காயங்களின் வடுக்கள்

அபியும் நானும் படத்தை பல தடவைகள் பார்த்திருக்கிறேன். இன்றும் பார்த்தேன். அதில் மகளுக்கு காதுகுத்தியபோது ரத்தம் வந்தது பற்றி பிரிதிவிராஜ், பிரகாஸ்ராஜ்இடம் விபரிக்கும் காட்சியின் பின் என்னால் இன்று படத்தில் லயிக்க முடியவில்லை. மனது நினைவகளுக்குள் மூழ்கத்தொடங்கியது.

சில நாட்களாகவே எழுதுவதற்கான உந்துதல்இருந்தும் எதை எழுதுவது என்று தெரியாதிருந்தேன். மூன்று நாட்களுக்கு முன்பு ஒரு கனவில் இருந்து, நான், விளித்துக்கொண்டபோது எழுதுவதற்கு அருமையான ஒரு கரு கிடைத்திருந்தது. அந்த மகிழ்ச்சியில் மீண்டும் தூங்கிப்போனேன். ஆனால் காலையில் அந்தக் கனவும், அந்தக் கருவும் மறந்துபோயிருந்தது. அந்தக் கரு என்னவென்று சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் அது நினைவில் வருவதாயில்லை.

ஆனால் அபியும் நானும் எனக்கு ஒரு கருவைத் தந்திருக்கிறது. என் குழந்தைகளுடன் வாழ்ந்திருந்த காலங்களில் நானும் பிரகாஸ்ராஜ் போன்றே இருந்தேன். பிரகாஸ்ராஜ்க்காவது ஒரு பெண் குழந்தை. எனக்கோ இரண்டு: அவர்களுடனான நாட்கள் மிகவும் இனிமையானவை. இன்றும் என்னைத் தாலாட்டும் நாட்கள், அவை.

குழந்தைகளுக்கு சிறு வலியேற்படும்போதும் நாம் வெகுவாய்ப் பதறிப்போகிறோம். ஆனால் குழந்தைகளோ தங்கள் வலியைப்பற்றி பெரிதாய் அலட்டிக்கொள்வதில்லை. இப்படித்தான் ஒரு நாள் எனது தொழிட்சாலைக்கு வந்த தொலைபேசி, மகள் ஒரு தகரப்டப்பா ஒன்றினுள் விரலைவிட்டு இழுத்ததால் அது அவளின் விரலை பெரிதாக வெட்டிவிட்டதாகவும் உடனே வரவும் என்று கூறியது.

வீடு சென்று மகளை அழைத்துக்கொண்டு வைத்தியரிடம் சென்றேன். மகள் அழுது முடித்து என் கழுத்தைக் கட்டிக்கொண்டிருந்தாள்.

வைத்தியரும் வந்தார். விரலைச்சுற்றியிருந்த துணியை மகளுடன் பேசியபடியே, அவள் அழாதிருப்பதை பாராட்டியபடியே ‌மிக மெதுவாய் அகற்றிக்கொண்டிருந்தார். என்மடியில் இருந்த மகளும் அவரின் பேச்சுக்கு பதில் கூறியபடியே தனது காயத்தை பார்த்துக்கொண்டிருந்தாள்.

வைத்தியர் காயத்த்தை சுற்றியிருந்த துணியை அகற்றினார். ஆட்காட்டி விரலின் நுனிப்பகுதியில் பெருங்காயம் ஒன்று இருந்து. மகளுக்கு வலித்திருக்கவேண்டும் தனது முகத்தை எனது கழுத்துக்குள் புதைத்து விக்கி விக்கி அழத்தொடங்கினாள். வைத்தியர்  விறைப்பு மருந்தை இட்டவாறே அவளுடன் பேச்சுக்கொடுத்துக்கொண்டிருந்தார். நான் அவளைத் தேற்ற முயற்சித்துக்கொண்டிருந்தேன்.

அவளின் கையில் இருந்து வழிந்துகொண்டிருந்த இரத்தத்தைக் கண்டதும் எனக்கு தலைசுற்றத் தொடங்கியது. அசௌகரீயம் உணர்ந்தேன். வைத்தியரிடம் கூறியதும் ஒரு குவளையில் நீர் தந்தார். அதை அருந்தியதும் ஓரளவு நிதானம் திரும்பியது. காயத்தை பரிசோதித்த வைத்தியர், இக்காயத்திற்கு தையல் போடவேண்டிய அவசியம் இல்லை என்று கூறி மருந்திட்டு காயம் ஆறும்வரையில் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை காயத்தினை சுத்தப்படுத்தி மருந்திடவேண்டும் என்றும், விரலை மேல்நோக்கி வைத்திருக்கும்படியும் கூறி எம்மை அனுப்பினார்.

வரும் வழியில் மகள் கேட்ட அனைத்து இனிப்பு வகைகளையும் வாங்கிக்கொடுத்தேன். அவளோ காயத்தை மறந்துபோயிருந்தாள். ஆனால் முழங்கையை மடித்து  மருந்திட்ட விரலை மட்டும் நிமிர்த்திவைத்திருந்தாள். வீடு வந்ததும் அவளை மிகக் கவனமாகப் பார்த்துக்கொண்டேன். அதன் பின்னான சில நாட்கள் அவளுக்கு மருந்திடும் போது அல்லது காயத்தினை சுத்திகரித்து புதிய துணி சுற்றும் போது அவளைவிட எனக்கே அதிகமாக வலித்தது. மிக மிக அவதானமாகவே எதையும் செய்தேன். விரைவாகச் செய், அல்லது என்னை செய்ய விடு என்பாள் மகள், சில வேளைகளில். அவளைவிட எனக்கே அந்நேரங்கள் வலியைத்தந்தன.

அவள் எதைச் செய்தாலும் அவளின் விரல் மட்டும் கீழ்நோக்கி இருக்கவில்லை. எப்பொழுதும் ஒரு விரலை நிமிர்த்திப் பிடித்தபடியே இருந்தாள், நடந்தாள், ஓடினாள், உறங்கினாள், உறக்கத்தில் இருந்து எழும்பினாள்.

அவளைக் குளிப்பாட்டும் போதும் அந்தக் கையை உயரத்தில் பிடித்திருப்பாள். இயற்கை உபாதைகளை கடந்துகொள்ளும் நேரங்களிலும் அவளின் அந்த விரல் மேல்நோக்கி தூக்கப்பட்டிருக்கும்.

சில நாட்களின் பின் அவளின் கை குணமாகியது. டாக்டரிடம் காட்டினோம். குணமாகிவிட்டது என்றார். ஆனாள் மகளோ தனது கைவிரலை தூக்கிப்பிடித்தவாறே நின்றாள். அவளுக்கு இனி கையை கீழேவிடுங்கள் என்று பல நாட்கள் கூறி, அதன் பின்பே அவள் தனது கைவிரலை தூக்கிப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்திக்கொண்டாள்.

இதன் பின்பான சில வருடங்களில் அவள் தனக்கு தனி அறை வேண்டும் என்றும், அறைக்கு இளவரசிகளின் படங்கள் இருக்கும் சுவரலங்காரத்தை செய்து தாருங்கள் என்றாள். சரி என்று அதற்கான வேலைகளைச் செய்துகொண்டிருந்த ஒரு நாள், நான் சுவருக்கான அழகிய இளவரசிகளின் படம் பதிக்கப்பட்ட அலங்காரங்களைச் செய்து கொண்டிருந்தேன். என்னிடம் அந்த அலங்கார மட்டைகளை வெட்டும் மிக மிக கூர்மையான  தகடு இருந்தது.

நான் அலங்காரங்களைச் செய்யும் கவனத்தில் இருந்தபோது, அக்காள் அந்த கூர்மையானத் தகட்டினை எடுக்க, தங்கையும் அதை இழுக்க அது தங்கையின் கையினை மிக ஆழமாக வெட்டிவிட்டது. இரத்தம் ஆறாய் ஓடியபோதும் அவளிடம் இருந்து எவ்வித சத்தமும் வரவில்லை. அவசர அவரசமாய் துணியினால் சுற்றிக்கட்டி  அவசரசிகிச்சைப்பிரிவுக்கு அவளை அழைத்துப்போனோம்.

அக்காவிடம் இது தற்செயலாக நடந்தது. உங்களில் பிழையில்லை என்று கூறி அவளை சமாதானப்படுத்த முயற்சித்தேன். அவள் அழுதுகொண்டே சிவந்துபோன கண்களுடன் தங்கையின் அருகிலேயே நின்றிருந்தாள்.

வைத்தியர் எமது வீட்டிற்கு அருகில் இருப்பவராகையால் மகளுக்கு அவரை ஏற்கனவே அறிமுகமாயிருந்தது. அவர்கள் வீட்டில் ஒரு குதிரை இருந்தது. எனது மகளுக்கும் குதிரைப் பைத்தியம் பிடித்திருந்த நாட்கள் அவை. எனவே வைத்தியர் அவளுடன் குதிரைகள்பற்றி உரையாடியபடியே விறைப்பு மருந்திட்டு, அவளின் கையில் 8 தையல்கள் இட்டார். என்னுடலில் தையலிட்டது போன்று துடித்துப்போனேன். ஆனால் அவளோ அழவே இல்லை. வைத்தியரின் கதைகளில் லயித்துப்போயிருந்தாள். 

அக் காயமும் சில நாட்களிகளின் பின் ஆறிப்போயிற்று.

இன்னொருமுறை கையை முறித்துக்கொண்டாள்.  வைத்தியசாலையில் முழங்கையி்ல் இருந்து விரல்கள் வரையிலான பகுதிக்கு Plaster of Paris இட்டு அனுப்பினார்கள்.  வரும் வழியிலேயே  வெள்ளை நிறததிலான அந்த Plaster of Paris இல் என் பெயரை  எழுது என்றாள். எழுதினேன். வீட்டிற்குச் சென்றதும் அக்காளிடமும் பெயரை எழுது என்றாள். அவளும் எழுதினாள். மறு நாள் பாடசாலையில் இருந்து அவள் வீடு வந்த போது அவளின்  கையில் அவளின்  ஆசிரியரின் கையெழுத்தில்  இருந்து வகுப்புத் தோழியர், தோழர்களின் கையெழுத்து  இருந்தது. அதன் பின்பு எமது வீட்டிற்கு  வந்தவர்களும் அவளின் கையில் கையெழுத்திட கட்டளையிடப்பட்டார்கள்.

சில நாட்களின் பின் அவளுக்கு வியர்வை, மற்றும் காற்றோட்டம் இன்மையினால் Plaster of Paris  இருந்த இடத்தில் அசௌகரீயமான உணர்வு ஏற்பட்டது. நானும் மெதுவாய் ஒரு பென்சிலினை அவளின் Plaster of Paris க்குள் இட்டு சொறிந்து விடுவேன். கண்கள் சொருகி சொக்கிப்போயிருப்பாள். அப்பா நீ கெட்டிக்காரன் என்று கூறியபடியே ஒரு முத்தம் பதித்துச் செல்வாள்.

அவளின் கை நனையாமல் அவளைக் குளிப்பாட்டுவது பெரும் வேலை. முதலில் பேப்பர் சுற்றுவேன். பின்பு போலித்தீன் பை சுற்றிக் குளிப்பாட்டுவேன்.  உடைமாற்றும் போது கழுத்தில் இருக்கும் பட்டியில் இருந்து கையைக் மெதுவாய் அகற்றி உடையணிந்தபின் மீண்டும் கையைத் தொங்கவிடுவேன். ஆனால் அதில் அவளுக்கு இஸ்டமில்லை. எனது கண்டனங்களை அவள் கவனித்ததாயில்லை. கழுத்துப்பட்டியில் அவளின் கை இருக்காது. எனினும் எப்படியோ  4 வாரங்களின் பின் அவளின் கை சுகமாகிவிட்டது என்று வைத்தியர் கூறிய பின்பே என் மனம் அமைதியாகியது. அவளின் கையில் இருந்து அகற்றப்பட்ட Plaster of Paris இன்றும் பாதுகாப்பாய் இருக்கிறது ஒரிடத்தில். எனது பெரும் பொக்கிஷங்களின் ஒன்று, அது.

இச்சம்பவங்கள் ஏறத்தாள 6 - 7 வருடங்களுக்கு முன்பு நடந்தவை

அண்மையில் அவளுக்கு 12  வயதான போது அவளைச் சந்தித்தபோது,  நான், அவளின் விரலை வருடியவாறு ”அம்மா, இந்த விரலில் ஏற்பட்ட காயம் நினைவிருக்கிறதா” என்றேன்.

மயக்கும் புன்னகையுடன், ஆம் என்று தலையாட்டினாள். இரண்டு காயங்களும் அவளுக்கு நினைவிருந்தன. அவை பற்றிய சம்பவங்களையும் கூறினாள். நான் பயந்து பயந்து அவளின் விரலுக்கு மருந்திட்ட நாட்களையும், புண் ஆறிய பின்பும் கைவிரலை தூக்கித்திரிந்ததும் அவளுக்கு நினைவிருந்தது. உங்களை வெருட்டி வெருட்டி கனக்க இனிப்பு வாங்கினேன் என்று அவள் கூறிய போது, சேர்ந்து சிரித்தோம்.

அந்தக் காயங்கள் இரண்டும் அவளின் கையில் சிறு வடுக்களைத் தந்திருக்கிறது. 
அந்த நாட்கள், அவளின் நினைவில் பசுமையான நினைவுகளாயிருப்பது எனக்குள் ஒரு இதமான வடுவைத் தந்திருக்கிறது.

வாழ்வு என்றும் எதையாவது கற்றுக்கொடுத்துக்கொண்டேயிருக்கிறது. கற்றுக்கொண்டேயிருப்போமாக!


முகப்புத்தகத்தில் ஒரு அந்தரங்கம்


அன்பு நண்பர் ஒருவரின் கணணியுனுள் ஒருவித வைரஸ் புகுந்து அட்டகாசம் பண்ணுகிறதாம், இணையத்தினுள் செல்லும் வேளைகளில் ”அந்த மாதிரியான” படம்தான் திரையில் தெரிகிறது என்றும், அதை தர்மபத்தினி கண்டு சந்தேகப்பட்ட போது, தானும் நகைச்சுவையாக ”எத்தனை நாளைக்குத் தான் உன்னைப் பார்க்கிறரது” என்று ஒரு A ‌ ஜோக் அடித்தாராம்.

அதன்பின் தர்மபத்தினியின் பார்வை மதுரையை எரித்த கண்ணகியின் பார்வை போலிருப்பதாகவும், உடனே இந்தப் பிரச்சனையை தீர்ததுவைய்யுங்கள் இல்லை என்றால் உங்களுடன் தான் நான் இனிமேல் தங்கவேண்டும் என்று கூறியபடியே இரவு 9 மணிபோல் கதவைத்தட்டினார், நண்பர்.

கையோடு கணிணியைக் கமக்கட்டுக்குள் வைத்துக்கொண்டுவந்திருந்தார்.

எனது இதயம் எதையும் தாங்கும். ஆனால் நண்பரை என்னுடன் தங்கவைப்பதைத் தாங்காது. எனவே கணணியை வாங்கி மேசையில் வைத்தேன்.

நண்பர், எனது சமயலறைக்குள் புகுந்து, ஒரு கிளாஸ் எடுத்துவந்து எனது மேசையில் இருந்த பழரசத்தை ஊற்றி, ரசித்துக் குடித்தார். பின்பு எனது கணிணியை எடுத்து மடியில் வைத்தபடியே முகப்பத்தகத்தில் யாருடனோ சிரித்துச் சிரித்து உரையாடிக்கொண்டிருந்தார். நானோ அவரது கணிணியை இயக்கிக்கொண்டிருந்தேன்.


”டேய், கொம்பியூட்டருக்குள்ள எக்கச்சக்க படம் இருக்கு, முக்கியமா அவள் இந்த வருசம் ஊருக்கு போய் தன்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் என்று ஒரு தொகை படம் இருக்கு. அதுகள் கவனமடா, அதுகளுக்கு ஏதும் நடந்தால் என்னைய இனிமேல் நீ பார்க்க ஏலாது” என்று கணணியைத் தரும்போது கூறியிருந்தார்.
 
அவர் கூறியதை, ”ஒஸ்லோ கஜனி” என்றழைக்கப்படும் நான் மறந்துபோவேன்  என்றோ, அதனால் நான் சிக்கலில் மாட்டுவேன் என்றோ எனக்கு அப்போது தெரிந்திருக்கவில்லை.


நானும் எனது மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக சில கேள்விகளைக் கேட்டேன்அவரிடம்.
”டேய்! என்ன ஒப்பரோட்டிவ் சிஸ்டம் வேணும்?”
”எதையாவது போடு, பேஸ்புக்கு போனால் காணும்”
”இல்லை, XP, Vista, Win 7 இதுல எது வேணும்”

நண்பர் தனது Iphone ஐ இயக்கினார். (சம்பாசனை தொடர்கிறது)

”எடியேய், உனக்கு என்ன சிஸ்டம் வேணும் என்று கேக்கிறான்”
”அப்பிடியெண்டால் எனன? (நண்பரின் தர்மபத்தினி)

நண்பர் என்னிடம் ”என்னட்ட சொன்னததை இவளிட்டயும் சொல்லு” என்று நினைத்திருப்பார் என்றே நினைக்கிறேன். தொலைபேசியை என்னிடம் நீட்டினார்.

”வணக்கம்” என்றேன் நான்
”அண்ணை! அவருக்கு கொம்பியூட்டரைப்பற்றி ஒண்டும் தெரியாது, எல்லாத்துக்கும் எனக்கு போன் பண்ணுறார்” என்றார் நண்பரின் தர்மபத்தினி. (சப்பாஆஆ என்றது எனது உள் மனது)

”இல்ல இல்ல அவன் உங்களில் இருக்குற அளவுகடந்த மரியாதையில் தானே கேக்கிறான்” (எனக்கு அடிக்கடி சமைத்துப்போடும் புண்ணியவதியை சற்று குளிரவைப்பதில் தவறில்லை என்பதால் சற்று தாராளமாகவே அவரைப் புகழ்ந்தேன்)

”அண்ணை! எனக்கு நாடகம், சூரியாவின்ட படம் வந்தால் காணும். மிச்சத்தை அவரிட்ட கேளுங்கோ, அவர வெளியில அலைந்து திரியாம கெதியில வீட்ட வரச்சொல்லுங்கோ” என்று கூறிவிட்டு தொலைபேசி அழைப்பைத் துண்டித்தார்.

நண்பரோ இரண்டாவது கிளாஸ் கடந்து, சற்று அதிகமாகவே சிரித்தபடியே உதட்டை நாக்கால் நனைத்தபடி முகப்புத்தகத்தில் ஐக்கியமாகியிருந்தார்.

அவனிடம் எதையும் கேட்டால் சிக்கல் வரும் என்ப்தால் Win 7 இன்ஸ்டால் பண்ணினேன். 

நண்பர் நான் இன்ஸ்டால் பண்ணிய அந்த இரண்டரை மணி நேரத்தில் ஒரு போத்தல் வைன் முடித்து மிகவும் ஜாலியான மூடில், முகப்புத்தகத்தில் உரையாடிக்கொண்டிருந்தார். எனது கீபோட் இல் இருந்து புகை வருவது போல் பிரமை ஏற்பட்டது எனக்கு. அவ்வளவு விரைவாக எழுத்தித் தள்ளிக்கொண்டிருந்தார், நண்பர்.

வேலை முடிந்ததும், நண்கரிடம் கூறினேன். நண்பரோ தான் மிகுந்த நிதானத்துடன் இருப்பதாக நினைத்து, எனது கதவினில் சாய்ந்தபடியே, நிதானமாகப் புன்னகைகிறேன், என்று நினைத்து கோணலாகப் புன்னகைத்தார்.

”டேய் மச்சான், நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” இதை இரண்டுதரம் கூறியபின் அடுத்த வசனமாக என்னத்தை கூறுவது என்று யோசித்தார். எதுவும் வாயில் வராததால் அவரால் நிதானமாக கதவில் சாய்திருக்க முடியவில்லை. எனவே கட்டிலில் குந்திக்கொண்டார்.

எனது வாய் சும்மாயிருக்கவில்லை.
”டேய்! என்னது பேஸ்புக்கில உதட்டை நனைத்து நனைத்து எழுதுகிறாய், கனக்க சிரிக்கிறாய், என்ன விசயம்” என்று கேட்டேன்
கோணலான சிரிப்புடன் ”அது ரகசியம்” என்றார்.
பொறுடீ... வீட்ட வந்து ஆத்தாளிட்ட போட்டுக்கொடுக்கிறேன் என்று கறுவிக்கொண்டேன்.

கணணியுடன் புறப்பட்ட நண்பர், திடீர் என்று என்னைப் பார்த்து
”டேய்! அந்த ”பலான படங்கள்” இனியும் வரு‌மா என்று கேட்ட போது அவரின் குரலில் ஒரு சோகம் இளையோடியிருந்தது போலிருந்தது எனக்கு.
”ஒஸ்லோ முருகன் சத்திமா இனிவராது” என்றேன்.
”டேய்! அவளின்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்கள் எல்லாம் இருக்குத்தானே? ” என்ற போது தான் எனது மரமண்டையில் நான் அவர் கூறியதை மறந்து, அனைத்துப்படங்களையும் அழித்திருப்பது தெரியவந்தது.

நண்பர் மீண்டும் கேள்வியைக் கேட்டார். ” ஓம் ஓம். அப்ப நீ வீட்ட போ, இல்லாட்டி மனிசி தேடும்” என்றேன்
”யார் அவளோ, என்னைத் தேடுறதோ. தொல்லை தொலைந்தது என்று நினைத்து, இப்ப நாலாஞ்சாமத்தில் இருப்பாள்” என்றார் நண்பர்.

எப்படி உங்களுக்கெல்லாம் ரெண்டு கிளாஸ் பழரசம் போனதும் வீரம் பிறக்கிறது என்று கேட்க நினைத்தேன் என்றாலும் அடக்கிக்கொண்டேன்.

மறுநாள், நானாகவே நண்பரின் வீட்டுக்கு அழையாவிருந்தாளியாய் போய் உட்கார்ந்து கொண்டேன்.

”அண்ணை, உங்களிட்ட சொன்னனான் தானே இந்தாளுக்கு கொம்பியூட்டரப் பற்றி ஒன்றும் தொரியாது என்று”
நான் ஆம் என்பது போல தலையை மேலும் கீழுமாய் ஆட்டுகிறேன். பின்பு பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு அவர் என்ன சொல்லப்போகிறார் என்று காத்திருந்தேன்.

”என்ட காணி, வீடு, கோயில், பெரியம்மா, சின்னம்மா, கீரிமலை, நல்லூர் படங்க‌ளையெல்லாம் இந்த ஆள் எனவோ செய்துட்டார், அதுகளைக் காணேல்ல, அண்ணண்” என்றார்

நான் நண்பனைப் பார்த்து

”டேய்! எவ்வளவு முக்கியமான படங்கள், என்னடா செய்த நீ” என்று குரலை கடுமையாக்கிக் கேட்டேன்.

சோபாவின் முலையில் ஒடுங்கி்ப்போயிருந்த நண்பன்

”மச்சான், நேற்று வீட்ட வந்த பிறகு நீ சொன்ன மாதிரி படங்கள் இருக்குதா என்று பார்த்தன். அங்க ஒன்றும் இருக்கேல்லடா” என்றார் நண்பர்.

நான் வாய் திறக்கமுதலே நண்பரின் மனைவி முந்திக்கொண்டார்”

”உங்களுக்கு ஒண்டும் ஒழுங்காச் செய்யத்தெரியாது, எத்தன தரம் அவர் உங்களுக்கு கொம்பியூட்டர் திருத்தித் தந்திருக்கிறார். அவர பிழைசொல்லாதீங்க. நீங்க நேற்று வரேக்க உங்களுக்கு பயங்கர வெறி, உங்கட சிரிப்பில கண்டுபிடிச்சனான். நீங்கள் தான் படம் பார்க்கிறன் என்று அழித்திருப்பீங்க” எனறு கூறினார்.

”என்ன, பயங்கர வெறியோ? டேய் எங்கயாடா போய் ஊத்தின நீ” என்று கதையைத் திசைதிருப்பமுயற்சித்தேன்.
நண்பனின் மனைவி தொடர்ந்தார்
”உங்க எத்தனைபேர் இருக்கினம், இல்லாட்டி போலந்து ஆக்களிட்ட வாங்கிக் குடிச்சிருப்பார்” என்றார். அத்துடன் நண்பருக்கு செம டோஸ் விட்டுக்கொண்டேயிருந்தார்.

எனக்கு திடீர் என்று ஒரு யோசனை வந்தது.

”நீங்க ரெண்டு பேரும் சண்டை பிடிக்காதீங்க. நீங்க ரெண்டு பேரும் நல்லா மெலிஞ்சு வடிவா இருக்கிறீங்க, உங்கட கமராவை கொண்டுவாங்க உங்க ரெண்டுபேரையும் வடிவா படம் எடுத்துத்தாறன்” என்றேன். எதிர்பார்த்த பலன் கிடைத்துது.

” நான் இப்ப சாப்பாட்டிலயும் கவனம், பின்னேரத்தில நடக்கிறனான், ஆனால் எனக்கெண்டால் இவர் மெலி்ஞ்சமாதிரி தெரியேல்ல. நீங்கள் உங்கட ப்ரெண்டுக்கு சப்போர்ட் பண்ணுறீங்க” என்றபடியே கமராவை எடுத்துவந்தார்.

இருவரையும் சில படங்களை எடுத்தேன். அத்தோடு மெமரிகார்ட்ஐயும் கழட்டி எடுத்து காட்சட்டைப்பையினுள் போட்டுக்கொண்டேன்.

”சாப்பிட்டுட்டு போங்கோ, உங்கட கருவாடுதான் இண்டைக்கு இங்கயும் என்றார்”. ஒரு பிடி பிடித்துவிட்டு புறப்படும் போது இண்டைக்கு கொம்பியூட்டர தாங்க இவன் அழித்த படங்களை திருப்பி எடுக்க ஏலுமோ என்று பார்க்கிறேன் என்று கூறி கணணியை வாங்கிச் சென்றேன். நண்பன் குளிந்த தலை நிமிராது உட்கார்ந்திருந்தான்

வீடு வந்து மெமரிக்கார்ட் இல் படம் இருக்கிறதா என்று பார்த்தேன். ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவில்லை. கமரா வாங்கிய காலத்திலிருந்து எடுத்த படங்கள் அனைத்தும் இருந்தன. அவற்றை கணணியுக்குள் ஏற்றி, மறுநாள் அவர்கள் வீட்டில் கொண்டுசென்று கொடுத்தேன்.

”இனிமேல் இந்த கொம்பிட்டரை நீங்க தொடப்படாது” என்றார் மனைவி, எனது நண்பனைப் பார்த்து.
என்னால் நண்பனைப் பார்க்க முடியவில்லை. மேலே பார்த்துக்கொண்டிருந்தேன்.
அன்றும் இறைச்சிப்பொரியல், இறைச்சிக்கறி என்று சாப்பாடு அமர்க்களப்பட்டது.

அவர்களுடன் உணவு உண்ணும் போது நண்பனிடம் ” டேய் உன்ட பேஸ்புக் எப்படி போகுது” என்று கேட்டேன். நண்பன் மேசைக்குக் கீழ்ப்பகுதியினூடாக எனது காலை மிதித்தான். அவனின் மனைவி, அது என்ன அண்ணை என்று கேட்ட போது ”அது பெடியங்களின்ட” விசயம் என்றேன்.

அப்ப அது ஏன்  கிழவன்களுக்கு? என்று மடக்கினார். என்னிடம் இல்லை, ஆனால் இவன் வைச்சிருக்கிறார்ன் என்றேன். அக்கினிப் பார்வை ஒன்றை வீசினார். அதுல கனக்க பொம்பிளையளும் வருவினம், எல்லாரும் கதைப்பினம், வீடியோவிலயும் பார்ப்பினம் என்று நான் கூறி முடிக்கமுன்பே, ”அதுதானோ மாப்பிள ரூமுக்குள்ள போயிருந்து கொம்பியூட்டர் பாவிக்கிறவர்” என்றார் மனைவி.

நண்பன் என்னை ” நண்பேன்டா” என்று கூறி தலையைக் குனிந்தபடியே ஆட்டிறைச்சியில் கவனத்தை செலுத்துவது போன்று நடித்துக்கொண்டிருந்தார்.

இனி எனக்குப் பக்கத்தில இருந்து தான் கொம்பியூட்டர பார்க்கலாம் இல்லாவிட்டால் தொடப்படாது என்னும் ரீதியில் தனது பத்ரகாளித் தோற்றத்தைக் காட்டிக்கொண்டிருந்தார் மனைவி.

அதன் பின் பல வாரங்கள் இவ் விடயத்தை மறந்து போயிருந்தேன்.
ஒரு நாள் நண்பரின் மகனின் பிறந்த நாள் வந்தது. என்னை அழைத்திருந்தார்கள்.

”இந்த ஆள், ஒழுங்கா படம் எடுக்காது, நீங்க எடுங்கோ அண்ணை” என்றார் நண்பரின் மனைவி. நண்பர் என்றும்போல் அன்றும் குனிந்த தலை நிமிராதிருந்தார்.

கமரைவை செக் பண்ணிப்பார்த்தேன். மெமரிக்கார்ட்ஐ காணவில்லை. அது எப்படி அங்கு இருக்கும்? அன்று நான் அதை எனது கணணியில் இட்டு படங்களை பிரதி செய்த பின் அது எனது கணணியிலேயே இருப்பது எனக்கு நினைவுக்கு வந்தது.

”எங்க மெமரிக்கார்ட்?” என்றேன். அப்படி என்றால் என்ன அண்ணண் என்றார் நண்பனின் மனைவி.
என்னிடம் கனக்க இருக்கு எடுத்துவருகிறேன் என்று புறப்பட்டேன். எனது அருமை நண்பருக்கு பலத்த அர்ச்சனை நடந்துகொண்டிருந்தது.

அவர்களன் மெமரிக்கார்ட்ஐ ‌ கொண்டுவந்து கமராவினுள் புகுத்தி படம் எடுத்துக்கொடுத்தேன்.

அன்றும் ”கல்யாண சமையல் சாதம்” பிரமாதமாயிருந்தது.

எனினும் மனச்சாட்சி உறுத்திக்கொண்டிருந்ததால் ஒரு வெள்ளி மாலை நண்பனை அழைத்து நீராகாரம் படைத்தேன். பழரசத்தில் இருந்து, ருஸ்யநாட்டுப் பானம் வரை அருந்தி இருவருக்கும் மதிமங்கும் நிலையில் முழுக்கதையையும் நண்பணுக்குச் சொன்னேன். நண்பர் என்னை விட மிக மிக அதிகமாகவே சுருதிசேர்த்திருந்தார். எனவே அவர் நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்து, இப்படிச் சொன்னார்:

”அவளுக்கு கொம்பியூட்டரைப்பற்றித் தெரியாது, சரியான நாட்டுக்கட்டை, அவள் தான் அழித்திருப்பாள். உன்ட புண்ணியத்தால படம் கிடைச்சிட்டுது, மச்சான். நீ ஒரு கொம்பியூட்டர் கிங்டா” என்றார்.

நண்பருக்கு ருஸ்யநாட்டுப்பானம் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்துவிட்டது என்பது புரிந்தது.

நானும் ”மச்சான் கொம்பியூட்டர் கிங்க்கு ஒரு சியெர்ஸ்..டா” என்று அவனின் கிளாசுடன் எனது கிளாசை முட்டினேன்.

இன்றும் அவர்களுக்கு நான்தான் கொம்பியூட்டர் கிங். என்ட மனிசனார் அழித்த படங்களை எடுத்துத் தந்தவர் என்று ஊருக்குள் நண்பரின் மனைவி ஏகத்தக்கும் புழழ்ந்துகொண்டிருக்கிறார், என்னை. நண்பருக்கு முகப்புத்தகத்தினுள் நுளைவதற்கும் தடை போட்டிருக்கிறார்.
இடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக!

அண்மையில் ஒரு தொலைபேசி அழைப்பினூடே ஒருவர் பேசினார். அவரை நான் சில காலங்களாக அறிவேன்.  ஏனைய தமிழர்களைப்போலல்லாது நேரடியாகவே விடயத்துக்கு வந்தார். அவரின் வாழ்வின் போராட்டத்திற்கு வழிகேட்டார். நானே, திசைதெரியாது தடுமாறிக்கொண்டிருக்கிறேன், என்னிடம் வழி கேட்கிறீர்களே என்று கூறினேன்.  சிரித்தார். சேர்நது சிரித்தோம்.

அடுத்து வந்த ஒரு மணிநேரமும், ஒரு வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருந்து, அவ் வாழ்க்கை முர்ச்சையடையும் நிலைவரையிலான கதையைக் கேட்டுக்கொண்டிருந்தேன். நானும் இவ்வாறான நாட்களை கடந்து கொண்டவன் என்பதால், சோகங்களைப் பகிர்ந்துகொள்வதன் அவசியத்தையும், அது தந்து போகும் ஆறுதலையும் நன்கே உணர்ந்திருக்கிறேன். இன்னொருவரின் சோகங்களை ஒருவர் பகிரும் போது அமைதியாய் செவிமடுத்தபடியே, அவர்கள் மனம் திறந்து பேசுவதற்கான சூழ்நிலையை ஏற்படுத்திக்கொடுப்பதன் மூலம் அவரின் சோகங்களின் கனம் பலமாய் குறைந்து போகும் என்பதனை நான் எனது வாழ்க்கையில் கடந்து வந்த பாதைகளினூடே அனுபவரீதியாக உணர்ந்துகொண்டுள்ளேன்.

அவர் கூறிய ஒரு வசனம் என்னை பலமாய் சிந்திக்க வைத்தது.

”நானோ, மூர்ச்சையடையும் நிலையி்ல் இருக்கிறேன், என்னைச் சுற்றியிருப்பவர்கள் எனக்குச் செய்யும் முதலுதவி  என்னைக் கொன்றுவிடும் போலிருக்கிறது” என்றார் அவர்.

வாழும் கலை என்னும் நோர்வேஜியப் புத்தக்தை வாசித்தபோது அதில் ஒரு முக்கிய கருத்தொன்று கூறப்பட்டிருந்தது. ” வாழ்வினை இன்னொருவருடன் சேர்ந்து, பகிர்ந்து வாழும் போது மற்றையவர் மீதான மரியாதையும், சுய மரியாதையும் இவற்றோடு அன்பும், காதலும் ஒன்றுடன் ஒன்று கலந்திருக்கவேண்டும்” என்றிருந்தது.

இவை எத்தனை உண்மையான வார்ததைகள் என்பதை வாழ்க்கை எனக்குக் கற்பித்திருக்கிறது. அவற்றைக் கற்று, உணரும் போது நான், வாழ்வின் பெரும்பகுதியை கடந்தும், தொலைத்தும் இருப்பதை உணர்கிறேன்.

ஒருவர் இல்லையேல் மற்றவர் இல்லை என்று  ஹோர்மோன்களின் ஆட்டங்கள் உச்சத்தில் இருக்கும் போது நினைத்திருந்த இருவரும் தனித்தனியே, மற்றையவர் போய்த் தொலையமாட்டாரா என்று நினைக்கும் நிலை எதனால் உருவாகிறது?

எப்போது நாம் மற்றையவர் எனக்குச் சொந்தமானவர் என்றும், அவரின் செயல்கள், கருத்துக்கள் போன்றவை என் செயல்கள், கருத்துக்கள் போன்றிருக்க வேண்டும் என்றும், மற்றையவரின் கருத்துக்கள், செயல்களுக்கு நாம் மதிப்பளிக்காமலும், என்று நாம் செயற்பட ஆரம்பிக்கிறோமோ அன்றே அவர்கள் இருவர்களுக்கிடையிலும் கருத்துவேறுபாடுகள் ஆரம்பிக்கின்றன.

கணவன், மனைவி, குழந்தை இப்படி எல்லா மனிதர்களிடத்தேயும் அவரவர்களுக்கென்ற ஒரு தனித்தன்மை இருக்கிறது. இந்தத் தனித்தன்மையினுள் மற்றயவர்கள் புகுவது ஒரு வித மனிதஉரிமை மீறலே.

அன்பின் முக்கிய அம்சங்களாக ஒருவரை ஒருவர் மதிப்பதும், ஒருவரை ஒருவர் செவிமடுப்பதும் இருக்கின்றன.

இரு மனிதர்கள் சேர்ந்துவாழும் உறவானது இருவரின் தனித்தன்மைகளும் இருவராலும் மதிக்கப்படும் போதே பலமானதோர் உறவாக மாறுகின்றது. இக் கருத்தானது இருவரினதும் சுயமரியாதையில் இருந்தே உருவாகிறது.

ஒரு மனிதனின் சுயமரியாதை அலட்சியப்படுத்தப்படும் போது அமைதியாயிருக்கும் விடுதலையுணர்வு விளித்துக்கொள்வதாயே நான் எண்ணுகிறேன். அதன் காரணமாய் ”ஏன்” என்னும் கேள்வியும், அதனால் தொடரும் வாதப் பிரதிவாதங்களும், அதிகாரமனப்பாங்கும், அதிகாரப் போட்டியும் பல மனிதர்களின் வாழ்வில் விளையாடியிருக்கிறன்றன. விளையாடுகின்றன.

என்னுடன் தொலைபேசியில் உரையாடிவரின் சுயமரியாதை பலமாய் அலட்சியப்படுத்தப்பட்டிருக்கிறது. அவரினுள் இருந்த விடுதலையுணர்வு கேள்வியெழுப்ப, அவரின் வாழ்வு கேள்விக்குறியாய் இருக்கிறது தற்போது.

”பல்லைக்கடிச்சுக்கொண்டு இரு”, ”பிள்ளைகளுக்காக பொறுத்துக்கொண்டு போ”, ”நீதான் விட்டுக்குடுத்துப்போகவேணும்” என்று இப்ப‌டி பல பல ஆலோசனைகளை இருபாலாருக்கும் கூறுபவர்கள் ஒரு மனிதனின் சுயமரியாதையை தாம் மதிக்கவில்லை என்பதை உணர்கிறார்கள் இல்லை என்பதே மிகவும் வேதனைக்கரிய விடமாகும்.  
 
குடும்பக் கப்பல் தண்ணீரில் முழ்கிறது எனக்கு உதவுங்கள் என்று கூக்குரலிடும் ஒருவருக்கு ”கப்பலுக்குள் வரும் தண்ணீரை இறைத்தால் கப்பல் தாளாது” என்று அறிவுரை கூறுபவர்களே எமது சமுதாயத்தில் அதிகமாக இருக்கிறார்களே அன்றி, கப்பலில் இருக்கும் ஓட்டைகளை அடைத்து, கப்பலுக்குள் நீர் புகாது இருக்க நடவடிக்கைகளை இருவரும் எடுங்கள் என்று கூறுபவர்கள் மிகவும் அரிதாகவே இருக்கிறார்கள்.

உறவுகள் பிரியும் போது, அந்த உறவுக்குள் அதிக அதிகாரத்துடன் இருந்த ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ மற்றையவர் பிரிந்துபோகும் காரணம் புரிவதில்லை. அவ் அதிகாரத்தின் காரணமாகவே மற்றையவரின் சுயமரியாதை காயப்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியாது போகிறது, அவரால். இந்த அதிகார மனப்பான்மையினால் அவர் தன்னை சுயவிமர்சனம் செய்து கொள்வதோ, மாற்றங்களை மனதார ஏற்று நடைமுறைப்படுத்துவதோ இல்லை. பல சொற்களை விட ஒரு செயல் வீரியமானது என்பது இங்கும் பொருந்துகிறது.

சில உறவுகள் காயப்படத் தொடங்கியபின் அவ்வுறவுகளில் அதிகாரத்தில் உள்ளவர்களின் குற்றச்சாட்டுகள் காலப்போக்கில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனதில் ”என்னில் தான் ஏதோ பிழை” என்னும் மனநிலையை உருக்கிவிடுகிறது. இது அவரது சுயநம்பிக்கையை மட்டுமல்ல சுய மரியாதையும் கலைத்துப்போடுகிறது. மேற்குறிப்பிடப்பட்ட அதிகாரத்தில் உள்ளவர்கள் நடைமுறைப்படுத்தும் ”முளைச்சலவை” கருத்துக்கள், மற்றையவரை நேர்மையாக சுயவிமர்சனம் செய்வது போன்று அல்லாது, தமது கருத்தினை மறைமுகமாக வலியுறுத்தி தமது கட்டுப்பாட்டுக்குள் மற்றையவரை வைத்திருக்கும் வடிவமாகவே இருக்கும்.

எனது தொலைபேசி நண்பரும், தான் மூளைச்சலவை செய்யப்படுதாயும், தனது சுயம் மறுக்கப்படுவதாயும், தனது நெருங்கிய சகோதர ‌சகோதரிகள், உறவினர்கள் கூட தனது சுயத்தை மதிக்காமல், கலாச்சாரம் என்னும் சொற்பதத்தினுள் தன்னை முர்ச்சைதெளிவிப்பதாய் நினைத்து முழ்கடிப்பதாய் உணர்வதாயும் கூறினார். 
 
புரிகிறது, நான் கடந்து வந்த பாதையில் நடந்துகொண்டிருக்கும் பலரைப்போன்று நீங்களும் நடந்துகொண்டிருக்கிறீர்கள் என்றேன்.  சிரித்தார், அவர். சேர்ந்து சிரித்தோம்.

ஓருவருக்கு நாம் சுதந்திரமளிக்கும் போது, அவனை அல்லது அவளை நீங்கள் இழப்பதற்கான அபாயம் இருக்கிறது என்பது உண்மையே, ஆனால் சுதந்திரமில்லாத ஒரு மனிதனை நீ பெற்றிருப்பாயானால் அம்மனிதனை நீ ஏற்கனவே இழந்துவிட்டாய் என்று எங்கோ வாசித்திருக்கிறேன். 
 
இவையிரண்டுக்குமிடையே தான் வாழ்வின் இரகசியம் ஒளிந்திருக்கிறது.

ஒரு குடும்பஉறவில் மகிழ்ச்சியாய் நாம் இருக்கவேண்டும் எனில் நாம் முக்கியமாக ஒன்றை உணர்ந்திருக்கவேண்டும் என்கிறார் ”வாழும் கலை”  புத்தகத்தின் எழுத்தாளர். அதாவது உனது எல்லாவிதமான தேவைகளை, உணர்ச்சிகளை மற்றவரால் திருப்தி செய்ய முடியாது என்பதை நீ மிகவும் தீர்க்கமாய் உணரவேண்டும், உன் தேவைகளை திருப்திசெய்யும் மனிதனை நீ பெற்றிருப்பாயானால் உன் தேவைகள் உனக்கு இருக்கவேண்டிய தேவைகளின் அளவை விட குறைந்திருக்கிருக்கிறது என்று  அர்த்தப்படுகிறது என்கிறார் அவர்.

தொலைபேசி நண்பரிடம், நீங்கள் இருவரும் மூழ்கும் கப்பலுக்குள் நீர் உட்புகாதிருக்கும் நடவடிக்கைகளை எடுங்கள். இருவரும் சேர்ந்தே கப்பலுக்குள் இருக்கும் நீரை அகற்றுங்கள். இருவரும் கப்பலை முழுமனதாக காப்பாற்றுவதற்கு முன்வராவிட்டால், கப்பல் மூழ்குவது நிட்சயம். அப்போது தற்பாதுகாப்புக்காக இருக்கும் கப்பலில் ஏறிக் கரைசேருங்கள், என்றேன்.

குழப்புறீங்களே என்று கூறி தொலைபேசியை வைத்தார்.
 
வாசகர்களாகிய உங்களையும் நான் குழப்பிருந்தால் மன்னியுங்கள். யார் கண்டது நானும் குழம்பியிருக்கிறேனோ என்னவொ?

வாழ்க்கை சொர்க்கத்தில் (வானத்தில்) நிட்சயிக்கப்படுகிறது என்று கூறப்படுகிறது. ஆம், இடியும் மின்னலும் கூட வானத்திலேயே நிட்சயிக்கப்படுகிறது. 
 
 இடியும் மின்னலுமற்ற ஒரு வாழ்வு உங்கள் வீட்டில் அமையக் கடவதாக!
 

வறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி

வறுமையின் கொடுமையில் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்ற முன்னாள் போராளி

அன்றைய தினம் காலையிலேயே எழுந்து விட்டேன். கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரரின் தேர்த்திருவிழாவினை காண்பதற்ககாவும், கொக்கட்டிச்சோலைக்கு சற்றுத் தொலைவில் வாழும் ஒரு முன்னாள் போராளியைச் சந்திப்பதாகவும் திட்டமிட்டிருந்தோம். மோட்டார்சைக்கில் மண்முனைக் கரையில் நிறுத்தப்பட்ட போது நேரம் 10 மணியிருக்கும். வாவியைக் கடப்பதற்கு உதவும் மிதப்புப் பாதைகள்  இரண்டும் இரு ‌கரைகளிலும் இருந்து புறப்பட்டு ஆற்றின் நடுவே வந்து கொண்டிருந்தன. ஒரு மிதப்புப் பாதையில் ஒரு சிறு வாகனம் ஏற்றப்பட்டிருந்தது. அந்த வாகனத்தின் கனத்தை தாங்க முடியாமல் ஒரு பக்கமாய் சாய்ந்தபடியே வந்துகொண்டிருந்தது, அந்த மிதப்புப்பாதை.  பாதை கரைக்கு வந்ததும் நாமும் ஏறிக்கொண்டோம்.  எம்முடன் ஒரு ஆட்டோவும், பல மோட்டார்சைக்கில்களும், மனிதர்களும் ஏறிக்கொண்டனர். நான் பயந்திருந்தபடி அசம்பாவிதங்கள் ஏதும் இன்றி பாதை எம்மை மறுகரையில் இறக்கிவிட்டது.

பறவைக்காவடிகள், முள்ளுக்காவடிகள், பக்கதர்கள் என்று பலரையும் கடந்தபடியே மேட்டார் சைக்கில் ஓடிக்கொண்டிருந்தது. வீரமும் சோகமும் விளைந்த கொக்கட்டிச்சோலைக்குள் நாம் நுளைந்த போது எமது மோட்டார்சைக்கிலை மேலே செல்ல அனுமதிக்க முடியாது என்றார்கள் திருவிழாவின் வாகனங்களை கட்டுப்படுத்தும் இளைஞர் கோஸ்டியினர். அவர்கள் காட்டிய இடத்தில் நிறுத்தும்படியும் கட்டளை வந்தது. அப்போது எனது வழிகாட்டி நண்பர் வாயில் விரலை வைத்து விசில் அடிக்க, அருகில் இருந்த ஒருவர் ”அண்ணை நீங்களா” என்ற படியே அருகில் வந்தார். அடுத்த நிமிடம் எமக்கு தொடர்ந்து செல்ல அனுமதி கிடைத்தது.

எனது வழிகாட்டி நண்பருக்கு எங்கு சென்றாலும் எல்லோரையும் தெரிந்திருந்தது. அவருக்கு தெரியாத ஒழுங்கையோ, தெருவோ, ஊரோ இருக்காது என்னுமளவுக்கு மனிதர் படுவாங்கரையை அறிந்துவைத்திருந்தார். சேவை நோக்கம் கொண்ட அவரை ஊர் பெருசுகள் எல்லோரும் பலரும் அறிந்திருந்தனர்.

படுவாங்கரை கடந்து சிறிது நேரத்தில் நாம் ஒரு சிறு கிராமத்தினுள் நின்றிருந்த போது எனது நண்பர் தொலைபேசியூடாக நாம் இன்று சந்திக்கவிருப்பவருடன் தொடர்புகொண்டு இடத்தை நிட்சயப்படுத்திய பின்னர் ஒரு சிறு ஒழுங்கையினூடாகச் சென்று ஒரு வீட்டின் முன் மோட்டார்சைக்கிலை நிறுத்தினார்.  எம்மை நோக்கி ஒரு சிறுவன் ஓடி வந்தான். அவனின் பின்னே அவனின் தாயார் வந்தார். உள்ளே செல்லமுடியாத அளவிலான ஒரு குடிசை. வெளியே கிணற்றிகு அருகே மரநிழலில் அமர்ந்து கொண்டோம். எம்மருகிலேயே அமர்ந்து கொண்டார் அந்தப் பெண்ணும்.

அவரின் ஒரு கை சிதைந்திருந்தது. தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான இடைவெளி மிகவும் சிறிதாக இருந்தது. நான் அதை கவனி்ப்பதை கண்ட அவர்,  2008ம் ஆண்டு இறுதியில் முழுமாதக் கர்ப்பிணியாக இருந்த போது செல் பட்டு தனது கை முறிந்த போது அதை மருத்துவர்கள் தகடுகள் வைத்து காப்பாற்றியதாகவும், அப்போது ‌தோள்மூட்டுக்கும் முழங்கையுக்குமான எலும்பில் பெரும்பகுதி அகற்றப்பட்டதாகவும் கூறினார். அந்தக் கையினால் எதுவித வேலைகளையும் செய்ய வேண்டாம் என்று கூறப்பட்டதாகவும் எனினும் கணவரை முள்ளிவாய்க்காலில் இழந்பின் கைக்குழந்தையை பராமரிப்பதற்காக அந்தக் கையை பாவித்ததனால் கையினுள் இருந்த தகடுகளும் ஆனிகளும் இடம்பெயர்ந்து பலத்த சிரமத்தை தந்த போது மீண்டும் வைத்தியர்களை அணுகியிருக்கிறார். ‌ அவரது கையை பரிசோதித்த வைத்தியர்கள் கையை அகற்றுமாறு அறிவுரை கூறிய போது அதை மறுத்து மீண்டும் ஒரு வைத்தியரிடம் சென்ற போது அவர் இந்தக் கையை காப்பாற்றுவது மிகக் கடினம் ஆனால் முயற்சிக்கிறேன் என்று முயற்சித்திருக்கிறார். ஆனால் அந்தக் கையால் எதுவித பாரத்தையும் தூக்கினால் கையை அகற்றவேண்டி வரும் என்னும் செய்தியும் கூறப்பட்டிருக்கிறது அவருக்கு.

அவர் வீட்டில் நான் தங்கியிருந்த போது அவர் கிணற்றில் நீர் அள்ளும் முறையைக் கண்ணுற்றேன். ”கப்பியில் இருந்த வரும் கயிற்றை ஒரு கையால் இழுத்து பின்பு குனிந்து இழுத்த கயிறை வாயினால் கவ்வி மீண்டும்  கயிற்றை இழுத்து” இவ்வாறு நீரை அள்ளுகிறார். இவரை இவரது வயதான தகப்பனாரே கவனித்துவருகிறார். ஆனால் அவர் தொழில் தேடிச் செல்லும் போது இவர் தனியேயே வாழ்க்கையை நடாத்துகிறார்.

தன்னால் தலை சீவி முடிகட்டவோ, உடைகளை ஏனையவர்கிளன் உதவியின்றி மாற்றிக்கொள்ளவோ முடிவதில்லை அவரால்.  குழந்தையை ஒரு கையால் பராமரிக்க மிகவும் சிரமப்படுகிறார். அவரின் உறவினர் ஒருவரின் உதவி கிடைக்கிறது என்பதனால் சமாளிக்கமுடிகிறது என்றார்.

அவரது உடலெங்கும் காயங்கள். ஒரு காலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இவரும் கணவரும்  போராளிகளாக இருந்திருக்கிறார்கள்.  2008 ம் ஆண்டு இறுதியில் காயப்பட்ட பின்னர் பிரசவம் நடந்திருக்கிறது. அதன் பின்பும் 2009ம் ஆண்டு மீண்டும் காயப்பட்டிருக்கிறார். காயங்களின் வலியும், சூழ்நிலைகளும் மன அழுத்ததை கொடுத்திருக்கின்றன. அந் நாட்களில் கணவரும் கொல்லப்பட மனம்பேதலித்து சில காலம் இருந்ததாயும், அந் நாட்களில் குழந்தையையும் தூக்கியபடியே பங்கருக்கு வெளியில் நின்றிருந்த நேரங்களில் அருகில் இருந்தவர்கள் இவரை பல முறை உள்ளே  பங்கரின் உள்ளே இழுத்து காப்பாற்றியதாகவும் கூறினார்.

அப்படி  அவர்  செல் மழைபோல் கொட்டிய நேரங்களில் வெளியே நின்றும் தனக்கு மரணம் வரவில்லையே என்று கூறியழுதார். முள்ளிவாய்க்கால் நாட்களின் பின் வருமானமின்றி, குழந்தைக்கான உணவுகளின்றி வாழ்ந்திருந்த நாட்களில் இரு தடவைகள் குழந்தையுடன் தற்கொலைக்கு முயன்று தோற்றிருக்கிறார்.

இவருடன் பேசிக்கொண்டிருந்த போது அவரின் படலைக்கருகே வந்த ஒருவருடன் உரையாடிவிட்டு வந்தார். அவர் கண் கலங்கியிருந்தது. ஏதும் பிரச்சனையா என்றார் எனது நண்பர்.

அண்மையில் கையை இரண்டாம் தரம் சத்திரசிகிச்சை செய்வதற்காக பணம் தேவைப்பட்டிருக்கிறது. உள்ளூரில் 20.000 ரூபா வட்டிக்கு எடுத்திருக்கிறார். மாதாந்தம் வட்டியாக 1200 ருபாய் கொடுத்துவந்திருக்கிறார்.  ஏறத்தாள ஒரு வருடத்தின் பின்பும் கடன் வாங்கிய தொகை குறையவில்லை. வட்டியை மட்டுமே கொடுத்திருக்கிறார். தற்பொது  கடன் வாங்கிய தொகை மீளச் செலுத்தமாறு கேட்டுப்போகிறார் வட்டிக்குப் பணம் வழங்கியவர்.

20000 ரூபாவுக்கு 1200 ரூபா வட்டி என்பது எனக்குப் நம்ப முடியாத தொகையாக இருந்ததால் இரு தடவை அது பற்றி மீண்டும் மீண்டும் விசாரித்தேன். அருகில் இருந்த நண்பர் ஆம் இது ஊர் வட்டி. அவர் சொல்வது உண்மைதான் என்றார். என்னால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்கமுடியவில்லை.

எவ்வாறு இந்த வட்டிக்கான பணத்தைக் கொடுத்தீர்கள் என்று கேட்டேன். ஒரு உதவி நிறுவனம் தனக்கு தரும் 2000ரூபாயில் இந்தத் தொகையை செலுத்துவதாகவும் மிகுதியிருக்கும் 800 ரூபாயில் மாதச் செலவை கவனிப்பதாயும் கூறினார்.  சில நிமிடங்கள் பெருத்த மௌனமொன்று எம்மிடையே நிலவிற்று.

சிகிச்‌சைக்கான பணம் தேவைப்பட்டபோது தனது காணித்துண்டினை  பொறுப்பாகவைத்து கடன்பெற்றிருக்கிறார். அது தற்போது 1 இலட்சம் ருபாவாக வளர்ந்து நிற்கிறது என்றார்.

போராட்டத்திற்காக வாழ்வினை அர்ப்பணித்தவர்களின் வாழ்வு இத்தனை கொடியதாக இருக்கும் என்று நான் கற்பனையிலும் நினைத்ததில்லை. கற்பனைக்கும் அப்பாற்பட்ட வேதனைகளையும்‌ சோதனைகளையும் கொண்டிருக்கிறது அவர்களது வாழ்வு.

அங்கிருந்தபடியே நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்து இவருக்கு உதவ முடியுமா என்றேன். மிக விரைவிலேயே இந்தப் போராளியின் கடனை அடைப்பதற்கான பணத்தை அனுப்பபுவதாகப்பதில் அனுப்பியிருந்தார், நண்பர்.  அன்று மாலையே எனது வழிகாட்டி நண்பர் வட்டிக்கு கொடுத்தவரிடம் சென்று இந்தப் போராளியின் கடனை அடைத்தார். அதன் பின்பு நாம் கொக்கட்டிச்சோலை தேர்த்திருவிழாவில் அவரைச் சந்தித்த போது நன்றி என்று கூறி தான்தோன்றீஸ்வரர்தான்  உங்களை இன்று அனுப்பியிருக்கிறார் என்றார். எந்த நன்றியும்  எனது நண்பருக்கே உரியது என்று கூறினேன்.  அவர் முகத்தில் ஒருவிதமான அமைதி தெரிந்தது. இதற்குப் பின்னான நாட்களில் இவரின் வேறுசில கடன்களையும் இன்னொரு நண்பர் செலுத்தி அவரின் காணிக்கான உறுதியையும் பெற்றுக்கொடுத்தார். இவர்களை விட வேறுசிலரும் இவருக்கு தற்போது உதவுகிறார்கள்.

அன்று மாலை மட்டக்களப்பில் ஒரு உணவகத்தில் மாலையுணவின் விலை 800ருபா என்ற போது உணவின் ருசியை மனச்சாட்சி தின்றிருந்தது.


நோர்வே வந்தபின் ஒரு நண்பருடன் உரையாடியபோது அவர் அந்தப் பெண்ணிண்  அனைத்துக் கடன்களையும் தீர்த்துவைத்தார்.

----------------------------------
அறாவட்டிக்கு இவர்களுக்கு பணம் கொடுத்து கொழுக்கும் பண முதலைகள் ஏனோ நல்லவர்கள் போல் தெரிகிறார்கள் போராட்டத்தின் பெயரால் ‌சேர்த்த பணங்களை சுருட்டிக்கொண்டவர்களுடன் ஒப்பிடும் போது.

அறா வட்டிக்கு பணம் கொடுப்பவன் ஏதோ ஒரு வழியில் இவர்களது வாழ்விற்கு உதவுகிறான் என்றே கூறவேண்டும். ஆனால் மக்களுக்காக வழங்கப்பட்ட பணத்தையே சுருட்டிக்கொண்ட மகான்கள் போராளிகளை மறந்துபோயிருப்பினும் இன்றும் மக்கள் கூடுமிடங்களில் இன்றும் பணம் பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள்.

மறைந்து விட்ட போராளிகளுக்கு  பெரியளவில்அஞ்சலி செய்யும் இவ்வமைப்புக்கள், உயிர்வாழ்வதற்கு போராடும் இம் மனிதர்களைக் கவனிக்காத காரணமும், போராளிகளின் இன்றைய நிலைபற்றி மக்களிடம் எடுத்துக் கூறி புலம் பெயர்ந்து வாழும் மக்களை உதவி தேவைப்படுபவர்களுடன் இணைப்பதற்கான முயற்சிகளை எடுக்காதிருப்பதற்கான காரணமும் என்ன? தெரிந்தால் பதில் அறியத்தாருங்கள். நானும் புரிந்துகொள்ள முயற்சிக்கிறேன்.