ஈன்ற பொழுதினும் பெரிதுவந்த தந்தை

மூத்த மகள் வளர்ந்து விட்டாள். பதின்மக் காலம் அவளுடயத்தாகிவிட்டது. அப்பா, அப்பா என்று என்னைக் கதாநாயகனாய் கொண்டாடிய அவள், தானே கதாநாயகி என்னும் தொனியில் ஆடுகிறாள், நடக்கிறாள், கதைக்கிறாள், ஏன் பேசவும் செய்கிறாள் என்னை.
மவுசு குறைந்த தென்னிந்திய திரைப்பட கதாநாயகன் போலாகிவிட்டேன் நான். இந்த வேதனையைக் கூட தாங்கிக் கொள்ளலாம் ஆனால் தாயுடன் சினேகிதியாகி விட்டாள் என்பதை ஜீரணிக்க கஸ்டமாக இருக்கிறது.
ஒன்றாய்
உலா வருகிறார்கள்..
பச்சை எரிச்சலாய் இருக்கிறது.

உடுப்புக் கடை,
சப்பாத்துக்கடை,
கோப்பி சொப்,
சினிமா
என்று
சுற்றித் திரிகிறாகள்...

என்னோடு
கார் ஓடியதையும்,
மலை ஏறியதையும்,
பந்தடித்ததையும்,
எனது கழுத்திலிருந்து ஊர் சுற்றியதையும்,
யானை மேல் என்னுடன் இருந்து
இளவரசி போல் உலா வந்ததையும்
மறந்து விட்டாள் போல இருக்கிறது அவளது நடவடிக்கை.

இருப்பினும் அவளுக்கு தெரியாமல் ரசிக்கிறேன் அவளின் அலட்சிய பார்வையையும், பேச்சையும். பேரானந்தம் அது..

பிறந்த போது கூட நான் தான் முதலில் அவளைக் கண்டேன்... அதன் பின் தான் தாயிடம் போனாள். இன்று நான் என்று ஓருவன் இருப்பது போல காட்டிக் கொள்கிறாள் இல்லை. முன்பெல்லாம் கேட்காமல் கிடைக்கும் அவளின் முத்த மழையில் சளிப்பிடித்து கிடந்திருக்கிறேன். இப்ப வரண்ட புமியாய் எனது முகம்..... நானே கேட்டுப்போனாலும் யானைப்பசிக்கு சோளம் பொரி போல சின்னதாய் ஒன்று பட்டும் படாமலும் தருகிறாள்.

எனது உலகம் இப்படியாய் போய்க் கொண்டிருந்த போது ஒரு நாள் எனது பிறந்த நாள் வந்தது. பரிசாய் ஒரு புத்தகம் தந்தாள்..

முத்தை (முகத்தை) தொலைத்து விட்டேனோ
என்று
நடுங்கியிருந்த போது
முத்தமிட்டு
மெதுவாய்த் தந்தாள்
நோர்வேஜிய மொழியில்
”என் தந்தை”
எனறொரு தலைப்பிட்ட
ஒரு பொக்கிஷத்தை
அதிலிருந்து
மொழிபெயர்த்த சில வரிகள்

முதல் பக்கம்

30. புரட்டாதி. 2009...
என் அப்பாவுக்கு!
அன்பிலும் அன்பு
கொண்டுள்ளேன் உன்னில்.
தந்துள்ள
பொக்கிஷத்தை பாதுகாப்பாய்
என்னும் நம்பிக்கையில்
காவியா......

பொக்கிஷத்தில் இருந்து சில வரிகள்
நான்
என்றென்றும்
நன்றியுடையவள்
உனது
சிரிப்பு
பொறுமை
அன்பு
நட்புக்கு
.........................
நீ
வீராதி வீரன்
கடமையிலும்
அன்பிலும்
........................
எனது
தந்தை
நீ
இருப்பினும்
குழந்தைப் பருவத்தில்
நீ
பரிமாறிய சிரிப்புக்கும்,பொறுமைக்கும்
நாம்
ஒன்றாய் செய்த செயல்களுக்கும்
தந்த ஆறுதலுக்கும்
ஆயிரம் ஆயிரம்
நன்றிகள்
........................
என்னுடன்
நடையபின்று
உலகத்தை
காண்பித்தாய்
அதன் மீதான
பார்வைவை
பெருப்பித்தாய்
.........................
தந்‌தையே
நீ
பலமானவன்
புத்தி உடையவன்
ஆனால்
நினைக்காதே
உன்
வாழ்வு
சாமான்யமானதென்று
........................
காலச்சக்கரம் ஓடுகிறது
ஆனால்
ஏமாற்றமலும்
வற்றாமலும்
இருக்கிறது
உனதன்பு.
மாறாத
உன் வாஞ்சை
மூச்சைப்
போன்றதெனக்கு
..........................
நன்றி.
நீ
எனதுறுதியில்
கொண்ட
நம்பிக்கைக்கு
...........................
வேதனை
வலித்தது
நீ
தவறிழைத்த போது.
அதன்
தாக்கம் மரித்த போது
உண்மை தெளிந்து,
புரிந்தது
நீ
சாதாரணமானவன்
அல்லவென்று
...........................
கற்பித்தாய்
தவழ
எழும்ப
நடக்க
ஓட
விடா முயற்சி
சுயகட்டுப்பாடு
பாராட்டு
ஊக்கம்
ஆர்வம்
மேலும்
கற்கவும்
மெதுமையும்
பொறுமையும்
மரியாதையும்
நட்பும்
அன்பும்
கற்பித்தாய்
.........................
வாழ்வும்
வாழ்க்கையும்
மாறலாம்.
கனவுகள்
கானலாகலாம்
அவை பெரிதல்ல
என் மீது நீ கொண்ட அன்பும்
உன் மீது நான் கொண்ட அன்பும்
வாழ்ந்திருக்கும் வரை.
..........................
முதன் முதலில்
உலகம் கண்ட போது
உயரத்தில்
உன்
தோள் மேலிருந்தேன்
நீ
மெதுவாய் ஆடி
நடக்கையில்
வாழ்க்கை
பெருத்தது
அரைத் தூக்கத்தில்
நீ என்னைத்
தோளில் சுமந்தது
போல்
சுமந்து
மறவேன்
உன்னையும்
நீ
தந்த
குழந்தைப் பிராயத்தையும்
............................
எனதன்புத் தந்தையே
என்றென்றும்
நான் உன்னுடையவள்
............................

பொக்கிஷத்தை
பார்த்தபின்
ஈன்ற பொழுதினும், பெரிதுவந்த
தந்தையாய்
கண் கலங்கி
நெஞ்சு விம்மி
நின்றிருந்தேன்
திருப்தியான நாள்
.................
பின் பொருநாள் மெதுவாய் கேட்டேன் ”அய்யா அந்த புத்தகத்தை வாசித்து விட்டா வாங்கித் தந்தாய் என்று ”அதிலென்ன சந்தேகம்” என்றால் அலட்சியமாய்...
மீண்டும் உயிர்த்திருந்தேன்....அவளின் பதிலால்
.

6 comments:

  1. பந்தம்! பாச பந்தம்!பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்!
    பிறக்கும் போதே கூடப் பிறக்கும் ரத்த சம்பந்தம்!!

    தந்தையே நீ வாழ்க!

    ReplyDelete
  2. பந்தங்கல் யாவும் தொடர்கதைபோல்
    நாலும் வலர்ந்திடும் நினைவுகலால்
    நூலிழை போல் இங்கு நெய்கின்ர இதயங்கல்
    பாலுடன் நெய்யெனக் கலந்திடும் நால்
    தந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி
    சிந்தை இனித்திட உரவுகல் மேவி
    பில்லைகல் பேனி வலர்ந்தது இங்கே
    மன்னில் இதைவிட சொர்க்கமெங்கே
    நேசங்கல் பாசங்கல் பிரிவதில்லை
    என்ரும் வானத்தில் விரிசல்கல் விழுவதில்லை
    இலக்கியம் போல் எங்கல் குடும்பமும் விலங்க
    இடைவிடாது மனம் ஒரு மகிழ்ச்சியில் திலைத்திட

    ReplyDelete
  3. நல்ல பதிவு. மிக்க மகிழ்ச்சி .//அரைத் தூக்கத்தில்
    நீ என்னைத்
    தோளில் சுமந்தது
    போல்
    சுமந்து
    மறவேன்
    உன்னையும்
    நீ
    தந்த
    குழந்தைப் பிராயத்தையும்//

    arumai.வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. என் குழந்தைகளை ஞாபகப்படுத்திவிட்டீர்கள்.

    ReplyDelete
  5. நட்சத்திர வாழ்த்துகள்

    ReplyDelete
  6. வாழ்வின் குரூர விதிகள் வலியை உண்டு பண்ணுகின்றன. எங்கோ ஒரு மூலையில்..ஏதோ ஒரு மொழியில் இன்னொரு மனித மனசும் ஒரே மாதிரியான வலியை சுமந்து கொண்டிருக்கிறது என்பதை அனுபவ வரிமிக்க நோர்வேஜிய மொழி கவிதை உணர்த்தி நிற்கிறது. பொருள் அறிந்து..தேடிப் பெற்று பரிசளித்த அந்த புத்தகம் அழியாத சாட்சியாய் இருக்கும் அன்பு மகள் எப்போதும் தன் தந்தையின் நினைவுகளை சுமந்தபடியே இருக்கிறாள் என்பதற்கு.

    ReplyDelete

பின்னூட்டங்கள்