புண்ணியமூர்த்தி சோ் (மாஸ்டர்)

முதன் முதலில், 1976 இல், மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் அறிமுகமாகிய ‌ஆசான், எனது வழிகாட்டி. 1984 வரை தினமும் சந்தித்த சரித்திரம், அவர்.

பரந்த முகம். அந்தக்காலத்து ரவிச்சந்திரனின் மீசை போன்ற மெல்லியதோர் மீசை. சற்றே பெரிதான பற்கள், லைட்- கரியர் பூட்டிய சைக்கில், வெள்ளைசேட் வௌ்ளை கால்சட்டை, மிகுந்த எளிமை, இது தான் அவர்.

இவற்றைவிட அவரை அடையாளம்காண அவரின் குரல் போதுமானது.

சில குரல்கள், அவர்கள் சொல்லாமலே எம்மை கீழ்படிய வைக்கும். ஆனால் புண்ணியமூர்த்திசேரின் குரலில் ஒன்றும் அப்படி ஒரு வசீகரமும் இல்லை.

ரோட்டோரத்தால் நடக்கும்போது காதுக்குள்வந்து ஒலியெழுப்பும் பாரவூர்தியின் ஹோன் போன்றது அவரது குரல். கீழ்ப்படியச் சொல்லாது, சும்மா ஒரு பயத்தை மட்டும் தற்காலிகமாய் தந்து போகும், அவ்வளவுதான்.
ஆனால் மாணவர்களின் காதுமட்டும் கிழிந்து தொங்கும், சில நிமிடங்கள்.

விளையாட்டுப்போட்டிகளின்போது பல ஆசிரியர்களுக்கு ஒலிபெருக்கி தேவைப்படும், ஆனால் எங்கள் புண்ணியமூர்த்திசேர் அதைத் தூக்கி நான் கண்டதே இல்லை. அவருக்கு அது தேவையும் இல்லை.

அவரிடம் இருந்த ஒரேஒரு கெட்டபழக்கம் மூக்குத்தூள் போடுவதுதான். அவரின் கைலேஞ்சியின் நிறம், வேண்டாம் அது பற்றி நாம் பேசவேண்டாம், இவ்விடத்தில். ஆனால் அவரின் கைலேஞ்சியை யார் அவருக்குத் தோய்த்துக்கொடுத்தார்கள் என்ற சந்தேகம் இன்றும் எனக்குண்டு. அவரே தோய்த்தாரா? இல்லாவிட்டால் மனைவி தோய்த்தாரா? மனைவியிடம் கொடுத்திருந்தார் எனின் புண்ணியமூர்த்திசோ்ருடன் எனக்கு மிகுந்த கோபம் வரும்.

காலைப் பொழுதுகளில் அவர் முதற்பாடம் கற்பிக்கும் போது அவரது வெள்ளைக் கால்சட்டையின் பொக்கட் வாயில்கள் இரண்டும் வெள்ளையாய் இருக்கும், ஆனால் கடைசிப் பாடம் எடுக்கும் போது ஐயோ!!!!!!! அதைக் கேக்காதீர்கள். ஆனால் தினமும் தோய்த்து வெள்ளையாய் மினுங்கும் காட்சட்டையை அணிந்துவருவார்.

ஒரு முறை, எங்களுடன் பாடசாலை விடுதியில் தங்கியிருந்த மனோகரன், இளங்கோஅண்ணண் கோஸ்டியிடம் அவர் மூக்குத்தூள் வாங்கக் குடுத்தபோது, அவர்கள் சிறிது மிளகாய்த்தூள் கலந்து...
அதை அவர் கண்ணை மூடி, தன்னை மறந்து
மூக்கினுள் ஊறுஞ்சியிழுத்து
சற்று நேரத்தின் பின்
தும்மித் தும்மிக் களைத்து
நிதானம் காற்றில் பறக்க
கோபத்தில் முகம் சிவக்க

மனோகரன், இளங்கொ அண்ணர்களின்
காது கிளியக் கிளிய
கத்தி அனுப்பியது
மட்டக்களப்பு மத்திய கல்லூரி
எமக்குத் தந்தனுப்பிய
மறக்க முடியாத
சிரிப்பலைகள்.

அன்பான,  பண்பான மனிதர். கத்துவாரே தவிர, அடிக்க மாட்டார். மனிதம் நிறைந்த மனிதர், அவர்.

வறுமைப்பட்ட மாணவர்களுக்கு தன் செலவில் பஸ் சீசன் டிக்கட் எடுத்துக் கொடுத்தவர்.

சுகாதாரம், விளையாட்டு, சாரணீயம், சிரமதானம், பள்ளிக்கூடத்திற்கு நேரஅட்டவனை தயாரிப்பது போன்றவையே அவரின் அடையாளங்கள். அவர் இல்லாதிருந்தால் எங்கள் பேராசான் பிரின்ஸ் சேர்கூட ஆட்டம் கண்டிருப்பார் என்பேன் நான். பாடசாலையின் சகல செயற்பாடுகளிலும் அவர் இருந்தார்

அவர்
பாடசாலைக்கு டைம் டேபிள் போடும் அழகு
அலாதியானது.
புள்ஸ்க்கைப்பேப்பர் நான்கு எடுத்து
அவற்றை, ஒன்றோடு ஒன்றோடு
வேப்பம் பிசின் போட்டு ஒட்டி
மஞ்சல்நிற மரத்திலான அடிமட்டத்தினால்
பல கோடுகளைக்
குறுக்கும் நெடுக்குமாய் போட்டு
அழித்து
மீண்டும் போட்டு

x அச்சில் வகுப்புகளின் பெயர் எழுதி
y அச்சில் ஆசிரியர்களின் பெயர் எழுதி
அப்பப்பா, பாடசாலைக்கே
குறிப்பு எழுதும் சாத்திரி போல
அடிக்கடி மூக்குத் தூள் போட்டபடி
தலையை அந்தப் பேப்பருக்குள்
பூகுத்தி வைத்திருப்பார்.
அந்த நேரத்தில்
”சோ்” என்று கூப்பிட்டால்
அவரின் வாய் கத்தாது
ஆனால், கண் கத்தும்.
எப்படியோ
எல்லோருக்கும்
பொருந்தக் கூடிய
நேர அட்டவணையைத் தயாரித்து
அவரின் கந்தோரில் ஒட்டி வைத்திருப்பார்.
(யாராவது அதை ஆவணப்படுத் தியிருந்தால் மகிழ்ச்சியடைவேன். இருக்குமா?)

அவரின் மூத்த மகன் நவனீதன் (பட்டப் பெயர் ”பூனை”) எங்களுடன் தான் படித்தான். மிகுந்த அமைதியானவன் தான். ஆனால் ஒரு முறை விவசாயத்தில் நாம் ”மரங்களை ஒட்டுதல்” பற்றிப் படித்த போது ”பூனை”  வீட்டிற்குப்போய் ரோசாப்பூ மரத்தை வெட்டி, வீட்டில் இருந்த பப்பாசி மரத்தோடு ஒட்டி, விவசாயப்புரட்சி செய்திருக்கிறான்.
 
அடுத்தநாள் இந்த விவசாயப்புரட்சியை எங்கள் அரசவையில் புண்ணியமூர்த்தி சேர் அறிவித்ததால்,  பாவம், பூனை, நொந்து நூலாய்ப் போனான்.

சுகாதாரப் பாடம் நடத்துவார். இனப்பெருக்கம் என்றால் சொல்லவா வேணும் கேட்கவா வேண்டும், அந்த காலத்தில்.

எங்கள் கேள்விகளுக்கு நக்கலும், குறும்பும், குசும்பும் கலந்து பதிலளித்து லாவகமாய் பாடம் நடாத்துவார்.

எங்கள் பின்வரிசைக் கதாநாயகனான அமீர்அலி, ஒரு முறை யாழ்ப்பாணத்தில் இருந்து வந்த போது, வின்சர் தியட்டரருகில் இருந்த பெட்டிக்கடையில் வாங்கிய ”பலான” புத்தகத்தை முழு வகுப்பும், இனிப்பை மொய்த ஈக்கள் போல சுற்றியிருந்து பார்த்தது.

நாம், உலகம் மறந்து ”உயர் இலக்கியம்” படித்துக்கொண்டிருந்த போது மெதுவாய் வந்து
ம்..ம் என்று கனைத்தார்
வேர்த்து விறைத்து நின்ற போது
ம் என்று கைய‌ை நீட்ட
”உயர் இலக்கியம்” கை மாறியது
தலையங்கம் பார்த்து
சிரித்தவர்
யாரும் வாசிக்காதவர்கள்
இருந்தால்
வந்து கேளுங்கோ
தாறேன், என்று சொல்லி எடுத்துச் சென்றார்.
‌அதே நாள்
பாடம் நடாத்த வந்த போது அதைப் பற்றி
தெரியதது போல‌வே பாடம் நடாத்தினார்.

வீட்டில் மாடு வளர்த்தார். அந் நாட்களில் அவர்தான் பாடசாலை விடுதிக்கும் பொறுப்பாயிருந்தார். விடுதி குசினிக் கழிவுகளை வீட்டிற்குக் கொண்டு  செல்வார். அந்தக் காலத்திலேயே recycle பற்றி தெரிந்து வைத்திருந்த மனிதரவர்.

பாடசாலையின் ஒவ்வோரு நிகழ்விலும் அவரின் அடையாளமும், ஆளுமையும், உழைப்பும் இருக்கும். இரவு பகல் பாராது பாடசாலைக்கு என உழைத்த மனிதரவர். பிரின்ஸ் காசிநாதரின் ஆட்சிக் காலத்தில் அவரின் வலதுகரமாய் இருந்தவர்.

அன்றிருந்த மட். மத்திய கல்லூரியின் மிடுக்கும், செருக்கும் இன்று இல்லாதது வலிக்கிறது. மிகவும் வலிக்கிறது. ‌மிக நெருங்கிய உறவொன்று தொலைந்துபோனது போன்றதோர் வலி அது.

நான், வழிதடுமாறிய நேரங்களில் தோளில் கைபோட்டு, நண்பனாய் மாறி மனச்சாட்சியுடன் உரையாடக் கற்றுத்தந்தவர் அவர். எனது ஆடோகிராப் இல்
”உண்மையாய் இரு. உண்மை உன்னை உயர்த்தும்” என்னும் தொனியில் அவர் எழுதியிருந்தது நல்ல இன்றும் நினைவிலிருக்கிறது.

பாடசாலைவாசலில் நாம் நின்றிருந்தால் ” டேய் என்னடா சுளட்டுறீங்களோ” என குறும்பாய்க்கேட்டு தானே வெடித்துச் சிரிப்பார். (பெண்கள் பாடசாலை அருகிலேயே இருந்தது)

இப்போ அவர் மறைந்து பல ஆண்டுகளாகி விட்டன. அவரின் மகன் (பூனை) ஜேர்மனியில் வசிப்பதாய் அறிந்தேன். மற்றைய மகன் மட்டக்களப்பில் இருக்கிறார். பலமுறை சந்தித்திருக்கிறேன்.

கடைசியாய் எனது தம்பி அவரைச் சந்தித்த போது அவர் வாயிலிருந்த ஒரே ஒரு பல்லும் ஆடியபடி
உன்ட அண்ணண் எப்படி இருக்கிறான்? என்று அவர் கேட்டதை
வீடியோவில் பார்த்த போது
சத்தியமாய், கண்கலங்கியிருந்து
எனக்கு

இறுதியாய்

புண்ணியமூர்த்தி சேர், உங்களை மூக்குத்தூள் என்று பல தரம் திடடித்துலைத்திருக்கிறேன். மற்றவர்களுடன் கதைக்கும் போது கூட உங்கள் பெயரைப் பாவித்ததில்லை. மூக்குத்தூள் என்று தான் உங்களை குறிப்பிட்டு கதைத்திருக்கிறேன்...

மனிதமே........மன்னிப்பாயா?

புண்ணியமூர்த்தி மாஸ்டரின் நினைவுகளுடன்
சஞ்சயன்
23.10.2009

வட நோர்வேயில் வேற்றுக் கிரகத்து மனிதன்

இதுவும் எனது வாழ்வை அலங்கரிக்கும் அழகிய தோரணங்களில் ஒன்று
21 வருடங்களுக்கு (1989) முன) நடந்த கதை

எனது வாழ்வை அலங்கரிக்கும் அழகிய தோரணங்களில் இதுவும் ஒன்று:

முன்னொரு காலத்திலே (24 வருடங்களுக்கு முன்பு) நான் வடக்கு நோர்வேயில் படித்துக் கொண்டிருந்த காலத்தில் எமது பாடசாலையில் இருந்து சற்றுத் தூரத்தில் இருந்த ஒரு கிராமத்துக்கு கரப்பாந்தாட்டப்போட்டியில் பங்குபற்றுவதற்காகச் சென்றிருந்தோம்.

அங்கு ஒரு சிறிய பையன் (7 -8 வயதிருக்கும்) நான் அங்கு நின்றிருந்த இரண்டு நாட்களுமே என்னைத் துப்பறியும் போலீஸ் போன்று பின் தொடர்ந்தான். என்னையே பார்த்தபடியேசிந்தித்துக்கொண்டிருந்தான்.

எங்கு போனாலும் பின்னால் வந்தான். சிறுநீர் கழிக்கச் சென்றாலும் வெளியில் காத்துக்கிடந்தான்.

உற்று உற்றுப் பார்த்தான்.
மேலும் கீழுமாக ஆராய்ந்தான்
சுற்றிச் சுற்றி வந்து பார்த்தான்

தன் நண்பர்களிடம் என்னைக் காட்டி ஏதோதோ பேசினான்

அந்த இரண்டு நாட்களும் அவனின் கதாநாயகன் நானாகவே இருந்தேன்
என்னடா வில்லங்கம் இது, என சிந்திக்கவைத்தது அவனது பார்வையின் ஆழம்

விளையாட்டு முடிந்து நாம் புறப்படும் நேரமும் வந்தது

நான் எமது பேருந்துக்கு அருகில் நின்றிருந்தேன். எமது பேருந்துக்கு அருகில் வருவதும், என்னருகில் வருதும் தயங்குவதும், பின்வாங்குவதுமாய் நின்றிருந்தான்.

எமது பேரூந்துக்குள் நான் ஏற முயற்சித்த போது ஓடிவந்து என் கையை வந்து பிடித்தான்.
என்ன என்றேன்?

நீ என்ன அதிக நேரம் சூரிய ஒளியில் படுத்திருந்தாயா? அது தான் நீ இப்படி எரித்திருக்கிறாயா? அது தான் இவ்வளது கருகியிருக்கிராயா? என்றா‌ன்.

அவனுக்கு என்ன பதில் சொல்வது என்று தடுமாறினேன். பின்பு சற்றே என்னைச் சுதாரித்துக்கொண்டு, இல்லை, நான் வேறு நாட்டவன், என்னினம் இப்படியான நிறத்தையுடையுது,  எங்களில் பலர் கறுப்பு நிறத்தையுடையவர்கள் என விளக்கினேன்.

அவனுக்குப் புரியவில்லை என்பது எனக்குப் புரிந்தது.

இருந்தாலும் ஓகே, ஓகே என்றான்.

அவனின் தலையைத் தடவிவிட்டு பேரூந்தில் ஏறி யன்னலோர இருக்கையிலிருந்து வெளியே பார்த்தேன்
அப்பொழுதும் என்னனப் பார்த்தபடியே இருந்தான்.

பேரூந்து புறப்பட்ட போது பேரூந்தின் பின்புறமாய் ஓடிவந்து கைகாட்டிபடியே கரைந்து போனான்.

வேற்றுலக மனிதனுடன் இன்று கதைத்தேன் என தாயாரிடம், நண்பர்களிடமும் சொல்லி மகிழ்ந்திருப்பானோ? அல்லது நான் பொய் சொல்கிறேன் என்று நினைத்தானோ?

ஆனாலும் அவனின் கற்பனை என்னை பல நாட்கள் பாதித்தது. இன்றும் அவனை என்னால் மறக்க முடியாதிருக்கிறது.

அவன் முன்பு இத்தனை அழகான ஒரு கறுப்பனைக் கண்டிருக்கவில்லை என்பதே உண்மை.

எல்லாவற்‌றையும் விட அவனின் தேடல் குணம் மிகவும் பிடித்திருந்தது.

யேசுவாக நானா அல்லது நானாக யேசுவா?

என்னை பரவசப்படுத்திதோர் விடயம் ஏறத்தாள 19 ஆண்டுகளுக்கு முன் நடந்தது.  அந் நாட்களில்  நான் ஒஸ்லோவிலுள்ளு ஒரு வயோதிபமடத்தில், வயோதிபர்களைப் பராமரிக்கும்  தொழில் செய்துகொண்டிருந்தேன்.

அது ஒரு பனிக்காலத்து நாள். அன்றைய காலைநேரத்து இளவெயில் குளிரை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது. உச்சந் தலையில் இருந்து உள்ளங்கால்வரையில் மூடிக்கட்டிக்கொண்டு வேலைத்தளத்துக்குள் உட்புகுந்து  உடைமாற்றி, வெள்ளை பான்ட், வெள்ளை சட்டை போட்டுக்கொண்டேன்.

மேலதிகாரி எமக்கு என்ன என்ன வேலைகள் இன்று உள்ளன என்றும்,  நான் யார் யாரை ‌எழுப்பி பராமரிக்க வேண்டும் என்ற அட்டவணையைத் தந்தார்.
எனது வேலையைத் தொடங்கினேன்.

முதவாமவரைத் துயிலெழுப்பி, பராமரித்து விட்டு இரண்டாவது நபரிடம் செல்ல வேண்டிய நேரம் வந்தது.

நான் சற்று இந்த இரண்டாம் நபரைப்பற்றி இவ்விடத்தில் கூறவேண்டும்.

85 - 90 வயதிருக்கும், அன்பான பெண்..கண்பார்வை  மிகவும் மங்கலாகிவிட்டது. என்னுடன் நன்றாகவே பழகுவார்.  தன்னருகே எப்போதும் இயேசு இருப்பது போல் நினைத்தபடியே உரையாடிக்கொண்டிருப்பார், அவர்.

மிகவும் குசும்புபிடித்தவர். ஒரு நாள் அவருக்கு நான் உடைமாற்றிக்கொண்டிருந்த போது, நீ என்ன நினைக்கிறாய் என்று நான் சொல்லவா என்றார். நானும் சிரித்தபடியே சரி கூறுங்கள் என்றேன். அவர் இப்படிக் கூறினார்: ”இந்தக் கிழவி ஒரு இளம் பெண்ணாக இருந்து அவளுக்கு நான் உடைமாற்றினால்  எப்படியிருக்கும்” என்று தானே நினைக்கிறாய் என்றார்.இல்லை, இல்லை என்று அசட்டுச்சிரிப்பு சரித்தபடியே  அன்று அவரிடம் இருந்து தப்பினேன்.

அன்றைய நாளின் பின் இவரிடம் வாயைக்கொடுத்து வாங்கிக்கட்டிக்கொள்ளக்கூடாது என்பதில் கவனமாயும் இருந்தேன்.

அவரின் அறைக் கதவினைத் தட்டிப்பார்த்தேன். பதில் இல்லை. மெதுவாய் அறையைத் திறந்து அவரின் அறைக்குள் சென்றேன். அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். எனவே வெளியே சென்று வேறு ஒருவரைப் பாராமரித்துவிட்டுத் திரும்ப வந்தேன்.

இனி இந்தக் கதை நடைபெறும் சூழலை நான் சற்றே விபரிக்கவேண்டும். அப்போது தான் இந்தக் கதையின் முக்கியமான பகுதி உங்களுக்குப் புரியும்.

எனது காற்சட்டையும், மேற்சட்டையும் வெள்ளை. அந்த வெள்ளைக்கு நேரெதிரானது எனது நிறம்.

அந்த முதியவரின் அறையின் ஜன்னலின் ஊடாக கண்ணைக் கூசவைக்கும் வெய்யில் எறித்துக்கொண்டிருக்கிறது.

நான் ஜன்னல் திரைச்சீலையை இரு பக்கங்களுக்கும் இழுத்துவிட்டு அவரை நோக்கிச் செல்வதற்காகத் திரும்பும் போது வெய்யில் என் முதுகுப்பக்கமாக எறித்துக்கொண்டிருக்கிறது.

ஜன்னல் கண்ணாடியில் ‌சூரிய வெளிச்சம் தெறித்து, அறைக்குள் ஒருவித வௌ்ளை நிறக் கதிர்கள் தெறித்துக்கொண்டிருக்கின்றன.

இப்போது நான் அவரை நோக்கித் திரும்பி நிற்கிறேன்.

இப்போது உங்கள் கற்பனைக் குதிரையை சற்றுத் தட்டிவிடுங்கள்.

என்னை நினையுங்கள். நான் வெள்ளை உடையுடன் நிற்கிறேன். எனக்குப் பின்புறத்தில் இருந்து ஒளிக்கதிர்கள் ஒளிர்கின்றன. முகத்தில் எத்தனை சூரியன்களின் ஒளி பாய்ந்தாலும் கறுப்பாகவே இருக்கும்படியான நிறத்தில் நான். எனவே நான் யார் என்று அந்து முதியவருக்குத் தெரிவதற்கு சற்தப்பம் இல்லை. அத்தோடு அவருக்கு இரண்டடிக்கு அப்பால் என்ன நடந்தாலும் தொரியாத அளவில் அவரின் கண்பார்வை மங்கலாகியிருக்கிறது.

அந்த சுரியக்கதிர்களுக்கு நடுவில் தேவதூதர்கள் போல் நான் நிற்கிறேன். அறையினுள் வேறு வெளிச்சங்கள் இல்லை

அப்படியே உங்களின் கற்பனைக் குதிரையை நிறுத்திக்கொள்ளுங்கள்.

அம் முதியவரின்  கட்டிலுக்கு அருகிற்சென்று அவரின்ன் கையைப் பற்றி அவவின் பெயரை சொல்லி அழைக்கிறேன். பதில் இல்லை.. அமைதியாய் சில கணங்கள் நகர்கின்றன

மீண்டும் அவர் கையை மெதுவாய்த் தடவி, மீண்டும் மெதுவாய் அவரின் பெயர் சொல்லி அழைக்கிறேன்.நித்திரையால் எழும்ப முயற்சிக்கிறார்.
மீண்டும், மீண்டும் அவர் கையை மெதுவாய் தடவியபடியே அவர் பெயர் சொல்லி அழைக்கிறேன்.

தூக்கக் கலக்கத்துடன் சற்றே கண்களைச் சுருக்கியபடியே என்னைப்பார்க்கிறார்.

மௌனமாய் சில கணங்கள் கலைகின்றன.

அவரின் சீரான மூச்சின் ஒலி அறையின் நிசப்தத்தைக் கலைத்துக்கொண்டிருக்கிறது.

சிறிது நேரத்திற்குப்பின் என்னைப் பார்த்தபடியே கேட்டார்...

”யேசுநாதரே! நீங்களா வந்திருக்கிறீர்கள்” என்று

எனக்கு சர்வமும் அடங்கிவிட்டது.... என்ன சொல்வது என்று தெரியவில்லை. அவரின் நம்பிக்கையை கலைக்கவிருப்பாத இயேசுநாதராக நின்றிருந்தேன், நான். என்னையறியாமலே எனது கைகள் அவரின் தலையைத் தடவிக்கொடுத்தது,  கைகளை மெதுவாய் நீவிவிட்டேன்.

அவர் மீண்டும் அப்படியே தூங்கிவிட்டார்.

மெதுவாய் என் கையை விடுவித்துக்கொண்டு வெளியில் வந்தேன். என்னால் அமைதியாய் இருக்க முடியவில்லை. மனதினை ஒரு வித சுகமும், சுமையும் ஆட்கொண்டிருந்தது.

ஏனையவர்கள‌ை பராமரித்த பின் அவரிடம் சென்று அவரைப்பராமரித்தேன். அன்று ஏனைய நாட்களைப் போலல்லாது மகிழ்ச்சியாக இவர் இருக்கிறார்போலிருந்தது எனக்கு.

எப்போது நினைத்தாலும் மனதை இதமாகத்தடவிப்போகும் நிகழ்வு இது.

நான் நினைக்கிறேன், நானோ காகத்தின் நிறமானவன், வெளிச்சமும் முகத்தில் படவில்லை, சூரியகதிரும், வெள்ளை ஆடையும் இந்த பாவியை புனிதராக்கி விட்டதென்று.

இயேசுநாதர் கறுப்பாக இருப்பாரா? என்று நக்கல் கேள்வி எல்லாம் கேட்கக் கூடாது .. ஆமா.

கடவுடன் வாழ்ந்த ரணமற்ற நாள்

தலையங்கம் பார்த்து பயப்படாதீர்கள்.

மனைவியும், மூத்த மகளும் ஒஸ்லோவுக்கு அரங்கேற்றம் ஒன்றிற்காகப் போயிருக்கிறார்கள். நானும் அட்சயாவும் வீட்டில் இருப்பதாக முடிவாகியது.

அவர்களை விமான நிலையத்தில் விட்டு வெளிக்கிட்டதும்......

பப்பாஆஆ என்றார் (இப்படி கடவுள் அழைத்தால் பக்தன் உருகிவிடுவான் என்பது கடவுளுக்கு நன்றாகவே தெரியும்)
என்னய்யா? என்றேன்
கண்ணால் சிரித்து, பக்தனை உருக்கிய படியே மீண்டும் பப்பாஆஆ என்றார்
சொல்லுங்கம்மா என்றார்...
அது, அது, அது என்று பத்து அது போட்டு நீ எனக்கு ஒரு ”சொக்கா” கடன் (மீளத்) தரவேணும் ஞாபகம் இருக்கா? என்றார் நோர்வே மொழியில்
அப்படியா? எப்போ கடன் வாங்கினேன் என்றேன்?
அது, அது, அது போன மாதம் என்றார்
கடவுளின் தந்திரம் புரிந்தது...
எனக்கு சுகர் ப்ரி சோடாவும் வாங்கி, அவரின் கடனையும் அடைத்‌தேன்.
வரும் வழி முழுக்க காரை தமிழாலும், நொஸ்க்காலும், கல கல வென்ற முத்துக்களாலும் கொட்டி நிறைத்தார்

சோடா குடித்து பெரிதாய் நீண்டதோர் ஏவறை விட்டேன்
அப்பாஆஆ! என்றார் மிகக் கடுமையாய்
கண்ணை சிமிட்டியபடியே என்ன? என்றேன்
உனக்குத் தெரியும்! என்றார் பெரிய மனிசி போல
மீண்டும் ஏவறை விட்டேன்
நிறுத்து!! என்றார் நொஸ்க மொழியில்.

உலகிலேயே ஆழமான கடல் கீழ் சுரங்கம் எங்கள் இடத்திற்கு அருகில் உண்டு. அது தாண்டித் தான் வீட்ட வரவேணும். சுரங்கத்தில் நாம் கடல் நீர் மட்டத்தின் கீழ் போகுமிடத்தை நீலமான ‌லைட் ஆல் மார்க் பண்ணியிருக்கிறார்கள்.

பப்பாஆ, நீந்து, நீந்து கடலினுள் போய் விட்டோம் என்றார்.
தானும் நீந்துவது போல் கையை ஆட்டினார்.
அந்தா மீன் போகுது என்றார்...
சேர்ந்து சிரித்தோம்

(சம்பாசனை தமிழிலும், நொஸ்க்கிலும் நடக்கிறது)

இதுதான் உலகிலேயே நீளமான சுரங்கமா? என்றார்
இல்லை, ஆழமானது என்றேன்
அப்ப நீளமான சுரங்கம் எவ்வளவு நீளம்?
தெரியாது... கிட்டத்தட்ட 40 கி.மீ என்று அறிந்ததாக ஞாபகம் என்றேன்
அது எவ்வளவு தூரம்?
உனது வீட்டில் இருந்து 40 தரம் உனது பாடசாலைக்குப் போகும் தூரமிருக்கும் என்றேன்
அவ்வளவு தானா? என்று அலுத்துக் கொண்டார்

பிறகு முன்னுக்கு போன காரை ஓவர்டேக் பண்ணு என்றார்...
வேண்டாம் என்றேன்
அதிசயமாய் ஓகே என்றார்.

சுரங்கம் முடிந்து வெளியே வந்ததும். முகில்களற்ற வானமும், பச்சையான உயரமான மலைகளும், நீலமான கடலும் எங்ளை வரவேற்றன.

பப்பாஆ! உலகத்தில் வடிவான இடமெது என்றார்
எனன சொல்வது என்று யோசித்துக்கொண்டு இருக்கும் போது
பதில் சொல்! என்றார் நொஸக் மொழியில்
நீ தான் என்றேன்
இல்ல, எந்த இடம்? என்று கேள்வியை தெளிவுபடுத்தினார்
தனக்கு, நாம் வாழும் ஊரின் பெயரைக் கூறி அதுதான் வடிவு என்றார்..
பெருமையாக இருந்தது

கடந்து போகும் மலைகளைக் காட்டிய படியே
அந்த மலை ஏறியிருக்கிறாயா? இந்த மலை ஏறியிருக்கிறாயா என்று கொண்டே வந்தவர் திடீர் என தனக்கு தலைஇழுக்க பிரஸ் வாங்கனும், ஜக்கட் வாங்கனும், உடம்புக்கு போட கிறீம், சொக்கா வாங்கனும் என்றார்...

சுதாரித்துக் கொண்டு என்ன சொக்காவா என்றேன்.. கல கல என்று முத்துக்களைக் கொட்டினார். அவரின் கண்ணும் சிரித்தது.

திடீர் என காரி்ல் இருந்த எல்லா பட்டன்களையும் போட்டு விளையாடிக் கொண்டிருந்தார்....
பிறகு அவற்றையெல்லாம் நிறுத்தி விட்டு ஸ்டியரிங்கை பிடித்து என்னுடன் சேர்ந்து காரோடினார்.
ஸ்டியரிங்கை வலப்பக்கமும், இடப்பக்கமும் (ஷிக் ஷாக் போல) ஆட்டி ஆட்டி தானும் அதே போல் ஆடினார்.
வேண்டாம், பின்னுக்கு கார் வருது என்றேன். நிறுத்தினார்.

தலையிழுக்கும் பிரஸ் வாங்கும் கடையினுள் சாதாரணமாய் நடந்து போய் தனக்கு ப்ரஸ் வாங்க வேனும். எங்க இருக்கு என்றார்?
விற்பனையாளர் வந்து காட்டினார்.
இது தான் வேணும் என்றும், தன்னிடம் இப்படி யொன்று இருந்ததாகவும் அது துலைந்ததால் புதிது வாங்குவதாகவும் விற்பனையாளருக்கு சரித்திரம் வளக்கினார்.
அவரும் தலையாட்டி கேட்டுக் கொண்டிருந்தார்
சரி காசைக் குடு என்னும் தொனியில் பார்வையால் கட்டளையிட்டார்
கார்ட்ஐ இழுத்தேன்

கையை பிடித்த படி, பையை சுற்றியபடியே துள்ளித் துள்ளி வந்தார் காருக்கு

உன் நண்பின் வீடு வருகிறது.. அவள் வெளியில் நின்றாள் ”ஹோன்” அடிப்பமா என்றேன்
துள்ளலுடன் ”யா” என்றார்
நண்பின் வீட்டிற்கு வெளியில் அவர்களின் நண்பிகள் கூட்டமே நின்றிருந்தது
ஓ.. யெஸ் என்றார்
காரை நிறுத்தக் கட்டளையிட்டார்
நிறுத்தினேன்
இறங்கியோட எத்தனித்த போது
ஜக்கட், கிறீம் வாங்க வில்லையா? என்ற போது
அதை மற! என்னும் தொனியில் பதில் வந்தது
சரி என்றேன்
நின்று கொஞ்சம் யோசித்தவர், இல்ல கடைக்கு விடு காரை கடைக்கு என்றார்
கெதியா போ என்றார் நொஸ்க் மொழியில்
நீ 60 வேகத்தில் இல் போறாய் 100வேகத்துக்கு க்கு போ என்றார்
இல்லை என்றேன்
போ போ என்று விரட்டினார்
கடையில் அவசர அவசரமாய் ஜக்கட், கிறீம் வாங்கினார்.
அதற்கிடையில் நண்பின் தந்தையுடன் என்னை ஒப்பந்தம் செய்யச் சொன்னார்
செய்தேன்
ப்பாஸ்ட், ப்பாஸ்ட் என்று நொஸ்க் மொழியில் உட்சாகமாய் துள்ளியபடியே காரில் வந்தார்.

காரை நிறுத்தியதும் கழுத்தை கட்டி லஞ்சம் தந்தார்
கண நேரத்தில் என்னை மறந்து காற்றில் பறந்தார்

ஒப்பந்த நேரம் வந்தது.. கூப்பிடப் போனேன்
கடவுளின் நண்பியின் தங்கை சிட்டாய் பறந்து வந்து கழுத்தைக் கட்டிக் கொண்டு தூக்கு என்றாள். பக்திப்பரவசத்தில் அள்ளி எடுத்தேன்... கடவுள் சற்றுத்தள்ளி என்னை ஓரக்கண்ணால் அவதானிப்பது தெரிந்தது.

வாரீங்களா ஐயா? என்றேன்
பப்பாஆ, ப்பப்பாஆஆஆ என்றார்
புரிந்தது கடவுளின் எண்ணம்
அங்கு வந்ததிருந்த இன்னொரு நண்பியின் வீட்ட போகவா என்றார்.
ஐம்பதெட்டு பப்பாஆ க்கள் காற்றில் வந்த வண்ணமிருந்தன
அந்த நண்பியோ, எனது பதிலை எதிர்பாக்காமல் தனது தாய்க்கு தெலை‌பேசியில் இலக்கங்களை தடடிக் கொண்டிருந்தாள்.
அங்கிருந்து பதில் வரவில்லை.
கடவுள்களுக்கிடையில் ரகசிய பேச்சு வார்த்தை நடந்தது
சமாதானத் தூதும் (கட்டளையாய்) வந்தது

அதாவது நண்பியை அவரின் வீட்டில் இறக்கிவிட வேண்டுமாம்.
சரி என்றேன்
இரண்டு கடவுள்களுடன் உள் ரோட்டு ஒன்றில் பயனித்தேன்
புதிய கடவுளின் பளிங்கு போன்ற நீலக் கண்களும், காற்றில் அசைந்தாடிய சுருட்டை முடியையும் கொள்ளை அழகாயிருந்தது (அவளின் பெயர் ”ஆர்ல”. நான் ”பர்ல” என்றே அழைப்பேன் (பர்ல என்றால் முத்து என்று பொருள் படும்)
எனது கடவுள், அப்பா ஷிக் ஷாக் ஆக காரை ஓட்டுங்கள் என்றார்.
ஓடினேன்
கார் போன போன போக்கில் கல கல என சிரித்து, ஆடினார்கள். எனது நெஞ்சையும், காரையும் பெருமைப்படுத்தினார்கள்
முஸ்பாத்தியாய் இருந்ததாகவும், நன்றி என்றும் சொன்னார்கள்

முத்தின் வீடு வந்தது
முத்துக் கடவுள் சிட்டாய் பறந்து போய், அனுமதி பெற்று வந்தார்
எனது கடவுளை கைகோத்து அழகாய் அழைத்துச் சென்றார்.
வீட்டுக் கதவை பூட்ட முதல் மறக்காமல் கை காட்டினார்கள் கடவுள்கள்..
பூக்கள் சையசைப்பது போலிருந்தது

மீண்டும் வீடட வந்தேன்.
ரீவியில் புட்போல் மாட்ச் ஓடிக்கொண்டிருந்தது....

திடீர் என தொலைபேசில் கடவுள் வந்தார்
என்னய்யா என்றேன்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார்
”என்ன” என்றேன் சிறுது எரிச்சலில்
தனது பொம்மைகள் உடனடியாக வேணும் என்றார், எனது எரிச்சலை சற்றும் கவனிக்காமல்
தவிர, பப்பாஆ! நண்பி என்னை இன்றிரவு தங்குமாறு ‌கேட்கிறாள் என்றார்
புரிந்தது சகலமும்..
பொறு, பெரிய இடத்திற்கு போன் பண்ணி கேட்டு சொல்கிறேன் என்றாள்
ஐ லவ் யூ என்றாள் நொஸ்க் இல்

போண் பண்ணினேன் பெரிய இடத்திற்கு... வேண்டாம் என்றார்
பாவம் கடவுள் என்றேன். வாதாடியதனால்.. சரி ஓகே என்றார்

போண் பண்ணி முத்துக் கடவுளின் தாயாரிடம் பேசி
எனது கடவுளிடமும் சொன்னேன்
அவரின் துள்ளல் தெலைபேசியினூடாகத் தெரிந்தது

சிகக்ல் ஒன்று இருந்தது.. (கடவுளின் பொம்மைகள் எல்லாம் ஒரு பெட்டியில் போட்டு கட்டி வைக்கப்பட்டிருந்தது)
சொன்னேன் சிக்கலை கடவுளுக்கு
அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வா என்று அடுக்கிக் கொண்டே போனார்
இறுதியாக எல்லாத்தையும் கொண்டு வா என்றார்
ஐயா! என்று இழுத்தேன்
பாய்! என்று சொல்லி தொலைபேசி இணைப்பை துண்டித்தார் கடவுள்

இரவு உடுப்பு, அவரின் கடடிப்பிடித்து படுக்கும் ”உடுப்பு போடட கரடிப் பொம்மை”, அவர் தடவிக்கொண்டே படுக்கும் அம்மாவின் பழைய டெனிம் ஜீன்ஸ, பல் துலக்க பிரஸ் எல்லாம் எடுத்து வைத்தேன்.
கட்டிவைத்த பொம்மை பெட்டியை இறக்கினேன்.
பொம்மைகளின் நிறங்களும் வடிவங்களும் கடவுள் சென்ன மாதிரி இருக்கவில்லை. தலை சுத்தியது.
கடவுளுக்கு போன் பண்ணினேன்...
என்ன? என்றார் (‌போன் பண்ணியதை அவர் விரும்பவில்லை என்பது மட்டும் புரிந்தது)
ஐயா! பார்பிகள் கனக்க இருக்கு என்று இழுத்தேன்...
மீண்டும் அந்த பார்பி, கறுப்பு பார்பி, அந்த சின்ன பார்பிஐ மட்டும் கொண்டு வா என்று அடுக்கிக் கொண்டே போனார்
கஸ்டம் அம்மா என்றேன்..
அப்பா, அப்ப அந்த பெட்டியை பொண்டுவாங்கோ என்றார்
வெடித்துச் சிரித்து ஓகே என்றேன்

முத்துக் கடவுளின் வீட்டில் கார் நிற்க முதலே கடவுள்கள் ஓடிவருவது தெரிந்தது
பெட்டியைக் கிண்டி இது தான், இது தான் என்று எடுத்தார்
உடுப்பு பையில் கர‌டி பொம்மை இருக்கா, அம்மாட டெனிம் இருக்கா என்றார்?
ஓம் என்று சொல்லி... ஐயா போன் பண்ணுங்கோ, காலமைக்கு புட்போல் மாட்ச் இருக்கு, வெள்ளன வருவேன் என்றேன்... அதற்கிடையில் கடவுள்கள் கல, கல முத்துக்களை சிந்தியபடியே வீட்டுக் கதவை மூடிக்கொண்டிருப்பது தெரிந்தது.

வீட்ட வந்தேன்...
கடவுளில்லா இரவு என்முன் விரிந்து கிடந்தது
கடவுள் எது செய்தாலும் அதில் ஒரு அர்த்தமிருக்கும்..

இவ்வளவும் எழுதிவிட்டு பிழை திருத்திக் கொண்டிருக்கும் போது தொலைபேசி அழைத்தது

மறுபக்கத்தில் கடவுள்
என்னய்யா? என்றேன்
வாங்கோ என்று தழுதழுத்தார்
ஏனய்யா என்றேன்
வாங்கோ எனக் கட்டளையிட்டார்

அங்கு போன போது
முத்துக்கடவுளின் கண்ணகளில் ஏமாற்றமும், நித்திரை வழிந்தோ‌டிக்கொண்டிருந்தது

எனது கடவுள் காரில் ஏறியதும்
பப்பாஆ என்றார்
ஏன்னய்யா என்ற போது
கண நேரம் முழித்திருக வேண்டினார்
மறுக்கமுடியுமா?
சரி என்றேன் (நாளை ஞாயிறு என்பதால்)

இப்ப
கடவுள் என்னருகிலிருக்கிறார்
இல்லை இல்லை
நான் தான் கடவுளுக்கருகிலிருக்கிறேன்

கடவுள் எது செய்தாலும் அதில் அர்த்தமிருக்கும்..கடனையும்

ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தந்தை

மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை.
மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது.
ஒன்றாய்
உலா வருகிறார்கள்..
பச்சை எரிச்சலாய் இருக்கிறது.

உடுப்புக் கடை,
சப்பாத்துக்கடை,
கோப்பி சொப்,
சினிமா
என்று
சுற்றித் திரிகிறாகள்...

என்னோடு
கார் ஓடியதையும்,
மலை ஏறியதையும்,
பந்தடித்ததையும்,
எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும்,
யானை மேல் என்னுடன் இருந்து
இளவரசி போல் உலா வந்ததையும்
மறந்து விட்டாள் போல இருக்கிறது அவளது நடவடிக்கை.

இருப்பினும் அவளுக்கு தெரியாமல் ரசிக்கிறேன் அவளின் அலட்சிய பார்வையையும், பேச்சையும். பேரானந்தம் அது..

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள். இன்று நான் என்று ஓருவன் இருப்பது போல காட்டிக் கொள்கிறாள் இல்லை. முன்பெல்லாம் கேட்காமல் கிடைக்கும் அவளின் முத்த மழையில் சளிப்பிடித்து கிடந்திருக்கிறேன். இப்ப வரண்ட புமியாய் எனது முகம்..... நானே கேட்டுப்போனாலும் யானைப்பசிக்கு சோளம் பொரி போல சின்னதாய் ஒன்று பட்டும் படாமலும் தருகிறாள்.

எனது உலகம் இப்படியாய் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள் எனது பிறந்த நாள் வந்தது. பரிசாய் ஒரு புத்தகம் தந்தாள்..

முத்தை (முகத்தை) தொலைத்து விட்டேனோ
என்று
நடுங்கியிருந்த போது
முத்தமிட்டு
மெதுவாய்த் தந்தாள்
நோர்வேஜிய மொழியில்
”என் தந்தை”
எனறொரு தலைப்பிட்ட
ஒரு பொக்கிஷத்தை
அதிலிருந்து
மொழிபெயர்த்த சில வரிகள்

முதல் பக்கம்

30. புரட்டாதி. 2009...
என் அப்பாவுக்கு!
அன்பிலும் அன்பு
கொண்டுள்ளேன் உன்னில்.
தந்துள்ள
பொக்கிஷத்தை பாதுகாப்பாய்
என்னும் நம்பிக்கையில்
காவியா......

பொக்கிஷத்தில் இருந்து சில வரிகள்
நான்
என்றென்றும்
நன்றியுடையவள்
உனது
சிரிப்பு
பொறுமை
அன்பு
நட்புக்கு
.........................
நீ
வீராதி வீரன்
கடமையிலும்
அன்பிலும்
........................
எனது
தந்தை
நீ
இருப்பினும்
குழந்தைப் பருவத்தில்
நீ
பரிமாறிய சிரிப்புக்கும்,பொறுமைக்கும்
நாம்
ஒன்றாய் செய்த செயல்களுக்கும்
தந்த ஆறுதலுக்கும்
ஆயிரம் ஆயிரம்
நன்றிகள்
........................
என்னுடன்
நடையபின்று
உலகத்தை
காண்பித்தாய்
அதன் மீதான
பார்வைவை
பெருப்பித்தாய்
.........................
தந்‌தையே
நீ
பலமானவன்
புத்தி உடையவன்
ஆனால்
நினைக்காதே
உன்
வாழ்வு
சாமான்யமானதென்று
........................
காலச்சக்கரம் ஓடுகிறது
ஆனால்
ஏமாற்றமலும்
வற்றாமலும்
இருக்கிறது
உனதன்பு.
மாறாத
உன் வாஞ்சை
மூச்சைப்
போன்றதெனக்கு
..........................
நன்றி.
நீ
எனதுறுதியில்
கொண்ட
நம்பிக்கைக்கு
...........................
வேதனை
வலித்தது
நீ
தவறிழைத்த போது.
அதன்
தாக்கம் மரித்த போது
உண்மை தெளிந்து,
புரிந்தது
நீ
சாதாரணமானவன்
அல்லவென்று
...........................
கற்பித்தாய்
தவழ
எழும்ப
நடக்க
ஓட
விடா முயற்சி
சுயகட்டுப்பாடு
பாராட்டு
ஊக்கம்
ஆர்வம்
மேலும்
கற்கவும்
மெதுமையும்
பொறுமையும்
மரியாதையும்
நட்பும்
அன்பும்
கற்பித்தாய்
.........................
வாழ்வும்
வாழ்க்கையும்
மாறலாம்.
கனவுகள்
கானலாகலாம்
அவை பெரிதல்ல
என் மீது நீ கொண்ட அன்பும்
உன் மீது நான் கொண்ட அன்பும்
வாழ்ந்திருக்கும் வரை.
..........................
முதன் முதலில்
உலகம் கண்ட போது
உயரத்தில்
உன்
தோள் மேலிருந்தேன்
நீ
மெதுவாய் ஆடி
நடக்கையில்
வாழ்க்கை
பெருத்தது
அரைத் தூக்கத்தில்
நீ என்னைத்
தோளில் சுமந்தது
போல்
சுமந்து
மறவேன்
உன்னையும்
நீ
தந்த
குழந்தைப் பிராயத்தையும்
............................
எனதன்புத் தந்தையே
என்றென்றும்
நான் உன்னுடையவள்
............................

பொக்கிஷத்தை
பார்த்தபின்
ஈன்ற பொழுதினும், பெரிதுவந்த
தந்தையாய்
கண் கலங்கி
நெஞ்சு விம்மி
நின்றிருந்தேன்
திருப்தியான நாள்
.................
பின் பொருநாள் மெதுவாய் கேட்டேன் ”அய்யா அந்த புத்தகத்தை வாசித்து விட்டா வாங்கித் தந்தாய் என்று ”அதிலென்ன சந்தேகம்” என்றால் அலட்சியமாய்...
மீண்டும் உயிர்த்திருந்தேன்....அவளின் பதிலால்
.

உணர்ந்தவன், வலியின் வலியை

மூன்றடி தொலைவில் மரணம்

எல்லோருக்கும் பின்னால்
மூன்றடி தொலைவில்
தொடர்ந்து கொண்டிருக்கிறது
மரணம்.

எப்போது வேண்டுமானாலும்
எட்டிப்பிடித்து விடும்
தூரத்தில் தினமும்
தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

சாலை கடக்கையில்,
வாதிடுகையில்,
புகை பிடிக்கையில்
அதன்
முக பாவங்கள்
மாறி மாறி ஜொலிக்கின்றன.

ஒரு சிலர்
மரணத்தின் பின்னால்
நடந்து கொண்டிருக்கிறார்கள்
அவர்களை
மரணம் கடந்திருக்கக் கூடும்.

அழைத்து
நண்பனாக்கிக் கொள்ள
யாருக்கும் தைரியமில்லை.
கூட இருந்தே
குழி பறிக்கும் உத்தரவாதம்
அது.

அதனுடன்
யாரும் உரையாடுவதுமில்லை.
அது
தனியே நடந்து கொண்டிருக்கிறது,
ஒரு நிழல்போல.

அல்லது
நிழலின் நிஜம் போல

.............................
சத்தியமாக நான் எழுதவில்லை. ரசித்‌தேன்... சுட்டேன்...
இதை எழுதியது சேவியர். அவரின் அற்புதமான பிளாக் பார்க்க
http://xavi.wordpress.com/

சிவா - நோர்வே

நோர்வேக்கு வந்த பின் கிடைத்த உறவுகளைப் பற்றி இப்போதைக்கு எழுதுவதில்லை என்றே நினைத்திருந்தேன். இருப்பினும் ஏதோ சிவாவைப் பற்றி எழுதத் தோன்றியது.

1987 வைகாசி 16ம் நாளில் இருந்து 2006ம் ஆண்டின் ஆனி அல்லது ஆவணி மாதம் இறைவனடி சேரும் வரை கிடைத்த நண்பன் அவன் (அவர், இவர் என்று போலி மரியாதை கொடுக்கத் தேவையில்லை அவனுக்கு)

சிவா என்றால் முதலில் ஞாபகம் வருவது அவன் அடிக்கடி கூறும் ஒரு கூற்று ”பீரங்கி வாசலில் கூடு கட்டாதிங்க” என்பதாகும். பீரங்கி வாசலில் கூடு கட்டினா எப்படியிருக்கும் …. கொஞ்சம் யோசித்துப்பாருங்கள்….

முதலில் சிரிப்பு வரும், பின்பு பீரங்கி வெடித்தால் கூட்டின் நிலையையும், குருவியின் நிலையையும் யோசித்தால் சிரிப்பு மறைந்து பரிதாபம் மேலோங்கும்…. இப்படி கனக்க பழமொழி அடிக்கடி சொல்லுவான்…குரங்கிட்ட மூத்திரம் கேட்டமாதிரி என்று ஒன்றும் சொல்லுவான்.

யோசித்துப் பார்த்தால் அவன் நோர்வேயில் குடியேறியது அவனைப் பொறுத்தவரையில் பீரங்கி வாசலில் அவன் கூடுகட்டின மாதிரி இருக்கு….

தனிமை, நோய்கள், அவை தந்த மன உளைச்சல்கள், அவைகளில் இருந்து விடுதலை பெற நாடிய மது, மது கொடுத்த மீளமுடியாத போதை, வெறுப்பான, வெறுப்பேற்றிக் கொண்டேயிருந்த நெருங்கிய உறவுகள் (இலங்கையிலும்;;, வெளிநாட்டிலும்), அவனின் முறட்டுப் பிடிவாதம்….கூட்டிக் கழித்துப் பார்த்தால் அவனின் மரணத்திற்கான காரணங்கள் இவைகள் தான் என்று நினைக்கிறேன்.

அவனின் மரணத்தின் பின் அவனின் வீட்டில் இருந்து வெளியில் எடுத்த வெற்று வொட்கா போத்தல்களின் சத்தத்தையும், எண்ணிக்கையையும் மறக்க ஏலாது.

வொட்கா கொம்பனிக்காரன் சிவாவுக்கு சிலை வைத்தே ஆகவேனும்.. என்று முன்மொழிகிறேன்….

சிவாவுக்கு நாங்கள் செல்லமாக வைத்த பெயர் ”வெல்டர்” (அது ஒரு வித காரணஇடுகுறிப்பெயர்.. சிவா வெல்டர் ஆக வேலை செய்த காலமது, இரும்பை ஒட்டுவது போல தான் கூறும் கதைகளுடன் கிளைக் கதைகளையும் ஒட்டிக் ஒட்டிச் சொன்னதனால் சூட்டப்பட்ட பெயரது). அவன் கதைக்கத் தொடங்கினால் நாங்கள் ஒட்டுறான், ஒட்டுறான் என்பதுண்டு. ஒரு விடயத்தை சொல்வதென்றால் அதற்கு கை, கால், உடம்பு, தலை எல்லாம் வைத்து கதைவிடுவான் .. அவனை நாம் நன்கு அறிந்திருப்பதால் நாங்கள் கை, கால், உடம்பு, தலை எல்லாவற்றையும் கழித்துப் பார்க்கவும் பழகியிருந்தோம்.

எது எப்படியோ, அவன் கதைவிட்டாலும் ரசிக்கத்தக்க வகையில் நகைச்சுவையுடன், விறுவிறுப்பும் கலந்து கதைவிடக்கூடியவன். அவனது கதைகளில் வரும் பாத்திரங்களை அவன் பேச்சுத்தமிழில் வர்ணிக்கும் அழகு அலாதியானது.

அவனின் அஞ்சலிக்கூட்டத்தில் அஞ்சலி செலுத்திய எல்லோரும் அவனின் நகைச்சுவையுணர்வை நினைவுகூர்ந்ததை இங்கு குறிப்பிட்டே ஆகவேண்டும்.

சிவா உடனான ஞாபகங்களில் முக்கியமானது ”மீகோ” என்னும்அவனின் நாய். மீகோவை சந்தித்த முதல்நாள் அது என்னை வீட்டுக்குள் விடவே இல்லை. கள்ளனை கண்டதைப்போல குரைத்தது ….மீகோ என்ற சிவா கண்டிப்பான குரல் கேட்ட பின் தான் இந்த கள்ளனை உள்ளே விட்டது. ஆனாலும் அதன் சந்தேகம் போகவில்லை அதுக்கு. எனக்கு பின்னாலேயே வந்து எனக்கு முன்னாலேயே நாக்கை தொங்கப்போட்டுக்கொண்டு உட்கார்ந்திருந்தது, அடிக்கடி உர்…உர் என்று தனது அதிருப்தியையும் காட்டிக் கொண்டிருந்தது…..

மீகோவின் இனத்திற்கும் எனக்கும்சமாதானமான உறவு ஒரு போதும் இருந்தது இல்லை (ஊரிலும் கூட), நான் சமாதானம் விரும்பினாலும் அவை என்னுடன் சமாதானமாவதில்லை…

தனது நாய் எனவும், அது கடிக்காது சாது (?)என்றும் அறிமுகப்படுத்தினான். அது தனது சொல்லை மட்டும் தான் அது கேட்கும் என்றான். மீகோவை வா, போ, இரு, எழும்பு, திறப்பை எடுத்து வா என்று எல்லாவற்றையும் செய்வித்து காட்டினான். மீகோ காலைத்தூக்கி எனக்கு கைதந்தது. உயிரைக்கையில் பிடித்தபடி கையைக் கொடுத்தேன் (கைகொடுக்காவிட்டால் சிவா விடமாட்டான்) மீகோவும் எஐமானனை ஏமாற்றாமல் எல்லாம் செய்தது. ஆனால் என்னில் ஒரு கண் வைத்தபடியே.சில காலத்தின் பின் ”பாடு மீகோ, பாடு” என்றால் ஒரு வித ஊளையிட்டு கத்தவும் பழக்கியிருந்தான் சிவா.

சம்மர் நேரத்தில் சிவாவின் காரின் முன் சீட்’இல் மீகோ இருக்கும். கார் கண்ணாடியை சிவா இறக்கியிருப்பான். ஜன்னலுக்கால் முகத்தை வெளியே போட்டுக் கொண்டு புதினம் பார்த்தபடி வரும். என்னைக் கண்டால் மட்டும் குரைக்கும் (என் பிரமையோ?). ஏன்டா என்னைக் கண்டால் மட்டும் ஏன் குரைக்குது என்று கேட்டதற்கு இரண்டு பதில் சொன்னான். முதலாவது, இனம் இனத்தோடதான் சேருமாம் என்றான் நக்கல் சிரிப்புடன், மற்றது, அது உன்னை நண்பனாக நினைக்கிறது என்றான் வலு சீரியசான முகத்தடன். (மீகோ என்ட நண்பனா? நடக்கிற கதையா அது?… எதிர்த்துக் கதைத்தால் அவன் தன் கூற்றை நிரூபிக்க தொடங்குவான் என்பதால் அடக்கி வாசித்தேன்)

மீகோவின் மரணம் சிவாவை பெரிதும் பாதித்தது. அது சுகயீனமாக இருந்த காலத்தில் அதை பிள்ளை போல பார்த்துக் கொண்டார்கள் (சிவா ஏறத்தாள 18 வருடங்கள், அவன் மரணிக்கும் வரை ஐன்னா என்னும் நோர்வேஐpய பெண்ணுடன் ஒன்றாய் வாழ்ந்தவன் என்பதை சொல்ல மறந்து விட்டேன்)சிவா சேட் இல்லாமல் மீகோவை தூக்கிவைத்த படி ஒரு படம் எடுத்து வைத்திருந்தான். கடைசிவரை அவனின் வீட்டில் தொங்கவிடப்பட்டிருந்த படங்களில் ஒன்று அது. மீகோவின் ”ஆஸ்தியும்” (சாம்பல்) கடைசிவரை அவனின் வீட்டில் வைக்கப்பட்டிருந்ததை அவனுடன் பழகிய எல்லோரும் அறிந்திருப்பார்கள். ……………….கல்லுக்குள்ளும் ஈரமிருக்கும்

திறமையான விளையாட்டுக்காரன். நன்றாக விளையாடுவான் என்பதால் கட்டாயம் தன்னை டீம்’இல் (அணி) போடுவார்கள் என்பது அவனுக்குத் தெரியும். இதை வைத்துக்கொண்டு அவன் செய்த இம்சை கொஞ்சநஞ்சமல்ல.

மட்ச் நெருங்கும் போது அவன் சொல்லும்
, காலுக்குள் உழுக்கீட்டுதுமச்சான்,
நான் லண்டன் போறன் (லண்டன் பாபா இவனது நண்பர்.. அதை வைத்து அவன் காட்டின கூத்தையும் சொல்ல ஏலாது.. அப்பப்பா என்ன கடி கடிப்பான் தெரியுமா?)
எனக்கு சுகமில்லை, மச்சான், ஏலாமல் இருக்கு,

இப்பிடி அலுப்புத்தருவான். அப்பவெல்லாம் அவனை கொல்ல வேணும் போல இருக்கும் (எனக்கு மட்டுமல்ல, எம்முடன் விளையாடிய எல்லோருக்கும் அப்படி இருந்தது). டேய் வாடா, வாடா வந்து விளையாடுடா என்று நாங்கள் கெஞ்சவேண்டும் என்பதால் தான் அப்படி செய்வான்.

நாங்கள் கெஞ்சினால் சரி சரி
இப்ப கொஞ்சம் பறவாய் இல்லை,
லண்டன் பாபா இந்தியாவில் சூட்டிங்கில இருக்கிறதால பிறகு வரட்டாம், இப்ப விளையாடுற அளவுக்கு சுகம்

என்று சொல்லி விளையாட வருவான். விளையாட்டில் எப்பவும் அதிஸ்டம் அவனின் பக்கம் தான்… நாம் வெற்றி பெற அவனின் விளையாட்டு தான் காரணமாய் இருக்கும்.. பிறகு என்ன… அதை வைத்து அடுத்த மாட்ச் வரும்வரைக்கும் எங்களை கடித்து, சப்பி, துப்பிவிடுவான்.. ஒரு முறை அவன் இறுதிப்போட்டியின் போது இரண்டு கோல் அடித்ததால் நாங்கள் முதன் முறையாக 7-8 வருடங்களின் பின் வெற்றிக்கிண்ணத்தை பெற்றுக் கொண்டோம்.

அப் போட்டியினை வீடியோ எடுத்தவனை கண்டால் (கொண்ணுபுடுவன், கொண்னு) காரணத்தை கீழே எழுதியிருக்கிறேன்.

தான் அடித்த கோல்களை மட்டும் வீடியோவில் இருந்து எடுத்து எடிட் பண்ணி 2 நிமிடம் மட்டும் ஓடும் படமாக மாற்றி டேய் பார்டா, பார்டா, சிவா அண்ணணின் அடியப் பார்டா… மரடோனாட விளையாட்டு மாதிரி இல்லையா, என்ன மாதிரி விளையாடுறான், பார்த்து பழகுங்கடா, என்று அவன் தந்த இம்சை கொஞ்சநஞ்சமல்ல (இதை வீடியோவை மரடோனா பார்த்திருந்தால் என்ன ஆகியிருக்குமோ? முருகா)

எங்கள் எல்லோருக்கும் வாகனம் ஓட்ட கற்றுத்தந்து, வாகனம் வாங்க கொன்சல்டிங் (அறிவுரை)தந்து, வாகனங்களை திருத்தி இப்படி கனக்க நல்ல வேலைகளும் செய்திருக்கிறான்.

நல்லா மீன் பிடிப்பான், ஒரு முறை அவனுடன் மீன் பிடித்து எம்முடன் இருந்த 40க்கும் மேற்பட்டவர்களுக்கு கறிவைத்ததை எம்முடன் இருந்த அனைவரும் அறிவார்கள்…

நோர்வேயில் நாங்கள் இருந்த சிறிய கிராமத்தில் இருந்த எல்லோரையும் அவனுக்கு தெரிந்திருந்தது. இது யார்? இவர்ட மனிசி யார்? அவரின் மாஜி மனிசி யார்? அவரின் சொந்த பந்தங்கள் யார் எல்லாம் தெரிந்திருந்தது…. எப்படி இவ்வளவையும் தெரிந்து வைத்திருந்தான் என்பது ஆச்சரியமான விடயம்.ஊரில் நடக்கும் எல்லா விடயங்களும் அவனின் database இல் update பண்ணி இருக்கும்.

அவனின் விருந்தோம்பல் அன்பான இம்சை. அவனிடம் போய் வயிருமுட்டாமல் வர ஏலாது.

குழந்தைகளின் நண்பன் அது மிகையாகாது. எல்லா குழந்தைகளும் அவனுடன் ஒட்டிக்கொள்ளும். அப்படி ஒரு ராசி அவனுக்கு… குட்டிராசா, சொக்கம்மா, சொக்கிச்சி இப்படியெல்லாம் குழந்தைகளுக்கு பெயர் வைத்திருந்தான். (என் குழந்தைகள் அவனை சொக்கா மாமா என்றே அழைத்தனர்) கண்டதும் சொக்லட் வாங்கிக் கொடுப்பான். வேண்டாம் என்றால் எம்முடன் ஒரு மாதத்திற்கு கதைக்க மாட்டான். பிறகு எல்லாம் சரியாகிவிடும்.

சின்ன சின்ன விடயத்துக்கெல்லாம் கோபித்துக் கொள்வான். இதனாலோ என்னவோ பலருடன் பலதடவைகள் கோபித்துக் கொண்டிருக்கிறான்.

கொண்டாட்டங்களின் போது கமராவை கொளுவிக்கொண்டு நிற்பான், தண்ணிப்பார்ட்டி என்றால் அவனுக்கு முக்கிய இடமுண்டு. அங்கு நாங்கள் சிரிக்க சிரிக்க அவன் சொல்லும் கதைகளின் கற்பனையும் நகைச்சுவையும் கூடிக்கொண்டே போகும்..

ஒரு முறை யாழ்ப்பாணம் போன போது அவன் தந்த அன்பளிப்புக்களை அவனின் தாயாரிடமும், சகோதரியிடமும் கொடுக்க அவன் (அன்பு) கட்டளையிட்டிருந்ததால் அவர்களைச் சந்திக்க நேர்ந்தது. (சிவாவின் ஒரு அண்ணன் டெலோ இயக்கத்தின் மூத்த தளபதிகளில் ஒருவரான பீட்டர் என சிவா மூலம் அறிந்திருந்தேன்) அதை அவனின் சகோதரியாரும் உறுதி செய்தார்.தாயார், சகோதரி, அவரின் மகன் அகியோரின் பொருளாதாரச் செலவினை அவனே பொறுப்பேற்றிருந்தான். மனிதாபிமானமுள்ள இதயம்….

மரணச் செய்தியை அவனின் சகோதரியாரிடம் தொலைபேசியில் அறிவித்த போது….தம்பி அவனுக்கு அங்க ஒருத்தரும் இல்லை, வடிவா எல்லாத்தையும் செய்யுங்கோ என்றார். இறுதி ஊர்வலத்தை அவனின் சகோதரியார் கேட்டுக் கொண்டதைப் போல் சிறப்பாய் நடாத்த உதவிய மனிதம் நிறைந்த நெஞ்சங்களை மறத்தலாகாது.

இறுதியாய் சிறிய கண்ணாடி ஓட்டையினூடாக பார்த்த போது நிம்மதியாய் எரிந்து கொண்டிருந்தான். கனடாவில் இருந்து வந்த அண்ணன் அவன் நித்திரை கொள்ளுற மாதிரி இருக்கிறான் தம்பி என்றார் நெஞ்சில் கைவைத்தபடியே.

காற்றில் கலந்து வரும் பூவின் வாசனை போல் என் வீட்டில் இன்னும் சொக்கா மாமா பற்றிய கதைகள் அவ்வப்போது வந்தபடியே இருக்கின்றன.

 .

அப்பா

செல்வமாணிக்கத்தார் ஒரு போலீஸ் அதிகாரி தான் ஆனால் வீட்டில் இருந்த வாரிசுடன் அவருக்கும், அவருடன் அவரின் வாரிசுக்கும் ”அலைவரிசை” (அதிகமாக) ஒத்துவருவதில்லை. நான் வளர்ந்த போது அவர் இல்லை. ஒரு வேளை தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று நண்பனாய் மாறி இருப்பாரோ என்னவோ?

அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் அப்பாவுடன் மாலையில் மீன் பிடிக்க போவேன் என்னுடன் தலைமயிர் மிகவும் ஐதான ஒரு உமை நண்பனும் (பெயர் ஞாபகத்தில் இல்லை) வருவதுண்டு. கடலுடனான என் உறவு ஏற்பட அப்பா தான் காரணம். ராவணன் மீசை, அடம்பன் கொடி, மணல் வீடு, நண்டு பிடிக்க என்று எல்லாவற்றையும் அப்பாதான் அறிமுகப்படுத்தினார். ஏங்கள் ஒப்பந்தத்தின் படி கடற் கரையில் அப்பா மீன் பிடிக்க நான் பக்கத்தில் இருக்கலாம், அவரின் கண்ணின் எல்லைக்குள் இருத்தல் வேண்டும். (திறந்த வெளிச் சிறைச்சாலை போல). ஓரு நாள் நானும் அந்த நண்பனும் தூரம் போய்விட, அப்பாவோ எங்களை கடல் இழுத்துக் கொண்டது என நினைத்து பல மணிநேரம் ஆட்களை வைத்து தேடி வீட்ட வரும் போது நானும் அந்த நண்பனும் ஆமை பிடித்து அதன் மேல் மெழுகுவர்த்தி கொழுத்திவிளையாடிக் கொண்டிருந்தோம்.

அவரின் மனவேதனையும், துக்கமும், ஆற்றாமையும் என்னைக் கண்டவுடன் கோபமாக மாற….டேய் பெரியதம்பி இங்க வாடா என்றார் லவுட்ஸ்பீகர் சவுண்டில். அவரின் கத்தல் கேட்டு சமாதானம் பேச அம்மாவும், எம்மியும் வெளியே ஓடி வரவும் நான் இனி அங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என எண்ணி ஓடத்துவங்கவும் சரியாய் இருந்தது. (அன்று ஓடிய ஓட்டத்தை நினைத்தால் இன்றும் களைக்கிறது) அப்பா என்னை பிடித்தது வேறு கதை.

அப்பா அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் கிட்டத்தட்ட தினமும் மீன் பிடிக்கப் போவார் ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு மீன் கிடைத்தது. அதுவும் அவர் கடைசியாய் மீன்பிடித்த நாள். அந்த மீனை உடனே வெட்டி இரையாய் போட்டார்… கடல் பதிலே சொல்லவில்லை. நான் இயற்கைக்கும் ரோஷம் வரும் என்றறிந்தது அன்று தான்.

பிற்காலத்தில் அப்பா தனது மீன்பிடி project பற்றி ஒரு நாளும் வாய்திறக்கவேயில்லை. (நான் நோர்வேயில் மீன் பிடிக்கும் போதெல்லாம் அப்பாவின் நிலமை தான் எனக்கும்… இளைய மகள் எனக்கு மீன் பிடிக்கத் தெரியாதென்கிறாள்… (அவ மீன் பிடிக்கும் பொது என்ன நடக்குமோ?)

ஒரு நாள் போலீஸ்நாய் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதை பார்க்க கூட்டியும் போனார். அந்த நாய் குரைத்த ஒலி உடம்பையே உலுக்கியது, செஞ்சு அதிர்ந்தது. பின்பு பல தடவை எனக்கும் அப்படி ஒரு நாய் வேணும் என்று கேட்டும் நாய் கிடைக்கவில்லை. ஒரு வீட்டில ரெண்டு நாய் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? 1980 களின் ஆரம்பத்தில் தம்பி ஒரு நாய் வளர்த்தான்… கிட்டத்தட்ட அதுவும் போலீஸ்நாய் தான்… ஆனால் என்ன வெடிச்சத்தம் கேட்டால் வீட்டுக்குள் வந்து கடடிலின் கீழ் படுத்துவிடும். சூழல் அமைதியானதும் வெளியே வரும் (அமைதி விரும்பிய போலீஸ்நாய் என்று நினைக்கிறேன்) பின்பொருநாள் பாம்பு கடித்து இறந்து போனது அமைதி விரும்பிய போலீஸ்நாய்.

பிபிலையில் 1977இல் அவரின் சைக்கில் டைனமோவை நான் எனது மேதாவித்தனமான விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உடைத்த போதும் அப்பா என்னைத் துரத்திப் பார்த்தார். ஆனால் அன்று நான் தான் வென்றேன். ஆனால் இரவு படுக்கைக்கு வீடு திரும்பிய போது வாசலில் அவர் வில்லன் போல் நின்றிருந்ததால் சமாதான ஒப்பந்தம் அம்மாவின் முன் கைச்சாத்திடப்பட்டது. பின்பு பல வருடங்கள் அந்த சைக்கிலுக்கு டைனமோ இருக்கவே இல்லை, இப்பவும் என் சைக்கிலுக்கு டைனமோ இல்லை. அப்பா ஏதும் சாபம் போட்டாரோ என்னவோ…..

1977 இல் சூராவளி அடித்த போது தம்பியை தேடி பிபிலையில் இருந்து மட்டக்களப்புக்கு நடந்து போய் வந்தார்.

ஒரு முறை முள்ளுக்காவடி எடுத்தார் பயமாய் இருந்தது, அம்மா திருநீறு பூசிவிட்டார்.

மறு முறை கதிர்காமத்தில் பறவைக்காவடி எடுத்தார், பார்த்ததும் மயங்கி விழுந்தேன். தண்ணீர் தெளித்து, அப்பாவிடமே திருநீறு வாங்கி வந்து பூசிவிட்டார்கள்

வீட்டில் கந்தசஸ்டிகவசம் பாடமாக்கு என்று இம்சை தந்தார், தம்பி புத்தகம் பார்க்காமல் மனனம் செய்து பாடினான். தன் வாரிசுகளில் 50% உருப்படும் போல தெரிகிறது என்று திருப்பதிப்பட்டிருப்பார்.

ஒரு முறை தவனைப்பரீட்சையில் கணிதத்திற்கு 18 மார்க்ஸ் எடுத்து போது வீட்டில் பூசைவிழும் என்பதால் 18 ஐ 78 என்று ரிபோட்இல் மாற்றினேன். அப்பாவுக்கு சந்தேகம் வந்து எல்லா பாடங்களினதும் கூட்டுத்தொகையைப் பார்த்தார் அது 70 ஆல் பிழைத்தது. பிறகு என்ன பூசைதான்….

பந்தடிக்க, கிறிக்கட் பந்து போட, கீப்பருக்கு நிற்க என்றெல்லாம் பழக்கியதும், டேய்! விளையாடு ஆனா படிக்கோணும் என்று சொல்லியதும் அவர் தான்.

தியட்டருக்குள் அவரிடம் பிடிபடாமல் ஒரு முறை அருந்தப்பு தப்பியிருக்கிறேன்.

ஒரு முறை சைக்கிலுக்கு புதிய ரிம், டயர், செயின்,அது இது என எல்லாவற்றையும் மாற்றித்தந்தார். ஆன்று தான் முதன் முதலில் அவரை டபிள் ஏற்றிப் போனேன். அன்று சைக்கிலில் அவர் இருந்தபோதிலும் சைக்கில் பஞ்சு போல போனது.

கனகலிங்கம் சுருட்டு மட்டும் தான் குடிப்பார். தண்ணி அடித்தால் மட்டும் சிகரட் வாய்க்குவரும். காலையில் கனகலிங்கம் சுருட்டு இல்லாவிடில் கக்கூஸ் போகவராது. அங்குமிங்குமாய் அலைவார்.

அந்தக் காலத்தில் தான் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் என்றார், நம்ப முடியவில்லை லொள்லு கேள்வி கேட்டால் ஆபத்து என்பதால் ஒன்றும் கேட்கவில்லை. பின்பொருநாள் மாமியிடம் கேட்டேன் அது உண்மையா என்று. ஓம், ஓம் அவன் அப்ப நல்லா ஓடுவான் என்றார். பாட்டியும் அதையே சொன்னார் எனவே அவர் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் தான். நானும் ஓரளவு மரதன் ஓடியதற்காண காரணம் அது தான் போலிருக்கிறது.

யாழ்பாணம் போனால் அவரின் நண்பர் ஒருவர் பனை மரத்துப் பால் எடுத்துவருவார் ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலனில். பனைமரத்துப் பால் குடித்தால் வெறிக்கும் என நானறிந்தது அங்கு தான்.


தமிழில் அரைகுறையாய் எழுவார், ஆங்கில பாடதிட்டத்தில் படித்த பாதிப்பு . எழுத்து வேலை எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கும். கோழி கிழறியது போல எழுத்து. ஒன்றும் புரியாது.

1981 இல் யாழ்ப்பாணம் போயிருந்தேன். திடீர் என அப்பாவின் மூத்த அக்காவுக்கும் எனக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் முறிய அன்றிறவே ஏறாவூருக்கு வெளிக்கிட்டு அடுத் நாள் வீடு வந்து சேர்ந்த போது அப்பாவை மாரடைப்பு என மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் அங்கு போன போது அப்பா  மயக்கத்தில்  நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காற்றைத் தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த அம்மா என்னை அணைத்துக் கொண்டார். அப்பா விடைபெற்றிருந்தார். 


அப்பாவின் கையெழுத்தில் ஒரு கடிதம் கூட இன்று என்னிடமில்லை என்பது நெஞ்சை நெருடுகிறது. அவரின் எழுத்துரு ஞாபகத்தில் இருக்கிறது. ஆனால் அம்மாவிடம் கட்டாயம் இருக்கும்.

இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் அம்மாவிடம் இவனுக்கு என்னை மாதிரியே கோவம் வருது என்றாராம். நான் அவரிடமிருந்து பழகிய நல்லபழக்கம் அது வொன்று தான் போலிருக்கிறது. அவரின் தண்ணியடியையும், சுருட்டையும் ஏன் பழகாமல் விட்டேன் என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. பதிலில் அப்பா இருக்கிறார்.

ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னான நினைவுகளிவை….இதை எழுதும் எழுத்தில் வர்ணிக்கமுடியாததோர் சுகமான உணர்வு என்னை ஆட்கொள்கிறது. அருகில் உட்கார்த்தி, கதைத்துப் பேசி, இம்சை பண்ண ஆசையிருந்தால் மட்டும் காணுமா? அதற்கு அப்பாவுமல்லவா இருக்க வேண்டும்.


உங்களின் அப்பாவின் நினைவுகளை ஆறுதலாக மீட்டுப்பாருங்கள் உங்களுக்கும் புரியும். அப்பா  இருந்தால் அவரை அருகில் அமர்த்தி ஞாபகங்களை அவருடன் சேர்ந்து பகிர்ந்து பாருங்கள் வாழ்வின் இரகசியம் புரியும்.

.

சித்தாண்டி-அப்பு














அப்பாவின் நெருங்கிய நண்பர், கந்தப்போடியார். அவருக்கு நாங்கள் வெத்த பெயர் சித்தாண்டி-அப்பு (காரண இடுகுறிப்பெயர்).

உருண்டு திரண்ட தேகம், மங:கிய வேள்ளைவேட்டி, சந்தனம் புசிய மறைக்காத மேல் உடம்பு, காதிலே சிவப்புக் கடுக்கன், வெற்றிலைப் பெட்டி, அவவப்போது சுருட்டு, வாயிலே முருகன் தேவாரம் இது தான் சித்தாண்டியப்பு. காசைக் கூட வேட்டியில் தான் முடிஞ்சு வைத்திருப்பார். தமிழ் படங்களில் வரும் பண்ணையார்கள் மாதிரி இருப்பார் அவர்.

ஆவரிடம் வெற்றிலை கேட்டால் ”நீ சின்னப்பிள்ளை கூடாதுடா தம்பி” என சித்தாண்டித்தமிழில்* சொல்லி வெற்றிலைக் காம்பை மட்டும் தருவார்.

எக்கச்சக்கமான பிள்ளைகள், வயல், காணி, வீடு, பண்ணை மாடுகள்… இப்படி எல்லாமே எக்கச்சக்கம் அவருக்கு. நாம் பிபிலையில், அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் திடீர் திடீர் என தோன்றுவார், சில நாட்கள் தங்கியிருப்பார் பின்பு திரும்பிவிடுவார். அவர் வீட்ட போனால் சாப்பிட்டு முடியாது. அவ்வளவு அன்புத் தொல்லை.

அப்பாவும், அவரும் கதிர்காமம் நடந்து போன ஞாபகம் உண்டு. காட்டில் யானையைக் கண்டதாகவும் நெருப்பெரித்து பந்தம் காட்டி யானையை கலைத்தாராம் என்று சொன்னார். பயங்கரமான முருகபக்த்தர்..

2005 இல் சித்தாண்டி போய் அவரைச் சந்தித்த போது முதுமை தன் அதிக்கத்தை அவரின் மேல் காட்டியிருந்தது. ஆயினும் சித்தாண்டிஅப்புவில் அத்தனை மாற்றம் தெரியவில்லை. அருகில் அழைத்து தம்பி உண்ட அப்பாவைப் போல இருக்கிறாய் என்றார்.

தம்பி வயது பெயித்துது, இதிலையே கிடக்கன், முருகன் கூப்பிரான் இல்லை என்றார் சித்தாண்டி முருகன் கோயில் இருந்த திசையை பார்த்து கும்பிட்டபடி.

நான் அங்கிருந்த போது அவரின் பேரன் ஒருவர் விடுதலைப்போரில் விதையான செய்தி வந்தது. மகனின் மேலிருந்த கோவத்தினால் செத்த வீட்டுக்கு போகவில்லையாம். ஆனால் இழப்பின் வேதனையை அவரால் மறைக்க முடியவில்லை. ஏதோ அவர் அங்கே போயிருக்கலாம் என்று தோன்றியது எனக்கு.

நான் வெளிக்கிட்ட போது வெத்திலை மடித்துத் தந்தார் (வளர்ந்துவிட்டேன் என நினைத்தார் போல), புகையிலை வேணுமா என்று கேட்ட போது வேண்டாம் என்றேன், பல்லில்லா தன் சிவந்த வாயினால் எச்சில் தெறிக்க வெடித்துச் சிரித்தார்……

கிட்டக்கூப்பிட்டு தம்பி காலம் கெட்டுகிடக்கு கவனமா பெயித்து வா என்றார்.

அடுத்த முறையும் போய் பார்க்க வேண்டும்.

....................................
* சித்தாண்டித் தமிழ் கேட்டிருக்கிறீர்களா? மட்டக்களப்புத்தமிழின் இனிமையான ஒலிப்பிரிவுகளில் ஒன்று அது.
என்னென்று அதை எழுத்தில் கூறுவது என்று தெரியவில்லை.. என்றாலும் முயற்சிக்கிறேன்: என்னடா தம்பியை …. என்ன்றாரம்ம்பி என்பார்கள் (அதற்கொரு ராகமுண்டு)

.சித்தாண்டித்தமிழில் ”பு” என்ற தூஷன வார்த்தை அடிக்கடி பாவிக்கப்படுவதாக பேசக் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் சித்தாண்டிஅப்பு அப்படிக் கதைப்பதில்லை.

.

2. - பொன்னையா

முதலில் ஞாபகம் வருபவர் பொன்னையா, அப்பாவின் நண்பரா அல்லது அவ்வப்போது உதவி செய்ய வருபவரா என்பது ஞாபகமில்லை. பீடி பிடிப்பார், மெலிந்த உடம்பு, அடிக்கடி இருமுவார், அவரின் சைக்கிலைத்தான் அப்பா வாங்கியதாக ஞாபகம். பட்டம் கட்டித் தருவார், சைக்கிலில் ஏற்றித் திரிவார்.

இவருடன் காளி கோயிலுக்கு போய் வந்த ஞாபகங்கள் உண்டு. காளி கோயிலில் உரு ஆடுபவர்களை பார்த்தால் பயமாய் இருக்கும் ஆனால் பொன்னையாவின் கையைப்பிடித்திருந்தால் பயம் குறைந்து, துணிந்து அவர்களைப் பார்க்கலாம். உரு ஆடுபவர்கள் வாழைப்பழம் தீத்த கூப்பிட்டால் பொன்னையா வந்தால் தான் போவேன். இல்லா என்றால் பயத்தில் தொண்டை வறண்டுவிடும்.

உரு ஆடுபவர்களை அருகிலிருந்து பார்த்திர்க்கிறீர்களா? ருத்ரம், ஆவேசம், குருரம், வேகம், அன்பு ஆகியவை கலந்து செய்யப்பட்ட கலவையாக காணப்படுவார்கள். (அந்த நேரத்தில் மட்டும்) 1980 களில் சிங்களவர்களும், இஸ்லாமியர்களும் கூட உரு ஆடியதைக் கண்டிருக்கிறேன்.

மீண்டு வருமா அந்தப் பொற்காலம்……?

வரலாம்…

இல்லை, இல்லை.. வர விடமாட்டார்கள், மனிதம் மறந்த மனிதக்கூட்டம்.

அன்பான பொன்னைவுக்கு 80களில் ஒரு அழகிய பேத்தி இருக்கப்போகிறாள் என்றும், 1980 களில் அவளாள் என்ளைச் சுற்றி ஒரு ஒளிவட்டம் தோன்றம், உலகம் அர்த்தப்படும், ராத்திரியின் நீளம் விளங்கும்,உனக்கும் கவிதை வரும்…உன் கையெழுத்து அழகாகும்… இப்படி வைரமுத்து சொல்லும் இரசாயன மாற்றங்கள் நடந்த விடயங்களை பின்பு பார்ப்போம்.

இவருக்கும் எங்களுடன் வாழ்ந்த ஏம்மிக்கும் எட்டாப் பொருத்தம். ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளக் கூட மாட்டார்கள். எம்மி பொன்னையாவை கண்டால் திட்டிக் கொண்டே இருக்கும். ஏன் என்பது இன்று வரை புரியாத ஒரு புதிர்............ புரியாமலே இருக்கட்டும்.

அப்பாவின் இறுதிக்கிரிகைகளின் போது வீட்டின் ஒரு ஓரத்தில் நின்றிருந்தார்.

விடலையாய் சுற்றிய காலத்தில் அப்பாவின் மரணத்தின் பின் சில நோங்களில் அவருடன் உரையாடும் போது தான் சுகயீனமாய் உள்ளதாக கூறிய ஞாபகம் உண்டு.

வெளிநாடு வந்து சில வருடங்களில் அவர் இறந்த செய்தி கிட்டியது. எமக்குள் நெருங்கிய தொடர்புகள் இல்லாவிடினும், ஏனோ என் நினைவுகளில் அவர் ஒரு மறக்க முடியாத பாத்திரம்.

1. - ஏறாவூர்

எனக்குள் எந்த ஆண்டு நினைவுகள் முதலில் வருகிறது என்று பார்த்தால் 1970 – 1971 போல இருக்கிறது….
ஏறாவுர் போலீஸ் உத்தியோகஸ்தர் வீடுகள் உள்ள தொடர் வீடுகளில் முதல் வீடு,
சுருட்டு சுத்தும் கடைக்கு முன்னால்,
காளிகோயில் பக்கத்தில்…
நண்பர்கள் பற்றி ஞாபகங்கள் இல்லை.

71 இல் முதலாம் வகுப்பில் சேர்ந்திருந்தேன். பல ஆண்டுகளின் (1980)பின் மீண்டும் ஏறாவுர் திரும்பிய பின் ரட்ணராஜா மாஸ்டரின் கணித ரியுசனில் சேர்ந்த முதல் நாள் ஒருவன்(ர்)(விமல்ராஜ); என்னுடன் முதலாம் வகுப்பு படித்ததாகவும், என்னை ஞாபகம் இருப்பதாகவும் சொன்னான். ஆச்சரியமாக இருந்தது… ஏன் என்னை ஞாபகம் வைத்திருந்தான்?

பல தடவைகள் இதைப்பற்றி யோசித்திருக்கிறேன், ஒவ்வொரு முறையும் மனதினுள் ஒரு ஏகாந்தமான உணர்வை ஏற்படுத்தும் நினைவு இது.

சில சம்பவங்களுக்கான காரணங்களைத் தேடக்கூடாது, அதில் இதுவும் ஒன்று.

விமல்ராஜ் பற்றி இன்னும் கனக்க எழுத இருக்கு… ;-)

என்னுள் உள்ள ஞாபகங்களுக்குள்ளான என் பயணம்

நான் கடந்து வந்த கிட்டத்தட் 16750 நாட்களில் (இன்று வரை 10.01.09) என்னினைவில் உள்ள, என்னில் ஏதோவொரு பாதிப்பை ஏற்படுத்தியவர்களைப்; பற்றி என்னுள் உள்ள ஞாபகங்களுக்குள்ளான என் பயணம் பற்றிய திட்டப்பணி இது. (அது என்ன திட்டப்பணி ஹி.. ஹி.. ”project” (கிளம்பிட்டாங்கய்யா…. கிளம்பிட்டாங்க))
ஞாபகங்களை ரீவைண்ட் பண்ண முதல் அந்த மனிதர்கள் யார் யார் என நினைத்துப் பார்க்க முயல்கிறேன். ஆனால் ” Alzheimer's disease” என்னை இப்பவே ஆக்கிமித்துள்ளது போல் ஒரு உணர்வு ஏற்படுகிறது. ஒருவரும் ஞாபகம் வருகிறார்கள் இல்லை.