாள் ஒளிந்து பிடித்து விளையாடினோம். என் தம்பியும், அவளின் தங்கையும் பொலிஸ், நாம் இருவரும் கள்வர்கள். அவர்களுக்குத் தெரியாத ஒரு இருட்டறைக்குள் ஒளிந்துகொண்டோம். மிகவும் குறுகிய இடம். என்னருகில், மிக மிக அருகில் நின்றிருந்தாள். அவளின் முகமும் எனது முகமும் உராய்வதைத் தடுக்க பெரும்பாடுபட்டேன். அவளின் மூச்சு என்னைத் திணறடித்தது. கொழும்பில் வளர்ந்த அவளோ அதுபற்றி பிரக்ஞை இன்றி இருந்ததைப் போன்றே உணர்ந்தேன். அவள் மூச்சின் காற்றும், மார்பும், உடலும் என்னில் உரசியபோது... நாவரண்டு, உடல் நடுங்கி வியர்த்தது. இருப்பினும் எனது கன்னத்தில் ஈரம்படிந்தது. பயத்தில் மறுபுறம் திரும்பிக்கொண்டேன். அப்போதும் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. சற்றுநேரத்தில் அவளும் திரும்பிக்கொண்டாள்.

இதன்பின் எமக்குள் ஏதோ மாற்றம் நிகழ்ந்தது. அவளே எனது நினைவில் இருந்தாள். எப்போதும் 16ஆம் வாய்ப்பாட்டைப் பாடமாக்கு என்று பெரும் வில்லனாய் இருந்த அப்பாகூட நினைவில் இருந்து மறைந்துபோனார்.

அவளே யாதுமாய் இருந்தாள். அவளுக்கும் அப்படியே இருந்திருக்க வேண்டும். என்னைக் கண்டதும் மயக்கும் புன்னகையால் மயங்கடித்தாள். அதிகமாய் பேச மறுத்தாள். தனியே இழுத்துக்கொண்டோடினாள். அதன் பின்பும் நாம் தனியே உரசிக்கொள்ளும் கள்ளன்பொலிஸ் விளையாட்டு அடிக்கடி நடந்தது. அந்நேரங்களில் எனது தொண்டை காய்ந்து, நா வரண்டு, என் நடுக்கம் சற்றுக் குறைந்து, அவள் சிவந்தது பற்றி எவரும் அறிந்திருக்கவில்லை இந்த நிமிடம்வரை.

ஆண் பெண் உறவுகளில் பிரிவுக்கு பெரும் இடம் இருக்கிறதல்லவா? அதே வருடம் அம்மாவுக்கும் அப்பாவுக்கும் ஏறாவூருக்கு மாற்றமாகியது. காலப்போக்கில் அவள் நினைவில்இருந்து மறந்துபோனாள். வேறுசிலர் அவளின் இடத்தை கைப்பற்றிக் கொண்டார்கள்.

ஏறத்தாழ 35 ஆண்டுகளின் பின்பு…

2013ஆம் ஆண்டு கோடைவிடுமுறையின்போது இலங்கை சென்றிருந்தேன். ஒரு மாலைநேரம் வீடுவந்தபோது, வீட்டில் விருந்தினர் ஒருவர் இருந்தார். அவரை அடையாளம் தெரிந்தது. பிபிலையில் இருந்த அம்மாவின் மேலதிகாரியின் மனைவி அவர். கடந்துபோயிருந்த 35 வருடங்கள் அவரை முதுமையினுள் அழைத்துப்போயிருந்தாலும், அவர் கம்பீரத்துடனும் அழகாகவும் உட்கார்ந்திருந்தார்.

நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். அவர் எப்போதாவது அவரின் சகோதரியின் மகள் பற்றி ஏதேனும் கூறவேண்டும் என்று மனம் தவியாய்த் தவித்தது. இதயம் வேகமாய்த் துடிக்க, பல வருடங்களுக்கு முன்னான அவளின் அருகாமையையும், வெம்மையையும் உணர்ந்தேன். வாய்விட்டுக்கேட்க வெட்கம் அனுமதிக்கவில்லை. எனவே, அவளின் தங்கைபற்றிக் கேட்டேன்.

அப்போது அவர் அவளின் பெயரைக்கூறி, நேற்று அவளைச் சந்தித்தபோது, இன்று உன்னை சந்திப்பதாகக் கூறினேன், உன்னைப்பற்றி மிகவும் விசாரித்தாள் அத்துடன், அவள் உன்னை மிகவும் அன்பாக விசாரித்ததாகவும் கூறச்சொன்னாள் என்று அவர் கூறியபோது, அவர் முகத்தில் பெரும்குறும்பும் சிரிப்பும் கலந்திருந்தன.
எனது பேரன்பையும் தெரிவியுங்கள் என்றேன் சிங்களத்தில் தலையைக்குனிந்தவாறே.

அன்று மாலை முழுவதும்... அவளும் இன்றுவரை என்னை மறக்கவில்லை என்பது என்‌னை காற்றில் சுமந்துபோய்க்கொண்டிருந்தது.

தந்தையின் நாட்குறிப்பு

இன்று வேலை முடிந்து புறப்பட்டபோது மாலை எட்டு மணியாகியிருந்தது. நிலக்கீழ் தொடருந்தில் தனது மகளுடன் வந்திருந்தார் ஒரு தந்தை. அவளுக்கு மூன்று வயதிருக்கலாம். களைத்திருந்தாள்.

அவர் அவளைத் தூங்கவைப்பதற்காக ஒரு கதை சொல்லிக்கொண்டுவந்தார். சற்று நேரத்தில் அவள் அவர் மார்பில் தூங்கிப்போனாள்.

அந்தக் காட்சி என்னை இருபது ஆண்டுகளுக்குப் பின்னோக்கி இழுத்துச் சென்றது.

இரவு நேரங்களில் எனது குழந்தைகளைத் தூங்கவைப்பது என்பது பல சம்பிரதாயங்களைக்கொண்டதாக இருந்தது.

மாலை எட்டு மணிக்குக் கட்டிலில் இருக்க வேண்டும் என்பது எழுதாத சட்டம். எனவே, ஏழரையளவில் குளியலறைக்குள் அழைத்துச் சென்று பல் மினுக்கும்போது ஆரம்பிக்கும் யார் முதலில் குளிப்பது என்ற பிரச்சனை. ஒரு நாளைக்கு ஒருவர் என்று பிரச்சனையைத் தீர்த்துக்கொள்வேன். சில வேளை இருவரும் ஒரே நேரத்தில் குளித்தால். “அடியேய் குளித்தது காணும், வாங்கடீ வெளியில” என்று நான் கெஞ்ச, அவர்கள் மிஞ்ச அங்கு ஒரு திருவிழாவே நடக்கும்.

ஈரத்தினைத் துடைத்து, நனைந்த தலைமுடியினை காயவைத்து, கிறீம் பூசி, ஓடிக்கொலோன் இட்டு, இரவுப்பொழுதுக்கான உடை அணிவித்து, நீண்ட அவர்களது தலைமுடியினை சிக்கெடுத்து, இரட்டைப் பின்னலிட்டு முடிக்கும்போது அத்தனை அழகாக மாறியிருப்பார்கள்.

எனக்கு ஒற்றைப் பின்னல், இரட்டைப் பின்னல், குதிரைவால் இப்படி பலவிதமாக அவர்களின் தலைமுடியினை பின்னவும், கட்டவும் தெரிந்த காலம் அது.

அதன்பின் நாளைக்கான உடைகள் எவை, காலுறைகள், தலைச் சோடனைகள் எவையென்று அவர்களுடன் உரையாடி அவற்றை எடுத்துவைத்த பின், ஒருத்தி முதுகில் ஏறிக்கொள்ள, மற்றையவளை கைகளால் தூக்கிச் செல்வேன்.

தங்களைக் கட்டிலில் தொம்மென்று போடுமாறு அல்லது எறியச்சொல்லிக் கேட்பார்கள். மெதுவாய் எறிவேன். கல கல என்ற சிரிப்பினைக் கேட்டபடியே, மின்விளக்கினை நிறுத்தியபின், அவர்கள் என்னை அணைத்தபடியிருக்க நாம் உரையாடத்தொடங்குவோம்.

இன்றைய நாளின் அனுபவங்கள், நாளைய நாள் என்று உரையாடும்போது, கொட்டாவிவிட்டபடியே பெருவிரலைச் சூப்பியபடி “அப்பா கதை” என்பாள் இளையவள். “பூக்குட்டி, கைசூப்பக் கூடாது” என்பாள் அக்கா. அதையெல்லாம் கவனத்தில் எடுப்பதில்லை இளையவள்.

இருவருக்கும் எனக்குத் தெரிந்த அனைத்துக் கதைகளையும் கூறிமுடித்திருந்த காலத்தில் புதிது புதிதாய் கதைகளை இயற்றினேன். பாட்டி வடை சுட்ட கதையுடன், சிங்கமும் முயலும் கதையை இணைத்துச் சற்று விறுவிறுப்புக் கலந்து கூறுவேன். சாகசக் கதைகளில் இருவருக்கும் அலாதியான பிரியம் இருந்தது. சொன்னதை மட்டுமே செய்யும் சிறுவனின் கதையைக் கேட்டு விழுந்து விழுந்து சிரித்து ரசிப்பார்கள். அலாவுதீனின் அற்புதவிளக்கு போன்று தனக்கு ஒன்று வாங்கித் தா என்றாள் மூத்தவள். தனக்கு பறக்கும் கம்பளம் வேண்டும் என்றாள் இளையவள்.

நான் எந்தக் கதையைக் கூறினாலும் அல்லது அவர்கள் தூங்குவதற்காக எதைப் பாடினாலும் முழுமனதுடன் இரசித்து அனுபவித்தவர்கள் அவர்கள் இருவர் மட்டுமே. அதற்கு முன்னும் பின்னும் நான் பாடியதே இல்லை.

அதிகமான நாட்களில் என் மார்பில் உறங்கிவிடும் இளையவளை மெதுவாய் இறக்கிவைத்ததும்... அக்காள் காலை நீட்டுவாள். அவளது காலை நீவியபடியே நான் இயற்றிய பாடலொன்றைப் பாடிக்கொண்டிருப்பேன். அவளும் தூங்கிவிட்டாள் என்பதைச் சீரான அவர்களது மூச்சின் ஒலி அறிவிக்கும்.

முகத்தில் விழுந்திருக்கும் முடியினை காதிற்குப் பின்புறமாய் நகர்த்திவிட்டு, தலைமுடியினை கோதி ஆளுக்கொரு முத்தமிட்டு இருவரில் ஒருவரை அணைத்தபடி நானும் தூங்கிப்போவேன். பேரின்பமான நேரங்கள் அவை.

மூத்தவள் தூங்கிப்போனால் மறுநாள் காலைவரை பிரச்சனையே இருக்காது.

இளையவள் அப்படி இல்லை. “அப்பா” என்று கடுமையாக நாலைந்து தடவை அழைப்பாள்... நான் நித்திரையிலிருந்து மீண்டு...

“என்னய்யா” என்பேன்.

“உஷ்ஷ் … குறட்டை விடாதே என்று எத்தனை தடவை சொல்லியிருக்கிறேன்”

“சரி நீங்க படுங்கோ”

“அப்பா, காலைத் தடவு” என்று காலை என் நெஞ்சில் போடுவாள். காலை முகர்ந்து முத்தமிட்டபின் மெதுவாய் நீவி விடுவேன்.

சற்றுநேரத்தில் இருவரும் தூங்கிப்போவோம். மறுபடியும் அவள் என்னை எழுப்பும் வரையில்.

வாழ்வு பேசிக் கடப்பதற்கே!

 

சாண்டியாகோ டி கம்போஸ்டெலா நோக்கி மூன்று முறை யாத்திரை சென்றிருக்கிறேன். ஒவ்வொன்றும் சராசரி 800 கி.மீ. தூரம். இந்தத் தேவாலயத்தை நோக்கி நடப்பதற்கு ஸ்பெயின் நாட்டினுள் மட்டும் பல பாதைகள் உண்டு. இதில் ஏழு பாதைகள் யாத்திரிகர்களுக்கு உரிய வசதிகளைக் கொண்டிருக்கின்றன. இதைவிட பல பாதைகள் அநேகமான ஐரோப்பிய நாடுகளிலிருந்தும் இருக்கின்றன. யேசுநாதரின் ஊரில் இருந்தும் ஒரு பாதை இருக்கிறது. அது ஏறத்தாழ 5000 கிமீ தூரமானது. அங்கிருந்து நடந்தவர் ஒருவரையும் நான் சந்தித்திருக்கிறேன்.

எனது வாழ்வின் மிகவும் மகிழ்ச்சியான நிகழ்வுகளைப் பட்டியலிட்டால், இந்த மூன்று யாத்திரைகளும் முக்கியமானவை. ஆனால், மூன்று முறையும் வாழ்வு விதித்துவிட்ட பெரும் அயர்ச்சியில் இருந்து மீண்டுகொள்ளவே நடக்க ஆரம்பித்தேன்.

பெரும் துன்பத்திலிருந்து மகிழ்ச்சிக்கு வழி கிடைத்திருப்பது எத்தனை பெரிய முரண் என்று பார்த்தீர்களா? 'துன்பம் தொடர்ச்சியானது அல்ல என்பதும், அதை மகிழ்ச்சிக்கான படிக்கட்டாகக் கொள்' என்பதும் இந்த யாத்திரைகள் கற்றுத்தந்த பெரும் பாடம்.

இதைவிட, இந்த நாட்களில் சந்தித்த மனிதர்கள் கற்றுத் தந்தவை ஏராளம். அவர்களிடமிருந்து பெற்றுக்கொண்டளவிற்கு கொடுத்திருக்கிறேனா என்பது சந்தேகமே. யாத்திரிகர்களில் பெரும்பான்மையானவர்கள் தங்கள் மனதுக்குள் சுமக்கும் பெருவலிகளை ஏதோ ஒரு வழியில் கடந்துகொள்ளலாம் என்ற நம்பிக்கையிலேயே நடக்கிறார்கள். நானும் அப்படித்தான்.

பிரான்ஸ் தேசத்தின் தெற்கு எல்லைக்கு அப்பால் ஸ்பெயின் நாட்டில் பம்பலூனா (Pampalona) என்று ஒரு நகரம் இருக்கிறது. நகரத்தின் வீதிகளில் எருதுகளை ஓடவிட்டு அவற்றை மக்கள் கலைத்துக்கொண்டு ஓடும் பெருவிழாவொன்று வருடம் தோறும் அங்கு நடைபெறும். இந்த விழாவை சான் ஃபெர்மின் (San Fermín) விழா என்று அழைக்கிறார்கள்.

யாத்திரைக்கான முதல் நாள் நான் பம்பலூனா வந்தடைந்தபோது அந்த விழாவிற்கு சில நாட்கள் இருந்தன. நகரம் விழாக்கோலம் பூண்டுகொண்டிருந்தது. அங்கிருந்துதான் சாண்டியாகோ டி கம்போஸ்டெலா (Stantiago de Compostela) நகரத்தினை நோக்கிய எனது ‘பிரெஞ்சு வழி’ (French Way) என்றழைக்கப்படும் யாத்திரைப் பயணத்தை ஆரம்பித்திருந்தேன்.

பம்பலூனாவில் இருந்து புறப்பட்ட முதல்நாள் பின் மதியத்தில் கடும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்க, காற்றும் நின்றுபோனது. அந்த அம்மலான காலநிலையில், வேர்வையுடன் நடப்பதில் பெரும் சிரமப்பட்டுக்கொண்டு, இளைப்பாற ஒரு தோதான ஓர் இடத்தைத் தேடிக்கொண்டிருந்தேன்.

அப்பொது வீதியோரத்து மரமொன்றின் கீழே ஒருவர் தனது முதுகுப் பையை இறக்கி வைத்துவிட்டு, உட்கார்ந்திருந்தபடி, தனது சப்பாத்துக்களைக் கழற்றி, கால்விரல்களைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரது மூன்று கால்விரல்களில் நீர் கட்டியிருந்தது.

கட்டையான உருண்டையான உருவம். Yes, No, Thank You என்பதும் இன்னும் சில சொற்களும்தான் அவரது ஆங்கிலம். அதைவிட மோசமானது எனது ஸ்பானிஷ் பேரறிவு. கூகிள் மொழிபெயர்ப்பியை உதவிக்கு அழைத்துக்கொண்டேன்.

கால் விரல்களில் நீர் கட்டிக் கிடந்ததால் பல வாரங் களாக நடக்கிறாராக்கும் என்று நினைத்து, “பல நாட்கள் நடந்தால் இப்படித்தான். நீரை அகற்றிவிட்டு, பிளாஸ்திரி போடுங்கள், விரைவில் காய்ந்துவிடும்” என்றேன்.

அவரும் “சீ சீ” (ஓம் ஓம்) என்றார்.

நீரை அகற்றுவதற்கு ஊசியால் குத்திக்கொள்ள அவரால் முடியவில்லை. ஊசி போட்டுக்கொள்ள அஞ்சும் குழந்தை போன்று பயந்து கொண்டிருந்தார். அன்று மாலை எமது தங்குமிடம் வரும் வரையிலும் அவர் நொண்டி நொண்டியே நடந்தார்.

தங்குமிடத்தில் மேலும் இருவர், “நீரை அகற்றினால்தான் நாளை நடக்கலாம். இல்லையேல் நிலைமை மோசமாகும்” என்றபின், நீரை அகற்றுவதற்கு, தூக்கு மேடைக்குச் செல்லும் கைதிபோன்று, பயந்து பயந்து நீர்க்கொப்பளத்தில் ஊசியால் பெரும் பாடுபட்டுக் குத்திக்கொண்டார்.

அதன்பின்னான நான்கைந்து நாட்களாகப் பேபேயுடன் நடந்து கொண்டிருந்தேன். ஆம், அதுதான் அவரது பெயர். மனதுக்கு அவரைப் பிடித்திருந்ததால் மொழி ஒரு பிரச்சினையாகவே இருக்கவில்லை. நகைச்சுவை உணர்வு மிகுந்தவராக இருந்தார்.

ஆனால், அவர் கண்ணில்படும் தேவாலயங்கள் அனைத்திலும், உலகத்தில் உள்ள அனைவரின் துயரயங்களுக்காகத் தானே செபிப்பதுபோன்று 10-15 நிமிடங்கள் முழந்தாளிட்டு முணுமுணுத்துக் கொண்டிருந்ததை என்னால் தாங்க முடியவில்லை.

நாங்கள் நடந்த ஊரில் வழியெங்கும் சந்திக்குச் சந்தி ஒரு தேவாலயம் இருந்தது. அது மட்டுமல்ல, கிராமப்புறங்களில் வீதிக்கு வீதி மாதா சொரூபம் இருக்கும். சில வீதிகளில் இரண்டு இருக்கும். அந்த இடங்களிலும் நின்று நெஞ்சில் சிலுவையை வரைந்துகொண்டு செபிப்பார். எரிச்சலை அடக்கிக்கொண்டு பொறுத்திருந்தேன்.

“அப்படி என்னத்தைத்தான் கடவுளிடம் வேண்டுகிறாய்? அந்தாளுக்கு உனது வேண்டுதல்களை கவனிக்க நேரம் போதாது இருக்கும் போலிருக்கிறதே?” என்றேன்.

அவரது கண்கள் என்னை ஊடுருவிப் பார்த்தன. ஆனாலும் அவர் பதில் சொல்லவில்லை.

மனிதர்களையும் மதங்களையும் அவர்களது சடங்குகளையும் எனக்கு ஒவ்வாதவையாக இருப்பினும், மதிக்கவேண்டும். அது அவரவர்களின் ஆத்தம திருப்திக்கானது. எனது ஆத்ம திருப்திக்காக நான் எதையாவது செய்யவில்லையா? அதுபோலத்தான் இதுவும். எனவே, அதன்பின் நான் அவரிடம் எதுவுமே கேட்கவே இல்லை.

அன்று நவரேட் (Navarrete) என்னும் இடத்தில் இருந்து அசோஃப்ரா (Azofra) என்னும் கிராமத்தை அடைவதே திட்டம். மழை தூறிக்கொண்டிருந்தது. வழியில் கற்களாலான ஒரு செயற்கைக் குகை இருப்பதைக் கண்டு அதற்குள் சென்றேன். பேபே வெளியில் புதினம் பார்த்துக்கொண்டு நின்றார்.

1980களின் நடுப்பகுதியில் இலங்கையின் அரச தொலைக்காட்சிச் சேவையில் இங்கிலாந்தின் எஃப்ஏ கோப்பை (FA Cup) காற்பந்தாட்டக் காணொளிகளைக் காண்பிப்பார்கள். அந்நாட்களில் பிடித்தது லிவர்பூல் (Liverpool) விளையாட்டுக் கழகத்தின் மீதான எனது காதலும் பைத்தியமும். இன்றும் பைத்தியம் அகன்றதாயில்லை. முற்றியிருக்கிறது. ‘You'll never walk alone’ (நீங்கள் ஒருபோதும் தனியாக நடக்க மாட்டீர்கள்) என்பது எமது கழகத்தின் தாரக மந்திரம். உலகப் பிரசித்தமான வாக்கியம் இது. இந்த வாக்கியத்தில் ஆரம்பிக்கும் ஒரு பிரபல பாடலும் உண்டு.

அந்தக் கற்குகைக்குள் வந்த ஒரு லிவர்பூல் ஆதரவாளன் ஒருவன், அந்த வாக்கியத்தைச் சுவரில் எழுதிவிட்டுச் சென்றிருக்க வேண்டும். இந்த யாத்திரைப் பயணத்தில் எவரும் தனித்து நடப்பதில்லை. அத்தனை சக யாத்திரிகர்கள் உங்களைச் சுற்றி நடந்து கொண்டிருப்பார்கள். பேபேயை அழைத்துக் காண்பித்தேன். சிதம்பரச் சக்கரத்தைப் பார்த்தது போல் பார்த்தார். அவருக்கு அது புரியவில்லை.

அன்று எம்முடன் இன்னாரு ஸ்பானிஷ் யாத்திரிகரும் இணைந்து கொண்டிருந்தார். அவருக்கு ஆங்கிலம் கரைபுரண்டு ஓடியது. எனவே, பேபேக்கு லிவர்பூல் கழக வாசகத்தின் அர்த்தத்தைப் போதிக்க நேரம் எடுக்கவில்லை.

அதைக் கேட்டவர்… “நான் ஓர் அட்லேடிகோ மட்ரீட் கழக ஆதரவாளன், உனது கழகத்தை அறவே வெறுக்கிறேன். உனது கழகத்திற்குக் காற்பந்து விளையாடவே தெரியாது” என்றார் நக்கலாக. எனக்குச் சூடாகியது.

நானும் பதிலுக்கு, “உனது கழகத்திற்கு காற்பந்தாட்டம் என்றால் என்ன என்றே தெரியாது. மட்ரீட் நகரத்தில் ரியல் மட்ரீட் கழகம் மட்டுந்தான் பெயர்போனது. உனது கழகம் அவர்களுடன் ஒப்பிடுகையில், மவுசு குறைந்தது. இன்றுதான் உனது கழகத்தைப் பற்றிக் கேள்விப்படுகிறேன்” என்று எள்ளி நகையாடும் குரலில் கூறினேன். யாருக்குத்தான் தனது கழகத்தை மட்டம் தட்டுவதைப் பொறுக்க முடியும்?

“சரி சரி… வெய்யில் தாங்க முடியவில்லை. நீயும் கொதிக்கிறாய். வா ஒரு பியர் குடித்து அனைத்தையும் தணிப்போம்” என்று சமாதானம் பேசினார்.

மறுநாளும், புதிய நண்பர் எம்முடன் நடந்து கொண்டிருந்தார். அன்று மாலை ஓர் உணவகத்தில் நாங்கள் மூவரும் உட்கார்ந்திருந்தோம். உடல் களைத்துக் கிடந்தது. நடக்கத் தொடங்கி சில நாட்கள் ஆகிவிட்டதால், பேபேயால் உடல் உபாதைகள் இன்றி நடக்க முடிந்தது. மங்கிய விளக்குகளின் ஒளியில் சாரளங்களுக்கு அருகில் உட்கார்ந்திருந்தோம். மாலை நேரத்து கருக்கல் ஊரை மூடிவிட்டிருந்தது.

பரிசாரகன் வந்து ”குடிப்பதற்கு ஏதேனும் எடுத்து வரவா?" என்றபடியே உணவுப் பட்டியலை மூவருக்கும் தந்தார்.

பேபே, என்னைப் பார்த்து, "உனக்கு இன்று தெய்வீக பானமொன்றை அறிமுகப்படுத்துகிறேன். எனது நாட்டின் அற்புதங்களில் ஒன்று அது…" என்றுவிட்டு பரிசாரகனிடம், “மூன்று பச்ரான் பானங்கள்” என்றார். பரிசாரகன் சிவப்பு நிறத்தில் ஒரு பானத்தை எடுத்துவந்தார்.

தனது கிண்ணத்தைக் கையில் எடுத்த பேபே, என்னைப் பார்த்து, தனது பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து உதட்டில் வைத்து “ம்ம் மா” சொல்லி பச்ரான் பானத்தின் பராக்கிரமத்தை அறிமுகப்படுத்தினார்.

உரையாடிய படியே, அன்றைய தினம் மறுநாள் பயணத்தைத் திட்டமிட்டுக்கொண்டிருந்தோம். நாளை 35 கிலோமீற்றர்கள் நடக்க வேண்டும். காலை ஏழரைக்கு ஆரம்பித்தால் மூன்று மணி போல் இலக்கை அடையலாம் என்று தீர்மானித்துக்கொண்டோம்.

மதுசாரத்தில் பல வகைகள் உண்டு. குடித்தவுடன் சுர்ர்… என்று போதை தலைக்கு ஏறுவது ஒரு வகை. அனுபவமான குடிகாரனுக்கு இலகுவில் ஏறாத போதைபோன்று மெது மெதுவாக போதையேறுவது இன்னொரு வகை. ஏறிய போதை உடன் இறங்கும் மது அல்லது பல மணிநேரம் போதையை தக்கவைத்திருக்கும் மது என்று பலவகைகள் இருக்கிறதல்லவா?

பச்ரான் உடனேயே தனது விளையாட்டைக் காண்பித்து, நெடுநேரம் விளையாடிக் கொண்டிருக்கும் வகையானது. மது மனிதர்களை இளகச் செய்யும். கனத்து, புதைந்திருக்கும் இரகசியங்களையும் மிதக்கச் செய்யும் அல்லவா? பேபே இப்படி ஆரம்பித்தார்.

“என்னை ஓர் அனுபவமான யாத்ரிகன் என்றோ, நான் நீண்ட தூரம் நடந்திருக்கிறேன் என்றோ நீ நினைக்கக் கூடாது. நீ என்னை முதன் முதலாகச் சந்தித்தபோது நான் நடக்கத் தொடங்கி ஒரு மணிநேரமும் ஆகியிருக்கவில்லை. எனக்கு நடந்து பழக்கமில்லை. அதுதான் நடந்து ஓரிரு மணிநேரத்தினுள் காலில் நீர்க்கட்டி வந்தது.”

நான் நெற்றியில் கையால் அடித்துக்கொண்டேன். இருவரும் சிரித்தார்கள்.

பேபே பரிசாரகனை அழைத்து மீண்டும் மூன்று விரல்களைக் காண்பித்தார். மூன்று சிவப்புக் கிண்ணங்கள் வந்தன.

“நான் மட்ரீட் நகரத்தில் பிறந்து வளர்ந்த மனிதன். பிரபல வழக்கறிஞர் கம்பனியில் புகழ்பெற்ற வழக்கறிஞன், உயர் பதவியில் இருந்தவன். என் காலின் கீழ் வாழ்வு கொட்டிக்கிடந்தது. தேவையான அளவு பணம், சமூகத்தின் அனைத்து இடங்களிலும் தொடர்பு, அந்தஸ்து, மனைவி… என்று வாழ்ந்திருந்தேன்.

வாழ்வு கொண்டாட்டமாய் இருக்கும்போது, வேலை, வேலை என்று வேலையே கதி என்று கிடந்த நாட்களில், சப்தமற்ற கால்களுடன் நரகம் எனது வீட்டின் கதவைத் தட்டியிருந்ததை, கால்களில் கொட்டிய பணமும் புகழும் வசதி வாய்ப்புக்களும் மறைத்தது. ஓராண்டுக்குள் வாழ்வு புரண்டு விவாகரத்தாகி தனித்துப்போனேன்.”

மேசையில் இருந்த ஆலீவன் காய்களில் இரண்டை எடுத்து வாய்க்குள் போட்டுக்கொண்டார். நானும் ஒன்றை எடுத்தேன்.

“வேட்டைக்கு செல்பவன் அஞ்சினால் என்ன நடக்கும்? பெண்கள் விடயத்தில் நான் மிகவும் வெட்கப்பட்ட மனிதன். அதனாலோ என்னவோ 45 வயதுவரை திருமணம் நடக்கவில்லை.

தனிமையில் அழுந்திக் கிடந்த நாட்களில் அல்முதேனா (Almudena) தேவாலயத்திற்கு தினமும் செல்வேன். அது மட்ரீட் நகரத்தின் பெரிய தேவாலயம்.

ஒரு நாள், முழந்தாளிட்டு செபித்துவிட்டு நிமிர்ந்தபோது, வெள்ளை நிற லேஸ் துணியில் முக்காடிட்டு, முழந்தாளிட்ட நிலையில் ஒரு பெண்ணை எனக்கு அருகில் கண்டேன். என்னைப் பார்த்துப் முறுவலித்தாள். வாய் திறக்காத அந்தப் புன்னகையில் மயங்கிப் போனேன்.

பெற்றோரிடம் இருந்து வெளியேறிய நாளில் இருந்து தனியே வாழ்ந்தவன் நான். அந்நாட்களில் உறக்கம் நிம்மதியாக இருக்காது. ஆழ்ந்த உறக்கத்திலும் ஒரு ஏக்கம் என்னுடன் இருந்தது. முதன்முதலில் அவள் என் மார்பில் உறங்கியபோது நான் என்றுமில்லாத கனவுகள் அற்ற நீண்ட தூக்கத்தினை அனுபவித்தேன்.

வறண்ட நிலத்தில் விழும் மழைத்துளியைப் போல் ஓர் ஆணின் அனைத்துத் துயரையும் உறிஞ்சி எடுப்பதற்கு ஒரு பெண்ணால் மட்டுமே முடியும். பெண்ணின்றி ஓர் ஆணால் வாழ முடியாது. பெண்களிடம் இயற்கையாவே ஆற்றுதல்படுத்தும் குணம் இருக்கிறது. தாய்மையின் ஒரு வடிவம் அது.

நீரில் அமிழ்ந்து கொண்டிருப்பவன் கையில் எது கிடைத்தாலும் அதைப் பெரும் நம்பிக்கையோடு பற்றிக்கொள்வதில்லையா? அதுபோன்று, தனித்திருக்கும் மனிதர்களும் கிடைக்கும் அனைத்தையும் வாழ்வு மீண்டுவிட்டது என்ற நம்பிக்கையில் பற்றிக்கொள்கிறார்கள். அதுபோல நானும் அவளைப் பற்றிக்கொண்டேன்.

இன்னொருவர் மீது அளவற்ற அக்கறையைக் காண்பிப்பதும், அவருக்கான அனைத்தையும் தன் தேவைபோல் நினைத்துத் தன்னையே கொடுப்பதும், சதா அவர்களுக்கான நலனை நினைத்திருப்பதும் ஒரு கலை. எல்லோருக்கும் அது வாய்ப்பதில்லை. அவளுக்கு ஒரு சிறு சங்கடமும் ஏற்படக்கூடாது என்று மனது அடித்துக்கொள்ளும். அதற்கான எதையும் செய்யத் தயாராக இருந்தேன். அவள் துயருற்றால் அதை எனது துயர் போன்று உணர்ந்தேன்.

மாசற்ற தூய அன்பு மட்டுமே அப்படியான அளவற்ற அக்கறையை எப்போதும் கொடுத்துக்கொண்டே இருக்கும் என்று இப்போதும் நம்புகிறேன்.

மனித மனங்கள் வித்தியாசமானவை. ஒவ்வொருவரும் அன்பு காண்பிக்கும் விதம் மனிதருக்கு மனிதர் வேறுபடும் அல்லவா? அதுபோன்று மின்னலைப் போன்று தோன்றும் அன்பு, காலப்போக்கில் மங்கி அகன்றும் போகும்.

கொடுத்த பேரன்பின் சிறுபகுதியையேனும் உரிமையுடன் மீளவும் எதிர்பார்ப்பது முதிர்ச்சி அற்ற மனதின் வெளிப்பாடு. அப்போது மனங்கள் பிரிந்துபோகின்றன. அது நடந்தது.

ஆணுக்கும் பெண்ணுக்குமான அன்பில் கொடுப்பதை எதிர்பார்ப்பதானது, அன்பு என்னும் நிலையைக் கடந்து பண்டமாற்று நிலை என்பதைக் காலம் கடந்து புரிந்துகொண்டேன்” என்றுகூறிவிட்டு… பரிசாரகனை நோக்கி கையை மீண்டும் உயர்த்தினார்.

அவர் மேலும் மூன்று சிவப்புக் கிண்ணங்களை எடுத்துவரும்போது, அவரின் பின்னே இன்னுமொருவர் சில்லுகள் பூட்டியதொரு சிறிய மேசையில் நன்கு வாட்டிய மாட்டின் தொடையிறைச்சி, பொரித்த உருளைக்கிழங்கு, அவித்த மரக்கறிகள், குளிர்நீர் என்பவற்றை எடுத்து வந்து எங்களுக்குப் பரிமாறினார்.

பேபே இறைச்சியை, பூனை பிரியத்துடன் தனது குட்டியை மணந்து பார்ப்பதுபோல் மணந்து பார்த்தார். ஆலிவ் எண்ணையும் ஆப்பிள் சிட்டரும் சேர்த்து முள்ளுக் கரண்டியால் இறைச்சியைக் குத்திப் பிடித்து, கத்தியால் ஒரு துண்டைவெட்டி எடுத்து வாய்க்குள் வைத்துவிட்டு, கண்ணை மூடி… மெய்மறந்து உண்ணத் தொடங்கியபோது, அவரது மூடிய வாய் ஆலிங்கனத்தில் உச்சம் கண்டதுபோன்று ம்...ம்...ம்.. என்று ஒலியெழுப்பியது.

மற்றைய நண்பரும் நானும் ஆளையாள் அர்த்தமாகப் பார்த்துச் சிரித்துக்கொண்டோம்.

உண்மையில், உணவின் ருசி அபரிமிதமாகத்தான் இருந்தது. பேபே எழுப்பிய சிருங்கார ஒலி அர்த்தமுள்ளது என்பதைப் புரிந்துகொண்டேன்.

“நான் பெரும் சாப்பாட்டுப் பிரியன்” என்றார் பேபே.

அவர் வாயை மூடுவதற்கு முன்பே, “அது உண்மைதான். ஒரு பெண்ணைப் போலத்தான் உணவையும் ருசிக்கிறீர்கள்.”

“இலங்கையைச் சேர்ந்தவர்கள் மோசமான அவதானிகள் போல்” என்றார்.

சேர்ந்து சிரித்தோம்.

மீண்டும் பரிசாரகனை நோக்கி கையைக் காண்பித்தார்.

இவரிடம் வந்த பரிசாரகனிடம் எதையோ சொல்லியனுப்பினார். எனக்கு மொழி புரியவில்லை. நான் வாட்டிய இறைச்சியில் கவனமாயிருந்தேன்.

மேலும் ஒரு முறை பச்ரான் பானம் எமக்குள் இறங்கியது.

அப்போது சமையலறை உடையுடனும் தலையில் வெள்ளைத் தொப்பியுடனும் ஒரு மனிதரை அழைத்து வந்தார் பரிசாரகன்.

அந்த மனிதரைப் பார்த்தபடியே, அன்றைய தினம் இரண்டாம் தடவையாக தனது பெருவிரலையும் ஆட்காட்டி விரலையும் இணைத்து உதட்டில் வைத்து “ம்ம் மா” என்ற பேபே, ஸ்பானிஷ் மொழியில் எதையோ சொன்னபடி. உட்கார்ந்திருந்த நாற்காலியைப் பின்னால் தள்ளி, எழுந்து நின்று, முதுகை வளைத்துத் தலையை சாய்த்து நிமிர்ந்தார். அதன்பின் கைதட்டினார்.

பேபேக்கு வெறி தலைக்கேறி, நிதானம் தப்பிவிட்டது என்று நினைத்தேன்.

அருகிருந்த மற்றைய நண்பர், எனது காதுக்குள், “உணவு தயாரித்தவரை பாராட்டினார்” என்ற பின்புதான் அவர் எழுந்து முதுகு வளைத்து தலைசாய்த்து, கைதட்டியது நன்றி சொல்லவே என்பதைப் புரிந்துகொண்டேன்.

அதி ருசியான உணவு தயாரித்தவரை அழைப்பித்து மரியாதை செலுத்திய பேபேயின் பெருந்தன்மையை நானும் கற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

பாராட்டைப் பெற்றவர் தனது வலது கையை இடது மார்பில் வைத்து தலைசாய்த்து, “கிராசியஸ், கிராசியஸ்” என்று நன்றி கூறி விடைபெற்றதும், விட்ட இடத்தில் இருந்து கதையைத் தொடர்ந்தார் பேபே.

“வாழ்வின் சுவராஸ்யமே அது எப்போதும் கற்பித்துக்கொண்டே இருப்பதே. அன்பு என்பது கொடுக்கப்படும் ஒரு வஸ்துவே அன்றி, எதையும் மீள எதிர்பார்ப்பதல்ல. காலங்கடந்த ஞானம் அது. இருந்தாலும், பேரன்பின் இழப்பு என்னைப் பெரும் அயர்ச்சிக்குள் தள்ளியது. நாட்கள் வாரங்களாகி, மாதங்களாகி கடந்துபோயின. வாழ்வு நின்று போயிற்று.

அவளிடம் ஒரு யாசகனைப்போல் கெஞ்சினேன், மன்றாடினேன். “உன்னில் எனக்கு அன்பு இல்லை” என்றாள். இருந்தாலும், பல மாதங்கள் காத்திருந்தேன். தொடர்ந்து தொடர்புகொண்டேன், அழுதேன், பித்தன் போலானேன். அந்த அன்புக்காக நான் படும் வலியை வார்த்தைகளில் அடக்கிவிட முடியாது.

இத்தனை வயதிலும் ஒரு பெண்ணின் அன்புக்காக கெஞ்சிக் கொண்டிருப்பதை நினைத்து எனக்கு என்னில் வெறுப்பாக இருந்தது. இருந்தாலும் அவள் மீதான பேரன்பு குறையவே இல்லை.

எது உனக்குரியதோ அது உன்னிடம் தங்கும். எதையும் வற்புறுத்தி வாழ்வில் நிறுத்தி வைத்துக்கொள்ள முடியாது என்பது புரிந்திருந்தாலும், காதலுற்ற மனம் அதை உள்வாங்கிக் கொள்வதாயில்லை.

பத்து நாட்களுக்கு முன், வாழ்வு மங்கி, இனி மீளமுடியாது என்று உழன்ற ஒரு மாலைப் பொழுதில், அவளைச் சந்தித்த அதே அல்முதேனா தேவாலயத்தில் மண்டியிட்டு செபித்துக்கொண்டிருந்தபோது, ஒரு குரல், ‘சாண்டியாகோ டி கம்போஸ்டெலாக்குப் போ' என்றது.

ஒரு வாரத்திற்கு முன் பணிவிடுத்தல் கொடுத்தேன். இருந்த செல்வாக்கின் காரணமாக உடனயாக பணிவிடுப்பு கிடைத்தது. வீட்டையும் வாகனத்தையும் விற்பதற்கு ஆதனத் தரகரிடம் கொடுத்தேன். அவை விற்கப்பட்டுவிட்டன என்று இன்று செய்தி கிடைத்திருக்கிறது.

முதல் நாள் நடந்து களைத்து, நீர்க் கொப்பளங்களுடன் குந்தியிருந்தபோதுதான் நீ என்னைக் கண்டாய். இந்தப் பாவியுடன் நடக்க வேண்டும் என்று உனக்கு விதிக்கப்பட்டதன் பயன்தான், இன்று உனக்கு எனது கதையைச் சொல்லியிருக்கிறேன்” என்றார்.

பச்ரான் என்னைக் காற்றில் தூக்கியிருந்தது. நான் அவரைப் பார்த்துத் தோழைமையுடன் புன்னகைத்தேன் என்றுதான் நினைக்கிறேன்.

மற்றைய நண்பர், “நான் புறப்படுகிறேன். யாத்திரை சிறக்கட்டும்” என்று தனது கிண்ணத்தை உயர்த்திப் பிடித்தார்.

எமது கிண்ணங்கள் மோதிக்கொண்டன.

அவர் எழும்பி நடந்தார். வெளியேறும் கதவைப் பரிசாரகன் அவருக்குக் காண்பிக்க வேண்டிய நிலையை பச்ரான் ஏற்படுத்தி இருந்தது.

அவர் சென்றதும் பேபே, பரிசாரகனை நோக்கி கையை உயர்த்தி... “இருப்பதில், மிக உசத்தியான இனிப்பு உணவை எடுத்து வாருங்கள்” என்றார்.

சற்று நேரத்தில் சீஸ் கேக்கும் கப்புச்சீனோ கோப்பியும் வந்தது.

மீண்டும் கையை உயர்த்தி, விரலால் எழுதுவது போன்று காண்பித்து, உணவுக்கான பற்றுச் சீட்டைத் தருமாறு காண்பித்தார்.

அதைக் கண்ட நான், “இன்று கொடுக்கிறேன்” என்றேன்,

“நீ நாளைக்கு கொடு. இன்னும் பல நாட்கள் நாம் இணைந்து நடக்கவேண்டும். எனவே, இன்று எனது முறை.”

அவரது வேண்டுகோளை மறுக்க முடியவில்லை.

பரிசாரகன், கட்டணத் தெகையை எழுதி எடுத்துவர முன்னமே, பேபே தனது ‘அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் கோல்ட் கார்ட்’-ஐ மேசையில் வைத்தார். திரும்பி வந்த பரிசாரகன் இரண்டு கிண்ணங்களில் பச்ரான் எடுத்து வந்து, “இது உங்களுக்கு எங்கள் உணவகத்தின் அன்பளிப்பு” என்றார்.

நான் ஏற்கனவே காற்றில் நடப்பதுபோன்று உணர்ந்து கொண்டிருந்தேன். பேபே பறந்துகொண்டிருந்தார்.

“எனது அருமை இலங்கை நண்பனே! எனது மட்ரீட் நகரத்து வாழ்வு முடிந்து விட்டது. அவள் இல்லாது அங்கு வாழ விரும்பவில்லை. நகரத்தின் அனைத்து இடங்களிலும் அவளுடனான ஏதோ ஒரு நினைவு ஒட்டிக்கிடந்து வலியைத் தருகிறது.

ஒரு கிராமத்தில், சுற்றாடலைப் பாதிக்காத, மறுசுழற்சி முறையிலான ஒரு பண்ணை அமைத்துக்கொண்டு அமைதியாக வாழப்போகிறேன். இந்தப் பெரிய உலகில் எனக்கென்று ஒரு சிறு இடம் இருக்கும்தானே? சிலவேளை எனது பேரன்பு என்னைத் தேடி அங்கு வரலாமல்லவா?” என்று அவர் முடித்தபோது…

“பேபே… எனது மொழி உலகின் மிகப் பழைய மொழிகளில் ஒன்று. ‘நல்ல மாட்டுக்கு ஒரு சூடு’ என்று எங்களிடம் பழமொழி ஒன்று இருக்கிறது”

”முட்டாளே! பெண்ணின்றி வாழமுடியாது. அவள் நீர் போன்றவள். குளிரவும் செய்வாள், கொதிக்கவும் செய்வாள். அவளைக் கையாள்வதுதான் கலை…" என்றபோது எமது நாக்குகளில் சொற்கள் உருண்டு பிரண்டு தடக்கித் தடுமாறத் தொடங்கியிருந்தன..

பேபே… முடிந்து விட்ட சீஸ் கேக் இருந்த சிறிய பீங்கானை கரண்டியால் வழித்து வழித்து நக்கிக்கொண்டிருந்தார்.

“அருமை நண்ப… பேபே!" என்று நான் உரையாற்றத் தொடங்கினேன். எனது வாழ்வின் கதையை நான் முடித்தபோது, ”தோழனே… உலகில் ஒரே முகச்சாயலில் ஏழுபேர் இருக்கிறார்களாம்” என்றார் பேபே.

அன்றிரவு, உணவகம் மூடும்வரையில் பேபே சுந்தரத் தமிழிலும் நான் ஸ்பானிஷ் மொழியிலும் மாறி மாறி வாழ்வு பற்றி சம்பாஷித்துக் கொண்டிருந்தோம்.

(அம்ருதா புரட்டாதி இதழில் வெளிவந்த பத்தி)

மறதிக்கரையிடை வழியும் காலநதி

பத்தாம் வகுப்பில் கற்றுக்கொண்டிருந்தபோது, சித்திரை வெய்யில் நாளொன்றில் அம்மாவிடம் அழுது புரண்டு மட்டக்களப்பு Fashion houseஇல் நானூற்றி இருபத்தைந்து ரூபாய்க்கு நீலநிறமானதொரு 'மொண்டியா' மணிக்கூடு வாங்கிக்கொண்டேன்.


அந்நாட்களில் எனது நண்பர்களிடத்தில் பேக்கரி பாஸ்கரினிடத்தில் மட்டும்தான் மணிக்கூடு இருந்தது. பேக்கரி பாஸ்கரன் வந்தாறுமூலையிலும், நான் மட்டக்களப்பிலும் கற்றுக்கொண்டிருந்தோம். தினமும் மணிக்கூட்டை அணிந்து செல்வது, நிலவில் கால்வைத்த நீல் ஆமஸ்ட்ரோங் போன்ற பிரபல்யத்தைத் தந்திருந்த நாட்கள்.

அந்நாட்களிலொருநாள் பாடசாலை முடிந்து வரும்போது, மட்டக்களப்பின் பழைய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த உன்னிச்சை செல்வதற்கான 273 இலக்கப் பேருந்தினுள் “எத்தனை மணி?” என்று இரண்டு சொற்கள் அடங்கிய ஒரு பேரிலிக்கியத்தை நிலவின் பெயர்கொண்ட ஒருத்தி கேட்டு வைத்தாள். அவளின் கண்களில் நேரத்தையறியும் ஆவல் இருக்கவில்லை.

எனது தந்தையார் 1960களின் நடுப்பகுதியில், ஒரு ரலி மிதிவண்டியை தனது தோழர் ஒருவரிடமிருந்து வாங்கியிருந்தார். என்னிடம் “எத்தனை மணி?” என்ற கேள்வியைக் கேட்டது அப்பாவிற்குத் துவிச்சக்கர வண்டியை விற்ற தோழரின் பேத்தி என்பது எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை. அந்நேரத்தில் அதுவா முக்கியம்?

அழியாத கோலங்கள் - சோபா, குரு - ஸ்ரீதேவி ஆகியோரைவிட அழகானவள். நாம் கண்களால் பேசியதைவிட, நேரில் பேசிக் கொண்டதில்லை. கண்களின் மொழிபோன்ற மொழியெதுவுமில்லையல்லவா! நேரகாலமின்றி நான் அடிக்கடி எல்லைவீதிக்கு ஏன் சென்று வந்தேன் என்பது இப்போது உங்களுக்குப் புரிந்திருக்கும்.

பதின்மக் காதலுக்கு உணர்வுகளைவிட, வேறு எதையும் கிரகிக்க முடியாதல்லவா? அவளின் இரண்டு சொற்களேயான கேள்வியில் அமிழ்ந்துபோனது ஆறேழுமாதங்கள். அது ஒரு நாவலுக்கான தனிக் கதை.

1980களின் கோடையில், அவளுடனான கதையை ஆர்வக்கோளாறின் காரணமாக ஒரு கொப்பியில் எழுதிவைத்திருந்தேன்.

அம்மா அதனைக் கண்டெடுத்து வாசித்துவிட்டு, என்னைக் கிணற்றடிக்கு வருமாறு அழைத்தார். கிணற்றடி எனக்கு போதிமரமாகலாம் என்ற நினைப்பு அவருக்கு இருந்தது.

“ராசா… நீ நன்றாக எழுதுகிறாய்...” என்று ஆரம்பித்து, “உன் வயதில் இப்படி வரும். ஆனால், இதுவே வாழ்க்கையல்ல. முதலில் படி, பின்பு உன் விருப்பப்படி செய். ஆனால், அப்பாவுக்குத் தெரிந்தால் …” என்று விட்டு நிறுத்தினார்.

அவர் “செத்தாய்” என்பதை உச்சரிக்கவில்லை என்பதை புரிந்துகொண்டேன்.

அம்மா சொன்னது போன்றே மறுவருடம் இன்னொருத்தியுடன் காதல் கசிந்துருகியது. அதையும் அறிந்தபோது “படி” என்ற வார்த்தையுடன் நிறுத்திக்கொண்டார். அப்பாவைப்பற்றி எதுவும் சொல்லவில்லை. அவர் பரலோகம் சென்றுவிட்டிருந்தார்.

அக்காதல் பதினைந்து வருடங்கள் தொடர்ந்து திருமணப் பேச்சாகியபோது, முதலில் வாழ்த்தியவரும் அவர்தான். பதினாறு வருடங்களின் பின்பொருநாள் அம்மாவின் மடியில் விழுந்தழுதபோது எனது தலையை நீவிவிட்டபடியே…

“உன் விருப்ப்பபடி செய்” என்றார்

மணவிலக்காகியபோதும், அவர் எதையும் சொல்லவில்லை. இதன் பின்பு ஓரிரு வருடங்களில் அம்மாவை நினைவழிவு நோய் பற்றிக்கொள்ளத்தொடங்கியது.

அந்நாட்களில் இருந்து இன்றுவரை ஏறத்தாழ ஏழெட்டு ஆண்டுகள் அவரைப்பற்றிப் பதிவுசெய்து வந்திருக்கிறேன். நினைவுகளை எழுதிச் சேர்ப்பவன் நான் என்பதைத் தவிர, அதற்கு வேறு காரணங்கள் இல்லை.

அப்பதிவுகளை வாசித்த பலரின் பின்னூட்டங்களும் தொலைபேசி அழைப்புக்களும், உரையாடல்களும் அம்மா, அவர்களுக்கும் நெருக்கமாகிவிட்டார் என்று அறியத்தந்திருக்கின்றன. ஏன் இப்போது அம்மாவைப்பற்றி எதுவும் எழுதுவதில்லை என்று கேட்பவர்களும் உண்டு.

2022 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் 11ஆம் திகதி மாலை 23.00 மணிபோல் நான்கு ஆண்டுகளுக்கு முன் எடுத்த அம்மாவின் புகைப்படம் ஒன்றினை முகப்புத்தகத்தில் பதிவிட்டேன். ஓரிரு நிமிடங்களுக்குள் முன்பின்பறியாத ஒருவரிடமிருந்து தொலைபேசி அழைப்பு வந்தது. அவருக்கு வயது இருபதுகளின் இறுதியாக அல்லது முப்பதுகளின் ஆரம்பமாக இருக்கலாம். முன்பு ஒருபோதும் அறிமுகமில்லாதவர். முகப்புத்தக நண்பர்.

“அண்ணை, அம்மாவின் படத்தை அகற்றிவிடுங்கள். அந்தப் படம் எனது மனதுக்கு மிகவும் அந்தரிப்பான உணர்வைத் தருகிறது” என்று கேட்டார்.

அந்தப் புகைப்படத்தில் அம்மா தனது கட்டிலில் அமர்ந்திருந்து கண்களை மூடிக் கைகூப்பியபடியே, தன்னை மறந்து எதையோ வேண்டிக்கொண்டிருந்தார். புகைப்படத்தின் கீழ் இப்படி எழுதியிருந்தேன்

“ பரலோகத்தில் இருக்கும் முருக பிதாவே! இந்தப் படத்தை எடுத்துக்கொண்டிருக்கும் எனது மூத்த மகனை இரட்சிப்பீராக”

எனக்கு ஒரு தம்பி ஒரு தங்கை. புனித விவிலியத்தில் தொலைந்து போய் மீண்டுவரும் மகன்போன்ற கதை என்னுடையது. அவரது மற்றைய இரண்டு குழந்தைகளையும்விட, நான் மாறுபட்டவன். என் மனம் அழைத்துச் சென்றவழியே வாழ்ந்தவன். அம்மாவும் எனது பதின்மக்காலத்திலிருந்தே என்னிஸ்டப்படியே வாழ அனுமதித்தவர். நினைவுகள் அவரை விட்டு அகலும் வரை எனக்காகக் கடவுளை வேண்டிக்கொண்டே இருந்தார். எனவே, அந்தப் புகைப்படம் எனக்கு மிகவும் பிடித்தமானது.

அவரிடம் “அந்தப் படத்தில் என்ன தவறிருக்கிறது?” என்று கேட்டேன்.

“உங்களின் பதிவுகளின் ஊடாக அம்மாவை பல ஆண்டுகளாக மனதுக்கு மிக நெருக்கமானவராகவே உணர்கிறேன். அவரது இந்தப் புகைப்படம் உங்களது நகைச்சுவையையும் கடந்து, அவரைப்பற்றி நான் கொண்டிருக்கும் உணர்வுகளை நோகடிக்கிறது. இவ்வளவு நெகிழ்ந்து உருகி கடவுளை வேண்டும் புகைப்படத்தை அகற்றிவிடுங்கள்” என்றும் வேறு சில காரணங்களையும் சொன்னார்.

தனது தாயைத் தவிர்த்து வேறு ஒருவரிடம் இவ்வாறான உணர்வு ஏற்படுவது சாதாரணமானதல்லவே! அம்மா ஏதோ ஒரு வகையில் அவரது மனதையும் அசைத்திருக்காதிருந்திருந்தால், அவர் அவ்வாறு கேட்டிருக்க மாட்டாரல்லவா.

எப்போதும் எனது உணர்வுகளின் வழி வாழ்ந்தவன் நான். அதன் காரணமாக நான் பெற்ற வலிகளுக்கும் பெற்றுக்கொண்ட பேரிழப்புக்களுக்கும் அளவில்லை. உண்மையைத் திரிப்பதும் பொய்யும் புரட்டும் எனக்கு ஆகாதவை.

அதேபோல் வாழ்வில் சில கணங்களில் சிலரது வார்த்தைகள் சத்தியமானவை என்று தோன்றும். அப்படியான ஒரு கணத்தில் அவர் கேட்டதுபோன்று, அம்மாவின் புகைப்படத்தையும் பதிவையும் பொதுவெளியில் இருந்து மறைத்துக்கொண்டேன்.

இது நடந்து மூன்று வாரங்களில் காலம் என்னை நான்காண்டுகளின் பின்பு, திடீரென்று அம்மாவிடம் அழைத்து வந்திருக்கிறது.

இந்த நான்காண்டுகளில் அம்மா முற்றிலும் மாறிவிட்டார். நினைவழிவு நோய் அவரை முற்றிலும் தனக்குள் இழுத்துக்கொண்டுவிட்டது. நான் யார் என்பதையேனும் அவர் அறியமாட்டார். நினைவுகள் அறுந்து அறுந்து கிடக்கின்றன என்று கூறும் நிலையையும், அவர் கடந்துவிட்டார். நினைவுகள் அவரிடம் இருந்து முழுவதுமாக அகன்றுவிட்டிருக்கின்றன. மொழியையும் அவர் இழந்துவிட்டார். தொடர்ச்சியாக ஒரு சிறு வசனத்தையேனும் அவரால் பேச முடிவதில்லை. அவரிடம் “அது, ம்” ஆகிய இரண்டு மூன்று சொற்களே மீதமிருப்பதாய் உணர்கிறேன்.

1965ஆம் ஆண்டு ஏறாவூர் பொலிஸ் குவாட்டர்ஸ் க்கு முன்பாக அமைந்திருந்த சுருட்டுச் சங்கக் கட்டத்தில் வைத்து, எனது தந்தையார் நான்கு கதிரைகளையும் ஒரு மேசையையும் இன்னும் சில தளபாடங்களையும் செய்வித்தார். முதிரை மரத்திலானவை அவை.

நோர்வேயில் இருந்து இலங்கை வந்து அம்மாவிடம் சென்றபோது, அவர் அப்பா செய்வித்த நாற்காலியில் உட்கார்ந்திருந்திருந்தார். நான் ஒருவன் உள்ளே வருவதையேனும் அவர் உணரவில்லை.

அருகே அமர்ந்து “அம்மா” என்றேன்.

அமைதி.

“அம்மா”

பேரமைதி.

மீண்டும் “அம்மா, நான் சஞ்சயன். என்னைத் தெரிகிறதா?” என்கிறேன். பதில் இல்லை. என்னைத் திரும்பி பார்க்கிறார். உணர்வுகள் எதையும் முகத்தில் காண முடியவில்லை.

அவரின் கையை எனது கைக்குள் எடுத்து வைத்துப் பிடித்துக்கொண்டு “அம்மா” என்கிறேன்.

பதில் இல்லை. பலமுறை முயன்றபின்

“ம்” என்று பதில் கிடைக்கிறது.

என்னை அவருக்கு நினைவிருக்கிறது என்ற நப்பாசையில் "என்னைத் தெரியுமா அம்மா?” என்கிறேன். கணங்கள் நிமிடங்களாகிக் கடக்கின்றன. அவரிடமிருந்து பதிலேதும் இல்லை.

அவருக்குக் காலணியை அணிவித்துவிட்டு, உதவியாளருடன் இணைந்து நாற்காலியிலிருந்து எழுப்பி, இரண்டு கைகளையும் பிடித்துக்கொண்டு வாசலுக்கு அழைத்து வந்தேன். நடக்கப் பழகும் குழந்தை, தாயின் கைகளைப் பற்றி சமநிலையைப் பேணுவதுபோன்று, எனது கைகளைப் பற்றியபடி நடந்தார். எதுவுமே பேசவில்லை.

சற்று நடந்தபின், மீண்டும் அவரது நாற்காலியில் இருத்தினேன். அருகிருந்த பாவைப்பிள்ளையை கையிலெடுத்து அணைத்துக்கொண்டார்.

அம்மா திரும்பி என்னைப் பார்க்கிறார். இருப்பினும், அவரது முகத்திலோ அல்லது கண்களிலோ எதுவித உணர்வுமில்லை.

அம்மா என்னை அடையாளம் கண்டுகொள்ளவேண்டும் என்று மனது அடித்துக்கொள்கிறது. “அம்மா உங்கட மூத்த மகன் சஞ்சயன்” என்கிறேன்.

கூர்ந்து நோர்க்குகிறார் என்னை.

“என்னைத் தெரிகிறதா அம்மா?”

'முன்பின் அறியாதவர்களை ஒரு பச்சைக்குழந்தை எவ்வாறு எதிர்கொள்ளுமோ’ அவ்வாறு அவர் முகம் இருக்கிறது.

அவர் கையை நீட்டிக் காண்பித் திசையைப் பார்க்கிறேன். எதுவுமற்ற சுவற்றினை நோக்கிக் காண்பித்தபடி “அது” என்கிறார்.

அவரருகே இருந்த மேசையில் சில பக்கங்கள் கிழிந்த புத்தகம் இருக்கிறது. புத்தகத்தைக் கையில் எடுத்து சில பக்கங்களைப் புரட்டுகிறார்.

அம்மாவிடமிருந்தே எனக்கு வாசிப்புப்பழக்கம் கிட்டியது. தினமும் குறைந்தது அரைமணி நேரமாவது வாசிப்பார். சாப்பிடும்போதும் அவருக்குப் புத்தகம் வேண்டும். புத்தகம் வாங்க என்று எப்போது பணம்கேட்டாலும் தவறாமல் கிடைக்கும். "சாண்டில்யனை 13 – 14 வயதில் வாசிக்காதே வளர்ந்தாப் பிறகு வாசிக்கலாம்" என்பார். அவருக்குத் தெரியாமல் 14 வயதுக்குள் சாண்டில்யனையும், மஞ்சலழகி காஞ்சனை இளையபல்வன் ஆகியோரின் சல்லாபங்களையும் கரைத்துக் குடித்திருந்தேன்.

அம்மா அநிச்சையான செயற்பாடுபோல் தனது புத்தகத்தை எனது கையில் வைத்து அழுத்துகிறார். அவர் கண்கள் வெளியே நிலத்தில் நின்றிருந்த குருவியொன்றில் நிலைத்திருக்கின்றன.

அம்மாவின் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். பிரபஞ்சனின் ’மானிடம் வெல்லும்’. நான் இலங்கைக்கு வரும்போதெல்லாம் எடுத்துவரும் புத்தகங்களை அம்மா “எனக்குத் தா. வாசித்துவிட்டுத் தருகிறேன்” என்பார். நினைவழிவு நோயின் பின் ஓரிரு பக்கங்களுக்கு அதிகமாக அவர் வாசிப்பதில்லை. என்ன வாசிக்கிறோம் என்பது தெரியாது, முன்னட்டையின் பின்புறத்தில் இருந்து உரத்து வாசிக்கத் தொடங்குவார். புத்தகத்தினை அச்சிட்டது யார்? எழுதியது யார்? விலை...? என்று அனைத்தையும் வாசித்துவிட்டு, மீண்டும் ஆரம்பத்திலிருந்து ஆரம்பிப்பார்.

அம்மா அமர்ந்திருக்கும் நாற்காலிக்கு இரண்டு பக்கங்களிலும் அகன்ற பகுதி இருக்கிறது. அதில் ஒன்றில் நானும் மற்றையதில் தம்பியும் எமது பால்யக் காலத்தில் அம்மாவின் இருபக்கத்திலும் உட்கார்ந்திருக்க, அவர் வாசித்த கதைகளுக்கு அளவேயில்லை. அம்மா மிக அழகாக வாசிப்பார்.

சில வருடங்களுக்கு முன்பொருமுறை சிறுவர் கதையொன்றை அம்மாவிடம் கொடுத்து வாசிக்கச் சொன்னேன். நினைவழிவு நோய் அதிகம் பாதிக்காத நாட்கள் அவை. அதனை ஒளிப்பதிவு செய்தும் வைத்திருக்கிறேன். நினைவுகளை பதிவுசெய்துகொள்வது வாழ்வின் அயர்ச்சியைப் போக்க உதவும் என்று காலம் கற்பித்து விட்டிருக்கிறது. உண்மையும் அதுதானே.

அம்மா அருகிருந்த பாவைப்பிள்ளையை எடுத்து, அதன் தலையைத் தடவிகொடுக்கிறார். அவரின் மடிவரை குனிந்து அவரது கையை எனது தலையில் வைத்துக்கொள்கிறேன். அவர் கையை எடுத்து பாவைப் பிள்ளையின் முகத்தைத் தடவுகிறார்.

மீண்டும் அவரது கையைப் பிடித்து “அம்மா நான் உங்களின் மூத்த மகன்” என்றபோது குரல் தழும்பியது.

மடியில் தலையைச் சாய்த்துக்கொண்டேன். பாவைப் பிள்ளையின் மீதிருந்த ஒரு கையை எடுத்து எனது தலையில் வைக்கிறார். பதினாறு வருடங்களின் முன் அவரது மடியில் விழுந்து “அம்மா மணவிலக்குப் பெறப்போகிறேன்” என்றபோது, எனது தலையைத் தடவிய கையின் வெம்மையை உணர்கிறேன். அன்றும் அவர் எதையும் பேசவில்லை. இன்றும் எதையும் பேசவில்லை.

அவரிடம் இருந்து புறப்பட்டபோது “அம்மா, நான் போய்வருகிறேன்” என்றுவிட்டு, அவரின் பதிலுக்காக காத்திருக்கிறேன்.

அமைதியாகக் கழிகின்றன சில கணங்கள்.

எனது தலையில் இருந்த கையை எடுத்து, எனது கையை தனது இரண்டு கைகளினாலும் பற்றிக்கொண்டு நீவிக்கொடுத்துவிட்டு, இறுகப்பற்றிக்கொள்கிறார்”.

அவரது கையின் அழுத்தம் அந்த கணத்தில் அவர் என்னை அடையாளம் கண்டுகொண்டிருந்திருக்க வேண்டும் என்பதை உணர்த்தியதுபோன்றிருந்தது.

#அம்மாவின்_அட்டகாசங்கள்

***

அம்மாபற்றிய பதிவுகளின் தொகுப்பு தைமாதமளவில் நூலாக வெளிவருகின்றது.